அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!
இனிய தோழி,
எங்கெங்கோ பிறந்து எப்படியோ வளர்ந்த இருவர், தம் வாழ்வைத் திசை திருப்பும் விதியின் ஆட்டத்தில், ஓடாத ஓட்டம் ஓடி, தேடிய இலக்கை நாட, வழி மாற்றிய விதியின் கோரம். வாழ்வில் வலி ஒன்றே ஆதாரமாய் கொண்டு போராடும் நேரம்...
அவன் வாழ்வில் எல்லாம் பிழையாய் போன உறவுகள்!
அவள் வாழ்வில் எல்லாம் கனவாய் போன நினைவுகள்!
அமர் அவன் - வெற்றியின் இலக்கை விருப்பமில்லா வழக்கில், சீர்கெட்ட சமூகத்தில் தேடி, சீர் கெட்டு பேர் கேட்டுப் போனவன், தன் வாழ்வில் நிலை மீட்கப் போராடும் நேரம், விடி விளக்காய் வந்தவள், உயிர் தீண்டும் நேரம், துரோகத்தின் பிடியில் வயதின் கோளாறில் துரோகியாய் விட்டுப் போக, பாதை அறியா வெறியில், நட்பால் உயிர்த்தாலும், உணர்வைத் தொலைத்த பித்தனாய், பழியின் வெறியில் வேங்கையாய் வளைக்க....
அஞ்சலி அவள் - தோல்வியின் பாதையில் துவண்டாலும், தரம் கெட்ட சூழலில் வாழ்ந்தாலும், நேர்மையின் பாதையில் தங்கை, தம்பியை வளர்க்கப் போராடிய மூத்த உறவாய், தாய்மையின் திருவாய், காக்கப் போராடிய வீர மங்கையாய், தான் செய்த பிழைக்கு வருந்தி மறுகிய சேயாய் தவிக்க...
விதியின் ஓட்டத்தில் மீண்டும் சந்தித்த வேளை, பழியாய் வீழ்த்த நினைத்தவனை, பழியாய் காதல் கொண்ட மகள், காதல் என்னும் தாய்மையால், தானாய் இறங்கி வந்தவள், அவன் விதி கண்டு துடித்து, தன் நிலை மாற்றி நேர்னிலையில் காதல் ஒன்றே வாய்மையாய், இந்திரனைத் தாங்கியவள்....!
தன் காதல் மழையில், அவன் காதல் உயிர்க்க வைத்த வீர நங்கை, அவன் வாழ்வின் பாதையில் முள்ளாய் உறுத்திய விதியை, மதியால் விரட்டிய நேர்மை.
காதல் பாதையில் காலடி வைத்தவன், உணர்வின் தேடலை என்னென்று நான் சொல்ல, பேபி பேபி என்று அவள் உயிர் மூச்சில் வாழ்ந்தவன், அவள் மூச்சின் சுவாசத்தில் உணர்வாகி நின்றவன், வாழ்வில் ஜெயித்து வசப்பட்ட வேளையில்....
தன் காதல் காக்க தாயான தாயுமானவன், அவதாரம் கண்டு அசந்திட்ட நேரம், அமரஞ்சலி வாழ்வை திருப்பிய வாழ்க்கைப் பாதையில், காதலாய் காதலால் காதலில் ஜெயித்த காதல். இது மொத்தத்தில்,
'அமரஞ்சலி' -
காதலில் உயிர்த்த தாயதிகாரம்!
காதலில் குளித்த அமரதிகாரம்!
காதலில் சிலிர்த்த காதலதிகாரம்!
காதலில் ஜனித்த மகளதிகாரம்!
காதல் காதல் காதல் - அந்த
காதல் இன்றேல் சாதல்! - என
அம்பிகாபதி - அமராவதி
வழி வந்த அமரகாவியம் - இது
அமர் அஞ்சலின் ஆத்மாதிகாரம்!
அன்பெனும் மழையில் நனைய வைத்த காதல் கருவில், ஆத்மராகம் பாடிய அன்பின் பிடியில் தாயுமானவனின் தசாவதாரத்தில், எழுத்தரசி அவர்களின் நடை, பாவனை, திறன் கண்டு வியந்து, மனதை மீட்டிய காதல் காவியம் படித்த நிறைவில், இலை மறையாய் அமரகாவியம் காட்டிய அமரத்துவம் மனம் தீண்டிய நெருடலில் வாழ்வியின் எதார்த்தம் புரியவைத்த தோழியே! உன் கதைக் கரு கண்டு கலங்கும் மனதில், வாழ்வை வாழ்ந்து பார் அன்பின் வழியில் என்று காட்டிய தெளிவில், மனம் மிரண்டாலும், அன்பில் உயிர்த்து வாழவைக்கும் பண்பு என்று அறுதியிட்ட கதை.
அமரஞ்சலியின்
அமரகாவியம்
காதல் பாடம் சொன்ன
காவிய ஓவியம்!
வாழ்வின் தேடல் சொன்ன
காதல் காவியம்!
வாழ்த்துக்கள் தோழி, மேலும் பல பல உன்னத காவியம் படைக்க என் இனிய வாழ்த்துக்கள் தோழி, நன்றி