All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜீவனின் ஜீவனவள்!

Status
Not open for further replies.

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஆல்!

ரொம்ப பெரிய இடைவெளியாகிடுச்சு! இப்பவும் புதுசா கதை எழுத முடியாத சூழல் தான். இரண்டு வருஷம் முன்னாடி எழுதுன கதையை அங்கங்கே பட்டி டிங்கரிங் பார்த்து அப்டேட் பண்றேன். ஆதரவு எப்போதும் போல தருவீங்க தானே?
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 1



அந்த அறையைச் சூழ்ந்திருந்த இருள் திடீரென்று மறைந்து அறையெங்கும் வெளிச்சம் பரவ, திடீர் வெளிச்சத்தால் கண்கள் கூசத் திரும்பிப் பார்த்தாள் பவித்ரா.

சந்தியா தான் முகத்தில் கேள்வியோடு
நின்றிருந்தாள்.

"என்னடி சாப்பிடலையா ? மணி எட்டரை தானே ஆகுது. இப்பவே லைட் ஆஃப் பண்ணிட்ட?"

"தலைவலி சந்தியாக்கா.. எனக்கு டின்னர் வேண்டாம்னு சொல்லிடு அம்மாகிட்ட"

தலையைப் பிடித்துக் கொண்டு சொன்னவளை சலனமே இல்லாமல்
பார்த்தாள் சந்தியா. அவள் பார்வையை உணர்ந்த தங்கையவள் உதட்டைக் கடித்துக் கொண்டு வேறுபுறம் பார்த்தாள்.

"என்னாச்சு பவி? எனிதிங் சீரியஸ்? நீயாக மனசுக்குள் வைச்சு மறுகாமல் என்ன விஷயம்னு சொன்னால்
தானே தெரியும்?"

சந்தியா ஆதரவாக அவளது தலையைக் கோதி சொல்ல,பவித்ரா எப்போதும்
போல் அப்போதும் அவள் அன்பில் கரைந்தாள்.

'இவளிடம் நான் மறைத்துக் கொண்டிருப்பது எந்த
விதத்தில் சரி? நான் அவளை ஏமாற்றுகிறேனா இல்லை
என்னை ஏமாற்றிக் கொள்கிறேனா?'

' இந்த அளவிற்கு வருத்தப்பட அவசியம் இல்லையே பவி. . இப்போதே
ஜீவாவைப் பற்றி சொல்லிவிட வேண்டியது தானே? '

'சொல்லிவிடலாம் தான்.. ஆனால், சந்தியா வேலையை விடச்
சொல்லிவிட்டால்?'

'உன் தகுதிக்கு இந்த வேலை இல்லையென்றால் வேறொன்று கிடைக்காமல் போகாது'

'கிடைக்கும் தான்.. ஆனால்..'

மனம் அவளிடமிருந்து தனித்துப் பிரிந்து அவளுக்கு எதிராகவே வாதம் செய்ய, தன்னையே சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்றவளை ஜீவாவின்‌ நினைவுகள் உள்ளிழுக்க ஆரம்பித்தன.

அவளின் நினைவலைகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்தது சந்தியாவின் அடுத்த கேள்வி.

"என்னிடம் மறைப்பதற்குக் கூட உனக்கு விஷயம் இருக்கிறதா பவி?"

சந்தியா சற்றே வருத்தமான குரலில் கேட்கவும் பவி பதறிப்போய் அவளது
கைகளைப் பிடித்துக் கொண்டாள். அவள் வருந்தும்படி நடக்க பவித்ரா என்றுமே விரும்பமாட்டாள்.

"என்னை நீயும் கஷ்டப்படுத்தாதேக்கா.. எனக்கு இந்த இடமாறுதல் ஒரு மாதிரியாக இருக்கிறது. அவ்வளவு தான்."

காரணம் சொல்ல வேண்டுமே என்று‌‌ சொன்னாலும் அதில் பாதி உண்மை இருக்கிறதல்லவா? இடமாற்றம் அல்லவா அவனை அவள் மீண்டும் சந்தித்ததற்கான ஆதி ஊற்று!

பவித்ரா சொன்னதை நம்பாமல் சந்தியா அவளைப் பார்த்தாள்.

"நிஜம் தான்க்கா.. நானும் சரியாகிவிடும்னு தான் நினைச்சேன். ஒரு மாதம் முழுசா முடியப் போகுது. இன்னும் என்னால் இங்கே ஒட்ட முடியல. அது தான்" என்று பவித்ரா எதையோ
சொல்லி சமாளிக்க சந்தியா உருகிவிட்டாள்.

சந்தியாவின் நினைவும் ஒரு மாதம் முன்பு வரை அவர்கள் இருந்த மதுரையைச் சுற்றி வந்தது.

அன்றிலிருந்து இரண்டு மாதங்கள் முன்பு ஓர் மாலையில் சிவகுரு முகத்தில்
மகிழ்ச்சியோடும் குரலில் துள்ளலோடும் பத்மாவை அழைக்க, அவர் கை
வேலையை அப்படியே போட்டுவிட்டு வாசலுக்கு விரைந்தார்.

"இப்படியா கத்துவீங்க? ஒரு நிமிஷம் எனக்கு நெஞ்சே நின்னுருச்சு. என்ன
சந்தோஷம் ஊஞ்சலாடி விளையாடுது முகத்தில்? என்ன விஷயம்?"

பத்மாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவர் உல்லாசமாக
விசிலடிக்க, அவர் ஆச்சரியமாகக் கணவனைப் பார்த்தார் . அவர்
முகத்தில் இருந்த மகிழ்ச்சி தானாக பத்மாவின் முகத்தில் ஒட்டிக்கொண்டது.

'விஷயம் ரொம்பப் பெரியது போல.. அதுதான் இவ்வளவு துள்ளல்.. என்னவாக இருக்கும்?'

கணவனின் குணமறிந்து அவரை சீண்ட வேண்டி, ஏதும் கேட்காமல் சிவகுருவின் முகத்தையே பார்க்கவும் அவர்
பொய்க் கோபம் கொண்டு மனைவியை முறைத்தார்.

"ஏன்டி எத்தனை பெரிய விஷயத்தைச் சொல்ல ஆசையா உன்னைக்
கூப்பிட்டால் இப்படி கல்லுளிமங்கி மாதிரி நிற்கிற? என்னடா நம்ம புருஷன்
நம்மைக் கல்யாணம் செய்து இத்தனை வருஷத்தில் இதுமாதிரி சந்தோஷமாக இருந்தது இல்லையே.. என்ன விஷயம்? ஏது விஷயம்? ஏதாவது கேட்கிறயா?" என்று கிண்டலாகக் கேட்க, இப்போது முறைப்பது பத்மாவின் முறையாகிப் போனது.

"அதுதான் யோசிக்கிறேங்க.. நீங்களே சொல்லிட்டீங்க என்னைக் கல்யாணம் செய்ததில் இருந்து சந்தோஷமா இருந்தது இல்லைனு ... இப்போது திடீரென முளைச்ச உங்கள் சந்தோஷத்திற்கு காரணமாக திடீரென ஏதும் உறவு முளைச்சிருக்கோன்னு.."

பத்மா சொல்லிக்கொண்டே சிவகுருவை சந்தேகப் பார்வை பார்க்க அவர் அவசரமாக சுற்றும் முற்றும் பார்த்தார்.

"ஏன்டி அறிவு கெட்டவளே.. கொஞ்சமாவது மண்டையில் ஏதாவது
இருக்குதா உனக்கு? வீட்ல வயசுக்கு வந்த பிள்ளைகளை வைச்சுட்டு
இப்படித்தான் பேசுவியா?" என்று சிவகுரு உண்மையாகவே அதட்ட, பத்மா
சேலை முந்தானையை இழுத்துச் சொருகிக் கொண்டார்.

"என் மண்டையில் ஏதாவது இருக்கான்னு ஆராய்ச்சி செய்கிறதுக்கு பதிலா
உங்க தலையை ஆராய்ச்சி செய்தால் தேவலை. . யாருக்கு அறிவு
இருக்கான்னு கேட்குறீங்க? நீங்க கூப்பிட்டதும் கை வேலையை அப்படியே
போட்டுட்டு ஓடி வந்தேனா இல்லையா? வந்ததும் என்ன விஷயம் என்று
கேட்டேனா இல்லையா?"

சேலையை இழுத்துச் சொருகிக் கொண்டு காளிகாம்பாள் அவதாரத்தில் தன் முன் நின்று ஆமாவா? இல்லையா?
என்று ஒரு மனைவி கேட்டால் எந்தக் கணவன் தான் இல்லையென்று
சொல்லுவான்? சிவகுரு ஒன்றும் விதிவிலக்கு அல்லவே? அவர் எதற்கும்
இருக்கட்டும் என்று இரண்டு தரம் 'ஆமாம்' போட்டார்.

"ஆமா. . ஆமா"

"இப்போ எதுக்கு இத்தனை ஆமா போடுறீங்க?"

"ஹீ ஹீ.. இரண்டு கேள்வி கேட்டியே பத்து. . அதுதான்" என்று சிவகுரு
சொல்ல, பத்மா அனல் பார்வை பார்த்தார்.

பத்மாவிற்கு தன் பெயரைச்
சுருக்கி அழைத்தால் சுத்தமாகப் பிடிக்காது.

"எத்தனை தடவை உங்களுக்கு சொல்றது? பத்து இருபதுன்னு
கூப்பிடாதீங்கன்னு.. ஆறறிவுப் பிறவிகளுக்கு ஒருமுறை சொன்னாலே போதும்னு சொல்வாங்க"

கோபமாக ஆரம்பித்து இடக்காக பத்மா முடிக்க, சிவகுரு மானசீகமாகத்
தலையில் அடித்துக் கொண்டார்.

'இவளை அறிவிருக்கான்னு ஒத்த கேள்வி கேட்டேன்.. அதுக்காக என்னை
ஐந்தறிவு ஜவனாக்கிட்டாளே..'

அவரது எண்ணப்போக்கு அவருடைய சரிபாதிக்குத் தெரியாமல் போகுமா என்ன? அதெல்லாம் கணவன் முதல் பிள்ளைகள் வரை அனைவரின் எண்ணவோட்டங்களை வெகுதுல்லியமாகக் கணிப்பார் பத்மா.

"என்ன எனக்கு மனசுக்குள் அர்ச்சனை நடத்திட்டு இருக்கீங்களா? அதெல்லாம் அப்புறம் பண்ணிக்கோங்க.. இப்போதாவது என்ன விஷயம்னு சொல்றீங்களா இல்லையா?"

'அப்பாடி.. ஒருவழியாக விஷயத்துக்கு வந்துட்டா'

அவர் குஷியாகும் போதே அதை முற்றிலும் அழிக்கும் விதமாக பத்மா தன் கேள்விக்கணைகளைத் தொடர்ந்தார்.

"என்னங்க இப்படியே முழிச்சிட்டு தான் இருக்கப் போறீங்களா? அப்படி
ஒரு எண்ணம் இருந்தால் இப்பவே சொல்லிடுங்க.. நான் போய் என் வேலையைப் பார்க்கிறேன்.. உங்களுக்கு என்ன? டிவி முன்னாடி காலாட்டி உட்கார்ந்தபடி பத்மா சாப்பாடு ரெடியானு குரல் கொடுப்பீங்க.. நீங்க கவலை இல்லாமல் நைட் வரை கூட இப்படி வாசல்ல நின்றபடி கதையடிக்கலாம்.. எனக்கு அப்படியா? வேலை இருக்கு" என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் போனவளை சிவகுரு
வேகமாகத் தடுத்தார்.

"உன் மனசாட்சியைத் தொட்டு சொல்லு.. நான் உனக்கு வீட்டு வேலைல உதவி பண்றது இல்லையா?"

"அப்படி என்ன உதவி பண்ணியிருக்கீங்க?"

சிவகுருவிற்கு அவர் வேலை செய்ய உதவி புரிந்த சமயங்கள் எல்லாம் மனதில் வலம் வர, வாயைத் திறப்பாரா அவர்?

'ஓ.. என்ன என்னைக்கு என்ன வேலை பண்ணோம்னு கூட கணக்குப் பார்த்து வச்சிருக்கீங்களா? அப்போ தினம் தினம் இந்த குடும்பத்துக்கு வடிச்சு கொட்டுறேனே.. அதெல்லாம் எந்தக் கணக்குல சேரும்? என்ன இந்த குடும்பத்துக்கு நேர்ந்தா விட்ருக்கு?'

இந்தப் பேச்சையெல்லாம் அவர் கேட்கக் கூடாது என்றால், அவர் மௌனியாகிப் போக வேண்டும். அவர் பாவமாய் மனைவியைப் பார்க்க, அதைக் கண்டு மனதிற்குள் சிரித்தவாறே பத்மா உள்ளே போக அடியெடுத்து வைத்தார்.

"நான் சொல்ல வந்ததைக் கேட்டுவிட்டு போ பத்மா"

"அதுதான் சொல்ல மாட்டேங்குறீங்களே"

"அதில்லை பத்மா.."

"எது இல்லை ?"

சிவகுரு மீண்டும் பரிதாபமாகப் பத்மாவைப் பார்க்க, பத்மா கொஞ்சம்
நிதானித்தார்.

"சரி சரி சொல்லுங்க.. என்ன விஷயம்?"

'இவள் மட்டும் இரண்டு தடவை சரி சொல்லலாமா? '

மனதில் நினைத்ததைச் சொன்னால் அவர் பத்மா சொன்னது போல்
அறிவில்லாதவர் ஆகிவிடுவாரே.. அதனால் மனதில் தோன்றியதை
வேகமாக அழித்துவிட்டு பத்மாவைப் பார்த்தார். பத்மாவும் அவரைத் தான்
பார்த்துக் கொண்டிருந்தார்.

"எனக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு பத்மா.. நான் இப்போது வாங்குவதை
விட இரண்டு மடங்கு அதிகமான சம்பளம்"

ஒருவழியாக சிவகுரு சொல்லி முடித்துவிட பத்மா விழி விரிய கணவனைப் பார்த்தாள்.

"என்னங்க.. உண்மையா தான் சொல்றீங்களா? இதைச் சொல்றதுக்கா
இத்தனை வம்பு பண்ணீங்க?"

'கடைசியில் நான் தான் வம்பு பண்ணுனேனா? '

"சரி சரி. . நான் போய் எதாவது இனிப்பு செய்து கொண்டு வர்றேன்.. நம்ம
தியாவும் பவியும் இதைக் கேட்டால் ரொம்பவே சந்தோஷப் படுவாங்க"
என்று கூறிக்கொண்டே ஒரு சிறுமியின் துள்ளலோடு கிச்சனுக்குள்
சென்றவரை ஓர் புன்சிரிப்போடு பார்த்தார் சிவகுரு.

அவருக்குத் தெரியும் இது பத்மாவை எந்த அளவிற்கு சந்தோஷப்படுத்தும் என்று..!

இப்போதெல்லாம் இரண்டு பெண்களின் திருமணம் பற்றி கவலை கொள்ளாமல் பத்மாவால் தூங்க முடிவதில்லை. சிவகுரு அரசு வங்கியில் வேலை பார்த்ததால் ஓரளவிற்கு அவரது சம்பளத்தில் மிச்சம் பிடித்து
இருவருக்கும் சேர்த்து எழுபது பவுன் வரை சேர்த்து வைத்திருந்தாள். அதைக் குறிப்பிட்டு சிவகுரு சமாதானம் செய்தால், 'அதெல்லாம் எந்த
மூலைக்கு?' என்பார். அப்படிக் கவலைப்பட இனித் தேவையில்லை
என்பதே அவருக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கும். உண்மையில்
பத்மாவும் அப்போது அதைத் தான்
நினைத்துக் கொண்டிருந்தார்.

'இனி லோன் எடுத்துக் கூட இருவருக்கும் கல்யாணம் செய்து விடலாம்.. அந்த சீலைக்காரி அம்மன் ஒருவழியாக என் குடும்பத்திற்கு வழி செய்து கொடுத்துட்டா'

பத்மாவின் மனக் கண்ணில் அடுத்தடுத்து செய்ய வேண்டிய
நேர்த்திக்கடன் ஓடியது. எதை முதலில் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவரை வாசலில் கேட்ட ஸ்கூட்டி சத்தம் கலைத்தது.

கருத்துக்கள் தெரிவிக்க:

 
Last edited:

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2

2
சத்தம் கேட்டவுடன் வாசலுக்கே வந்தவளை வியப்புடன் பார்த்தாள் சந்தியா.

"என்னம்மா? வரவேற்பெல்லாம் பலமாக இருக்கே.. என்ன விஷயம்? அதுவும் சாந்தமாக காட்சி கொடுக்கிறீங்க"

வேண்டுமென்றே சந்தியா வம்பிழுக்க, பத்மா சிரித்தாள்.

"ஷாக் மேல ஷாக் கொடுக்குறீங்களேம்மா.. இது நீங்க தானா?"

"ஏய்.. வாயடிக்காமல் உள்ளே வாடி. . பவியும் வரட்டும். என்னன்னு சொல்றேன்"

என்று கூறிவிட்டு பத்மா உள்ளே செல்ல சந்தியா அவரைப் பின்தொடர்ந்து
சென்றாள்.

"ஏம்மா வாசல் வரைக்கும் வந்தவளுக்கு உள்ளே வரத் தெரியாதா? என்னன்னு சொல்லுங்க.. பவி எப்போ வந்து
எப்போ நீங்க சொல்ல?"
அவளுக்கு அவசரம் தாளவில்லை.

"ஏன்டி ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க மாட்டான்னு
சொல்லுவாங்க.. அது மாதிரியில்ல இருக்கு நீ பேசுறது.. நீவந்து பத்து
நிமிஷத்தில் அவளும் வந்திடுவாளே எப்போவும்.. அதுவரை க்கும் உனக்குத் தாங்காதா? போ.. போய் முகம் கழுவி ட்ரஸ் மாத்திட்டு வா.. ஓடு"

பத்மா பொய்யாய் விரட்ட சந்தியா பயந்த பாவனையுடன் அவள் அறைக்குச் சென்றாள். சந்தியா அறைக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே வாசலில் மீண்டும் ஸ்கூட்டி சத்தம் கேட்க பத்மா இப்போதும் ஆவலோடு வாசலுக்குச் சென்றாள்.
"வா வா.. பவி.. உனக்காகத் தான் வெயிட்டிங்"

பத்மாவின் ஆவலான வரவேற்பைப் பார்த்து சந்தியாவைப் போல் பவித்ராவும் விழி விரித்தாள்.

"என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?" என்று பவித்ரா கேட்க, பத்மா தலையில் அடித்துக் கொண்டார்.

"ஏன்டி வாயைத் திறந்தால் நல்ல வார்த்தையே பேசக் கூடாதுன்னு
முடிவெடுத்து வைச்சுருக்கியா? நானே இப்போதான் நமக்கு விடிவுகாலம்
வந்திருக்கேன்னு சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கேன்.. வந்ததும் வராததுமாய் பிரச்சனையைக் கட்டி இழுக்கிறா இவ.. போ போய் முகம்
கழுவி ட்ரஸ் மாத்திட்டு அப்படியே உன் அக்காவையும் கூட்டிட்டு வா"

பத்மாவின் அதட்டலில் விஷயம் நல்லது தான் என்ற முடிவுக்குத் திட்டவட்டமாக வந்தவள்,

"அப்படி என்னம்மா குட் நியூஸ்?" என்றாள்.

"சொல்லத்தான்டி போறேன்.. நான் சொன்னதை செய்துட்டு வா" பத்மாவின்
புன்னகை பூசிய முகம் அந்த நல்ல செய்தியை அறிந்துகொள்ளத் தூண்ட,
அவசரமாக ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அவள் அறைக்குச் சென்றாள் பவித்ரா. முகம் கழுவி உடை மாற்றிவிட்டு வெளியே வந்தவள் நேராக
சந்தியாவின் அறைக்குச் சென்று அவளையும் கூட்டிக் கொண்டு
ஹாலுக்கு வந்தாள். அங்கே சிவகுரு அமர்ந்து பத்மாவின் கைவண்ணத்தில் அவசரமாக உருவான கேசரியை ருசிபார்த்துக் கொண்டிருந்தார். மகள்கள் இருவரையும் பார்த்ததும் கிச்சனுக்குள்
இருந்த தன் மனைவிக்குக் குரல் கொடுத்தார்.

"வாங்க வாங்க.. பத்மா.. இரண்டு பேரும் வந்துட்டாங்க. . அவங்களுக்கும் ஸ்வீட்
எடுத்துட்டு வா" என்றவரிடம்,

"என்னப்பா.. இரண்டு பேரும் ஒரே குஜால்ஸா இருக்கீங்க!? ஸ்வீட் வேற செய்து அமர்க்களப்படுத்திட்டு இருக்கீங்க.. என்ன விஷயம்?" என்று பவித்ரா சிரித்துக் கொண்டே கேட்க சிவகுரு வாயைத் திறப்பதற்குள் பத்மா
இரண்டு பேருக்கும் தட்டில் கேசரி வைத்து எடுத்து வந்தார்.

"ஸ்வீட் சாப்பிடுங்க இரண்டு பேரும் .. நான் சொல்றேன்"

"இதைத் தான் நான் வந்ததில் இருந்து சொல்லிட்டு இருக்கீங்க.. ஆனால்,
சொன்ன பாடில்லை"

சந்தியா கேசரியை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் வைத்தபடி கேட்க, பவி
கேசரியை உண்டவாறே பத்மாவைப் பார்த்தாள்.

"அப்பாவுக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்காம்"

பத்மா குதூகலத்தோடு சொல்ல சந்தியாவும் பவித்ராவும் அதற்கு
கொஞ்சமும் குறையாத சந்தோஷத்தோடு சிவகுருவின் கைகளைப் பற்றிக் குலுக்கினார்கள்.

"வாவ்.. செம்மப்பா . . நான் கூட நினைச்சுட்டே இருந்தேன்".

சந்தியா சொல்லி முடிப்பதற்குள் பத்மா குறுக்கிட்டார்.

"என்ன நினைச்ச? அப்பாவுக்கு ப்ரமோஷன் கிடைக்கும் என்றா?"

"அது இல்லைம்மா.. ஒரு ஸ்மார்ட் டிவி ஸ்பீக்கர் செட்டோடு வாங்கலாம் என்று நினைச்சேன் இன்ஸ்டால்மென்ட்டில்"

"ஏன்டி நினைக்க மாட்ட? உன்னெல்லாம் படிக்க வைச்சு வேலைக்குப் போக விட்டிருக்கேன்ல.. இதுவும் நினைப்ப இதற்கு மேலும் நினைப்ப.. இப்போ இந்த டிவிக்கு என்ன குறை? இரண்டு வருஷம் கூட ஆகவில்லை டிவி வாங்கி.."

பத்மா கோபமாக சொல்ல, சிவகுரு வழக்கம் போல மனதிற்குள் அதற்கு மறுமொழி கூறிக்கொண்டார்.

' கஷ்டப்பட்டு வேலைக்குச் சென்று சம்பாதித்தது நான்.. ஆனால் படிக்க
வைத்தது இவள் என்று கூசாமல் சொல்கிறாளே '

"ம்மா.. அப்பா சேலரியில் மட்டும் வாங்கப் போறதா நான் சொல்லலையே . . இந்த இரண்டு வருஷமா நானும் பவியும் எங்கள் செலவை நாங்களாகத் தான்
பார்த்துக்கிறோம் . . அதை மறந்துட்டுப் பேசாதீங்க.. மூன்று பேரும் ஷேர் பண்ணிக் வாங்கிக்கலாம்னு
நினைச்சேன்"

உண்மை தான்.. சந்தியா இளங்கலை
கணிதம் மூன்றாண்டுகள் படித்துவிட்டு பி. எட் படிப்பையும் முடித்துவிட்டு ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலைக்குச்
சேர்ந்தாள். பவித்ரா இன்ஜினியரிங் சேர்ந்து சிவில் படித்தாள். அவளுக்கும் படிப்பை முடித்ததும் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை கிடைத்திருந்தது.
இருவரும் வேலைக்குச் சேர்ந்த போதே பத்மா சொல்லிவிட்டாள்.

"இது உங்கள் உழைப்பிற்கான பணம் .. நீங்கள் இருவரும் கொடுத்து நாம்
வாழ வேண்டிய நிலையில் நம்மைக் கடவுள் வைக்கவில்லை.. அதனால்
அதை உங்கள் விருப்பம் போல் செலவு செய்து கொள்ளலாம். ஆனால் அது
உருப்படியான செலவாக இருக்க வேண்டும். பணத்தைக் கண்டபடி செலவு
செய்யும் நிலையிலும் நாம் இல்லை.. புரிந்துகொண்டு நடந்து
கொள்ளுங்கள்" என்று பத்மா சொன்னதை சந்தியாவும் பவித்ராவும்
சுத்தமாக நம்பவில்லை. அவர்களுக்குத் தெரியும் பத்மா ரொம்பவும்
சிக்கனமானவர். அவர்கள் இருவரின் திருமணச் செலவிற்காக அவர்
எந்த அளவிற்கு மிச்சம் பிடித்து சேமிக்கிறார் என்பதும் அவர்கள் அறிந்த
விஷயம் தான். அதனால் தான் பத்மா சொன்ன விஷயம் ஏதோ உணர்ச்சி
வேகத்தில் சொல்லப்பட்டதாக நினைத்தார்கள்.

' முதல் மாத சம்பளம் வந்ததும் அம்மா வாயைத் திறந்து கேட்காமல்
தரக்கூடாதுக்கா' என்று சந்தியாவிடம் பவித்ரா சொன்னபோது மற்றவளும்
அதுதான் சரி என்றாள்.

"ஆமாண்டி.. அசடு வழியும் அவர்கள் முகத்தைப் பார்த்து கேலி செய்துட்டுத் தான் கொடுக்கணும்" என்றாள்
சந்தியா.

ஆனால் வேலைக்குச் சேர்ந்து ஒன்றரை மாதங்கள் கழிந்த போதும் பத்மா
சம்பளம் பற்றி கேட்காமல் இருந்தது இருவருக்கும் வியப்பை அளித்தது.
அவர்களாகவே சென்று கொடுத்த போதும் பத்மா அதை வாங்காமல் இருக்கவும்‌ தான் அன்று பத்மா பேசிய அனைத்தும் உண்மை என்று இருவருக்கும் புரிந்தது. சிவகுருவுக்கும் கூட இது வியப்பை அளித்தது . அதுபற்றி
மனைவியிடம் தனிமையில் விசாரித்தார் அவர்.

"பத்மா..நீ தியா, பவியின் சம்பளம் பற்றி எடுத்த முடிவு சரியானது தானா?
அவங்க சம்பளமும் சேர்ந்தால் நீ நினைச்ச மாதிரியே சீக்கிரமே
அவங்களுக்கு கல்யாணம் செய்து வைச்சிடலாம்னு நினைச்சேன்".

சிவகுரு தயங்கியபடியே சொல்ல பத்மா அவரை அமைதியாகப் பார்த்தார்.

"என்னடி இப்படிப் பார்க்கிற?"

"ஏங்க.. கொஞ்சமாவது கூறோடு தான் பேசுறீங்களா? அவங்களுக்குச்
செய்றதை அவங்க காசை வைச்சே செய்யச் சொல்றீங்களா? எனக்கு அப்படிச் செய்ய இஷ்டம் இல்லை .. இப்பவே கல்யாணம் பண்ணிக் கொடுத்து என்ன செய்யப் போறோம்? ரெண்டு வருஷம் போகட்டும். . எனக்கு நம்பிக்கை இருக்கு. அந்த சீலைக்காரி அம்மன் கண்டிப்பாக ஒரு வழியைக் காட்டுவாள்.. பேசாமல் தூங்குங்க" என்ற பத்மா சொல்ல, சிவகுரு எப்போதும் போல மனைவியின் மனமறிந்து மேலும் வாதாடாமல் சரியென்று விட்டார்.

அதன் பிறகு சந்தியாவும் பவித்ராவும் ரொம்பவே யோசித்து அவர்கள்
செலவுக்குப் போக மீதம் இருந்ததை வங்கியில் ஓர் கணக்கைத் தொடங்கி
சேர்க்க ஆரம்பித்தார்கள். அந்தக் கணக்கில் இருந்து எடுத்து வாங்குவதாக
இருந்தால் இன்ஸ்டால்மென்ட்டே தேவையில்லை தான் . ஆனால் அது
பத்மாவைப் பொறுத்தவரை வெட்டிச் செலவு . அதனால்தான் சந்தியா
இன்ஸ்டால்மென்ட்டில் வாங்கலாம் என்ற பேச்சை எடுத்தாள். ஆனால், அதற்கும் பத்மா பெரிய தடை உத்தரவை போடவும் பவித்ராவிற்கு கண் சமிக்ஞை செய்தாள் அவள்.

அதைப் பாராதது போல் பார்த்த பத்மா 'எனக்கு உங்களைத் தெரியாதா? ' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

"என்னடி பவி.. நீ ஏதாவது நினைத்து வைச்சிருக்கியா உன் அக்கா மாதிரி?"

பத்மா கேட்கவும் பவித்ரா அவசரமாக விழி உயர்த்தி சந்தியாவைப் பார்த்தாள்.

அவள் எதுவும் பேசாமல் கேசரியை ஸ்பூனால் கிண்டிக் கொண்டிருந்தாள்.

"இல்லைம்மா.. அக்கா கேட்டது மாதிரி வெட்டிச் செலவெல்..லா..ம்..."

பவித்ராவை முடிக்க விடாமல்
சந்தியா அவளை முறைத்துப் பார்க்க பவித்ராவின் பேச்சு தானாக நின்றது.

"அங்கே என்னடி பார்வை? சொல்ல வந்ததை சொல்லி முடி"

"இல்லை ம்மா.. நம் வீட்டுக்கு முன்னாடி கொஞ்சம் ஸ்பேஸ் இருக்குல.. அதில் சின்னதாய் கார்டன் மாதிரி உருவாக்கினால் நல்லா இருக்கும்மா.. வீடு கட்டும் போது கூட நான் கேட்டேனே ..
நீங்கள் தான் இப்போதை க்கு செய்ய முடியாது.. தோட்டத்து வேலையெல்லாம் இழுத்து வைச்சு பார்க்க முடியாதுன்னு
சொன்னிங்க"

இப்படிச் சொன்னவளை பத்மா வியப்போடு பார்த்தார். இந்த வீடு
கட்டும்போது பவித்ராவிற்கு பதிமூன்று வயது தான். அப்போது இருந்த
நிலையில் வீடு கட்டப் போகிறோம் என்று சொன்னவுடன் சந்தியாவும்
பவித்ராவும் ஆளுக்கொரு ஆசையைச் சொன்னார்கள். சந்தியா மாடியில்
ஊஞ்சல் வேண்டும் என்றாள். பவித்ரா முன் பக்கம் அழகழகான செடிகள்
வைத்து கார்டன் வேண்டும் என்றாள். சந்தியாவின் விருப்பப்படி மாடியில்
ஊஞ்சல் வைக்கப்பட்டது. பவித்ராவின் விருப்பப்படி முன்பக்கம் தோட்டம்
உருவாக்க இடம் மட்டும் விட்டுவிட்டு வட
வீட்டைக் கட்டினார்கள். அப்போது
தோட்டம் வைத்தால் வேலை இழுக்கும் என்று பத்மா சொன்ன
காரணத்தை இப்போது மகள் சொல்லவும் அவருக்கு வியப்போடு சேர்ந்து குற்ற உணர்வும் சேர்ந்து கொண்டது. சந்தியாவின் ஊஞ்சல் ஆசை நிறைவேற்றப்பட்டு பவித்ராவின் ஆசை மட்டும் மறுக்கப்பட்டதை
நினைத்து அவளுக்கு வருத்தமாக இருந்திருக்கும் என்று நினைத்தார்
பத்மா.

பத்மா அவசரமாக எதையோ சொல்லப்போக சிவகுருவின் பேச்சு
அதைத் தடை செய்தது.

"பவிம்மா. . உனக்கு இந்த அளவுக்கு விருப்பம் இருந்தால் இன்னொரு முறை அம்மாவுக்கு நினைவுப்படுத்தி
இருக்கலாமில்ல? சாரிடா.."

"ச்சே.. என்னப்பா இது? அம்மா சொன்னது சரியான காரணம்
தானே? தோட்டக்காரன் வைத்தால் அதிக செலவு என்று அம்மா நினைச்சிருப்பாங்க.. அப்படி ஒன்றும் என் ஆசை நிறைவேறாமல் போகலையே.. ரோஜா, மல்லி, முல்லைப்பூ என்று அம்மா அந்த இடத்தில் எனக்காக நட்டு வைத்து வளர்க்கிறாங்களே? நான் வேலைக்குப் போகவும் கூட நினைத்தேன்ப்பா.. பெரிய அளவில் தோட்டமாக மாற்றலாம் என்று. ஆனால் நான் உங்களிடம் என் ஆசையை
சொல்விட்டேன்.. அதை நீங்கள் நிறைவேற்றினால் தான்
உங்களுக்குத் திருப்தியாக இருக்கும்.. அதுதான் இப்போ சொல்றேன்" என்று பவித்ரா சொல்ல பத்மா மகளின்
தலை முடியைப் பாசத்தோடு கோதிவிட்டார்.

"அதற்கென்னடா? செய்துட்டால் போச்சு . . உன் இஷ்டப்படி நீயே கூட
இருந்து செய்.. நான் பக்கத்தில் தோட்ட வேலைக்கு ஆள் கிடைக்கிறதான்னு விசாரிக்கிறேன்"

"ம்மா.. இதெ ல்லாம் டூ மச் . . நான் சொன்னதை மட்டும் வேண்டாம்னு சொன்னிங்களே .. பவி சொல்லவும் பூம்பூம் மாடாகி விட்டீங்களே "

"ஏன்டி எவ்வளவு திண்ணக்கம் இருந்தால் என்னை நீ பூம்பூம்
மாடுன்னு சொல்லுவ? வாய்க்கு ருசியாக ஆக்கிப்போட்டு வளர்த்து வைச்சிருக்கேன்ல.. அந்தக் கொழுப்பு தான் உன்னை இப்படிப் பேசச் சொல்லுது .. நீ தண்டச் செலவை சொன்னாய்.. அதுதான் முடியாதுன்னு சொன்னே ன்.. அவள் சொன்னது
தண்டச் செலவில்லை "
என்று பத்மா முடித்தார்.

பவித்ரா இல்லாத காலரைத் தூக்கிக்காட்ட சந்தியா நாக்கைத் துருத்தி அழகு காட்டினாள்.

"ஆனால் நாம் அங்கே போய்டுவோமே பத்மா? எப்படி இங்கே தோட்டவேலையைப் பார்க்க?" என்ற சிவகுருவின் பேச்சு மூவரையும்
குழப்பியது.

"எங்கே?"

"சென்னைக்கு"

"வாட்?"

"என்னப்பா சொல்றீங்க?"

மூன்று பேரும் ஒரே சமயத்தில் கேள்வி கே ட்கவும் தான் சிவகுரு தான் இன்னும் இடமாறுதல் பற்றிக் குறிப்பிடவில்லை
என்பதை உணர்ந்தார்.

"போஸ்டிங் இங்கேயே இல்லையா?" என்று சந்தியா கேட்க,
சிவகுரு இல்லை என்றார்.

அதைக் கேட்ட சந்தியாவின்
முகத்திலும் பத்மாவின் முகத்திலும் லேசான கவலை தென்படவும் சிவகுரு வேறுவிதமாகப் பேசினார்.

"சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருக்காங்க பட் அங்கேயே
குவார்ட்டர்ஸ் கொடுத்துருவாங்க.. அதனால் வீடு பார்க்கணும் அதற்கு
வாடகை அப்படியெல்லாம் யோசிக்கத் தேவையில்லை" என்று சிவகுரு
சொல்லவும் அவர் எதிர்பார்த்தபடியே பத்மாவின் முகத்தில் சிறு
வெளிச்சம் வந்தது. ஆனால் சந்தியா வேறு விதமாக யோசித்தாள்.

"அப்பா நானும் பவியும் வேலை க்குப் போறோம் . அங்கே ஒரு
மாதம் முன்பாவது நோட்டீஸ் கொடுக்கணும். திடீர்னு
போய் வேலையை விடுவதெல்லாம் சாத்தியமே இல்லை .." என்று சந்தியா சொல்ல பவியும் ஆமோதிப்பாக
தலையசைத்தாள்.

"இல்லைம்மா.. எனக்கு ஒரு மாதம் டைம் இருக்கு.. அங்கே உடனே சார்ஜ் எடுக்க வேண்டும் என்று சொல்லல .. நாளைக்கே நீங்களும் நோட்டீஸ்
கொடுத்துட்டா ஒரு மாசக்கணக்கு டேலி
ஆகிவிடும் இல்லையா?"

சிவகுரு சொல்ல சந்தியா யோசனையாக பவியைப் பார்த்தாள் . சந்தியா எந்த இடத்திலும் சுலபமாகப் பொருந்தி விடுவாள். பவித்ராவின் மனம் எதையும் சுலபத்தில் ஏற்காது.
ஆனால், அவளே ஆச்சரியப்படும் விதமாக பவித்ரா உடனே 'சரிப்பா'
என்றாள்.

பவித்ரா சொல்லவும் சந்தியாவும் நாளை நோட்டீஸ் கொடுத்து
விடுவதாகச் சொல்லிவிட்டாள். பத்மாவின் மனதில் மட்டும் சின்னதாய்
ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. அது தாய்மார்களுக்கே உரிய பயம்.

இரண்டு பெண்களை வைத்துக்கொண்டு தெரியாத ஊரில் போய் வசிக்கப் போவது பற்றி அவ்வப்போது கலக்கம் இருந்தாலும் கூட பத்மாவும் சந்தோஷமாகவே இடம் மாறுதலுக்கான வேலைகளைச் செய்தாள்.

சந்தியாவும் பவித்ராவும் அலுவலகத்தில் நோட்டீஸ் கொடுத்துவிட்டதால்
தினமும் கொஞ்சம் கொஞ்சமாக பேக் செய்ய ஆரம்பித்தனர். பத்மாவும்
துணிமணிகளோடு தேவைப்படும் சாமான்கள் அனைத்தையும் கொஞ்சம்
கொஞ்சமாக பேக் செய்து வைக்க ஆரம்பித்தார். பக்கத்தில் விசாரித்து
நம்பகமான ஒரு தோட்டக்காரனை வேலைக்கு அமர்த்தி தோட்ட
வேலைகளைச் செய்து முடித்தார்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் கமலமும்
பத்மாவும் அவர்கள் பிரிவுத் துயர் பற்றி பேசும் போதெல்லாம் இடையிடையே தோட்டத்தைப் பற்றி பேசினார் பத்மா.

"இந்த தோட்டத்து வேலை வேற பாதியில் நிற்குது கமலா.. இவர் வேற
திடீரென ட்ரான்ஸ்ஃபர் என்று சொல்லிட்டார். வீட்டை விற்று விடலாம்னா ரெண்டு வருஷத்தில் திரும்ப இங்கேயே டிரான்ஸ்ஃபர் கேட்டு
வந்துடலாம்னு சொல்றாரு.
என்ன செய்யப் போறேன்னு தெரியல"

"அதற்கென்னடி பத்மா ... நான் பார்த்துக்க மாட்டேனா?
நானா இறங்கி வேலை செய்யப் போறேன். தோட்டக்காரன்
செய்றதை மேற்பார்வை செய்யக்கூட மாட்டேன்னு சொல்லிவிடுவேனா?"

'அதானே ... நீஎப்படி மாட்டேன்னு சொல்லுவ? நான் இரத்தமும்
சதையுமா இங்கே நடமாடும் போதே என் கண்ணில் மண்ணைத் தூவிட்டு என் வீட்ல பூக்குற ரோஜாக்களை
அபேஸ் பண்ணுவ... நான் இல்லைன்னு தெரிஞ்சா உனக்கு லாபம் தானே? '

பத்மாவின் மனதில் நினைப்பதே சரி என்று எண்ணும் வகையில் இருந்தது
கமலத்தின் அடுத்தக் கேள்வி.

"ஆமாம். . என்ன என்ன காய்கறிகள் போட்டிருக்க?"

'நினைச்சேன்டி.. நீயாவது மனிதாபிமானத்தில் உதவுவதாவது! லாபம் இல்லையென்றால் சுண்டு விரலைக் கூட அசைக்க மாட்டீயே '

மனதில் நினைத்ததையெல்லாம் வெளியே சொல்ல எந்த மனிதப்
பிறவியாலும் முடிந்ததில்லை. ஏதோ இந்த அளவாவது செய்கிறாளே
இதுவே போதும் என்று நினைத்து என்ன என்ன காய்கறிகள் என்று பத்மா
சொல்ல கமலத்தின் முகத்தில் திருப்தி தெரிந்தது.

'அப்பாடி இனி காய்கறிகள் செலவு பாதி குறைந்துவிடும் போலவே '

"பத்மா நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதேடி.. உனக்கே மாமாவைப் பற்றி தெரியும்"

'உன் புருஷனைப் பத்தி எனக்கு என்னடி தெரியும்? '

"எதுவும் இல்லாமல் பழக்கத்துக்காக செய்றேன்னு சொன்னால் அவர் ஏதாவது சொல்லுவார்"

'ஓ... நீஅப்படி வர்றியா? வா.. வா'

"இந்தக் காய்கறிகள் எப்படியும் உனக்கும் உதவப்போவதில்லை...'' என்று இழுத்தவளைப் பார்த்து
பத்மாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது. அதை அடக்கிக் கொண்டு "நானே
உன்னை வைத்துக் கொள்ளச் சொல்லலாம்னு தான் நினைச்சேன்
கமலா. . இதில் நீ தயங்க எதுவும் இல்லை" என்று சொல்ல கமலத்தின்
முகத்தில் சந்தோஷம் அப்பட்டமாகத் தெரிந்தது.


கருத்துக்கள் தெரிவிக்க

 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 3

3
அன்று இரவு உணவு உண்ணும் போது தன் குடும்பத்தாரிடம் கமலத்திடம்
தோட்டத்தைப் பார்த்துக்கொள்ளச் சொன்னபோது கமலம் பேசியதைக்
கூறவும் மூவரும் சிரித்தனர். சிரித்து முடித்தவுடன் பவித்ரா பத்மாவின்
கைகளைப் பிடித்துக் கொண்டு சலுகையாக சாய்ந்து கொண்டாள்.

"ஹலோ.. உடனே நீ அன்னை ஓர் ஆலயம்னு பாட்டுப்பாட ஸ்டார்ட் செஞ்சுடுவியே.. செலவு செய்றது
என் அப்பா.. அதை அம்மாவும் மகளும் வசதியாய் மறந்து விடுவீங்களே" என்று சந்தியா சொல்ல சிவகுரு வேகமாக
தலையாட்டினார்.

"ஆமா அது மட்டும் நினைவிருக்காது ரெண்டு பேருக்கும்" என்று சிவகுரு
கூற பவித்ரா சிரித்தாள்.

"நான் எப்படிப்பா மறப்பேன்" என்றபடி பத்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டே சிவகுருவின் தோளில் சாய்ந்து கொண்டவளை அவரும் ஆதரவாக அணைத்துக் கொண்டார்.

"போச்சுடா.. அப்பாவையும் கரெக்ட் பண்ணியாச்சா? நான் தான் அவுட்டா?
சரி நான் மட்டும் தனிக்கட்சியாக இருக்க நான் என்ன முட்டாளா ... அம்மா நீங்க தான் ஃப்ரீயா இருக்கீங்க.. நீங்க என்னைக் கட்டிக்கோங்க" என்று
தோளில் சாய்ந்தவளை, "சரியான வாலு" என்றபடியே அணைத்துக் கொண்டார்
பத்மா.

அடுத்த ஒரு மாதத்தில் அவர்கள் மதுரையில் இருந்து சென்னைக்கு
குடிபெயர்ந்தார்கள். மதுரையில் இருக்கும் போதே சந்தியா சென்னையில் ஒரு முன்னணி
பள்ளியில் வேலைக்காக ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தாள். சென்னை சென்ற இரண்டு நாட்களிலே அவர்கள் நேர்முகத்தேர்விற்கு வரச்சொல்ல சந்தியா நேர்முகத்தேர்வை சிறப்பாகவே செய்தாள். வேலையும் கிடைத்தது.

சந்தியா அந்தப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து இரண்டு வாரங்கள் கழித்து
பவித்ரா சென்னையில் புகழ்பெற்ற "தி பெஸ்ட்" என்ற கன்ஸ்ட்ரக்ஷன்
கம்பெனியில் நேர்முகத் தேர்விற்கு வரச்சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர்.

அன்று காலை தொட்டே அவளுக்கு ஒருவித படபடப்பு இருந்தது. ஏனென்றே தெரியாத கலக்கம் நெஞ்சை அடைக்க, அழக்கூட நேரமும் தனிமையும் இல்லாமல் அடுத்தடுத்த வேலைகளைக் கவனித்தவள் ஒரு ஆட்டோ பிடித்து நேர்முகத் தேர்விற்கு சென்றாள்.
ஆட்டோவை விட்டிறங்கிய பவித்ரா அந்தக் கம்பெனியைப் பார்த்து
மயக்கம் போடாத குறை தான் . . அந்த அளவிற்கு அதன் தோற்றத்தில்
பணம் பேசியது . . என்ன தான் அவள் திறமையில் அவளுக்கு நம்பிக்கை
இருந்தாலும் அந்தக் கம்பெனியின் பிரமாண்டம் அவளை அச்சுறுத்தியது
உண்மை தான். நொடிக்கொரு தரம் 'இங்கெல்லாம் நமக்கு வேலை
கிடைக்குமா?' என்ற எதிர்மறை எண்ணம் தோன்ற அவசரமாக அதை
அழித்தாள். மனதை மாற்றுவதற்காக அவளைப் பாராட்டியவர்களை எல்லாம் மனக்குவியலில் தேடித் தேடி அவர்கள் பேசியதை அசை போட்டுப் பார்த்தாள். மதுரையில் அவள் வேலை பார்த்த இடத்தில் கிடைத்த பாராட்டு, கல்லூரியில் அவளது பேராசிரியர் பாராட்டியது என்று ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தவளின் காதுகளில் எப்போதும் ஒலிக்கும் அந்தக் குரலும் சேர்ந்து கேட்டது.

"எனக்கு கட்டிடங்கள் மீதான உன்னோட ஆர்வத்தை பார்த்தால் ஆச்சரியமா இருக்கு பவி.. உனக்கு பிரைட் ப்யூச்சர் இருக்கிறது இந்த ஃபீல்டில் ''

குரலுக்குச் சொந்தக்காரன் மாயமாகிவிட்டான். ஆனால் அந்தக்
குரல் எப்போதும் மாயமானதில்லை. அவளை யார் பாராட்டும் போதும்
அந்தக் குரல் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டே இருப்பது போல் ஒரு
பிரம்மை பவித்ராவிற்கு இருக்கும். அன்றும் அதே போல் அந்தக் குரல்
காதுகளில் ஒலிக்கவும் அதைக் கண்மூடி அனுபவித்துக் கொண்டிருந்தாள்
அவள்.

அந்தக் குரல் அவளுக்கானவனின் குரல்! அவள் விரும்பி ரசித்தவனின் குரல்.. காலமெல்லாம் கேட்க ஆசைப்பட்ட குரல்!

கண்மூடி அதனை நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனே அவள் முன் நின்றிருப்பது போல் தோன்ற, வேகமாகக் கண் திறந்து
பார்த்தாள். கண் முன் யாரும்
இல்லை! இருந்த போதிலும் ஏதோ மனதுக்குள் உறுத்த ரிசப்ஷன் அருகே
சென்றாள் அவள். அவளது வருகை உணர்ந்து ரிசப்ஷனிஸ்ட் கேள்வியாய் நிமிர்ந்து பார்த்தாள்.

'ச்சே .. இவளிடம் இப்போது என்ன கேட்பது? '

அவளுக்கு காலையில் இருந்த பதட்டம் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது. அவளது இதயதாளத்தை செவிகள் உணர, இன்னதென்று என பிரித்தறிய இயலா உணர்வுகள் சட்டென்று அவளைத் தழுவிக் கொண்டது.

பவித்ரா எதுவும் பேசாமல் திரும்பவும் அவள் இருக்கையில் போய்
அமர்ந்து கொண்டாள். நேரம் கடக்க கடக்க அந்த உணர்வு அதீதமாய் ஆனதே ஒழிய குறையவில்லை. சிறிது நேரத்திலேயே நேர்முகத்தேர்வு
ஆரம்பமானது. ஐந்தாவது ஆளாக உள்ளே சென்றாள் பவித்ரா.

அனுமதியுடன் உள்ளே சென்றவளுக்கு ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது. இதற்காகத் தான் அவளது கலக்கம் எல்லாமோ? சுழல் நாற்காலியில் அமர்ந்து ஏதோ கோப்புகளைப் புரட்டிக் கொண்டிருந்தது அவன் தான். அவசரமாக அவன் முன்னால் இருந்த மேசையைப் பார்த்தாள். மேசையின் மேலிருந்த பலகை, "எஸ்.ஜீவன் எம்.ஈ., மேனேஜிங் டைரக்டர்" என்று அறிவித்தது.

'இது இவனுடைய கம்பெனியா? கடவுளே என்ன ஏன் சோதிக்கிற?'

அவள் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று கொண்டிருக்க ஜீவன் அவளை அமைதியாக நிமிர்ந்து பார்த்தான்.

அவன் அத்தனை நேரம் கோப்புகளைப் புரட்டிக் கொண்டிருந்தது கூட அவளுக்கான நேரம் அளிக்கத் தான் என்பது போலிருந்தது அவனது நிதானம்.

"டேக் யுவர் சீட் மிஸ் பவித்ரா"

அவன் சொல்லவும் தான் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்து வேகமாக பார்வையை விலக்கி அவன் காட்டிய இடத்தில் அமர்ந்தாள் அவள்.

அவளைக் கண்டதில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அவன் அடுத்தடுத்து
கேள்விகளைக் கேட்கத் தொடங்க, அவள் தான் பதில் சொல்ல முடியாமல்
திணறினாள்.

'எப்படி இவனால் இப்படி இருக்க முடியுது? நான் தெரிஞ்ச கேள்விகளுக்குக் கூட பதில் சொல்ல முடியாமல் திணறிட்டு இருக்கேன். ச்சே ... அவன் என்ன நினைப்பான்?'

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஜீவன் பொறுமையிழந்து
அவளை சொடக்கிட்டு அழைத்தான்.

"ஹலோ.. இப்படிப் பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்?"

ஜீவன் முகச் சுழிப்போடு கணீர் குரலில் கேட்க ஒரு முடிவுக்கு வந்தவள் போல
மேசையின் மேலிருந்த தண்ணீரை அவனிடம் அனுமதி கேட்டுப்
பருகினாள். அடுத்து அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம்
இயந்திரத்தனமாகப் பதில் சொல்லிவிட்டு வெளியே வந்த பின் தான் நிம்மதியாக அவளால் மூச்சு விட முடிந்தது.

நேர்முகத் தேர்வு முடிந்து இதோ அதோ என்று இரண்டு வாரங்கள் கழித்து அவள்
தேர்வாகியிருப்பதாக "தி பெஸ்ட்"டில் இருந்து மின்னஞ்சல் வந்தது. அவள்
அதை எதிர்பார்த்திருக்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று
இன்னொரு கம்பெனிக்கும் அவள் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தாள்.

அந்த கம்பெனியிலிருந்து நேர்முகத்தேர்விற்கான அழைப்பு வந்த அதே நாளில் தி பெஸ்ட்டின் பணி உத்தரவு வந்தது. அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் சந்தியா பவித்ராவை சாப்பிட வருமாறு அழைக்க வந்தாள். வந்தவள் பவித்ரா சோர்ந்து போய் அமர்ந்திருக்கவும் என்னவென்று விசாரிக்க, தங்கை இடமாறுதல் பற்றிச் சொல்லவும் அதை அப்படியே நம்பிவிட்டாள்.

"சரி சரி பவி .. கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிடும்.. வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா இது பத்தியெல்லாம் யோசிக்கத் தோனாது.. இன்டர்வியூ அட்டெண்ட் செஞ்சியே. . ரிசல்ட்
இன்னும் என்னன்னு தெரியலையா?"

சந்தியாவே வேலை பற்றி விசாரிக்கவும் பவித்ராவும் தான் மனதில் நினைத்ததை பாதி உண்மை பாதி பொய்யாய்
சொல்லி முடித்தாள்.

"அங்கே வந்து ஜாயின் பண்ணச் சொல்லிட்டாங்க அக்கா . .
எதற்கும் இருக்கட்டும்னு இன்னொரு கம்பெனிக்கும் ரெஸ்யூம் அனுப்பியிருந்தேன். அங்கிருந்தும் இன்டர்வியூ டேட் அனுப்பியிருக்காங்க.. அது வேற குழப்பமாக இருக்கு"

பவித்ரா சொன்னதைக் கேட்ட சந்தியா அவளைப் பெருமை பொங்க பார்த்தாள். 'இவள் திறமைசாலி . . ' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

"இதில் குழம்ப என்ன இருக்கு பவி? வேலையில் சேரச் சொல்லி
வந்திருக்க ஆஃபர் லெட்டர் பெரிசா? இல்லை இன்டர்வியூவிற்கு
வந்திருக்க கால் லெட்டர் பெரிசா?" என்று சந்தியா சொல்ல பவி அதை மறுத்தாள்.

"இல்லக்கா.. அது ரொம்பவே பெரிய கம்பெனி.. இன்டர்வியூ போன அன்னைக்கே நான் அந்த இடத்தில்
பொருந்தாத மாதிரி இருந்தது. அதுதான் எனக்கு யோசனையா இருக்கு"

சந்தியாவிற்கு வேலை ரீதியாகப் பதில் சொன்னாலும் அவள் மனம் ஜீவனை எண்ணியல்லவா அதைச் சொன்னது.

"உன்னை நீயே டீமோட்டிவேட் பண்ணிக்காதே பவி.. நீ வேலை
பார்ப்பதற்கு தான் சம்பளம் வாங்கப் போற .. இது உனக்கு இன்னொரு வாய்ப்புனு நினைச்சுக்கோ" என்று சந்தியா சொல்ல பவித்ரா அதிர்ந்தாள்.

"இன்னொரு வாய்ப்பா? என்னக்கா சொல்ற?"

"ஆமாடி.. படிக்கும் போதே கேம்பஸில் சென்னையில் உள்ள ஏதோ
கம்பெனியில் தானே செலக்ட் ஆனாய் ..நம்ம வீட்ல 'அன்பில் ஓர் ராகம்'
பாடி வேண்டாம்னு சொல்லிட்டாங்க" என்று சலிப்பாக இழுத்தவளைப்
பார்த்து புன்னகைத்தாள் பவித்ரா. அவள் வேலை விஷயத்தைப் பற்றி சொன்ன
போது முதல் ஆளாகப் போக வேண்டாம் என்று சொன்னது இதே சந்தியா
தான்.

"கல்யாணம் செய்ற வரை தான் இப்படி ஒரே வீட்டில் இருக்க முடியும்.. அதை மிஸ் பண்ண என்னால் முடியாது . . நானும் உன்னுடன் வந்து அங்கே ஒரு வேலையைத் தேடிக் கொள்ள முடியும் தான் .. ஆனால், அப்போதும் அம்மா அப்பாவை விட்டு இருக்க முடியாது.. சோ, நீ எங்கேயும் போக வேண்டாம்" என்று சந்தியா சொல்லவும் பவித்ராவிற்கும் அதுதான் சரியென்று தோன்றியது. அதனால் தான் சந்தியா அப்படியே அதை மாற்றிச் சொல்லவும் பவித்ரா சிரித்தாள்.

பலவித குழப்பங்களுக்கு மத்தியில் பவித்ரா ஒரு வழியாக "தி பெஸ்ட்"
கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலைக்குச் செல்ல சம்மதிக்கவும்
அவளை சாப்பிட இழுத்துக் கொண்டு போனாள் சந்தியா. உணவு
மேஜையில் சிவகுரு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க பத்மா
அவருக்குப் பரிமாறிக் கொண்டிருந்தார்.

"ஏன்டி உன்னை ஒரு ஆள் சாப்பிட வந்து அழைக்கணுமா? அப்போ தான் மகாராணி சாப்பிட வருவீங்ளோ? "

"இல்லைம்மா லைட்டா தலை வலிக்கிற மாதிரி இருந்தது அதான் படுத்திருந்தேன்"

பவித்ரா சந்தியாவிடம் சொன்ன அதே காரணத்தை பத்மாவிடமும் சொல்ல பத்மா அடுத்த ஒரு குற்றச்சாட்டை வைத்தாள்.

"எப்பவும் அந்த மொபைல் ஃபோனை பார்த்துக்கிட்டே இருந்தால்
தலைவலிக்காமல் என்ன செய்யும்?"

"ம்மா இப்போல்லாம் எல்லாமே செல்போன் தான்.. உங்கள் காலத்தில்
இருந்த மாதிரி வேலையில் சேரச் சொல்லி கடிதம் எழுதி
அனுப்புவாங்களா? எல்லாமே ஈமெயில் தான்" என்று பவித்ரா சொல்லவும்
சிவகுரு வேகமாக இடைபுகுந்தார்.

"அதென்ன எங்கள் காலம்? எங்களைப் பார்த்தால் உனக்கு நாளை சாகப்
போகும் கிழம் மாதிரி தெரியுதா என்ன? உன் அம்மாவோடு நீ வெளியே
போனால் உன் அக்காவானு தான் கேட்பாங்க"

சிவகுரு பத்மாவைப் பார்த்தபடியே இதைச் சொல்லிவைக்க பத்மா பல்லைக் கடித்தாள்.

'இந்த மனுஷனுக்கு பிள்ளைகள் முன்னாடி எதைப் பேசனும் என்று ஒரு அறிவாணியும் இருந்து தொலையாது.. இதுக இரண்டும் சும்மாவே வாய் பேசுங்க.. இதில் இவர்
வேற பாயிண்ட் கொடுக்கிறாரே'

"ப்பா.. திஸ் இஸ் டூ மச். உங்களுக்கு இளநரை .. சோ நாற்பது வயதிலே
தலையெல்லாம் நரைத்து ஐம்பது வயதில் தாத்தா ஆகிட்டீங்க.
அதனால் உங்களுக்கு அம்மாவைப் பார்க்கும் போது அவங்க
இளமையாக இருக்க மாதிரி தெரியலாம்.. அதற்காக அக்கா அது இதுன்னு சொல்லி எங்களைக் கிழவி ஆக்காதீங்க" என்று பவித்ரா அழும் குரலில் சொல்லப்போக பத்மா சிரிக்கவும் முடியாமல் முறைக்கவும் முடியாமல் திணறினாள்.

சந்தியா அதற்கும் ஒருபடி மேலே போய், "அதில்லை பவி .. என்னதான்
அப்பாவுக்கு ஐம்பது வயதுக்கு மேல் ஆனாலும் அவர் மனசு இன்னும்
இருபது வயசு காதல் மன்னனாகத் தான் அவரை நினைக்குது . . அது
தான் இந்தப் புகழ்ச்சி" என்று கூறி கண்ணடிக்க பவி கலகலத்துச் சிரித்தாள்.

சிவகுரு சந்தியா சொன்னது போலவே காதல் மன்னன் பார்வையை பத்மாவை நோக்கி செலுத்த பத்மா வெளிப்படையாகவே தலையில்
அடித்துக்கொண்டாள். அதைப் பார்த்த சந்தியாவும் பவியும் இன்னமும்
அதிகமாகச் சிரிக்க பத்மா தண்ணீர் கொண்டு வருவதாகச் சொல்லி
சமையலறைக்குச் சென்றுவிட்டார். நல்லவேளையாக அவர் திரும்பி
உணவு மேஜைக்கு வந்த போது பழைய பேச்சு மறக்கப்பட்டு பவித்ரா
சிவகுருவுடன் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தாள். பத்மா என்ன விஷயம்
என்று கேட்க அவருக்கும் பவித்ராவிற்கு வேலை கிடைத்த விஷயம்
சொல்லப்பட்டது. சிவகுரு கம்பெனியைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.

கம்பெனி தூரமாக இருக்கவும் எப்படி போய் வருவது என்று அவர் விசாரிக்க,
"இதோ பார் பவி.. சந்தியாவிற்கு சொன்னது தான் உனக்கும் .. சென்னை
புது இடம் . . மதுரையில் நீங்கள் இருவரும் ஸ்கூட்டியில் போவதே
எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். இந்த இடம் நன்றாகப் பழகும்
வரை பஸ்ஸில் ஆபீஸ் போய்ட்டு வா.. சரியா?" என்று பத்மா கண்டிப்போடு சொல்லிவிட்டாள். அதன்படி பவித்ரா அலுவலகத்திற்கு பேருந்தில் போய் வருவதாக முடிவு செய்யப்பட்டது .

இதோ அதோவென்று அவள் வேலையில் சேரப்போகும் நாளும் வந்தது. அன்று அவள் வேலையில் சேரப்போகும் நாள்..!

காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு சுடிதார்களை கட்டிலில் பரப்பி வைத்துக்கொண்டு
அமர்ந்திருந்தாள் பவித்ரா. அவளது கைகள் ஆசையோடு அந்த நீலநிறச்
சுடிதாரை எடுக்க அவள் மூளை அவசரமாகக் கொடுத்த உத்தரவில்
இளம்பச்சை நிறத்தில் வெண்ணிறப் பூக்கள் ஆங்காங்கே போட்ட சுடிதாரை
மாட்டிக்கொண்டாள். தலைவாரக் கண்ணாடி முன் நின்றவள் எந்தவித
ஒப்பனையும் இல்லாமலே தேவதையைப் போலிருந்தாள். தலைவாராமல் விரித்து விட்டிருந்த தலைமுடி அவளது கொடி இடையைத் தாண்டி இருந்தது. கண்ணாடி முன் அவள் நின்றிருந்த பத்து நிமிடங்களுமே அவள் கண்கள் அந்தத் தழும்பைத் தான் வெறித்துக் கொண்டிருந்தது. நெற்றியின் இடது புறம் இருந்த அந்த வெட்டுத் தழும்பு என்றைக்கும் இல்லாமல் அன்று அவளை அதிகமாக பாதித்தது . அவள் இடது கை உயர்ந்து அந்தத் தழும்பை வருட ஆரம்பிக்க, அது சொன்ன பிரிவின் கதைகளைத் தாங்க
முடியாமல் கண் மூடினாள் அவள்.

'இல்லை இது சரியில்லை பவி. . இப்படி நீ தொட்டதற்கெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் உன்னால் அங்கே வேலையே பார்க்க முடியாது .. முதலில் கஷ்டமாக இருந்தாலும் அடுத்து சமாளித்து விடவில்லாயா?'

'ஆனால் அப்போதெல்லாம் அவன் அருகில் இல்லையே .. '

மனம் சொன்ன பதிலால் உதட்டைக் கடித்தவள் விழிகள் கலங்க அப்படியே நின்றிருந்தாள்.

கருத்துக்கள் தெரிவிக்க








 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -4

4
'இப்போ உன்னைப் பார்த்ததும் அவன் காதலில் உருகி காதல் வசனங்கள் பேசலயே.. யாரோ போல தானே நடந்துக்கிறான்.. நீயும் அதேப் போல இருந்தா எந்த பிரச்சனையும்
இல்லை.. புரியுதா?'

அவள் மூளை சொன்ன புத்திமதியை அவள் மனம் உடனே ஏற்றுக்கொண்டது.
'யெஸ்.. அப்படித்தான் இருக்க
வேண்டும்' என்று முடிவு செய்த பின் அவளிடம் பழைய நினைவுகளின் பாதிப்பு துளியும் இல்லை.

அவசர அவசரமாய் கிளம்பி வெளியே வந்தவள் நேராக உணவு மேஜைக்குச் சென்றாள்.

"ம்மா சாப்பாடு மதியத்திற்கு எடுத்து வைச்சுட்டீங்களா?" என்று
கேட்டுக்கொண்டே சாப்பிட அமர்ந்தவள் சந்தியா முகத்தைத் தூக்கி
வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கவும் பார்வையிலேயே 'என்ன' என்று
கேட்டாள். ஜாடையாக பத்மாவைப் பார்த்தாள் சந்தியா.

அதைக் கவனித்துவிட்ட பத்மா, "என்னடி ரெண்டு பேருக்கும் நடுல பார்வை பரிமாற்றம் எல்லாம் நடக்குது?" என்று கேட்க, நேரடியாக பத்மாவிடமே கேட்டாள் பவித்ரா.

"அக்கா ஏன்மா இப்படி முகத்தைத் தூக்கி வைச்சிட்டு உட்கார்ந்திருக்கு?"

"அதை ஏன்டி கேட்கிற.. அப்பாவுக்கு இப்போது நல்ல சம்பளம் தானே பவி ..
சரி பி.எஃப் பணத்தை எடுத்து மேற்கொண்டு கடன் வாங்கி இவளுக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சிடலாம்னு நானும் அப்பாவும் பேசிட்டு இருந்தோம். ஒரு நல்ல விஷயம் பேசும்போது
அபசகுணம் மாதிரி வேணாம் வேணாம்னு பேசுறா.. அதான்
திட்டினேன்.. அதுக்குத்தான் அம்மையார் முகம் இந்த லட்சணத்தில் இருக்கு"

பத்மா சொன்னதைக் கேட்டுவிட்டு சந்தியாவின் பக்கம் திரும்பினாள்
பவித்ரா. ஏன்க்கா.. இப்போ தானே செய்யலாம் என்று பேச்சு ஸ்டார்ட்
ஆகியிருக்கு? அது என்ன எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிக்கிற
விஷயமா? ஜாதகம் அது இதுன்னு நிறைய பார்மாலிட்டீஸ் இருக்கு..
எல்லாம் செட் ஆகணும்.. நீ நாளைக்கே கல்யாணம் செய்றது போல ஏன் வேண்டாம்னு சொல்ற?"

"இப்போவே கல்யாணம் செஞ்சு என்ன செய்யப் போகிறேன் பவி?
உங்களோடு இருக்கத் தான் எனக்கு பிடிச்சிருக்கு" என்று சந்தியா
சொல்ல அதற்கு பத்மாவிடம் இருந்து பதில் வந்தது.

"இப்போவேவா? என்னடி மனசுல நினைச்சிட்டு இருக்க? உன்னைக் கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டு நாங்களும் நிம்மதியா மூச்சுவிட ஒரு வருஷம் ஆகிடும்.. அதற்கு அப்புறம்
சின்னவளுக்குப் பார்க்க வேணாமா? உனக்கும் அவளுக்கும் ஒரு வருஷம் தான் வித்தியாசம்.. வீட்ல கல்யாண வயசுல பிள்ளைகளை வைச்சுட்டு நாங்க படுகிற கஷ்டம் உங்களுக்கு
எங்கே புரியப் போகுது?"

பத்மாவின் அங்கலாய்ப்பில் உள்ள உண்மையை உணர்ந்து சந்தியா
மௌனமாக சாப்பிட பவித்ரா தான் பத்மாவை சமாதானம் செய்தாள்.
ஒருவழியாக பத்மாவை மலையிறக்கிவிட்டு பவித்ராவும் சந்தியாவும் கிளம்பினார்கள்.

பவித்ரா வேலை நியமன உத்தரவை கையில் எடுத்துக் கொண்டு ஜெனரல்
மேனேஜரின் அறைக்கு வெளியே காத்திருந்தாள். அவர் உள்ளே
அழைக்கவும் உள்ளே சென்றவள் கையில் இருந்த நியமன உத்தரவை
அவரிடம் கொடுத்தாள். கிட்டத்தட்ட நாற்பதைத் தாண்டியிருந்த அவர்
அவளைப் பார்த்து வரவேற்பாய் சிரித்தார்.

"வெல்கம் டூ திஸ் பெஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன் மிஸ் பவித்ரா.. ஐ ஆம் சத்யமூர்த்தி"

"தேங்க்யூ சார்.. கிளாட்டு மீட் யூ"

அவளது உபசார வார்த்தைகளுக்கு நன்றி சொல்லிவிட்டு அவர்
மேற்கொண்டு பேசினார்.

"இன்று சென்னை அளவில் கன்ஸ்ட்ரக்ஷனில் கொடி கட்டிப் பறந்து
கொண்டிருக்கும் சில கம்பெனிகளில் நம்ம கம்பெனியும் ஒன்னு பவித்ரா.
உங்களுக்கு அது தெரிஞ்சிருக்கும்.
முதலில் சின்ன சின்ன ப்ராஜெக்ட்டில் உங்க பெயரைச் சேர்க்க சொல்றேன். உங்க பொட்டென்ஷியல் பார்த்துட்டு பெரிய ப்ராஜெக்ட் பற்றி மேலே பேசலாம் .. இப்போ எம். டி ரூமிற்கு போய்
ரிப்போர்ட் செய்துவிட்டு உங்களுக்கான டீமைக் காட்டுகிறேன்" என்று கூறிவிட்டு
அவர் எழுந்து கொள்ள அவளும் எழுந்தாள்.

ஜீவாவின் "எஸ் கம் இன்" என்ற கம்பரமான குரல் வெளியே நின்றிருந்த
இருவர் காதுகளிலும் விழ இருவரும் உள்ளே சென்றனர்.

சத்யமூர்த்தியைத் தொடர்ந்து வந்த பவித்ராவின் விழிகள் ஜீவாவை ஓர்
அலட்சியத்தோடு பார்வையிட்டுக் கொண்டிருந்தது. ஜீவா அவளைக்
கண்டுகொள்ளாமல் சத்யமூர்த்தியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"சார் .. ஷீ இஸ் பவித்ரா..நியூ ஜாய்னி" என்று சத்யமூர்த்தி சொல்ல
பவித்ரா வேறு வழியின்றி "குட் மார்னிங் சார்" என்றாள். அவளது காலை
வணக்கத்தை சிறு தலையசைவுடன் அங்கீகரித்த ஜீவன் சத்யமூர்த்தியிடம் பேசினான்.

"எந்த டீம் அலாட் பண்ணியிருக்கீங்க சத்யமூர்த்தி?"

"சுந்தரி மேடம் டீம் நாளையிலிருந்து அந்த ஸ்கூல் ப்ராஜெக்ட் ஸ்டார்ட்
பண்ணப் போறாங்க.. ப்ளான் எல்லாம் ஆல்ரெடி உங்களிடம் சைன் வாங்கி
ரெடியாக இருக்கு.. பவித்ராவை அந்த டீமிற்கு அலாட் பண்ணலாம்
சார்" என்று சத்யமூர்த்தி சொல்ல ஜீவா மறுப்பாகத் தலையசைத்தான்.

"இல்லை சத்யமூர்த்தி.. சேகர் டீமிற்கு அலாட் பண்ணுங்க"

"சார் . . அந்த டீம் இப்போது ஸ்டார் ஹோட்டல் ப்ராஜெக்ட் பண்ணிட்டு
இருக்காங்க.. நீங்கள் தான் அந்த டீமில் எல்லாரையும் எக்ஸ்பீரியன்ஸ்
உள்ள ஆட்களாகப் போடச் சொன்னிங்க. . பவித்ரா நியூ ஜாய்னி சார் .."

எம் . டி சொன்னதை மறுத்துப் பேசுகிறோம் என்று அவர் தயங்கியபடியே சொல்ல ஜீவா அதை எதார்த்தமான ஒன்றாகவே எடுத்து பதிலளித்தான்.

"கரெக்ட் தான். . பட் இவங்க மதுரையில் ரெண்டு வருஷமா இதே ஃபீல்டில் வேலை பார்த்திருக்காங்க.. அது நம்ம அளவு பெரிய கம்பெனி
இல்லையென்றாலும் கூட மதுரையில் ஒன் ஆஃப் தி பெஸ்ட் கம்பெனி
தான். . இது மாதிரி சின்ன சின்ன ப்ராஜெக்ட்ஸ் அங்கேயும்
செய்திருப்பாங்க.. சோ ஒரேடியாக எக்ஸ்பீரியன்ஸ் இல்லையென்று
சொல்ல முடியாது. . அண்ட் இன்டர்வியூ கூட நல்லாவே பண்ணியிருக்காங்க.. சோ அங்கேயே பிக்ஸ் பண்ணுங்க" என்று ஜீவா சொல்ல சத்யமூர்த்தி தலையை ஆட்டினார்.

அது ஜீவாவின் நண்பனுடைய
ப்ராஜெக்ட். . அதில் புதிதாக சேர்ந்திருக்கும் பவித்ராவை அலாட் செய்யச் சொன்னது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் உடையவனே சொன்ன பின்பு அதை மறுத்துப் பேச முடியாமல் தலையாட்டினார் அவர். அதைப் பவித்ராவின் அதிர்ஷ்டமாக
நினைத்தார்.

ஆனால், பவித்ராவிற்கு அதெல்லாம் தோன்றவே இல்லை. அவன் சொன்ன ' நம்ம அளவு பெரிய கம்பெனி இல்லையென்றாலும் கூட'
என்ற வாக்கியத்திலே சுழன்றது.
'பணத்திமிர்' என்று அவள் மனம் அலட்சியமாக நினைக்கும்போதே ஜீவா
அவளைப் பார்த்து பேசினான்.

"பவித்ரா.. உங்க மேல நம்பிக்கை வைச்சு தான் இந்த ப்ராஜெக்ட்டில்
உங்களை அலாட் பண்ணச் சொல்லியிருக்கேன். ஏன் அப்படி செய்தோம்னு வருத்தப்படுறபடி நடந்துக்காதீங்க.. ஆல் தி பெஸ்ட்" என்று ஜீவா அழுத்தமாகக் கூற பவித்ரா அவசரமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் சாதாரணமாகத்தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

'பொடி வைத்துப் பேசுறானோ? அவனுக்கு மட்டும் தான் அப்படி பேசத்
தெரியுமா?'

"தேங்க்யூ சார்.. ஒரு சிலரை மாதிரி நம்பிக்கையைப் பாழ் பண்ணும் வேலையை ஒருநாளும் நான் செய்ய மாட்டேன்" என்று அதே ரீதியில் அவளும் பதில் சொல்ல ஒரு தோள்
குலுக்கலோடு அவனும் அதை விட்டுவிட்டான்.

சேகர் டீமில் அவனையும் சேர்த்து ராஜேஷ், நித்தின், ரவிக்குமார், சுலோச்சனா உட்பட ஐந்து பேர் இருந்தனர். அனைவருக்குமே அந்தத் துறையில் எட்டு ஆண்டுகள் கிட்ட
அனுபவம் இருந்தது. சத்யமூர்த்தி பவித்ராவை அவர்களுக்கு
அறிமுகம் செய்து வைத்துவிட்டு அவர்களையும் பவித்ராவிற்கு
அறிமுகம் செய்து வைத்தார். ராஜேஷூம் நித்தினும் அவர்களுக்குள் வியப்பான பார்வையை பரிமாற்றிக் கொள்ள
சேகர் அதை நேரடியாகவே கேட்டான்.

''சார் ஆர் யூ ஷ்யர்? நியூஜாய்னியை டிரைனிங் டீமில் போடாமல் என்
டீமிற்கு அலாட் பண்ணிருக்கீங்க.. நாங்கள் எங்களுக்கான வேலையைப்
பார்ப்போமா அல்லது டிரைனிங் கொடுப்போமா?"

மற்ற நால்வருக்கும் கூட அதே எண்ணம் இருக்கவும் அவர்கள் மௌனமாக சேகரின் பேச்சை ஆமோதித்தார்கள்.

"சேகர் இது எம்.டி யின் ஆர்டர் . அவர் சொல்றதை ஒபே பண்ணுவது தான்
நம்ம முதல் வேலை. அந்த ப்ராஜெக்ட் பற்றி எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க
இவங்களுக்கு" என்றவர், பவித்ராவின் பக்கம் திரும்பி "எந்த டவுட் என்றாலும் சேகரிடம் கேளு பவித்ரா.. ஃபீல் ஃப்ரீ டு ஆஸ்க்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். ராஜேஷூம் நித்தினும் சிநேகமாகப் புன்னகைக்க இவளும் அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள். ஏதாவது பேசுவார்கள் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

அவர்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக் கொண்டு நகர்ந்துவிட்டார்கள்.

சுலோச்சனாவும் ரவிக்குமாரும் கணவன் மனைவி என்று அறிமுகம் செய்து வைக்கும்போது சொல்லப்பட்டிருந்தது. சத்யமூர்த்தியின் தலை மறைந்ததுமே அவர்கள் அவர்களுடைய சீட்டிற்கு போய்விட்டார்கள்.

சேகர் மட்டும் அவளை ஆராய்ச்சியாகப் பார்க்க அவள் எதுவும் பேசாமல் நின்றாள்.

ஜீவா இந்தக் கம்பெனியைத் தொடங்கி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தது. முதல் இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டான் என்று தான்
சொல்ல வேண்டும். எம்.டி ஆக அவன் வேலை வாங்காமல் அவனும் உடன் சேர்ந்து உழைத்தான். கூடவே நம்பகமான வேலை ஆட்கள்.. இரு
கை தட்டினால் தான் ஓசை என்பதற்கு ஏற்றவாறு அவர்களும் சேர்ந்து
உழைத்தார்கள். எதிலிருந்தோ தப்பித்து ஓடுபவனின் ஓட்டமாக இருந்தது ஜீவாவின் ஓட்டம் . இன்று சென்னையில் உள்ள புகழ்பெற்ற கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் ஜீவாவின் கம்பெனியும் ஒன்று. ஜீவா தொழில் தொடங்கியதில் இருந்து வேலை பார்த்தவர்களுள் சேகரும் ஒருவன். திறமைசாலி என்று அடிக்கடி ஜீவாவால் புகழப்படுபவன்..
சத்யமூர்த்திக்கு அவனைவிட அதிகமாக அனுபவம் இருந்ததால் தான்
அவரை ஜெனரல் மேனேஜராக ஜீவா நியமித்திருந்தான். சேகர் ஜீவாவை
ஒத்த வயதினன். திறமையானவன் என்பதால் அவனுக்கென்று சில
சலுகைகள் உணடு.. அவன் தான் எப்போதும் அவனின் டீமில் வேலை
செய்ய ஆட்களைத் தேர்வு செய்து லிஸ்ட்டை சத்தியமூர்த்தியிடம்
கொடுப்பான். அவராக யாரையாவது அலாட் செய்ய வேண்டும் என்றால்
அவனிடம் கேட்டுத்தான் அதையும் அவர் முடிவு செய்வார்.. அது அவன்
முடிவு சரியாக இருக்கும் என்ற அவரது நம்பிக்கை.. அது அந்த அலுவலகத்தில் உள்ள அனைவருமே அறிந்த ஒன்று. . அந்த இமேஜை வந்த முதல் நாளே அழித்த பவித்ராவை அவனுக்குப் பிடிக்காமல் போனது. அதை அப்படியே வெளிக்காட்டவும் செய்தான்.

தன் முன் நின்று தன்னை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தவனை , 'நீ அவ்வளவு பெரிய இவனா?' என்ற
ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அது மேலும் அவனை வெறியேற்றியது. ஒரு வெறுப்பான பார்வையோடு அவனும் விலகிப் போக பவித்ரா இப்போது செய்வதறியாமல்
திகைத்தாள்.

' என் சீட் எதுவென்றே சொல்லாமல் போய் விட்டானே '

பவித்ரா அவனின் சீட் அருகே சென்று அவனை அழைத்தாள்.

'என்ன' என்பது போல் பார்த்தவனிடம், "நான் எங்கே உட்கார்ந்து வேலை செய்வதுனு சொல்லலையே" என்று கேட்டாள் அவள்.

"மேடம் என் மடியில் உட்கார்ந்து வேலை செய்றீங்களா?" என்று
அவன் சுள்ளென்று பேசவும் அவள் முகம் கன்றிவிட்டது.

அதைத் திருப்தியாகப் பார்த்தவன் சுலோச்சனாவை அழைத்து அவளுக்கு
அருகில் அமர வைக்கச் சொன்னான். சுலோச்சனா அவன் சொன்னதைச்
செய்யும் கிளிப்பிள்ளையாய் அவளை அவளுக்கு அருகில் அமர
வைத்ததோடு சரி.. அதன் பிறகு அவள் பக்கமே திரும்பவில்லை. சும்மாவே உட்கார்ந்திருந்தவளுக்கு நேரம் செல்லச் செல்ல தலைவலிக்க
ஆரம்பித்துவிட்டது. சரி கேன்டீன் போய் சூடாக டீ குடிக்கலாம் என்றால்
இங்கே உள்ள நடைமுறைகளைப் பற்றி ஒரு மண்ணும் தெரியவில்லை. பேசாமல் பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவள் எல்லோரும்
கூட்டம் கூட்டமாக எழுந்து செல்லவும் மணி பார்த்தாள். அவளது கைக்கடிகாரம் ஒன்றரை என்று காட்ட சுலோச்சனா உட்பட அவள் டீமில் யாருமே
திரும்பிப் பார்த்தவள் முகம் சுளித்தாள்.

'என்ன ஜென்மங்கள் இவங்க?ஒருத்தி புதிதாக வந்திருக்கிறா. . சிரித்து சிரித்துப் பேச வேண்டாம் . . அந்த
அலுவலகம் பழகும் வரை அதன் நடைமுறைகளைக் கூடவா சொல்லக்கூடாது? இவர்கள் டீமில் போய்
என்னைப் போட்டிருக்கிறானே.. அவனைச் சொல்லணும்.. என்னைப் பழிவாங்கவே இதுமாதிரி
செய்திருப்பான்'

ஜீவாவை மனதினுள் திட்டிக்கொண்டே அமர்ந்திருந்தவளை வயிறு அழைக்கவும்
தனியாக அமர்ந்து சாப்பிட எரிச்சல் பட்டுக்கொண்டே கேன்டீனுக்குச்
சென்றவளுக்கு அங்கே ஓர் இனிய அதிர்ச்சி காத்திருந்தது. கேன்டீனில்
மூலையில் உள்ள ஒரு இருக்கையில் அமர்ந்து தன் முன்
கைக்கப்பட்டிருந்த டிபன் பாக்ஸில் இருந்த சாதத்தை ஸ்பூனால் அலைந்து
கொண்டிருந்தவள் யாரோ தன்னைப் பெயர் சொல்லி அழைக்கவும்
நிமிர்ந்து பார்த்தாள். தன் முன் நின்று தன்னையே குறுகுறுவென்று
பார்த்துக் கொண்டிருந்தவனை அவளும் அதே ரீதியில் பார்த்தாள்.
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
5

"ஹலோ.. உங்க பெயர் தானே பவித்ரா? கூப்ட்டா என்ன ஏதுனு விசாரிக்க மாட்டீங்களா? எவ்வளவு நேரம் நான் உங்க முகத்தையே
பார்த்துட்டு இருக்கிறது?"

"அதைத்தான் நானும் நினைச்சிட்டு இருந்தேன்.. நம்ம முகத்தை முழுசா பார்த்து முடிக்க இவ்வளவு நேரம்
ஆகுதே இவருக்கு.. அவ்வளவு பெரிய முகமா நமக்குனு ஒரு நிமிஷம் பயந்து போய்ட்டேன்"

கௌதமின் கிண்டலான கேள்விக்கு அவன் பாணியிலேயே பதில்
கொடுத்த பவித்ராவைப் பார்த்து சிரித்தான் அவன்.

"இங்க உட்காரலாம் தானே?" என்று பவித்ராவிற்கு முன்னிருந்த
இருக்கையை அவன் சுட்டிக் காட்டி வினவ, அவள் யோசித்தாள்.

"என்ன யோசனை ?"

"இல்ல.. நான் எனக்கு முன்னாடி இருக்க இந்த சீட்டை விலைக்கு வாங்கியதா ஞாபகம் இல்ல.. அதான் அனுமதி தரலாமா இல்ல வேண்டாமானு யோசிச்சேன்'' என்று பவித்ரா கூற கௌதம் கைகளை உயர்த்தி
'எனஃப்" என்றான்.

"சரி பாவம் தனியாக சாப்பிடுறீங்களேனு கம்பெனி தர்றதுக்கு வந்தா என்னையே வறுக்க ஆரம்பிச்சுட்டீங்க?" என்று கௌதம் கேட்க பவித்ரா தன் தவறை உணர்ந்தவளாக சாரி கேட்டாள்.

''சாரி சார்.."

"என்னது சாரா?" என்று அவன் முகத்தைச் சுழித்துக் கேட்க பவித்ரா குழப்பமாக அவனைப் பார்த்தாள்.

''எனக்கு வெறும் இருபத்தைந்து வயசு தான் ஆகுது பவித்ரா.. நீங்க சார்னு கூப்ட்டு ஐம்பது வயசு தாத்தா போல என்னை ஃபீல் பண்ண வைக்காதீங்க"
கௌதம் பாவமாய் சொல்ல பவித்ராவின் இதழ்களில்
புன்னகை அரும்பியது.

''இருபத்....தைந்து வயதையே
சின்ன வயசுனு சொல்றீங்களே சா....ர்.."

அவள் வேண்டுமென்றே சாரை இழுத்துச் சொல்ல கௌதம் காதைப் பொத்திக் கொண்டான்.

"நீ சார்னு கூப்ட்டா நானும் உன்னை மேடம்னு கூப்பிட வேண்டியிருக்கும். . எப்படியும் என்னைவிட சின்ன பெண் தான் நீ.. மேடம்னு கூப்ட்டு உன் வயசைக் கூட்ட எனக்கு விருப்பமில்லை..
சோ, கால் மீ கௌதம்.. அதுதான் எனக்கும் பிடிக்கும்" என்று அவன் சொல்ல, பவித்ரா அவன் பேச்சின் ஒருமையை உணர்ந்தாலும் எதுவும்
சொல்லாமல் சிரித்தபடியே தலையாட்டினாள்.

அதன்பிறகு அவர்கள் பொதுவான விஷயங்களை நிறைய பேசினார்கள்..
சொந்த ஊர் எது என்று ஆரம்பித்து பேச்சு சுற்றிச் சுழன்று வேலை ரீதியாகத் தொடர்ந்தது. பவித்ராவை ஹோட்டல் ப்ராஜெக்ட்டில் சேகர் டீமில் அலாட்
பண்ணியிருப்பதாக அவள் சொல்ல கௌதம் வியப்பாகப் பார்த்துவிட்டு
அதற்கு வாழ்த்து தெரிவித்தான்.

"நீங்கள் வேற கௌதம் ... எனக்கு எரிச்சலா இருக்கு.. அந்த டீமில் நான்
சேர்ந்தது அங்கே யாருக்கும் பிடிக்கல .. நார்மல் டவுட்ஸ் கூட கேட்க முடியலை" என்று பவித்ரா சொல்ல கௌதம் அதன் காரணத்தை அறிந்தவன் போல தலையாட்டினான் அவன்.

ராஜேஷூம் கௌதமும் ஒன்றாய் படித்தவர்கள்.. அவனோடு அமர்ந்து உணவு உண்ணும் போது தான் ராஜேஷ் பவித்ராவை பற்றி சொல்லி அவளைக் காட்டினான். பவித்ராவின் முகத்தில் இருந்த எரிச்சலுக்கான காரணத்தை அறிந்திருந்தான் அவன். அவனால் அந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்றாலும் கூட இப்போதைக்கு உணவு உண்ணும்போது கம்பெனி தரலாம் என்று எண்ணி தான் அவளிடம் வலியச் சென்று பேசினான். எந்த பிகுவும் இல்லாமல் கிண்டலான கேள்விக்கு கிண்டலாக, சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து பதில் சொன்னவளை அவனுக்குப் பிடித்துவிட்டது.

"பவித்ரா.. இதெல்லாம் சகஜம் தான் அதற்காக டீம் மாறுவது, வேலையை
விடுறது அது மாதிரியெல்லாம் யோசிச்சு மத்தவங்கள ஜெயிக்க வைச்சுடாதே .. அதுதான் அவங்களுடைய எண்ணமும் கூட.. இது உனக்கு நல்ல ஆப்பர்சூனிட்டி.. மறந்துடாதே " என்று
கௌதம் சொல்ல பவித்ராவின் மனக்கண்ணில் ஜீவா வந்தான்.

'உங்க மேல நம்பிக்கை வச்சு தான் இந்த ப்ராஜெக்ட்டில் உங்களை
அலாட் பண்ணச் சொல்லியிருக்கேன்.. ஏன் செஞ்சோம்னு வருந்தும்படியாக நடந்து கொள்ளாதீங்க '

காலையில் ஜீவா சொன்னது மீண்டும் மீண்டும் அவள் காதில் ஒலிக்க
அவள் ' இல்லை' என்று தலையசைத்தாள். கௌதம் சேகரை நினைத்துச் சொல்ல பவித்ரா ஜீவாவை நினைத்தாள்.

'அவனுடைய ப்ளான் அதுவாக இருக்கும் பட்சத்தில் அதில் அவனை ஜெயிக்க
விடக்கூடாது'

"இல்ல கௌதம். . நான் அந்த முட்டாள்தனத்தை ஒருநாளும்
செய்யமாட்டேன்"

தனக்கும் அவனுக்கும் சேர்த்து அவள் உறுதியாகக் கூறினாள்.

'ஆனால், மத்தவங்களுக்கு ஏன் என்னைப் பிடிக்கலனு தான் தெரியல கௌதம்.. பார்த்த முதல் நாள்லயே இவ்வளவு வெறுப்பை எப்படிக் காட்ட முடியும்? இதில் ஏதோ
விஷயம் இருக்கிறது .. அதுதான் என்னனு தெரியல "

பவித்ரா யோசனையோடு சொல்ல கௌதம்,

"சரி தான்.. விஷயம் இருக்கிறது" என்றான்.

பவித்ரா கேள்வியாக அவனைப் பார்க்க, கௌதம் சேகரைப் பற்றிச் சொன்னான்.

"சேகர் ரொம்பவே ஆபத்தானவன் பவித்ரா.. அறிவோடு சேர்ந்த ஆபத்து. .
அவன் ஈகோவை யாராவது டச் பண்ணிட்டா அவங்கள எந்த யூஸ்ஸும் இல்லாம ஓரத்தில் உட்கார வைச்சிடுவான். அதனால், பொதுவாக
யாருமே அவனோட முடிவிற்கு ஆப்போசிட்டாக நடந்து கொள்ள
மாட்டாங்க.. உன் டீமில் உள்ள மத்தவங்க நல்லவங்க தான். ஆனால், அவங்க உனக்கு ஆதரவா இருக்க மாட்டாங்க"

பவித்ராவிற்கு சேகரின் வெறுப்பான பார்வைக்கும் மற்றவர்களின்
கண்டுகொள்ளாத பாவனைக்கும் காரணம் புரிந்தது. பவித்ராவும்
அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கப் பழகினாள். கிடைத்த சிறு
துரும்பான கௌதமின் நட்பை ஆவலோடு பற்றிக்கொண்டாள். கௌதம்
அவளுக்கு அந்த அலுவலக நடைமுறைகள் அனைத்தையும்
சொல்லித்தந்தான். அவனது பேச்சில் அவ்வப்போது ஜீவாவைப் பற்றிய
செய்திகளும் வந்து போகும். .

"காசு இருப்பவன் எல்லாரும் சாதிச்சிடுவாங்கனு இல்ல பவி ..
திறமையும் கடின உழைப்பும் இருக்க வேணும். அந்த வகையில் ஜீவா சாருக்கு ரெண்டிலுமே கண்ணை மூடிக்கொண்டு நூறு மார்க் போடலாம்" என்று கௌதம்
சொல்வதில் உண்மை இருப்பதாகவே அவளுக்கும் தோன்றும். ஆனால், அதை வாயைத் திறந்து சொல்லாமல் சிரித்தபடியே வேறு பேச்சிற்கு தாவி விடுவாள்.

ஒரு வாரத்தில் பவித்ரா அந்த அலுவலகத்தில் ஒருவாறு பொருந்தி
விட்டாள். மதிய உணவு இடைவேளையில் கௌதம் அவளுடன் சேர்ந்து அமர்ந்து உணவு உண்ணத் தொடங்கினான். அலுவலகத்தில் சேகர்
சிறுபிள்ளைத்தனமாக அவளை முறைத்துப் பார்ப்பதையும் ஏதாவது வேண்டுமென்றே குறை சொல்வதையும் தினமும் சந்தியாவிடம் சொல்லி சிரிப்பாள்.

"இன்று சேகர் என்னைப் பார்த்த பார்வை
இருக்கேக்கா... அய்யோ.. அம்மா அடிக்கடி சொல்வாங்களே கடுகு போட்டால் வெடிச்சுடும்னு .. அது மாதிரி இருந்தது"

"அந்த ப்ராஜெக்ட்டை ஸ்டடி பண்ண ஃபைல் வேணும்னு கேட்டால் அவன் சொத்தை என் பெயர்ல மாத்தி தரச் சொன்ன மாதிரி பார்க்கிறான்க்கா"

"நான் நின்றிருந்தேன்னு கேன்டீனுக்கு வந்தவன் திருப்பிப் போய்ட்டான்க்கா"

இப்படி தினமும் ஒன்றைச் சொல்லிச் சிரிப்பவளுடன் சந்தியாவும் சேர்ந்து
கொண்டு அவனைக் கிண்டல் அடித்துச் சிரிப்பாள். தன் வெறுப்பும் மற்றவர்களது ஒதுக்கமும் பாதிக்காமல் தன் போலே
வேலையைச் செய்து கொண்டிருந்தவளை வேறு வகையில் தாக்க ஆரம்பித்தான் சேகர்.

அன்று பவித்ரா ஈ-அட்டெண்டன்ஸ்
என்ட்ரி செய்துவிட்டு சேகரிடம் இருந்து வாங்கிய ப்ராஜெக்ட் பைலைப்
பார்த்து முக்கியக் குறிப்புகளைக் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டிருந்தாள். அருகே
நிழலாடவும் திருப்பிப் பார்த்தவள், அந்த அலுவலகத்தில் ப்யூனாக
வேலை செய்யும் வாசு நிற்கவும் அவனிடம் விசாரித்தாள்.

"என்ன வாசுண்ணா?"

"முதலாளி உங்களைக் கூப்பிடுறாங்கம்மா" என்று வாசு சொல்லவும் பவித்ராவின் புருவங்கள் உயர்ந்தது.

'என்னவாக இருக்கும்? '

மனதில் கேள்வி எழ அவள் ஜீவாவின் அறைக்குச் சென்றாள். அங்கு சேகர்
நின்றிருக்க ஜீவாவின் முகம் கோபத்தைப் பூசியிருந்தது.

' எதுவோ சரியில்லை' என்று மனதில் தோன்றியதை மறைத்துக்கொண்டு அவள் சாதாரணமான குரலில்
என்னவென்று கேட்டாள்.

"சார். . வரச் சொல்லியிருந்தீங்களாம்.
பவித்ரா கேட்கவும் ஜீவா சேகரைப் பார்த்தான்.

"என்ன விஷயம் சார்?"

"சொல்லுங்க சேகர்.. கேட்கிறாங்களே என்ன விஷயம்னு.. என்னிடம்
என்ன விஷயமாக கம்ப்ளைண்ட் செய்ய வந்தீங்க?" என்று ஜீவா கேட்க சேகர் பதில் சொன்னான்.

"சார்.. இவங்க ஜாயின் செய்து ரெண்டு வாரம் ஆகிடுச்சு.. பட், சீனியர் சொல்றது எதையும் ஒபே செய்ய மாட்றாங்க.. வந்த
அன்னைக்கே ஒரு நார்மல் ரூமிற்கான டிசைன் ரெடி பண்ணித் தரச்
சொன்னேன். தினமும் ஒரு ரீசன் சொல்றாங்க.. ப்ராஜெக்ட்
பைல் கூட அவங்க கிட்ட கொடுத்துட்டேன்.. இன்னும் அதை
ஸ்டடி பண்ணி முடிக்கல .. வேலைல டெட்
ஸ்லோவா இருக்காங்க சார்.." என்று சேகர் சொல்ல அதை
மறுத்துச் சொல்லப்போன பவித்ராவை கையசைத்துத் தடுத்துவிட்டு சேகரை ச் சொல்லும்படியாக சைகை செய்தான் ஜீவா.

"இதுக்காகத்தான் நான் நியூ ஜாய்னியை என் டீமில் போட வேணாம்னு சொன்னேன். . சத்யமூர்த்தி சார் தான் அதைக் கேட்கல.. யாரை எந்த டீமில் அலாட் பண்ணணும்னு அவருக்குத்
தெரியல" என்று சேகர் முடிக்க, ஜீவாவின் முகம் சேகரின் கடைசி
வார்த்தைகளைக் கேட்டதும் இறுகியது. முகம் இறுக பவித்ராவைப் பார்த்தான் அவன் .

சேகருக்குத் தெரியும் அந்த முடிவை ஜீவா தான் எடுத்தான் என்பது . .!
அதனால் தான் சத்யமூர்த்தியை சொல்வது போல் அந்த வார்த்தைகளைச் சொன்னான் அவன். அவன் எதிர்பார்த்தபடியே ஜீவா முகம் இறுக பவித்ராவை ப் பார்த்தான்.

"நீங்க செய்யும் வேலைக்குத் தான் பவித்ரா உங்களுக்குச் சம்பளம்
கொடுக்கிறேன்.. சும்மா வெட்டிப் பொழுது போக்குறதுக்கு இல்ல..
ரெண்டே வாரத்துல இப்படி டீம் லீடர் கம்ப்ளைண்ட் செய்யும்படி
கொண்டு வந்துட்டீங்களே" என்று கோபமாக ஜீவா பேசவும் பவித்ரா
சேகரைப் பார்த்தாள். அவன் முகத்தில் எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சி
தெரியவும் அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

"சார். . சேகர் சார் என்கிட்ட எந்த வேலையும் சொன்னதாக ஞாபகம் இல்ல.. நேத்து தான் என் கைக்கு ப்ராஜெக்ட் பைல் வந்துச்சு.. இப்போ தான் அதை ஸ்டடி பண்ணி முடித்தேன். ."

"எப்படி பவித்ரா உங்க கிட்ட வந்து தனியாகச் சொல்ல வேண்டுமா? ஒரே
டீம் தானே? எல்லோருக்கும் ஒரு வேலை கொடுத்தால் அது உங்களுக்கும்
சேர்த்துதான்.. நான் ராஜேஷ் கிட்ட சொல்லும்போது நீங்களும் பக்கத்தில்
தானே இருந்தீங்க?" என்று சேகர் கேட்க பவித்ரா தலைகுனிந்தாள்.

சேகர் அவனிடம் சொல்லும்போது அவள் அருகில் இருந்தாள் தான் . . ஆனால்
அவன் குறிப்பிட்டு ராஜேஷிடம் தானே அதை செய்யச் சொன்னான் என்று
மனதில் நினைத்ததைச் சொல்ல முடியாமல்தான் மௌனமாக ஜீவாவைப்
பார்த்தாள் அவள். எப்படியும் சேகர் அதை இல்லையென்று மறுப்பான்.. ராஜேஷை
சாட்சிக்கு அழைத்து அவன் சொன்னதாகச் சொல்லச் சொல்லுவான்.
இத்தனையும் இவன் முன்னிலையில் நடந்தால் அவன் அவர்களைத்தான்
நம்புவான் என்று தோன்ற மறுத்துப் பேசாமல் அமைதியாக இருந்தாள்
அவள். அவள் எந்த மறுப்பும் சொல்லாமல் இருக்கவும் ஜீவாவின் கோபம் இன்னும் கூடியது.

"பவித்ரா இந்த ப்ராஜெக்ட்டின் வேல்யூ உங்களுக்குத் தெரியலனு நினைக்கிறேன்.. நான் ஏதோ நினைச்சு உங்களை அங்கே அலாட்
செய்யச் சொன்னேன். . இவ்வளவு சீக்கிரம் அதை நீங்க பொய்யாக்கிட்டீங்க. . இதுதான் லாஸ்ட் எக்ஸ்க்யூஸ்.. ஞாபகம் வச்சுக்கோங்க.. யூ மே கோ நவ்"

ஜீவாவின் இறுகிய பேச்சால் முகம் கருத்தவள் ஜீவாவின் அறையை விட்டு வெளியே வந்து எதுவும் பேசாமல் பைலில் விட்ட இடத்திலிருந்து படிக்கத்
தொடங்கினாள். கௌதம் வந்து சாப்பிட அழைக்கும் போது தான் பைலை
மூடி வைத்தாள். எப்போதும் இல்லாத அமைதியோடு உணவைக் கொறித்துக்
கொண்டிருந்தவளைப் பார்த்ததும் ஏதோ விஷயம் என்று கௌதமிற்குப்
புரிந்துவிட்டது .

"என்ன பவி . . சேகர் ஏதாவது திட்டிட்டானா? ஓவர் டோஸா இன்னைக்கு? ரொம்பவும் தீவிரமா எதையோ யோசிச்சிட்டு இருக்கியே?"

"ம்ம்... யோசிச்சிட்டுத் தான் இருக்கிறேன் ஆனால், அவனைப் பத்தி இல்லை.. அந்த ப்ராஜெக்ட் பத்தி"

"ப்ராப்ளம் எதுவும் இல்லை தானே? உன் முகமே சரியில்லாமல்
இருக்கே .. அதனால்தான் கேட்டேன்"

கௌதமின் கேள்வியில் பவித்ரா சிரித்தாள்.

"எப்போதும் இருக்கிற முகம் தான் இருக்குது கௌதம். . இன்னைக்கு
சேகர் என்னைத் திட்டாமல் அந்த வேலையை எம். டிக்கு
கொடுத்துட்டான்.. அவ்வளவு தான் விஷயம்"

"வாட்? சேகர் ஜீவா சாரிடம் போட்டுக் கொடுத்துட்டானா?"

"ம்ம்..."

"என்ன சொன்னான்?"

"என்னிடம் அவன் கொடுத்த வேலையை நான் முடிக்கலையாம்"

"சார்‌என்ன சொன்னார்?"

"நான் சும்மா உட்கார்ந்திருப்பதற்கு அவர் சம்பளம் கொடுக்கலையாம்.. இதுதான் லாஸ்ட் எக்ஸ்க்யூஸ்னு சொன்னார்"

"அவன் தான் உன் மேல் காண்டாக இருக்கானே.. அவன் சொன்ன
வேலையை சீக்கிரம் செய்து முடித்திருக்கலாம்ல?"

"கரெக்ட் தான்.. சொன்னால் செய்திருக்கலாம்.. சொல்லாத
வேலையை எப்படிச் செய்றதுதுனு தான் தெரியல . இன்னும் கத்துக்க நிறைய இருக்கிறது போல" என்று
பவித்ரா கூற கௌதம் அவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.

"பவி .. இந்த டீம்ல இருந்து சேன்ஜ் ஆகி பேசாமல் என் டீமிற்கு வந்துடுறாயா?"

"என்ன கௌதம் மாத்தி மாத்திப் பேசுறீங்க? உனக்கு நல்ல ஆப்பர்சூனிட்டி
அது இதுனு முதல் நாள் சொன்னீங்களே?"

"சொன்னேன் தான் . . ஆனால் அவன் ரொம்பவும் சீப்பாக நடந்துக்கிறானே பவி .. அவன் திட்டினால் உன்னை சமாளிக்கச் சொல்லியிருப்பேன்.. சாருக்கு உன்மேல் ராங் இம்ப்ரஸன் கிரியேட் பண்ணுறான்.. அதனால் தான் யோசிக்கிறேன்" என்று கௌதமின் குரல்
உண்மையான கவலையோடு வெளிவர பவித்ரா நெகிழ்ந்துவிட்டாள்.

'இரண்டு வாரங்கள் தான் இவனை எனக்குத் தெரியும் . . எனக்காக இவ்வளவு கவலை கொள்கிறானே'

"ச்சே.. இவ்வளவு வருத்தப்பட அவசியம் இல்ல கௌதம் .. ஐ ஆம் ஓகே..
அவனின் முயற்சி தெரிஞ்சுட்டது. . சோ, சமாளிச்சிடலாம்" என்று
பவித்ரா புன்னகையோடு சொல்ல கௌதம் தலையாட்டினான்.

அன்று மாலை வீட்டிற்குப் போகும்போது பவித்ரா இன்னும் கிளம்பாமல் இருக்கவும் அவளது அருகே அமர்ந்தான் கௌதம்.

"என்ன பவி கிளம்பலையா? என்ன சிஸ்டம் கூட சீரியஸா சண்டை போட்டுட்டு இருக்க?"

"ப்ராஜெக்ட்டிற்கு டிசைன் ரெடி பண்ணிட்டு இருக்கேன்.. ஆல்மோஸ்ட்
ஓவர்.. இன்னும் ஒரு டூ அவர்ஸில் முடிஞ்சுடும்"

"காலைல வந்து பார்க்கலாம் . .
இப்போ கிளம்பு" என்று அவன்
அவசரப்படுத்த, பவித்ரா அவனைக் கிளம்பச் சொன்னாள்.

"நீங்க கிளம்புங்க கௌதம். . நான் ஒரே வேலையாய் இதை முடிச்சுட்டுக் கிளம்புனா தான் எனக்குத்
தூக்கமே வரும்"

"பவி ஆஃபிஸில் யாருமே இல்லை .. எம்.டி கூட கிளம்பிட்டார்.. நீமட்டும் இருப்பது சரியில்ல .. கிளம்பு"

"இல்ல கௌதம்... நான் இதை முடிக்காமல் வீட்டுக்கு போகப்
போறதில்ல" என்று கூறிவிட்டு மறுபடியும் வேலையில் மூழ்கியவளை
எதுவும் சொல்ல முடியாமல் அவனும் அவள் அருகிலேயே
அமர்ந்துவிட்டான். வற்புறுத்தியும் அவன் போகமாட்டேன் என்று
சொல்லவும் வேறு வழியின்றி அவள் வேலையைத் தொடர்ந்தாள்.

இடையில் வீட்டிற்குப் போன் செய்து நான் வருவதற்கு நேரமாகிவிடும் என்று விவரம் சொன்னாள். ஒரு வழியாக
வேலையை முடித்துவிட்டு அவள் மணி பார்த்தபோது ஏழு ஐம்பது ஆகியிருந்தது. அதை ஜீவாவின் மெயிலுக்கு
அனுப்பிவிட்டு கௌதமைப் பார்த்தாள் அவள். மொபைல் போனில் சின்சியராக கேம் விளையாடிக் கொண்டிருந்தான்
அவன்.

"போகலாமா கௌதம்?"

"முடிச்சிட்டியா? வெளியே எதாவது காபி சாப்பிட்டுட்டு போகலாமா
பவி? ரொம்பவே பசிக்குது"

' மணி கிட்டத்தட்ட எட்டாகிடுச்சே... அம்மா இதற்கே ருத்ரதாண்டவம்
ஆடுவாங்க. . காபி ஷாப் போய்ட்டுப் போனால் ரொம்பவே லேட்
ஆகிடுமே.. '

பவித்ராவின் மனம் எச்சரிக்கை செய்தாலும் அவளுக்குத்
துணையாய் இருந்தவன் கேட்கும்போது அவளால் மறுக்கமுடியாமல் 'சரி'
என்றாள். அவளது கை பையை எடுத்துக்கொண்டு கௌதமுடன் சேர்ந்து
வெளியே வந்தவள் வாசலில் வாட்ச் மேனுடன் அமர்ந்து சிவகுரு
பேசிக்கொண்டிருக்கவும் அவசரமாக அவரை நோக்கி விரைந்தாள்.

"ப்பா.. நான் தான் கால் செஞ்சு சொன்னேனே வந்துடுறேனு.. "

"உன் அம்மா என்னை வீட்ல உட்காரவிட்டா தானே? தெரியாத ஊர்
அது இதுனு சொல்லி என்னையும் சேர்த்து கலங்கடிச்சுட்டா" என்று சிவகுரு
பவித்ராவின் அருகில் நின்றிருந்த கௌதமை கேள்வியாகப்
பார்த்துக்கொண்டே பதில் சொன்னார்.

"அப்பா இவர் கௌதம் . .
நான் தனியாக இருந்ததால எனக்குத் துணையாக இருந்தாரு" என்று
அறிமுகம் செய்து வைக்கவும், சிவகுரு அவனிடம் சம்பிரதாயமாக
இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு 'போகலாமா?' என்பது போல்
பவித்ராவைப் பார்க்க, அவள் கண்களில் மன்னிப்பை வேண்டியபடி
கௌதமைப் பார்த்துவிட்டு 'சரி' என்றாள்.

அந்தப் பார்வை பரிமாற்றத்தை
காணாதது போல் கண்ட சிவகுருவின் மனதில் புயலடித்தது. ஆட்டோவில் தன் அருகே அமர்ந்து வரும் மகளை அடிக்கடித் திரும்பிப்
பார்த்துக்கொண்டே சாலையில் பார்வையைப் பதித்திருந்தார் சிவகுரு.

"என்னப்பா? என்னைப் புதிசா பார்க்கிறது போல அடிக்கடி
பார்க்குறீங்களே .. என்ன விஷயம்?"

"பவிம்மா.."

"என்னப்பா.. எதுக்கு இவ்வளவு தயக்கம்?"

"நாம இங்கே வந்து ரெண்டு மாசம் தான் ஆகிறது.. அதுவும் நீ வேலைக்குச் சேர்ந்து ரெண்டு வாரங்கள் தான்
ஆகுது"

"அதுக்கென்னப்பா?"

"புதுசா ஒரு இடத்துல யாராவது அனுசரணையாகப் பேசும் போது நமக்கு
அது பெரிய விஷயமா தெரியும்.. அதுக்காக அவசரப்பட்டு முடிவெடுத்து அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய்டக் கூடாது .. இதெல்லாம்
நிதானமாக முடிவு செய்யணும். புரியுதா?"

பவித்ராவிற்குப் புரிந்தது. அது புரிந்ததாலே கூடவே சிரிப்பும் வந்தது.

"கௌதமைப் பத்தி சொல்றீங்களாப்பா?"

பவித்ரா பளிச்சென்று கேட்க சிவகுரு சங்கடத்துடன் தலையசைத்தார்.

"எதுனால இப்படி ஒரு முடிவிற்கு வந்தீங்கப்பா? கௌதமிற்கு என்மேல்
அந்த மாதிரி ஒரு எண்ணம் இல்லவே இல்லை.. எனக்கும் அப்படித்தான்..
உங்க திருப்திக்காக நாளைக்கு கௌதம் கிட்ட இதைப் பத்தி பேசிடுறேன்
சரிதானா?" என்று பவித்ரா சொல்ல சிவகுரு அவளைப் புரியாத பார்வை
பார்த்தார்.

"என்ன பேசப் போற?"

"அதானே என்ன பேசுறது? அந்த எண்ணமே இல்லாத ஒருத்தன் கிட்ட அந்த எண்ணத்தோடு பேசாதேனு எப்படிப்பா சொல்வது? நான் அப்படிச்
சொல்லி அது ரிவர்ஸ் ரியாக்ஷன் ஆகி உண்மையில் அவனுக்கு அந்த
எண்ணம் வந்துட்டா என்ன செய்றது?" என்று பவித்ரா யோசிப்பது போல பாவனையுடன் கூற சிவகுரு அவசரமாய் வேண்டாமென்றார்.

"பவி அப்படியெல்லாம் பேசிடாதே.. அது நல்லா இருக்காது .. '" என்று
சிவகுரு கூற பவித்ரா சிரித்தாள்.

"நீங்க சொல்றது சரி தான்ப்பா.. புதுசா ஒரு இடத்தில் யாராவது அனுசரணையாகப் பேசும் போது நமக்கு அது பெரிய விஷயமா தான் தெரியும்.. அதுக்கு நாங்க நட்புனு தான் பெயர் வைச்சிருக்கோம்.. அதைத்
தாண்டிய பேச்சுகளை கௌதம் பேசினதும் இல்ல.. நான்
அனுமதிச்சதும் இல்ல"

"சரி சரி.. நான் தான் ஏதோ தப்பா ஊகிச்சு சொல்லிட்டேன்.. நான் 'போகலாமா?'னு கேட்டதும் நீ
கௌதமைப் பார்த்தியா? அதான் அப்படிக் கேட்டுட்டேன்.. சாரிம்மா" என்று அவர் வருத்தமாகச்
சொல்ல பவித்ரா அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

"ஏன்ப்பா சாரியெல்லாம் கேட்டு பெரிசா ஃபீல் பண்றீங்க.. கௌதம் ஒரு
காபி சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் போகலாம்னு சொன்னார். நானும்
நமக்காகத் தானே அவரும் இவ்வளவு நேரம் இருந்தார்னு சரினு
சொன்னேன்.. அதனால் தான் அவரைப் பார்த்தேன்" என்று பவித்ரா
காரணம் சொல்லவும் சிவகுருவிற்கு 'அப்பாடா' என்றிருந்தது.

வீட்டிற்குப் போனதும் பத்மாவிடம் சிவகுருவை அனுப்பி வைத்ததற்கு திட்டிவிட்டு அவசரமாக முகம் கழுவி உடை மாற்றிவிட்டு சாப்பிட
அமர்ந்தாள் அவள். வழக்கம் போல பேச்சுக்கள் நடுவே சாப்பாட்டை முடித்துவிட்டு சந்தியாவிற்கும் பவித்ராவிற்கும் பொதுவான அறைக்குச் சென்று படுத்துவிட்டாள். அவளது நினைவுக் குவியல் வழக்கம்போல ஜீவாவை
மையப்படுத்தி சுழன்று வெறுப்போடு புருவத்தைச் சுழிக்க வைத்தது.

'ஈமெயில் பார்த்திருப்பானா? பார்த்திருப்பான். . இந்நேரம் புரிஞ்சிருக்கும் என்ன பத்தி.. ! '

முகத்தைச் சுளித்தவாறே அவனை மனதிற்குள் கரித்துக் கொட்டியவாறு படுத்திருந்தாள்.

பவித்ரா நினைத்தது மாதிரியே ஜீவாவும் அந்த மெயிலைத் தான் அப்போது
பார்த்துக் கொண்டிருந்தான். அலுவலகத்திலிருந்து வந்தவுடனே நேராக வேதவள்ளியிடம் தான் சென்றான் அவன் . பவித்ராவைத் திட்டியது மனதிற்கு என்னவோ போலிருக்க பாட்டியிடம் பேசினால் மனதிற்கு கொஞ்சம் இதமாக இருக்கும் என்றெண்ணி வேதவள்ளியின் அறைக்குச் சென்றான். அலுவலக உடையைக் கூட மாற்றாமல் தன்னைத் தேடி பேரன் வந்திருப்பது அவருக்கு வியப்பாக இருந்தது.

"என்னடா ஜீவா.. வந்தவுடனே என்னைத் தேடி வந்திருக்க.. என்ன
விஷயம்?"

"என் பாட்டியிடம் நான் பேச காலம் நேரம்லாம் பார்க்கணுமா
என்ன? இப்போ எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் தரமுடியுமா
முடியாதா?" என்று ஜீவா கேட்க, அவன் முதுகிலேயே ஒரு அடி போட்டார்
பெரியவர்.

"என்னடா பேச்செல்லாம் ஏதோ கம்பெனிகாரன் கிட்ட பேசுற மாதிரி
பேசுற? நான் உன் பாட்டி அப்படினு நினைவிருக்கா இல்லையா?"

''எனக்கு அது நினைவிருக்கு.. நீங்க கேள்வி கேட்கிறதைப் பார்த்தால் உங்களுக்குத் தான் நான் பேரன்னு மறந்து போய்டுச்சுனு நினைக்கிறேன்" என்று ஜீவா பதிலடி கொடுக்க வேதவள்ளி சிரித்தார்.

"உன்னைப் பேச்சில் வெல்ல யாராலும் முடியாதுடா" என்று வேதவள்ளி
அலுத்துக் கொள்ள ஜீவாவுக்கு அவனை பேச்சில் வெல்ல ஒருத்தி
இருந்தது நினைவில் வந்து போனது.
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
6

ஜீவாவின் நினைவு இங்கே இல்லை என்பதை உணர்ந்து வேதவள்ளி அமைதியாக இருக்க, ஜீவா அந்த அமைதியில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு மீண்டும் பேசினான்.

"சின்னதா ஒரு பிரச்சினை பாட்டி ஆபஸ்ல.. ஒரே மூட்-ஆஃப்.. அதான் உங்க கிட்ட பேசலாம்னு வந்தேன்"

"என்னடா பிரச்சினை?" என்று வேதவள்ளி கேட்க, ஜீவா விழித்தான்.

'பாட்டி கிட்டப் போய் அவளைத் திட்டினது ஒரு மாதிரியா இருக்குனு சொன்னா நாளைக்கே அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வா அது இதுனு சொல்லிடுவாங்களே .. '

"என்னடா யோசனையெல்லாம் பலமா இருக்குது?"

"அதை உங்களுக்குப் புரியுற மாதிரி எப்படிச் சொல்றதுனு தான்
யோசிச்சிட்டு‌ இருந்தேன்.. சொல்லத் தெரியல பாட்டி.. விடுங்க.. அதை
நான் பார்த்துக்கிறேன்"

"இதுக்குத் தான் நான் சீக்கிரம் ஒரு கல்யாணம் செய்துக்கோனு சொல்றேன்.. எனக்குப் புரியாதது அவளுக்குப் புரியும் இல்லையா? எனக்கும் ஒரு துணையா இருக்கும்.. இவ்வளவு பெரிய வீட்ல மொட்டு
மொட்டுனு நான் மட்டும் இருக்கேனே.. எனக்காக பாவம் பார்த்து
கல்யாணம் செய்துக்க கூடாதா?"

'ஆரம்பிச்சுட்டாங்க'

"ஏன் பாட்டி பொய் பேசுறீங்க? தோட்டக்காரர் கருப்பையா இருக்காரு..
வாட்ச்மேன் நல்லசிவம் இருக்காரு.. சமையலுக்கு சரோஜாக்கா இருக்காங்க... ராணி மாதிரி அவர்களை வேலை வாங்கிக்கிட்டு ஜாலியா இருக்க வேண்டிதானே பாட்டி? உங்க பேரனின் சிண்டைப் பிடிக்க ஒருத்தியை அவ்வளவு சீக்கிரம் கொண்டு வந்து என்ன செய்யப்
போறீங்க?"

"அடப் போடா கூறுகெட்டவனே.. வேலையாட்களை வைக்க வேண்டிய
இடத்தில் வைக்கணும்... அவங்களுக்குச் சரியாகப் பேசினா வீணாகப் பிரச்சினை தான். . இதுவே உன் பொண்டாட்டி வந்துட்டா அவகிட்ட நான் பேசலாம் இல்லையா?"

"நீங்க பேசுறதுக்கு ஒரு ஆள் வேணும்னு நான் என் தலையை இன்னொருத்தி கிட்ட கொடுக்க முடியாது பாட்டி" என்று
விளையாட்டாகக் கூறியவனை மறுத்துப் பேச வேதவள்ளி வாய் திறப்பதற்குள் ஜீவா சிட்டாகப் பறந்துவிட்டான்.

தன் அறைக்கு வந்தவன் குளித்து முடித்துவிட்டு மெத்தையில் படுத்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ நினைவு வந்தவனாக அவனது லேப்டாப்பை ஆன் செய்தவன் ஈமெயில் வந்திருப்பதாகச் செய்தி வரவும் அதைத் திறந்து பார்த்தான். பவித்ரா அனுப்பியிருந்த மெயில் முதலில் இருக்கவும் யோசனையோடு அதை திறந்து பார்த்தான். அவள் அனுப்பியிருந்த மெயிலைப் பார்த்ததும் அவசரமாக மெயில் வந்திருந்த நேரத்தைப் பார்த்தான்.. கணினியின் திரை ஏழு ஐம்பது எனக் காட்டவும் அவனது அலுவலக வாட்ச்மேனிற்கு போன் செய்து விவரம் கேட்டான். அவன் பவித்ராவின் தந்தை வந்து அவளை அழைத்துக் கொண்டு
போனதாகச் சொல்லவும் போனை வைத்துவிட்டான்.

' அந்தத் திமிர் இன்னும் குறையல. இவ்வளவு நேரம் தனியா
இருந்து வேலை பார்த்து ஒரே நாளில் முடிச்சுக் கொடுத்துட்டாளே.. வேலைக்குச் சேர்ந்த ரெண்டு வாரத்துல இவ்வளவு
நேரம் வேலை வாங்குறாங்கனு அவங்க வீட்ல நினைச்சிருப்பாங்க. . அவ்வளவு அவசரம் என்ன? இவளை ஒரு வார்த்தை சொல்லிவிடக் கூடாது.. அந்த சேகர் பேசினதைக் கேட்டுட்டு வேறு எப்படித்தான் நான் ரியாக்ட் செய்வது? '

அவளை மனதிற்குள் திட்டியபடியே அவள் அனுப்பியிருந்த டிசைனைப்
பார்த்தவனின் கண்களில் பாராட்டு தோன்றியது. அவசரத்தில் செய்த
வேலையென்று சொல்ல முடியாத அளவிற்கு நேர்த்தியாக இருந்தது அது. அப்போதே அப்ரூவ் செய்துவிட்டான் அவன்.

அடுத்த நாள் காலை எப்போதும் போல் பவித்ரா அவளது சீட்டில் அமர, அவள் எதிர்பார்த்தபடியே வாசு அவளை எம். டி
அழைப்பதாகக் கூறிச் சென்றான் . அனுமதி கேட்டு வெளியே
நின்றவளை ஜீவா உள்ளே அழைத்தான்.

"உங்களுக்கு ஆஃபீஸ் டைமிங் தெரியுமா தெரியாதா?" என்று ஜீவா அமர்ந்த
குரலில் கேட்க பவித்ரா 'தெரியும்' என்றாள் முணுமுணுப்பாக.

"நேத்து அவ்வளவு நேரம் இருந்து யார் உங்களை வேலை பார்க்கச்
சொன்னது?"

"நான் வேலை பார்க்கத் தானே சார் சம்பளம் வாங்குறேன். சும்மா
உட்கார்ந்திருந்து சம்பளம் வாங்குறது எனக்குக் கூடப் பிடிக்காது சார் .. " என்று பவித்ரா அமைதியான குரலில் சொல்ல, ஜீவா பல்லைக் கடித்தான்.

'சொல்லிக் காட்டுறா'

"இந்த அறிவு முதல்லயே இருந்திருக்கணும் மிஸ் பவித்ரா. . ஒரே
நாளில் உட்கார்ந்து இப்படி ஓவர் டைம் செய்யத் தேவையில்லை" என்று
அவனும் சுள்ளென்று பேச, பவித்ரா உதட்டைக் கடித்துக்கொண்டு
அமைதியானாள்.

'இதுக்கு என்ன பதில் சொல்வது? சொன்னால் பிரச்சனை வளவளனு இழுக்கும் '

''சாரி சார்.. அது என் மிஸ்டேக் தான். அதைச் சரிசெய்ய தான் நேத்து ஓவர்
டைம் சார்" என்று பவித்ரா பணிவாகச் சொல்ல, ஜீவா அதற்கு மேல்
அவளை எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவள் கிளம்பிய பிறகுதான்
இனிமேல் தானும் கிளம்ப வேண்டுமென்று மனதில்
சொல்லிக்கொண்டான்.

சேகரை அழைத்து அந்த டிசைனை ஃபைனலைஸ் செய்து வேலையைத் தொடங்கச்சொன்னான். அது பவித்ராவின் டிசைன்
என்பதை அறிந்தபோது சேகர் சுதாரித்தான். இனி வேலை செய்யவில்லை என்று காரணம் காட்டி அவளை ஓடச் செய்ய முடியாது என்பதை அறிந்து அவளை வேறுவகையில் ஓட வைக்க முடிவு செய்தான். அதன்படி,
அனைவரது வேலையும் சேர்த்து பவித்ரா செய்யும்படி ஆனது . அவளும் முகம் சுளிக்காமல் அனைத்தையும் செய்தாள். அந்த நேரத்தில் தான் அவளது வீட்டில் சந்தியாவிற்கு திருமணம் நிச்சயம் செய்தார்கள்.

மனோஜ் ஐ.டி யில் வேலை செய்பவன்.. வீட்டிற்கு ஒரே பையன். . அப்பா ராமநாதன். அம்மா சாவித்திரி குடும்பத்தலைவி. ஒரு தங்கை காவ்யா.. அவள் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள். குடும்பமும்
நல்ல குடும்பமாக இருக்கவும் பத்மாவிற்கும் சிவகுருவிற்கும் வெகுவான திருப்தி. சந்தியாவிற்கு மனோஜின் புகைப்படத்தைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது. உயரமாக சிவந்த நிறத்துடன் வடக்கத்திய நாயகன்
போலிருந்தவன் சந்தியாவின் மனதில் நன்கு பொருந்தி விட்டான். வெளியே எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல காட்டிக்கொண்டு கல்யாணக் கனவுகளில் அவள் மிதக்க ஆரம்பிக்க, பவித்ரா அவளை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டாள்.

"அக்கா ஆண்கள் சிவப்பா இருந்தால் நல்லா இருக்காதுனு நீதானே சொல்லுவ? மாப்பிள்ளை
என்னக்கா இப்படி மைதா மாவு கலரில் இருக்காரு? உனக்குப் பிடிக்கலனு அம்மாகிட்ட சொல்லிவிடவா?" என்று வேண்டுமென்றே சீண்டுவாள் பவித்ரா.

"நிறத்தில் என்னடி இருக்கிறது? அப்போ ஏதோ அறியா பருவத்தில்
சொல்லியிருப்பேன். . அழகுன்றது மனசில் தானே இருக்கு" என்று சந்தியா
சொல்ல, பவித்ரா 'ஓஹோஹோ' என்றாள்.

இன்னொரு முறை திடீரென்று, "அக்கா இந்த மாப்பிள்ளையை
வேணாம்னு சொல்லிடுக்கா" என்றவளை, 'அய்யோ இப்போ என்ன சொல்லப் போறாளோ' என்ற ரீதியில்
பார்த்து வைத்தாள் சந்தியா.

"என்னக்கா பார்க்கிற? மாப்பிள்ளைக்கு ஒரே தங்கையாம்.. எனக்கு கம்பெனிக்கு ஒரு தம்பி இருந்திருந்தால் நல்லா
இருந்திருக்கும்" என்று கண்ணடித்தவளைப் பார்த்து
தலைமீது கை வைத்தாள் சந்தியா.

"பவி.. சோதிக்காதே என்னை.. உப்புச் சப்பில்லாத ரீசனெல்லாம் சொல்லி எப்படி வேணாம்னு சொல்றது?"

"அக்கா உனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்ச மாதிரியே தெரியல.. அதான்
நான் யோசிச்சு யோசிச்சு உனக்கு அம்மா கிட்ட சொல்றதுக்கு ரீசன்ஸ்
சொல்லிக் கொடுக்கிறேன்.. நீ என்னடான்னா இப்படி சொல்ற?"

"அம்மாவும் அப்பாவும் இந்த இடம் அமைஞ்சா நல்லா இருக்கும்னு
நினைக்கிறாங்க பவி.. அவங்களுக்குத் தெரியாத நல்லது கெட்டதா
நமக்குத் தெரிஞ்சுடப் போகுது? அவங்க இஷ்டப்படி நடக்கட்டும் விடு"
என்று சந்தியா சொல்ல, அதை நல்ல பிள்ளையாய் அமைதியாகக்
கேட்டுவிட்டு இரவு உணவுண்ணும் போது பத்மாவிடம் வத்தி வைத்துவிட்டாள் அவள்.

சிவகுரு, பவித்ரா, சந்தியா மூவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க,
பத்மா அவர்களுக்கு உணவு பரிமாறியபடியே சிவகுருவிடம் பேச்சை
வளர்த்தாள்.

"மாப்பிள்ளை வீட்ல இருந்து எதாவது தகவல் வந்துச்சா? எப்போ பெண் பார்க்க வரப் போறதா சொன்னாங்க?"

"ம்மா. . இது கொஞ்சம் கூட நல்ல இல்ல " என்று பவித்ரா சொல்ல, பத்மா எதுவென்று கேட்டார்.

"அக்காவிற்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கானு கேட்காமல்
நீங்களா முடிவு செய்றீங்க.. கல்யாணம் அக்காவுக்கா இல்லை உங்களுக்கா?" என்று பவித்ரா கேட்க சிவகுருவும் பத்மாவும் பீதியோடு ஒருவரையொருவர் பார்த்தனர். சந்தியாவும் அதே பார்வையோடு பவித்ராவை பார்த்தாள்.

"என்னடி வயித்துல புளியைக் கரைக்கிற?"

"நான் எதையும் கரைக்கல .. அக்காவுக்கு
மாப்பிள்ளையை பிடிக்கலையாம் .. உங்களுக்கு நல்லது கெட்டது அவளை விட அதிகமாகத் தெரியுமாம். அதனால் தான் சரினு சொல்லியிருக்கா" என்று சந்தியா சொன்னதை அப்படியே கிளிப்பிள்ளையாய் அவள் சொல்ல பத்மா சந்தியாவைக் கலக்கமாகப் பார்த்தாள்.

"என்னடி சொல்றா இவள்?"

"தியா.. உனக்குப் பிடிக்கலைனா சொல்லிடுமா. . தரகர் கிட்ட சொல்லி வேற இடம் பார்க்கச் சொல்லலாம். எங்களுக்காகப் பார்க்காதே" என்று சிவகுரு சொல்ல சந்தியாவிற்கு புரையேறியது. அதைப் பார்த்து பவித்ரா மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

"சொல்லுடி.. அப்பா சொன்னது மாதிரி தரகர் கிட்ட வேற இடம் பார்க்கச்
சொல்லலாமா?" என்று பத்மாவும் கேட்க, சந்தியா சிரித்துக் கொண்டிருந்த
தங்கையைக் கோபமாகப் பார்த்தாள்.

"ம்மா... எனக்குப் பிடிச்சிருக்கும்மா. . பவி சும்மா என்னைக் கேலி செய்றா" என்று சந்தியா சொல்ல பவித்ரா சிரித்தாள்.

"ஏன்டி அறிவிருக்கா உனக்கு? எதில் விளையாடுறதுனு இல்லையா?"
என்று பத்மா பவித்ராவின் தலையில் குட்டு வைக்க, அவள் தலையைத்
தேய்த்துக்கொண்டே பதில் சொன்னாள்.

"ம்மா.. மாப்பிள்ளையின் போட்டோவை மேடம் போனில் வாங்கி வைச்சுட்டு, வாயைத் திறந்து பிடிச்சுருக்குனு சொல்லாமல் ஆட்டம் காட்டிட்டு இருந்தாங்க.. அதனால் தான் சும்மா விளையாடிப் பார்த்தேன்" என்று பவித்ரா சொல்ல சந்தியாவின் முகம் சிவந்து விட்டது.

அதற்கும் பவித்ரா ' பாருடா வெக்கத்தை' என்று கிண்டல் செய்ய, பத்மாவும்
சிவகுருவும் சிரிக்க, சந்தியா பவித்ராவை பாவமாகப் பார்த்தாள். பவித்ரா பெரிய மனது பண்ணி அத்தோடு விட்டுவிட பத்மாவும் சிவகுருவும் சந்தியாவின் திருமணத்தைப் பற்றி மேற்கொண்டு பேசினார்கள் .

அடுத்து வந்த நல்ல நாள் ஒன்றில் மனோஜின் வீட்டிலிருந்து வந்து சந்தியாவைப் பெண் பார்த்து போனார்கள். அவர்களுக்கும் சந்தியாவைப் பிடித்துப் போக ஒரு மாதம் கழித்து திருமணம் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. சந்தியா அடிக்கடி கனவுகளில் மூழ்கினாள். கனவுகளில் மூழ்கியவளைக் காதலிலும் மூழ்க வைத்தான் மனோஜ் .வாரம் ஒரு முறை வெளியே அழைத்துச் சென்றான். திடீரென அவள் வேலை பார்க்கும் பள்ளிக்கே வந்து இன்ப அதிர்ச்சி கொடுப்பான். அவனோடு வாழப்போகும் வாழ்க்கையை ஆவலோடு எதிர்பார்க்கலானாள் சந்தியா.

சந்தியாவின் சந்தோஷம் பவித்ராவையும் சந்தோஷப்படுத்தியது. அலுவலகத்தில் கூட சேகர் கொஞ்சம் இணக்கமாக நடந்து கொள்ள
ஆரம்பித்தான். சைட் விசிட்டிற்கு அவ்வப்போது சேகரோடு பவித்ரா
சென்று வந்தாள். சேகரிடம் தெரிந்த மாற்றத்தில் பவித்ரா கொஞ்சம் நிம்மதியானாள். கௌதம் கூட சேகரின் மாற்றத்தை எண்ணி பவித்ராவிடம் வியந்தான்.

இடையில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு
கட்டுவதற்கு சென்னையில் ஒரு
முக்கியப்புள்ளி ஜீவாவின் கம்பெனியை நாடியிருந்தார். அந்தப் பணி
கௌதம் டீமிற்குத் தரப்பட்டிருந்தது.

அன்று சாப்பிடும் நேரம் தாண்டியும் கௌதம் வராமல் இருக்கவும் பவித்ரா
கௌதமைத் தேடிச் சென்றாள். கௌதமுடன் ஜீவா நின்று
பேசிக்கொண்டிருக்கவும் அவள் இரண்டடி தள்ளியே நின்றுவிட்டாள்.
பவித்ரா வரும்போதே கௌதம் அவளைப் பார்த்துவிட்டதால் ஜீவா
அறியாமல் அவளிடம் 'என்ன' என்று சைகை செய்தான். அவள்
சாப்பிடுவது போல சைகை செய்து காட்ட, கண்களால் மன்னிப்பை
வேண்டியபடி ஜீவாவைப் பார்த்தான். அவன் எதுவும் பேசாமல் கௌதமைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னாச்சு கௌதம்? பேயைப் பார்த்தது மாதிரி இப்படி முழிக்குறீங்க?"
என்று கேட்டுக்கொண்டே திரும்பிப் பார்த்தவன் அங்கே பவித்ரா நிற்கவும்,

"பேயைத் தான் பார்த்திருக்கான்" என்று தனக்குள் சன்னமாக முனகினான்.

ஜீவாவின் வாய் அசைவும் முனகலும் கௌதமிற்குத் தெளிவில்லாத குரலில் கேட்க, அவன் ஜீவாவை ஆச்சரியமாகப் பார்த்தான்.
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
7

"சார்?"

அப்போது தான் வாய் விட்டுச் சொன்னது அவன் மனதில் உரைக்க ஜீவா, அந்தக் கேள்வியை அப்படியே விட்டுவிட்டு வேறொரு கேள்வி கேட்டான்.

"உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்காங்களா கௌதம்?"

"யெஸ் சார்"

"போய் என்னனு கேட்டுட்டு வர வேண்டிதானே ? "

"சார்.. அது வந்து.. லன்ச் டைம் ஆகிட்டது"

கௌதம் தயக்கத்தோடு சொல்ல ஜீவாவின் கண்களில் எதுவோ வந்து போனது. மனதில் தோன்றிய 'இவங்க ரெண்டு பேரும் எப்படி ப்ரண்ட்ஸ் ஆனாங்க?' என்ற கேள்வியை மறைத்துக் கொண்டு,

"சாரி கௌதம்.. நான் கூட லன்ச்சுக்குத் தான் கிளம்பினேன். உங்க கிட்ட
பேசிட்டு இருந்ததில் மறந்துட்டேன்.. யூ மே கோ" என்று சொல்லிவிட்டு அவனும் கிளம்பி விட்டான்.

சாப்பிடும்போது கௌதம் பவித்ராவை ஆராய்ச்சியாய் பார்த்துக்கொண்டே
உணவுண்ண பவித்ரா என்னவென்று கேட்டாள்.

"என்ன கௌதம் அப்படி பார்க்கிற?"

கௌதம் பவித்ராவிடம், "உனக்கும் எனக்கும் ரெண்டு வருஷம் தானே வித்தியாசம்.. அந்த 'ங்க'வ கட் பண்ணு"
என்று வற்புறுத்த பவித்ரா இப்போதெல்லாம் அவனை
ஒருமையில் தான் அழைத்துப் பேசினாள்.

"ஜீவா சாரை முன்னாடியே உனக்குத் தெரியுமா?" என்று கௌதம் ஆராய்ச்சி பார்வையுடன் கேட்க, பவித்ரா விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

"இல்லையே.. ஏன் கேட்கிற கௌதம்?"

"ஜஸ்ட் ஆஸ்கிங்.. அதை விடு.. இப்ப வந்திருக்கிற நியூ ப்ராஜெக்ட் எங்க டீமிற்குத் தான் அலாட் ஆகியிருக்கு.
அதைப் பத்தி தான் சார்
பேசிட்டு இருந்தார்" என்று கௌதம் உற்சாகமாகச் சொல்ல
பவித்ராவும் அவன் ஜீவாவைப் பற்றி தோண்டித் துருவாமல் விட்டுவிட்டதை எண்ணி நிம்மதியாய் அவன் பேச்சில் கலந்து கொண்டாள்.

ஒரு மாதம் வேலை வேலை வேலையென்றே ஓடியது பவித்ராவிற்கு.
அலுவலகத்தில் அந்த ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருந்தது. வீட்டில்
சந்தியாவின் கல்யாண வேலை துரிதமாக நடந்து கொண்டிருந்தது.
இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் என்ற நிலையில் பவித்ரா ஒருவாரம் விடுப்பு எடுத்திருந்தாள்.

பவித்ரா நீல நிறத்தில் பட்டு உடுத்தி அதன் கோல்டன் நிற பார்டரில்
முழங்கை வரை ப்ளவுஸ் அணிந்திருந்தாள். சின்ன சின்ன மாம்பழத்தைக் கோர்த்தது மாதிரியான அமைப்பில் கழுத்திற்கு ஆரம் அணிந்து காதுகளில் அதன் செட்டான கம்மல் அணிந்திருந்தாள். நெருக்கமாய்க் கட்டிய
மல்லிகைப் பூச்சரம் அவள் தோள்களில் வழிந்து அவளின் அபரிதமான
அழகை அனைவரிடமும் படம்பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தது. அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தவள் வரவேற்பைத் தாண்டி வந்து கொண்டிருந்த கௌதமைப் பார்த்ததும் ஓடிச் சென்று வரவேற்றாள்.

சிவகுருவிற்கும் பத்மாவிற்கும் அவனை அறிமுகம் செய்து வைத்தாள். சிவகுரு
ஏற்கெனவே அவனைப் பார்த்திருந்ததால் அவனுடன் சிறிது நேரம் நின்று பேசிக் கொண்டிருந்தார். பத்மா அவரை அழைக்க, கௌதமிடம் சிறு தலையசைப்புடன் விடைபெற்று அவர் மனைவியை நோக்கிச் செல்ல, மணமக்கள் நன்றாகத் தெரியும்படி
முதல் வரிசையும் இல்லாமல் கடைசி வரிசையும் இல்லாமல் இல்லாமல்
நடுவில் உள்ள வரிசையில் அமர்ந்தான் அவன்.

கல்யாண பரபரப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் யாரோ தன்னையே பார்ப்பதைப் போலிருக்கவும்
மண்டபத்தைச் சுற்றி பார்வையைச் சுழல விட்டான். மேடையின் அருகே
ஏதோ ஒரு பெண்மணியிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு பெண் கௌதமின்
பார்வையைச் சந்தித்தவுடன் பதட்டத்துடன் தலை குனிந்தாள். அவளது பதட்டம் எட்டப்பியாகி அவளைக் காட்டிக் கொடுக்க, கௌதமின் கண்களில் சுவாரஸ்யம் வந்தது. அவன் பாராத நேரங்களில் மட்டும் பார்வை அம்புகளை வீசிக் கொண்டிருந்தவள் ஏதோ ஒரு வகையில் அவனை ஈர்த்தாள்.

அவள் தன்னைத் தான் பார்க்கிறாளா என்று அறிய எண்ணி அவளறியாமல் எழுந்து சென்று அதன் நேர் எதிர்ப்புறம் இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தான். அந்தப் பெண்மணியிடம் பேசியவாறே அவளது பார்வை அடிக்கண்ணில் கௌதமைத் தேடி அலைந்தது. அவன் அங்கு இல்லையென்று உணர்ந்ததும் சின்ன ஏமாற்றத்தோடு நிமிர்ந்து அவனைத் தேடியவள் அவன் எதிர்ப்புறம் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் மறுபடியும் வேகமாக தலைகுனிந்து கொண்டாள்.

கௌதம் சாப்பிட்டு விட்டானா என்று கேட்க பவித்ரா அவன் அருகில் வந்தாள்.

"கௌதம் நீ சாப்ட்டியா? இல்லைன்னா வா.. இப்போ கூட்டம் கொஞ்சம் கம்மி தான்" என்று பவித்ரா அழைக்க, அவளை அருகில் அமரச் சொன்னான் அவன்.

"என்ன கௌதம்?"

"ஒரு பட்சி என்னையே பார்க்குது பவி" என்று கௌதம் சிரிப்போடு
சொல்ல அவள் புரியாமல் பார்த்தாள்.

"பட்சியா?"

"ம்"

"அப்டினா?"

"நீயெல்லாம் கோ-எட் படித்தேன்னு வெளியே சொல்லிடாதே.. பட்சி
மீன்ஸ் ஃபிகர் . . ஒரு பொண்ணு என்னை சைட் அடிக்கிறா" என்று
கௌதம் சொல்ல, பவித்ராவின் கண்களில் குறுகுறுப்பு வந்தது.

"எந்தப் பெண்?" என்று பவித்ரா கேட்க, கௌதம் கை காட்டிய பெண்ணைப்
பார்த்ததும் 'கெடுத்தான் காரியத்தை ' என்று தலையில் கை வைத்தாள்.

"அவள் உன் சொந்தக்காரப் பெண்ணா பவி?' இன்ட்ரோ பண்ணி வையேன்"
என்று கௌதம் கேட்க பவித்ரா சுற்றும் முற்றும் பார்த்தாள்.

"ஷ்ஷ் கௌதம். . என் அக்காவின் வாழ்க்கையைக் கெடுக்க எத்தனை
நாளாக ப்ளான் பண்ணின?"

"ஹே.. இதென்ன அபாண்டம்? நான் என்ன செய்தேன்?"

"அது அவளுடைய நாத்தனார் .. என் அத்தானின் தங்கை காவ்யா"

"வாட்?"

"யெஸ்."

"சரி அதுக்கென்ன இப்போ?"

"அதுக்கென்னவா? அவள் அத்தான் கிட்ட சொன்னால் என்ன நடக்கும்?"
என்று கேட்டவளை முறைத்தான் அவன்.

"என்ன பார்த்தால் எப்படித் தெரியுது உனக்கு? அவ எதுக்கு அவளுடைய
அண்ணன் கிட்ட கம்ப்ளைண்ட் செய்யணும்? நான் என்ன அவ கையைப்
பிடிச்சா இழுக்கப் போறேன்? அண்ட் மோர் ஓவர் அவ தான் என்னை
சைட் அடிக்கிறா" என்று கோபமாகச் சொன்னான் அவன்.

"அதில் உனக்குப் பெருமையா?"

"லைட்டா..." என்று சொல்லிச் சிரித்தவனை வம்பு செய்து சாப்பிட
அழைத்துப் போனாள் அவள்.

அடுத்து அவன் அந்தப் பெண் பக்கம்
திரும்பவே இல்லை. ஆனால், அவள் அவனைப் பார்ப்பதும் அவனைக்
கவர முயற்சி செய்வதையும் நிறுத்தவே இல்லை. அவனின் பாராமுகம்
கூட அவளைப் பாதித்ததாகத் தெரியவில்லை.

பெரியவர்கள் ஆசியோடு உறவினர்களை முன் வைத்து அக்னி சாட்சியாய் சந்தியாவின் கழுத்தில் தாலி கட்டி அவளை மனைவியாக்கினான்
மனோஜ். மணமக்கள் இருவரும் பெரியவர்கள் காலில் விழுந்து
ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

சந்தியா மனோஜின் வீட்டில் அடைக்கலமாக, பத்மாவிற்கும் சிவகுருவிற்கும் இரு பெண்களில் ஒருத்தி இல்லாதது வீடே வெறிச்சென்று இருந்தது. அவர்களை விட இரு மடங்கு அதிகமாக அந்த வெறுமை பவித்ராவை
பாதித்தது. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு
பத்மாவையும் சிவகுருவையும் தேற்றினாள். இரவு உணவுண்ணும்
நேரத்தில் தான் சந்தியா இல்லாதது என்னவோ போலிருக்கும்.

காலம் எதையும் மாற்றும் சக்தி உடையது அல்லவா? அவர்கள் வருத்தத்தையும் அது மாற்றும். பவித்ரா விடுமுறை முடிந்ததும் எப்போதும் போல் வேலைக்குச் சென்று வர
ஆரம்பித்தாள். பத்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஸ்கூட்டியில் சென்று வர அனுமதி கேட்டு தினமும்
அவளது ஸ்கூட்டியில் அலுவலகம் செல்ல ஆரம்பித்தாள் அவள்.

காலம் எப்போதும் போல் செல்ல அந்த ஸ்டார் ஹோட்டல் ப்ராஜெக்ட்டை
சேகரின் குழு சிறப்பாக செய்து முடிந்திருந்தது . அன்று அலுவலகம்
முடியும் நேரத்தில் வந்து சேகர் பவித்ராவை சைட் சீயிங் அழைக்கவும்
பவித்ரா அவனைக் கேள்வியாகப் பார்த்தாள் அவள்.

"அங்கே வொர்க் எல்லாம் கம்ப்ளீட் செய்தாச்சு தானே சார்?"

"யெஸ். . அதனால் தான் ஃபைனல் வியூ பார்க்க உன்னைக் கூப்டுறேன்.. அது உன்னுடைய டிசைன் சோ நீயிருந்தால் பெஸ்ட்டாக இருக்கும்" என்று
சேகர் சொல்லவும் அவளும் சேகருடன் கிளம்பினாள்.

சேகர் அவளை அவனுடைய காரில் வருமாறு அழைக்க பவித்ரா, 'ஸ்கூட்டியை எடுக்கத்
திரும்பி வர வேண்டியிருக்கும் சார்.. இதுதான் எனக்கு வசதியாக
இருக்கும் ' என்று நாசூக்காக மறுத்து ஸ்கூட்டியில் சென்றாள்.

அங்கு சென்று ஹோட்டலைப்
பார்த்ததுமே அவள் கண்கள் மின்னின. அவளுடைய டிசைன் கண் முன்னே
கட்டிடமாக உருவாகி நிற்கும் போது ஏதோ தன்னில் இருந்து ஒரு உயிர்
ஜனித்ததைப் போல உணர்வாள் பவித்ரா. அன்றும் அதே மனநிலையில் மனநிறைவுடன் ஹோட்டலைச் சுற்றிப்பார்க்க ஆரம்பித்த போது சேகர் பவித்ராவின் செல்போனைக் கேட்டான்.

"என் கேபினில் மொபைலை மறந்து வச்சுட்டேன் பவித்ரா.. ஒரு கால் பண்ணணும்" என்று சேகர் கேட்க, பவித்ரா விகல்பமில்லாது அவளது
செல்போனை அவனிடம் நீட்டினாள்.

"நீசுற்றிப் பார்த்துக் கொண்டிரு.. ஒரு டூ மினிட்ஸ்" என்று போனைக்
காதுக்கு கொடுத்தவாறே அவன் நகர்ந்துவிட, பவித்ரா ஒருவித பூரிப்புடன்
சுற்றிப் பார்த்தாள். ஹோட்டல் அறையை மின்னும் விழிகளுடம் நோட்டமிட்டுக் கொண்டிருந்தவள் சேகர் வரும் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

தேங்க்ஸ் சொல்லி போனைக் கொடுத்தவனிடம், "ரொம்பவே நல்லா
வந்திருக்கு சார் .. அந்த பார்ட்டிக்கு நிச்சயம் பிடிக்கும்" என்று அவள்
சொல்லவும் சேகரும் தலையசைத்தான்.

"அப்போ கிளம்பலாமா சார்?" என்று பவித்ரா கேட்க, சேகர் 'எங்கே?'
என்றான்.

"சார்?"

"நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும் அதான் சைட் சீயிங்னு சொல்லி உன்னை கூட்டிட்டு வந்தேன்" என்று சேகர் சொல்லவும் பவித்ரா புருவங்கள் சுருக்கி அவனைப் பார்த்தாள்.

'என்ன விஷயம்?' என்று கேட்காமல் அவனையே பவித்ரா பார்த்துக்கொண்டிருக்க சேகர் தொடர்ந்து பேசினான்.

"சுத்தி வளைக்காம டைரக்ட்டா சொல்லிடுறேன். நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் பவித்ரா.." என்று அவன்
கேட்க பவித்ரா அதிர்ந்தாள்.

"என்ன பேசுறீங்க சார்? இந்த எண்ணத்தோடு தான் என்னைக்
கூட்டிட்டு வந்தீங்களா? எனக்கு உங்கள் மேல் அந்த மாதிரி எண்ணம் கிடையாது.. சாரி" என்று விலகப் போனவளை
கை நீட்டி மறித்தான் சேகர்.

"பேச்சு இதோடு முடியல மேடம் .. அதுக்குள்ள கிளம்பினா எப்படி?" என்று சொல்லி சேகர் சத்தமாக சிரிக்கவும்
பவித்ராவிற்கு திக்கென்றது.

"பவித்ரா நான் உன்னை ரொம்பவே டார்ச்சர் செஞ்சேன். . ஆனால்,
அதையெல்லாம் தாண்டி நீ இவ்வளவு மன்த்ஸ் இங்கே சர்வைவ்
பண்ணுவாய்னு நான் நினைக்கவே இல்லை.. ஆனால், எனக்குத்
தோல்வி பழக்கம் இல்லை.. இந்த விஷயத்திலும் நான் தோற்கத்
தயாரில்லை. சோ, நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு செஞ்சுட்டேன். எனக்குத் தெரியும் நீ அந்த கௌதம் பையல் பின்னாடி சுத்திட்டு இருக்கது. . அதனால் என்னை வேணாம்னு நீ சொல்வதை நான் ஒருவகையில் எதிர்பார்த்தேன் தான்"

''சீ.. அசிங்கமாக நீங்களா கற்பனை பண்ணிக்காதீங்க சேகர்"

"அப்போ இல்லைன்றியா? இதையெல்லாம் நம்ப நான் ஒன்னும் முட்டாள் கிடையாது பவித்ரா. . இதோ பார் நீஅவனைக் காதலிக்கிறாயோ
இல்லையோ.. அதெல்லாம் எனக்குத் தேவையில்லாத ஒன்னு. எனக்கு நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்.. அது மட்டும் தான் முக்கியம்" என்று சேகர் அலட்சியமாக சொல்ல, பவித்ரா அவனை தீர்க்கமாகப் பார்த்தாள்.

அவளது பார்வை அவனைக் கண்டு அவள் கிஞ்சித்தும் பயப்படவில்லை என்பதைப் பதிவு செய்ய, சேகர் பல்லைக் கடித்தான். அவளது நிமிர்வு அவனிடம் அவளைக் குதறி எடுக்கச் சொன்னது. வேட்டைநாயின் குரூரத்தைக் கண்களில் தேக்கி அவளைப் பார்த்தான் அவன்.
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
8

அவனைக் கண்டு கலங்காமல், "முடியாதுனா?" என்று கேட்டவளைக் கூர்மையாகப் பார்த்தவன்,

"அது உன் தலைவிதி.. என்கிட்ட இப்போ சரினு சொல்லி என் காதல் மனைவி ஆனாலும் சரி. . இல்லை என்கிட்ட உன் கற்பைத் தொலைச்சிட்டு எனக்கு மனைவியானாலும் சரி" என்றான்.

"மிரட்டுறீங்களா? ஒரு பெண்ணைத் தொட்டு ஆள்றது அந்த அளவு
சுலபமான விஷயம் இல்லை மிஸ்டர். . நான் அந்த அளவிற்கு பலவீனமானவளும் கிடையாது.. வழியை விடுங்க" என்று சொல்லி நகர
முற்பட்டவளை,

"ஓ.. உன் பலத்தையும் பார்த்துடலாமே" என்றவாறு வலுக்கட்டாயமாக அவளது கையைப் பிடித்து இழுத்தான் அவன்.

"கையை விடுடா பொறுக்கி .. " என்று பவித்ரா கையை இழுக்க, சேகரின் பிடி
இறுகியது.

பவித்ராவிற்கு பயத்தில் உடலெல்லாம் சில்லிட்டு விட்டது . ஏதோ உளறுகிறான் என்றுதான் அவள் நினைத்திருந்தாள். இந்த அளவிற்கு அவன் இறங்குவான் என்று பவித்ரா நினைக்கவே இல்லை. சேகர் இத்தனை மாதங்களில் ஒருமுறை கூட பவித்ராவை தவறான பார்வை
பார்த்ததில்லை. அந்த நம்பிக்கையில் தான் அவள் அவனோடு அலுவலகம் முடிந்த பின்னர் கூட தனியாக வந்திருந்தாள். ஆனால், இப்போது?

"இதோ பாரு.. என்னை படிக்காத பாமரப் பொண்ணுனு நினைச்சியா? நான்
வெளியே போய் போலீஸ் கம்ப்ளைண்ட் செய்தால் என்ன ஆகும்னு
தெரியுமா?" என்று அப்போதும் நிமிர்வோடு கேட்டவளைப் பார்த்து சேகர்
கெக்கொலி கெட்டிச் சிரித்தான்.

"அதெல்லாம் யோசிக்காமல் இறங்கியிருப்பேன்னா நினைக்கிற?
அப்படி கம்ப்ளைண்ட் செஞ்சா அசிங்கப்படப் போறது நீதான்" என்று
கூறிக்கொண்டே அவன் முன்னேற, பவித்ரா அதற்கு மேல் பொறுக்க
முடியாதவளாய் மறுகையில் இருந்த கைப்பையால் சேகரின் கண்களைக்
குறி வைத்து ஓங்கி அடித்தாள்.

அவளின் திடீர் தாக்குதலில் அவன் அவளைப் பிடித்திருந்த கையை உதறி வலியில் கண்களை மூட அந்த நொடியைப் பயன்படுத்திக்கொண்டு பவித்ரா அந்த அறையிலிருந்து தப்பித்துவிட்டாள். தப்பி ஓடியவளைத் தொடர்ந்து ஓடிச் சென்றவனுக்கு பவித்ரா ஆட்டோவில் ஏறிய காட்சி மட்டுமே கண்ணில் பட்டது.

வீட்டிற்குச் சென்று குளித்து முடித்துவிட்டு கட்டிலில் படுத்தவளுக்கு
அப்போதும் உடல் நடுங்கியது.

' என்ன மாதிரியான ஆபத்திலிருந்து தப்பித்திருக்கிறேன் நான்? ' இது மட்டுமே அவளது சிந்தனையின் மையமாக இருந்தது. வீட்டில் இருப்பவர்களிடம் கூறினால் தேவையில்லாத சங்கடம் என்றெண்ணி அதைக் கூறாது விட்டவள், மறுநாள் முதல் வேலையாக ஜீவாவிடம் சொல்லி கௌதமின் டீமிற்கு மாறுதல் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ஆனால், அதற்கு நேர்மாறாக மறுநாள் அவள்
வேலையை விட்டுச் செல்லும் முடிவை எடுக்க வைத்தான் சேகர்.

அலுவலகத்தின் பார்க்கிங் ஏரியாவில் ஸ்கூட்டியை நிறுத்தியவள் அங்கே கௌதம் நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு
அவனருகில் வந்தாள்.

"என்ன கௌதம் இங்கே என்ன பண்ணுற உள்ளே போகாம?"

"உனக்குத் தான் வெயிட்டிங் . . வா" என்று அவளை அழைத்துச் சென்றவனை புரியாத பார்வையோடு பின் தொடர்ந்தாள் அவள். கௌதமின் முகம் அவளது மனதில் சஞ்சலத்தை விதைத்திருந்தது.

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ரிசப்ஷனில் இருந்த ஸ்வீட்டி அவளைப் பார்த்து முகம் சுளிக்க 'சுருக்' என்றது அவளுக்கு.

'இவள் ஏன் இப்படி பார்க்கிறாள்? '

அவளது கேபினிள் போய் அமர்ந்தவளை சுலோச்சனா அருவெறுப்பாகப்
பார்க்க, பவித்ரா குழப்பத்தோடு தன்னோடு அமர்ந்துவிட்ட கௌதமைப்
பார்த்தாள்.

அவன் முகம் பவித்ராவின் மனம் சொன்ன, 'ஏதோ நடந்திருக்கிறது' என்பதை உறுதிப்படுத்திக் கூறியது.

"கௌதம் எனி ப்ராப்ளம்?"

கௌதம் எதுவும் பேசாமல் அவனின் மொபைலை எடுத்து நேற்று சேகர்
வாட்சப்பில் அனுப்பியிருந்த ஸ்கிரீன் ஷாட் மெஸேஜை அவளிடம்
காட்டினான். அதை வாங்கிப் படித்தவளுக்கு தூக்கிவாரிப் போட்டது . அது பவித்ராவின் மொபைல் எண்ணிலிருந்து சேகர் எண்ணிற்கு
அனுப்பப்பட்டிருந்தது. ஒரு பெண் அனுப்ப முடியாத அளவிற்கு
கொச்சையாக இரண்டாம் தரமாக இருந்தது அந்த செய்தி. சேகர் அவளைத்
திட்டி புத்திமதி சொல்லியிருந்ததாக மற்றொரு செய்தி சேகர்
எண்ணிலிருந்து பவித்ராவின் எண்ணிற்கு பகிரப் பட்டதாக அந்த ஸ்கிரீன் ஷாட் பதிவாகியிருந்தது.

கௌதமின் கரிசனம், ஸ்வீட்டியின் முகச்
சுளிப்பு, சுலோச்சனாவின் அருவெறுப்பான பார்வைக்கான காரணம் புரிந்து பவித்ராவிற்கு கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.

"கௌதம்.. நான்.. எனக்குத் தெரியல.. நான் இப்படியெல்லாம்
அனுப்பல" என்று கோர்வையில்லாமல் சொன்னவளை ஆறுதல்
படுத்த முடியாமல் அமைதியாக இருந்தான் அவன். அவனின் அமைதி
பவித்ராவை இன்னொரு விதத்தில் பாதித்தது.

"கௌதம்.. நீ கூடவா இதெல்லாம் நம்புற?" என்று அதிர்ச்சியாகக்
கேட்டாள் அவள்.

"சீச்சீ.. என்ன பவி இப்படியெல்லாம் கேட்குற? எனக்கு உன்னை என்ன சொல்லி ஆறுதல் படுத்தனு தெரியல.. அதான் அமைதியா இருந்தேன்.." என்று தன் அமைதிக்கான விளக்கத்தை கௌதம் கொடுக்க பவித்ரா அமைதியாக இருந்தாள்.

"பவி உன்னை என் டீமிற்கு மாத்திடச் சொல்லி சத்யமூர்த்தி சார் கிட்ட
கேட்டிருக்கேன். அவர் எம்.டி கிட்ட கேட்டுட்டு மாத்துறதா
சொல்லியிருக்காரு" என்று சொன்னவனை கலங்கிய கண்களுடன்
பார்த்தாள் அவள்.

' டீம் மாறினால் சரியாகிவிடுமா? '

கௌதம் சரியாகிவிடும் என்றான்.

"அங்கே நான் உன் பக்கத்தில் இருப்பேன்
பவி. . இதெல்லாம் கடிக்க அஞ்சும் குரைக்கும் நாய்கள். அடுத்த பரபரப்பான
விஷயம் நடந்துட்டா இதை மறந்துடுவாங்க. அதுவரை நீ என்
டீமில் இரு" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனது
டீமிலிருக்கும் சதீஷ் அவனைத் தேடி வந்தான்.

வந்தவன் பவித்ராவை
குறுகுறுவென்று பார்த்துக் கொண்டே கெளதமிடம் சத்யமூர்த்தி
அழைப்பதாகச் சொல்ல பவித்ராவிற்கு உடல் கூசியது. மற்றவர்களின்
கண்களைப் பார்த்து மட்டுமே பேசும் அவள் சதீஷின் பார்வையில்
தலைகுனிந்ததைப் பார்த்த கௌதமிற்கு சேகரின் மேல் கொலைவெறி
கிளம்பியது. ஆனால், அவனுக்கு இன்னும் அந்த மெஸேஜ் விவகாரம்
ஒன்றும் புரியவில்லை. பவித்ராவிற்கு தெரியாமல் எடுத்து அனுப்பியிருப்பான் என்று சொல்லிவிட முடியாது. அவளின் ஸ்கிரீன் லாக் தெரியாமல் எப்படி அவன் அனுப்ப முடியும்? அதனைப் பவித்ரா தான் சொல்ல வேண்டும். ஆனால், இப்போதே கேட்டு அவளை சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்து அவளிடம் சொல்லிவிட்டு ஜி.எம் அறைக்குச் சென்றான் அவன்.

பவித்ராவிற்கு சேகரின் தந்திரம் புரிந்தது. அவளிடம் நேற்று பொய் சொல்லி போனை வாங்கியிருக்கிறான். அதில் அவனுக்குத் தேவைப்பட்ட அந்த உரையாடலை பவித்ரா அனுப்பிய மாதிரி அவளது எண்ணிலிருந்து அனுப்பிவிட்டு அதை அழித்து விட்டான். போலீஸ் பற்றிச் சொல்லவும் அதெல்லாம் யோசிக்காமல்
இறங்கியிருப்பேனா என்று கேட்டானே!? மேலும் உனக்குத்தான் அசிங்கமென்றும் சொன்னானே. அதாவது நேற்று அவன் நினைத்த மாதிரி நடந்திருந்து அவள் போலீசிற்குப் போவதாகக் கூறினால் இதை ஆதாரமாக வைத்து அவள் தான் அவனை அழைத்ததாகக் கூறியிருப்பான்'


'ஆனால், கல்யாணம் பற்றி ஏன் பேசினான்? அதற்கு மறுத்ததால் தானே
அப்படிக் கீழ்த்தரமாக நடந்துகொள்ள முயற்சித்தான்? அது நடக்கவில்லை
என்று தானே இப்படி என் பெயரை நாசம் பண்ணி வைத்திருக்கிறான்?
ஆனாலும் முதலில் கல்யாணம் பற்றி ஏன் பேசினான்? '

அவளுக்கு அது என்ன யோசித்தும் புரியவில்லை. சுற்றிலும் இருப்பவர்கள்
அவளைப் பார்த்தே ஏதோ பேசுவது போலிருக்க பவித்ராவிற்கு
அவமானமாக இருந்தது. அலுவலகமே அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல் . . . சிலர் சாதாரணமாக பார்ப்பது கூட 'சீச்சீ' என்று பார்ப்பது போல் தோன்ற பவித்ரா முடிவுக்கு வந்தவளாய் அதை செயல்படுத்தத் தொடங்கினாள்.


கம்யூட்டர் திரையைப் பார்த்துக் கொண்டிருந்த ஜீவா அறைக் கதவு
அனுமதிக்காகத் தட்டப்படுவதை உணர்ந்து வரச்சொல்லி குரல்
கொடுத்தான் அவன். அவள் தான்!

கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த பவித்ரா எதுவும்
பேசாமல் அவனைப் பார்த்தாள்.

' இனி இவனைப் பார்க்க முடியாது .. அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்சிருச்சு.. ஆனால், இவனால் தான்
எனக்கு இந்த நிலைமையே.. இவனைப் பார்க்க மட்டுமாவது முடியுதுனு தானே இவ்வளவு நாள் அந்த சேகரின்
அராஜகத்தைப் பொறுத்துட்டு இருந்தேன்? எனக்கு
எப்போதுமே இவன் எட்டாக்கனி தான் போல'

இந்த நிலைமையிலும் அவனைப் பிரியப் போவதை எண்ணி மறுகும் மனதை நினைத்து அவளுக்கு வேதனையாக இருந்தது. அதை
வெளிக்காட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தாள் அவள்.

"ஏன் இந்த முடிவு?"

"பெர்சனல்" என்று அழுத்திச் சொன்னவளை கோபத்தோடு பார்த்தான் அவன். பவித்ராவின் மின்னஞ்சல் அவனை நிதானமிழக்கச் செய்திருந்தது.

"வாட்?" என்ற உறுமலோடு அவள் முன்னே வந்து நின்றவனை ஏறெடுத்தும் பார்க்காமல் அவள் வேறுபுறம் பார்க்க ஜீவாவின் கோபம் இன்னும் அதிகரித்தது .

அவள் முகத்தை அதே கோபத்தோடு தன் பக்கம் திருப்பி அதே கேள்வியை
மறுபடியும் கேட்டான் அவன்.

"எனக்கு இதைவிட நல்ல கம்பெனியில் வேலை கிடைச்சிருக்கு.. நோட்டீஸ் பீரியட் ஃபாலோ பண்ண முடியல.. அஸ் பெர் தி கம்பெனி ரூல்ஸ் என் சேலரியில் டிடெக்ட் பண்ணிக்கலாம் " என்று பவித்ரா அவன் கையைத் தன் முகத்திலிருந்து
விலக்கியவாறு சொன்னாள்.

"நீ இன்னும் மாறவே இல்லை பவி..
விலக எப்போ எந்தக் காரணம் கிடைக்கும்னே அலையுற"
என்று ஜீவா கசப்பான குரலில் சொல்ல, பவித்ரா அவனை அடிபட்ட பார்வை
பார்த்தாள்.

" சரி சொல்லு . . அங்கே எவ்வளவு சேலரி? அதைவிட இரண்டு மடங்கு
அதிகமா நான் தர்றேன்'' என்று அலட்சியமாக அவன் சொல்ல, அவள்
மறுத்தாள்.

"நீங்க எவ்வளவு சேலரி தந்தாலும் என்னால் இங்கே வேலை பார்க்க முடியாது" என்று சொல்ல ஜீவாவின் புருவங்கள் முடிச்சிட்டது.

அவளது பதில் அவள் ஊதிய உயர்வுக்காக இந்த முடிவு எடுக்கவில்லை என்று கூற, ஜீவா மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.

"ஏன்?"

"கேள்விகள் கேட்குறது சுலபம் சார்.. பதில் சொல்வது தான்
கஷ்டம் .. எனக்கு உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல
வேண்டிய அவசியம் இல்லை.. பெர்சனல்னு சொன்னா புரியாதா?" என்று சொன்னவளின்
கழுத்தை ஆக்ரோஷத்துடன் பிடித்து சுவரோடு சுவராக நிற்க வைத்தான்
அவன்.

"அவசியம் இல்லையா? ஏன்டி ஏன்? ஒவ்வொரு முறையும் என்னை இப்படி டார்ச்சர் செய்கிற? நெருங்கி வந்தால் எங்கே இது மாதிரி ஒரு முடிவை எடுத்துடுவனு தானே விலகியிருக்கேன்? இப்போ வந்து வேலையை விடுறேன்னு சொன்னால் ஏன்னு நான் கேட்கக்
கூடாதா?"

அவனது ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவனது கை அழுத்தம் கொடுக்க
பவித்ரா வலி தாங்க முடியாமல் ஜீவாவின் கரங்களை விலக்கினாள். ஜீவா கோபத்தோடு அவளை விட்டு விலகி இன்டர்காமில் கௌதமை அழைத்து அவனது அறைக்கு வரச் சொன்னான் . அவன் கௌதமைத் தான் வரச் சொல்லியிருக்கிறான் என்பதை அறியாத பவித்ரா கௌதம் உள்ளே
வரவும் திகைத்தாள். கலங்கிய கண்களோடு பவித்ரா அங்கே நிற்கவும்
கௌதமும் திகைத்தான்.

' சேகர் விஷயம் இவருக்கும் தெரிந்துவிட்டதோ?'

"வாட் இஸ் ராங்க் வித் யுவர் ப்ரண்ட் கௌதம்?" என்று ஜீவா மொட்டையாகக் கேட்க கௌதம் அதுதான் என்று முடிவு செய்துவிட்டான்.

"சார் . . இதில் பவி மேல் எந்த தவறும் இருக்காது.. சேகர் தான் ஏதோ சதி
பண்ணியிருக்காரு" என்று கௌதம் சொல்லவும் ஜீவாவிற்கு சேகர் இதில்
எப்படி சம்பந்தப்பட்டான் என்று தெரியாமல் புருவங்களைச் சுருக்க
பவித்ரா அவசரமாகப் பேசினாள்.

"கௌதம்.. நான் ரிசைன் பண்ணுறதா மெய்ல் அனுப்புனேன் .. சார் அதைப் பத்தி கேட்கிறார்" என்று அவனிடம்
சொல்ல கௌதம் அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தான். அதைப் பார்த்த
ஜீவாவிற்கு கௌதமிற்கும் அது புதிய செய்தி என்று புரிந்தது.

'ஆனால், சேகர் பற்றி ஏதோ சொன்னானே ? அவனுக்கும்
பவித்ரா வேலையை விடுவதற்கும் என்ன சம்பந்தம்? '

மனதில் நினைத்ததை அப்படியே கௌதமிடம் கேட்டான் அவன்.

"சேகருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் கௌதம்?" என்று ஜீவா கேட்க
பவித்ராவின் கைகள் நடுங்க ஆரம்பித்தது. அதைப் பார்த்த ஜீவாவின்
புருவங்கள் உயர்ந்தது.

"சொல்லுங்க கௌதம் உங்க கிட்ட தான் கேட்கிறேன். . எனக்குத்
தெரியாமல் என் கம்பெனியில் என்ன நடக்குது?"

கௌதம் பவித்ராவை பார்த்தான். அவள் அதைச் சொல்ல விரும்பவில்லை எனும்போது அவனுக்கு அதைப்பற்றிப் பேச சங்கடமாக இருந்தது.

"சார்.. நான் வேலையை விடுவது என் சொந்த விருப்பம். யாருக்கும் சம்பந்தம் இல்லை. இதில் இந்த கேள்வியெல்லாம் கௌதம் கிட்ட ஏன் கேட்கிறீங்க?" என்று
பவித்ரா படபடவென்று பேச ஜீவா பவியை அமைதியாகப் பார்த்தான்.

"என்னடி பிரச்சினை?" என்று ஜீவா அவள் கண்களைப் பார்த்து கேட்க பவித்ரா முகம் திருப்பினாள்.

"என்னைப் பாருடி. . நான் ஒருத்தன் இங்கே இருக்கேன்றதயே மறந்துட்டியா? நான் இருக்கிறேன்டி.. வேலையை விட்டுப் போற அளவுக்கு என்னாச்சு?" என்று ஜீவா அனல் பறக்கும் குரலில் கேட்க பவித்ரா முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

ஜீவாவின் உரிமையான பேச்சைக் கேட்டு கௌதம் ஆச்சரியமாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். பவித்ராவின் அழுகையில் ஜீவா
தன்னை மறந்து ஒரே எட்டில் அவளை அணுகி அவளை அணைத்துக்
கொண்டான்.

"ஹேய்.. பவி... இப்படி அழும் அளவுக்கு என்னடி நடந்துச்சு?"

ஜீவாவின் கற்பனை எங்கெங்கோ சென்று அவன் உடலும் சேர்ந்து நடுங்க
ஆரம்பித்துவிட்டது . அவனின் அணைப்பில் அவள் இன்னும் பலவீனமாக உணர அவனின் மார்பில் புதைந்து அழுதாள் அவள்.

"என் ..னால் இங் .. கே இருக்.. க முடில ஜீவா ..எல்லோரும் என்.. னை அரு..வெறுப்பாக... கிண். . டலா
பார்க்கிறாங்க. . . என .. க்கு ரொம்..ப கஷ் .. டமாக இருக்கு" என்று பவித்ரா திக்கித் திணறிச் சொல்ல
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"பவி.. ரிலாக்ஸ்.. அழாதே டி.. நீ எதுவும் சொல்ல வேணாம் " என்று அவளை ஆறுதல் படுத்தியவாறு
கௌதமைப் பார்த்தான் அவன் . ஜீவாவின் கண்களில் தெரிந்த
ரௌத்திரத்தில் கௌதம் மிரண்டுவிட்டான்.

"என்ன நடந்துச்சு?"

புயலை உள்ளடக்கிய குரலில் அவன் கேட்க, பவித்ரா அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாளிலிருந்து இன்று அந்த
மெஸேஜ் அனைவருக்கும் பரவியது வரை சேகரின் திருவிளையாடல்
அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டான் கௌதம்.

"ஆனால், அந்த மெஸேஜ் பவியோட நம்பரிலிருந்து தான் சார்
போயிருக்கு .. அதுதான் எப்படினு தெரியல" என்று கௌதம்
யோசனையாகக் கூற, ஜீவா அந்த செய்தியைக் காட்டச் சொன்னான்.
அதைக் கேட்ட பவித்ராவின் உடல் மறுபடியும் நடுங்கியது.





 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
9

"ஜீவா.. நான் அனுப்பல அதை.. நீங்க அந்த மெஸேஜை படிக்காதீங்க ப்ளீஸ்" என்று நடுங்கும் குரலில் அவள் கூற ஜீவா அவளை அணைப்பிலிருந்து விலக்கி அவள் முகம் பார்த்தான்.

"இது மாதிரி ஆயிரம் ஸ்கிரீன் ஷாட் காட்டினாலும் நான் உன்னை
மட்டும்தான் நம்புவேன். புரியுதா?" என்று ஜீவா உறுதியான குரலில்
சொல்ல, பவித்ரா தலையாட்டியபடி அவனைக் கலக்கமாகப் பார்த்தாள்.

"வேணாம் ஜீவா.. ப்ளீஸ்"

அப்போதுதான் அழுகையை நிறுத்தியிருந்தவள் மீண்டும் அழத் தயாராக, அவளைத் தன் கைவளைவுக்குக் கொண்டு வந்தவன் சொன்ன வார்த்தை அவள் ஆழ்மனம் வரை ஊடுருவியது.

"என்ன நம்பு பவி"

அவன் குரலில் இருந்த ஏதோவொன்றிலோ அல்லது அந்த வார்த்தைகளின் தாக்கமோ அங்குமிங்கும் அலைபாய்ந்த மனதோடு இருந்தவளை சமன்படுத்தியது. அதற்குமேல் ஜீவா பார்த்துக்கொள்வான் என்ற ரீதியில் அவள் அமைதியாக, ஜீவா அந்த மெஸேஜை இறுகிய
முகத்துடன் படித்துவிட்டு அது அனுப்பப்பட்ட நேரத்தைப் பார்த்தான். அது நேற்று மாலை ஏழு எனக் காட்டவும் ஜீவா பவித்ராவைப் பார்த்தான்.

"நேத்து ஏழு மணிக்கு எங்கே இருந்த?" என்று அவன் கேட்கவும் பவித்ராவின் கண்களில் நீர் தேங்க, நேற்று நடந்ததை ஒன்று விடாமல் அவள் சொல்லி முடிக்க ஜீவா அவளை இறுக அணைத்துக் கொண்டான். கௌதமிற்கு சேகரின் மீது கொலைவெறி கிளம்பியது.

'சீ.. கூட வேலை பார்க்கும் பொண்ணு நம்பி அவன் கூடப் போனால்
என்ன வேலை செஞ்சிருக்கான்? ராஸ்கல் .. '

கௌதம் பல்லைக் கடித்துக்கொண்டு நிற்க ஜீவா பவியின் அலைபேசியை
வாங்கிக்கொண்டு அவளை முகம் கழுவி விட்டு வரச் சொன்னான். அவள்
சென்றவுடன் கௌதமிடம் திரும்பி ஜீவா அவனைப் பார்த்து புருவத்தை உயர்த்தினான்.

"இன்னும் ஏதாவது சொல்லணுமா கௌதம்? பவி இருக்கதால தயங்குன மாதிரி இருந்தது"

"சார்.. அது வந்து.. பவியோட போட்டோ ஒன்னு மார்ஃப் பண்ணி அதைப் பவியே அனுப்புன மாதிரி..."

அவனால் முழுவதும் சொல்ல முடியவில்லை.

"இது பவிக்குத் தெரியாது. நான் அதை டெலீட் பண்ணிட்டேன்.. பவித்ரா பார்த்தா சங்கடப்படுவாங்கனு "

தயங்கியவாறே அவன் சொன்ன செய்தியில் ஜீவாவின் இரத்த அழுத்தம் உச்சநிலைக்குச் சென்றது. அதற்குமேல் அவனால் பொறுமை காக்க முடியவில்லை. கௌதமிடம் சில விஷயங்களைச் செய்யச் சொன்னவன் புயலென அந்த அறையை விட்டு வெளியேறி சேகரின் கேபினிற்கு நேராகச் சென்று அவனை அடித்து துவைத்து விட்டான். அந்த தளத்தில் இருந்த அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க சேகருக்கு
தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.

"வாட் ஹேப்பன் சார்? எதுக்கு என்னை இப்படி அடிக்குறீங்க?" என்று
கேட்டவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவனை அடித்தவனை
பவித்ரா தான் குறுக்கே புகுந்து தடுத்தாள்.


முகம் கழுவி வெளியே வந்தவள்
ஜீவா அங்கே இல்லாமல் இருக்கவும் அவசரமாக வெளியே வந்தாள். வெளியே வந்தவள் ஜீவா சேகரை அடித்து துவைக்கும் காட்சியைத் தான் கண்டாள்.

"ஜீவா எல்லாரும் பார்த்துட்டு இருக்காங்க.. என்ன பண்றீங்க?"
பவித்ராவின் கேள்வியில் அலுவலகமே அவளை 'ஆவென்று' பார்த்தது.

ஜீவா சேகரின் மீதிருந்த கையை எடுத்துவிட்டு கௌதமைப் பார்த்தான்.
கௌதமின் கண்ணசைவில் அவன் கோபத்தோடு சேகரைப் பார்த்தான். சேகருக்கு விஷயம் ஓரளவு புரிந்தது. ஜீவாவின் கோபம் சொன்ன செய்தியில் அவனுக்குத் தலைசுற்றியது.

'ஜீவாவும் பவித்ராவும் காதலிக்கிறார்களா? அய்யோ அது
தெரியாமல் இப்படிச் செஞ்சுட்டேனே'

"எவ்வளவு தைரியம் இருந்தா என் பவியைத் தொட நினைச்சிருப்ப?"
என்று அவன் சிங்கமாகக் கர்ஜிக்க சேகர் பயந்து விட்டான்.

ஆனால், இதற்கெல்லாம் பின்வாங்கினால் அவன் சேகர் அல்லவே.. அவன் மூளை கடைசி
முயற்சியாக முயன்று பார்க்கச் சொல்ல தைரியத்தை வரவழைத்துக்
கொண்டு அவன் பேசினான்.

"சார்.. யாரோ உங்க கிட்ட கதையையே மாத்தி சொல்லியிருக்காங்க..
இதோ இவ தான் எனக்கு அசிங்கமாக மெஸேஜ் கொடுத்தாள்..
ஆஃபீஸ் டைம்ல கூட சில சமயங்களில் ஒரு மாதிரியாக பார்ப்பா..
உங்க கிட்ட நல்ல பொண்ணு மாதிரி வேஷம் போட்டு உங்களை ஏமாத்துறா சார் . . என்கிட்ட ஆதாரம் இருக்கு" என்று சேகர் அவன் மொபைலை எடுக்க, ஜீவா ஓங்கி அறைந்தான்.

"என்கிட்டயே அவளைப் பத்தி தப்பா சொல்றியா? என்ன சொன்ன? அவள் உனக்கு மெஸேஜ்
அனுப்பினாளா?" என்று கேட்டுவிட்டு பவியைத் திரும்பிப் பார்த்தான்.

"நேத்து நீங்க போன நேரத்துக்கு அங்கே வாட்ச்மேன் இருந்திருப்பாரே.. இருந்தாரா?"

"ம்.. இருந்தாரு"

ஜீவா ஏதோ ஒரு நம்பரை அழுத்தி டையல் செய்ய அந்தப் பக்கம்
எடுக்கப் பட்டவுடன் ஜீவா அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டான்.

"மாணிக்கம் நான் ஜீவா பேசுறேன்" என்று ஜீவா சொல்ல அடுத்தமுனை
பரபரப்பாக பேசியது.

"சொல்லுங்கய்யா"

"நேத்து ஈவ்னிங் இங்கே கம்பெனியில் இருந்து யாராவது அங்கே
ஹோட்டலுக்கு வந்தாங்களா?" என்று கேட்க அவன் "ஆமாம்" என்றான்.

"எப்பவும் இங்கே வருகிற சாரும் கூடவே ஒரு மேடமும் வந்தாங்கய்யா"

"எப்போ வந்து எப்போ போனாங்க மாணிக்கம்?"

"ஒரு ஆறரைக்கு மேல் வந்தாங்க . . . ஒரு அரைமணி நேரத்திலேயே
மேடம் கிளம்பிட்டாங்க.. சார் கொஞ்சம் லேட்டாக தான் போனாங்க சார்"
என்று அவன் விம் போட்டு விளக்க ஜீவா ஃபோனைக் கட் செய்துவிட்டு
சேகரைப் பார்த்தான்.

"அவளை சைட் சீயிங்னு அழைச்சிட்டுப் போய் நாசம் செய்ய முயற்சி
பண்ணி அது நடக்காத கோபத்தில் அவள் மேல் இப்படி ஒரு பழியைப்
போட்டு அசிங்கப்படுத்தி இருக்க?" என்று கேட்டபடியே ஜீவா அருகில்
வர சேகர் 'பொய்' என்றான்.

"மாணிக்கம் சொல்வது பொய் .. நீங்க தான் அவனை இப்படிச் சொல்லச்
சொல்லியிருக்கீங்க.. அவள் செய்த தப்பை மறைக்க என் மேல் பழி
போடுறீங்க" என்று அவன் சொல்ல,

ஜீவா, "நான் ஏன் அப்படிச் செய்யணும்?" என்றான்.

"வேறென்ன? இவளை எல்லோர்
முன்னாடியும் நல்லவளா காட்டணும் இல்லையா?" என்று
அவன் எகத்தாளமாகக் கூற ஜீவா நக்கலாக சிரித்தான்.

"இதோ பாரு.. இங்க இருக்கவங்க அவளைப் பத்தி என்ன நினைத்தாலும் அதைப்பத்தி எனக்கு அக்கறை கிடையாது.. இப்போ நான் ப்ரூஃப் பண்ண நினைப்பது அவள்
நல்லவள்னு இல்ல.. பிரச்சினைனு வந்தாச்சு.. அதைத் தீர்க்க வேண்டியது என் பொறுப்பு.. இதை இப்படியே விட்டுட்டா வேறு ஒருத்தன் இந்த தவறைத் துணிந்து செய்வான்.. உன்னுடைய சந்தேகத்தையும் சேர்த்து நானே தீர்த்து வைக்கிறேன்" என்று கூறிவிட்டு கூட்டத்தோடு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நித்தினை அழைத்தான்.

"பவித்ரா அவங்க மொபைல் இந்த சேகரின் வசம் இருப்பதா சொல்றாங்க.. நீங்க இவரோட டேபிளைக் கம்ப்ளீட்டா செக் பண்ணுங்க" என்று ஜீவா சொல்ல
நித்தின் எல்லாவற்றையும் களைத்துப் போட்டுத் தேடினான். டேபிள் டிராயரில் பைல்களுக்கு அடியில் இருந்ததாக நித்தின் ஒரு செல்போனை எடுத்துத் தரவும் சேகருக்குத் தூக்கிவாரிப்போட்டது.

"பவி இது உன்னது தானே?" என்று ஜீவா கேட்க அவள் குழப்பமாகத் தலையாட்டினாள்.

"இதுக்கு என்ன சொல்ற?"

ஜீவாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சேகர் முழிக்க, கூட்டத்தில்
இருந்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.

'இவனே செஞ்சுட்டு அந்தப் பொண்ணு மேல் பழி போட்டிருக்கான் பாரு'

'சே .. நான் கூட அந்தப் பொண்ணைத் தப்பா நினைச்சுட்டேன் சுமி '

' எம் . டி யின் வருங்கால மனைவினு தெரியாமல் சேகர் வழக்கம்
போல வேலையைக் காட்டிட்டான் போல மச்சான்'

'நான் கூட நினைச்சேன்டா மச்சான்.. அந்தப் பொண்ணு என்னையே
கல்லையும் மண்ணையும் பார்க்கிற மாதிரி தான் பார்க்கும் . இந்த
கொம்பேறி மூக்கனைப் போயா ட்ரை பண்ணுவான்னு.. கடைசியில்
இவனுடைய திருவிளையாடல் தானா இது'

ஆளாளுக்கு ஒவ்வொன்றைப் பேச ஜீவா கூட்டத்தைப் பார்த்துக் கேட்டான்.

"இதெல்லாம் பார்த்தா உங்களுக்கு என்ன தோனுது?" என்று அமைதியான குரலில் கேட்க அங்கே பேரமைதி நிலவியது. யாரும் எதுவும் பேசாமல் இருக்கவும் ஜீவா ஸ்வீட்டியைப் பார்த்து சொல்லுமாறு சொன்னான் . ஜீவா என்னவோ பொதுவாகத் தான் கேட்டான்.. ஆனால், அவள் அரண்டுவிட்டாள்.

'அய்யோ பாஸ் எதுக்காக நம்மள பார்த்து சொல்லச் சொல்றாரு? மார்னிங் அவளைப் பார்த்து முகம் சுளிச்சதைப் போட்டுக் கொடுத்துட்டாளோ ! ? உண்மை தெரியாமல் வாட்சப்ல வரும் இந்த மாதிரி புரளியை நம்பி தேவையில்லாத சிக்கல்ல சிக்கிட்டோமோ!?'

அவள் மனக்கண்ணில் காலேஜ் படித்துக் கொண்டிருந்த தங்கை வந்து இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்று சொன்னாள்.

"சொல்லுங்கள் ஸ்வீட்டி.. சேகர் மேல தப்பில்லைனு நீங்க நினைச்சா அதையும் சொல்லலாம்" என்று ஜீவா கேட்க ஸ்வீட்டி பதில்
சொன்னாள்.

"எனக்கு சேகர் மீது தான் தவறுனு தோனுது சார்"

''இவங்க கருத்தில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால்
சொல்லலாம் .. " என்று ஜீவா கேட்க, அங்கே விழும் ஊசியின் சத்தம் கேட்கும் அளவில் அமைதி நிலவியது.

"ராஜேஷ், நித்தின், சுலோச்சனா, ரவிக்குமார்.. பவித்ரா இந்த டீமில் ஜாயின் பண்ணியதில் இருந்து சேகர் அவ கிட்ட நடந்துக்கிட்ட முறை உங்களுக்குத் தெரியுமா தெரியாதா?"

"தெரியும் சார்" என்று நால்வரும் தயங்கியபடியே சொல்ல ஜீவா
அவர்களைப் பார்த்து, "அதை ஏன் என்கிட்ட சொல்லல?" என்று
கேட்டான்.

நால்வரும் தலைகுனிய ஜீவா, "பயம் அதானே?" என்றான். அவர்கள்
எதுவும் பேசாமல் நின்றிருக்க ஜீவாவே தொடர்ந்து பேசினான்.

"அப்படி என்ன செஞ்சுடுவான் அவன் உங்களை? உங்களுக்கு நான் எம். டியா? இல்லை அவனா? நீங்க என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லியிருந்தால் நான் இந்த அளவிற்கு இதைப் போக விட்டிருக்க மாட்டேன். . பவி உனக்கும் சேர்த்து தான் சொல்றேன். ஏன் சொல்லல நீ?"

மற்றவர்களைப் பார்த்துக் கொண்டே பேசியவன் கடைசியில் பவித்ராவிடம் கேள்வி கேட்டு முடிக்க அவள் அமைதியாக இருந்தாள்.

"போகட்டும். லாஸ்ட் வார்னிங் இது ..
இது இவங்களுக்கு மட்டுமில்லை உங்கள் எல்லோருக்கும் தான்.. ஆஃபீஸ்ல இதுமாதிரி ஏதாவது நடந்தால் என்னிடம் விஷயத்தை முதல்ல கொண்டு வரப் பாருங்க.. " என்று அனைவரையும் பார்த்துச் சொன்னவன்
சேகரிடம் திரும்பினான்.

"நீ கேட்ட சந்தேகம் இன்னும் அப்படியே தானே இருக்கு சேகர்? நான் மாணிக்கத்திடம் சொல்லி பேசச்
சொன்னதாக சொன்னியே .. அதையும் தீர்த்து வைக்க வேண்டியது என் கடமை .. இந்த ஏரியா கமிஷனர் எனக்குப்
பழக்கமானவர் தான் .. அந்த ஏரியாவின் சிசிடிவி ஃபுட்டேஜை அவர் கிட்ட கேட்டு வாங்கித் தரவா? அதையும் நம்ம மீட்டிங் ரூம் புரொஜெக்டரில் குறும்படம் போட்டு காட்டிட்டா உனக்கும் சந்தேகம்
தீர்ந்துடும் இல்லையா?" என்று ஜீவா அலட்சியமாகக் கேட்க, சேகருக்கு பயத்தில் முகம் வெளுத்து விட்டது .

அவனது பயம் படிந்த முகத்தை அலட்சியமாகப் பார்த்தபடி சத்யமூர்த்தியை அழைத்து
அவனது கணக்கை அரைமணி நேரத்தில் முடித்து வெளியே அனுப்பச்
சொன்னவன் பவித்ராவின் கையைப் பிடித்துக்கொண்டு அவனது அறைக்கு
அழைத்துச் செல்ல, சின்னக் குரலில் தங்களுக்குள் பேசியவாறே
சுற்றியிருந்த கூட்டத்தினரும் கலைந்து அவரவர் வேலையைப் பார்க்கச்
சென்றனர்.

அறைக்குள் நுழைந்தவுடன் பிடித்திருந்த கையை விட்டுவிட்டு அவள் முன் கை கட்டி நின்றிருந்தவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்து நின்றிருந்தாள் பவித்ரா.

"போதுமா? இனி ரிசைன் பண்ணத் தேவையில்லை தானே?"

'எனக்காக என்னென்ன செய்து விட்டான்? '

பவித்ராவின் மனம் அவள் மூளை நினைவுபடுத்திய எந்த விஷயத்தையும்
அவளை உணர விடாமல் செய்தது. அந்த நிமிடத்தில் அவள் மூளை செயலற்று அவளது மனமும் அதில் அவள் பூட்டி வைத்திருந்த காதலும் மட்டுமே அவளை ஆட்சி செய்து கொண்டிருந்தது. அவளைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் பேசும்படி செய்தவனை அவர்கள் முன்னிலையிலேயே அடித்த அவனது ஆண்மையில் அவள் மனம் பெருமை கொண்டது. அவளை இகழ்ந்து பேசியவர்கள் வாயாலேயே அவள் மீது தவறில்லை என்று சொல்ல வைத்தவன் மீது காதல் பொங்க, அதைக் கண்களில் தேக்கி அவனைப் பார்த்தாள் பவித்ரா. அவளின் கண்கள் சொல்லிய செய்தியில் நம்பாமல் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான் ஜீவா .

"பவி....?"

அவள் அவனின் மார்பில் சாய்ந்து கொள்ள ஜீவா அந்த அணைப்பில் கண்கள் மூடி நின்றான். சிறிது நேரம் முன்பு கூட அவளை அணைத்தான் தான்.. ஆனால், அதில் காதல் அல்லாமல் காவல் அல்லவா இருந்தது. வருடங்கள் கழித்து கிடைத்த அவளது அணைப்பில் மனம் லயிக்க நின்றிருந்தவன், தன்னையும் மீறி அவளது உச்சந்தலையில் முத்தம் ஒன்றை பதித்திருந்தான்.

"தேங்க்ஸ்" என்று பவித்ரா ஜீவாவின் காதோரம் அணைப்பிலிருந்தவாறே முணுமுணுக்க, அவன் சிரித்தான்.

"எதுக்குடி தேங்க்ஸ்? முத்தத்திற்கா?" என்று ஜீவா குறும்பாகக் கேட்க, பவித்ரா அணைப்பிலிருந்து விலகி அவன் முகம் பார்த்தாள்.

"எல்லாத்துக்கும்"

பவித்ராவின் பதிலில் ஜீவா விழிகள்
தெறித்து விடுவதைப் போல் அவளைப் பார்த்தான்.
 
Status
Not open for further replies.
Top