அத்தியாயம் 2
கணேஷன் பானுமதியை பார்க்க.. அவரும்.. தன் கணவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
கந்தசாமி “பொண்ணை கொடுத்து, தோப்பையும் எழுதி கொடுத்து.. மாப்பிள்ளைக்கு கௌரவத்தை கொடுத்தாருனு ஊரு உங்களைத் தான் உயர்வா பேசறதோட மட்டுமில்லாம.. இன்னொரு கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டு.. எதுல குறையோ எங்கே குறையோ.. அந்த கல்யாணத்தை நிறுத்திட்டு.. முறைமாமனை வளைச்சு போட்டுட்டாங்க.. என்றுப் பேச்சும் அதுல அடிப்படும். அதுதான்ங்க சொல்றேன் மாப்பிள்ளை!” என்றார்.
தங்கம் “மத்தபடி.. பெற்ற ஒத்த புள்ளையை கட்டிக் கொடுத்துட்டோம். எப்படி வாழுதோ என்ற பயமெல்லாம் உங்களுக்கு வேண்டாவே வேண்டாம். அவள என் மக மாதிரி பார்த்துப்பேன். என்ற பத்தியும் உங்க அண்ணாரை பத்தியும் உனக்கு நல்லா தெரியும் தானே கொழுந்தியா! கத்தி கூடப் பேச மாட்டோம். சொத்து கித்து எல்லாம் இல்லாம போய் நின்னப்போ கூட.. எங்க கவுரதியை நாங்களே காப்பாத்திக்கிட்டோமே தவிர.. வேற யார் கிட்டயும் கையை ஏந்திட்டு நிற்கலை.” என்றுச் சொல்லிக் காட்டினார்.
கந்தசாமி “என்ற மகனை பத்தியும் நான் உங்க கிட்ட சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை. என்ற மகன் மேலே நம்பிக்கை இருக்கிறதாலே தான்.. உங்க பொண்ணை கொடுக்கிறேனு நீங்களே வலிய வந்திருக்கீங்க! அதனால எங்களுக்கு முழு சம்மதம்! என்ன சொல்றீங்க! என்ற பெரிய மகன் குடும்பத்தையும் எங்க ஊரு பெரியவங்களுக்கு நான் ஃபோனை போட்டு வரச் சொல்றேன். நீங்க.. அந்த பழைய மாப்பிள்ளை வீட்டாருக்கு ஃபோனை போட்டு வர வேண்டானு சொல்லறீங்களா..” என்றுக் கேட்டார்.
கணேஷன் சிறு மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு “ரொம்ப சந்தோஷம் மச்சான்! அப்படியே செய்திரலாம். ஊர் பெரியவங்களை வரச் சொல்லுங்க. நான் அவங்களுக்கு ஃபோன் போட்டு விசயத்தைச் சொல்றேன்.” என்றுவிட்டு எழுந்தார்.
மண்டபத்தின் நடுவில் தான் அமர்ந்து இருவரும் பேசினார்கள் என்பதால்.. அங்கிருந்த கணேஷன் மற்றும் பானுமதியின் சொந்தங்கள் மாறிப் போன சம்பந்தத்தை கேட்டுக் கொண்டு தான் இருந்தார்கள். பலருக்கு மகிழ்ச்சி தான் என்றாலும்.. முணுமுணுத்தவர்களும் உண்டு. இரு வீட்டாரும் பேசிக் கொண்டதை வைத்து.. கணேஷன் சொந்தத்தை பற்றி.. பானுமதியின் சொந்தங்களும், பானுமதியின் சொந்தத்தை பற்றி.. கணேஷன் சொந்தங்களும் குற்றம் குறைகளைச் சொல்லியும் கிசுகிசுத்து கொண்டார்கள்.
கந்தசாமியிடம் பேசிவிட்டு.. இந்த பக்கம் வந்த கணேஷன் “என்ன பானு! இந்த சம்பந்தம் சரிதானா! அவங்க கேட்டதிற்கு ஒத்துக் கொண்டது சரியா..” என்றுக் கேட்டார்.
அதற்கு பானுமதி “எனக்கு இதுல தப்பா படலை. இத்தனை வருஷங்களா உழைக்கிறது அவங்க தான்! இப்போ பொண்ணை கட்டிக் கொடுக்கிறதாலே.. உழைச்ச இடத்தை சொந்தமாக கேட்கிறாங்க.. நம்ம பொண்ணுக்காக கொடுக்கலாம் தப்பில்லை. அப்போ தான் நம்ம பொண்ணையும் மதிப்பா பார்ப்பாங்க! எப்படியிருந்தாலும் பழைய மாப்பிள்ளைக்கு முடிந்திருந்தா.. பையனுக்கு தனி கார், தனி வீடு பார்த்து தனிக்குடித்தனம் வைக்கிறதாவும், சேர்த்தி வச்சதோட இன்னும் கொஞ்சம் நகை போடறதுனு பேசிட்டு இருந்தோம். இப்போ செந்தில் தனிக்குடித்தனம் கேட்டாலும் செய்துக் கொடுத்திரலாம். நமக்கு இருக்கிறது ஒரே பொண்ணு! அவளுக்கு என்றுத் தானே.. இத்தனையும் சேர்த்தி வச்சோம்.” என்றார்.
அதற்கு கணேஷன் புன்னகைத்தவாறு “நானும் இதையே தான் நினைச்சேன் பானு! எப்பவும்.. என் மனசுல இருக்கிறதை நீ அப்படியே படிச்ச மாதிரி சொல்லிடறே..” என்றுவிட்டு.. நிறைந்த மனதுடன் மனதில் எந்த குற்ற குறுகுறுப்பின்றி.. பழைய சம்பந்த வீட்டாருக்கு அழைப்பு விடுத்தார்.
சற்று ஓரமாக நின்றுக் கொண்டு செல்பேசியில் பேசிக் கொண்டிருந்த தனது கணவனை பார்த்த பானுமதி பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டார்.
சரித்திரம் திரும்புகிறது!
ஆம்! ஜாதகம் அமைந்து.. கணேஷன் பொண்ணு பார்க்க வந்த பொழுது.. படித்த நல்ல வேலையில் உள்ள நகரத்து மாப்பிள்ளை என்ற தகுதியை தவிர கணேஷனிடம் வேறு ஒன்றும் இல்லை. ஆனால் நல்ல மாப்பிள்ளையை விட மனமில்லாத பானுமதியின் தந்தை.. மகளுக்கு சில சொத்துக்களையும்.. வங்கி கணக்குகளையும் எழுதி வைத்து.. கணேஷனுக்கு மணம் முடித்து வைத்தார். திருமண புதிதில் தனது பணம் கொண்டே கணவனால்.. நன்றாக வாழ முடிந்தது.. என்ற மமதை பானுமதிக்கு இருந்தது. அதனால் பலமுறை வார்த்தையால் சுட்டிக்காட்டி அவமானப்படுத்தி இருக்கிறாள். கணேஷனும் முகத்தைத் திருப்பிக் கொண்டு.. சராசரியாக மனைவிக்கு கிடைக்கும் அன்பைக் கூட தராமல் இருந்திருக்கிறார். பின்னர் நாளடைவில்.. இந்த உலகில் கணவன் மனைவிக்கு மிஞ்சிய உறவு வேறு ஒன்றுமில்லை என்றுப் புரிந்து.. பானுமதி தனது திமிரையும்.. கணேஷன் தனது கௌவரவத்தையும் விட்டு கீழ் இறங்கி வந்து.. ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு.. அன்பு செலுத்தி.. இல்லறம் சிறக்க வாழ்ந்தார்கள். அதற்கு பரிசாக கிடைத்தவள் தான் வித்யா!
தற்பொழுது அதே போன்ற வாழ்க்கை தனது மகளுக்கும்.. கொஞ்சம் வேறு விதமாக அமையப் போவதை நினைத்து கவலையும்.. அதே சமயம் தனக்கு கிடைத்தது போன்று தங்கமான கணவனும் அமைய போகிறது என்ற மகிழ்ச்சியுமாக என்று இரு மனநிலையில் இருந்தார்.
தனது மகள்.. தன்னைப் போல் இல்லாமல் ஆரம்பத்திலேயே நல்ல புத்தியுடன் வாழ அப்பொழுதே இறைவனை வேண்டிக் கொண்டார்.
அந்த கலவரத்தின் கதாநாயகி.. அங்கு தனது தோழிகள் சூழ அமர்ந்திருந்தாள்.
வித்யா “என்னடி! அவங்க என்ன பேசறாங்கனு கேட்டிங்களா! என்ன பேசிட்டாங்க?” என்று உளவுப் பார்க்க அனுப்பிய தோழிகளிடம் விபரம் கேட்டாள்.
கீதா “அவங்க ஒத்துக்கிட்டாங்க! ஆனா வரதட்சணை கேட்கிறாங்கடி! உங்களுக்கு சொந்தமான தோப்பை அவங்க பார்த்துட்டு இருக்காங்களாம். அதை எழுதி தரச் சொல்றாங்க..” என்றாள்.
அதைக் கேட்ட வித்யா “ஓ! இதை அவங்களே தான் கேட்டாங்களா.. இல்லை என் அப்பா என்ன வேணும் என்று கேட்ட பிறகு வேண்டியதைக் கேட்டாங்களா?” என்றுக் கேட்டாள்.
கீதா “அவங்கதான்டி முதல்ல கேட்டாங்க! உன் அப்பா.. வித்யாவை அவங்க பையனுக்கு கொடுக்க விருப்பமெனு சொன்னதும்.. பையன் கிட்ட சம்மதம் கேட்கணும் என்றுத் தனியா போய் பேசிட்டு வந்துட்டு.. அந்த தோப்பை கேட்டாங்க..” என்றாள்.
வித்யா “ம்ம்! இதுதான் சாக்குனு அவங்களுக்கு வேணுங்கிறதை எழுதி வாங்கிட்டாங்களா! இதை என் அப்பா கேட்காமலேயே கொடுத்திருப்பாரே!” என்று ஏளனத்துடன் கூறியவள், “அப்பறம் சொல்லுங்கடி! அவங்க பேச்சேல்லாம் எப்படி!” என்றுக் கேட்டாள்.
அவளது மற்றொரு தோழி ரக்ஷீதா “ஒரு மாதிரி தான் எனக்கு தெரியுது. ஆனா கிராமத்து ஆளுங்க அப்படித்தான் பேசுவாங்களோ!” என்று அவளிடமே கேட்டாள்.
கீதா “ஆமாடி வித்யா! உங்க மாமா அப்பறம் அத்தையோட பேச்சு தோரணை மாறின மாதிரி இருக்கு!” என்றாள்.
அதற்கு வித்யா “ப்ச்! அதெல்லாம் இந்த மாதிரி சிட்டிவேஷன் வந்ததால் வர கெத்துடி! என் அப்பாவே போய் கேட்டிருக்கிறார். போதாக்குறைக்கு நான் பார்த்த மாப்பிள்ளையை வேண்டானு வேற சொல்லியிருக்கேன் தானே..! அதுனால கொஞ்சம் பந்தா காட்டராங்க! ஆனா கிராமத்து ஆளுங்களுக்கு.. அதை கன்டினீயு செய்ய தெரியாது. நாம் அவங்களுக்கு தெரியாத விசயத்தைப் பற்றிப் பேசினா.. அப்படியானு கேட்டுட்டு அவங்க பந்தா காட்டிட்டு இருக்கோம் என்கிறதை மறந்திருவாங்க! அதை நான் பார்த்துக்கிறேன். இன்னும் யாரும் மெயின் மேட்டருக்கு வரலை. செந்தில் மாமா என்ன சொன்னார். அவருக்கு சந்தோஷம் தானே..” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
அதற்கு கீதா “அதுக்கு முன்னே நான் ஒரு கேள்வி உன்கிட்ட கேட்டாகணும். உனக்கு நிஜமா.. உன் செந்தில் மாமாவை மேரேஜ் செய்ய ஒகே தானா! இல்லை அவசரத்துக்கு அந்த மாப்பிள்ளைக்கு இவர் ஒகேனு சொல்லிட்டியா! உன் வாழ்க்கைடி இது! அதுதான் கேட்கிறேன்” என்றுக் கேட்டாள்.
அதற்கு வித்யா “முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு! அப்பறம் நான் சொல்றேன்.” என்றுப் புருவத்தை உயர்த்தினாள்.
கீதா “இப்போ எனக்கு அந்த செந்தில் நிலைமை நெனைச்சா எனக்கு கொஞ்சம் பாவமாக தான் இருக்குடி!” என்றுவிட்டு “அதெல்லாம் அவருக்கு ஒகே மாதிரி தான் தெரியுது. ஆனா ரொம்பவும் நல்ல புள்ள போல.. நடுவில் ஒரு வார்த்தை பேசலை. அமைதியா அவர் அப்பா பின்னாடி.. சிரிப்போட தான் நின்றார். அவரைப் பற்றி புகழ்ந்து.. பேசின போது.. கொஞ்சம் கூச்சப்பட்டும் சிரித்தார்.” என்றுப் பற்களைக் காட்டிச் சிரித்தாள்.
முன்னால் தொங்க போட்டிருந்த அவளது பின்னலை பிடித்து ஒரு சுற்று சுற்றி இழுத்த வித்யா “நீ அவரை பார்த்து சைட் அடிச்சியா..” என்று மிரட்டினாள்.
கீதா “வலிக்குதுடி! விடுடி! விடுடி! நீ கேட்டதிற்கு தானே பதிலைச் சொன்னேன். இப்போ நீ சொல்லு..” என்றாள்.
அவளது பின்னலை விட்ட வித்யா “முதலாவது காரணம்.. இதோ நீங்கெல்லாம் சைட் அடிக்கிற மாதிரி ஆளு.. பார்க்க நல்லா தான் இருக்கிறார். இரண்டாவது காரணம்.. அவருக்கும் என் மேலே கொஞ்சம் ஆசை இருக்கு.. அதாவது அவருக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கிறாங்க! இந்த மாதிரி டைமில்.. இந்த மாதிரி மாப்பிள்ளை நமக்கு கிடைச்சா நல்லாயிருக்குனு.. பப்ளீக் பிளேஸில் பொண்டாட்டியை கையில் தாங்கிற மாதிரி பார்த்துக்கும் புருஷனை பார்க்கிறப்போ நெனைப்போம். இது ஒன் ஹன்டர்பர்சேன்டேஜ் ப்யுர் வெஜிட்டெரியன் சைட்! அவருக்கும்.. பார்க்கிற எதாவது பொண்ணை பார்த்து.. கண்டிப்பா அப்படித் தோணும். இந்த பங்கஷனுக்கு வந்த போது.. என்னைப் பார்த்தா அவருக்கு தோன்றியிருக்குனு நினைக்கிறேன். மூன்றாவது காரணம்.. அப்பா சொன்ன மாதிரி.. அவர் என்னை விட எல்லா விதத்திலும் தாழ்ந்தவரா தான் இருக்கிறார். அந்த பீட்டர் மாப்பிள்ளை மாதிரி இல்லை. எப்பவும் புருஷன் அழகிலும் சரி.. அறிவிலும் சரி.. பணத்திலும் சரி.. நம்மை விடக் கொஞ்சம் தாழ்ந்திருந்தா தான் நாம கெத்தா இருக்க முடியும். நம்மளுக்கு என்று ஒரு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். இவர் எல்லா விதத்திலும் தாழ்வுதான்னு அப்பா சொன்னார். சோ என்ற புருஷன் என் கைக்குள்ள இருப்பான். அப்பறம்.. என் மூலமா சொத்து கிடைக்குது என்கிறதால்.. அந்த குடும்பத்திலும் என்னோட பேச்சுக்கு மதிப்பும் இருக்கும். என் மேலே பாசமும் இருக்கும். சோ.. ராணி மாதிரி திருமண வாழ்க்கை வாழப் போறேன்.” என்று திருமண வாழ்வின் இலக்கணம் தெரியாது வித்யா கணக்கு போட்டாள்.
வித்யாவின் தோழி ரக்ஷீதா “டி வித்யா! அது மட்டும் மேரேஜ் லைஃப் இல்லைடி..” என்றுக் கண்ணடித்தாள்.
அதற்கு வித்யா “ஹெ நான் எப்படி இருக்கேன்?” என்றுப் புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
அதற்கு கீதா “ஆள் செம கட்டையா இருக்கே..” என்றுச் சிரித்தாள்.
வித்யாவும் சிரித்துவிட்டு “இந்த அழகு போதும் தானே..! அவரை அந்த விசயத்திலும் கட்டிப் போடுவதற்கு..” என்றுவிட்டு எழுந்தவள், இடுப்பில் கரத்தை வைத்துக் கொண்டு எப்படி என்பதைப் போல் அவர்களைப் பார்த்தாள்.
அவளது இரு தோழிகளும் ஒருவரின் தோளின் மேல் ஒருவர் கையைப் போட்டுக் கொண்டு “இதில் எல்லாம் விவரமா தான் இருக்கிறே! ஆனா ஒரு விசயத்தை மட்டும் கிளியர் செய்திரு..” என்றுக் கோரஸாக கூறினர்.
வித்யா “என்னது!” என்றுக் கேட்டாள்.
கீதா “நீ நெனைச்சது எதுவும் நடக்கலைன்னா!” என்றனர்.
அதைக் கேட்ட வித்யாவின் முகம் சுருங்கியது. “அதெல்லாம் நான் நெனைச்ச மாதிரி தான் நடக்கும்.” என்றாள்.
ஆபாயச்சங்கு ஊதப் போவதற்கான அறிகுறியை அவர்கள் கவனிக்க தவறினர். எனவே தொடர்ந்து “அப்படி நடக்கலைன்னா.. என்ன செய்வே?” என்றுக் கேட்டனர்.
வித்யா கண்கள் சிவக்க கண்ணில் கண்ணீர் குளம் கட்ட “நான் நெனைச்சது நடக்காத இடத்துல நான் இருக்க மாட்டேன்.” என்று அலற துடித்த வாயைக் கட்டுப்படுத்திக் கொண்டு கோபத்தில் மூக்கு விடைக்க கூறினாள்.
அப்பொழுதோ தோழியின் நிலை புரிய.. “ஸாரிடி! ஸாரிடி! ஏதோ விளையாடறதா.. நெனைச்சு இப்படிப் பேசிட்டோம். உனக்கு நீ நெனைச்ச மாதிரியே வாழ்க்கை அமையும்டி! நாங்க விளையாட்டுக்கு சொன்னதை மைன்ட்ல ஏத்திக்காதே! அதை அப்படியே மறந்திரு! நீ நல்லபடியா வாழுவே! உன் செந்தில் மாமா உன்னை உன் அப்பாக்கு மேலே பார்த்திருப்பார். நீ அப்செட்டாகி உட்காராதேடி..” என்று இருவரும்.. எங்கோ வெறித்தவாறு அழுகையையும் ஆத்திரத்தையும் அடக்கியபடி அமர்ந்திருந்த வித்யாவிடம் கெஞ்சினர்.
இன்னும் பல முறை மன்னிப்பு கேட்ட பின்பே.. காஜல் கலையாது.. கண்ணில் தேங்கியிருந்த நீரை ஒற்றி எடுத்தவள். “நான் எதுக்குடி.. நீங்க உளறியதை எல்லாம் பெருசா எடுத்துக்க போறேன்.” என்று மூக்கை உறிஞ்சினாள். கீதாவும், ரக்ஷிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அங்கு செந்தில் செல்பேசியில் தனது அண்ணன் வடிவேலுவிடம் விசயத்தைக் கூறி.. அண்ணி சுமதியிடம் சொல்லி பிள்ளைகளையும், தங்கை வளர்மதியையும் அழைத்துக் கொண்டு.. பஸ் ஏறி வரச் சொன்னான். டவுன்ஹால் வந்ததும்.. ஃபோன் போட்டால்.. காரில் வந்து அழைத்துக் கொண்டு வருவதாக கூறினான்.
அவர்களிடம் ஒரு சான்ட்ரோ கார் தான் இருக்கிறது. அதில் செந்தில் தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு இங்கு வந்துவிட்டான். எனவே அவர்களை பேருந்து ஏறி வரக் கூறினான். பின் தன் தந்தையிடம் சென்று “அப்பா! நம்மூர் தலைவருக்கு.. அப்பறம்.. ராமசாமி ஐயாக்கு.. இவங்க பொதுவான மனுஷங்க.. அப்பறம் மாமா, பெரியப்பா, அத்தை.. இவங்களை மட்டும் தானே கூப்பிடணும்.” என்றுக் கேட்டான்.
அதற்கு கந்தசாமி “காத்தமுத்து, மாரியப்பன் அப்பறம்..” என்று பெயர்களை அடுக்கிக் கொண்டே போனவரின் பேச்சில் இடையிட்ட.. செந்தில் “அப்பா! இது திடீருனு நடக்கிற விஷேஷம். அதனால முக்கியமான சொந்தம் மட்டும் போதும்பா! அவங்களுக்கு எல்லாம் அங்கே போய்.. விவரமா சொல்லிக்கலாம். அதுவும்.. பன்னிரெண்டு மணிக்கு ஒரு நல்ல நேரம் இருக்குனு அம்மா பார்த்து சொன்னாங்க! இப்போ நேரம் ஒன்பதாக போகுது! அவங்கெல்லாம் தயாராக முக்கால் மணி நேரம்.. அங்கிருந்து பஸ் புடிச்சு வர ஒரு மணி நேரம் என்றுக் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு மேலே ஆகிடும். அதுக்குள்ள.. நாம நிச்சயம் செய்யறதுக்கு வேணுங்கிறதை வாங்கிட்டு வந்தரலாம்.” என்றான்.
கந்தசாமி மெதுவாக “பணம் இருக்கா செந்தில்?” என்றுக் கேட்டார்.
அதற்கு செந்தில் “தட்டுல வைக்கிறதுக்கு.. பழம், புடவை, பூ, இனிப்பு வாங்கிறதுக்கு கூட வக்கில்லாதவங்க நாம இல்லைப்பா!” என்றான்.
அதற்குள் அவர்களுக்கு அருகில் வந்திருந்த.. தங்கம் “அப்படியில்லைடா! வேற சம்பந்தம் என்றால்.. ஆயிரம் ரூபாயிற்கு புடவை வாங்கி வச்சா கூடப் போதும்.. ஆனா இந்த சம்பந்தம் பெருசுடா! இங்கே மாப்பிள்ளையாய் ஆகப் போகிற உன் கவுரதை குறையாம பார்த்துக்கணும். அதனால என் வளையலை கழற்றி தரேன். ஐந்தாயிரம் ரூபாவுக்கு பட்டுபுடவையும், பொண்ணு விரலுக்கு போடரதுக்கு.. மோதிரமும் வாங்கிட்டு வந்திரு செந்திலு..” என்றவர் மகன் முறைத்த முறைப்பில் கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்டார்.
செந்தில் “அவங்க எனக்கு பொண்ணை கொடுக்கிறாங்களா.. இல்லை என்ற கௌரவத்திற்காக பொண்ணை கொடுக்கிறாங்களா! எனக்கு கொடுப்பதா இருந்தா.. அவங்களை எப்படித் திருப்திப்படுத்தணும் என்று எனக்கு தெரியும். நீங்க நடுவில் எந்த முட்டாள்தனத்தையும் செய்து நாலு பேர் நம்மை இளக்காரமா பார்க்கிற மாதிரி செய்திராதீங்க!” என்றுக் கடுமையான குரலில் கூறவும், தங்கமும் கந்தசாமியும் அமைதியானார்கள்.
செந்தில் “சரி வாங்க போயிட்டு வந்திரலாம்.” என்றான்.
அதற்கு கந்தசாமி “நீயும் தங்கமும் போயிட்டு வாடா! எனக்கு கால் வலிக்குது.” என்று அங்கிருந்த நாற்காலியில் அமரப் போனார். ஆனால் செந்தில் அவரைத் தாங்கலாக பற்றுபவன் போல்.. அவரை அமர விடாமல் பிடித்து “இங்கே இருந்துட்டு.. நம்ம மானத்தை வாங்கிறதுக்கா?” என்றான்.
கந்தசாமி “என்னடா இப்படி சொல்லிப்புட்டே..” என்கவும், செந்தில் “நீங்க இங்கே இருந்தால்.. என்ன நடக்குமுனு தெரியுமா! மாமா வீட்டு சொந்தக்கராங்க, நம்ம வீட்டு சொந்தக்கராங்க எல்லாரும் வந்து.. குசலம் விசாரிக்கிற மாதிரி.. இந்த திடீர் சம்பந்தத்தை பற்றி உங்க கிட்டப் பேசுவாங்க! நீங்களும்.. நம்மை பற்றி பெருமையா பேசராங்கனு நினைச்சு.. பேச்சு கொடுப்பீங்க! வாயைக் கொடுத்து.. இப்போ நீங்க இரண்டு பேரும் பேசினது மாதிரி அப்பா எதாவது பேசப் போய்.. இப்போ கொடுத்திருக்கிற மரியாதையும் மதிப்பும் போயிடப் போகுது. அப்பறம் அவ்வளவு தானா நாம.. என்று நம்மை இளக்காரமா பார்க்க ஆரம்பிச்சுருவாங்க! ஒண்ணை புரிஞ்சுக்கோங்க.. இப்போ அவங்களே வந்து சம்பந்தம் பேசவும்.. நாம் அந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி ஒரு மரியாதை உருவாகிருக்கு! அதைக் கெடுத்தராதீங்க! என் கூடவே வாங்க.. காரில் உட்கார்ந்துக்கோங்க..” என்றான். முகம் புருவம் சுருக்கி கோபம் கொள்ளவில்லை. குரலை உயர்த்தி கத்தவில்லை. ஆனால் அவனது குரலில் இருந்த கடினத்தன்மையே அவர்கள் இருவரையும் அடக்குவதற்கு போதுமானதாக இருந்தது.
தங்கம் “பையன் சொல்ற மாதிரி கேளுங்க! அவன் சரியா சொல்வானு தெரியும் தானே..” என்று கணவனை இடிந்துரைத்தார்.
கந்தசாமி அமைதியாக அவனுடன் நடந்தார். செந்தில் தனது நடையின் வேகத்தை குறைத்து.. பின் தனது தந்தை மற்றும் அன்னைக்கு பின்னால் நடந்தான். பார்ப்பதற்கு பெற்றோர்களுக்கு அடக்கிய பிள்ளை அவர்களுக்கு பின்னே நடப்பது போன்று இருந்தது.
அதன் பின் அங்கு நடப்பவைகள் வேகமாக நடந்தன.
கணேஷன் வந்துக் கொண்டிருந்த பழைய சம்பந்த வீட்டாரிடம் சொந்தத்தில் பெண் கேட்டு வந்திருப்பதாக கூறினார். “அவர்களுக்கு பெண் கொடுப்பதாக முதலிலேயே வாக்கு கொடுத்திருந்தோம், ஆனா நடுவில் சின்ன பிரச்சினை இருந்தது. அதனால் அவங்களுக்கு விருப்பமில்லை என்று நினைத்திருந்தோம். ஆனா அவங்க மறுபடியும் வந்து பெண் கேட்டாங்க! எங்களுக்கும் சொந்தம் விட்டுப் போகாமல் வந்து பெண் கேட்டது.. சந்தோஷம் தான்.. எங்க முடிவை வித்யா ஏற்றுக்கிட்டாள். நல்லவேளை நம்ம சம்பந்தம் கலப்பதற்குள் நின்றுச்சுனு நினைச்சுக்கோங்க! உங்க மகன் அனுப்பிய பரிசுகளை அவள் பயன்படுத்தவே இல்லை. ஒன்றை மட்டும் தான் பிரித்திருக்கிறாள்.. மற்றது பிரிக்கப்படாமல் இருக்கிறது. பிரித்ததிற்கு பணம் கொடுத்து விடுகிறோம். மற்றதை திருப்பி அனுப்பி விடுகிறோம். இந்த சம்பந்தம் விட்டுப் போனதிலும் எனக்கு வருத்தம் தான்.. எனக்கு இன்னொரு பெண் இருந்தால்.. கண்டிப்பாக மணம் முடித்து கொடுத்திருப்பேன். உங்க பையனுக்கு எங்க சம்பந்தத்தை விடவும், நல்ல சம்பந்தமாக அமையும் வாழ்த்துகள்..” என்று அவர்களுடனான சம்பந்தத்தை முடித்துக் கொள்ள பார்த்தார்.
அவர்களுக்கு கோபம் கொள்வதை விட.. ஒதுங்கிவிடுவது சரியாகப்படவும், இந்தளவிற்கு வர விட்டிருக்க கூடாது. ஆனால் ரொம்பவும்.. சம்பந்தம் கலப்பதற்குள்.. இந்த முடிவிற்கு வந்ததிற்கு நன்றி கூறிக் கொண்டு அவர்களும் அந்த சம்பந்தத்தை முடித்துக் கொண்டார்கள்.
அவர்களிடம் பேசிவிட்டு.. கணேஷன் நிம்மதியாக பெரும்மூச்சு ஒன்றை இழுத்துவிட்டார். பின்னர் மற்ற விசயங்கள் தடையின்றி நிகழ்ந்தன.
முதலில் அவர் செந்தில் குடும்பத்தை தான் தேடினார். அவர்கள் நிச்சயத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க சென்றிருக்கிறார்கள்.. என்றுக் கூறவும் திருப்தியுற்றவராய்.. தனது மனைவியை தேடிச் சென்றார். அங்கு பானுமதி கணேஷன் சொந்தங்களை சமாளித்துக் கொண்டிருந்தார். கணேஷன் வந்து ஒரு வார்த்தை இது தனது முடிவு தான்.. என்றுக் கூறிய பிறகு.. மனமேயில்லாமல் மற்றவர்கள் ஒத்துக் கொண்டார்கள். மதியம் வரும் நல்ல நேரத்தில் நிச்சயம் என்று முடிவு செய்திருப்பதால்.. மதிய உணவு தயாரிக்க கேட்டரிங் ஆட்களிடம் தயாரிக்க கூறினார். மேடையில் பின்னால் ஆங்கிலத்தில் ஜிகினா அட்டையால் வைக்கப்பட்ட பழைய மாப்பிள்ளையின் பெயரை மாற்றினார். மேடை அலங்கரித்தவர்களுக்கு செல்பேசியில் அழைப்பு விடுத்து.. செந்தில்குமரன் என்னும் பெயரை அலங்கரித்து தரக் கூறினார்.
பின் மகளிடம் வந்தார். அங்கு வித்யா தனது தோழிகளிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவரின் உள்ளம் நிறைவாக இருந்தது. முதலில் சென்னையில் தனிக்குடித்தனம் வைக்க போகிறோமே.. மகள் எப்படிச் சமாளிக்க போகிறாள் என்றுச் சிறு பயம் கொண்டிருந்தார். தற்பொழுது சொந்தத்தில் கட்டிக் கொடுக்க போகிறார். மேலும்.. இங்கே கோவையிற்கே வரவழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது.
தனது தந்தை தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த வித்யா.. எழுந்து வந்து அவரைக் கட்டிக் கொண்டாள். அவர் பாசத்துடன் அவளது தலையை வருடிக் கொடுத்தார்.
நேரம் பன்னிரெண்டை நெருங்கவும், சிறிது கவலைக் கொண்ட கணேஷன் அவரே செந்திலுக்கு அழைக்கலாம் என்று இருந்த பொழுது.. செந்திலும்.. அவரது பெற்றோரும் வந்தனர்.
காலையில் மண்டபத்தில் இருந்து கிளம்பிய செந்தில் மற்றும் அவனது குடும்பத்தினர்.. நிச்சயத்திற்கு வேண்டிய புடவையை போத்தீஸில் ஐந்தாயிரம் ரூபாயிற்குள் நல்லதாக வாங்கினர். பின்னர் பழங்கள் போன்றவையும் வாங்கினார்கள். பின் அங்கிருந்த சிறிது நேரம்.. ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து காபி குடித்தார்கள். அந்த நேரத்தில் சரியாக அவனது அண்ணனிடம் இருந்து டவுன்ஹால் வந்துவிட்டதாக அழைப்பு வரவும், ஐந்து நிமிட நடை தொலைவில் அவர்கள் இருந்த ஹோட்டல் இருக்கவும், அதைக் கூறி அவர்களை அங்கு வரச் சொல்லி அவர்களுக்கும் காபி வாங்கி கொடுத்தான். பின் அண்ணன் குடும்பத்தை தனது காரில் அழைத்துக் கொண்டும் மற்றவர்களுக்கு இரு கால் டாக்ஸி ஏற்பாடு செய்து ஒன்றாக கிளம்பி வந்தான்.
மண்டபத்திற்குள் நுழைந்ததும்.. அனைவரும் தங்களைப் பார்ப்பதில் இருந்த மாற்றம் அவர்களுக்கு நன்றாகவே புரிந்தது. செந்தில்குமரன் கூறியதும் தற்பொழுது கந்தசாமிக்கும் தங்கத்திற்கும் நன்கு புரிந்தது. அவர்கள் அங்கே இருந்திருந்தால்.. இந்த மரியாதையான பார்வையும்.. மதிப்பும் கிடைத்திருக்காது. ஒரு சொந்தமாக தான் பார்த்திருப்பார்கள்.
நிச்சயதார்த்தம் நின்ற பொண்ணை உன் தலையில் கட்டிட்டாங்க என்றுக் கேலிப் பேசி.. கந்தசாமியின் மனதைக் கலைக்கவும் பட்டிருக்கும். மாப்பிள்ளை என்ற மரியாதை அல்லாமல்.. என் பொண்ணை கட்டிக்கிறே தானே.. என்று வேலையை செய்யும் வேலைக்காரன் போல் ஆகிருக்கும். தற்பொழுது.. தனது குடும்பமாக வந்திருந்தவனை கணேஷனும் பானுமதியும் முன்னே சென்று.. மாப்பிள்ளையாக வரவேற்றார்கள்.
பானுமதி தனது சொந்தங்களிடம் நலம் விசாரித்தாள். பானுமதியின் தங்கை சாருமதி முதலிலேயே அங்கு வந்திருந்தார். அவரும் சென்று தனது சொந்தங்களிடம் பேசினார்.
அதில் அவளது அக்கா அதாவது கந்தசாமியின் தமக்கை மரகதம் “எங்களுக்கு அழைப்பு வைக்காம உன் பொண்ணு சம்பந்தத்தை முடிக்க பார்த்த கடைசில பார்த்தியா.. எங்க வுட்டுக்கே உன்ற பொண்ணை கொடுத்து சம்பந்தம் கொடுக்கிற மாதிரி ஆகிருச்சு..” என்றுக் குத்திக் காட்டினார்.
“கொஞ்சம் கொஞ்சமா எங்களை விலக்க பார்த்தே. கடைசியில பார்த்தியா.. செந்திலால் இன்னும் நெருக்கமா வந்துட்டே..” என்று ஆளுக்கு ஒரு குற்றம் கூறினார்கள்.
அனைத்தையும் பானுமதி இன்முகத்துடன் சமாளித்தாள்.
பின்னர் அவர்களை முன் இருக்கையில் அமர வைத்தார்கள். முதலில் கணேஷன் சொந்தங்கள்.. முன்னிருக்கையில் அமர்ந்திருக்க.. பானுமதியின் சொந்தங்கள் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தார்கள். மாறிப் போன மரியாதையை கண்டு பானுமதியும் சாருமதியும் பெருமையாக உணர்ந்தார்கள்.
நிச்சயத்தார்த்தம் தொடங்கும் நேரமும் வந்தது.
மாப்பிள்ளை வீட்டார் தங்களது தட்டுக்களை மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்ட நாற்காலியின் முன் அடுக்கினர். அதில் மோதிரம் என்று ஒன்றும் இல்லாததால் பானுமதி சிறு துணுக்குற்றாலும்.. அவர்களால் அதுதானே முடியும்.. என்று மற்ற சீர் தட்டுக்களைக் கண்டு திருப்தியுற்றாள்.
அவர்களும் முதலில் பார்த்த மாப்பிள்ளைக்கு என்று வாங்கி வைத்த மோதிரத்தை திருப்பிக் கொடுத்து செந்திலுக்கு வேறு வாங்கலாமா என்று யோசித்து பின் அதற்கு நேரமில்லை, அவர்கள் எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள் என்று விட்டு விட்டார்கள்.
நிச்சயத்தார்த்தம் தொடங்கவும்.. இரு தரப்பு பெரியவர்கள் மேடையின் முன்னே வந்து நின்றார்கள். கணேஷனின் சொந்தங்கள் ஒரு பக்கமும்.. செந்திலின் சொந்தங்கள் ஒரு பக்கமும் நின்றார்கள். பானுமதியின் அக்காவும், அக்கா வீட்டு சொந்தங்களும்.. பானுமதியின் அம்மாவின் சொந்தங்கள் கணேஷனின் பக்கம் நின்றிருந்தார்கள். தனது சொந்தங்களே எதிரே நின்று தனது மகளை அண்ணன் மகனுக்கு மணம் முடிக்க கேட்க வந்திருப்பது பானுமதிக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.
செந்திலின் ஊர் பெரியவர் எனப்படுபவரும்.. கந்தசாமியின் அண்ணன் மற்றும் அக்கா வீட்டுக்காரரும் முன்னே நின்று.. கணேஷனிடம் சம்பிரதாயப்படி செந்திலுக்கு பெண் கேட்டார்கள். கணேஷன் தனது மகளை செந்திலுக்கு திருமணம் செய்துக் கொடுக்க முழுக்க சம்மதம் என்றுக் கூறினார். பின் கந்தசாமியும்.. கணேஷனும்.. ஒருவருக்கு ஒருவர் சந்தனம் பூசி, வெற்றிலைப் பாக்கு மாற்றி.. இனிப்பு பகிர்ந்து சம்பந்தம் கலந்தனர். பின்னர் பெண்ணை அழைத்துக் கொண்டு வரக் கூறினர்.
செந்திலின் அண்ணி சுமதியும், அத்தையும் சென்று.. வித்யாவை அழைத்து வந்தார்கள்.
முகத்தில் புன்னகையுடன் வந்த வித்யா மேடையேறியதும்.. செந்திலின் அத்தை சபையில் கூடியிருந்தவர்களைப் பார்த்து கரம் குவித்து வணக்கம் கூறச் சொன்னார். அதன்படி முகத்தில் புன்னகையுடன் நின்றிருந்தவளை கெமராக்களும் செல்பேசிகளும் படம் பிடித்துக் கொண்டன.
பின் அவளை நாற்காலியில் அமர வைத்தார்கள். முதலில் தங்கம் மேடையேறி வந்து தனக்கு மருமகளாக வரப் போகிறவளின் நெற்றியில் குங்கும் மஞ்சள் வைத்து.. ஆசி வழங்கி வரவேற்றார். அடுத்து.. செந்திலின் அத்தையும்.. செந்திலின் அண்ணி சுமதியும் வைத்தார்கள்.
பின் தங்கம் எடுத்து வைத்த புடவையையுடன் கூடிய சீர்தட்டை எடுத்துக் கொடுத்து கட்டிக் கொண்டு வரக் கூறினார். பிளவுஸிற்கும் ரெடிமேட் வாங்கி வைத்திருந்தார்கள். சிறிது பெரிதாக இருந்தாலும் கச்சிதமாக இருந்தது. பின் மீண்டும் மேடையேறி அமர்ந்ததும்.. செந்திலை மேடைக்கு அழைத்தார்கள். தலையை நிமிர்த்தி அவன் வருவதைப் பார்க்க உந்திய மனதை மேடை நாகரிகம் கருதி.. வித்யா அமைதியாக அமர்ந்திருந்தாள்.
செந்தில் அவளது இடப்பக்கம் வந்து நின்றதும்.. பானுமதியின் குரல் கேட்டது.
“வித்யா! மாப்பிள்ளை உனக்கு ஏதோ வாங்கிட்டு வந்திருக்கிறார். வாங்கிக்கோடா..” என்றார்.
வித்யா ‘என்ன’ என்றுத் திரும்பி செந்திலை பார்த்தாள்.
செந்தில் கையில் நாலு முழம் மல்லிகைப் பூ, அகர்வால் கடை இனிப்பு மற்றும் முறுக்கு பாக்கெட், அனார்கலி சுடிதார் அடங்கிய பைகளுடன் நின்றிருந்தான்.
வித்யாவிற்கு அன்று கூறியது நினைவிற்கு வந்தது. கூடவே.. அதற்கு அவன் அளித்த பதிலும் நினைவிற்கு வந்தது.
‘மாமா! உன்னை எனக்கு கட்டிக் கொடுப்பாரா என்றுக் கேட்டுச் சொல்லு..! நீ கேட்டதெல்லாம் வாங்கிட்டு வரேன்.’
இதோ கணேஷன் மகளை திருமணம் செய்துக் கொடுப்பதாக அவரே முன் வந்து கூறவும், வித்யா கேட்டதை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்துவிட்டான்.
முகத்தில் புன்னகை விரிய.. மலர்ந்த முகத்துடன் அவனைப் பார்த்து சிரித்தாள்.