நினைவில் உறைந்த என்னுயிரே
உயிர் - 1
“யோவ் தாடி!”
அரட்டலான பெண்குரல் வந்த திசையை நோக்கி, எரிச்சலாக திரும்பியவன் நிச்சயம் சற்று ஸ்தம்பித்து தான் போனான்.
பேசும் துறுதுறு கருவிழிகளை கொண்ட கண்கள், கூரான நாசி, சிவந்த செப்பு இதழ்களுடன் கூடிய முகம், வெண்மை நிற மேனி என மொத்தத்தில் செதுக்கி வைத்த தேவதை சிலை போன்ற அழகி, இவனுக்காகவே சற்று கோபத்தை கடன் வாங்கி இருந்தாள்.
“அபி! கொஞ்சம் மரியாதையா பேசுடி"
அவளின் அருகில் இருந்த பெண், கண்களில் சற்று பயத்துடன் அவளிடம் கூறினாள். பின்னே, முறுக்கேறிய புஜங்களும் நரம்போடிய கைகளும் வலிமையான மார்பும் அடர்ந்த தலைமுடி மற்றும் தாடி என ஒரு ரவுடி போல் உள்ள ஒருவனிடம், மெல்லிய உடல்வாகு உள்ள பெண்ணவள் கோபத்துடன் கத்தினால் அவளும் தான் என்ன செய்வாள்?.
இதற்கிடையே, இவனை போல் உள்ள ஒரு தாடிக்காரனிடம் கண்ணசைத்து விட்டு முழுமையாக அவள் புறம் திரும்பி அவளை ரசித்துக்கொண்டிருந்தான், அவன்.
“நீ சும்மா இரு மலரு! பாக்க பைக் திருடுற பொறுக்கி மாதிரியிருக்க இவனுக்கெல்லாம் என்ன மரியாதை?” என மெல்லிய குரலில், அருகில் நின்ற பெண்ணை அடக்கியவள், இவன் புறம் திரும்பி,
“யோவ் தாடி! என்னோட பிங்க்- கில உனக்கென்னயா வேல?. எப்படி திருடிட்டு போலாம்னு பாத்துக்கிட்டு இருக்கியா?.”
காரம் சற்று தூக்கலாவே இருந்தது, அவள் குரலில்.
“இதுக்காகவே தியேட்டருக்கு வருவானுங்க போலிருக்கு” மெல்ல முணுமுணுத்துக் கொண்டாள்.
‘பொண்ணு பாக்க அழகா இருக்கு. கோபம் எக்குதப்பா வரும் போலிருக்கே. மரியாதை என்ன விலைன்னு கேப்பா போலிருக்கு. பொது இடம்னு கூட பாக்காம இந்த கத்துகத்துறா.’ இது தான் அவனுக்கு தோன்றியது, அவளை பார்க்கும் போது.
“இந்தாமா பொண்ணு! கொஞ்சம் மரியாதையா பேசு. பாரு எல்லாரும் என்னையவே பாக்குறாங்க. ஆமா பிங்க்கினா யாரு?”
“என்னாது பிங்க்கி யாரா?. நீ உக்காந்திருக்கியே ஸ்கூட்டி அதுதான் என்னோட பிங்க்கி. அதுசரி, பைக் திருடுற உனக்கெல்லாம் எதுக்குயா மரியாதை. மரியாதை தான் இப்ப ஒரு கேடா”
“பைக் திருட வந்தேன்னு நீ பாத்தியா?”
இதுவரை அவளையும், அவளின் பிங்க்கி – க்கான விளக்கத்தையும் ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு, அவளின் மரியாதை இல்லாத கோபப்பேச்சு கோபத்தை வரவைத்திருந்தது. விளைவு, அவன் கண்கள் லேசாக சிவந்து, முகம் சற்று கடினமானது.
அதை கண்டு பயந்தவள், பயத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு,
“பின்ன எதுக்கு என்னோட பிங்க்கில உக்காந்துயிருந்தீங்க”
மரியாதை எட்டி பார்த்து, அவள் குரலில்.
அதை புரிந்து கொண்டவன் தனக்குள் சிரித்து விட்டு,
“என்னோட ஃப்ரண்டு ஒருத்தனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்”
அவளின் பயத்தை கண்கள் காட்டிக் கொடுக்க, இவனும் தன் கோபத்தைக் கைவிட்டிருந்தான்.
“அப்ப என்னோட பிங்க்கில அங்கேயும் இங்கேயும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க” இன்னும் கோபத்தைக் கைவிடாமல் இருந்தாள்.
“அபி போலாம்டி. பிரச்சனை வேணாம்டி”
அருகில் இருந்த பெண் மீண்டும் இவளிடம் முணுமுணுத்தாள். அதையெல்லாம் சட்டையே செய்யாமல், அழுத்தமாய் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள், அவள்.
அவளின் அழுத்தப் பார்வையை பார்த்து வந்த சிரிப்பை இதழுக்கிடையில் மறைத்து,
“என்னோட ஃப்ரண்டு வரவரைக்கும் சும்மா பாத்துக்கிட்டு இருந்தது தப்பாமா” தன்மையாகவே கேட்டான் அவன்.
அவள், அவளின் பிங்க்கியை சுற்றும் முற்றும் பார்த்து, தடவிக் கொடுத்துக்கொண்டே,
“என்னோட பிங்க்கிய பாத்தது தப்பு தான்” அழுத்தமான விடாப்பிடியாய் அவள்.
அவன் வாய் திறப்பதற்குள், தொலைபேசி தன் இருப்பை நியாபகப்படுத்த வந்த வேலையை எண்ணி “ஸ்…” என்றவன், இவளிடம் இப்போதைக்கு ஜெயிக்க முடியாது என்றெண்ணி,
“ஓகே. சாரி மா பொண்ணு. தப்புதான் உன்னோட பிங்க்கில உக்காந்தது தப்புதான். மறுபடியும் மன்னிச்சுக்கோ. பாக்கலாம்”
என்று கூறி கிளம்பியவனை, அவளின் கோபக் குரல் நிறுத்தியது.
“பாக்கலாமா. நீங்க எதுக்கு என்னைய பாக்கணும்”
இப்போது அதிகார தோரணையில் வந்தது, அவள் குரல்.
“அபி விடுடி. பாவம்டி அவரு. அதான் சாரி சொல்லிட்டாருல” – அருகில் இருந்த பெண்.
‘என்னைய பாத்து பயந்து பம்முன பொண்ணு எனக்கு பாவம் பாக்குது. ம்…’ என எண்ணியவன், தலைக்கு மேல் கை குவித்து,
“அம்மா தாயே! இதுக்கும் சேர்த்து மன்னிச்சுக்கோ. நான் வரேன் தாயே!”
என கூறிக்கொண்டே நகர்ந்து விட்டான், இன்னும் நின்று கொண்டு இருந்தால் இதுக்கும் ஏதாவது கூறுவாளோ என்று. தியேட்டருக்கு வெளியே சற்று தள்ளி நிறுத்தியிருந்த, தன் காரில் ஏறிக் கிளம்பியவன் வாய், சிரிப்பில் விரிந்து கொண்டே அழகாய் முணுமுணுத்தது,
“பிங்க்கியாம் பிங்க்கி. சரியான வாயாடியா இருப்பா போலிருக்கு. ராட்சஷி.”
– அடிக்கடி நினைவிற்கு வரும் இந்த கடந்த கால சம்பவத்தினால் தூக்கம் களைந்தவன், எழுந்து அமர்ந்தான்.அவளை நினைத்தவன் வாய் கோபத்துடன் “துரோகி” என முணுமுணுத்துக் கொண்டது. எதற்கு இந்த கோபம்? அது அவனுக்கு தான் தெரியும். துரோகி என வாய் முணுமுணுத்ததே தவிர, மனது???. அதையும் அவனே அறிவான்.அவளின் நினைவை புறம் தள்ளியவன், கடிகாரத்தைப் பார்க்க, அது அதிகாலை மணி 5.17 எனக் காட்டியது.
இதற்கு மேல் தூக்கம் வராது என எண்ணியவன், டீசர்ட், ட்ராக் பேண்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டு வாக்கிங் சென்று வந்தவன், பின் வீட்டில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சியை முடித்து, வியர்வை நீங்க குளிர்ந்த நீரில் குளியலை முடித்து, “ராகவ் மித்ரேஸ்வரன்” என்ற பெயர் பொறித்த பட்டையும் தோள்பட்டையில் 3 நட்சத்திரங்களும் IPS எழுத்தும் பொறிக்கப்பட்ட காக்கி சட்டை அணிந்து அசிஸ்டெண்ட் கமிஷனருக்குரிய லட்சணத்துடன் தயாரானவன், கண்ணாடியில் தன்னை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டு, மாடிப்படிகளில் இருந்து இறங்கி சென்றான்.
ராகவ் மித்ரேஸ்வரன், 29 வயது நிரம்பிய மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரி. ஆறடி உயரம். உடற்பயிற்சியினால் உயரத்திற்கேற்றவாறு கட்டுக்கோப்பாக உடலை வைத்திருந்தான். எலுமிச்சை நிற சருமம். தலைமுடியை, காவல்துறை அதிகாரிக்கேற்ப வெட்டி, தாடி மீசையை ட்ரிம் செய்திருந்தான். மொத்தத்தில் ஆணழகனாகவே விளங்கும் திறமையானவன். 26 வயதில் IPS தேர்வில் தேர்ச்சி பெற்று, மதுரை மாவட்டத்திற்கு AC யாக பதவியேற்றவன், அன்றில் இருந்து குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பணமாகவே விளங்கி வருகிறான்.
“அகில் டார்லிங்……”
தன் தந்தை வழி பாட்டி, அகிலாண்டத்தை அழைத்துக் கொண்டே உணவு மேஜையில் அமர்ந்தான்.
“வந்துட்டேன் மித்து டார்லிங்….” பேரனுக்கு குறையாத உற்சாகத்துடன் சாமி அறையில் இருந்து வந்தவர், தீபாராதனை தட்டை பேரனுக்கு நீட்டினார். தீபாராதனையை எடுத்துக் கொண்டவனுக்கு நெற்றியில் விபூதியை வைத்து விட்டார்.
“ம்… கொஞ்சமாச்சும் அழகா இருக்கேனா? பாத்துக்கிட்டே இருக்கியே அகில் டார்லிங்…” தினசரி வழக்கம் போல் பேரனின் அழகில் தன் மகனின் சாயலை ரசித்துக் கொண்டிருந்த அகிலாண்டத்தை மித்ரனின் குரல் கலைத்தது.
“என்னோட மித்து டார்லிங்… அழகுக்கு என்ன குறைச்சல்?” தன் பேரனின் அழகில் சற்று கெத்தாகவே வந்தது, அகிலாண்டத்தின் குரல்.
ராகவேந்திரன் – பூர்ணிமா அகிலாண்டத்தின் ஒரே மகன் மற்றும் மருமகள். ராகவேந்திரன் இன்ஸ்பெக்டராக இருந்தவர். ராஜேந்திரன் – அகிலாண்டத்தின் அருமை மகன். பரம்பரை சொத்துக்கள் ஏராளம், ராகவேந்திரனுக்கு. இருந்தும் அதற்கெல்லாம் ஆசைப்பட்டு நிர்வாகம் செய்யாமல், தனக்கு பிடித்த காவல்துறையைத் தேர்ந்தெடுத்தார். ராஜேந்திரனும் அகிலாண்டமும் மகனின் ஆசைக்கு முட்டுக்கட்டை போடாமல் பச்சைக்கொடியை காட்ட, தன் விருப்பப்படியே இன்ஸ்பெக்டரானர், ராகவேந்திரன்.
ராஜேந்திரன் தன் தூரத்து சொந்தத்தில் இருந்தது, பூர்ணிமாவை தன் மருமகளாக தேர்ந்தெடுக்க, அகிலாண்டம் விருப்பத்துடன் கணவரின் ஆசைக்கு இசைந்தார். ராகவேந்திரனுக்கும், அடக்கமாக அழகாக இருந்த பூர்ணிமாவை மறுக்க பெரிதாக எந்த காரணமும் இருக்கவில்லை. ஒரு நல்ல திருமண நாளில், ராகவேந்திரனின் கைப்பட்ட தாலி, பூர்ணிமாவின் கழுத்தில் ஏறியது.
ராஜேந்திரன் தனது தேர்வு சோடைபோகவில்லை, என்று பெரிமிதம் கொள்ளும் அளவிற்கு பூர்ணிமா நல்ல மருமகளாகவே வலம் வந்தார். ராகவேந்திரனும் தன் மனைவியை அன்பில் குளிப்பாட்ட, அடுத்த ஒரு வருடத்தில் ராகவ் மித்ரேஸ்வரனை பெற்றெடுத்தார், பூர்ணிமா. குடும்பத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாக, எவ்வித துன்பமும் இன்றி சுமுகமாகவே சென்றது, ராகவேந்திரன் – பூர்ணிமாவின் இல்லற வாழ்க்கை.
மித்ரன் கல்லூரிக்கு சென்றிருக்க, பெரியவர்கள் வயதின் காரணமாக வீட்டில் இருக்க, சொந்தத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு, ராகவேந்திரனும் பூர்ணிமாவும் மட்டும் சென்றிருந்தனர். வீட்டிற்கு இருவரின் உடல்கள் மட்டுமே வந்தது. ஆம், இருவரும் சென்ற கார் விபத்துக்குள்ளானது. வீட்டின் மகிழ்ச்சியும் இருவரின் உயிருடன் சென்று விட்டது. 23 வயதில் தாய் தந்தையை இழந்து, தாத்தா பாட்டியின் வளர்ப்பில் வளர ஆரம்பித்தான், மித்ரன்.
தந்தையின் வழியைப் பின்பற்றி, தானும் காவல்துறை அதிகாரியானவன், முதலில் எடுத்த ஃபைல், தன் தாய் தந்தையின் கொலை கேஸ். ஆம், ராகவேந்திரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, ராஜேந்திரனை கேஸ் ஃபைல் பண்ண சொன்னவன், தானே அந்த கேஸ்ஸை கையில் எடுத்தான்.
அவனது சந்தேகம் சரி என்பதை நிரூபித்தது, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரின் வாக்குமூலம். லாரி டிரைவரை சரியான விதத்தில் கவனித்ததால், தான் கூலியாள் என்றும், ராகவேந்திரனின் எதிரிகள் தான் இதற்கு காரணம் என்றும் வாக்குமூலம் அளிக்க, அவனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனையும் வாங்கிக்கொடுத்தான்.
சிறிது காலத்தில் ராஜேந்திரன் காலமாகி விட, பாட்டியும் பேரனும் மட்டுமே எஞ்சி இருந்தனர், அந்த வீட்டில்.
கடந்த காலத்தை நினைத்தபடி, வேலைக்காரி சமைத்த உணவை பேரனுக்கு பரிமாறினார், அகிலாண்டம்.
பாட்டியின் சோக முகத்தை வைத்து, அவரின் மனநிலையை அறிந்தவன், அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, காவல் உடையில் உள்ளே நுழைந்தான், அவன்.
"வாப்பா முத்துப்பாண்டி... வா நீயும் சாப்பிடு" அகிலாண்டத்தின் குரலில் நிமிர்ந்த மித்ரன், முத்துப்பாண்டியை பார்த்து தலையசைத்து விட்டு, "நீயும் சாப்பிடு முத்து" என்றான்.
"இல்ல மித்ரா.. நான் சாப்பிட்டேன். நீ சாப்பிடு கிளம்பலாம்" என்றவன் இருக்கையில் அமர்ந்தான். "இப்போயெல்லாம் முன்ன போல வீட்டுக்கு வரதில்லையே பாண்டி" என வருத்தப்பட்ட அகிலாண்டத்திற்கு, சிரிப்பையே பதிலாக கொடுத்தான். அதற்குள் சாப்பிட்டு விட்டு கிளம்பியிருந்த மித்ரன், "விடு அகில் டார்லிங்.... அவனுக்கும் வேலை இருக்கும்ல" என்று பதில் கூறிக்கொண்டே, அகிலாண்டத்திடம் தலையசைத்து விடைபெற்று தன் ஜீப்பில் ஏறினான். அவனைத் தொடர்ந்து முத்துப்பாண்டியும் ஜீப்பில் ஏற, விருட்டென கிளம்பியது, ஜிப். "கவனம் மித்து..." என்ற அகிலாண்டத்தின் குரல் காற்றில் கரைந்தது.
முத்துப்பாண்டி, மித்ரனின் கண்காணிப்பில் உள்ள காவல்நிலையங்களில், ஒன்றில் இன்ஸ்பெக்டர் பணியில் உள்ளான். மித்ரனின் சிறுவயது நெருங்கிய தோழன். இருவரின் குழந்தைப் பருவத்தில் முத்துப்பாண்டியின் வீடு, மித்ரனின் வீட்டிற்கு அருகில் இருந்தது. சிறுவயதில் ஒன்றாக விளையாடி பழகிய இருவரும், காலப்போக்கில் நல்ல நண்பர்களானார்கள். முத்துப்பாண்டியின் குடும்பம், நடுத்தர வர்க்கத்தை விட சற்று தாழ்ந்தது. அவனின் அப்பா, அருள்நாயகம். பெயருக்கேற்ப எந்நேரமும் அருளிலேயே இருப்பவர், குடிபோதை அருள்.
அம்மா, பாண்டியம்மாள். அருள்நாயகத்தின் இரண்டாவது மனைவி. அருள்நாயகம் கொண்டுவரும் கொஞ்ச பணத்தை அச்சாரமாய் கொண்டு ஆடியசைந்து சென்றது, அவர்களின் வாழ்க்கை வண்டி. வசதி பாகுபாடு இருந்தும், அதெல்லாம் நட்புக்குத் தேவையில்லை என்பதை நிரூபிப்பதைப் போல் அழகாகவே சென்றது, மித்ரன் - முத்துப்பாண்டியின் நட்பு. இருவரும் வெவ்வேறு பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த போதும், முத்துப்பாண்டியின் கல்லூரிப் படிப்புக்காக, அருள்நாயகத்தின் குடும்பம் வீடு மாறி சென்ற போதும், இருவரின் நட்பில் பிளவு ஏற்படவில்லை. அந்த நட்பு, இன்று வரை இருவரும் பணியில் சேர்ந்த பின்னும் தொடர்கிறது.
முத்துப்பாண்டியை அவனின் காவல் நிலையத்தில் இறக்கிவிட்ட மித்ரன், கமிஷ்னரின் அலுவலகத்திற்கு சென்றான்.
"குட்மார்னிங் சார்." அனுமதியுடன் கமிஷ்னரின் அறைக்குள் நுழைந்தவன், விறைப்பாக சல்யூட் அடித்து கமிஷ்னரின் முன் நின்றான்.
"ம்... குட்மார்னிங் மித்ரா." மெல்லிய சிரிப்புடன் தலையசைத்து அவனின் வணக்கத்தை ஏற்றவர், பதிலுக்கு தானும் வணக்கம் வைத்தார்.
"உட்காரு மித்ரா.." இருக்கையை காண்பித்தார்.
"தாங்க்யூ சார். என்னை வர சொன்னீங்கலாமே சார்.." இருக்கையில் அமர்ந்தவனின் கேள்வி.
"இது ***** ஏரியா ரௌவுடி உதயாவோட ஃபைல். அவனோட மொத்த ஜாதகமும் இதுல இருக்கு பாத்துக்கோ.... அவன நீ தான் அரஸ்ட் பண்ணனும்" மித்ரன் முன் ஒரு ஃபைலை வைத்தவர், அதனைப் பற்றிய விளக்கத்தை அளித்தார்.
"சார் இது நம்ம சந்துரு பாத்துக்கிற ஏரியா சார். பின்ன ஏன் என்கிட்ட....."
"தெரியும் மித்ரன். சந்துரு இப்போ சரியில்ல.... ஏதோ காதல் மயக்கத்தில் இருக்கிறது போல் இருக்கான். இதுக்கு நீ தான் சரி"
காதல் என்பதை கேட்டவுடன் மித்ரன் முகம் இறுகியது. நொடியில் அதை மாற்றியவன்,
"அவன் என்னோட ஃப்ரண்டு சார். அவன் ஏரியாவை நான் டீல் பண்ணா.... அது நல்லா இருக்காது சார்... ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க சார்.." வேண்டுதலாய் மித்ரன்
.
"மித்ரன் நீ தான் புரிஞ்சுக்கணும். எனக்கு உதயாவோட அரஸ்ட் முக்கியம். வேணும்னா ஒன்னு பண்ணு. சந்துருவையும் இதுல சேத்துக்கோ. ஆனா உதயாவோட அரஸ்ட் முக்கியம் மித்ரன்." கட்டளையாய் கமிஷ்னர்.
அதை புரிந்து கொண்டவன் இனி வேறு வழியில்லை என்பதை அறிந்து, சரி சந்துருவை சமாளிப்போம் என்ற முடிவுடன்,
"ஓகே சார்... கூடிய விரைவில் உதயாவை அரஸ்ட் பண்ணிருவோம். வரேன் சார்" என்று சல்யூட் அடித்து விடைபெற, கமிஷ்னர் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே யாருக்கோ தொலைபேசியில் அழைத்தார்.
மதுரை மாவட்டத்திற்கு மித்ரனுடன் சேர்த்து, சந்துரு, ஜெகன், பிரகாஷ் என நான்கு AC - க்கள்.
சந்துருக்கும் மித்ரனுக்கும் இடைப்பட்ட நட்பு, IPS ட்ரெனியிங்கில் தொடங்கியது. இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
கமிஷ்னர் அறையில் இருந்து வெளியில் வந்து சந்துருக்கு அழைத்து, "மச்சி வீட்டு வா டா. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்றவன் வீட்டுக்கு கிளம்பினான்.
"ஹாய் மச்சி...." ஆர்ப்பாட்டமான குரலுடன் உள்ளே நுழைந்தான், சந்துரு.
"வா டா... என்ன என்னோட தங்கச்சி மலர்விழி எப்படி இருக்கா?" என்ற மித்ரனின் கேள்விக்கு,
"ம்... நல்லா இருக்கா மச்சி" முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசத்துடன் பதில் கூறினான், சந்துரு.
அடுத்து எதையோ கேட்க வந்தவன், எதையோ நினைத்து முகம் இறுகினான்.
அவனை அவதானித்த சந்துரு, மித்ரனை மாற்றும் விதமாக, "ம்.. எதுக்கு மச்சி வர சொன்ன?? முக்கியமான விஷயம்ன்னு வேற சொன்ன.." என்க,
"ஆமா மச்சி. கமிஷ்னர் உதயாவோட ஃபைல குடுத்து, நம்ம ரெண்டு பேரையும் கேஸ முடிக்க சொல்லிருக்காரு" நினைத்தது போலவே, தீவிர முகப்பாவத்துடன் அவனை அழைத்ததற்கான காரணத்தைக் கூறினான்.
"அப்ப என்னையும் கூப்பிட்டு இருக்கணும்ல நண்பா" நமட்டுச் சிரிப்புடன் சந்துரு கூற,
"அவசரத்துல என்னை மட்டும் கூப்பிட்டாருன்னு நினைக்கிறேன்" தொண்டை வரை வந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே மறைத்து, தீவிர முகபாவனையை மாற்றாமல் கூறினான்.
"இரு உனக்கு ஒன்னு தெரியாதுல... கமிஷ்னர் சொல்லலைன்னு நினைக்கிறேன். கமிஷ்னர் உனக்கு முன்னாடியே எனக்கு, மித்ரன் கிட்ட இந்த கேஸ கொடுக்க போறேன்னு சொல்லிட்டாரு. நானும் சரின்னு சொல்லிட்டு, என் மலர் கூட ஊர் சுத்தலாம்ன்னு நினைச்சா, நீ என்னடானா என்னையும் இதுல இழுத்து விட்டிருக்க. நான் ஜாலியா இருக்குறது உனக்கு பிடிக்கலையா?" ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டே கூறியவன், முடிக்கையில் பொய் கோபத்துடன் முடித்தான்.
'கமிஷ்னருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. கமிஷ்னர் மாதிரியா பீகேவ் பண்றாரு' என நினைத்துக் கொண்டே, சந்துரு முன் அசட்டு சிரிப்பு சிரித்தான்.
கமிஷ்னர் பார்த்திபன், சந்துருவின் தாய் மாமா என்பதால், இருவருடனும் சற்று இணக்கமாக இருப்பார். பார்த்திபன் தொலைபேசியில் அழைத்துப் பேசியதும் சந்துருக்குத் தான்.
"எது எப்படியோ... நாம உதயாவோட கேஸ முடிக்கிறோம். இப்பயே அந்த வேலைல இறங்குறோம்..." என்றவன் எழுந்து நடக்க ஆரம்பிக்க, "இல்ல மச்சி... நான் என் ஆளு கூட ஊர் சுத்தனும். நான் வரல..." வாய் தான் அப்படி கூறியதே தவிர, கால்கள் மித்ரனுடன் நடக்கத்துவங்கியது.
விசாரித்தவரை உதயா, அவனின் குடோனில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்க இருவரும் அவனைக் கண்காணிக்கத் தொடங்கினர். அவன் குடோனில் இருந்து வெளியேறிய சமயம், இருவரும் பிரிந்து சென்று அவனைக் குறிப்பிட்ட தூரத்தில் பின் தொடர்ந்தனர்.
ஒரு மருத்துவமனை முன், தொலைபேசியை குனிந்து பார்த்துக்கொண்டு நடப்பது போல், உதயாவை பின்தொடர்ந்து நடந்து கொண்டிருந்தவனை, தெரியாமல் ஒரு இளம்பெண் மோதினாள்.
"சாரி... சாரி... சார்" என்று மன்னிப்பு கேட்டவளை, பழக்கமான குரல் போல் உள்ளதே என்று நினைத்து மித்ரன் நிமிர்ந்து பார்த்தான். இவன் நிமிர்ந்து பார்த்தவுடன், மன்னித்து விட்டான் என எண்ணினாள் போலும் அவள், கிளம்பிவிட்டாள். அவளை நிமிர்ந்து பார்த்து திகைத்து நின்றவன் வாய் முணுமுணுத்தது, "யாழ் பேபி.....". இவன் திகைத்து நிற்பதை பார்த்து அருகில் வந்த சந்துரு, "யாரு டா?" என்க, அதே திகைத்த முகத்துடன் கூறினான், "அபிக்ஸா யாழினி".
உறையும்.....