All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி - கதை திரி(ரீரன்)

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

எல்லாரும் எப்படியிருக்கீங்க..

இப்போதைக்கு புது கதை தொடங்குவதற்கு இல்லைங்க.. அதனால் என்னுடைய "நிழல் தேடிடும் நிஜம் நீயடி!" கதையை ரீரன் செய்யலாம் என்று இருக்கிறேன்.

எழுதி முடித்த கதை என்பதால் தினமும் யூடி உண்டு.

என்சாய்..
 
Last edited:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்..

எல்லாரும் புத்தக திருவிழாவிற்கு தயாரா😄😄😄😄

இம்முறை.. டிசம்பர் 27 ஆம் தேதி தொடங்கும் புத்தக திருவிழா ஜனவரி 12 வரை நந்தனம் மைதானத்தில் நடைப்பெற உள்ளது.

எனது வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "குடை வேண்டாமே.. இப்படிக்கு அடைமழை!" கதை புத்தக வடிவில் படிக்கலாம்.

அர்ஜுனோட அதிரடி காதல் அடைமழையாய் அதிராவை திணறடிக்கவும்.. அதை தாங்க முடியாமல் அதிரா தடுமாறுகிறாள். வேண்டாம் என்று மறுக்கிறாள். ஆனால் அர்ஜுன் அவளை விடுவானா?

படித்து தெரிந்து கொள்ளுங்கள்..🥰

இந்த புத்தகம் அருண் பதிப்பகத்தாரால் வெளியிடப் படுகிறது கிடைக்கும் இடம்..

ARUN PATHIPPAGAM
48TH CHENNAI BOOKFAIR
STALL NO 411,412
5th ROW

வாங்கி படித்து மகிழுங்கள்.. மறக்காமல் தங்களது கருத்துக்களை பகிருங்கள்.

இந்த கதையில் இருந்து சின்ன டீசர்:

அர்ஜுன் அவள் மீதிருந்த பார்வையை எடுக்காது.. “ஆனா அதிரா.. உனக்கும் எனக்கும் செட் ஆகுன்னு நினைக்கிறேன்.” என்றான்.

அதிரா திடுக்கிட்டு பார்க்கவும், அர்ஜுன் “உன் கூடப் பேசறது நல்லா தான் இருக்கு! உன் பாஷையில் சொல்லப் போனா.. உன்னை சீண்டி விளையாடுவது நல்லா இருக்கு! நீயும் வாயில்லா பூச்சி இல்லை. சரிக்கு சரி நல்லா பேசறே!” என்றுச் சிரித்தவன், தொடர்ந்து “நாம் இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமா..” என்றுவிட்டு.. ஓட்டுநரின் இருக்கையின் கதவை தட்டினான். அவன் திறக்கவும், அவனது கையில் மேலும் சில கத்தை நோட்டுகளை திணித்தவன், சிறிது நேரம் கழித்து அவர்களது வீட்டிற்கு போனால் போதும் என்றும்.. அதுவரை.. அந்த மலைச்சாலையில் வண்டி பயணித்துக் கொண்டு இருக்கட்டும் என்றுக் கூறினான்.

அதிரா விக்கித்து அமர்ந்திருந்தாள்.

அந்த மினி லாரி.. அதுவரை சென்றுக் கொண்டிருந்த பாதையில் இருந்து மற்றொரு பாதையில் திரும்பி.. அவன் கூறியதை உண்மை என்று நிரூபித்தது.

அதிரா அச்சத்துடன் எழுந்து நின்று “அர்ஜுன்! ப்ளீஸ் வேண்டாம்! வீட்டிற்கு வண்டியை திருப்ப சொல்லுங்க! எனக்கு உங்க கூட இருப்பது அன்ஈஸியா இருக்கு..” என்றாள்.

அர்ஜுன் “அதைச் சரிச் செய்திரலாம் உட்காரு..” என்றான்.

அதிரா “ப்ளீஸ் வண்டியை திருப்ப சொல்லுங்க..” என்று நடக்க முயலவும், அர்ஜுன் “அதிரா விழுந்திருவே! உட்காரு..” என்று எச்சரித்தான். ஆனால் அவள் கேளாது.. ஒட்டுநரை அழைக்க செல்லுகையில் ஒரு வளைவுப்பாதையில்.. வண்டி திரும்பியது. அதனால் அதிரா தடுமாறி.. பக்கவாட்டில் விழப் போனாள். அதற்குள் அர்ஜுன் கையை நீட்டி அவளைப் பற்றியவன், தன் பக்கம் இழுத்தான். அதிராவும் தடுமாறி அவன் மீது விழுந்தான். தன்மேல் விழுந்தவளை.. இரு கரத்தால் வளைத்து இறுக பிடித்துக் கொண்டான்.

இரு மேனிகள் அழுத்தமாக ஒன்றை ஒன்று உணர்ந்த பொழுது.. இரு உள்ளங்களிலும்.. சிறு சிலிர்ப்பு தோன்றின. அந்த சிலிர்ப்பு இருவரையும் ஒரு நிமிடம் உறைய செய்தது.

*********************

இமைக்காமல் அதிரா தன்னைப் பார்ப்பதைப் பார்த்து சிரித்த அர்ஜுன் “வாட் அதிரா?” என்றுக் கேட்டான்.

அதிரா மெல்ல “நல்லா தானே இருந்துச்சு அர்ஜுன்! நீங்க என்னை சீண்டி விளையாடுனீங்க! எனக்கு கோபம் வந்துச்சு.. உங்களை அவாய்ட் செய்ய நினைச்சேன். ஆனா நான் அப்படி அவாய்ட் செய்ய நினைத்த போது.. நீங்க என்னை நெருங்க ஆரம்பிச்சுங்க! அப்பவும்.. நான் அவாய்ட் தானே செய்திருக்கணும். ஏன் உங்களுக்கு ஒகே சொன்னேன். அங்கே இருந்து தான் என் தப்பு ஆரம்பிச்சுது. இல்லை எனக்கு நானே வச்சுக்கிட்ட ஆப்பு என்றுச் சொல்லணுமோ! அப்படி ஒகே சொன்ன நான்.. அதில் ஏன் உங்களை மாதிரி உறுதியா இருக்க முடியலை?” என்று அவனிடமே கேட்டாள்.

பின் தொடர்ந்து “அப்படி நான் உறுதியாக இல்லை என்று தெரிந்ததும்.. நீங்க.. விடாம ஏன் என்னை இப்படி இறுக்கி பிடிக்கறீங்க! இப்படி இறுக்கி பிடிக்க பிடிக்க.. சுமூகமாக உங்களைத் தவிர்க்க நினைச்ச எனக்கு.. உங்க மேலே வெறுப்பு கூடிட்டே போகுது. வெறுப்புடன் ஒதுங்க நினைக்கிறேன். உங்க பொஷஷிவ்னஸ் எனக்கு பயத்தை கொடுக்குது. ஏன் எனக்கு என்னாச்சு? முதலில் வெறுப்பு, அப்பறம் விருப்பம்.. பிறகு மறுபடியும் வெறுப்பு! இப்படியிருக்கிற என்னை.. நீங்க எப்படி இப்படி ஆழமா நேசிக்கறீங்க! எனக்கு நிஜமா புரியலை. அந்தளவிற்கு சுயமரியாதை இல்லாதவங்களா நீங்க?” என்றுக் கேட்டாள்.

அர்ஜுன் “நமக்குள்ள நடந்ததை அழாக சொல்லிட்டே.. உன் அளவுக்கு எனக்கு அழகா பேச வராது. அருமையான செல்ஃப் அனலைஸ்! இதுல ‘உன் தப்பு..’ ‘உனக்கு நீ வச்சுக்கிட்ட ஆப்பு’ என்று வேர்ட்ஸ் யுஸ் செய்தே பார்த்தியா! அதுதான் எனக்கு பிராப்ளம்! நீ என்னை லவ் செய்ய ஆரம்பிச்சதை என் லைஃப்பில் நடந்த எவ்வளவு சந்தோஷமான விசயம்.. என்று நான் நினைச்சுட்டு இருக்கேன் தெரியுமா! ஆனா அது உனக்கு தப்பாகவும் உனக்கு வச்சுக்கிட்ட ஆப்பாகவும் தெரியுதா!” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்கவும், அதிராவிற்கு பக்கென்று இருந்தது.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1


“உலகை இரட்சிக்கும் காமாட்சி தாயே!”

கோவில் பிரஹாகத்தில் பச்சைப் பட்டுத்தி பச்சைக்கல் மூக்குத்தி மூக்கில் மின்ன காட்சியளித்த காமாட்சியம்மனை பார்த்து பரிமளம் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

அப்பொழுது அவளுக்கு அருகில் நின்றிருந்த பரிமளத்தின் பேத்தி மீரா “இன்னைக்கு என்னை ஸ்பெஷலாக இரட்சிக்கணும் தாயே!” என்றுக் கூடுதல் வேண்டுதலை வைத்தாள்.

அவளுடன் நின்றிருந்த அவளது குடும்பத்தினர் அவளைத் திரும்பிப் பார்க்கவும், “கமான் டுடே இஸ் மை பர்த்டே..! சோ எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு வேண்டும். இந்த குளிரில் ஷெரி வேற கட்டியிருக்கிறேன்.” என்று கரங்களைக் குவித்துக் கொண்டு கண்களை மூடியவாறுச் சொல்லவும்.. அவளது பெற்றோர் ஹரிஹரனும், தனலட்சுமியும் சிரித்தனர். பரிமளம் அவளது தலையை வருடிக் கொடுத்தார்.

அதற்கு “அப்படிப் பார்த்தால் உனக்கு வருஷம் முழுக்க பர்த்டே தான், உன்னைத் தானே இவங்க ஸ்பெஷலா கவனிக்கிறாங்க..! அதனால் என்னையும் கொஞ்சம் கவனி தாயே..!” என்று அவளை விட பத்து வருடங்கள் சிறியவனான மாதவ் புலம்பினான். அதற்கு மீரா தொடர்ந்து “இவன் புலம்பலைக் கேட்டால்.. உனக்கு காதில் இருந்து இரத்தமே வந்திரும் தாயே..” என்கவும், அங்கு சிரிப்பலை பரவியது.

அப்பொழுது அர்ச்சகர் தீபாராதனைக் காட்டவும், பரிமளம் “ஷ்ஷ்ஷ்..” என்றுத் தன் குடும்பத்தினரை அடக்கினார். அவர்களும் கடவுளிடம் தங்களது கவனத்தைச் செலுத்தி அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டார்கள்.

பின் வெளியே வந்தவர்கள் திரும்பி நின்று கோபுரத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் மறக்கவில்லை.

பின் வெளியே வந்தவர்கள்.. மூன்றாக பிரிந்தார்கள், பரிமளம் மற்றும் தனலட்சுமி ஒருபக்கமும், மாதவ் மற்றும் ஹரிஹரன் ஒரு பக்கமும், மீரா ஒரு பக்கமும் பிரிந்தார்கள். தனது காரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த மீராவை பார்த்த தனலட்சுமி “மீரா..! சீக்கிரம் வந்திரு..! எல்லாரும் ஏழு மணிக்கு நெய்பர்ஸ் அசம்பள் ஆகிருவாங்க..! உன் கூட வொர்க் செய்கிறவங்களையும் இன்வைட் செய்திரு..! உன் பர்த்டே பார்ட்டிக்கு வருகிறவர்களை நீ முன்னே நின்று வெல்கம் செய்தால் தான் நன்றாக இருக்கும்..” என்றார்.

“யா! யா! ஐ னோ..” என்றவாறு காரின் கதவை திறந்த மீரா.. முழு நீள ஜெர்கின் கோர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டாள், பின் திரும்பி “பை மாம், பை கெரனி, பை டாட் அன்ட் பை மை டியர் எனிமீ மாதவ்..” என்றுச் சிரித்துவிட்டு காரினுள் ஏறினாள்.

அவளது தந்தை ஹரிஹரன் அவசரமாக “ஹவ் எ க்ரேட் டே டியர்..” என்றார். “தேங்க்ஸ் டாட்” கையசைத்து முறுவலித்துவிட்டு காரின் கண்ணாடியை ஏற்றியவளின் கையில் கார் பறந்தது.

அன்று அவளுக்கு சிறந்த நாளா..??

மாம்பழவர்ணப் பட்டில் பச்சை பார்டரும், அதே மாம்பழ வர்ணத்திலேயே கைசட்டையும் அணிந்திருந்த மீராவின் அழகை கண்கள் குளிர பார்த்துக் கொண்டிருந்த பரிமளம், அவள் ஜெர்கின் அணிந்து அவற்றை மறைத்துக் கொண்டு காரில் ஏறியதும்.. பெருமூச்சு விட்டுக் கொண்டு தனது ஜெர்கினை இறுக பற்றியபடி மருமகளுடன் அவளது காரில் ஏறினார். ஹரிஹரனும் மாதவ்வுடன் தனது காரில் ஏறினார்.

ஹரிஹரனின் கார் மாதவ்வை பள்ளியில் விட்டுவிட்டு அவரது அலுவலகத்தை நோக்கியும், தனலட்சுமியின் கார் அவர்களது வீட்டை நோக்கியும், மீராவின் கார் அவள் வேலை செய்யும் தொழிற்சாலையை நோக்கியும்.. ஜெர்மனி நகரில் அமைந்துள்ள ஹம் நகரின் சீரான சாலையில் சீரான வேகத்துடன் சென்றன.

ஹரிஹரன் இருபதைந்து வருடங்களுக்கு முன்பே வேலையின் பொருட்டு மனைவியுடன் ஜெர்மனி வந்துவிட்டார். இங்கு வந்த பின்பே தனலட்சுமி கருவுற்றாள். ஜெர்மனி வந்து முழுவதாக ஒரு வருடம் முடிவுறாத நிலையில் மனைவியை பிரவசத்திற்கு இந்தியாவிற்கு அனுப்ப இயலாது. அண்டை வீட்டுக்காரர்களின் உதவியுடன் அவரே தனலட்சுமியை கவனித்துக் கொண்டார். மீரா பிறந்து வளர்ந்தது ஜெர்மனியில் தான்.. அதன் பின் இரு வருடங்களுக்கு ஒரு முறை இந்தியாவிற்கு வந்துவிட்டுச் சென்றுக் கொண்டிருந்தனர்.

மீராவிற்கு ஒன்பது வயதிருக்கையில் ஹரிஹரனின் தந்தை ராமமூர்த்தி மறைந்துவிடவும், இந்தியாவிற்கு வந்தார்கள். சில நாட்கள் இருந்துவிட்டு வேலையின் நிமித்தம் ஹரிஹரன் செல்ல வேண்டிய கட்டாயமாக இருக்க தந்தையை இழந்த தாயினை விட்டுச் செல்ல ஹரிஹரனுக்கு மனமில்லை. என்னத்தான் தம்பியின் குடும்பம் இருந்தாலும் அவரின் மனம் தன் தாயுடன் இருக்க சொல்லி விளம்பியது. எனவே மகள் மீராவை பரிமளத்திடம் விட்டவர், தனலட்சுமியுடன் ஜெர்மனி திரும்பினார். பின் பரிமளத்தின் உலகம் மீரா என்று ஆனது. ஒரு வருடம் பாட்டியும் பேத்தியுமாக தனி உலகத்தில் லயித்திருந்த வேளையில் தனலட்சுமி மீண்டும் கருவுற்றார். இரு வருடங்கள் பரிமளத்துடன் இருந்த பின் மீராவை மட்டுமல்லாது மீராவின் செல்ல கட்டளையின்படி பரிமளத்தையும் ஜெர்மனிக்கு ஹரிஹரன் வரவழைத்தார். பன்னிரெண்டு வயதே நிரம்பிய மீரா தான் பரிமளத்தை இரு விமானங்கள் மாற்றி பத்திரமாக ஜெர்மனி அழைத்து வந்தாள். பின் அவர்களின் வசம் ஜெர்மனி என்றே ஆனது.

ஜெர்மனி நகரில் அமைந்துள்ள ஹம் நகரில் அவர்களின் வாழ்க்கை ஓடியது. அவர்களின் அண்டை வீட்டுக்காரர்களில் சிலர் இந்தியராவும் அதில் இரு குடும்பங்கள் தமிழ் குடும்பங்களாக இருக்கவும்.. அங்கே இருந்த சில ஜெர்மன் குடும்பத்தினர் என்று அண்டை வீட்டினருடன் இணைந்து அழகாக வாழ்க்கை நடத்தினார்கள். இன்று மீராவிற்கு இருபத்திமூன்றாம் பிறந்தநாள்..! ஹம் நகரில் அமைந்துள்ள காமாட்சியம்மனை தரிசித்துவிட்டு அவரவர் அலுவல்களைப் பார்க்க விரைந்தனர். மாலையில் பிறந்தநாள் விருந்திற்கும் திட்டமிட்டிருந்தனர்.

இவ்வாறு அழகிய ஓடை போன்று சென்றுக் கொண்டிருக்கும் அவர்களது வாழ்வில் ஒருவனால் சலசலப்பு தோன்றுமா..!?!

மித்ரா ஹம் நகரில் உள்ள புகழ்பெற்ற வாகன உற்பத்தி தொழிற்சாலையில் வடிவமைப்பாளராக பணிபுரிகிறாள். அங்கும் அவளுக்கு தமிழ் நண்பர்கள் உண்டு. அதில் கார்த்திக் கொஞ்சம் ஸ்பெஷல்!

கார்த்திக்கை பற்றி நினைக்கையில் அவளது முகத்தில் புன்னகை மலர்ந்தது. கார்த்திக்கை அவளுக்கு ஒரு வருடங்களாக தெரியும். இந்திய நிறுவனத்தில் ஒன்றில் பணிபுரிந்தவனுக்கு இங்கு மாற்றலாகி ஒரு வருடம் முன்பு தான் வந்தான். தமிழ் தெரிந்தவன் என்பதிலேயே இருவரிடமும் முதல் நாளே நட்பு மலர்ந்தது. தினமும் பார்த்து பழகவும்.. அவர்களது நட்பில் உறுதி ஏற்பட்டது. ஆனால் கடந்த ஒரு மாதமாக மீராவிற்கு வேறு நினைவு..!

ஒரு மாதத்திற்கு முன் அவர்களது பிரிவில் பணி புரிந்த வடஇந்திய பெண் ஒருத்தி மீராவிடம் வந்து அவள் கார்த்திக்கை காதலிப்பதாகவும், அவள் அதை அவனுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்றுக் கூறவும்.. மீராவிற்கு கோபம் எங்கிருந்து தான் வந்தது என்றுத் தெரியவில்லை. கார்த்திக்கிற்கு அவள் ஏற்றவள் இல்லை என்றுத் திட்டித் துரத்திவிட்டாள். அதை கார்த்திக்கிடம் பொருமலுடன் சொல்லவும்.. நன்றாக சிரித்தவன், அவளின் முகத்திற்கு அருகே குனிந்து “உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டான். அந்த குரல் அவளது செவிக்குள் புகுந்து.. உள்ளே செல்வதைத் திகிலுடன் உணர்ந்தவாறு நின்றுவிட்டாள். அவளது முகத்தைப் பார்த்தவன், மீண்டும் சிரித்துவிட்டு அவளது கன்னத்தை நிமிட்டிவிட்டு சென்றுவிட்டான். அன்று மட்டுமல்லாமல் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவனது கிசுகிசுப்பான குரலும், சிரிப்பும் அவளது செவிக்குள் கேட்டது. அன்றிலிருந்து இருவரும் சந்தித்தால்.. வேறு விசயங்களைப் பற்றிப் பேசினாலும்.. சில நொடிகள் அன்று நடந்ததை நினைத்துப் பார்த்து முறுவலித்துக் கொள்வார்கள்.

கார்த்திக்கை அவளது வீட்டினருக்கு முன்பே அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறாள் என்றாலும்.. இன்று அவளது வீட்டில் நடைப்பெறும் விருந்தில் அவனை முதன் முறையாக வீட்டிற்கு அழைக்கிறாள். எதோ முக்கிய நிகழ்வு நிகழப் போவது போல் அவளது உள்ளமெங்கும் குறுகுறுப்பு தோன்றியிருந்தது.

முகத்தில் மாறாத சிரிப்புடன் அலுவலகத்தில் அவள் பணி புரியும் பிரிவிற்குள் சென்ற போது, அங்கு வண்ண பாலூன்கள் தான் அவளது கண்களில் பட்டது. அவள் திகைத்து நிற்கையிலேயே பாலூன்கள் மேலே பறந்து விட்டத்தில் முட்டிக் கொண்டு நின்றன. அவை அகன்றதும்.. அதற்கு பின்னால் நின்றிருந்த அவளது அலுவலக நண்பர்கள் “ஹாப்பி பர்த்டே மீரா..” என்று குதுகலத்துடன் கத்தினார்கள்.

அவர்களைப் பார்த்த மீராவும் குதுகலமடைந்தாள். “தேங்க்யு! தேங்க்யு! தேங்க்யு சோ மச்..” என்றுச் சொல்லியவள், அனைவரையும் அன்று மாலையில் அவளது வீட்டில் நடக்க இருக்கும் பிறந்தநாள் விருந்திற்கு அழைப்பு விடுத்தாள். அனைவரும் அவள் புடவை கட்டியிருப்பதைக் கண்டு அவளது அழகு கூடியிருப்பதாக கூறிப் புகழ்ந்தார்கள். அவளுடன் படமும் எடுத்துக் கொண்டார்கள்.

கடவுளிடம் வேண்டிக் கொண்டது போல் முகம் கொள்ள மகிழ்ச்சியுடன் இருக்கையில் அமர்ந்தவளுக்கு ஏதோ குறையிருந்தது போல் இருந்தது. என்ன என்று யோசித்தவளுக்கு கார்த்திக் இல்லாதிருப்பது தெரிந்தது. அந்த பிரிவில் இருந்த அனைவரும் வாழ்த்து தெரிவிக்கும் பொழுது அவன் மட்டும் இல்லை என்றால் ஒருவேளை இன்று வரவில்லையோ என்ற ஐயம் கொண்டாள். எனவே அருகில் அமர்ந்திருந்தவரிடம் கார்த்திக்கை பற்றி விசாரித்தாள். அதற்கு அவர் கார்த்திக் முன்பே வந்துவிட்டதாகவும், மீரா வர தாமதமாகும் என்று நேற்று முடித்த புது ப்ரோஜட்டை சரிப் பார்க்க சென்றுவிட்டதாக கூறினார்.

மீரா பணிபுரியும் பிரிவில் அவர்களது வேலை... இயந்திரம் மற்றும் காரின் அமைப்பை வரை வடிவமைத்துக் கொடுப்பது. அதன் பின் அடுத்த கட்ட வேலையான தனிதனிப் பாகங்கள் தயாரித்தல், பின் இணைத்தல் என்று ஒவ்வொரு பிரிவிற்காக என்றுச் சென்று இறுதியாக பெயின்ட் அடிக்கும் பணி வரை நடக்கும் பின் சரிப்பார்த்தலுக்கு ஒவ்வொரு பிரிவிற்கும் மீண்டும் அனுப்பப்படும். அவ்வாறு ஒவ்வொரு பிரிவிலும் சரிப்பார்க்கப்பட்டு இவர்களது பிரிவில் மூன்று தினங்களுக்கு முன் வந்தது. இரு நாட்களாக மீராவும் அவளது பிரிவின் கீழ் வேலை செய்பவர்கள் அனைவரும் சேர்ந்து சரிப்பார்த்து நேற்றே வேலையை முடித்துவிட்டனர். இனி அடுத்தக்கட்டமாக தேர்ந்த ஒட்டுநர் வாகனத்தை ஓட்டிப் பரிசோதனை செய்வார். அதிலும் சரியாக வந்தால் நிறுவனத்தின் பெயர் எழுதுவது, அதற்கு அழகு சேர்க்க டிசைன்களை சேர்ப்பது போன்ற வேலைகள் நடக்கும். இவ்வாறு இறுதிக் கட்ட பரிசோதனைக்கு அந்நிறுவனத்தின் புது ரக கார் தயாராகி இருந்தது.

ஆனால் நேற்றே முடித்துவிட்ட வேலையை கார்த்திக் மீண்டும் ஏன் செய்கிறான் என்றுத்தான் மீராவிற்கு புரியவில்லை. கார்கள் நிற்க வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சென்றாள்.

அந்த பெரிய ஹாலில் கார்கள் வரிசையாக நிறுத்த வைக்கப்பட்டிருந்தது, அதில் கார்த்திக்கை எவ்வாறுத் தேடுவது செல்பேசியில் அழைக்கலாமா என்று அவள் செல்பேசியை கையில் எடுக்கையிலேயே ஒரு காரின் கதவு திறக்கப்பட்டிருக்க அதனுள் அமர்ந்துக் கொண்டு ஆராய்ந்துக் கொண்டிருந்தான். மீரா அந்த காரின் அருகே செல்லவும், ஆரவாரம் கேட்டு நிமிர்ந்தவனின் பார்வையில் இருந்த வியப்பு நன்றாக தெரிந்தது. மீராவிற்கு அவனது கிசுகிசுப்பான குரல் செவியில் ஒலித்தது. கார்த்திக்கும் அன்றைய நாளை நினைத்துக் கொண்டானோ என்னவோ, தலையை ஆட்டிச் சிரித்துவிட்டு மேலும் கீழும் அவளை மீண்டும் பார்த்தவன்,

மனதை மறையாமல் “வாவ்..!” என்றவாறு காரில் இருந்து இறங்கியவன் மீண்டும் “வாவ்! ரியலி வாவ்…” என்று அவளை மேலும் கீழும் பார்த்தான், பின் “அழகாக இருக்கிற மீரா..” என்று புடவை கட்டி மேலும் மெருகேறிய அழகுடன் இருந்தவளைப் பார்த்து சொன்னான்.

மீராவோ “அவ்வளவுத்தானா..” என்றாள்.

கார்த்திக் சிரித்தவாறு புருவத்தைச் சொறிந்துவிட்டு “இந்த தேவதை பிறந்து இருபத்திமூன்று வருஷமாகிவிட்டது. கண்டிப்பாக கொண்டாட பட வேண்டிய நாள் மட்டுமல்ல பெருமைப்பட வேண்டிய நாள்..! யு ஆர் டிசர்ட்வ் மோர் மீரா..” என்றுச் சிரித்தான்.

அதற்கு மீரா “அவ்வளவுத்தானா..” என்று மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

கார்த்திக் புரிந்தவனாய் “நான் அங்கே இருந்திருந்தால் அவங்க கூட கோரஸ் தான் பாடியிருப்பேன். இப்படித் தனியா விஷ் செய்திருக்க முடியாதே..” என்று பற்களைக் காட்டிச் சிரித்தான்.

உடனே மீரா காது இரண்டிலும் விரல்களை வைத்து அடைத்துக் கொள்ளவும்.. “ஒகே! ஒகே! ஸாரி..” என்று இரு காதுகளையும் பிடித்துக் கொண்டவன், “இன்னைக்கு டெஸ்ட் ட்ரைவ் ஓட்ட போவது என் பிரெண்ட் அதுதான் மறுபடியும் வந்து செக் செய்தேன்.” என்றான்.

அதற்கு மீரா “டெஸ்ட் ட்ரைவ் ஓட்டும் வேலை செய்பவர், உன் பிரெண்டா..!” என்று வியப்புடன் கேட்டாள்.

கார்த்திக் “என்னது வேலை செய்பவனா..! அவன்தான் எனக்கு வேலையே கொடுத்தவன்.. இந்த கம்பெனியோட இந்தியா டீலர் கம்பெனி என் பிரெண்ட் அப்பாவுடையது தான்..” என்றுச் சிரித்தான். மீரா புரியாமல் பார்க்கவும்.. கார்த்திக் “நான் சொல்லியிருக்கிறேனே..! என் வீட்டு எக்னாமிக்ஸ் டவுன்னாக இருப்பதைப் பார்த்து அவனுடைய கம்பெனியில் வொர்க் செய்துட்டு இருந்த என்னை.. ஜெர்மனிக்கு என் பிரெண்ட் அனுப்பினான் என்று..” என்கவும், மீரா “ஆமா ஆமா..” என்று நினைவு வந்தவளாய் தலையை ஆட்டினாள்.

கார்த்திக் “அவன்தான் ஜெர்மனிக்கு நேற்று நைட் தான் வந்திருக்கிறான். நேராக கம்பெனியில் வந்து என்னைப் பார்க்கிறான் என்றுச் சொல்லியிருக்கிறான். கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழித்துப் பார்க்க போகிறேன்.” என்று முகத்தில் மகிழ்ச்சியுடன் சொன்னான்.

மீரா புருவத்தை உயர்த்தியவாறு “ஓ..! என்சாய் வித் யுவர் பிரெண்ட்..! அப்போ ஈவினிங் வரை இங்கே தான் இருக்க போகிறாயா..” என்றவள்.. தொடர்ந்து “ஆனால் ஈவினிங் பர்த்டே பார்ட்டிக்கு வந்து விட வேண்டும்.” என்றாள்.

கார்த்திக் “கண்டிப்பாக…” என்றுச் சிரித்தான். அதற்கு மீரா விரலை நீட்டி எச்சரித்துவிட்டு சிரித்தவாறு சென்றாள்.

அப்பொழுது அவர்களின் பேச்சின் நாயகன் அந்நேரத்தில் அலுவலகத்திற்குள் நுழைந்திருந்தான்.

---------------------------------------------------------

இந்தியாவில் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் கொடிக் கட்டி பறந்து இந்தியாவின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாது தங்களது வளர்ச்சியையும் பெருக்கிக் கொண்ட நிறுவனத்திற்கு சொந்தக்காரர் ஜெய்சங்கர்! அவருக்கு ஐந்து பிள்ளைகள்..! ஐந்து பிள்ளைகளுக்காக ஐந்து தொழில்களைத் தோற்றுவித்து அவரது பொருளாதாரத்தை பெருக்கி கொண்டவர். பிள்ளைகளுக்கு சரிசமமாக பிரித்துக் கொடுத்தாலும் அவரிடம் மிகையாக மிஞ்சி கிடந்த சொத்தின் கணக்கு ஏராளம்! சிறிது காலத்தில் அவரது மனைவியும் அவரை விட்டு காலம் சென்றுவிட்ட போது.. அவரது பிள்ளைகள் அவரவர் வீட்டிற்கு அழைத்தனர். ஆனால் அவர் தேர்ந்தெடுத்ததோ அவரது இரண்டாம் மகன் ஆனந்த்சங்கரின் வீடு!

ஆனந்த்சங்கர் அவரது பிள்ளைகளில் திறமைசாலி! தன் தந்தை கொடுத்த சொத்தை ஐந்து வருடங்களில் இரு மடங்காக காட்டியவர். அதில் மகிழ்ந்து அங்கு சென்றார். ஆனால் அங்கு சென்ற சில நாட்களிலேயே தன் மனைவிடம் சென்று விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்!?!

ஆனந்த்சங்கருக்கு மூன்று பிள்ளைகள்..! மூத்தவன் ராஜ்சங்கர்.. அவனுக்கு திருமணம் முடிந்து மனைவி மகள் மற்றும் மகன் உண்டு. அடுத்து பெண் வித்யாசங்கர் அவளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. கணவனுடன் தாய் வீட்டிலேயே இருக்கிறாள். அடுத்து ஆதித்யாசங்கர்..!

ஜெர்மனிக்கு கார் மாதிரியை பார்த்து ஒப்பந்தம் போட வந்திருப்பவன் ஆதித்யா தான்..!

------------------------------------------------------------

கண்களைக் கூச செய்யும் வெயிலின் காரணமாக கண்களுக்கு மேலே கையை வைத்தவாறு பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கின் அருகில் நின்றிருந்த நிர்வாக தலைவரும், அவரின் உதவியாளர்களும், இந்தியாவில் இருந்து வந்திருந்த ஆனந்த்சங்கரின் உதவியாளரும் குழப்பத்துடன் நின்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பார்வை அந்த பெரிய மைதானத்தில் இருந்தது. அங்கு நேற்று அவர்கள் வடிவமைத்த கார் ஒன்று முதலில் நிதானமான வேகத்துடன் கிளம்பியது.

அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே சட்டென்று கார் வேகமெடுத்தது. காரின் வேகம் போக போக அதிகரித்தது. அவர்களின் பார்வை அதன் மேல் இருக்கும் பொழுதே அந்த காரின் வேகம் திடுமென குறைந்து அடுத்த நொடியில் அசையாது நின்றது. அவர்கள் என்னவாயிற்று என்றுப் பார்க்கும் பொழுதே.. அது மீண்டும் வேகமெடுத்து கிளம்பியது. நிர்வாக ஊழியர்கள் அருகில் நின்றிருந்த கார்த்திக்கை பார்த்தார்கள். அவன் ஆங்கிலத்தில் “ஸார் பிரேக் செக் செய்கிறார். வேறு ஒன்றுமில்லை..! நம்ம டிரைவரும் இதைத்தானே செய்வார்..?” என்று அவர்களைப் பார்த்து சொல்லி சிரித்துவிட்டு எச்சிலை விழுங்கிக் கொண்டு மீண்டும் மைதானத்தில் பார்வையைச் செலுத்தினான்.

அவனுக்கே அவன் பேசியதில் இருந்த அபத்தம் புரிந்தது. அவர்களின் ஓட்டுநரும் பிரேக் போன்றவற்றை பரிசோதிப்பார் தான்..! ஆனால் இவ்வளவு முரட்டுத்தனமாக செய்ய மாட்டார். ஆனார் கார்த்திக் அவர்களிடம் ஆமாம் அவர் சற்று முரட்டுத்தனமாக தான் காரை ஓட்டுகிறார் என்றுச் சொல்லி அவனது முதலாளியை விட்டுத் தர முடியாது. முதலாளி என்பதற்கும் மேல் நண்பன் ஆகிற்றே..! அதனால் முகத்தில் எதையும் காட்டாது காரில் பார்வையைப் பதித்தவாறு நின்றிருந்தான்.

அடுத்து அந்த கார் சென்ற வேகத்திலேயே நின்ற இடத்தில் இருந்தே வட்டமடித்து நின்று பின் சென்றது. தற்பொழுது அவர்கள் கார்த்திக்கை பார்க்கவும், அவன் முகத்தில் மாறாத அதே அசட்டுச் சிரிப்புடன் “ஸார்! ஸ்டெரிங், கியர், டையர் ஆகியவற்றைப் பரிசோதிக்கிறார்.” என்றுவிட்டு மனதிற்குள் “ஆதி..” என்று முணுமுணுத்தான்.

நேராக பாதையில் சென்றுக் கொண்டிருந்த கார் தற்பொழுது தாறுமாறாக ஓடியது. பாதையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த சிறு சிறு மூட்டைகளின் மேல் ஏறி இறங்கியது. ஒவ்வொரு முறையும் ஏறி இறங்கும் பொழுது குதித்து குதித்து நின்ற காரை பார்த்து இவர்களின் இதயம் மார்புக்கூட்டை விட்டு வெளியே வந்து சென்றது. அடுத்து பெரிய ஒரு தடுப்பின் மேல் ஏறிய பொழுது கார் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. ஆனால் அந்த பயம் காரை ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு இல்லை போல..! தொடர்ந்து அடுத்த தடுப்பின் மேல் காரை செலுத்திக் கொண்டிருந்தான். பின் வேகமாக திரும்பிய கார் பின்னாடியே சென்றது. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களுக்கு காரை ஓட்டிக் கொண்டிருப்பவனுக்கு சித்தம் கலங்கி விட்டதோ என்ற ஐயமே ஏற்பட்டது. அடுத்து அந்த கார் வேகமாக நேராக திரும்பி.. தயாரான கார்களை டேன்கர் லாரிகளில் ஏற்வதற்கு பயன்படும் சரிவான பலகையை நோக்கி வேகமாக சென்றது. காரை ஓட்டிக் கொண்டிருப்பவனின் நோக்கம் அங்கிருந்தவர்களுக்கு புரிந்துவிட்டது. நிர்வாக தலைவர் பொறுமையிழந்த குரலில் “தட்ஸ் எனஃப்! ஐ கான்ட் டாலரேட் திஸ் எனி மோர்..! ஸ்டாப் ஹிம்..” என்று இரைந்தார்.

ஆனால் கார்த்திக்கின் பார்வை அந்த காரின் மேலேயே இருந்தது.

கார் அந்த பலகையை நோக்கி செல்ல செல்ல அதன் வேகம் அதிகரித்தது. பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்களும் அகல விரிந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போல்.. கார் அந்த பலகையின் மேல் ஏறிய கார் வானத்தில் பறந்து சிறிது தூரம் சென்று தரையில் இறங்கியது. அது சரியாக தரையில் இறங்கிய பின்னரே கார்த்திக் அதுவரை அடைத்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டான். “ஆதி..” என்று பற்களைக் கடித்துக் கொண்டான். அப்பொழுது தான்.. அவனுக்கு அருகில் நின்றுக் கத்திக் கொண்டிருந்தவரின் கத்தல் காதில் விழுந்தது. “வாட் ஹி தின்க் ஆஃப் ஹிஸ்செல்ஃப்..! இஸ் ஹி டிரைவிங் எ பேமலி கார் ஆர் ரேஸ் கார்..” என்றுக் கத்திக் கொண்டிருந்தார்.

கார்த்திக் சங்கடத்துடன் அந்த காரை பார்த்தான். அடுத்து அங்கு என்ன நடக்கும் என்று அவனுக்கு ஒரு கணிப்பு இருந்தது. சட்டென்று ஒரு பொறி தோன்றியது. ஒருவேளை ஆதித்யாவிற்கு வேண்டியதும் அதுதானோ..! அவன் கணித்தது சரியென்பது போல்.. நிர்வாக தலைவரின் உதவியாளர் இந்தியாவில் இருக்கும் ஆதித்யாவின் தந்தையை தொடர்பு கொள்ள முயன்றுக் கொண்டிருந்தார்.

எனவே மனதிற்குள் ‘ஆதித்யா போதும்டா..! இன்னும் எத்தனை நாட்கள் உன் வாழ்விலேயே நீ விளையாடுவாய்..?’ என்று வருத்தத்துடன் நினைக்கும் பொழுதே.. அன்று அவன் சொன்ன பதிலும் நினைவு வந்தது.

“மற்றவர்கள் என் வாழ்க்கையில் விளையாடும் போது எனக்கு அதற்கு ரைட்ஸ் இல்லையா..”

கார்த்திக்கிற்கு ஆதித்யாவை நினைத்து கோபமும், வருத்தமும் ஒருங்கே தோன்றியது. அடுத்து என்ன செய்ய போகிறானோ என்று குதித்து நின்ற காரை பீதியுடன் பார்த்தான். அவர்களை பயமுறுத்தியது போதும் என்று நினைத்தனோ..! காரின் கதவு திறக்கப்பட தலைக் கவசத்துடன் இறங்கினான் ஆதித்யா..!

இடது கையால் முகவாயிற்கு கீழ் இருந்த பெல்ட்டை அவிழ்த்தவன், அதே கையால் தலைக்கவசத்தைக் கழற்றினான். தலையை குனிந்து வலது கரத்தால் தலைக்கவசம் அணிந்திருந்ததால் படிந்திருந்த சிகையை கலைத்து விட்டவாறு நிமிர்ந்தான். தன்னைப் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தவன், கண்சிமிட்டிச் சிரித்தான். அவனிடம் இருந்து தலைக்கவசத்தை வாங்க கை நீட்டியவனைத் திரும்பியும் கூடப் பார்க்காமல் அதைக் கொடுத்துவிட்டு அவர்களை நோக்கி வந்தான்.

அங்கு அவனை ஒரு மாதிரி பார்த்தவாறு நின்றிருந்த அலுவலக ஊழியர்களைப் பார்த்து சிரித்தவன், கார்த்திக்கிடம் “இவங்க முகத்தைப் பார்த்தால் என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளட்டுமா என்பது போல் இருக்கே கார்த்தி..” என்றுச் சிரித்தான்.

கார்த்திக் “பின்னே என்ன நினைப்பாங்க..! புதிதாக மார்கெட்டிங்கிற்கு வர போகிற காரை முதன் முதலாக நீ ஓட்ட போகிறாய்.. என்று எவ்வளவு ஆசையாக நேற்றிலிருந்து நான் பார்த்து பார்த்து ரெடி செய்தேன் தெரியுமா..! ஆனால் நீ..” என்று அவனை முறைத்தான்.

அதற்கு “நான் டெஸ்ட் டிரைவர் செய்வதைத் தானே செய்தேன்.” என்றுத் தோள்களைக் குலுக்கியவாறுச் சொன்னான்.

கார்த்திக் “அவங்க சாஃப்ட்டா ஒவ்வொரு ஸ்டெப்பாக செய்வதை நீ முரட்டுத்தனமாக செய்து வைத்திருக்கிறே!” என்றுப் பொருமினான்.

அதற்குள் நிர்வாக தலைவர் ஆதித்யாவின் தந்தையிடம் என்ன பேசினாரோ.. ஆதித்யாவை பார்த்து “தேங்க்ஸ் ஃபார் கம்மிங்!” என்றுவிட்டு அவனை எரிச்சலுடன் பார்த்தார்.

அதைப் பார்த்த ஆதித்யா மெல்ல கார்த்திக்கின் அருகில் சரிந்து “அவரோட மைன்ட் வாய்ஸ் என்ன சொல்கிறது என்றுத் தெரியுமா..! உன்னை உள்ளே விட்டதே தப்பு..!” என்று உதட்டில் அடக்கப்பட்ட சிரிப்புடன் ஒற்றைப் புருவத்தை உயர்த்திச் சொன்னான்.

ஆதித்யா கூறியதைக் கேட்ட கார்த்திக்கிற்கு சிரிப்பு பிறீட்டு வந்தது. ஆனாலும் அவனும் ஊழியன் என்பதால் சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றான்.

ஆதித்யா இங்கு வந்த போதே.. காரை பற்றிய முப்பரிமாண விளக்கப்படத்தைக் காட்டி அவனுக்கு விளக்க முற்பட்ட போது.. அதைத் தடுத்தவன் நேராக காரையே பார்த்துவிடலாம் என்றுக் கூறவும், அவர்கள் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்கள். மைதானத்திற்கு வந்த பின் பரிசோதனை ஓட்டத்திற்கு வந்த பொழுது, தானே ஓட்டிப் பார்க்க போவதாக சொன்ன போது.. அவனது பாதுகாப்பைக் குறித்து தான் அவர்கள் கவலைப்பட்டார்கள். அவர்களைச் சமாதானப்படுத்திவிட்டு காரில் ஏறிய பொழுது மகிழ்ச்சியுடன் தான் அனுப்பி வைத்தார்கள். ஆனால் அதை வைத்துக் கொண்டு அவன் செய்த அட்டகாசத்தைப் பார்த்து எரிச்சலும் கோபமும் கொண்டார்கள். நேராக ஆனந்த்சங்கரை அழைத்து.. ஒப்பந்தத்தைப் பற்றியும் மேலும் மார்கெட்டிங் விபரங்களைப் பற்றியும் பேச ஆதித்யா சரியான ஆளாக தெரியவில்லை என்று வெளிப்படையாக சொல்லவும், ஆனந்த்சங்கர் அதை அமைதியாக ஆமோதித்தார். ஆனால் அவரது உள்ளத்தில் தன் மகனை நினைத்து கோபம் எரிமலையாக வெடிக்க தொடங்கியிருந்தது.

நிர்வாகத்தினரை பார்த்து சிரித்த ஆதித்யா “இங்கே வந்ததில் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் மிஸ்டர் ஜாக்க்ஷன்! இந்த காரை பற்றி ஒப்பினியனை என்கிட்ட கேட்க மாட்டிங்க என்பதை விட தேவையில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் ரொம்ப என்சாய் செய்தேன். அதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இவர் என் அப்பாவோட ஆஸிஸ்டென்ட்.. இவர்தான் உங்க கூடப் பேச வந்திருக்கிறார். இவரை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..! பை டு ஆல்..” என்றுத் தன்னுடன் வந்திருந்த ஆனந்தசங்கரின் உதவியாளரை கை காட்டினான்.

பின் கார்த்திக்கிடம் திரும்பியவன், “வேலையை முடிச்சுட்டு வாடா..! வெளியில் இருக்கிற காபி கேஃப்பில் வெயிட் செய்கிறேன். இப்போ எனக்கு வேற வேலை இருக்கு, இன்னும் ஃபை செக்ன்ட்ஸில் என் அப்பா கிட்ட இருந்து எனக்கு ஃபோன் வரும் பாறேன்..” என்றுவிட்டு திரும்பியவன், கையை உயர்த்தி ஒவ்வொரு விரல்களாக விரித்தவாறு சென்றான். அவன் ஐந்தாவது விரலை விரித்த போது அவனது சட்டைப் பையில் இருந்த செல்பேசி அழைத்தது. திரும்பி கார்த்திக்கை பார்த்து ‘எப்படி’ என்பது போல் புருவத்தை உயர்த்திக் காட்டிச் சிரித்துவிட்டு செல்பேசியை காதில் வைத்தவாறு சென்றுவிட்டான்.

அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் “ராஸ்கல் இவன் மாறவேயில்லை.” என்றுச் சிரித்தவன், தொடர்ந்து “ஆனால் மாறினால் நன்றாக இருக்குமே..” என்றுச் சிறு பெருமூச்சு விட்டான்.

அதன்பின் அங்கு வியாபாரச் சம்பந்தமான விசயங்கள் போன்றவை பேசப்பட்டது. வேறு ஒரு ஓட்டுநர் வரவழைத்து வேறு ஒரு காரை ஓட்டிப் பார்க்க வைத்து அதைப் படம் பிடித்துக் கொண்டனர். அந்த கார் மார்கெட்டிங்கிற்கு தயார் என்ற அறிக்கையை அனைத்து பிரிவிலும் அறிவிக்கப்பட்டது. அவர்கள் அதை கைத்தட்டி ஆரவாரம் செய்து கொண்டாடினர்கள். மீரா வேலை செய்த பிரிவில் அவளது பிறந்தநாள் அன்று கிடைத்த நல்ல செய்தியாக சொல்லி அவளுக்கு தனியாக வாழ்த்து தெரிவித்தார்கள்.

ஆதித்யா ஓட்டியே காரில் அவன் முரட்டுத்தனமாக ஓட்டிய விதத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருக்குமோ என்று ஆராய்ந்தார்கள். அதில் எந்தவித பாதிப்பும் இல்லாதிருக்கவும், அதிசயப்பட்டார்கள். அவன் இலாவகமாக ஓட்டினனா அல்லது அவர்களது தயாரிப்பு உறுதியானதாக இருந்ததா என்று ஆலோசித்தவர்கள்.. முடிவில் அவர்களின் தயாரிப்பு அவ்வளவு உறுதியானது என்று மார்தட்டிக் கொண்டார்கள்.

மாலையில் சொன்னது போல் காபி கேஃப்பிற்கு கார்த்திக் விரைந்தான். அங்கு அவனுக்காக காத்திருந்த ஆதித்யாவை பார்த்ததும் தானே அவனது முகத்தில் முறுவல் மலர்ந்தது.

“ஆதி..” என்று அழைக்கவும், “கார்த்தி..” என்று அவனும் எழவும், இருவரும் கட்டியணைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

முதலில் விலகிய ஆதித்யா அவனது வயிற்றில் சிறு குத்துவிட்டு “அடப்பாவி ஜெர்மன் கிளைமேட்டிற்கு என்னை விட கலராகிட்டே..!” என்றுச் சிரித்தான்.

அதற்கு கார்த்திக் “காய்ந்துப் போயிட்டேன்.. என்றுச் சொல்லு..” என்றுச் சலித்துவிட்டு “என் பேமலில இருக்கிறவங்க எப்படிடா இருக்கிறாங்க, டெய்லி பேசுவேன் என்றாலும்.. நேரில் பார்க்கிற மாதிரி இருக்காதே..” என்று ஆர்வத்துடன் தொடங்கியவன், வருத்தத்துடன் முடித்தான்.

ஆதித்யா “எல்லாரும் செமையா இருக்கிறாங்க, உனக்கு ஸ்பெஷல் மேசேஜ் மட்டுமில்லை, தின்க்ஸ்ம் அனுப்பியிருக்கிறாங்க.. இப்போ என் ரூமிற்கு வா.. எல்லாம் எடுத்துத் தருகிறேன்.” என்றான்.

கார்த்திக் “தேங்க்ஸ்டா..” என்றான். அதற்கு ஆதித்யா “உன் தேங்க்ஸை நான் கேட்டேனா..” என்று முறைக்கவும், கார்த்திக் “ஒகே! ஒகே!” என்றுச் சமாதானப்படுத்தினான்.

பின் கார்த்திக் “என்ன ஆதி நீ! இன்னைக்கு இப்படிப் போட்டு சொதப்பி வைச்சுட்டே..! அவங்க முகத்தைப் பார்க்க பாவமாக இருந்தது. பிஸினஸ் மேட்டராக வந்திருக்கன்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால் இங்கேயும் வந்து உன் விளையாட்டைக் காட்டிட்டே..!” என்றுக் குறைப்பட்டான்.

அதற்கு சத்தமாக சிரித்த ஆதித்யா “என்னைப் பற்றியும் என் அப்பாவை பற்றியும் நன்றாக தெரிந்த நீயே இப்படி நினைக்கலாமா..” என்று மீண்டும் சிரித்தான்.

பின் சிரிப்பை கை விட்டவனாய் மேசையில் அலங்காரத்திற்காக வைத்திருந்த பொம்மையை கையில் வைத்து விளையாடியவாறு “என்னை உருப்பட வைக்கணும் என்று நினைச்சுட்டு என்னை மட்டம் தட்டுவது தான் அவரது வேலை..! இங்கே என்னை அவர் ஒப்புக்காக தான் அனுப்பியிருக்கிறார் என்று எனக்கு தெரியும். அவர் ஆரம்பத்தில் இருந்து எல்லா விசயங்களையும் இங்கே கான்டெக்ட் செய்து எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டார். அதே மாதிரி நான் இங்கே வந்து என்ன செய்யணும் என்பதை எனக்கு சொல்லி அனுப்பியதை விட.. அவரோட அஸிஸ்டென்டிடம் தான் நான் என்ன செய்யணும் என்று நிறையா சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆல்ரெடி ஓகேவான மேட்டருக்கு வீணாக நடுவில் நான் எதற்கு..! இவங்க அந்த விளக்கங்களை எனக்கு மறுபடியும் விளக்கி எதற்கு எனர்ஜீயை வேஸ்ட் செய்துக்கணும். அதுதான் முதலில் அவங்க பேசலாமா என்றுக் கேட்ட போது மறுத்துட்டேன்..! நான் ஒன்றும் அவங்க ஆட்டுவிக்கும் பொம்மை இல்லை. சரி அவங்க சொல்வதை நான் கேட்கிறேன் என்றே வை..! அவங்க கொடுக்கிற விளக்கத்தை ஒத்துக் கொள்ளவில்லை என்றால் மாற்றி விடுவாங்களா! இல்லை அந்த விளக்கம் சரித்தான் என்று என்னைத்தான் கன்வின்ஸ் செய்வாங்களா? அதுவும் இல்லை. பின்னே எதற்கு டைம் வேஸ்ட் செய்துட்டு! அதுதான் கொடுக்காத வேலையான காரை செக் செய்ய வேண்டும் என்றுச் சொன்னேன். அங்கே என் அப்பா இது என் பிளனிலேயே இல்லையே என்று தலையைப் பிய்ச்சுகிட்டாரு..! எங்கிருந்துடா இவன் வந்தான் என்று இங்கே இருக்கிறவங்க மண்டையை பிய்ச்சுகிட்டு என் அப்பாவிற்கு ஃபோன் போட்டு கம்பளைன்ட் செய்திருக்காங்க..! அதில் எனக்கு செம குஷி..! ஆனால் ஆனஸ்ட்டா சொல்ல வேண்டுமென்றால் ஐயம் என்சாய்டு குட் ப்ரோடெக்ட் காங்கிராஜ்லேசன்ஸ் கார்த்திக்..” என்றுச் சிரித்தான்.

கார்த்திக்கிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இது ஆதித்யாவின் குடும்ப விவகாரம் இதில் தான் தலையீட்டு கருத்துச் சொல்வது சரியாக இருக்காது என்று எப்பொழுதும் போல் அமைதியாக இருந்தான்.

நண்பனின் மௌனத்தைக் கண்டு “கார்த்தி தேறிட்டே போ..” என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.

அதற்கு கார்த்திக் “எல்லாம் அனுபவம் தான்..! உனக்கு அட்வைஸ் செய்கிறேன் என்று எத்தனைத் தரம் உன் கிட்ட வாங்கிக் கட்டியிருக்கிறேன்.” என்று எரிச்சலுடன் சொன்னான்.

அதற்கு மீண்டும் சிரித்த ஆதித்யா “கார்த்தி நான் இங்கே என்சாய் செய்ய வந்திருக்கிறேன். பழைய காலேஸ் லைஃப்பில் என்சாய் செய்கிற மாதிரி இங்கே நாம் என்சாய் செய்ய போகிறோம். கம்பெனியில் புது ப்ரோஜெட்டை தான் முடிச்சுட்டியே! சோ பர்மிஷன் வாங்கிட்டு என் கூட வருகிறே.. ஒகே..” என்றான்.

“அது..” என்று அவன் இழுக்கவும் ஆதித்யாவிற்கு கோபம் சிறிது எட்டிப் பார்த்தது. “எது..” என்றுப் புருவத்தை உயர்த்தி கேட்டான்.

உடனே கார்த்திக் பேச்சை மாற்ற எண்ணி “முதலில் காபி வாங்கி தாடா..” என்றான். சிரித்தவாறு எழுந்த ஆதித்யா அவனது தலையைப் பிடித்து கீழே அழுத்தி குனிந்த அவனது முதுகில் ஒரு அடி வைத்துவிட்டு சென்றான்.

“பாவி..” என்றுச் சிரித்தவாறு நெளிந்துக் கொண்டு அமர்ந்தவன், “கார்த்திக்..” என்ற அழைப்பில் திரும்பினான். அங்கு மீரா நின்றுக் கொண்டிருந்தாள்.

மீரா “வாட் எ சர்பரைஸ்..! இன்னேரம் குடோனில் இருப்பாய் என்றில்லை நினைத்தேன். எனிவே காங்கிராஜ்லேன்ஸ்! நம்ம ப்ரோஜெக்ட் சக்ஸஸ் ஆகிருச்சு..! அப்பறம் உங்க பிரெண்ட்டை பார்த்தீங்களா..? அவரை நாளைக்கு மீட் செய்துக்கோங்க..!” என்று அவனிடம் கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்கு அவன் பதிலளிக்க இடம் கொடுக்காது.. அடுத்த கேள்வியை வரிசையாக கேட்டபடி அவனது இருக்கைக்கு எதிர் இருக்கையில் மீரா அமர்ந்தாள். அவனும் இருக்கையில் நன்றாக சாய்ந்தபடி அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

கையில் இரு காபி கோப்பைகளுடன் வந்த ஆதித்யா தன் நண்பனுடன் இன்னொரு பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான். தனக்கும் தன் நண்பனுக்கும் என்று எடுத்து வந்ததை இன்னொரு பெண்ணுடன் பகிர்ந்து கொள்ள அவன் விரும்பவில்லை. காபி கோப்பை மட்டுமல்லாது அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட இந்த நேரத்தைக் கூட மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள அவன் விரும்பவில்லை. அவனது நண்பன் கார்த்திக்கிடம் சந்திக்கலாமா என்றுக் கேட்டு இங்கே சொன்னபடி வந்திருப்பதால்.. இதை அவர்களுக்கான நேரம் என்று நினைத்தான். அவ்வாறு சொல்லி வைக்காமல் அந்த பெண்ணுடன் பல மணி நேரம் அமர்ந்து அரட்டை அடித்திருந்தாலும் அவன் பெரிதாக எடுத்திருக்க மாட்டான். தற்பொழுது அந்த பெண்ணின் வருகையைத் தொந்திரவாக கருதினான். சிறு எரிச்சலுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே கார்த்திக் அமர்ந்திருப்பதிற்கு பின்னால் இருந்த கண்ணாடியை பார்த்தவனின் முகத்தில் கோபம் பொங்கியது. எனவே ஒரு நொடி நின்றவன் முகத்தில் அசட்டையான முறுவலுடன் அவர்களை நோக்கி சென்றான். சற்றும் யோசிக்காமல் மீராவின் தோளில் காபி கோப்பையைச் சரித்தான்.



நிஜங்கள் சூழ்ந்த உலகில் நான்..!
நிழல்கள் விரும்பா நிழல் உலகில் நீ..!


 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களது கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்...

 
Status
Not open for further replies.
Top