PAPPU PAPPU
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதலில் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து தோழமைகளுக்கும் வாழ்த்துகள்.இது போல ஒரு அருமையான நிகழ்ச்சிகளை நடத்திய நிஷா&குரூப் க்கு வாழ்த்துகள் .இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால் சாமானியர்களுக்கு நன்மையே! தீமையே!
வணக்கம் தோழிகளே…!
நான் செல்வி சிவானந்தம் @ மித்ரவருணா
நம் SMS தளத்தில் பொங்கல் பண்டிகைக்காக இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த எம் இனிய தோழி ஸ்ரீகலா அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த ஆர்வமுடன் முனைந்த தோழி ஸ்ரீஷா மற்றும் அவர்கள் குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்…!
அடுத்து பட்டிமன்றம் என்ற ஒரு நிகழ்ச்சியை அறிவித்து அதில் “இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி சாமானியர்களுக்கு நன்மையா? தீமையா?” என்ற கேள்வியுடன் வந்தது மிகச் சிறப்பு.
பட்டி மன்றம் என்பது பல நல்ல கருத்துக்களை சில மேற்கோள் காட்டி, உலக நடப்புடன் இணைத்து அதன் நன்மை தீமைகளை அலசி ஆராய மக்கள் முன் நடத்தப் படும் ஒரு கலந்துரையாடல்.
அந்தக் கலந்துரையாடலில் பேச பல அறிஞர்களும், அவர்களுக்கு ஒரு நடுவரும் அமைப்பது முறை.
இங்கு இரு அணியாகப் பேச வந்த அணைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
முதலில், " இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சாமனியர்களுக்கு நன்மையே " என்ற தலைப்பில் பேசியவர்கள்
1. Preethi pavi
2. Samvaithi007
3. gnanavani
அது போல் , " இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் தீமையே! " என்ற தலைப்பில் பேசியவர்கள்,
1. Chitra Balaji
2. RamyaRaj
3. தாமரை
அடுத்து செல்வி சிவானந்தமாகிய நான் @ மித்ரவருணா இங்கு நடுவராக என்னுடைய கருத்துக்களை உங்கள் முன் எடுத்துக் கூற வந்து இருக்கிறேன்.
முதலில் என்னை நடுவராய் முன் மொழிந்த கதாசிரியர் தாமரைக்கு என் இனிய வணக்கங்கள் உரித்தாகுக…!
நடுவர் என்பது மிக மிக அபாயமான ஒரு நிலை. இக்கரைக்கு அக்கரை பச்சையாய் தெரியும் நதியாக நடுவர் அவர் சிந்தனையை எல்லாப் பக்கமும் அலை மோத விடுபவர். ஆனால் முடிவில் ஆழ்கடலில் கலக்கும் நதியாய் அமைதியாய் ஒரு தீர்வைக் கண்டு முன் மொழியும் திறன் வாய்ந்தவர்.
இத்தகைய ஒரு மிகப் பெரிய பணி என் முன் வைக்கப் பட்டுள்ளது. அதை நான் சீராக செய்து முடிக்க எல்லாம் வல்ல இறைவன் எனக்கு தெளிந்த சிந்தனை அருள தலை வணங்குகிறேன்.
சரி, இப்பொழுது நாம் நம் போட்டிக்கு வருவோம்….
பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு கும்மாளம் அடித்த தமிழர் திரு நாள் ஒரு காலத்தில் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யவே கொண்டாடப்பட்டது.
அங்கு சாமானியர்கள்தான் முதலில் மரியாதைக்கு உரியவர்களாக கருதப் பட்டனர்.
சாமானியர்கள் என்பவர் யார்…? என்ற கேள்வியே இன்றைய வழக்கில் முதன்மையானது.
சாமானியன் என்பவன் சாதாரண மனிதன். உலகில் வசதி வாய்ப்பில் பின் தங்கிய நிலையில் இருப்பவன்…
அடுத்து தொழில் நுட்பம் என்பது வாணிபம் மற்றும் எல்லா தொழில் துறையிலும் அறிவியலைப் புகுத்தி அதன் நிலையை உயர்த்துவது.
இப்போது நம் தலைப்புக்கு வருவோம்….
“இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி சாமானியர்களுக்கு நன்மையே! தீமையே!”
நன்மையா என்று யோசித்தால், ஆம் இந்த உலகத்தில் ஒரு மூலையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி நேரடியாக இன்னொரு மூலையில் இருக்கும் சாதாரண மனிதனும் காணும் வழி வகை செய்த அறிவியல் நன்மையே…!
தீமையா என்று யோசித்தால், ஆம் இன்றைய கைபேசியின் நவீன தொழில் நுட்பத்தால், உடனுக்குடன் எல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தாலும், நமக்கே தெரியாமல் நம்மையே படம் பிடிக்கும் அதிவேக வளர்ச்சியைப் பார்க்கும் போது இது நிச்சயம் தீமையே என்ற கருத்தே வலுக்கிறது.
ஆனால் இங்கு முடிவுக்கு வரும் முன் நம் இரு அணியினரின் வழக்கை ஒரு பார்வை பார்த்து வருவோம்.
முதலில்
சகோதரி சம்வதி சார்பில், நன்மையே என்ற அணிக்காக பேசிய பேச்சைப் பார்த்தால்,
சாமானியனை நாசாவுக்கு அனுப்பிய பெருமை தொழில் நுட்ப வளர்ச்சியே…!
கண்ணுக்கு புலப்படாத சாமானியரின் உழைப்பு, இன்று உலகெங்கும் பேசப்படும் பெருமை நம் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியே…!
மக்கள் மத்தியில் இருந்த ஏற்றத் தாழ்வுகளைக் களை எடுத்தது எங்கள் தொழில் நுட்பப் புரட்சியே என்ற அறை கூவல்…!
கடைசியாக, நம் நட்பின் அடிப்படை அன்பு பாலம் அமைத்த விதம் நம் தொழில் நுட்ப வளர்ச்சியால் மட்டுமே சாத்தியம் ஆனது நம் அனைவராலும் மறுக்க முடியாத உண்மையே…!
சரி அடுத்து நம் சகோதரி ரம்யா ராஜ் என்ன பேசியிருக்கிறார் என்று பார்த்தால்…
தீமையே என்ற அணிக்காக பேசி இருக்கிறார்….
ரம்யா மிகத் தெளிவாகக் கூறிவிட்டார், நம் தொழில் நுட்ப வளர்ச்சி அழிவை நோக்கி நம்மை இழுத்துக் கொண்டு செல்கிறது
நேருக்கு நேர் உள்ள சொந்தங்களுடன் பேசிப் பழகும் நம் இயல்பான வாழ்க்கை முறையை பாதிக்கிறது.
குழந்தை மனதை கெடுத்து, அவர்களை தவறான பாதையில் வழி நடத்து கின்றது.
நம் உலகம் அழிவுப் பாதையை நோக்கிப் போக தொழில் நுட்பத்தை தவறான வழியில் கையாள்வதே காரணம் என்று அறுதியிட்டு கூறுகிறார்.
அடுத்து சகோதரி ப்ரீதி பவி…
நன்மையே என்ற தலைப்பில் மிக மிக எளிமையாக தொழில் நுட்ப சாதனைகளை அடுக்கி விட்டார்.
மருத்துவத்துறையில் தொழில் நுட்ப வளர்ச்சி தன் நிகரற்றது என்ற கருத்து விவாதத்திற்கு அப்பாற்பட்டது
தொழில் நுட்பம் அதன் வளர்ச்சியால், நம் நேர விரயத்தைக் குறைத்து, அதனால் தொழில் வளர்ச்சியை உலகுக்குக் கொடுக்கிறது.
வீட்டில் இருந்தே உலகத்துடன் தொடர்பு கொண்டு எல்லாம் செய்ய முடியும்.
அதனால் நல்ல விஷயத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியை பயன் படுத்தினால் நன்மையே என்ற கருத்தை வழிமொழிகிறார்.
அடுத்ததாக நம் தோழி சித்ரா பாலாஜி தீமையே என்று தன் கருத்தை நம் முன் வைக்கிறார்.
அவர் தன் கருத்தை இன்றைய அதி நவீன ஸ்மார்ட் போன் ஒன்றை மட்டுமே எடுத்துக் கொண்டு நம்மைக் கவர்ந்து விட்டார்.
இந்த வளர்ச்சியால் அதிகம் பாதிக்கப்படுவது
குழந்தை மனத்தின் அதி வேக வளர்ச்சி
பார்வை இழப்பு
வெறித்தனமான விளையாட்டுக்கள்
அடிமையாய் ஆவது
முகமறியாத தீய நட்பின் தவறான வழி காட்டல்
நாகரீக மாற்றம்
நம் மரபை மீறிய களியாட்டம்
என்று மிகத் தெளிவாகக் காட்டி தொழில் நுட்பம் வளர்த்த அறிவியல் நன்மை தருவது போல் தீமையையும் சரி சமமாகத் தருகின்றது என்று விளக்கமாகக் கூறுகிறார்.
ஐந்தாவதாக நம் சகோதரி ஞான வாணி….
இவர் நன்மையே என்று பேசி, அதன் வளர்ச்சியால் தோன்றிய ஆர்கானிக் ஃபார்மிங் , புது இயந்திரங்களைக் கொண்டு செய்யும் பல வேலைகள் நமக்கு கொடுக்கும் நன்மைகள் மற்றும் ரசாயணம் இல்லாத காய்கறிகள்,மண் இல்லா விவசாய முறை எல்லாம் நம் தொழில் நுட்ப வளர்ச்சியால் மட்டுமே வந்தது.
அதில் தீமை சில பொருட்களால் இருந்தாலும் பல வளர்ச்சிகள் நமக்கு நன்மையே என்ற விளக்கம் தந்துள்ளார்.
கடைசியாக வந்தாலும் தீமையைத்தான் நன்மையைவிட அதிகமாகத் தருகின்றது என்று ஆணி அடித்து கூறியது நமது தோழி தாமரை.
தொழில் நுட்ப வளர்ச்சி
மனித ஆசையை பேராசையாக்கிய ஒன்று
போருக்குகென்று கண்டறியப் பட்டது இன்று சாமானியர்களுக்கு தீய செயல்கள் புரிய உதவும் கருவியாக மாறிய கொடுமை
தொழில் நுட்பம் கொடுத்த போதை, அது தீராது, நம்மை நாமே தண்டித்துக் கொள்ளும் கொடூரம்.
நாளைய நம் வாழ்விற்கு உறுதி அளிக்காத தொழில் நுட்பம்
இயற்கையை அழித்த செயற்கை முறை
நோயாளிகளாய் மக்களை மாற்றிய இயந்திர உலகம் ….
இப்படிப் பட்ட வளர்ச்சியால் தீமையே என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
எல்லா கருத்துக்களையும் முன்னிறுத்திப் பார்த்தால்….
ஒரு நடுவராக என் தீர்வைக் கூறுவதற்கு முன்…
ஒரு சாமானியனாக என் பார்வையில் தொழில் நுட்பத்தை நான் விவரிக்க ஆசைபடுகிறேன்.
நான் 5 வயதில் பள்ளிக்குச் செல்லும் போது இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி இல்லை.
நடந்துதான் பள்ளிக்கு சென்றோம். நாங்கள் 4 சமவயது குழந்தைகள் ஒன்றாக விளையாடிக் கொண்டு பள்ளிக்கு சென்ற சாலையில் சைக்கிள்கள் தான் மிகப் பெரிய வாகனம்.
இன்று உங்கள் பிள்ளைகளை நினைத்துப் பாருங்கள். அவர்கள் தனியே சாலையில் விட முடிகின்றதா…?
வாகனங்கள் ஒருபுறம்
மனிதர்கள் மறுபுறம்
இரண்டுக்கும் நடுவே
சின்னஞ்சிறார்களின்
மழலை ஓட்டம்
மந்தகாசம் எங்கே…?
ஓடுகின்றனரா…?
ஓட்டுகின்றோமா…?
ஒரு சாமானியனாக நான் 10 வயதில் எல்லா இடங்களுக்கும் விளையாடவோ, இல்லை எதுவும் சாமான் வாங்கவோ அனுப்பி வைக்கப் பட்டேன்.
இன்றைய நிலையில் அனுப்ப முடிகிறதா...?
ஆண் பிள்ளைகள் அனுப்பலாம்.
பெண் பிள்ளைகள் அனுப்ப முடியாது.
ஏன் முடியாது? விளையாட்டுப் போட்டிக்கு முறையான பயிற்சிகள் இருந்தால் நாடு விட்டு நாடு சென்று சாதிக்க முடிகின்றது. எத்தனையோ குழந்தைகள் ஆன்லைன் மூலம் தேர்வெழுதி பல தகுதிச் சான்றிதழ்கள் பெற்று வளம் பெருகின்றனர்.
இதற்குக் காரணம் தொழில் நுட்ப வளர்ச்சியா…? நம் சமுதாய மன மாற்றமா…?
இதே பதினைந்து வயதில், இன்றைய நான் வீட்டில் இருந்து கொண்டே புத்தகம் அல்லது பத்திரிக்கைகள் மூலம் மட்டுமே என் அறிவை வளர்த்துக் கொண்டேன். அப்போது இருந்த வானொலி நிலையங்களும் நம் தொழில் நுட்பம் தான். அது நமக்கு செய்தது நன்மையா தீமையா? என்றால் எனக்கு அது நன்மையே…! ஆனால் என் பெற்றோருக்கு நான் ஒரு மணி நேரம் கடந்து பாடல் கேட்டால் கெட்டுப் போய்விடுவேனோ என்ற அச்சம். இப்போதும் அதே நிலை தான் கைபேசிகள் அதனால் பல நன்மைகள் அதை உபயோகிக்க நாம் அனுமதிக்கும் விதத்தில் இருக்கிறது அதன் நன்மையும் தீமையும். நான் 12த் முடித்த பிறகும் என் பையனுக்கு, முதல் வருடம் பொறியியல் கல்லூரிக்கு கைபேசி வாங்கிக் கொடுக்க வில்லை.
ஆனால், என்ன ஆயிற்று அவன் தேவைக்கு என்னுடையதை உபயோகிக்க ஆரம்பித்தான். ஒரு மாதத்தில் என் கைபேசி அவன் பாடம் சம்பத்தப்பட்ட விஷயங்கள் கொண்ட படங்களால் நிரம்பி வழிந்தது. அடுத்த வருடம் நானே அவனுக்கு தேவை அறிந்து வாங்கிக் கொடுக்க என்னவரிடம் சொல்லி விட்டேன். இங்கு தொழில் நுட்பம் சார்ந்து அவன் கல்வி இருக்கும் போது நான் அதை வாங்கிக் கொடுக்கத் தான் வேண்டி இருக்கிறது.
ஆனால் அதை அவன் எதற்கு உபயோகம் செய்கிறான் என்று கவனிக்கும் என் பொறுப்பு அதிகம் ஆகின்றது.
அத்தோடு நான் தேடித் தேடி 18 முதல் 21 வயதில் படித்த கதை மற்றும் கருத்துப் புத்தகங்களை அவர்கள் இங்கு படிக்கிறார்கள். அது மட்டுமல்ல நாம் படிக்கும் போது நல்லதும் இருந்தது பொல்லாததும் இருந்தது.
நம் வழி நடத்தல் நமக்கு நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுத்தது. அதுபோல் அவர்களை பெற்றோர்கள் வழி நடத்தும் போது இந்தத் தொழில் நுட்பமும் நல்ல வற்றுக்கு பயன் படும்.
அடுத்து 25 வயதில் எனக்குக் கிடைத்த மருத்துவ உதவி. என் பிள்ளைபேற்றின் போது, 10 நாட்கள் ஆகியது நான் எழுந்து நடக்க. ஆனால் இன்றைய தொழில் நுட்பம், இன்று பிள்ளை பெற்றவர் 3ஆம் நாளில் எழுந்து கொள்ளும் அதிசயம், நம் கண் முன்னால் நடக்கிறது.
மேலும் நாம் ஒரு விஷயம் தெரிந்து கொள்ள ஒருவரை அணுகினால், தெரிந்தவர் கூட மறைக்கும் நிலை இப்போது இல்லை. ஒரு நிமிடத்தில் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒரு நல்ல மருத்துவர் பற்றிய விபரம் கூட நமக்கு கிடைக்கின்றது என்றால் அது இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால் அன்றி வேறு என்ன..?
ஒரு சாமானிய மனிதன் தன் உழைப்பால் உயர்ந்து தொழில் நுட்பத்தோடு சேர்ந்து வளரும் போது அவன் உலகத்தால் மதிக்கப் படுவான். அந்த விதத்தில் பார்க்கும் போது
இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி சாமானியர்களுக்கு நன்மையே என்ற விடையே சரியானது.
மேலும்….
தொழில் நுட்பத்தை சரியான வழியில் பயன்படுத்தினால் தொழில்நுட்பம் தரும் நன்மைகள் ஒவ்வொரு சாமானியருக்கும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய பயன் படும் என்ற உறுதியுடன், என் கருத்தை முன் மொழிகின்றேன். அதையே இன்றைய நம் மன்றத்தின் தீர்ப்பாக வழிமொழிகின்றேன்.
இப்படி ஒரு அருமையான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த என் இனிய தோழி ஸ்ரீகலாவிற்கும், இந்த SMS குழுமத்திற்கும், தோழி தாமரைக்கும், சகோதரி ஸ்ரீஷாவிற்கும் என் நன்றிகளை சமர்பிக்கிறேன்.
வாழ்வில் எத்தனை உயரம் சென்றாலும்
வாழ்வில் எத்தனை சிகரம் கடந்தாலும்
வாழ்வில் எத்தனை லகரம் வென்றாலும்
வாழ்வில் எத்தனை சிரமம் கடந்தாலும்
வாழும் முறைமைகள் கைகொண்டால்…
அன்பும் பண்பும் வழி கொண்டால்…
எந்த வளர்ச்சியும் நம் நன்மைக்கே….!
என்றும் அன்புடன்
செல்வி சிவானந்தம் @ மித்ரவருணா
அடுத்து நடுவரான மித்து மா க்கும் என் வாழ்த்துகள் .
தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நன்மையா?,தீமையா?
அருமையான தலைப்பு,அதற்கான நம் தோழமைகளின் பதிவுகள் சூப்பர்.
அதிலுள்ள நன்மை தீமைகளை நாம் அடுத்த தலைமுறைக்கு சொல்லி கொடுத்து சரியான முறையில் நல்வழிப்படுத்துவதில் பெற்றோரான நம்முடைய பங்கு அதிகம்.
நீங்கள் சொன்ன அனைத்து கருத்துகளும் ஏற்புடையது மித்து மா.உங்களின் தீர்ப்பு சரியானதே,வாழ்த்துகள் மித்து மா