All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வான்மதியின் சிறுகதைகள் - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... நம்மிடையே வாசகராய் நன்கு பரிச்சயமானவர் இவர்... கதையோடு ஒன்றிய இவருடைய கருத்துக்கு நான் எப்போதும் ரசிகை... இப்போது அவர் சிறுகதைகள் பதிவிட வந்திருக்கிறார்... விரைவில் தொடர் கதை எழுத வாழ்த்துக்கள்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே, :smile1:

ஸ்ரீ அக்காவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கேட்டவுடன் என்ன ஏது எதுவும் கேட்காமல் த்ரெட் ஓபன் பண்ணி கொடுத்துட்டாங்க. அவர்கள் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். நன்றிகள் பல.

என் கருத்தை பார்த்து கதை எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்தியவர்கள் பல. அப்போதெல்லாம் சத்தியமாக எனக்கு அந்த எண்ணம் இல்லை. நாமும் எழுதலாமோ என்று எண்ணம் வந்ததும், என் கணவரிடம் சொன்னதற்கு தாராளமா எழுது என்று ஊக்கம் கொடுத்தார். மேலும் என் நலம் நாடும் என் தோழிகள் ஊக்கம் தந்ததால் சிறு கதையிலிருந்து ஆரம்பிக்கின்றேன்.

உங்கள் மேல் உங்களுக்கு உள்ள நம்பிக்கையை விட எங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை அதிகம் என்று என் தயக்கங்களை உடைத்து என்னை இங்கே பதிய வைத்த என் அன்பு தோழிகள் (AAKR) அனைவருக்கும் நன்றிகள்..

ஆரம்பம் தான். கதையை படித்து குறை நிறைகளை சொல்லி ஊக்கப்படுத்த உங்களை கேட்டு கொள்கிறேன்.:FlyingKiss::FlyingKiss:
 
Last edited:

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தையிடம் கற்றுக்கொள்ளுங்கள்

ராகுலும் ப்ரீத்தியும் விளையாடி கொண்டு இருந்தனர். ப்ரீத்தி எதையோ தப்பாக ஆடி விட்டால் என்று ராகுல் அவளிடம் சண்டை வளர்த்து கொண்டு இருந்தான். அது முற்றி அவன் ஏதோ கோவத்தில் அவளை அடித்தும் விட்டான். இவள் அழ ஆரம்பித்து விட்டாள்.

ராகுல், ப்ரீத்தி இருவரும் ஒரே தெருவில் எதிர் எதிர் வீட்டில் வசிப்பவர்கள். இருவரும் படிப்பது ஒரே பள்ளியில். ஆனால் ராகுல் ஐந்தாம் வகுப்பும், ப்ரீத்தி நான்காம் வகுப்பும் படிக்கிறாள். இருவரும் விளையாட்டு தோழர்கள். இருவருக்கும் சண்டை வருவது, பின் சமாதானம் ஆவது எல்லாம் சகஜம் தான். இருந்தாலும் இன்று அவன் கையில் வைத்திருந்த குச்சியை வைத்து அவளை அடித்து விட்டான். அது அவள் கையில் சிறு கீறல் விழுந்து விட்டதால் அவள் அழுது கொண்டே சென்று அவள் அம்மாவிடம் சொல்லி விட்டாள்.

இது எப்போதும் நடப்பது தானே என்று, அவன் எதுவும் கண்டு கொள்ளாமல் விளையாடி கொண்டு இருந்தான். ப்ரீத்தியின் அம்மா வந்து இவனை என்ன ஏது என்று கேட்பதற்குள் முதுகில் ஒரு அடி வைத்து, “ஏண்டா இப்படி அடிச்சு வச்சிருக்க பிள்ளையை” என்று கோபத்துடன் கேட்டாள்.

இவள் அடித்ததும் அவன் பயந்து போய் அழ ஆரம்பித்து விட்டான். “ஆண்ட்டி அவள் தப்பு தப்பா விளையாண்டா. சொன்னா ஒத்துக்குவே மாட்டைக்குறா. அதனால தான்” என்று அழுது கொண்டே சொன்னான்.

என்ன இருந்தாலும், பிள்ளை கையில ரத்தம் வருது. நீ அடிச்சேன்னு சாதாரணமா சொல்ற.

அதற்குள் ராகுல் அழும் சத்தம் கேட்டு அவன் அம்மா வர, அங்கே சண்டை அமர்க்களமாக தொடங்கியது.

ஏண்டி என் பையனை அடிச்ச? என்று ராகுலின் அம்மா சீற

அவன் மட்டும் என் பொண்ண அடிக்கலாமா? என்று ப்ரீத்தியின் அம்மா வாற

அவ என்ன பண்ணுனாலோ? இத்தனை நாள்ல ஒரு நாளாவது அடிச்ருப்பானா? அப்ப அடிக்கிற மாதிரி அவ ஏதாவது பேசி இருப்பா.

ஓஹ், அப்படி பேசுனா உன் பையன் அடிப்பான், நாங்க பாத்துகிட்டே இருக்கணுமாக்கும்.

நீ தாண்டி உன் பொண்ணுக்கு விளையாட ஆள் இல்லனு வந்த புதுசுல என் வீட்ல வந்து, தம்பி உன் விளையாட்டுல சேத்துக்கன்னு கெஞ்சுன. இனி என் பையன் உன் பொண்ணுகூட விளையாண்டான்னா என் பேரை நான் மாத்திக்கிறேன் டி.

உன் பையன் என்னடி சேத்துகிறது, இனி என் பொண்ணு விளையாட வந்தான்னா நான் என் பேரை மாத்திக்கிறேன் டி.

பெரிய பேரு. ஏற்கனவே லட்சணமா இருக்கு. இதுல மாத்த வேற போறாளாம். ஒரு வேலை மாத்துனாலாவது நல்லா இருக்கான்னு பாப்பும்.

ஆமா அங்க மட்டும் என்ன வாழுதாம். இங்க சொல்ல ஆரம்பிச்சா நாலு தெரு தள்ளி முடியிற மாதிரி பேரு. இதை நீ மாத்தணும்னா நாலு மாசமாவது ஆகும்.

இருடி என் புருஷன் வரட்டும் உன்ன என்னனு கேட்க சொல்றேன்.

உன் புருஷன் தானே என்ன னு ஒரு வார்த்தைய தவிர அவர்க்கு வேற தெரியாதே. அவரை அப்படி அடக்கி தான வச்சிருக்க.

நீ மட்டும் என்ன டி...... என்று எங்கோ ஆரம்பித்த சண்டை எங்கேயோ சென்று கொண்டு இருந்தது.

தெருவே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. இதற்கு காரணமானவர்கள் வீட்டில் பயந்து பயந்து நின்று இருவரையும் பார்த்து கொண்டு இருந்தார்கள். அப்போது வீடு வாசலில் நின்று இருந்த ராகுல் படியில் இறங்க, கால் தட்டி கீழே விழ, அவனை அங்கே இருந்து பார்த்து கொண்டு இருந்த ப்ரீத்தி “ஹே ராகுல் பார்த்து டா..." என்று ஓடி வந்து அவனை தூக்கி விட அவனும் “ஒன்னும் இல்லை ப்ரீத்தி” என்று எழுந்தான்.

இவள் ராகுல் என்று கத்தவும், என்ன ஏதோ என்று பார்த்த அனைவரும் பார்த்தது பார்த்தபடி நிற்க, ராகுலும் ப்ரீத்தியும் சேர்ந்து விளையாட ஆரம்பித்து இருந்தனர்.

சாரி ப்ரீத்தி ஏதோ கோவத்துல அடிச்சுட்டேன். இனி நம்ம பிரெண்ட்ஸ் சரியா? என்று ராகுல் கேட்க..

எனக்கும் ஒண்ணுமே இல்லடா.. வா நீ சொன்ன மாதிரியே விளையாடலாம். என்று விளையாட ஆரம்பித்தனர்.

இதை பார்த்த இருவரின் அம்மாவும் என்ன செய்ய என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்த படி நின்றார்கள். யார் பெயரை முதலில் மாற்றுவது என்று?

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று.
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல் இரவு


“கல்யாணம் நல்ல படியா முடிஞ்சுது. சாந்தி மூகூர்த்தத்துக்கு நல்ல நேரம் இப்போதைக்கு இல்லையாம்.. என்ன பண்ணணு தெரியல - ஜெயந்தி புலம்பி கொண்டு இருந்தார்..

என்ன பண்ண ஜெயந்தி, எல்லாம் நல்ல நேரம் பாத்து செய்ய வேண்டாமா? பொறுமையா இருமா - என்று அவளை சமாதானம் படுத்தி கொண்டு இருந்தார் –ஜெயந்தியின் கணவர் நடராஜன்.

இல்லங்க ஏற்கனவே நிச்சயம் முடிஞ்சு, பத்து மாசம் கழிச்சு தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.. எத்தனை தடை. சரி ஜோசியர் சொல்றதும் நல்லதுக்கு தான்.. நான் போய் அர்ஜுன் பாத்துட்டு வரேன். என்று ஜெயந்தி அவளின் ஒரே மகனும் கல்யாண மாப்பிள்ளையுமான அர்ஜுனை தேடி சென்றாள்.

அர்ஜுன் - அனன்யா திருமணம் இரு வீட்டு பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு நடந்த திருமணம். ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து நடந்த திருமணம். நல்ல குடும்பம், அம்மா இல்லாத பெண். நல்ல அழகான, அன்பான பெண் என்பதால் ஜெயந்திக்கு அனன்யாவை விடவே மனது இல்லை. ஆனால் திருமணம் நிச்சயக்கப்பட்டு ஒரு மாதத்தில் நடராஜனுக்கு சின்ன விபத்து கை, காலில் சின்ன அடி. எல்லோரும் பொண்ணு ராசி சரி இல்லை என்று சொன்னார்கள். ஜெயந்தி அடித்து சொல்லி விட்டாள். அந்த பொண்ணு ராசி தான் என் கணவர் உயிர் பிழைத்திருக்கிறார் என்று. பொண்ணு வீட்டுக்காரர்கள் கண்ணீர் மல்க நன்றி சொன்னார்கள்.

சரி என்று கல்யாணத்தை நான்கு மாதம் தள்ளி வைத்தார்கள். இரண்டு மாதம் கழித்து அர்ஜுன்-க்கு வெளி நாட்டுக்கு சென்று வர கூடிய வாய்ப்பு வந்தது. ஜெயந்தி அனன்யாவை புகழ்ந்து தள்ளி விட்டாள்.. என் மருமக ராசி தான் மருமக வர்ற நேரம் என்று.

அர்ஜூன்க்கு பெருமை தாங்கவில்லை. அவனுக்கும் அனன்யாவின் அமைதியான குணம் ரொம்ப பிடித்து விட்டது. வெளி நாடு சென்று வந்த பிறகு திருமணம் வைத்து கொள்ளலாம் என்று மேலும் நான்கு மாதங்கள் தள்ளி போனது.

இப்படி தள்ளி சென்று ஒரு வழியாக திருமணமும் முடிந்து விட்டது. இப்பொது சாந்தி முகூர்த்தத்துக்கு நாள் பார்க்க சென்ற போது ஜோசியர் இப்போதைக்கு நாள் சரி இல்லை நான்கு நாள் கழித்து வைத்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்.

அர்ஜுன் இந்த நாளை ரொம்ப எதிர் பார்த்து இருந்தான். ஏன் என்றால் அனன்யாவிடம் அதிகமாக பேசியது இல்லை. இருவரும் நேரில் சந்தித்தது கிடையாது. அதனால் இதை வெகுவாக எதிர் பார்த்து இருந்தான். ஜெயந்தி விஷயத்தை சொன்னதும் “அம்மா கண்டிப்பா இந்த ஜோசியம் நம்பி தான் ஆகணுமா?” என்று ஏமாற்றத்தோடு கேட்ட மகனை பார்க்க பாவமாக தான் இருந்தது ஜெயந்திக்கு ஆனால் வேறு வழி இல்லை.

டேய் ஒரு வாரம் தாங்க மாட்டியா? வாழ்க்கையை ஆரம்பிக்க போற எல்லாம் பாத்து தான் ஆகணும். - என்று ஜெயந்தி அவனிடம் சொல்லி விட்டு வந்திருந்த விருந்தினர்களை கவனிக்க சென்று விட்டாள்.

அர்ஜுன் அனன்யாவை சந்திக்க சென்றான். அங்கே அனன்யா தோழிகளின் கேலி பேச்சில் முகம் சிவந்து, அழகு தேவதையாக உக்காந்திருந்தாள்.

அவன் வந்ததும் எல்லா தோழிகளும் என்ன மாப்ள, பொண்ண பிரிந்து இருக்க முடியலையா? என்ன நைட் வர தாங்காது போலவே? என்று எல்லாம் கிண்டல் அடிக்க வெட்கத்தில் என்ன செய்ய தெரியாமல் தலை குனிந்து நின்றிந்தான்.

அனன்யா தான் வாங்க என்று அழைத்து கொண்டு உள் அறைக்கு சென்றாள், உள்ளே சென்றதும், அர்ஜுன் அனன்யாவை பார்த்து எவ்ளோ அழகா இருக்க தெரியுமா?

இவளுக்கு வெட்கம் தாங்கவில்லை. குனிந்த தலை நிமிராமல் உதட்டில் புன்னகை தவழ நின்றிருந்தாள்.

அர்ஜுன் தான் கேட்டான் நமக்கு சாந்தி முகூர்த்தம் நான்கு நாள் தள்ளி போய் விட்டது தெரியுமா?

என்ன? உண்மையாவா சொல்றீங்க? என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

இவளுக்கு உண்மையிலேயே அதிர்ச்சியா? இல்லை சந்தோசமா? என்று குழம்பி கொண்டு இருந்தான் அர்ஜுன்.

இல்லை, எதனால தள்ளி போட்ருக்காங்க? என்று அவள் மகிழ்ச்சியை மறைத்து கேட்டாள்..

இன்று நாள் சரி இல்லையாம். இன்னும் நான்கு நாள் கழித்து வைக்கலாம்ன்னு ஜோசியர் சொல்லிருக்காரு. – அதனால………. என்று எப்படி கேட்க என்று தெரியாமல் தவித்து கொண்டு இருந்தான்.

சொல்லுங்க.. அதனால - என்று எடுத்து கொடுத்தாள் அனன்யா.

கல்யாணம் தான் முடிஞ்சிட்டே. ஒரு சின்ன ஹூக், குட்டியா ஒரு முத்தம் கிடைக்குமா? என்று எப்படியோ கேட்டு விட்டான்.

இவளுக்கு அவனை நினைத்து கொஞ்சம் பாவமாக தான் இருந்தது. இருந்தாலும் இன்னும் நாலே நாலு நாள் தானே கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. அப்புறம் மொத்தமும் உங்களுக்கு தானே.. என்று வெட்கத்தோடேயே சொல்லி முடித்தாள்.

அனன்யாவை உடை மாற்ற சொல்லி அங்கு வந்த ஜெயந்தி - டேய் உனக்கு இங்க என்ன வேலை?

அம்மா நீயே உன் மருமகளை கொஞ்சிக்கோ. கட்டுன புருசனுக்கு அந்த உரிமை இல்லையா? இந்த சின்ன சிறுசுகளை பிரிச்சு வைக்கிறது பாவம் அப்டின்னு உனக்கு யாரும் சொல்லி கொடுக்கலையாம்மா ??

எல்லாம் எங்களுக்கு தெரியும். நீ போ என்று அவனை அனுப்பி விட்டு. என்னம்மா இப்ப சந்தோசமா? என்று அனன்யாவிடம் கேட்டாள்.

அனன்யா அழுது விட்டாள். அம்மா - எனக்கு அம்மா கிடையாது. எனக்கு மாத பிரச்னை இந்த தேதில வரும்னு நான் நினைக்கல. எப்பமும் முன்ன பின்ன வரும். இந்த மாதம் சரியா கல்யாணத்தோட வந்துட்டு. எனக்கு யார்கிட்ட சொல்லனு தெரியாம இருந்தப்ப என் தோழி தான் இப்படி ஆயிட்டுன்னு யாரிடமும் சொல்லாத, அப்டி சொன்னா கல்யாண வீட்ல எல்லாருக்கும் தெரியுற மாதிரி ஆயிரும். இல்லை வேற ஏதாவது பேசிருவாங்கனு பயம் காட்டுனா. எனக்கு தான் உங்க கிட்ட கேட்கலாம்னு தோணுச்சு ஆனா உங்க கிட்ட சொன்னதுக்கு, எனக்காக ஜோசியத்து மேல பழி போட்டு. ரொம்ப நன்றி மா.

என்னடாமா இதுக்கெல்லாம் அழுதுகிட்டு எனக்கு ஒரு பொண்ணு இருந்தா செய்யமாட்டனா? இப்ப இந்த விஷயத்தை சொல்லியே தள்ளி போட்ருக்கலாம். ஏற்கனவே உன்ன பத்தி தப்பு தப்பா பேசுன ஆட்கள் அவுங்க முன்னால உன்னை விட்டு கொடுக்கமுடியாது அதனால தான். நல்ல நேரம்ன்னு சொன்னா எல்லாரும் நம்பிருவாங்க பாரு. அர்ஜுன் கிட்ட நான் மெல்ல பிறகு உண்மையை சொல்லிறேன். அவன் புரிஞ்சிப்பான். இது வேற யாருக்கும் தெரியவேண்டாம். போ போய் உடுப்பு மாத்திட்டு நல்ல ஓய்வு எடு.

சரிம்மா. உங்கள அம்மான்னு கூப்பிடலாம்ல. என்று தயங்கி தயங்கி கேட்டாள்.

கண்கலங்க அவளை அணைத்து கொண்டார்.
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளும் நானும்...

வடிவு வேற இன்னும் ஆளை காணும். வேலைன்னா சரியான நேரத்துக்கு வரணும்னு தெரிய வேண்டாம்? இவங்களை எல்லாம் வச்சுக்கிட்டு நான் படுற பாடு. இதுல இவங்க வேற அதை காணும் இதை காணும்னு. கண்ணு முன்னால இருந்தாலும் நான் தான் வரணும் எடுத்து கொடுக்க, என்று காலையிலேயே வசை மாரி பொழிந்து கொண்டு இருந்தாள் நந்தினி.


காலை நேர பரபரப்பில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், கணவனை அலுவலகத்துக்கு அனுப்பி விட்டு தானும் வேலைக்கு கிளம்ப வேண்டும் என்ற அவசரத்தில் வீட்டு வேலைக்காரி வடிவு வேறு எப்போதும் ஏழு மணிக்கெல்லாம் வருபவள் இன்று எட்டு மணி ஆகியும் வராததால் புலம்பி கொண்டு இருந்தாள்.

நந்துமா, என் கண்ணாடி மட்டும் எடுத்துதாமா, என்று கணவன் விஸ்வா கெஞ்ச,

அம்மா, என்னுடைய ஸ்கூல் டைரி காணும் என்று அவளுடைய இளைய மகன் ரிஷி ஒரு பக்கம் கத்த,

அம்மா எனக்கு இன்னும் டிபன் பாக்ஸ் ரெடி பண்ணலயா? ஸ்கூல் பஸ் வந்துரும்மா.. என்று மூத்த மகள் வெண்ணிலா துரிதப்படுத்த

என்ன செய்ய, ஏது செய்ய என்று தெரியாமல் அத்தனை கோபமும் வேலைக்கு வரும் வடிவு அக்கா மீது தான் திரும்பியது,.

நந்தினி வீட்டில் வேலை செய்யும் பெண் தான் வடிவு. தினமும் காலையும், மாலையும் வந்து சாப்பாடு செய்து, சமையல் அறை வேலை எல்லாம் அவள் பொறுப்பு. இன்று தாமதமாக வந்தாள்.

வா மா மகா ராணி, வர்ற நேரமா? இங்க எல்லா வேலையும் நானே பார்த்துக்க வேண்டிய இருக்குது. எதை தான் நான் பார்ப்பேன்? நானும் வேலைக்கு கிளம்ப வேண்டாமா? சம்பளம் மட்டும் சரியா ஒண்ணாம் தேதி கேட்டு நிக்குறீங்கல்ல. அதே மாதிரி எல்லாத்துலயும் இருக்கனும். இங்க என் மண்டை உருளுது. ஏன் இவ்ளோ நேரம்?

அம்மா, என் மாமியாருக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலை. அதனால வீட்ல எல்லா வேலையும் பார்த்து வச்சுட்டு, அவுங்களுக்கு கஞ்சி எல்லாம் வச்சுட்டு வர்றதுக்கு கொஞ்சம் நேரம் ஆகி போச்சுமா என்று வடிவு அவள் கதையை சொல்ல,

அதுக்கு ஏத்த மாதிரி நீ உன் வேலையை சீக்கிரமே முடிக்கணும். இப்படி நீ வேலைக்கு போற வீட்ல எல்லாம் சொல்ல முடியுமா? போ போய் வேலையைப்பாரு.

வடிவு ஒரு நாளும் வேலைக்கு விடுப்பும் எடுக்க மாட்டாள், தாமதமும் ஆகாது. இன்று அவள் மாமியாருக்கு வேலை பார்க்க முடியாமல் போனதால், இவளுக்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது. நொந்துகொண்டு நந்தினி விட்டு வந்த வேலைகளை தொடர்ந்தாள்.

பிள்ளைகளை அனுப்பி விட்டு, கணவர் கிளம்பியதும், அவள் குளித்து கிளம்ப மணி ஆகி விட்டது. அவள் அலுவலகத்துக்கு என்றும் பத்து நிமிடம் முன்னமே செல்பவள், நேரம் தவறாமை முக்கியம் அவளுக்கு.

இவள் அலுவலகத்துக்கு செல்லவும், மணி பத்து ஆகவும் சரியாக இருந்தது. அப்பாடா லேட்
ஆகலை என்று பெருமூச்சு விட்டு அமரவும்,

ஆபீஸ் பாய் வந்து உங்களை மேனேஜர் கூப்பிடறார் மேடம் என்று சொல்லி விட்டு சென்றான்.

அங்கு மேனேஜர் கத்தி கொண்டு இருந்தார். இவங்களை எல்லாம் வச்சுக்கிட்டு என்னோட தலை தான் உருளுது.

நந்தினி, "எக்ஸ்கியூஸ் மீ சார்" என்று அனுமதி வேண்டி உள்ளே செல்ல,

வாங்கம்மா, இன்னும் கொஞ்சம் மெல்ல வர்றது, ஏன் இவ்ளோ சீக்ரம் வந்தீங்க? என்று மேனேஜர் கத்த

சார் நான் ஒன்னும் லேட்டா வரலையே, அப்புறம் என்ன சார்.

என்னம்மா, உண்மையிலேயே மறந்துட்டா? இல்லை மறந்த மாதிரி நடிக்கீங்களா? இன்னைக்கு டெண்டர் கோட் பண்ணனும், சோ எல்லாரும் ஒன்பது மணிக்கு வரணும்னு நேத்து சொல்லி இருந்தேன். நீங்க எப்ப வரீங்க? என்று கோவத்தில் சீறினார்.

அவளுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது. அய்யயோ அதனால தான் எப்பவும் லேட்டா வர்ற லேட் லாவண்யா கூட சீக்ரம் வந்துட்டா போல, எப்படி மறந்தோம். இன்னைக்குன்னு பார்த்தா வடிவும் லேட்டா வரணும் என்று மனதுக்குள் நினைத்தவள். சாரி சாரி சார், வீட்டுல வேலைக்காரி வர லேட் ஆயிருச்சு, எல்லா வேலையும் நானே பார்க்க வேண்டிய சூழ்நிலை அதான் மறந்துட்டேன். ஒன்ஸ் அகைன் சாரி சார் என்று கெஞ்சினாள்.

இப்ப வந்து கெஞ்சி என்ன பண்ண? MD வந்துட்டாரு. என்ன பிடிச்சு கத்துறாரு. வேலைக்காரி வரலைன்னா அதுக்கேத்தாப்புல நீங்க கெளம்பனும். இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லாதீங்க.

சார், தினமும் சீக்ரம் வர்றவ தானே, இன்னைக்கு மட்டும் தான் லேட்டா வந்திருக்கான். இப்படி திட்டறீங்களே சார்,.

தேவைன்னு சொல்ற நேரத்துக்கு வரணும். அதை தான் எல்லாரும் கேட்பாங்க. சரி நிற்காம போய் வேலையை பாருங்க. பன்னிரண்டு மணிக்கு டெண்டர் அதை ஞாபகத்துல வச்சுக்கோங்க. என்று அவன் MD இடம் வாங்கிய திட்டை எல்லாம் இவளிடம் கொட்டி தீர்த்து விட்டான்.

அவங்க அவங்க கஷ்டம் அவங்களுக்கு தான் தெரியும், என்று மனதுக்குள் திட்டி கொண்டே தன் இடம் வந்து சேர்ந்தாள்.

அப்போது தான் உரைத்தது. காலையில் வடிவிடம் தன் கோபத்தை காட்டியது. தனக்கு ஒரு காரணம் போல் தானே அவளுக்கும், அவளும் என்னை போல தானே. நான் அலுவலகத்தில் வேலை செய்கிறேன். அவள் வீடுகளில் வேலை பார்க்கிறாள். அவளும் நானும் ஏதோ ஒரு வகையில் ஒன்று தான். இரண்டு பெரும் வேலை பார்க்கும் இடம் தான் வேறு. ஒரு பெண்ணான நானே அவள் கஷ்டத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் இவர்களுக்கு எங்கே புரிய போகிறது, என்று வடிவை திட்டிய தன் மடத்தனத்தை நினைத்து நொந்து கொண்டாள்.

மனதில் ஏதோ ஒரு தெளிவு பிறந்த மாதிரி இருந்தது. அடுத்த நாள் வடிவுக்கு விடுப்பு கொடுத்து, மாமியாருக்கு உடம்பு சரி ஆனதும் வா என்று சொல்லி விட்டாள். அவள் வீட்டுக்கு வர்ற நேரமாவது அவளுக்கு மிச்சம் ஆகுமே என்று தான்.

பெண்களே முதலில் பெண்களை நாம் மதிப்போம்.
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆற்று பங்களா

meceaDSC02034.jpg

என்னடி காலைல உங்க அம்மாட்ட செம்ம விருந்து போல... வாசனை எங்க வீடு வரை வந்தது. ஆனந்தி செல்வாவை வாரினாள்.

அட நீ வேற ஏண்டி? எங்க அம்மா உள்பாவாடை தைக்க துணி எடுத்து கொடுத்துச்சு. அதை தச்சு கொடுத்தேன். அதனால தான் இந்த கிழி.

ஏண்டி நல்லா தைக்கலயா?

இல்ல, என்னனு தலைப்பு போடாம நோட்ல எழுதி இருந்தேன். பட்டியாலா பேண்ட் குள்ள குறிப்ப எடுத்து அதை வச்சு தைச்சதுல, இன்ஸ்கார்ட் பேண்ட் ஆயிட்டு. அதான். என்று செல்வா கவலையோடு சொல்லி கொண்டு இருக்க,

நிறுத்த முடியாமல், வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தாள் ஆனந்தி.

வேண்டாம்டி. நீ கூட என்கிட்டே பிளவுஸ் தைக்க கொடுத்திருக்க, ஞாபகம் வச்சுக்க.

சரி சரி, விடு.. செல்வா. உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்.

என்ன? உங்க வீட்ல இன்னைக்கு கறி குழம்பா? நாக்கை சொட்டை போட்டு கொண்டு செல்வா கேட்க

எப்ப பாரு அதுலயே இரு. அது இல்லடி. அந்த ஆத்து பங்களா இருக்குல்ல…

எந்த ஆத்து பங்களா? நம்ம ஊர்ல ஏதுடி பங்களா?

அதுதான் நம்ம மாங்காய் களவாடுவோமே? அது பக்கத்துல பெரிய வீடு ஒன்னு ரொம்ப வருசமா பூட்டியே கிடக்குதுல்ல.. அந்த வீடு தான். அது பேய் வீடாம்டி. அங்க நெறய பேச்சு சத்தம் கேட்குதாம்டி. ஆள் நடமாட்டம் இருக்கறதா வேற சொல்றாங்க. நம்ம கிராமம் முழுதும் இது தான் பேச்சு.

என்னடி இப்டி சொல்ற? அப்ப இவ்ளோ நாள் நம்ம சாப்பிட்டது பேய் வீட்டு மாங்காவா? அய்யயோ இனி எப்படி மாங்காய் திருடுறது? பேய்க்கு பகல்ல கண்ணு தெரியுமா ஆனந்தி?

ஐயோ கடவுளே ஊர்ல ஒரே ஒரு ப்ரெண்ட் வச்சி இருக்கவங்க பூரா இப்டி தான் கஷ்டப்படணும் போல..?

செல்வா, இவ்ளோ நாள் இல்லாம இப்ப என்ன புதுசா பேய் அது இதுன்னு சொல்றாங்க. வாடி அப்டி என்ன தான் இருக்குனு நம்ம போய் பாத்துட்டு வருவோம்.

ஏய், பேய் நடமாட்டம் இருக்குன்னு சொல்ற. அங்க போக கூப்பிட்ற? லூசு.

இல்லடி, பேய் எப்படி இருக்கும்? என்ன செய்யும்? எல்லாம் தெரிஞ்சிக்க ஆசையா இருக்குடி. வாடி வாடி போகலாம்.

அடியே ஆனந்தி, எனக்கு வேற அடுத்த மாசம் என் மாமன் பரிசம் போட வாரான். இப்ப பேய் கீய் பிடிச்சுதுன்னா கஷ்டம்டி.

அப்படியாவது உன்னிடம் இருந்து தப்பிப்பான்ல.

செல்வா முறைத்து கொண்டு நிற்பதை பார்த்து, சரி சரி என் செல்லம்ல இன்னைக்கு சாயந்தரம் வா. சும்மா என்ன தான் இருக்குதுன்னு பாத்துட்டு வருவோம்.

சரி வாரேன். பேயை பாக்க பிசாசு கூட போக போறேன் பாரேன். உன் கூட சேர்ந்ததுக்கு இதெல்லாம் செஞ்சு தான ஆகணும்.

சரியா ஆறு மணிக்கு அந்த மாங்காய் மரத்துக்கிட்ட வந்துரு. நானும் சரியா வந்துறேன். என்று சொல்லி ஆனந்தி வீட்டிற்கு சென்றாள்.

மாலையில் தோழிகள் இருவரும் அந்த ஆற்று பக்கத்தில் உள்ள, அந்த பாழடைந்த பங்களாவுக்கு சென்றார்கள். உள்ளே நுழையும் வரை எந்த சப்தமும் இல்லை. உள்ளே நுழைந்ததும், கதவு படார் என அடித்து சாத்தியது. செல்வமணிக்கு வேர்த்து கொட்டியது.

ஏய் ஆனந்தி, வாடி போயிரலாம். பேய் படத்துல நடக்குற மாதிரியே இருக்குடி.

அது காத்துல சாத்தி இருக்கும். அப்டிலாம் ஏதும் இருக்காது. நீ வா என்று அவளை தைரியம் காட்டி கூட்டி சென்றாள் ஆனந்தி.

உள்ளே ஒரு அறையில், இருவர் பேசி கொள்ளும் சத்தம் கேட்டது. ஆனந்தி மெல்ல அங்கே எட்டி பார்த்தாள். பேச்சு சத்தம் கேட்டது. ஆனால் ஆள் அங்கே யாரும் இல்லை. இப்போது ஆனந்திக்கும் பயம் தொற்றி கொண்டது.

என்ன ஆனந்தி, யாரையும் காணும்?

ஆமாடி, எல்லாரும் சொன்னது உண்மையா இருக்குமோ?

பின்னாலயே நகர்ந்தனர். பின்னால் எது மேலயோ மோதி கொண்டார்கள் இருவரும். பின்னால் திரும்பாமலேயே தூண் என்று இருவரும் நகர அங்கேயும் இடித்து கொள்ள, இருவரும் ஒரு சேர திரும்ப அங்கே இவர்களை போலவே ஆச்சு அசலாக இருவர்.

ஆஆஆ என்று கத்தி கொண்டு இருவரும் ஓட ஆரம்பித்தனர். கதவு எல்லாம் பூட்டி கொண்டது.

ஓடி சென்று, அங்கே பூஜை அறை மாதிரி ஒன்று இருந்ததும், அதன் உள்ளே நுழைந்தார்கள். அங்கே ஒரு பூசாரி உக்காந்து பூஜை செய்து கொண்டு இருந்தார். அவரிடம் அய்யா, இங்க யாருக்கு பூஜை பண்ணறீங்க?

அவர் கடமையே கண்ணாக அவர் வேலையை செய்து கொண்டு இருக்க, அங்கே இருந்த படத்தை பார்த்தவர்கள் அதிர்ந்தார்கள். அது சாமி படம் அல்ல, மாறாக அந்த பூசாரி படம் மாலை போட்டு பிறப்பு, இறப்பு என்று பதிவிட்டு இருந்தது.

ஏய் ஏய் என்னடி ஆனந்தி, அவர் படத்துக்கு அவரே பூஜை பன்றாரு? ரொம்ப பயமா இருக்கு ஆனந்தி.

அவர்கள் பார்த்து கொண்டு இருக்கும் போதே அந்த பூசாரி எழுந்து சென்று அந்த படத்திற்குள் சென்று மறைய,

இருவரும் மயக்கம் வராத குறையாக, ஓடி மாடி ஏறினார்கள்.

மாடி படி ஏறவும், சரியாக ஒரு வயது பெண் அந்த மாடியின் ஜன்னலில் இருந்து, குதிக்கவும் சரியாக இருந்தது.

இவர்கள் பதறி, ஏய் ஏய் நில்லு என்று ஓடி சென்று பாக்க கீழே யாரும் இல்லை. என்னடி குதிச்சவளை காணும்? அதுக்குள்ள எங்க போனா? ஒரு வேலை தப்பிச்சிருப்பாளோ?

சரி அவ தப்பிச்சது இருக்கட்டும். நம்ம தப்பிக்க வழிய பாப்போம். வா. என்று செல்வமணியை இழுத்து கொண்டு செல்ல,

அங்கே மற்றொரு கதவு இருந்தது. அதை திறக்க முடியவில்லை. பின்னால் இருந்து ஒரு குரல். தள்ளுங்க நான் திறக்கிறேன்.

ஏய் செல்வா பின்னால ஏதோ குரல் கேட்குதுடி. திரும்பி பாரேன். ஆனந்திக்கு இதயம் பட பட வென அடித்து கொண்டது.

ஏன் நீ திரும்பி பார்க்க மாட்டியா? செல்வா சீண்ட ஆரம்பித்தாள்

திருடுற மாங்காய் முதல்ல நீ தான சாப்பிடுவ? இப்ப மட்டும் நானா? நீயே முதல்ல பாரு. என்று நொடித்து கொண்டாள் ஆனந்தி

நேரம் பாத்து பழி வாங்கிறியா பாவி பாவி. செல்வா பின்னால் திரும்பி பார்த்தாள். குரல் வந்த திசையில் யாரும் இல்லை. ஹே ஆனந்தி யாரும் இல்லடி பாரேன் என்று அவளை சுரண்ட, அடுத்தது இருவரும் திரும்ப பின்னால் அகோரமாக ஒரு பெண் நின்றாள். இருவரும் ஆஆஆ என்று கத்தி கொண்டு ஓடினர்.

ரொம்ப பயமா இருக்குடி. பயத்துலயே செத்திருவோம் போல. என்று செல்வா ஆனந்தியிடம் புலம்பி கொண்டு இருந்தாள்.

அவளிடம் இருந்து ஒரு பதில் இல்லை.

அடியே ஆனந்தி அடியே, என்று சுத்தி முத்தி பார்த்து கொண்டு இருந்தவள் ஆனந்தி பக்கம் திரும்பி பார்க்க அங்கு ஆனந்தி இல்லை.

இவள் அப்டியே பின்னால் விழுந்து எழுந்து ஓட, அவள் வந்த கதவு திறந்து இருந்தது. தப்பித்து போகவா? ஆனந்தி எங்க போனா?

ஆனந்தி, ஆனந்தி, என்று அவள் கூப்பிட்டது அவளுக்கே கேட்டிருக்காது. ஒரு பதிலும் இல்லை.

அவள் இருக்கும் நிலையிலேயே கதவுக்கு பின்னால் கருப்பாக ஏதோ உருவம் இருப்பது தெரிந்தது. அது வேறு அந்த பக்கம் திரும்ப பயம். மேலே யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது, பாத்திரங்கள் எல்லாம் உருளும் சத்தம் கேட்டது. இவளுக்கு அந்த உருவம் அவளையே பார்த்து கொண்டு நின்றது வேறு கூட கொஞ்சம் பயம் பிடித்து கொண்டது. கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.

உள்ளே போகவும் பயம். சரி வெளியில் போன பிறகு யாரையாவது கூட்டி வந்து ஆனந்தியை காப்பாற்றலாம் என்று வெளியில் வர பாக்க, அந்த உருவம் இவளை நோக்கி வந்தது. இவள் அடித்து பிடித்து தப்பித்தால் போதும் என்று ஓட்டம் எடுத்தாள்.

வெளியில் வந்ததும் நன்றாக இருட்டி விட்டது. கதவு படார் என்று மறுபடி சாத்தி கொண்டது.

ஐயோ இப்ப எப்படி ஆனந்தியை காப்பாத்துறது. என்று யோசித்தவள் சரி ஆனந்தி அண்ணனை போய் கூப்பிடுவோம். என்று முடிவு செய்து அங்கே போனாள்.

அங்கே போய் நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்கவும், அவள் அம்மாவும் அண்ணனும் விழுந்து விழுந்து சிரிக்க இவள் பேயறைந்தார் போல பார்த்தாள்.

அம்மா போதும் நான் உங்க பொண்ண காப்பாத்த கேட்குறேன். நீங்க என்னடானா ஏதோ காமெடி பார்த்த மாதிரி சிரிக்கிறீங்க. வாங்கம்மா. பாவம் ஆனந்தி அங்கே தனியா மாட்டிக்கிட்டா..

அடியே செல்வா, உனக்கு என்ன ஆச்சு? ஆனந்தி மதியமே வீட்டுக்கு வந்தவ தான் வீட்டை விட்டு வெளியேவே போகலை. அவ ஏதோ உடம்பு முடியலன்னு படுத்தவ தான்.. இன்னும் எந்திரிக்கல. போய் பாரு.

என்னனனன……..து? ஆனந்தி……… வீட்லலலலலல இருக்காளா? அப்ப என் கூட வந்தது? என்று கேட்டு விட்டு அப்டியே மயங்கி சரிந்தாள்.



ஹேய் எந்திரிடி, எந்திரி எந்திரிச்சு தொலையேன்டி..

ம்ம் என்ன? மெதுவாக கண் விழித்துபடி கேட்டாள் லாவண்யா..

படம் முடிஞ்சுது. வா போகலாம்.. பேய் படம் பாக்க வந்ததும் தூங்க வேண்டியது. உன்னை எல்லாம். தலையில் அடித்து கொண்டு கிளம்பினாள் சுருதி.

நானும் வரேண்டி தனியா விட்டு போகாதடி என்று அவள் பின்னாலயே ஓடினாள் லாவண்யா..
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தொலைந்(த்)த நிமிடங்கள்

ஸ்ரீ அகிலன் மதுரையில் புகழ் பெற்ற உயர்தர கல்வி நிறுவனத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். இப்போதெல்லாம் கல்வி கற்று கொடுக்கும் இடங்களை கல்விக்கூடம் என்று உரைக்க முடியவில்லை. என்று கல்வி தொழில் ஆகி விட்டதோ அன்றே அது கற்று கொடுக்கும் இடங்கள் நிறுவனங்கள் ஆகி விட்டது. பல மாடி கட்டிடம். அதில் புத்தக மூட்டையை சுமந்து சுமந்தே நம் பிள்ளைகள் முதுகெலும்பு அற்றவர்களாகி விட்டனர். எங்கும் கணினி மயம். ஸ்மார்ட் கிளாஸ். ஆங்கில மொழி நடமாடும் இடம். அந்த பள்ளியில் என் பிள்ளை படிக்கிறான் என்பதே பெருமை என்று கருதும் பெற்றோருக்கு மத்தியில் ஸ்ரீ அகிலனின் பெற்றோரும் விதி விலக்கல்ல.

ரிஷி நர்மதா தம்பதியின் ஒரே மகன் ஸ்ரீ அகிலன். இருவரும் வேலை பார்க்கிறார்கள். ரிஷியின் வருமானம் போதவில்லை என்ற காரணத்தால் அகிலன் ஆறு மாத கைக்குழந்தையாக இருக்கும் போதே நர்மதா வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். ரிஷியின் பெற்றோர் இல்லாத நிலையில் நர்மதாவின் தாயிடம் அகிலன் ஒப்படைக்க பட்டான்.

அகிலன் பிறக்கும் போதே குறை மாத குழந்தை. தாயின் அணைப்பிலேயே வைத்திருந்து தேற்றி வளர்க்கப்பட்ட குழந்தை. ஆறு மாதத்தில் இருந்து அந்த அணைப்பு இல்லை என்றானதும் ஏங்க துவங்கியவன். இரெண்டு மாதம் அவன் அன்னையின் ஸ்பரிசத்திற்காக ஏங்கி அழுதவன் அது தினம் தினம் மறுக்கப்பட அந்த ஏமாற்றமே நிரந்தரமாக அந்த அழுகையும் நின்று போனது. பசித்தாலும் அழமாட்டான். எதற்கும் ஒடுங்கியே பழகி விட்டான். அது அந்த நேரத்தில் “என் பிள்ளை பசித்தாலும் அழமாட்டான்” என்று பெருமை தான் பட வைத்தது.

நர்மதா வேலையில் நல்ல பெயர் வாங்க என்று நேரம் காலம் பார்க்காமல் உழைக்க, ரிஷி அப்போதைக்கு குடும்ப வருமானம் உயர வேண்டும் என்று உழைக்க, இருவருக்கும் பிள்ளை என்ற ஒன்று மூன்றாம் பட்சமாகி போனது.

இரவில் வெகு நேரம் கழித்து வரும் பெற்றோர்களை காண கூட முடியாமல் அவன் தூங்கி விட, தூங்கும் போதே வந்து, தூங்கும் போதே வேலைக்கும் சென்று விட, பெற்றோரின் கொஞ்சல்களும், அணைப்புகளும் அவனுக்கு தூங்கும் போது மட்டும் கிடைக்கும் கனவாகி போனது. அவன் பள்ளியில் படிக்க ஆரம்பிக்கும் போது, வித்யாசமான சூழ்நிலை, புது புது நண்பர்கள் என்று உற்சாகமாக தான் சென்றான். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, பள்ளிக்கு சென்று திரும்பும் அவனிடம் புத்தக பையை வாங்க கூட ஆள் இல்லாத நிலை என்று படிப்பிலும் ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது.

அவன் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது,

"ஸ்ரீமா எழுந்திரு, மணி ஆயிட்டு எட்டு மணிக்கு ஆட்டோ வந்திரும்" நர்மதாவின் வழக்கமான காலை பல்லவி தொடங்கியது.

அவன் எதையும் கண்டு கொள்ளாமல் உறங்க, இரண்டாம் முறை எழுப்பி எழவில்லை என்றதும், "இப்போ எந்திரிக்க போறியா இல்லையா?"

அதற்கும் அசைவு இல்லை."நான் எத்தனை வேலையை தான் பார்ப்பது இவனை எழுப்பி ஸ்கூல்-க்கு அனுப்புறத்துக்குள்ள எனக்கு பைத்தியமே பிடிச்சுரும்" பொறுமை காற்றில் பறக்க வார்த்தையில் எழுப்ப முடியாமல் அடித்து எழுப்ப, அவன் காலை பொழுது அழுகையுடன் தொடங்கியது.

"எதுக்கு பிள்ளையை அழ வைக்குற?" என்று அங்கலாய்த்து கொண்டே தன் உறக்கத்தை தொடர்ந்தான் ரிஷி.

"உங்களுக்கென்ன, நிம்மதியா தூங்குவீங்க நான் தானே கஷ்டப்படறேன்" என்று அவனை இழுத்து சென்றாள்.

பல் துலக்க, குளிக்க வைக்க, பால் குடிக்க வைக்க, சாப்பிட வைக்க, என்று ஒவ்வொரு பணிக்கும் அடித்து அடித்து தான் அவனை செய்ய வைத்தாள். அவனுக்கு எதையும் தானாக செய்ய வேண்டும் என்ற அந்த நடைமுறையே இல்லாமல் போனது. பள்ளி விட்டு வந்ததும், அவன் பாட்டி பால் ஆற்றி கொடுக்க, அருந்துபவன் கொஞ்ச நேரம் டிவி பார்த்து விட்டு, அப்படியே உறங்கி போய் விடுவான். நர்மதா வீட்டுக்கு வந்த பிறகு அவனை எழுப்பி, அதன் பிறகு வீட்டு பாடங்களை முடிக்க வைத்து, அதற்கும் அடித்து துவைத்து, இதுவே வழக்கமாகி போனது.




ஒரு நாள்,

அகிலன் அவனே அவனிடம், யாரிடமோ பேசுவது போல பேசிக்கொண்டு இருந்தான். தன் தாயிடமும் அவனை அவனே சுட்டி காட்டி,"மம்மி, இவனுக்கு இப்போ வயிறு பசிக்கிற மாதிரி இருக்கு" என்றான்.

அதை கேட்டு நர்மதா சிறு பிள்ளையின் குறும்பு என்று ரசித்து சிரித்து விட்டு, "அவனுக்கு என்ன வேணுமாம் கேட்டு சொல்லு" என்று அவனை போலவே விளையாட ஆரம்பித்தாள்.

அவளுக்கு விளையாட்டாக தோன்றிய ஒன்று, மூன்று குழந்தைகளை பெற்ற நர்மதாவின் தாய்க்கு சரியாக படவில்லை. அதனால் நர்மதாவிடம், "ஏன்ம்மா, அகிலன் மட்டும் போதும்னு இருக்கியா? இன்னோரு குழந்தை பெத்துக்கலாமே அவனுக்கும் துணைன்னு ஒன்னு இருக்கும்ல"

"போமா நீ வேற, இவனை பெத்து எடுக்கிறதுக்கே நான் ஒரு வழி ஆகிட்டேன். இதுல இன்னோரு குழந்தையா?" அலுப்பாக கூறினாள்.

"அதுக்கில்லமா, அகிலன் அவனாவே பேசிக்கொள்கிறான். இது சரியா படலம்மா" என்று அவர் மனம் கணித்ததை சொல்ல,

"அவன் போக போக சரி ஆகிருவான். இதெல்லாம் ரசிக்கணும். இப்படி சொல்றீங்க?" அவர் வாயையும் அடைத்து விட்டாள்.

ரிஷி தன் பங்கிற்கு பாசம் என்ற பெயரில் அகிலன் என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்து பழக்கம் காட்டி விட்டான்.

அதனால், அகிலனின் பிடிவாதம் வளர தொடங்கியது. பிள்ளைக்காக உழைக்கிறோம் அவன் படிப்புக்காக உழைக்கிறோம் என்று அவன் தொலைத்து கொண்டிருந்த அவர்கள் மீதான நேசத்தை அவர்கள் உணரவில்லை. அவனிடம் இல்லாத விளையாட்டு பொருட்களே இல்லை என்பது போல வாங்கி கொடுத்தனர். ஆனால் கூட விளையாட ஆள் இன்றி அவைகளும் அவனை போலவே ஒடுங்கின. அப்படி இப்படி என்று ஐந்தாம் வகுப்பும் வந்து விட்டான்.

அவனுக்கு படிப்பு சொல்லி கொடுக்க நேரம் இல்லை. அலுவலகத்தில் உயர் பதவி கொடுத்து, வேலை பளு கூட, இரவு ஏழு மணிக்கு என்று வந்த நர்மதா இப்போதெல்லாம் ஏழு மணி என்பது அரிதாக, இரவு ஒன்பது என்பது வழக்கமாகி விட்டது. அதனால் ஸ்கூல் முடிந்து வந்து அவன் பாட்டியே டியூஷன் க்கு கொண்டு விட்டுவிட, ஒன்பது மணிக்கு வந்து அவனுக்கு சாப்பாடு கொடுத்ததும் தூங்கி விடுவான். சனி ஞாயிறு, டியூஷன் போதாது என்று பெர்சோனாலிட்டி டேவோல்ப்மென்ட், கணிதத்திற்கென்று சிறப்பு வகுப்பு என்று அவன் நேரம் அப்படி செல்ல, எந்த உணர்வுகளும் இன்றி மரத்து போய் விட்டான்.

அவனுக்கு சாதாரண சின்ன சின்ன விஷயத்துக்கும் நடுக்கம் வர ஆரம்பித்தது, வெடி சத்தம் கேட்டால் கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விடும், சில நேரம் தனியாக அமர்ந்து அவனே அவனுடன் உரையாடுவான். படிக்க சொன்னால் எங்கோ பார்த்து கொண்டு இருப்பான். அவனின் வளர்ச்சி ஒரு ஏழு வயது குழந்தை போல தான் இருக்கும். ஒரு சிறு பிள்ளை ஆசையாக சாப்பிடும் எதையும் அவன் விரும்பி உண்ண மாட்டான். இரவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பது, வேறு இடம் சென்றால் அவன் இயற்கை உபாதைகளை அடக்குவது என்று இருந்தான். கொடுத்தால் சாப்பிடுவான், செய்ய சொன்னால் செய்வான், என்று ஒரு இயந்திரமாக மாறினான்.

நாட்கள் செல்ல, செல்ல, அவர்களுக்கு தொந்தரவு இருக்க கூடாது என்று செல் போன் கேம் அவனுக்கு துணையாக்கி விட்டார்கள். அவனுக்கு வலி எடுத்தால் கூட எனக்கு வலிக்கிறது என்று சொல்ல அவனுக்கு தெரியவில்லை.

ஐந்தாம் வகுப்பு பெற்றோர் சந்திப்பு கூட்டத்தில் அவனின் ஆசிரியை, நர்மதாவிடம், "அகிலன் அம்மா, அகிலன் எல்லாத்துலயும் ஸ்லோ படிக்கிறதுல, சாப்பிட்றதுல, எழுதுறதுல எவர்ரி திங். அவனை கொஞ்சம் கேர் எடுங்க. ஹி ஐஸ் நாட் எ நோர்மல் சைல்ட். ஹி சபர்ட் எ லோட். (He is not a normal child. He suffered a lot) சோ இப்ப வரை ஓகே. ஆனா இனி சிக்ஸ்த் போய்ட்டா அவனுக்கு கஷ்டம். போசன் கூடும். பாத்துக்கோங்க"

"ஓகே மிஸ்" என்று மட்டும் சொல்லி விட்டு எழுந்து வந்து விட்டாள்.

அன்றில் இருந்து அவனை கவனிக்க ஆரம்பித்தாள். அப்போதும் அன்பாய் அவனை அணுக வழி இன்றி, நேரம் இன்றி அடி அடி என்று எதற்கெடுத்தாலும் அடித்து அவனை வழிக்கு கொண்டு வர முயன்றாள்.

ரிஷி அவனின் எந்த விஷயத்திலும் தலை இடாமல் கேட்பதை வாங்கி கொடுத்து விட்டு, அவன் தொழிலை பார்க்க சென்று விடுவான். பிள்ளை ஒடுங்கி ஒடுங்கி அவனுக்கு அடிக்கடி காய்ச்சல், தொண்டை வலி என்று வர தொடங்கியது.

அப்போதும் வேலை வேலை என்று ஓட தான் செய்தாள். கூட இருந்தவர்கள் எவ்ளோ சொல்லியும். "அவனுக்காக தானே இப்படி பாடு படறேன். அவன் ஒரு நாள் புரிந்து கொள்வான்" என்று விடுவாள்.

அவன் உடல் மெலிய ஆரம்பித்தான். சாப்பாடே இல்லை என்றானது. இதற்கிடையில் நர்மதாவிற்கு இன்னொரு வேலை என்று வர, பார்ட் டைம் ஆக அதையும் பார்க்க தொடங்கினாள். அது அவள் வேலை பார்த்த இடத்தில பெரும் பிரெச்சனையை உண்டு பண்ண, அவளாகவே வேலையை விட்டு வெளியில் வரும் நிலைமை வந்து விட்டது. நேரம் காலம் பார்க்காமல் உழைத்த உழைப்பெல்லாம் ஒரு நாளில் செல்லா காசாகி போனது. அவள் விரக்தியின் உச்சிக்கு சென்றாள்.

அவள் தோழி ஒருத்தி, "நர்மதா, நல்லதுன்னு நினைச்சுக்கோ, இனியாவது பையனை பாரு. அவன் கூட இரு" என்றாள்

"இனி என்னை யாரு மதிப்பாங்க. இத்தனை நாள் வேலை பார்த்து சம்பாதித்து இருந்து விட்டு, யோசித்தால் எங்காவது ஓடி விடலாம் போல இருக்கு" விரக்தியில் பேச தொடங்கினாள்.

"இந்த ஒரு கம்பெனி தான் உலகத்துலயே இல்லை. நீயும் ஒன்னும் இல்லாமல் போய்டல. நிதர்சனத்தை தாங்கிக்க பழகு. உன் பையனோட இருந்து அவனை கொஞ்சம் கவனி" என்று அவளை தேற்றி அகிலனுக்கு அவள் உடன் இருப்பு எவ்ளவு முக்கியம் என்பதை உணர்த்தினாள்.

"சரி இனி எனக்கு என்ன வேலையா வெட்டியா? இன்னொரு வேலை தேடுற வரை அவனை பார்க்குறது தானே வேலை" அரைமனதாக ஒத்துக்கொண்டாள்.

அடுத்த நாள் காலை எழுந்தவள் அவனை பாடு பட்டு கிளப்பி, அவனை அவளே பள்ளிக்கு கொண்டு விட்டாள். "இனி ஆட்டோ வராது ஸ்ரீ, நான் கூப்பிட வரேன்" என்றாள். அகிலன் முகம் கொள்ளா சிரிப்புடன், "சரி மம்மி" என்று அவளுக்கு கன்னத்தில் முத்தமிட்டு உள்ளே சென்றான். அவனுக்கு மற்ற பிள்ளைகள் அவர்கள் அம்மா அப்பா கொண்டு விடும் போது செய்வதை பார்த்து அவன் செய்தான். ஆனால் அது நர்மதாவுக்குள் பெரும் பிரளயத்தை உண்டு பண்ணியது. குழந்தைகளின் முத்தம் எவ்வளவு ஈர்ப்பானது, என்று அந்த கணம் உணர்ந்தாள். இத்தனை நாள் தான் இழந்திருந்த பொக்கிஷம் என்ன என்று மெல்ல மெல்ல அவளுக்கு புரிய ஆரம்பித்தது.

அன்று வழக்கத்துக்கு மாறாக மனதில் அமைதியை உணர்ந்தாள். மாலை பையனுக்காக என்று அவனுக்கு பிடித்த சிற்றுண்டி சமைத்து வைத்து விட்டு, அவனை அழைக்க சென்றாள்.

அகிலனை தேடி உள்ளே சென்ற போது, அகிலன் அவன் கூட படிக்கும் நண்பனிடம், "இன்னைக்கி எங்க மம்மி கூப்பிட வருவாங்க தெரியுமா? நானும் உன்னை மாதிரி எங்க மம்மி கூட போவேன்" என்று சொல்லி கொண்டு இருந்தான்.

அதை கேட்டவள் கண்களில் கண்ணீர் வர துடித்தது. இருக்கும் இடத்தை உணர்ந்து மறைத்து கொண்டவள், "ஸ்ரீ, போகலாமா?" என்று அவனிடம் வந்தாள்.

அவன் ஓடி வந்தான். மற்ற பிள்ளைகள் போல அவனும் தன் தாயிடம் தன் புத்தக பையை கழட்டி கொடுத்தான். அவள் அதை தூக்கி கொண்டு அவள் வண்டி நிறுத்தி இருக்கும் இடம் வரை கூட வர முடியவில்லை. "எப்படி தான் இதை தனியாக தூக்கி கொண்டு தினம் வருகிறான். தினம் தினம் நமக்காக எவ்வளவு ஏங்கி இருப்பான்" என்று உணர தொடங்கினாள்.

வண்டியில் ஏறியதும், அகிலன் தன் தாயிடம்," டெய்லி இப்படி மம்மி இவனை கூப்பிட வருவாங்களா?" என்று வேறு யாருக்காகவோ கேட்பது போல கேட்டான்.

"கண்டிப்பா ஸ்ரீயை கூப்பிட இனி மம்மி தான் வருவாங்க" என்று சொல்லி விட்டு வண்டியை கிளப்பி சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும், அவனுக்கு பிடித்த சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, அவன் நர்மதாவுடன் க - ரம் போர்டு, கிரிக்கெட் என்று விளையாடினான். "சரி விளையாடியது போதும். டியூஷன் கிளம்பு" என்றதும், அவன் முகம் மாறியதை உணர்ந்தாள்.

"மம்மி, இவன் இன்னைக்கி மட்டும் டியூஷன் போகல, மம்மி கூட இருக்க போறானாம்" என்றான்.

நர்மதா எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. தாய் அன்று சொன்னதன் அர்த்தம் இப்பொது விளங்கியது. "சரி அப்போ வீட்ல அம்மாவிடம் படிப்பியா? படிக்கலைன்னா டியூஷன் தான்" என்று பொய்யாக மிரட்டினாள்.

"ஓஹ் இவன் மம்மிட்ட நல்லா படிப்பான்" என்று விட்டு புத்தக பையை எடுக்க ஓடினான்.

ஆனால் படிப்பு அவனுக்கு அவள் எதிர்பார்த்த வண்ணம் வரவில்லை. என்ன செய்ய என்று விளங்கவில்லை. இரவு தன் மனக்குறையை கணவனிடம் பகிர்ந்து கொண்டாள். "என்னங்க, அகிலன் கூட இருந்து நம்ம வளர்க்காம விட்டது எவ்வளவு தப்புன்னு இப்ப தான் தெரியுது"

"ஏன் இப்ப என்ன, அவனை நல்ல ஸ்கூல்ல தான படிக்க வைக்கிறோம், அவன் கேட்டது எல்லாம் வாங்கி கொடுக்கிறோம். வேற என குறை" ரிஷிக்கு புரியவில்லை.

"அதுல எல்லாம் நம்ம குறை வைக்கல. ஆனா பெத்தவங்க இருந்தும் ஒரு அனாதை மாதிரி பையனை வளர்த்து இருக்கிறோம்." இதை சொல்லும் போது அவள் நொறுங்கி கொண்டு இருந்தாள்.

"எதுக்கு இப்படி எல்லாம் சொல்ற நர்மதா" அவனுக்கு ஏதோ போல் ஆகி விட்டது.

"சொல்ற எனக்கும், கேக்குற உங்களுக்கும் இப்படி இருக்கே, அதை பத்து வருசமா அனுபவிக்கிற நம்ம பையனுக்கு எப்படி இருந்து இருக்கும்" என்று அழுதே விட்டாள். "இன்னைக்கு நான் அவனை கொண்டு விட்டதுக்கு, எவ்ளோ சந்தோசம். ஆனா ஒரு பக்கம் இது நிலைக்காதோன்னு வேறு பயம் அவனுக்கு" என்றாள்

"ம்ம்ம் வேணும்னா நீ அவன் கூட இருந்து பாத்துக்கோ, வீட்ல இருந்து வேலை பாக்குற மாதிரி ஏதாவது கிடைக்குதான்னு பார்ப்போம். ஆனா இப்படி இன்னொரு முறை சொல்லாதமா, வாழ்க்கைல இல்லாததை தேடி தேடி ஓடறப்ப, இருக்குறதோட மதிப்பு தெரியமாட்டாய்க்குது" என்று கண் கலங்கினான்.

"அவன் பேச ஆள் இன்றி, விளையாட ஆள் இன்றி ஏங்கி, அவனுக்கு அவனே பேச தொடங்கி விட்டான். அன்று குறும்பாக தெரிந்தது, இன்று எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. எப்படி தான் மாற்ற போகிறோம்" என்று கணவனின் மடி சாய்ந்து அழ தொடங்கினாள்.

"அழாதமா, அவனை இனி தனியாக இருக்க விடாமல், அவனுடன் பேசு, அவனுடன் விளையாடு, நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனுடன் விளையாடுகிறேன். கண்டிப்பாக மாறுவான்" என்று நம்பிக்கை கொடுத்தான்.

அடுத்த நாள் பொழுது, அகிலன் முதலில் அடம் பிடித்தாலும், எழும் முன் தன் தாயிடம் கேட்டான். "மம்மி, இன்னைக்கி இவனை யாரு கூட்டுபோறாங்க?"

"ம்ம் மம்மியும் டாடியும்" என்றாள் புன்னகையோடு.

டக்கென்று படுக்கையில் இருந்து எழுந்தவன், "நிஜமாவா மம்மி" என்றான் கண்களில் ப்ரகாசத்தோடு,

"நிஜமா, பாரு உனக்கு முன்னாடி அப்பா எழுந்து குளிக்க போய்ட்டாங்க, வா நம்ம முதல்ல கிளம்புறோமா? அப்பாவா? பார்க்கலாம்" என்றதும், உற்சாகமாக எழுந்து சென்றான்.

அன்று ஸ்கூல் கொண்டு விட்டதும், இருவருக்கும் கன்னத்தில் முத்தமிட்டு டாடா காட்டி சென்றது அந்த மொட்டு. அன்று நர்மதா உணர்ந்ததை இன்று ரிஷி உணர்ந்தான்.

இரெண்டு மாதங்களுக்கு பிறகு, அவனிடம் முழுதாக மாற்றம் இல்லை என்றாலும், இப்போதெல்லாம் தனியாக பேசுவது குறைந்து இருந்தது. ஓரளவு சாப்பிட ஆரம்பித்து இருந்தான். வெடி சத்தத்தை கேட்டு நடுங்கும் அவனை பார்க்கும் போது எல்லாம் நர்மதா "அவன் யாரும் இன்றி இப்படி பயந்து நடுங்கும் போது எல்லாம் எப்படி உடைந்து போய் இருப்பான்" என்று உள்ளுக்குள் கண்ணீர் வடிப்பாள்.

அவன் தொலைத்த நாட்களை எண்ணி வருந்துவது தவறு. இனி வரும் அவன் நாட்களை தொலையாமல் பார்த்து கொள்வது என்று இருவரும் முடிவு எடுத்தார்கள். அவனை கவுன்சிலிங் அழைத்து சென்றார்கள். இவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்கபட்டது. அவன் இப்பொது தனியாக இல்லை என்று அவனுக்கு உணர வைத்தார்கள். எல்லா குடும்ப விழாக்களுக்கும் அழைத்து சென்றார்கள். உடனே மாற்றம் என்பது எதிர்பார்க்கமுடியாது. ஆனால் கண்டிப்பாக அவன் தொலைத்த, தொலைந்த நாட்களை ரிஷியும் நர்மதாவும் மீட்டெடுப்பார்கள் என்று நம்புவோம்.

பெற்றோர்களே இருவரும் வேலை பார்க்க வேண்டும் என்பது கட்டாயம் என்ற சூழல் உள்ள நிலையில் கிடைக்கும் நேரங்களை தயவு செய்து பிள்ளைகளுக்காக செலவிடுங்கள். வேலைக்காக பிள்ளைகளை இழக்கும் நிலை வேண்டாம். பிள்ளைகளுக்கு எப்போதும் நம் உடன் இருப்பை உணர்த்துங்கள். என் பிள்ளை இதை சாப்பிடாது அதை சாப்பிடாது என்று பெருமை கொள்ளாதீர்கள். நல்லதை விதைக்க மண்ணை வெட்டி தான் ஆக வேண்டும். தேவை இல்லாததை திணிக்கும் நாம், தேவை உள்ளதை அவர்கள் விருப்பத்திற்கு விட்டு விடுகிறோம்.

அவர்களை முதலில் அவர்கள் இயல்போடு இருக்க விடுங்கள். நடை பழக தொடங்கியதும் நடன வகுப்பு, பேச தொடங்கியதும் பாட்டு வகுப்பு என்று வேண்டாம் குழந்தைகளை குழந்தை பருவத்தை அனுபவிக்க விடுங்கள். அதற்காக இதெல்லாம் வேண்டாம் என்று இல்லை. அதற்கென்று ஒரு நேரம் உண்டு. சிறு வயதில் பிள்ளைகள் விரும்புவது நம் அருகாமையை அதை எப்போதும், எதற்காகவும் மறுக்காதீர்கள். எல்லோருக்கும் இது கதையாக தெரியலாம். ஆனால் இது என் முன் நடந்த நிஜம் என்பது தான் வேதனை.
 
Status
Not open for further replies.
Top