ருதிரிதன் 2:
மூவிரு முகங்கள் போற்றி!
முகம் பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி! காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலர்அடி போற்றி! அன்னான்
சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி! போற்றி! என தன் அழகிய குரலில் பாடிக்கொண்டிருந்தது அந்த மூன்று வயது குழந்தை.
அந்த குழந்தையின் பாடலில் எப்போதும் போல் மயங்கிய அவளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தை பாடும் அழகை கண்ணாரக் கண்டு அவள் பாடலை செவி வழியாக கேட்டு குழந்தை பாடும் பாடலுக்கு பின்ராகம் பாடியபடி இறைவனுக்குண்டான பூஜை செய்து முடிக்க, இறுதியாக கடவுள் புகைப்படங்களுக்கு தீபாரதனை காட்டிய குழந்தை அதை பெற்றவர்களிடம் காட்டி கண்களில் ஒத்தி கொள்ளும்படி சொல்ல, பெற்றோர் இருவரும் அவளை தங்கள் மகளாக அடைந்ததை எண்ணி இறைவனுக்கு மனமார்ந்த நன்றிகளை சொல்லிவிட்டு தீபாராதனை எடுத்துக் கொள்ள, பெற்றோர்களிடம் புன்னகைத்த குழந்தை அப்படியே அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்த அவள் தாத்தா, பாட்டி இருவருக்கும் கொடுக்க அவர்களுக்கும் கிட்டத்தட்ட அதே பரவச நிலை தான்.
"என் செல்லப்பேத்தி பாக்குறதுக்கு அப்படியே அந்த மகாலட்சுமி என் கண்ணு முன்னாடி வந்து நின்னு அவங்களே எனக்கு தீபாரதனை காட்டி எடுத்துக் கொள்ளும்படி சொல்றது மாதிரி இருக்கு.. என் பேத்தி மேல யார் கண்ணும் படக்கூடாது.."என்று சொன்னபடி குழந்தையின் கையில் இருந்த தட்டை வாங்கி அவர் மருமகளிடம் கொடுக்க, அதை புன்னகையுடன் வாங்கிய அஞ்சலி தன் அருகில் நின்று கொண்டிருந்த தன் பெரிய மகளுக்கும் அதை காட்டிவிட்டு உள்ளே வைக்க, குழந்தையின் தந்தையோ தன் மகளுக்கு மிகவும் பிடித்தமான பொம்மையை பரிசாக கொடுப்பதற்கு தன் அறைக்கு விரைந்து சென்றான்.
"என் பட்டு இப்படி வா தாத்தா கிட்ட.. வழக்கம்போல இன்னைக்கும் உங்களோட பூஜை ரொம்ப அருமை.. தாத்தா உங்களோட பூஜையை பார்த்து அப்படியே மெய்சிலிர்த்து போயிட்டேன்.. சரி என் செல்ல பேத்திக்கு தாத்தா இன்னைக்கு ஒரு கிப்ட் வச்சிருக்கேன்.."என்றவர் தன் பேத்தியை கைகளில் தூக்கிக்கொண்டு முன்னே செல்ல, அவரை பின்தொடர்ந்து சென்றார் மனைவி கனகா.
தான் இங்கு நிற்பதை பொருட்படுத்தாமல் தன் வீட்டில் உள்ள அனைவரும் தனக்கு பின்னே பிறந்த தன் தங்கையை மட்டும் செல்லம் கொஞ்சுவதை கண்டு எப்போதும் போல் கோபப்பட்டாள் ஏழு வயது நிரம்பிய பூஜா.
'இருக்கட்டும் இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குன்னு தான் நானும் பார்க்கிறேன்.. முதல்ல இந்த பிசாசை இங்கே இருந்து துரத்தி விடணும் அப்பதான் எனக்கு சந்தோசம்.. இவங்க எல்லாருக்கும் நான் இங்கே இருக்கிறது கண்ணுக்கு தெரியாது அவ ஒருத்தி மட்டும் போதும்..'என்று தன் தங்கையை மனதுக்குள் திட்டிய பூஜா கோபமாக தன் அறைக்கு சென்றாள்.
"என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரஞ்சித்?"
"நம்ம பொண்ணோட பிறந்தநாள் இன்னைக்கி அவளுக்கு பிடிச்ச பொம்மையை வாங்கிட்டு வந்தேன் அஞ்சலி.. அத வேற எங்கேயாவது வச்சா மறந்து போயிடுவேன்னு பெட்டுக்கு கீழ வச்சேன்..இங்க வச்சது மாதிரி தான் இப்பவும் ஞாபகம் இருக்கு ஆனா இப்ப வந்து தேடிப் பார்த்தால் எனக்கு கிடைக்கல நீ எதுவும் பார்த்தியா?"என்று மனைவிக்கு பதில் சொன்ன ரஞ்சித் தன் மகளுக்காக ஆசை ஆசையாக வாங்கி வந்த பரிசை எங்கேயாவது தவற விட்டு விட்டோமா? என்று பரபரப்புடன் மனைவியை கூட கவனிக்காமல் வீட்டை சல்லடை போட்டு தேட, கணவனின் செயலில் மனைவிக்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அவளும் அவளுடன் சேர்ந்து தேடிப் பார்க்க எங்கு தேடியும் அந்த பரிசு பொருள் இறுதி வரை கிடைக்காமல் போனது.
கணவன் பரிசு வாங்கி வந்திருப்பான் என்பதால் அஞ்சலி குழந்தைக்கு உடை மட்டும் வாங்கி வந்திருந்தாள்.
பரிசை தொலைத்து விட்டு அது கிடைக்காமல் போக கட்டிலில் வருத்தத்துடன் அமர்ந்திருந்த கணவனின் அருகில் வந்தவள் அவன் தலையை மென்மையாக கோதி கொடுத்தாள்.
"இப்ப எதுக்காக தேவையில்லாம இவ்வளவு பீல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க ரஞ்சித்? சரி விடுங்க அது எங்க போகப்போகுது வீட்ல தான் எங்கயாவது இருக்கும் கண்டிப்பா கிடைக்கும்.."
"இல்லடி எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு இங்கதான் நான் வாங்கிட்டு வந்து வச்சேன்.."
"சரி விடுங்க ரஞ்சித் நான் பாப்பாவுக்கு வாங்கிட்டு வந்து டிரஸ் இது.. இத கொண்டு போய் அவகிட்ட குடுங்க கண்டிப்பா குழந்தை ரொம்ப சந்தோஷப்படுவாள்.."என அவள் வாங்கி வந்திருந்த சிகப்பு நிற அழகிய ப்ராக் ஒன்றை கொடுக்க, அதை வாங்காமல் மனைவியை நிமிர்ந்து பார்த்தான் ரஞ்சித்.
அவன் பார்வையில் என்ன பொருளை பெண்ணவள் உணர்ந்து கொண்டாளோ சற்று குனிந்து அவன் நெற்றியில் மென்மையாக இதழ் பதிக்க, அதில் ரஞ்சித்தின் இதழ்கள் தானாக புன்னகையை சிந்தியது.
இங்கு தன்னுடைய அறைக்கு குழந்தையை தூக்கி வந்திருந்த ராமானுஜம் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான கூண்டுகிளியை பரிசாக கொடுக்க, அதை கையில் வாங்கிய குழந்தை அந்த பறவையை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தது.
"ஹாப்பி பர்த்டே பட்டுக்குட்டி.."என்று ராமானுஜம் வாழ்த்து கூற,அவரைத் தொடர்ந்து கனகாவும் பேத்தியின் கன்னங்கள் இரண்டையும் வழித்து நெட்டை முறித்தவர் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா இன்னைக்கு நீ சந்தோசமா இருக்குறது மாதிரி எப்பவும் சந்தோசமா இருக்கணும்.. உன்னோட வாழ்க்கை முழுக்க உனக்கு எந்த விதமான பிரச்சனைகளையும் கடவுள் கொடுக்காமல் உன் ஆயுளை அதிகமாகி கொடுக்கட்டும்.."என்று குழந்தையின் தலை மீது கை வைத்து ஆசீர்வாதம் செய்தவர், அவளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு சீடையை ஏற்கனவே செய்து வைத்திருந்தவர் அதை குழந்தையின் கைகளில் கொடுக்க,ஒரு கையில் கிளி கூண்டை வைத்திருந்த குழந்தை அதை கீழே வைத்துவிட்டு பாட்டியின் கையில் இருந்த இனிப்பு சீடையை வாங்காமல் அவரை கண்களில் கண்ணீருடன் நிமிர்ந்து பார்க்க, குழந்தையின் கண்ணீரில் துடித்து விட்டார்கள் பெரியவர்கள் இருவரும்.
கையில் வைத்திருந்த சீடையை அருகில் இருந்த மேஜை மீது வைத்த கனகாம்பாள் என்னும் நாமம் கொண்ட கனகா பதட்டத்துடன் தன் பேத்தியை கைகளில் தூக்கிக் கொள்ள "என்னாச்சுடா உனக்கு எதுக்காக பிறந்தநாள் அதுவுமா இப்படி அழுதுகிட்டு இருக்க?எப்பவுமே என் செல்ல பேத்தி எதுக்காகவும் அழக்கூடாதுன்னு தாத்தா உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. ஏதாவது கொசு எதுவும் கடிச்சு வச்சுருச்சா.."என்று குழந்தையின் உடலை தடவிப் பார்த்தபடி பதட்டமாக ராமானுஜம் கேட்க, குழந்தைக்கு புது உடை அணிவிப்பதற்காக உள்ளே வந்த அஞ்சலி,ரஞ்சித் இருவரும் கூட குழந்தை தேம்பி தேம்பி அழுவதை கண்டு பதற்றத்துடன் வந்தார்கள்.
"ஹே அருந்ததி குட்டிமா உனக்கு என்ன ஆச்சு டா எதுக்காக அழுதுகிட்டு இருக்க?"என்று பதட்டத்துடன் கேட்ட ரஞ்சித் குழந்தையை அவன் அம்மாவின் கைகளில் இருந்து தன் கைகளில் வாங்கிக் கொள்ள, அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்த அருந்ததி என்னும் பேர் கொண்ட நம் நாயகி கண்களில் கண்ணீர் அப்பொழுதும் இன்னும் அதிகம் ஆகிக்கொண்டே போனது.
நால்வரும் மாறி மாறி குழந்தையிடம் காரணம் கேட்டுக் கொண்டே இருக்க அவர்கள் யாருக்கும் பதில் சொல்லாத அருந்ததி அப்படியே அவன் தந்தையோடு ஒட்டிக் கொள்ள "பாப்பா இங்க பாருடா இப்ப மட்டும் நீ சொல்லலனா அம்மா உன் கூட பேச மாட்டேன்.."என கண்ணீருடன் சொன்ன அஞ்சலியை பார்த்த அருந்ததி "மா கிளி பாவம்"என்று அவள் தாத்தா பரிசாக கொடுத்த கூண்டிலிருந்த கிளியை பரிதாபமாக பார்த்தபடி அழுகையுடன் சொல்ல, அதுவரை குழந்தைக்கு என்ன பிரச்சனையோ என்ற பதறிக் கொண்டிருந்த அனைவரும் குழந்தை வாய் திறந்து காரணம் சொன்ன பிறகே சற்று ஆசுவாசமடைந்தார்கள்.
"என் பட்டு குட்டி இதுக்காக போய் அழுதுகிட்டு இருக்கீங்களா அதுவும் பிறந்த நாள் அதுவுமா?"என்று குழந்தையின் மூக்கோடு தன் மூக்கை உரசிய ரஞ்சித் "அப்பா இப்பவே அந்த கிளியை திறந்து விடுங்க.."என்று சொல்ல,"கண்டிப்பா நீ சொல்லாமல் இருந்தாலும் இப்பவே நான் கிளியை திறந்து விட்டிருப்பேன் ரஞ்சித்.. என் பேத்தி கண்ணீருக்கு காரணமான இந்த கிளியை இனிமே நான் இங்க வச்சிருக்க மாட்டேன்.."என்று சொன்னவர் அந்த நிமிடமே கிளியை கொண்டு வந்து வெளியில் திறந்து விட,"கீச் கீச்"என்று சத்தமாக கத்தியபடி தனக்கு கிடைத்த விடுதலையை நினைத்து ஆனந்தமாக கத்திய கிளி மேலே பறந்து சென்று சற்று நொடிகளில் மறைந்து போனது.
"என்னங்க பாத்தீங்களா! நம்ம பேத்திக்கு இந்த வயசுலையே இவ்வளவு பக்குவம்.. ஒரு கிளி கூண்டுல அடைபட்டு இருக்கிறதை பார்த்து எவ்வளவு அழுகை.. கண்டிப்பா இவ தெய்வ குழந்தை தான்.. போன ஜென்மத்தில் நாம நிறைய புண்ணியம் பண்ணி இருக்கோம் அதனால தான் இப்படி ஒரு அழகான குழந்தை நமக்கு பேத்தியா கிடைத்திருக்கிறாள்.."என்று சொன்ன கனகா, கிளி பறந்து சென்றதும் அதுவரை அழுது கொண்டிருந்த அருந்ததி சிரிக்க ஆரம்பிக்க குழந்தையின் சிரிப்பை ரசித்துப் பார்த்தபடி அவர் சொல்வதை ஆமோதிப்பது போல் அனைவரின் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது.
அங்கு நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பூஜா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
'இவங்க கண்ணுக்கு எப்பவுமே நான் ஒரு பொருட்டா கூட தெரிய மாட்டேன் போல..எப்ப பாத்தாலும் அந்த பிசாச தூக்கி வச்சுக்கிட்டு அதை மட்டும் செல்லம் கொஞ்சிக்கிட்டு இருக்காங்க நானும் இந்த வீட்டு குழந்தை தானே ஒரு நாளாவது என்னை இப்படி எல்லாம் கொஞ்சி இருப்பாங்களா! அடியே அருந்ததி முதல்ல உன்னை ஏதாவது ஒரு வழி செஞ்சா தான் எனக்கு சந்தோசமா இருக்கும்..' என்று மனதுக்குள் கருகிக் கொண்ட பூஜா வெளியில் சிரித்தபடி "அருந்ததி இந்தா உன்னோட பிறந்த நாளைக்கு என்னோட பரிசு.."என்று ஒரு பென்சிலை பரிசாக கொடுக்க,"ஐ பெஞ்சில் சூப்பரா இருக்கு அக்கா தேங்க்யூ.."என்று அருந்ததி தன் தமக்கை தனக்கு கொடுத்த பரிசை விலை உயர்ந்த வைரமாக கருதி அவள் அப்பாவிடம் காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, மகளின் சந்தோஷத்தை பார்த்த ரஞ்சித் முகத்திலும் சந்தோஷம்தான்.
"பென்சில் ரொம்ப அழகா இருக்கு பூஜா குட்டி.. சரி ஏன் இந்த டிரஸ் போட்டிருக்க உனக்கு கூட அம்மா ஒரு புது டிரஸ் தானே வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க அப்புறம் ஏன் அதை போடாம இத போட்டுருக்க?" என்று கேட்ட தந்தையை முறைத்து பார்த்தாள் பூஜா.
தன் பெரிய மகள் தன்னை பார்த்து முறைக்கவும் புன்னகையுடன் அவளை தன் மறு கைகளில் தூக்கிக் கொள்ள "அச்சோ என்னங்க பார்த்து.. ரெண்டு பேரையும் எப்படி உங்களால தூக்க முடியும் பாப்பாவை என் கிட்ட குடுங்க நான் வச்சுக்கிறேன்.. ஏய் பூஜா நீ பெரிய பொண்ணு தானே இப்படி எல்லாத்துக்கும் சரிக்கு சமமா சின்ன பொண்ணு கிட்ட போய் போட்டி போட்டுகிட்டு இருக்க?"என்று கோபமாக மகளை அஞ்சலி திட்ட, ரஞ்சித் தன்னை தூக்கியதும் சந்தோஷப்பட்ட பூஜா அஞ்சலி திட்டவும் முணுக்கென கண்ணீர் வந்துவிட்டது.
தகப்பனின் கைகளில் இருந்து கீழே இறங்கியவள் தாயை அழுகையோடு கூடிய கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தவள் "நான் உங்க மகள் தானே?என்னமோ இந்த அருந்ததி மட்டும்தான் உங்க மக மாதிரியும் என்னை என்னமோ குப்பை தொட்டியில் இருந்து தூக்கிட்டு வந்து வச்சிக்கிறது மாதிரி பேசிகிட்டு இருக்கீங்க?நானும் ரொம்ப நாளா பாத்துகிட்டு தான் இருக்கேன் இந்த வீட்டில் இருக்கிற எல்லோருக்கும் என்ன விட அவளை தான் ரொம்ப பிடிக்குது ஏன் நானும் இந்த வீட்டு பொண்ணு தானே என்னை யாருக்குமே பிடிக்கல?இந்த அருந்ததி பிறக்கிற வரை எல்லாரும் என் மேல எவ்வளவு பாசமா இருந்தீங்க இப்ப எல்லாருமே இவளை மட்டும் தான் பாசமா பார்த்துக்கிறீங்க உங்க யாருக்குமே என் மேல கொஞ்சம் கூட அன்பே இல்லை உங்களுக்கு என் மேல சுத்தமா அன்பே இல்ல..இனிமே நான் உங்ககிட்ட பேச கூட இல்ல நான் உங்க கிட்ட பேசுறது கூட உங்களுக்கு கஷ்டமா இருக்கும் நான் போறேன்.."என்று அழுகையோடு சொல்லிவிட்டு பூஜா தன் அறைக்கு ஓட, மகளை சாதாரணமாக திட்டிய அஞ்சலி அதற்கு அவள் இத்தனை கோபப்படுவதை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து போய் விட்டாள்.
"எதுக்காக அஞ்சலி இப்ப அவளை தேவை இல்லாமல் திட்டின? அவளும் நம்மளோட குழந்தைதான் இப்படி குழந்தைகளுக்கு இடையில் பாசியாலிட்டி பார்க்க கூடாது.."
"உங்களுக்கு என்னை பார்த்தால் எப்படி தெரியுது ரஞ்சித் நம்ம குழந்தைகளுக்கு இடையில் நான் இப்படி வேறுபாடு பார்ப்பேனா?"
"சரி விடு நீ அருந்ததிய பார்த்துக்கோ நான் போய் பூஜாவை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரேன்.."என்ற ரஞ்சித் கையில் வைத்திருந்த மகளை மனைவியிடம் கொடுத்துவிட்டு தன் பெரிய மகளை சமாதானப்படுத்துவதற்காக செல்ல "அத்தை அவர் என்ன சொல்லிட்டு போறார்ன்னு நீங்க கேட்டீங்களா? எனக்கு பூஜாவை பிடிக்காதா?"என்று கண்கலங்கியபடி கேட்க, தாயின் கண்ணீரை தன் பிஞ்சு கரங்களால் துடைத்து விட்ட அருந்ததி "அம்மா அக்கா பாவம் தானே இனிமே திட்டாதீங்க.."என்று சொன்ன மகள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்ட அஞ்சலி மகளை மாமியாரிடம் கொடுக்க,"சரி விடுமா அவன் ஏதோ கோபத்தில் சொல்லிட்டு போறான் உனக்கு அருந்ததியை விட பூஜா மேல தான் அதிக பாசம் அவனுக்கும் சரி எங்களுக்கும் சரி நல்லாவே தெரியும்.."என பேத்தியை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றார்கள்.
இங்கு பூஜா அறைக்கு வந்த ரஞ்சித் மகளை செல்லம் கொஞ்சி சமாதானப்படுத்த, அப்பொழுதும் பாதி சமாதானமாகியும் ஆகாமலும் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்ட மகளை பார்த்தபடி உள்ளே வந்த அஞ்சலி அவள் பங்கிற்கு அவளும் மகளை செல்லம் கொஞ்ச அதில் முற்றிலுமாக கரைந்து போனது அவளது கோபம்.
அதன் பிறகு அஞ்சலி வாங்கி வந்திருந்த உடையை மகளுக்கு அணிவித்து அருந்ததியின் மூன்றாவது பிறந்த நாளை இனிமையாக கொண்டாடி முடிக்க, அந்த தருணத்தை அழகாக உள் வாங்கிக் கொண்டது கேமரா.
ரஞ்சித் ஒரு அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிய அஞ்சலி பக்கத்தில் இருக்கும் கிண்டல் கார்டன் ஒன்றில் வேலை பார்க்க குழந்தைகள் இருவரையும் பார்த்துக் கொள்வது ராமானுஜம், கனகா இருவரும் தான்.
அதிலும் பூஜா பள்ளிக்குச் சென்று விட வயதான தம்பதிகளுக்கு அருந்ததி ஒருவள் மட்டும்தான் பொழுதுபோக்கு.
அருந்ததி அவர்களோடு அதிக நேரம் இருந்ததால் என்னவோ பூஜாவை விட அருந்ததி மீது அவர்களது பாசம் ஒரு படி அதிகம் தான்.
வசதியும் அல்லாத ஏழ்மையும் அல்லாத நடுத்தர வர்க்கம்.
அவர்களுக்கென்று ஒரு சிறிய வீடு அதில் எப்பொழுதும் மகிழ்ச்சி மட்டும்தான்.
மகளின் பிறந்தநாளை இனிமையாக கொண்டாடி முடித்த ரஞ்சித் "அம்மா அப்பா இரண்டு பேரும் குழந்தையை பார்த்துக்கோங்க.. என் பொண்ணுக்காக அவளுக்கு பிடிச்ச ஒரு பொருளை பரிசா வாங்கிட்டு வந்தேன் ஆனா அத எங்க வச்சேன்னு தெரியல இப்ப காணோம்.. கண்டிப்பா என் மகளுக்கு ஏதாவது பிறந்தநாள் பரிசு நான் கொடுத்தே ஆகணும்.. நான் போய் கடையில் வாங்கிட்டு வந்துடறேன்..அஞ்சலி நீயும் கடையில ஏதோ திங்ஸ் எல்லாம் வாங்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தியே வா நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா போயிட்டு வந்துடலாம்.."என்ற ரஞ்சித் உறங்கிக் கொண்டிருந்த தன் இரண்டாவது தேவதையின் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு செல்ல, கணவனை புன்னகையுடன் பின்தொடர்ந்தாள் அஞ்சலி.
அதே நேரம் தன் அறையில் அமர்ந்திருந்த பூஜா அருந்ததிக்காக வாங்கி வந்திருந்த பரிசை தன் கைகளில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தவள் 'உங்களோட பரிசு, அன்பு எல்லாமே எனக்கு மட்டும் தான் சொந்தமா இருக்கணும் ப்பா.. எப்பவுமே உங்களுக்கு நான் மட்டும் தான் செல்லம் அந்த அருந்ததி கிடையாது..' என்று வாய் விட்டு சொன்னவள் அந்த பரிசு பொருளை யாருக்கும் தெரியாதபடி ஒரு இடத்தில் மறைத்து வைத்தாள்.
இங்கு மகளுக்காக பரிசு வாங்க வந்த தந்தையோ எதிர்பாராமல் எதிரில் வந்த காரின் மீது மோத மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் சறுகிக்கொண்டு சென்று பல அடிகளுக்கு அப்பால் நிற்க அவ்விடத்திலேயே கணவன் மனைவி இருவரின் உயிரும் ஒன்றாக பிரிந்தது.
சற்று நேரத்திற்கு எல்லாம் உயிருக்கு உயிரான ஜோடிகள் இருவரும் உயிர்த்துறந்து உயிரற்ற உடல்களாக வீட்டிற்கு வந்து சேர, பெரியவர் இருவரும் அதிர்ச்சியில் அப்படியே சாய பூஜா தன் பெற்றோரைப் பார்த்து அழுது கொண்டிருக்க அருந்ததி என்னும் பிஞ்சு குழந்தையோ தன் தாயும் தந்தையும் இனி திரும்பி தன்னை பார்க்க வர மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டதால் என்னவோ அவர்கள் முகத்தை பார்த்து பார்த்து அழுது கொண்டிருந்தது.
கூடப்பிறந்த அக்கா அவளது எதிரியாக மாற பெற்றோரின் அன்பு இல்லாமல் எப்படி வளர போகிறது அந்த பிஞ்சு?
இங்கு அன்பே உருவான ஒருத்தி அன்பு என்றால் என்ன என்று கேட்கும் ஒருவனிடம் சேரும்போது அவள் நிலை என்ன ஆகும்?
இவை அனைத்திற்கும் அவன் ஒருவனே பதில்.
அவன் துரியோதனன். அன்பே உருவாக கொண்ட அருந்ததியின் வருங்கால மணாளன்.