All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
"ஒரு சீரிஸ் ஷூட் தான் ஆண்ட்டி. தனு தான் நடிக்கணும். சீக்கிரம் கிளம்ப சொல்லி இருந்தேன். தூங்கிட்டாளா..?"
"ஆமா டா. என்னவோ இன்னிக்கு கொஞ்சம் லேட்டா தான் எழுந்தா. வர வர முன்னாள் இருந்த சுறுசுறுப்பே இல்ல." சிறு கவலையுடன் சித்ராதேவி புலம்ப, சந்திரவதனி முகமும் மாறியது.
அவர் கேள்விக்கு அவளுக்கு பதில் தெரியும். ஆனால் சொல்ல முடியாதே..!
"தனு வந்துட்டா போல ஆண்ட்டி. நான் பூரி எடுத்துட்டு போறேன்." என அப்போதைக்கு பேச்சை மாற்றிவிட்டு சென்று விட்டாள் சந்திரவதனி.
தன்விகா வந்ததும் இருவரும் காலை உணவை முடித்து கொண்டு கிளம்பி விட்டனர்.
அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் தங்கள் ஆபிசில் இருந்தனர்.
சந்திரவதனியும் தன்விகாவும் ஒன்றாக கல்லூரியில் படித்த தோழிகள்.
படிப்பு முடிந்ததும் இருவரும் சேர்ந்து யு டியூப் சேனல் ஒன்று ஆரம்பித்தனர்.
முதலில் சிறிதாக அவர்கள் ஆரம்பித்த சேனல், இப்போது பத்து பேர் வேலைக்கு வைத்து நடத்தும் அளவு வளர்ந்திருந்தது.
தன்விகா தான் முக்கிய ஹீரோயின். அதே போல் நாயகன் காதாபாத்திரம் பண்ண இரண்டு ஆண்கள் உண்டு.
தன்விகாவிற்கு பதில் நடிக்க வேறு ஒரு பெண்ணும் இருந்தாள்.
முடிந்தவரை சின்ன சின்ன சீரிஸ் போல் எடுத்து வாரத்துக்கு நான்கு வீடியோவாது போட்டு விடுவார்கள்.
எடிட்டர் என்று ஒரு பையனும் வேலைக்கு வைத்திருந்தனர்.
சந்திரவதனி ஸ்க்ரிபிட் இயக்கம் பார்த்துக்கொள்ள, மற்றொரு பெண் கேமரா பார்த்துக்கொள்வாள்.
ஒரு சின்ன குழுவாக அவர்கள் வெற்றிகரமாகவே செயல்பட்டு வந்தனர்.
இப்போது இன்னும் சேனலை விரிவுபடுத்தலாம் என்ற முடிவுடன் வேலைக்கு ஆள் வேண்டுமென்று விளம்பரம் செய்திருந்தனர்.
இன்று தான் தேர்வு தேதி அறிவித்திருந்தனர்.
தன்விகா ஒரு பக்கம், கேமரா செய்யும் பெண் ஈஸ்வரி மற்றும் உடன் நடிக்கும் நடிகன் சம்பத்துடன் ஷூட்டிங் கிளம்பி விட்டாள்.
சம்பத் நடிப்பு மட்டும் இல்லாமல், சந்திரவதனி போலவே ஸ்க்ரிப்ட் இயக்கமும் செய்பவன்.
அதனால் தான் அவர்கள் மட்டும் சென்றனர்.
நேர்முக தேர்வு செய்யும் வேலையை சந்திரவதனி எடுத்து கொண்டாள்.
இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள் என்று வந்திருந்தனர்.
அவளுக்கு தேவைப்பட்டது ஒரு ஆண் ஒரு பெண் தான்.
முதலில் மூன்று பெண்களிடம் பேசியவள், ஒரு பெண்ணை நடிக்க தேர்ந்தெடுத்து கொண்டாள்.
ஆண்களில் அவர் எதிர்பார்த்தது பேச்சு திறமை.
முதலில் வந்தவனுக்கு நடிப்பு திறமை இருந்தது. ஆனால் குரல் அவள் எதிர்பார்த்தது போல் இல்லை.
அவனுக்கு பதில் சொல்வதாக கூறி அனுப்பி விட்டவள், கடைசியாக வந்தவனை வரவேற்றாள்.
"ப்ளீஸ் சிட்" என அவள் இருக்கையை காண்பிக்க,
"தேங்க்ஸ் மிஸ் சந்திரவதனி" என்று கூறிக்கொண்டே அமர்ந்த கமலநேத்ரன் குரல், அவளுக்கு முதல் முறையே பிடித்து விட்டது.
"உங்கள் ப்ரொபைல் பார்த்தேன். ஏற்கனவேட் ஒரு ஐ . டி கம்பெனில வேலை பாக்கறீங்க. கண்டிப்பா நல்ல சம்பளம் இருக்கும். அப்புறம் இது எதுக்கு..?"
"எனக்கு நாலு தங்கச்சி, ரெண்டு தம்பி மேடம். எல்லாரையும் படிக்க வச்சு கரை சேர்க்கணும். ஒரு சம்பளம் போதுமா சொல்லுங்க..!" பாவமாக முகத்தை வைத்து கொண்டு அவன் கூற, அவன் செயலும் சொல்லும் பொருந்தாதில் அவனை குழப்பத்துடன் தான் பார்த்தாள் சந்திரவதனி.
"இப்படி எல்லாம் சொல்லி சிம்பத்தி தேடிக்கலாம் தான். ஆனா உண்மை என்னனா, அது வொர்க் இது பேஷன். அவ்வளவு தான்." கண்ணடித்து அவன் தோளை குலுக்கியதில், அவளும் சிரித்து விட்டாள்.
"ஒரு நிமிஷத்தில் பயம் காட்டிடீங்க போங்க..!" என அவள் தலையாட்டி புன்னகைக்க, அவனும் சிரித்து கொண்டான்.
"ஒரு சினிமா ரிவியூ ஷோ மாதிரி பண்ணலாம்னு தான் பிளான். அதுக்கு தான் ஆள் எடுக்கறேன். உங்களுக்கு ஓகே வா..?"
"டேபிள் ஓகே. அதெல்லாம் நமக்கு நல்லா வரும்.."
"ம்ம் குட். நாளைக்கு பெரிய பட்ஜெட் படம் ஒன்னு வருது. ஈவினிங் ஷோ டிக்கெட் புக் பண்ணி தரேன். பார்த்துட்டு வந்துடுங்க. நாளைக்கு பர்ஸ்ட் ஷூட் பண்ணிடலாம்." உடனடியாக அவள் திட்டமிட, அதில் அவனுக்குள் ஒரு வித வியப்பும் மரியாதையும் அவள் மேல் தோன்றியது.
"நீங்களும் என் கூட வர்றீங்களா..?" சட்டென அவன் கேட்டுவிட,
"வாட்..!" என்ற சந்திரவதனி குரலில் கோபம் எட்டி பார்த்தது.
அதை புரிந்துகொண்டவன், "ஐயோ நீங்க நினைக்கிற மாதிரி தப்பான எண்ணத்தில் கேட்கலை மா..! ஒரு சின்ன சஜஷன் தோணிச்சு. அதான் சட்டுனு கேட்டுட்டேன்." என்றான் அவன் வேகமாக.
"புரியல கமலநேத்ரன்"
"இல்ல, உங்களுக்கும் வாய்ஸ் அண்ட் த்ரோ நல்லா இருக்கு. எல்லார் மாதிரியும் தனியா விமர்சனம்னு பண்ணாமல், ஒரு அலசல் மாதிரி ரெண்டு பேரும் சேர்ந்து பேசினா நல்லா இருக்கும் இல்லையா..!" அவன் சொன்னது அவளுக்கும் பிடித்திருந்தது தான்.
ஆனால் அவள் உடனடியாக முடிவெடுக்கவில்லை.
"நான் யோசிக்கிறேன். இப்போதைக்கு நீங்க மட்டும் ஸ்டார்ட் பண்ணுங்க." என்று அவள் கூறி விட,
"ஓகே சந்திரவதனி. தேங்க்ஸ்.." என கைநீட்டினான் கமலநேத்ரன்.
பதிலுக்கு அவளும் கை குலுக்கி விடை கொடுத்தாள்.
"பை த வே, உங்க பேர் ரொம்ப நல்லா இருக்கு. இதுக்கு தனியா கோவப்படாதீங்க. சும்மா சொல்லணும்னு தோணிச்சு. வேற எந்த காரணமும் இல்ல. ப்ராமிஸ்.." அழுத்தமாக அவன் கூற,
"தேங்க்ஸ்" என்றவளும் கோபப்படவில்லை.
அதே நேரம் புன்னகைக்கவும் இல்லை. முதல் முறைக்கு அவன் பேச்சு அவளுக்கு கொஞ்சம் அதிகப்படியாக தான் தெரிந்தது.
அது அவனுக்கும் புரிந்ததோ என்னவோ, அதற்கு மேல் பேசாமல் கிளம்பி விட்டான்..
**********
மறுநாள் காலையிலேயே கமலநேத்ரன் வந்து விட்டான்.
"தனியாவே ஷோ பண்ணிடவா..?" என அவன் மீண்டும் கேட்க,
"முதலில் பண்ணுங்க கமலநேத்ரன். இம்ப்ரூவ்மென்ட் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.." என்றுவிட்டாள் சந்திரவதனி.
அவன் விமர்சனம் கூறிய விதம் நன்றாகவே இருந்தது.
இடை இடையில் அவள் சில மாற்றங்களும் கூற, அதையும் திருத்தி கொண்டான்.
"நெகடிவ் கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ. வெறும் பாசிட்டிவ் மட்டுமே சொல்லுற மாதிரி இருக்கு.." என இடையில் தன்விகா கூற, அவன் கவனம் அவள் புறம் திரும்பியது.
"படம் உண்மையாவே நல்லா இருந்தது மா. அதிகம் நெகடிவ் இல்ல. பட் கடைசியா சொல்லுவேன்.." என அவன் தன்மையாகவே கூற,
"ம்ம். ஓகே. சொல்லுங்க பார்த்துக்கலாம்.." என்றவள் அமைதியாக அமர்ந்து விட்டாள்.
அவள் கண்களில் இருந்த ஒரு வித வெறுமை அப்பட்டமாக தெரிந்தது.
இந்த வயதில் இவளுக்கு அப்படி என்ன கவலை இருக்க போகிறது என அவன் மனம் யோசிக்க, "ஹலோ மிஸ்டர் கமலநேத்ரன், என்ன ஆச்சு..?" என்ற சந்திரவதனி குரல் அவனை கலைத்தது.
"சாரி. சாரி. போலாம்.." என்றவன் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தான்.
கடைசியாக அவனுக்கு தோன்றிய எதிர்மறை கருத்தும் கூறியவன், ரேட்டிங் என ஒரு மதிப்பெண்ணும் கொடுத்தே முடித்தான்.
"ஓகே. சூப்பர். நல்லா வந்திருக்கு கமலநேத்ரன். எடிட்டிங் முடிச்சுட்டு போஸ்ட் பண்ணிடலாம். இப்போ வாங்க. உங்களுக்கான அடுத்த வொர்க் சொல்லுறேன்.." என சந்திரவதனி அழைக்க, அவனும் அவளை தொடர்ந்து சென்றான்.
அப்போதும் அவன் கண்கள் தன்விகாவை கவனிப்பதை விடவில்லை.
"இந்த விமர்சனம் போக, நீங்க செய்ய போகும் மற்றொரு வேலை மூவி எக்ஸ்பளனேஷன் தான். வேறு மொழி படங்களில் ஹிட் ஆன, இல்ல சுவாரஸ்யமான படங்களை தமிழில் சொல்லனும். அது வாரத்துக்கு இரண்டு படம்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்." என சந்திரவதனி கூற,
"ம்ம் ஓகே. பண்ணிடலாம்.." என்றவன், 'படம் பாக்க வச்சே சாவடிச்சுடுவாங்க போலையே..!' என மனதிற்குள் புலம்பி கொண்டது தனி கதை.
அங்கிருந்து கிளம்பும் போது அவன் போன் அடித்தது.
தன் வண்டியில் ஏறி அமர்ந்திருந்தவன் போனை எடுத்து பார்த்தான்.
அதில் வந்த பெயரை பார்த்தவன் போனை எடுப்பதா வேண்டாமா என சில நொடிகள் யோசித்தான்.
மீண்டும் போன் அடிக்க, ஒரு பெருமூச்சுடன் போனை அட்டன் செய்தான்.
அந்த பக்கம் இருந்த பெண், "நீங்க ஊரில் இல்லையாமே கமல்..! எங்க போனீங்க..? என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லலையே..! நீங்களா போன் கூட பண்ணலை. ஏன் இப்படி பண்ணுறீங்க..!" கோபமா வருத்தமா என்று கண்டுபிடிக்க முடியாத குரலில் பேசினாள்.
"ஒரு முக்கியமான வேலை மதுவந்தனி. அவாய்ட் பண்ண முடியாது. வந்துட்டு பேசறேன். இப்போ பிசி. பை.." என்று விட்டு போனை சட்டென வைத்து விட்டான்.
அவன் முகம் சில நொடிகள் சுருங்கிய இருந்தது.
எங்கோ கேட்ட ஹாரன் ஒளியில் நினைவு மீண்டவன், தலையை வேகமாக உலுக்கி தன்னை நிலைப்படுத்திகொண்டு வண்டியை எடுத்தான்..
Vp 2:
சந்திரவதனி கொடுத்த ஒரு படத்திற்கு தமிழில் எக்ஸ்பளனேஷன் வீடியோ ரெடி பண்ணி கமலநேத்ரன் அனுப்பி இருந்தான்.
அதை பார்த்துவிட்டு சந்திரவதனி அவனுக்கு அழைத்தாள்.
"வாய்ஸ் நல்லா இருக்கு நேத்ரன். வீடியோ ரெடி பண்ண சொல்லுறேன். நாளைக்கு ஈவினிங் ஒரு முறை ஆபிஸ் வந்துறீங்களா..? ஏதாவது சேஞ் இருந்தா கையோடு பண்ணிடலாம்."
"ஓகே. ஒரு செவென் பக்கம் வரேன். பரவாயில்லையா..?"
"பரவாயில்ல. நான் வெயிட் பண்ணுறேன். வாங்க." என்றுவிட்டாள் சந்திரவதனி.
அவனுக்கும் மறுநாள் முக்கிய வேலை இருந்தது.
அந்த மீட்டிங் தவிர்க்க முடியாது என்பதால் தான் டைம் கேட்டு கொண்டான்.
மறுநாள் மதியம் தொடங்கிய மீட்டிங், அவன் நினைத்தது போலவே மாலை தாண்டி சென்றது.
ஏழு மணிக்கு மீட்டிங் முடிய, அதற்கு பின் வேகமாக கிளம்பி தான் கமலநேத்ரன் சந்திரவதனி ஆபிஸிற்கு சென்றான்.
அவனுக்காக தான் அவளும் காத்திருந்தாள்.
உள்ளே வந்தவன் முதலில் தன் இருக்கையில் அமர்ந்திருந்த தன்விகாவை தான் பார்த்தான்.
அவள் கையில் ஏதோ ரத்தம் போல் துடைத்து கொண்டிருக்க, அவனுக்கு பதறி விட்டது.
"என்ன ஆச்சு தன்விகா..? என்ன ரத்தம்..?" சிறு பதட்டத்துடன் அவன் கேட்க, அவன் பதட்டத்தை அவளும் வித்தியாசமாக தான் பார்த்தாள்.
"ஒன்னும் இல்ல ப்ரோ. இது மேக் அப் தான். ஜஸ்ட் ஒரு சீனுக்காக போட்டது. போக மாட்டேங்குது." என்றவள் மேலும் அழுத்தமாக தேய்க்க,
"ப்ச் இரு. ஏன் இப்படி போட்டு அழுத்திட்டு இருக்க. நான் எடுத்து விடறேன்." என்றவன், பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்து, அவள் கையை பிடித்து பார்த்தான்.
அவன் அவள் கையை சுத்தம் செய்ய, "வந்ததே லேட்டு! இங்க உட்கார்ந்துட்டா எப்படி நேத்ரன்..!" என கேட்டுக்கொண்டே சந்திரவதனி வந்தாள்.
"ஒரு அஞ்சு நிமிசத்தில் என்ன ஆகிடும் வதனி. இருங்க வந்துர்றேன்.." என்றவன் தன் வேலையை நிறுத்தவில்லை.
அவன் செயலில் இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து தலையாட்டி சிரித்து கொண்டனர்.
"என்ன சிரிப்பு..?" நிமிராமல் கமலநேத்ரன் கேட்க,
"தலையில் ஒரு கண்ணு வச்சிருக்கீங்களா என்ன..!" என்றாள் தன்விகா.
"சும்மா தான். நான் உங்களை அதட்டினா நீங்க என்னை அதட்டிறீங்களேன்னு நினைச்சு சிரிச்சோம்..!" என சந்திரவதனி கூற, அவளை நிமிர்ந்து பார்த்தவன், "சாரி" என்றான் சிறு புன்னகையுடன்.
அதில் அவளும் சிரித்து கொண்டாள்.
"முடிஞ்சுது. போலாம் வதனி.." என எழுந்து விட்டான் கமலநேத்ரன்.
இருவரும் எடிட்டர் அருகில் சென்று அமர்ந்து வேலையை பார்த்தனர்.
சிறு சிறு மாற்றங்கள் செய்து முடித்து வீடியோ பார்த்த போது, அனைவருக்கும் திருப்தியாக இருந்தது.
வேலை முடிந்ததும், "நீங்க சாப்பிடீங்களா நேத்ரன்..?" என சந்திரவதனி கேட்க,
"எங்க! ஒரு காஃபி கூட குடிக்கல. மீட்டிங் முடிஞ்சதும் ஓடி வந்தாச்சு." என்றவன் சலிப்புடன் சேரில் சாய்ந்தான்.
"நாங்களும் இனி தான் சாப்பிடனும். பேசாமல் ஆர்டர் பண்ணிடவா. எல்லாரும் சாப்பிட்டுட்டு கிளம்பலாம்.." சந்த்ரவதானி கேட்க,
"நான் அம்மாகிட்ட சொல்லிடறேன் சந்திரா. நீ ஆர்டர் பண்ணு." என்றாள் தன்விகா.
"யாருக்கு என்ன வேண்டும்..?" என்று கேட்டு சந்திரவதனி ஆர்டர் செய்தாள்.
உணவு வந்து விட, நால்வரும் ஒன்றாக அமர்ந்தே உண்டனர்.
"நாங்க பெரிய ராஜ பரம்பரை தன்விகா. எங்க தாத்தாவோட தாத்தா அரசரா இருந்தார். இப்போ கூட எங்க வீடு ஊரில் அரண்மனை மாதிரி இருக்கும். அம்மா போடும் நகைகள் எல்லாம் அவ்வளவு விலை உயர்ந்தது.." அவன் சொன்னதை தன்விகாவும், எடிட்டர் மோகனும் வாயை பிளந்து கொண்டு கேட்க,
"உங்களை ஸ்க்ரிப்ட் எழுத போட்டிருக்கணும் நேத்ரன். தப்பா இதில் போட்டுட்டேன்.." என்றான் சந்திரவதனி சலிப்புடன்.
அவள் சொன்னதும் தான் தன்விகா, மோகனுக்கும் புரிந்தது.
"அப்போ எல்லாம் உருட்டா..?" என மோகன் தலையில் அடித்துக்கொள்ள,
"இதில் சந்தேகம் வேறயா..! வாயில் ஈ போனது கூட தெரியாமல் ஒருத்தி உட்காந்திருக்கா பாரு..!" என சந்தராவதனி கிண்டல் செய்ய, தன்விகா சங்கடத்துடன் சிரித்தாள்.
"கிண்டல் பண்ணாத டி. ஏன் ப்ரோ உங்களுக்கு இந்த கொலை வெறி..?" என அவள் கேட்க,
"என்ன மா அநியாயம் இது! நான் ராஜ பரம்பரையா இருக்க கூடாதா..!" என்று அவன் பாவமாக கேட்டதில், மற்ற மூவரும் சிரித்து விட்டனர்.
சில மாதங்களுக்கு பின் மனம் விட்டு சிரித்த தோழியை பார்த்து சந்திரவதனி மனமும் நிறைந்து போனது..
இந்த கூத்தில் தன் கேள்விக்கே பதிலே வரவில்லை என்பதை தன்விகா கவனிக்க தவறிவிட்டாள்.
உணவு முடிந்து அனைவரும் கிளம்பும் போது, சந்திரவதனி கமலநேத்ரன் அருகில் வந்தாள்.
"தேங்க்ஸ் நேத்ரன். ரொம்ப நாளைக்கு அப்புறம் தன்விகா முகத்தில் இவளோ சந்தோசத்தை பார்த்தேன். தேங்க்ஸ்.." என்றுவிட்டு அவள் நகர்ந்து விட, அவனோ அமைதியாக பதிலுக்கு புன்னகை மட்டுமே கொடுத்திருந்தான்.
உடனடியாக அவளுக்கு என்ன தான் பிரெச்சனை என்று கேட்க அவனுக்கு ஆசை தான்.
ஆனால் அவசரப்பட்டால் மொத்தமாக வீணாகி விடும்.
ஏற்கனவே அவன் செயல்கள் அவர்களுக்கு அதிகப்படியாக தெரிவதை அவனும் உணர்ந்தே இருந்தான்.
அதான் இந்த முறை தெளிவாக தன்னை கட்டுப்படுத்தி கொண்டான்.
***********
மதுரை அருகில் ஒரு சிறிய கிராமம்..
தன் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த திருக்குமரன், தன் போனை தான் பார்த்து கொண்டிருந்தான்.
"குமரா வெளிய என்ன பண்ணுற..? சாப்பிட வா டா.." என உள்ளிருந்து அவன் அன்னை குரல் கொடுக்க,
"வரேன் ஆத்தா. எடுத்து வை. ஒரு பத்து நிமிஷம்.." என பதில் குரல் கொடுத்தவன் நிமரவே இல்லை.
மீண்டும் போனில் ஏதோ ஒரு எண்ணுக்கு அழைத்தான்.
ம்ஹ்ம்! எப்போதும் போல் ரிங் போகவே இல்லை. அதில் கோபத்துடன் போனை பக்கத்தில் வைத்தவன், சுவரில் சாய்ந்து அமர்ந்து விட்டான்.
மூடிய அவன் விழிகளுக்குள், ஒரு அழகிய பெண்ணின் முகம் வந்து போனது.
சிவப்பு நிற தாவணியில், காதில் கொடை ஜிமிக்கியுடன், மாநிற அழகு தேவதை அவள்.
'திரு' என்ற அவள் குரல் காதில் மென்மையாக ஒலிக்க, அதை கேட்க முடியாத கோபத்தில் இப்போது அவன் முகம் இறுகி போயிற்று.
"அண்ணா, அம்மா எவ்ளோ நேரமா கூப்பிடுது..! இங்க என்ன கனவு கண்டுட்டு இருக்க..?" என்று கேட்டுக்கொண்டே அவன் தங்கை வந்துவிட, அவன் சட்டென கண்களை திறந்தான்.
"ஏதோ யோசனையில் உட்காந்துட்டேன் தாமரை. வரேன்.." என்றவன் எழுந்து விட்டான்.
"அண்ணா காலேஜ் பீஸ் கட்டணும்னு சொல்லி இருந்தேனே!" என தாமரை நினைவு படுத்த,
"நாளைக்கு வந்து கட்டிர்றேன் டா. இன்னிக்கு வயலில் வேலை இருந்தது. அதான் வர முடியல. காலையில எதுக்கும் ஞாபகப்படுத்து."
"ஒரு ரெண்டு பேரை வேலைக்கு எடுக்க கூடாத டா..! விவசாயமும் பார்த்துட்டு கடையும் பாக்கணும். இருக்கற ஆளுங்க பத்தாது குமரா." என அவன் அன்னை தங்கலக்ஷ்மி கூற,
தினமும் இரவு வேலை மூவரும் ஒன்றாக அமர்ந்து தான் உண்பது.
பகல் முழுவதும் திருக்குமரன் வேலை என்று சுத்துவதால், இந்த நேரத்தை குடும்பத்துக்காக ஒதுக்கி விடுவான்.
**************
மும்பை மாநகரம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
மதுவந்தனி தன் தந்தை முன் நின்றிருந்தாள்.
அவள் முகம் அழுகையில் சுருங்கி இருக்க, "எதுக்கு பாப்பா இப்போ அழுகை..! நீ தேவை இல்லாம குழப்பிக்கறன்னு தோணுது.. கமல் எதிர்மறையா ஒண்ணுமே சொல்லலையே. அப்புறம் என்ன குழப்பம் உனக்கு..?" என்றார் கனகவேல்.
"இல்ல பா. அவர் சரியா பேசவும் இல்லையே..!"
"வேலை இருந்திருக்கும் டா"
"அதுக்கு இப்போ தான் போகணுமா பா..! இது நாங்க பழக வேண்டிய டைம் இல்லையா..! இப்படி அவர் பாட்டுக்கு ஊர் சுத்தினா, என்ன அர்த்தம்..! போன் பண்ணினாலும் பாதி நேரம் எடுக்கறதில்ல. எடுத்தாலும் வேலை இருக்குன்னு வச்சுடறாரு. எனக்கு அவர் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் பா." மகள் குரல் உடைந்தும், அவருக்கும் வருத்தமாக தான் போய் விட்டது.
"சரி இரு. நான் சேதுபதி கிட்ட பேசறேன்." என்றவர், உடனடியாக சேதுபதிக்கு போன் அடித்தார்.
அந்த பக்கம் எடுத்தவர், "சொல்லு வேலா. எப்படி இருக்க..?" என கேட்க,
"நல்லா இருக்கேன் சேதுபதி. ஒரு சின்ன விஷயம் பேசனும்.." என்றார்
"சொல்லு வேலா.."
"இல்ல, கமல் ஊரில் இல்லை போல். இப்போ தான் நாம கல்யாணம் பத்தி பேசினோம். பசங்க கொஞ்சம் பழக வேண்டாமா..! வேலைக்கு வேற யாரையாவது அனுப்பி இருக்கலாமே..!" தன்மையாக தான் கனகவேல் பேசினார்.
"இல்ல வேலா. இது பர்சனல் வேலை. வெளி ஆட்களை அனுப்ப முடியாது. எனக்கு நீ சொல்லுறதும் புரியுது. கொஞ்சம் அடஜஸ்ட் பண்ணிக்கோ பா. வேலையை முடிச்சுட்டு எப்படியும் சில மாசத்தில் வந்துடுவான். வந்ததும் வேற எந்த வேலையும் இல்லாமல் அவனை ப்ரீ பண்ணிக்க சொல்லுறேன்." அவரும் தன்மையாகவே பதில் கூறி முடித்துவிட்டார்.
"ஓகே ஓகே சேதுபதி. உனக்கு உடம்பு எப்படி பா இருக்கு..!"
அவர் வைத்ததும், மகள் பக்கம் திரும்பிய கனகவேல், "கேட்ட தானே பாப்பா..! கமல் வந்துடுவான். அதுவரை பொறு. அவசரப்படாத பாப்பா. இப்படி ஒரு சம்மந்தம் அமைஞ்சது நம்ம அதிர்ஷ்டம். ஏதோ சேதுபதி என் ஸ்கூல் பிரென்ட் என்பதால் இவ்வளவு பெரிய இடத்தில் இருந்து சம்மந்தம் வந்திருக்கு. பொறுமையா இரு. அவசரப்பட்டு உன் வாழ்க்கையை நீயே கெடுத்துடாத. புரியுதா..?" மென்மையாக அவர் கேட்க,
"சரி பா" என்றாள் மதுவந்தனி அரை மனதாக.
அவளுக்கும் அப்போதைக்கு தந்தை சொல்வதை கேட்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை.
மிடில் க்ளாஸிலேயே வளர்ந்து விட்டவளுக்கு, பணக்கார வாழ்க்கை வாழும் கனவு அதிகமாகவே இருந்தது.
அதனால் அவளும் பொறுமையாக காத்திருக்கவே முடிவு செய்தாள்..
Vp 3:
அடுத்து வந்த நாட்களில் கமலநேத்ரன் அந்த டீமுடன் நன்றாக பொருந்தி விட்டான்.
அவன் முதலில் கூறியது போல் சந்திரவதனி அவனுடன் சேர்ந்து விமர்சனம் செய்யும் முடிவை எடுத்திருந்தாள்.
அடுத்த நாள் ரிலீஸ் ஆக இருக்கும் படம் பற்றி கமலநேத்ரன் கூறிய போது, "ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம் நேத்ரன்" என்றாள் அவள்.
"எது சேர்ந்தா! ஐயோ அப்படி எல்லாம் அவசரப்பட்டு முடிவெடுக்காதே மா. நான் வேற ரொம்ப கெட்டவன் இல்லையா..! நீ தனியாவே போ. நான் மதிய ஷோ போறேன். உனக்கு ஈவினிங் டிக்கெட் போடவா..?" கிண்டலாக பேசினாலும் முதல் நாள் அவள் மறுத்ததற்கான குத்தலும் அதில் லேசாக இருக்க தான் செய்தது.
"யார் என்னனு தெரியாத பையன் கூட எந்த பொண்ணும் போக மாட்டா நேத்ரன்.." அழுத்தமாக அவள் கூறியதில்,அவன் மெலிதாக புன்னகைத்தான்.
"இப்போ நான் யாருன்னு உனக்கு தெரியுமா..?'" இன்னுமும் கிண்டல் மாறாமல் அவன் கேட்க,
"கெட்டவன் இல்லைனு தெரியும்.." என்றாள் அவளும்.
"ம்ம் ஏதோ என் உழைப்புக்கு இந்த காம்ப்ளிமெண்ட்டாவது கிடைச்சதே..! அதுவரை சந்தோசம் தான்.." அவன் சலிப்புடன் கூறியதில் அவளும் சிரித்து கொண்டாள்.
"இப்படி வம்பு பண்ணிட்டே இருக்காம டிக்கெட் போடறீங்களா..! நாளைக்கு உங்களுக்கும் லீவ் தானே?"
"ம்ம். டிக்கெட் போட்டுர்றேன். மூணு மணி ஷோவில் டிக்கெட் இருந்தது. ஓகே தான..?"
"ஓகே தான். இங்க இருந்தே போய்டலாமா..?"
"ஆமா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் இங்க தான் இருப்பேன். நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு மதியம் போல் வாங்க. சேர்ந்தே போய்டலாம்."
"ஓகே வதனி. நாளைக்கும் என்ன வேலை..? ஒரு நாள் ரெஸ்ட் எடுக்க கூடாதா..!" உண்மையான அக்கறையுடன் தான் அவன் கேட்டான்.
"எப்போதும் செய்வதில்லை நேத்ரன். நாளைக்கே உண்மையாவே வேலை இருக்கு. அதான் வரேன்."
"நீ மட்டும் தான் வரியா..?"
"ம்ம் ஆமா. எல்லாரும் பாவம். எனக்கு கம்பெனிக்கு வந்து உக்கார சொல்ல முடியுமா..!" சிறு புன்னகையுடன் அவள் கேட்க, அவள் முகத்தில் இருந்த மென்மையான அழகில், ஒரு நொடி அவன் மனம் தாளம் தப்பி துடித்தது.
"பை நேத்ரன்" என சிரித்த முகமாகவே அவனுக்கு விடை கொடுத்தாள் சந்திரவதனி.
வீட்டிற்கு வந்த கமலநேத்ரனுக்கு அன்று அடிக்கடி சந்திரவதனி முகம் மனதிற்குள் நிழலாடியது.
அவள் குணம் அவன் மனதை மெது மெதுவாக ஈர்க்க தொடங்கி இருந்தது.
அந்த மை தீட்டிய கூர் விழிகளால் அவள் அழுத்தமாக பார்க்கும் பார்வை, அவன் மனதை போட்டு பாடாய் படுத்தி தொலைத்தது.
தலையை வேகமாக உருட்டி தன்னை நிலைப்படுத்தி கொண்டவன், தன் வேலையை கவனித்தான்.
மறுநாள் காலை பத்து மணிக்கு தான் சந்திரவதனி ஆபிஸ் வந்தாள்.
ஆபிஸ் வாசலில் அந்த நேரத்தில் நின்றிருந்த கமலநேத்ரனை நிச்சயம் அவள் எதிர்பார்க்கவில்லை.
"இங்க என்ன பண்ணுறீங்க..?"
"ம்ம்ம்.. இட்லி விக்க வந்தேன். கேள்வி கேக்கற பாரு! முதலில் ஆபிஸை திற வதனி. ஒரே வெயில்.." என வேகமாக புலம்பினான் அவன்.
அவனுக்கு வியர்த்து விட்டிருந்திருந்ததை பார்த்தாலே, வெயிலில் நின்று நொந்திருக்கிறான் என அவளுக்கு புரிந்தது.
அவளும் அதற்கு மேல் பேசாமல் ஆபிஸை திறந்தாள்.
உள்ளே வந்தவன் வேகமாக பேனை போட்டு கொண்டு அமர, அவளும் அவன் அருகில் இருந்த மற்றொரு சேரில் அமர்ந்தாள்.
"இட்லி எல்லாம் வித்து முடிச்சுடீங்களா..? மிச்சம் இருக்கா..?" சிரிக்காமல் அவள் கேட்க,
"அதெல்லாம் முடிச்சாச்சு" என்றான் அவனும் விடாமல்.
அவள் தான் வழக்கம் போல் தலையில் அடித்து கொண்டாள்.
"சரி இப்போ உண்மையான காரணத்தை சொல்லலாமா..?" அவள் கேள்வியில் அவளை பார்த்தாவன், "தனியா போர் அடிக்கும்னு சென்னையே! அதான் வந்தேன். எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கும். வீட்டில் நாலு சுவத்தை பாத்துட்டே லாப்டாவ் தட்டுறதுக்கு, இங்க வந்தால் உனக்கும் கம்பெனியா இருக்குமேன்னு தான் வந்தேன். விளக்கம் போதுமா..? இல்ல இன்னும் சொல்லவா..?" என்றான்.
"ஐயோ! போதும் சாமி. போதும். நீங்க வேலையை பாருங்க. நானும் பாக்கறேன்." என்றவள் அங்கிருந்த ஒரு ஸிஸ்டம்மில் அமர, நேத்ரனும் தன் லாப்டாப் எடுத்து கொண்டு அமர்ந்தான்.
இருவரும் சிறுது நேரம் அமைதியாக அவரவர் வேலையை பார்த்தனர்.
தன் வேலையை முடித்துவிட்டு சந்திரவதனி திரும்ப, கமலநேத்ரன் இன்னும் ஏதோ வேலை பார்த்து கொண்டிருந்தான்.
அவன் கைகள் அசாதாரணமாக வேலை செய்தது, சேரில் சாய்ந்து அமர்ந்து அசால்ட்டாக அவன் வேலை பார்த்து கொண்டிருக்க அந்த உருவம் சந்திரவதனி அனுமதி கேட்காமலே அவள் மனதில் பதிந்து போனது.
"இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்..?" என்றவள் குரலில் நிமிர்ந்தவன்,
"பிப்ட்டீன் மினிட்ஸ் வதனி" என்றான்.
"உண்மையாவே வேலையா? சும்மா சொல்லுறீங்களோனு ஒரு டவுட் இருந்தது..!"
"வேலை இல்லாட்டி சும்மா சொல்லிட்டு வந்திருப்பேன். பட் என் பேட் லக், வேலை இருந்தது.." என அவன் தோளை குலுக்கினான்.
அவளும் எழுந்து சென்று ப்ரெஷ் ஆகி வர, அதற்குள் கமலநேத்ரன் வேலையை முடித்திருந்தான்.
"கிளம்பலாமா? அப்படியே மாலில் சாப்பிட்டுட்டு படத்துக்கு போனா சரியா இருக்கும்.." என சந்திரவதனி கூற,
"அதுக்கு முன்னடி ஒரே ஒரு காஃபி வேணும் எம். டி மேடம்.." என்றான் அவன் பவ்யமாக.
பேசிக்கொண்டே இருவரும் வாசலுக்கு வந்திருந்தனர்.
"நல்ல பில்டர் காஃபி கிடைக்கும் இடமா நிறுத்துங்க.."
"உத்தரவு மேடம்" என்றுவிட்டு அவன் பைக்கில் ஏற, அவளும் பின்னால் ஏறி கொண்டாள்.
சிறிது தூரம் சென்றதும் ஒரு கடையில் பைக்கை நிறுத்திய நேத்ரன், இறங்கி சென்று இருவருக்கும் காஃபி வாங்கி வந்தான்.
கடை வாசலில் இருந்த வட்ட மேசை அருகில் சந்திரவதனி நின்று கொண்டிருந்தாள்.
அவன் வைத்த டம்பளரை எடுத்தவள், "ஷ்.. நல்ல சூடு.." என்றுவிட்டு மீண்டும் வைத்து விட்டாள்.
"டவரா எதுவும் இல்லையா?" என்றவள் சுற்றி பார்க்க,
"இரு. வாங்கிட்டு வரேன்." என்றுவிட்டு நேத்ரன் மீண்டும் உள்ளே சென்றான்.
சில நொடிகள் வந்தவன், "டவரா இல்லையாம். டம்பளர் தான் கிடைச்சது. இரு நான் ஆத்தி தரேன்.." என்றவன், தானே எடுத்து ஆத்தி கொடுத்தான்.
மிதமான சூட்டில் அவன் கொடுக்க, "தேங்க்ஸ் நேத்ரன். சரியா இருக்கு.." என்று கூறிக்கொண்டே குடித்தாள் சந்திரவதனி.
"சின்ன குழந்தையா நீ! இந்த சூடு கூட தாங்க மாட்டியா..?"
"ப்ச் என்னவோ, ரொம்ப சூடா இருந்தா எனக்கு பிடிக்காது.." என அவள் உதட்டை பிதுக்க, அவனும் சிரித்து கொண்டான்.
காஃபியை முடித்துவிட்டு நேராக மாலுக்கு சென்று விட்டனர்.
படம் ஆரம்பிக்க இன்னுமும் நேரம் இருந்ததால், "நான் கொஞ்ச க்ராசரி வாங்கணும். வாங்கிடவா..?" என்றாள் சந்திரவதனி.
"ம்ம். நானும் வாங்கணும். வாங்கலாம்.." என்றவன் அவளுக்கு ஒரு கூடை கொடுத்துவிட்டு, தான் ஒன்றை எடுத்து கொண்டான்.
இருவரும் தங்களுக்கு தேவையானதை வாங்கி தனியாக பில் போட்டனர்.
கடைசியாக வெளியே வந்ததும், தான் வாங்கி இருந்த சாக்லெட்டில் ஒன்றை நேத்ரன் அவளிடம் கொடுக்க, "நானும் வாங்கி இருக்கேனே" என்றாள் அவள்.
"அது வீட்டில் வச்சுக்கோ. இது இப்போ சாப்பிட.." என அவன் கூறிவிட, அவளும் மறுக்காமல் வாங்கி கொண்டாள்.
இருவரும் புட் கோர்ட் வந்து தங்களுக்கு வேண்டியதை வாங்கி கொண்டு அமர்ந்தனர்.
ஏதேதோ பேசி கொண்டே உணவை முடித்துவிட்டு, அடுத்து படம் பார்க்க சென்றுவிட்டனர்.
படம் மிகவும் சுமாராக இருந்ததில், ஒரு கட்டத்தில் சந்திரவதனிக்கு தூக்கமே வந்து விட்டது.
முதல் பாதியை சமாளித்தவளால் இரண்டாம் பாதி முடியவில்லை.
"நேத்ரன் நீங்க முழுசா பார்த்துடுவீங்களா?" என அவன் பக்கம் சாய்ந்து மென்குரலில் அவள் கேட்க,
"இது எதையும் தாங்கும் இதயம் மா" என்றான் அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
"நல்லது. என்னுடையது ரொம்ப வீக் ஹார்ட். என்னால் முடியல. நான் தூங்கறேன். படம் முடிஞ்சதும் எழுப்புங்க." என்றவள் கண்ணை மூடி சீட்டில் சாய்ந்து விட்டாள்.
அவள் செயலை பார்த்தவன் சிரித்துக்கொண்டே படத்தை பார்த்தான்.
ஒரு கட்டத்தில் உண்மையாகவே தூங்கி போன சந்திரவதனி, அவன் தோளில் சாய்ந்து விட்டாள்.
அதை கவனித்தவன், மென்புன்னகையுடன் அவளுக்கு வாகாக அமர்ந்து கொண்டான்.
அடிக்கடி அவன் கண்கள் அவன் அனுமதி கேட்காமலே அவளை சைட் அடித்து கொண்டிருந்தது.
உண்மையாகவே படம் முடியும் வரை சந்திரவதனி தூங்கி தான் விட்டாள்.
கடைசியாக நேத்ரன் தான் அவளை எழுப்பினான்.
"ப்ச். தொந்தரவு பண்ணாதீங்க.." என அவள் முனக,
"எனக்கு ஒன்னும் இல்லை மா. கொஞ்ச நேரத்தில் க்ளீன் பண்ண வரும் ஆட்கள் உன்னையும் சேர்த்து பெருக்கிடுவாங்க. பரவாயில்லையா..?" என்றான் நேத்ரன் அவள் காதருகில்.
அவன் குரலிலும் கூற்றிலும் ஒருவாறு தூக்கம் கலைந்தவள், "ஐயோ! சாரி நேத்ரன்." என்று கூறிக்கொண்டே எழுந்துவிட,
"இட்ஸ் ஓகே. போலாம் வா." என எழுந்தான் அவன்.
அவளும் அவனை தொடர்ந்து வெளியே வந்தாள்.
இருவரும் அங்கேயே ஒரு டீ வாங்கி கொண்டு அமர்ந்தனர்.
"ஹப்பா! அநியாய மொக்க. இதுக்கு என்ன விமர்சனம் பண்ணுறது..?" என சந்திரவதனி புலம்ப,
"செகண்ட் ஹால்ப் கொஞ்சம் ஓகே தான். முதல் பாதி நெகட்டிவ்ஸ் நீ சொல்லு. இரண்டாம் பாதி நான் பாத்துக்கறேன்." என்றான் நேத்ரன்.
"ஆனாலும் உங்களுக்கு மன உறுதி ஜாஸ்தி."
"எடுத்த காரியத்தை பாதியில் விட்டு எனக்கு பழக்கம் இல்லை வதனி." உண்மையாக அவன் கூற,
"தெரியுது. தெரியுது.." என சிரித்துக்கொண்டாள் சந்திரவதனி.
சந்திரவதனியை அவள் பி. ஜி வாசலில் கமலநேத்ரன் இறக்கி விட்டான்.
"பேமிலி இங்க இல்லையா?"
"ம்ஹம். ஊரில் இருக்காங்க. நான் மட்டும் தான் இங்க இருக்கேன். டையர்ட்டா இருக்கு நேத்ரன். தூக்கத்தை தொடர போறேன்." என அவள் கூறிவிட,
"சரி தான். தூங்கு போ." என்றுவிட்டு அவனும் கிளம்பி விட்டான்.
அவளை பற்றி தெரிந்துகொள்ள ஆசை இருந்தாலும், அசதியாக இருப்பவளை தொந்தரவு செய்ய மனம் வராமல் கிளம்பி விட்டான்.
அப்போதே கேட்டிருந்தால் பின் வரும் பிரெச்சனையில் இருந்து தப்பி இருப்பானோ.
*******
வயலில் மேற்பார்வை பார்த்துவிட்டு திருக்குமரன் தன் அரிசி மண்டிக்கு வந்திருந்தான்.
அங்கிருந்த வேலையை முடித்தவன், ஆயாசமாக சேரில் சாய்ந்து அமர்ந்த போது, அவன் போனில் நோட்டிபிகேஷன் சத்தம் வந்தது.
அதை எடுத்து பார்த்தவன், வந்தது யு டியூப்பில் ஒரு வீடியோ வந்ததற்கான நோட்டிபிகேஷன் என்றதும், அதை வேகமாக திறந்தான்.
அவனவளை பார்க்கும் ஆர்வம் அவனுக்கு.
வீடியோ எதை பற்றி இருந்ததோ, அதெல்லாம் அவனுக்கு கவலை இல்லை.
அவன் கண்கள் தன்னவளை தான் ரசித்து கொண்டிருந்தது.
ஒரு முறை வீடியோ முழுதாக பார்த்து முடித்தவன், 'மன்னிப்புகள்' என்று எப்போதும் போல் கமெண்ட் செய்து, அதன் பக்கத்தில் ஒரு இதய ஸ்மைலியும் போட்டான்.
கமெண்ட் போஸ்ட் ஆனதும் மீண்டும் அதே வீடியோவை பல முறை பார்த்து கொண்டிருந்தான்.
அதே நேரம் சென்னையில் தன் ஆபிசில் அமர்ந்திருந்த அவனவளும், அந்த கமெண்ட்டை பார்த்தாள்.
அதை பார்த்ததும் அவளுக்கு கோபம் தான் வந்தது.
அவளும் எப்போதும் போல் அவன் கமெண்ட்டை டெலீட் செய்து விட்டாள்.
இது வழக்காக நடப்பது தான்.
சிறிது நேரத்தில் திருக்குமரன் கமெண்ட் பார்த்த போது, அவன் நினைத்தது போலவே அது அழிக்கப்பட்டிருந்தது.
எப்படியோ தன்னை அவள் கவனித்து கொண்டு தான் இருக்கிறாள் என்ற நிம்மதி அவனுக்கு.
'பிடிவாதக்காரி' என செல்லம்மாக அவளை திட்டிகொண்டவன் முகத்தில், கவலையில் ரேகைகள் தான் அதிகமாக இருந்தது.
இன்னுமும் அவனுக்கு யார் மீது தவறென்று தெரியவில்லை. என்ன முடிவு என்றும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு தெளிவாக தெரியும். அவனுக்கு வாழ்க்கை என்று ஒன்று இருந்தால் அது அவளுடன் தான்.
அவன் மனதில் முதலும் கடைசியாக இடம் பிடித்த பெண் அவள் தான்.
சில நாள் பழக்கத்திலேயே அவனை மொத்தமாக சுருட்டிக்கொண்டவள் அவள்.
இந்த காதல் அவனை போட்டு பாடாய் படுத்தியது. அதே நேரம் இனிமையாகவும் இருந்தது.
வலியும் இனிமையும் கலந்த உணர்வில் இருந்தவன், அவளை பார்க்க போகும் நாளுக்காக தான் காத்திருந்தான்..
Vp 4:
அடுத்து வந்த நாட்கள் சற்றே வேகமாக தான் ஓடியது.
கமலநேத்ரன் சந்திரவதனி இணைந்து செய்த விமர்சனம் பெரிய அளவில் ரீச் ஆகி இருந்தது.
அவர்கள் இருவரும் சேர்ந்து படத்தை அலசும் விதம் அனைவருக்கும் பிடித்திருந்தது.
சிறு சிறு நகைச்சுவை, விளையாட்டாகவே படங்களில் உள்ள குறைகளை சொல்வது, சில சமயம் அவர்களுக்குள் குட்டி சண்டை படத்தை வைத்து போட்டுக்கொள்வது என அவர்கள் ஜோடி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
ஒரு மாதம் முடிந்திருந்த நிலையில், அந்த நிகழ்ச்சியின் வெற்றியை கொண்டாட ஒரு சிறு சர்ப்ரைஸ் தன்விகா மற்றும் அனைவரும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
அன்று முதலில் கமலநேத்ரன் தான் வந்தான்.
அவனை வெளியிலேயே பிடித்த தன்விகா, "கொஞ்ச நேர வெயிட் பண்ணுங்க ப்ரோ. சந்திரா வந்துடட்டும்." என்று கூற,
"ஏன் மா! நான் உள்ளே வருவதற்கும், எம்.டி மேடம் வருவதற்கும் என்ன சம்மந்தம்..? இது என்ன அநியாயம்..?" என்றான் அவன் பாவமாக.
"ஒரு அநியாயமும் இல்ல ப்ரோ. இப்படி உட்காருங்க." என அவள் சேரை காட்ட, அவனும் மறுக்காமல் அமர்ந்து விட்டான்.
தன்விகாவுடன் எடிட்டர் மோகன், நடிகன் சம்பத், கேமரா பெண் ஈஸ்வரி மற்றும் வேறு சிலரும் இருந்தனர்.
எல்லாரும் அதிசயமாக அன்று காலையிலேயே வந்திருப்பதை ஆச்சர்யமாக பார்த்து கொண்டு தான் கமலநேத்ரன் அமர்ந்தான்.
சந்திரவதனியும் வந்ததும் தன்விகா இருவரையும் உள்ளே அழைத்து சென்றாள்.
சந்திரா கண்களாலேயே நேத்ரனிடம் என்னவென்று கேட்க, அவனும் தெரியாது என்பது போல் உதட்டை பிதுக்கினான்.
உள்ளே சிறிதாக அலங்கரித்து ஒரு கேக் வைத்திருந்தனர்.
"உங்க ஷோ கிராண்ட் சக்ஸஸ் சந்திரா. ஒரு சின்ன செலிப்ரேஷன்.." என தன்விகா கூற,
"தேங்க்ஸ் டி" என்றவள் நேத்ரனுடன் சென்று கேக்கை வெட்டினாள்.
"இன்னிக்கு லன்ச் நம்ம சந்திரா மேடம் ஸ்பான்சர் பண்ணுவாங்க" என மோகன் அறிக்கை விட,
"நான் எப்ப டா சொன்னேன்!" என அலறினாள் அவள்.
"என்ன சந்திரா, ஒரு சின்ன ட்ரீட் கூட இல்லைனா எப்படி..!" சோகம் போல் அவன் கேட்க,
"இன்னிக்கு மதியம் வரை ஓப்பி அடிக்க பிளான் பண்ணிடீங்க. அதானே..!" என்றாள் சந்திரவதனி இடிப்பில் கை வைத்து கொண்டு.
"அதெல்லாம் இல்ல சந்திரா. ஒழுங்கா வேலை பார்ப்போம். பிராமிஸ்." என சம்பத் கூற,
"உனக்கு இன்னிக்கே ஷூட்டே இல்ல தானே! சும்மா தான வந்த..!" என அவள் சரியாக கேட்க, அவன் திருதிருவென விழித்தான்.
அவள் விழிப்பதை பார்த்து அவளும் சிரித்து விட்டாள்.
"லன்ச் ஸ்பெஷல்லா சொல்லிடலாம். வேலை இருந்தா பாருங்க. இல்லைனா என்ஜாய் பண்ணுங்க. எனக்கு ஒரு ஒன் ஹவர் மட்டும் வொர்க் இருக்கு. முடிச்சுட்டு ஜாயின் பண்ணிக்கறேன்." என சந்திரவதனி கூறிவிட,
"எனக்கும் வேலை இருக்கு. எனக்கு ஒரு அரை மணி நேரம் மட்டும், ப்ளீஸ்.." என முடித்தான் கமலநேத்ரன்.
இவர்கள் இருவரும் ஒரு பக்கம் அமர்ந்துவிட, மோகனும் எடிட்டிங்கில் அமர்ந்தான்.
தன்விகாவும் சும்மா இருக்க வேண்டாம் என அங்கேயே ஒரு பக்கம், ஒரு காட்சி நடித்து முடித்தாள்.
மதியம் வரை சிறு சிறு வேலைகள் செய்து கொண்டிருந்தனர்.
மதியத்திற்கு ஸ்பெஷலாக சந்திரா ஆர்டர் செய்ய உணவு வந்ததும், அனைவரும் சேர்ந்து அமர்ந்து கலகலத்து கொண்டே உண்டனர்.
அப்போது தான் சம்பத் ஒரு யோசனை கூறினான்.
"உங்க ஜோடி பெரிய ஹிட் சந்திரா. ஏன் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சீரிஸ் நடிக்க கூடாது! அதுவும் இன்னிக்கு நிலைக்கு நீங்க நடிச்சா கண்டிப்பா பெரிய ஹிட் ஆகும்."
சம்பத் சொன்னது அனைவருக்குமே சரியாக தான் பட்டது.
அவர்கள் ஜோடி நன்றாக இருப்பதாக பல கமெண்ட்டுகள் வர தான் செய்கிறது.
நேத்ரனும் சந்திராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, "ஆமா சந்திரா. இது நல்லா ஐடியா. ஒரு டெஸ்ட் ஷூட் எடுத்து பார்ப்போமா..?" என்றாள் ஈஸ்வரி.
"நீ உடனே கேமராவை தூக்கிடுவையே..! கொஞ்சம் யோசிக்க விடு டி.." யோசனையும் விளையாட்டுமாய் தான் சந்திரா கூறினாள்.
"உங்களால் முடியுமா நேத்ரன்?" என அவன் புறம் திரும்பி சந்திரா கேட்க,
"டைம் தான் ப்ராப்லம் வதனி. அதான் யோசிக்கிறேன்." என்றான் அவன்.
"முதலில் டெஸ்ட் ஷூட் பண்ணுவோம் கமல். அப்புறம் சந்திரா ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணட்டும். எல்லாம் ஒத்து வந்தா டைம் அமைச்சுக்கலாம்." என ஈஸ்வரி கூற,
மற்றவர்கள் சொல்லும் போது யோசித்த நேத்ரனும், தன்விகா ஆசை என்றதும் சம்மதித்து விட்டான்.
"ஓகே. ட்ரை பண்ணலாம்.." என அவன் கூறிவிட,
"சூப்பர்" என மற்றவர்கள் கை தட்டினர்.
உணவு முடிந்ததும் ஒரு நல்ல பேக்ரவுண்ட் பார்த்து எல்லாம் செட் செய்து விட்டு, ஈஸ்வரி அவர்களை அழைத்தாள்.
அதற்குள் தன்விகா நேத்ரன், சந்திரா இருவருக்கும் லேசாக மேக் அப் செய்து விட்டிருந்தாள்.
இருவரும் எப்படி போஸ் கொடுக்க வேண்டும் என்று தன்விகாவும் சம்பத்தும் செய்து காண்பிக்க, அதே போல் நேத்ரனும் சந்திராவும் செய்தனர்.
போட்டோ எடுத்து முடித்து பார்த்த போது, அனைவருக்குமே திருப்தியாக இருந்தது.
"நல்ல லவ் ஸ்டோரி எழுது சந்திரா. கண்டிப்பா ஹிட் தான்." என ஈஸ்வரி கூற, சந்திரா முகம் லேசாக சிவந்து போனது.
அதை நேத்ரனும் கவனித்து விட்டான்.
அவனும் தன்னக்குள் சிரித்து கொண்டு நகர்ந்து விட்டான்.
**********
அன்று இரவு கமலநேத்ரனுக்கு சேதுபதி அழைத்திருந்தார்.
"என்ன பா கொஞ்ச நாளா போனே போடலையே..! அங்க என்ன நடக்குது..?" என அவர் கேட்க,
"பெருசா ஒன்னும் இல்லை பா. இப்போ தான் கொஞ்சம் பழக ஆரம்பிச்சிருக்கேன். அவசரப்பட வேண்டாம். யார் மனநிலையும் இன்னும் சரியா தெரியல. அதான் பொறுமையா இருக்கேன்.."
"ம்ம். எப்படியாது நான் கேட்டதை செய் கமல். அப்பாவோட கடைசி ஆசை இது. உன்னை தான் நம்பி இருக்கேன் கண்ணா." கரகரத்து ஒலித்த அவர் குரல் கேட்டு, அவனுக்கு கஷ்டமாக தான் இருந்தது.
"அம்மா இருக்காங்களா பா?" என கமலநேத்ரன் கேட்க,
"ம்ம். இருக்கா பா.." என அவர் போனை கொடுக்க, அந்த பக்கம் பவித்ரா போனை வாங்கி பேசினார்.
"எப்படி இருக்க நேத்ரா..?" என அவர் கேட்க,
"நல்லா இருக்கேன் மா. அப்பாவை கவலைப்படாம இருக்க சொல்லுங்க. அவர் அவசரத்துக்கு எதுவும் நடக்காது. ஆனா அவர் ஆசையை கண்டிப்பா நான் நிறைவேத்துவேன். எதையும் யோசிச்சு அவர் உடம்பை கெடுத்துக்காம பார்த்துக்கோங்க மா.."
"ம்ம். நான் பார்த்துக்கறேன் நேத்ரா. நீ கவலைப்படாம இரு பா." என அவர் ஆறுதலாக கூற, அன்னை கூற்றில் அவனும் நிம்மதி அடைந்து போனை வைத்தான்.
அவன் வைத்ததுமே அங்கு பவித்ரா கணவன் அருகில் அமர்ந்தார்.
"அவன் நீங்க சொன்னதை செய்ய தானேங்க போய் இருக்கான். சும்மா இப்படி கேட்டுட்டே இருந்தா, அவனும் என்ன பண்ணுவான்..!" மென்மையாக அவர் கூற,
"மன்னிச்சுடு பவி. ஏதோ நப்பாசை அவ்வளவு தான். உன்னை தான் நான் ரொம்ப கஷ்டப்படுத்தறேன்ல." கவலையுடன் அவர் கேட்க,
"போச்சு டா! இப்போ அவனை விட்டுட்டு என்கிட்டே வந்தாச்சா! ஏதோ ஒன்னு நினைச்சு கவலைபட்டுட்டே இருக்கணுமா உங்களுக்கு..! சும்மாவே இருக்க மாட்டிங்களா..?" கோபம் போல் அவர் அதட்ட, அவரோ மெலிதாக புன்னகைத்தார்.
"லவ் யு பவி" என அவர் மென்மையாக கூற,
"அய்ய! இந்த வயசில் தேவை தான் போங்க..!" என்றவர் வெட்கத்துடன் எழுந்து சென்று விட்டார்.
செல்லும் மனைவியை பார்த்து அவர் மனம் நெகிழ்ந்து தான் போனது.
பவித்ரா இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் அவரால் தன் ஆசையை சொல்லி கூட இருக்க முடியாது.
ஆனால் பவித்ரா அவரை பொருத்தவரை தேவதை தான். அவர் மனதை முழுதாக புரிந்து கொண்டவர் அவர்.
மனைவி, மகனின் அன்பில் அவர் மனம் எப்போதும் போல் குளிர்ந்து தான் போனது.
**********
மாலை ஏழு மணி இருக்கும்.
சந்திரா வேலை முடித்துவிட்டு தன்விகாவை பார்க்க அவள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள்.
வரும் வழியில் பைக்கை தள்ளிக்கொண்டு நடப்பது கமல் போல் இருக்க, அவன் அருகில் சென்று வண்டியை நிறுத்தினாள்.
அவளை பார்த்ததும் அவனும் லேசாக புன்னகைத்தான்.
"என்ன ஆச்சு நேத்ரன்..?" என கேட்டவள், அப்போது தான் அவனை கவனித்தாள்.
தலை கலைந்து, கையில் சில இடங்களில் சிராய்ப்புகளுடன் சோர்வாக தெரிந்தான்.
"ப்ச் பெட்ரோல் தீந்து போச்சு. கவனிக்காமல் விட்டுட்டேன் வதனி. வண்டி திடீர்னு நின்றதும், அதை கவனிக்கறேன்னு ரோட்டில் இருந்த குழியை பார்க்கலை. ஸ்கிட் ஆகிடுச்சு. கொஞ்சம் அடி." மெதுவாக கூறினான் கமலநேத்ரன்.
"அடப்பவிமே! அடிபட்ட உடலுடன் தள்ளிட்டு வருவீங்களா..! யாராவது ஹெல்ப்புக்கு கூப்பிட வேண்டியது தான..!"
"எனக்கு யாரும் தெரியாது வதனி. வீடு பக்கத்தில் தான். அப்படியே போய்டலாம்னு தான் நடந்துட்டு இருந்தேன். நான் ஓகே தான்." சிறு புன்னகையுடன் அவன் கூற,
"என்ன ஓகே! ம்ஹ்ம். ரொம்ப சோர்வா இருக்கீங்க. இங்கயே நில்லுங்க. நான் பெட்ரோல் வாங்கிட்டு வரேன். வண்டி ஸ்டார்ட் ஆகலைனா என்ன பண்ணுறதுனு யோசிக்கலாம்." என்றவள், அவன் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டாள்.
அவன் அக்கறை மனதிற்குள் இறங்கி தித்தித்ததில், அவனும் அமைதியாக நின்று விட்டான்.
சிறிது நேரத்தில் ஒரு பாட்டிலில் பெட்ரோலுடன் சந்திரா வந்து விட்டாள்.
அதை அவன் வண்டியில் ஊற்ற, நல்லவேளையாக அது ஸ்டார்ட் ஆகி விட்டது.
"ரொம்ப தேங்க்ஸ் வதனி" என அவன் மனதார கூற,
"அதெல்லாம் நீங்களே வச்சுக்கோங்க. ஹாஸ்பிடல் போயிட்டு வீட்டுக்கு போங்க. நிறைய அடி போலையே..!" என்றவள் அவனை ஆராய,
"இல்ல மா. சின்ன சிராய்ப்புகள் தான். வீட்டுக்கு போய் ஏதாவது மருந்து போட்டுக்கறேன். ஹாஸ்பிடல் இங்க இருந்து தூரம். டையர்ட்டா இருக்கு.." என்றான் அவன்.
அவன் குரலிலேயே சோர்வு தெரிந்தது.
அதற்காக அவனை அப்படியே விடவும் அவளுக்கு மனம் வரவில்லை.
"சரி ஹாஸ்பிடல் வேண்டாம். என் கூட வாங்க. பக்கத்தில் தான் தனு வீடு. பர்ஸ்ட் எயிட் பாக்ஸ் அவ கிட்ட இருக்கும். நானே க்ளீன் பண்ணி விடறேன்.."
"ஐயோ! அதெல்லாம் வேண்டாம் வதனி. நான் பார்த்துக்கறேன்." சங்கடத்துடன் அவன் மறுக்க,
"உங்களை வர்ரீங்களானு கேட்கலை நேத்ரன். வர சொன்னேன்." என்றவள், பேசிக்கொண்டே தன் வண்டி அருகே சென்றாள்.
அதில் ஏறி அமர்ந்தவள், ஏதோ யோசனையுடன் அவன் பக்கம் திரும்பினாள்.
"ஆமா உங்க வீடு எங்க..?" என அவள் கேட்க, ஒரு நொடி உள்ளுக்குள் தடுமாறியவன், தன் தடுமாற்றத்தை காண்பித்துக்கொள்ளாமல் வெளியில் தன் இருப்பிடத்தை கூறினான்.
"அட தனு வீட்டு பக்கத்தில் தான் இருக்கீங்களா..! இத்தனை நாளா ஏன் சொல்லலை..?"
"எனக்கே நாலு நாள் முன்னாடி தான் தெரியும் வதனி. ஒரே ஏரியான்னு மட்டும் தான் நினைச்சுட்டு இருந்தேன். தற்செயலா தன்விகாவை பார்த்தப்ப தான் வீடும் பக்கத்தில்னு தெரிஞ்சுது.." கோர்வையாக அவன் கூற, அவளும் அதை நம்பி விட்டாள்.
"ஓகே. ஓகே. போலாம்.." என்றவள், தன் வண்டியை எடுக்க, அவனும் ஒரு பெருமூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவளை தொடர்ந்தான்.
இருவரும் தன்விகா வீட்டிற்கு சென்றனர்.
சித்ராதேவி கமலநேத்ரனை வித்தியாசமாக பார்க்க, "வாங்க ப்ரோ. என்ன ஆச்சு சந்திரா..?" என அவர்களை முன்னாள் வந்து வரவேற்ற தன்விகா, "இவர் கமலநேத்ரன் மா. சொல்லி இருக்கேனே..!" என தன் அன்னைக்கும் அறிமுகப்படுத்தினாள்.
"ஓ! சொல்லி இருக்க பா. வா. என்ன ஆச்சு! அடி பட்டிருக்கு..!" என அவர் அக்கறையாக கேட்க, அவனோ அவரை ஆராயும் பார்வை பார்த்து கொண்டிருந்தான்.
அவர் கேள்வியை அவன் கவனிக்கவே இல்லை.
"வண்டி ஸ்கிட் ஆகிடுச்சு ஆண்ட்டி. அதான் இங்க கூட்டிட்டு வந்தேன். பர்ஸ்ட் எயிட் கிட் எடுத்துட்டு வா தனு." என சந்திராவே கூற, அவளும் உள்ளே சென்று எடுத்து வந்தாள்.
டெட்டால் தொட்டு அவன் கையில் இருந்த காயத்தை சந்திரா துடைத்த போது தான், நேத்ரன் சுயநினைவிற்கே வந்தான்.
"ஷ்! வலிக்குது வதனி.." என அவன் கூற, "அப்படியே விட்டால் செப்டிக் ஆகிடும். கொஞ்சம் பொறுத்துக்கோங்க." என்றவள் தொடர்ந்து அவன் காயங்களை சுத்தப்படுத்தினாள்.
"நீ பாரு சந்திரா. நான் தோசை வாக்கறேன். எல்லாரும் சாப்பிடுவீங்களாம்." என சித்ராதேவி கூற,
"ஐயோ பரவாயில்ல! நான் பாத்துக்கறேன்." என்றான் நேத்ரன் வேகமாக.
"இருக்கட்டும் ப்ரோ. என் வீட்டில் எல்லாம் சாப்பிட மாட்டீங்களா! ரொம்ப தான் பிகு பண்ணுறீங்க!" என தன்விகா கோபம் போல் கேட்க,
"ஒரு நாலு தோசை கொடுங்க மா" என அவன் சட்டென சரெண்டர் ஆகி விட்டான்.
அதில் சித்ராதேவி சிரித்துக்கொண்டே உள்ளே சென்று விட்டார்.
கையில் இருந்த காயங்களை சுத்தப்படுத்தி மருந்திட்டு முடித்த சந்திரவதனி, "காலில் அடிபட்டிருக்கா?" என்று கேட்க,
"ம்ம். முட்டியில் பட்டிருக்கு. நீ க்ரீம் கொடு. நானே க்ளீன் பண்ணி போட்டுக்கறேன்." என்ற நேத்ரன், "ரெஸ்ட் ரூம் எங்க தன்விகா?" என கேட்க, அவளும் காட்டினாள்.
நேத்ரன் ஒரு பக்கம் சென்றுவிட, சந்திராவும் வாஷ் பேசினில் தன் கையை அலம்பி கொண்டு வந்து அமர்ந்தாள்.
நேத்ரன் பக்கத்திலேயே குடி இருப்பதை சந்திரா கூற, தன்விகாவிற்கும் அது ஆச்சர்யம் தான்.
"தெரியவே இல்ல பாரேன்!" என அவளும் புலம்பி கொண்டாள்.
நேத்ரன் வெளியில் வந்து இவர்களுடன் அமர, "இனி என்ன ஹெல்ப் என்றாலும் என்னை கூப்பிடுங்க ப்ரோ. இங்க தானே இருக்கேன். தயங்க வேண்டாம்." என தன்விகா கூற,
"கண்டிப்பா மா" என்றான் அவன்.
சித்ராதேவி மூவரையும் உண்ண அழைக்க, மூவரும் சென்று அமர்ந்தனர்.
ஏதேதோ பேசிக்கொண்டே உணவை முடித்தனர்.
அத்தனை நேரமும் யாரும் அறியாமல் கமலநேத்ரன் சித்ராதேவியை ஆராய்ந்து கொண்டு தான் இருந்தான்.
அவன் கவனித்த வரையில், தான் வந்த வேலை சுலபமாக முடிந்து விடும் என்று தான் அவனுக்கு தோன்றியது..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.