All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)" - கதைத் திரி

Status
Not open for further replies.

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அரசி, அர்ஜுனை எதிர்கொள்ள சம்யுக்தாவின் பேச்சு பெரிதும் துணை கொடுத்திருந்தது... அலர்களால் அலங்கரிக்கப்பட்ட அறையில் ஊதுவத்தியின் நறுமணமும், மலர்களின் நறுமணமும் நீயா நானா என போட்டியிட்டுக் மணம் பரப்பிக் கொண்டிருந்தன... அந்த ரம்மியமான சூழலே அரசியின் பதட்டத்தை வெகுவாக குறைத்துவிட்டிருந்தது.

அர்ஜுன் பால்கனியிலிருந்து உள்ளே வந்து கதவை அடைத்தவன் மனைவியை குறுகுறுவென்று பார்க்க, அவனின் பார்வையை எதிர்கொள்ள இயலாது நாணம் தடுத்ததில் சிரம் தாழ்த்திக் கொண்டாள் பார்வை வெற்று தரையில் பதிந்தது... அவள் பார்க்காத சமயம் தலை முதல் பாதம் வரை பார்வையால் கபளீகரம் செய்துக் கொண்டிருந்தவன் சிந்தையில்...

‘இந்த இரவை எப்படி எல்லாம் உன் கூட கொண்டாடணும்னு நினைச்சிருந்தேன் பாவி எல்லாத்தையுமே கெடுத்துட்டியே’ என்று மானசீகமாக சாடிக் கொண்டிருந்தான். அவனின் பார்வையையும் உணரவில்லை அவன் மனதின் கூக்குரலையும் அறியாது அவன் அருகில் வர காத்திருந்தாள்.

அர்ஜுன் சில கணங்களோ, வினாடிகளோ அறியாது அவளையே பார்வையால் வருடிக் கொண்டிருந்தவன் கட்டிலை நெருங்கி அவளுக்கு அருகில் இல்லாமல் சற்று இடைவெளி விட்டு அமர... அரசி பால் நிறைந்த டம்ளரை அவனிடம் நீட்டினாள்.

“எனக்கு வேண்டாம்” என்று முகத்திலறைந்தது போல் கூறியதில் சுருக்கென்று இருக்க, எங்கிருந்து தான் அந்த கோபமும், துணிச்சலும் வந்ததோ...

“இந்த முகத்தில் அறைந்த மாதிரி பேசுற பேச்செல்லாம் வேண்டாம்... இப்போ நீங்க குடிச்சு தான் ஆகணும்” என்று அதிகாரமாக கட்டளையிட்டாள்.

அவளின் பேச்சில் மனதிற்குள் மிரண்டான், அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டு ஒற்றை புருவம் உயர்த்தி ஒயிலாக பார்த்தவன்...

“என்னடி மிரட்டல் எல்லாம் பலமா இருக்கு? முதல் நாளே பொண்டாட்டி அதிகாரத்தை கட்டுற போல?”

“ஆமாம் அப்படிதான் வச்சுக்கோங்க” ஜம்பமாக அமர்ந்தவள் மிடுக்காக கூறினாள்.

“ஆனால் என்கிட்டே அதெல்லாம் செல்லுபடி ஆகாதே... அதனால் பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோ”

“ஒஹோ...! இல்லன்னா என்ன பண்ணுவீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” அவனை போலவே ஒற்றை புருவம் உயர்த்தி ஒயிலாக வினவியவளின் வார்த்தையில் நெஞ்சுரம் வெளிப்பட்டது.

“ஏய் கழுத்தில் தாலி ஏறிட்ட திமிரா? தொலைச்சுருவேன் பார்த்துக்கோ, எதிர்த்து பேசிட்டு இருக்காம போய் தூங்குடி” என்றவன் முணகிக் கொண்டே படுக்கைக்கு செல்ல... அரசி தடாலடியாக எழுந்தவள் அறைக் கதவை திறக்க செல்லும் போது சுதாரித்து துரிதமாகஅவளை தடுத்திருந்தான்.

“ஏய்... ஏய்.. என்ன டி பண்ணுற?” பதட்டத்துடன் அவள் கரங்களை பிடித்து தடுத்து விட்டிருந்தவனை அமர்த்தலாக பார்த்து அவன் ரத்த அழுத்தத்தை கூட்டியவள்...

“அதான் பால் குடிக்க முடியாதுன்னு சொல்லிட்டீங்கள்ள, அதான் அத்தைக்கிட்டே கேட்டு இந்த பாலை அப்படியே பிரிட்ஜில் வைக்கவா? இல்லை, பூனைக்கு ஊத்தவா? இல்லை, தயிருக்கு புரை போடவான்னு கேட்டுட்டு வர போறேன்”

“என்ன டி நக்கலா? இன்னைக்கு உனக்கு என்ன நாளுன்னு தெரியுமா? இல்லை மறந்துட்டியா” கடிந்த பற்களுக்கிடையே வார்த்தைகளால் சீறினான்.

“எனக்கெல்லாம் நல்லா நியாபகம் இருக்கு, உங்களுக்கு தான் அது நியாபகம் இல்லை”

“நியாபகம் வச்சிருக்கிறவ பண்ணுற காரியமா டி இது... என் அம்மா கல்யாணம் பண்ணிக்கவே என்னை வறுத்தெடுத்தாங்க, இப்போ நீ ரூமை விட்டு போனா வீட்டை விட்டே துரத்திருவாங்க, ஒழுங்கா அடங்கி ரூமில் கிட, நம்ம விஷயத்தை கடை பரப்பின அப்புறம் நான் சும்மா இருக்கமாட்டேன்” அடிக்குரலில் சீறினான்.

அவனே அவளுக்கு மேலும் ஓர் அஸ்திரத்தை எடுத்து கொடுக்க அரசிக்கு படு குஷியாகிப் போனது... ‘வாலண்டியரா சிக்கிட்டியே புருஷா’ என்றெண்ணி கொண்டவள்...

“நான் உங்களுக்கு அடங்கி இருக்கத் தான் ஆசைப்படுறேன், இப்போ இந்த நிமிஷமே தயார்” என்றவளின் மார்க்கமான பார்வையும், கிறக்கமாக ஒலித்த குரலில் மயங்கிய மனதை அதட்டி அடக்கி கடிவாளமிட்டவன்...

“அடங்கி இருக்கப் போறியா... நீயா? அப்புறம் எதுக்கு இப்படி மல்லுகட்டுற, ஒழுங்கா போய் தூங்கு” என்று சாதாரணமாக கூறியதும்...

“அப்போ இந்த பாலை குடிங்க” என்று குவளையை நீட்டியவளை முறைத்துக் கொண்டே வாங்கி அருந்தியவன் பார்வை அவளிடமே நிலைத்திருக்க, அவன் குடித்துவிட்டு மீதியை அவளிடமும் கொடுத்திருந்தான்.

அரசிக்கு மனதில் வெற்றி முரசு கொட்ட “பரவாலையே அரசி முதல் முறையே சாதிச்சுட்ட” என்று தனக்குத் தானே பாராட்டிக் கொண்டவளுக்கு மனதின் ஏதோ ஓர் மூலையில் வெற்றிடம் உண்டாகவே செய்தது.

பாலை குடித்து முடித்து அவளின் மனவோட்டாதையே கண்காணித்து கொண்டிருந்தவனுக்கு அவளின் அழகும், கழுத்தில் மின்னிய மஞ்சள் கயிறும் அவளுடனான சொந்ததை உணர்த்தியதில் பேசாமல் கோபத்தை மறந்து அவளுடன் இணைந்துவிடலாமோ என்றெண்ணத்தை அவள் செய்த காரியம் தடையிட்டு தடுத்துவிட்டிருந்தது.

“நீ எந்த பக்கம் படுக்குற சொல்லு?” என்றவனை பார்வை மாறாமலே பார்த்தவள்...

“இன்னும் முடிவு பண்ணலை?” என்று அலட்சியமாக கூறியவளின் இதழ்கள் சிரிப்பை அடக்க முயன்றுக் கொண்டிருந்தது.

“ஏன் தூங்குற உத்தேசம் இல்லையா, சிவராத்திரி கொண்டாட போறியா?”

“ஆமாம் சிவராத்திரி கொண்டாட தான் போறேன், ஆனா தனியா இல்லை உங்களோட தான்” என்று இமை சிமிட்டியவளின் விழிகளில் இதழ் பதித்துவிட துடித்த காதல் மனதை மிகுந்த சிரமத்துடன் அடக்கிக் கொண்டான்.

அவளோ அவனின் கோபம், புறக்கணிப்பு என்று எதையும் பொருட்படுத்தாமல் அவனை நெருங்கியவள்... அவன் கழுத்தில் தன் கரங்களை மாலையாக கோர்த்து கண்களை நேருக்கு நேர் நோக்கியதில், அவன் சித்தம் தடுமாறியது.

“ஏய் நான் செம கடுப்பில் இருக்கிறேன் கையை எடு” என்ன தான் குரலில் கடுமையை தேக்கி அதட்டிய போதும் கடினத் தன்மை மீறி சற்று மென்மையும் வெளிபட்டுவிட்டது.

“கோபமா வச்சுக்கோங்க... ஆனால் அதெல்லாம் உங்களோட விருப்பம், எனக்கு உங்க மேல கோபம் இல்லையே, அப்புறம் நீங்களே சொல்லியிருக்கீங்க, நீங்க தான் என்னை தொடமாட்டேன்னும், நான் உங்களை என்ன வேணா பண்ணலாம்னு நீங்களே அனுமதி கொடுத்திருக்கீங்க” என்றவள் அவன் ஏதோ பேச வரும் முன் அவன் கன்னத்தில் அவள் இதழ்கள் பதிந்து விட, உடலின் ரசாயன மாற்றம் நிகழ்ந்து நூதன வித்தையை காட்டியதில் உணர்ச்சிகள் பேயாட்டம் போட்டு அவன் இளமையை சோதித்து வைத்தது. அவள் மெல்ல தன் இதழ்களை பிரித்தெடுத்தவள் மறுக் கண்ணத்திலும் தன் அச்சாரத்தை பதித்திருந்தாள்.

அதற்கு மேல் அவன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது போனதிலும், அவள் அவனை விட்டு விலக செல்ல நினைத்ததும் என மாறி மாறி அவன் மனதை புரட்டி போட்டது. அவள் மேல் இழுத்துப் பிடித்து வைத்திருந்த கோபத்தையும் தாண்டிய காதல் களிப்பை முற்றிலும் அனுபவிக்க முடியாத கோபம் என அனைத்தும் சேர்ந்துக் கொள்ள, அவளே எதிர்பாராத விதமாக வெடுக்கென்று தள்ளி விட்டு தன் சுட்டு விரலை நீட்டி எச்சரித்தவன் விழிகள் சிவந்து போயிருந்தது. அவனின் அந்த தோற்றத்தை கண்டு அரண்டு தான் போனாள்.

“என்னை விட்டு விலகிப் போக நினைச்சப்போ எங்க டி போயிருந்தது உன்னுடைய இந்த காதல், கத்திரிக்கை எல்லாம்?” சுள்ளென்று வினவியவனின் கேள்வியில் அவள் இதயம் அடிபட்டு நொறுங்கி வலி உண்டாக, அதை தாங்கிக் கொள்ளும் சக்தியற்று உடல் தோய்ந்து தொப்பென்று படுக்கையில் அமர்ந்துவிட்டாள். அவளின் மாற்றத்தை பொருட்படுத்தாது தன் கோபத்தை அவளிடம் வார்த்தையால் காண்பிக்கலானான்.

“நீ எதையோ யோசிச்சு குழம்பி இருக்கிற, ஆனால் அது என்னவா இருந்தாலும் நீயே என்னை தேடுவ, அதுவரைக்கும் உன்னை தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு நினைச்சு, உன் தனிப்பட்ட சிந்தனைக்கான வழியை ஏற்படுத்தி கொடுத்த என்னை இழிச்சவாயன்னு நினைச்சுட்டே, நீ என்னை தவிர்த்த போதெல்லாம் உன்னை மட்டுமே மனசில் நினைச்சு தவிச்சுட்டு இருந்தேன் டி”

“ஆனால் இதோ பாரு உனக்கு இன்ப அதிர்ச்சின்னு தழையத் தழைய புடவை கட்டி, பூ வச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டு இன்னொருத்தன் முன்னாடி என்னையும் பாரு, என் அழகையும் பாருன்னு காட்டிட்டு நின்ன பாரு, அதை பார்த்தப்போ என் மனசு குளிர்ந்து போச்சு டி.. ரொம்ப குளிர்ந்து போச்சு”

“உன்னை நான் தொட்டா, உனக்கு கெட்ட பேர் ஆகிருமோன்னு என் ஆசையை எல்லாம் கட்டுப்படுத்திகிட்டு உங்கிட்ட பழகினேன் டி... ஆனா கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாம எப்படி டி உன்னால இன்னொருத்தன் முன்னாடி நிற்க முடிஞ்சது?”

“நான் வேற என்ன செய்ய முடியும்? எனக்குன்னு என் விருப்பத்தை கேட்க சொல்ல என் பெத்தவங்க இல்லையே?” அவள் குரலில் பச்சாதாபத்துடன் கூடிய வேதனை தொக்கி இருந்தது.

“ஏன் தரன் உன்கிட்டே விருப்பத்தை கேட்கலை?”

“..........”

“சரி அவன்கிட்ட சொல்ல முடியலை... ஏன் என்கிட்டே சொல்லலை?”

“...........”

“சொல்லு டி சொல்லு” என்றவன் அவள் விலாவை பிடித்துக் கொண்டு ஆவேசத்துடன் உலுக்கினான். கணவனின் கோபத்தில் இருந்த ஆற்றாமை கண்ட அரசிக்கு அவனை எதிர்க்க இம்மியளவும் முடியாமல் வேதனை வெள்ளமாக பொங்கியது.

“நான் தொடாம ரொம்ப கண்ணியமா பழகினது உனக்கு ஒரு வகையில் நல்லதா போச்சு... அதான் வெட்கமில்லாம அந்த உரிமையை இன்னோருத்தனுக்கு கொடுக்க முடிவு செய்திட்ட?” என்றதும் விழுக்கென்று நிமிர்த்திவளின் விழிகளில் தீட்சண்யம் மிகுந்திருந்தது.

“சும்மா வாய்க்கு வந்தப்படி உளறாதீங்க சொல்லிட்டேன்... பொண்ணு தானே பார்க்கப் போறாங்க அடுத்த கட்டம் போனா பார்த்துக்கலாம்னு இருந்தேன்”

“எதை பார்த்துக்கலாம்னு இருந்த? நீ அவனுக்கு பாதி பொண்டாட்டி ஆகி நிற்கிறதே, என்கிட்ட சொல்லி நான் அதுக்கு எப்படி ரியாக்ஷன் கொடுக்கறேன்னு பார்க்கிறதையா?”

“அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது... அப்படி நடந்தா அது நடக்க நான் விட்டிருக்கமாட்டேன்”

“எப்படி? உன் உயிரை விட்டா” என்றவனின் வார்த்தையை ஏற்பது போல் மெளனமாக இருந்தாள்.

“உன் உயிரை கூட விடுவ! ஆனா உன் சூழ்நிலையை என்கிட்டே பகிர்ந்துகிட்டு என் முன்னாடி நின்னுருக்கமாட்டே? இது உன் வீம்பை தானே காட்டுது, எங்க காதல் இருக்குது?”

“இப்போ என்னை கொஞ்சுறதெல்லாம் இவன் நமக்கு புருசன் ஆகிட்டான் வேற வழியில்லைன்னு தானே? பேசாம போ டி என்னை கைகழுவிட்டு போக இருந்தவளை, நான் தொட்டு குடும்பம் நடத்தணுமா? ஆணிய புடுங்க வேண்டாம். நீ நீயாவே இரு, நான் நானாவே இருக்கேன்” தன் மனதில் தேக்கி வைத்திருந்த அவள் மேல் கொண்ட வருத்தத்தை எல்லாம் வார்த்தையால் வெளிப்படுத்திவிட்டு கட்டிலின் ஓர் மூலையில் படுத்து கண்ணுறங்கி விட்டிருந்தான்.

அரசியின் கண்கள் தான் கண்ணுறங்க மாட்டாமல் தவித்துக் கொண்டிருந்தது... அக்கணம் அவள் மூலையில் அசிரீரி போல் ஒலித்தது தரனின் பேச்சு ‘ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி ஆனதுக்கப்புறம் உங்க பிரச்சனை பற்றி பேசிக்கோங்க'

எப்படி யோசித்திருக்கிறார்! அவர் கூறியது போல் திருமணதிற்கு முன்பே அர்ஜுனிடம் பேசியிருந்தால், இந்நேரம் இருவரின் உறவுக்கும் இடையில் விரிசல் விழ வாழ்க்கை கேள்விக்குறி ஆகியிருக்குமோ... இங்கே அவன் தரப்பு நியாயம் ஒன்றாகவும், நம் தரப்பு நியாயம் ஒன்றாகவும் இருக்க, இதில் யார் ஜெயிப்பது என்ற ஈகோ எழுந்து நேசத்தை வேரறுத்து இருக்குமோ? என்றெல்லாம் சிந்தித்தவளுக்கு குலை நடுங்கியது. அவனின் பேச்சிலும், செயலிலும் உரிமையுணர்வு தன் மேல் அளவுக்கதிகமாக இருப்பது புலப்பட்டது.

மனதின் கணம் தாங்காமல் கண்ணீரில் கரைந்தவளின் விசும்பல் வெளியேறி விட, எங்கே அவன் செவியை எட்டிவிடுமோ என்று வாய் பொத்தியவளின் முயற்சி வீணானது போல் அர்ஜுன் திடுமென எழுந்தவன் அவளின் அழுகையை கண்டு வியாகூலம் அடைந்தான்.

“இப்போ என்ன குடி முழுகி போயிருச்சுன்னு அழற? நான் தானே தாலி காட்டினேன்... இனிமே நீ தானே என் பொண்டாட்டி இதுல எதுவும் மாறாது பேசாம தூங்கு, இன்னைக்கே வாழ்க்கை முடிஞ்சு போயிறல, இப்போ தான் வாழ்க்கையே தொடங்குறோம், அழாதே” என்றவன் அவள் கண்ணீரை துடைத்து, விளக்கை அணைத்துவிட்டு அவளை தட்டிக் கொடுக்கலானான்... அரசிக்கு அவனின் அணைப்பில் நிம்மதி தோன்றியதோ மெல்ல மெல்ல அழுகையை நிறுத்தி அவன் மார்பில் தலை சாய்த்தபடியே உறங்கிப் போனாள்.





சுவடுகள் தொடரும்....


**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-24 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

இன்னும் ஒரு அத்தியாயத்தில் கதை முடிந்துவிடும் கதைத் திரி வெள்ளிகிழமை (03.05.2024) அன்று இரவு கதைத் திரி நீக்கப்படும்.

“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதை முடிவடைந்ததும் இதன் இரண்டாம் பாகம் பதிவிடப்படும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு-25

அரசி, அர்ஜுன் புதுமனத் தம்பதிகளாக அவர்களின் குலதெய்வ வழிபாட்டிற்கு சென்று வந்தனர்... முதல் நாள் இரவுக்கு பிறகு அர்ஜுன், அரசியிடம் முழுவதுமாக முகத்தை திருப்பிக் கொள்ளாமல் இயல்பாக பேசினான்... அரசிக்கு அதுவே முன்னேற்றமாக தெரிய மீட்டெடுத்த தெம்புடன் வளைய வந்தாள். சமயம் வாய்க்கும் போதெல்லாம் தர்சன் இருவரையும் கேலி செய்ய அதில் பெரும்பாலும் தன் மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசுவதில் அர்ஜுனின் மேல் காதல் இருமடங்கு அதிகரித்து கொண்டே சென்றது.

அவ்வப்போது அவன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் அரசியிடம் எரிந்து விழுந்தாலும், முன்பு போல் நத்தையாய் சுருண்டு விடாமல் நிமிர்வாக எதிர்கொண்டாள்.

அன்று அலுவலகம் செல்ல புறப்பட்டு கொண்டிருந்த கணவனை அணுகிய அரசி... “இன்னைக்கு நானும் ஆபிஸ் வரேன்” என்க, கரத்தின் மணிக்கட்டில் சட்டை பொத்தானை போட்டுக் கொண்டிருந்தவன் அடிக்கண்ணால் மனைவியை பார்த்துவிட்டு...

“எதுக்கு?” பொத்தானை மாட்டியப்படி கேட்டிருந்தான்.

“எதுக்கா? நான் தான் அங்கே செக்ரெட்டரி எம்டி சாருக்கு நியாபகம் இருக்கா?” என்றவளை புருவம் முடிச்சிட பார்த்தவன்...

“இல்லை... உனக்கு தான் மறந்திருச்சு?”

“நான் என்ன மறந்துட்டேன்?” என்று கண்கள் இடுங்க வினவியவளை கூர்மையாக பார்த்தபடி பேசலானான்.

“நீ என் செக்ரெட்டரி அது கல்யாணத்துக்கு முன்னாடி... இப்போ நீ என் பொண்டாட்டி... அர்ஜுன் எக்ஸ்போர்ட்ஸ்க்கு நீ சாதாரண எம்பிளாய் இல்லை, என்னை போல் நீயும் முதலாளி அதை நியாபகத்தில் வை” அழுத்தமாக கூறியதும், அதற்கு மேல் அதை பற்றி அபிப்ராயம் கூறுவதற்கு வழியில்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தவளை கடந்து செல்ல எத்தணித்தவனின் வலிய கரத்தை பற்றிக் கொண்டிருந்தாள், அதில் நடையை நிறுத்தியவன் பார்வையை திருப்பாது...

“என்ன?” என்றதும்...

“ஒரு நிமிஷம்” என்று அவன் சுதாரிக்கும் முன் நெற்றியில் நச்சென்று இதழ் பதித்துவிட்டு...

“ஐ லவ் யூ” என்று தன் நேசத்தை இயம்பி, இதழ்களையும் முற்றுகையிட்டிருந்தாள்... அவனின் காந்த இதழ்கள் அவளின் செந்தூர இதழ்களில் கைதாகி இருக்க, அவன் இளமை உணர்ச்சிகள் தாறுமாறாக பறந்தது.

சில கணங்கள் நீடித்த முத்தத்தின் சஞ்சாரத்தில் திளைத்தவனின் உணர்ச்சிகள் இதற்கு மேல் என்னால் அடங்க முடியாது என்று திமிலோகப்பட, அவன் விலகி நிற்க எண்ணுவதற்குள் அவளே அவனை விலக்கி நிறுத்தியவளின் முகம் பஞ்சிதமாய் மின்னியது.

தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ள கோபம் என்னும் போலி முகமூடியை அணிந்துக் கொண்டவன்... “ரொம்ப ஓவரா போற டி” என்று கூற...

“எவ்ளோ ஓவர் மாமா?” என்று வாஞ்சையுடன் கூறியவளின் இதழ்கள் மார்க்கமாய் வளைய, அவளின் செய்கை ஆணவனை அவஸ்தைக்கு உள்ளாக்கியது.

அவளின் செயலில் அவன் மனக்கசப்பு அனைத்தும் துடைத்தெறிந்திருந்தாலும், அதை அப்போதே வெளிக்காட்டிவிட முடியாமல் அவனுக்குள் இருந்த கோபரூபன் தடுத்திருக்க...

“என் கையால் தாலி வாங்கிகிட்டதால, குடுமிபிடி உன் கையில் இருக்கிற திமிரில் ஆடுற? ஆடு ஆடு... ஒரு நாள் உன் குடுமி என் கைக்கும் வரும், அன்னைக்கு இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு வட்டியும் முதலுமா நீ வாங்கப் போறப்போ புரிஞ்சுப்ப, நான் யாருன்னு”

“அது எப்போவோ அப்போ பார்த்துக்கலாம்” கித்தாய்ப்பாய் புருவம் உயர்த்தி பிரஸ்தாபித்தவள், அவன் கைகளிலும் முத்தம் பதித்துவிட்டு...

“சீக்கிரம் கிளம்பி வாங்க, நான் கார்கிட்டே வெயிட் பண்றேன்” என்று விட்டு சிட்டாக பறந்துவிட்டிருந்தாள்.

அவள் சென்றதும் அதுவரை அடக்கிக் கொண்டிருந்த புன்னகையை வெளியேற்றியவனின் உள்ளம் நிறைந்துவிட்டிருந்தது... “கிஸ்ஸா கொடுக்குற கிஸ்ஸு, இரு டி ஒரு நாள் வசமா மாட்டுவ அன்னைக்கு சக்கையா பிழிஞ்செடுத்துடுறேன்” என்று கூறிக் கொண்டவன் சிரிப்பை அடக்கிவிட்டு இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு சென்றிருந்தான்.

அரசி மறுவீடு வந்து சென்றிருந்த சமயம், சம்யுக்தாவின் அறிவுரையை ஏற்று அதன்படி அர்ஜுனை எதிர்கொண்டு விட்டதாக கூறிய செய்தியை அறிந்த தரனுக்கு மனைவியின் மேல் நேசப் பிரவாகம் அதிகரித்திருந்தது.

**********************

அன்று இரவு வேலையை முடித்துவிட்டு வந்தவன் மனைவி விழித்துக் கொண்டிருப்பதை கண்டு...

“என்ன டி தூக்கம் வரலையா? ஜாம கோடங்கி மாதிரி கொட்ட கொட்ட விழித்துகிட்டு இருக்கிற?”

“இன்னைக்கு பகல் முழுக்க தூக்கம் தான்... வேலையே பார்க்கலை”

“சரி அப்போ இப்போ பார்ப்போமா?” என்று கணவனாக மாறுதலான குரலில் வினவி இமைசிமிட்ட...

“எ..ன்..ன..?!” என்று திகைப்புடன் கேட்டு விழிகளை அகற்றியவளின் அழகில் கவர்ந்தவன், அவளின் விலாவை வளைத்து கொண்டு கட்டிலில் சரிந்திருந்தான்.

மனைவியின் நெற்றியில் ஆரம்பித்த இதழ்களின் பிரவேசம் கண்கள், கன்னம், கழுத்து என முன்னேறியவன், இறுதியில் அவள் விழியோடு தன் விழி பார்வையை கலக்கவிட்டபடி இதழ்களில் சரணடைந்தவன் கரங்கள் அவள் மேனியில் அத்துமீறி பிரவேசித்து கொண்டிருந்தது.

தன் கணவனின் மையலான பார்வையில் சொக்கியவள் அவனின் ஆலிங்கனத்தில் கட்டுண்டு தானும் சளைக்காது கணவனுக்கு ஈடு கொடுக்கலானாள்... மனைவியின் ஒத்துழைப்பில் அத்தனை நாட்களின் விரகதாபம் தட்டி எழுப்பப்பட்டதில் கள்ளுண்ட வண்டானான்... இருவரும் மனமொத்த தம்பதியர்களாக இசைந்துக் கொண்டிருந்த சமயம்...

“ம்மா... ஞை..ஞை..” என்ற குழந்தையின் சிணுங்களில் கனவிலிருந்து கலைந்து எழுபவள் போன்று திடுக்கிட்டு எழும்பி சென்று குழந்தையை கவனிக்கும் சாக்கில் தன் முக மாற்றத்தை கணவனிடமிருந்து மறைத்துக் கொண்டாள்.

‘ச்சே... எப்படி இப்படி? அவன் என்ன நினைப்பான்?’ என்று என்னும் போதே அவர்களின் மகள் அழுகையை நிறுத்தியிருக்க யோசனையுடன் நின்றுவிட்டாள்.

“அதான் குழந்தை அழறதை நிறுத்திட்டாளே வா யூகிமா” என்று காதலின் தாபத்துடன் அழைத்தவனின் குரலில் மோகம் தெளிந்தவளாக சுதாரித்துக் கொண்டவள்...

“சா..ரி... சா..ரி.. நான்.. நான்..” என்று திணறியவளின் மனதை படித்து...

“பைத்தியம் எதுக்கு சாரி? நீ என் பொண்டாட்டி, நான் உன் புருஷன்?” என்றவன் அவளை விரல்களால் கழுத்தில் கோலமிட்டபடியே தாலியை நிரடிவிட்டான்.

“ப்ளீஸ்..!” தடுமாறியவளின் குரலில்...

“நீ தான் என்னை ப்ளீஸ் பண்ணனும்” என்றவன் கரங்களின் சில்மிஷத்தில் அவனை தடுக்கவும் இயலாது, இசைந்து செயல்படவும் இயலாது ஏதோ ஒன்று தடுப்பணை போன்று ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருந்தது. மனைவியின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து அவள் தாடையை பற்றி தன் முகம் பார்க்க வைத்தவன்...

“நான் உன் கவின் யுகிமா... உனக்கு மட்டும் உரிமையானவன்... என்னை நீ விரும்பலையா?” என்றவனின் ஆழ்ந்த குரல் அவள் நெஞ்சை ஊடுருவியதில் அனைத்தையும் மறந்தாள். அவன் விழிகளில் அப்பட்டமான அழைப்பு அவளுள் ஏதோ மாயம் செய்தது.

அவனை அபிலாஷையுடன் பார்த்தப்படி விலாவை அழுத்தமாக பற்றிக் கொண்டவளை கண்களில் மின்னலுடன் பார்த்தவன், தன் ஆளுமையை செறிவுடன் நிலைநாட்ட மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல், அவனுடன் இசைய ஆரம்பித்தாள்... நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு கிடைத்த மனைவியின் ஒத்துழைப்பில் கணவனின் உரிமைகள் புதுப்பிக்கப்பட கரைபுரண்டோடிய தாப வெள்ளத்தில் அவளை மூழ்க வைக்க, புயலில் சிக்கிய பூங்கொடியாய் சிக்கித் தவித்தாள்.

“க..வி..ன்..” என்று ஈனஸ்வரத்தில் முணகியவளின் குரலும்,

“யு..கி..” என்ற அவனின் கிறக்கமும் தான் தாரக மந்திரம் போல் ஒலித்துக் கொண்டிருந்தன. விடியும் தருவாயில் தான் இருவரும் களைத்து கலைந்து விலகி இருந்த இருவரும் புளங்காகிதம் அடைந்திருந்தனர்.

தரன் வெளியில் செல்லும் முன் மனைவியை அணுகியவன்... “நான் கிளம்பறேன் யுகிமா... இன்னைக்கு ஒர்க் பண்ணாதே, நல்லா ரெஸ்ட் எடு... இன்னைக்கும் நைட் ஷிப்ட் பார்க்கணும்” என்று ஹஸ்கி குரலில் கூறியவன் அவள் நெற்றியில் அச்சாரம் பதித்துவிட்டு செல்ல, அவளும் கணவனுக்கு புன்னகை நிறைந்த முகத்துடன் விடை கொடுத்திருந்தாள்.

தரன் வண்டியை எடுத்துக் கொண்டிருந்த நேரம்... “அண்ணா உங்களை அம்மா வர சொன்னாங்க... கிணற்றடி பக்கத்தில் இருக்கிறாங்க” என்று வாணி கூற...

“சாயந்தரம் வந்து பேசுறேன் மா?” என்று கூறிவிட்டு நகர எத்தனித்தவனிடம்...

“இல்ல ண்ணா முக்கியமான விஷயம், உடனே பேசணும்னு சொன்னாங்க”

“அப்படியா சரி” என்று யோசித்துக் கொண்டே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு செல்ல எத்தனித்த சமயம் குழலியே அவனை சமீபத்திருந்தார்.

“தரா, இருப்பா உன்கிட்டே கொஞ்சம் பேசணும்”

“சொல்லுங்க ம்மா” என்றதும் அருகில் வாணியை பார்த்தவர்...

“கிணத்துகிட்ட வத்தல் காயப் போட்டிருக்கேன் அதை போய் கவனிச்சுக்கோமா” என்று அவளை அங்கிருந்து அப்புறப்படுத்திய பிறகே, தரனிடம் பேச ஆரம்பித்தார்.

“அரசி கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம வாணி வாழ்க்கை விஷயத்தை பார்க்கிறேன்னு சொல்லிருந்தியேப்பா, இன்னும் அதுக்கான நடவடிக்கை எடுத்த மாதிரியே தெரியலையே?”

“குழந்தை வளர்ந்துகிட்டே இருக்கிறா, வாணியும் மன உளைச்சலில் இருக்கிறா, அவ இன்னும் இங்கேயே இருக்கிறது ஊர் வாய்க்கு அவலாகி பழி சொல்லுக்கு ஆளாகிற சந்தர்ப்பம் நேர்ந்து விடுமோன்னு பயமா இருக்குப்பா”

“அவன் நல்லவனோ கேட்டவனோ அவனுடைய வாரிசு இவ கையில் இருக்கு, எப்படியாச்சு கல்யாணம் பண்ணிட்டானா கூட இன்னாருடைய பொண்டாட்டின்னு சொல்லிட்டு அவ இருப்பாளே... இல்லைன்னா, இன்னைக்கு இருக்கிற காலத்துக்கு அவ வாழ்க்கை எப்படி ஆகுமோ அதை பத்தி உனக்கு சொல்லவா வேணும்?” என்றவரின் வேதனையை புரிந்தவன்...

“நான் நினைக்காம இல்லைம்மா, அரசி கல்யாணத்தப்போ கிடப்பில் போட்ட வேலையை முடிச்சுட்டு பார்க்கலாம்னு இருந்தேன், அதுவுமில்லாம இது எடுத்தோம் கவிழ்த்துத்தோம்னு செய்கிற காரியம் இல்லை... நீங்க சொல்ற மாதிரி நல்லவனோ, கேட்டவனா உனக்கு அவன் தான் புருஷன்னு சொல்லி என் தங்கச்சியை பாழங்கிணருன்னு தெரிஞ்சே தள்ளிற முடியாது”

“இது நிதானமா, சூதானமா செயல்பட வேண்டிய விஷயம்... ஏன்னா அந்த ரஞ்சனை விட ரஞ்சன் குடும்பத்துல உள்ள ஆளுங்க குணம் அப்படி”

“மயிலே.. மயிலேன்னா.. எப்படி இறகு போடாதோ, அதே மாதிரி இவங்களையும் சாஸ்திரம் சம்பிரதாயம் பார்த்து முறையா போய் நின்னா, அவங்க கட்டுப்படுற ஆளுங்க இல்லை... தந்திரமா தான் அடியெடுத்து வைக்கணும்” என்றவனின் விழிகளில் சூட்சுமம் வழிந்தது.

“நீ சொல்றதெல்லாம் சரிதான் ப்பா ஆனா பெத்தவ வயிறு நெருப்பை கட்டிட்டு இருக்கிற மாதிரி இருக்கு... பெண்ணை பெற்றிருக்கிற உனக்கு புரியும்னு தான் உங்கிட்ட சொல்றேன்”

“எனக்கு இன்னும் புரியலைன்னா நினைக்கறீங்க?”

“இல்லைப்பா, வாணியை பார்க்கிறப்போ எல்லாம் எனக்கு என்னவோ அடிவயிறு கலங்குது, எந்த நம்பிக்கையில் இருக்கிறது எனக்கு தெரியலை”

“என் பொண்டாட்டியும் அந்த குடும்பத்து பெண் தானே நிச்சயம் அதுக்காகவாவது அவங்க வாணிக்கு ஒரு பதில் சொல்லித் தான் ஆகணும்”

“வாணிக்காக அவங்க குடும்பத்தை எதிர்த்து நிற்க, உன் பொண்டாட்டி அதுக்கு ஒத்துப் போவாளா?”

“அவளை ஒத்து போக வைக்க வேண்டியது என் கடமை... கவலைப்படாம இருங்கம்மா” என்றவன் அவரின் ஆத்ம திருப்திக்காக மட்டுமே இதை கூறியிருக்க, அச்சமயம் கணவனிடம் குழந்தைக்கு தேவையான சில பொருட்களை வாங்கி வர கூறிவிடலாம் என்று வந்த சம்யுக்தாவின் காதுகளில் அவன் வார்த்தைகள் நாராசமாய் விழவே, அவளுக்கு எமகாதகன் ஆகிப் போனான்.

அவனிடம் கேட்க வந்த விஷயத்தையோ, சொல்ல வந்த விஷயத்தையோ மறந்து விருட்டென்று திரும்பி அறைக்குள் சென்றவளின் உள்ளம் கணவனை எண்ணி தகித்துக் கொண்டிருந்தது. நேற்றிரவு அவனுடனான கூடலில் உண்டான களிப்பை கொண்டாடியவளின் உடலை தானே தீயை இட்டு எரித்துக் கொண்டுவிட்டால் என்ன என்பது போல் அரோஷிகம் உண்டானது.

அவனின் சாமர்த்தியமான நடிப்பை உண்மை என்று நம்பிய முட்டாள்தனத்தை எண்ணி குமைந்து கொண்டிருந்தாள். கணவன் மேல் கொண்ட மனதாங்கலில் அன்று யாரிடமும் பேசாது தன் வேலையில் மட்டுமே சிரத்தையாக ஆழ்ந்திருந்தவளுக்கு, அதை பற்றி ஒரு முறை கணவனிடம் விளக்கம் கேட்கலாம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் போனது தான் அவளின் துரதிர்ஷ்டமோ!

**********************

அன்றைய இரவு மனைவியை நெருங்கிய தரன் அவளிடம் சில ரூபாய் நோட்டுக்களை நீட்டியிருக்க, யோசனையுடன் அவனை பார்த்திருந்தவளிடம்... “இது நீ மலருக்கு வாங்கிக் கொடுத்த ட்ரெஸுக்கும், உனக்கும் வச்சுக்கோ” என்று ஒரு கணவனின் கடமையை செவ்வனே ஆற்ற எதார்த்தமாக கூறியவனின் பேச்சு, மேலும் அவளை வெறுப்பிற்கு ஆளாக்க, எங்கே குரலை உயர்த்திவிடுவோமோ என்று பொறுமை காத்தவள் அமைதியாக கண்ணை மூடி படுத்திருந்தாள். மனைவியின் உள்ளார்ந்த கொதிப்பை உணராமல் அவள் மேல் கொண்ட நேசத்துடன்...

“என்னமா தூக்கம் வருதா?” என்று வாத்சல்யத்துடன் கேட்டவனின் இதழ்கள், அவள் மேனியில் கோலம் போட, அதுவரை காத்த பொறுமையை கட்டவிழ்த்தாள்.

“இது எதுக்கான லஞ்சம்?” நீஷ்டூரமாய் மொழிந்தவளின் வார்த்தையையும், வக்கிரத்தையும் புரியாமல் இயல்பாக புன்னகைத்தவன்...

“என் பொண்ணுக்கு தம்பிக்கோ, தங்கைக்கோ வழி செய்வதற்கான லஞ்சம்” என்று சரசமாக கூறி மந்தகாசம் புரிந்தவன், அவள் மேல் கொடிப் போல் படர்ந்து தன் செயலில் கண்ணாக இருக்க... அவளுக்கோ தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற சுய அலசலில் அழுத்தம் கூட வார்த்தை என்னும் வாளை தாட்சண்யம் இன்றி வீசினாள்.

“தங்கச்சி வாழ்க்கைக்கு நியாயம் கிடைக்க, என் உடம்புக்கு இவ்ளோ கவனிப்பா?” அது அவர்கள் கூடி வாழும் இல்லறம் என்றும், அவளை தொட்டு ஆள நினைப்பவன் அவன் கணவன் என்றும், அவனுக்கு தான் ஒரு மகளை பெற்றுவிட்டோம் என்றும் பாராமல் கொச்சையாக அவள் கேட்ட வார்த்தைகள் அமிலத்தை காய்ச்சி ஊற்றியது போல் உடல் தகிக்க, தீச்சுட்டார் போல் விலகி எழுந்தவன் விழிகள் நெருப்பு கங்குகள் போல் சுடர் விட்டு கொண்டிருந்தது.

“ஏய்ய்ய்! என்ன சொல்லுற?” என்று உறுமியவனை அசட்டையாக பார்த்தவள்...

“புரியலை? ஆச்சர்யம் தான்!” என்றவள் தொடர்ந்து...

“நீங்க கொடுத்த பணமும் கூட இதுக்காக தானே?” என்று ஏளனமாக உதட்டை வளைத்து உடலை சுட்டிக் காட்டி வினவ, அதுவரை இருந்ததை விட இருமடங்கு முகம் கோரமாக மாறி சிவ தாண்டவ அவதாரம் எடுத்தவன் அவள் என்னவென்று கிரகிக்கும் முன் அவளை தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அறைந்திருந்தான்.

“ம்ம்மாஆ...!” என்று சுருண்டு விழுந்து அவள் கன்னம் தீயாய் தகித்ததில் தான் அவன் அடித்திருப்பதை உணர்ந்தவள், அப்போதும் அவனை ஆவேசத்துடன் தான் முறைத்துக் கொண்டிருந்தாள்.

“என்ன வார்த்தை சொல்லுற? அதுவும் இவ்ளோ அசிங்கமா? ச்சேய்... நீயும் பெண்ணா டி? அதுவும் குடும்பத்தில் வாழுற பெண் சொல்லுற வார்த்தையா இது?” ஆத்திரத்தில் கரித்து கொட்டியவன் முகம் எரிமலை குழம்பு போல் தகித்துக் கொண்டிருந்தது.

“ஏன் குடும்பத்தில் வாழுற ஆண் என்னை வச்சு தங்கச்சி வாழ்க்கையை மீட்க நினைக்கிறது அசிங்கம் இல்லையா? நான் அதை வெளிப்படையா சொன்னதில் தான் அசிங்கமா இருக்க?” அடிக்குரலில் அழுத்தமாக கூறியவளை கண்டு ஆயாசமாக இருக்க...

“உன் தலை” என்று பலமாக நெற்றியில் அறைந்து கொண்டவன், தன் சினத்தை கட்டுக்குள் கொண்டு வர பிரம்மபிரயதனம் செய்து போராடினான்.

அவளின் கேள்விக்கு அப்போதே ‘உலகத்தில் நீ ஒருத்தி தான் பெண்ணா சரிதான் போ டி’ என்று தூக்கி எறிந்து விட்டு செல்ல நினைத்தாலும், சித்தமோ அவளை உறவை நிலை நிறுத்தி அவளின் இந்த அவதூறு பேச்சிற்கு காரணம் கேட்க விளைந்தது.

“நல்லாத் தானே இருந்த திடிர்னு என்ன ஆச்சு?” அவளுக்கு மட்டும் கேட்டுக்குமாறு அடிக்குரலில் உறுமினான்.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு என்ன ஆச்சுன்னு கேள்வி வேறையா?” என்றவளை ‘முதலில் காரணத்தை கூறு’ என்பது போல் தீர்க்கமாக பார்த்திருந்தான்.

“காலையில் உங்க அம்மாகிட்டே பேசினதை கேட்ட போது தான் உங்க சுயரூபம் தெரிஞ்சது இல்லைன்னா ஏமாந்துட்டே இருந்திருப்பேன்?”

“ஒஹ்! ஏமாந்துட்டியா சரி தான், அப்படி எந்த பேச்சை கேட்டு ஏமாந்தன்னு சொல்றியா?” என்றதும் அவர்களின் உரையாடலை கூறி...

“பொண்டாட்டியை வழிக்கு கொண்டு வரணும்னா அவ கூட கொஞ்சி குழாவினா மட்டும் தானே முடியும், அதை தானே செய்துட்டு இருக்கீங்க... அப்போவும் சரி, இப்போவும் சரி தங்கச்சி வாழ்க்கையை பற்றி என்கிட்டே கலந்தாலோசிக்கிறது இல்லை, நீங்களா ஒரு முடிவை எடுக்கிறது” என்றவளின் பேச்சை கேட்டு சலிப்புடன் நெற்றியில் அறைந்துக் கொண்டவனுக்கு, அவளின் முட்டாள்தனமான சிந்தனையை எண்ணி உன்மத்தம் பிடித்துக் கொள்ள வெடுக்கென்று அவள் கரங்களை உருவி தன் தலையில் வைத்தவனை கண்டு திகைத்துப் போனவள்...

“ம்ச்... என்ன பண்றீங்க விடுங்க” என்று கரங்களை விடுவிக்க திமிறிக் கொண்டிருந்தவளை கிஞ்சித்தும் லட்சியம் செய்யாமல்...

“உன்னை நான் காதலிக்கலை? குடும்பம் நடத்தியது உண்மையில்லை... நான் உன்னை தொட்டதுக்கு என் தங்கச்சி வாணி வாழ்க்கை ஒண்ணு தான் காரணம்ன்னு என் தலை மேல அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லு டி... இந்த நிமிஷமே என் உயிரை விட்டுறேன்” அவள் கண்களை கூர்மையாக பார்த்தப்படி கூறியவனை கண்டு விதிர்த்து போனாள்.

“சொல்லு டி... எனக்கு உன் மேல காதல் இல்லாம தான், நீ என் கூட குடும்பம் நடத்துறியா சொல்லு” என்று அடிக்குரலில் அடக்கபட்ட சினத்துடன் சீறினான்.

அவன் சாதாரணமாக கேட்டிருந்தால் எப்படியோ, ஆனால் ஆவேசத்துடன் அவள் கரங்கள் அவன் உச்சந்தலையில் இருக்க, சத்தியப் பிரமானம் செய்து நிரூபிக்க சொல்லியது அவளுக்குள் பிரளயத்தை உண்டு செய்திருந்தது.

“சொல்லு ஏன் அமைதியா இருக்கிற, தொண்டையில் எதுவும் அடைச்சுக்கிச்சா?”

“முதல்ல கையை எடுங்க” என்று பல்லை கடித்தவளை...

“ஏன் பொய் சொன்னா உன் கழுத்தில் இருக்கிற தாலி இறங்கிருமோன்னு பயப்படுறியா? ஆனா ஆகட்டும் சாவு ஒரு நாள் தான்” என்றதும் உடல் துடித்து உலுக்கி போட, அவள் விழிகள் அவனை காண முடியாத தவிப்பில் வேறு புறம் திரும்பியது. ஆனால் அவனோ விடுவேனா என்பது போல் அவள் முகத்தை திருப்பி பார்க்க வைத்தவன் விழிகளில் அழுத்தம் நிரம்பியிருந்தது.

“எனக்கு தெரியும் டி உன்னால் அதை சொல்ல முடியாது, ஏன்னா நீ வீம்புகாரி தான்... ஆனால் உண்மையானவள்... உன்னால் பொய் சொல்ல முடியாது”

“எப்படி சொல்றீங்க?” அவன் சொல்வதை மெய்பிப்பது போல் வீம்புக்காகவே வினவினாள்... அவள் கேள்வியை எண்ணி கசப்பான முறுவலை சிந்தியவன் முகத்தில் விரக்தி நிலவியிருந்தது.

“நான் உன்னை காதலிச்சது பொய், உன் அண்ணனை பழி வாங்க நான் உன்னை கல்யாணம் பண்ணியிருந்தேன்னு உனக்கு உறுதியா தெரிஞ்சிருந்தா, வாணி போல் நீ பொறுமையா இருந்திருக்கமாட்டே, என் கூட வந்து வாழ்ந்திருக்கவும் மாட்டே, என் மகளை நீ வளர்த்தியிருக்கவும் மாட்டே... இந்நேரம் நான் கம்பி எண்ணிட்டு இருந்திருப்பேன்... என் பொண்ணு ஏதாவது ஆதரவற்ற ஆஸ்ரமத்தில் இருந்திருப்பா” என்றவன் பேச்சில் இருந்த நிதர்சனத்தில் விசுக்கென்று விழியுயர்த்தி பார்த்தவளின் விழிகளில் அதிர்ச்சியும், மறுட்கையும் என கலவையான உணர்ச்சி வெளிப்பட பேசா மடந்தையாகிப் போனாள்!

“நான் அம்மாகிட்டே உன்னை சாக்கிட்டு பேசினேன் தான்... ஆனால் அது அவங்களோட நிம்மதிக்காக... என்ன இருந்தாலும் அவங்க தான் வாணியை பெற்றவங்க, அவ வாழ்கைக்காக நியாயம் கேட்கப் போறப்போ, அந்த வீட்டு பொண்ணு நீ இருக்கியேன்னு அவங்க அதை யோசிக்கிறதில் தப்பில்லை... அதனால் அப்போதைக்கு அவங்களை சமாதானப்படுத்த மேம்போக்காக தான் நான் அப்படி பேசினேன்”

“நீ கேட்டதும் சரி, தப்பா நினைச்சதும் சரி, ஆனா அப்போவே நீ என் முன்னாடி நின்னு என் சட்டையை பிடிச்சு எதுக்குடா அப்படி சொன்னேன்னு கேள்வி கேட்டிருக்கலாமே டி?”

“ஆமாம் உங்க அம்மா முன்னாடி உண்மையை சொல்லிட்டு தான் மறுவேலை பார்த்து இருப்பீங்க?”

“ஆமாம் அவங்களுக்கு புரியுற மாதிரின்னா நிச்சயம் சொல்லமாட்டேன்... ஆனால், புரியாத மொழியில் பேசினா நீ புரிஞ்சுக்குவ, அவங்களுக்கு புரிஞ்சிருக்காது தானே... அப்போ நிச்சயம் உனக்கு தெளிவு கிடைச்சிருக்குமே?” என்றவனின் பேச்சு குற்றுவுணர்சியில் ஆழ்த்த முகம் கருத்து விழுந்துவிட்டது.

“சரி அப்போ தான் நீ கேட்கலை விட்டுத் தள்ளு, இப்போ வந்ததும் கேட்டிருக்க வேண்டியது தானே?”

“அதுக்காக தான் காத்துகிட்டு இருந்தேன், ஆனால் வந்ததும் தான் மலருக்கு நான் விருப்பப்பட்டு எடுத்துக் கொடுத்த டிரஸுக்கு காசு கொடுத்து எனக்கு உரிமையில்லாத மாதிரி ஒதுக்குனீங்களே, அதுக்கு மேல கேட்க என் தன்மானம் இடம் கொடுக்கலை?” அவளின் கூற்றை கேட்டு சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.

“தன்மானம் இடம் கொடுக்கலை? அதான் ஒரேடியா உயிரோட கொல்ல திட்டம் போட்டு செஞ்சும் முடிச்சுட்ட?”

“உயிரோட கொல்லுற வித்தையை கற்று கொடுத்த ஆசானே நீங்க தானே?”

“ஒஹ்! ஆனால் ஒருவாட்டி கொலை செய்துட்டே என்னால் நிம்மதியா இருக்க முடிஞ்சதில்லையே, நீ செத்த பாம்பை திரும்பத் திரும்ப அடிச்சு கொல்லுற மாதிரி, இன்னும் வார்த்தையை வீசிட்டு இருக்கிறாயே, உன்னால் மட்டும் எப்படி நிம்மதியா இருக்க முடியுது?”

“...........”

“சொல்லு டி”

“...........”

“நான் காசு கொடுத்ததுக்கா நீ இப்படி ஒரு கேவலமான வார்த்தையை வீசின? பாவி! அப்போவே என்கிட்டே கேள்வி கேட்டிருக்கணும்... இல்லையா, உன் பணம் எனக்கு எதுக்கு டான்னு தூக்கி வீசியிருக்க வேண்டியது தானே டி?” என்றவனின் குரல் தாங்க முடியாத வலியில் கரகரத்து ஒலித்தது.

“சராசரி குடும்பஸ்தனை போல நானும் உனக்கு புருஷனா சில கடமைகளை செய்ய நினைச்சு உன்கிட்டே கொடுத்தேன், அது சும்மா கொடுத்திருந்தா நீ வீராப்பா வேண்டாம்னு சொல்லிருவியோன்னு நினைச்சு தான் நான் மலருக்கு செய்ததை சாக்கிட்டு கொடுத்தேன்... ஆனா அதுக்காக உனக்கு நீயே விலை வச்சு பட்டம் கட்டிக்குவேன்னு சத்தியமா நினைச்சும் பார்க்கலை” அவன் வாயால் கேட்டதும் தான் அவள் கூறிய வார்த்தையின் வீரியம் உரைத்ததில் உடல் கூசிப்போக அவமானத்தில் நெக்குருகினாள்.

சில கணங்கள் அவளையே உயிர்ப்பின்றி வெறித்தவனுக்கு சித்தம் சீர்குலைந்துப் போக, தான் ஆண்மகன் என்பதையும் மறந்து கண்கள் சிவந்து கலங்கி நின்றவன், தன்னவள் ஏற்படுத்திய ரணத்தினால் உண்டான வலியை கட்டுப்படுத்த இயலாமல் விருட்டென்று நகர்ந்து குளியலறைக்குள் புகுந்து விட்டிருந்தான்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் கணவன் முதல் முதலாக செய்த தவறே தற்போதைய செயலையும் தவறாக சித்தரித்துவிட்டது என்று அறிந்தவளுக்கு இதை அவனிடம் எப்படி உரைப்பது என்று பரிதவிப்பு ஏற்பட்டது. கணவனின் பேச்சையும், விளக்கத்தை கேட்டறிந்தவளுக்கு உண்மை நிலை புரிய வர, அவசரப்பட்டுவிட்டோமோ என்று காலம் கடந்து வருந்தினாள்... அவன் சத்திய வாக்கு கேட்டப் போது மறுத்து பொய் கூற அவள் காதல் நெஞ்சம் இடம் கொடுக்கவில்லை.

அது மட்டுமில்லாது அவனை உயிருக்கு உயிராக நேசித்தவள் அவனின் குணம் அவளுக்கு அத்துப்படி... அதில் அவன் செய்யும் செயல் தவறென்றாலும் அது வெளிப்பட்டுவிடுமே தவிர, அப்படி ஒன்றும் அவனுக்கு குறுக்கு புத்தி இல்லையே என்று தான் அவளால் அவன் கேட்ட சத்தியத்தை ஆற்ற முடியாமல் போனது.

அவன் தன்னை ஆழமாக கண்டறிந்திருக்கிறான் என்றெண்ணும் போதே சிறிதும் சிந்திக்காது கூறிய வார்த்தையின் வலி மரம் கொத்தி பறவையாய் கொத்தி தின்றது.

குளியலறையிருந்து வெளியேறிய கணவனின் முகத்தை ஆராய்ந்தவளுக்கு உணர்ச்சி துடைக்கப்பட்டிருந்ததை கண்டாள்... தரன் அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் ஏன் அங்கே ஒருவளிடம் பேசிக் கொண்டிருந்ததையே மறந்தவன் போல் அறையின் ஓரத்தில் இருந்த சிறிய மேஜை டிராவரில் இருந்த மாத்திரையை எடுத்து உட்கொண்டு விட்டு துயிலில் ஆழ்ந்து விட, அவளுக்கு பக்கென்றாகி போனது!

அது என்ன மாத்திரையோ என்று சித்தம் அடித்துக் கொள்ள, அதை தெரிந்துக் கொள்ளாமல் தன்னால் தூங்க இயலாது என்று தடாலென்று எழுந்து மேஜையை அடைந்திருந்தாள்... மேஜை கதவு திறக்கப்பட்ட கிரீச்சிட்ட ஒலியில் பட்டென்று இமை திறந்தவன் சயனித்த நிலை மாறாமல்...

“பயப்படாதே! அது வெறும் தூக்க மாத்திரை தான்... நீ பேசின வார்த்தைக்கு ஜென்மத்துக்கும் இனி எனக்கு தூக்கம் வரப் போறதில்லை... அதுக்காக தூங்காமலும் இருக்க முடியாதே” என்றவனை பேஸ்தடித்தது போல் பார்த்திருந்தாள்.

“அவ்ளோ சீக்கிரம் உன்னையும், என் மகளையும் அனாதையா விட்டுட்டு சாகமாட்டேன்... அதனால் நீ நிம்மதியா தூங்கு” என்றவன் இமைமூடிக் கொண்டிருக்க, சம்யுக்தா சொல்லொண்ணா உணர்வுகளில் தாக்கப்பட்டு கலங்கிப் போனாள்.

தரன், அதன் பிறகு மனைவியை நெருங்க பிரயத்தனம் மேற்கொள்ளவில்லை... தாம்பத்தியத்தில் பிணைந்திருந்த இருவரும் எதிர்பாராத விதமாக சரித்திரத்தை திருப்பினர்... முன்பு போலவே மனைவியின் மேல் அக்கறை கொண்டாலும் அவளிடம் தனக்காக இதை செய், அதைச் செய் என்று சகாயம் கேட்பதில்லை.

கணவனின் ஒதுக்கம் அவளுக்குள் பாதிப்பை ஏற்படுத்திய போதும், அவனிடம் வெளிக்காட்டிக் கொள்ளாது அழுத்தமாக இருந்தாள்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யமுனா, யசோதா, பாஸ்கரன் மூவரும் திட்டமிட்டு வெகு விரைவாக ரஞ்சனின் நிச்சயத்தை முடித்து விட எண்ணினர்.

“இந்த தடவை எந்த தடங்களும் வந்திரக் கூடாதுங்க... சம்யுக்தாவுக்கு கல்யாணத்துக்கு முந்தின நாள் தகவல் சொல்லிக்கலாம்” என்று உத்தியுடன் கூறினார் யமுனா.

“சொல்றதெல்லாம் சரி தான்... ஆனால் ஏன் சொல்லலைன்னு சண்டை போட்டா என்ன செய்யுறது?”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் மாமா... அவ புருஷன் மட்டும் போதும்னு தானே இந்த வீட்டை விட்டு கோர்ட் படி ஏறினா? அப்படி இருக்ககுள்ள இங்க நடக்கிற எதுவா இருந்தாலும் அதில் தலையிட அவளுக்கு உரிமை இல்லை” என்று அலட்சியமாக கூறிவிட்டிருந்தார்.

இதையே அவர்கள் ரஞ்சனிடம் கூறிய போது அவன் மறுப்பு கூறியிருந்தான்.

“உங்க காலத்துக்கு அப்புறம் எனக்கிருக்கிற ஒரே உறவு சம்யுக்தா தான் அவளையும் நான் விட்டு கொடுக்கிறதா?”

“உன் நியாயம் சரி தான்... ஆனால், அதே மாதிரி அவளும் அண்ணன் வேணும்னு நினைச்சிருந்தா உனக்கு ஆதரவா இருந்திருக்கணும் தானே, அதை விட்டுட்டு அவ புருஷன் வீட்டுக்கு போனதும் இல்லாமல் அந்த வீட்டு பெண்ணுக்கு ஆதரவா பேசுறா?”

“சம்மு இது மாதிரி தான் பண்ணுவான்னு எனக்கு தெரிஞ்ச விஷயம் தானே, அவ ஒண்ணு வேணும்னு நினைச்சா அதை எக்காரணத்துக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டான்னு உங்களுக்கும் தெரிஞ்சது தானே... சின்ன வயசுல இருந்து அவகிட்டே இந்த ஒரு குணம் தானே மாறலை?”

“அதான் டா சொல்றேன் அவளுக்கு தப்பு செய்தா அதை ஒத்துக்கணும்”

“உண்மை தான் க்கா அவ இதுல எல்லாம் அப்படியே அவங்க அப்பா குணம்” என்றவர் கண்களில் பொறாமை கனல் கொழுந்துவிட்டெறிந்தது.

“சரி இப்போ என்ன தான் பண்ணனும்னு சொல்றீங்க” முடிவு என்ன என்பதை அறிய ரஞ்சன் முற்பட்டான்.

“நிச்சயத்தை ஏற்பாடு பண்ணி நடத்திருவோம்... கோவையில் ஸ்ரீ கார்மெண்ட்ஸ் ஓனரோட ஒரே பொண்ணு, அவங்களுக்கு சொத்து ஏகப்பட்டது இருக்கு”

“அவங்க பெரியப்பா நீதிபதியா இருந்து ரிடையர்ட் ஆனவரு”

“ஆமாம் இதெல்லாம் தான் சொல்லிட்டீங்களே... எனக்கு ஒகே தான் ஏற்பாடு பண்ணுங்க என்கேஜ்மெண்ட் முடிஞ்சா போதும், அப்புறம் அவங்களை எப்படியாச்சும் சமாளிச்சிரலாம்?” என்றவர்கள் அந்த வார இறுதியிலேயே நிச்சயத்தை உறுதி செய்தனர்.

இதை அறிய வந்த வாணி, தரன், அர்ஜுன் மூவரும் கோபாவேசம் கொண்டனர். தன் மனைவியின் சுடுசொற்கள் தாக்கிய தினத்திலிருந்து தரன் வாணியின் விஷயத்தை பற்றி அவளிடம் பேசுவதை தவிர்த்து விட்டிருந்தான்... இப்போதும் தன் மனைவியிடம் அவள் தமையனுக்கு நடக்கும் நிச்சயதார்தத்தை பகிர்ந்துக் கொள்ளாமல் வாணியுடன் புறப்பட்டு அர்ஜுன் இல்லத்தை தேடி வந்திருந்தான்.

அரசி, வாணியை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டவள் அவளுக்கு தன் பக்கமிருந்து தேறுதல் மொழிகளை கூறியிருந்தாள்.

“கவலைப்படாதே வாணி அத்தை, மாமா கூட பயங்கர கோபப்பட்டாங்க... இந்த தடவை அவன் எப்படியும் தப்பிக்க முடியாது பாரு”

“எனக்கு கவலையெல்லாம் அம்மா அப்பாவை பற்றியும் சுற்றி இருக்கிற உங்களைப் பற்றியும் தான் க்கா”

“ஏன்?” என்று புருவம் இடுங்க கேட்டவளை முகம் பார்க்க முடியாமல் சிரம் தாழ்த்திக் கொண்டு பதில் கூறலானாள்.

“என்னால் உங்க எல்லாருக்கும் தலைக்குனிவும், அவமானமும் தானே பேசாம நான் செத்து போயிருக்கலாம்?”

“வாயமூடு அபச குணமா பேசாதே... உன்னை காலனுக்கு தூக்கி கொடுக்கவா நாங்க கூட இருக்கோம்? தப்பு பண்ணின அவனே தைரியமா இருக்கும் பொழுது, நீ எதுக்காக சாகணும்?” என்று அதட்டினாள்.

“ஆமாம் அரசிக்கா இங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் எப்படி விஷயம் தெரிஞ்சது?”

“அது எனக்கே தெரியலை வாணி... எனக்கு தெரிஞ்சு என் வீட்டுக்காரர் தான் சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்... ஆனால் அதுவும் டவுட் தான்”

“அவருக்கு தெரிஞ்சவங்க அங்கே இருக்கலாம், இப்போ அது பிரச்சனை இல்லை... அவன் இவ்ளோ தூரம் என்னை கழட்டிவிடுறதில் தீவிரமா இருக்கானே அரசி க்கா நான் அவனை காதலிச்சது தவிர அப்படி என்ன பாவம் பண்ணினேன்?” சரமற்று கூறினாள்.

“விடு வாணி ஒரு நாள் அவன் இதுக்காக வருத்தப்படுவான் பாரு”

மல்லிகா, நடராஜன் இருவரும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தனர்.

“அந்த ரஞ்சன் நம்ம முகத்திலேயே மிளகாய்பொடி தூவிட்டு அவன் காரியத்தை நடத்திறலாம்னு பார்க்கிறான் ராஸ்கல்”

“உன்னால என்ன பண்ணிர முடியும்னு அவன் நினைக்கிறான் டா... ஆனால் அவனுக்கு தெரியாததும் பல விஷயம் இருக்குன்னு உணரவேயில்லை போல?” என்ற அர்ஜுனின் வார்த்தைகள் மனதில் ஆழகால விஷமாய் இறங்கியதில் பற்கள் நெரிப்பட்டது.

“ஒரு பெண்ணுடைய தேகத்தை உரிச்சு ருசி பார்த்து, கற்பை பறிச்சுட்டு, அடுத்தவளை தேடிப் போறான்னா அவனெல்லாம் உயிரோடு இருக்கிறதுக்கே அருகதை இல்லாதவன்” தரனின் வார்த்தைகள் உண்மையாக இருக்க, அர்ஜுனுக்கு ரஞ்சன் மேல் வன்மம் கூடியது.

“வேணா இப்படி செய்யலாமாப்பா, நம்ம தர்சனை கோவை அனுப்பி அங்கே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி அடுத்த அடியை வைத்தா என்ன?”

“இல்லை ப்பா தர்சன் வேண்டாம், அதில் பெரிய சிக்கல் இருக்கிறதை மறந்துட்டு பேசுறீங்களே ப்பா?”

“அப்பா, அண்ணா சொல்றது சரி தான் நான் அங்க போறது சரி வராது... நான் அங்கிருக்கிற என் டிடெக்டிவ் பிரெண்ட்கிட்ட கேட்டு பார்க்கிறேன், பொண்ணு வீட்டுக்காரங்க தகவலை திரட்டி தர சொல்லி... நாம நேரடியா ரஞ்சன்கிட்டே மோதுறதை விட இது பெட்டர்ன்னு நினைக்கிறேன்”

“நீ சொல்றது தான் நூறு சதவீதம் சரி தர்சன், அப்படியே செய்... அப்போ தான் நமக்கு அங்கே ஆதரவுக்கு ஆள் திரட்ட முடியும்” என்றவன் சொன்னதை போலவே செய்திருந்தான்.

“நாம நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுவோம் அண்ணா, இந்த விஷயத்தை பற்றி உடனே எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு முடிவு பண்ண வேண்டாம்” தர்சனின் கூற்றில் அனைவருக்குமே ஒப்புதல் இருக்க அவன் நண்பன் விரைவில் தகவல் திரட்டி தரும் வரை காத்திருக்கலானான்.

சம்யுக்தா சந்தோஷ், ரோஷினி மூலம் ரஞ்சனின் நிச்சயதார்த்த ஏற்பாடுகளை அறிந்து கொண்டவளுக்கு சீற்றம் எழுந்தது... “ரஞ்சன் அண்ணா! தப்பு மேல தப்பு பண்றியே?” ஒரு பெண்ணாக வாணியின் துயரம் தோய்ந்த முகம் அவள் முன் நிழலாட விழிகளில் அவன் மேல் துஷ்பிரயோகம் மின்னியது.

அப்போது தான் தன் கணவனுக்கும் இது பற்றி தெரிய வந்திருக்கும் தானே ஆனாலும், ஏன் தன்னிடம் இதை பற்றி பேசவில்லை விசாரம் எழுந்ததில் விசனம் கொண்டாள். அவளாக அதை பற்றி பேச முடியாது, அவளை கண்டாலே பாறையின் கடினத்துடன் இறுகிப் போகும் அவன் முகம் தடுத்துவிட்டிருந்தது.

சம்யுக்தா அலைபேசியில் தீவிரமாக உரையாடிவிட்டு வைத்தவளின் முகம் பாறையின் கடினத்தை சுமந்துக் கொண்டிருந்தது... வெகுநேரம் ஆழ்ந்த சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவள், சங்கல்பத்திற்கு வந்தவளாக தன் மகள் உறங்கிக் கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு வாணியை அணுகினாள்.

“வாணி நான் கோவிலுக்கு போகணும், நிலா தூங்கிட்டு இருக்கிறா, நீ அவளை கொஞ்சம் பார்த்துக்கோயேன்” என்க...

“சரிங்க ண்ணி நீங்க போயிட்டு வாங்க, நான் பாப்பாவை பார்த்துக்கிறேன்” என்ற வாணி தன் மகளை சிங்காரித்து முடித்துவிட்டு...

“வியனி தங்கம் அம்மாவை தொந்தரவு செய்யாமல் சமத்தா விளையாடணும்” என்று கூறிவிட்டு நிலாவை கண்காணிக்க அறைக்குள் செல்ல ஆயத்தமானாள், யோசனையுடன் நின்று விட்ட சம்யுக்தாவுக்கு எதுவோ தோன்ற சட்டென்று வாணியின் புறம் பார்வையை திருப்பியவள்...

“வாணி வியனியை நான் கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு வரவா?”

“என்ன ண்ணி அனுமதி எல்லாம் கேட்டுகிட்டு தாராளமா கூட்டிட்டு போங்க” என்றதும் கண்களில் மின்னல் வெட்ட சாகச முறுவலுடன் அவளை தன் கரங்களில் தாங்கிக் கொண்டு சென்றிருந்தாள்.

**********************

தர்சன் தன் நண்பனின் உதவியுடன் ரஞ்சனுக்கு நிச்சயிக்கப்படும் பெண் குடும்பத்தாரை பற்றி அனைத்து விவரங்களும் சேர்த்திருக்க, அதை கொண்டு தரனுடன் ஆலோசனை நடத்தியவர்கள் கோவை செல்ல திட்டமிட்டார்கள்.

“நாளைக்கு காலையில் கிளம்பி கோவை போயிருவோம், நானே கார் எடுத்துட்டு வரேன், அது தான் இப்போதைய சூழ்நிலைக்கு இடைஞ்சல் இல்லாம இருக்கும்”

“ஆமாம்மா வேணும்னா டிரைவரையும் கூட்டிட்டு போங்க”

“நானும் வரேன் வாணி தனியா இருக்க வேண்டாம்” என்று அரசி கூற, அவனோ மறுப்பு கூறினான்.

“நீ எதுக்கு? அங்கே என்ன விழாவை சிறப்பிக்கவா போகப் போகிறோம்?” வெடுக்கென்று கேட்க, அரசியின் முகம் கூம்பிப் போனது, அதை கண்ட நடராஜன்...

“அர்ஜுன், அரசி சொல்லுறதும் சரி தான் வாணிக்கும் ஒரு துணை இருக்கட்டும் எல்லாருமா போயிட்டுவாங்க” என்றதும் அரசி அவரை சிந்தனையாக பார்த்திருந்தாள்...

“என்னம்மா அரசி ஏதோ சொல்ல நினைக்கிற சொல்லுமா?” என்றதும்...

“இல்லை மாமா அண்ணனும், இவரும் மட்டும் போறதை விட நீங்களும், அத்தையும் ஏன் வரக் கூடாது” என்றதும் அவளை தவிர அனைவருமே திகைத்த பார்வையை பரிமாறிக் கொண்டனர்.

அர்ஜுன், தரனுக்கு கண்களால் குறிப்பு காட்ட அரசி புறம் திரும்பியவன்... “அரசி என்னம்மா சொல்ற? நாம போறதே அங்கே என்ன மாதிரி வரவேற்பு கிடைக்கும்ன்னு தெரியலை, இதில் பெரியவங்க அவங்களையும் கூட்டிட்டு போய் அவமானப்படுத்தணுமா? அதெல்லாம் வேண்டாம்” என்று அழுத்தமாக கூறியிருக்க, அதற்கு மேல் அவள் அதை பற்றி தூண்டித் துருவவில்லை ஒரு வேளை அப்போதே சிலவற்றை தெளிவுபடுத்தியிருந்தால் பின்னாளில் நேர இருக்கும் சில துன்பங்களை தவிர்த்திருக்கலாமோ?

அனைவரும் கலந்தாலோசித்து தீவிரமாக சிந்தித்தனர்... “அவனுக்கு பார்த்திருக்கிற பெண்ணோட பெரியப்பா ரிடைர்ட் ஜட்ஜ்ன்னு கேள்விப்பட்டேன், அது தான் இப்போ இடிக்குது... அங்கே எது நடந்தாலும் தீர விசாரிக்காமல் முடிவெடுக்க முடியாதுன்னு சொன்னா என்ன செய்யுறது, அதுக்காக நம்ம வாணியை கண்ட இடத்துக்கு அலைய விட முடியாதில்லையா?” என்று கூறிய அர்ஜுனிடம்...

“இன்னும் சுலபமா நமக்கு தீர்வு கிடைக்கும் அர்ஜுன்” என்றார் நடராஜன்.

“ஏன் ப்பா கோர்டிலேயே இது போல எத்தனை கேஸை பார்த்திருப்பாரு, அதனால் அர்ஜுன் சொல்லலுற மாதிரி நடக்கிற வாய்ப்பும் இருக்கு தானே” என்றான் கலாதரன்.

“அதுதான் ப்பா தப்பு... கோர்ட் வேற, குடும்பம் வேற, நீங்க ரெண்டு பேரும் நினைக்கிறது தன் வீட்டு பெண்ணுக்காக எங்கே வாணியை ஓரம் கட்டிருவோருன்னு தானே” என்றதற்கு இருவரும் ஆமோதிப்பாக தலையசைக்க...

“இல்லை ப்பா அப்படி நடக்க வாய்ப்பு கம்மி... அவருடைய அனுபவத்திற்கு இதெல்லாம் சாதாரண விஷயம் தப்பை செய்த ரஞ்சனை சுலபமா கண்டு பிடிச்சிருவாரு... அதுவுமில்லாம தன் வீட்டு பெண்ணை இப்படி ஒரு சிக்கலான ஆண்மகன் வாழ்க்கையில் சுலபமா கொடுத்திரமாட்டாரு” என்று ஸ்பஷ்டமாக கூற, அவரின் கூற்றில் அனைவரும் தெளிந்து நடக்க வேண்டியவற்றை செயல்படுத்த எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலுடன் கோவை புறப்பட்டனர்.

சம்யுக்தாவும் தன் தமையன் ரஞ்சனுக்கு எதிராக தடாலடியாக சில முடிவுகளை மேற்கொண்டிருந்தவள் அதை யாரின் செவிக்கும் எட்டாமல் பார்த்துக் கொண்டாள்.

இனி தன் எதிர்காலம் எப்படி அமையுமோ? தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு நியாயம் கிடைத்துவிடுமா என்ற கேள்விக்குறியான பதட்டத்துடன் அவர்களுடன் பயணித்தாள் வாணி!!

பாகம் 2ல் சுவடுகள் தொடரும்...

சுவடுகள் தொடரும்....


**************************************

வணக்கம் நட்பூக்களே...

“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-25 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

கதையின் முதல் பாகம் முடிந்துவிட்டது மக்களே... கதைத் திரி வெள்ளிகிழமை (03.05.2024) அன்று இரவு கதைத் திரி நீக்கப்படும்.

“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதை முடிவடைந்ததும் இதன் இரண்டாம் பாகம் பதிவிடப்படும் மக்களே.


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்

 
Status
Not open for further replies.
Top