All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஶ்ரீகலாவின் "Na! உயிரே!! Nuvve!!!"

உயிர் : 1

"ஏ.. மலம பித்தா பித்தா தே மலம பித்தா பித்தா தே
மல பித்தா பித்தா தே மலம பித்தா தே
ஹோலி ஹோலி பக்கதுல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி வெக்கதுல மயங்குறன் டோலி
காலி காலி மொத்ததுல அவனும் தான் காலி"

அலைப்பேசியில் பாடல் உரக்க ஒலித்துக் கொண்டிருக்க... ஆதிசக்தீஸ்வரி அந்தப் பாடலுக்கு ஏற்றபடி குத்தாட்டம் போட்டு கொண்டிருந்தாள். கூடவே அவளது அண்ணன் மகன் விஷ்ணுவும் சேர்ந்து ஆடி கொண்டிருந்தான். இரண்டு பேரும் தன்னை மறந்து ஆடி கொண்டிருந்தனர்.

"ஆதி..." இடி போன்று ஒலித்த அன்னையின் குரலில் பயந்து போய்ப் பாட்டையும், ஆட்டத்தையும் நிறுத்தி இருந்தால்... அது ஆதிசக்தீஸ்வரி இல்லையே! அவள் அன்னையின் கண்டிப்பான குரலை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.

"அச்சோ! பாட்டி..." நான்கு வயது விஷ்ணு பயத்தில் தனது ஆட்டத்தை நிறுத்திவிட்டு அறையை விட்டு வெளியில் ஓடிவிட்டான்.

"சின்னப் பையனுக்கு இருக்கும் அறிவு கூட வளர்ந்த எருமை மாடுக்கு இல்லை." மகளைத் திட்டி கொண்டே அலைப்பேசியில் ஒலித்த பாடலை நிறுத்தினார் ராஜராஜேஸ்வரி.

ராஜராஜேஸ்வரி தனது பெயருக்கு ஏற்றார் போன்று ராணி போன்று கம்பீரமாக இருந்தார். என்ன ஒன்று, முன்பு அவரது கழுத்தில் வைரம், வைடூரியம், கை நிறைய வளையல்கள் என்று நகைகள் மின்னி கொண்டு இருக்கும். இப்போது அப்படி இல்லை. அவரது கழுத்தில் தடிமனான தாலி சங்கிலி மட்டுமே அவரை அலங்கரித்துக் கொண்டிருந்தது. காதில் வைரத்தோடு, கைகள் ஒவ்வொன்றிலும் இரு தங்க வளையல்கள் அவ்வளவே... அந்த எளிய தோற்றத்திலும் அவர் அத்தனை கம்பீரமாக இருந்தார்.

"ம்மா, உங்களுக்கு என்ன தான் பிரச்சினை?" என்று கத்திய மகளைக் கண்டு அவரது கோபம் குறைந்து முகத்தில் கனிவு வந்தது.

"இன்னைக்கு என்ன நாள்ன்னு தெரியும் தானே. தெரிந்திருந்தும் நீ இப்படி இருக்கலாமா? கொஞ்சம் பொறுப்பாய் நடந்துக்கக் கூடாதா?" அவர் சற்று அன்போடு கேட்க...

"ம்மா, ப்ச்... எனக்குக் கல்யாணம் எல்லாம் வேண்டாம்மா. நான் வேலைக்குப் போறேன். கை நிறையச் சம்பாதிக்கிறேன். உங்களை நல்லா பார்த்துக்கிறேன்." என்று சொல்லிய ஆதிசக்தீஸ்வரி அன்னையை அணைத்து கொண்டாள்.

"நல்லா இருக்கு கதை... பொம்பள புள்ளைய வேலைக்கு அனுப்பி... அந்தக் காசில் நாங்க உட்கார்ந்து சாப்பிடறதா? அப்படி ஒரு ஜீவிதம் எங்களுக்குத் தேவையில்லை. ஒழுங்கு மரியாதையா கல்யாணம் பண்ணிட்டு புகுந்த வீடு போகும் வழியைப் பார். உனக்கும் கல்யாணம் முடித்து விட்டால் எங்க கடமை முடிந்துவிடும்." என்று அவர் பெருமூச்சுடன் சொல்ல...

"எந்தக் காலத்தில் இருக்கீங்கம்மா? இப்போ எல்லாம் பெத்தவங்களைப் பசங்க பார்த்துக்கிறதை விடப் பொண்ணுங்க தான் அதிகம் பார்த்துக்கிறாங்க." ஆதிசக்தீஸ்வரி முகத்தைச் சுளித்தாள்.

"நீங்க யாரும் எங்களைப் பார்த்துக்க வேண்டாம். எங்களைப் பார்த்துக்க எங்களுக்குத் தெரியும். இப்போ உன் அண்ணி வருவாள். தயாராகு..." என்று அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னவர் மகளது அறையை விட்டு வெளியேறினார்.

ஆதிசக்தீஸ்வரிக்கு அன்னையைக் கண்டு பாவமாக இருந்தது. அதேசமயம் இந்த நிலையிலும் கடமை தவறாது இருக்கும் அன்னையைக் கண்டு பரிவு வந்தது.

"ஆதி..." என்றழைத்தபடி அவளது அண்ணி காயத்ரி அறையினுள் வந்தாள்.

"வாங்க அண்ணி..." ஆதிசக்தீஸ்வரி காயத்ரியை கண்டு புன்னகைத்தாள்.

"சும்மா பெயர் சொல்லி கூப்பிடு ஆதி." காயத்ரி சொல்ல...

"அம்மா பத்தி தெரிஞ்சிருந்தும் இப்படிச் சொல்ல உங்களுக்குத் தைரியம் தான்." ஆதிசக்தீஸ்வரி களுக்கென்று சிரித்தாள்.

இருவருக்கும் ஒரே வயது தான்... ஆனால் காயத்ரி நான்கு வயது மகனுக்கு அன்னை... எல்லாம் காதல் படுத்தும் பாடு... காயத்ரி ஆதிசக்தீஸ்வரியின் அண்ணன் கதிர்வேலனை காதலித்துப் பதினெட்டு வயதில் திருமணம் செய்து கொண்டு இங்கே வந்தவள். அடுத்த வருடமே விஷ்ணு பிறந்துவிட்டான்.

"அது சரி தான். அத்தை பார்க்கத்தான் கடினமா தெரியறாங்க. ஆனால் பாசம் அதிகம். அந்தப் பலாப்பழம் மாதிரி." என்று சொன்ன காயத்ரியை கண்டு புன்னகைத்தாள் ஆதிசக்தீஸ்வரி.

"அண்ணி, எதுக்கு இவ்வளவு பூ கொண்டு வந்திருக்கீங்க? இதை நான் எப்படி வைக்கிறது?" ஆதிசக்தீஸ்வரி சின்னதாக வெட்டப்பட்டு இருந்த தனது முடியை சுட்டிக்காட்டி கேட்டாள். அவளது தலையின் பாதிப் பகுதி முழுவதும் முடி ஒட்ட வெட்டியிருந்தது. மறுப்பக்கம் கொஞ்சமாய் முடி இருந்தது. கேட்டால், பேசன் என்பாள். வீட்டின் கடைக்குட்டி என்பதால் அவள் எல்லோருக்கும் செல்லம். எல்லோரையும் கண்டிக்கும் ராஜராஜேஸ்வரி கூடத் தனது கண்டிப்பினை சின்ன மகளிடம் சற்றுத் தளர்த்தித் தான் இருந்தார்.

"அத்தை கொடுத்து விட்டாங்க... கொண்டு வந்தேன். அவ்வளவு தான்."

"அப்போ நான் கையில் சுத்திக்கிட்டு மைனர் மாதிரி போகவா?" ஆதிசக்தீஸ்வரி கண்ணடித்துக் குறும்பாய் கேட்க...

"சொன்னாலும் சொல்லலைன்னாலும் நீ மைனர் தான். என்னா அடாவடி, அதிரடி, சரவெடி..." காயத்ரி அவளைக் கண்டு கேலி செய்தாள்.

"இப்படி இருக்கிறது தான் கெத்து அண்ணி." என்றவள் தனது டீசர்ட்டின் காலரை தூக்கி விட்டு கொண்டாள்.

"நேரமாகிருச்சு... சீக்கிரம் வா..." காயத்ரி அவளை அவசரப்படுத்தினாள்.

"நீங்க போங்க... நானே புடவை கட்டிக்கிறேன்." ஆதிசக்தீஸ்வரி அவளை அனுப்பிவிட்டு தயாராகத் தொடங்கினாள்.

அரக்கு நிறத்தில் தங்க சரிகையிட்ட இரவிக்கை மற்றும் மாம்பழ நிறத்தில் அரக்கு நிற கரையிட்ட மென்பட்டு புடவை அணிந்து அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் தன்னைப் பார்த்து கொண்டாள் ஆதிசக்தீஸ்வரி. அவளது மெல்லிய தேகத்தினை அந்தப் புடவை அத்தனை பாந்தமாகத் தழுவி இருந்தது. அவள் புடவை அணிந்து வெகுநாட்களாகி விட்டது. கடைசியாக அவளது அக்கா திருமணத்திற்கு அணிந்தது. அதற்கு மேல் அவள் யோசிக்க முடியாதபடி அவளது மூளை வேலை நிறுத்தம் செய்துவிட... அதை அவள் புறம்தள்ளியவளாய் மீண்டும் தன்னைக் கண்ணாடியில் அழகு பார்த்தாள்.

"ஆனாலும் ஆதி, உனக்கு இந்தப் புடவை அழகா தான் இருக்கு." என்று தனக்குத் தானே பாராட்டுப் பத்திரம் வழங்கியவள் நகைகளை அணிய துவங்கினாள்.

நகை என்று பெரிதாக இல்லை. காதிற்குச் சிறு ஜிமிக்கி, கழுத்திற்குச் சிறு அட்டிகை, கைக்கு இரண்டு தங்க வளையல்கள். முன்பு மாதிரி இருந்திருந்தால் ராஜராஜேஸ்வரி இந்நேரம் வைரத்தில் நகைகளை அடுக்கி இருப்பார். நகைகள் அணிந்து அவள் தயாராகிய போது ராஜராஜேஸ்வரி அங்கு வந்தார். மகளின் தோற்றம் கண்டு அவருக்கு வெகுதிருப்தியாக இருந்தது.

"பூ வைக்கலையா ஆதி?"

"எங்கே வைக்கிறது? வேணும்ன்னா இப்படி வைக்கவா?" அவள் பூவை தலையைச் சுற்றி வைக்க... அதைக் கண்டு அவர் சிரித்து விட்டார்.

"போக்கிரி..." என்று செல்லமாக மகளை வைதவர், "வா, வந்து சாமி கும்பிட்டு விட்டு... அப்பா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ." என்று மகளை அழைத்துச் சென்றார்.

பிரம்மாண்டமான அந்தப் பூஜையறை எளிமையாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முன்பு என்றால் ரோஜாப்பூ மாலை, சாமந்திப்பூ மாலை, துளசி மாலை, பன்னீர்ப்பூ மாலை என்று ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மாலை சாற்றப்பட்டு இருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை என்றாலும்... கடவுளுக்குப் பூ போடாது இருக்கவில்லை. தோட்டத்தில் பூத்த பூக்களைக் கடவுளுக்குப் படைத்திருந்தனர்.

வீட்டினர் அனைவரும் அங்கே நின்றிருந்தனர். பூஜையறையில் நின்றிருந்த அவளது தந்தை சோமசுந்தரம் அவளைக் கண்டு புன்னகைத்தார். ஆதிசக்தீஸ்வரி தந்தை அருகில் வந்து,

"அப்பா, நான் அழகா இருக்கேனா?" என்று புன்னகையுடன் கேட்க...

"உனக்கு என்னடா? நீ அழகு தேவதை." என்று மகளைப் பாராட்டியவரின் விழிகள் கலங்கியது. அதை யாருக்கும் காட்டாது பூஜை செய்வது போல் மறைத்துக் கொண்டார்.

பூஜை முடிந்ததும் ஆதிசக்தீஸ்வரி பெற்றோரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். ராஜராஜேஸ்வரி கடவுளை சிரத்தையுடன் வேண்டி கொண்டிருந்தார்.

"ராஜி, எல்லாம் நல்லபடியாக நடக்கும். வா..." சோமசுந்தரம் மனைவியிடம் சொல்ல... கணவரது ஆறுதல் வார்த்தையில் மனம் தெளிந்தவர் பூஜையறையை விட்டு வெளியில் வந்தார்.

அப்போது அவரது அலைப்பேசி அழைத்தது. எடுத்து பார்த்தவர் முகம் மலர்ந்தது. அவரது மூத்த மகள் ஜெகதீஸ்வரி தான் அழைத்திருந்தது. அலைப்பேசியை உயிர்ப்பித்தவர் திரையில் தோன்றிய மகளைக் கண்டு,

"நல்லா இருக்கியா ஜெகா?" என்று நலன் விசாரித்தார்.

"நல்லா இருக்கேன்ம்மா."

"இப்போ மசக்கை எப்படி இருக்கு? வாந்தி இருந்தாலும் நேரத்துக்குச் சாப்பிடு. அப்போ தான் சத்து கிடைக்கும்." கர்ப்பம் தரித்திருக்கும் மகளுக்கு அன்னையாக அவர் அறிவுரை சொன்னார்.

"மசக்கை இருக்கத்தான் செய்யுது. எனக்கு அங்கே வரணும் போலிருக்கு. ஆனா டாக்டர் டிராவல் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டார். இல்லைன்னா நான் அங்கே வந்திருப்பேன்." கர்ப்பிணி பெண்களின் மனம் தாய்வீட்டை நினைத்து ஏங்குவது போன்று அவளின் மனமும் ஏங்கியது.

"ஐஞ்சு மாசம் முடியட்டும் ஜெகா... அதுக்குப் பிறகு நீ இங்கே வந்து இருந்துக்கோ."

"ம், சரிம்மா..." என்றவள், "நான் பேச வந்ததையே மறந்துட்டேன். ஆதிக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்? அவள் வேலைக்குப் போகட்டுமே." என்று சொல்ல...

"இல்லை ஜெகா... நாங்க நல்லா இருக்கும் போதே ஆதிக்கு ஒரு நல்லது செஞ்சு பார்க்கணும்ன்னு நினைக்கிறேன்." என்றவரின் அடிமனதில் ஏனோ இனம் புரியாத படபடப்பு தோன்றியது.

"என்னமோம்மா... உங்க மனசுக்கு பிடிச்சதை பண்ணுங்க." என்றவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.

ராஜராஜேஸ்வரி எதையோ யோசித்தபடி அப்படியே சிலையாய் அமர்ந்திருந்தார்.

"அத்தை, கேசரி பக்குவம் சரியா வந்திருக்கா?" மருமகளின் குரலில் தன்னுணர்வு அடைந்தவர் அவளின் கையிலிருந்த கேசரியை கண்டு,

"சரியா இருக்கு." என்று பதில் சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கலானார்.


*********************************
 

ஶ்ரீகலா

Administrator
வானளவு உயர்ந்திருந்த அந்தக் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்து பிரமித்தபடி நின்றிருந்தார் ராணியம்மா. பெயருக்கு ஏற்றபடி அவர் ராணி தான். விசாகபட்டினத்தின் காலம் சென்ற இராஜா பத்ரிநாத்தின் மனைவி அவர். அந்தக் கம்பீரம், ஆளுமை இப்போதும் அவரிடம் இருக்கத்தான் செய்தது.

"வணக்கம் மேடம்..." காவலாளியின் குரலில் சுற்றுப்புறம் உணர்ந்தவர் சிறு தலையசைப்புடன் அந்தக் கட்டிடத்தினுள் நுழைந்தார்.

வெளியில் இருந்த பிரம்மாண்டத்திற்குச் சற்றும் குறையாத பிரம்மாண்டத்துடன் உள்ளேயும் இருந்தது. ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு தொழிலின் நிர்வாக அலுவலகம் இருந்தது. அங்கிருக்கும் தளத்தின் எண்ணிக்கையை வைத்து தொழில்களின் எண்ணிக்கையைக் கணித்துக் கொள்ளலாம்.

"வாங்க மேடம்..." எங்கிருந்தோ ஓடி வந்த பவன்ராம் அவரை வரவேற்றான்.

"ராஜூ உன்னாடு? (ராஜா இருக்கிறானா?)" அவர் மிடுக்காய் கேட்டார்.

"சார் இருக்கிறார்... நீங்க வாங்க." என்ற பவன்ராம் அவரை அழைத்துக் கொண்டு சென்றான்.

மின்தூக்கி மூலம் அவர்கள் மேல் தளத்தினை வந்தடைந்தனர். அந்தத் தளத்திலும் நூறு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். ஆனால் எந்தவித சத்தமும் இல்லாது அத்தனை அமைதியாக இருந்தது. எல்லாவற்றிற்கும் காரணம் அங்கு 'எம்டி' அறையில் சிங்கம் போன்று அமர்ந்திருக்கும் அவன் தான். அவனது கண்ணசைவுக்கு அவர்கள் அனைவரும் கட்டுப்படுவர். அந்தளவிற்கு அவன் அனைவரையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தான்.

ராணியம்மா அவனது அறையின் முன் போய் நின்றார். கதவின் மீது 'சிம்மஹாத்ரி சத்யநாராயணா எம்டி' என்று பொன் எழுத்துக்களால் எழுதப்பட்டு இருந்தது. அதைக் கண்டவர் மெல்ல எழுத்துக்களை வருடி கொடுத்தார். அவரால் அவனிடம் பாசத்தைக் காட்ட முடியாது. காட்டினாலும் அவன் ஏற்றுக் கொள்வானா? என்று அவருக்குத் தெரியாது. அதனால் அவர் விலகியே இருக்கிறார்.

"நேனு லோபல்க்கி ராவச்சா? (நான் உள்ளே வரலாமா?)" அவர் தன்னை மீட்டு எடுத்துக் கொண்டு குரல் கரகரக்க கதவை தட்டியபடி கேட்டார்.

"மேடம், உங்களுக்கு அனுமதி தேவையில்லை. நீங்க எப்போதும் வந்தாலும் உள்ளே அனுப்ப சொல்லி சார் உத்தரவு போட்டு இருக்கார்." பவன்ராம் பவ்யமாய்ச் சொன்னான்.

"அவன் அனுமதி கொடுக்கட்டும்." அவர் அழுத்தமாய் நின்றிருந்தார்.

அடுத்த நொடி கதவு திறக்கப்பட்டது. அங்குச் சிம்மஹாத்ரி சத்யநாராயணா சிம்மம் போன்று கம்பீரமாக நின்றிருந்தான். ராணியம்மா அவனைத் தலையில் இருந்து கால் வரை ஆழ்ந்து பார்த்தார். கருப்பு நிற வேட்டியும், கருப்பு சட்டையும் அணிந்து இருந்தவனின் மேனியை விலையுயர்ந்த எந்தப் பொருளும் அலங்கரித்து இருக்கவில்லை. கழுத்தில் உத்திராட்ச கொட்டை ஒன்று கருப்புக் கயிற்றில் தொங்கி கொண்டிருந்தது. இடது கையில் சாதாரணக் கைக்கடிகாரம் அணிந்து இருந்தான். சாதாரணம், வெகுசாதாரணமாய் இராஜ குடும்பத்தின் வாரிசு இருந்தான். ஆனால் அவனது முகத்தில் இருந்த கம்பீர களை சொல்லாமல் சொன்னது 'நான் ராஜா வீட்டு கன்னுக்குட்டி தான்' என்று...

"உள்ளே வர்றதுக்கு அனுமதி வேண்டுமா? மீரு லோபல்கி ரண்டி (நீங்க உள்ளே வாங்க)." என்று சொன்னவன் அவர் உள்ளே வர வேண்டி விலகி நின்றான்.

ராணியம்மா அவனைப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தார். பவன்ராம் உள்ளே வராது வெளியில் நின்று கொள்ள... சிம்மஹாத்ரி சத்யநாராயணா கதவை சாற்றிவிட்டு வந்தான்.

"கூர்ச்சோண்டி (உட்காருங்க)..." என்று அவரை அமர சொன்னவன்... தானும் தனது நாற்காலியில் அமர்ந்தான்.

"செப்பண்டி (சொல்லுங்க), விசயானக்கி ஏமிட்டி (என்ன விசயம்?)" அவன் மொட்டையாகக் கேட்க...

"விசயம் இருந்தால் தான் வரணுமா?" ராணியம்மா அவனை அன்போடு பார்த்தார். அவன் அமைதியாக அமர்ந்து இருந்தான்.

"நீ எப்போ நம்ம அரண்மனைக்கு வர போற?" அவர் ஆதங்கத்துடன் கேட்க...

"இப்போதும் நான் அரண்மனையில் தான் இருக்கேன்." அவன் கர்வம் பொங்க சொன்னான். அவனது கர்வம் கண்டு அவரது முகத்தில் புன்னகை தோன்றியது.

"நுவ்வு எப்புடு ராஜூவ்வே (நீ எப்போதுமே ராஜா தான்)..." என்று அவர் சொல்ல... அதைக் கேட்டு அவனது முகம் கருத்துப் போனது.

"லேது, நேனு சாதாரண அப்பாயி (இல்லை, நான் சாதாரண மனிதன் தான்)." அவன் அழுத்தமாய்ச் சொன்னான்.

"அதி மீக்கு (அது உனக்கு)... நாக்கு காது (எனக்கு இல்லை)." என்றவரை உற்று நோக்கியவன்,

"இன்னமும் நீங்க விசயத்துக்கு வரலை." என்றவன் பின்பு ஏதோ தோன்ற தன்னிடம் இருந்த காசோலையை எடுத்து கையெழுத்து போட்டு அவரிடம் கொடுத்தான்.

"உங்களுக்கு வேண்டிய தொகையை நிரப்பிக்கோங்க." என்று அவன் காசோலையை அவரின் முன் நீட்டினான்.

"சிம்..." அவனைச் 'சிம்மா' என்றழைக்க அவர் முயல... அதைத் தடுத்தவன்,

"சத்யான்னு பிலவன்டி (கூப்பிடுங்க)." என்று உறுதியாய்க் கூறினான்.

"இன்னமும் உனக்கு எங்க மேலிருக்கும் கோபம் போகவில்லையா?" அவர் கேட்டதும் அவன் அமைதியாக இருந்தான்.

"நுவ்வு நன்னு சம்மிக்ச்சகூடடா சத்யா? (நீ என்னை மன்னிக்கக் கூடாதா சத்யா...?)" அவரது குரல் கெஞ்சுதலாய் வந்தது. அதைக் கண்டு பெருமூச்சு விட்டவன்,

"மன்னித்ததால் தான் இதோ இப்போது என் முன் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கீங்க." என்று கூற...

"ஆனால் நீ செய்வது அப்படி இல்லையே சத்யா." அவரது குரல் வருத்தத்துடன் ஒலித்தது. அதைக் கேட்டு அவன் அவரைக் கூர்ந்து பார்த்தான்.

"அந்த எக்ஸ்போர்ட் அக்ரீமென்ட்டை உன் தம்பிக்கு நீ விட்டுக் கொடுக்கக் கூடாதா?"

"தொழில் வேறு... குடும்பம் வேறு..." அவன் நறுக்கு தெறித்தார் போன்று சொல்ல...

"இரண்டிலும் ஒரே நபர்கள் இருக்கும் போது... அது தவறு இல்லையா?"

"இல்லை... நீங்க தப்பா பேசுறீங்க. எனது குடும்பம் வேறு, எனது தொழில் வேறு... இது தொழில் போட்டி மட்டுமே. குடும்பப் பகை இல்லை. அப்படி இருந்திருந்தால்..." அவன் ஆத்திரம் மிக அருகிலிருந்த கண்ணாடி கோப்பையைப் பிடித்து இறுக்கினான். அவனது இறுக்கத்தின் அளவினை போல் அந்தக் கோப்பையில் விரிசல் ஏற்பட்டுக் கொண்டே போனது.

"சத்யா..." ராணியம்மா பயத்தில் அலற...

படீர் என்ற சத்தத்துடன் அந்தக் கண்ணாடி கோப்பை நொறுங்கி விழுந்தது. கண்ணாடி சில்லுகள் அவனது கையினைக் கிழித்துக் காயத்தினை ஏற்படுத்தி இருந்தது. அந்தக் காயத்திலிருந்து இரத்தம் தரையில் சொட்டு சொட்டாகச் சொட்டி கொண்டிருந்தது.

"நுவேமி சேஸ்துன்னாவு சத்யா? (என்ன பண்ற சத்யா?)" ராணியம்மா அவன் அருகே வந்து தனது புடவையைக் கிழித்துக் காயத்திற்குக் கட்டு போட முயன்ற போது அவன் கை வைத்து தடுத்து விட்டான்.

"உங்கள் வயதுக்கு உங்க மீது மரியாதை இருக்கிறது. அதற்காக எல்லா விசயத்திலும் நான் இப்படி இருப்பேன்னு நினைக்காதீங்க. முடிந்தால் உங்க மகனிடம் என்னை ஜெயிக்கச் சொல்லி சொல்லுங்க." என்றவனைக் கண்டு அவருக்குப் பயமாக இருந்தது.

"நான் ஜெய் கிட்ட சொல்றேன். முதலில் நீ காயத்துக்குக் கட்டு போடு." அவர் அவனிடம் கெஞ்ச...

"நீங்க கிளம்பினால் பவன் உள்ளே வருவான்." என்று அவன் நாசுக்காக அவரை வெளியில் போகச் சொன்னான்.

"நேனு வெல்துன்னானு சத்யா வெல்துன்னானு. (நான் போறேன் சத்யா போறேன்)." என்று பெருமூச்சு விட்டவர் அங்கிருந்து அகல முயல...

"செக்..." என்று அவன் காசோலையைப் பார்த்தான்.

"வத்ந்து (வேண்டாம்)..." அவர் மறுத்தார். அவனது பணத்தை உரிமை கொண்டாட அவர் யார்?

"எடுக்காவிட்டால் இந்தப் பேச்சுவார்த்தையும் இருக்காது." அவன் அழுத்தம் திருத்தமாய் உறுதியான குரலில் சொல்லவும்... அவர் வேகமாகக் காசோலையை எடுத்துக் கொண்டார், அதைக் கண்டு அவனது முகத்தில் புன்னகை தோன்றியது. அந்தப் புன்னகையைக் கண்டு திருப்தியுற்றவராய் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

ராணியம்மா சென்ற அடுத்த நொடி பவன்ராம் பதட்டத்துடன் உள்ளே நுழைந்தான். அவர் தான் அவனிடம் சொல்லி அனுப்பியிருக்க வேண்டும்.

"சத்யா, இதி ஏமிட்டி (என்னதிது)?" பவன்ராம் அவனைக் கடிந்து கொண்டே முதலுதவி பெட்டியில் இருந்து பஞ்சை எடுத்துக் காயத்தைச் சுத்தப்படுத்த ஆரம்பித்தான்.

மரியாதை எல்லாம் வெளியில் தான். உள்ளுக்குள் இருவரும் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு நெருக்கமானவர்கள். பவன்ராம் அவனது உயிர் நண்பன். பவன்ராமும், அவனது தந்தை ரங்காராவும் இல்லை என்றால் இந்தச் சிம்மஹாத்ரி சத்யநாராயணா இல்லை. அந்தளவிற்கு அவர்கள் அவனுக்காக விசுவாசமாக உழைத்து இருக்கின்றனர். அவனுக்கும் அந்த அன்பு எப்போதும் இருக்கும்.

பவன்ராம் அவனது கைக்காயத்தில் கட்டு போட்டு கட்டியவன் அவனை வேதனையுடன் பார்த்து வைத்தான்.

"ஏமிரா... பார்வை எல்லாம் பலமா இருக்கு? சாதாரணக் காயம் தானே. வலிக்கலை, சரியாகிரும்." அவன் சிரித்தான். எப்போதும் பதிலுக்குச் சிரிக்கும் பவன்ராம் அப்படியே சிரிக்காது நின்றிருக்க... அவன் விழிகளைச் சுருக்கி நண்பனை பார்த்தான்.

"என்ன விசயம் பவன்?"

"கைக்காயம் வலிக்கலை. ஆனால் நான் சொல்ல போகும் விசயம் கேட்டு..." என்ற பவன்ராம் தயக்கத்துடன் நிறுத்தினான்.

"விசயம் கேட்டு...?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவனைக் கூர்ந்து பார்த்தான்.

"அங்கே... அங்கே தங்கச்சியைப் பெண் பார்க்க வர போறாங்க சத்யா." பவன்ராம் வேதனையுடன் சொல்ல...

"பெண் பார்க்க தானே வர்றாங்க. இன்க்கா பெல்லி காலேது (இன்னும் கல்யாணம் பண்ணலையே)." அவன் அசால்ட்டாகச் சொன்னான்.

"ஆனாலும் உனக்கு அசாத்திய தைரியம் தான்டா. இப்போ என்ன பண்ண போற?" பவன்ராம்க்கு தான் கவலையாக இருந்தது.

"எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. எது நடக்கின்றதோ அது நன்றாக நடக்கின்றது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கும்." என்று தத்துவம் பேசியவனைக் கண்டு முறைத்தான் பவன்ராம்.

"ஒண்ணும் புரியலை. என்னவோ பண்ணு." என்ற பவன்ராம் சலித்தபடி வெளியில் சென்றுவிட்டான்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா புன்னகையுடன் தனது அலைப்பேசியை எடுத்து அதிலிருந்த புகைப்படங்களைப் பார்த்தான். அதில் ஆதிசக்தீஸ்வரி சின்னப் பெண்ணாகப் பாவாடை, சட்டையில் இருந்தாள். குண்டு கன்னங்களுடன் பூசினார் போன்ற தேகத்துடன் வெள்ளேந்தி சிரிப்புடன் இருந்தவளை காண காண அவனுக்குத் தெவிட்டவில்லை.

"நா சின்னாரி (என் சின்னவள், என் குழந்தை), நா தல்லி (என் அம்மா)..." என்று முணுமுணுத்தவன் கண்களில் பாசம் வழிந்தது.

அவன் அடுத்தடுத்து அவளது புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டே வந்தவன் கடைசியாக இருந்த அவளது புகைப்படத்தில் அவனது விழிகள் நிலைத்து நின்றது. அதில் ஆதிசக்தீஸ்வரி அழகாய் பட்டுப்புடவை கட்டி, நகைகள் அணிந்து தேவதை போன்று இருந்தாள். ஆம், அவள் அவனது தேவதை தான். அவன் மனதில் அவள் மீதான காதல் இருக்கிறதா? என்று கேட்டால் அவனது பதில் இல்லை என்பது தான்.

காதல் இருந்தால் தான் ஒரு பெண்ணைக் கொண்டாட வேண்டுமா? மூச்சு முட்டி மரித்துப் போனவனுக்கு உயிர் கொடுத்த பெண்ணவளை கொண்டாடாது இருக்க முடியுமோ அவனால்...???

"நா ப்ரியசகி (என் அன்பான மனைவி)..." சிங்கம் போன்று கர்ஜிப்பவனின் வாயிலிருந்து அத்தனை மென்மையாய் வார்த்தைகள் வெளிவந்தது. காதல் இல்லை, காமம் இல்லை... ஆனால் அவனது உயிர் அவள் மட்டுமே! அவனது மனைவி அவள் மட்டுமே!

"பெண்ணே! உன் அதிரடியில் வீழ்ந்தவன் தான்
இன்னமும் எழவில்லை.
பெண்ணே! உன் அடாவடியில் அசந்தவன் தான்
இன்னமும் மீளவில்லை.
எழ தோணவில்லை, மீள மனமில்லை.
உன் காலடியில் பக்தனாய் மாண்டுவிட
மனம் ஏங்குகிறது பெண்ணே!
கடைக்கண்ணால் அருள் புரிவாயோ
என் ப்ரியசகியே!!!"

நீயாகும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உயிர் : 2

"அக்கடே நிலபடு (அங்கேயே நில்லுங்கள்)..."

ராணியம்மா காரிலிருந்து இறங்கி அரண்மனை வாயிலில் கால் வைக்கும் போது ஒரு குரல் ஆத்திரத்துடன் அவரைத் தடுத்து நிறுத்தியது. அது அவரது மகன் ஜெய்பிரகாஷின் குரல் தான். ஒரு நொடி அப்படியே நின்றவர் பின்பு மகனது குரல் காதில் கேட்காதது போல் உள்ளே வந்தார்.

"பிச்சை எடுத்துட்டு வர்றீங்களா? உங்க தகுதிக்கு வெட்கமா இல்லை." ஜெய்பிரகாஷ் கோபமாய்ச் சீறினான்.

"ஜெய், ரொம்பப் பெரிய வார்த்தைகள் எல்லாம் பேசுற. நாவை அடக்கி வை." ராணியம்மா தானும் ராணி தான் என்பது போல் பதிலுக்குச் சீறினார்.

அவன் அவர் அருகே வந்தவன் அவரது கைப்பையைப் பிடுங்கி அதிலிருந்த காசோலையை எடுத்து காட்டியவன், "தீனிக்கு பேரு ஏன்டோ தெலுசாம்மா (இதுக்குப் பெயர் என்னன்னு தெரியுமாம்மா)?" என்று எக்காள குரலில் கேட்க...

"இது எனக்கும், சத்யாவுக்கும் இடையில் நடப்பது. உனக்குத் தேவையில்லாதது." என்றவர் அந்தக் காசோலையை மகனிடம் இருந்து பறித்துக் கொண்டார்.

"நம்ம கிட்ட பணம் இல்லையா? இல்லை, என்ன இல்லைன்னு அவன் கிட்ட போய்ப் பிச்சை எடுத்துட்டு வர்றீங்க? நீங்க இப்படி நடந்துக்கிறது எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு." மகனது கோபம் தணியவில்லை.

"ஜெய், இந்தப் பணத்துக்காக நான் சத்யாவை பார்க்க போகலை. அது அவனுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். எனக்கு அவனைப் பார்க்கணும். அதுக்கு இது ஒரு சாக்கு அவ்வளவே! இதில் உனக்கு எங்கே அவமானம் வந்துவிட்டது?" ராணியம்மா நிமிர்வாய் மகனை கண்டு கேட்டார்.

"என் கிட்ட கேட்டால் அந்தப் பணத்தை உங்க காலடியில் கொட்டி இருப்பேனே. ஆனா நீங்க அவன் கிட்ட போய்... அடானு நா சத்ரு (அவன் என்னோட எதிரி)." ஜெய்பிரகாஷ் அவனது நிலையில் பிடிவாதமாய் நின்றான்.

"இங்கே பணம் முக்கியம் இல்லை ஜெய். என் கிட்ட இல்லாத பணமா? இப்போ கூட நான் என் பிறந்த வீட்டுக்கு ஒரு ஃபோன் போட்டால் போதும்... என் அண்ணா கோடி கோடியாய் எனக்கு அள்ளி கொடுப்பார்." ராணியம்மா முகத்தில் பிறந்த வீட்டை எண்ணி கர்வம் தோன்றியது. 'பார்ன் வித் கோல்டன் ஸ்பூன்' என்பது அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

"ப்ச், நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்? நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க?" அவன் சலிப்பாய் அன்னையைப் பார்த்தான்.

"உனக்கும், அவனுக்கும் போட்டி என்றால்... தானினி உன்னட்டு உன்ச்சு (அதை உன்னோடு வைத்து கொள்)." ராணியம்மா அழுத்தமாய்க் கூற... அவனுக்கு எரிச்சல் வந்தது.

"நீங்க பண்ணிட்டு இருக்கிறது எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கும்மா. அவ்வளவு தான் சொல்வேன்."

"சத்யாவை தவிர வேறு எதுன்னாலும் சொல்லு, நேனு அடுகுடுன்னானு (நான் கேட்கிறேன்)." என்ற அன்னையை உற்று பார்த்தவன் பின்பு முகத்தில் கனிவை தேக்கி,

"மீரு இக்கட கூர்ச்சோண்டி (நீங்க இங்கே உட்காருங்க)." என்றவன் அன்னையை அங்கிருந்த சோபாவில் அமர வைத்து விட்டு தானும் அவர் அருகில் அமர்ந்தான். மகனது செய்கையிலேயே அவருக்குத் தெரிந்துவிட்டது... அவரால் அவனுக்கு ஏதோ காரியமாக வேண்டும் என்று...

"ஏமி விசயம் (என்ன விசயம்)?" அவர் நேரிடையாகக் கேட்க...

"எல்லாம் விசேசமான செய்தி தான். எனக்காக நீங்க பெண் கேட்டு போகணும்." அவன் சொல்லவும் அவர் திகைப்பாய் மகனை பார்த்தார்.

"அப்புடு ரச்சிதா (அப்போ ரச்சிதா)?" அவருக்கு இன்னமும் திகைப்பு அகலவில்லை. ரச்சிதா அவரது அண்ணன் மகள். அவர்களுக்கு ஏற்ற சம அந்தஸ்து உடையவர்கள்.

"ப்ச், அவளைப் பத்தி பேசாதீங்கம்மா." அவன் கோபத்துடன் சொன்னான்.

"ரெண்டு பேரும் காதலிச்சீங்களே? இப்புடு ஏமாயிந்தி (இப்போ என்னவானது)?"

"பிடிக்கலை அவ்வளவு தான். கேள்வி மேல் கேள்வி கேட்காதீங்க. இப்போ நான் சொன்னதைச் செய்ய முடியுமா? இல்லையா?"

"அலாகே (சரி), ஆ அம்மாயி எவரோ செப்பு (அந்தப் பொண்ணு யாருன்னு சொல்லு)?"

"நம்ம உதய் மச்சினிச்சி ஆதிசக்தீஸ்வரி." என்றவனைக் கண்டு அவரது திகைப்பு இன்னமும் அதிகரித்தது.

"ஆ அம்மாயியா (அவளா)?"

"அவ்வுன்னு (ஆமாம்)." அவன் ஆமோதிப்பாய் தலையை ஆட்டினான்.

"உனக்கு அந்த மாதிரி பெண்களை எல்லாம் பிடிக்காதே. பெண்கள் என்ன... அந்த மாதிரி நம்ம அந்தஸ்துக்குக் கீழே உள்ள ஆட்கள் யாரையும் உனக்குப் பிடிக்காதே. இதி எலா சாத்தியம் (இது எப்படிச் சாத்தியம்)?" அவர் மகனை ஆராய்ச்சியாய் பார்த்தார்.

"இந்த விசயம் அப்படி இல்லை. இந்தப் பெண்ணை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இன்னைக்கு அவளைப் பெண் பார்க்க வர்றாங்களாம். உதய் சொன்னான். பெண் பார்க்கத்தானே வர்றாங்க. அது பிரச்சினை இல்லை. நீங்க போய்ப் பெண் கேட்டால் உடனே சரின்னு சம்மதிச்சுருவாங்க." மகன் சந்தோசமாய்ச் சொல்ல... அவர் அவனை ஆட்சேபிக்கும் விதமாய்க் கண்டிப்புடன் பார்த்தார்.

"இது நடக்காது ஜெய்." அவர் சோபாவில் இருந்து எழுந்தார்.

"எந்துகு (ஏன்)?"

"நீ இந்த அரண்மனையின் அரசனாகப் போகிறவன். உனக்கு ஒரு இளவரசியைத் தான் மணம் முடித்து வைப்பேன். சாதாரணப் பெண் இல்லை."

"அம்மா, எதுக்கு இந்த ஓரவஞ்சனை? உதய்க்கு மட்டும் அவன் காதலிச்ச பெண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சீங்கல்ல." என்ற மகனை தீர்க்கமாய்ப் பார்த்தவர்,

"அது சத்யா கேட்டு கொண்டதால்... ஆனால் உன் விசயம் அப்படி இல்லை." என்று சொல்ல...

"சத்யா சொன்னால் செய்வீங்க... நான் சொன்னால் செய்ய மாட்டீங்க. அப்படித்தானே. அப்போ என் வார்த்தைக்கு இங்கே என்ன மரியாதை இருக்கு?" அவன் கோபமாய்க் கேட்க...

"உன் விசயத்தில் நான் யார் பேச்சும் கேட்க மாட்டேன்." என்றவர் மகனை அழுத்தமாய்ப் பார்த்தபடி, "முடி சூட்டிய மன்னனாக வலம் வர வேண்டும் என்றால்... இந்த மாதிரியான குப்பை எண்ணங்களை எல்லாம் தூக்கி போடு. உன் நினைவு கூட ராயலாக இருக்கணும்." என்று கூற...

"எனக்கு அவள் வேண்டும்... அவ்வளவு தான்." அவன் பிடிவாதம் பிடித்தான்.

"ரச்சிதா விசயத்திலும் நீ இப்படித்தான் பிடிவாதம் பிடிச்ச... இப்போ என்னவானது?" அவர் கேலியாய் மகனது முகத்தைப் பார்த்தார். அதைக் கண்டு அவன் முகம் கருத்தவனாய் அங்கிருந்து சென்று விட்டான். செல்லும் மகனை கண்டவர் முகம் கோபத்தில் இறுகியது.

"அம்மா..." என்றழைத்தபடி அங்கு உதய்பிரகாஷ் வந்தான்.

"எல்லாம் உன்னால் தான்... நீ தராதரம் பார்க்காது சாதாரணப் பெண்ணைக் கல்யாணம் கட்டியதால் வந்த வினை இது." அவர் இளைய மகனிடம் புலம்பினார்.

"என்னாச்சும்மா?" உதய்பிரகாஷ் கேட்க...

"இன்னும் என்னவாகணும்? உன்னைப் பார்த்து உன் அண்ணனும் ஒரு அன்னக்காவடியை கல்யாணம் பண்ணணும்ன்னு நினைக்கின்றான்." கவனமாக அவனது மச்சினிச்சி என்ற வார்த்தையை அவர் தவிர்த்தார். அதைச் சொன்னால் எங்கே அவன் இந்தத் திருமணத்தை நடத்தி விடுவானோ என்கிற பயம் தான்...

"ம்மா, இப்போ எதுக்கு இந்தப் பேச்சு?" தனது மனைவி பற்றிச் சொன்னதும் அவனுக்கு வருத்தமாக இருந்தது. காதல் தராதரம் பார்த்தா வரும்?

"பின்னே என்னை என்ன செய்யச் சொல்ற?" அவர் ஆதங்கத்துடன் சொன்னார்.

"ஜெய் விருப்பப்படி செய்ய வேண்டியது தானே."

"உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா? அவன் சாதாரண வீட்டுப் பெண்ணை மணம் முடிந்தால் எப்படி இந்த அரண்மனைக்கு அரசனாவது? நீ கடைக்குட்டி... அதனால் உன் விசயத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் ஜெய் அப்படி இல்லை."

"அம்மா, அப்போ சத்யாண்ணா?" அன்னை பேச்சு கேட்டு அவன் திகைத்துப் போனான்.

"சத்யா என் பிள்ளை தான். ஆனால் இந்த அரண்மனையின் வாரிசு ஜெய் மட்டும் தான்." அவர் உறுதியான குரலில் கூற...

"அம்மா..." அவனது திகைப்பு இன்னமும் மாறவில்லை.

"அந்த உரிமையை எப்போதும் என்னால் விட்டு கொடுக்க முடியாது உதய்." அன்னையின் குரலில் அவனது முகம் தொங்கி போனது.

"என்னமோ பண்ணுங்க..." என்றவன் தனது அறையை நோக்கி சென்றான்.

அங்கே அறையில் அவனது மனைவி ஜெகதீஸ்வரி மசக்கையில் சோர்வாய் படுத்து இருந்தாள். அவன் அவள் அருகே சென்று அமர்ந்தான். அவன் அமர்ந்த அசைவில் கண் விழித்தவள் அங்குக் கணவனைக் கண்டு,

"என்ன உதய், முகம் ஒரு மாதிரியா இருக்கு? எதுவும் பிரச்சினையா?" என்று கேட்க...

"ப்ச், அதெல்லாம் ஒண்ணும் இல்லை. லேசா தலைவலி." என்றவன் அவளை அணைத்துக் கொண்டு படுத்து விட்டான். அவளும் பதிலுக்கு அவனை அணைத்து கொண்டாள். அவனுக்குத் தனது மனதில் இருக்கும் அனைத்தையும் அவளிடம் கொட்ட வேண்டும் என்று ஆசை. ஆனால் அண்ணன் சிம்மஹாத்ரி சத்யநாராயணா வார்த்தைக்குக் கட்டுப்பட்டு எதுவும் பேசாது அமைதியாக இருந்தான்.

*********************************

சிம்மஹாத்ரி சத்யநாராயணா தனது ஜீப்பை விட்டு கீழே இறங்கியவன் எதிரில் இருந்த மலை மீதிருந்த அந்தக் கோவிலை பார்த்தான். அந்தக் கோவிலை பற்றி அவனது தாத்தா சொல்ல சொல்ல அவன் கேட்டு இருக்கின்றான். அவன் அவருடன் அதிகம் இங்கு வந்தும் இருக்கின்றான். அவனுக்கு அத்தனை பிடித்தம் இந்தக் கோவில். அவனது பெயர் கூட இந்தக் கோவிலில் குடி கொண்டிருக்கும் கடவுளின் பெயர் தான். அவனது அன்னை தான் அவனுக்கு அந்தப் பெயர் வைத்தது. கூடவே இலவச இணைப்பாய் அவனது தாத்தாவின் பெயர்.

அன்னை அவனுக்கு இந்தப் பெயரை ஏன் வைத்தார்? என்று அவன் அறிந்த போது அவனது ரௌத்திரம் இங்குக் குடி கொண்டிருக்கும் நரசிம்மனின் ரௌத்திரத்தை ஒத்திருந்தது. இப்போதும் அதை நினைத்து அவனது நரம்புகள் ஆத்திரத்தில் புடைத்துக் கொண்டு வந்தது. விழிகள் சிவக்க நின்றிருந்தவன் பின்பு மளமளவென்று கோவிலின் படிகளில் ஏற ஆரம்பித்தான். வேகமாய்ப் படிகளில் ஏற ஏற அவனது ஆத்திரம் சிறிது மட்டுப்படுவது போலிருந்தது.

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி கோவிலுக்கு அடுத்தபடியாக, அதிக வருமானம் வரும் கோவில் இந்தச் சிம்மாச்சலம். வராக லட்சுமி நரசிம்மா கோயில் என்பது சிம்மாச்சலம் என்னும் மலையில் அமைந்துள்ள ஒரு நரசிம்மர் கோயிலாகும். இந்தக் கோவில் ஆந்திர பிரதேசத்திலுள்ள விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப்பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மலையடிவாரத்திலிருந்து மேலே செல்வதற்கு வண்டியிலும் செல்லலாம். படியிலும் செல்லலாம். படியில் ஏறிச் செல்ல வேண்டுமானால் 1000 படிகள் எற வேண்டும். அதில் தான் அவன் ஏறிக் கொண்டிருந்தான்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் மனதில் இருந்த ஆத்திரம் எல்லாம் ஆற்றலாக வெளிப்பட்டதில் அவன் சீக்கிரமே அந்த மலையேறி மேலே வந்துவிட்டான். கோவிலுக்குள் நுழைந்தவன் மனதில் தாத்தா கூறிய ஸ்தல புராணம் காட்சியாய் விரிந்தது.

மனித உடம்புடன் சிங்கத்தின் தலையோடு கூடிய உருவத்தில் தான் கோவில் மூலவர் சிலை இருக்கிறது. ஆனால் சிலையின் சுய ரூபத்தைப் பார்க்க வேண்டுமென்றால் வருடத்தின் ஒரே ஒரு நாளில் மட்டும் தான் அனுமதி! மற்ற நாட்களில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்ட சந்தனம் கொண்டு முழுவதுமாக மூடி வைத்திருக்கும் ரூபத்தில் தான் தரிசிக்க முடியும். ஹிரண்யகசிபுவை சம்ஹாரம் செய்த பிறகு பயங்கரக் கோபத்துடன் இருந்த நரசிம்ஹ அவதார மூர்த்தியை பறவை வடிவில் வந்த சிவபெருமான் அமைதி கொள்ளச் செய்ததாகவும், அவரது கோபத்தினைத் தணிக்க உடல் முழுவதும் சந்தனம் பூசி குளிர்வித்ததாகவும் ஒரு நம்பிக்கை உண்டு.

பக்தப் பிரஹலாதனின் தந்தையான ஹிரண்யகசிபு, விஷ்ணுபகவானை விடத் தானே உயர்ந்தவன் என்றும் தன்னையே வணங்க வேண்டும் என்றும் சொல்ல, அதைக் கேட்காத தனது மகன் பிரஹலாதனை அழித்துவிடத் துணிந்தான். பலமுறை காப்பாற்றப்பட்ட பிரஹலாதனை அழிக்க மேலும் ஒரு முயற்சியாக, பிரஹலாதனை தூக்கி கடலில் வீசி, மேலே ஒரு பெரிய பாறையையும், மலையையும் போட சொல்லி கட்டளையிட்டான். அவனது சேவகர்கள் அப்படியே பிரஹலாதனைக் கட்டி கடலில் போட்டு, ஒரு பெரிய மலையைப் போட, அந்த மலை மேலேயே குதித்துப் பிரஹலாதனை மீட்டு வந்தாராம் விஷ்ணு பகவான். அந்த இடம் தான் இந்த இடம், அதாவது சிம்மாச்சலம். கடலுக்குள் குதித்துக் காப்பாற்றியதால் இந்தத் தலத்தில் விஷ்ணுபகவானின் பாத தரிசனம் கிடையாது என்றும் பாதாள லோகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே பாத தரிசனம் கிடைக்கும் என்றும் சில புராணங்கள் உண்டு. பிரஹலாதனின் விருப்பத்திற்கிணங்க, ஹிரண்யாக்சனை வதம் செய்த வராஹ ரூபம் மற்றும் ஹிரண்யகசிபுவினை அழிக்கப்போகும் நரசிம்ம ரூபம் கலந்த ரூபத்தில் காட்சி தந்ததாகவும் நம்பிக்கை.
 

ஶ்ரீகலா

Administrator
ஹிரண்யகசிபு வதத்திற்குப் பிறகு பிரஹலாதன் இங்கே வராஹ நரசிம்ம ஸ்வாமிக்குக் கோவில் கட்டி பூஜித்து வந்ததாகவும், அவனது மகன் காலத்திற்குப் பிறகு கோவில் பூஜைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, சத்ய யுகத்தின் முடிவில் சிலை முழுவதும் புற்றால் மூடிவிட்டதாகவும் சொல்கிறார்கள். அதற்கடுத்த யுகத்தில் புருரவா என்ற அரசன் தனது மனைவி ஊர்வசியுடன் ரதத்தில் பயணித்தபோது ஏதோ ஒரு சக்தி அவரை ஆட்கொண்டு இங்கே வரவழைத்ததாகவும், வராஹ நரசிம்ஹ மூர்த்தியின் சிலை அங்கே இருப்பதைத் தெரிந்து கொண்டு, சிலையைச் சூழ்ந்திருந்த புற்றை அகற்றி வராஹ நரசிம்ம ஸ்வாமிக்குக் கோவில் கட்டியதாகவும் ஸ்தல புராணம் சொல்கிறது. எந்த அளவு புற்று மண்ணை எடுத்தாரோ, அதே அளவு சந்தனம் பூசி தன்னைச் சாந்தரூபத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்ற அசரீரி ஒலி கேட்டு இப்படிச் சந்தனப்பூச்சில் வைத்திருப்பதாகவும் ஸ்தல புராணம் சொல்கிறது. வருடத்தில் அக்சய திருதியை தினத்தில் சந்தனம் முழுவதையும் அகற்றி சந்தனோத்ஸவம் அல்லது நிஜ ரூப தரிசனம் தருகிறார். அந்த நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா மூலவர் சந்நிதியில் நின்று கொண்டு லிங்க வடிவில் சுயம்பு போன்று சந்தனத்தால் மூடப்பட்டு இருந்த கடவுளை கண்மூடி வேண்டினான். முன்பு எல்லாம் அவன் நரசிம்மர் போன்று ஆக்ரோசத்துடன், ரௌத்திரத்துடன் இருந்தவன் தான். அந்த லெக்ஷ்மி தேவி வந்து நரசிம்மனுக்கு எடுத்து சொல்லி குளிர்வித்தது போல்... அவனது லெக்ஷ்மியும் அவனது மனதினை குளிர்வித்து அவனைச் சாந்தப்படுத்தி இருக்கிறாள். அதை நினைத்து தனக்குள் புன்னகைத்து கொண்டவன் லெக்ஷ்மி நரசிம்மரை மனதார வேண்டி கொண்டான். அவனது வேண்டுதல் முழுவதும் அவளுக்கானது மட்டுமே...

வேண்டி முடித்தவன் வெளியில் வந்து அங்கிருந்து இடப்பக்கம் இருந்த மண்டபத்தில் இருந்த கப்பஸ்தலம் எனப்படும் தூணை நோக்கி சென்றான். அங்குத் தூணைக் கண்டவன் கண்கள் கலங்க அதன் அருகே போனான். அதன் வரலாறு தெரிந்ததினால் வந்த துக்கம் அவனுடையது...

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற்றினால் கோவிலுக்கு வந்து கப்பம் செலுத்துவதாக வேண்டிக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. நோய் நொடியிலிருந்து பாதுகாக்கவும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பிறக்க வேண்டிக் கொண்டு இங்கே கப்பம் செலுத்துவதும் வாடிக்கையாக இருக்கிறது. அதாவது வேண்டுதல்கள் நிறைவேறிய மகிழ்ச்சியில் கப்பம் செலுத்துவார்கள். கப்பஸ்தம்பம் என்ற தூண் மணிகளாலும், பட்டு துணியாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதற்குக் கீழே சந்தான கோபாலரின் யந்திரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் இதைக் கட்டிக்கொள்பவர்கள் புத்திர பாக்கியம் பெறுவர் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா தனது வேண்டுதல் நிறைவேற அதைக் கட்டி கொண்டான். அந்த நொடி அவனது விழிகளில் இருந்து விழிநீர் ஆறாகப் பெருகியது. அவனது வேண்டுதல் என்னவென்று அந்தக் கடவுளுக்கும், அவனுக்கும் மட்டுமே தெரியும்.

"என்னை ஏமாற்றி விடாதே லெக்ஷ்மி நரசிம்மா..." அவனது உதடுகள் துக்கத்துடன் முணுமுணுத்துக் கொண்டது.

"நீங்க வருவேள்ன்னு சொல்லியிருந்தால் சிறப்புப் பூஜை பண்ணி இருக்கலாமே." அங்கு வந்த அர்ச்சகர் அவனை அடையாளம் கண்டு கொண்டு பவ்யமாய்க் கூறினார். அவனது உயரம் அவருக்குத் தெரியும் அல்லவா!

"எதற்குச் சுவாமி? கடவுள் முன் அனைவரும் ஒன்று தான்." என்றவன் விடைபெற்று வெளியில் வந்தான்.

மக்கள் நடமாட்டத்தில் இருந்து தள்ளி வந்து அந்த மலை மீது நின்று சுற்றுப்புறத்தை பார்த்தான். பின்பு அங்கு யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டவன் வாயில் தனது இரு கரங்களையும் குவித்து,

"ஆதிசக்தீஸ்வரி... நா ப்ரியசகி..." என்று உரக்க கத்தினான். அவனது குரல் அப்படியே எதிரொலித்துத் திரும்பவும் அவனிடமே வந்தது. அந்தக் கணம் அவனது முகத்தில் வழிந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

********************************

"கேரட்டை காலி பண்ணிடாதே... மதியம் பொரியலுக்கு வேணும்." என்று சொல்ல கொண்டே காயத்ரி ஆதிசக்தீஸ்வரியின் கரத்தில் செல்லமாய் அடி ஒன்றை போட்டாள்.

"இன்னும் எவ்வளவு நேரம் தான் புடவை கட்டிக்கிட்டு இருக்கிறது அண்ணி? எனக்கு அன்ஈசியா இருக்கு." ஆதிசக்தீஸ்வரி சிணுங்கினாள்.

"அதுக்குக் கேரட்டை எடுத்து தின்பியா?" காயத்ரி செல்லமாய் அவளை முறைத்தாள்.

"ஹி ஹி பொழுது போகணும்ல." அவள் அசடு வழிந்தாள்.

"நீ ரூமில் இரு ஆதி. அவங்க வந்ததும் நான் உன்னை அழைக்க வர்றேன்."

"ஏன் லேட்டாம்?" கேள்வி அண்ணியிடம் இருந்தாலும் அவளது வாய் கேரட்டை மென்று கொண்டு இருந்தது.

"ஏதோ ஒரு வேலை வந்து விட்டதாம்... அதான் லேட்..." காயத்ரி மதிய சமையலுக்கான காய்கறிகளை வெட்ட துவங்கினாள்.

"எதுக்கு இந்தப் பார்மாலிட்டிஸ் எல்லாம்?" ஆதிசக்தீஸ்வரி சலித்துக் கொண்டிருக்கும் போதே...

"காயூ, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க. நீ அந்த வாலுவை வாலை அடக்கி இருக்கச் சொல்லு." ராஜராஜேஸ்வரி உள்ளே பார்த்து குரல் கொடுத்தவர் பின்பு மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க கணவரோடு வாயிலுக்குச் சென்றார்.

"கேட்டியா? வாலை சுருட்டிட்டு அடக்க, ஒடுக்கமா இருக்கணும்." காயத்ரி போலியாய் நாத்தனாரை மிரட்டினாள்.

"இப்படியா அண்ணி?" வாயை பொத்தி கொண்டு குரங்கு போல் சேட்டை செய்தவளை கண்டு காயத்ரிக்குச் சிரிப்பு வந்தது. வெளியில் மாப்பிள்ளை வீட்டார் வந்திருப்பதை உணர்ந்து அவள் தன்னை அடக்கி கொண்டாள். அப்போது ராஜராஜேஸ்வரி பரபரப்புடன் அங்கு வந்தவர்,

"காயூ, ஆதி கிட்ட காபி கொடுத்து விடு. அப்படியே நீ பலகார தட்டை எடுத்துட்டு வா..." என்றுவிட்டு பதிலை எதிர்பார்க்காது சென்றுவிட்டார்.

காயத்ரி சூடாய் காபி போட்டு அதைக் கோப்பைகளில் ஊற்றி நாத்தனாரிடம் கொடுத்தவள், பின்பு பலகாரம் அடங்கிய தட்டுகளைத் தான் எடுத்துக் கொண்டு வரவேற்பறை நோக்கி சென்றாள். அங்கு வரவேற்பறையில் மணமகன், அவனது பெற்றோர் என்று மூன்று பேர் மட்டுமே அமர்ந்து இருந்தனர்.

"ஆதி, குனிந்த தலை நிமிராது எல்லோருக்கும் காபி கொடுத்துட்டு வந்து ஓரமாய் நில்லு." என்று காயத்ரி நாத்தனார் காதில் கிசுகிசுத்தபடி அவளை முன்னே விட்டு பின்னே நடந்தாள்.

ஆதிசக்தீஸ்வரி குனிந்த தலை நிமிராது அண்ணி சொன்னதைச் செய்தாள். ஆனால் அவளது இதழ்களில் அடக்கப்பட்ட சிரிப்பு ஒளிந்திருந்தது. அவளுக்கு இந்தச் சம்பிரதாயம் எல்லாம் வேடிக்கையாக இருந்தது. அதேசமயம் சிரிப்பாகவும் இருந்தது. காபி, பலகாரம் கொடுத்ததும் ஆதிசக்தீஸ்வரியும், காயத்ரியும் அங்கு ஓரமாய்ப் போய் நின்று கொண்டனர்.

"புரோக்கர் உங்களைப் பற்றி எல்லாம் சொன்னார் தான்... இருந்தாலும் உங்க கிட்ட நேரே கேட்பது நல்லது இல்லையா?" பையனை பெற்றவள் ஆரம்பித்தாள்.

"என்ன கேட்கணும் கேளுங்க?" ராஜராஜேஸ்வரி புன்னகை முகத்துடன் கேட்டார்.

"ஏன் உங்க வீட்டுக்காரர் பேச மாட்டாரா?"

"உங்க வீட்டுக்காரர் கேள்வி கேட்டு இருந்தால் அவர் பதில் பேசி இருந்திருப்பார். கேள்வி கேட்டது நீங்க... அப்போ நான் தானே பதில் சொல்ல முடியும்." ராஜராஜேஸ்வரி தனது கெத்தை விடாது பதில் கூறினார்.

"அதானே ராஜராஜேஸ்வரி யாரு?" ஆதிசக்தீஸ்வரி நமட்டு சிரிப்புடன் சொல்ல... காயத்ரி அவளைத் திரும்பி பார்த்து முறைத்ததில் அவள் அடக்கப்பட்ட சிரிப்புடன் நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

"எங்களுக்கு இருக்கிறது ஒரே ஒரு பையன். ஐடியில் கை நிறையச் சம்பாதிக்கிறான். நீங்க உங்களோட மத்த ரெண்டு பிள்ளைங்களைப் பத்தி சொல்லுங்க." பையனின் அம்மா கேட்க...

"என்னோட மூத்த பொண்ணைப் பெரிய இடத்தில் கட்டி கொடுத்து இருக்கேன். அவங்க ராஜ வம்சம். அவள் அரண்மனையில் இருக்கிறாள்." என்று ராஜராஜேஸ்வரி பெருமையுடன் சொன்னார்.

"ஓ... ரொம்ப நல்லது. உங்க மகன் எங்கே காணோம்?" மணமகனின் அன்னையின் விழிகள் சுழன்றது.

"எங்கே குடிச்சிட்டு கிடக்கிறாரோ?" காயத்ரி துயரத்துடன் முணுமுணுத்தாள்.

"பிசினஸ் விசயமா வெளியூர் போயிருக்கான். நீங்க திடீர்ன்னு வந்ததால் அவனுக்குத் தகவல் சொல்லலை." ராஜராஜேஸ்வரி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தார். அதைக் கண்டு காயத்ரி விரக்தி புன்னகை செய்தாள்.

"ஓஹோ... நல்லது நல்லது." என்றவரின் கரத்தினை அவரது மகன் சுரண்டினான்.

"என்னடா?"

"பொண்ணு கிட்ட தனியா பேசணும்மா..." அவன் தயக்கத்துடன் சொன்னான்.

"இன்னும் நான் முடிவு பண்ணலை. அதுக்குள்ள நீ என்ன பேச போற?" அவர் மகனிடம் சிடுசிடுத்தார்.

"என்ன முடிவு பண்ணணும்? முடிவு பண்ணி தானே பொண்ணு பார்க்க வந்தீங்க." சோமசுந்தரம் குரலை சற்று உயர்த்திக் கேட்டார். இவ்வளவு நேரம் பெண்கள் பேசி கொண்டு இருக்கிறார்கள் என்று அவர் அமைதியாக இருந்தார்.

"பொண்ணுன்னா அடக்கமா இருக்கும்ன்னு நினைச்சு வந்தேன். ஆனா இங்கே வந்து பார்த்த பிறகு தானே தெரியுது." என்றவரின் பார்வை ஆதிசக்தீஸ்வரியின் தலைமுடி அலங்காரத்தை ஒரு மாதிரியாய்ப் பார்த்தது. ஆதிசக்தீஸ்வரி கோபத்துடன் ஏதோ சொல்ல போக... காயத்ரி அவளது கையைப் பிடித்துத் தடுத்து விட்டாள்.

"அது பேசன்ம்மா..." மணமகன் அன்னையிடம் பல்லை காட்டினான்.

"நாம பேசன் ஷோ நடத்துறதுக்குப் பொண்ணு பார்க்கலை. குடும்பம் நடத்த பொண்ணு பார்க்கிறோம்." என்று அவர் சொல்லி முடிக்கும் முன்,

"உங்க மகனை எனக்குப் பிடிக்கலை. நீங்க வெளியில் போகலாம்." என்று கோபத்தோடு கூறிய ஆதிசக்தீஸ்வரி தனது கையை வெளிப்பக்கமாய் நீட்டினாள்.

"நான் ஏன் இப்படிச் சொன்னேன்னு இப்போ உனக்குப் புரிஞ்சதாடா?" அந்த அம்மா மகனை பார்த்துக் கடுமையாகக் கேட்டவர் தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டார்.

"ஆதி, நீ உன் மனசில் என்ன நினைச்சிட்டு இருக்க?" ராஜராஜேஸ்வரி மகளிடம் கோபமாய்க் காய்ந்தார்.

"விடு ராஜி..." சோமசுந்தரம் மனைவியைச் சமாதானப்படுத்தினார்.

"நான் என்ன காட்சி பொருளா? இப்படி அலங்காரம் பண்ணி நிற்க வைக்கிறீங்க? அவங்க எப்படிப் பேசிட்டு போறாங்க பாருங்க?" ஆதிசக்தீஸ்வரி கோபத்தில் வெடித்தாள்.

"அவங்க கேட்டதில் என்னடி தப்பு இருக்கு? நீ ஏன் இப்படி இருக்க?" அவருக்கு ஆற்றாமையாக வந்தது.

"எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கிறதில் என்ன தப்பு? நான் இப்படித்தான் இருப்பேன்."

"நீ இப்படி இருந்து தான்..." ராஜராஜேஸ்வரி கோபமாய் ஏதோ சொல்ல போக...

"ராஜி..." சோமசுந்தரம் குரலை உயர்த்தி மனைவியை அதட்டினார். அதில் தனது தவறினை உணர்ந்து அவர் வாயை மூடி கொண்டார்.

"ஆதி இங்கே வா..." சோமசுந்தரம் தன்னருகில் மகளை அழைத்தார்.

"அப்பா..." அவள் ஓடி வந்து அவரது தோளில் தஞ்சமானாள்.

"குடும்பம்ங்கிறது ஒருத்தரோட தனிப்பட்ட விருப்பம் கிடையாது. இங்கே எல்லோரது விருப்பமும் அடங்கி இருக்கு. உனக்குப் பிடிக்கலைன்னா 'ஐயம் சாரி'ன்னு தன்மையா சொல்லு. இப்படிக் கோபப்படக் கூடாது." அவர் மகளுக்கு எடுத்து சொல்ல...

"ம், சரி..." அவள் தலையை ஆட்ட... சோமசுந்தரம் மனைவியை ஒரு பார்வை பார்த்தார். அதைக் கண்டு ராஜராஜேஸ்வரி தலை தானாகக் குனிந்தது.

"சரி, நீ போ..." தந்தை சொன்னதும் அவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

ஆதிசக்தீஸ்வரி கோபமாய் இருந்தால் வீட்டின் மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியின் கீழே சென்று அமர்ந்து கொள்வாள். இப்போதும் அப்படித்தான் அவள் அங்கே சென்றவள் முழங்காலில் முகத்தைப் புதைத்து அமர்ந்து கொண்டாள்.

"சக்தி..." என்றழைத்தபடி யாரோ அவளது தலையை வருடுவது போலிருந்தது. அவள் திடுக்கிட்டு தலையை நிமிர்த்திப் பார்த்தாள். அங்கு யாரும் இல்லை. மீண்டும் அவள் முழங்காலில் முகத்தைப் புதைத்து கொண்டாள்.

"ஆனாலும் உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது சக்தி." மீண்டும் அந்தக் குரல் காதில் ஒலிக்கத் தொடங்கியது.

"ஹேய், யாரது? ஒழுங்கு மரியாதையா என் கண் முன்னே வாங்க." அவள் சுற்றும் முற்றும் பார்த்தபடி கத்தினாள். அது அவளது மனதிற்குள் ஒலிக்கும் குரல் என்பதை அவள் அறியவில்லை.

அதற்கு மேல் அவளால் அங்கிருக்க முடியாது கீழே வந்து விட்டாள். தனது அறைக்கு வந்தவள் உடை மாற்ற எண்ணி அலமாரியை திறந்தாள். அதில் ஏகப்பட்ட உடைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவள் வீட்டின் செல்லப்பிள்ளை... அதனால் அவள் கேட்டது எல்லாம் உடனே கிடைத்து விடும். அந்த உடைகளில் எங்கோ ஒரு மூலையில் இருந்த அந்த இளம்திவப்பு உடையை எடுத்தாள். இளஞ்சிவப்பில் இருந்த பாவாடை, சட்டையை எடுத்தவள் அவளையும் அறியாது அதை முகர்ந்து பார்த்தாள். பின்பு உடையைப் போட எண்ணி பிரித்த போது அதிலிருந்து லெக்ஷ்மி நரசிம்மர் புகைப்படம் கீழே விழுந்தது. அதை எடுத்து பார்த்தவளுள் ஏதேதோ எண்ணங்கள்... அடுத்த நொடி அவள் கண்களை இருட்டி கொண்டு வந்து மயங்கி கீழே சரிந்தாள்.

"உன்னைக் கண்டால் என் கண்கள் மலரும்,
உன் வாசத்தில் என் முகம் மலரும்,
உன் அருகாமையில் என் இதழ் மலரும்,
உன் முத்தத்தில் என் இதயம் மலரும்,
உன் அணைப்பில் என் பெண்மை மலரும்,
மொத்ததில் உன்னால் நான் பெண்ணாய் மலர்ந்தேன்.

நீயாகும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உயிர் : 3

"அண்ணய்யா..." பூஜிதா கூவியபடி அண்ணனை நோக்கி ஓடி வந்தாள். அப்போது தான் சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஜீப்பில் இருந்து இறங்கி கொண்டு இருந்தான். தன்னை நோக்கி கூவியபடி ஓடிவரும் தங்கையைக் கண்டு அவனது முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. அவள் அவனது சின்னத் தங்கை, செல்ல தங்கை அல்லவா!

"செல்லி (தங்கை)... நுவ்வு எப்புடு வச்சாவு (நீ எப்போ வந்த)?" என்று கேட்டவன் தங்கையைப் பாசத்துடன் அணைத்துக் கொண்டான்.

"இப்புடே வச்சின்டி (இப்பத்தான் வந்தேன்)." பூஜிதா புன்னகையுடன் கூறினாள்.

"நுவ்வு எலா உன்னாவு (நீ எப்படி இருக்க)?" அவன் தங்கையின் தலையை வருடியபடி பாசத்துடன் கேட்க...

"நேனு பாகுன்னானு (நான் நல்லா இருக்கேன்). மீரு எலா உன்னாரு (நீங்க எப்படி இருக்கீங்க)?" என்று முகம் மலர கேட்டவள் அடுத்த நொடி முகம் வாடியவளாய், "அண்ணய்யா, மீரு நன்னு மர்ச்சிபோயாவு (நீங்க என்னை மறந்துட்டீங்க)?" என்று வருத்தத்துடன் சொன்னாள்.

"என்னம்மா இப்படிக் கேட்டுட்ட? உன்னை நான் எப்படி மறப்பேன்?" அவன் வாஞ்சையுடன் கேட்டான்.

"அண்ணய்யா, இன்னைக்கு ஃபுல் டே நான் இங்கே தான்... உங்க கூடத் தான்." அவள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.

"இன்னைக்கு ஒரு நாள் இல்லை... எப்போதும் நீ என் கூட இருக்கலாம்."

"நான் அம்மாவை பார்க்காம நேரே இங்கே வந்துவிட்டேன். நைட்டு அம்மாவை போய்ப் பார்த்துட்டு நாளைக்கு இங்கே வந்திர்றேன்."

"அச்சோ, அதி தப்பு காதாம்மா (அது தப்பு இல்லையாம்மா)? இனி இப்படிச் சொல்லாம வர கூடாது. அம்மாவுக்கு ஃபோன் போட்டு சொல்லு." அவன் கண்டிப்புடன் சொல்ல... பூஜிதா சிணுங்கியபடி தனது அலைப்பேசியை எடுத்துக் காதில் வைத்தாள். மறுமுனையில் அன்னை வந்ததும் அவரிடம் பேசியவள் அப்படியே பேசியபடி அண்ணனை விட்டு நகர்ந்து செல்ல... அவனோ தங்கையைப் புன்சிரிப்புடன் பார்த்திருந்தான்.

"பாவா..." என்றழைப்பில் அவன் திரும்பி பார்த்தான். அங்கே ரச்சிதா நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் அவன் அதே புன்னகை மாறாது,

"ஸ்வாகதம் யுவராணி (நல்வரவு இளவரசி)..." என்றான்.

"நேனு யுவராணி ஆயித்தே (நான் இளவரசி என்றால்)... மீரு யுவராஜூ காதா(நீங்கள் இளவரசன் இல்லையா)?" அவள் பெருமையாய் சொல்ல...

"இல்லை, நான் சாதாரணமானவன்." அவன் அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னான். அதைக் கேட்டு ரச்சிதா அவனைக் கண்டு சிரித்தாள்.

"நீங்க சொல்றதை யாராவது கேட்டால் சிரிக்கப் போறாங்க."

"நான் இளவரசன்னு எதை வச்சு சொல்றீங்க இளவரசி? இந்தச் சொத்துக்களை வைத்தா?" அவனது பார்வை அவளைத் துளைத்து எடுத்தது. அதில் அவள் ஒரு கணம் தடுமாறி தான் போனாள்.

"இது எதுவும் எனக்குச் சொந்தம் இல்லை இளவரசி. இப்போ வரை எனக்குன்னு எதுவும் கிடையாது. அப்படி என்றால் நான் சாதாரண... இல்லை இல்லை... ஒன்றும் இல்லாத பிச்சைக்காரன் மட்டுமே." என்றவனைக் கண்டு அவள் முகம் கருக்க நின்றிருந்தாள்.

ஒரு காலத்தில் ரச்சிதா அவனைப் பார்த்து கூறிய அதே வார்த்தைகள்... இன்று அவளுக்கே திருப்பி வருகிறது. அன்று அவள் செய்த மடத்தனத்தை இன்று அவள் உணர்ந்து என்ன பயன்?

"பாவா..." என்று ஏதோ சொல்ல போனவளை கையமர்த்தித் தடுத்தவன்,

"இனி என்னை இப்படிக் கூப்பிடாதீங்க இளவரசி. என்னைச் சத்யான்னு கூப்பிடுங்க. அது தான் சரியா இருக்கும்." அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே பூஜிதா அங்கு வந்து விட்டாள்.

"அண்ணய்யா, என்னை ஷாப்பிங் கூட்டிட்டு போங்க. நான் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுக்கணும்."

"கொடுத்துட்டா போச்சு..." என்று மகிழ்வோடு சொன்னவன் தங்கையை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல போனவன் பின்பு திரும்பி ரச்சிதாவை கண்டு, "உள்ளே வாங்க இளவரசி..." என்றுவிட்டு செல்ல போக...

"அண்ணய்யா, இது என்ன புதுசா இளவரசின்னு வதனவ கூப்பிடுறீங்க? ரச்சின்னு கூப்பிடுங்க... இல்லைன்னா ஸ்பெசலா பங்காரம்ன்னு கூப்பிடுங்க..." பூஜிதா கண்ணைச் சிமிட்டி கொண்டு சொல்ல...

"அவங்க உயரத்தில் இருந்து இறங்கி வர வேண்டாம் செல்லி. நீ வா..." என்றவன் முன்னே செல்ல... பூஜிதா யோசனையாய் அண்ணனையும், ரச்சிதாவையும் மாறி மாறி பார்த்தபடி நின்றிருந்தாள்.

"ஏய் பூஜா, என்ன யோசனை? உங்க அண்ணனுக்கும், எனக்கும் சின்ன ஊடல்... அதான்." ரச்சிதா சொல்லவும்...

"அதான் காரணமா?" பூஜிதாவின் முகம் மலர்ந்தது.

"ஆமாம்..." ரச்சிதா சொல்லும் போதே...

"செல்லி..." அண்ணனின் அழைப்பில் பூஜிதா துள்ளி ஓட... ரச்சிதா யோசனையுடன் தன் முன்னிருந்த அரண்மனையைப் பார்த்தவள் பின்பு தனது யோசனையைத் தள்ளி வைத்து விட்டு உள்ளே சென்றாள்.

தங்கை தனது அரண்மனைக்கு வந்ததைக் கொண்டாடும் விதமாய் அண்ணன்ங்காரன் வகை வகையாய் விருந்து வைத்து அசத்தி விட்டான். அத்தனை பிரியம் தங்கை மீது...

"நீ கொஞ்சம் ஓய்வெடு செல்லி... அதுக்குப் பிறகு நாம ஷாப்பிங் போகலாம்." தங்கையை ஓய்வெடுக்கச் சொன்னவன் தனது அறைக்குச் சென்றான். அவனின் பின்னேயே ரச்சிதா சென்றாள்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா அறை கதவை சாற்ற முயலும் போது... அவனைத் தள்ளி கொண்டு ரச்சிதா உள்ளே வந்தாள். அவளது மேனி அவன் மீது பட்டதும் அவன் நெருப்பு சுட்டது போல் தள்ளி நின்றான். அவள் அதைக் கண்டு கொள்ளாது சுவாதீனமாக உள்ளே நுழைந்தவள் அவனை நேருக்கு நேர் பார்த்தபடி முன்னேறினாள். அவன் அவளது பார்வையைக் கண்டு பிடிக்காதவனாய் முகத்தைச் சுளித்தவன் அங்கிருந்து செல்ல முயன்றான். அவள் தனது கைகள் கொண்டு அவனைச் சிறை பிடித்தவள் அங்கிருந்த சுவற்றில் அவனைச் சாய்த்து,

"மீரு நாகு மாத்திரமே பாவா (நீங்க எனக்கு மட்டுமே பாவா)... நாகு மாத்திரமே (எனக்கு மட்டுமே)..." என்று கிறக்க குரலில் சொன்னவள் அவனது உதடுகளை நோக்கி தனது உதட்டினை கொண்டு சென்ற போது... அவன் பட்டென்று அவளை உதறி தள்ளிவிட்டு விலகி நின்றான்.

"அது எப்படிக் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உங்களால் இப்படிச் சொல்ல முடியுது? எனக்கு ஆச்சிரியமா இருக்கு." அவன் போலி வியப்புடன் கேட்டான்.

"ஆசைக்கு வெட்கமேது பாவா..."

"ஆசைக்கு வேணா வெட்கம் இல்லாது இருக்கலாம். ஆனால் எனக்கு வெட்கம் இருக்கு. மாமாகாரு முகத்துக்காகத் தான் உங்களைச் சும்மா விடறேன். இதுக்கு மேல என்னைச் சீண்டாதீங்க." அவன் தனது ஆட்காட்டி விரலை நீட்டி அவளை எச்சரித்தான்.

"சீண்டினால் என்ன பண்ணுவீங்க பாவா?" அவள் அவனை நோக்கி வந்தாள்.

"த்தூ..." என்று அருவருப்புடன் காறி உமிழ்ந்தவன் விறுவிறுவென அங்கிருந்து சென்று விட்டான்.

ரச்சிதா அதிர்ச்சியில் அப்படியே நின்றிருந்தாள். அவன் அவளை அடித்திருந்தால் கூட அவள் துடைத்து விட்டு போயிருப்பாள். ஆனால் அவனது அருவருப்பை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவளுள் ஆத்திரம் கனன்றது.

"உன்னை எப்படி என் வழிக்குக் கொண்டு வரணும்ன்னு எனக்குத் தெரியும் பாவா?" என்றவளது மனக்கண்ணில் அவளது தந்தையின் முகம் வலம் வந்தது. அவளது தந்தை என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் சிம்மஹாத்ரி சத்யநாராயணனின் பலவீனத்தை அவள் அறிந்தே இருந்தாள்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா தங்கையைக் கடைக்கு அழைத்துச் சென்றான். கூடவே கொசுறாக ரச்சிதா... அவன் அங்கு வருகிறான் என்றதும்... முழுக்கடையிலும் இருந்த ஆட்கள் அப்புறப்படுத்தப்பட்டு இளவரசனின் வருகைக்காகக் கடை ஆளில்லாது காத்திருந்தது, அவன் தங்கைக்காக உடைகள், நகைகள் வாங்கிக் குவித்தான்.

"பாவா, இது எல்லாம் நான் எடுத்திருக்கேன்." ரச்சிதா அவள் தேர்வு செய்த நகைகள், உடைகளை எடுத்துக் கொண்டு வர...

"இதையும் சேர்த்துப் பில் போட்டுருங்க." என்று சொல்லிவிட்டு அவன் தங்கை புறம் திரும்பி கொண்டான். அவனது இந்தச் சொல்லே ரச்சிதாவுக்குப் போதுமானதாக இருந்தது.

பூஜிதா சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க... சிம்மஹாத்ரி சத்யநாராயணா பில்லுக்கான பணத்தைச் செலுத்தி கொண்டிருந்தான். அப்போது ரச்சிதா அவன் அருகே வந்து,

"எனக்காக வாங்கிக் கொடுத்ததுக்குத் தேங்க்ஸ் பாவா." என்று சந்தோசமாய்ச் சொல்ல...

"உங்களுக்காக இல்லை... மாமாகாருவுக்காக..." என்றுவிட்டு அவன் மீதமிருந்த பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டான்.

"அதே மாமாகாருவுக்காக என் கழுத்தில் நீங்க தாலி கட்டுவீங்க பாவா. எனக்கு நம்பிக்கை இருக்கு." ரச்சிதா கண்களில் வெறி இருந்தது.

திருமணத்திற்கு வேண்டியது காதல் மட்டுமே... வெறி இல்லை. ஒன்றை அடைந்தே தீர்வது என்று வெறிக் கொண்டு இருப்பதற்குப் பெயர் காதல் இல்லை. காதல் இருந்தால் விட்டு கொடுத்தல் இருக்கும், சகிப்புத்தன்மை இருக்கும், புரிந்துணர்வு இருக்கும், பொறுமை இருக்கும்... இதை எல்லாம் தாண்டி 'நீ எங்கே இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும்' என்கிற நல்ல எண்ணம் இருக்கும். இது எதுவும் அவளிடம் கிடையாது.

இரவு உணவுக்கு நட்சத்திர விடுதிக்கு தங்கையை அழைத்து வந்திருந்தான் சிம்மஹாத்ரி சத்யநாராயணா. மூவரும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்ததும் அவன் தனது அலைப்பேசியை உயிர்ப்பித்தான். இவ்வளவு நேரம் அவனது செல்ல தங்கை அதை அணைத்து வைத்திருந்தாள். அப்போது அவனது அலைப்பேசி அழைத்தது. அதில் ஒளிர்ந்த பெயரை கண்டதும் அவனது முகத்தில் புன்னகை ததும்பியது. ஆனால் அதை எடுத்து பேச முடியாதபடி அருகில் இருந்த இருவர் தடுத்தனர்.

"செல்லி, நீ ஆர்டர் கொடு. நான் இப்போ வந்திர்றேன்." என்று அவன் தங்கையிடம் சொல்ல...

"இதுக்குத் தான் நான் ஃபோனை ஆஃப் பண்ணி வச்சேன். இப்போ எதுக்கு அதை ஆன் பண்ணினீங்க?" அவள் செல்லமாய்க் கோபம் கொள்ள...

"ப்ளீஸ் செல்லி..." அவன் கெஞ்சுதலாய் தங்கையைப் பார்த்தான். அவள் சம்மதித்ததும் அடுத்த நொடி அவன் தனது அலைப்பேசியை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி வந்தான்.

"என்ன காயூம்மா, உன் நாத்தனார் திருமணப் பேச்சை தனது பேச்சால் நிறுத்தி விட்டாளா?" அவன் கேலி சிரிப்புடன் கேட்டான்.

மருத்துவமனையில் இருந்த காயத்ரி பதில் சொல்ல முடியாது தேம்பினாள். அதைக் கேட்டவன் பதறி போனவனாய், "என்னாச்சு காயூ? சக்தி... சக்திக்கு ஒண்ணும் இல்லையே." என்று கேட்க...

"ஆதி, ஆதி..." என்றவளுக்கு மேலே பேச்சு வரவில்லை.

மதிய உணவு உண்பதற்காகக் காயத்ரி ஆதிசக்தீஸ்வரியை அழைக்க அவளது அறைக்குச் சென்றாள். அங்குச் சென்றவள் கண்டது, மூக்கிலிருந்து இரத்தம் வழிய மயங்கி கிடந்த ஆதிசக்தீஸ்வரியை தான்... அவளது நிலை கண்டு காயத்ரி அலறிய அலறலில் எல்லோரும் அங்கு வந்து விட்டனர். உடனே ஆதிசக்தீஸ்வரியை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனை வந்த பிறகும் அவள் கண்விழிக்கவில்லை. அந்தக் கவலையில் இருந்த காயத்ரி இந்த விசயத்தைச் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவிடம் சொல்ல வேண்டும் என்பதை மறந்தே போனாள். இப்போது தான் அவளுக்கு அவனது ஞாபகம் வந்தது.

"சக்திக்கு என்னாச்சு காயூ?" அவனது விழிகளில் விழிநீர் தேங்கி நின்றது. அவனது உடல் லேசாக நடுங்கியது.

"ரத்த அழுத்தம் அதிகமாகி மூக்கில் இருந்து ரத்தம் வழிய மயங்கி விழுந்து விட்டாள். இன்னும் கண் விழிக்கலை." காயத்ரி சொன்னதைக் கேட்டு அவன் ஓய்ந்து தான் போனான்.

"டாக்டர் என்ன சொல்றாங்க?" அவன் தனது பதட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான்.

"பயப்பட ஒண்ணும் இல்லை. மயக்கம் தெளிஞ்சு தானாக எழுந்து விடுவாள்ன்னு டாக்டர் சொல்றாங்க. ஆனா எங்களுக்குத் தான் பயமா இருக்குண்ணா." அவளது குரல் அழுகையுடன் ஒலித்தது.

"அத்தகாரு, மாமாகாரு எப்படி இருக்காங்க?" அவனுக்கு அவர்களைப் பற்றி நன்கு தெரியும். ஆதிசக்தீஸ்வரிக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்கள் இருவரும் உடைந்து போவார்கள் என்று...

"அவங்களும் கவலையா தான் இருக்காங்க."

"திடீர்ன்னு என்னாச்சு? நல்லா தானே இருந்தாள்."

"தெரியலைண்ணா... ஆனா அவள் கையில் லெக்ஷ்மி நரசிம்மர் ஃபோட்டோ ஒண்ணு இருந்தது. கீழே டிரெஸ் சிதறி கிடந்தது." காயத்ரி சொன்னதும் அவனுக்குப் புரிந்து போனது. அந்தப் புகைப்படம் அவன் அவளுக்குக் கொடுத்தது என்று...

'சக்தி... நா ப்ரியசகி...' அவன் வேதனையுடன் விழிகளை மூடி கொண்டான்.

"நீங்க கிளம்பி இங்கே வாங்களேன் அண்ணா." காய்த்ரி குரலில் தன்னுணர்வு பெற்றவன்,

"உடனே கிளம்பி வர்றேன்..." தன்னவளை காண்பதை விட அவனுக்கு வேறு என்ன முக்கிய வேலை இருக்கப் போகிறது!

"நைட் நான் தான் ஆதி கூடத் துணைக்கு இருப்பேன். நீங்க வாங்கண்ணா." என்றவளை கண்டு அவனது மனம் நெகிழ்ந்தது.

"தேங்கஸ்ம்மா..." என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு உடனே பவன்ராம்க்கு அழைப்பு எடுத்தான். மறுபக்கம் பவன்ராம் எடுத்ததும்,

"நான் உடனே மதுரைக்குப் போகணும். ஃபிளைட் டிக்கெட்டுக்கு ஏற்பாடு பண்ணு. க்விக்..." என்று அவசரப்படுத்த...

"மதுரைக்கா? எதுக்கு?" பவன்ராம் சற்று கோபத்துடன் கேட்டான்.


"ஏன், எதுக்குன்னு சொன்னால் தான் செய்வியா? சொன்னதைச் செய்டா..." அவன் கோபத்தில் நண்பனை வார்த்தைகளால் கடித்துத் துப்பினான்.
 

ஶ்ரீகலா

Administrator
"சரி, சரி... கோபப்படாதே. நீ சொன்னதைச் செய்றேன்." என்று பவன்ராம் சொல்ல...

"நீ உடனே கிளம்பி ஹோட்டலுக்கு வா..." என்று நட்சத்திர விடுதியின் பெயரை சொன்னவன் பவன்ராமின் பதிலை எதிர்பாராது அழைப்பை துண்டித்து விட்டான்.

அடுத்து ஆதிசக்தீஸ்வரியை கண்காணிக்கும் ஆட்களுக்கு அழைத்துக் கண்டபடி திட்டி தீர்த்து விட்டான்.

"சார், நாங்க உங்களுக்கு ஃகால் பண்ணிட்டே இருந்தோம். ஆனால் உங்க ஃபோன் ஸ்விட்ச் ஆஃபாகி இருந்தது." அவர்கள் சொன்னதும் தான் அவன் தனது தவறை உணர்ந்து அமைதியானான்.

"அண்ணய்யா..." பூஜிதா அழைக்கும் குரலில் சிம்மஹாத்ரி சத்யநாராயணா கலங்கிய தனது விழிகளைச் சரிப்படுத்திக் கொண்டு திரும்பி பார்த்தான்.

"ஃபுட் வந்திருச்சு. சாப்பிட வாங்க." என்று அவள் அழைக்க... வேறுவழியின்றி அவன் அங்கே சென்று அமர்ந்தான். ஆனால் எதுவும் உண்ணவில்லை.

"அண்ணய்யா. நீங்க சாப்பிடலை."

"எனக்குப் பசிக்கலை. நீ சாப்பிடும்மா..." என்றுவிட்டு அமைதியாக இருந்தான்.

ரச்சிதா அவனை ஆராய்ச்சியாகப் பார்த்தாள். சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்குக் கலக்கமா? அவளுக்கு ஆச்சிரியமாக இருந்தது. விசயம் என்னவாக இருக்கக் கூடும்? அவளது மூளை வேகமாய் யோசிக்கத் தொடங்கியது. அப்போது பவன்ராம் வரவை அறிந்து வேகமாய் இருக்கையில் இருந்து எழுந்தான் சிம்மஹாத்ரி சத்யநாராயணா.

"சார் டிக்கெட்..." என்று பவன்ராம் பவ்யத்துடன் விமானப் பயணச்சீட்டை அவனிடம் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்ட சிம்மஹாத்ரி சத்யநாராயணா தங்கையிடம் திரும்பி,

"செல்லி, அண்ணய்யாவுக்கு ஒரு முக்கிய வேலை இருக்கிறது. நான் கிளம்பறேன். நீ பவன் கூட வீட்டுக்கு போ." என்று சொல்ல...

"என்னை விட அப்படி என்ன முக்கியமான வேலை இருக்கிறது அண்ணய்யா?" பூஜிதா முகத்தைச் சுருக்கி கொண்டு கேட்க... ரச்சிதாவின் பார்வையும் அதையே சொன்னது.

"நீயும் முக்கியம் தான் செல்லி. ஆனால் இது எமர்ஜென்சி..." அவன் தயக்கத்துடன் சொன்னான்.

"ச்சும்மா விளையாண்டு பார்த்தேன். நீங்க போயிட்டு வாங்க அண்ணய்யா. நான் பவன் அண்ணா கூடப் போயிக்கிறேன்." பூஜிதா அவனை வழியனுப்பிய அடுத்த நொடி அவன் அங்கிருந்து பறந்து இருந்தான்.

அடுத்த அரை மணி நேரத்தில் விமானத்தில் ஏறி அமர்ந்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை... தன்னவளுக்கு என்னவானதோ! என்று அவனது மனம் கிடந்து அடித்துக் கொண்டது.

'இப்படித் தவிப்பதற்கு நீ அவளை உன் கூடவே கூட்டிட்டு வந்திருக்கலாம்ல.' அவனது மனசாட்சி அவனைத் திட்டியது. அந்த நொடி அவனது மனக்கண்ணில் சோமசுந்தரம் முகம் மின்னி மறைந்தது.

'என் மகள் எனக்கு வேண்டும். என் மகள் உயிரோடு இருக்கணும்ன்னா... இனி நீ அவளைப் பார்க்க வராதே.' சோமசுந்தரம் கோபமும், வேதனையுமாய் அவனிடம் கையெடுத்து கும்பிட்டு இறைஞ்சியதை அவனால் மறக்க இயலுமா!

'மாமாகாரு, ஏன் இப்படிச் சொன்னீங்க? நான் என்ன அவ்வளவு கெட்டவனா?' அவரிடம் மானசீகமாகக் கேட்டவனின் விழிகள் இரண்டும் கலங்கியது.

'நீ பண்ணிய காரியம் எந்த ரகத்தில் சேர்ப்பது?' அவனது மனசாட்சி அவனைக் கண்டு கோபமாய்க் காறி துப்பியது.

"கடவுளே!" அவன் வாய்விட்டு வேதனையில் புலம்பினான்.

வலியும், வேதனையுமாய்ச் சிம்மஹாத்ரி சத்யநாராயணா தவித்து இருக்கையிலேயே விமானம் மதுரையை வந்தடைந்தது. அவன் முதல் ஆளாக எழுந்து விமானத்தை விட்டு வெளியில் வந்தான். விமானநிலையத்தில் சம்பிரதாயங்கள் முடிந்ததும் விரைந்து வெளியில் வந்தவன் அவனுக்காகக் காத்திருந்த காரிலேறினான். அடுத்த நொடி கார் மருத்துவமனை நோக்கி சீறிச் சென்றது. பதினைந்து நிமிடங்களில் கார் மருத்துவமனையின் முன் நின்றதும் அதிலிருந்து வேகமாக இறங்கியவன் தன்னவள் இருக்கும் அறையை நோக்கி சென்றான். சென்றான் என்பதை விட ஏறக்குறைய ஓடினான் என்பதே பொருத்தமாக இருக்கும்.

நள்ளிரவு நேரம் என்பதால் அதிக ஆட்கள் அங்கு இல்லை. அவனது ஆட்கள் மட்டுமே அங்கு இருந்தனர். சிலர் அவனது பாதுகாப்பிற்கு... சிலர் சுற்றிலும் நோட்டமிடுவதற்கு... எல்லாம் பவன்ராமின் ஏற்பாடு. இதே மருத்துவமனைக்கு அவன் சாதாரணமாக வந்து போன நாட்கள் அவனது கண்ணில் விரிந்தது. அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். ஆதிசக்தீஸ்வரி அனுமதிக்கப்பட்டு இருந்த அறையின் முன் நின்று கொண்டு அவன் கதவை தட்டினான். அவனது வரவினை எதிர்பார்த்தார் போன்று அடுத்த நொடி கதவு திறந்தது. அங்கு அவனைக் கண்டதும் காயத்ரி,

"அண்ணா..." என்று கலங்கிய குரலில் அழைத்தாள்.

"பயப்படாதேம்மா... சக்திக்கு ஒண்ணுமாகாது. நான் இருக்கேன்." என்றவன் அறைக்குள் நுழைந்தான்.

அங்குக் கட்டிலில் விழிகளை மூடி படுத்திருந்த ஆதிசக்தீஸ்வரியை கண்டு அவனது விழிகள் கலங்கியது. பட்டாம்பூச்சி போன்று மகிழ்ச்சியாய், குதூகலமாய் அங்கும் இங்கும் ஓடியாடி திரிந்து கொண்டிருந்தவளை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டானே! அவன் பாவி! இந்தப் பாவத்தைக் கங்கையில் மூழ்கினாலும் கரைக்க முடியாதே. புனிதமான துளசியை ராட்சசன் சூடி கொள்ள ஆசை கொள்ளலாமா? அவனால் நகர முடியாதபடி அவனது கால்கள் இரண்டிலும் கனமான இரும்பு குண்டுகளைக் கட்டி வைத்திருப்பது போல் பாரமாய் இருந்தது. அவனது நிலை கண்டு காயத்ரி நாசுக்காய் வெளியில் சென்று விட்டாள்.

அவன் ஆதிசக்தீஸ்வரி அருகே சென்று அமர்ந்தான். ஆனாலும் அவனது உடல் அவளைத் தொடவில்லை. அவன் நாகரீகமாக விலகி இருந்தான்.

"நா சின்னாரி, நா தல்லி..." அவனது உதடுகள் வலியுடன் முணுமுணுத்தது.

அவன் அவளைச் சின்னவளாகவும், உறவாகவும் தானே நினைத்து இருந்தான். எப்போது அந்த நினைவு மாறியது. அவன் ஏன் அப்படி நடந்து கொண்டான்? இந்த நொடி வரை சத்தியமாக அவனுக்குப் புரியவில்லை.

"ஏன் என்னைக் காதலிச்ச பொம்மாயி? உன் வயதென்ன? என் வயதென்ன? நீ தேவதை பெண்... நானோ ராட்சசன்... தேவதையான நீ இந்த ராட்சசனை காதலிக்கலாமா? இது சாத்தியமான்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா? கடைசியில் என்ன நடந்ததுன்னு பார்த்தியா? ராட்சசனாய் நான் உன் வாழ்க்கையை நாசமாக்கி விட்டேனே. இப்போ நான் தினமும் குற்றவுணர்வில் தவிச்சிட்டு இருக்கேன். எனக்கு எப்போ பாவ விமோசனம் கொடுக்கப் போற? சொல்லு பொம்மாயி." அவனது புலம்பல்கள் அனைத்தும் அவளது காதுகளில் விழவில்லை. அவள் நிம்மதியாக ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள்.

"என்னை மன்னிப்பியா ப்ரியசகி? எனக்கு இன்னொரு வாய்ப்பை கொடுப்பியா?" அவன் விழிநீர் நிரம்பிய விழிகளுடன் அவளைப் பார்த்துப் பாவமாகக் கேட்டான்.

"நீ மட்டும் எனக்கு இன்னொரு வாய்ப்பை கொடுத்து பார். நான் உன் காலடி செருப்பாய் இருக்கிறேன்." என்று சொன்னவன் உணர்ச்சி வேகத்தில் குனிந்து அவளது கரத்தில் முத்தமிட போனான். பின்பு சுதாரித்துக் கொண்டு அவளை விட்டு விலக்கியவன்,

"ம்ஹூம், உனக்குத் தெரியாமல் முத்தமிட கூடாது." என்று உணர்வில்லாது கிடந்தவளிடம் சொல்லி கொண்டான்.

விடிய விடிய சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆதிசக்தீஸ்வரியின் முகத்தினைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். எவ்வளவு நேரம் அவளது முகத்தினைப் பார்க்க சொன்னாலும் அவன் பார்த்துக் கொண்டே இருப்பான். அவனுக்கு அவளது முகம் தெவிட்டவே தெவிட்டாது. அவள் அவனை இரட்சிக்க வந்த தேவதை அல்லவா! புடவை கட்டி அடக்க ஒடுக்கமாய், மங்களகரமாய்த் தான் தேவதை இருக்கும் என்று யார் சொன்னது! நவநாகரீகமாகவும் இதோ ஆதிசக்தீஸ்வரி போலவும் தேவதை இருக்கக் கூடும் என்பதை அவளைக் கண்டு தெரிந்து கொள்ளலாம்.

மறுநாள் பொழுதும் இனிதாய் விடிந்தது. ஜன்னலில் திரைச்சீலை சரியாகப் போடப்படாததால் அதன் வழியே சூரியன் அறைக்குள் எட்டிப்பார்த்தான். அவ்வளவு நேரம் தன்னை மறந்து ஆதிசக்தீஸ்வரியை பார்த்துக் கொண்டிருந்த சிம்மஹாத்ரி சத்யநாராயணா இப்போது உணர்வு பெற்றவனாய் பரபரப்பாய் எழுந்து சென்று அவளது தலைப்பக்கமாய் வந்து அவள் மீது வெயில் படாதவாறு நின்று கொண்டான். அந்த நொடி அவனது மனக்கண்ணில் அவளை முதல் முறையாய் சந்தித்த கணம் வந்து போனது. அன்றும் இது போன்று தான் அவன் அவள் மீது வெயில் படாதவாறு வந்து நின்று அவளது நிம்மதியான தூக்கத்தினைத் தொடர செய்தான். இன்றும் அப்படியே... அதை நினைத்து அவனது உதடுகளில் புன்னகை அரும்பியது.

அவனுக்கு அவளது தலையைக் கோதி ஆறுதல் கொடுக்க வேண்டும் போலிருந்தது. எதையும் நினைத்தவுடன் செய்து முடிக்கும் எண்ணம் உடையவன், இன்று அவன் மிகவும் தயக்கத்துடன் அவள் அருகே தனது கரத்தினைக் கொண்டு சென்றான். அவனது கரம் அவளது தலையை மெல்ல வருடி விட்டது. அன்று அவள் அருகில் இருந்து ஆறுதல் சொல்ல முடியாது தவித்த மனதின் வேதனையை இன்று அவன் ஆற்றிக் கொண்டான். அவனுக்குத் தெரியும், அவனால் மட்டுமே அவளுக்கு ஆறுதல் கொடுக்க முடியும் என்று...

அவளைப் பொறுத்தவரையில் காயமும் அவனே, மருந்தும் அவனே!

ஆதிசக்தீஸ்வரி அவனது செய்கையை உணர்ந்தாளோ! இல்லை அவனது ஸ்பரிசத்தை உணர்ந்தாளோ! அவளது கருவிழிகள் அங்கும் இங்கும் சுழன்றது. அவளது இதழ்களில் புன்னகை தோன்றியது. அதைக் கண்டவன் ஆனந்த கண்ணீருடன் அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்தான்.

"இப்பவும் நீ என்னை உணர்கிறாயா பொம்மாயி? என் தொடுகையை உணர்கிறாயா?" அவன் மகிழ்ச்சியுடன் இமை மூடி இருந்தவளிடம் கேட்டான்.

"சிம்ஹாஆஆஆ..." அவளது இதழ்கள் அவனது நாமத்தை மெல்ல முணுமுணுத்தது.

அவள் அவனது பெயரை 'சிம்ஹாஆஆஆ' என்று உச்சரித்ததில் அவன் 'ஹா' என்று உணர்வு பேரலையில் சிக்கி கொண்டு தவித்தான். அவளது 'ஹா' வார்த்தை உச்சரிப்பு அவனுள் பெரும் மோகத்தையும், தாபத்தையும் தூண்டிவிட்டது. அவனுக்கு இது புது உணர்வு! அவளுக்காக மட்டுமே அவனது உணர்வுகள் உயிர்பெறும் என்பதை அவன் உணர்ந்திட மறந்தானோ! உணரும் போது தான் அவன் தனது காதலை உணர்வான்!

"ப்ரியசகி..." அவன் தவிப்புடன் அவளைப் பார்த்தான். அவளைக் கட்டியணைக்கச் சொல்லி அவனது கரங்கள் பரபரத்தது. அவளை அள்ளியெடுத்து முத்தாட சொல்லி அவனது மனம் அடங்காது அலைபாய்ந்தது. இருந்தும் அவனது மனதில் ஏனோ ஒரு தயக்கம்!

அப்போது அறை கதவு தட்டப்பட்டது. அதற்காக ஒன்றும் அவன் பயப்படவில்லை. மாறாகத் தைரியமாக எதிர்கொள்ள எண்ணி கதவை நோக்கி சென்றான். எத்தனை நாட்கள் தான் இப்படிப் போராடி கொண்டிருப்பது... சண்டை வந்தாலும் பரவாயில்லை... அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விட வேண்டும் போலிருந்தது அவனுக்கு... அவன் கதவை திறக்க... அங்கு மருத்துவமனை டீன் நின்றிருந்தார். அவனுக்கு அவரை நன்கு அடையாளம் தெரிந்தது. அவர் சோமசுந்தரத்தின் நண்பராயிற்றே!

"விசாகப்பட்டினம் சமஸ்தானத்துப் பிரின்ஸ் வந்திருக்கிறதா சொன்னாங்களே." டீன் அவனிடம் கேட்டார்.

"அப்படி யாரும் இங்கே இல்லையே." அவன் மறுப்பாய் தலையசைத்தான்.

"ஓ, சாரி..." என்றவர் பிறகு யோசித்தவராய், "நீங்க எதுக்கு ஆதியை பார்க்க வந்திருக்கீங்க?" என்று கேட்க...

"டாக்டர், என்னை அடையாளம் தெரியலையா? நான் தான் சத்யா." என்று அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள...

"அடடே, சத்யாவா? என்னப்பா இது உன் தோற்றத்தில் இவ்வளவு பெரிய மாற்றம். ஆனால் இந்த மாற்றம் கூட நல்லா தான் இருக்கு." என்று புன்னகையுடன் சொன்னவர் பின்பு தயக்கமாய், "நீ இங்கே வந்தது தெரிந்தால் சோமு ரொம்ப வருத்தப்படுவான். நீயும் எனக்கு முக்கியம் தான் சத்யா. ஆனால் எனக்குச் சோமு மிகவும் நெருங்கிய நண்பன்." என்று சொல்ல...

"நான் இப்போ கிளம்பிருவேன்." என்றவன் பின்பு அவரது கரத்தினைப் பற்றி, "அன்று போல் இன்றும் உங்களது நண்பர் மகளைக் காப்பாற்றிக் கொடுத்து விட்டேன். உணர்வில்லாது படுத்திருந்தவளுக்கு உணர்வு வந்திருக்கிறது. நீங்க சக்தியை செக் பண்ணுங்க." என்று கூற...

அவர் வியப்புடன் ஆதிசக்தீஸ்வரியை பரிசோதிக்கச் சென்றார். அவளது கருவிழிகளில் தெரிந்த அசைவினை கண்டு அவருக்குப் பெரும் வியப்பு.

"உன்னிடம் ஏதோ இருக்கிறது சத்யா." அவர் திரும்பி பார்த்து அவனைக் கண்டு சொல்ல...

"அவளுக்கான மருந்து நான் மட்டுமே..." என்று கர்வத்துடன் சொன்னவன் தான் அவளுக்கு அதிகக் காயத்தைக் கொடுத்தவன் என்பது தான் இங்கு விந்தையிலும் விந்தை!

"சீக்கிரமே மயக்கம் தெளிந்து விடும்ன்னு நினைக்கிறேன்." என்று சொன்னவர் அவனது தோளில் தட்டினார்.

"டாக்டர், நான் வந்ததை மாமாகாரு கிட்ட சொல்ல வேண்டாம்."

"சொல்லலை..." என்றவர் வெளியில் சென்று விட்டார்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா மீண்டும் ஆதிசக்தீஸ்வரி அருகே வந்தவன் அவளது தலையை வருடி விட்டான்.

"இந்தச் சிம்ஹாவோட சக்தியே நீதான்டி... சீக்கிரமே எழுந்து வா... உன்னைச் சந்திக்க ஆவலாகக் காத்திருக்கிறேன்." என்று சொல்லியவன் தனது சட்டைப்பையில் இருந்த கவரினை எடுத்து அவள் அருகில் வைத்து விட்டு வெளியில் வந்துவிட்டான். அவன் இங்கே வருவதற்குள் அவனது ஆட்கள் இந்தக் கவரினை தயார் செய்திருந்தனர்.

"நீ கொண்டதோ காதல்,
நான் கொண்டதோ ஆயுள்பந்தம்,
காதலுடன் கூடிய ஆயுள்பந்தம்
நம் வாழ்க்கையை வசந்தமாக்கிட
பக்கம் வா என்னருகில்,
வாழ வா என்னோடு...!"

நீயாகும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உயிர் : 4

"அண்ணா, ரொம்பத் தேங்க்ஸ்..." வெளியில் வந்த சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை கண்டு காயத்ரி இரு கரங்களையும் கூப்பிட்டபடி தனது நன்றியை சொல்ல...

"நன்றி சொல்லி என்னை அந்நியப்படுத்தி விடாதே காயூம்மா." என்றவனது குரல் கரகரத்து ஒலித்தது.

"நீங்க எப்படி இருக்கீங்க அண்ணா?" காயத்ரி அவனது நலன் விசாரித்தாள்.

"இருக்கேன்ம்மா..." என்றவனது விழிகளில் பிரதிபலித்த விரக்தியை கண்டு அவளுக்கு வருத்தமாக இருந்தது.

"எல்லாம் சரியாகும் அண்ணா." அவள் ஆறுதல் அளிக்க...

"அந்த நம்பிக்கையில் தான் உயிரோடு இருக்கிறேன்." என்றவன் அவளைக் கண்டு புன்னகை செய்தான்.

"இவ்வளவு அன்பை வச்சிக்கிட்டு ஏன் இந்தப் பிரிவு அண்ணா? அத்தைக்காக யோசிக்கிறீங்களா?"

"சக்தியை என்னோடு வலுக்கட்டாயமா கூட்டிட்டு போக எனக்கு ஒரு நிமிசம் ஆகாது. யாரும் என்னைத் தடுக்க முடியாது. ஆனால் இங்கே தடையா இருப்பது, சக்தி... அவள் என் கூட வருவாளான்னு தெரியலை. அவள் முழுமனசோடு என் கூட வரணும்." என்றவனின் குரலில் வேதனை எட்டிப்பார்த்தது. அப்படியொரு காலம் வருமா? என்று அவனுக்கும் தெரியவில்லை.

"அது எப்படி நடக்கும் அண்ணா? அவள் தான் எல்லாவற்றையும் மறந்து விட்டாளே." காயத்ரி கவலையுடன் கேட்டாள்.

"அவள் என்னை மட்டும் தான் மறந்தாள். ஆனால் என்னை மட்டும் தான் உணர்கிறாள். என்னே ஒரு விசித்திரம்." தன்னவளின் மனநிலை எண்ணி அவனுக்கு விசித்திரமாக இருந்தது.

"அத்தைகாரு, மாமாகாரு எப்படி இருக்காங்க? கதிர் எப்படி இருக்கான்?"

"அத்தை, மாமா உள்ளுக்குள் உடைந்து போயிருக்காங்க. ஆனால் வெளியில் எதையும் காட்டி கொள்வது இல்லை." என்றவள் கணவனைப் பற்றிச் சொல்லாது நிறுத்தினாள்.

"உன்னைப் போலவா?" அவன் புன்னகையுடன் வினவ...

"அண்ணா?" அவள் திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.

"எல்லாம் எனக்குத் தெரியும்மா. கதிர் முழுநேரமும் குடிக்கிறது எனக்குத் தெரியும். அத்தோடு தொழிலில் ஏற்பட்டு இருக்கும் நஷ்டமும்."

"இதை உருவாக்க நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டீங்க? ஆனால் அவர் எல்லாத்தையும் நொடியில் கலைச்சிட்டாரேண்ணா? எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. நீங்க பழையபடி இங்கே வாங்கண்ணா... நீங்க வந்தால் மட்டும் தான் எல்லாம் சரியாகும்."

"நான் எப்படிம்மா இங்கே வர்றது?"

"அத்தை ஏதாவது சொல்வாங்கன்னு யோசிக்கிறீங்களா?"

"ப்ச், இல்லை காயூ. அவங்களைப் பத்தி தெரிஞ்சது தானே. ஆனால் மாமா...? அவர் என்னை இங்கே வரவே கூடாதுன்னு சொல்லிட்டார். சக்தியை பார்க்கவும் கூடாதுன்னு சொல்லிட்டார்." அவனது முகத்தில் வேதனை தெரிந்தது.

"இப்படியே ரெண்டு பேரும் பார்க்காம, பேசாம எப்படிச் சேர முடியும்? அவளுக்கு உங்களை ஞாபகம் இருந்தாலாவது ஏதாவது செய்யலாம். ஆனால் இப்போ சுத்தம்..." காயத்ரி தலையில் கை வைத்தாள்.

"அதுக்குத் தான் ஒரு ஏற்பாடு பண்ணி இருக்கேன். நான் தானே இங்கே வர கூடாது. சக்தி என்னைத் தேடி வரலாம் இல்லையா?" அவன் சொன்னது கேட்டு காயத்ரியின் முகம் மலர்ந்தது.

"உள்ளே அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் இருக்கு. சக்தி முழிச்சதும் கொடுத்துரு."

"சூப்பர் அண்ணா..." என்று சந்தோசத்தில் கூவிய காயத்ரி பின்பு முகம் வாடியவளாய், "அவளுக்குத் தான் உங்களைத் தெரியாதே." என்று சோகமாய்க் கூற...

"எனக்கு எல்லாம் தெரியும் தானே. முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியது தான்." அவன் அவளைக் கண்டு புன்னகைத்தான்.

"நீங்க எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும்." என்றவள் நிம்மதியானாள்.

"உன் நாத்தானாரை மூட்டை கட்டி அனுப்பும் வழியைப் பார். நான் வர்றேன்ம்மா..." என்றவன் நடக்க ஆரம்பிக்க...

"அண்ணா, ஒழு நிமிசம்..." என்ற காயத்ரி அவன் அருகில் வந்தாள்.

"என்னம்மா?"

"நீங்க தான் அந்த ப்ரின்ஸா?" அவள் சந்தேகமாய்க் கேட்க...

"இல்லைம்மா, நான் சாமானியன்..." என்றுவிட்டு அவளது பதிலை எதிர்பாராது நடக்க ஆரம்பித்தான்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா வெளியில் வரும் போது அங்குச் சோமசுந்தரம் தலைமை மருத்துவரிடம் பேசி கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் அவர் காணாதவாறு அவன் சற்று விலகி சென்றான். அங்கிருந்த படிகளில் இறங்கியவன் பின்பு திரும்பி சோமசுந்தரத்தை பார்த்தான். எப்படியிருந்த மனிதர்! இப்போது மெலிந்து போய் எப்படியோ இருந்தார். கவலை போலும்... இருக்கத்தானே செய்யும்.

'மாமாகாரு, எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்களேன். உங்க பொண்ணையும், உங்க தொழிலையும் சரியாக்கி காட்டுறேன்.' அவனால் மனதோடு மட்டும் தான் புலம்ப முடிந்தது.

அவன் வேதனையோடு திரும்ப நினைத்த போது சோமசுந்தரத்தின் நிழல் தரையில் விழுந்ததைப் பார்த்தவன் அங்கே சென்று அவரது நிழலை தொட்டு வணங்கினான். அவனது பாதுகாவலர்கள் ஆங்காங்கே நின்று கொண்டு அவனை வியப்பாய் பார்த்தனர். அவர்களுக்கு எங்கே தெரியும், அவர் அவனுக்கு உயிர் கொடுத்தவர், அவனது இன்னொரு தந்தை என்று... இல்லை இல்லை தந்தை உறவை விடப் பெரிய உறவு என்று ஒன்று இருந்தால்... அது தான் அவர்... அவன் அதிகம் மதிக்கும் மாமாவை விட மிகவும் மதிப்புக்குரியவர் சோமசுந்தரம். எப்பேர்பட்ட பந்தம் இருவருக்கும் இடையில் இருந்தது. அதைக் கெடுத்து கொண்டவன் அவன் தானே!

"அவன் யாரோ, எவரோ? அநாதை பயலோடு உறவாடுவதை வாசலோடு நிறுத்திக்கோங்க. எதுக்கு வீட்டுக்குள்ளே கூட்டிட்டு வர்றீங்க?" ராஜராஜேஸ்வரி தேள் கொடுக்காய் கொட்டிய போதும் சோமசுந்தரம் அவனைக் கைவிட்டது இல்லை. அவர் அவனைத் தன்னருகிலேயே வைத்துக் கொண்டார். அதற்கு அவன் செய்த கைம்மாறு தான் சாதாரண உணவு விடுதியாக இருந்த அவரது ஒரு உணவு விடுதியை பல கிளைகளாக இந்த மதுரையில் பரந்து விரிய செய்தது. அது மட்டுமா? நட்சத்திர அந்தஸ்து கொண்ட இரு உணவு விடுதிகளும் அதில் அடக்கம். எல்லாம் அவன் அவரிடம் வந்த பிறகே... சுருக்கமாகச் சொல்ல போனால், எல்லாம் அவனது உழைப்பே... அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக அவன் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு வெறும் கையோடு வெளியில் வந்தான்.

எல்லாவற்றையும் எண்ணி பார்த்தவன் கலங்கிய தனது விழிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கு நின்றிருந்த தனது காரிலேறினான். அப்போது பால் வாங்குவதற்காக அங்கு வந்த காயத்ரி சிம்மஹாத்ரி சத்யநாராயணா விலையுயர்ந்த காரிலேறி செல்வதைக் கண்டு யோசனையானாள்.

"என்னம்மா, இங்கே நின்னுட்டு இருக்க? சக்திக்கு உணர்வு திரும்பியிருச்சுன்னு அருள் சொல்றான். சீக்கிரமே கண் முழித்து விடுவாளாமே." சோமசுந்தரம் மகிழ்ச்சியோடு மருமகளிடம் சொல்ல... அவரது மகிழ்ச்சி அவளையும் தொற்றிக் கொண்டது.

"ஆமாம் மாமா... நீங்க போய் ஆதியை பாருங்க. நான் அவளுக்குப் பால் வாங்கிட்டு வந்திர்றேன்."

"சரிம்மா..." என்ற சோமசுந்தரம் மகளின் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

அவர் மகளின் அறைக்குள் நுழைந்த போது அவள் வாடிய கொடி போன்று ஓய்ந்து போய்ப் படுத்திருந்தாள். அதைக் கண்டு அவர் சொல்லொண்ணா வேதனை அடைந்தார். மகளின் அருகில் சென்று அமர்ந்தவர் அவளது கையைப் பிடித்துக் கொண்டார்.

"பாம்புக்கு பால் வார்த்து விட்டேனே. கடைசியில் அது என்னைக் கொத்தாது. என் மகளைக் கொத்தி குற்றுயிராக்கி விட்டதே." அவர் வேதனையுடன் புலம்பினார்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை அவர் எந்தளவிற்கு நம்பினார். இறுதி வரை அவர் அவன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் கைவிட வில்லையே! அப்படிப்பட்ட நம்பிக்கையும் சிதைந்து போகும் நாளும் வந்தது. அவர் அவனை வெறுத்து ஒதுக்கும் நாளும் வந்தது. அதை நினைத்த நொடி அவர் தன்னைத் தானே வெறுத்தார்.

"ம்..." மகளின் மெல்லிய முனங்கலில் தன்னுணர்வு பெற்றவர், "ஆதி..." என்று கண்ணீர் மல்க அவளை அழைத்தார்.

ஆதிசக்தீஸ்வரி மெல்ல தனது விழிகளைத் திறந்தாள். தன் முன்னிருந்த தந்தையின் முகத்தைக் கூடக் கவனியாது அவள் நாலாப்புறமும் தனது விழிகளைச் சுழற்றினாள்.

"என்னம்மா, எதுவும் வேணுமா?" சோமசுந்தரம் அன்போடு கேட்க... அவளோ தந்தை அழைத்ததைக் கவனியாது அவளையும் அறியாது காற்றில் மிச்சமிருந்த தன்னவனின் வாசத்தில் அவனைத் தேடி கொண்டிருந்தாள்.

"ஆதி..." மீண்டும் அவர் அழைக்க... அதில் தனது தேடலை நிறுத்தியவள் அவரைக் கண்டு, "அப்பா..." என்றழைத்து அழ ஆரம்பித்தாள்.

"ஆதி, நீ எவ்வளவு தைரியமான பொண்ணு. நீ இப்படி அழலாமா?" என்று அவர் செல்லமாய் அதட்டியபடி மகளின் கண்ணீரை துடைத்தார். தனது நெஞ்சினை கசக்கி பிழியும் வேதனையை வெளியில் சொல்ல முடியாது அவள் அழுதாள். ஏனிந்த வேதனை என்று அவளுக்கே தெரியவில்லை.

"ஆதி, எழுந்துட்டியா?" என்றபடி காயத்ரி உள்ளே வந்தாள். ஆதிசக்தீஸ்வரி அழுது கொண்டிருப்பதைக் கண்டு பதறி போய் அவள் அருகில் வந்தவள்,

"உனக்கு ஒண்ணும் இல்லை. லேசான மயக்கம் தான்." என்று அவளின் கண்ணைத் துடைத்து தேற்றியவள், "முதலில் பாலை குடி... எல்லாம் சரியாகும்." என்றவள் ஆதிசக்தீஸ்வரியை அமர வைத்து பாலை ஊற்றி கொடுத்தாள். ஆதிசக்தீஸ்வரி பொங்கி வரும் கண்ணீரை அடக்கி கொண்டு பாலை பருகினாள்.

"அம்மா எங்கேப்பா?" ஆதிசக்தீஸ்வரி கேட்க...

"உனக்காக மீனாட்சி அம்மனுக்கு ஸ்பெசல் பூஜைக்கு ஏற்பாடு பண்ணி இருக்கிறாள். அது முடிச்சிட்டு நேரே இங்கே வந்துவிடுவாள்." சோமசுந்தரம் சொல்ல... அவளைத் தலையை ஆட்டி கொண்டாள்.

அன்றே ஆதிசக்தீஸ்வரியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். ஆதிசக்தீஸ்வரி தனியே இருக்கும் போது காயத்ரி அவளது கையில் சிம்மஹாத்ரி சத்யநாராயணா கொடுத்த கவரை வைத்தாள். மருத்துவமனையில் காயத்ரி அந்தக் கவரை யார் கண்ணிலும் படாது ஒளித்து வைத்து கொண்டாள்,

"என்ன அண்ணி இது?"

"தெரியலை... பிரிச்சு பார்." காயத்ரி சொன்னதும் பிரித்துப் பார்த்தவள் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் துள்ளினாள்.

"எனக்கு வேலை கிடைச்சு இருக்கு." ஆதிசக்தீஸ்வரி மகிழ்ச்சியுடன் சொல்ல...

"வாழ்த்துகள் ஆதி..." காயத்ரி அவளை அணைத்து கொண்டாள்.

ஆதிசக்தீஸ்வரி பெற்றோரிடம் விசயத்தைச் சொல்ல... சோமசுந்தரம் சரியென்று சம்மதம் தெரிவித்து விட்டார். வெளியுலகத்தைப் பார்த்தாலாவது மகளது உடல்நலனில் மாற்றம் வராதா என்கிற நப்பாசை தான். ஆனால் ராஜராஜேஸ்வரி அதற்குச் சம்மதிக்க மறுத்தார்.

"என் பொண்ணு அடுத்தவன் கிட்ட கை கட்டி வேலை பார்ப்பதா? முடியவே முடியாது." அவர் நிர்தாட்சண்யமாய் மறுத்தார்.

"அம்மா, நான் வேலைக்குப் போயே தீருவேன்." ஆதிசக்தீஸ்வரியோ பிடிவாதம் பிடித்தாள்.

"ராஜி, ஆதி சொல்றது சரி தானே." சோமசுந்தரம் மனைவிக்கு எடுத்து சொல்ல...

"சரி, உங்க விருப்பத்துக்கே வர்றேன். ஆனால் ஆதி கல்யாணம் பண்ணிட்டு அவள் புருசன் வீட்டில் இருந்து வேலைக்குப் போகட்டும்." என்று ராஜராஜேஸ்வரி சொல்லவும்... ஆதிசக்தீஸ்வரி கோபமாய் அன்னையை முறைத்து பார்த்தாள்.

"எனக்குக் கல்யாணம் வேண்டாம்." அவள் இறுகி போன குரலில் சொல்ல... எல்லோரும் திகைப்புடன் அவளைப் பார்த்தனர்.

"என்ன சொன்ன?" ராஜராஜேஸ்வரி அவளை அதட்ட...

"நீங்க சொன்னீங்கன்னு, உங்க மனசு கஷ்டப்படக் கூடாதேன்னு தான் நேத்து நான் அலங்காரம் பண்ணிட்டு வந்தேன். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கல்யாணத்துக்குச் சம்மதிச்சு இருந்தாலும்... நான் வேண்டாம்ன்னு தான் சொல்லியிருப்பேன். எனக்குக் கல்யாணம் வேண்டாம்." அவள் முடிவாய் உறுதியாய் சொன்னாள்.

"அவளை அவள் போக்கில் விட்டுப்பிடி ராஜி. காலம் மாறும் போது, நம்ம ஆதி மனசும் மாறும்." சோமசுந்தரம் மனைவியிடம் எடுத்து சொன்னார். அதைக் கேட்ட ராஜராஜேஸ்வரி சற்று யோசித்தார். பின்பு மகள் புறம் திரும்பி,

"எங்கே வேலை?" என்று கேட்டார்.

"விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில்..." ஆதிசக்தீஸ்வரி அந்த நட்சத்திர விடுதியின் பெயரை சொன்னாள். அது உலகமெங்கும் பரந்து பரவி இருக்கும் பெரிய நட்சத்திர விடுதி...

"அடடே, அங்கேவா? உனக்கு ஒரு நல்ல சான்ஸ்." சோமசுந்தரம் பாராட்டுதலாய் மகளைப் பார்த்தார்.

"என்ன நல்ல சான்ஸ்? பொம்பள புள்ளை ஹோட்டல்ல போய் வேலை பார்க்கிறதா? அதுவும் இந்த ராஜராஜேஸ்வரி மகள் அப்படிப்பட்ட வேலைக்குப் போவதா?" ராஜராஜேஸ்வரி மறுத்தார்.

"ஹோட்டல்ன்னா உனக்கு இளக்காரமா போச்சா? நாமளும் ஹோட்டல் தான் வச்சிருக்கோம். அதிலும் பெண்கள் வேலை பார்க்கிறாங்க. அதை முதல்ல எண்ணி பார்." சோமசுந்தரம் கடுப்புடன் சொன்னார்.

"அவங்களும், என் பொண்ணும் ஒண்ணா?" ராஜராஜேஸ்வரி கர்வத்துடன் சொல்ல...
 

ஶ்ரீகலா

Administrator
"இப்போ நாம சீரோவை நோக்கி போய்க்கிட்டு இருக்கோம் ராஜி. எப்போ திவால் நிலைமைக்குப் போகப் போறோமோ தெரியலை." சோமசுந்தரம் கவலையுடன் சொல்ல...

"அதெல்லாம் என் மகன் பார்த்து கொள்வான்." அப்போதும் அவரது கர்வம் சிறிதும் குறையவில்லை.

"யார் உன் மகனா?" என்ற சோமசுந்தரம் அங்கே வாயிலில் மது போதையில் தள்ளாடி கொண்டிருந்த மகனை சுட்டிக்காட்டி கேலியாய் கேட்டார். மகனது நிலை கண்டதும் ராஜராஜேஸ்வரி முகத்தைச் சுளித்தார்.

"காயூ, உன் புருசனை ரூமுக்கு அழைச்சிட்டு போ." ராஜராஜேஸ்வரி மருமகளை ஏவினார். காயத்ரி கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு கணவனை அழைத்துக் கொண்டு தங்களது அறைக்குச் சென்றாள்,

"இதுக்காக எல்லாம் ஆதியை வேலைக்கு அனுப்ப முடியாது." அப்போதும் ராஜராஜேஸ்வரி மறுக்க...

"இப்படியே போனால் நம்ம பிசினசை நாம இழுத்து மூட வேண்டியது தான்." என்ற கணவரை ராஜராஜேஸ்வரி முறைத்தார்.

"நெருப்புன்னா வாய் வெந்து விடாது ராஜி. ஆதி வேலைக்குப் போறதை டிரைனிங் பீரியட்ன்னு நினைச்சுக்கோ. ஆறு மாதங்கள் வேலை பார்க்கட்டும். அங்கே ஆதி பிசினஸ் நுணுக்கங்களைக் கத்துக்கிடட்டும். அதுக்குப் பிறகு நாம் அவள் கையில் பிசினசை கொடுத்து விடலாம்."

"பெண்ணிடமா?" ராஜராஜேஸ்வரி முகத்தைச் சுளித்தார்.

"ஆமாம், என் பெண்ணிடம் தான். இதில் நான் உன் கருத்தை ஏற்க போவது இல்லை." சோமசுந்தரம் உறுதியான குரலில் கூற...

"நீங்க எப்போ என் பேச்சை கேட்டு இருக்கீங்க?" என்று அவர் கடுகடுத்து விட்டு உள்ளே சென்றுவிட...

சோமசுந்தரம் மகளைக் கனிவுடன் பார்த்தார். தந்தையின் பார்வையை உணர்ந்து ஆதிசக்தீஸ்வரி எழுந்து வந்து அவர் அருகில் அமர்ந்து அவரது தோளில் தலைசாய்த்து கொண்டாள்.

"அப்பா இருக்கேன்ம்மா... உனக்கு விருப்பப்பட்டதைச் செய்." அவர் மகளது கன்னத்தை வருடி சொல்ல...

"தேங்க்ஸ்ப்பா..." என்றவள் எழுந்து தனது அறைக்குச் சென்றாள்.

ஆதிசக்தீஸ்வரி தனது அறைக்குள் நுழைந்து கட்டிலில் அமர்ந்தவள் தனது கையிலிருந்த கடிதத்தைப் பார்த்தாள். அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை. எவ்வளவு பெரிய நட்சத்திர விடுதி! அதில் அவளுக்கு வேலை கிடைத்து இருக்கிறது. அவள் விழி மூடி சந்தோசத்தில் திளைத்து கொண்டிருந்தாள். அப்போது அவளது காதுகளில் ஒரு குரல் ஒலித்தது. 'நீ முதலில் எழுதி போடு சக்தி. அங்கே உனக்குக் கட்டாயம் வேலை கிடைக்கும். அதுக்கு நான் கியாரண்ட்டி.' அந்தக் குரல் அவளை உற்சாகமூட்டியது. அந்தக் குரலை கேட்டதும் அவளது உடலில் பரபரப்பு, மனதில் சந்தோசம் ஒருங்கே தோன்றுவதை அவள் உணர்ந்தே இருந்தாள். அது யாருடைய குரல்? அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவளது அலைப்பேசி அழைத்தது. அவளது அக்கா ஜெகதீஸ்வரி அழைத்துக் கொண்டிருந்தாள். ஆதிசக்தீஸ்வரி விருப்பம் இல்லாது அழைப்பை உயிர்ப்பித்துக் காதில் வைத்தாள்.

"எப்படியிருக்க ஆதி? உனக்கு உடம்பு முடியலைன்னு அம்மா சொன்னாங்க? இப்போ ஓகேவா?" என்று ஜெகதீஸ்வரி அக்கறையாய் கேள்வி கேட்க...

"ம்..." என்று மட்டும் சொன்னாள் ஆதிசக்தீஸ்வரி. உடன்பிறந்த அக்காவிடம் கூட உற்சாகமாய்ப் பேச முடியாது அவளைத் தடுப்பது எதுவோ! அது அவளுக்கே தெரியவில்லை. ஏனோ உடன்பிறந்தவளிடம் ஒரு ஒவ்வாத தன்மை.

"உடம்பை பார்த்துக்கோ." அக்கா சொல்லவும் பதிலுக்கு,

"நீயும் உடம்பை பார்த்துக்கோ." என்று அவள் சம்பிரதாயமாகச் சொல்ல...

"எங்கே ஆதி, மசக்கை படுத்தி எடுக்கு." அக்கா சலிப்பாகச் சொல்ல... அதைக் கேட்க பிடிக்காதவளாய் அவள் அழைப்பை துண்டித்தாள்.

ஆதிசக்தீஸ்வரி தன்னையும் அறியாது தனது வயிற்றினை இறுக கட்டி கொண்டு அமர்ந்து இருந்தாள். அப்போது அவளது அடிவயிற்றில் சுருக்கென்று ஒரு வலி தோன்றியது. மாதாந்திர வலி என்பதை உணர்ந்தவள் எழுந்து தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு நுழைந்தாள். சில நிமிடங்களில் வெளியில் வந்தவளின் முகம் இருண்டு இருந்தது. இப்போது எல்லாம் இப்படித்தான்... மாதாந்திர பிரச்சினை வரும் போது எல்லாம் அவளது மனம் நிலையில்லாது தவிக்கிறது. ஏன்? என்பது மட்டும் அவளுக்குப் புரியவே இல்லை. கட்டிலில் வந்து படுத்தவள் அப்படியே சுருண்டு கொண்டாள்.

**************************

ராணியம்மா காபி அருந்தி கொண்டிருக்க... அவரை நோக்கி ரச்சிதா அங்கு வந்தாள். அண்ணன் மகளைக் கண்டதும் புன்னகைத்தவர்,

"குட்மார்னிங் ரச்சி... வா, காபி குடி..." என்று கூற...

"குட்மார்னிங் அத்தை." என்றவள் அவர் அருகில் அமர்ந்து காபியை கோப்பையில் ஊற்றினாள்.

"ஜெய்க்கும், உனக்கும் இடையில் ஏதாவது பிரச்சினையா?" என்று அவர் கேட்க...

"எஸ், பிரேக்கப் ஆகிருச்சு." என்று சாதாரணமாகச் சொன்ன ரச்சிதா காபியை உறிஞ்ச தொடங்கினாள்.

"என்னம்மா சொல்ற?" ராணியம்மா திகைத்துப் போனார்.

"பிரேக்கப் எல்லாம் இந்தக் காலத்தில் சகஜம் அத்தை." ரச்சிதா தோள்களைக் குலுக்கினாள்.

"கல்யாணம் என்பது சின்னப் பிள்ளைகள் விளையாட்டு இல்லை ரச்சிதா." ராணியம்மா ராணி மாதிரி கம்பீர குரலில் சொல்ல...

"எங்களுக்கு இன்னமும் கல்யாணம் நடக்கவே இல்லையே அத்தை." ரச்சிதா சளைக்காது பதில் கொடுத்தாள்.

"உனக்கும், ஜெய்க்கும் தான் கல்யாணம்ன்னு நான் முடிவு பண்ணிட்டேன்."

"நீங்க முடிவு பண்ணினால் நான் ஒன்றும் பண்ண முடியாது." ரச்சிதா காலி கோப்பையை வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள். ராணியம்மா ரச்சிதாவை யோசனையுடன் பார்த்தார். ரச்சிதாவின் பார்வை சிம்மஹாத்ரி சத்யநாராயணா மீது விழுகிறதோ என்கிற சந்தேகம் அவருள் எழுந்தது.

ஜெய்ப்ரகாஷ் அப்போது தனது நிறுவனத்திற்குச் செல்வதற்கு வேண்டி கிளம்பி அங்கு வந்தான். அப்போது எதிரே வந்த ரச்சிதாவை கண்டு அவன் முகத்தைச் சுளித்தான். அவளும் அப்படியே... இவர்கள் தான் முன்பொரு காலத்தில் காதலித்தார்கள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். காதல் என்பதற்கான அர்த்தம் இவர்களைப் பொறுத்தவரையில் வேறு... ஜெய்ப்ரகாஷ் ரச்சிதாவை கண்டு கொள்ளாது சென்றுவிட... அவளும் அசால்ட்டாய் தோள்களைக் குலுக்கி கொண்டு சென்று விட்டாள்.

ஜெய்ப்ரகாஷ் அலுவலக அறையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது உதய்ப்ரகாஷ் கதவை தட்டி அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தான். தம்பியை கண்டதும் அண்ணன் முகம் கடுகடுவென்றானது.

"டென்டர் விசயம் கான்ஃபிடன்ஸ் தானே. இல்லை உன் பாசமான அண்ணய்யாவுக்குத் தாரைவார்த்து கொடுக்க முடிவு பண்ணிட்டியா?"

"அப்போ நீ என் பாசமான அண்ணய்யா இல்லையா?" உதய்ப்ரகாஷ் கேலி குரலில் கேட்டபடி அவன் முன் வந்தமர்ந்தான்.

"வக்கணையாய் மட்டும் பேசு. ஆனால் காரியத்தில் கோட்டை விடு." ஜெய்ப்ரகாஷ் கடுப்புடன் சொல்ல...

"நான் கோட்டை விடலை. சத்யா அண்ணய்யா புத்திசாலி. அதான் எல்லாக் கோட்டையிலும் அவங்க கொடி பறக்குது." உதய்ப்ரகாஷ் புன்னகையுடன் சொல்ல...

"உனக்கு அவனைப் பிடிக்கிறது என்றால்... அது உன்னோடு வைத்து கொள். இப்போ வேலை நேரத்தில் எதுக்கு வந்த?" ஜெய்ப்ரகாஷ் தம்பியிடம் கேட்டபடி கணினி திரையைப் பார்த்தான்.

"செலவுக்குப் பணம் வேணும்." உதய்ப்ரகாஷ் கேட்கவும்...

"எதுக்கு?" ஜெய்ப்ரகாஷ் அவனை ஊடுருவது போல் பார்த்தான்.

"ஜெகாவுக்குக் கிப்ட் வாங்கணும்."

"தினமும் ஏதாவது கிப்ட் கொடுத்தே ஆகணுமா?"

"அது வந்துண்ணய்யா..." மேலே பேச போன உதய்ப்ரகாஷை கை நீட்டி தடுத்தவன்,

"உன் புராணம் எனக்கு வேண்டாம். உன் அக்கவுண்ட்ல பணம் போட சொல்றேன்." என்று சொல்ல...

"தேங்க்ஸ்ண்ணய்யா..." உதய்ப்ரகாஷ் வாயெல்லாம் பல்லாக நன்றி கூறியவன் வெளியேறி விட்டான்.

தம்பி சென்றதும் ஜெய்ப்ரகாஷ் எரிச்சலுடன் அமர்ந்து இருந்தான். 'இந்தப் பெண்களுக்குக் கிப்ட், மேக்கப் இதைத் தவிர வேறு எதுவும் தெரியாதா?' அவனுக்குச் சலிப்பாக இருந்தது. அவன் பார்த்த வரை பெண்கள் அப்படித்தான் இருந்தார்கள். அப்போது அவனது அலைப்பேசி அடித்தது. அதை எடுத்துக் காதில் வைத்தவன் மறுமுனையில் சொல்லப்பட்ட செய்தியில் முகம் மாறிப் போனான். அடுத்த நொடி அழைப்பை துண்டித்தவன் அலைப்பேசியை எடுத்து மேசை மீது தூக்கி எறிந்தான்.

"அவளை இங்கேயே வரவழைத்து காதலை வளர்க்க பார்க்கிறியா சத்யா? நான் இருக்கும் வரை அது நடக்காது." ஜெய்ப்ரகாஷ் கோபத்தோடு கத்தினான். இந்த விசயத்தைப் பற்றித் தம்பியிடம் எப்படிப் பேசுவது? என்று தெரியாது அவன் தீவிரமாய் யோசித்துக் கொண்டு இருந்தான். பின்பு முகம் பளிச்சிட நிமிர்ந்தவன் அடுத்த நொடி தம்பிக்கு அழைத்திருந்தான்.

"உதய், நம்ம ஹோட்டலில் மானேஜர் போஸ்ட்க்கு ஆள் தேவைப்படுது. உன் மச்சினிச்சி இது சம்பந்தமாகப் படித்து இருக்கிறாள் இல்லையா? அவளை இந்த வேலைக்கு எடுக்கலாமா?" ஜெய்ப்ரகாஷ் சாதாரணமாகக் கேட்பது போல் கேட்டான்.

"நிச்சயமாய் எடுக்கலாம் அண்ணய்யா. ஆதியும் வெளியில் வேலை தேடி கொண்டிருப்பதாகத் தான் ஜெகா சொன்னால்... ஆதி நல்ல பெண், புத்திசாலி, திறமையானவளும் கூட..." உதய்ப்ரகாஷ் உற்சாகமாய்ச் சொல்ல...

"அப்படி என்றால்... நீ உன் மனைவி மூலம் இந்த விசயத்தை உன் மச்சினிச்சியிடம் சொல்லிரு. ஓகே என்றால் நம் ஹோட்டல் சார்பாக நீயே ஆதிக்கு மெயில் அனுப்பி விடு." என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவனின் உதடுகளில் வன்மச்சிரிப்பு தோன்றியது.

***************************

"ஏமிரா, புன்னகை முகமாய் இருக்க? ஏதாவது பிசினஸ் டீலிங் சக்சஸ் ஆகிருச்சா?" பவன்ராம் நண்பனை பார்த்து கேட்டான். சிம்மஹாத்ரி சத்யநாராயணா பதில் சொல்லாது அவனைக் கண்டு புன்னகைத்திருந்தான்.

"எனக்குத் தெரியாம நடக்க வாய்ப்பு இல்லையே. அப்போ வேற என்னவா இருக்கும்?" என்று யோசித்த பவன்ராம் விழிகள் பளிச்சிட,

"தங்கச்சியைப் பார்த்துவிட்டு வந்த சந்தோசமா?" என்று கேட்க...

"ம், அதுவும் தான்." அவன் உடனே ஒத்துக் கொண்டான்.

"உடம்பு சரியில்லாத பிள்ளையைப் பார்த்துவிட்டு வந்து சந்தோசப்படுறதை பாரு." பவன்ராம் அவனை முறைத்தான்.

"இது வேறு..." சிம்மஹாத்ரி சத்யநாராயணா சிறு சிரிப்புடன் சொன்னான்.

"அப்படி என்னடா விசயம்?"

"நா பொம்மாயி இங்கே வர போகிறாள்." அவன் முக மலர்ச்சியுடன் சொன்னதைக் கேட்டு பவன்ராமின் முகமும் மலர்ந்தது.

"உண்மையாவா சத்யா? தங்கச்சி எப்படி உன் கூட வர ஒத்து கொண்டாள்?" என்று கேட்ட நண்பனை முறைத்துப் பார்த்தான் சத்யநாராயணா.

"என்னைப் பார்த்தால் அப்படி என்ன பயங்கரமாவா இருக்கு?" அவன் கோபத்துடன் கேட்க...

"ச்சேச்சே, நான் அப்படிச் சொல்லலைடா..." பவன்ராம் ஈயென்று இளித்தான்.

"பொம்மாயி வேலைக்கு வருகிறாள்." என்று அவன் உண்மையைக் கூற...

"அதானே பார்த்தேன்." பவன்ராம் வருத்தமாய்த் தோழனை பார்த்தான்.

"அவசரப்படக் கூடாது பவன்..."

"அதுக்காக இவ்வளவு நிதானம் தேவை தானா?"

"தேவை தான்... அதுவும் அவளுக்காக..." என்றவனைக் கண்டு மேலே என்ன கேட்க முடியும்? பவன்ராம் அமைதியாகி விட்டான்.

"சரி, அதை விடு... பொம்மாயிக்கு வேண்டியதை எல்லாம் செய்யணும். ஒரு குறையும் வந்துவிடக் கூடாது." என்றவன் பவன்ராமிடம் என்னென்ன வேண்டும் என்று பட்டியலிட தொடங்கினான்.

அப்போது சிம்மஹாத்ரி சத்யநாராயணா அலைப்பேசிக்கு காயத்ரி அழைத்தாள். மறுமுனையில் அவள் சொன்ன விசயத்தைக் கேட்டு அவனது புருவங்கள் இரண்டும் யோசனையுடன் சுருங்கியது. பின்பு அவன் அவளிடம்,

"நான் பார்த்துக்கிறேன்... நீ கவலைப்படாதேம்மா." என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

"என்ன சத்யா?"

"வழக்கம் போல் ஜெய் தலையீடு..."

"என்னது ஜெய்யா? அவனுக்கு இதே வேலையா போச்சு." பவன்ராம் கோபத்துடன் சொன்னான்.

"இந்தத் தடவை விட்டு கொடுக்க முடியாது." என்று உறுதியான குரலில் சொன்னவனை முகம் மலர பார்த்த பவன்ராம்,

"இது தான் சத்யாவுக்கு அழகு." என்றவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா விழிகள் சிவக்க ஆத்திரத்துடன் அமர்ந்து இருந்தான். அவனது மனதில் பெரும் புயல் வீசி கொண்டிருந்தது. அவனது வலதுகை மேசை மீதிருந்த பேப்பர்' வெய்ட்'டை வேகமாய்ச் சுழற்றிக் கொண்டிருந்தது.

"அவள் என்ன என் காதலியா? நீ தட்டி பறித்துக் கொண்டு போவதற்கு? அவள் என் மனைவிடா. மடையா..." அவன் சிங்கம் போன்று கர்ஜித்தான்.

"நீ செஞ்ச வேலைக்கு நான் உடனே உனக்குப் பரிசு ஒண்ணு கொடுக்கணுமே. கொடுக்கட்டுமா ஜெய்...?" என்றவனது முகத்தில் அத்தனை வில்லத்தனம் இருந்தது. அடுத்த நொடி அவன் வில்லனாய் மாறி அந்தக் காரியத்தைக் கச்சிதமாய்ச் செய்து முடித்திருந்தான்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா திருப்தியான மனநிலையில் விழி மூடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான். அவனது மனக்கண்ணில் பழைய சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் தோற்றம் வலம் வந்தது. கோட் சூட் அணிந்து, ஒரு காதில் விலையுயர்ந்த ஒற்றைக் கல் வைர தோடு அணிந்து, கழுத்தில் பிளாட்டினம் செயின், வலதுகையில் பிளாட்டினம் பிரேஸ்லெட், இடது கையில் கோடி ரூபாய் பெறுமானமுள்ள கைக்கடிகாரம் என்று அணிந்து ஆளுமையான தோற்றத்தில் கம்பீர நடையுடன் வலம் வந்த இருபத்தியைந்து வயது சிம்மஹாத்ரி சத்யநாராயணா எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தான். தயவு தாட்சண்யமின்றிப் பாவம் புண்ணியம் பார்க்காது தனது வெற்றி ஒன்றே குறிக்கோளாக எண்ணி செயல்பட்டு வந்தவன் அவன்.

அரக்கத்தனம் அவனது இரத்தத்தில் ஊறியது. அவன் சிறிது காலம் சாதுவாக இருந்தால்... சீண்டி பார்க்க தோன்றுகின்றதோ! சிங்கம் கோபம் கொண்டு சீறினால் காடு தாங்காது.

"அவள் என் காதல், அவள் என் மூச்சு, அவள் என் உயிர்!
என்னுயிரை பறிகொடுக்க நானென்ன முட்டாளா? என்னுயிரை
காக்க உயிரையும் கொடுப்பேன்! உயிரையும் எடுப்பேன்!"

நீயாகும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உயிர் : 5

பௌர்ணமி என்ற போதிலும் எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. இளம்பெண்ணின் கலகலவென்ற சிரிப்பினை போன்று கடலலைகளின் ஓயாத சிரிப்புச் சத்தம் மட்டுமே அந்த நடுநிசியில் நாலாப்புறமும் ஒலித்துக் கொண்டிருந்தது. நடுக்கடலின் நடுவே ஒரு படகு மட்டும் தனியே மிதந்து கொண்டிருந்தது. மின்சார விளக்கின் உபயத்தால் படகு மட்டும் வெளிச்சமாக இருந்தது. அங்கு ஒருவன் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட்டு இருந்தான். அவனது விழிகளில் மரணபயம் தெரிந்தது. அவன் அருகே அடியாட்கள் போன்று இருவர் நின்றிருந்தனர்.

"என்னை விட்டுருங்க... இனி நான் இப்படிப் பண்ண மாட்டேன்." அவன் கண்ணீரோடு கெஞ்சினான். மாட்டி கொண்டால் மரணம் என்று அவனுக்குத் தெரியும். என்ன செய்வது? விதி... அவன் இங்கே வந்து மாட்டி கொண்டான்.

"இனி தானே பண்ண மாட்ட... அப்போ இதுவரை நீ பண்ணியது?" சிங்கக்குரலில் கர்ஜனையுடன் கேட்டான் சிம்மஹாத்ரி சத்யநாராயணா. அவனது கர்ஜனை அந்த இடத்தின் அமைதியை கிழித்தபடி நாலாப்புறமும் எதிரொலித்தது. அது எதிராளிக்குப் பயத்தை விளைவித்தது என்றால் மிகையில்லை.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா படகில் நடுநாயகமாகப் போடப்பட்டு இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி ஆத்திரத்தை அடக்கி கொண்டு எதிராளியை ஊடுருவி பார்த்தபடி அமர்ந்து இருந்தான். அவனுக்கு எதிராகச் சிறு புல் அசைந்தால் கூட... அதை அவன் வேரோடு அழித்து விடுவான். அப்படிப்பட்டவனிடம் எதிரில் இருப்பவன் தனது கைவரிசையைக் காட்டினால் சும்மா விடுவானா? அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து... சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்கு அப்படியொரு ஆத்திரம் வந்தது.

"தப்பு தான்... நான் பண்ணியது தப்பு தான். என்னைய மன்னிச்சு விட்டுருங்க." அவன் அப்படியே முன்னால் குனிந்து காலில் விழாத குறையாகக் கெஞ்சினான்.

"அப்போ நீ பண்ணியது தப்புன்னு ஒத்துக்கிற... அப்படித்தானே?" சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் விழிகள் பழிவெறியில் மின்னியது.

"ஆமா..." எதிராளி பாவமாய்ச் சொன்னான். தப்பை ஒத்துக் கொண்டால் தண்டனை குறையும் என்று அவன் நினைத்தானோ! முட்டாள்...

"இதுவரை செய்த தவறுக்கு... இனிமேல் தவறு செய்யாமல் இருப்பதற்கு... என்ன தண்டனை கொடுக்கலாம்?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா தீவிரமாய் யோசிப்பது போல் பாவனைச் செய்தபடி அவனைப் பார்த்தான்.

"என்ன தண்டனை வேணும்ன்னாலும் கொடுங்க... ஆனா உயிரை மட்டும் எடுத்திராதீங்க." என்று கெஞ்சியவனைக் கண்டு சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் உதடுகளில் வில்லன் சிரிப்பு தோன்றியது.

"ரைட்... நீ ஆசைப்பட்டதையே உனக்குக் கொடுத்துரலாம்." என்ற சிம்மஹாத்ரி சத்யநாராயணா அங்கிருந்த அடியாட்களைக் கண்டு விழிகளால் சைகை செய்ய...

அடுத்த நொடி, "ஆ..." என்கிற அலறல் சத்தம் கடலலையின் சத்தத்தை மீறி ஒலித்து அந்த இடத்தையே பயங்கரமானதாக மாற்றி இருந்தது.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா விழியசைத்ததும் அடியாட்களில் ஒருவன் எதிராளியின் கைகள் இரண்டையும் உடைக்க, மற்றொருவன் அவனது நாவினை துண்டாக்கி இருந்தான். எதிராளி நாவிலிருந்து இரத்தம் சொட்ட, கைகள் உடைந்த நிலையில் மல்லாக்க படுத்தபடி வலியில் முனங்கி கொண்டு இருந்தான். எதிராளியின் வலி, வேதனை கண்டு சிம்மஹாத்ரி சத்யநாராயணா சிறிதும் இரக்கம் கொள்ளவில்லை. மாறாகத் தண்டனை கொடுத்துவிட்ட திருப்தி மட்டுமே அவனிடம் இருந்தது.

'எதிராளி நம்மைத் தாக்க வரும் முன் நாம் நம்மைத் தற்காத்து கொள்வதற்காக... அவர்கள் செயலில் இறங்கும் முன் நாம் அவர்களை உரு தெரியாமல் அழித்து விட வேண்டும். அதற்காகப் பாவம், புண்ணியம், இரக்கம், கருணை எல்லாம் பார்க்க கூடாது. அப்படிப் பாவம், புண்ணியம் பார்த்தால்... தொழிலில் ஜாம்பவானாக வலம் வர முடியாது. நம்பர் ஒன் பொசிசனில் இருந்து எப்போதுமே இறங்க கூடாது.' அவனது தாத்தா அவனுக்குத் தொழிலில் சொல்லி கொடுத்த பால பாடங்களில் இதுவும் ஒன்று. அதைத் தான் அவன் இன்று செயல்படுத்தி இருந்தான். அவன் இப்படிச் செய்ததற்காகப் சிறிதும் வருத்தம் கொள்ளவில்லை. மாறாக எதிரி ஒழிந்தான் என்ற மனப்பான்மையே அதிகம் இருந்தது.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா எழுந்து எதிராளி அருகில் வந்தவன் தொங்கி கிடந்த அவனது தலையைக் காலால் தன் புறம் திருப்பியவன்,

"இனி நீ அந்தத் தவறை தாராளமாகச் செய்யலாம்." என்று கேலி குரலில் சொல்ல... எதிராளி வேதனையில் முனங்கியபடி கண்ணீரோடு அவனைப் பார்த்தான்.

"நான் செஞ்ச தப்புக்குச் சாட்சி சொல்ல போறியா? நீ உண்மையானவனா, நேர்மையானவனா இருந்திருந்தால்... என்னிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்க மாட்ட... மாறா போலீஸ் ஸ்டேசன் போய் எனக்கு எதிரா கம்ப்ளையிண்ட் பண்ணியிருப்ப. அப்படி நீ பண்ணியிருந்தால்... உன் நேர்மையை நானே பாராட்டி இருந்திருப்பேன். ஆனா நீ மிரட்டி பணம் பறிக்கப் பார்த்த... அதுவும் யாரிடம்? இந்தச் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவிடம்... நான் யாருன்னு தெரிஞ்சு இருந்தும் மோதியிருக்கப் பார்த்தியா? உன் தைரியம் பார்த்து எனக்கு வியப்பா இருக்கு." என்று அவன் போலியாய் வியந்தான்.

"அதான் உன்னோட அந்தத் தைரியத்தைக் கொன்னுட்டேன். நான் நினைச்சிருந்தால் உன்னைக் கொன்னு யாருக்கும் தெரியாம கடலில் வீசியிருக்க முடியும். ஆனா அதைச் செய்ய நான் விரும்பலை. நீ செஞ்சது சின்னத் தப்பு. அதனால் தான் உன் உயிரை மட்டும் மிச்சம் வச்சிருக்கேன். இனி இந்தச் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை பத்தி சாட்சி சொல்ல உன் நாக்கு இல்லை... எனக்கு எதிரா சாட்சியம் எழுத உன் கைகள் உன்னிடம் இல்லை. இனி உன்னால் எனக்கு எதிரா சுண்டு விரல் கூட அசைக்க முடியாது. இதுக்குப் பிறகும் வாலாட்ட நினைச்ச... உன் உயிர் உடம்பில் தங்காது." என்று எதிராளியை மிரட்டியவன் அடியாட்களிடம்,

"இவனைக் கரையில் கொண்டு போய் வீசி எறிங்க." என்றவன் தனது வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு அந்தப் படகின் அருகில் நின்றிருந்த மற்றொரு சிறிய படகு ஒன்றில் தாவி ஏறினான். அவன் சென்ற அடுத்த நொடி பெரிய படகு கரையை நோக்கி சீறிப் பாய்ந்தது.

படகின் வெளிச்சம் புள்ளியாகத் தெரியும் வரை சிம்மஹாத்ரி சத்யநாராயணா படகினை பார்த்தபடி நின்றிருந்தான். படகு கண்ணை விட்டு மறைந்ததும் அவன் அப்படியே அங்கேயே மல்லாக்க படுத்தான். அவனது நினைவுகளில் அவளது ஞாபகம் மட்டுமே! அவனது மனம் பழைய நினைவுகளில் சிக்கி தவித்தது. அன்று சாதாரணமாகத் தோன்றிய விசயங்கள் எல்லாம் இன்று அவனுக்கு அவளது காதலை எடுத்து சொல்லியது.

முன்பு ஒருமுறை அவன் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்த போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தான். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவிற்குப் பெரிய அடி எதுவும் இல்லை. மாறாகக் கை, கால், தலையில் மட்டுமே அடிப்பட்டு இருந்தது. சோமசுந்தரத்தை தவிர வேறு யாரும் அவனை வந்து எட்டி பார்க்கவில்லை. அப்படித்தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனது நினைவை பொய்யாக்கும் வண்ணம் ஆதிசக்தீஸ்வரி அவனைக் காண வந்தாள். பள்ளி சீருடையில் வந்து நின்றவளை கண்டு அவனுக்கு ஆச்சிரியமாக இருந்தது.

"மாமாவை தேடி வந்திருக்கியா பொம்மாயி?" என்று அவன் கேட்க...

"ஆமா..." என்றவளின் மாமா அவன் தான் என்பதை அந்நேரம் அவன் அறியவில்லையே! அவளது விழிகள் பரிதவிப்புடன் அவனை மேலும், கீழுமாய் அலசி ஆராய்ந்தது. அவளது விழிகளில் கண்ணீர் கோர்த்து இருந்ததோ!

"இப்போ தான் மாமா வீட்டுக்கு போனார்." என்றவனின் வார்த்தைகளை அவள் எங்கே கேட்டாள்? அவள் அவனையே பார்த்திருந்தாள்.

"பொம்மாயி..."

"ஹான், சரி சரி... நான் வீட்டுக்கு போறேன்." அவள் சொல்ல...

"எதுவும் முக்கியமான விசயமா? நான் வேணா உன் கூட வரவா?"

"அடிப்பட்டுக் கிடக்கும் போது நீ எப்படி என் கூட வர முடியும்?" அவள் தனது வருத்தத்தை மறந்து சிரித்தாள்.

"உனக்காக வருவேன். உனக்காக வலியை தாங்கி கொள்வேன்." என்று சொன்னவனைக் கண்டு அவள் இமைக்க மறந்து பார்த்தாள். அவனது இத்தகைய சிறு சிறு கரிசனம் தான் பெண்ணவளை அவன் பால் ஈர்த்ததோ! அன்று அவளது பார்வைக்கான அர்த்தத்தை அவன் உணரவில்லை. ஆனால் இன்று அவன் உணர்ந்தான்.

"பொம்மாயி... நா ப்ரியசகி..." அவனது உதடுகள் அவளை நினைத்து மென்மையாய் முணுமுணுத்தது. மீண்டும் அவனது நினைவு பழைய நினைவுக்குச் சென்றது.

"இல்லை, வேண்டாம்... ரெஸ்ட் எடு. நான் கிளம்பறேன்." என்றவள் வெளியில் சென்றுவிட...

அடுத்தச் சில நிமிடங்களில் அவன் மருந்தின் வீரியத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தான். அப்போது அவனது நெற்றியில் சில்லென்று ஒரு உணர்வு... யாரோ அவனது நெற்றியில் இதழொற்றியது போன்று ஒரு உணர்வு... அவன் சிரமப்பட்டு விழிகளைத் திறக்க முயன்றான். அவனால் முழுவதுமாய் விழிகளைத் திறக்க முடியவில்லை. லேசாக மட்டுமே விழிகளைத் திறக்க முடிந்தது. அங்குக் கதவு பக்கம் ஆதிசக்தீஸ்வரியின் பள்ளி சீருடை மட்டுமே அவனது கண்களுக்குப் புலப்பட்டது. அவள் தான் ஏற்கெனவே சென்று விட்டாளே. அது போக அவள் சின்னவள்... அவளை அப்படி எல்லாம் அவன் நினைத்து கூடப் பார்த்தது இல்லை. அதனால் அந்த இடத்தில் அவனால் அவளை எளிதாகப் புறம் தள்ள முடிந்தது.

அவன் உணர்ந்த இதழொற்றலுக்கு அவன் உருவம் கொடுத்த போது வேறு ஒருத்தியின் முகம் அங்கு வர...

"என்னை வேண்டாம் என்றவள் எனக்கும் வேண்டாம்." அவன் கோபத்தோடு முணுமுணுத்தபடி விழிகளை மூடி கொண்டான். சில நினைவுகள் நாட்கள் கடந்தும் வேதனையைத் தரும். மறக்க முயன்றும் மறக்க முடியாது தவிப்பை தரும். அது போன்றதொரு நினைவு அவனது...

இப்போது தானே தெரிகிறது, அந்த முத்தம் அவனது உயிர் கொடுத்த முத்தம் என்று...! கடல் காற்றில் அவனது தலை கேசம் கலைந்து நெற்றியில் புரண்டது. அது தன்னவளின் இதழொற்றலின் ஈரத்தை துடைப்பது போலிருந்தது. அவன் தனது கேசத்தை ஒதுக்கி விட்டு நெற்றியில் கை குவித்து அவளது இதழொற்றலின் ஈரத்தை பொக்கிசமாய்ப் பாதுகாக்க நினைத்தான், அவளது இனிய நினைவில்... பிறகு தான் அவனுக்கு நிகழ்காலம் உறைத்தது. இருந்த போதும் ஏதோ ஒரு நப்பாசையில் அவன் தனது நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். இப்போதும் அவன் அவளது இதழின் ஈரத்தை நெற்றியில் உணர்ந்தானோ! அந்த ஈரத்தினைப் போன்றே அவனது விழிகளும் கசிந்தது.

"கனவே! உனை வந்து சேர
நான் இங்கு வரம் ஒன்று கேட்டேன்
என் மரணம் நெருங்கிடும் போதும் உன்
நினைவினில் வாழ்ந்திடுவேனே"

அவனது மனதில் பாடல் ஒலித்தது. அவள் அடிக்கடி கேட்கும் பாடல்... யாரும் இல்லாத போது அவள் இந்தப் பாடலை கேட்பாள். ஆனால் சில நேரங்களில் அவள் அறியாது அவன் கேட்டு இருக்கின்றான். அப்போது எல்லாம் அவள் சும்மா ஏதோ பொழுதுபோக்கிற்காகக் கேட்கிறாள் என்றல்லவா அவன் நினைத்தான். இப்போது தானே தெரிகிறது, அவள் உயிர் உருக அவன் மீதான காதலில் கசிந்துருகி இருக்கிறாள் என்று... இதோ இப்போது அவனது உயிர் அவளுக்காகக் கசிந்துருகியது.

"தீராத துயரத்தில் நானும்
காற்றோடு ஏன் கரைந்தாய் நீயும்
நீங்காத நிலவொளியானாய்
அன்பே! அன்பே!"

வானில் பவனி வந்து கொண்டிருந்த வெண்ணிலவில் அவன் தன்னவளின் பால்முகத்தைக் கண்டானோ! அவனது உதடுகளில் புன்னகை தோன்றியது. அதன் பின்னே இருக்கும் பெரும் வலி அவனுக்கு மட்டுமே தெரியும். அதில் பெண்ணவளை இழந்த வலி அதிகம் இருந்தது.

"மறுஜென்மம் இருந்தால் கூட
உயிரே உன் கரம் பிடிப்பேனே
உன் கால் தடம் நான் தொடர்வேனே
அன்பே! அன்பே!"

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவள் தான் அவன் மனைவி! என்றோ அவன் முடிவெடுத்து விட்டான். ஆனால் அதைச் செயல்படுத்த தான் வழி தெரியாது அவன் தவித்துக் கொண்டிருக்கிறான். எப்போதும் ஆளுமையுடன், ஆதிக்கத்துடன் இருப்பவன் அவள் விசயத்தில் மட்டும் அமைதியை கடைப்பிடிக்கின்றான். அவன் நினைத்தால் நொடியில் அவளை அவன் புறம் அழைத்து வந்துவிட முடியும் தான். ஆனால் அவளது மனம் சிறிது சுணங்கினாலும் அவனால் தாங்க முடியாதே.

"என்னைத் தேடி வருவியா பொம்மாயி?" அவன் மானசீகமாக அவளிடம் கேட்டான். பதில் அவளிடம் மட்டுமே!

சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆதிசக்தீஸ்வரியை நினைத்தபடி அப்படியே படுத்திருந்தான். அவனது காயத்திற்கு அவளது நினைவுகள் மட்டுமே மருந்தாக இருந்தது. எவ்வளவு நேரம் அப்படியே படுத்திருந்தானோ! ஓங்கி எழுந்த பேரலையின் நீர் அவன் மீது பட்டு தெறித்ததில் அவன் சுற்றுப்புறம் உணர்ந்தான். பிறகு அவன் படகை ஓட்டி கொண்டு கரைக்கு வந்தான். படகை நிறுத்தி விட்டு அவன் இறங்கவும் அவனது ஆட்கள் வந்து விட்டனர். காரில் ஏறியபடி அவன் தனது அலைப்பேசியை உயிர்ப்பித்தான். அதிகாலை மூன்று மணியாகி இருந்தது. அவனது அலைப்பேசிக்கு ராணியம்மா, அவனது மாமா எல்லோரும் அழைத்திருந்ததற்கான நோட்டிபிகேசன் அடுத்தடுத்து வந்தது. அதைக் கண்டவன் உதடுகளில் பெரும் புன்னகை தோன்றியது.

தனது அரண்மனைக்கு வந்த சிம்மஹாத்ரி சத்யநாராயணா குளித்து விட்டு வந்தவன் அங்கிருந்த கண்ணாடி முன் நின்று தலையைத் துவட்டினான். பிறகு தனது மீசையின் இரு நுனிகளையும் திருகி முறுக்கி விட்டான்.

"நீ தாடியை குறைச்சு, மீசையை நல்லா முறுக்கி விட்டேன்னா... சும்மா கெத்தா இருப்ப மாமா." தன்னவளின் குரல் அவனது காதுகளில் ஒலித்து உதடுகளில் புன்னகையை அரும்பச் செய்தது. இப்போது அவன் அவள் விரும்பிய தோற்றத்தில்... ஆனால் அதைக் கண்டு ரசிக்க அவள் அவன் அருகில் இல்லை.

"எங்கே போகிற போற பொம்மாயி? சீக்கிரமே நாம சந்திக்கலாம்." என்று சொன்னவனின் மனதில் அவளை நேரில் காண போகும் நாளை எண்ணி கனவு தோன்றியது. அந்த இனிய கனவோடு அவன் படுக்கையில் படுத்து உறங்கி போனான்.


*********************************
 

ஶ்ரீகலா

Administrator
ராணியம்மா இரவு முழுவதும் தூங்காது தவித்திருந்தார். பஞ்சு மெத்தையும், குளுகுளு ஏசியும் கூட அவருக்கு உறக்கத்தைத் தரவில்லை. அவரது மனம் முழுவதும் கோபத்திலும், ஆற்றாமையிலும் உழன்று கொண்டிருந்தது. சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவரது அழைப்பை எடுக்காது போனது கண்டு அவருக்கு அத்தனை கோபம் வந்தது. அதைவிட அவரது அண்ணன், அவனது மதிப்புக்குரிய மாமா அழைப்பை கூட அவன் எடுக்காதது குறித்து அவருள் பெரும் ஆத்திரம் சுழன்றது. அவன் தனக்கு மதிப்பு அளிக்காவிட்டாலும் தனது அண்ணனுக்கு மதிப்பு அளிப்பான் என்றெண்ணியே அவர் இந்த விசயத்தை அண்ணனிடம் கொண்டு சென்றது. ஆனால் அவனது இந்தப் புறக்கணிப்பு, உதாசீனம் அவருக்கே பெருத்த ஆச்சிரியம். சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஏதோ ஒரு முடிவுக்கு வந்து விட்டான் என்று அவர் நினைக்கும் போதே அவருக்குப் பயத்தில் நெஞ்சு உலர்ந்து போனது.

காலையில் விடிந்ததுமே அவர் தனது மகனை காண சென்றார். ஜெய்ப்ரகாஷ் அவனது உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்ய ஆயத்தமாகி கொண்டு இருந்தான். அந்நேரம் அங்கு வந்த அன்னையைக் கண்டு அவன் விழிகளைச் சுருக்கினான்.

"சத்யா யாரோட ஃபோனையும் எடுக்க மாட்டேங்கிறான்." என்று படபடத்த அன்னையைக் கண்டு கொள்ளாது,

"அதுக்கு என்னைய என்ன செய்யச் சொல்றீங்க?" என்று அவன் சாதாரணமாகக் கேட்க...

"நீ அவன் கிட்ட எதுவும் வம்புக்கு போனியா?" நேற்று விசயத்தைக் கேள்விப்பட்டதில் இருந்து அவர் மகனிடம் இதைத் தான் கேட்டுக் கொண்டிருந்தார். இப்போதும் அவர் அவனிடம் இதையே கேட்டார்.

"நானா வம்புக்கு போறேன்? அவன் தான் வம்புக்கு வர்றான்." அவனுக்கு அவன் எரிச்சல்...

"நீ வேறு ஏதோ பெருசா பண்ணியிருக்க ஜெய்... இல்லைன்னா இது நடக்க வாய்ப்பில்லை." அவர் யோசனையுடன் கூறினார்.

"ஆமா, பெருசா பண்ணி இருக்கேன் தான். அதுக்கு என்ன இப்போ?" அவன் கோபத்தில் ஏறக்குறைய கத்தினான்.

"அப்படி என்னத்தைடா பண்ணி தொலைச்ச?" அவருக்குச் சற்றுப் பயம் வந்தது.

"ஆதிக்கு வேலை போட்டு கொடுத்தேன்."

"ஆதி? ஜெகா தங்கையா?" அவர் திகைப்புடன் பார்த்தார்.

"ஆமா..."

"அதுக்கு எதுக்குச் சத்யா கோபப்படுறான்?" அவருக்கு விளங்கவில்லை.

"ஏன்னா அவன் அந்தப் பொண்ணைக் காதலிக்கிறான்." ஜெய்ப்ரகாஷ் சொன்னது கேட்டு அவரது முகத்தில் அப்படியொரு சந்தோசம்!

"நல்லது தானே ஜெய்." என்ற அன்னையைக் கூர்ந்து பார்த்தவன்,

"எனக்கு அவள் வேண்டும்." என்று அழுத்தமாய்க் கூற...

"அவள் எதுக்குடா உனக்கு?" என்று ஏதோ சொல்ல வந்தவர் பின்பு யோசனையுடன் நிறுத்திவிட்டு, "அவளுக்காகவா அவன் இதைச் செய்தது?" என்று கேட்டவர் ஓய்ந்து போனவராய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.ஜெய்ப்ரகாஷ் பதில் சொல்லாது அன்னையைப் பார்த்தான்.

"சத்யாவோட கோபம் பற்றித் தெரியாம நடந்துக்காதே. உன் அப்பாவை கொன்றதே அவன் தான்னு ஊரில் ஒரு பேச்சு இருக்கு." என்ற ராணியம்மா பயத்தில் வியர்த்து வழிந்தார்.

"எனக்கும் அதே எண்ணம் தான். அப்பாவை கொன்றவனைப் பழிவாங்கா விட்டால் நான் எல்லாம் என்ன மகன்?" அவன் ஆத்திரத்துடன் பற்களைக் கடித்தான்.

"ப்ச், செத்து போனவருக்காக இருக்கிறதை இழக்காதே ஜெய்... அப்பனையே கொன்றவன்... உன்னைக் கொல்ல அவனுக்கு ஒரு நொடி ஆகாது. நீ அவனிடம் இருந்து விலகி இருப்பது தான் உனக்கு நல்லது." அன்னை அவனை எச்சரித்தார்.

"நீங்க கோழை போல் அவன் கிட்ட அடங்கி இருங்க. என்னால் அப்படி இருக்க முடியாது. அவன் கொன்றது உங்க கணவரை... உங்களுக்கு அது வருத்தமா இல்லை. கோபம் வரவில்லை." அவன் கோபத்துடன் சீற...

"எல்லாத்துக்கும் நேரம் காலம் வரணும். அதுவரை பொறுமையா இருக்கணும் ஜெய். எடுத்தோம் கவிழ்த்தோம்னனு எதையாவது செய்து அரண்மனை கௌரவத்தைக் கீழிறக்க முடியாது. இதோ இப்போது இறக்கி இருப்பது போல்..."

"கீழிறங்கிய கௌரவத்தை எப்படி மீட்டெடுப்பதுன்னு எனக்குத் தெரியும்." ஜெய்ப்ரகாஷ் நம்பிக்கையுடன் கூற...

"எப்படி? பிச்சைக்காரியை கல்யாணம் பண்ணியா? ஏன் தான் உன் புத்தி இப்படிப் போகுதோ?" அவர் தலையில் அடித்துக் கொண்டார்.

"நான் பார்த்துக்கிறேன் விடுங்க..." என்ற ஜெய்ப்ரகாஷ் டிரெட்மில்லில் ஓட தொடங்க... ராணியம்மா அங்கிருந்து வெளியில் வந்தார். அவருக்கு இருந்த கவலையில் அங்கிருந்த தூணின் பின்னே மறைந்து ஒட்டு கேட்டுக் கொண்டிருந்த ரச்சிதாவை அவர் கவனிக்கவில்லை.

ராணியம்மா சென்றதும் ரச்சிதா தூணின் பின்னே இருந்து வெளியில் வந்தாள். சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஒருத்தியை காதலிப்பதாக ஜெய்ப்ரகாஷ் சொன்னது கேட்டு அவளது மனம் உலைகலனாகக் கொதித்தது.

"நீ எனக்குத் தான் சத்யா... வேறு யாருக்கும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன்." அவள் ஆத்திரத்தில் அறிவை இழந்து கத்தினாள்.

அதேநேரம் ஆதிசக்தீஸ்வரி பிரயாணத்திற்குத் தேவையானதை எடுத்து வைத்து கொண்டிருந்தாள். அவளுக்குக் காயத்ரி உதவி செய்து கொண்டிருக்க... அங்கிருந்த நாற்காலியில் ராஜராஜேஸ்வரி அமர்ந்து மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.

"ஆதி, நீ ஜெகா வீட்டில்... இல்லை இல்லை, அவளது அரண்மனையில் தங்கணும்ன்னு அவள் சொன்னாள்." என்று அவர் பெருமையுடன் கூற...

"அது சரி வராதும்மா..." ஆதிசக்தீஸ்வரிக்கு ஏனோ மனம் ஒப்பவில்லை.

"ஏன்டி? ஜெகா யாரு? அடுத்தவளா? உன் கூடப்பிறந்தவள். அவள் வீட்டில் போய்த் தங்க உனக்கு ஏன் பிடிக்கலை?"

"ஐயோ அம்மா... அதுக்குச் சொல்லலை. மேனேஜ்மென்ட்டில் எனக்கு எல்லாம் அரேன்ஜ் பண்ணிட்டாங்க. அது தான் எனக்கும் வசதி." அவள் சமாளிப்பாய் மறுத்தாள்.

"என்னமோ போ... நல்லா வசதியா இருக்கிறதை விட்டுட்டு..." என்று சலித்துக் கொண்ட ராஜராஜேஸ்வரி, "சரி, நீ அங்கே தங்க வேண்டாம். ஆனால் ஜெகாவை நேரில் போய்ப் பார்த்துட்டு வா." என்று சொல்ல...

"அது வந்தும்மா..." என்று தயங்கிய சின்னமகளைக் கண்டிப்புடன் பார்த்த ராஜராஜேஸ்வரி,

"ஜெகா வாயும் வயிறுமா இருக்கிறாள். அவளுக்குப் பிடிச்ச பலகாரங்கள் எல்லாம் செஞ்சு தர்றேன். போய்ப் பார்த்துட்டு கொடுத்துட்டு வா." என்று கட்டளையிட...

"சரிம்மா..." வேறுவழியின்றி அன்னை சொன்னதற்குச் சம்மதித்தவள், "அப்படியே எனக்குப் பிடிச்ச ஸ்நாக்ஸும் செஞ்சு கொடுங்க" என்று சொல்ல...

"அதெல்லாம் ரெடியா இருக்கு." என்ற ராஜராஜேஸ்வரி அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.

"ஆதி, நீ இந்த ஹோட்டலில் வேலைக்கு எழுதி போட்டியா?" காயத்ரி மெல்ல கேட்டாள்.

"ஆமா அண்ணி..."

"எப்போ?"

"அது ஞாபகம் இல்லையே அண்ணி..." ஆதிசக்தீஸ்வரி யோசித்தபடி பதில் சொன்னாள்.

காயத்ரிக்கு சற்றுச் சந்தேகமாக இருந்தது. மருத்துவமனைக்கு விசாகப்பட்டிண இளவரசன் வந்திருப்பதாக மருத்துவமனை தலைமை மருத்துவர் சொன்ன போது... 'யாருடா அது?' என்று தான் காயத்ரிக்கு தோன்றியது. அதுவும் சரியாக மருத்துவர் ஆதிசக்தீஸ்வரி இருந்த அறைக்கு நேரே வந்து அறையைச் சுட்டிக்காட்டி கேட்டது தான் வியப்பாக இருந்தது. அதைத் தான் அவள் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவிடம் கேட்டது. அவன் இல்லை என்று மறுத்து விட்டான். ஆனால் அவன் ஏறி சென்ற விலையுயர்ந்த கார் அவளது சந்தேகத்திற்குத் தீனி போட்டது.

விசாகப்பட்டிண இளவரசன், விசாகப்பட்டிண நட்சத்திர விடுதி, சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் பேச்சில் அதிகம் அடிக்கும் தெலுங்கு வாடை எல்லாமே அவளது சந்தேகத்தை அதிகரித்தது. அவள் உடனே இணையத்தில் நட்சத்திர விடுதியின் உரிமையாளரை பற்றித் தேடி பார்த்தாள். அதில் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. பவதாரிணி என்று வேறு யாரோ பெயர் வந்தது. அடுத்து விசாகப்பட்டிண இளவரசன் யார்? என்று தேடி பார்த்த போது ஜெய்ப்ரகாஷ், உதய்ப்ரகாஷ் பெயர்கள் மட்டுமே வந்தது.

ஒருவேளை ஆதிசக்தீஸ்வரிக்கு உடம்பு சரியில்லாது போனதால்... அவளைக் காண ஜெகதீஸ்வரியை அழைத்துக் கொண்டு உதய்ப்ரகாஷ் இங்கு வந்திருப்பதாக வதந்தி பரவி இருக்குமோ? அப்படித்தான் இருக்க வேண்டும் என்று காயத்ரி எண்ணி கொண்டாள்.

"எல்லாம் முடிந்தது ஆதி... நான் போய்ச் சமையல் வேலையைப் பார்க்கிறேன்." என்ற காயத்ரி அறையை விட்டு வெளியேறினாள்.

அண்ணி சென்றதும் ஆதிசக்தீஸ்வரி தனது அலமாரியை திறந்து பார்த்தாள். ஏதாவது தவற விட்டு விட்டோமா? என்று அவள் அலமாரியை ஆராய்ச்சியாய் பார்த்தாள். எல்லாம் எடுத்து வைத்தாயிற்று. அடுத்து அவள் கண்ணாடி மேசையின் இழுப்பறையைத் திறந்து பார்த்தாள். அதிலிருந்ததும் எல்லாம் எடுத்தாயிற்று. அப்போது தான் அதன் ஓரம் இருந்த லெக்ஷ்மி நரசிம்மர் புகைப்படத்தைப் பார்த்தாள். அன்று போல் இன்றும் ஏதேதோ நினைவுகள் எழுந்து அவளை மருட்டியது. ஆனால் மயங்கி விழுந்து விடாது தன்னைச் சமாளித்தவள் அதை எடுத்துக் கொண்டு கட்டிலில் வந்தமர்ந்தாள்.

"இந்தா இதை வச்சுக்கோ... உன் பயம் எல்லாம் போகும். பயம் இல்லாம தைரியமா எக்சாம் எழுதுவ... நல்ல மார்க் வரும்." என்ற குரல் மட்டுமே அவளது காதுகளில் ஒலித்தது.

ஆதிசக்தீஸ்வரி அந்தக் குரலை கிரகித்துக் கொண்டே விழிகளை மூடி அமர்ந்தாள். மீண்டும் மீண்டும் அந்தக் குரல் அவளுள் ஒலிக்கத் தொடங்கியது. ஆனால் யார் சொன்னது? என்பது மட்டும் அவளது ஞாபகத்தில் வரவில்லை. அவள் சோர்ந்து போனவளாய் விழிகளைத் திறந்தாள்.

அன்றிரவே ஆதிசக்தீஸ்வரி விசாகப்பட்டிணம் நோக்கி பிரயாணமானாள். விமானத்தில் மட்டுமல்ல, அங்கு விமான நிலையத்திலும் அவளுக்கு ராணி மரியாதை அளிக்கபட்டது. அவள் வேலை பார்க்கும் நட்சத்திர விடுதியிலேயே அவள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கும் அவளுக்கு அத்தனை மரியாதை... அவளிடம் பணிவுடன் பேசி கொண்டிருந்த நிர்வாகியை கண்டு அவள்,

"உங்க ஹோட்டலில் வேலை பார்க்க வரும் ஸ்டாஃப்க்கு கூட இத்தனை மரியாதையா? இதை எல்லாம் பார்த்து ரொம்ப ஆச்சிரியமா இருக்கு. உங்களோட இந்தச் சர்வீஸ் உங்க ஹோட்டலை எங்கேயோ கொண்டு போகப் போகுது." என்று கேலி குரலில் கூற... அந்த நிர்வாகி அவள் சொன்னது கேட்டு பேவென விழித்தான். அவள் உண்மையாகச் சொல்கிறாளா? இல்லை கேலி செய்கிறாளா? என்று அவன் குழம்பி போனான்.

"ஆதி..." இரு குரல்கள் உற்சாகமாய் அவளை அழைக்க... திரும்பி பார்த்தவள் அங்கே நின்றிருந்த தனது வானர தோழமைகளைக் கண்டு,

"ஹேய் மயூரி, சந்தோஷ்..." என்று கூறியபடி ஓடி வந்து அவர்களை அணைத்து கொண்டாள்.

"கும்த்தலக்கடி கும்மாவா? ஆயுஷ்ன்னா சும்மாவா?" என்று கத்தியபடி மூன்றும் வட்டமாய்ச் சுற்றியது. அவர்களது பெயர்களில் வரும் எழுத்துகளைச் சுருக்கி அவர்களது குழுவிற்கு அவர்களே ஒரு பெயர் வைத்து கொண்டனர்.

நிர்வாகி தலையைச் சொறிந்து கொண்டே அவர்களைப் பார்த்தான். நட்சத்திர விடுதியில் இப்படி எல்லாம் கத்தி கூப்பாடு போட கூடாது. ஆனால் ஆதிசக்தீஸ்வரியை எதுவும் சொல்ல கூடாது என்று மேலிடத்து உத்தரவு. அதை மீறி அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நள்ளிரவு பொழுது என்பதால் விடுதி வரவேற்பறை வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாது அமைதியாக இருந்தது.

"நீங்க ரெண்டு பேரும் இங்கே என்ன பண்றீங்க?" மூவரும் ஒரே நேரத்தில் கேட்டு... பின்பு விழித்து... பிறகு புரிந்தவர்களாய் மகிழ்ச்சியோடு ஒருவரை ஒருவர் கட்டி கொண்டனர்.

"மூணு பேருக்குமே இங்கே தான் வேலை கிடைச்சு இருக்கா?" மூவருக்குமே குதூகலமாக இருந்தது.

"மேம், ரூமுக்கு போகலாமா?" நிர்வாகி அவளிடம் பவ்யமாய் வந்து கேட்க...

"என்னடி இது? உனக்குப் போய் இவ்வளவு மரியாதை கொடுக்கிறான்?" மயூரி, சந்தோஷ் இருவரும் நிர்வாகியை யோசனையாய் பார்த்தனர்.

"என்னோட மகிமை அப்படி..." ஆதிசக்தீஸ்வரி தான் போட்டிருந்த சட்டையின் காலரை தூக்கி விட்டு கொண்டாள்.

தங்களது அறைக்கு வந்து ஓய்வெடுத்த மூவரும் மறுநாள் காலையில் வேலைக்குத் தயாராகி வந்தனர். மூவரும் ஒன்று போல் கிளம்பி வரவேற்பறைக்கு வந்தனர். அப்போது நிர்வாகி வந்து அவர்களைச் சோபாவில் அமர்ந்து காத்திருக்கச் சொல்லிவிட்டு சென்றுவிட்டான். மயூரி, சந்தோஷ் அரட்டை அடித்துக் கொண்டிருக்க... ஆதிசக்தீஸ்வரி சுற்றிலும் விழிகளைச் சுழலவிட்டபடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது தான் அவள் நிர்வாகியிடம் பேசி கொண்டிருந்த சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் பக்கவாட்டுத் தோற்றத்தினைக் கண்டாள்.

கருப்பு நிற வேட்டி, சட்டையில் கம்பீரமாக இருந்த ஆணவனை அவளது விழிகள் விளையாட்டாய் சைட் அடிக்க ஆரம்பித்தது. அந்த வயதிற்கே உரிய குறும்பு அவளிடம்... ஏனோ தெரியவில்லை அவள் அவனைப் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள். அவனிடம் இருந்து விழிகளை விலக்கி கொள்ள அவளால் இயலவில்லை. அதைச் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவும் கண்டு கொண்டான். அவளது பார்வையில் அவன் அடைந்த உவகைக்கு எல்லையில்லை. அவனும் மனம் கும்மாளமிட ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தபடி பேசி கொண்டு இருந்தான். தற்செயலாய் திரும்புவது போல் அவன் அவள் புறம் நன்றாகத் திரும்பி நின்றபடி தனது மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே அவளைப் பார்த்தான். அவனது அந்தச் சிறு செயல் கூட அத்தனை ஆளுமையுடன் இருந்தது. அதைக் கண்டவள் மனதில் சிறு மயக்கம் தோன்றியது என்னவோ உண்மை!

"நீ தாடியை குறைச்சு, மீசையை நல்லா முறுக்கி விட்டேன்னா... சும்மா கெத்தா இருப்ப மாமா." திடுமென அவளது குரல் அவளுக்குள் உற்சாகமாய் ஒலித்தது. அதைக் கேட்டு திகைப்படைந்தவளாய் அவள் அவனையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள்.

"எண்ணங்கள் அழிந்தாலும்,
நினைவுகள் நீங்கினாலும்,
உயிர் உடலை பிரிந்தாலும்,
மரணமே நேர்ந்தாலும்,
மரிக்காது, உன் மீதான உணர்வுகள்!"

தொடும்...!!!
 
Status
Not open for further replies.
Top