All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!!!’ - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஆன்டி_ஹீரோ_ஸ்டோரி ⚠️


தலைப்பு : கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!!!
நாயகன் : சக்தீஸ்வரன்
நாயகி : சகுந்தலா

இதோ அடுத்தக் கதையுடன் வந்து விட்டேன். இந்தக் கதையைப் பற்றி என்ன சொல்ல? எப்போதும் போல் சாதாரணக் காதல் கதைதான். ஆனால் என்னுடைய பாணியில் சற்று வித்தியாசமாய்!! தந்தையை வைத்துத் தனயனை மதிப்பிட வேண்டாம். அவன் வேறு, இவன் வேறு! கதையும் வேறு... ஆனால் ஒரே ஒரு ஒற்றுமை காதல் மட்டுமே... இங்குக் காதலும் சற்று வித்தியாசமாய், முரணாய் நம் நாயகனை போன்றே...

தலைப்பிலேயே கதைக்கரு உள்ளது. கலாபம் என்றால் பெண்களின் இடையணி அல்லது வர்ணஜாலம் (வர்ணஜாலம் கொண்ட அழகிய தோகையை ஆண் மயில் கொண்டிருப்பதால் அதற்கும் இந்தப் பெயர் உண்டு). இந்தக் கதைக்கு வர்ணஜாலம் என்கிற பொருள் மிகுந்த பொருத்தம். வர்ணஜாலம் என்றாலே மகிழ்ச்சி, சந்தோசம் போன்று ஒரு மனநிலையைக் குறிக்கும். இப்போது தலைப்பின் அர்த்தம் புரிந்திருக்குமே. புரியவில்லை என்றால் கதையில் விடை தேடலாம்.

முன்னோட்டம் ஏதுமின்றி நேரே முதல் அத்தியாயத்தோடு இன்று மாலை நம் வழக்கமான நேரத்தில் நாம் சந்திக்கலாம். என்னுடைய கதைகளைத் தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தும் அனைத்து தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 1



"கௌசல்யா சுப்ரஜா ராம

பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே

உத்திஷ்ட நர ஸார்தூல

கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்"



உதயரேகா பூஜையறையில் பாடி கொண்டிருக்க... அவள் அருகே சர்வேஸ்வரன் புன்னகை முகத்துடன் நின்றிருந்தான். அவனிடத்தில் அதே காதல், அதே நேசம், அதே கனிவு... திருமணமாகி இத்தனை வருடங்கள் கடந்திருந்தும் அவனிடத்தில் எந்த மாற்றமும் இல்லை. மாறாக அவனிடத்தில் இன்னும் காதல் அதிகரித்துத் தான் காணப்பட்டது. உதயரேகா மட்டுமென்ன குறைவா! அவளும் எப்போதும் போல் தினமும் அதீத காதலுடன் கணவனை ஆராதிக்கத் தான் செய்கிறாள். அன்று முதல் இன்று வரை இருவரும் அதே காதல் கிறுக்குகள் தான்.



இருவரின் காதலையும் எப்போதும் போல் உலக அதிசயமாகப் பார்த்தபடி நின்றிருந்தாள் சகுந்தலா. இந்த வயதில் இப்படிக் காதலிக்க முடியுமா? என்கிற கேள்விக்கு விடையாக இருக்கும் ஆதர்ச தம்பதியினர் இவர்கள் இருவரும். அவர்கள் இருவரையும் கண்டு அவளுக்கு எப்போதும் போல் இன்றும் வியப்பே.



உதயரேகா கடவுளை கும்பிட்டு விட்டு தீபாராதனையைக் கணவனிடம் காட்டி விட்டு அவனது நெற்றியில் திருநீறு பூசி விட்டாள். அதே போன்றே அவள் சகுந்தலாவுக்கும் செய்தாள்.



"மாமோய், அத்தைம்மா, ராவு ரெண்டு பேருக்கும் சுத்தி போடணும். என் கண்ணே பட்டுரும்." அவள் இருவரையும் கண்டு சந்தோசமாய்க் கூற...



"உனக்கு வேற வேலையே இல்லையா சக்கும்மா?" உதயரேகா அவளைச் செல்லமாய்க் கடிந்து கொண்டாள்.



"இதைவிட வேற வேலை எனக்கு என்ன இருக்குங்கிறேன்? நான் மறந்தாலும் எனக்கு மறக்காம ஞாபகப்படுத்துங்க அத்தைம்மா." சகுந்தலா நீட்டி முழக்கினாள்.



அவள் எப்போதும் அப்படித்தான் நீட்டி முழக்கி ஒருவித ராகத்துடன் இழுத்து பேசுவாள். அவள் அன்னை விஜயாவிடம் இருந்து கற்றுக் கொண்ட கிராமத்துப் பாசை இது. இத்தனை வருடங்கள் கடந்தும் அப்படியே மண் மணம் மாறாது இருக்கின்றது. இதில் ஒரு ஆச்சிரியம் என்னவென்றால் அவளது அன்னை விஜயா கூட இப்போது பட்டணத்துவாசியாகத் தனது பாசையை மாற்றிக் கொண்டது தான்.



"சரி, ஞாபகப்படுத்துறேன். நீ காபி குடிச்சியா?" உதயரேகா அவளிடம் பாசத்துடன் கேட்டாள்.



"இன்னும் இல்லை அத்தைம்மா. தூங்கி எந்திருச்சு குளிச்சிட்டு அப்படியே ஓடி வந்துட்டேன்." என்று சொன்னவளின் தலைமுடி ஈரம் கூடச் சரியாகக் காயவில்லை.



"உனக்கு எத்தனை தடவை சொல்றது சக்கும்மா? தலைமுடியை நல்லா காய வையின்னு. வா, நான் துவட்டி விடறேன்." உதயரேகா சொல்லவும்...



"அதெல்லாம் வேண்டாம். நானே பார்த்துகிறேன். உங்களுக்கும் காபி கொண்டு வரவா?" அவள் ஆசையுடன் சொல்ல...



அதுவரை இருவரையும் புன்சிரிப்புடன் பார்த்திருந்த சர்வேஸ்வரன், "அம்மா தாயே, உனக்கு உப்புக்கும், சர்க்கரையும் வித்தியாசம் தெரியாது. உன் அத்தைம்மாவே காபி போடட்டும்." என்று அவளைக் கேலி செய்ய...



"மாமோய்..." அவள் வெட்கத்துடன் சிணுங்கினாள்.



"பிரின்ஸ், சக்கும்மாவை கேலி பண்ணாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது?" மனைவி அதட்டியதும் அந்த வளர்ந்த குழந்தை வாயில் கை வைத்து கப்சிப்பென்று அடங்கி விட்டது. அதைக் கண்டு சகுந்தலா வாய்விட்டு சிரித்தாள்.



பெண்கள் இருவரும் சமையலறைக்குள் சென்றனர். மூவருக்கும் காபியை கலந்த உதயரேகா ஒன்றை சகுந்தலாவிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னாள்.



"இன்னைக்கு என் கூட வர்றியா?" உதயரேகா தான் செல்லும் ஐந்தறிவு ஜீவன்களின் தொண்டு நிறுவனத்திற்கு அழைத்தாள்.



"ஐயோ அத்தைம்மா, எனக்கு நாய்ங்கன்னாலே பயம்." சகுந்தலா பயத்துடன் சொல்ல...



"இப்படி எதுவும் செய்யாம வீட்டை சுத்தி வந்துக்கிட்டு இருக்கப் போறியா?"



"ஆமா, இதில் என்ன இருக்கு? உங்களை மாமோய் தூக்கிட்டு வந்த மாதிரி... என்னையும் மகாராசன் ஒருத்தன் வந்து குதிரையில் தூக்கிட்டு போவான்." சகுந்தலா கண்களில் கனவு மின்ன பேசினாள். சர்வேஸ்வரன், உதயரேகா காதல் கதை சின்னவர்கள் அனைவருக்கும் தெரியும்.



"அப்படி எல்லாம் தூக்கி கொடுத்திட மாட்டோம். கல்யாணம் பண்ணி தான் அனுப்புவோம்." என்று சொன்ன உதயரேகா, "சரி, இப்பவே வேலையை ஆரம்பிக்காதே. இன்னும் நேரம் இருக்கு. வீட்டுக்கு போயிட்டு வா. பாவம் விஜயா தனியே கிடந்து கஷ்டப்படுவாள்." என்று சொல்ல...



"சரிங்க அத்தைம்மா." என்ற சகுந்தலா காபியை பருக ஆரம்பித்தாள்.



உதயரேகா கணவனுக்குக் காபியை கொடுத்துவிட்டு அவன் அருகில் அமர்ந்தாள். அங்கு வரவேற்பறையில் தாமோதரன், மந்தாகினி இருவரும் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தனர். இருவருமே கரண், ரக்சி திருமணங்களைப் பார்த்துவிட்டு, பின்பு அவர்களது குழந்தைகளையும் பார்த்து விட்டு தான் இறைவனடி சேர்ந்தனர். இறக்கும் தருவாயில் மந்தாகினி சின்ன மகனுக்கு நன்றி கூறிவிட்டு தான் சென்றார். குடும்பத்தை அன்போடு ஒருங்கிணைத்து அரவணைத்துச் சென்றது அவன் தானே. அந்த நிறைவு பெற்றோர் இருவருக்கும்...



"சக்கு வீட்டுக்கு போயிட்டாளா?" சர்வேஸ்வரன் மனைவியிடம் கேட்டான்.



"ஆமா, சொல்ல சொல்ல கேட்காம... காலையில் சீக்கிரமே எழுந்து வந்து பூஜைக்கு வேண்டிய பூ பறித்து, விளக்கு தேய்த்து, சாமி படங்களுக்கு அலங்காரம் பண்ணின்னு எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறாள்." உதயரேகா அலுத்துக் கொள்வது போல் கூறினாலும் அதில் பெருமையே இருந்தது.



"எல்லோரையும் நல்லா வளர்த்து ஆளாக்கியாச்சு. ஆனா இவள் மட்டும் மாறாம அப்படியே இருக்கிறாளே." சர்வேஸ்வரனுக்குச் சகுந்தலாவை நினைத்துக் கவலையாக இருந்தது.



"நானும் இப்படித்தானே இருந்தேன். நீங்க என்னை மாத்தலையா?"



"நீ வேறு... நீ நல்ல படிக்கிறவ, சமையல் கலை அத்துப்படி, அதைவிட ஐந்தறிவு ஜீவன்கள் கிட்ட நீ காட்டும் பாசம் உன்னை இன்னும் வேற லெவலுக்குக் கொண்டு போயிருச்சு. ஆனால் சக்குக்கு?" சர்வேஸ்வரன் உண்மையான கவலையுடன் சொன்னான்.



சர்வேஸ்வரன் சொல்வது போல் சகுந்தலாவுக்கு எந்தத் திறமையும் இல்லை. பத்தாவது பொதுத் தேர்வில் தோல்வியுற்று... அதை நிறைய முறை முயற்சித்து... இதோ இப்போது வரை அவள் பத்தாவதில் தேர்ச்சி அடையவில்லை. சர்வேஸ்வரன் பெண்களுக்குக் கல்வி முக்கியம் என்று சகுந்தலாவுக்கு என்று தனியே டியூசன் கூட வைத்துப் பார்த்தான். ம்ஹூம், எதுவும் சகுந்தலாவை அசைக்கவில்லை. அத்தோடு அவள் படிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டாள். அதுவும் சந்தோசமாக... ஆம், அவள் பத்தாவது வரை வந்ததே அதிசயம் தான்.



சரி, படிப்பு தான் வரவில்லை. மற்ற விசயங்களில் திறமை இருக்கிறதா என்றால்... அதுவும் கிடையாது. சகுந்தலாவுக்கு இன்னமும் உப்புக்கும் சர்க்கரைக்கும், கடலை பருப்புக்கும் துவரம் பருப்புக்கும் வித்தியாசம் தெரியாது. அது மட்டுமல்ல வேற எதுவுமே அவளுக்குச் சரியாக வராது. தையல் கலை, நடனம், பாட்டு, கராத்தே, விளையாட்டு என்று எத்தனையோ முயற்சித்துப் பார்த்தும் ஒன்றும் அவளிடம் செல்லுபடியாக வில்லை. மாறாக அவளுக்குச் சொல்லி கொடுக்க வந்த வாத்தியார்கள் தான் பயந்து ஓடி விட்டனர். அந்தளவிற்கு அவள் மக்கு...



அவளிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல விசயம்... மாடு போன்று எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வாள். அதனாலேயே என்னவோ சிக்கென்று அவளுக்கு உடலமைப்பு இருக்கும். டஸ்கி ஸ்கின் என்று சொல்வார்களே அது போன்றதொரு தேன் நிறம் உடையவள். அது கூட அவளுக்கு அழகாக, கவர்ச்சியாகத் தான் இருந்தது. மொத்தத்தில் அவள் ஒரு 'டஸ்கி ப்யூட்டி'...



"அதை நினைச்சு தான் எனக்கும் கவலையா இருக்கு?" உதயரேகாவுக்கும் அந்தக் கவலை இருந்தது.



மற்ற பிள்ளைகள் எல்லோரும் அவர்கள் துறையில் திறமையுடன் வெற்றி பெற்றுக் கொண்டு வருகின்றனர். சர்வேஸ்வரன், உதயரேகாவிற்கு மூத்தது மகன் என்று அனைவருக்கும் தெரிந்ததே. அவன் பெயர் சக்தீஸ்வரன். அதுவும் தெரிந்ததுவே. அவன் படித்து முடித்து விட்டு தந்தையின் தொழிலை கையில் எடுத்தவன் அதை அழிக்காது மேலும் பெருக்கத்தான் செய்கின்றான். அவனுக்கு ஆறு வயதாக இருக்கும் போது தான் பத்மினி பிறந்தாள். அவள் இப்போது பயிற்சி மருத்துவராக இருக்கின்றாள். அவளிடம் திருமணத்திற்குச் சம்மதிக்க வேண்டி பேசி வருகின்றனர். ஆனால் மேலே படிக்க வேண்டும் என்று அவள் மறுத்து வருகிறாள்.



ஆகாஷ், வித்யாவிற்கு மூத்தது மகள், பெயர் வினிதா. அவளும் படித்து முடித்துவிட்டு தந்தையின் தொழிலை திறம்பட நடத்தி வருகிறாள். அவளுக்கு இப்போது தான் திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். வித்யாவின் குழந்தை ஏக்கத்தைக் கண்ட கடவுள் அவளுக்கு வரத்தை வாரி வாரி கொடுத்தார் போலும்... வினிதாவுக்கு அடுத்து இரு வருட இடைவெளியில் இரட்டையர்கள் ஆதித்யா, ஆதிரை பிறந்தனர். அவர்கள் இருவரும் பேசன் துறையில் தேர்ச்சி பெற்று மும்பையில் புகழ் பெற்ற பேசன் டிசைனரிடம் உதவியாளராகப் பணியாற்றி வருகின்றனர். இரட்டையர்கள் எல்லா விசயத்திலும் ஒன்று போல் இருப்பர்.



ஆனால் சகுந்தலா மட்டுமே ஆரம்பித்த இடத்தில் அப்படியே இருக்கின்றாள். சகுந்தலாவும் அவர்கள் வளர்த்த பெண் தானே. இந்தக் காலத்தில் இப்படிப் பெண் பிள்ளை இருப்பது சரியில்லையே. அந்தக் கவலை அவர்களுக்கு...



*************************



அதே தான் சகுந்தலாவின் வீட்டில் அவளது அன்னை விஜயா கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது கணவர் கணபதி தான் மனைவியைத் தேற்றிக் கொண்டு இருந்தார்.



"அவளுக்குன்னு ஒருத்தன் இனிமேலா பிறக்க போறான். எங்கேயாவது பிறந்து இருப்பான்?" கணபதி மனைவியைத் தேற்றினார்.



"இப்போ அதுவா பிரச்சினை. சக்குவை விடச் சின்னவ கனி. அவ காதலிச்சிட்டு வந்து கல்யாணம் பண்ணி வையின்னு நிலையா நிக்குறா. இப்போ நாம கனியை பார்க்குறதா? சக்குவை பார்க்குறதா?" விஜயா கவலை கொண்டார்.



"ரொம்ப யோசிக்காத. நடக்குறது நடக்கும்." கணபதியால் வேறு என்ன கூற முடியும்.



"அம்மை..." என்றபடி சகுந்தலா அங்கே வர... இருவரும் முகத்தை மகிழ்ச்சியாய் வைத்து கொண்டனர்.



சகுந்தலாவோ அவர்களது கண்களில் தெரிந்த கவலையைக் கண்டு கொண்டாள். அதில் எல்லாம் அவள் கெட்டிக்காரி தான்.



"இப்போ என்ன கப்பலா கவுந்து போச்சு. இப்படி இருக்கீக? கனிக்கு முதல்ல கல்யாணத்தைப் பண்ணி வையுங்க."



"உனக்குப் பண்ணாம எப்படிடி அவளுக்குக் கல்யாணத்தைப் பண்ண முடியும்?" விஜயா மகளிடம் கோபமாய்க் கேட்டார்.



"அப்போய், அம்மை கிட்ட சொல்லுங்க. நான் மகாராசனுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன்னு." அவள் வெகுளியாய் சொல்ல... விஜயா வெளிப்படையாகத் தலையில் அடித்துக் கொள்ள... கணபதி மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டார்.



"உன்னைச் சொல்லி குத்தம் இல்லைடி. உன்னை மாடு மாதிரி வளர்த்து விட்டிருக்கேன் பாரு. என்னைய சொல்லணும். எதுலயும் கூறு கிடையாது" விஜயா தன்னையே நொந்து கொண்டார்.



"அம்மை, காலையில எவ்வளவு வேலை கெடக்கு? அதைவுட்டு போட்டு எதுக்கு இப்படி மசமசன்னு பேசிக்கிட்டு இருக்கீக? போங்க, போய் வேலையைப் பாருங்க." என்ற சகுந்தலா வீட்டின் பின்புறம் துணி துவைக்கச் சென்றாள்.



"விஜயா, நானும் கிளம்பறேன்." கணபதி வேலைக்குச் சென்று விட்டார். விஜயா சமையலறைக்குச் சென்றார்.



கணபதியும், விஜயாவும் சர்வேஸ்வரனிடம் வேலை கேட்டு வந்தவர்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த நெசவு தொழில் வீழ்ந்து விட்டதால்... பிழைப்பு தேடி பட்டணம் வந்தனர். ஆசிரம நிர்வாகியின் சிபாரிசின் பேரில் இங்கே வந்தனர். கையில் மூன்று குழந்தைகள், வயிற்றில் மூன்று மாத சிசு என்று வந்து நின்ற தம்பதியினரை கண்டு இரக்கம் கொண்டு சர்வேஸ்வரன் வேலைக்கு எடுத்துக் கொண்டான்.



கணபதி அவனுக்கு ஓட்டுநர் வேலை பார்க்க... விஜயா சமையல் பொறுப்பைப் பார்த்துக் கொண்டார். ஆண்டுகள் செல்ல செல்ல கணபதி சர்வேஸ்வரனின் நம்பிக்கைக்கு உரியவராகிப் போனார். அதே போன்று தான் விஜயாவும். அதனாலேயே அவர்களது குழந்தைகளை இவர்கள் படிக்க வைத்து ஆளாக்கினர்.



கணபதி, விஜயா இவர்களின் மூத்த மகள் இந்திராணி. நன்றாகப் படிக்கக் கூடியவள். பனிரெண்டாம் வகுப்பில் பள்ளிக்கூடத்தில் முதல் மாணவியாக வந்தவள். சர்வேஸ்வரன் அவளை மருத்துவராகச் சொன்னான். அவளோ வீட்டின் நிலையை மனதில் கொண்டு சாதாரண டிகிரி எடுத்து படித்தாள். பின்பு அதிலேயே மேலே படித்துக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிக்கு சேர்ந்தாள். உடன் வேலை பார்க்கும் மணிவாசகம் காதல் என்று வந்து நிற்க... அவள் பயந்து போய்ச் சர்வேஸ்வரனிடம் தான் முதலில் சொன்னாள். சர்வேஸ்வரன் மணிவாசகத்தினை விசாரித்துப் பார்த்து திருப்தி கொண்டு... அவனுக்கே இந்திராணியைத் திருமணம் செய்து வைத்தான். அவளுக்கு வேண்டிய அனைத்தையும் சீரும் சிறப்புமாய்ச் செய்தான். இவர்களுக்கு மதி என்கிற எட்டு வயது மகள் இருக்கின்றாள்.



அடுத்து நாராயணன்... இவனும் நன்றாகப் படிக்கக் கூடியவன். திறமைசாலி... ஆடிட்டராக இருக்கின்றான். தனியே அலுவலகம் வைத்து திறம்பட நடத்தி வருகின்றான். சர்வேஸ்வரனின் நிறுவன கணக்குகளை எல்லாம் இப்போது இவன் தான் பார்த்துக் கொள்கின்றான். அத்தோடு சர்வேஸ்வரனின் சிபாரிசில் வேறு சில நிறுவனங்களின் கணக்குகளையும் பார்த்து வருகின்றான். இன்னமும் திருமணமாகவில்லை. தங்கைளுக்கு முடித்துவிட்டுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவன் இருக்கின்றான்.




நாராயணக்கு அடுத்து தான் சகுந்தலா. சகுந்தலாவுக்கு அடுத்து கன்னிகா. கன்னிகாவும் நன்றாகப் படிக்கக் கூடியவள் தான். நன்றாகப் படித்து முடித்து இப்போது ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறாள். உடன் வேலை பார்க்கும் சஞ்சயை காதலித்து வருகிறாள். சஞ்சய் வீட்டில் திருமணத்துக்கு அவசரப்படுத்துவதால் இப்போது தான் தனது காதலை பற்றிப் பெற்றோரிடம் சொல்லி இருக்கிறாள். அவளது காதல் விசயம் இன்னமும் சர்வேஸ்வரனுக்குத் தெரியாது. ஏனெனில் இடையில் நந்தி போன்று சகுந்தலா இருக்கின்றாளே. அந்தக் கவலையில் பெற்றோர் இருந்தனர்.
 

Sasimukesh

Administrator
"அம்மை, துணி எல்லாம் துவைச்சாச்சு. பாத்திரங்கள் எல்லாம் கழுவி போட்டாச்சு. வூடு பெருக்கி, துடைச்சாச்சு. எல்லா வேலையும் முடிச்சிட்டேன். நான் பெரிய வூட்டுக்கு போயிட்டு வர்றேன். நீங்க அதிக வேலை பார்க்காம ஓய்வு எடுங்க." சகுந்தலா ஈர கைகளைத் துடைத்தபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.



விஜயாவுக்கு ஆஸ்துமா வந்ததில் இருந்து சர்வேஸ்வரன் வீட்டில் சமையல் வேலை பார்ப்பது இல்லை. அவர்களே ஓய்வு கொடுத்து அனுப்பி விட்டனர். அவருக்கான மருத்துவச் செலவுகள் கூடச் சர்வேஸ்வரன் தான் பார்த்துக் கொள்கின்றான்.



"சரி, சரி... இன்னைக்காவது நீ சின்னய்யா கிட்ட திட்டு வாங்காம வூடு வந்து சேரு." விஜயா மகளை எச்சரித்தார்.



அவர் சின்னய்யா என்றது வேறுயாரையும் இல்லை. சக்தீஸ்வரனை தான். சகுந்தலா தனது அசட்டுத்தனத்தால் அவனிடம் அதிகம் திட்டும் வாங்குவாள். தலையில் கொட்டும் வாங்குவாள். அதைத் தான் விஜயா எச்சரித்தது. .



"அவுக நான் என்ன செஞ்சாலும் திட்டத்தான் செய்வாக. நீங்க விடுங்க." என்று சாதாரணமாகச் சொன்னவள் சென்று விட்டாள்.



விஜயா மகளைப் பார்த்தபடி நின்றிருந்தார். அப்போது மகன் நாராயணன் அங்கு வந்தான். வேலைக்குக் கிளம்பி வந்தவனைக் கண் நிறையப் பார்த்து ரசித்தார் அந்த அன்பு தாய்.



"தோசை சுட்டு தரவாப்பா?" என்றபடி அவர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்தார்.



"நீங்க இருங்கம்மா. நானே தோசை சுட்டுக்கிறேன்." என்றவன் அம்மாவை நாற்காலியில் அமர்த்தி விட்டுத் தோசை சுட ஆரம்பித்தான்.



நாராயணன் பெரிய அலுவலகம் வைத்து அதைத் திறம்பட நடத்தி வருபவன். அந்த அகங்காரம் சிறிதுமின்றி அவன் தன்மையுடன் தான் நடந்து கொள்வான். ஏனெனில் அவன் வந்த பாதையை மறக்கவில்லை. அதே போன்று சர்வேஸ்வரன் மீதான நன்றியையும் அவன் மறக்கவில்லை. அவனது ஒரே ஒரு வருத்தம்... இன்னும் இந்த அவுட் ஹவுசில் இருப்பது தான். இப்போது அவன் கை நிறையச் சம்பாதிக்கின்றான். சொந்தமாய்ப் பெரிய வீடு வாங்கும் அளவிற்கு வசதி இருக்கிறது. எல்லாம் இருந்தும் இங்கே இருக்க வேண்டிய நிலை. அது மட்டுமே அவனது வருத்தம்.



கணபதி தான் மகனது விருப்பத்திற்குத் தடை போட்டு விட்டார். சர்வேஸ்வரன் எந்நேரம் கூப்பிட்டாலும் தான் முதல் ஆளாய் சென்று நிற்க வேண்டும் என்பதற்காகவே அவர் இங்கே இருந்து வர மறுத்து விட்டார். அவர் தான் வெளியில் செல்ல மறுத்தார். மகனை தனியே வீடு எடுத்து செல்ல அவர் அனுமதி கொடுக்கத்தான் செய்தார். ஆனால் மகனுக்குத் தான் அதில் விருப்பம் இல்லை.



தனக்கும், அன்னைக்கும் தோசையைச் சுட்டு எடுத்தவன் அதை அன்னைக்குப் பரிமாறிவிட்டு தானும் உண்ண அமர்ந்தான்.



"சக்கு பெரிய வீட்டுக்கு போயிட்டாளா?" அவன் கண்களை வீட்டினுள் சுழற்றியவாறு கேட்டான்.



"இப்போ தான் போனாள்."



"இவள் எதுக்கு அங்கே வேலைக்குப் போகிறாள்? இப்போ தான் நான் சம்பாதிக்கிறேனே." தங்கை அங்கே வீட்டு வேலைக்குச் செல்வது கண்டு அவனுக்கு அத்தனை வருத்தம்.



"வூட்டு வேலை பார்க்குறது ஒண்ணும் கேவலம் இல்லை நாராயணா."



"அப்படிச் சொல்லலைம்மா. அங்கே யாராவது?" அவன் தயக்கத்துடன் நிறுத்தினான்.



"யாரும் எதுவும் சொல்ல போறது இல்லை. ஐயா, அம்மா தங்கமான மனுசங்க. புள்ளைங்களும் அதே மாதிரி தங்கம்."



அன்னை கூறுவது போல் எல்லோரும் நல்லவர்கள் தான். அவர்களை மதித்து மரியாதை கொடுப்பர். வேலைக்காரர்கள் என்று அலட்சியம் இருந்தது கிடையாது. அப்படி நினைத்திருந்தால் அவர்களது பிள்ளைகள் படித்த பள்ளியில் இவர்களையும் படிக்க வைத்திருக்க மாட்டார்கள். இதில் விதிவிலக்கு சகுந்தலா மட்டுமே. ஆங்கிலம் அவளோடு தகராறு செய்ததில்... அவள் அந்தப் பள்ளியில் படிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளியில் தமிழ் வழி கல்வி முறையில் படித்தாள்.



சர்வேஸ்வரன் குடும்பத்தினர் அனைவரும் அன்பாக இருந்தாலும்... சக்தீஸ்வரன் மட்டும் அதில் தனித்து இருந்தான். அதற்காக அவன் இவர்களை மதியாது இருந்தது கிடையாது. ஆடிட்டரான நாராயணனுக்கு அதற்குரிய மரியாதையைச் சக்தீஸ்வரன் கொடுக்கத்தான் செய்தான். அதே போன்று தான் இந்திராணி, கன்னிகா இருவருக்கும் மதிப்பு, மரியாதை அவனிடத்தில் இருக்கும். மூவரையும் அவன் துச்சமாக நடத்தியதும் கிடையாது.



ஆனால் சக்தீஸ்வரனுக்குச் சகுந்தலாவை மட்டும் கண்ணில் காட்ட இயலாது. அவன் அவளைக் காணும் போது எல்லாம் திட்டுவான். சிலசமயம் நாராயணன் அதைக் கேட்க நேரிடும் போது அவனுக்கு உள்ளுக்குள் சுருக்கென்று வலிக்கும். என்ன தான் இருந்தாலும் சகுந்தலா அவனது தங்கை அல்லவா! அதை எப்படி அன்னையிடம் கூற? அவன் அமைதியாக இருந்துவிட்டான்.



"ம்மா, காபி..." கன்னிகா உறக்கம் கலையாது வந்தாள். நேற்று அவளுக்கு இரவு நேர பணி.



"கனி, நீயே காபி போட்டுக்கக் கூடாதா?" நாராயணன் தங்கையைக் கடிந்தான்.



"காபி மட்டும்ண்ணா. மத்தது எல்லாம் நான் தானே பண்றேன்." என்று அவள் செல்லமாய்ச் சிணுங்க... விஜயா காபி போட எழ போனார்.



"நீங்க இருங்கம்மா." நாராயணன் பாதிச் சாப்பாட்டில் எழுந்து கை கழுவி விட்டு காபி கலந்து கொண்டு வந்து தங்கையிடம் கொடுத்தான்.



"ஆம்பள புள்ள அவன் வேலை பார்க்குறான். பொட்ட புள்ள நீ என்னடான்னா பல்லு விளக்காம காபி குடிக்குற? போற வூட்டுல கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்கப் போற." விஜயா மகளை முறைத்தபடி சத்தம் போட்டார்.



"ம்மா, சஞ்சய் நல்லா காபி போடுவான்." என்று கன்னிகா கண்சிமிட்டி சொல்ல...



"யாரது சஞ்சய்?" நாராயணன் அன்னையைக் கேள்வியாய் பார்த்தான்.



விஜயா திருதிருவென விழித்தார். அவர் இன்னமும் மகனிடம் கன்னிகா காதல் விசயத்தைச் சொல்லவில்லை.



"அது வந்து..." விஜயா ஆரம்பிக்கும் போதே கன்னிகா இடையிட்டு,



"நான் சொல்றேன்ம்மா..." என்றவள் அண்ணன் புறம் திரும்பி, "சஞ்சய் என் கூட வேலை பார்க்கிறான். நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம். இப்போ சஞ்சய் வீட்டில் அவனுக்குக் கல்யாணம் பேசுறாங்க. அதான் அப்பா, அம்மா கிட்ட சொன்னேன்." என்று தைரியமாகத் தனது காதலை சொன்னாள்.



நாராயணன் காதலுக்கு எதிரி கிடையாது. அப்படியே எதிர்த்தாலும் தங்கை கேட்க போவதும் இல்லை. ஆனால் அவனது கவலை அது கிடையாது. அவனது கவலை சகுந்தலா பற்றித் தான்.



"சகுந்தலா இருக்கிறாளே." அவன் கவலையுடன் சின்னத் தங்கையைப் பார்த்தான்.



"அப்போ சீக்கிரமே அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணி வைங்க. இல்லைன்னா என்னோட கல்யாணத்தை முடிங்க. உங்களுக்கு மூன்று மாதம் தான் டைம்." என்ற கன்னிகா எழுந்து சென்றுவிட்டாள்.



"என்னடா இப்படிச் சொல்லிட்டு போறா?" விஜயாவுக்குக் கோபமாக வந்தது.



"மூணு மாசம் இருக்குல்ல. பார்க்கலாம்மா." அன்னையைத் தேற்றி விட்டு நாராயணன் உண்டு விட்டு அலுவலகம் கிளம்பி விட்டான்.



விஜயா மனவருத்தத்துடன் அமர்ந்திருந்தார்.



*******************************



"வினி, மினி..." சகுந்தலா கத்தியபடி அந்த அறைக்குள் நுழைந்தாள். அவளது கரத்தில் காபி கோப்பைகள் அடங்கிய தட்டு இருந்தது.



"குட்மார்னிங் சக்கு." என்றபடி குளியலறையில் இருந்து வந்தாள் வினிதா. அவள் கையில் காபி கோப்பையைக் கொடுத்த சகுந்தலா,



"மினி எங்கே?" என்று கேட்டாள். அவள் பத்மினியை தான் அப்படிக் கேட்டாள்.



"பால்கனியில் யோகா செய்து கொண்டிருப்பாள். போய்ப் பார்." வினிதா சொன்னதும் சகுந்தலா பால்கனி பக்கம் சென்று பார்த்தாள். அங்கே குளித்து முடித்துப் புத்தம் புது மலராய் யோகா செய்து கொண்டிருந்தாள் பத்மினி.



"மினி, காபி..." சகுந்தலாவின் குரல் கேட்டு திரும்பிய பத்மினி காபியை எடுத்து கொண்டாள். வினிதாவும் அங்கே வந்து விட்டாள்.



"உனக்கு எத்தனை தடவை சொல்றது சக்கு? இதை எல்லாம் நீ செய்யக் கூடாதுன்னு..." பத்மினி அவளைக் கண்டு கண்டித்தாள்.



"ஏன் செஞ்சா என்ன? முன்ன இதைத் தானே செஞ்சிட்டு இருந்தேன்." சகுந்தலா புரியாது சொன்னாள்.



"முன்னே உங்கம்மாவுக்கு உதவியா இருந்த. அது வேற. இப்போ நீ இதை எல்லாம் செய்யக் கூடாது."



"நீங்க எல்லாம் படிச்சுக் கை நிறையச் சம்பாதிக்கிறீங்க. நான் என்ன படிக்கவா செஞ்சேன்? அதான் இந்த வேலை பார்க்கிறேன். இதுல வர்ற வருமானத்துல தான் நான் எனக்கு வேண்டியது எல்லாம் வாங்குவேன்." சகுந்தலாவின் தன்மானம் பத்மினிக்குப் புரியத்தான் செய்தது.



"வேற வேலை வாங்கித் தரவா?" பத்மினி தன்மையாகக் கேட்டாள்.



"இதுவே நல்லா தான் இருக்கு." என்ற சகுந்தலா சென்று விட்டாள்.



"இவளுக்கு எப்படிப் புரிய வைக்கிறதுன்னு தெரியலை. வீட்டு வேலை பார்த்தால் வர போற வரன் எல்லாம் கீழாய் சற்று இறக்கமாய் நினைப்பாங்க. அது இவளுக்குப் புரிய மாட்டேங்குதே."பத்மினி கவலையுடன் கூற...



"நம்ம வீட்டில் தானே வேலை பார்க்கிறாள். கவலையை விடு." வினிதா தங்கையைத் தேற்றினாள்.



எல்லோருக்கும் காபி கொடுத்த சகுந்தலாவை வித்யா அவளது கரம் பற்றித் தன்னருகில் அமர வைத்து கொண்டவள், "நேத்து நான் வச்சு விட்ட மெகந்தி எப்படி இருக்குன்னு பார்ப்போம்?" என்று கேட்டபடி சகுந்தலாவின் கரத்தினைப் பற்றிப் பார்த்தாள்.



வித்யா இப்போது எல்லாம் முழுமையாக மாறி விட்டாள். மூன்று குழந்தைகளின் தாய் என்பதால் இயல்பாகப் பொறுப்பும், பொறுமையும் வந்திருந்தது. அவளது மூன்று குழந்தைகளுக்கு மட்டுமல்ல, சக்தீஸ்வரன், பத்மினி, இந்திராணி, நாராயணன், சகுந்தலா, கன்னிகா என்று அனைவருக்கும் அவள் அன்னை தான். ஏனெனில் குழந்தை இல்லாது வருந்தியவளுக்குத் தானே குழந்தை செல்வங்களின் அருமை தெரியும். குழந்தைகள் ஒன்பது பேருமே அவளது செல்லங்கள் தான். சிறு வயது முதல் ஒன்பது பேரும் அவளிடம் ஒட்டி கொண்டே தான் இருப்பார்கள்.



"எங்கே அத்தைம்மா? என்னோட கைக்கு நல்லாவே செவக்கலை." என்று சகுந்தலா வருத்தம் கொண்டாள். அவளது தேன் நிறத்திற்கு மருதாணி சிவப்பு அழகாகத் தான் இருந்தது.



"யார் சொன்னது சிவக்கலைன்னு? ரொம்ப அழகா சிவந்திருக்கு பார்." வித்யா உண்மையாய் சொல்ல...



"சத்தியமாவா அத்தைம்மா?" சகுந்தலா விழிகளில் சந்தோசம் மின்னியது.



"ஆமாடா சக்கு." வித்யா வாஞ்சையாய் அவளது கன்னத்தை வருடினாள்.



அப்போது தான் சக்தீஸ்வரன் சோபாவில் வந்தமர்ந்தான். கையில்லாத பனியன், டிராக்சூட் அணிந்திருந்தவனின் மேனியில் இருந்து வியர்வை துளிகள் வடிந்தபடி இருந்தது. அவனது இடதுகை அலைப்பேசியைக் காதிற்குக் கொடுத்து இருந்தது. வலதுகை தோளில் இருந்த துண்டால் வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்தது. அவன் என்ன பேசுகின்றான் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அந்தளவிற்கு அவன் ரகசியமாகச் சன்ன குரலில் பேசினான்.



"கேப்டன் வந்துட்டாரு..." சகுந்தலா சக்தீஸ்வரனை கண்டதும் எழுந்து சமையலறைக்குச் சென்றாள்.



சிறுவயதில் எல்லோரும் சேர்ந்து விளையாடும் போது சக்தீஸ்வரன் தான் சகுந்தலா இருக்கும் குழுவின் தலைவன். அதனால் அவள் அவனைக் கேப்டன் என்று அழைத்து அழைத்து... அப்படியே அவளுக்குப் பழகி போய்விட்டது. அது இன்றுவரை தொடர்கிறது.



சகுந்தலா மீண்டும் வரவேற்பறைக்கு வந்த போது அங்கு யாரும் இல்லை. சக்தீஸ்வரன் மட்டும் அமர்ந்து இருந்தான். அவள் அவனுக்கான கோப்பையை அவனிடம் நீட்டினாள். அவனும் அவளது முகம் பார்க்காது கோப்பையை எடுத்தவன் அதிலிருந்த பானத்தை ஒரு வாய்ப் பருகினான். அடுத்தக் கணம் அவன் தூவென்று துப்பினான். அவனது முகம் ஆத்திரத்தில் ஜிவுஜிவென்று சிவந்தது.



'கேப்டன் ஏன் இப்படிச் செத்த எலி கணக்கா வெளுத்து போயி இருக்காக?' சகுந்தலா எப்போதும் போல் அவனது வெள்ளை நிறத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.



'கேப்டன் முகம் ஏன் திடீர்ன்னு செவக்குது?' அப்போது தான் அவனது முகம் சிவந்திருப்பதை அவள் கவனித்தாள்.



'ரைட்டூஊஊ... வேங்கையை வேப்பங்குச்சி வச்சு குடைஞ்சிட்டோம் போல. இன்னைக்கு வேங்கை வெறிக் கொண்ட வேங்கையாய் மாறி என்னைய குதற போகுது.' என்றவள் பிறகு தான் தான் பேசிய வார்த்தைகளை உணர்ந்தாள்.



'அட, நமக்குக் கூட நல்லா வசனம் பேச வருது. சினிமா பார்க்குறதும் நல்லதுக்குத் தான் போலிருக்கு.' அவள் மனதிற்குள் அத்தனையும் பேசி கொண்டு வெளியில் அப்பாவி போல் முகத்தை வைத்தபடி அவனைப் பார்த்திருந்தாள்.



சகுந்தலா முகத்தையே உற்றுப் பார்த்திருந்த சக்தீஸ்வரன் அடுத்த நொடி ஆத்திரத்துடன் தனது கரத்தில் இருந்த பானத்தை எடுத்து அவளது முகத்தின் மீது வீசியெறிந்து இருந்தான்.



தொடரும்...!!!
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 2



சக்தீஸ்வரன் தனது கையிலிருந்த பானத்தைச் சகுந்தலாவின் முகத்தை நோக்கி தான் வீசினான். ஆனால் பானம் தான் அவள் மீது படவில்லை. அடுத்து அவன் என்ன செய்வான்? என்பதை அவள் அறிந்திருந்தாளோ என்னமோ! அவள் சட்டென்று நகர்ந்து விட்டாள். அந்தச் சூடான பானம் தரையில் விழுந்து வீணாய்ப் போனது. அதற்கும் சக்தீஸ்வரன் அவளைக் கண்டு தீயாய் உறுத்து விழித்தான்.



'நான் எல்லாம் சனி பகவானுக்கே சர்க்கஸ் காட்டுறவ. என் கிட்டயேவா?' அவள் மனதிற்குள் தெனாவெட்டாகச் சொல்லி கொண்டாள். வெளியில் அதே அப்பாவித்தனமாய் விழித்தாள்.



சகுந்தலாவின் சேட்டைகளை அவன் அறியாதவனா என்ன! இத்தனை வருடங்களாய் அவன் அவளுடன் தானே வளர்ந்தான். அவளைப் பற்றி அ முதல் ஔ வரை அனைத்தும் அறிந்தவன் அவன். தனது குறி தப்பியது ஒருபுறம் கோபம் என்றால்... வெளியில் அப்பாவியாக நின்றிருக்கும் சகுந்தலா மனதிற்குள் எப்படி எல்லாம் குத்தாட்டம் போட்டு கொண்டிருப்பாள்? என்பதை உணர்ந்தவனாய் அவனுக்கு மறுபுறம் ஆத்திரம் வந்தது.



"சாந்திக்கா..." அவன் கத்திய கத்தலில் சமையல் வேலை செய்யும் பெண்மணி சாந்தி மட்டுமல்லாது வீட்டில் இருந்த அனைவரும் அங்குக் குழுமி விட்டனர்.



தரையில் கொட்டியிருந்த பால், அப்பாவியாய் விழித்துக் கொண்டிருக்கும் சகுந்தலா, அவளை ஆத்திரத்துடன் உறுத்து விழித்துக் கொண்டிருக்கும் சக்தீஸ்வரன் என்று எல்லாவற்றையும் பார்த்த வீட்டினருக்கு விசயம் புரிந்துவிட்டது. சகுந்தலா சக்தீஸ்வரனிடத்தில் ஏதோ அவளது லீலையை அரங்கேற்றி இருக்கின்றாள் என்று...



"சின்னச் சார்..." சாந்தி பயத்துடன் அங்கு வந்து நின்றார்.



"உங்க கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன்? இவள் கிட்ட எதுக்கு என்னோட டிரிங்க்சை கலக்க சொன்னீங்க?" சக்தீஸ்வரன் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் பற்களைக் கடித்தான்.



'ஆத்தி, அப்போ சக்கு கேட்டது இதுக்குத் தானா?' சாந்தி மனதிற்குள் அதிர்ந்து தான் போனார். ஏனெனில் சகுந்தலா கேட்ட பொருள் அப்படிப்பட்டது.



"என்னத்தைடி கலந்த?" சக்தீஸ்வரன் கோபத்துடன் சகுந்தலாவை கண்டு கேட்டான்.



"எதுவாக இருந்தாலும் தன்மையா கேளு சக்தி." சர்வேஸ்வரன் மகனிடம் தன்மையாய் சொல்ல...



"கண்ணா, எதுக்கு இவ்வளவு கோபம்? சக்கு வேணும்ன்னு செஞ்சிருக்க மாட்டாள்." உதயரேகா வேறு சகுந்தலாவுக்குப் பரிந்து கொண்டு வந்தாள்.



"சக்தி, சக்கு அப்பாவி பொண்ணுடா." ஆகாஷும் பெண்ணவளுக்குப் பரிந்து கொண்டு வந்தான்.



"ஆமான்டா..." இது வித்யா...



சக்தீஸ்வரன் எல்லோரையும் திரும்பி பார்த்து முறைத்த முறைப்பில் எல்லோரும் வாயை மூடி கொண்டனர். பனிரெண்டு வயது வரை இதே சக்தீஸ்வரன் எல்லோருடனும் இணக்கமாகச் சிரித்துப் பேசி அன்போடு தான் இருந்தான். எல்லா ஆண்பிள்ளைகளைப் போன்றே சக்தீஸ்வரனும் அதற்குப் பிறகு அப்படியே அமைதியாகி போனான். எல்லோரிடம் இருந்தும் ஒதுங்கி போனான். படிப்பு, வேலைப்பளு என்று அவனது வாழ்க்கை வேகமாக ஓட... அதன் பின்னே ஓட வேண்டிய கட்டாயம் அவனுக்கு. அது அவனது இயல்பை தொலைத்து அவனை இயந்திர மனிதனாக்கி விட்டது.



மாலை ஆறு மணியானால் தந்தை வேலை முடிந்து வீட்டிற்கு வந்துவிடுவார். ஆனால் அவன் அப்படி இல்லை. அதற்கு அப்புறமும் உழைப்பவன். சிலசமயம் அவனது உழைப்பு நள்ளிரவை தாண்டியும் போகும். தொழில் தொழில் என்று எப்போதும் அவனது சிந்தனை தொழிலை பற்றித் தான் இருக்கும். அது தான் அவனை இந்தச் சின்ன வயதில் இத்தனை உயரத்திற்கு அழைத்து வந்திருக்கிறது.



வீட்டினர் அனைவருக்கும் அவன் சிம்மசொப்பனம் தான். அப்படிப்பட்ட அவனைச் சுண்டெலி சீண்டி விளையாடுவதைக் கண்டு அவன் சும்மா இருப்பானா?



"கேட்கிறேன்ல, சொல்லுடி." சக்தீஸ்வரன் உரும...



"நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படிக் கத்துறீக கேப்டன்? உங்க பொரட்டா மாவை தான் பால்ல கலக்கி கொண்டு வந்தேன்." என்று சக்தீஸ்வரனை கண்டு பயப்படாது உண்மையைச் சொல்லியவள் சாந்தி புறம் திரும்பி, "யக்கா, நீ தானே பொரட்டா மாவை எடுத்து கொடுத்த?" என்று சாந்தியை வேறு அவனிடம் கோர்த்து விட்டாள்.



'ஆத்தி, சின்னச் சார் குடிக்கிற புரோட்டீன் மிக்சையா இவள் கேட்டது? பொரட்டோ மாவுன்னு சக்கு கேட்டதும் நானும் மைதா மாவை எடுத்து கொடுத்துட்டேனே. இவள் புத்தி தெரிஞ்சும் மைதா மாவை எடுத்து கொடுத்த என் புத்திய பிஞ்ச செருப்பால அடிக்கணும்.' சாந்தி மனதிற்குள் புலம்பி கொண்டார்.



வீட்டில் இருந்தவர்களுக்கு விசயம் புரிந்துவிட்டது. வினிதா, பத்மினி இருவரும் களுக்கென்று சிரித்து விட்டனர். சர்வேஸ்வரன் உதட்டிலும் புன்னகை தோன்றியது.



"தத்தி, தத்தி... அதுக்குப் பெயர் புரோட்டீன் மிக்ஸ். புரோட்டா மாவு இல்லை." சக்தீஸ்வரன் அவளிடம் காய்ந்தான்.



"ஏதோ ஒண்ணு... ரெண்டும் ஒரே கலர்ல தானே இருக்கு. எதைக் கலந்தால் என்ன கேப்டன்?" என்று கேட்டவளை என்ன செய்தால் தகும்?



"இங்கே வா..." சக்தீஸ்வரன் வரவழைத்துக் கொண்ட அமைதியுடன் சொல்ல...



சக்தீஸ்வரன் எதற்கு அழைக்கின்றான் என்று சகுந்தலாவுக்குத் தெரியாதா என்ன? அவள் முடியாது என்பது போல் மறுப்பாய் தலையை இடமும் வலமுமாய் அசைத்தாள்.



"நீயா வந்தால் நல்லது. நானே வந்தால்..." என்றவனது பார்வையில் அத்தனை ருத்ரம் தெரிந்தது.



"வந்தால் தலையில் கொட்டுவீங்க கேப்டன்." அவள் பாவமாக அவனைப் பார்த்தாள்.



"வரலைன்னாலும் கொட்டுவேன்." அவன் ஓரடி முன்னே எடுத்து வைக்க...



சகுந்தலா வேறுவழியின்றி அவன் முன்னே போய் நின்றாள். அடுத்த நொடி சக்தீஸ்வரன் அவளது தலையில் நறுக்கென்று கொட்டினான். ஒன்று இல்லை அடுத்து அடுத்து என்று பல கொட்டுகள்... வீட்டினர் தடுக்கும் முன் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது.



"ஐயோ சக்கு, தலையில் ரத்தம் வருகிறது பார்." உதயரேகா தான் சகுந்தலாவின் தலையில் இருந்து இரத்தம் வருவதை முதலில் கண்டாள்.



"பாலில் மாவை மாத்தி கலந்ததுக்கு இப்படியா ரத்தம் வர்ற அளவுக்குக் கொட்டுவ?" சர்வேஸ்வரன் மகனை கடிந்து கொண்டான்.



சக்தீஸ்வரன் எப்போதும் போல் தான் சகுந்தலாவை கொட்டினான். எப்போதும் வராத இரத்தம் இன்று எப்படி வந்தது? அவன் தனது வலக்கையைப் பார்த்தான். அப்போது தான் அவனது மோதிர விரலில் இருந்த மோதிரம் அவனது விழிகளில் தென்பட்டது. ஒற்றை வைரக்கல் பதிக்கப்பட்ட மோதிரம். வைரக்கல் எடுப்பாகத் தெரிவதற்காக அது மோதிரத்தில் இருந்து சற்று மேலெழும்பியவாறு அமைக்கப்பட்டு இருந்தது. அந்தக் கல் தான் சகுந்தலாவின் தலையை ரத்தகளறி ஆக்கியிருக்கிறது.



"மாமோய், அத்தைம்மா எனக்கு ஒண்ணும் இல்லை. வலிக்கவே இல்லை." சகுந்தலா இருவரையும் கண்டு புன்னகைத்தாள். வலியை தாங்கும் வலிமை அவளுக்கு உண்டு போலும்!



"எருமை மாட்டுக்கு எப்படி வலிக்கும்?" அதற்கும் சக்தீஸ்வரன் அவளை நக்கல் அடித்தான்.



"சக்தி..." சர்வேஸ்வரன் கோபமாய் மகனை அதட்ட... சக்தீஸ்வரன் உதட்டை அலட்சியமாகச் சுளித்தான்.



"உன் கையில் ஏதுடா மோதிரம்?" உதயரேகா அப்போது தான் மகனது கைவிரலில் இருக்கும் மோதிரத்தை கவனித்தாள்.



சக்தீஸ்வரன் தங்க நகைகள் அணிந்து அன்னையவள் பார்த்தது இல்லை. அவனது இடதுகரத்தில் விலையுயர்ந்த கைக்கடிகாரம் மட்டுமே இருக்கும். அது தான் அவனது அதிகபட்ச ஆபரணம்.



அன்னை கேட்டதற்குச் சக்தீஸ்வரன் பதில் சொல்லாது தனது கையிலிருந்த மோதிரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.



"அம்மா கேட்கிறாங்கல்ல. பதில் சொல்லு சக்தி." சர்வேஸ்வரன் அழுத்தமான குரலில் சொன்னான்.



"ப்ச், தர்சனா போட்டு விட்டது." அவன் யாரின் முகத்தையும் பார்க்காது தனது வலக்கை ஆள்காட்டி விரல் கொண்டு நெற்றியை சுரண்டப்படி பதில் அளித்தான்.



தர்சனா கொடுத்தது என்றால்... அவள் பரிசாகக் கொடுத்தாள் என்று அர்த்தம். தர்சனா போட்டு விட்டாள் என்றால்... அது உரிமையை அல்லவா குறிக்கிறது. சர்வேஸ்வரன் யோசனையுடன் மகனை பார்த்தான். அப்போது சக்தீஸ்வரன் அலைப்பேசி ஒலித்தது. அதை எடுத்தவன்,



"யா சனா டார்லிங்..." என்று பேசியபடி அவன் அங்கிருந்து சென்று விட்டான்.



"எப்படிப் போறான் பார்? ஒரு மன்னிப்பு கேட்டானா?" உதயரேகா புலம்பி கொண்டே சகுந்தலாவின் காயத்திற்கு மருந்து போட்டாள். அவளது விழிகள் கலங்கி போனது.



"அத்தைம்மா, உங்க கண்ணு ஏன் கலங்குது? எனக்கு வலிக்கலை. இங்கே பாருங்க, நான் அழலை." சகுந்தலா உதட்டை இழுத்து சிரித்தபடி காட்டினாள். எதையுமே எளிதாக எடுத்துக் கொள்ளும் பெண்ணவள் வலியையும் எளிதாக எடுத்து கொண்டாளோ!



"உனக்கு எல்லாமே விளையாட்டு தான்." வினிதா அவளைக் கடிந்து கொண்டாள்.



"அண்ணாவை பத்தி தான் தெரியுமே. தெரிஞ்சிருந்தும் நீ ஏன் அவர் வழிக்கு போகிற?" பத்மினியும் அவளைக் கடிந்தாள்.



"பாலு கொடுத்தது ஒரு குத்தமா? என்னமோ போங்க." சகுந்தலா அங்கலாய்த்து கொண்டாள்.



சக்தீஸ்வரன் குளித்து முடித்துக் கீழே வரும் போது வரவேற்பறையில் யாரும் இல்லை. ஆனால் சமையலறையில் இருந்து சகுந்தலாவின் குரல் எட்டூருக்கு கேட்பது போல் உரத்து ஒலித்தது.



"யக்கா, உனக்கு விசயம் தெரியாதா? அந்தக் கனகா இருக்காள்ல. அதான்க்கா மூணாவது வீட்டில் வேலைக்கு இருந்தாளே. அவ தான். அவ பால்க்காரனோட ஓடி போயிட்டாளாம். ஓடி போனவ சும்மா ஓடி போகாம... அவுக வூட்டுல இருந்து ஐம்பது பவுனு தங்க நகையைத் தூக்கிட்டு ஓடிட்டாளாம். இப்படி ஒரு அநியாயத்தை நீங்க எங்கேயாவது பார்த்ததுண்டா?" சகுந்தலா நீட்டி முழக்கி புறணி பேசி கொண்டிருந்தாள். இந்தக் காலனியின் பிபிசி அவள்...



'ச்சே, இவ வாய் மூடவே மூடாதா?' என்று நினைத்தபடி சக்தீஸ்வரன் உணவு மேசையில் அமர்ந்தான்.



"சகுந்தலா..." அவன் உரக்க கத்தி அவளை அழைத்தான். அவனது குரலில் சகுந்தலா மட்டுமல்ல உதயரேகாவும் அங்கு வந்துவிட்டாள்.



சகுந்தலா தலையில் இருந்த காயத்திற்குத் தலையில் இருந்து தாடையோடு சேர்த்து கட்டு போட்டு இருந்தாள்.




"இப்போ தான் உன்னைப் பார்க்க குரங்கு மாதிரி இருக்கு." அவன் அவளது தோற்றத்தை கண்டு கேலி செய்தான்.
 

Sasimukesh

Administrator
"இதுக்குத் தான் வர சொன்னீகளா கேப்டன்? எனக்கு உள்ளே வேலை இருக்கு." அவனது கேலியை அவள் சாதாரணமாக எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல முயல...



"ஏய் இரு..." என்றவன், "என்ன வேலை உனக்கு இருக்கு? அடுத்த வீட்டை பத்தி புறணி பேசுறதா? இனி இது மாதிரி பேசின... பேச உன் வாய் இருக்காது." என்று அவன் அவளை மிரட்ட...



"என்ன இது சக்தி?" உதயரேகா மகனை கடிய... அவனோ அன்னையைக் கண்டு கொள்ளாது தட்டை எடுத்து தன் முன்னே வைக்க... மகனது குறிப்பு அறிந்து உதயரேகா எதுவும் பேசாது அவனுக்கு உணவை பரிமாறினாள்.



"அத்தைம்மா, அவுக பேசிட்டு போகட்டும். விடுங்க... பேசத்தானே வாயிருக்கு." என்றவள் அவனுக்கும் சேர்த்துப் பதில் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அதாவது 'என் வாய், என் பேச்சு, என் உரிமை' என்பது போலிருந்து அவளது வார்த்தைகளின் அர்த்தம்.



'திமிரை பார்...' அவன் கோபத்தில் பல்லை கடித்தவன் உணவு உண்ண ஆரம்பித்தான். உதயரேகா கணவன் அழைத்தான் என்று சென்றுவிட்டாள்.



சமையலறையில் சகுந்தலா மீண்டும் சாந்தியிடம் கதையளந்து கொண்டிருந்தாள். அவளது வாயை யாராலும் அடைக்க முடியாது.



"உனக்குச் சின்னச் சாரை பார்த்துப் பயம் இல்லையா?" சாந்தி அவளிடம் கேட்டார்.



"கேப்டனை பார்த்து நான் எதுக்குப் பயப்படணும்? நாங்க எல்லாம் சின்ன வயசுல இருந்து ஒண்ணா விளையாடி வளர்ந்தவங்க. அவர் கிட்ட எனக்குப் பயம் இல்லை." சகுந்தலா அலட்டலாய் பதில் சொன்னாள்.



"ஒருவேளை உன்னோட மகாராசன் சின்னச் சாரா இருக்குமோ?" என்ற சாந்தியை கண்டு அவள் கொலைவெறியுடன் முறைத்தாள்.



"அக்கா, நானு உனக்கு என்ன பாவம் பண்ணினேன்? ஏன் இப்படிப் பேசுற?" என்று அவள் கோபத்துடன் படபடத்தாள்.



"அச்சோ தெரியாம சொல்லிட்டேன்." அவளது கோபத்தில் சாந்தி பயந்து விட்டார். சக்தீஸ்வரன் உயரம் எங்கே? சகுந்தலா எங்கே?



"அய்யே, என்னக்கா நீயி?" என்று முகத்தை அருவருப்பாய் சுருக்கியவள், பின்பு விழிகளில் கனவோடு, "என்னோட மகராசன் எப்படி இருப்பாகத் தெரியுமா? சும்மா விசயசேதுபதி கணக்கா வாட்டச்சாட்டமா, நம்ம மண்ணுக்கேத்த கருப்பு கலருல இருப்பாக." என்று சொல்ல...



"உனக்கு இப்படி எல்லாம் ஆசையிருக்கா? எனக்கு இது தெரியாம போயிருச்சு பாரேன்." சாந்தி அதிசயித்து மூக்கில் விரலை வைத்தார்.



"இப்பிடியாப்பட்ட கனவோட வாழுற என்னைப் போய், என்னைப் போய்..." என்று அவள் ராகம் போட்டு இழுக்க...



"உன்னைப் போய்...?" சாந்தி கேள்வி கேட்க...



"இந்தச் செத்த எலியோட கோர்த்து விடுறீகளே? உங்களுக்கே நியாயமா இருக்கா?" அவள் நியாயம் பேச...



"க்கும்..." திடுமெனத் தொண்டை செருமல் ஒலி கேட்க...



"யக்கா, உனக்குத் தொண்டை சரியில்லையா? சுக்கு, மிளகு போட்டுக் கசாயம் போட்டு கொடுக்கவா?" சகுந்தலா அக்கறையுடன் கேட்க...



"நான் இல்லை. அங்கே பார்." சாந்தி சமையலறை வாயிலை காட்டினார். அங்கு நின்றிருந்தவனைக் கண்டு அவரது உடல் நடுங்க தொடங்கியது.



"யாரு?" என்று கேட்டபடி சகுந்தலா சாவகாசமாகத் திரும்பினாள்.



அங்கே சக்தீஸ்வரன் ஆத்திரத்தில் பல்லை கடித்தபடி நின்றிருந்தான். அவனைக் கண்டதும் அவள் ஈயெனப் பல்லை காட்டியபடி, "கேப்டன்..." என்க...



"சாந்திக்கா, சூடா காபி போட்டு கொடுங்க. ஒரே தலைவலியா இருக்கு." தலைவலி என்று சொல்லும் போது அவனது பார்வை அவளைத் தொட்டு மீண்டது. அவனது தலைவலி, தொல்லை எல்லாம் அவள் தான். அவன் சொல்லிவிட்டு சென்றுவிட...



"நீ இந்தக் காயை வெட்டி கொடு சக்கு... நான் சின்னச் சாருக்கு காபி போட்டு கொடுத்துட்டு வர்றேன்." சாந்தி காபி போட ஆரம்பித்தார்.



"என்ன மானமுள்ள பொண்ணுன்னு மதுரையில கேட்டாக..." சகுந்தலா உரக்க பாடியபடி இல்லை இல்லை கத்தியபடி காய்களை வெட்ட ஆரம்பித்தாள். அவள் சும்மாயிருந்தாலும் அவளது வாய் சும்மா இருக்காது போலும்.



"அடியேய் தத்தி, எழுந்து வந்தேன்... பாடறதுக்கு வாய் இருக்காது." உணவு மேசையில் இருந்து சக்தீஸ்வரன் கத்தினான்.



"ஆத்தாடி, இந்தக் கேப்டனுக்கு என் வாய் மேலேயே கண்ணா இருக்கே." சகுந்தலா தனது இருகரம் கொண்டு வாயை மூடி கொண்டாள்.



சக்தீஸ்வரன் காபியை பருகிய பிறகு அலுவலகம் சென்றுவிட... அதன் பிறகே சகுந்தலா நிம்மதியுடன் அந்த வீட்டை வலம் வந்தாள்.



*******************************



நாராயணன் தனது அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த போது அவனது அறை கதவு தட்டப்பட்டது. உள்ளே வருமாறு அழைத்தவன் யாரது என்று நிமிர்ந்து பார்த்தான். அங்கே அனுபமா வந்து கொண்டிருந்தாள். அனுபமா அவன் வேலை கற்றுக் கொண்ட அவனுடைய சீனியர் பஞ்சாபிகேசனின் மகள். எம்காம் முடித்துவிட்டுச் சிஏ பரீட்சைக்குத் தயாராகி வருகிறாள். அவனுக்கு அவளை மிகவும் பிடிக்கும். அவளுக்கும் அப்படியே. இருவரும் இதுவரை தங்களது காதலை வார்த்தைகளால் பகிர்ந்து கொள்ளவில்லை. இருந்தாலும் அவர்களது செயல்களில் காதல் கரைபுரண்டு ஓடி கொண்டிருக்கும். தங்கைகளுக்குத் திருமணமாகாது அவன் தனது காதலை வெளிப்படுத்த மிகவும் தயங்கினான். அவளுக்குமே ஏனோ ஒரு தயக்கம்.



"ஹேய் அனு, வா வா... உட்கார்." அவன் தன் முன்னே இருந்த நாற்காலியை காட்டினான்.



"வந்தேன் நானி..." அனுபமா புன்னகையுடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.



"ஸ்வீட் சர்ப்பரைஸ்... என்ன திடீர்ன்னு என்னைப் பார்க்க வந்திருக்க?"



"உண்மையில் ஸ்வீட் நியூஸ் தான்." புன்னகையுடன் சொன்னவளை கண்டு அவனது இதயம் தாளம் தப்பித் துடித்தது. ஒருவேளை அவள் தன்னைக் காதலிப்பதை சொல்ல போகிறாளா? என்று...



"நான் உங்க கிட்ட ஜூனியரா சேரலாம்ன்னு வந்திருக்கேன்." என்றவளை கண்டு அவன் திகைத்துப் போனான்.



"என்னை விட உங்கப்பா தான் சீனியர், டேலண்ட். அவர் கிட்ட கத்துக்காம என் கிட்ட எதுக்கு?" அவன் திணறலுடன் கேட்டான்.



"காரணம் இருக்கே? நீங்க யங். உங்களுக்குப் புது அப்டேட் எல்லாம் தெரியும். நிறையப் புதுசு கத்துக்கலாம். அதான் வந்தேன்." என்றவளின் 'கத்துக்கலாம்' வார்த்தைக்கு அவனுக்கு அர்த்தம் தெரியாதா என்ன!



"ஓ, தாராளமா..." என்று அவன் விரிந்த புன்னகையுடன் சம்மதம் சொன்னான்.



"தேங்க்ஸ் நானி." அவள் முகம் புன்னகையைப் பூசி கொண்டது.



"சார் ஒண்ணும் சொல்லலையே." அவன் தயக்கத்துடன் கேட்டான்.



"அப்பா கிட்ட விசயத்தைச் சொன்னதும்... அவர் டபுள் ஓகேன்னு சொல்லிட்டார்."



"ஓ..." என்றவன் அமைதியானான். ஒருவேளை பஞ்சாபிகேசனுக்கு விசயம் தெரிந்து இருக்குமோ என்று அவனுக்கு யோசனையாக இருந்தது.



"நீங்க அவரோட ஜூனியர் இல்லையா. உங்களைப் பத்தி ஒரே புகழ்ச்சி தான். அதான் அப்பா உடனே ஓகே சொல்லிவிட்டார்." அவனது முகத்தை வைத்தே அவனது மனதை அறிந்து அவள் பதில் சொன்னாள்.



அதைக் கேட்டு நாராயணன் மனம் தெளிந்து முகத்தில் புன்னகை தோன்றியது. அனுபமாவின் இந்தப் புரிதல் தானே அவனை மேலும் மேலும் அவளைக் காதலிக்கச் சொல்கிறது.



"எப்போ ஜாயிண் பண்ற?" என்று அவன் கேட்க...



"எப்போன்னாலும் எனக்கு ஓகே தான்." அவள் அவனது விழிகளைப் பார்த்தபடி உள்ளர்த்தத்துடன் சொன்னாள்.



"எல்லாத்துக்கும் காலம் நேரம் பார்க்கணும்." அவளது வார்த்தைகளுக்கான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு அவனும் பதில் சொன்னான்.



"எனக்கு இப்போ கூட ஓகே தான்." அவள் தலைகுனிந்தபடி தனது கை வளையலை உருட்டியபடி கூற...



"எனக்கும் தான்." என்றவனைக் கண்டு அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.



"நான் வேலையைச் சொன்னேன்." அவன் அவளது திகைப்பை ரசித்தபடி சொன்னான்.



"நானும் வேலையைத் தான் சொன்னேன்." அவள் அவனைக் கண்டு பழிப்பு காட்டினாள்.



"வேலையைப் பார்க்கலாமா?" அவன் சொன்னதும் அவள் தலையாட்ட...



நாராயணன் புன்னகையுடன் அவள் செய்ய வேண்டிய வேலைகளைச் சொல்லலானான். அனுபமாவும் சிரத்தையுடன் கேட்டு கொண்டாள்.



*****************************



பத்மினி மருத்துவமனையில் இருந்த நோயாளிகளின் அறைக்குச் சென்று அவர்களை ஒவ்வொருவராகப் பரிசோதித்துக் கொண்டிருந்தாள். இறுதியாக அவள் விஐபிகள் இருக்கும் அறைக்குச் சென்றாள். அங்கு மருத்துவமனை சேர்மன் தங்கப்பனின் மனைவி பரமேஸ்வரி உயர் இரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரைப் பரிசோதிக்கத் தான் அவள் அங்குச் சென்றது.



"குட்மார்னிங் மேடம்." என்றபடி உள்ளே வந்தாள் பத்மினி.



"அது என்ன மேடம்? அத்தைன்னு வாய் நிறையச் சொல்லு பொண்ணு." பரமேஸ்வரி கிராமத்து மனுசி. அதனால் அவரது பேச்சு இப்படித்தான் உரிமையோடு இருக்கும்.



"எங்க சேர்மனோட வொய்ப் நீங்க. உங்களை மேடம்ன்னு கூப்பிடறது தான் சரி." என்றவள் அவருக்கு இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க ஆரம்பித்தாள்.



"உங்க வீட்டில் உனக்குக் கல்யாணம் பேசுறாங்களா பொண்ணு?"



"அவங்க கேட்க தான் செய்றாங்க மேடம். நான் தான் இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லியிருக்கேன்."



"உனக்கு என்ன வயசாகுது?"



"இருபத்தினாலு." அவள் சொன்னதும்,



"கல்யாணத்துக்குச் சரியான வயசு தான்." என்று அவர் சொல்ல...



"இல்லை மேடம். மேலே படிக்கணும்ன்னு இருக்கேன். இன்னும் நாலு வருசத்துக்குக் கல்யாணம் கிடையாது." என்று உறுதியான குரலில் கூறிவிட்டுச் செல்லும் பத்மினியை கண்டு பரமேஸ்வரிக்கு வியப்பாக இருந்தது. அவரது மகன் பிரேம்க்கு பத்மினி மிகவும் பொருத்தமாக இருப்பாள் என்று அவர் மனதிற்குள் வேகமாகக் கணக்கிட்டார்.



அதேநேரம் அன்னையைக் காண வந்த பிரேம் வராந்தாவில் வந்து கொண்டிருந்த பத்மினியை கண்டு விட்டான். அவளைக் கண்டதும் அவனது விழிகள் மின்னியது. அவன் எப்போதாவது தான் தகப்பனின் தொழிலை கவனிப்பது உண்டு. அப்படித் தான் ஒருநாள் தங்கப்பனால் மருத்துவமனை கூட்டத்திற்கு வர முடியாது போனது. அவர் தனக்குப் பதிலாக மகனை அனுப்பி வைத்தார். பிரேம் வேண்டாவெறுப்பாய் தான் இங்கு வந்தது. வந்த இடத்தில் தான் அவன் இந்தத் தேவதையைக் கண்டான். கண்டதும் பத்மினியின் பேரழகு அவனைச் சுண்டி இழுத்தது. அவளது அழகை சுவைத்து பார்க்க அவன் ஆசை கொண்டான். அதற்கு மேல் அவன் காதல், திருமணம் என்கிற உறவில் அடைப்பட்டுக் கொள்ள விரும்பவில்லை.



"குட்மார்னிங் சார்." பத்மினி பிரேமை கண்டு புன்னகையுடன் வணக்கம் வைத்தாள்.



"குட்மார்னிங் பத்மினி." அவன் விரிந்த புன்னகையுடன் சொன்னான்.



அவன் நல்ல பிள்ளையாய் அவளிடம் மருத்துவமனை சம்பந்தமாகச் சில வார்த்தைகள் பேசிவிட்டு விடை பெற்றான். வலை விரித்துக் காத்திருக்கும் வேடவன் பொறுமையோடு காத்திருப்பது போல்... பெண்கள் விசயத்திலும் பொறுமை மிகவும் அவசியம். அவர்கள் தானாகக் கனிந்து வந்து கையில் விழ நேரம் எடுக்கும். அதனால் என்ன... கனிந்த பழம் தானே அதிகம் ருசிக்கும்.



பத்மினி இதை எதையும் அறியவில்லை. அவள் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்தாள். உதயரேகா வளர்ப்பு அப்படி...




**************************
 

Sasimukesh

Administrator
"சாய், இந்த மாடல் வேண்டாம். ஏதாவது புதுசா டிரை பண்ணு." சக்தீஸ்வரன் தனது நண்பன் சாய்ராமிடம் சொல்லி கொண்டிருந்தான்.



இருவரும் இணைந்து தான் விளம்பர நிறுவனத்தை நடத்தி வருவது. சக்தீஸ்வரனுக்குப் புகைப்படங்கள் எடுப்பதில் இருந்த ஆர்வம் அவனை இந்தத் தொழிலில் ஆசையுடன் ஈடுபட வைத்தது.



இந்தியாவில் புகழ் பெற்ற வைர நகை வியாபாரி ஒருவர் தனது நகைகளுக்கான விளம்பரத்தை செய்து கொடுக்கச் சொல்லி இவர்களை அணுகினார். அது சம்பந்தமாகத் தான் இருவரும் சக்தீஸ்வரனின் அலுவலக அறையில் வைத்து பேசி கொண்டிருந்தனர்.



"இருக்கிற நல்ல மாடல்ஸ் ஃபோட்டோஸ் எல்லாத்தையும் உன கிட்ட காட்டியாச்சு. இன்னும் புதுசா கேட்டால்... நான் எங்கே போக?" சாய்ராம் சலித்துக் கொண்டே தனது ஐபேடை அணைத்து வைத்தான்.



"ஏதாவது வித்தியாசமா கிடைக்கும். டிரை பண்ணு." அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே தர்சனா உள்ளே நுழைந்தாள்.



"சக்தி பேபி..." அவளது குரல் குழைந்து ஒலித்தது.



"சரிடா, நான் வர்றேன்." சாய்ராம் இருக்கையில் இருந்து எழுந்தான்.



"ப்ச், நீ இருடா." நண்பனுக்குக் கேட்கும் குரலில் சொன்னவன் தர்சனாவை கண்டு,



"ஹாய் சனா டார்லிங், யூ லுக் கார்ஜியஸ்." என்று சொல்லியபடி எழுந்து சென்றவன் அவளை நெருங்கி அணைத்தான். தர்சனாவோ இது தான் சமயம் என்று அவனை மேலும் இறுக்கி அணைத்து கொண்டாள்.



'அடேய், பேச்சுலர் ஒருத்தன் நான் இங்கே இருக்கேன்டா. என் பாவம் உன்னைச் சும்மா விடாது.' சாய்ராம் மனதிற்குள் புலம்பியபடி வேறு பக்கம் திரும்பி கொண்டான்.



"சனா டார்லிங்..." என்ற சக்தீஸ்வரன் அவள் முன்னே தனது வலக்கரத்தை நீட்டினான்.



"பேபி, டூ யூ வான்ட் கிஸ்?" அவள் ஆசையுடன் கேட்க...



"இல்லை... நீ போட்ட மோதிரத்தை நீயே கழட்டி விடு." என்று அவன் கூற...



"ஏன் பேபி?" என்றவளுக்குக் கண்கள் கலங்கி போனது. அவள் எத்தனை ஆசையாக இந்த மோதிரத்தை அவனது கைவிரலில் போட்டு விட்டாள். மோதிரம் போட்டு பாதி நிச்சயத்தை நடத்திவிட்ட இறுமாப்பில் அவள் இருந்தாளே!



"இந்த மோதிரத்தால் இன்னைக்குக் காலையில் வீட்டில் ஒரே ரணகளமா போயிருச்சு. நான் நகைகள் போடுறது இல்லைன்னு உனக்கே தெரியும். ப்ளீஸ் டார்லிங்." அவன் உதட்டை குவித்துக் கொஞ்சுவது போல் சொல்ல...



"ஓகே பேபி... நீங்க சொன்னால் சரியா தான் இருக்கும்." என்றவள் தான் போட்ட மோதிரத்தை கழற்றி எடுத்து கொண்டாள்.



"நௌ ஆர் யூ ஹேப்பிப் பேபி?" என்று அவள் கேட்க...



"யா, ஹேப்பி டார்லிங்." என்றவன் வலக்கை மோதிர விரலை அழுத்தி தேய்த்து விட்டுக் கொண்டான்.



"ச்சோ ஸ்வீட் பேபி." என்ற தர்சனா அவன் உயரத்திற்கு எக்கி அவனது இதழில் முத்தமிட... அதை அவனும் தடுக்கவில்லை.



"ஆத்தாடி, இதென்ன பட்ட பகல்ல, பங்குனி வெயில்ல இப்படி முத்தம் கொடுக்குறாகுலே." சகுந்தலா வாயில் அடித்தபடி புலம்பி கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.



"வந்துட்டாளா இம்சை..." சக்தீஸ்வரன் எரிச்சலுடன் நெற்றியை நீவி கொண்டான்.



"ஹேய் யார் நீ?" தர்சனா அதிகப்பிரசங்கி போல் உள்ளே வந்த சகுந்தலாவை கண்டு கோபமாய்க் கேட்டாள்.



சிவப்பு நிற குர்தி, கிளிப்பச்சை நிற லெகின்ஸ், மேலே அதே கிளிப்பச்சை நிற துப்பட்டா அணிந்து ராமராஜனின் லேடி வெர்சனாக நின்றிருந்த சகுந்தலாவை கண்டு தர்சனாவுக்கு இகழ்ச்சியாக இருந்தது. சகுந்தலா தனது தலைமுடியை எண்ணெய் வைத்து வழித்துச் சீவி சடை போட்டு இருந்தாள். அதைவிட அவள் தலையில் இருந்து தாடையோடு சேர்த்து போடப்பட்டு இருந்த கட்டை பார்த்ததும் தர்சனாவுக்குச் சிரிப்பு பொங்கி கொண்டு வந்தது. தர்சனாவின் விழிகளுக்குச் சகுந்தலா நாகரீக கோமாளி போல் தோற்றமளித்தாள்.



"அதே தான் நானும் கேட்குறேன். யாரு நீங்க?" என்று தர்சனாவை பார்த்து கேட்டவள் பிறகு சக்தீஸ்வரன் புறம் திரும்பி, "கேப்டன், யாரு இவுக?" என்று கேட்க... அவனோ பதிலளிக்காது அலட்சியமாக நின்றிருக்க... அதைக் கண்டு சகுந்தலாவுக்குப் புசுபுசுவெனக் கோபம் வந்தது.



"இருங்க... எங்க மாமோய் கிட்ட சொல்லி தாரேன்." சகுந்தலா ஆள்காட்டி விரலை நீட்டி இருவரையும் கண்டு எச்சரித்தபடி அறையை விட்டு செல்ல போக...



"எங்கே போற?" சக்தீஸ்வரன் அவளது நீண்ட சடையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான்.



"ஆ விடுங்க கேப்டன்... இந்த அக்கிரமத்தை மாமோய் கிட்ட சொல்லிட்டு வர போறேன்." அவள் வலித்த சடையைப் பற்றிக் கொண்டு சொல்ல...



"உங்க மாமா இங்கே இல்லை. எதுக்கு வந்தியோ... அதை மட்டும் பாரு. போ." அவன் அவளது சடையை விட... சகுந்தலா கோபமாய் முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்த உணவு மேசையை நோக்கி சென்றாள்.



"யார் அது பேபி?" தர்சனா விழிகளைச் சுருக்கி கொண்டு சகுந்தலாவை பார்த்தாள். வந்த பெண் சக்தீஸ்வரனையே தலையால் தண்ணி குடிக்க வைக்கிறாளே! அவள் யாராக இருக்கும்? என்கிற யோசனை அவளுக்கு...



"எங்க வீட்டு வேலைக்காரி." அவன் அலட்சியமாகச் சொல்ல...



"வேலைக்காரியா?" தர்சனா அலட்சியமாய் முகத்தைச் சுளித்தாள்.



"அதை விடு... நீ எதுக்கு வந்த?"



"என்னோட பேர்த்டே பார்ட்டிக்கு உங்களை இன்வைட் பண்ண வந்தேன் பேபி." என்றவள் அழைப்பிதழை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.



" ஷ்யூர் டார்லிங். கட்டாயம் வந்திர்றேன்."



"இது உங்களுக்கு..." தர்சனா சாய்ராம்க்கும் ஒரு அழைப்பிதழ் கொடுத்தாள்.



"கட்டாயம் வந்திர்றேன் தங்கச்சி." என்றான் சாய்ராம் அடக்கமாக...



தர்சனா போன பிறகு சக்தீஸ்வரன் தனது இருக்கையில் வந்தமர்ந்தான்.



"சாப்பிட வாங்க கேப்டன்." என்று சகுந்தலா அவனை அழைத்தாள்.



"ப்ச், உன்னை யாரு இங்கே வர சொன்னது? அப்பாவுக்குச் சாப்பாடு கொண்டு வந்தா... அங்கே மட்டும் கொடுத்துட்டு போக வேண்டியது தானே." சக்தீஸ்வரன் எரிச்சலில் கத்தினான்.



"மாமோய்க்கு சாப்பாடு கொண்டு வரும் போது அப்படியே உங்களுக்கும் கொண்டாந்தேன். இது தப்பா கேப்டன்?" அவள் இமைகளைச் சிமிட்டி அப்பிராணியாய் கேட்க...



"தப்பே இல்லைம்மா." சாய்ராம் பதிலளித்தான்.



"அட, நீங்களும் வாங்க சார், சாப்பிடலாம். கிராமத்து பக்குவத்துல மீன்குழம்பு வச்சிருக்காக. ஒரு புடி புடிங்க. வாங்க." அவள் சொன்னதும் சாய்ராம் உடனே உணவு மேசை நோக்கி ஓடி விட்டான்.



சக்தீஸ்வரன் தலையில் அடித்தபடி அங்கு வந்து அமர்ந்தான். இருவருக்கும் இலை போட்டுச் சகுந்தலா பரிமாற ஆரம்பித்தாள். சக்தீஸ்வரன் உணவினை ஒரு வாய் எடுத்து வைத்தவனுக்கு அடுத்த நொடி புரையேறியது. ஏனெனில் மீன் குழம்பில் அப்படி ஒரு காரம். ஆனால் சாய்ராம் உணவை ரசித்து உண்டு கொண்டிருந்தான். சக்தீஸ்வரன் யோசனையுடன் பாத்திரங்களைப் பார்த்தான். அவன் முன்னிருந்த பாத்திரத்தில் இருந்த மீன்குழம்பு சிவப்பாய் இருந்தது. சாய்ராம் உண்டு கொண்டிருந்த மீன்குழம்பு சாதாரணமாக இருந்தது. அவனுக்குப் புரிந்து போனது, இது சகுந்தலாவின் கைவண்ணம் என்று... அவன் ஒன்றும் பேசாது அமைதியாகக் காரமான சாப்பாட்டை உண்ண தொடங்கினான்.



காலையில் சக்தீஸ்வரன் தனது தலையில் கொட்டியதால் உண்டான இரத்த காயத்துக்கு இப்போது சகுந்தலா சாப்பாட்டில் காரத்தை அள்ளி போட்டு பழிவாங்கி விட்டாள். 'என்னையவா அடிக்கீக கேப்டன்? இனி என்னைய அடிக்க நீங்க யோசிக்கணும்.' அவள் மனதிற்குள் அவனைக் கண்டு பழிப்பு காட்டியபடி நின்றிருந்தாள். அவன் முகம் சிவக்க, உதடுகள் எரிய உண்டு கொண்டிருப்பதைக் கண்டு அவள் ஆசைதீர பார்த்திருந்தாள்.



"சூப்பர் சாப்பாடும்மா. ரொம்பத் தேங்க்ஸ்." சாய்ராம் பெரிதாக ஏப்பம் விட்டபடி கையைக் கழுவி விட்டு விடைபெற்று சென்று விட்டான்.



சக்தீஸ்வரன் நிதானமாகக் கார சாப்பாட்டைச் சாப்பிட்டு முடித்தவன்... பின்பு கை கழுவி விட்டு வந்தான். சகுந்தலா பாத்திரங்களை எடுத்துப் பையில் வைத்து கொண்டிருந்தாள். அவள் அருகே வந்தவன் சட்டென்று தனது ஒரு கையால் அவளது தாடையை இறுக பற்றித் தன் புறம் திருப்பினான். அவள் என்ன, ஏதென்று யோசிப்பதற்குள் அவன் அவளது இதழ்களை முரட்டுத்தனமாய் விழுங்கி இருந்தான். அவனது செயலில் அவள் தான் திகைத்து போய் நின்றாள்.



அவன் உண்ட அதீத காரத்தினைச் சமன் செய்ய வேண்டிய இனிப்பினை அவளது இதழ்கள் வாரி வாரி வழங்கி கொண்டிருந்தது.



'இதழில் கதை எழுதும் நேரமிது'



தொடரும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
‘கண்ணில் கனவாக நீ’ இப்போது அமேசானில்… படித்து மகிழுங்கள் 😍😘

India :

US :

Australia :

Canada :

கதையிலிருந்து சிறு முன்னோட்டம் :

"பிரின்ஸ்..." அவள் பதட்டத்துடன் அவனது முகத்தைப் பார்த்தாள். பின்னே முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் அவன் இருந்தால் பயம் வராது போகுமா!

"இங்கே என்ன பண்ணுற?"

"வீட்டில் மீதமான சாப்பாட்டை வீணாக்காம தெருநாய், பூனைகளுக்குக் கொடுப்பேன். அதான் இன்னைக்கும் வந்தேன்." அவள் விளக்கம் கொடுக்க...

"மீதமாகாம சமைக்கப் பழகு." அவன் அவளுக்கு வார்த்தையால் ஒரு கொட்டு வைக்க... அவள் சரியென்று தலையாட்டினாள்.

"அது சரி... அவன் எதுக்குத் துணைக்கா?" அவனது பார்வை பரணியை வெறித்தது.

"நான் கூப்பிடலை. அவரா தான் வந்தார். ஆகாஷ் சார் வீட்டில் இருப்பதால்... பரணி சார் எங்க கூட வந்தார்."

"வா, வந்து காரிலேறு." அவன் உறும...

"இல்லை பிரின்ஸ். நான் பரணி சாரோட நடந்து வர்றேன். இந்தா நாலு எட்டு எடுத்து வச்சா நம்ம வீடு வந்திருமே." என்று அவள் சொல்ல...

சர்வேஸ்வரன் கோபமாய் அவளை உறுத்து விழித்தவன் விருட்டென்று காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.

"சார், ரொம்பக் கோபக்க்காரரா?" பரணி சர்வேஸ்வரனை கண்டு கேட்டான்.

"ச்சேச்சே, அப்படி எல்லாம் இல்லை. ரொம்பத் தங்கமான மனுசன்." அவள் சர்வேஸ்வரனை தாங்கி பேசினாள். இருவரும் இணைந்து வீட்டை நோக்கி நடந்தனர்.

"பார்த்தால் அப்படித் தெரியலையே. எப்போ பார்த்தாலும் உன் கிட்ட கோபமா தான் பேசுகிறார்." அவனும் இந்த ஒரு மாதமாகப் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றான்.

"அந்த வீட்டிலேயே அவர் தான் ரொம்ப நல்லவர்."

"எங்க ஆகாஷ் சாரை விடவா?"

"நிச்சயமாய்... ஆகாஷ் சார் என்ன தான் நம்ம கிட்ட நல்ல மாதிரியா பழகினாலும்... அவரோட காரில் எல்லாம் நம்மைச் சரி சமமா அழைச்சிக்கிட்டு போக மாட்டார்." என்றவளை இடைமறித்து,

"நான் போகலையா?" என்று பரணி கேட்டான்.

"நீங்க டிரைவர். அதைக் கணக்கில் சேர்க்க முடியாது. ஆனால் பிரின்ஸ் அப்படி இல்லை. இப்போ கூடப் பாருங்க... அவரோட கார் வெளிநாட்டுக் கார், அதுவும் கோடி ரூபாய் பெருமானம் உடையது. அதில் என்னை ஏற சொன்னார் பார்த்தீங்களா? அந்த மனசு யாருக்கும் வராது." அவள் சர்வேஸ்வரனை விட்டு கொடுக்காது பேசினாள்.

"ஆனாலும் நீ அவரைக் கண்டு ரொம்பத்தான் பயப்படுற."

"அதுக்குப் பெயர் பயம் இல்லை. பக்தி." என்று கூறி சிரித்தவளை பரணி இமைக்காது பார்த்தான். இந்த வெகுளி பெண்ணைப் பிடிக்காது இருந்தால் தான் ஆச்சிரியமே!

இருவரும் பேசி கொண்டே வீட்டு வாயிலினுள் நுழைந்தனர். காரை விட்டு இறங்கி இவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்த சர்வேஸ்வரன் விழிகளில் தவறாது இந்தக் காட்சி தென்பட்டது. அவனுள் கோபம் சுர்ரென்று ஏறியது. உதயரேகாவோ பரணியுடன் பேசியபடி சென்றவள் சர்வேஸ்வரனை கவனிக்கவில்லை. அதைக் கண்டு அவனது கோபம் உச்சத்தினைத் தொட்டது. அவன் கோபத்தோடு அருகில் இருந்த பூந்தொட்டினை காலால் எட்டி உதைத்தான். கராத்தே கற்று இருந்தவனின் கால் பலத்தின் முன் தொட்டி பலமிழந்து இரண்டாகப் பிளந்தது. அவன் தன்னை எட்டி உதைத்த ஆத்திரத்தில் தொட்டி அவனது வலக்கால் கட்டை விரலை நன்கு பதம் பார்த்து பழிவாங்கி விட்டது. அவனது வலக்கால் கட்டை விரலில் இருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது.

தொட்டி உடைந்த சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பி பார்த்த உதயரேகா அங்குச் சர்வேஸ்வரன் காலில் இருந்து இரத்தம் வருவதைக் கண்டு பதறி போய் ஓடி வந்தாள். அவள் வருவதை அறிந்து கொண்ட அவன் வேண்டுமென்றே வலியில் ஆவெனக் கத்தினான்.

"ஐயோ, எவ்வளவு ரத்தம்! பார்த்து வர கூடாதா பிரின்ஸ்?" அவள் பதட்டத்துடன் கேட்டபடி அவன் காலருகே மண்டியிட்டு அமர்ந்தவள் தனது புடவை முந்தானையைக் கிழித்து அவனது கால் கட்டை விரலில் சுற்றி இறுக கட்டினாள்.

அவளது குனிந்த தலையைப் பார்த்து கொண்டவனின் விழிகள் இரண்டும் சாதித்து விட்ட சந்தோசத்தில் பளபளத்தது. அவனது முகத்தில் பெரும் திருப்தி நிலவியது.
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 3



"ஆ..." சகுந்தலா ஆவென அலறினாள்.



"ஏய், தத்தி எதுக்கு இப்போ கத்துற?" சக்தீஸ்வரனின் குரலில் தன்னுணர்வு பெற்றவள் பேந்த பேந்தவென விழித்தாள்.



அவனோ துண்டில் ஈரக்கைகளைத் துடைத்தபடி அவளை நோக்கி வந்தான். அவனது பார்வை அவளையே கூர்மையாகத் துளைத்து எடுத்தது.



சகுந்தலா தான் திக்பிரம்மை பிடித்தார் போன்று நின்றிருந்தாள். அப்படி என்றால் தான் கண்டது எல்லாம் கனவா! அவளது நினைவை நினைத்து அவளுக்கே விக்கல் எடுத்தது. சக்தீஸ்வரன் அவள் அருகே வந்து அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்தான். அவள் பாட்டிலை வாங்காது விக்கல் எடுத்தபடி அவனைக் கண்டு திகைத்து விழித்தாள்.



"விக்கியே செத்துர போற. குடிடி." என்று அவன் அதட்ட...



சகுந்தலா தண்ணீர் பாட்டிலை வாங்கி மடமடவென நீரை பருகினாள். அத்தனை தாகம் அவளுக்கு இல்லை. அத்தனை கேவலமான கனவு அவளது. அதை ஜீரணிக்கத் தான் தண்ணீரை மடமடவென்று அவள் குடித்தது. இன்று அவள் படித்த காதல் கதையில் இப்படித்தான் நாயகனை பழிவாங்க நாயகி அவனுக்கு உணவில் அதிகக் காரத்தைக் கலந்து கொடுத்து விடுவாள். அவனோ ஆத்திரம் தாங்காது நாயகிக்கு உதட்டில் முத்தத்தைப் பதித்துப் பதிலுக்குப் பதில் பழிவாங்கி விடுவான். சகுந்தலா தனக்குச் சாதகமான முற்பாதியை மட்டும் எடுத்துக் கொண்டு சக்தீஸவரனை பழிவாங்க மீன்குழம்பில் காரத்தை அள்ளி போட்டு எடுத்துக் கொண்டு வந்துவிட்டாள்.



இங்கு வரும் வரை எல்லாம் சரியாகத் தான் நடந்தது. ஆனால் அவள் எதிர்பாராத ஒன்று... சக்தீஸ்வரன் ஆத்திரம் கொள்ளாது அமைதியாக உணவினை உண்டது தான். அதை அவள் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பயத்தில் தான் அவளுக்கு இப்படியொரு கனவு வந்திருக்கிறது. அதுவும் எப்படி? நாயகனின் வாய் காரத்திற்கு நாயகியின் உதட்டில் முத்தமிட்டால் அது இனிப்பு போல் இனிக்குமாம். இதை வேறு தனியாக விளக்கி எழுதி இருந்தார் அந்த எழுத்தாளர். அதைப் படித்துக் கெட்டுப் போனது இந்த அப்பாவி பெண்ணின் மனம்.



அவளைப் போன்றே கூறுகெட்ட இந்தக் கனவினை அவனிடம் சொன்னால்... அவன் அவளைக் காறி துப்ப மாட்டானா? தண்ணீரை குடித்தவள் திருதிருவென முழித்தபடி நின்றிருந்தாள்.



"ஆமா, எதுக்குக் கத்துன?" அவன் அவளை உற்று நோக்க... அவளுக்குப் பதற்றத்தில் கை, கால் நடுங்கியது.



"அது... ஆங், கரப்பான் பூச்சி..." அவள் ஏதோ சொல்ல வேண்டுமே என்று சொல்ல...



"கரப்பான் பூச்சி, அதுவும் என்னோட ஆபிசில்..." அவன் அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தான்.



"அப்போ நான் என்ன பொய்யா சொல்லுறேன் கேப்டன்?" அவள் சுதாரித்துக் கொண்டு அவனையே எதிர்த்துக் கொண்டு நிற்க...



"அப்போ தினமும் நீயே வந்து ஆபிசை கூட்டி, பெருக்கு..." அவன் கிண்டலாய்ச் சொன்னான்.



"செய்ய மாட்டேன்னு நினைச்சீங்களாக்கும். அதெல்லாம் செய்வேன் கேப்டன்." அவள் மிடுக்காகப் பதில் சொல்ல...



"நீ எல்லாம் செய்வ... அதான் எனக்குத் தெரியுமே. முதல்ல கிளம்பு." என்றவனின் பார்வை பாத்திரத்தில் பதிந்தது. அவள் மீன்குழம்பில் காரத்தைக் கலந்ததைத் தான் அவன் சொன்னது.



சகுந்தலா எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள் பின்பு அதிலிருந்த சின்ன டப்பாவை எடுத்துக் கொண்டு அவன் முன் வந்தாள். அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். எதுவும் கேட்கவில்லை.



"வெண்ணெய் பூசிக்கோங்க கேப்டன். வாய் காந்தல் கொஞ்சம் குறையும்." என்றவளின் கையிலிருந்த டப்பாவை வாங்காது,



"இது தான் பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுறதா?" என்று அவன் கேலியாய் கேட்டான்.



"ப்ளீஸ் கேப்டன், வெண்ணெய் பூசிக்கோங்க." அவள் அவனிடம் கெஞ்ச... அவன் அமைதியாக அமர்ந்து இருந்தான்.



"கேப்டன், என்னைய திட்டுங்க, இல்லை எனக்கு ரெண்டு அடி கூடக் கொடுங்க. ஆனா நீங்க இப்படி அமைதியா இருக்கிறது எனக்கு என்னவோ போலிருக்கு." அவள் தவறு செய்தது இல்லை. அதனால் அவளுக்கு ஒரே குற்றவுணர்வாகப் போய்விட்டது.



"அதெல்லாம் தேவையில்லை. நீ கிளம்பு." என்றவன் வேலையில் ஆழ்ந்துவிட்டான்.



சகுந்தலா சாப்பாடு கூடையை எடுத்துக் கொண்டு அறை கதவை நோக்கி நடந்தாள். அப்போது சக்தீஸ்வரன் அலைப்பேசியில் பேசி கொண்டிருந்த விசயத்தைக் கேட்டதும் அவள் முகம் மலர அப்படியே நின்று விட்டாள்.



"எல்லாமே கலர் கோழி குஞ்சுகளா? எத்தனை இருக்கும்? என்னது நூறா? சரி, சரி எல்லாத்தையும் மொட்டை மாடியில் கொண்டு போய் வையிங்க. இதோ நான் வர்றேன்" என்றவன் அழைப்பை துண்டித்தான்.



"கேப்டன், கேப்டன்... கலர் கோழி குஞ்சுகளா?" அவள் ஆர்வத்துடன் கேட்க...



"ஆமா, ஒரு விளம்பரத்துக்காக வாங்கி இருக்கு. அதுக்கு என்ன இப்போ?" அவன் தன் முன்னிருந்த மடிகணினியை பார்த்தான்.



"எனக்குக் கலர் கோழி குஞ்சுன்னா ரொம்பப் பிடிக்கும். எனக்கு அதைக் காட்டுங்களேன். எனக்கும் அதைப் பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு." அவள் ஆசையுடன் சொல்ல...



"சரி, வா..." என்றவன் உடனே இருக்கையில் இருந்து எழுந்தான்.



இருவரும் மொட்டை மாடியை நோக்கி சென்றனர். சக்தீஸ்வரன் அறை இருக்கும் அந்தத் தளம் தான் கடைசித் தளம். அதுவே நான்காவது மாடி. அதற்கு மேலே தான் மொட்டை மாடி இருந்தது. அவன் மொட்டை மாடி கதவை திறந்து கொண்டு மாடிக்கு செல்ல... அவள் ஆசையுடன் அவனைப் பின்தொடர்ந்தாள்.



"கேப்டன், கோழி குஞ்சு எங்கே?" அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதுவுமே இல்லையே. மொட்டை மாடியில் மொட்டை வெயில் தான் சுட்டெரித்தது.



சக்தீஸ்வரனோ பதில் பேசாது அவளது துப்பட்டாவை உருவி எடுத்தான்.



"கேப்டன், என்ன பண்றீங்க?" அவள் கண்ட பகல் கனவு அவளுள் பயத்தை விதைத்திருந்தது.



அவனோ பதில் பேசாது அவளது இரு கரங்களையும் பின்னால் முறுக்கி பிடித்தவன்... அங்கு நட்டு வைக்கப்பட்டு இருந்த கம்பி ஒன்றில் அவளைச் சாய்த்து வைத்து... அவளது கரங்களைப் பின்னால் வளைத்து வைத்து அதை அவளது துப்பட்டாவால் கட்ட ஆரம்பித்தான்.



"கேப்டன், வேண்டாம் விட்டுருங்க." என்று அவள் பயத்தில் கெஞ்ச ஆரம்பித்தாள்.



அவளது கரங்களைக் கட்டி முடித்தவன் அவள் முன்னே வந்து நின்று தனது காலால் அவளது இரு கால்களில் இருந்த செருப்பைத் தட்டி விட்டான். அது மூலைக்கு ஒன்றாய் பறந்து போய் விழுந்தது.



"ஆ, கேப்டன், சூடு தாங்கலை..." அவள் கால் மாற்றி நின்றபடி கத்த தொடங்க... மதிய வெயில் தரையைக் கொதிக்கச் செய்தது.



"சூடு எப்படி இருக்கு? அப்படியே குளுகுளுன்னு இருக்கா? இப்படித்தான்டி எனக்கு இருக்கு. நீ போட்ட காரத்தின் எரிச்சல் இன்னமும் எனக்குக் குறையலை." என்றவனின் வாய் மட்டும் இல்லாது அவனது முகமும் காரத்தின் விளைவால் சிவந்து போயிருந்தது. அவனது விழிகள் இரண்டும் கோபத்தில் சிவந்திருந்தது. அத்தனை கோபம் அவள் மீது. அவன் தனது கோபத்தை அடக்கி கொண்டு அமைதியாக இருந்து சரியான சந்தர்ப்பத்தில் அவள் மீது காட்டி விட்டான்.



"மன்னிச்சுக்கோங்க கேப்டன்... இனி இது மாதிரி பண்ண மாட்டேன்." அவள் அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள். அவள் வெயிலின் வெப்பம் தாங்காது துடிக்க ஆரம்பித்தாள்.



"இதுவரை இந்த வார்த்தைகளை நீயும் கோடி தரம் சொல்லிட்ட... ஆனா ஒரு தரம் கூட நீ கேட்டது போலில்லை. இனியும் உன்னை இப்படியே விட்டால் சரி வராது. இனி நீ என் வழியில் குறுக்கே வர கூடாது. அதுக்கு இது தான் சரியான தண்டனை. இந்தத் தண்டனையை நீ உன் வாழ்நாளில் மறக்க கூடாது." என்றவன் அங்கிருந்து சென்று விட்டான்.



அவளது கெஞ்சல், அலறல் எதுவுமே அவனது காதுகளில் ஏறவில்லை. போகும் போது மொட்டை மாடி கதவினை மூடிவிட்டு வேறு சென்று விட்டான் அந்தக் கிராதகன். சகுந்தலா வெயிலின் கொடுமை தாங்காது கத்தி கூச்சலிட்டாள். பிறகு மெல்ல அவளது உடலில் தண்ணி சத்து குறைய ஆரம்பிக்க... அவள் அப்படியே ஆழ்ந்த மயக்கத்திற்குச் செல்ல ஆரம்பித்தாள்.



சக்தீஸ்வரன் அலுவலகத்தில் இருக்காது அங்கிருந்து புறப்பட்டவன் நேரே தொழிற்சாலைக்குச் சென்று விட்டான். அங்கே வேலைப்பளுவில் அவன் சகுந்தலாவை மறந்தும் போனான். அப்படியே ஞாபகம் இருந்தாலும் அவன் அவளைக் கண்டு கொண்டிருக்க மாட்டான் தான். அன்று பார்த்து சர்வேஸ்வரன் அலுவலகம் வராது மாலையானதும் நேரே வீட்டிற்குச் சென்று விட்டான். அங்கு அலுவலகத்தில் சகுந்தலா வந்த காரின் ஓட்டுநர் அவளுக்காகக் காத்திருந்தான். எல்லோரும் கிளம்பி போகவும் அவனுக்குப் பயம் வந்தது. காவலாளியை அழைத்துச் சகுந்தலாவை பற்றிக் கேட்க... அவனோ உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்து அவள் இல்லை என்று சொல்ல... ஓட்டுநரோ குழப்பத்துடன் வீட்டிற்குச் சென்றான். வீட்டிற்கு வந்ததும் அவன் நேரே சர்வேஸ்வரனிடம் விசயத்தைச் சொல்லிவிட்டுக் கார் சாவியைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.



"உதிம்மா, சக்கு வீட்டுக்கு வந்துட்டாளான்னு பாரு." சர்வேஸ்வரன் மனைவியிடம் சொல்ல...



"சக்கு அவங்க வீட்டில் இல்லையே. நானும் வந்ததில் இருந்து அவளைத் தான் தேடிட்டு இருக்கேன்." உதயரேகா சொன்னதும் அவனுக்கு லேசாகப் பயம் வந்தது.



"சாந்தியை விட்டு நல்லா தேடி பாரு." சர்வேஸ்வரன் சொன்னது கேட்டு,



"எதுவும் பிரச்சினையா?" உதயரேகா கேட்க...



"இல்லை... தேட சொல்லு." என்றவன் அமைதியாக இருந்தான்.



எல்லோரும் வீட்டில் தேடிய பிறகு சகுந்தலாவை வீட்டில் காணவில்லை என்று சொன்னார்கள். சர்வேஸ்வரன் உடனே அலுவலகக் காவலாளியை தொடர்பு கொண்டு சிசிடிவியைப் பார்க்க சொல்ல... அதிலும் சகுந்தலா அலுவலகத்தை விட்டு வெளியில் போன மாதிரி தெரியவில்லை. சாப்பாடு எடுத்துக் கொண்டு அவள் அலுவலகம் உள்ளே சென்றது மட்டுமே பதிவாகி இருந்தது. எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்த சர்வேஸ்வரன் வேகமாக அலுவலகம் கிளம்ப...



"நானும் கூட வரவா பிரின்ஸ்?" உதயரேகா கேட்டதும்... நொடி நேரம் கூடத் தாமதியாது,



"வா..." என்று அழைத்தான். பெண் பிள்ளை விவகாரம் என்பதால் அவனுக்குமே மனைவி உடனிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.



இருவரும் அலுவலகம் வந்தடைந்தனர். காவலாளி, அங்குத் தேங்கி இருந்த மற்ற பணியாளர்களைக் கொண்டு அலுவலகம் முழுவதும் சகுந்தலாவை தேட தொடங்கினர். எல்லா இடங்களிலும் தேடியும் அவளைக் காணவில்லை.



"சார், மொட்டை மாடி ஒண்ணு மட்டும் தான் பாக்கி. மீதி எல்லா இடமும் தேடி பார்த்தாச்சு." என்று காவலாளி சொல்ல...



"அதையும் மிச்சம் வைக்க வேண்டாம். தேடுங்க." என்ற சர்வேஸ்வரன் ஏதோ நினைவில் மனைவியையும் அழைத்துக் கொண்டு அங்கே சென்றான்.



மொட்டை மாடி கதவை திறந்து கொண்டு அனைவரும் சென்ற போது அங்குக் கண்ட காட்சியில் எல்லோருமே கலங்கி போயினர். அங்குச் சகுந்தலா வாடி வதங்கிய செடியாய் வெயிலின் தாக்கத்தில் மயங்கி கிடந்தாள். அதுவும் கைகள் கட்டப்பட்ட நிலையில்... அவள் கீழே மடிந்து விழுந்து இருந்ததால் அவளது கரங்கள் கட்டப்பட்டு இருந்ததை யாரும் கவனிக்கவில்லை. எல்லோரும் அவளை நோக்கி ஓடினர். முதலில் விரைந்து வந்த சர்வேஸ்வரன் முதல் வேலையாக யாரும் கவனிக்காதபடி மெல்ல அவளது கட்டினை அவிழ்த்து விட்டான். அவனது மனையாள் கூட அதைக் கவனிக்கவில்லை.



"ஐயோ சக்கு..." உதயரேகா அலறியபடி கண்ணீருடன் சகுந்தலாவை அள்ளி எடுத்து அழ ஆரம்பித்தாள். சர்வேஸ்வரனும் கலங்கியபடி சின்னவளை பார்த்தான்.



அடுத்தச் சில நிமிடங்களில் சகுந்தலா பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளது உடலில் நீர்ச்சத்து குறைந்து காணப்பட்டது. மருத்துவர் அவளுக்கு அதற்கு ஏற்ற சிகிச்சையை அளிக்க ஆரம்பித்தார். சகுந்தலா இன்னமும் கண்விழிக்கவில்லை.



வராந்தாவில் வந்தமர்ந்த சர்வேஸ்வரன் நான்காவது மாடி சிசிடிவி கேமிராவை பரிசோதிக்கச் சொன்னான். காவலாளி அதைப் பார்த்துவிட்டு,



"அந்தப் பொண்ணு சக்தி சார் ரூமுக்கு சாப்பாடு எடுத்துட்டுப் போயிருக்கு சார். அதுக்குப் பிறகு சாய்ராம் சார் மட்டும் ரூமில் இருந்து வெளியில் போறார். அதன் பிறகு ஒண்ணுமே பதிவாகலை சார்." என்று சொல்ல...



சர்வேஸ்வரனுக்கு எல்லாம் புரிந்து போனது. இது மகனின் திருவிளையாடல் என்று... மிச்ச கதையைச் சகுந்தலாவின் கைக்கட்டு அவனுக்கு எடுத்துரைத்தது. அவன் கோபத்தோடு மகனது அலைப்பேசிக்கு அழைத்தான். சக்தீஸ்வரனோ தந்தையின் அழைப்பினை எடுக்கவே இல்லை. சர்வேஸ்வரன் மகன் மீதான ஆத்திரத்தில் அமர்ந்து இருந்தான். உதயரேகாவோ கவலையுடன் அமர்ந்து இருந்தாள்.



சர்வேஸ்வரன் அடுத்து சகுந்தலாவின் பெற்றோருக்கு அழைத்துச் சகுந்தலா தங்களுடன் இருப்பதாகச் சொன்னவன்... அதனால் அவளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று மட்டும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான். இது மறைக்கப்பட வேண்டிய விசயமல்ல. ஏனெனில் காவலாளி உட்பட அலுவலக ஊழியர்கள் சிலருக்கு சகுந்தலாவின் நிலை பற்றித் தெரியும். எப்படிக் கணபதி, விஜயாவிடம் இதைப் பற்றிச் சொல்லுவது? என்று அவன் பெருத்த சிந்தனையில் ஆழ்ந்தான்.




***************************
 

Sasimukesh

Administrator
பத்மினி வந்த கார் பழுதாகி நின்றுவிட்டது. அவள் தங்களுக்குத் தெரிந்த மெக்கானிக்குக்கு அழைத்து விசயத்தைச் சொல்லிவிட்டு காத்திருந்தாள். அவள் பயப்படவெல்லாம் இல்லை. இத்தனை வருடங்களாகப் பிறந்து வளர்ந்த ஊர் இது... யார் என்ன செய்துவிட முடியும்? அந்தத் தைரியம் அவளுக்கு... அப்போது மருத்துவமனையில் இருந்து வந்த பிரேமின் கார் அவள் அருகே வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பிரேம்,



"எதுவும் பிராப்ளமா?" என்று அவளிடம் கேட்டான்.



"ஆமாம்... திடீர்ன்னு கார் நின்னுருச்சு."



"ஓ... என் கூட வர்றீங்களா? நான் டிராப் பண்றேன்." அவன் நல்லவன் போல் தன்மையாகக் கேட்க...



"இல்லை வேண்டாம். மெக்கானிக் வந்ததும் ஃகால் டாக்சி பிடிச்சு வீட்டுக்கு போயிருவேன்." அவள் மறுத்தாள்.



"என்னங்க நீங்க? நான் என்ன முன்ன பின்ன தெரியாத ஆளா? ஏன் பயப்படுறீங்க?" பிரேம் நல்லவன் பிட்டை போட...



"நான் உங்க கூட வந்தால்... என்னோட காரை என்ன பண்றது? நீங்க கிளம்புங்க." பத்மினியும் தன்மையாக அவனைத் தள்ளி நிறுத்தி பதில் சொன்னாள்.



"ஓரமா நிறுத்திட்டு வாங்க." பிரேம் பிடிவாதம் பிடித்தான்.



"சொல்றேன் தப்பா நினைச்சுக்காதீங்க. இதுவரை நான் இப்படி அடுத்தவங்க காரில் போனது கிடையாது. சாரி." அவள் முகத்தில் அடித்தார் போன்று மறுத்து விட்டாள்.



"என்னங்க நீங்க?" பிரேம் மேலே என்ன பேசியிருப்பானோ!



அதற்குள் அந்த வழியாக வந்த நாராயணன் தனது இரு சக்கர வாகனத்தைப் பத்மினி முன்னே வந்து நிறுத்தினான். அவனின் பின்னே அனுபமா அமர்ந்து இருந்தாள். நாராயணன் வண்டியில் இருந்து இறங்கியதும்... அவளும் கீழே இறங்கினாள்.



"நானா..." நாராயணனை கண்டதும் பத்மினியின் முகம் மலர்ந்தது.



"யார் இவர் மினி?" நாராயணன் அங்கு நின்றிருந்த பிரேமை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தான். அவனது பார்வையைக் கண்டு பிரேம் பல்லை கடித்தான். நாராயணனை கண்டு பத்மினி முகம் மலர்ந்தது பிரேம்க்கு பிடிக்கவில்லை.



"எங்க ஹாஸ்பிட்டல் சேர்மனோட சன். மிஸ்டர் பிரேம்." பத்மினி பிரேமை நாராயணனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.



"அதுக்கு என்னவாம் இப்ப? அதுக்குன்னு உன் கூட நடுரோட்டில் நின்னு பேசணும்ன்னு எந்த அவசியமும் இல்லையே?" நாராயணன் பிரேமை முறைத்தான். ஏனோ அவனுக்குப் பிரேமின் திருட்டு முழி சரியாகப் படவில்லை.



நாராயணன் பேச்சை கேட்டு பிரேம்க்கு அப்படியொரு ஆத்திரம் வந்தது. அனுபமா கூட நாராயணனின் கோபத்தை வித்தியாசமாகப் பார்த்தாள்.



"என்னங்க இப்படிக் கேட்கிறீங்க? அவங்க எங்க ஹாஸ்பிட்டல் டாக்டர். அவங்க நடுரோட்டில் நிற்கும் போது... ஏன், எதுக்குன்னு அக்கறையா கேட்க கூடாதா?" பிரேம் கோபத்தில் படபடக்க...



"மினி மீது அக்கறை பட நாங்க இருக்கோம். நீங்க கிளம்புங்க." நாராயணன் சுள்ளென்று பதில் கொடுத்தான்.



"என்ன பத்மினி, இவர் இப்படிப் பேசுறார்?" பிரேம் அவளிடம் ஆதங்கப்பட...



பத்மினி ஒன்றும் பேசாது அமைதியாக இருந்தாள். அவளுக்குமே நாராயணன் பேசியது சரியென்றே தோன்றியது.



"ஏதோ அக்கறையில் கேட்டேன். நான் கிளம்பறேன்." என்ற பிரேம் சமாதானமாய்க் கிளம்பி விட்டான். ஆனால் அவனது மனம் சமாதானம் ஆகவில்லை.



"காருக்கு என்னாச்சு மினி?" நாராயணன் அக்கறையுடன் கேட்க...



"என்னன்னு தெரியலை... திடீர்ன்னு நின்னுருச்சு."



"மெக்கானிக்குக்குச் சொல்லிட்டியா?"



"அதெல்லாம் ஆச்சு... இப்ப வந்துருவாரு. நீங்க கிளம்புங்க." பத்மினியின் பார்வை அனுபமா மீது படிந்தது. அதை உணர்ந்தவனாய் நாராயணன்,



"என்னோட சீனியரோட மகள், பெயர் அனுபமா." என்று அறிமுகப்படுத்த...



"ஹாய்..." என்றாள் பத்மினி புன்னகை முகமாய்...



"ஹாய்..." அனுபமாவும் பதிலுக்குச் சொல்லியவள் நாராயணனை கேள்வியாய் பார்த்தாள்.



"சர்வா சார் பத்தி சொல்லி இருக்கேன்ல. அவங்க பொண்ணு, பத்மினி. டாக்டரா பிராக்டிஸ் பண்ணுகிறாள்." நாராயணன் விளக்கம் சொல்லவும்... அனுபமா முகம் தெளிந்தது. ஏனெனில் நாராயணனுக்குச் சர்வேஸ்வரன் கடவுள் போன்று. அவரின் மகள் மீது அவனுக்குப் பக்தி இல்லாது இருக்குமா!



"அனு, ஒண்ணு பண்ணு... ஃகால் டாக்சி பிடிச்சு தாரேன். நீ வீட்டுக்கு போ. நான் மினியை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு கிளம்பறேன். நேரமாச்சுன்னா, மினியை காணாம சார் தவிச்சு போயிருவாரு." என்று அவன் சொல்ல...



"ஓகே நானி." அனுபமா சரியென்று சொன்னதும்... நாராயணன் அவளுக்குக் காரை வரவழைத்து அவளைப் பத்திரமாக ஏற்றி அனுப்பினான்.



அதற்குள் மெக்கானிக் வந்துவிட... பத்மினியின் காரை அவர் வசம் ஒப்படைத்து விட்டு... நாராயணன் பத்மினியை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற சொன்னான்.



"ஹெல்மெட் போட்டுக்கோ..." அவன் அக்கறையாய் ஹெல்மெட் ஒன்றை அவளிடம் கொடுத்தான். அவளும் அதைப் போட்டுக் கொண்டு அவனின் பின்னே அமர்ந்தாள்.



நாராயணன் வண்டியை எடுத்தான். அவன் மிதமான வேகத்தில் வண்டியை செலுத்த... பத்மினி திடுமென, "அவங்க ரொம்ப அழகா இருக்காங்கல்ல." என்று கூற...



"யாரு?" முன்னால் இருந்த கண்ணாடி வழியே அவளைப் பார்த்தபடி அவன் கேட்க...



"அனுபமா..." என்று அவள் சொல்ல...



"உன்னை விடவா?" அவன் எதார்த்தமாகப் புன்னகையுடன் சொன்னவன் சாலையைப் பார்த்தபடி வண்டியை ஓட்டினான். அதைக் கேட்ட பத்மினியின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.



நாராயணன் பொய் கூறவில்லை. அனுபமாவை விடப் பத்மினி பேரழகி தான். இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதேசமயம் அவன் அந்த அர்த்தத்திலும் கூறவில்லை. சிறுவயது முதல் பத்மினி அவனுடன் வளர்ந்தவள். அந்த உறவு, உரிமை எல்லாம் சேர்த்து தான் அவன் அந்த வார்த்தைகளைச் சொன்னது. என்ன தான் அவன் அனுபமாவை காதலித்த போதும்... அவன் மனதில் பத்மினி மீதான மதிப்பு, மரியாதை அனுபமாவை விட ஒருபடி மேலே இருந்தது தான் உண்மை.



வண்டி வீட்டிற்குச் செல்லும் வழியில் செல்லாது வேறு பாதையில் செல்வதைக் கண்ட பத்மினி, "நானா, வீட்டுக்கு போக நாம ரைட்ல போகணும்." என்று சொல்ல...



"எனக்கே வழி சொல்லுறியா மினி?" அவன் வாய்விட்டு சிரிக்க...



"அப்போ நாம எங்கே போறோம்?" அவள் புரியாது கேட்க...



"போனதும் தெரிய போகுது..." என்றவன் மேலே பேசாது வண்டியை செலுத்தினான். அவளும் அமைதியாகி விட்டாள். நாராயணன் மீது அவளுக்குப் பெருத்த நம்பிக்கை உண்டு. அவனுடன் செல்ல அவளுக்குப் பயமேது!



நாராயணன் வண்டியை நிறுத்திய இடத்தைக் கண்டு அவளது விழிகள் சந்தோசத்தில் மின்னியது. அவளுக்குப் பிடித்த சாட் உணவகம் அது.



"இதுக்குத் தான் இவ்வளவு பில்டப்பா?" அவள் அவனைக் கேலி செய்தபடி வண்டியிலிருந்து இறங்கினாள்.



"நீ பார்க்கவே ரொம்ப டயர்டா இருக்க... வா, சாப்பிட்டுட்டு போகலாம்." அவன் அவளை அழைத்துக் கொண்டு உணவகத்தினுள் நுழைந்தான்.



பத்மினியை நாற்காலியில் அமர வைத்தவன் தானே சென்று உணவு வகைகளை ஆர்டர் செய்து வாங்கி வந்தான். அதுவும் அவளுக்கு மிகவும் பிடித்த வடா பாவ், பிரெட் ஆம்லெட், ரோஸ் மில்க் என்று அவன் விதவிதமாக வாங்கி வந்திருந்தான்.



"சாப்பிடு..." என்று அவள் புறம் தட்டுகளைத் தள்ளியவன் தான் காபி மட்டும் குடிக்கலானான்.



"உங்களுக்கு?"



"எனக்குப் பசியில்லை." அவன் மறுக்க...



"ஆனா எனக்கு வயிறு வலிக்குமே." என்றவள் அவனுக்குப் பிரெட் ஆம்லெட்டை ஊட்டி விட... அவனும் மறுக்காது வாங்கிக் கொண்டான்.



அவர்கள் காதலர்கள் என்று அவர்களைக் காண்பவர்கள் அனைவரும் முடிவு செய்ய... யார் என்ன நினைத்தால் எங்களுக்கு என்ன? என்பது போல் அவர்கள் இருவரும் தனி உலகில் சிரித்துப் பேசி மகிழ்ந்தனர்.



*******************************



"நான் எங்கே இருக்கேன்?" என்று கேட்டபடி சகுந்தலா மெல்ல விழிகளைத் திறந்தாள்.



"சக்கு..." சர்வேஸ்வரன், உதயரேகா இருவரும் கண்கள் கலங்க, கலங்கிய குரலில் அவளை அழைத்தபடி அருகில் சென்றனர்.



"மாமோய், அத்தைம்மா..." அவர்களைக் கண்டதும் அவளுக்கும் அழுகை பிறீட்டுக் கொண்டு வந்தது.



எதற்கும் கலங்காத பெண் கண்கள் கலங்குவதைக் கண்டு பெரியவர்களுக்கு மனம் கலங்கி போனது.



"உனக்கு ஒண்ணும் இல்லை சக்கு. இப்போ நீ நல்லாகிட்ட." உதயரேகா அவளது தலையை வருடி ஆறுதல் கொடுத்தாள்.



"வெயில்ல வாடி வதங்கி செத்து போயிருவேனோன்னு நினைச்சேன் அத்தைம்மா." அவள் உதயரேகாவை கட்டி கொண்டு அழுதாள்.



"ச்சூ, இது என்ன பேச்சு சக்கு? நாங்க எல்லாம் இருக்கும் போது இப்படி எல்லாம் நீ நினைக்கலாமா?" சர்வேஸ்வரன் வருத்தத்துடன் அவளை அதட்டினான்.



"பாதம் எல்லாம் எப்படிச் சுட்டுச்சு தெரியுமா? இப்ப கூட வலிக்குது." சகுந்தலா தனது பாதத்தினைப் பார்த்தாள். அவளது பாதங்களுக்கு மருந்திட்டு கட்டு போட்டிருந்தனர்.



"ஐயோ, இனி என்னால நடக்க முடியாதா?" பாதத்தில் இருந்த கட்டினை பார்த்து அவள் ஓவென அழ ஆரம்பித்தாள்.



"அப்படி எல்லாம் இல்லை சக்கு. ரெண்டு நாள்ல புண்ணு சரியானதும் நீ நடக்கலாம்." உதயரேகா அவளை அணைத்து ஆறுதல்படுத்த...



"நெசமா அத்தைம்மா?"



"அத்தைம்மா பொய் சொல்லுவேனா தங்கம்?" உதயரேகா அவளது நாடியை பற்றிக் கொஞ்சியபடி சொல்ல...



"ஆமால்ல, அத்தைம்மா பொய் சொல்ல மாட்டாங்க. நல்லவங்க..." சின்னவள் சிரிக்க... அவளது புன்னகை பெரியவர்களைத் தொற்றிக் கொண்டது.



"நீ எதுக்கு மொட்டை மாடி போன?" உதயரேகாவுக்கு மகனது கைங்கரியம் தெரியாததால் சகுந்தலாவிடம் கேட்க... சர்வேஸ்வரன் சகுந்தலாவை பார்த்திருந்தான். அவனுமே மகனை காப்பாற்ற நினைக்கவில்லை.



"அது தெரியாம மாடிக்குப் போயிட்டேன். நான் அங்கே இருக்கிறது தெரியாம யாரோ கதவை பூட்டிட்டு போயிட்டாங்க." சகுந்தலா பொய்யுரைத்தாள். சக்தீஸ்வரனை அவள் காட்டி கொடுக்கவில்லை. மகனை பற்றிச் சொன்னால் அன்னை மனது கஷ்டப்படும் அல்லவா!



"பொய் சொல்லாதே சக்கு." சர்வேஸ்வரன் கோபத்தை அடக்கி கொண்டு அவளிடம் சொன்னான்.



"மாமோய்..." சகுந்தலா பயத்துடன் அவனைப் பார்த்தாள்.



"நீ பொய் கூடச் சொல்லுவியா?" சர்வேஸ்வரன் கேட்கவும் அவள் தலைகுனிந்தாள்.



"பிரின்ஸ், நீங்க பேசுறது எனக்கு ஒண்ணுமே புரியலை." உதயரேகா ஒன்றும் புரியாது விழித்தாள்.



"எல்லாத்துக்கும் உன் அருமை மகன் தான் காரணம்." சர்வேஸ்வரன் கோபத்தில் பல்லை கடித்தான்.



"சக்தியா? அவன் சக்குவை என்ன செஞ்சான்?" உதயரேகா பதட்டத்துடன் இருவரின் முகத்தைப் பார்த்தாள்.



"அதைச் சக்கு தான் சொல்லணும். சொல்லு சக்கு? சக்தி உன்னை என்ன செய்தான்?" அவன் சொன்னதும் சகுந்தலா அவனைத் தயக்கத்துடன் ஏறிட்டு பார்த்தாள்.



"ஆனா உண்மையைச் சொல்லணும்." அவன் அழுத்தமாய்ச் சொல்ல...



"என் மேல் தான் தப்பு மாமோய். கேப்டன் என் தலைல ரத்தம் வர்ற மாதிரி கொட்டினாங்கல்ல. அதுக்குப் பழிவாங்க நான் கேப்டன் சாப்புடுற மீன்குழம்புல மிளகாய் தூளை அள்ளி போட்டுட்டேன்." என்றவளை கண்டு இருவரும் திகைத்து போயினர். சக்தீஸ்வரன் சும்மா இருந்தாலும் இவளுக்கு அவனை வம்பிழுக்காது இருக்க முடியாது போல என்று...



"இது என்னோட ஐடியா இல்லை. நான் படிச்ச புத்தகத்துல அந்த ரைட்டர் அப்படித் தான் எழுதியிருந்தாங்க." என்றவள் தான் கண்ட கனவின் தாக்கத்தில் வாயை கையினால் இறுக மூடி கொண்டாள்.



"என்ன சக்கு, அவனைப் பத்தி தெரிஞ்சு இருந்தும்?" உதயரேகா இருவரையும் நினைத்து கவலை கொண்டாள்.



"அதுக்குன்னு இப்படிப் பண்ணுவானா அவன்?" இன்னைக்கு அவனுக்கு இருக்கு." சர்வேஸ்வரன் கோபத்தில் உருமினான்.



"மாமோய், என்னால உங்களுக்குள்ள சண்டை வேண்டாம். இதை இப்படியே விட்டுருங்க." சகுந்தலா இருகரம் கூப்பிக் கெஞ்சி கேட்கவும்... அந்த நேரம் சர்வேஸ்வரன் அமைதி காத்தான்.



மருத்துவமனையில் இருந்து மூவரும் வரும் போது இரவாகி இருந்தது. மூவரும் வீட்டிற்குள் நுழையும் போது சக்தீஸ்வரன் கூலாக ஐஸ்க்ரீம் உண்டு கொண்டிருந்தான். சர்வேஸ்வரன், உதயரேகா இருவரும் மகனை முறைத்து பார்த்தனர். நம் நாயகி சகுந்தலாவோ கொஞ்சமும் லஜ்ஜையின்றி அவனது கரத்தில் இருந்த ஐஸ்க்ரீமை மனதிற்குள் சப்பு கொட்டியபடி பார்த்திருந்தாள். அவளது பார்வையைக் கண்ட சக்தீஸ்வரனோ,



"வேணுமா?" என்று ஒன்றுமே நடவாதது போல் அவளைக் கண்டு கேட்டான். அவளும் ஆசையுடன் ஐஸ்க்ரீமை பார்த்தாள்.



மகனது செய்கையில் சர்வேஸ்வரனுக்கு ஆத்திரம் தலைக்கேற மகனை நோக்கி வேகமாய்ச் சென்றவன் அடுத்த நொடி அவனை அடிக்கத் தனது கையை ஓங்கி இருந்தான்.



"பிரின்ஸ்..." உதயரேகா கூக்குரலிட...



"மாமோய்..." சகுந்தலா திகைத்து போய் நின்றிருக்க...



சக்தீஸ்வரனோ அலட்சியமாகத் தன்னை அடிக்க வந்த தந்தையின் வலக்கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி இருந்தான்.



தொடரும்...!!!
 
Status
Not open for further replies.
Top