திருட்டுப் பயலே- பெரிய டீசர்
இத ஏற்கனவே போட்டுருக்கேன் படிக்காதவங்களுக்காக...
“ டேய் மச்சான் ஒரே கியாரா இருக்கு ஏதாவது குடிச்சுட்டு போகலாம் டா “ என்றவனை கண்டு பதறிய குமார் ,
“டேய் ஆனந்து...என்னடா பண்ணுது...உடம்பு எதுவும் முடியலையா...வேண டாக்டர் கிட்ட போய் காட்டிட்டு வரலாமா” படபடப்புடன் கேட்ட நண்பனை பார்த்து மெலிதாக சிரித்த ஆனந்த் ,
“டேய் டேய் அடங்குடா ... உனக்கே ஓவரா தெரில..நாம டாடா பிர்லா பேரன்க தலை சுத்தினாலே டாக்டர் கிட்ட போறதுக்கு” என்றவன்
“காலைல இருந்து நாயா பேய்யா சுத்துறோம் ... ஒரு உறுபடியும் தேறல...இதுல அங்க இங்கனு மூலைக்கு மூலை கேமரா வச்சுடானுக” என்று புலம்பியவனை அழைத்துக்கொண்டு ஜூஸ் கடைக்குள் நுழைந்த குமார், இரண்டு சாத்துக்குடி ஜூஸ் சொல்லிவிட்டு உள்ளே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
இருவரும் சிறிது நேரம் கடையை நோட்டம் விட்டவர்கள் தங்களுக்குள் பேசியபடி வருவித்த பழச்சாறை குடித்தனர். எதோச்சையாக திரும்பிய ஆனந்த் பக்கத்தில் அமர்ந்து இருந்தவரின் பர்ஸ் தடினமாக இருப்பதை பார்த்து குஷி ஆனவன் , மனதில் சிலவற்றை கணக்கு போட்டபடி ஜூசை வேகவேகமாக உள்ளே இழுத்தான் . அவர் எழுந்து வெளியே செல்லவும் அவரை பின்தொடர்ந்து சென்றவன் அவர் அசந்த நேரத்தில் பர்ஸை அவரிடமிருந்து ஆட்டையை போட்டிருந்தான். பர்ஸ்சை கையால் தடவியபடி முகம் முழுவதும் புன்னகையோடு நிமிர்ந்தவன் எதிரே நின்றிருந்தவரை கண்டு அதிர்ந்து போனான்.
அங்கே சர்வ லட்சனமும் பொருந்தி குடும்ப குத்துவிளக்கு போல நல்ல கலையுடன் அம்சமான ஒருத்தி ஆனந்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருக்க , அதில் தடுமாறியவன் தலையை சொரிந்தபடி அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு , தொலைவில் சென்றுக் கொண்டிருந்த பர்சின் உரிமையாளரை பார்த்து
“சார் பர்ச கிழ போட்டுட்டீங்க பாருங்க” என்று சத்தமாக குரல் கொடுத்தான். அந்த மனிதர் பல நன்றிகள் கூறியபின் அவனிடம் இருந்து விடை பெறவும் தொங்கி போன முகத்துடன் திரும்பி பார்த்தவன் மீண்டும் அதிர்ந்து விழித்தான் ,அந்த பெண் தன்னை விடாமல் பார்ப்பதை கண்டு . திடீர் என்று சந்தேகம் கொண்டவன் அந்த பெண் வேற யாரையாவது பார்க்கிறாளா என்று சுற்றும் முற்றும் பார்த்தவனுக்கு கண்ணில் யாரும் புலப்படாமல் போக , மகிழ்ந்துப் போனவன் ,
‘என்னடா இது ஆனந்துக்கு வந்த சோதனை ... கண்ணாலயே நம்மள ஜூஸ் குடிக்கிறாளே’ என்று மனதில் நினைத்தவன் அவளை பார்த்து பெரிதாக சிரித்து “ஹாய் ” என்க, பதிலுக்கு எதுவும் கூறாமல் அவனை கண்ணால் பருகியவள் அவனை நோக்கி மெள்ள அடி எடுத்து வைத்து நெருங்க, அவன் மனதிலோ 100 பர்ஸை ஆட்டைய போட்ட சந்தோசம். திடீர் என்று அவன் தோளை வேகமாக அடித்த குமார் ,
“என்னடா நல்ல வேட்டையா” என்றவனை கொலை பார்வை பார்த்த ஆனந்த் வேகமாக திரும்பி அந்த பெண்னை பார்க்க அவள் நின்றிருந்த இடம் வெறுமையாக காட்சியளிக்க ,’எங்க போயிருப்பா’ என்று யோசித்தபடி சுற்றியும் தன் கண்களை சுழலவிட்டான் ஆனந்த்.
“என்னடா ... நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லாம எதையோ தேடிட்டு இருக்க” என்ற குமாரை பிடித்து வேகமாக தள்ளி விட்டவன் , கோபமாக அந்த இடத்தை விட்டு சென்றான்.
************************************************************************
“எவன்டா உங்களை 6 மணிக்கு முகூர்த்தம் வைக்க சொன்னது... கருக்கல்ல எழுந்து குளிச்சுட்டு வர கொடுமை இருக்கே“ என்று வாய்விட்டு புலம்பியவன்
‘ஆமா நீ குளிச்சியா ஆனந்து’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு ,
“ஹேய் யாரை பார்த்து என்ன கேள்வி கேட்கிற ... குளிக்காம தண்ணிய சேமிச்சு சென்னை மக்களுக்கு நல்லது பண்ணுறேன்... இதுக்கு இங்க இருக்கிறவங்க எல்லாம் எனக்கு பாராட்டு விழா நடத்தணும் புரியுதா...கிளம்பு கிளம்பு” என்றவனின் கைகள் அதோட வேலையை நன்றாக பார்த்துக்கொண்டிருந்தது.
பட்டுவேட்டி சட்டையில் கல்யாணத்தில் கலந்து கொள்பவன் போல வந்தவன் யாருக்கும் தெரியாமல் பூட்டி இருந்த விருந்தினர்கள் தங்கி இருந்த அறைகளில் இருந்து கையில் கிடைத்ததை சுருட்டி கொண்டிருந்தான்.
“ஏன்னா என்ன பன்ரேள்” திடீர் என்று தன் அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பியவன் அங்கே அன்று பார்த்த பெண் நிற்பதை கண்டு அதிர்ச்சியானவன் பின்பு சுதாரித்து ,
“வேல நேரத்துல டிஸ்டர்ப் பண்ணாத ... தொழில் பக்தி அதிகம் எனக்கு ... பிரியா இருக்கிற நேரம் வா நாம ஜாலியா கடலை போடலாம... இப்போ நகறு ” என்றவன் தொடர்ந்து தன் வேலையை பார்க்க ,
“ஏன்னா திருடுறது தப்புனு உங்களுக்கு தெரியலையா“ என்றவளை திரும்பி முறைத்தவன் ,
“அடிங் ... உன்கிட்ட யாரவது ஐடியா கேட்டங்களா ... பாக்க நல்ல மல்கோவா மாம்பழம் போல இருக்கியேனு தான் அன்னைக்கு பல்ல காட்டினேன் ...போ போ போய் உன்னோட வேலையை பாரு , ஏன்னா நோன்னா சொல்லிக்கிட்டு கிளாஸ் எடுத்த... நான் மனுஷனா இருக்கமாட்டேன்” கடுப்பாக கூறியவன் அவசர அவசரமாக கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்த ஆனந்த பின் ,
“சாரிடி மாமி ... இதுல இருந்து என்ன புரியுது நாமளா தேடிப்போன மரியாதை கிடைக்காதுனு உனக்கு புரிஞ்சுருக்குமே ...இப்போ நான் பிஸி நாளைக்கு காலைல அந்த ஜூஸ் கடைல பாப்போம்” என்றவன் மேலும் ,
“சோறு முக்கியமா பிகரு முக்கியமானு பார்த்தா சோறுதான் எனக்கு முக்கியம் ...எனக்கும் பசிக்கும்ல” என்று நிருத்தி அவள் முகம் பார்த்தவன்
“ உனக்கு பிகருதான் முக்கியம்னு நினைச்சா நாளைக்கு வா” கூறியபடி பால்கனி நோக்கி செல்லவும் கோபமாக அவன் அருகில் சென்றவள் ,
“இல்ல உங்களை நான் போக விடமாட்டேன்” என்றவாறே அவன் வழியை மறிக்க , அதில் கடுப்பானவன்
“அடிங் ... இவ்வளவு சொல்லுறேன் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக்கிட்டி இருக்க ...ஏதோ வெள்ள தோளா இருக்கியேனு பார்த்தா ஓவரா போய்கிட்டே இருக்க ...அடிச்சு மூஞ்சு மோரை எல்லாம் பேத்துடுவேன்” என்றபடி அவள் கைகளை பிடித்து தள்ள முயன்றவன் அவள் மீதே ஊடுருவி சென்று கீழே விழுந்திருந்தான்.
நடந்ததை நம்ப முடியாம அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவனை தாண்டி சென்றவள் ,
“இல்ல நான் உங்களை திருட விடமாட்டேன் ... போய் யாரையாவது கூட்டிட்டு வரேன்” என்றபடி சுவற்றில் ஊடுருவி செல்ல , அதை பார்த்தவனின் இதயம் நின்று துடித்தது , வார்த்தை வரமால் திக் பிரமை பிடித்தது போலானவன்,
“பே...பே ...பே ...ய் ய் ய் ய் ய்... ” என்று வாய்விட்டு கூறியவனின் உடல் நடுங்க ஆரம்பித்தது.
சடேர் என்று சுவற்றின் வழியே உள்ளே வந்தவள்,
“ஏன்னா நீங்க திருட கூடாது” என்று மறுபடியும் கூற அடித்துபிடித்து எழுந்த ஆனந்த் தடுமாறி விழுந்தடித்து பால்கனி வழியே வெளியே குதித்தவன் வேகமாக மூச்சுக்களை எடுத்துவிட்டு நிமிர்ந்து பார்க்க , பக்கத்தில் அவளும் குதித்து நின்றியிருந்தாள்.
“அய்யயோ பேய்ய்ய்ய்ய்ய்ய்...” என்று அலறியவன் தலை தெறிக்க ஓடிக்கொண்டே மனதில் சாமி பாடல் ஒன்றை பாட ஆரம்பித்திருந்தான்,
‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் ...அங்கே குவிந்ததும்மா பெண்கள் எல்லாம் வண்டாட்டம்... ஏய் போட்டு தாக்கு ...போட்டு தாக்கு’ சாமி பாட்டுக்கு பதில் சிம்பு பாட்டை பாடியபடி ஓடியவன் அருகில் ,
“ஏன்னா நீங்க திருட கூடாது” என்ற குரலை கேட்டவன் சிறிதும் தாமதிக்காமல் ஓட்டத்தை எடுக்க வழியில் தென் பட்ட கோவிலை கண்டவன் அதற்குள் நுழைந்துக் கொண்டான்.
**********************************************************************
“கடவுளே கஷ்டபட்டது எல்லாம் வீனா போச்சே... என்னோட பொண்ணு கல்யாணம் நடக்கும்னு நம்பிருந்தனே இப்படி ஆகிடுச்சே” என்று கண்ணீர்விட்டு புலம்பியவரை தேற்ற தோன்றாமல் அனைவருமே சோகத்தில் முழுகி இருந்த வேளையில்,
“அந்த 25 வது ஜோடியா நான் வரேன் ...எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறிங்களா” என்ற குரலை கேட்டு சற்றென்று எழுந்த அந்த பெண்மணி அவள் கைகளை பிடித்து கொண்டு ,
“என் பொண்ணுக்கு தோஷம் அவ கல்யாணம் நடக்கிற முகூர்த்தத்துல 25 ஜோடிக்கு கல்யாணம் பண்ணி வச்சா தோஷம் விலகிடும் சொன்னாங்கமா ...ஆனா கடைசி நிமிசத்துல 25வது ஜோடி வரலை ... நீ மனப்பூர்வமா இதுக்கு சம்மதிச்சின்னா ... நான் உனக்கு கலாம் பூராவும் நன்றி கடன் பட்டிருக்கேன்மா“ என்று கையெடுத்து கும்பிட்டவரின் கைகளை விலக்கி விட்டு ,
“நீங்க ரெடி பண்ணுங்க நான் வரேன்” என்றதும் அங்கிருந்தவர்கள் சந்தோசத்துடன் அந்த இடத்தை விட்டு சென்றனர். அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மைக்கேலின் அருகில் வந்தவள்,
“மைக் நீ யாரையாவது லவ் பண்ணுறியா ” என்ற கேள்விக்கு
“உங்களுக்கே தெரியும் மேடம்” என்றவனை பார்த்து புன்னகைத்தவள் ,
“அப்போ என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா” என்றதற்கு அவளையே சில நிமிடம் பார்த்திருந்தவன் , பதில் சொல்லாமல் விலகி செல்ல ஏமாற்றத்துடன் அவனை பார்த்திருந்தவளை திரும்பி பார்த்தவன் சிரித்தவாறே ,
“அவங்க கிட்ட வேஷ்டி சட்டை இருந்துச்சுன்னா மாத்திட்டு வரேன் நீங்க போய் மேடைல உட்காருங்க” என்றபடி அவர்களை நோக்கி சென்றான்.
சிறிது நேரத்தில் தன் அருகில் அமர்ந்தவனை பார்க்க முடியாமல் அவள் மனதில் பலவித குழப்பம் , வீட்டுக்கு தெரிஞ்சா எப்படி சமாளிக்கிறது என்றவாறே யோசித்திருந்தவள் , அருகில் ஒருவித பதடத்துடன் அமர்ந்து இருந்தவனை கண்டு பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை அவள். அனைவருக்கும் தாலி எடுத்து கொடுத்து கட்டிய பின் 25வது ஜோடியாகிய இவர்களை நோக்கி அந்த பெண்மணி அய்யர் சகிதம் வந்தவர் , அவள் முகத்தை பற்றி நிமிர்த்தி
“நீ நல்லா இருக்கணுமா 100 வருஷம் உன் புருஷனோடு சந்தோசமா இருக்குனும்” வாழ்த்தியவரை தொடர்ந்து அய்யர் ,
“ஏன்டா...அம்பி நானும் பார்த்துகிட்டே இருக்கேன் நீ வந்ததுல இருந்து வெளியே பார்த்துண்டே இருக்கியே ... வெளில என்ன பேய்யா இருக்கு” என்றவர் தாலியை கையில் கொடுத்து ,
“சீக்கிரம் கட்டு...பேய் பிசாசு எல்லாம் ஆம்படையாளை பார்த்தா ஓடியே போய்டும்” என்றதுதான் தாமதம் , அவசரமாக அதை வாங்கியவன் எதையும் யோசிக்காமல் அவள் கழுத்தில் கட்டிருந்தான்.
அவன் மூன்றாவது முடிச்சு போடும்பொழுதுதான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள் அவள். அது அவனிடம் இருந்து வந்த வேர்வை நாற்றம். குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தவளுக்கு அங்கே யார் என்றே தெரியாத ஆண் ஒருவன் வெளியே எட்டி எட்டி பார்த்தபடி இவளுக்கு தாலியையும் கட்டிவிட்டு , நெற்றியில் பொட்டும் வைத்து கொண்டிருந்தை கண்டு பேரதிர்ச்சியானாள். ஒரு நிமிடம் உலகம் நின்று போன உணர்வு சற்றென்று தலையை குலுக்கி தன்னிலைக்கு வந்தவளுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வர , “யாருடா நீ“ என்று ஆங்காரமாய் கேட்டவும் பதில் சொல்லாமல் வெளியே பார்த்திருந்தவனின் சட்டையை பிடித்து இழுத்து
“யாருடா நீ” என்ற மீண்டும் உறுமியபடி அவன் சட்டையை பிடித்து உலுக்க அதில் தெளிந்த ஆனந்த் மெள்ள திரும்பி பார்க்கவும் மின்சாரம் தாக்கியதை போல அதிர்ந்து போனான்.
“பொறுக்கி ராஸ்கல் எவ்வளவு தையிரியும் இருந்த எனக்கு தாலி கட்டிருப்ப ...யாருட நீ“ என்று அவள் சீறிய பின்தான் தாலி காட்டியது நினைவுக்கு வர,
“அய்யயோ... பே...பே ...இய் ய்ய்ய் ய்க்கு தாலி கட்டிட்டேனே” என்று அதிர்ந்து கத்தியவனை பார்த்து ஆத்திரம் தலைக்கு ஏற ,
“யு ப்ளடி... தாலியும் கட்டிட்டு பேய்யுன்னு வேற சொல்லுறியா” என்றவள் ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்.
“அய்யயோ என்ன பேய் அடிச்சுடுச்சு யாரவது எனக்கு வேப்பிலை அடிச்சு விடுங்களேன்” என்றவன் ,
“அய்யரே அய்யரே நீதான் சுத்தபத்தமா சாமி எல்லாம் கும்பிடுவ இந்த பேய்யை உன்னோட வாயால உஃப்ன்னு ஊதுயா அது போய்டும்“ என்று புலம்பியவனை பார்த்து கோபத்தின் உச்சிக்கே சென்றவள் கண்கள் சிவக்க அவனை ஆவேசமாக பார்த்தபடி , “என்ன சொன்ன“ என்று மீண்டும் உறுமியவளை
பார்த்து பயந்து போனவன் அய்யரின் மடியில் தாவிக் உட்கார்ந்துக் கொண்டான்.
“டேய் அம்பி என்னடா பண்ணுற கீழே இறங்குடா ..நேக்கு இதுயெல்லாம் புடிக்காது ... ஏன்டா அம்பி உன்னாண்ட இருந்து கெட்ட வாடையா வருதே” என்று அவனை கீழே இறக்க முயன்றபடி அய்யர் கேள்வி கேட்கவும்,
“ நாலு நாள் குளிக்கில சாமி” என்று அடுத்த நொடி ஆனந்த் கீழே கிடந்தான். அய்யரை முறைத்து பார்த்தவன் கண்களுக்கு குங்குமமும் விபூதியிம் அடங்கிய தாம்பாளம் கண்ணில் பட அதை எடுத்தவன் கைகளில் ரெண்டையும் சரிசமமாக அள்ளி ,
“ஏய் பேய்யே ஓடிப்போ” என்றவாறே அவள் முகத்தில் விசிறி அடித்தான் , அவள் சுதாரிக்கும் முன்னரே அவள் முகம் குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்ய பட்டிருந்தது.
அந்த நேரம் அங்கே வந்த மைக்கேல் , நடந்ததை கண்டு அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிடவும் , தூரம் போய் விழுந்தான் ஆனந்த். விழுந்த வேகத்தில் எழுந்த ஆனந்த்
“பாடி பில்டர் சார் நான் ஒரு திருடன் சார் என்ன புடிச்சு போலீஸ் கிட்ட கொடுத்துடுங்க சார் ... இந்த பேய் என்ன மயக்கி தாலி கட்ட வச்சுடுச்சு சார்” என்று பயத்தில் உளறவும், திடுக்கிட்ட மைக்கேல் வேகமாக திரும்பி பார்க்க அவன் கண்களுக்கு அவள் கழுத்தில் தொங்கிய தாலி தெரிந்தது.
“மேடம் அதை கழட்டி இவன் மூஞ்சுல விட்டெறிங்க” என்றவனை தொடர்ந்து “ஆமா யேய் மேடம் அதை கழட்டி என் மூஞ்சுல எறிங்க ” ஆனந்தும் கூற காளி அவதாரம் எடுத்தவள் தாலியை கழட்டும் வேளையில் ,
“அம்மாடி ஏறுன வேகத்துல தாலி இறங்கினா என் பொண்ணோட வாழ்க்கை ஸதம்பித்துடும்மா ...” என்ற அந்த பெண்னின் தாயார் அவள் காலில் விழ முயல இயலாமையுடன் மைக்கலை பார்த்தவள் , அங்கிருந்து வேகமாக வெளியேற தொடங்கியவளை,
“பேய் மேடம் அந்த தாலியை என் மூஞ்சுல தூக்கி எறிஞ்சுட்டு போங்க” என்ற ஆனந்த்தை தீ பார்வை பார்த்தவள் , நிற்காமல் வெளியேறியிருந்தாள் .அங்கே நடந்த கூத்தை பார்த்திருந்த குமார் ஆனந்தின் அருகில் வந்து
“என்னடா இதெல்லாம் ...” குழப்பமாக கேட்டவனை பார்த்து தொங்கிய முகத்துடன் ,
“குமாரு எப்படியும் அரைபவுனு தேறும்டா அந்த தாலி ... சொலயா 20000த்துக்கு மேல கிடைச்சுருக்கும் ... ம்ம்ம்” என்று வருத்தப் பட்டவனை பார்த்து ”தூ” என்று துப்பிய குமாரை சட்டை செய்யாமல் , சுற்றும் முற்றும் பார்த்தவன் நேராக அய்யரிடம் சென்று ,
“யோவ் அய்ரே ...தாலி கட்டுனா பேய் வராதுன்னு சொன்ன ஆனா நான் தாலி கட்டினவ பாக்க பேய் மாதிரியே இருக்க அய்யரே“ என்றவனை நீ இன்னும் கிளம்பலயா என்ற பார்வை பார்த்தவர் ,
“நீ எதையோ பார்த்து பயந்துருக்க அதான் பாக்கிறவ எல்லாம் பேய் மாதிரியே தெரியரா” என்றவர் பையில் எதையோ அடுக்கியபடி
“உன்கிட்ட வர வாடைக்கே பேய் தெறிச்சு ஓடிடும் அம்பி” என்றவர் பின்
“நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்குத்தான் இருந்தா என்ன பண்ண முடியும் ...ம்ம்ம் ... மஹாலக்ஷ்மி போல பொண்ணுக்கு திருட்டு பயல்னு அந்த பகவான் முடிச்சு போட்டுண்டார் போல...” என்று புலம்பியவரை சிறிதும் சட்டை செய்யாத ஆனந்த் எப்படி அந்த ஒரு பவுன் தாலியை ஆட்டையை போடலாம் என்ற பெருத்த சிந்தனையில் மூழ்கினான்.