குட்டி டீ:
தஞ்சாவூர் ரயில்வே சந்திப்பு அருகில் நின்றிருந்த அம்பாசிடர் காரில் உள்ளே ஹனுமன் சாலீஸா ஒலித்து கொண்டிருக்க கண்ணை மூடி ரசித்து கொண்டிருந்தவனின் கைபேசி அலறவும், சலிப்புடன் எடுத்தவன், எதிர் முனையில் கூறியதை இழுத்து பிடித்த பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தவன் பின்
“சனிக்கிழம பூஜை முடிக்காம எங்கயும் வெளியே போக மாட்டேன் உங்களுக்கு தெரியும்ல ... இருந்தும் உங்களுக்காக பாதி புஜைல கிளப்பி வந்துருக்கேன் ... இன்னும் என்ன பண்ணனும் உள்ள போய் கைல தூக்கிட்டு வரணுமா ...” என்று தன்னை மீறி கேட்டவன் பின் நிதானித்தவனாக
“ராம் ராம் ... ராம் ராம் ... சனிக்கிழமை அதுவுமா என்ன வார்த்தை பேசிகிட்டு இருக்கேன் ...” என்று கன்னத்தில் போட்டபடி புலம்பியவனின் காதுகளில் ரத்தம் வரும் அளவிற்கு எதிர்முனையில் இருப்பவர் நல்ல வார்த்தையில் பேசவும் , கண்ணை மூடி முகத்தை சுருக்கி சகித்துக்கொண்டவன்,
“போறேன் போறேன் ... சரி சரி ... கூட்டியாரேன் கூட்டியாரேன் ...”என்றவனை மதிக்காமல் போனை வைத்துவிடவும், வந்த கோபத்தை கார் கதவை அடித்து சாத்துவதில் காட்டியவன் , யாரையும் தொடாமல் வளைந்து நெளிந்து வேக நடையுடன் படிகளில் ஏறி சென்னையில் இருந்து வரும் ரெயில்கள் நிற்கும் பிளாட்பார்மை அடைந்தான்.
ரயில் வந்து அரைமணி நேரத்திற்கு மேல் ஆனதால் அவ்வளவாக கூட்டம் இல்லை . சில பிள்ளைகள் இங்கயும் அங்கயும் ஓடிப்பிடித்து விளையாட, சுற்றியும் முற்றியும் பார்த்தவனின் கண்களுக்கு தான் அழைத்து செல்ல வேண்டிய நபர் புலப்படாமல் போக ஓரமாக ஒதுங்கி நின்றவனின் அருகில் கை குழந்தையுடன் நெருங்கிய ஒருவர்,
“சார் கொஞ்சம் குழந்தைய பிடிக்கிறீங்களா... வைப் பாத்ரூம் போயிருக்காங்க ... டிரஸ் கழட்ட சொல்லி அழுகிறான்...” என்று அழும் குழந்தையை தூக்கி கொடுக்கவும், ஏதோ சிந்தனையில் வாங்கியவன் பின் பதறி போனவனாக,
“அய்யயோ ... புடிங்க சார் ... சனிக்கிழமை பூஜை முடிக்கிறதுக்கு முன்னாடி நான் யாரையும் டச் பண்ணமாட்டேன் ... இப்போ பாருங்க உங்களால ... ம்ப்ச் அபச்சாரம் அபச்சாரம்...” என்க , தன் மகனை தீண்ட தகாத பொருள் போல பேசியவனை கண்டு கோபம் கொண்ட அந்த தந்தை,
“என்ன சார் பேசுறீங்க ஆறு மாசம் குழந்தையை தொட்டா தீட்டா ... கடவுளும் தெய்வமும் ஒன்னுன்னு உங்களை மாதிரி போலி சாமியாருக்கு எங்க தெரிய போது ...” என்க , திரும்பி நடக்க தொடங்கியவன் நின்று நிதானமாக திரும்பி பார்த்து
“ஆறு மாசமோ அறுபது வயசோ எல்லாம் எனக்கு ஒண்ணுதான் ... நீ உன் பொண்டாட்டிகிட்ட ஜல்சா பண்ணித்தானே குழந்தை பெத்துக்கிட்ட ... இல்ல உன் பொண்டாட்டி குந்தி தேவிபோல கடவுளை வேண்டி புள்ள பெத்துக்கிட்டாங்களா...” என்று நக்கல் அடித்தவன் மறுநொடி அங்கே நிற்காமல் வேகமாக ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் நுழைந்து கொள்ளவும், கோபம் கொண்ட அக்குழந்தையின் தந்தை
“யாரு சார் அந்த பைத்தியக்காரன் ... கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாம பேசுறான்...” என்று எகிர
“தம்பி ஊருக்கு புதுசா ... அந்த தம்பிதான் பெரியவருக்கு எல்லாமே ... அந்த தம்பிக்கு தெரியாம இந்த ஊருல எதுவும் அசையாது ... பார்த்து சூதானமா இருத்துங்கோங்க ...” என்று ஸ்டேஷன் மாஸ்டர் எச்சரிக்கவும் , அருகில் மறைவாக மறைந்திருந்த ஒரு ஜோடி கண்கள் செல்லும் அவனையே பார்த்திருக்க அதன் சொந்தக்காரியோ,
“அய்யே ...அப்போ நீ கை படாத மலரா ... தப்பு தப்பு ... மலரை தீண்டாத வண்டா ...” என்று ஆச்சிரியப்பட்டவளை ,பின்னாலிருந்து தட்டிய சிறுவர்கள்
“அவுட்டு ... அக்கா அவுட்டு ...இப்போ உன்னோட டர்ன் ... எங்களை புடி பார்க்கலாம்...” என்ற சிறுவர்கள் ஓட துவங்கவும், ஸ்டேஷன் மாஸ்டர் அறையிலிருந்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டவன் வெளியே வரவும் சரியாக இருக்க,
“பச்ச குழந்தையை தூக்கமாட்டேன்னு சீனா போட்ட...இன்னைக்கு உண்மையான ஜல்சா எப்படியிருக்கும் காட்டுறேன் ” என்று மனதில் கருவியவள் ,திரும்பி பசங்களிடம்
“டேய் தம்பிங்களா அந்த பக்கம் ஓடி போர் அடிச்சுடுச்சு இப்போ இந்த பக்கம் ஓடலாம் வாங்க ...” என்று அவன் நடந்து வரும் பக்கமாக ஓட சொல்லவும், சிட்டாக பறந்து ஓடியவர்களை எதிர்கொண்டவன், கடுப்பாகி அவர்கள் இடிக்காத அளவுக்கு இடுப்பை வளைத்தும் ஒடித்தும் வழிவிட்டவன், ஓடும் அவர்களை முறைத்தபடி
“குட்டி பிசாசுங்க ... புள்ளைங்களா இதுங்க இதுங்களை பெக்கலைனு யாரு அழுதா ... கொஞ்ச நேரத்துல என் பூஜைக்கு வேட்டு வைக்க பாத்துச்சுங்களே ... ம்ம்கூம் ... காலைல இருந்து நேரம் சரியில்ல ... எப்படியாது இங்கேருந்து கிளம்பிடனும் ...” என்று புலம்பியபடி திரும்பியவன் முன் புயல் வேகத்தில்
“டேய் நில்லுங்கடா ...” என்று கத்தி கொண்டு ஓடி வந்தவளை கண்டு அதிர்ந்து போனவன், சுதாரிக்கும் முன் பெரும் வேகத்துடன் அவன் மேல் மோதி அருகில் அடுக்க பட்டிருந்த மூட்டைகள் மேல் அவனையும் இழுத்துக் கொண்டு விழுந்தவளின் இதழ்கள் அவன் இதழ்களை கண்ணிமைக்கும் நேரத்தில் தீண்டியிருந்தது.
விழுந்த அதே வேகத்தில் அவன் மீதே கைகளை ஊன்றி எழுந்தவள் சிறிதும் அவனை கண்டுக் கொள்ளாமல்,
“டேய் நில்லுங்கடா ...” என்றபடி ஓட , அதிர்ச்சியில் மூட்டையோடு மூட்டையாய் நசுங்கி கிடந்தவனுக்கு அங்கே என்ன நடந்தது என்று புலப்படவே சில நொடிகள் பிடித்தது. தன் நாசியை தீண்டிய நறுமணத்தை மெல்ல உள்ளே இழுத்துக் கொண்டவனுக்கு புது ரத்தம் பாயும் உணர்வு , முகத்தில் மந்தகாசமான புன்னகையும் தோன்ற , மெல்ல தன் உதடுகளை நாவல் வருட, இனிப்பதை போல உணர்ந்தவனுக்கு ‘முத்தம் கொடுத்தால் இனிக்க செய்யுமோ‘ என்ற பெரும் சந்தேகமும் எழ, வெட்க புன்னகையுடன் கண்ணை திறந்தவனின் முன் கோபத்துடன் கண்கள் சிவந்திருக்க கையில் ஏந்தியிருந்த சிரஞ்சிவி மலையை அவன் மீது போடுவதுற்கு ஏதுவாக கையை தலைக்கு மேல் தூக்கியபடி நின்றிருந்தார் ஆஞ்சநேயர் .