All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "தேடலின் முடிவில்...!" கதை திரி

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்காஸ்🙏🙏

நான் சாந்தி கவிதா. தேடலின் முடிவில் நான்‌ எழுதி முடித்த கதை. இதை உங்களோட பகிர ஆசைப்படுறேன்‌. சோ இங்க நம்ம தளத்தில பகிர்ந்துக்கிறேன். இது completed நாவல் அதுனால வீக்லி மூனு epis வந்திரும் பிரண்ட்ஸ். அன்ட் இது ஒரு சின்ன கதை 15 epis மட்டும் தான். சோ படிச்சிட்டு உங்க likes and comments தந்து என்னோட நிறை குறைகளை சுட்டி காட்ட மறக்காதீங்க பிரண்ட்ஸ். முதல் எபி இப்போ போடறேன்‌.

நன்றிகள் பிரண்ட்ஸ்:love::love:
 
Last edited:

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 1

அந்த மத்திய ரயில் நிலையம் எப்போதும் போல் தனக்கே ஆன பரபரப்புடன் காலையில் இயங்கி கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் எறும்புகள் போல் சாரை சாரையாக நகர்ந்து கொண்டிருந்தனர்.

"சார் கொஞ்சம் வழி விடுங்க. கொஞ்சம் கொஞ்சம் அந்த பக்கம் நகருங்களே!" என தன் கையில் இருந்த பொருட்கள் அந்த கூட்டத்தால் விழாதவாறு பிடித்தபடி தான் ஏற வேண்டிய ரயிலின் கம்பார்ட்மெண்டை அடைந்தாள் ஸ்ரேயா.

பார்க்கும் போதே துருதுருவென அலையும் கண்கள். அந்த கண்களில் நிறைந்த குறும்பு மற்றும் பார்ப்போரை சுண்டி இழுக்கும் அழகு. அவளின் வயது ஒரு இருபத்து இரண்டு இருக்கும் என கணித்து கூட விடலாம்.

ஒருவழியாக தேடி சென்று தன்னுடைய இருக்கையில் பொத்தென்று அமர்ந்து விட்டாள். "ச்சே சே! என்னா கூட்டம்!‌ என்னா கூட்டம்!

எல்லாரும் அப்படி எங்க தான் போறாங்கன்னு தெரியலைப்பா‌. இந்த கூட்டத்தில முண்டி அடிச்சு வரதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு" என தன் போக்கில் புலம்பி தள்ளினாள்.

பின் தன் போக்கில் ஏதோ பாடலை முணுமுணுத்தவாறு தன் கையில் இருந்த பொருட்களை கீழே இருந்த தன் பையில் வைத்தாள்.‌ அவள் எதிரே இவளின் வயதை ஒத்த ஒரு பெண் ஸ்ரேயாவின் செயலை பார்த்த படி அமர்ந்திருந்தாள். ஆனால் பேசாது அமைதியாக இருந்தாள்.

அவள் சஹானா. அமைதியான அழகு முகம் இவளது. யார் இவளின் முகத்தை பார்த்தாலும் மனம் தன்னாலே அமைதி அடையும் என சொல்லலாம். ஆனால் அந்த கண்கள் ஏதோ தேடலை உள்ளடக்கி இருந்தது போல் தெரிந்தது.

அவளுக்கு அருகே ஒரு வயதான தம்பதி தங்கள் பையை வைத்து கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களிடம் ஸ்ரேயா "ஹாய் அங்கிள்! ஹாய் ஆண்டி.

நான் டெல்லி போறேன். நீங்க எங்க போறீங்க" என கேட்டு அவர்களும் டெல்லி செல்கின்றனர் என அறிந்து கொண்டாள். அதன்பின் தன் போல் ஊர் கதை உலக கதை என பேச ஆரம்பித்து விட்டாள் ஸ்ரேயா.

அந்த சிறிது நேர பேச்சில் சோமசுந்தரம் அவளுக்கு 'சோம் அங்கிள்‌' ஆக அவர் மனைவி லக்ஷ்மி அம்மா 'லக்ஸ் ஆன்டி' ஆகிவிட்டார். அவர்களுக்கு இவள் 'ஸ்ரே பாப்பா' ஆகிவிட்டாள்.

ரயில் கிளம்ப சிறிது நேரம் இருக்கும் போது இன்னும் இரண்டு இளைஞர்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் இருக்கை ஸ்ரேயாவின் அருகே என்பதால் தங்கள் பைகளை அங்கே வைத்தனர்.

"ஏன்பா தம்பிகளா உங்க சீட் இதுவா? இங்கையா உக்கார போறீங்க" என்றார் ஸ்ரேயாவால் அங்கிள் என அழைக்கப்பட்ட சோமசுந்தரம். புரியாது திரும்பிய இருவரும் அவரை பார்த்து ஆம் என தலையை அசைத்தனர்.

அவர்கள் தலை ஆட்டிய உடன் "ஸ்ரே பாப்பா இங்க வந்து ஆன்டி பக்கத்தில உக்காந்துக்கிரியா மா. நான் அந்த ஜன்னல் சீட்ல உக்காந்துக்கிறேன். இங்க ஒரே புழுக்கமா இருக்கு" என்றார் சட்டென ஒரு காரணம் கண்டுபிடித்து.

அவர் சொன்னவுடன் நின்றிருந்த இரண்டு பேரில் ஒருவன் அதை கண்டுக் கொள்ளவில்லை. அவன் விஜய். அதில் மற்றொருவனோ சோமசுந்தரத்தை டக்கென்று திரும்பி பார்த்து முறைத்தான்.

'எங்கல பார்த்தா எப்படி தெரியுதாம் இந்த பெருசுக்கு. இப்படி கேவலபடுத்திருச்சே. அந்த பொண்ணை நாங்க என்ன கடிச்சா திங்க போறோம்.

இந்த பெருசு எங்கள‌ என்னன்னு நினைச்சுச்சு. ச்சே இந்த உலக்ததில பேச்சுலரா இருக்கிறது எவ்ளோ கஷட்மா இருக்கு!!' என நொந்து போனான். அவன் தான் வெற்றி.

அதன்பின் நொந்த முகத்தோடு தலையை திருப்பி தன் நண்பன் விஜையை காண 'இங்க எதுவும் நடந்ததா?' என்பது போல் முகத்தை சாதாரணமாக வைத்திருந்தான்.

'ம்ஹூம்!! இவன் என்ன ஜடம்‌ மாதிரி நிக்கிறான். ஒருவேளை படிச்சு படிச்சு ஜென் நிலைய அடஞ்சிட்டானோ. ச்சே! அவன் எப்போ இதெல்லாம் கண்டுக்கிட்டான்' என காண்டாகவே எண்ணி சோமசுந்தரம் அருகே அமராது விஜய் அமர்ந்த உடன் இவன் கடைசியில் அமர்ந்தான்.

அமர்ந்த உடன் விஜய் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து படிக்க துவங்க வெற்றி 'நமக்கெதுக்கு வம்பு' என தன் கைப்பேசியை எடுத்து கொண்டு அதை நோண்ட ஆரம்பித்தான்.

அங்கே எதிரே சோமசுந்தரம் மனைவியான லக்ஷ்மி அம்மாவை ஜன்னலில் புறம் அமர்த்தி விட்டு நடுவே ஸ்ரேயா அமர கடைசி இருக்கையில் சஹானா ஸ்ரேயாவிற்கு அனைவாக அமர்ந்து கொண்டாள்.

ஸ்ரேக்கு வெற்றியின் முகத்தை கண்டு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. ஆனால் முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டாள். சஹானா முகத்தில் மெல்லிய புன்னகையுடன் பார்த்திருந்தாள்.

ஒருவழியாக அனைவரும் சவுகரியமாக அமர சஹானாவை நோக்கி திரும்பிய ஸ்ரேயா "ஹேய் கேர்ள் உன்னை நீ இன்டர்டியூஸ் பண்ணலை" என்றாள் கேலியாக.

அவளுக்கு ஒத்து ஊதி சோமசுந்தரமும் "சொல்லும்மா சொல்லும்மா" என்றார் வேகமாக. ஸ்ரேயாவும் "ஆமா ஆமா. டெல்லி வரைக்கும் ஒன்னா தானே போறோம்.

மூனு நாளுக்கு மேல ஆகும். அது வரைக்கும் நாம பேசிட்டே போக வேண்டாம்" என்றாள் இன்னும் சிரிப்புடன். அவளை விளையாட்டு போல் முறைத்து வைத்தாள் சஹானா.

அவள் உண்மையாகவே முறைக்கிறாள் என்று எண்ணிய சோம் அங்கிள்‌ "என்னமா ஸ்ரே பாப்பா சொல்றது போல‌ எல்லாம் டெல்லி போறோம். அதுவரைக்கும் பேசிட்டே போகலாம்ல" என்றார் எதார்த்தமாக.

இன்னும் அமைதியாக பார்வை வீசிக்கொண்டிருந்த சஹானாவை நோக்கி "என்ன இது சஹி செல்லம். சோம் அங்கிள்‌ தான் இவ்ளோ கேட்குறாரே உன் பேரை சொன்னா என்ன குறைஞ்சா போய்ருவ" என்றாள் சட்டென.

சஹானாவை பேச வைக்கும் ஆர்வத்தில் இதுவரை யாரென தெரியாதது போல் பேசிக் கொண்டு இருந்த ஸ்ரேயா இப்போது மாட்டிக் கொண்டாள்.

அவள் பேசியதை கேட்ட பின் "என்ன ஸ்ரே பாப்பா உனக்கு அந்த பொண்ணை‌ முன்னாடியே தெரியுமா? அப்புறம் ஏன் தெரியாத மாதிரியே பேசுன?" என்றார் லக்ஷ்மி அம்மா.

இப்படி தனக்கு சஹானாவை தெரியும் என அனைவருக்கும் தெரியும் படி உளரியதை தாமதமாக புரிய அசடு வழிய சிரித்துவிட்டு " அது வந்து சோம் அங்கிள்‌

இவ இருக்காலே இவ தான் சஹானா‌. என் பெஸ்ட் பெஸ்ட் பிரண்ட். சரியான ஊமைக் கோட்டான். பேசவே மாட்டா. அதான் பேச வைக்க டிரை பண்ணுனேன். அது சொதப்பிருச்சு" என்றாள் சமாளிப்பாய்.

"ஓஓஓ..." என்று கேட்டு கொண்டார் சோமசுந்தரம். "சரி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தானே வரீங்க. ஆனா இந்த பொண்ணு முன்னாடியே உக்காந்து இருந்துச்சே.

நீ லேட்டா தானே வந்த. ஏன்?" என்று நியாயமாக கேட்டார் லக்ஷ்மி அம்மா. அதற்கு "அதை ஏன் கேக்குறீங்க லக்ஸ் ஆன்டி. ரெண்டு பேரும் சேர்ந்து தான் வந்தோம்.

வர வழியில ஸனாக்ஸ் எதாவது வாங்கலாம்னு சொன்னா டிரைன்க்கு டைம் ஆகிரும்னு இவ என்னை இழுத்துட்டு வந்துட்டா‌. அதான் பேக் எல்லாம் வச்சிட்டு சாப்பிட கொஞ்சம் ஸ்னாக்ஸ் வாங்க போனேன் ஆன்டி.

வந்து பார்த்தா நீங்க ரெண்டு பேரும் இருந்தீங்க. இவ என்மோ வெளியே அப்படியே வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தா. அதான் அவளை கிண்டல் பண்ணலாம்னு பார்த்தேன்.

எங்க கடைசியா நானே உளறி கொட்டிடேன்" என்று நொந்தவாறு நீளமாக பேசி முடித்தாள். அதையும் சிரிப்புடன் பார்த்திருந்தால் சஹானா. அதை கண்டு "வெறுப்பேத்தாத எரும" என்று கையில் கிள்ளி வைத்தாள்.

அவளின் சிறுபிள்ளை தனத்தில் அனைவரும் அவளை சிரிப்புடன் பார்த்திருந்தனர். அரை மணி நேரம் சட்டென அப்படி கடந்துவிட்டது. அது ஸ்ரேயாவால் என்றால் அது மிகையல்ல.

அப்போது தான் சோமசுந்தரம் தன் அருகே அமைதியாக இருக்க திரும்பி பார்த்தார். அங்கே ஒருவன் புத்தகத்திற்குள் புதைந்திருக்க மற்றொருவன் தேமே என கைப்பேசியை வெறித்திருந்தான்.

"ஏன்பா தம்பி என்ன ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க. நீங்க ரெண்டு பேரும் எந்த ஊருக்கு போறீங்க?" என்றார் கேள்வியாக.

அவரின் கேள்வியில் நிமிர்ந்து பார்த்த வெற்றி 'எப்பா சாமி! இந்த பெருசுக்கு நாங்க ரெண்டு பேரும் கூட இருக்கிறது இப்ப தான் கண்ணுல விழுது போல' என‌ நொந்தேவிட்டான்.

அவர் இன்னும் தன்னையே கேள்வியாய் பார்க்க சுதாரித்த வெற்றி "டெல்லிக்கு தான் அங்கிள்‌ நாங்களும் போறோம்" என்றான் இன்ஸ்டன்ட்டாக வந்த சிரிப்புடன்.

"அப்படியா தம்பி ரொம்ப சந்தோஷம் பா. நாம எல்லாரும் அப்போ மூனு நாளும் நல்லா பேசிக்கிட்டே போலாம்" என‌ ஆர்ப்பாட்டமாய் சோமசுந்தரம் சிரிக்க அவர்கள் பயணமும் இனிதே துவங்கியது.

-பயணம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 2

சோமசுந்தரம் வெற்றியிடம் எங்கே செல்கிறீர்கள் என கேட்டு கொண்டிருந்தார். அவன் தாங்களும் டெல்லி செல்கிறோம் என கூற அவனுடன் பேச்சை தொடர்ந்தார்.

"சரிப்பா உங்க பேருலா என்ன?" என மேலும் அவர்களை அறிய எண்ணி கேள்விகளை தொடுத்தார் சோம் அங்கிள். "என் பேர் வெற்றி அங்கிள். அன்ட் இவன் என் பிரண்ட்.

இவன் பேரு விஜய் அங்கிள்" என்று அருகில் இருந்த நண்பனையும் சேர்த்தே அறிமுகப்படுத்தி வைத்தான். இப்போது விஜயை கண்ட வெற்றி "டேய் விஜய் அவருக்கு ஒரு ஹாய் சொல்லுடா" என்றான் விஜயின் காதில் கிசுகிசுப்பாய்.

அவனை ஒரு பார்வை பார்த்த விஜய் அவனுக்கு பக்கத்தில் இருந்த சோமசுந்தரத்தின் புறம் திரும்பி "ஹாய்" என இதழில் ஒட்ட வைத்த சிரிப்புடன் சம்பிரதாயமாக ஒரு வணக்கத்தை வைத்தான்.

பின் மீண்டும் அவன் கையில் இருந்த புத்தகத்தில் தன் தலையை புகுத்தி கொண்டான். அவனை விநோதமாக பார்த்த சோமசுந்தரத்தை கலைக்கும் விதமாக ஸ்ரேயா அவரை அழைக்க;

இடையில் குறுக்கிட்ட லக்ஷ்மி அம்மா "கண்ணுங்களா! இந்தாங்க ப்பா வடை எடுத்துக்கோங்க. வீட்ல நானே செஞ்சது. சாப்டுகிட்டே பேசுங்க எல்லாரும்" என அனைவருக்கும் அவர் வைத்திருந்த உணவு பொருட்களை பகிர்ந்தளித்தார்.

ஏன் வெற்றி விஜய் கூட அதை மகிழ்வுடன் எடுத்து கொண்டனர். தானும் ஒன்றை கையில் எடுத்த சோமசுந்தரம் "ஸ்ரே பாப்பா! நீ உங்களை பத்தி சொல்லேன்" என்றார் சஹானாவையும் சேர்த்து.

அவரிடம் "எங்களை பத்தி சொல்ல பெருசா ஒன்னும் இல்லை அங்கிள்‌. நாங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ். எங்களுக்குன்னு யாரும் இல்லை. ரெண்டு பேருமே ஒரு ஆஸ்ரமத்தில தான் வளர்ந்தோம்" என கூறினாள்.

"அடிப்பாவி! சரியான புளுகு மூட்டையாகிட்டடி நீ" என மெதுவாக சஹி ஸ்ரே காதை கடித்தாள்‌. "நீ கம்முன்னு இரு" என்ற ஸ்ரே தானும் ஒரு வடையை கையில் எடுத்து கொண்டாள். அவளின் பதிலில் வெற்றியும் விஜயும் 'அடிப்பாவி!' என்ற பார்வையை பார்த்து வைத்தனர்.

ஆனால் ஸ்ரேயாவோ சற்றும் அலட்டாமல் அந்த வடையை உண்டு கொண்டே "சோம்‌ அங்கிள்" என ஆரம்பித்து தன் கேள்வியை கேட்க துவங்கினாள் ஸ்ரேயா.

"அங்கிள் நீங்க சொல்லுங்க. உங்க ஊரு எது. நீங்க எதுக்காக டெல்லிக்கு போறீங்க? ரிலேட்டிவ்ஸ் வீட்டுக்கு எதுவும் போறீங்களா? இல்லை டெல்லிக்கு டூர் மாதிரி எதுவும் சுத்தி பார்க்க போறீங்களா?

இல்லை எதாவது பங்ஷன்க்கு போறீங்களா?" என தன் பாட்டில் கேள்விகளை எழுப்பி அவர் முகத்தை ஆர்வமாக பதிலுக்காய் பார்த்தாள்.

இவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருந்த சோமசுந்தரம் லக்ஷ்மி அம்மா முகம் நொடியில் சூம்பி விட்டது. அதை கண்டு அங்கிருந்த அனைவரின் முகமும் யோசனையை தத்தெடுத்தது.

ஸ்ரேயா லக்ஷ்மி அம்மாவின் கைகளை ஆதரவாக பற்றி "என்ன அங்கிள்‌ நான் எதாவது தப்பா கேட்டு வச்சிட்டனா?" என்றாள் பாவமாக.

அவளின் வருத்தமான குரலை கேட்டு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு கொண்ட சோமசுந்தரம் "நீ எதுக்கு ஸ்ரே பாப்பா பீல் பண்ற. நீ கேட்டது ஒன்னும் அவ்ளோ தப்பான கேள்வி இல்லை" என்றவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

அவரே பேசட்டும் என ஒருவரும் பேசவில்லை. புத்தகத்தில் தலையை வைத்திருந்த விஜய் கூட அதை மூடி வைத்து விட்டு சோம் அங்கிளின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தான்.

"எங்க வயசு எழுவது கிட்ட ஆச்சு மா. இதை எங்க கடைசி காலம்னு கூட சொல்லலாம். இந்த வயசுல என்னத்த தேடி மா போவோம். மோட்சத்தை தேடி போறோம்ன்னு சொன்னா சரியா இருக்கும்" என்று வலியுடன் புன்னகைத்தார்.

"எங்க ஊரு கும்பகோணம் மா. எங்க அப்பா அந்த காலத்துலையே கப்பல்ல வெளிநாடுலாம் போய் வியாபாரம் செஞ்சவரு. பணத்துக்கு குறைவில்லை. ஒத்த புள்ளை நானு. நல்ல செல்வ செழிப்போட வளர்ந்தேன்.

அவருக்கு அப்புறம் அவரோட வியாபாரத்தை நான் பார்க்க ஆரம்பிச்சேன். ஒரு கடை போட்டு எல்லாம் நல்லாவே போச்சு. அப்புறம் இவளை" என லக்ஷ்மி அம்மாவை கை காட்டினார்.

"என் அப்பா அம்மா பார்த்து தான் கட்டி வச்சாங்க. சும்மா சொல்லக்கூடாது மா பேருக்கு ஏத்த மாதிரி இவ மகாலட்சுமியே தான் மா. என் அப்பா அம்மான்னு என் குடும்பத்தை அப்படி பார்த்துப்பா.

ஒரு வருஷத்துல எங்களுக்கு ஒரு பையன் பிறந்தான்" என்னும் போதே அவர் அந்த காலத்திற்கே சென்று விட்டார். "அதுக்கு அப்புறம் எங்களுக்கு வேற குழந்தை பிறக்கலை.

நாங்களும் சரி ஒரு பிள்ளை தான் கடவுள் நமக்கு தந்திருக்காரு போலன்னு சந்தோஷமாவே ஏத்துக்கிட்டோம். அவனை சீரும் சிறப்புமா வளர்த்தோம் மா.

கஷ்டம்னா என்னன்னு அவனுக்கு தெரியாம தான் வளர்த்து விட்டோம். எங்களை அவனுக்கு அவ்ளோ பிடிக்கும். அவனும் அவ்ளோ நல்லா படிப்பான் மா. ஸ்கூல்லையே நல்ல மார்க் வாங்குவான்.

காலேஜ் போய் பெரிய பெரிய படிப்புலாம் படிச்சான். அவன் படிச்சு முடிச்ச உடனே வெளிநாட்டுல வேளை கிடைச்சிருச்சு. எங்க கிட்ட வந்து அவ்ளோ சந்தோஷமா சொன்னான். கொஞ்ச நாளுல எங்களையும் கூட கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு தான் போனான்.

அவனுக்கும் கல்யாணம் பண்ண வயசு வந்திருச்சேன்னு நாங்களும் பொண்ணு பார்த்தோம் மா. எங்க ஊருலையே சொந்தத்தில ஒரு பொண்ணு நல்லபடியா அமைஞ்சிச்சு.

அவனுக்கும் பிடிச்சு போய் கல்யாணம் பண்ணி அந்தப் பொண்ணை மட்டும் வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போய்டான் மா. அப்பக்கூட நாங்க நம்புனோம் எங்களை வந்து கூட்டிட்டு போவோம்னு.

என் புள்ளையும் கல்யாணம் முன்னாடி வரை நிதமும் போன் போட்டு எங்க கூட பேசிடுவான். கல்யாணத்துக்கு அப்புறம் அதை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிட்டான். சரி அவனுக்கு வேலை ரொம்ப போலன்னு நாங்களும் அவனை தொந்தரவு செய்யாம இருந்தோம்.

ஆனா இந்த வயசான கட்டைங்களுங்கு பெத்த புள்ளைய பத்தி தெரியாமா போச்சு" என்றவர் கண்களில் இருந்து வந்த நீரை கையை தூக்கி சட்டையில் துடைத்துக் கொண்டார். பார்த்திருந்த அனைவருக்கும் அவரின் கண்ணீர் அவ்வளவு வருத்தத்தையும் வலியையும் தந்தது.

தன்னை தேற்றி கொண்ட சோமசுந்தரம் மீண்டும் தொடர்ந்தார் "அவனுக்கு பிள்ளையும் பிறந்துச்சு. போனுல தான் அந்த பச்ச புள்ளையையும் காட்டுனான்.

நேருல இதுவரைக்கும் எங்க பேரப்புள்ளையை நாங்க பார்த்ததே இல்லை பாப்பா. அப்படி இருக்கப்ப தான் அவன் மட்டும் போன மாசம் வந்தான் எங்களை பார்க்க.

அவ்ளோ சந்தோஷப் பட்டோம். அத்தனை வருஷம் கழிச்சு வந்த புள்ளையை இந்த கிறுக்கச்சியும் நல்லா சீராட்டி தான் விட்டா. அவன் போக முன்னாடி எங்ககிட்ட ஏதோ பத்திரத்துல எல்லாம் கையெழுத்து வாங்கினான் பா.

எங்களை வெளிநாடு கூட்டி போக அந்த பத்திரம் எல்லான்னு சொன்னான். நாங்களும் பெத்த புள்ளைதானேன்னு நம்பி கையெழுத்து போட்டோம்" என்றவர் அதற்கு மேல் கூற முடியாது கேவி கேவி அழ துவங்கினார்.

லக்ஷ்மி அம்மாவை பார்க்க அவரின் கண்களிலும் நீர் வழிந்து கொண்டிருந்தது. எல்லோரும் இவர்களின் மகன் சொத்தை ஏமாற்றி எழுதிக்கொண்டான் என யூகித்தனர்.

பின் சோமசுந்தரமே தொடர்ந்தார் "அதுக்கு அப்புறம் ரிஜிஸ்டர் ஆபிஸ்க்கு போய் கையெழுத்து போட்டோம்‌ கண்ணு. அவனும் எல்லா வேலையும் முடிஞ்சு போச்சு.

எல்லா பத்திரமும் வர கொஞ்ச நாள் ஆகும். நான் ஊருக்கு போய்டு வந்தர்ரேன் அப்படினு சொல்லிட்டு போய்ட்டான். அதுக்கு அப்புறம் ஒரு ஒரு வாரம் அப்படியே போச்சு.

அப்ப தான் ஒரு ஆளு வந்தாரு. நாங்க இருந்த வீடு எங்க கடை நிலம் புலன் எல்லாத்தையும் அவர்கிட்ட எங்க பையன் வித்திட்டு போய்ட்டான்னு சொன்னார்.

எங்களுக்கு ஒன்னும் புரியல. எங்க பையன் அப்டிலாம் செய்ய மாட்டான்னு இந்த மடச்சி அவங்ககிட்ட சண்டைக்கு போய்டா. ஊரே கூடி போச்சு. பஞ்சாயத்து வரைக்கும் போய்டோம்" என்றவரின் விழிகள் ஏகத்துக்கும் வெளிறி இருந்தது.

அந்த சம்பவம் இன்னும் மனதை விட்டு விலகாமல் அப்படியே ரணத்தை கீறி சென்றது. பஞ்சாயத்தில் இவர்கள் மகன் இவர்களை ஏமாற்றி சொத்தை விற்று அந்த பணத்தை எல்லாம் அவன் எடுத்து சென்றது தெரியவந்தது.

அந்த இடத்திலே மடிந்து அமர்ந்து கதறிவிட்டனர் தம்பதிகள். அந்த பஞ்சாயத்தில் இருந்தவர்களுக்கே இவர்களை கண்டு வருத்தமாகி விட்டது.

வெளிநாட்டில் இருக்கும் அவர்கள் மகனுக்கு அழைக்க அந்த அழைப்பு ஏற்க்கப்படவே இல்லை. அந்த வீட்டை வாங்கியவருக்கே இவர்கள் அழுகை ஏதோ செய்ய இன்னும் மூன்று மாதம் அங்கே தங்கிக் கொள்ளும் படி கூறி சென்றார்.

யாரே பேர் தெரியாத நபருக்கு இருந்த இரக்கம் கூட பெற்ற பிள்ளைக்கு இல்லை என்பதை எங்கே சென்று சொல்வது!!


-பயணம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 3

சோமசுந்தரம் மற்றும் லக்ஷ்மி இருவரும் சொந்த மகனாலே ஏமாற்றப்பட்டுவிட்டதை கொஞ்சமும் ஏற்று கொள்ள முடியாமல் மனது சஞ்சலத்துடன் இருந்தனர்.

அந்த வீட்டை வாங்கிய நபர் வந்து சென்று ஒரு வாரம் போய் இருந்தது. அந்த ஒரு வாரமும் லக்ஷ்மி அம்மா அழுதுக் கொண்டே இருக்க சோமசுந்தரமும் வருத்தத்தில் தான் இருந்தார். அவர்களின் ஊர் தலைவர் அப்போது வந்தார்‌.

அவர் சோமசுந்தரத்தின் மகனிடம் பேசி இருந்தார். அவன் 'நீங்கள் தவறான எண்ணை அழைத்து உள்ளீர்கள்' என்று மனசாட்சியே இன்றி கூறி வைத்து விட என்ன செய்வதென புரியாது பார்க்க வந்தார்.

வந்தவர் அனைத்து விவரத்தையும் கூறி என்ன செய்யலாம் என கேட்க ஒன்றும் சொல்லாது அமைதியாக இருந்து விட்டார். அதன் பின் எதையோ தீவிரமாக சிந்தித்த சோமசுந்தரம் ஒரு முடிவை எடுத்தவராக லக்ஷ்மி அம்மாவையும் தேற்றினார்.

"நானும் ஒரே பையன். இவ சொந்தமும் அவ்வளவா யாரும் இல்லை. அப்படி இருந்தாலும் யார் வீட்டிலும் போய் இருந்து அவங்களை தொல்லை பண்ண பிடிக்கலை கண்ணுங்களா.

எங்க புள்ளை என்ன நெனைச்சானோ நான் பேங்க்ல போட்ட வச்சிருந்த காசை மட்டும் விட்டுட்டு போய்ருந்தான். பேங்க்ல எவ்ளோ வச்சிருக்க போறேன்னு நினைச்சிட்டான் போல.

ஆனா அதுலயும் நான் கணிசமான தொகை தான் வச்சிருந்தேன்‌. அப்போ முடிவு செஞ்சேன். அந்த காசை வச்சு இனி கோயில் குளம்னு போய் எங்க வாழ்க்கையை முடிச்சுக்கிலாம்னு முடிவு செஞ்ப்புட்டேன்.

அதை இவக்கிட்ட சொன்னேன். அவளும் என்னைக்கு நான் சொன்னதை மீறி இருக்கா. சரின்னு வந்துட்டா. ஊரு அடங்கவும் அங்க இருந்து நேத்து ராத்திரியே கிளம்பிட்டோம்" என தன் கதையை சொல்லி முடித்தார் சோமசுந்தரம்.

யாரென்றே தெரியாத நால்வரிடம் ஏன் இதை சொல்ல வேண்டும் என எண்ணாது அவர்களை தன் மனம் நம்பிய ஒரே காரணத்தால் அனைத்தையும் சொல்லி விட்டார் சோமசுந்தரம்.

இப்போது லக்ஷ்மி அம்மா தொடர்ந்தார் "இவரு கூட ரெஜிஸ்டர் ஆபிஸ் போறப்ப ஏதோ சரியா தோனலைன்னு சொன்னாரு. நான் தான் நம்ம புள்ளையை நம்பாம யாரை நம்ப. அவன் போயா நம்மல ஏமாத்துவான்னு சொல்லி இவரை கூட்டிட்டு போனேன்.

ஆனா அவன் இப்படி செய்வான்னு எனக்கு தெரியாம போச்சு. அவன் கேட்டுருந்தாலே நாங்க எல்லாத்தையும் தந்திருப்போம். என்ன நாங்க இருக்க வரை அதை விக்க வேணாம்னு சொல்லிருப்போம்.

எங்க எல்லா சொத்தும் அவனுக்கு தானே. எங்களுக்கு அப்புறம் அவன் தானே எடுத்துக் போறான். ஆனா இப்படி பண்ணிப்புட்டான். அவனா இதை செஞ்சானா இல்லை அவன் பொண்டாட்டி பேச்சை கேட்டு இப்படி செஞ்சானான்னு தெரியலை.

ஆனா பெத்த எங்க ரெண்டு பேரையும் எப்படி இப்படி நடுரோட்டுல நிறுத்த மனசு வந்துச்சுன்னு தெரியலை" என்றார் கண்களில் வலியுடன்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நால்வருக்கும் அந்த தம்பதியை எண்ணி மிகுந்த வேதனையாகி விட்டது. அதுவும் இவ்வளவு நேரம் சிரித்த முகத்துடன் இருந்த ஸ்ரேயா தேம்பி தேம்பி அழத் துவங்கினாள்.

அவள் அழுகை அதிகமாகவும் சஹானா தான் அவளை அணைத்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள். சஹியின் முகமும் வேதனையில் கசங்கி இருந்தது.

சஹியும் தன்னுடைய அழுகையை அடக்க முயல்வது நன்றாக தெரிந்தது. அதன்பின் சஹி ஸ்ரேயாவை தன் மடியில் தாங்கிக் கொள்ள அவளின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக சிறு விம்மலாக மாறியது.

"இங்க பாரு ஸ்ரே குட்டி. அழக்கூடாது டா. நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன் சரியா. நீ அழுதா எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல டா.

இப்படி அழுதா என்ன அர்த்தம். அங்க பாரு சோம் அங்கிள்‌ லக்ஸ் ஆன்டி எல்லாரும் உன்னையே பயந்து போய் பார்க்குராங்க. நீ இப்படி செய்றியே டா" என்று மெதுவாக பேசி அவள் அழுகையை நிறுத்தி விட்டாள் சஹி.

"சாரி சகி. இனிமே நான் அழவே மாட்டேன் ஓகே" என்றவள் மற்றவர்களை பார்த்து "சாரி சாரி நான் அழுது உங்களையும் பயமுறுத்திட்டேன்" என்றாள் பாவமாக முகத்தை வைத்து.

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த விஜய் இப்போது தன் வாயை திறந்தான். "அங்கிள்‌ நான் ஒரு விஷயம் கேக்குறேன் தப்பா எடுத்துக்காதீங்க" என்று முதலில் கேட்டுவிட்டு

"நீங்க அந்த இன்சிடன்ட்க்கு அப்புறம் அந்த ஊருல இருந்தீங்கல. நீங்க இருந்த கஷ்டத்துல கண்டிப்பா சமைச்சு இருக்க மாட்டீங்க. அப்போ என்ன சாப்டீங்க. யாராவது உங்களுக்கு சாப்பாடு தந்தாங்கலா?" என்று கேள்வியாய் நிறுத்தினான்.

'இது எதுக்கு இப்போ?' என அனைவரும் எண்ணினாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை. சோம் அங்கிள் "எங்க பக்கத்து வீட்டு பிள்ளைங்க. ஊர்ல தெரிஞ்சவங்க சாப்பாடு கொண்டு வந்து எங்களை சாப்பிட வச்சிட்டு போனாங்க பா.

ஆனால் அவங்ககிட்ட நாங்க எதையும் கேக்காமலையே வந்து எங்களை சாப்பிட வச்சாங்க" என்றவர் அந்த நல்ல மக்களை மரியாதையுடன் மனதில் எண்ணி கொண்டார்.

தான் கேட்காமலே தனக்கு தேவையான பதிலை சோம் தந்துவிட "அங்கிள் அப்போ உங்க சொத்து உங்களை விட்டு போகலை. ஏன்னா நீங்க பொன் பொருளா உங்க முன்னோர்கள் தந்த, நீங்க சம்பாதிச்சு சேர்த்து வச்சிருந்த விஷயம் தான் போயிருக்கு.

ஆனா வாழ்க்கைல உங்க பிஹேவியர் அதாவது உங்க குணத்தால நீங்க சம்பாதிச்ச சொத்து அந்த மனுஷங்க தான் அங்கிள்‌. உங்க பையன் வேணா சந்தர்ப சூழ்நிலையால மாறியிருக்கலாம்.

ஆனா உங்க குணத்தால நீங்க சம்பாதிச்ச உன்மையான மனுஷங்க உங்களை தாங்கிக்கிட்டாங்களே அது சொல்லாதா அங்கிள்‌ நீங்க வாழ்ந்த வாழ்கையில எப்பவோ ஜெயிச்சுட்டீங்கன்னு.

நீங்க எவ்ளோ தூரம் உதவி செஞ்சிருந்தா அந்த மக்கள் உங்களுக்கு உறுதுணையா இருந்திருப்பாங்க. இந்த விஷயமே சொல்லுதே நீங்க வாழ்க்கையில மோட்சத்தை அடையை உங்க வழி என்னன்னு.

கோவில் குளம்னு நீங்க போறதை நான் தப்பு சொல்லலை அங்கிள்‌. ஆனா உங்க உடல் நல்லா இருக்க வரை உங்க நல்ல மனசை நாலு பேருக்கு தரலாமே.

நான் உங்களுக்கு புரியுற மாதிரியே சொல்றேன் அங்கிள்‌. இப்போ நீங்க ஒரு கோவிலுக்கு போறீங்கன்னு வச்சுக்கோங்க. அங்க வாசல்ல ஒரு குழந்தை பசிக்கு அழுது.

அந்த குழந்தைக்கு சாப்பிட ஒன்னும் இல்லை. இதே கோவில் உள்ள போறீங்க. அங்க மக்கள் பாக்கெட் பாக்கெட்டா பாலை கடவுள் சிலைக்கு ஊத்த தராங்க.

இதை கேட்டா உங்களுக்கு என்ன தோனுது" என்று கேட்டு நிறுத்தினான். அனைவரும் இவன் என்ன சொல்ல வரான் என புரியாது பார்த்தனர். எனவே விஜயே தொடர்ந்தான்.

"அந்த பாலையோ இல்லை வேற எதாவது வாங்கி அந்த குழந்தைக்கு சாப்பிட குடுக்கனும்னு தோனுதா" எல்லோரும் ஆம் என தலை அசைக்க "ஏன் அங்கிள்‌ அதே இடத்தை தான்டி பல பேர் போயும் இதை செய்யலை.

ஏனா நம்ம மக்கள் கடவுளுக்கு செஞ்சா புன்னியம்னு நினைக்கிறாங்க. ஆனா கடவுள் அந்த குழந்தை ரூபத்தில தான் இருக்கார்னு யாரும் யோசிக்க மாட்டேங்கிறாங்க.

உலகம் போற வேகத்தில தாங்களும் வேகமா ஓடி ஜெயிக்க நல்லா உழைக்கனும் அப்டின்னு நினைக்காம கடவுள்கிட்ட எங்னை வாழ்க்கையில ஜெயிக்க வைன்னு சொல்லி லஞ்சம் தராங்கன்னு சொன்னா ஒத்துப்பீங்க தானே" என்றான் சிறு சிரிப்புடன்.

ஓரளவு அவன் சொல்வது புரிந்தாலும் "இப்போ என்னை என்னப்பா செய்ய சொல்ற?" என்று சோம் அங்கிள்‌ வினவினார்.

"உங்களுக்கு நல்ல மனசு இருக்கு அங்கிள்‌. ஏன் நீங்க உங்களால முடிஞ்ச வரை மத்தவங்களுக்கு உதவியா இருக்க கூடாது?" என்று மெதுவாக தான் சொல்ல வேண்டிய விஷயத்துக்கு வந்தான்.

"அதுக்கு நீங்க ஆஸ்ரமம் அப்படி எல்லாம் போகனும்னு நான் சொல்லலை. நீங்க போற வழியில‌ தேவை இருக்கவங்களுக்கு நீங்க உதவி செய்ங்க அங்கிள்‌.

பணம் காசு தான் தரனும் அப்படின்னு இல்லை. உங்களால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுங்க. பசியில பக்கத்தில இருக்க ஆளுக்கு வயிறு நிறைய சாப்பாடு கொடுத்தாலும் அது அவருக்கு பெரிய உதவி தானே அங்கிள்.

அது கண்டிப்பா உங்க மனசை சந்தோஷமா வச்சுக்கும் அங்கிள்‌. ஏன்னா அதை நான் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணியிருக்கேன். மனசுக்கு நிம்மதியா இருக்கும்.

உங்க மனசுல இருக்க தேடலுக்கு விடையும் கிடைக்கும். இங்க இருக்க மக்கள் இதை யோசிக்க மாட்டேங்குறாங்க. நீங்க யோசிங்க அங்கிள்.‌

நாம‌ உயிரோட இருக்க வரை நம்மலால‌ தேவை இருக்கவங்க‌ பயன் அடைமட்டுமே!" என தான் நினைத்ததை ஒருவழியாக கூறிமுடித்தான் விஜய்‌.

விஜய் கூறியதை கேட்டு யோசித்த சோம் "உண்மை தான் பா. ஊருல பசினு வரவங்களுக்கு சாப்பாடு போடாம அனுப்பி வச்சது இல்லை. அந்த நேரம் மனசு காத்து மாதிரி அவ்ளோ நல்லா இருக்கும்.

நீ சொல்ற மாதிரி செஞ்சா காசு பணம் இருக்கோ இல்லையோ ஆனா நிறைஞ்ச மனசா இந்த உலகத்தை விட்டு போவோம். ரொம்ப நன்றி பா" என்ற சோமசுந்தரம் தங்கள் வாழ்க்கைக்கு எது தேவை என முடிவு செய்தார்.

விஜய் பேசியதை கேட்ட சஹானாவின் மனதிலும் ஒரு ஒளி சிறு கீற்றாய் தோன்றியது. அந்த கீற்று ஒளி என்று முழு வெளிச்சமாக மாறுமோ?

-பயணம் தொடரும்

 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 4

எல்லாரும் வருத்தத்தில் இருக்க சூழ்நிலையை சற்று இலகுவாக்க முயன்ற வெற்றி "எப்பா சாமி எவ்ளோ பெரிய லெக்சர் டா. கேட்ட எனக்கே காது வலிக்குது. கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோ டா. இப்படி மூச்சே விடாம பேசிட்ட?" என விஜயை கிண்டல் பேசினான்.

ஆனால் அவனை எதுவும் சொல்லாது சிறு சிரிப்புடனே பார்த்திருந்தான் விஜய். முன்னே திரும்ப அங்கே அழுததில் வீங்கிய முகத்துடன் இருந்த ஸ்ரேயாவை கண்டான். அது அவன் மனதை கஷ்டமாக்க அவளிடம் வம்பு வளர்க்க ஆரம்பித்தான்.

"என்னமா ஸ்ரே பாப்பா நீ இப்படி அழற.‌ நான் கூட நீ சிரிக்கிற பாப்பான்னு பார்த்தா, நீ சரியான அழுமூஞ்சு பாப்பாவ இருப்ப போலவே.

உட்வேட்ஸ் வேணுமா" என ராகமாய் கேட்டு "சிரிக்கும் பாப்பா உட்வேட்ஸ் பாப்பா" என்று விளம்பர பாணியில் கிண்டல் செய்தான் வெற்றி.

அவனின் கிண்டல் மற்றவர்களையும் சற்று இலகுவாக்க ஸ்ரேயாவுக்கும் சிரிப்பு வந்தது. ஆனால் அதை மறைத்துக் கொண்டு "ஓய் முட்டை கண்ணா யாரை பார்த்துடா அழுமூஞ்சுனு சொல்ற.

அப்படியே அந்த முட்டகண்ணை நோண்டி கையில‌ கொடுத்துருவேன் பாத்துக்க. அந்த உட்வேட்ஸ்ச வாங்கி நீயே குடி" என்றாள் பாய்ந்து கொண்டு வந்து.

அவள் டா போட்டு பேசியதை கூட அவன் கண்டுகாது சஹியை பார்த்து "நீ என்னம்மா சஹி. விட்டா அவளை மடியில போட்டு கொஞ்சி தாலாட்டுவ போலையே. என்னா ஒரு பிரண்ட்சிப்பு..." என அவளையும் வாரினான்.

அவனின் கிண்டலை சிரிப்புடன் ஏற்றுக் கொண்ட சஹி அமைதியாக இருந்தாள்‌. ஆனால் அவளுக்கும் சேர்த்து ஸ்ரேயா தான் எகிறினாள்.

"ஓய் முட்டகண்ணா என்ன என் டார்லிங்கையே கிண்டல் பண்றியா. முஞ்சிய பேத்து டிஞ்சர் ஒட்டிருவேன்" என்றாள் காரமாக. "எம்மா என்னா எகிறு எகிறுற. உன் பிரண்ட் அவங்களே அமைதியா இருக்காங்க. உனக்கு என்னம்மா?" என்று மேலும் பேசினான்.

அதன்பின் இவர்கள் விளையாட்டாக சண்டையிட்டு மற்றவர்களை மகிழ்வித்தனர். அவர்களும் இருவரின் பேச்சையும் சிரிப்புடன் கேட்டிருந்தனர்.

ஏன் சோமசுந்தரம் லக்ஷ்மி அம்மாவின் முகத்தில் கூட புன்னகை வந்திருந்தது. ஆனால் விஜய் விதைத்த சிந்தனை விதைகள் ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொருவாறு பதிந்து போனது.

மதிய உணவு நேரமும் வந்தது. சோமசுந்தரம் லக்ஷ்மி தம்பதி தாங்கள் கொண்டு வந்த உணவுகளை எடுத்தனர். விஜய் ,வெற்றி மற்றும் ஸ்ரே சஹி இவர்கள் எதுவும் எடுத்து வரவில்லை.

எனவே "ஏன் அங்கிள்‌ டிரைன்ல புட்க்கும் சேர்ந்து தானே பணம் கட்டியிருக்கோம். அப்புறம் ஏன் சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கீங்க" என்று புரியாது கேள்வி கேட்டாள் ஸ்ரே.

அதற்கு பதில் லக்ஷ்மியிடம் இருந்து வந்தது. "அதுவா பாப்பா. எங்க போனாலும் சாப்பாடு கட்டிட்டு போய் பழகிப்போச்சு. அதான் நேத்தே புளி சோத்தை கிண்டி வச்சிட்டேன்" என்றார் வெள்ளந்தியாய்.

ரயிலில் உணவு வந்ததும் அனைவருக்கும் லக்ஷ்மி தான் கொண்டு வந்த உணவையும் பகிர்ந்தளித்தார். உண்டு கொண்டே "ஆமா அங்கிள்‌ கேக்கனும்னு நினைச்சேன் எந்த கோவிலுக்கு போக பிளான் பண்ணுனீங்க" என்றான் வெற்றி.

"சின்ன வயசுல இருந்தே காசிக்கு போகனும்னு ஒரு எண்ணம். என் அப்பாவோட அஸ்திய கூட ராமேஸ்வரத்துலையே கரைச்சிட்டேன். இப்படியெல்லாம் நடக்கவும் வடக்க காசி அப்புறம் இன்னும் நிறைய கோவில்லாம் இருக்காமே.

அதான் போய் பார்க்கலாம்னு கிளம்பி வந்தோம் பா" என்றார் தான் எடுத்திருந்த முடிவை. இப்போது ஸ்ரேயா "அங்கிள் நாங்க ரெண்டு பேரும் டெல்லி ஆக்ரா ஹிமாச்சல்னு ஊர் சுத்த தான் போறோம்.

நீங்க எங்க கூட வரீங்கலா. நாம தாஜ் மஹால் எல்லாம் போய் பார்த்துட்டு வரலாம்" என்றாள் ஆர்ப்பாட்டமாக.

அவளின் ஆர்வத்தை கண்டு "இந்த வயசுல நாங்க தாஜ் மஹால் எல்லாம் பார்த்து என்ன செய்ய போறோம் பாப்பா" என்றார் சன்னமான புன்னகையில்.

சோமசுந்தரம் மறுக்கவும் "ஏன் அங்கிள்‌ வயசு என்ன வயசு. மனசுல இருக்க லவ் தான் முக்கியம் அங்கிள்‌. அந்த லவ் உங்க ரெண்டு பேருக்கும் இடையில‌ அவ்ளோ இருக்கு.

லவ்வர்ஸ் தான் தாஜ் மஹால் பார்க்கனும்னா உங்களை தவிர வேற யாரு அங்கிள்‌ அதுக்கு தகுதியானவங்க. இந்த உலகத்தில‌ ஊருக்காக சொசைட்டி ஸ்டேட்ஸ் இப்படி மத்தவங்களுக்காக வாழ்றவங்க தான் இருக்காங்க அங்கிள்‌" இதை சொல்லும் போதே அவள் குரல் வேதனையை காட்டியது.

"அவங்களுக்கு நடுவுல ஒருத்தரை ஒருத்தர் அவ்ளோ புரிஞ்சுகிட்டு இவ்ளோ லவ் வச்சிருக்க உங்களைவிட யார் அங்கிள்‌ அந்த தாஜ் மஹாலை சுற்றி பார்க்க சரியானவங்க" என தன் மனதில் தோன்றியதை கூறி முடித்தாள் ஸ்ரேயா.

அவள் கூறியது ஆமோதிக்கும் வண்ணம் "ஆமா அங்கிள்‌ ஸ்ரே சொல்றது நூறு பர்சென்ட் உண்மை. நீங்களும் எங்க கூட வாங்க நாம எல்லாம் சேர்ந்தே சுத்தி பார்க்கலாம்.

நாங்களும் உங்க கூட காசி வரோம். நீங்க எங்க கூட ஆக்ரா ஹிமாச்சல் எல்லா சுத்தி பார்க்க வாங்க" என சஹியும்‌ இப்போது அவர்களை தங்களுடன் அழைத்தாள்.

"யோசிங்க அங்கிள்‌ இன்னும் முழுசா ரெண்டு நாள் இருக்கு‌ நாம‌ டெல்லிய ரீச் பண்ண. சோ நல்லா யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க" என்று அவர்களுக்கு யோசிக்க அவகாசமும் தந்தாள் சஹி.

சஹி பேசி முடித்த போது "ஹப்பா பேசிட்டீங்களா. நான் கூட உங்களுக்கு பேச தெரியாதுன்னே நினைச்சேன்னா பார்த்துக்கோங்களேன்" என்று ஓட்டினான் வெற்றி.

சோமசுந்தரத்தை இப்போது பார்த்து "ஆனா சோம் அங்கிள் உங்க ரெண்டு பேரையும் பார்க்க அவ்ளோ பொறாமையா இருக்கு‌ போங்க. என்ன ஒரு கெமிஸ்ட்ரி" என கிண்டல் போல் பேசினாலும் அவன் கண்களும் அவர்களை பிரம்மிப்புடன் பார்த்தன.

"இதை மட்டும் மிஸ்டர். மோகன் பார்த்திருக்கனும். சும்மா பொறாமைலையே பொங்கி சாவாரு" என்றான் சம்மந்தமே இல்லாமல். உடனே "யார்ப்பா அந்த மோகனு. எதுவும் சினிமா நடிகரா?" என்று அப்பாவியாய் கேட்டு வைத்தார் லக்ஷ்மி.

"அவரு வேற யாரும் இல்லை என்னை பெத்தவரு‌. என்ற அப்பா தான் ஆன்டி" என்றான் விசஷம குரலில். "அட என்னப்பா இது உங்க அப்பாவ போய் கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்க? அவங்ககிட்ட இப்படிலா பேசுவியா? கோச்சுக்க மாட்டாங்களா?" என்று கேள்வியாய் கேட்டார் லக்ஷ்மி.

"ஐயோ லக்ஸ் ஆன்டி எங்க வீட்டை பத்தி உங்களுக்கு தெரியாதுல. நான் என்னை பத்தியும் சொல்லலை இல்ல அதான் உங்களுக்கு தெரியலை. சோ முதல்ல நான் என்னை பத்தி சொல்லிடறேன்.

நான் வெற்றி. எங்க அப்பா தான் மிஸ்டர். மோகன். சென்ட்ரல் கவர்மெண்ட் வேலைல இருக்காரு. அம்மா சவுந்தர்யா, ஹவுஸ் வொய்ப். எங்க அப்பா பார்க்க நல்லா தெலுங்கு பட வில்லன் மாதிரி இருப்பாரு ஆன்டி.

ஆனா பாருங்க அவர் மனசுல நடிகர் மோகன்னு நினைப்பு. சும்மா அப்படி ஒரு சீனை போடுவாறு. எங்க அம்மா மேல அவ்ளோ லவ்‌. உலகத்தில அப்படி யாரும் யார் மேலையும் லவ் வச்சிருக்க மாட்டாங்கன்னு அவரே வேற சொல்லிப்பாரு.

ஆனா அவர் லவ் உண்மை தான் அதை நான் ஒத்துக்கிறேன். அதே போல எங்க அம்மாவை வெறுப்பேத்தி பார்க்க அவருக்கு அவ்ளோ பிடிக்கும். என்னையும் என் அம்மாவையும் வெறுப்பேத்தவே எதாவது பேசி எங்களை வம்பிழுப்பாறு.

நாங்களும் தாருமாறா அவரை ஓட்டி தள்ளுவோம்‌. எனக்கு கூட பிறந்தவங்கன்னு யாரும் இல்லை ஆன்டி. வீட்ல நாங்க மொத்தமே மூனு பேரு தான். ஆனா நாங்க சேர்ந்து இருக்கப்ப வீடு சந்தகடை மாதிரி தான் இருக்கும்" என்றவன் எதையோ எண்ணி சத்தமாக சிரித்தான்.

பேசிக் கொண்டிருந்த வெற்றி திடீரென சிரிக்கவும் அனைவரும் பார்க்க "என்னடா பேசிட்டு இருந்தவன் பயித்தியம் மாதிரி தானா சிரிக்கிறேன்னு தானே பார்க்குறீங்க" என அவனே அனைவரிடமும் கேட்டான்.

யாரும் ஆம் என சொல்லவில்லை என்றாலும் அவர்கள் முகம் அதை தான் சொல்லியது. "அது ஒரு நாள் எங்களை வெறுப்பேத்தறா நினைச்சுக்கிட்டு இப்பையும் பொண்ணுங்க என் பின்னாடி சுத்துறாங்கன்னு ஒரு பிட்ட போட எங்க அம்மா பத்ரகாளியா மாறி அவரை சும்மா புரட்டி எடுத்துட்டாங்க.

அந்த நினைப்பு வந்துருச்சு அதான் சிரிச்சுட்டேன் ஆன்டி. இப்படி அடிக்கடி எங்க அம்மா கிட்ட பூரி கட்டையால அடி வாங்கிடுவாரு. இல்லைனா அவருக்கு தூக்கம் வராது" என்றவன் சொன்ன விதத்தில் சுற்றி இருந்தவர்களும் சிரித்து விட்டனர்.

மேலும் தொடர்ந்தான் வெற்றி "இது மாதிரி டிசைன் டிசைனா ரகளை நடக்கும் ஆன்டி. சோ எங்க வீடே நல்லா கலகலன்னு இருக்கும். சின்ன வயசுல இருந்தே அவங்க எனக்கு புல் பீரிடம் தந்தாங்க.

என்னவோ அவங்க என்னை அவுத்து விடவும் அந்த சுதந்திரத்தை எல்லை மீற தோனலை. நானும் அப்பா அம்மாட்ட நான் வெளியே போய்ட்டு வந்த அப்புறம் எல்லாத்தையும் அப்படியே ஒப்பிச்சு வச்சிருவேன்.

சோ அவங்ககிட்ட நல்ல பிரண்டா பழகிட்டேன் ஆன்டி. அதனால தான் நானும் இப்படி இருக்கேன்னு சொல்லலாம். அப்ப அப்போ நினைச்சுப்பேன் கடவுள் நமக்கு எவ்ளோ நல்ல அப்பா அம்மாவை தந்திருக்காருன்னு" என்று சொல்லி முடித்தான் வெற்றி.

என்ன தான் விளையாட்டு போல் சொல்லி முடித்தாலும் வெற்றி அவன் பெற்றோர் மேல் வைத்திருக்கும் பாசம் அவன் பூரித்த முகத்தை பார்த்ததிலே அனைவருக்கும் புரிந்தது. அவர்களும் வெற்றியை மகிழ்ச்சியோடு பார்த்திருந்தனர்.

-பயணம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 5

மாலை நேர காற்று முகத்தில் மோத டீயை உறிஞ்சி குடித்து கொண்டிருந்தாள் சஹி. அவள் இது போல் பொறுமையாக அமர்ந்து நேரம் செலவிட்டு பல நாட்கள் ஆகிறது.

தேநீர் வாங்கி வந்த உடன் ரயில் புறப்பட்டு விட அந்த ரயிலின் வேகத்தோடு தேநீரை அருந்துவது அவ்வளவு இனிதாக இருந்தது. அதுவும் பேச்சும் சிரிப்புமாக செல்ல சொல்லவும் வேண்டுமா.

"தம்பி நாம இப்போ எந்த இடத்தில‌ போய்ட்டு இருக்கோம்?" என்று சோம் அங்கிள் விஜையை பார்த்து கேட்டார். அவனும் தற்போது புத்தகத்தை எடுத்து பை உள்ளே வைத்து விட்டு இவர்களுடன் பேசிக்கொண்டு தான் இருந்தான்.

அவரின் கேள்வியில் கூகுளை திறந்து "ம்ம் இப்போ விஜயவாடா கிட்ட போய்ட்டோம் அங்கிள்‌. இன்னும் ஒரு ஒன்றை மணி நேரத்தில‌ விஜயவாடா ரீச் ஆகிருவோம்" என கூறி முடித்தான்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க ஸ்ரேயா ஏதோ தீவிரமாக யோசித்து கொண்டிருந்தாள். அதன் முடிவாக "உங்க ரெண்டு பேர் கிட்டையும் ஒரு விஷயம் கேக்கனும்" என விஜய் மற்றும் வெற்றியிடம் கேட்டாள்.

'மறுபடியுமா?' என பார்த்தாலும் "இப்ப என்னம்மா கேக்கனும்" என்றான் வெற்றி விளையாட்டாய். "அது நீங்க எதுக்கு டெல்லிக்கு போறீங்க. சுத்தி பாக்கவா?" என்றாள் கேள்வியாய்.

"நாங்க ஒரு இன்டர்வுயூக்காக டெல்லி போறோம்" என்றான் மேம்போக்காக. "ஓஓஓ... சரி சரி" என்று இழுத்தாள். பின் "எங்களுக்கு தான் லாஸ்ட் மினிட் ஹரி. சோ இந்த பாண்டி எக்ஸ்பிரஸ்ல தான் டிக்கெட் கிடைச்சிது.

உங்களுக்கு என்ன பாஸ்டா போற ட்ரெயின்ல புக் பண்ணிருக்கலாம்ல" என கேட்டு நிறுத்தினாள். அதை கேட்டு விஜய் திடுக்கிட்டு திரும்ப வெற்றி திருதிருவென முழித்தான்.

ஆனால் அதை கவனிக்காத ஸ்ரேயா தொடர்ந்தாள். "ஒரு வேளை நீங்களும் எங்களை போல‌ லாஸ்ட் மினிட் புக் பண்ண கேசா" என அவளே ஒரு பதிலையும் சொல்லி கொண்டவள் அடுத்த பேச்சிற்கு தாவி விட்டாள்.

அந்த பதிலை கேட்டு 'ஹப்பாடி. கொஞ்ச நேரத்தில பதற வச்சிட்டாளே' என பெருமூச்சு விட்ட வெற்றியை பார்த்து விட்டாள் சஹி. விஜயும் நிம்மதியானான்.

சஹி வெற்றியை சந்தேகமாய் பார்க்கவும் அவளை பார்த்து "ஹிஹிஹி.." என அசட்டு சிரிப்பை தந்தான் வெற்றி. அவனை பார்த்து சாஹியும் சம்பிரதாயமாக சிரித்தாலும் அவனை குறுகுறுவென பார்த்து தான் வைத்தாள்.

"ஆனாலும் இந்த முப்பது எட்டு மணி நேர டிராவல் கூட நல்லா தான் இருக்குல்ல அங்கிள்‌" என்ற ஸ்ரேவின் குரலில் அவளின் பேச்சில் கவனம் செலுத்தினாள் சஹி.

"டூ நைட்ஸ் அன்ட் திரீ டேஸ் ஒரு ட்ரெயின் டிராவல். இப்படி புது ஆளுங்க கூட அவங்களையும் நம்ம ஃபிரண்ட் ஆக்கி. வாவ் சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ் இல்ல அங்கிள்" என்று குதூகலமாக ஆகிவிட்டாள் ஸ்ரே.

அனைவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருந்தாலும் ஸ்ரேயா சொன்ன இந்த விஷயம் மிகவும் பிடித்து தான் இருந்தது. ரயில் பயணம் பலரின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை தரும் என்னும் போது இவர்கள் வாழ்க்கையிலும் தராது செல்லுமோ! பொறுத்திருந்து பார்ப்போம்!

இரவு நேரம் கவிழ்ந்து விட பேசிக் கொண்டிருந்த ஸ்ரேயா கொட்டாவி விட் ஆரம்பித்து விட்டாள். அந்த சத்தத்தில் திரும்பி பார்த்த விஜய் "என்னமா அதுக்குள்ள தூக்கம் வந்திருச்சா" என்றான் அவளிடம்.

"ம்ம் ஆமா" என்று சிரித்தாளும் அவள் கண்களில் தூக்கம் அப்பட்டமாக தெரிந்தது. அதை கண்ட சோம் அங்கிள்‌ தான் "அப்போ சரி கண்ணுங்களா எல்லாரும் தூங்கலாம்.

நேரமும் ஆகி போச்சு போல. பேசுனதுல நேரம் போனதே தெரியலை" என்றார். ஒருவழியாக மேல் பெர்த்தில் விஜயும் வெற்றியும் கீழே சோம் அங்கிளும் லக்ஷ்மி அம்மாவும் நடு பெர்த்தில் ஸ்ரேயாவும் சஹானாவும் என முடிவு செய்து படுக்க சென்றனர்.

ரயிலும் தன் தடக் தடக் ரிதத்துடன் ஒரே வேகத்தில் தன் பயணத்தை தொடர்ந்தது. நடு இரவு அந்த கம்பார்ட்மெண்டே நல்ல தூக்கத்தில் இருந்தது.

ஸ்ரேயாவின் மனதின் அலைப்புருதல் அவளின் நெற்றி சுருங்கி கண் மணிகள் அசைந்த விதத்தில் நன்றாகவே காணப்பெற்றது.

இவ்வளவு நேரம் சிரித்த பெண்ணா இவள் என எண்ணும் அளவு முகம் வேதனையில் சுருங்கி மீண்டது. ஏதோ பயங்கர கனவை கண்டது போல் அவள் இதயம் பலமாக அடித்து கொள்ள வேர்த்து வழிய துவங்கினாள்.

மற்ற அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரம் திடீரென ஸ்ரேயாவின் குரல் வீரிட்டது. "ஐயோ... அம்மா அப்பா.... அப்பா.... இரத்தம்..... காப்பாத்துங்க.... அக்கா... அக்கா... ஆஆஆஆஆஆ...." என்று சம்பந்தம் இல்லாமல் புலம்பி தவித்தாள் ஸ்ரேயா‌.

கத்தியவள் தூக்கத்தில் இருந்து எழுந்து மெத்தையின் ஓரம் கையால் காலை கட்டிக் கொண்டு "அம்மா அப்பா" என உளறியவாறு அழுதுக் கொண்டே அமர்ந்து விட்டாள்.

அவள் கத்த ஆரம்பிக்கவுமே அந்த சத்தத்தில் முழித்துக் கொண்டாள் சஹானா. வேகமாக தன் இடத்தில் இருந்து இறங்கி ஸ்ரேயாவிடம் வந்து சேரும் நேரம் ஸ்ரேயாவின் அலறலில் உடன் இருந்தவர்களின் தூக்கமும் தூர போனது.

அவர்கள் எழுந்த நேரம் எல்லோரும் கண்டது அழுதுக் கொண்டிருந்த ஸ்ரேயாவும் அவளை அணைத்து ஆறுதல் அளித்து கொண்டிருந்த சஹானாவும் தான்.

"அக்கா அக்கா... அம்மா அப்பா க்கா... நீ என்னை விட்டுட்டு போகாத" என்றவாறு தேம்பிக் கொண்டிருந்தாள் ஸ்ரேயா. அதற்கு "ஒன்னும் இல்லைடா. ஒன்னும் இல்ல. அக்கா இருக்கேன்ல.

நான் எங்கேயும் போகலை டா குட்டிம்மா. உன் பக்கத்திலையே தான் இருக்கேன்டா. நீ அழுதா அம்மா அப்பாக்கு பிடிக்காதுல்ல டா. பாரு அழுது அழுது மூச்சு வாங்குது.

அப்பா அம்மா எங்கையும் போகலை. அவங்க இப்பையும் நம்மல பாத்துட்டு தான் இருப்பாங்க. சஹியை நம்பி தானே ஸ்ரே குட்டியை விட்டுட்டு போனோம். அவளை இப்படி அழ விட்டுட்டாளே இந்த சஹி அப்படின்னு என்னை திட்டமாட்டாங்களா.

ஐயோ நம்ம சின்ன பாப்பா இப்படி நம்மால அழறாளே அப்படின்னு ரொம்ப பீல் பண்ணுவாங்க டா அவங்க. அவங்கல பீல் பண்ண வைக்க போறீயா நீ சொல்லு?" என்று கேட்க 'இல்லை' என்பதாய் தலையை ஆட்டினாள் ஸ்ரே.

அவள் இல்லை என்றதும் அவளின் தலையை ஆதரவாய் தடவியவாறு "இது தான் என்னோட ஸ்ரே குட்டி. இப்போ அக்கா தட்டிக் குடுப்பேனாம் நீ சமத்தா என் மடியில படுத்து அப்படியே தூங்குவியாம் சரியாடா குட்டி" என கேட்டவள்

தன் கைப்பையை எடுத்து அதில் இருந்த ஏதோ ஒரு மாத்திரையை தந்தவள் தண்ணீரை தந்து அவள் தலையை மடியில் வைத்து தட்டிக் கொடுத்தாள்.

சஹி கண்களிலும் கண்ணீர் நிறைந்து விட்டது. அதை தன் கையால் துடைத்தவள் ஸ்ரேயா தூங்கும் வரை அவளை மடி தாங்கி அமர்ந்து விட்டாள்.

இப்போது ஸ்ரேயாவின் முகத்தை காண சிறு குழந்தைக்கும் அவளுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாத அளவில் இருந்தது. அழுததில் முகமே வீங்கி என்னவோ போல் இருக்க பார்க்கவே கஷ்டமாய் போனது.

இதையெல்லாம் பார்த்த ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு உணர்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தது. ஆனால் யாரும் எந்த கேள்வியும் கேட்காமல் தான் பார்த்திருந்தனர்.

சோம் அங்கிள்‌ மனதில் 'அப்போ இந்த ரெண்டு புள்ளைகளும் அக்கா தங்கச்சியா. அப்புறம் ஏன் சிநேகிதப் புள்ளைங்கன்னு சொன்னுச்சுங்க‌.

இந்த புள்ளைங்களுக்கு என்ன கஷ்டமோ தெரியலையே? இப்படி அழுது கரைதுகளே. பாக்கவே பாவமா இருக்கே' என்று வருந்தியபடி நின்றார்.

லக்ஷ்மியும் இவர்கள் இருவரின் நிலையை கண்டு 'கடவுளே இந்த புள்ளைங்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் அவங்க மனசை தேத்தி விடுப்பா!' என்று அவசரமாய் வேண்டுதல் வைத்தார்.

ஸ்ரேயா தூக்கத்திற்கு சென்று விடவும் அதன்பின் மெதுவாக கீழே இறங்கினாள். அப்போது தான் கீழே மற்ற எல்லாரும் இருப்பதை கண்டு சங்கடப்பட்டாள்.

அவர்களை கண்டு "சாரி எல்லாரோட தூக்கத்தையும் நாங்க டிஸ்டர்ப் பண்ணிட்டோம். அவ தூங்கிட்டா நான் தூக்க மாத்திரை கொடுத்திட்டேன். இனிமே எந்திரிக்க மாட்டா. நீங்க தூங்குங்க" என அனைவரிடமும் பொதுவாக உரைத்தாள்.

அதன்பின்னர் யாரின் முகத்தையும் பார்க்காது அந்த கம்பார்ட்மெண்டின் கதவருகில் போய் நின்று அந்த கதவின் வழி வந்த காற்றை முகத்தில் தாங்கி நின்றாள்‌. அதன் மூலம் மனதில் உள்ள கஷ்டம் யாவும் பறந்து போவதை போல் உணர்ந்தாள்.

இங்கே இருந்த ஒருவருக்கும் இந்த நிகழ்விற்கு பின் தூக்கம் வராது போனது. சஹானா இப்படி வெளியே செல்லவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க விஜய் "நான் போய் என்னன்னு பார்த்திட்டு வரேன்" என்றவன் சஹியை நோக்கி சென்றான்.

-பயணம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 6

அந்த இருட்டை வெறித்தவாறு சோகமே உருவாய் நின்றிருந்தாள் சஹானா. மனதில் உள்ள காயங்கள் எல்லாம் காற்றின் வழி கடந்து செல்வதாய் எண்ணி கதவில் சாய்ந்து இருந்தாள்.

அவளின் சோக சித்திரத்தை கண்டு ஒரு கணம் அவளின் வேதனையை தன் வேதனையாக எண்ணி வருந்தினான் விஜய். பின் மெல்ல அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான்‌.

அவன் அருகே வந்தும் அதை உணராது நின்ற சஹானாவை அழைத்தான் விஜய். ஆனால் அதை கூட கவனிக்காமல் இருளை வெறித்திருந்தாள் சஹி.

இப்போது சற்று சத்தமாக "சஹானா" என்று அழைத்து அவள் கையை தொட்டான். அதில் திடுக்கிட்டு திரும்பிய சஹி அது விஜய் என்றதும் சற்று ஆசுவாசமானாள்.

அவள் பார்த்த பின்னும் பேசாமல் அவள் முகத்தையே விஜய் பார்க்கவும் சஹியே "என்ன விஜய்? என்னாச்சு உங்களுக்கு தூக்கம் வரலையா. நீங்களும் இங்க வந்துட்டீங்க" என்றாள் கேள்வியாய்.

அதன் பின்னர் தன் முக பாவத்தை மாற்றிய விஜய் "ம்ம். ஆமா தூக்கம் வரலை தான். ஆனா நீங்க ஏன் சஹி இங்க நிக்கிறீங்க. நைட் டைம் வேற. எதாவது தப்பா ஆகிற போகுது.

இங்க இப்போ நிக்கிறது அவ்வளவா சேப் இல்லை. வாங்க" என்று அவளை அழைத்தான். அவன் பேசியதை கேட்டும் சிறிது நேரம் எதுவும் பேசாது அமைதியாக நின்ற சஹி சில நிமிடங்கள் கழித்து "வாங்க போகலாம்" என விஜய்யையும் அழைத்து இருக்கைக்கு சென்றாள்.

அங்கே ஸ்ரே மட்டும் தூங்கிக் கொண்டிருக்க மற்ற மூவரும் கீழே உள்ள சீட்டில் இவர்கள் வருகிறார்களா இல்லையா என்று பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

அவர்களை கண்டு "என்ன அங்கிள்‌ ஆன்டி நீங்க தூங்காம இன்னும் இப்படி உக்காந்துட்டு இருக்கீங்க. இப்படி தூங்காமா இருந்தா ஹெல்த்து தான் பாதிக்கும் தூங்குங்க. போங்க வெற்றி நீங்களும் போய் தூங்குங்க" என்று அனைவரையும் தூங்க பனித்தாள்.

ஆனால் அவர்களோ இவளை அருகே அழைத்தனர். சோம் அங்கிள் "சஹி பாப்பா இங்க வாடாம்மா" என்று பரிவோடு அழைக்க அவரின் குரலில் இருந்த ஏதோ ஒன்றில் அமைதியாக அவர்களின் முன் சென்றாள்.

அவள் அருகே வரவும் சோம் அவளை தனக்கும் லக்ஷ்மிக்கும் நடுவில் அமர்த்திக் கொண்டார். இவர்களுக்கு எதிரே இருந்த இருக்கையில் விஜையும் வெற்றியும் இவர்களை பார்த்தவாறு அமர்ந்து விட்டனர்.

கொஞ்ச‌ நேரத்திற்கு முன்பு பார்த்த வரை சோமிற்கு புரிந்தது ஸ்ரேயாவும் சஹானாவும் ஒரு மாதிரி இயல்பு உடையவர்கள் என.

என்ன ஒன்று ஸ்ரே அழுது ஆர்ப்பாட்டமாக தன் கவலையை காட்டினாள் என்றால் சஹி அமைதியாக அழுது தன் வேதனையை காட்டி இருந்தாள்.

எனவே அவளிடம் பேசும் அவசியம் உணர்ந்த பெரியவர்கள் அவளை அருகே அமர்த்தி தலையை தடவி கொடுக்க ஆரம்பிக்க இவர்கள் பரிவில் சஹியின் கண்களில் நின்ற கண்ணீர் தானாக மீண்டும் வந்துவிட்டது.

அவள் அழ துவங்கவும் லக்ஷ்மி அம்மா அவளை மடியில் போட்டு தட்டிக் கொடுத்தார். இப்போது அவள் கண்ணீர் அதிகமாக பெருகியது. ஆனால் அது மௌன கண்ணீராய் வழிந்து சென்றது.

அவளை அழ விட்ட லக்ஷ்மி அம்மாவும் எதுவும் சொல்லவில்லை. மற்றவர்களும் அவளின் மனதில் இருந்த வேதனைகள் கண்ணீரில் கண்ணீராய் கரையட்டும் என எண்ணிணரோ என்னவோ அவர்களும் இவளை தொந்தரவு செய்யாமலே இருந்தனர்.

சஹி நன்கு அழுது அவளே சற்று தெளிந்த பின்னரே லக்ஷ்மியின் மடியில் இருந்து மெதுவாக எழுந்து தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் மௌனமே அங்கு ஆட்சி செய்தது. அதை யாரும் கலைக்க விரும்பவில்லை. விஷயம் எதுவானாலும் அது சஹி வாயில் இருந்தே வரட்டும் என அவளை மட்டுமே பார்த்திருந்தனர்.

அதே போல் சஹியே ஆரம்பித்தாள். "நானும் ஸ்ரேயும் அக்கா தங்கச்சி தான் ஆன்டி" என முதலில் தங்கள் உறவை தெரியப்படுத்தினாள். அதன் பின்னே தங்களை பற்றி தங்கள் வாழ்வில் நடந்ததை பற்றி என அனைத்தையும் சொல்ல தொடங்கினாள்.

"எங்க அப்பா அம்மா லவ் மேரேஜ். ஊரை விட்டு ஓடி வந்து தான் கல்யாணமே பண்ணிக்கிட்டதா சொல்வாங்க. அவங்களுக்கு சொந்த ஊரு திருநெல்வேலி பக்கம் எதோ ஒரு கிராமம்‌.

அவங்க மேரேஜ் முடிஞ்ச அப்புறம் தான் சென்னைக்கே வந்திருக்காங்க அங்கிள். அப்பா எங்க அம்மா மேல அவ்ளோ காதல் வச்சிருந்ததா சொல்லிட்டு இருப்பாரு" எதையோ நினைத்து விரக்தியாக சிரித்துக் கொண்டாள்.

பின் "எல்லாருக்கும் பணம் வந்தா லவ் காணாமா போய்டும் போல ஆன்டி" என்று வருத்தமாக கூறிக் கொண்டாள் இடையே. அவளே மீண்டும் தொடர்ந்தாள்.

"அவங்க இங்க சென்னைக்கு பர்ஸ்ட்‌ வந்தப்ப ஒரு சின்ன வீட்ல தான் வாடகைக்கு இருந்தாங்களாம். அப்பா நல்லா படிச்சவர் தான். இருந்தாலும் நல்ல வேலை கிடைக்கல. சோ கிடைச்ச வேலைக்கு போய்ட்டு இருந்தாராம்.

அப்போ தான் நான் பிறந்தேனாம். எனக்கு ரெண்டு வருஷம் கழிச்சு என் தங்கச்சி. ஃபேமிலி ரன் பண்ற அளவு ஓரளவு வருமானம் இருந்திருக்கு. பட் எங்க அப்பாக்கு அது பத்தலை.

எங்க அம்மாவையும் அப்புறம் எங்களையும் நல்லா வச்சுக்கனும் அப்படின்னு ரொம்ப ஆசைப்பட்டாராம். அதோட லைஃப்ல பெருசா எதாவது சாதிக்கனும்.

அப்படின்னும் ரொம்ப ஆசையாம்" என்றவள் இதை சொல்லும் போது தன் அன்னையின் முகத்தில் வரும் பலவகை உணர்வுகள் எப்படி வருத்தத்தில் வந்து முடியும் என்பதையும் நினைத்து கொண்டாள்.

"நாங்க படிக்கிற ஸ்கூல்ல இருந்து நாங்க‌ வாழுற ஒவ்வொரு நாளும் கஷ்டத்தை அனுபவிக்க கூடாதுன்னு அவ்ளோ உழைப்பாருன்னு அம்மா சொல்வாங்க.

ஒரு கட்டத்தில‌ வெறுமனே வேலைக்கு போய் வாங்குற சம்பளம் மட்டும் பத்தாதுன்னு அவருக்கு தோன்றியிருக்கு.‌ அப்போ தான் அவருக்கு 'நாமளே ஏன் பிசினஸ் செய்ய கூடாது' அப்படின்னு ஒரு எண்ணம் வந்துருக்கு.

அப்பா தன் லைஃப் எங்க அம்மா தான்னு எப்போ டிசைட் பண்ணினாரோ அப்பைல இருந்தே அவர் என்னனென்ன செய்யறாரோ அதை அம்மாட்ட கேட்டுட்டு தான் செஞ்சிருக்காரு.

அது மாதிரி இந்த எண்ணத்தையும் அம்மாகிட்ட ஷேர் பண்ணி என்ன செய்யலாம். ஏது செய்யலாம் அப்படின்னு கேக்க அம்மாவும் அவரு ஆசைக்கு எந்த தடையும் சொல்லை.

எங்க அப்பா ஒரு கன்ஸ்டிரக்ஷன் கம்பெனில தான் வேலைல இருந்திருக்கார். சோ அந்த பிசினஸே ஆரம்பிக்கலாம்னு டிசைட் பண்ணி அம்மாவோட நகை அதோட பத்தாததுக்கு பேங்க் லோன் வாங்கி பிசினஸ நல்லபடியா ஸ்டார்ட் பண்ணியிருக்கார்.

ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டுடார் போல. யாருமே இவருக்கு புராஜெக்ட் தர தயாரா இல்லையாம். புது கம்பெனி நல்லா செஞ்சு தருவாங்களா மாட்டாங்களான்னு டௌட்.

சோ ரொம்ப திணறி போய் இருந்திருக்கார். வீட்டை பார்க்கனும் அது வேற பிரசர். பழைய வேலைல இருந்திருந்தா குடும்பம் இவ்ளோ கஷ்டபட்டு இருக்காதே அப்படின்னு மனசுல கவலை வேற.

ஒரு கட்டத்தில‌ சரி போதும் இது பேசாம ஆபீசை இழுத்து மூடிட்டு‌ பழையபடி வேலைக்கே போகலாம் அப்படின்னு கூட டிசைட் பண்ணியிருக்கார் மனுஷன்" என பேசியவள் மனதில் 'அப்படி‌யே பண்ணியிருக்கலாம்' என்றே நினைத்தாள்.

"ஆனா அவரு ஒவ்வொரு தடவை இப்படி சொல்லி புலம்பும் போது எல்லாம் அம்மா தான் அவருக்கு தைரியம் கொடுத்து நம்பிக்கை கொடுத்து அவரை உயிர்ப்போட வச்சிருந்தாங்க.

அப்போ தான் ஒரு வீடு கட்டுற‌ ஆஃபர் வந்துச்சு. வேலையே இல்லாம இருந்த இடத்தில முதல் வேலை. அப்பா அவ்ளோ சந்தோஷப்பட்டார். முதல்ல வந்து அம்மாகிட்ட தான் ஷேர் பண்ணி இதெல்லாம் உன்னால நான் அப்படின்னு கொண்டாடி தீர்த்திருக்கார் மனுஷன்.

முதல் வேலை நல்லா பண்ணி தரனும் அப்டின்னு ராத்திரி பகல்னு பார்க்காம வேலை பார்த்தாரு. அவர் நல்ல திறமையானவர் கூட. சோ அந்த வீடு உண்மையாவே அவ்ளோ நல்லா வந்துச்சு. அப்பாக்கு சந்தோஷம் தாங்கலை.

அந்த வீட்டை பாத்தவங்க ஒருத்தர் அப்படின்னு அடுத்தடுத்து வேலை வந்திட்டே இருந்துச்சு" என்றவள் இங்கே நிறுத்தி மென்னகை புரிந்தாள்.

"அப்போ நாங்க சின்ன பசங்க தான். ஆனா எனக்கு நல்லாவே நியாபகம் இருக்கு. எங்க அப்பா ஒவ்வொரு வெற்றிக்கு அப்புறம் எங்க அம்மாவை அப்படி தாங்குவார்.

எங்ககிட்டையும் எங்க அம்மாவை பத்தி அவ்ளோ புகழ்வார். அப்படியே எங்க வாழ்க்கை இருந்திருக்க கூடாதான்னு மனசு இப்போ ஏங்குது அங்கிள்" என்றவளின் முகம் சொல்லொன்னா வேதனையை அப்பட்டமாக காட்டியது.

-பயணம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 7

சஹானா தங்கள் வாழ்க்கையில் கடந்த பக்கங்களை புரட்டி கொண்டிருந்தாள். அவள் கூறியதைக் கேட்ட சோம் மற்றும் லக்ஷ்மி இருவரின் மனதிலும் மிகுந்த ஆர்வம் வந்தது.

விஜய் வெற்றியும் கூட 'பார்ரா! எவ்ளோ நல்ல மனுஷனா இருந்திருக்காரு' என்று தான் பார்த்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு சஹி முகத்தில் இடையே ஏற்ப்பட்ட வேதனை தான் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனாலும் அவர்கள் எதுவும் கேட்காது அவள் பேச ஆரம்பிக்கவும் அங்கே கவனம் செலுத்தினர். சஹானா மற்றும் ஸ்ரேயாவின் தந்தை அவரின் தொழில் நல்ல முறையில் கொண்டு செல்ல ஆரம்பித்த பின் அவர்களின் வாழ்வும் மேன்மை அடைந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக பணம் பெருக துவங்க வாடகை வீட்டில் இருந்தவர்கள் நல்ல பெரிய இடமாகவே பார்த்து வாங்கி அவ்வளவு ஆசையாக அவர்களின் சொந்த வீட்டை கட்டி முடித்தனர்.

அப்போது சிறுமிகளாக இருந்த சஹியும் ஸ்ரேயும் அந்த புது வீட்டை கண்டு ஆர்ப்பரித்து தீர்த்தனர். அவர்களின் ஆர்ப்பாட்த்தை கண்டு பெற்றோர்களின் மனமும் பூரித்து போனது.

சஹியின் தந்தைக்கு அவர் இத்தனை நாட்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் அந்த வீட்டை காணும் பொழுது பனியாய் விலகி செல்வது போல் தான் இருந்தது.

அவர்கள் வாழ்வு ஏற்றம் காண, மனிதர் வாழ்வில் முன்னேற்றம் மட்டுமே இருக்குமா என்ன. சிலபல சரிவுகளும் இருந்திடுமே! அதே போல் தான் இவர்கள் வாழ்வும் காண ஆரம்பித்தது.

"பணம்!! இது அவ்ளோ பெரிய போதைன்னு நிறைய பேரு சொல்வாங்க. அந்த பணம் நம்மலை பாதிக்காதபடி நம்மோட இயல்பில எப்பவும் மாறாம இருக்கனும் இருந்து காட்டனும்.

ஆனா அது நம்மளை அப்படி ஒன்னும் பாதிக்காது. அது எனக்கு நல்லாவே தெரியும். எங்க பசங்க நீங்க அப்படி தான் இருக்கனும். புரியுதா செல்லங்களா" இது தான் வழக்கமாக சஹியின் அன்னை கூறும் கூற்று.

சிறு வயதில் இருந்தே தங்கள் பணத்தின் செழுமையில் வளரும் பிள்ளைகள் வழி தவறாது இருக்க அவள் அம்மா கூறும் போதனைகள் அதிகம். அந்த வார்த்தைகள் இன்னும் சஹியின் காதில் கேட்பது போல் இருந்தது.

பிள்ளைகளை பார்த்து கொண்ட சஹியின் தாய் அந்த பிள்ளைகளின் தந்தையை பற்றி சிந்திக்க மறந்தார். சிந்திக்க மறந்தாரா இல்லை அவர் கணவர் மேல் அதீத நம்பிக்கை வைத்திருந்தாரா அது அவரே அறிவார்.

இதையே தான் சஹியும் யோசித்திருந்தாள் 'எங்களுக்கு செய்த அறிவுரைகளில் கொஞ்சம் அப்பாவுக்கும் கொடுத்திருக்கலாமே' என.

ஆனால் அவர் அதை உணரும் தருணம் காலம் எல்லாம் கடந்து விட்டிருந்தது. சிறிது நேரம் அமைதியாக தன் எண்ணத்தில் உழன்று கொண்டிருந்தாள் சஹி.

இப்போது பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள் "பணம் ஒரு மனுஷன எந்த அளவுக்கு ஆட்டி படைக்காம்ன்னு பர்ஸ்ட் எனக்கு புரியலை அங்கிள்" என பூடகமாக ஆரம்பித்தால் சஹி.

"எங்க அப்பா முதல்ல எங்களுக்காகன்னு தான் பணம் சம்பாதிக்க நினைச்சாரு. அது மாதிரி அவர் சம்பாதிக்கவும் செஞ்சார். கொஞ்சம் கொஞ்சமா வசதி பெருகுச்சு.

அதோட பணம் சம்பாதிக்கனும் அப்படிங்கற என் அப்போவோட எண்ணமும். கையில பணம் அதிகமா புலங்க தொடங்க ஆரம்பிச்சப்ப அது இன்னும் வேணும் நிறைய வேணும்ன்னு பணத்தை சுத்தியே அவர் எண்ணமும் போய்ருக்கு.

எங்க அப்பா பணத்துக்கு பின்னாடி ஓட ஆரம்பிச்சதை எங்க அம்மா ஆரம்பத்தில‌ கவனிக்கலை. ராத்திரி பகல்னு பார்க்காம வெறித்தனமா வேலை பார்த்திருக்கார்.

நான் பார்க்க என் அப்பா மாதிரி இருப்பேன். ஆனா ஸ்ரே பார்க்க என் பாட்டி மாதிரி. நாங்க ரெண்டு பேருமே அவருக்கு ரொம்ப செல்லம்.

அதே மாதிரி ஸ்ரே சின்ன பொண்ணுன்னு நினைச்சாரோ என்னவோ எங்க பிசினஸ் வாரிசா என்னை கொண்டு வரனும்னு முடிவு பண்ணிட்டார்" அதற்காக அவர் செய்ததில் தான் இழந்ததை நினைத்து வருந்தினாள்.

சஹி தொடர்ந்தாள். "அதனால‌ நான் தனியா இருக்கப்ப எல்லாம் என்னை கூப்பிட்டு வச்சு பேசுவாறு. நாங்க என்ன பிசினஸ் பண்றோம். எவ்ளோ பெரிய கம்பெனி வச்சிருக்கோம் அப்டின்னு.

என் அம்மாக்கு பணத்துக்கு பின்னாடி ஓடுறது சுத்தமா பிடிக்காது தேவைக்கு மட்டும் சம்பாதிச்சா போதும்னு சொல்வாங்க. அதனால அவர் என்கிட்ட பேசறது என் அம்மாக்கு தெரியாம பாத்துக்கிட்டார்.

அதோட வாழ்க்கைக்கு பணம் ரொம்ப தேவை, பணம் இருந்தா எது வேணா செய்யலாம்னு சொல்வாரு. அவர் உலகத்தை எந்த கண்ணோட்டத்தில‌ பார்த்தாரோ அதே மாதிரி நானும் பார்க்கனும்னு எனக்கு சின்னதுல இருந்தே டிரைனிங் தருவார்.

மனுஷங்க கிட்ட அவ்ளோ சீக்கிரம் பழக கூடாது. யாரையும் நம்பவும் கூடாது. அவங்க நம்மல ஏமாத்த நிறைய சான்ஸ் இருக்கு. அதனால‌ எல்லாருக்கிட்ட இருந்தும் தள்ளியே இருக்கனும் அப்படின்னு அடிக்கடி சொல்லி என் மனசுல விதைச்சாரு.

ஸ்டார்டிங்கல அவரை சிலர் ஏமாத்த பார்த்திருக்காங்க. அதை வச்சு அவர் என்கிட்ட சொல்லிருக்கார்" அவர் பேசுவதை உள்வாங்கிய சஹியின்‌ மனதில் பசுமரத்தாணி போல் அவள் தந்தையின் சொற்கள் பதிந்து போனது.

அவளின் மனது அந்த நாட்களுக்கே சென்று விட்டது. அவள் தந்தையின் சொற்களே அவளை மற்றவர்களிடம் இருந்து விலக்கி வைக்க போதுமானதாக இருந்தது.

எனவே அவள் ஒரு தனிமை விரும்பி ஆகி போனாள். நண்பர்கள் என யாரையும் தன் அருகே அண்ட விட மாட்டாள். அதனாலோ என்னவோ ஸ்ரேயாவின் மீது தங்கை என்பதை தாண்டி தோழமையும் வலுப்பெற்றது.

அவள் இதுபோல் எல்லாரிடமும் இருந்து ஒதுங்கி நிற்பதை கண்டு குழம்பிய அவள் அன்னை அவளுக்கு அறிவுரைகள் வழங்கி தான் பள்ளிக்கு அனுப்பி வைப்பார். ஆனால் பலன் தான் கிட்டவில்லை. சஹி தனித்தே நின்று விட்டாள்.

சஹியின் செய்கைகளை கூறி அவர் தன் கணவரிடம் புலம்பும் நேரம் அவருக்கு சமாதானம் சொல்லி தேற்றினாலும் தன் பிள்ளை தன்னுடைய பேச்சை கேட்டு நடந்து கொள்கிறாள் என மனத்திற்குள் கர்வப்பட்டு கொண்டார்.

அவர் சொல்லிற்கு இணங்க சஹியும் ஒவ்வொரு செயலும் செய்யவே அவளை யாராலும் வெல்ல முடியாது என தகப்பனாக மகிழ்ந்து கொள்வார்.

ஆனால் குருவி தலையில் பனங்காய் வைப்பது அவ்வளவு ஒன்று அந்த குருவிக்கு மகிழ்ச்சியை அளிக்காது என்பதை மறந்து போனார் அந்த தொழிலதிபர்.

ஆம் சஹியின் மனதிலும் அந்தந்த வயதிற்கான ஆசைகள் நண்பர்கள் வேண்டும் என்ற எண்ணம் எல்லாமே இருக்க தான் செய்தது. அதே சமயம் அவள் தந்தை தந்த போதனையின் முடிவில் அவளின் மனம் வீட்டினரை தவிர்த்து மற்றவர்களை நம்ப தயங்கியது.

அதுவே அவள் மனதை உள்ளே இறுகவும் செய்தது.‌ என்னதான் பிள்ளைகளை மட்டும் பார்த்து வந்தாலும் ஒரு கட்டத்தில் சஹியின் அம்மாவிற்கு அவர் கணவரின் செயல்கள் மாறுபட்டு தெரிந்தது.

முன் போல் அவர் குடும்பத்துடன் நேரம் செலவு செய்யவில்லை என்ற மட்டில் புரிந்து கொண்டவர் இது வரை வேலை அதிகம் என எண்ணினார்.

ஆனால் குடும்பத்தோடு கூட செலவு செய்யாமல் பணம்‌ சம்பாதிக்க உண்மையில் வருத்தம் தான் கொண்டார் அவள் தாய்.‌

ஒரு நாள் அவர்‌ வரும் நேரம் வரை காத்திருந்து பேச அவரின் பணம் சம்பாதிக்கும் எண்ணம் புரிந்து போனது.

"இங்க பாருங்க நமக்கு தேவைக்கு அதிகமாவே இப்போ பணம் இருக்கே. இன்னும் உங்களை ஏன் கஷ்டப்படுத்திக்கிறீங்க. பாப்பா ரெண்டு பேரும் உங்க முகத்தை பார்த்தே ஒரு வாரம் ஆகுது.

ஏங்கி போய்டாங்க பிள்ளைங்க. ஸ்ரே குட்டி தினமும் அம்மா இன்னைக்காவது அப்பா சீக்கிரம் வருவாரா? அப்டின்னு கேக்குறா. நமக்கு பணம் போதும் பா.

கொஞ்சம் எங்களோடையும் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்களே" என்று முடிந்தளவு தன்மையாகவே கூறினார். என்றும் இல்லாது மனைவி இன்று இப்படி கூறவும் அவருக்கும் மனது என்னவோ போல் ஆக

"சாரி மா. உங்களை ஏங்க வைக்க நான் எதுவும் செய்யலை. நம்ம புள்ளைங்க வாழ்க்கை நல்ல இருக்கனும்னு தான் இப்படி ஓடி ஓடி சம்பாதிக்கிறேன். நாம‌ சின்ன வயசுல பட்ட கஷ்டத்தை அவங்க நினைச்சு கூட பார்க்க கூடாது.

அது மட்டும் இல்ல உன்னை அப்படி ராணி மாதிரி பார்க்கனும்னு நான் ஆசைப்படுறேன். அதான் இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் நான் நினைச்ச மாதிரி நம்ம கம்பெனிய இன்னும் பெரிசாக்கின அப்புறம் என் ஓட்டத்தையும் நிறுத்திக்கிறேன்" என அவரும் தன்மையாக பதில் அளித்தார்.

இந்த சுமூக நிலை எவ்வளவு நாள் வரப்போகுது என்பதை போல் பணமும் இவர்களை கண்டு சிரித்து நின்றதோ?

-பயணம் தொடரும்

 
Top