அத்தியாயம் 4
செந்திலின் வீடு பழமையான தொட்டி வீடு போன்றது. முதலில் பெரிய தாழ்வாரம். அடுத்து தொட்டி வீடு போன்று இருந்தது. அங்கு இருபுறமும் இரு அறைகள் என்று நான்கு அறைகள் இருந்தன. அதில் இரு அறைகள் வடிவேல், சுமதி மற்றும் அவர்களது இரு பிள்ளைகளுக்கும், எதிர்புறம் இருப்பதில் ஒன்றில் வளர்மதியும், அவளது அன்னை தங்கமும் படுத்துக் கொள்ள.. அடுத்ததில் கந்தசாமி படுத்துக் கொள்வார். அடுத்தும்.. இதே போன்றே அமைப்புடன் இருந்தது. அதிலும்.. இரு அறைகள் இருபுறம் என்று நான்கு அறைகள் இருந்தன. அதில் ஒன்று.. சமையல் அறை! அடுத்தது சமான்கள், பொருட்கள் வைக்கும் அறை.. அதற்கு எதிரே இருந்த இரு அறையில் ஒன்று செந்திலுக்கும் அடுத்தது வேண்டாத சமான்கள் வைத்திருந்தனர். பின்னர் அடுத்து பின்வாசல் இருந்தது. அங்கு சிறு காய்கறி தோட்டமும் இருந்தன. வற்றிப் போய் மூடப்பட்ட கிணறு கூட இருந்தது. சுற்றிலும் சிறு மதிற்சுவர் என்று பெரிய பரப்பளவில் தான் அந்த வீடு இருந்தது. ஆனால்.. பழைய ஓட்டு வீடாக இருந்தது. திருமணத்திற்கு என்று வெள்ளையடிக்கப்பட்டிருந்தது.
வித்யாவுடன் வந்திருந்த அவளது சித்தப்பா பெண்ணும், அத்தையின் மருமகளும்.. அவளைப் பார்த்து உதட்டைப் பிதுக்கி காட்டிச் சிரித்தார்கள். வித்யாவும் திருதிருவென விழித்துக் கொண்டு நிற்கையில்.. அவளது கரத்தை வெதுப்பான கரம் பற்றவும், அவளது கவனம் செந்திலிடம் திரும்பியது. அவன் மென்னகையுடன் மறுகரத்தால் போகலாமா என்று முன்னால் கரத்தைக் காட்டி அவளை அழைத்துச் சென்றான்.
வாசலில் பெண்கள் கூட்டமாக நின்று.. பாட்டு பாடி.. ஆரத்தி எடுத்து.. புது மருமகளான வித்யாவை வலது கால் எடுத்து வைத்து உள்ளே அழைத்து வந்தார்கள். சாமியறைக்கு அழைத்துச் சென்று அங்கு.. விளக்கேற்ற வைத்தார்கள். பின்.. சிறு குடத்தில் மஞ்சள் நீரை கலக்கி.. அதில் தங்கம் மற்றும் வெள்ளி மோதிரத்தை போட்டு.. மணமக்களை எடுக்க கூறினார்கள்.
இருவரும் ஒரே நேரத்தில் கையை விட்டு துழாவி எடுத்தார்கள். அதில் இரு முறையும் செந்தில் தான்.. தங்க மோதிரத்தை எடுத்தான்.
உடனே வித்யாவுடன் வந்திருந்த.. அவளது உறவினர்கள் வித்யாவிடம் “கமான் வித்யா! அடுத்த முறை நீதான் எடுக்கணும். அவரோட கையை கிள்ளி விட்டாவது எடு..” என்றுக் கூறி ஆராவரித்தார்கள்.
சிலரோ “அவரோட கையை விடாதே.. கெட்டியா பிடிச்சு அதைப் பிடுங்கிரு.” என்றுப் பலவாறு அவளுக்கு யோசனை கூறினார்கள்.
வித்யாவின் செவியோரம் குனிந்த அவளது அத்தையின் மருமகள் “வித்யா! மாப்பிள்ளை முகம் உன்கிட்ட தான் இருக்கும். அப்படியே ஒரு கிஸ்ஸடிச்சுரு..! அதுல மாப்பிள்ளை மயங்கி நிற்கும் போது.. மோதிரத்தை எடுத்திரு..” என்றுக் கிசுகிசுத்தாள்.
அது செந்திலுக்கும் நன்றாக கேட்டது.
உடனே மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா.. “செந்தில் விடாதே! கடைசி முறையும் நீதான் ஜெயிக்கணும். எந்த சலசலப்புக்கும் அஞ்சாதே..” என்று அவனுக்காக வரிந்துக் கட்டிக் கொண்டு வந்தார்கள்.
உடனே பெண் வீட்டார்கள் “முதல்ல யார் பர்ஸ்ட் வருவாங்க என்கிறது முக்கியமில்ல.. கடைசில யார் முதல்ல ஜெயிக்கிறாங்க என்கிறது தான் முக்கியம். அது எங்க வித்யா தான்..” என்று அவர்களும் வரிந்துக் கட்டிக் கொண்டு வந்தார்கள்.
மாப்பிள்ளை வீட்டாரும் “செந்திலு..! நீதான்டா எடுக்கணும்.” என்று ஆராவரித்தார்கள்.
வித்யா அவனைப் பார்த்து புருவத்தை.. உயர்த்திக் காட்டிச் சிரித்தாள். பின் மூன்றாவது முறையாக இருவரும் ஒரே நேரத்தில் கையை விட்டார்கள். வித்யா அவனது கரத்தைப் பற்றித் தடுக்க நினைக்கையில்.. செந்திலே அவளது கரத்தில் மோதிரத்தை வைத்து அழுத்தினான். வித்யா வியப்புடன் கண்களை விரித்தாள். செந்தில் முறுவலிக்கவும், வித்யா கலகலத்தவாறு தனது கையில் இருந்த மோதிரத்தை உயர்த்திக் காட்டிச் சிரித்தாள்.
செந்திலின் சொந்தங்கள்.. “என்ன செந்திலு..” என்றாலும்.. அந்த கல்யாணக் கலாட்டாவை அனைவரும் இரசித்தார்கள். பின்னர் மணமக்களுக்கு பால் பழம் கொடுத்தார்கள். பிறகு அங்கு இருந்த வீட்டு பெரியர்கள் மற்றும் ஊர் பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசிப் பெற்றார்கள். காலில் விழுந்து எழுந்து.. வித்யாவிற்கு இடுப்பு வலியே பிடித்துக் கொண்டது. தனது புது சித்தியை ஆர்வத்துடன் பார்த்த செந்திலின் அண்ணன் பிள்ளைகளை அருகே அழைத்த செந்தில்.. சித்திக்கு வீட்டை சுற்றிக் காட்டக் கூறினான். இந்த வீட்டில் சுற்றிப் பார்க்க என்ன இருக்கிறது என்று நினைத்தாலும்.. அப்படி எவ்வாறு இருக்கிறது என்றுப் பார்க்க சென்றாள். பார்த்தளவில் அவளுக்கு பார்த்த சில கிராமத்து சினிமாக்களில் வரும் வீடு தான் நினைவிற்கு வந்தது.
பின் தனது மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டாள்.
‘என்னை விட எல்லா விசயத்திலும்.. கொஞ்சம் தாழ்ந்தவரா, சொல்றபடி கேட்கிற கிராமத்து மாப்பிள்ளை வே்ண்டும் என்று மேரேஜ் செய்துட்டு வீட்டை மட்டும் சிட்டி ஸ்டைலில் எதிர்பார்த்தால்.. எப்படி வித்யா! வெயிட் வெயிட் எல்லாம் உனக்கு பிடிச்சபடி மாத்தலாம்.’
ஆனால் இன்னொரு விசயத்திற்காக இந்த வாழ்க்கையிலும் ஜம்பமாக வாழலாம் என்று இருந்தது. அது என்னவென்றால்.. செந்திலின் தூரத்து உறவினர்கள் மற்றும் அந்த ஊர் மக்கள் அவளை அதிசயத்துடனும், ஆர்வத்துடனும்.. ஆங்காங்கு நின்றுக் கொண்டு.. பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து வித்யா புன்னகைக்கவும், அதற்கே அவர்களுக்கு அத்தனை சந்தோஷம்! அது வித்யாவிற்கு சிறு போதை போன்று இருந்தது.
பின் வாசலில் வந்து நின்றவளுக்கு அந்த சின்ன மதிற்சுவரைத் தாண்டி தெரிந்த பச்சை பசலென்ற வயல்வெளிகள் புத்துணர்வை தந்தது.
அப்பொழுது வித்யாவின் பெற்றோர் மற்றும் சித்தப்பா, சித்தி, அத்தை மற்றும் மாமா.. வந்து வித்யாவை மறுவீடு அழைக்க வந்துவிடவும், மணமக்கள் அவர்களுடன் பயணித்தவர்கள், மாலை நேரம் ஆறை தொட்ட போது.. மறு வீடு வந்திருந்தார்கள். போனவுடன் தனது அறைக்கு செல்ல இருந்தவளைப் பற்றி.. பானுமதி.. அவர்களுடைய அறைக்கு திருப்பிவிட்டாள். அங்கு சென்றதும் படுக்கையில் விழுந்தவளைப் பற்றி எழுப்பி.. குளித்துவிட்டு வரக் கூறி.. இரவு சம்பிரதாயத்திற்கு தயார்படுத்தினார்கள்.
மிகுந்த சோர்வுடன் இருந்த வித்யா.. அறைக்குள் தனியாக விட்டால்.. என்ன பேச வேண்டும் என்றுத் தீர்மானித்துவிட்டாள். அதுதான் வாழ்க்கை முழுவதும் இருக்கே இன்று டையர்டா இருக்கிறது என்றுச் சொல்லலாம் என்றுத் தீர்மானித்தவளுக்கு சிரிப்பும் வந்தது.
‘அந்த கூச்சக்கார மாமா சந்தோஷமாக ஒத்துக் கொள்வார்.’
அதன்படி எளிமையாக அலங்கரிப்பட்ட அறைக்குள் விட்டதும்.. பாலை பரிமாறிக் கொண்ட பின்.. வித்யா நினைத்ததைச் சொல்ல வாயைத் திறக்கையில்.. செந்தில் “இன்னைக்கு சோர்வா இருக்கும். நல்லா படுத்து ரெஸ்ட் எடுத்துக்கலாம்.” என்றான்.
அதற்கு வித்யா “பரவாலையே! மனைவிக்கு என்ன பேசினா பிடிக்கும், சந்தோஷப்படுவாள்.. உங்களைப் பற்றி நல்லவிதமா நினைப்பாள் என்றுக் கூடத் தெரியுமா மாமா!” என்றுச் சிரித்தவள், “ஐயம் வெரி ஹாப்பி..” என்றுவிட்டு.. நைட்டியை மாற்றிக் கொண்டு வந்தவள், கட்டிலின் ஒருபக்கம் படுத்து முதுகை காட்டிப் படுத்துக் கொள்ளவும், கட்டில் அசைந்ததில் அவனும் படுத்துவிட்டான் என்றுத் தெரிந்தது. வித்யா தலையில் அடித்துக் கொண்டாள்.
என்ன தான் மனைவியிடம் நல்ல பெயர் வாங்க என்று வசனம் பேசிவிட்டு.. பிறகு தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் நெளிவான், தன்னிடம் வழிவான் என்று நினைத்திருந்தாள். ஆனால்.. அப்படியெல்லாம் இல்லாமல், திரும்பி படுத்து உறங்கி விடவும், வித்யாவிற்கு.. சிறு ஏமாற்றமாக இருந்தது.
வித்யா மனதிற்குள் ‘இந்த மக்கு மாமாவை மாத்த வேண்டியது நிறையா இருக்கு போல..’ என்று நினைத்தவள், தொடர்ந்து ‘இப்படி பயப்படற ஆளா இருந்தால் தான்.. நல்லது. அவருக்கு ஆசையை கிளப்பிவிட்டு.. அடிமையாக்கி.. நம்ம பின்னாடி சுத்த வைக்கலாம்.’ என்று நினைத்தபடி உறங்கிப் போனாள்.
அடுத்த நாள் சம்பிரதாயமான வித்யாவின் தம்பி முறையில் இருந்த சித்தப்பா பையனை கொண்டு எண்ணெய் தேய்ப்பு சம்பிரதாயம் நடந்தது. பின்.. செந்தில் வித்யாவோடு.. அந்த வீட்டின் இளைய பட்டாளங்கள்.. ப்ரூக் ஃபீலுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்களுடன் வித்யா கொட்டமடித்தாள். செந்தில் அவர்களுடன் அதிகம் கலக்காது கேட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதிலும் கிண்டல் கேலிக்கு புன்னகையுமே பதிலாக தந்தான். ஆனால் வித்யா வளவளவென பேசியவாறு அடித்து பிடித்து விளையாடினாள். அதை செந்தில் சற்றுத் தள்ளி நின்று புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதை உணர்ந்து மேலும் வித்யா தன் வயது உறவுகளுடன் அதிகம் ஆட்டம் போட்டாள். அவள் எப்படிப்பட்டவள், அவளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தாள். மதிய வேளையைத் தாண்டிய பின்பே அனைவரும் வந்தார்கள். பின் சிறிது ஓய்வுக்கு பின்.. மருதமலைக்கு பயணித்தார்கள். வித்யாவின் அதே உறவுகள் உடன் வந்தனர். ஆனால் பெரியவர்கள் உடன் வருவதால் சற்று அடக்கி வாசித்தார்கள். மலைக்கு காரிலேயே சென்றவர்கள். இருள் பரவ தொடங்கும் வேளையில் மலையிறங்கி.. செந்திலின் வீட்டை நோக்கி செல்லும் போது.. வித்யாவிற்கு திடுக்கென்று இருந்தது.
ஆம் அவள் அவளது வீட்டை விட்டு.. இன்னொருத்தரின் வீட்டிற்கு செல்ல போகிறாள். இனி அங்கு தான் அவர்களைத் தன் உறவாக ஏற்று வாழப் போகிறாள். என்ன தான்.. அழகான திருமண வாழ்க்கைக்கு தயாராக இருந்தாலும்.. இந்த திடுக்கிடும் உணர்வை அவளால் தடுக்க முடியவில்லை.
இத்தனை நேரம் தனது உறவுகளின் வட்டத்திற்குள் இருந்தவளுக்கு.. இந்த உணர்வு தோன்றவில்லை. அவளது வீட்டில்.. அவளைப் பிரதானப்படுத்தி நடக்கும் ஒரு விழா என்பது மட்டுமே மனதில் இருந்தது. ஒரு மகளாய் பிறந்து வளர்ந்ததால்.. வித்யா சொந்தங்களின் சூழலில் எப்பொழுதும் இருக்க விருப்பப்படுவாள். ஆனால் அவன் தனித்து இருக்க வேண்டும் என்று நினைத்தாள். அவளுக்கு தனிமை ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும். இல்லையெனில் அவளே ஒதுங்கி விடுவாள். அவளது முடிவுகளை அவளே எடுக்க வேண்டும். மற்றவர்கள் எடுப்பதாய் இருந்தால்.. அவள் விருப்பப்படி தான் எடுக்க வேண்டும்.. என்றுத் தனித்து செயல்படுபவளாகவும், சுயமரியாதையுடனும், சுதந்திரமாகவும்.. வாழ்ந்த வித்யா தனது வாழ்வில் இன்னொருவனுடன் இணைய போகிறாள். அவளது முடிவை மட்டுமில்ல.. அவனுக்காகவும்.. சில சமயங்களில் முடிவு எடுத்தாக வேண்டும். அதே போல் தான் அவனுக்கும்..! அவளது வாழ்வில் இனி என்ன எதிர்பாராத நிகழ்வுகள் நடக்க போகிறது என்றுத் தெரியாது.. அவளது புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள்.
அவளிடம் அவளது பெற்றோர் கண்கள் கலங்க விடை பெற்ற பொழுது.. வித்யாவின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் பெருகியது. கணேஷன் பெருக தொடங்கிய கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு சற்றுத் தள்ளி நின்றுக் கொண்டு தலையை மட்டும் அசைத்தார். அது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமமானது. பானுமதி அவளது தலையை வருடிக் கொடுத்து “கெட்டிக்காரியா இருந்துக்கோடா! செந்தில் உன்னை நல்லபடியா பார்த்துப்பான்.. என்கிற நம்பிக்கை எங்களுக்கு வரதை விட.. உனக்கு வரணும். அதைக் கண்டிப்பா அவன் நிறைவேற்றுவான். நல்லாயிருடா!” என்றார்.
அருகில் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்த வித்யாவின் அத்தை “நாளைக்கு கறிவிருந்திற்கு நாங்க வருவோம் வித்யா! ஆனா விருந்தாளியா வருவோம். ஆமாடா! இனி எங்களை விட.. உன் ஹஸ்பென்ட் தான் நெருங்கிய உறவுக்காரன்” என்றார்.
அவருக்கு பின்னால் நின்றிருந்த கணேஷன் “அக்கா! பேச தெரியலைன்னா பேசமா இரு! எப்போ எதைப் பேசறதுனு தெரியலை.” என்றுக் கடிந்தான்.
பின் அனைவரும் விடைப்பெற்றுச் சென்றதும்.. தான் வித்யாவிற்கு திருமணம் என்றால் வெறும் கொண்டாட்டம் மட்டுமில்ல என்றுப் புரிந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு வந்தவளை.. வளர்மதி “வாங்க அண்ணி..” என்று உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள். அங்கு அவளது அறை என்று செந்திலின் அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கு அவளது உடைமைகள் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. கணேஷன் சீதனமாக கொடுத்த.. கட்டில், டிரெஸிங் டேபிள், பீரோ, சிறு ஸ்டேடி டேபிள், சிறு ஏர்குலர்.. என்று அந்த அறையை அலங்கரித்து இருந்தது.
வளர்மதி “அண்ணி! பெட்டியில் இருக்கிறதை பீரோவில் அடுக்கி தரட்டுமா..” என்றுக் கேட்டாள். இதுவரை அவளது வேலைகளை அவளே செய்துப் பழக்கப்பட்டிருந்த வித்யாவிற்கு.. அவளுக்கு வேலை செய்து தருகிறேன் என்று ஒருவர் கூறுவதும் நன்றாக தான் இருந்தது.
எனவே “உங்க பேர் என்ன சொன்னீங்க! ஸாரி் நேத்து சொன்னீங்க மறந்துட்டேன்.” என்றாள்.
வளர்மதிக்கு முகம் சுருங்கிப் போனாலும் “வளர்மதி அண்ணி!” என்றாள்.
“நைஸ் நேம்! இப்பவே லேட் நைட் ஆகிருச்சு! நான் கொண்டு வந்தது எல்லாத்தையும் அடுக்கி வைக்க ஆரம்பித்தால்.. லேட் ஆகிரும். அதனால.. நாளைக்கு.. வேண்டாம். நாளைக்கும் பிஸியா இருப்போம். அப்பறம் நான் புல்லா இங்கே தானே இருக்க போகிறேன். அப்பறம் இந்த வேலையைப் பார்த்துக்கலாம்.” என்றாள்.
வளர்மதி எதையோ வாயைத் திறந்தவள், பின் தயக்கத்துடன் சரி என்றுத் தலையை ஆட்டிவிட்டு செல்ல திரும்பினாள்.
வித்யா “வளர்மதி! கதவைச் சாத்திட்டு போயிரு.. அங்கே வாசலில் கொஞ்ச பேர் உட்கார்ந்திருக்காங்க! அவங்கெல்லாம் யார் என்றுத் தெரியாததால் எனக்கு கொஞ்சம் அன்ஈஸியா இருக்கு..” என்றாள்.
அதைக் கேட்டு வளர்மதியின் முகத்தில் சிறுத் திகைப்பு தோன்றி.. மறைத்தது. பின் அதற்கும் சரி என்று தலையை ஆட்டிவிட்டு வித்யா கூறியதைப் போல் கதவை சாத்திவிட்டு சென்றாள். சாத்தியிருந்த கதவைப் பார்த்து வித்யா முறைத்துக் கொண்டிருந்தாள்.
ஏனெனில் அது வேலைப்பாடுகள் செய்த பழையக் கால அது!
அழகான கதவு தான்.. ஆனால்.. அதில் அந்த கதவை வைத்து நேற்று அவளது சொந்தங்கள் கிண்டலடித்தது தான் நினைவிற்கு வந்தது.
நேற்று இரவிற்கு சாந்தி முகூர்த்தத்திற்கு என்று வித்யா தயாராகிக் கொண்டிருந்த பொழுது.. அவளின் அத்தை மருமகள் உடன் நின்றிருந்த சம வயது பெண்களிடம் “நாளைக்கு வித்யா என்ன செய்யப் போகிறாள் என்றுத் தெரியலை.” என்றுச் சிரித்தாள்.
மற்றவர்கள் “இன்னைக்கு விட்டுட்டு நாளைக்கு பத்தி பேசிட்டு இருக்கிறே..?” என்றுக் கேட்டார்கள்.
அதற்கு அவள் “நாளைக்கு நான்.. வித்யா வீட்டுக்கு போகலானு இருக்கேன்.” என்று மொட்டையாக கூறினாள்.
அவள் கூறிய விதத்தில் மற்றவர்களுடன் வித்யாவும் என்ன விசயம் என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
“வித்யா வீட்டுல இருக்கிறது.. பெரிய மரக்கதவு! புதுசுன்னா கூட.. நல்லா பிட்டா செட்டாயிருக்குனு இருக்கலாம். ஆனா.. அந்த கதவு ரொம்ப பழசா.. அதனால தேய்ஞ்சு போய்.. கேப் தெரியுது. அது வழியா சவுண்ட் எஃப்ட்ம் கேட்கும். கிட்டப் போய் ஒத்த கண்ணை மூடி.. பார்த்தா ஷோவே தெரியலாம்.” என்றுச் சிரிக்கவும், மற்றவர்கள் உடன் சிரித்தார்கள்.
அப்பொழுது வெட்கத்துடன் சிரித்தவளுக்கு.. தற்பொழுது.. தன்னை மட்டம் தட்டிச் சிரித்தது போன்று இருந்தது. எனவே அந்த கதவைப் பார்த்து முறைத்தவளுக்கு செந்தில் வந்ததும்.. இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.
பின் நினைத்த மாத்திரத்தில் வெட்கத்துடன் முகத்தை மூடிக் கொண்டாள்.
‘இப்படி வெட்கம் கெட்டு என்னை நெனைக்க வச்சுட்டானே.. இதெல்லாம் அவன் போட வேண்டிய பிளன்! நான் போட்டுட்டு இருக்கேன்.’
அப்பொழுது வளர்மதி கதவை திறந்துக் கொண்டு வந்து.. “அண்ணி! அம்மா உங்களைச் சாப்பிடக் கூப்பிட்டாங்க..” என்று அழைத்தாள்.
வெளியே வந்த வித்யா அங்கு பந்தி பாய் விரித்து அனைவருக்கும் இட்லியும் கிச்சடியும் பரிமாற பட்டிருப்பதைப் பார்த்தாள்.
மொத்தம் மூன்று வரிசையாக போடப்பட்டிருந்த பந்தியில் இரண்டு வரிசையில் ஆண்களும் ஒரு வரிசையில் சிறுவர் சிறுமிகளும் சாப்பிட அமர்ந்திருந்தார்கள். சிறுவர்கள் அமர்ந்திருந்த வரிசையில் இரு இலைகள் காலியாக இருந்தன. அது தனக்கும் தனது கணவனுக்கும்.. என்றுத் தெரிந்தது.
வித்யாவை பார்த்ததும்.. அவளது மாமியார் தங்கம் வித்யாவை அழைத்தார்.. அவளும் அமரப் போனாள். அதற்குள் அவளைத் தடுத்தவர் “இரு வித்யா! உன்ற புருஷனையும் வரச் சொல்றேன்.” என்றவர், வளர்மதியிடம்.. கேட்டார்.
தங்கம் “மலரு! அண்ணனையும் கூப்பிடச் சொன்னேன் தானே..” என்றுக் கேட்டார்.
வளர்மதி சட்னி இருந்த பாத்திரத்தை கையில் எடுத்தவாறு “அண்ணனை கூப்பிட்டேன்மா..! நீ போ நான் வரேனு சொல்லிட்டாங்க” என்றாள்.
தங்கம் “செந்திலு எங்கே..” என்றுக் கேட்டார்.
வளர்மதி “பொடகாளில இருக்கு (பின்வாசல்)” என்றாள்.
தங்கம் பின்வாசல் கதவிடம் சென்று நின்றுக் கொண்டு.. அங்கே தனது தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த செந்திலை அழைத்தார்.
“செந்திலு..”
“என்னம்மா..” என்றவாறு அருகே வந்தவனிடம் “சாப்பிட வாடா..” என்றார்.
அதற்கு செந்தில் “நான் எப்பவும்.. பத்து மணிக்கு தான் சாப்பிடவேனு தெரியும் தானே. இந்த இரண்டு நாளா.. வேற வழியில்லாம ஒன்பது மணிக்கு சாப்பிட்டுட்டு இருந்திருக்கேன்.” என்றான்.
தங்கம் “உன்ற பொண்டாட்டி உனக்காக காத்திட்டு இருக்காங்க இல்ல..” என்றார்.
செந்தில் எட்டிப் பார்த்தான். அங்கு வித்யா நின்றுக் கொண்டு அவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். செந்திலை பார்த்ததும்.. அவனது உறவுக்கார ஆண்கள் “ஏன்ற செந்திலு! மொத நாளே பொண்டாட்டியே காக்க வக்கறீயே..” என்றுக் கிண்டலடித்தார்கள்.
உடனே செந்தில் “நீ சாப்பிடு வித்யா! நான் அப்பறம் சாப்பிட்டுக்கிறேன். இனி சாப்பிடறதுகுனு எனக்காக காத்துட்டு இருக்காதே! நான் எல்லா நேரமும் லேட்டா தான் சாப்பிட்டு பழக்கம்..” என்றான்.
அதற்கு வித்யா “நான் சாப்பிடத் தான் போனேன். அத்தை தான்.. நீங்க வரட்டும் வெயிட் செய்யுனு சொன்னாங்க..” என்றாள்.
அதைக் கேட்ட மற்றவர்கள் ஒரு மாதிரி செந்திலையும் வித்யாவையும் பார்த்து சிரித்தார்கள்.
செந்தில் தனது அன்னையை பார்த்தவாறு இடுப்பில் கட்டியிருந்த வேட்டியை அவிழ்ந்து மீண்டும் கட்டினான். அவனின் பார்வைக்கும் அவனது செய்கைக்கு அர்த்தம் புரிந்த தங்கம் தப்பு செய்த பிள்ளைப் போல்.. விழித்தார்.
பின் செந்தில் வித்யாவிடம் “சரித்தான் நீ சாப்பிடு வித்யா..” என்றுவிட்டு அகன்றான்.
பின் அனைவரும் சாப்பிடவும், பெண்கள் பரிமாறினார்கள். வித்யாவிற்கு ‘அடப் பரவாலையே! புதுசா கல்யாணம் ஆனதாலே தனக்கு இராஜமரியாதையோ’ என்று நினைத்துக் கொண்டாள்.
ஆனால் ஆண்கள் சாப்பிட்டு எழுந்ததும் பெண்கள் பந்தியில் அமர்ந்திருந்தவர்களுக்கு.. வித்யாவை பரிமாறக் கூறவும், அவள் அதிர்ந்து தான் போனாள்.
பரிமாறுவதற்கு அவள் தயங்கவில்லை. கணேஷனது உறவினர் திருமணத்தில் இவ்வேலைகளை இழுத்து போட்டு செய்வாள். ஆனால் இங்கு அனைவரும் தரையில் அமர்ந்திருந்ததால்.. குனிந்தல்லவா பரிமாற வேண்டும். அதற்கு தான் அதிர்ந்தாள்.
நல்லவேளை அவளுடன் சாப்பிட்ட சில இளைஞர்கள் அண்ணி, அக்கா என்று இணைந்துக் கொண்டனர்.
பின்னர் செந்திலும் அவனது தந்தையும்.. அவருடன் இரு ஆண்களும், நாலு பெண்களும் வந்தார்கள். அந்த இரு ஆண்கள் மற்றும் நாலு பெண்களுக்கு வாசல் அருகேவும், செந்தில் மற்றும் கந்தசாமிக்கு நடுவீட்டிலும் பரிமாறப்பட்டது.
அவர்களுக்கு பரிமாற இட்லி வைக்கப்பட்ட பாத்திரத்தை வித்யா எடுக்கவும், அவளைத் தடுத்த தங்கம் “அவங்க சோறு தான் சாப்பிடுவாங்க..! முதல்ல மாமாவுக்கும், செந்திலுக்கும் வச்சுட்டு.. அப்பறம் அவங்களுக்கு வை! அவங்க ரொம்ப காலமா இங்கே வேலை செய்யறவங்க..” என்றார்.
வித்யா “ஓகே..” என்றுப் புன்னகைத்தாள்.
செந்திலும், கந்தசாமியும் சாப்பிட்டு எழுந்ததும்.. அவர்கள் முன் கூடத்திற்கு சென்றார்கள். தங்கமும், சில உறவுக்கார பெண்களும்.. காலியான பாத்திரங்களை.. கழுவ பின்கட்டில் எடுத்து வைப்பது.. மீதமானதை எடுத்து வைப்பது என்று வேலையில் ஈடுபடவும், வித்யா தனக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்ற பொழுது நேரம் பத்தரையை கடந்திருந்தது.
தனது அறைக்கு சென்று கதவை சாத்தினாள். அது பெரிய சத்தத்துடன் மூடவும் திகைத்தாள். அடுத்து தாழ்பாளை கொண்டு மூட எண்ணியவள், தாழ்பாள் போட முடியாமல் கதவு சற்று கீழே இருப்பதை பார்த்தாள். அதனால் சரியாக பொருந்தவில்லை. வித்யா அதிர்ந்து தான் போனாள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்துவிட்டாள்.
அவளுக்கு சீதனமாக வந்த ஆளை அமுக்கும் இலவம் பஞ்சு மெத்தையில் படுத்ததும்.. அவளது கண்கள் தானாக சொருகியது. திடுமென கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள், கதவருகே செந்தில் நிற்பதைப் பார்த்தாள்.
செந்தில் “பயந்துட்டியா! போக போக பழகிரும்.” என்றுச் சிரித்தான்.
வித்யா “நீங்களா..” என்று கைமறைவில் கொட்டாவி விட்டபடி நேரத்தைப் பார்த்தாள். அது பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
செந்தில் “உன்னோடது எல்லாம் அடுக்கி வைக்கலையா! மலரை அனுப்பினேனே!” என்றான்.
வித்யா “வளர்மதியா! வளருன்னு கூப்பிடுவாங்க.. இல்லைன்னா மதின்னு கூப்பிடுவாங்க.. அதென்ன மலர்?” என்றுக் கேட்டாள்.
செந்தில் “சின்ன வயசுல இருந்து அப்படித்தான் கூப்பிடுவோம். ஏன் எடுத்து வைக்கலை..” என்றவாறு வந்தான்.
அதற்கு வித்யா “இப்படி நடுராத்திரில எழுப்பி.. இப்போ இதுதான் முக்கியமா..” என்றுவிட்டு மீண்டும் படுத்தவளுக்கு அவனது கூச்ச சுபாவம் நினைவிற்கு வரவும், அவனைச் சீண்ட எண்ணி படுக்கையில் இருந்து எழுந்தவள் “இந்த நேரத்தில் புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு எது முக்கியம் என்றுக் கூட உங்களுக்கு தெரியலையே! உங்களை வச்சுட்டு நான் என்ன செய்யப் போறேன். பொதுவா.. இந்த சிட்டிவேஷன்ல நான் வெட்கப்பட்டு கூச்சப்பட்டு நிற்கணும். ஆனா நீங்க நின்னுட்டு இருக்கீங்க..! சரி என் புருஷன் தானே.. நானே பர்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வைக்கிறேன். இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ.. ஆனா அதுக்கு முன்னே.. அந்த க.. க… கத..” என்று வார்த்தை தந்தியடித்தாள்.
ஏனெனில் செந்தில் கண்களில் பளபளப்பும் உதட்டில் குறுஞ்சிரிப்புடன் அவளை நோக்கி மெதுவாக எட்டுக்களை எடுத்து வைத்து வந்துக் கொண்டிருந்தான். ஏனோ அவளது கால்கள் தானே பின்னே எட்டுக்களை எடுத்து வைத்தன.