All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "தழலாய் நின் நேசம்..!!" - கதை திரி

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34921

தழல் – 9

தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்த நிமலனுக்குத் தொடர்ந்து அலைபேசியில் குறுந்தகவல்களும் அழைப்புகளும் வந்து கொண்டே இருந்தது.


அதை எடுக்க விரும்பாமல் அலைபேசியைச் சைலண்டில் போட்டிருந்தவன் தன் வேலையில் கவனமாக.. கோமகனிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.


அவரின் பெயரை கண்டதும் உடனே அழைப்பை நிமலன் ஏற்றிருக்க.. “துருவ்வை தேட சொல்லி இருந்தியா நிமலா..?” என்றிருந்தார் யோசனையோடான குரலில் கோமகன். அதில் ஒரு நொடி பதில் சொல்லாமல் அமைதியானவன் பின் “ஆமா தலைவரே..” என்று கூறவும் “வேண்டாம் நிமலா.. இப்போ இது வேண்டாம், விட்டுடு..” என்றிருந்தார் கோமகன்


அதற்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியாமல் நிமலன் அமைதியாகவே இருக்க.. “நிமலா, நான் சொல்றதை கேளு.. இது இப்போ வேண்டாம்..” என்று தன் குரலில் சற்று அழுத்தத்தைக் கூட்டி கூறினார் கோமகன்.


“இவ்வளவு செஞ்சவனைச் சும்மா விடச் சொல்றீங்களா தலைவரே..?” என்று பல்லை கடித்துக் கொண்டு நிமலன் கேட்டிருக்க.. “அப்படிச் சும்மா விடச் சொல்லுவேனா நிமலா..?” என்றிருந்தார் கோபத்தை அடக்கிய குரலில் அவரும்.


அதில் அங்கு இரு பக்கமும் ஒரு நொடி மௌனம் நிலவ.. பின் மெதுவாக “இப்போ நம்ம கவனம் போக வேண்டியது துருவ் மேலே இல்லை நிமலா.. முரளிதரன் மேலே தான், அவனைச் சீண்டி விட்டு இருக்கோம்.. நிச்சயம் இதை அவன் சும்மா விடமாட்டான், அதோட இப்போ நீ எது செஞ்சாலும் பிரச்சனையாகும், எல்லாருடைய கவனமும் உன் மேலே தான் இருக்கு.. அதனால் இப்போதைக்கு நீ இதில் தலையிட வேண்டாம், கொஞ்சம் தள்ளியே இரு..” என்றார் கோமகன்.


“ஆனா தலைவரே..” என்று ஏதோ சொல்ல துவங்கிய நிமலனை இடையிட்டு “என் பேச்சை மீறி நீ செய்ய மாட்டேன்னு நினைக்கறேன் நிமலா..” என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்து விட்டிருந்தார் கோமகன்.


இதில் அலைபேசியைப் பார்த்தவாறே நிமலன் அமர்ந்து விட்டிருக்க.. சற்று முன் கோமகன் கூறிய அனைவரின் கவனமும் நிமலின் மீது என்ற வார்த்தைகள் தான் அவனுக்கு நினைவு வந்தது.


அவர் சொல்வது நூறு சதவிகிதம் உண்மை என்பது போல் தான் காலை முதல் நிமலனுக்கு வரும் தகவல்களும் இருந்தது. எதிர்க்கட்சி ஆட்களை விட அதிகமாக இவன் கட்சியில் உள்ளவர்களே இந்தக் கல்யாணத்தை விவாத பொருளாக்கிக் கொண்டிருப்பது அவன் காதுக்கும் வந்திருந்தது.


“அது எப்படி ஜெயதேவ் பொண்ணை நிமலன் கல்யாணம் செஞ்சு இருக்க முடியும்..?”


“ஏன் செஞ்சு இருப்பான்னு நினைக்கறீங்க..?”


“இதில் வேற என்னமோ இருக்கு..”


“ஒருவேளை அவங்க இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து நம்மை ஓரம் கட்ட பார்க்கறாங்களோ..?” என்று தொடங்கிப் பலதையும் ஆங்காங்கே ஒன்று கூடி விவாதித்துக் கொண்டிருப்பதை அறிந்த பிறகே யாரின் அழைப்பையும் ஏற்க விரும்பாமல் அலைபேசியைச் சைலண்டில் போட்டு விட்டிருந்தான் நிமலன்.


இதில் நிமலனின் மேல் அக்கறை உள்ளவர்கள் நிஜமாகவே வாழ்த்து சொல்ல எண்ணி அழைத்திருக்க.. அவர்கள் யாரென அறிந்திருந்தாலும் ஒருவரின் அழைப்பை ஏற்று மற்றொருவரின் அழைப்பை ஏற்கவில்லை என்றால் அது வேறு மாதிரி பிரச்சனையாகத் திரும்பும் என்றே யாரின் அழைப்பையும் ஏற்க கூடாது என்று முடிவெடுத்திருந்தான் நிமலன்.


இதே யோசனையில் நிமலன் அமர்ந்திருக்க.. அவனின் அலுவலக அறை கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தார் சரோஜினி. நிமலன் வீட்டில் இருந்தால் வழக்கமாக இது அவன் லெமன் டீ குடிக்கும் நேரம்.


சரியாக அதை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தவரை கண்டவனுக்கும் இப்போது அது தேவையாக இருந்தது. காலை முதல் நடந்து முடிந்திருந்த பல விஷயங்களில் அவன் எதுவுமே சாப்பிட்டு இருக்கவில்லை.


அதில் “தேங்க்ஸ் சரோ ம்மா..” என்றவனைப் புன்னகையோடு பார்த்தவர், “வேற ஏதாவது வேணுமா தம்பி..?” என்றார். அதற்கு மறுப்பாகத் தலையசைத்தவனுக்கு தமயா சற்று நேரத்திற்கு முன் பேசியது நினைவுக்கு வந்தது.


ஒரு மணி நேரத்திற்கு முன் தன் அறையில் இருந்து வெளியே செல்ல முயன்றவனின் பார்வையில் நிமலன் கொடுத்திருந்த மருந்தை அவள் தொடாமலே வைத்திருந்தது விழுந்தது.


அவளையும் மருந்தையும் ஒரு பார்வை பார்த்தவன், எதுவும் பேசாமல் தமயாவைக் கடந்து செல்ல முயல.. “நான் இப்படியே எவ்வளவு நேரம் இருக்கறது..? எனக்குச் சேஞ்ச் செஞ்சுக்க டிரஸ் வேணும்..” என்ற தமயாவின் குரல் நிமலனின் நடையைத் தடை செய்தது.


அதில் யோசனையாகத் திரும்பி அவளைப் பார்த்தவன் ‘சரி’ என்பது போலான தலையசைப்போடு அங்கிருந்து நகர்ந்திருந்தான். “ஏன் வாயை திறந்து அதைச் சொல்ல மாட்டாரோ..! பெரிய நாட்டிய பேரொளின்னு மனசில் நினைப்பு, கண்ணாலேயே பதில் சொல்லிட்டு போறார்..” என்று நொடித்துக் கொண்டவள், முகத்தைத் திருப்பிக் கொள்ள.. அவள் பேசிய அனைத்தும் ஒரு வார்த்தை தவறாமல் நிமலனின் காதில் விழ.. “அடங்கவே மாட்டா போல..!” என்று பல்லை கடித்தவாறே அறையில் இருந்து வெளியில் வந்திருந்தான் நிமலன்.


இவ்வளவு நேரம் வேறு யோசனையில் அவள் கேட்டதையே மறந்து இருந்தவன், இப்போது அது நினைவுக்கு வரவும் லெமன் டீயை வைத்து விட்டு அறையில் இருந்து வெளியேற முயன்ற சரோஜாவை “ஒரு நிமிஷம் சரோ ம்மா..” என்று நிறுத்தியிருந்தான் நிமலன்.


அதில் அவர் திரும்பி நிமலனை பார்க்க.. “அந்தப் பொண்ணுக்கு டிரஸ் வேணுமாம், என்னன்னு கேட்டுக் கொஞ்சம் வாங்கிக் கொடுத்துடுங்க..” என்று சிறு யோசனையோடே அவரிடம் கேட்டிருந்தான் நிமலன்.


அவனின் தயக்கம் புரிந்து வேறு எதுவும் பேசாமல் “சரிங்க தம்பி..” என்று விட்டு நகர முயன்றவரை மீண்டும் நிறுத்தி அவரிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தான் நிமலன். தன் இலக்கை மட்டுமே குறிக்கோளாக வைத்து முன்னேறிக் கொண்டிருந்தவனின் வாழ்வில் இப்போது தேவையில்லா தலைவலியாகப் பல பிரச்சனைகள் வரிசை கட்டி நின்றது.


இதையெல்லாம் யோசிக்கும் போதே அவனுக்குத் தலை வெடித்து விடும் போல் இருந்தது. ‘நேற்று வரை அவன் இருந்த மனநிலை என்ன..? இப்போது அவன் இருக்கும் மனநிலை என்ன..?’ என்று எண்ணும் போதே ஆத்திரம் வந்தது.


அதே நேரம் பார்த்தியிடம் இருந்து நிமலனுக்கு அழைப்பு வரவும் சட்டென அதை ஏற்றிருந்தவன் “ஹ்ம்ம், சொல்லு பார்த்தி..” என்றான். “நம்ம ஆளுங்க தேடிட்டு இருக்காங்க சார்.. வழக்கமா துருவ் போறே எல்லா இடங்களிலும் பார்த்தாச்சு.. எங்கேயுமே அவன் இல்லை..” என்றான் பார்த்தி.


“எதிர்க்கட்சியில் கையை வைக்கறோம் பிரச்சனையாகும்னு தெரிஞ்சே வழக்கமா போற இடத்தில் போய் உட்கார்ந்து இருக்க அவன் என்ன பைத்தியமா..? நான் தான் முதலிலேயே வழக்கமா போற இடங்களைத் தவிர்த்து அவன் போக வாய்ப்பு இருக்க மற்ற இடங்களில் தேடுங்கன்னு சொன்னேன் இல்லை, அதைச் செய்..” என்று கடினமான குரலில் பல்லை கடித்துக் கொண்டு கூறினான் நிமலன்.


“அங்கேயும் நம்ம ஆளுங்க தேடிட்டு தான் இருக்காங்க சார்.. இங்கே பார்த்துட்டோம் அவன் இல்லைன்னு உங்களுக்குத் தெரியப்படுத்தலாம்னு தான் கூப்பிட்டேன்..” என்றான் நிமலனின் கோபத்தில் உண்டான பதட்டத்தோடு பார்த்தி.


“உன் கூட இருக்க ஆளுங்க எப்படி பார்த்தி..?” என்று நிமலன் சட்டெனக் கேட்கவும் “ஏன் சார் நம்பிக்கையானவங்க தான்..?” என்றான் பார்த்தி. “ஆனா விஷயம் தலைவர் காதுக்குப் போய் இருக்கு, இது எப்படி..?” என்றான் எரிச்சலான குரலில் நிமலன்.


“தெரியலை சார்..” என்று அந்தப் பக்கம் திகைப்போடு பார்த்திப் பதிலளிக்க.. “உன் கூட இருக்கறவங்க மேலே ஒரு கண்ணு வை.. திரும்ப இந்த விஷயம் தலைவர் காதுக்குப் போகக் கூடாது, அவர் இதை நிறுத்த சொல்லி இருக்கார்.. ஆனால் என்னால் அப்படி எல்லாம் இதை நிறுத்தவும் முடியாது, விடவும் முடியாது.. அவன் எனக்கு வேணும்..” என்றிருந்தான் உறுதியோடு நிமிலன்.


“சரிங்க சார்.. நான் பார்த்துக் கவனமா செய்யறேன்..” என்று விட்டு பார்த்தி அலைபேசியை வைத்தான்.


அதே நேரம் இங்கு தமயாவின் அறைக்குள் கதவை தட்டி விட்டு உள்ளே சென்றார் சரோஜினி. செல்லும் போதே தமயா குடிப்பதற்குப் பால் எடுத்துக் கொண்டு சென்றிருந்தவர் “எடுத்துக்கோங்க மேடம்..” என்று அவளின் முன் நீட்டினார்.


“இதையெல்லாம் யாரு உங்ககிட்ட கேட்டது..? எனக்கு வேண்டாம்..” என்று சலிப்பாகக் கேட்டவாறே பார்வையை நிமிர்த்தியவள் சரோஜினியை பார்த்து முகம் மலர.. “ஹே.. ச ரோஜா.. ஹை நம்ம ரோஸ்..” என்று உற்சாகமாக அழைத்தாள் தமயா.


அதில் திகைத்துப் போய் தமயாவை பார்த்தவர் லேசாக விழித்தார். அவரை இப்படி அழைப்பது ஒரே ஒருத்தி தான். அதில் உண்டான ஆச்சரியத்தோடும் குழப்பத்தோடும் “நீ.. நீங்க.. தமயா பாப்பாவா..?” என்று நம்ப முடியாத குரலில் சரோஜினி கேட்கவும், “அதே பாப்பா தான்.. லாங் டைம், நோ சீ.. அப்பறம் எப்படி இருக்கீங்க ரோஸ்..” என்றாள் உற்சாகமாக தமயந்தி.

“அச்சோ நீங்களா நம்ம நிமலன் தம்பியை கல்யாணம் செஞ்சுட்டு வந்துருக்கீங்க..? என்னால் இதை நம்பவே முடியலை..” என்று சந்தோஷத்தோடு கேட்டவரை சோகமாகப் பார்த்தவள் ‘ஆம்’ என மட்டும் தலையசைத்தாள் தமயா.


அவளின் இந்தச் சோர்ந்து போன முகத்தைக் கண்டு அன்போடு அதை வருடியவர் “எதுக்குக் கண்ணு இவ்வளவு சோகம்..?” என வாஞ்சையோடு கேட்டார்.


அதற்கு எதையோ சொல்ல முயன்று பின் வேண்டாம் என்பது போல் வாயை இறுக மூடிக் கொண்டவள், “உங்களுக்கு இதெல்லாம் சொன்னா புரியாது ரோஸ்..” என்று விட்டு “ஆமா, உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா..?” என்று பேச்சை மாற்றினாள் தமயா.


அவளின் முயற்சி புரிந்து புன்னகைத்துக் கொண்ட சரோஜா “இப்படி ரோஸ், ஆரஞ்சு, மஞ்சள்னு என்னை வேற யாரு கூப்பிட போறா.. இந்தத் தங்க புள்ளையைத் தவிர.. அப்படிப்பட்ட தங்க புள்ளையை மறக்க முடியுமா..?” என்று அவளின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி முத்தமிட்டார் சரோஜா.


“ஹ்ம்ம்.. இப்படி எங்க அம்மா கூட எனக்கு முத்தம் கொடுத்து வருஷ கணக்காகுது..” என்றவளின் குரல் பெற்றவர்களின் நினைவில் தழுதழுத்தது. அதை உணர்ந்தது போல் தமயாவை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவர், அவளைச் சமாதானம் செய்தார்.


காலையில் இருந்து அவள் எதுவும் சாப்பிடவில்லை என்று தமயாவின் முகத்தைப் பார்த்தே தெரிந்துக் கொண்டவர், அவளின் மறுப்பை எல்லாம் மீறி எப்படியோ அவளை அதைக் குடிக்க வைத்திருந்தார்.


அப்படியே இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க.. “அய்யோ நான் வந்த வேலையை மறந்துட்டு இங்கே உட்கார்ந்து கதை அடிச்சுட்டு இருக்கேன் பாரு.. பெரியம்மாக்கு தெரிஞ்சதுனா அவ்வளவு தான் என்னை ஒரு வழியாக்கிடுவாங்க..” என்று விட்டு எழுந்துக் கொண்டவர், “மாத்தி போட உடுப்பு வேணும்னு தம்பிகிட்டே சொன்னீங்களாமே..! உங்களுக்கு என்ன மாதிரி சேலை எடுத்தா சரியா இருக்கும்னு சொன்னீங்கனா நான் வெரசா போய் வாங்கிட்டு வந்துடுவேன்..” என்றார் சரோஜா.


“என்னது சேலையா..?” என்று திகைத்த தமயா “அதெல்லாம் வேண்டாம்.. எனக்கு வேற.. நான் போடறது போல.. ஜீன்ஸ், ஸ்கர்ட்.. இப்படி வேணும்..” எனவும் “எனக்கு அதெல்லாம் எடுக்கத் தெரியாதுங்களே..” என்றிருந்தார் சரோஜா.


“அப்போ அந்த லாம்ப் போஸ்ட்..” என்று வேகமாகத் துவங்கியவளை சரோஜா புரியாமல் பார்க்கவும், “உங்க அந்த நிமலன் தொம்பி எங்கே இருக்கார்..?” என்றாள் நக்கலாகத் தமயா.


அதில் சட்டென அவளின் வாயை பொத்தியவர் “அப்படி எல்லாம் பேசக் கூடாது பாப்பா.. யாரு காதிலாவது விழுந்தா, தேவை இல்லாத பிரச்சனை..” என்று அவளுக்குப் புரிய வைக்க முயல.. “இல்லைனா மட்டும் இங்கே இருக்கறவங்க அப்படியே அமைதியா இருந்துட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க..” என்று சலித்துக் கொண்டாள் தமயா.


இங்கு நின்று இவளிடம் பேசினால் நிச்சயம் ஏதாவது பிரச்சனையை இழுத்து வைத்துக் கொள்வாள் என்று புரிய.. “நான் போய்த் தம்பியை அனுப்பறேன்.. நீங்க எதுவா இருந்தாலும் அவர்கிட்டே பேசிக்கோங்க..” என்று விட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினார் சரோஜா.


நேராக நிமலனிடம் வந்து நின்றவர் விவரம் சொல்ல.. ‘இருக்கும் பிரச்சனையில் இவ வேற..!’ என்று நிமலனுக்கு எரிச்சலானது. ஆனால் முகத்தில் எதையும் காண்பித்துக் கொள்ளலாம் “சரி நான் பாத்துக்கறேன், நீங்க போங்க..” என்று சரோஜாவை அனுப்பி வைத்தவன் வேகமாகத் தன் அறைக்குள் நுழைய.. அங்குச் சோபாவில் சரிந்து படுத்துத் தீவிரமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தாள் தமயா.


அவனைக் கண்டும் கொஞ்சமும் அசையாமல் அவள் படுத்திருக்க.. அவளின் ஒவ்வொரு செயலிலும் தன் எரிச்சல் அதிகமாகிக் கொண்டே செல்வதை உணர்ந்து பல்லைகடித்தவன், “ஆமா உனக்கு என்ன பிரச்சனை..? நீ என்ன இங்கே பேஷன் ஷோவுக்கா வந்து இருக்கே..! உனக்கு மாடர்ன் மாடர்னா டிரஸ் எடுத்து கொடுக்க..?” என்றான் கடுமையான குரலில் நிமலன்.


“ஹலோ மிஸ்டர் லாம்ப் போஸ்ட்.. நான் பிராண்டட் டிரஸ் வேணும்னு உங்ககிட்ட கேட்கலை.. எனக்குச் சாரி வேண்டாம்னு மட்டும் தான் சொன்னேன்.. புரியுதா..?” என்றாள் எரிச்சலோடு தமயா.


“ஏன் வேண்டாம்..? அதைக் கட்டிக்கிட்டா மேடம் குறைஞ்சு போயிடுவீங்களோ..?” என்று அவளுக்கு மேல் எரிச்சலோடு கேட்டிருந்தான் நிமலன்.


“ஓ, மை காட்.. ஒரு டிரஸுக்கு இத்தனை அக்க போறா..? எனக்குச் சாரி கட்ட தெரியாது மேன்..” என்று கத்தினாள் தமயா. அதில் அவ்வளவு நேரம் அவளிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தவன், சட்டெனப் பேச்சை நிறுத்தி அவளை மேலிருந்து கீழாக நம்பாத ஒரு பார்வை பார்த்தான் நிமலன்


“உனக்குச் சாரி கட்ட தெரியாது.. இதை நான் நம்பணும்..” என்று சந்தேகமாக நிமலன் கேட்கவும், “ஆமா, தெரியாது.. ஆனா நம்பறதும் நம்பாததும் உங்க இஷ்டம்..” என்றிருந்தாள் தமயா.


“அப்புறம் இதை மட்டும் எப்படிக் கட்டினே..?” என அவளைப் பார்த்து நிமலன் கேள்வியாக நிறுத்த.. “ஓ காட், மேரேஜ் ஹாலில் இதை என் பாட்டி எனக்குக் கட்டி விட்டாங்க..” என்றாள் தமயா.


“பொய் சொல்லாதே.. அந்த ரூமுக்குள்ளே நீ தனியா தான் போனே.. நான் பார்த்தேன்..” என்று அவள் தன்னை ஏமாற்ற நினைக்கிறாள் என்று உண்டான கோபத்தோடு நிமலன் பல்லை கடிக்க.. “அட போயா.. இந்த விஷயத்தில் பொய் சொல்லி நான் என்ன செய்யப் போறேன்..? ஆமா ஒரு கோவத்தில் அந்தப் பேக்கை வாங்கிட்டு நான் உள்ளே போயிட்டேன்.. அப்பறம் பார்த்தா பாட்டி உள்ளே இருந்தாங்க, அவங்க தான் இதை எனக்குக் கட்டி விட்டாங்க.. உனக்கு நம்பிக்கை இல்லைனா நான் என்ன உங்க முன்னே டேமோவா காட்ட முடியும்..? என்றாள் கடுப்பாக தமயா.


அவளின் இந்த மரியாதை இல்லாத பேச்சில் உண்டான கோபத்தோடு நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டவன் “இப்போ என்ன தான் சொல்ல வர நீ..?” என்றான் பொறுமையை முற்றிலும் இழந்த குரலில் நிமலன்.


“எனக்குச் சாரி வேண்டாம்.. வேற ஏதாவது நான் போட்டுக்கறது போல..” எனச் சொல்லிக் கொண்டே வந்தவள், சட்டென அவனைத் திரும்பிப் பார்த்து இது போல வேஷ்டி கூட..” என்று யோசித்துப் பின் “ம்ஹும்.. இல்லை இது .. எனக்கு லுங்கி கூட ஓகே தான்..” என்றாள் தமயா.


இதற்கு மேல் அவள் முன் ஒரு நொடி நின்றாலும் தன் மொத்த பொறுமையும் காணாமல் போய் விடும் என்று புரிந்து வேகமாக அறையின் கதவை அடித்து மூடி விட்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான் நிமலன்.


அங்கிருந்து நேராக அவன் சென்றது நிகிலனை தேடித்தான். ஏதோ வேலையாக இருந்த நிகிலன் தன் அண்ணனை கண்டு அவசரமாக எழுந்து நிற்க..


“நிக்கி அந்தப் பொண்ணுக்குச் சேஞ்ச் செஞ்சுக்க டிரஸ் வேணுமாம்.. இப்போ இருக்க நிலையில் பாட்டிகிட்டேயோ தீக்ஷுகிட்டேயோ என்னால் ஹெல்ப் கேட்க முடியாது.. சரோ அம்மாவுக்கும் சாரி பற்றி மட்டும் தான் தெரியுமாம்.. அவளுக்கு அது வேண்டாமாம், அவ எப்படி டிரஸ் செய்வா..? என்னன்னு உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா..?” என்றான் நிமலன்.


அதில் ஆமெனத் தயக்கத்தோடு அசைந்தது நிகிலனின் தலை. “ஹ்ம்ம், குட்..” என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டவன், தன் கிரெடிட் கார்ட் எடுத்துக் கொடுத்து “என்ன வாங்கணும்னு பார்த்து வாங்கிட்டு வந்து கொடுத்துடு..” என்று விட்டு வாயிலை நோக்கி சென்றவன், பின் அப்படியே நின்று “எதுக்கும் சரோம்மாவையும் உன் கூடக் கூட்டிட்டு போ.. தேவைப்படலாம்..” என்று விட்டு நிமலன் சென்று விட.. அவன் சொல்ல வருவது புரிந்து சரோஜாவை தேடிச் சென்றான் நிகிலன்.


அடுத்த இரண்டு மணி நேரம் அமைதியாகச் செல்ல.. தமயாவுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கிக் கொண்டு வந்திருந்த நிகிலன், அதையும் சரோஜாவிடமே கொடுத்து அனுப்பி விட்டு, நிமலனிடம் சென்று விவரத்தையும் தெரிவித்தான்.


அதற்கு ஒரு தலையசைப்பை மட்டும் பதிலாகக் கொடுத்த நிமலன், வேறு வேலையில் கவனமாகி விட.. நிகிலனும் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.


தன் முன் பெரிய நான்கு பைகளோடு வந்து நின்றிருந்த சரோஜாவை வியப்பாகப் பார்த்த தமயா “இதெல்லாம் எனக்கா..?” என்று கேட்டவாறே ஒவ்வொன்றையும் வாங்கி பிரித்துப் பார்க்க துவங்கினாள். உள்ளே பலவிதமான உடைகள் அனைத்துமே அவள் விருப்பத்திற்கேற்ப இருந்தது.


அதில் வியப்பாக ஒவ்வொன்றையும் எடுத்து பார்த்தவள், “வாவ்.. எல்லாமே சூப்பரா இருக்கு, நீங்களா செலக்ட் செஞ்சீங்க..?” என அவரை நம்ப முடியாமல் பார்த்தாள் தமயா. “எனக்கு இதைப் பற்றி எல்லாம் என்ன தெரியும் பாப்பா..? நம்ம நிகிலன் தம்பி தான் எல்லாம் வாங்கினார்..” என்றார் சரோஜா.


“ஓ, அதானே பார்த்தேன்.. என்னடா எல்லாமே என் டேஸ்ட்டுக்கு இருக்கேன்னு ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன்..” என்று வாய் விட்டே சொல்லிக் கொண்டவள் “நிக்கி சாய்ஸ் எப்பவுமே சூப்பர் தான்..” என்றாள் தமயா.


வெகு நேரமாக இதையெல்லாம் அணிந்து கொண்டு இருந்ததில் உண்டான கசகசப்பில் “நான் போய் முதலில் குளிச்சுட்டு வந்துடறேன்..” என்று விட்டு வேகமாகக் குளியலறையை நோக்கி ஓடினாள் தமயா. “இன்னும் சின்னப் பிள்ளை போலவே இருக்கு, கொஞ்சமும் மாறலை..” என்று தனக்குள்ளயே சிறு புன்னகையோடு சொல்லிக் கொண்டு அங்கிருந்து வெளியில் வந்தார் சரோஜா.


இப்படியே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனையைக் கொண்டு வர அதை நிமலன் சமாளிக்க என்றே அன்று நாள் முழுதும் செல்ல.. அன்று முழுக்க யாருமே சரியாகச் சாப்பிடவில்லை.


பெரிதாகச் சாப்பிடும் மனநிலையும் யாருக்கும் இல்லாததால் ஒவ்வொருவரும் உணவை தவிர்த்துக் கொண்டே இருந்தனர். தமயாவுக்கும் அறைக்கே ஒவ்வொரு வேலைக்கும் உணவு வந்தது.


ஆனால் வரும் உணவை அவள் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. சரோஜாவின் வற்புறுத்தலின் பேரில் அப்போது பாலை குடித்ததோடு சரி, அதன் பின் வேறு எதுவும் வேண்டாம் என்று மறுத்து விட்டவள், வரும் உணவையும் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தாள் தமயா.


இரவு உணவையும் அவள் வேண்டாம் என்று திருப்பி அனுப்ப.. அதை எடுத்துக் கொண்டு வேலையாள் வெளியே செல்ல, கதவு திறந்திருந்த இடைவெளியில் எதிர் அறையில் இருந்து நிகிலன் வெளியில் வருவதைக் கண்ட தமயா வேகமாக “ஹே.. நிக்கிஈஈ..” என்று அழைத்தவாறே வெளியில் ஓடினாள்.


அவள் குரல் கேட்டு நிகிலன் நின்று திரும்பிப் பார்க்க.. வேகமாக வந்து “உன் டேஸ்ட் சூப்பர்.. எல்லா டிரஸும் செமையா இருக்கு.. என் பேவரைட் கலர் காம்பினேஷன் வரை உனக்கு மறக்கலை இல்லை, தேங்க்யூ சோ மச்..” என்று சந்தோஷத்தோடு கூறியவாறே அவனை அணைத்துக் கொண்டவளை கண்டு நிகிலன் திகைத்து நிற்கும் போதே தன் அறையை நோக்கி வந்து கொண்டிருந்தான் நிமலன்.


இவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்தவாறே அவன் தன் அறைக்குள் நுழைய.. தமயாவை வேகமாகத் தன்னிடமிருந்து விளக்கி நிறுத்தினான் நிகிலன்.


“என்ன செஞ்சுட்டு இருக்கே நீ..?’ என்று பதட்டமும் கோபமுமாக நிகிலன் துவங்கவும், அவனின் அந்தக் குரலை கேட்டு முகம் சுழித்தவள் “ஓ நீ என்கிட்ட எல்லாம் பேச மாட்டே இல்லை.. மறந்துட்டேன்..” என்று விட்டு அவன் சொல்ல வருவதைக் கூடக் கேட்காமல், நிமலன் அறைக்குள் சென்று விட்டாள் தமயா.


அதில் அவள் சென்ற திசையையே பார்த்தப்படி நிகிலன் நின்று விட.. உள்ளே நுழைந்தவளோ புத்தக அலமாரியின் முன் நின்று எதையோ எடுத்துக் கொண்டிருந்த நிமலனின் அருகில் சென்று நின்று, “ரொம்ப ஹெக்டிக்கான டே இன்னைக்கு.. இவ்வளவு எமொஷன்ஸை நான் ஒரே நாளில் இதுவரை கேரி செஞ்சதே இல்லை.. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகணும், எனக்கு ஒயின் கிடைக்குமா..?” என்றாள் தமயா.


அதில் தன் கையில் இருந்த புத்தகத்தை ஒரு வேகத்தோடு முடியவன், ‘என்ன சொன்னே..?’ என்பது போல் முறைப்பாக திரும்பி அவளைப் பார்க்க.. “வாட்..? கிடைக்காதா..?” என்று தோளை குலுக்கியவள், “அப்போ வோட்கா..?” என்றாள்.


இதில் புருவம் சுருங்க விழிகளில் தெறிக்கும் கோபத்தோடு நிமலன் அவளைப் பார்க்கவும், “அட அதுவுமில்லைனா பீர்.. பீராவது இருக்கா..?” என்றாள் சலிப்பாக தமயா.


“என்னைப் பார்த்தா எப்படிடி இருக்கு உனக்கு..?” என்று இரண்டு எட்டில் அவளை நிமலன் நெருங்கவும், பதட்டத்தோடு பின்னால் நகர்ந்தாள் தமயா.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 9

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34922

தழல் – 10 (a)

இரவில் உறங்குவதற்கு முன் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படிப்பது நிமலனின் வழக்கம். அதேபோல் அன்றும் ஒரு புத்தகத்தை அவன் தேடி எடுத்துக் கொண்டிருக்க.. நிமலனின் அருகில் வந்து நின்றவள் “ரொம்ப ஹெக்டிக்கான டே இன்னைக்கு.. இவ்வளவு எமொஷன்ஸை நான் ஒரே நாளில் இதுவரை கேரி செஞ்சதே இல்லை..” என்று துவங்கவும் பார்வையை மட்டும் திருப்பி அவளைப் பார்த்தான் நிமலன்.


கால் முட்டியை விடக் கொஞ்சமே கொஞ்சம் இறங்கி இருந்த த்ரீ போர்த் வகை ஜீன் பேண்ட், சின்னக் கை வைத்த டீஷர்ட், அலட்சியமாகப் பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டவாறே புக் ஷெல்ப் மேல் சாய்ந்து நின்றிருந்தவளின் நீள கூந்தல் கிளிப் போடாமல் விரித்து விடப்பட்டிருந்ததால் அலைபாய்ந்து கொண்டிருந்தது.


“நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகணும், எனக்கு ஒயின் கிடைக்குமா..?” என்றாள் அடுத்ததாக தமயா. அதில் தன் கையில் இருந்த புத்தகத்தை ஒரு வேகத்தோடு முடியவன், ‘என்ன சொன்னே..?’ என்பது போல் முறைப்பாக அவளைப் பார்க்க.. “வாட்..? கிடைக்காதா..?” என்று தோளை குலுக்கியவள், “ஒகே, அப்போ வோட்கா..?” என்றாள் மீண்டும் தமயா.


இதில் புருவம் சுருங்க விழிகளில் தெறிக்கும் கோபத்தோடு நிமலன் அவளைப் பார்க்கவும், “அட அதுவுமில்லைனா பீர்.. பீராவது இருக்கா..?” என்றாள் சலிப்பாக தமயா.


“என்னைப் பார்த்தா எப்படிடி இருக்கு உனக்கு..?” என்று இரண்டு எட்டில் அவளை நிமலன் நெருங்கவும், பதட்டத்தோடு பின்னால் நகர்ந்தாள் தமயா. “ஹே.. ஹலோ என்ன இது..? இருக்குன்னா இருக்குன்னு சொல்லுங்க, இல்லைன்னா இல்லைன்னு சொல்லுங்க.. அதை விட்டு எதுக்கு இப்படி மேலே வந்து ஏறீங்க..?” என்றாள் மனதில் உண்டான படபடப்பை மறைத்தப்படியே தமயா.


“யாரு நான் மேலே வந்து ஏறுறேனா..?” என்று நிமலன் அவளை முறைத்துக் கொண்டு நிற்க.. “பின்னே இதுக்குப் பேரு என்னவாம்..?” என்றாள் தன்னை நெருங்கி வந்திருந்தவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்து தமயந்தி.


தன் மார்பளவு மட்டுமே இருந்து கொண்டு அவள் கொடுக்கும் அளப்பறையைத் தாங்க முடியாமல் கடுப்பானவன், அவளிடம் பேசி நேரத்தை வீணாக்க விரும்பாமல் “இங்கே பார், நீ இதுக்கு முன்னே எப்படி வேணும்னாலும் இருந்து இருக்கலாம்.. ஆனா இங்கே அப்படியெல்லாம் இருக்க முடியாது.. இருக்கவும் கூடாது, அதை முதலில் மனசில் நல்லா பதிய வெச்சுக்கோ..” என்றான் அழுத்தமான குரலின் நிமலன்.


“ஏன்.. ஏன் இருக்கக் கூடாது.. நான் அப்படித் தான்..” என்று வீம்பாகச் சண்டைக்குத் தயாரானவளை ஒரு பொறுமையற்ற பெருமூச்சோடு பார்த்தவன், “இருக்கக் கூடாதுனா.. இருக்கக்கூடாது அவ்வளவு தான்.. இங்கே உனக்கு நான் ஆப்ஷன் கொடுக்கலை.. ஆர்டர் போடறேன், முதலில் அதை நீ புரிஞ்சுக்கோ..” என்றான் நிமலன்.


“அப்படியெல்லாம் நீங்க எனக்கு ஆர்டர் போட முடியாது..?” என்று தமயா துவங்கவும், “நீயும் உன் இஷ்டத்துக்கு இங்கே ஆட்டம் போட முடியாது.. நீ குடிச்சு கூத்தடிக்க இது ஹோட்டல் இல்லை வீடு.. இங்கே இப்படித் தான் இருக்கணும்னு ஒரு முறை இருக்கு.. அதை முதலில் தெரிஞ்சு நடக்கப் பழகு..” என்றான் நிமலன்.


“வாட்.. குடிச்சு கூத்தடிச்சேனா..? நீங்க அதைப் பார்த்தீங்களா..? வழக்கமா உங்க ஆண்கள் வர்கம் எல்லாம் என் வாழ்க்கையே போச்சு.. என் நிம்மதியே போச்சுன்னு புலம்பிட்டே நேரா இதைத் தானே போய்த் தேடுவீங்க.. இன்னைக்கு நானும் அப்படித் தானே இருக்கேன்.. அதான் ஒருவேளை நிஜமாவே அதைக் குடிச்சா மனநிம்மதி கிடைக்குமான்னு பார்க்கலாமேன்னு கேட்டேன்.. உங்க இஷ்டத்துக்கு நான் இப்படித் தான்னு நீங்களே முடிவு செய்யாதீங்க..” என்றாள் எரிச்சலோடு தமயா.


அப்போதும் அவள் சொல்வதை நம்பாமல் பார்த்த நிமலன், “வாட்எவர், நீ இதுக்கு முன்னே எப்படி வேணும்னாலும் இருந்துட்டு போ.. ஐ டோன்ட் கேர் அபௌட் இட்.. ஆனா இப்போ.. இனி நீ இங்கே அப்படி இருக்க முடியாது..” என்றான் ஒரு வித அழுத்தத்தோடு நிமலன்.


இது தமயாவுக்கு நிஜமாகவே ஆத்திரத்தை கொடுக்க.. “நான் அப்படித் தான் இருப்பேன்..” என்றாள் வேண்டுமென்றே தமயா. “உன் விருப்பத்துக்கு இருக்க இது ஹோட்டலோ.. நீ இங்கே கெஸ்ட்டோ கிடையாது.. உன்னைப் பொருத்தவரைக்கும் இது ஜெயில், நீ இங்கே ஒரு கைதி அவ்வளவு தான்.. உனக்கு இங்கே எந்த உரிமையும், சலுகையும் கிடையாது.. நான் சொல்றது மட்டும் தான் இங்கே நீ செய்யணும்.. அதைத் தவிர வேற எதையும் நீ யோசிக்கவோ பேசவோ கூட உனக்கு இங்கே உரிமை இல்லை..” என்றான் பல்லை கடித்துக் கொண்டு நிமலன்.


நிமலனின் இந்த வார்த்தைகள் அவளுக்குக் கோபத்தையும் கண்ணீரையும் ஒரே நேரத்தில் வர செய்திருக்க.. “ஏன் பேசக்கூடாது..? நான் அப்படித்தான் பேசுவேன், நான் அப்படித்தான் செய்வேன்.. கைதியாம் இல்லை கைதி.. நான் என்ன தப்பு செஞ்சேன், அப்படி இங்கே கைதியா இருக்க..?” என்று படபடத்தாள் தமயந்தி.


“நீ செஞ்ச தப்புக்கு தான் இந்தத் தண்டனை.. ஆனா என்ன உன்னைக் காப்பாத்த நினைச்சதுக்கு எனக்கும் சேர்த்து இந்தத் தண்டனை.. புரியுதா..? இதுக்கு அப்பறமும் என்ன செஞ்சேன்..? ஏது செஞ்சேன்னு எதுவும் தெரியாத மாதிரி முகத்தை வெச்சுட்டு பேசி வெறுப்பு ஏத்தாதே..” என்றான் நிமலன்.


அதில் கண்ணீரோடு அவனைப் பார்த்தவள், “இவ்வளவு தெரிஞ்சும் இத்தனை வெறுப்பு இருந்தும் எதுக்கு என்னைக் கல்யாணம் செஞ்சீங்க..? அப்படி என்ன அரசியல் வேண்டி இருக்கு..? வாழ்க்கையை விட அரசியல் பெருசா..?” என்றாள் வெறுப்பாக தமயா.


“எனக்குப் பெருசு தான்.. மற்ற எல்லாத்தையும் விட எனக்கு அரசியல் பெருசு தான்..” என இதுவரை இருந்த கட்டுப்பாடு எல்லாம் காணாமல் போய்க் கத்தி விட்டிருந்தான் நிமலன்.


“இதோ இதுக்காகத் தான் எனக்கு அரசியலே பிடிக்காது.. அரசியல் ஒரு சாக்கடை..” என்று பதிலுக்குக் கத்தியவளை, “ஏய்..” என்று அடிக்கக் கை ஓங்கி விட்டவன், பின் அப்படியே அவளின் கன்னத்தின் அருகில் அதை நிறுத்தி இருந்தவன், “அரசியல் இல்லைடி சாக்கடை.. உங்க அப்பாவை போலச் சிலர் தான் அதைச் சாக்கடையா மாத்திட்டு இருக்காங்க..” என்றான் நிமலன்.


“எங்க அப்பாவை பற்றித் தப்பா பேசாதீங்க..” என்றாள் நிமலன் அடிக்கக் கை ஓங்கி இருந்ததில் உண்டான பதட்டத்தில் அழுகை விம்மிக் கொண்டு வரும் குரலில் தமயா.


“தப்பானவனைப் பற்றித் தப்பா மட்டும் தான் பேச முடியும்..” என்று அவளின் முகத்தைப் பார்க்க விரும்பாதது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டான் நிமலன்.


“எங்க அப்பா ஒன்னும் தப்பானவர் இல்லை..” என்று ஒருவித அழுத்தத்தோடு சொல்லியவளை பார்வையைத் திருப்பிப் பார்த்தவன், எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர.. அவனின் பார்வையில் இருந்த எள்ளல் தமயாவுக்கு நன்றாகவேப் புரிந்தது.


அதில் வேகமாக அவன் முன் வந்து வழியை மறித்தது போல் நின்றவள், “எங்க அப்பா நிஜமாவே நல்லவர், நீங்க நினைக்கறது போல அவர் எந்தத் தப்பும் செஞ்சு இருக்க வாய்ப்பே இல்லை..” என்றாள் எப்படியாவது அவனுக்குப் புரிய வைத்து விடும் நோக்கத்தோடு தமயா.


“அவர் செஞ்சது தப்பு இல்லை.. துரோகம்.. நம்பிக்கை துரோகம்..” என்றான் நிமலன். “இல்லை.. எங்க அப்பா அப்படியில்லை..” என்றவளை பொருள் விளங்கா ஒரு பார்வை பார்த்தவன், சட்டென அங்கிருந்து வெளியேறி இருந்தான்.


அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவள், “எங்க அப்பா நல்லவர்.. ரொம்ப நல்லவர், அவர் நிச்சயமா இதைச் செஞ்சு இருக்க மாட்டார்.. நிச்சயமா மாட்டார்..” என்று தனக்குத் தானே பல முறை சொல்லிக் கொண்டாள் தமயா.


************


மறுநாள் காலை தீக்ஷாவை ஊருக்கு அனுப்பி வைக்க விமான நிலையம் அழைத்துச் சென்று கொண்டிருந்தான் நிமலன். “இவ்வளவு அவசரமா நீ கிளம்பணுமா தீக்ஷு..? ஒரு இரண்டு நாள் இருந்துட்டு போகலாமே..” என்று மனம் தாங்காமல் நிமலன் கேட்க.. “அதான் சொன்னேனே ண்ணா.. அவர் அடுத்த வாரம் யூஎஸ் கிளம்பறார்.. திரும்ப வர இரண்டு மாசம் ஆகும்.. இப்போ நான் கூட இல்லைனா கோபப்படுவார் ண்ணா.. நானே உன் கல்யாணத்துக்காகத் தான்..” என்றவள் முழுமையாகச் சொல்ல முடியாமல் அப்படியே பாதியில் நிறுத்தினாள் தீக்ஷா.


அதற்கு மேல் நிமலனும் எதுவும் கேட்கவில்லை. குழந்தையோடு இந்த முறை அதிகம் நேரம் செலவிட முடியவில்லை என்ற கவலை அவனுக்கு உண்டாக.. ஸ்ரீஷாவை விமானம் கிளம்பும் வரை தன்னோடே வைத்துக் கொண்டவன் தீக்ஷாவை பார்த்து, “பிரணவ் கிளம்பினதும் நீ இங்கே வந்துடுடா..” என்றான் நிமலன்.


“வரேன் ண்ணா..” என்றவளின் குரலில் சுத்தமாக உற்சாகம் இல்லை. அவளைப் புரிந்தது போல் நிமலனும் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. எப்போதும் இது போல் மனம் சோர்ந்து அமைதியாக தீக்ஷாவை அவன் பார்த்ததே இல்லை.


துறுதுறுவென இருப்பவள் இல்லை என்றாலும் இன்றைய அவளின் அமைதியில் நன்றாகவே வித்தியாசம் தெரிந்தது. ஆசையாக வீட்டிற்கு வந்தவளை மனம் நோக செய்து திருப்பி அனுப்பி விட்டதைப் போல் நிமலனின் மனம் குற்ற உணர்வில் நிலையில்லாமல் தவிக்கத் துவங்கியது.


அதே மனநிலையோடு வீட்டிற்கு வந்தவன், நேராகக் குளியலறைக்குள் நுழைய.. அங்கு முகம் கழுவி விட்டு நிமிர்ந்தவனின் பார்வையில் கண்ணாடியில் தொங்கிக் கொண்டிருந்த மாங்கல்யம் விழுந்தது.


அதைக் கண்டதும் அப்படியொரு ஆத்திரம் அவனுள் உண்டாக.. விழிகள் சிவக்க அதை வெறித்தவன் மாங்கல்யத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வர.. பால்கனியில் எங்கோ பார்த்தப்படி நின்றிருந்தாள் தமயா.


“ஏய்..” என அவளின் கையைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்தவன், “என்னடி இது..?” எனவும் அவன் மேல் வந்து மோதி நின்றவள், அதில் உண்டான திகைப்போடு நிமலனின் முகத்தை என்னவெனப் புரியாமல் பார்த்துப் பின் பார்வையைத் திருப்ப.. அவன் கைகளில் மாங்கல்யம் ஊசலாடிக் கொண்டிருந்தது.


அதைக் கண்டு அவன் பிடியில் இருந்து விலகி நிற்க முயன்றவள், அவன் பிடியை இறுக்குவதைக் கண்டு “லீவ் மீ..” என்றாள் வலியில் உண்டான முகச் சுழிப்போடு கூறினாள் தமயா.


“அன்சர் மீ.. என்ன இது..?” என்றான் பல்லை கடித்தவாறே நிமலன். “ஏன் அது என்னன்னு கூடத் தெரியாத அளவுக்குச் சின்னத்தம்பி பிரபுவா நீங்க..?” என்றாள் கோபமும் எரிச்சலுமான குரலில் தமயா.


“என்னடி நக்கலா..?” என்றவனை நேர் பார்வை பார்த்தவள், “ஆமா.. இப்போ அதுக்கு என்ன..?” எனவும் “நீ இப்படிக் கழட்டி வீசவா என் வைராக்கியத்தை எல்லாம் விட்டு இதை உன் கழுத்தில் நான் கட்டினேன்..?” என்றான் பல்லை கடித்தப்படியே நிமலன்.


“உங்களை யாரு கட்ட சொன்னது..?” என்று திமிராகப் பேச துவங்கியவள் மேலே எதுவோ சொல்ல வருவதற்குள் “யாரு சொன்னா..? எதுக்குச் சொன்னாங்கன்னு எல்லாம் விளக்கம் கொடுக்க எனக்கு நேரமில்லை.. எப்படி நடந்து இருந்தாலும், எதுக்கு நடந்து இருந்தாலும் இது உன் கழுத்தில் தான் இருக்கணும்.. நீ கழட்டி வெச்சு விளையாட இது இடமில்லை, புரியுதா..?” என்றான் நிமலன்.


“இல்லை.. எனக்குப் புரியலை.. இதை நீங்களும் விரும்பி கட்டலை, நானும் விரும்பி கட்டிக்கலை.. அப்பறம் ஏன் இதை நான் போட்டுட்டே இருக்கணும்..?” என்றாள் தமயா.


“ஏன்னா.. இங்கே நாம மட்டும் இல்லை.. ஏற்கனவே இந்தக் கல்யாணம் நடந்ததில் இந்த வீட்டில் யாரும் நிம்மதியா இல்லை.. இன்னும் இதுவும் சேர்ந்தா..” என்று ஒரு வேகத்தோடு பேசிக் கொண்டிருந்தவன், “உனக்கு நான் விளக்கமெல்லாம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.. இனி இதை நீ கழட்டக் கூடாது.. அவ்வளவு தான், எப்போவும் உன் கழுத்தில் தான் இது இருக்கணும்..? காட் இட்..” என்று ஒரு வித அழுத்தத்தோடு கூறியவாறே அதை அவளிடம் நீட்டினான் நிமலன்.


அப்போதும் அதை வாங்காமல் அவனை முறைத்துக் கொண்டே தமயா நின்றிருக்க.. சட்டென அவனே அதை அவள் கழுத்தில் போட்டு விட்டவன் “இதைக் கனவிலும் கழட்ட நினைக்காதே.. விளைவுகள் விபரீதமா இருக்கும்..” என்று விட்டுச் சென்றான் நிமலன்.


அதில் தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாங்கல்யத்தை ஒருமுறை குனிந்து பார்த்தவள், நிமலன் சென்ற திசையை வலியோடு திரும்பி பார்த்தாள்.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா


(சின்ன எபின்னு யாரும் சொல்லாதீங்க.. இது பத்தாவது எபியின் பாதி தான் அதை குறிக்கும் விதமாக தான் (a) என்று போட்டிருக்கிறேன்..)
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 10 (a)

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34923

தழல் – 10 (b)

நிமலன் சென்ற திசையையே பார்த்தபபடி நின்று விட்டவளுக்கு அப்படி ஒரு கோபம் மனதில் கனன்றதில் அது கண்ணீராக வெளி வந்தது. அதில் பால்கனி பக்கம் சென்று நின்றவள் தொலை தூர வானத்தை வெறித்தப்படியே நின்று விட, அவளின் விழிகளோ கண்ணீரை அருவியாகப் பொழிந்தது.


அதே நேரம் தன் காலை நேர உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு தோட்டத்தில் இருந்த கூடை நாற்காலியில் வந்து அமர்ந்த நிகிலன், சோர்வாகக் கழுத்தை இப்படியும் அப்படியுமாக அசைக்கும் போது அவன் பார்வையில் விழுந்தாள் தமயா.


சோக சித்திரமாகப் பால்கனியில் நின்றிருந்தவளின் கண்ணீர் அவனை அசைத்து பார்க்க.. கவலையோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் நிகிலன்.


சற்று முன் நிமலன் கோபமாகக் காரை எடுத்துக் கொண்டு கிளம்பியதை அப்போதே அந்தப் பக்கம் ஜாகிங் முடித்து உள்ளே வந்த நிகிலனும் கவனித்தே இருந்தான்.


வீட்டிற்குள் இருந்து நிமலன் வெளியில் வந்த வேகமும் காரில் ஏறி அதை உயிர்பித்த விதமுமே தன் அண்ணனின் மனநிலையை தெளிவாக அவனுக்குப் புரிய வைத்திருந்தது.


‘காலையில் தீக்ஷுவை அழைத்துச் செல்லும் போது கூட நல்லா தானே இருந்தாங்க.. இப்போ என்னாச்சு..?’ என யோசித்தப்படியே தான் இங்கு வந்து அமர்ந்திருந்தான் நிகிலன்.


இப்போது தமயாவின் இந்த நிலையைக் கண்டவனுக்கு இருவருக்குள்ளும் எதுவோ பிரச்சனை என்பது தெளிவாக.. ‘இதுக்குத் தான் பயந்தேன்.. யாருக்கும் நிம்மதியில்லாம எதுக்கு இப்படி ஒரு கல்யாணம்..?’ என்றெண்ணியவாறே தமயாவை பார்த்திருக்க.. அதே நேரம் கன்னத்தைக் கடந்து வழிந்த கண்ணீரை துடைத்தப்படியே திரும்பியவள், தன்னையே நிகிலன் பார்த்து கொண்டிருப்பதைக் கண்டு அவனை முறைத்து விட்டு சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் தமயா.


அவளின் தன் மேலான கோபத்தைக் கண்டவன், ஒரு ஆழ்ந்த பெருமூச்சோடு அமர்ந்திருக்க.. அந்தப் பக்கமாக மெல்ல நடந்து வந்தார் சூர்யகலா. அவரின் சோர்வு நடையிலேயே தெரிய.. “என்னாச்சு பாட்டி..? உடம்புக்கு எதுவும் முடியலையா..?” என்று அக்கறையாகக் கேட்டவாறே எழுந்து சென்று அவரின் கை பிடித்து அழைத்து வந்து தன் அருகில் அமர வைத்துக் கொண்டான் நிகிலன்.


“ஹ்ம்ம்.. எனக்கென்ன..? நான் நல்லா தான் இருக்கேன், போற காலம் தான் வர மாட்டேங்குதே..” என்றார் வெற்றுக் குரலில் சூர்யகலா. “ஏன் பாட்டி இப்படி எல்லாம் பேசறீங்க..? உங்களை விட்டா எங்களுக்கு யார் இருக்கா..?” என்று பதட்டமாகக் கேட்டான் நிகிலன்.


“வேற எப்படிப் பேச சொல்றே..? இங்கே நடக்கறதை எல்லாம் பார்த்தா இதுக்கா உயிரை இத்தனை நாள் கையில் பிடிச்சுட்டு இருந்தேன்னு இருக்கு..” என்றார் சூர்யகலா.


அதில் வேறு எதுவும் பேசாமல் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு சூர்யகலாவின் தோளில் நிகிலன் தலை சாய்த்து கொள்ளவும், அவன் தலையை அன்போடு வருடி விட்டவர், “என்னவோ எல்லாம் என் கையை மீறிப் போறது போல இருக்கு.. உங்க மூணு பேருக்காகத் தானே இந்த உயிரை கையில் பிடிச்சுட்டு இருக்கேன்.. என் காலம் முடியறதுக்குள்ளே உங்க மூணு பேருக்கும் ஒரு வாழ்க்கை அமைஞ்சுட்டா போதும்னு இத்தனை நாள் நினைச்சுட்டு இருந்தேன்.. இப்போ அப்படி ஒண்ணு உங்க அண்ணனுக்கு அமைஞ்சும் துளி சந்தோஷம் மனசில் இல்லை.. அந்தத் துரோகியோட பொண்ணு இந்த வீட்டு மருமகளா உரிமையோட இங்கே வலம் வரதை எப்படி என்னால் கை கட்டி வேடிக்கை பார்க்க முடியும் நிகிலா..? நீயே சொல்லு..?” என்றவரின் குரலில் மலையளவு வேதனை நிரம்பி இருந்தது.


அது புரிந்தார் போல் நிகிலனும் அமைதியாகவே இருக்க.. “இப்படி ஒரு கல்யாணத்தைச் செஞ்சதுக்கு உங்க அண்ணன் இத்தனை நாள் பிடிக் கொடுக்காம இருந்தது போலவே இருந்திருக்கலாம்..” என்று வருந்தினார் சூர்யகலா.


அதில் அவர் முகத்தைக் கவலையாக நிமிர்ந்து பார்த்தவன், “வேண்டாம் பாட்டி.. இப்படிப் பேசாதீங்க, அண்ணா காதில் விழுந்தா வருத்தப்படுவார்..” என்றான் நிகிலன்.


“ஆமா.. உங்க அண்ணன் வருத்தம் மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரியுதா..? என் மனசு கிடந்தது தவிக்கறதும், வருந்தறதும் உனக்குத் தெரியலையா..?” என்று குறைப்பட்டுக் கொண்டார் சூர்யகலா.


“தெரியாம இல்லை பாட்டி.. ஆனா அண்ணா இப்படிச் செய்யணும்னா நிச்சயமா அதுக்கு பின்னே ஒரு நியாயமான காரணம் இருக்கும்.. இல்லைனா இப்படி ஒரு முடிவுக்கு வர ஆளா அண்ணா..? கொஞ்சம் யோசிங்க.. அவருக்கு வெளியே எத்தனையோ பிரச்சனைகள் இருக்கு.. இதில் நாமும் நம்ம பங்குக்கு வருத்தத்தைக் கொடுத்தா எப்படி..?” என்றவனை ஒரு மாதிரியாகத் திரும்பி பார்த்தவர், பதிலேதும் பேசாமல் திரும்பிக் கொண்டார்.


அவரின் அந்தச் செயலில் கவலையானவன், “நான் தப்பா எதுவும் சொல்லலை பாட்டி..” என்று துவங்கவும், “எனக்கு உன் மேலே கோபம் எதுவுமில்லை நிகிலா..” என்றார் சூர்யகலா.


அவரின் வருத்தமும் மனமும் புரிய.. இதற்கு மேலும் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாத நிகிலன், “சரி பாட்டி.. நான் போய்க் குளிச்சுட்டு வரேன்..” என்று அவருக்குத் தனிமை கொடுத்து விட்டு எழுந்து உள்ளே சென்றான்.


அதற்கு ஒரு தலையசைப்பையே பதிலாகத் தந்தவரின் மனம் பின்னோக்கி சென்றது. இதே வீட்டில் எத்தனை அன்பும் சந்தோஷமாக கணவர், பிள்ளைகள், பேர பிள்ளைகள் என வாழ்ந்த நாட்கள் எல்லாம் மனதில் வந்து போக.. அதையெல்லாம் அசைப்போட்டவாறே அமர்ந்திருந்தார் சூர்யகலா.


****************


அதே நேரம் அறைக்குள்ளேயே இப்படி அடைந்து கிடப்பதில், தேவையில்லாததை எல்லாம் யோசித்துக் குழம்பி, பைத்தியம் பிடித்து விடும் போல இருக்க.. சட்டெனத் தோட்டத்தில் கொஞ்ச நேரம் உலாவி விட்டு வர எண்ணி கிளம்பி விட்டாள் தமயா.


லேசான தயக்கத்தோடே கீழே இறங்கி வந்தவள், வேலை செய்பவர்களைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லாததில் உண்டான நிம்மதியோடே வாயிலுக்கு வர.. அங்கு அழகாகப் பராமரிக்கபட்டுக் கொண்டிருந்த செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார் சின்ராசு.


அவரைக் கடந்து செல்ல முயன்றவள், அப்படியே நின்று திரும்பி அவரைப் பார்த்து “ஹை ஸ்மால் கிங்..” என்று உற்சாகமாகக் குரல் கொடுத்தாள் தமயா.


அதில் அவளின் குரல் கேட்டு திரும்பியவரும் “நல்லா இருக்கீங்களா பாப்பா..?” என்று புன்னகை முகமாக விசாரித்தார். நேற்றே தன் மனைவி சரோஜாவின் மூலம் தமயாவை பற்றி அறிந்துக் கொண்டிருந்தவருக்கு நிஜமாகவே அவள் இந்த வீட்டு மருமகளானதில் அத்தனை மகிழ்ச்சி.


அது அவரின் முகத்திலும் பிரதிபலிக்க.. “எவ்வளவு வருஷமாச்சு இல்லை உங்களை எல்லாம் பார்த்து..? திரும்ப உங்களை எல்லாம் பார்ப்பேன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை..” என்று சந்தோஷத்தோடு பேசிக் கொண்டிருந்தாள் தமயா.


அங்கு வேகமாக வந்த சரோஜா, இவர்களின் பேச்சு குரல் கேட்கும் தூரத்தில் சூர்யகலா அமர்ந்திருப்பதை விழிகளால் சுட்டி காண்பித்துக் கணவனை அமைதியாக இருக்குமாறு சைகை செய்தார்.


அதில் தன்னால் தேவையில்லாத பிரச்சனை வேண்டாமென எண்ணிய சின்ராசுவும் “சரி பாப்பா.. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு.. நான் கிளம்பறேன்..” என்று அங்கிருந்து நகர முயல.. “எத்தனை வருஷத்துக்கு அப்பறம் பார்க்கறோம்.. இப்படிப் பாதியில் விட்டுப் போறீங்களே கிங்.. இது நியாயமா..?” என்றாள் வாடிப் போன முகத்தோடு தமயா.


அதைக் கேட்டு அவர் தவிப்போடு தமயாவின் முகத்தைப் பார்க்க.. இப்படி இவர்கள் சேர்ந்து நின்று சந்தோஷமாகப் பேசுவதை மட்டும் சூர்யகலா பார்த்து விட்டால் அது தமயாவுக்குத் தான் பிரச்சனை என்று உணர்ந்த சரோஜா “அவங்களுக்குக் கொஞ்சம் வேலை இருக்கு பாப்பா.. நீங்க வாங்க நாம சமையலறையில் போய்ப் பேசலாம்..” என்று தமயாவை தோட்டத்திற்குச் செல்ல விடாமலும் தடுத்து சின்ராசுவையும் அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டு கையோடு அவளை உள்ளே அழைத்துச் சென்று விட்டார்.


அதன் பின் அவரோடு வளவளத்துக் கொண்டு தமயா அங்கேயே இருந்து விட.. சரோஜாவும் சமைத்துக் கொண்டே பேசினார். இதற்கிடையில் தனக்குக் காபி வேண்டுமெனச் சொல்ல அங்கு வந்த நிகிலன், சமையலறை மேடையில் வாகாக ஏறி அமர்ந்து கொண்டு கேரட்டை கையில் வைத்து கடித்தவாறே இயல்பாகப் பேசி சிரித்துக் கொண்டிருந்த தமயாவை கண்டு அப்படியே உள்ளே செல்லாமல் நின்று விட்டான்.


நேற்றிலிருந்து அழுது கொண்டே இருந்தவளின் இந்தப் புன்னகை முகம் அவனுக்கு ஆறுதலை தந்தது. ‘எத்தனை வருஷமாகுது இவளை இப்படிப் பார்த்து..?’ என்று எண்ணிக் கொண்டவன், அவனைக் கண்டால் மீண்டும் அவள் முகத்தில் இருக்கும் புன்னகை காணாமல் போய் விடும் என்று புரிந்தே அங்கிருந்து அப்படியே தன் அறைக்குத் திரும்பி விட்டான் நிகிலன்.


ஆனால் அவன் சென்று விட்டாலும் அவளின் புன்னகையைக் காணாமல் போகச் செய்யவே வந்தது போல் அடுத்தப் பத்து நிமிடத்தில் “என்ன இங்கே ஒரே சிரிப்பும் கூத்துமா இருக்கு..?” என்றப்படியே அங்கு வந்தார் சூர்யகலா.


அதில் சரோஜா சட்டென வேலையில் கவனமாக, தமயாவோ பேசுவதை நிறுத்தி இருந்தாலும், அவள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து இறங்கவில்லை. பார்வையை வேறு எங்கோ பதித்தப்படி அமர்ந்திருந்தவளை கண்டவருக்குத் தலை முதல் கால் வரை பற்றிக் கொண்டு வந்தது.


தன்னைக் கண்டும் கொஞ்சமும் மதிக்காமல் எந்தப் பதட்டமும் இல்லாமல் அவள் அமர்ந்திருந்த விதம் வேறு அவருக்கு எரிச்சலை தர.. “இது என்ன மடமா..? இல்லை சத்திரமா..? கண்டவளையும் உட்கார வெச்சு சாப்பாடு போட..? நீ ஏன் இதை எல்லாம் செய்யற சரோஜா..? அவளைச் சமைக்கச் சொல்லு, இன்னைக்கு இங்கே இருக்க எல்லாருக்கும் அவ தான் சமைக்கணும்..” என்றார் கட்டளைக் குரலில் சூர்யகலா.


அதில் சங்கடமாகத் திரும்பி தமயாவை சரோஜா பார்க்க.. அவளோ துளியும் அதிராமல் “என்னது நானா..?” என்றாள். “ஏன் செய்ய மாட்டாளாமா..? அவ தான் செய்யணும்னு சொல்லிடு..” என்றார் மீண்டும் சூர்யகலா.


“ஆனா எனக்குத் தான் சமைக்கவே தெரியாதே ரோஸ்..” என்று அப்போதும் அங்கிருந்து இறங்காமலே தோளை குலுக்கியவளை காணும் போதே சூர்யகலாவுக்கு ஆத்திரம் எல்லையில்லாமல் பெருகியது.


ஆனாலும் சற்று நேரத்திற்கு முன் நிகிலன் சொல்லி இருந்ததை மனதில் வைத்து நிமலனுக்குப் பிரச்சனை கொடுக்க வேண்டாமென்று எண்ணியே நேராக அவளிடம் பேசாமல் சரோஜாவின் மூலம் சொல்லிக் கொண்டிருந்தார் சூர்யகலா.


இல்லையென்றால் அவளை இந்த நிலையில் கண்டதுமே நேராக அவளை தரதரவென இழுத்து சென்று வெளியில் தள்ளி இருப்பார். வெகு சிரமப்பட்டு அதைத் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டவர், கொஞ்சமும் பதட்டமில்லாமல் தமயா பேசுவதைக் கண்டு உண்டான வெறுப்போடு, “என்னது சமைக்கக் கூடத் தெரியாதா..? என்னமோ வெளிநாட்டுக்கு எல்லாம் போய்ப் படிச்சுட்டு வந்ததா சொன்னாங்களே..! அப்போ எல்லாம் பொய்யா..?” என்று வேண்டுமென்றே அவளை மனம் நோக செய்ய முயன்றார் சூர்யகலா.


“வெளிநாட்டில் போய் நான் என்ன சமைக்கவா படிச்சேன்..” என்று சரிக்குச் சரியாக தமயாவும் பதில் கொடுத்துக் கொண்டிருக்க.. இவர்களுக்கு இடையில் சிக்கிய சரோஜா தான் தவித்துப் போனார்.


சைகையில் தமயாவை அமைதியாக இருக்குமாறு அவர் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருக்க.. அதை எல்லாம் தமயா கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை.


இப்படி அவள் சரிக்கு சரி பதில் கொடுத்துக் கொண்டிருந்ததில் எரிச்சலான சூர்யகலா, “சரோஜா.. இன்னைக்குச் சமையல் அவ தான் செய்யணும்.. அதுவும் தனியா.. நீ ஏதாவது உதவி செஞ்சேன்னு தெரிஞ்சுது, அவ்வளவு தான் பார்த்துக்க..” என்று மிரட்டி விட்டு அங்கிருந்து வெளியேற.. அவர் சென்ற திசையைக் கேலியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் தமயா.


சமையலறை வாயில் வரை சென்று சூர்யகலா சென்று விட்டதை உறுதிபடுத்திக் கொண்டு வந்த சரோஜா “ஏன் பாப்பா இப்படி வம்புக்கு நிற்கறீங்க..? அவங்க கோபம் தான் உங்களுக்குத் தெரியுமில்லை.. கொஞ்சம் அமைதியா போனா தான் என்ன..?” என்றார் கவலையும் அக்கறையுமாக சரோஜா.


“அட நீங்க வேற ரோஸ்.. நாம அமைதியா இருந்தா ஏறி மிதிச்சுட்டு போயிட்டே இருப்பாங்க..” என்று அப்போதும் அசராமல் பேசியவளை கவலையோடு பார்த்தவருக்கு இந்தப் பெண்ணுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது என்றே தெரியவில்லை.


அதில் அவர் வேலையைப் பார்க்க துவங்க.. “என்ன நீங்க சமைக்கறீங்க..? இன்னைக்கு நான் தானே செய்யணும்..?” என்றாள் தமயா. “உங்களுக்கு என்ன தெரியும் பாப்பா..? நானே செஞ்சுடறேன் விடுங்க..” என்றவரை தடுத்து “அதெல்லாம் முடியாது.. என்னைத் தானே சமைக்கச் சொன்னாங்க.. நான் தான் செய்வேன்..” என்று களத்தில் குதித்தாள் தமயா.


வம்பை விலைக் கொடுத்து வாங்குகிறாளே என்ற பதட்டத்தோடே சரோஜா அவளைப் பார்க்க.. ‘என்ன..?’ என்பது போல் புருவம் உயர்த்தினாள் தமயா.


“இல்லை.. உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா..?” என்று தயக்கத்தோடு அவர் கேட்கவும், “அதைப் பற்றிச் சாப்பிட போறவங்களே கவலைப்படலை உங்களுக்கு என்ன ரோஸ் கவலை விடுங்க.. நான் தான் சமைக்கணுமாம் இல்லை, எனக்குத் தெரிஞ்ச வெஜிமைட் டோஸ்ட், டிம் டாஸ், பாவ்லோவா, லாமிங்டோன்ஸ்னு செஞ்சு வைக்கறேன்.. வயசான காலத்தில் நல்லா சாப்பிட்டு என்ஜாய் செய்யட்டும்..” என்றவளை கலவரமாகப் பார்த்தார் சரோஜா.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 10 (b)

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34924
தழல் – 11

தமயா பேசியதை கேட்டு அதிர்ந்து போன சரோஜா, அதற்கு நேர் மாறாக வெகு நேர்த்தியாக அவள் அனைத்தையும் செய்வதைக் கண்டு திகைத்துப் போய் நின்று இருந்தார்.


அத்தனை அழகாக எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் தனி ஒரு ஆளாக அவள் அனைத்தையும் சமைப்பதை கண்டு விழி விழிய நம்ப முடியாமல் பார்த்திருந்தவரை, வேலைக்கு இடையில் திரும்பி பார்த்தவள் “என்ன அப்படிப் பாக்குறீங்க ரோஸ்..?” என்று கேலியாகக் கேட்கவும், “பாப்பா இதெல்லாம் என்ன..?” என்றார் நம்ப முடியாத குரலில் சரோஜா.


“இதெல்லாம் சாப்பிடற ஐட்டங்கள் தான் ரோஸ்.. தைரியமா சாப்பிடலாம், தமயாவை நம்பினோர் கைவிடப்படார்..” என்று வசனம் பேசியவாறே சமையலையும் கவனிக்கத் தொடங்கினாள் தமயா.


“நீங்க என்னென்னவோ பேர் எல்லாம் சொன்னதும் ரொம்ப பயந்துட்டேன்.. இவ்வளவு அழகா சமைக்கத் தெரிஞ்சும் ஏன் பாப்பா அப்படி மேடம்கிட்டே பேசினீங்க..?” என்றார் அதிர்வோடு சரோஜா.


”வேற எப்படிப் பேச சொல்றீங்க ரோஸ்..? அவங்க என்கிட்ட நடந்துக்கும் முறையைப் பார்க்கறீங்க இல்லை.. நான் பணிந்து போனா அவங்க இன்னும் ஏறி மிதிப்பாங்க, அதான் வேணும்னே வம்பு செஞ்சேன்.. நான் என்ன செஞ்சு வைக்கப் போறேனோன்னு கொஞ்சம் பதட்டத்திலேயே இன்னைக்கு முழுக்க இருக்கட்டும்.. அப்போ தான் என் பக்கம் வர அவங்களுக்குத் தோணாது..” என்று கண் சிமிட்டி கூறியவாறே தமயா கலகலவெனச் சிரிக்கவும், அவளை வாஞ்சையோடு பார்த்தபடி நின்றிருந்தார் சரோஜா.


அதே நேரம் வீட்டிற்குள் வந்த நிமலன், சில்லென்று எதையாவது குடிக்க எடுத்து வர சரோஜாவிடம் சொல்ல எண்ணி சமையல் அறை வாயிலுக்கு வந்து நிற்கவும், தமயா கண் சிமிட்டியவாறே சரோஜாவோடு பேசி சிரிக்கவும் சரியாக இருந்தது.


அதில் அப்படியே அசையாமல் நின்று விட்ட நிமலனின் பார்வை அவள் முகத்தில் வெறுமையோடு பதிந்திருக்க.. இப்படி ஒருவன் தனக்குப் பின்னால் நிற்பதை கூடக் கவனிக்காமல் தன் போக்கி அடுத்தடுத்த வேலைகளில் கவனமானாள் தமயா.


சூர்யகலா எந்த உதவியும் செய்யக் கூடாது என்று சரோஜாவிற்கு உத்தரவு விட்டிருந்தாலும் மனம் கேட்காமல் உடன் நின்று தமயாவுக்கு உதவ முயன்றார் சரோஜா.


ஆனால் அவர் உதவி வேண்டாம் என்று மறுத்து விட்டவள் தானே அனைத்தையும் செய்யத் துவங்கினாள். அவள் சமைக்கும் வேகத்தையும் அதில் இருக்கும் நேர்த்தியையும் கண்டு வியப்பான சரோஜா “இதையெல்லாம் எப்போ எங்கே கத்துக்கிட்டீங்க பாப்பா..?” என்றார்.


“என்னவோ திடீர்னு நான் இந்த நாட்டிலேயே இருக்கக் கூடாதுன்னு முடிவு செஞ்சு என்னை எங்க அப்பா ஆஸ்திரேலியாவில் கொண்டு போய் விட்டுட்டார்.. ஏன் எதுக்குன்னு சரியான காரணம் இப்போ வரைக்கும் எனக்குத் தெரியலை.. அவருக்காவது தெரியுமான்னும் எனக்கும் தெரியலை.. பிறந்து வளர்ந்து இங்கேயே இருந்து பழகின எனக்கு, வேரோடு பிடுங்கி என்னை வேற இடத்தில நட்டது போல ஒரு நிலை தான் அங்கே, ஆரம்பத்தில் ஒண்ணுமே புரியலை.. அங்கே அட்ஜஸ்ட் செஞ்சுக்கவே ரொம்ப கஷ்டமா இருந்தது..


தெரிஞ்சவங்க பழகினவங்கன்னு அங்கே யாரும் இல்லை.. அடுத்து அங்கே சமைக்கும் சாப்பாடை வாயில் வைக்க முடியலை.. அது நல்லா இல்லைன்னு நான் சொல்லலை, ஆனா எனக்குப் பிடிக்கலை.. நாம நல்லா சாப்பாடு, குழம்பு, ரசம், மோர், இரண்டு வகைப் பொரியல், வறுவல்னு காரசாரமா சாப்பிட்டு பழகினவங்க..


ஆனா அங்கே அதெல்லாம் கிடைக்குமா.. எல்லாம் பாதி வெந்தும் வேகாம, காரமே இல்லாம சப்பிடுவாங்க, இதில் நானே விழுந்து எழுந்து எனக்குப் பிடிச்சது போலச் சமைக்கக் கத்துக்கிட்டது தான் இதெல்லாம்.. அத்தனை கோவத்திலும் இதெல்லாம் நான் ஏன் கத்துக்கிட்டேன்னு உங்களுக்குத் தெரியுமா..?” என்று திடீரெனத் திரும்பி சரோஜாவை பார்த்து தமயா கேட்கவும், அவ்வளவு நேரம் அவள் பேசியதை எல்லாம் கேட்டவாறு மனம் கனக்க அவளையே வருத்தத்தோடு பார்த்தபடி நின்றிருந்த சரோஜா, ‘இல்லை’ என்பது போலத் தலையசைக்க.. அவளோ “ஏன்னா நமக்குச் சோறு தான் முக்கியம் ரோஸ்..” என்றிருந்தாள் குறும்பான குரலில் தமயா.


அதில் தன்னையும் மீறி சிரித்து விட்ட சரோஜா, “இன்னும் விளையாட்டு பிள்ளையாவே இருக்கீங்க பாப்பா, வளரவே இல்லை நீங்க..” என்றார். “என்ன செய்ய ரோஸ் பக்கத்தில் இருந்து ஹார்லிக்ஸ் கரைச்சு கொடுத்து வளர்க்க எங்க மம்மிக்கு நேரமில்லை.. அதான் நான் இன்னும் அப்படியே இருக்கேன்..” என்றவளின் கவலை குரலில் சரோஜாவின் முகம் வாடிப் போக.. “நான் எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னா..? எல்லாம் அதுக்குத் தான் சொல்றேன்..” என்று திரும்பி கேலியாகச் சிரித்தாள் தமயா.


அவளின் நொடிக்கு நொடி மாறும் இந்த முகப் பாவத்தையும், பேச்சையும் கண்டவரின் மனம் நெகிழ.. “நிஜமாவே நீங்க குழந்தை தான்..” என்றார் சரோஜா.


“ஆமா குழந்தை பிள்ளையைத் தான் பிடிச்சு இப்படிக் கல்யாணம் செஞ்சு வெச்சு இருக்காங்க, அட போங்க ரோஸ் என்னை டென்ஷன் ஆக்காதீங்க..” என்று அதுவரை இருந்த குறும்புத்தனம் காணாமல் போன முகத்தோடு கூறியவள், கடகடவெனச் சமையலில் கவனம் செலுத்த துவங்கினாள் தமயா.


இதையெல்லாம் கேட்டவாறு அவளையே பார்த்தவாறு சில நொடிகள் நின்றிருந்த நிமலன், பின் அங்கிருந்து சத்தம் வராமல் நகர்ந்து விட.. அதே நேரம் தன் அறையில் இருந்து வெளியில் வந்த சூர்யகலா நிமலனைக் கண்டு நின்றார்.


சமையலறையில் இருந்து வருபவனைக் கேள்வியாகப் பார்த்தவர் “ஏதாவது வேணுமா நிமலா..?” எனவும் “ஏதாவது குடிக்கலாம்னு போனேன், சரோம்மா பிஸியா இருக்காங்க..” என்றவன், அங்கேயே சோபாவில் அமர்ந்து கொள்ள.. “என்ன பிசியா இருக்காளா..? அவளை எதுவும் செய்யக் கூடாதுன்னு தானே சொன்னேன்..” என்று வேகமாகச் சமலறையை நோக்கி செல்ல முயன்றார் சூர்யகலா.


“அவங்க பிஸியா இருக்காங்கன்னு தான் சொன்னேன்.. சமைக்கறாங்கனா சொன்னேன்..? அவங்க பேசிட்டு இருக்காங்க பாட்டி..” என்று அவரை அந்தப் பக்கம் போக விடாமல் தடுத்தான் நிமலன்.,


“வெட்டியா பேசிட்டு இருக்கவா அவளுக்கு இங்கே சம்பளம்..?” என மீண்டும் அங்கே செல்ல முயன்ற சூர்யகலாவை கண்டு ஒரு சலிப்பான முகபாவனையோடு விழிமூடி நிமலன் சாய்ந்து கொள்ள.. அவனையே பார்த்தபடி நின்றிருந்தவருக்கு மனம் வருந்தியது.


அதில் நிமலனின் அருகில் சென்று அமர்ந்தவர், அவனின் நெற்றியை அன்போடு வருடியவாறே “என்னாச்சு நிமலா..? தலைவலிக்குதா..?” என்றார் சூர்யகலா.


“ம்ப்ச்.. என்னவோ எல்லாம் என் கையை மீறிப் போறது போல இருக்கு பாட்டி..” என்று கூறியவனைக் கவலையோடு பார்த்தவர், “நீ இப்படி எல்லாம் பேசற ஆளே இல்லையே கண்ணா..! என்னாச்சு..? எதுவா இருந்தாலும் உன்னால் சரி செய்ய முடியும், நீ நினைச்சா எதையும் மாற்ற முடியும்.. ஞாபகம் வெச்சுக்கோ, எதுக்காகவும் உன் கொள்கையையும் லட்சியத்தையும் விட்டுடாதே..” என்றார் சூர்யகலா.


அதில் விழிகளைத் திறந்து அவரைப் பார்த்தவன், தன் நெற்றியில் பதித்திருந்த அவரின் கையை எடுத்து தன் இரு கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டவாறே, “உங்களுக்கு என் மேலே கோவம் தானே..!” என்றான் நிமலன்.


“இல்லைன்னு சொல்ல மாட்டேன்.. ஆனா இப்போ கோவத்தை விட ஆதங்கம் தான் அதிகமா இருக்கு நிமலா.. அந்த பொண்ணை ஒவ்வொரு நிமிஷமும் இந்த வீட்டில் பார்க்கும் போது என் அடிவயிறு எல்லாம் பத்திட்டு எரியுது..” என்றவரின் வார்த்தைகளை விழி மூடி தனக்குள் கிரகித்துக் கொள்ள முயன்றவன் “சாரி பாட்டி..” என்றான் விழிகளில் தேங்கி நிற்கும் வேதனையோடு நிமலன்.


“நீயா இப்படிச் செஞ்சேன்னு இப்போவும் என்னால் நம்பவே முடியலை.. மனசை ஏதோ போட்டு அழுத்திட்டு இருந்தது.. காலையில் நிகிலா சொன்ன ஒரு வார்த்தை தான் என்னை யோசிக்க வெச்சது..” என்றவரை அவன் கேள்வியாகப் பார்க்கவும், “அண்ணன் இப்படிச் செய்றவங்களே இல்லை பாட்டி.. அதையும் மீறி இப்படிச் செய்யறாங்கனா அதுக்குப் பின்னே கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும்னு சொன்னான்.. அதுக்குப் பிறகு தான் யோசிச்சேன், இதில் நான் பார்க்கற கோணம் வேறயா இருந்து, நீ பார்க்கற கோணம் வேறயா இருந்தா..? எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கு கண்ணா..” என்றார் உறுதியான குரலில் சூர்யகலா.


இதில் சட்டென அவரை அணைத்து கொண்டவன் “தேங்க்ஸ் பாட்டி..” என்று விட்டு மேலும் எதையோ சொல்ல முயலவும், அதேநேரம் சரோஜாவும் தமயாவும் அங்கு வந்து நிற்கவும் சரியாக இருந்தது.


அவ்வளவு நேரம் இருந்த இலகுவான முகத்தை மாற்றி இறுக்கமாக வைத்துக் கொண்ட நிமலன் சற்று தள்ளி அமர்ந்து கொள்ள.. தன் பேரனோடு அதுவரை அன்பாக பேசிக் கொண்டிருந்த சூர்யகலாவும் சிடுசிடுவென்ற முகத்தோடு திரும்பி அவர்களை என்னவென்பது போல் பார்த்தார்.


“சமையல் ரெடி மேடம்..” என்று சரோஜா பணிவாகச் சொல்லவும். “யாரு நீயா செஞ்சே..?” என்றார் வேண்டுமென்றே சூர்யகலா. “இல்லை மேடம், பாப்பா தான் செஞ்சாங்க..” என்று அவசரமாக சரோஜா சொல்லவும் “பாப்பாவா..? ஏன் ஒரு பீட்டிங் பாட்டில் வாங்கிட்டு வந்து ஊட்டிவிடேன்..” என்றார் நக்கலாக சூர்யகலா.


“நெக்ஸ்ட் டைம் கடைக்குப் போகும் போது மறக்காம வாங்கிட்டு வந்துருங்க ரோஸ்.. எனக்குமே ரொம்ப வருஷம் ஆகிடுச்சு அதில் எல்லாம் குடிச்சு, ரொம்ப ஆசையா இருக்கு.. ஐ ம் வெயிட்டிங்..” என்று விட்டுத் தமயா சமையலறைக்குள் சென்று விட.. அவள் சென்ற திசையையே முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் சூர்யகலா.


இதில் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு சரோஜா தான் விழி பிதுங்கி நின்றார். சூர்யகலாவின் கோபத்திற்கும் தமயாவின் அலட்சியத்திற்கு இடையில் மாட்டி திருதிருப்பவரால், முகத்தில் எதையும் வெளிப்படுத்திக் கொள்ளவும் முடியாத நிலை.


அவர் தவிப்போடு நின்றிருக்க.. அவரின் நிலையைப் புரிந்து கொண்டது போல் “எல்லாம் கொண்டு வந்து டேபிளில் வைங்க சரோம்மா..” என்றான் நிமலன்.


அதில் அவர் விட்டால் போதும் என உள்ளே ஓடி விட.. ‘திமிரை பார்த்தியா அவளுக்கு..?’ என்று முணுமுணுத்தார் சூர்யகலா. இப்படி ஒரு திருமணம் செய்து கொண்டு வந்ததைப் பற்றியோ இந்த வீட்டில் உள்ள யாருக்குமோ இதில் விருப்பம் இல்லை என்பதைப் பற்றியோ கொஞ்சமும் கவலை இல்லாமல் தன் போக்கில் ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொள்பவளை காணும் போதே சூர்யகலாவுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் பெருகியது.


ஆனால் இதை வைத்தே அவளை மனம் நோக செய்ய முடியாமல் நிகிலனின் வார்த்தைகளும் நிமலனின் இறுக்கமும் அவரைத் தடை செய்ய.. அதற்காகவே அவளை வார்த்தைகளால் குத்த எண்ணி இவர் தேர்ந்தெடுத்த வழி தான் இன்று அவளை சமைக்கச் சொன்னது.


நேரிடையாகப் பேச முடியவில்லை என்றாலும் இதை வைத்து அவளை வலிக்கச் செய்ய சூர்யகலா சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க.. சரோஜாவும் மற்றொரு வேலையாளும் அனைத்தையும் கொண்டு வந்து உணவு மேஜையில் வைத்தனர்.


அதற்குள் நிகிலனையும் அழைத்திருந்த சூர்யகலா, மூவருமாகச் சென்று அங்கு அமர்ந்தார். மூடி வைத்திருந்த பாத்திரங்களை எல்லாம் ஒரு அலட்சியத்தோடே திறந்தவர், அதில் ஆலு பராத்தா, மேத்தி மஷ்ரூம், பன்னீர் புலாவ், ராஜ்மா கிரேவி, பாதாம் கீர் என்று அணிவகுத்து இருந்ததைக் கண்டு முகம் மாற, திரும்பி சரோஜாவை பார்த்தார்.


“உன்னை எதுவும் செய்யக் கூடாதுன்னு தானே சொன்னேன் நான்..” என்று கோபமாகக் கேட்டவரை பதட்டமாகப் பார்த்த சரோஜா, “நான் செய்யலைங்க மேடம்.. எல்லாம் பாப்பா தான்..” என்றார் அவசரமாக.


இதில் நிகிலனே வியப்பாகப் புருவத்தை உயர்த்தி அங்கிருந்த உணவையும் தமயாவையும் ஒருமுறை பார்த்தான். நிமலனோ எதையுமே கண்டு கொள்ளவில்லை. சூர்யகலாவால் தான் எதையுமே நம்ப முடியவில்லை. டீஷர்ட்டும் லாங் ஸ்கர்ட்டும் போட்டுக் கொண்டு தூக்கி உச்சியில் போட்ட பன் கொண்டையோடு அலட்சியத்தோடு நின்றிருப்பவள் தான் இத்தனையையும் இவ்வளவு சீக்கிரமாக செய்தாள் என்றால் அவரால் எப்படி நம்ப முடியும்..?


தானே எடுத்து வைத்து சாப்பிட முயன்ற நிமலனைத் தடுத்திருந்த சூர்யகலா, “நீ ஏன் இதெல்லாம் செய்யறே..?” என்று விட்டு திரும்ப.. அவசரமாக முன்னால் வந்து நின்றார் சரோஜா.


“உன்னை யார் செய்யச் சொன்னா..” என்று அவரிடம் எரிந்து விழுந்த சூர்யகலா “நீ என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்கே.. வந்து எல்லாருக்கும் எடுத்து வை.. என்ன லட்சணத்தில் செஞ்சு இருக்கேன்னு பார்க்கலாம்..” என்று தமயாவை பார்த்து சொல்லி விட்டு சூர்யகலா அமர.. கோபமாக அவரைப் பார்த்தாலும், வேறு எதுவும் பேசாமல் முன்னாள் வந்து பரிமாறினாள் தமயா.


எதில் எல்லாம் குறை சொல்லலாம் என்ற எண்ணத்தோடே சூர்யகலா சாப்பிட.. எப்போதும் போல் தேவைக்குக் கொஞ்சமாக வைத்துக் கொண்டு சாப்பிட்டான் நிமலன்.


ஆனால் வழக்கத்தை விட அதிகமாக அனைத்தையும் ரசித்து ருசித்து நிகிலன் சாப்பிட்டுக் கொண்டிருக்க.. அதை ஒரு புன்னகையோடு பார்த்தவள், அவனுக்குத் தேவையானதை பார்த்து பரிமாற.. வேறு எதிலும் குறை சொல்ல முடியா கடுப்பில் இருந்த சூர்யகலா, “அதான் பரிமாறிட்டே இல்லை.. இன்னும் உனக்கு இங்கே என்ன வேலை.. உள்ளே போ..” என்று தமயாவிடம் சிடுசிடுத்தார் சூர்யகலா.


அதில் சட்டெனக் கோபம் வந்தாலும் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள் தமயா. அவள் சென்றதும் நிகிலனை முறைத்தவர், “என்ன இது ஏதோ காணாததைக் கண்டது போல இப்படிச் சாப்பிடறே..?” என்று எரிச்சலாகக் கேட்கவும், “எல்லாமே நல்லா இருக்கு பாட்டி.. அதோட இங்கே நாம இதையெல்லாம் அதிகம் செய்யறதும் இல்லை.. இப்போ நான் அங்கே இதெல்லாம் சாப்பிட்டு பழகிடுச்சு பாட்டி..” என்றான் இயல்பாக நிகிலன்.


“ஓஹோ.. அதனால் தான் உனக்குப் பிடிச்சதா சமைச்சு கொடுத்து உன்னைக் கைக்குள்ளே போட்டுக்கப் பார்க்கறாளா..?” என்றார் வெறுப்பான குரலில் சூர்யகலா.


அதில் நிகிலன் திகைத்து பார்க்கும் போதே “பாட்டிஈஈ..” என்று ஒருவித அழுத்தத்தோடு கண்டிப்பான குரலில் அழைத்திருந்தான் நிமலன். இதில் சூர்யகலா முகத்தைத் திருப்பிக் கொள்ள.. “உங்க கோபமும் வெறுப்பும் சரி தான்.. ஆனா.. வார்த்தைகளில் கவனமா இருங்க, ஏன்னா இப்போ அவ ஜெயதேவ் பொண்ணு இல்லை.. நிமலன் பொண்டாட்டி.. நீங்க பேசற ஒவ்வொரு வார்த்தையும் என்னையும் சேர்த்து பாதிக்கும்..” எனப் பல்லை கடித்துக் கொண்டு பேசியவன், சட்டென எழுந்து சென்று விட்டான்.


அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவர், “இப்படி ஒருநாளும் என் பேரன் என்கிட்டே பேசினது இல்லை.. அவனையே இப்படி மாத்திட்டாளே..” என்று அந்தப் பழியையும் தூக்கி தமயாவின் மேல் போட்டார் சூர்யகலா.


இதில் அவரைக் கண்டித்தும் பேச முடியாமல், நிமலன் போல் சட்டென எழுந்து செல்லவும் முடியாமல் தன் தட்டில் இருந்த உணவை அலைந்து கொண்டு அமர்ந்திருந்தான் நிகிலன்.


அதற்குப் பின் அவனுக்குச் சாப்பிடவும் மனமில்லை. செய்வதறியாது ஒருவித தவிப்போடு அவன் அமர்ந்திருக்க.. நிகிலனை காப்பாற்றவே வந்தது போல் புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தார் கலிவரதன்.


அவரைக் கண்டதும், “வா வரதா.. என்ன திடீர்னு..?” என்றவாறே சூர்யகலா எழுந்து நிற்க.. “என்ன அத்தை இப்படிக் கேட்கறீங்க..? என்ன நடக்குது இங்கே..?” என்றார் வரதன்.


அதில் அவர் எதற்காக வந்திருக்கிறார் என்று புரிய.. “வா உட்கார்ந்து பேசலாம்.. சாப்பிடறியா..?” என்று சூர்யகலா அமைதியாகப் பேசவும், “நான் இங்கே உட்கார்ந்து விருந்து சாப்பிட வரலை அத்தை.. உங்களுக்குத் தெரிந்து தான் இதெல்லாம் நடக்குதா..? எப்படி இந்தக் கல்யாணத்துக்கு நீங்க சம்மதிச்சீங்க..?” என்று படபடத்தார் வரதன்.


அதற்கு ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றிய சூர்யகலா ஏதோ சொல்ல முயலவும், அதே நேரம் இவரின் இந்தக் குரல் கேட்டு நிமலன் இறங்கி வரவும் சரியாக இருந்தது.


“வாங்க மாமா.. இப்போ தான் வந்தீங்களா..?” என்றப்படியே அங்கு வந்தவனைக் கோபமாகத் திரும்பி பார்த்தவர், “என்ன மாப்பிள்ளை இதெல்லாம்..? நீங்களா இப்படிச் செஞ்சீங்க..? இந்தக் கல்யாணம் எப்படி நடந்தது..?” என்று அவர் இடைவிடாது படபடத்துக் கொண்டிருக்க.. அதற்குள் இந்தச் சத்தம் கேட்டுச் சமையலறை வாயிலுக்கு வந்திருந்த தமயா, “ஹாங்.. எல்லாரையும் போலத் தாலி கட்டி தான்..” என்று இடக்காக மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.


அதை கேட்டு பதட்டமான சரோஜா, “சும்மா இருங்க பாப்பா..” என்று மெதுவாக கூறினார். அதற்குள் “ஏன் இவ்வளவு பதட்டமா பேசறீங்க..? உட்காருங்க, பொறுமையா பேசலாம்..” என்ற நிமலனை மறுப்பாகப் பார்த்தவர், “என்னது பொறுமையா உட்கார்ந்து பேசறதா..? இது என் பொண்ணு வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம்..” எனவும், “என்னது..?” என்றான் விழிகளைச் சுருக்கி அவரைப் பார்த்து நிமலன்.


அதில் லேசாகத் தடுமாறியவர், “அது.. இது நம்ம குடும்பச் சம்பந்தப்பட்ட விஷயம்.. இதில் எப்படி நான் அமைதியா உட்கார்ந்து பேச முடியும்..? எப்படி அந்தக் கேடு கேட்டவன் பொண்ணைக் கல்யாணம் செய்ய உங்களுக்கு மனசு வந்தது..?” என்றார் வெறுப்பான குரலில் வரதன்.


அதைக் கேட்டு கோபமான தமயா எதுவோ பேச முயல.. அவளைத் திரும்பி முறைத்திருந்த நிமலன், “நடந்து முடிஞ்சதை பற்றி இனி பேசி என்ன ஆகப் போகுது.. நீங்க உட்காருங்க..” என்றான் வரதனை பார்த்து நிமலன்.


அதில் இனி இவனிடம் பேசி பலனில்லை என்று புரிந்து வேகமாக சூர்யகலாவின் அருகில் சென்றவர், “நீங்க எப்படி அத்தை இதை எல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்கீங்க..? விஷயம் கேள்விப்பட்ட நிமிஷத்தில் இருந்து என்னாலேயே அதை ஜீரணிக்க முடியலையே..! உங்களால் எப்படி முடியுது..?” என்றார் வரதன்.


இப்போது என்ன பேசினாலும் அது பேரனை விட்டுக் கொடுத்தது போலாகி விடும் என்று உணர்ந்து பதிலேதும் பேசாமல் சூர்யகலா அமைதியாகவே இருக்க.. அதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வரதன், “பார்த்தீங்களா மாப்பிள்ளை.. அவங்களால் இதைப் பற்றிப் பேச கூட முடியலை.. அந்த அளவுக்கு இந்தக் கல்யாண விஷயம் அவங்களைப் பாதிச்சு இருக்கு..” என்றார்.


சூர்யகலாவையே இதில் சமாளிக்க முடியாமல் அவன் திணறிக் கொண்டு இருக்க.. அதை மேலும் தூண்டி விடுவது போல் இவர் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு எரிச்சலான நிமலன், பதிலேதும் பேசாமல் நின்றான்.


அதில் சட்டென நிகிலனின் பக்கம் திரும்பிய வரதன், “நீங்களும் இங்கே தான் இருக்கீங்களா சின்ன மாப்பிள்ளை.. நீங்களாவது எடுத்து சொல்லி இருக்கலாமே..!” எனவும், “அண்ணா ஒரு விஷயம் செய்யறாங்கனா அதில் நிச்சயமா ஒரு காரணம் இருக்கும்..” என்றான் நிகிலன்.


“அட உங்கிட்ட போய்ப் பேசினேன் பாருங்க.. என்னைச் சொல்லணும்.. நீங்க உங்க அண்ணன் வெள்ளை காக்கா பறக்குதுன்னு சொன்னாலும் நீங்க ஆமான்னு தானே சொல்லுவீங்க..” என்று சலித்துக் கொண்டவரை இப்போது கோபமாகப் பார்த்து, “போதும் மாமா.. இனி இதைப் பற்றி எதுவும் பேச வேண்டாம்..” என்றான் அழுத்தமான குரலில் நிமலன்.


“அதெப்படி விட முடியும்..?” என்று அப்போதும் துவங்கியவரை, தீர்க்கமாகப் பார்த்தவன், “வேற என்ன செய்யப் போறீங்க..?” என்றான்.


அதில் நிமலனின் கோபம் புரிய, சட்டெனத் தணிந்து வந்தவர் “அதுக்கில்லை மாப்பிள்ளை.. அந்த ஆள் நமக்குச் செஞ்ச துரோகம் எல்லாம் மறந்துட்டீங்களா..? அவன் பொண்ணை எப்படி இந்த வீட்டு மருமகளா..?” என்று கவலை குரலில் பேசினார் வரதன்.


“நான் எதையும் மறக்கலை.. உங்களுக்கே ஞாபகம் இருக்கும் போது எனக்கு இருக்காதா..?” என்றவனின் இறுக்கமான குரலில் சற்றே நிம்மதியானவர், “அதானே பார்த்தேன்.. என் மாப்பிள்ளையா கொக்கா..?” என்றார் மீசையை முறுக்கிக் கொண்டே வரதன்.


இதற்கு நிமலன் பதிலேதும் சொல்லாமல் நிற்க.. இயல்பாகப் பார்வையைத் திருப்பியவரின் விழிகளில் சமையலறை வாயிலில் நின்றிருந்த தமயா விழுந்தாள்.


அவளைக் கண்டதும் ஆத்திரமானவர், “கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இங்கே வந்து உட்கார்ந்து இருக்கே..? மானம் ரோஷம் இருக்க யாரும் இப்படி செய்ய மாட்டங்க.. அதானே உங்க குடும்பத்துக்கே அதெல்லாம் கிடையாதே..” என்றார் வரதன்.


இதில் கோபமாகன தமயா, “வார்த்தையைப் பார்த்து பேசுங்க..” என்று கண்டிக்கும் குரலில் கூறவும், “என்னையே மிரட்டற அளவுக்குப் பெரிய ஆளா நீ..? மானம் கெட்ட குடும்பம் தானே நீங்க..? அப்படித் தான்டி பேசுவேன்.. என்ன செய்வே..?” என்றார் வரதன்.


“மரியாதையா பேசுங்க.. இந்த வாடி போடின்னு எல்லாம் பேசினா பல்லை தட்டி கையில் கொடுத்துடுவேன்..” என்று தமயாவும் பதிலுக்கு ஆத்திரத்தில் கத்த.. “எவ்வளவு திமிர்டி உனக்கு..?” என்று அவளை அடிக்கக் கையை ஓங்கினார் வரதன்.


அதை தமயா தடுத்து பிடிப்பதற்குள், “மாமாஆஆ..” என்ற கண்டிப்பான குரலோடு இடையில் வந்து வேகமாக அவரின் கையைத் தடுத்து நிறுத்தியிருந்தான் நிமலன்.


“எவ்வளவு திமிரா பேசறா பார்த்தீங்களா மாப்பிள்ளை.. இவளை சும்மா விடக் கூடாது..” என்று மீண்டும் அடிக்க முயன்றவரை அவளிடமிருந்து விளக்கி நிறுத்தியவன், “நீங்க செய்யறது மட்டும் சரியா..?” என்றான் நிமலன்.


“இவளுக்காக.. இவளுக்காக என்னைக் கண்டிக்கறீங்களா மாப்பிள்ளை.. இந்தக் கொலைக்காரன் பெத்த பொண்ணுக்காக..! என்னை.. இந்தக் குடும்பத்துக்காகவே உழைக்கற என்னை அதட்டறீங்களா..?” என்றார் வெறுப்போடு தமயாவை பார்த்தவாறே வரதன்.


“யாரு கொலைக்காரன்..? எங்க அப்பா அப்படிப்பட்டவர் இல்லை..” என்று தமயா இப்போது இடையிடவும், “நான் மட்டுமில்லை.. உங்க அப்பா எவ்வளவு பெரிய கொலைக்காரன், துரோகின்னு இந்த ஊர் உலகமே சொல்லும்..” என்றார் வரதன்.


“யார் சொன்னாலும்.. எவன் சொன்னாலும் நான் அதை நம்ப மாட்டேன்.. எங்க அப்பா அப்படி எல்லாம் செய்யவே மாட்டார்..” என்று தமயா மூச்சை பிடித்துக் கொண்டு கத்த.. “நீ நம்பினா என்ன..? நம்பலைனா என்ன..? உங்க அப்பா ஒரு கொலைக்காரன் தான்.. நீ ஒரு கொலைக்காரனோட பொண்ணு தான்.. அது என்னைக்கும் மாறாது..” என்று வெறுப்பாகக் கத்தி இருந்தார் சூர்யகலா.


தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 11

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34925

தழல் – 12

“நீங்க சொல்லிட்டா எங்க அப்பா கொலைக்காரர் ஆகிடுவாரா..? நீங்க மட்டுமில்லை வேற யார் வந்து சொன்னாலும் நான் அதை நம்ப மாட்டேன்..” என்று சூர்யகலாவிற்கு மேல் கோபத்தோடு கத்தினாள் தமயா.


அதற்கு ஆத்திரத்தோடு சூர்யகலா எதுவோ சொல்ல வந்த நொடி, “போதும்.. எல்லாரும் கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா..” என்று எரிச்சலோடு கத்தியிருந்த நிமலன், திரும்பி தமயாவின் கையைப் பிடித்துத் தரதரவென இழுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றான் நிமலன்.


“விடுங்க.. விடுங்க.. எங்கே கூட்டிட்டு போறீங்க என்னை..? எனக்கு இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்.. சும்மா எங்க அப்பா மேலே பழி சுமத்திட்டு இருக்கீங்க.. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க எல்லாம்..?” என்று கத்திக் கொண்டிருந்தவளை ஒரு வார்த்தையும் பேசாமல் இழுத்து சென்று அறைக்குள் தள்ளி இருந்தான் நிமலன்.


அவனின் இந்தச் செயலில் மேலும் ஆத்திரமானவள், நிமலனை தள்ளிக் கொண்டு வெளியே வர முயல.. அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கி பிடித்தப்படி அறைக்குள் நுழைந்திருந்தவன், கதவை மூடி தாளிட்டான்.


அவன் பிடியில் இருந்து வேகமாக விலக முயன்றவள், “லீவ் மீ..” என்று திமிற.. தன் கை வளைவிற்குள் அவளைக் கொண்டு வந்திருந்தவன், “சும்மா அடங்குடி..” என்றான் நிமலன்.


“வாட்..? அடங்கணுமா..! நான் ஏன் அடங்கணும்..? நீங்க உங்க இஷ்டத்துக்குப் பேசுவீங்க, நான் கேட்டுட்டு சம்மா இருக்கணுமா..?” என அப்போதும் தமயா கோபமாகப் பேச.. “என்ன இஷ்டத்துக்குப் பேசிட்டாங்க.. உங்க அப்பா செய்யாததையா சொன்னாங்க..?” என்றான் கடுப்போடு நிமலன்.


“ஆமா.. செய்யாதது தான்.. எங்க அப்பா அப்படிச் செய்யக்கூடியவர் இல்லை.. செய்யவும் மாட்டார்..” என்று படபடத்தவளை, பொறுமையின்றிப் பார்த்தவன், “உன்கிட்ட யாரும் சர்டிபிகேட் கேட்கலை..” என்றான் நிமலன்.


“நானும் சர்டிபிகேட் கொடுக்கலை.. எங்க அப்பாக்கு கதிர் மாமானா அவ்வளவு உயிர்.. அவர் போய் எப்படி..?” என்றவளை ஆத்திரத்தோடு இடையிட்டு இருந்தவன் “அந்த உயிரை எடுத்ததே உங்க அப்பா தான்டி.. அதுக்குத் தான் கேட்கறார்னு தெரியாம எங்க அப்பா அம்மா இருக்க இடத்தைச் சொன்னதே நான் தான்.. அன்னைக்கு எனக்கேத் தெரியாமலே உங்க அப்பாவோட வேலையை நான் சுலபமாக்கி இருக்கேன்னு நினைக்க, நினைக்க..” என்றவனால் அதற்கு மேல் பேசவே முடியவில்லை.


விழிகள் சிவக்க வார்த்தை தடுமாற அவன் பேசிய விதமே அதீத உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறான் என்பதை அவளுக்குப் புரிய வைக்க.. அடுத்து பேச முடியாமல் திணறி நிறுத்தி அவன் முகம் பார்த்தாள் தமயா.


தன்னை வெகு சிரமப்பட்டுக் கட்டுக்குள் கொண்டு வந்தவன், அங்கிருந்து நகர முயல.. அவனை வழி மறிப்பது போல் வந்து நின்றவள், “எங்க அப்பா அப்படிச் செய்யக் கூடியவரே இல்லை..” என்று விழிகளில் தேங்கி நிற்கும் கண்ணீரோடு நிமலனின் முகம் பார்த்தாள் தமயா.


அதில் அவளைப் பதிலின்றி வெறித்தவன், சட்டென தமயாவை தன் வழியில் இருந்து ஒதுக்கி விட்டு வேகமாக உள் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான் நிமலன்.


இதைக் கண்டு அதிர்வும் அழுகையுமாக அந்தக் கதவையே பார்த்தவாறு நின்றிருந்தவள், அப்படியே மடங்கி அமர்ந்து அங்கே அழ துவங்க.. வேகமாக அறைக்குள் சென்று கதவடை அடித்து இருந்தவனுக்கோ மனமெங்கும் ரணமாக இருந்தது.


எத்தனை அழகான நாட்கள்.. எவ்வளவு அன்பும் சந்தோஷமாக மூவரையும் அவன் பெற்றோர் வளர்த்தனர் என்றெல்லாம் மனதில் வலம் வர துவங்கியது.


****************


சசிகாந்தன் வசதியான குடும்பத்தில் பிறந்தவர், அவருக்கு இணையான வசதியான குடுபத்தில் இருந்து பெண் எடுத்து சூர்யகலாவை அவருக்கு மணமுடித்திருந்தனர் அவரின் பெற்றோர்.


சசிகாந்தனின் உயிர் நண்பன் தான் கோமகன். கோமகனின் தந்தை உருவாக்கியது தான் இந்தக் கட்சி. அவரின் ஒரே மகனான கோமகன் சிறு வயதில் இருந்தே கட்சி பணி, போராட்டங்கள், அரசியல் சூட்சமங்களை என அனைத்தையும் தன் தந்தையின் உடன் இருந்து பார்த்து மட்டுமல்ல பங்கேற்றும் கற்றுக் கொண்டிருந்தார்.


தனக்குப் பின் கோமகன் தான் இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்றே அனைத்தையும் சொல்லி கொடுத்ததோடு ஒவ்வொன்றிலும் நேரடியாக மகனை பங்கு கொள்ளச் செய்தும் வளர்த்திருந்தார்.


தொழில் சாம்ராஜ்யத்தின் முடிசூடா அரசனாக வளர்ந்த போதும், ஏனோ சசிகாந்தனுக்கு அரசியலின் மேல் ஒரு ஈர்ப்பு உண்டு. அதில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோமகனோடு இருந்து அரசியல் சூட்சமங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தாலும் சசிகாந்தனால் நேரடியாக அரசியலில் இறங்க முடியவில்லை.


எங்கே ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்ப்பாக அரசியலில் சசிகாந்தன் இறங்கினால் அது தங்களின் தொழிலை பாதிக்குமோ என்று பயந்த அவர் குடும்பத்தினர் இதற்குத் தடை விதித்தனர்.


இதில் தொழிலையும் குடும்பத்தையும் மனதில் வைத்து தன் அரசியல் ஆசையை மனதிற்குள் மறைத்துக் கொண்டாலும் தன் நண்பனுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் மறைமுகமாகச் செய்து கொண்டிருந்தார் சசிகாந்தன்.


அதைப் பார்த்தே சிறு வயதில் இருந்து வளர்ந்த கதிரவனுக்கு அரசியலில் பெரும் ஆர்வம் உண்டானது. சசிகாந்தனும் அதைத் தடுக்க நினைக்கவில்லை.


அதோடு குழந்தைகள் இல்லாத கோமகனும் மாதவியும் சிறு வயதில் இருந்து தங்கள் கைகளில் வளர்ந்த கதிரவனைச் சொந்த பிள்ளைப் போலவே பார்த்தனர்.


தன் தந்தையின் முழு ஆதரவோடு கோமகனிடம் அரசியல் சூட்சமங்கள் அனைத்தையும் கற்று தேர்ந்து வளர்ந்தார் கதிரவன். அப்போது அடிமட்ட தொண்டனாகக் கட்சியில் வந்து சேர்ந்தவர் தான் ஜெயதேவ். உறவெனச் சொல்லிக் கொள்ள யாரும் இல்லாத இளம்வயதில் பெரிதான படிப்பும் இல்லாமல் கிடைத்த வேலையைச் செய்து கொண்டிருந்த ஜெயதேவ்வுக்கு கோமகனின் பேச்சுக்கள் என்றால் அத்தனை ஈர்ப்பு.


அதில் ஈர்க்கப்பட்டு அந்தத் தமிழ் கோர்வையையும், லேசாகக் கேலி இழையோடும் பேச்சையும், உற்று கவனித்தால் தவிரச் சட்டெனக் கண்டுப்பிடிக்க முடியாத வகையில் போகிற போக்கில் ஏதோ ஒரு பேச்சுக்கு இடையில் எதிர் கட்சியைக் கேலி செய்து விட்டு கடந்து செல்லும் பாங்கையும் கேட்டு அவரின் மேடை பேச்சுக்களுக்கு விசிறியாகி அப்படியே அதை உற்றுக் கவனிக்க ஆரம்பித்து, அதன் பின் கோமகனின் கொள்கைகள் பிடித்துப் போய்க் கட்சியில் இணைந்தவர் தான் ஜெயதேவ்.


கதிரவனுக்கும் ஜெயதேவ்வுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தான். ஆனால் இருவரின் வாழ்க்கை முறையும் முற்றிலும் வேறு. ஆரம்பத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் தென்படத் துவங்கிய ஜெயதேவ்வை கவனிக்கத் துவங்கி, பின் அவரைப் பற்றி அறிந்து பேசி பழகி என இருவரின் நட்பும் கொஞ்சம் கொஞ்சமாகப் பலப்படத் துவங்கியது.


இதில் கதிரவனால் தான் ஜெயதேவ்வை கோமகன் கவனித்தே இருந்தார். இல்லையெனில் பல தொண்டர்களில் ஒருவராய் யாருக்கும் தெரியாமல் கட்சிப் பணிகளைச் செய்து கொண்டு காலம் தள்ளி இருப்பார் ஜெயதேவ்.


கதிரவனோடு அடிக்கடி ஜெயதேவ்வை கண்ட கோமகன் யாரென விசாரிக்க.. அவரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சொல்லி ஜெயதேவ்வுக்கென யாருமில்லை என்றும் கூறிய கதிரவன் தான் கோமகனின் அலுவலகத்தில் ஜெயதேவ்வுக்கு ஒரு வேலையும் வாங்கித் தந்தார்.


பெரிய வேலையோ கை நிறையச் சம்பளமோ இல்லையென்றாலும் கூலி வேலை செய்து கொண்டு வேலை பார்க்கும் இடத்திலேயே தங்கிக் கொண்டிருந்த ஜெயதேவ்வுக்கு இது பெரும் விஷயமாகத் தான் இருந்தது.


முதலில் எடுப்பிடி வேலைகளைச் செய்து கொண்டடிருந்த ஜெயதேவ்வை அருகில் இருந்து கவனித்த கோமகன், அடுத்ததாக மேடைகளில் அவர் பேசுவதற்காகக் குறிப்பெடுத்து வைத்திருக்கும் தகவல்களை எல்லாம் அழகாக தொகுத்து எழுதி கொடுக்கும் பொறுப்பையும், தொண்டர்கள் கொண்டு வந்து கொடுக்கும் மனுக்களில் முக்கியமானதை மட்டும் படித்துத் தனியே பிரித்து வைக்கும் பொறுப்பையும் கொடுத்தார்.


எந்தப் பேச்சில் ஈர்க்கப்பட்டு கோமகனின் விசிறி ஆனாரோ அந்தப் பேச்சுக்கான தொகுப்பையே இப்போது தான் எழுதுவது ஜெயதேவ்வை சிறகில்லாமல் பறக்க வைத்தது.


அதோடு மற்றவர் கேட்பதற்கு முன் அந்தப் பேச்சு தனக்கே தனக்கெனக் கையில் வந்து சேர்ந்தது போல் அவருள் ஒரு எண்ணம். இதற்கெல்லாம் காரணமான கதிரவனைப் பெரும் மரியாதையோடும் நட்போடும் பார்க்க துவங்கினார் ஜெயதேவ்.


இப்படியே அடுத்தடுத்த நிலைகளில் முன்னேறி கவுன்சிலர் ஆனார் ஜெயதேவ். இதற்கு முக்கியக் காரணம் ஜெயதேவ்வின் கடமை உணர்சியும் கை சுத்தமும் தான். சில வருடங்களாக இங்கு வேலை செய்து கொண்டிருந்த போதும் யாரிடமும் கை நீட்டி ஜெயதேவ் பணம் எதுவும் வாங்கியதில்லை.


அதே போல் தனக்கென எதையும் கேட்டு கோமகனின் முன் வந்து நின்றதும் இல்லை. இதில் உண்டான நல் அபிப்ராயத்திலேயே ஜெயதேவ்வை தானாக அழைத்துக் கவுன்சிலர் பதவியில் நிற்க வைத்திருந்தார் கோமகன்.


அதே நேரம் கதிரவன் முதன்முறையாக ஒரு தொகுதியில் நின்று எம்எல்ஏவாகி இருந்தார். முதல் தேர்தலிலேயே பெரும்பான்மை வெற்றி பெற்று அவர் பதவியில் அமர்ந்திருந்தார்.


அதற்குக் காரணம் சிறு வயதில் இருந்தே கோமகனோடு பல மேடைகளில் மக்கள் அவரைப் பார்த்திருந்தனர். அதோடு தன் வசதியை பயன்படுத்தித் தானே முன் வந்து மக்களுக்குப் பல நல்லதும் செய்து கொண்டிருந்தார் கதிரவன்.


அந்த வயதில் இருக்கும் எத்தனையோ ஆண் பிள்ளைகள் எப்படி எப்படியோ சுற்றிக் கொண்டிருக்க.. எப்போதும் கட்சி, மக்கள் பணி, சேவை என்றே இருந்த கதிரவனுக்கு எப்போதுமே மக்களிடையே நல்ல பெயர் இருந்தது.


அதோடு சசிகாந்தனும் தன்னால் செய்ய முடியாமல் போனதை தன் மகனாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கதிரவனுக்கு அனைத்திலும் துணையாக நின்றார். இப்படி நண்பர்கள் இருவரின் வாழ்வும் அழகாக முன்னேற்றப் பாதையில் செல்ல துவங்கியது.


சசிகாந்தனுக்குப் பணத்தை வைத்து எதையும் எடைப் போடும் பழக்கமில்லை என்றாலும் சூர்யகலாவுக்கு அது உண்டு. அவருக்குப் பணமும் அந்தஸ்தும் குடும்ப கௌரவமும் ரொம்பவே முக்கியம்.


தனக்கு நிகரானவர்களிடம் மட்டுமே பேசி பழகக் கூடியவர். இதில் தன் மகன் இப்படி அரசியல் அது இதுவெனச் சுற்றுவதில் அவருக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை. ஆனால் சூர்யகலா எவ்வளவு சொல்லியும் அதை சசிகாந்தன் காதிலேயே வாங்கவில்லை.


இதில் எங்கே திருமண விஷயத்திலும் தன் பேச்சை கேட்காமல் கட்சி பணிக்கெனச் செல்லும் இடங்களில் யாரையவாது பார்த்துத் திருமணம் செய்து கொண்டு விடுவானோ என்று பயந்த சூர்யகலா தன் உறவிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து கதிரவனுக்கு மணமுடித்து வைத்திருந்தார்.


வசதியான வீட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் ரத்னாமாலா, அந்தஸ்து பேதம் பார்த்து பழகுபவர் இல்லை. வேலை செய்பவர்களிடம் கூட நட்பு பாராட்டுவார்.


இது சூர்யகலாவுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. இதைத் தவிரக் குறையெனச் சொல்லும்படி மாலாவிடம் எந்த ஒரு காரணமும் இல்லாததால், இதைச் சூர்யகலா பெரிதுபடுத்துவதில்லை. அதற்குக் காரணம் அவரின் முழு நேரத்தையும் எடுத்துக் கொள்ள அடுத்தப் பத்தே மாதத்தில் நிமலன் வந்து விட்டிருந்தான்.


அவனைக் கவனித்துக் கொள்ளவே அவருக்குச் சரியாக இருக்கும். மகனிடம் செய்ய முடியாமல் விட்டதை எல்லாம் சேர்த்து வைத்துப் பேரனிடம் செய்து விட நினைத்தவர், எங்கே மருமகள் தன்னைப் போலவே அந்தஸ்து பேதம், தராதரம் பார்க்காமல் பழகும் வழக்கத்தைப் பேரனுக்கும் கற்றுக் கொடுத்து விடுவாளோ எனப் பயந்தே அவனைத் தன் கைக்குள் வைத்து வளர்ந்தார் சூர்யகலா.


கதிரவனை மட்டுமல்ல சசி’காந்தனையும் இதில் தலையிட அவர் அனுமதிக்கவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகளில் கோமகன் ஜெயதேவ்வுக்கும் தனக்குத் தெரிந்த குடும்பத்தில் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்திருந்தார்.


வளர்மதியும் நல்ல குணமான பெண் தான். கதிரவனும் ஜெயதேவ்வும் எப்படி நெருக்கமான நண்பர்களோ அதே போல் மாலாவும் மதியும் நெருக்கமான தோழிகளாகினர்.


இதற்கிடையில் நிமலனை தன் பிறந்த வீட்டு வழக்கப்படி வளர்க்க நினைத்த சூர்யகலா அவனை ஊட்டி கான்வென்டில் கொண்டு சென்று சேர்த்து விட்டார்.


இதில் தன் மகனை பிரிந்து இருக்க முடியாமல் மாலா எவ்வளவோ அவனைத் திரும்ப அழைத்து வர முயன்றும், அதற்கு சூர்யகலா அனுமதிக்கவே இல்லை.


ஒரு கட்டத்தில் தன் தாயோடு போராட முடியாது என்று புரிந்து மனைவியைச் சமாதானம் செய்து அமைதியாக்கி இருந்தார் கதிரவன். இதற்கிடையே மதிக்கு கிருபா பிறந்து விட்டிருக்க.. தன் மகனை பிரிந்து இருந்த மாலாவின் கைகளில் தான் அதிகம் வளர்ந்தான் கிருபா.


அவனுக்கும் தன் தந்தையைப் போலவே கத்திரவன் என்றால் தனி ஒரு அன்பு உண்டு. அதை விட மாலாவின் மேலான பாசம் ஒரு பிடி அதிகமாகவே இருந்தது.


இந்நிலையில் மீண்டும் கருவுற்றார் மாலா. கிட்டத்தட்ட நிமலன் பிறந்து ஏழு வருடங்களுக்குப் பிறகான பிரசவத்தில் பல சிக்கல்கள் உண்டாக, அத்தனையையும் சமாளித்து தீக்ஷாவை இந்த உலகுக்குக் கொண்டு வந்தார் மாலா.


இந்த முறை முன்பு செய்த தவறை செய்யவே கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தவர், தன் மகளின் முழுப் பொறுப்பையும் தனதாக்கி கொண்டார்.


ஆரம்பத்தில் இதில் கோபமானாலும் பின் ‘உன்னை விட நான் என் பேரனை எப்படி வளர்ந்து காண்பிக்கிறேன்.. பார்.!’ என்கிற ரீதியில் மருமகளிடமே போட்டிக்கு நின்றார் சூர்யகலா.


இத்தனைக்கும் இருவருக்கும் இடையே எந்தப் பிரச்னைகளும் எப்போதும் இருந்தது இல்லை. மாலாவின் சில செயல்களில் அதிருப்தி இருந்தாலும் மகள் இல்லாத சூர்யகலா, மாலாவை தன் மகள் போலவே தான் பார்த்தார்.


அவரின் அந்தஸ்து மோகம் கண்ணை மறைக்கும் நேரங்களில் மட்டும் சிடுசிடுத்தாலும், மற்ற நேரங்களில் எல்லாம் அதையே இழுத்து பிடித்து வைத்துக் கொள்ளாமல் நன்றாகவே மருமகளைப் பார்த்துக் கொள்வார் சூர்யகலா.


மகன் ஜெயதேவ்வோடு பேசுவதையே விரும்பாதவருக்கு மருமகளும் அந்தக் குடும்பத்தோடு அளவுக்கு அதிகமாக நெருக்கமாக இருப்பது துளியும் பிடிக்காது. ஆனால் அவர் பலமுறை சொல்லியும் மாலா இதைக் கேட்கவே இல்லை.


அவரைப் பொறுத்தவரை ஜெயதேவ் தன் தேவைக்காகவும், சுயநலத்திற்காகவும் மட்டுமே கதிரவனோடு திட்டமிட்டுப் பழகுவதாக ஒரு எண்ணம். இத்தனை வருடங்கள் கடந்த பிறகும், ஜெயத்வ்வின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிய பிறகும் கூட அதை அவரால் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை.


இந்நிலையில் மாலாவும் மதியும் ஒரே நேரத்தில் மீண்டும் கருவுற்று இருந்தனர். இருவருக்குமே ஒரு மாத இடைவெளியில் குழந்தைகள் பிறந்தது. முதலில் நிகிலனும் பின் தமயாவும் பிறக்க.. இந்த நான்கு பிள்ளைகளும் இருவர் வீட்டிலும் பாகுபாடு இல்லாமல் வளர்ந்தனர்.


சூர்யகலாவை தவிர, பிள்ளைகளை வேறு யாரும் பிரித்துப் பார்ப்பது கிடையாது. அவருக்கு மட்டும் இதெல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதில் சொல்லி பார்த்து சோர்ந்து போனவர், அவர்கள் வந்தாலே தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொள்வார்.


நிமலன் விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருக்க.. இந்த நால்வரும் ஒரே பள்ளியில் படித்து ஒன்றாகவே வளர்ந்தனர். நிமலன் வரும் நேரங்களில் பெரும்பாலும் வேறு யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார் சூர்யகலா.


அதே போல் மாலாவுக்கும் தன் மகனோடு இருக்க கிடைத்த அரிய வாய்ப்பு இது என்பதால் அவரும் வேறு எங்கும் அந்த நாட்களில் செல்வது கிடையாது.


இதில் ஓரிரு முறை தமயாவை சிறு பெண்ணாக இருக்கும் போது பார்த்ததோடு சரி, அதன் பின் நிமலன் பார்த்ததே இல்லை. வளர்ந்த அவனுக்கே அப்படி என்றால் தமயாவுக்கு நிகிலனுக்கு ஒரு அண்ணன் இருப்பது மட்டுமே தெரியும், அவனை பார்த்த நினைவுக் கூட இல்லை.


ஆனால் கிருபாவை பலமுறை ஜெயதேவ்வோடு பார்த்திருக்கிறான் நிமலன். கோமகன் வீட்டிற்கு கதிரவனோடு செல்லும் நேரங்களிலோ இல்லை கட்சி அலுவலகத்திலோ பார்த்திருந்தாலும் பெரிதாக பேசி பழகியதில்லை.


கிருபாவுக்கு மட்டும் நிமலனோடு பேசி பழக நிறைய ஆசை உண்டு. அவனின் நடை உடை பாவனைகள். வெகு அலட்சியமாக அவன் பேசும் ஆங்கிலம், அதிகம் வார்த்தைகளில் இல்லாமல் விழியசைவில் சொல்ல வந்ததை அடுத்தவருக்கு புரிய வைப்பது என்றெல்லாம் அருகில் இருந்து பார்த்தவனுக்கு, நிமலன் ஒரு கதாநாயகன் போலவே அந்த வயதில் தெரிந்தான்.


அதில் தானாகவே சென்று பேசினாலும், நிமலனிடமிருந்து ஓரிரு வார்த்தைகளில் மட்டுமே பதில் வரும். அவன் திட்டமிட்டெல்லாம் கிருபாவை ஒதுக்கவில்லை. தனியாகவே வளர்ந்திருந்தவனுக்கு ஏனோ சட்டென யாரோடும் அப்படி பேசி பழக வரவில்லை.


கிருபாவை விட தீக்ஷா இரண்டு வயது சிறியவள். ஆனாலும் ஒரே பள்ளி என்பதால் தினமும் பார்த்து பேசி கொண்டும், ஒருவருக்குத் தேவையான உதவியை மற்றவர் செய்து கொண்டும் இருப்பர்.


ஆனால் தமயாவும் நிகிலனும் ஒரே வகுப்பு. ஒன்றாகவே அமர்வார்கள், ஒன்றாகவே விளையாடுவார்கள், ஒன்றாகவே சுற்றுவார்கள். ஒன்றாகவே சாப்பிடுவார்கள், தமயா இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தால் நிகிலன் இருக்குமிடத்தைத் தேட வேண்டி இருக்காது.


அதே போல் தான் நிகிலனை கண்டால் அங்கே தமயா இருப்பாள். அவளின் விருப்பு, வெறுப்பு, தேவை என அனைத்தையும் அவளின் விழியசைவில் சொல்லி விடக் கூடியவன் நிகிலன்.


அவனை மீறி யாரும் அவளிடம் நெருங்கவும் முடியாது. தமயாவிடம் வகுப்பில் படிக்கும் பிள்ளைகள் யாராவது வம்பு வைத்துக் கொண்டால் முடிந்தது அவர்களின் கதை. நேராக விஷயத்தை ஆசிரியையிடம் கொண்டு சென்று அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்காமல் விட மாட்டான் நிகிலன்.


நேராகக் களத்தில் இறங்கி சண்டையிடுவதோ பிரச்சனை செய்வதோ அவன் வழக்கம் கிடையாது. ஆனால் மீண்டும் அதே தவறை செய்ய அவர்கள் யோசிக்கும் அளவுக்கு ஒன்றை சத்தமில்லாமல் செய்து முடித்து விடுவான் நிகிலன்.


அதே பள்ளியில் படிக்கும் தன் அண்ணனை விட நிகிலனோடு இருப்பதையே தமயா பாதுக்காப்பாக உணர்வாள். எல்லாம் சரியாகத் தான் சென்று கொண்டிருந்தது. அந்த மோசமான நாள் வரும் வரை.


அடுத்து வந்த தேர்தலில் ஜெயதேவ்வை எம்எல்ஏ பதவிக்கு நிற்க வைக்க முடிவு செய்தார் கோமகன். அதேநேரம் கதிரவன் அவர் வழக்கமாக நிற்கும் தொகுதியில் முடி சூடா ராஜாவாக வலம் வந்து கொண்டிருந்தார்.


தன் கண் முன் வளர்ந்த ஜெயதேவ்வுக்கும் இப்படிச் சரியான தொகுதியாகப் பார்த்து ஒதுக்கி தர கோமகன் யோசித்துக் கொண்டிருக்க.. அந்த மோசமான நிகழ்வு அத்தனை பேரின் வாழ்வையும் புரட்டி போட்டிருந்தது.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 12

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Status
Not open for further replies.
Top