பாரதிப்பிரியன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் கிளியே கண்ணம்மா
(A Lo(i)ve Story)
குரல் 1
(A Lo(i)ve Story)
குரல் 1
காரிருள் மெல்ல கண்களிலும், இல்லங்களிலும் இருந்து வெளியேறும் பொழுதில் ஞாயிறு உதிக்கும் நல்ல வேளை...
குதூகளித்து குருவிகள் குரல் எழுப்பி கூத்தாடும் நேரம்...., கரையை தொட்டு தொட்டு காதல் செய்யும் கடல் அரசியின் லீலையில் லயித்திருக்கும் கரைதொட்டு எழும்பி நிற்கும் கட்டிடங்கள்....
புதுச்சேரி.... பிரெஞ்சு பிரதேசத்து யூனியன் பிரதேசம். அரவிந்த ஆஸ்ரமமும், ஆரோவில்- லும் கலாச்சாரத்தின் கவனம் ஈர்க்க...
உயர்ந்து எழும்பி நூற்றாண்டுகள் கடந்த தேவாலயங்கள் பல புது வித அமைதியை ஊரெங்கும் பறைசாற்றிக் கொண்டிருந்தன.
தெருவெங்கும் சுற்றித் திரியும் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகள் வேறுவிதமான நம்பிக்கையை இந்த மண்ணிற்க்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்....
மணல்வெளியை நிறைத்து நிற்கும் மீன்பிடிப் படகுகள், அவற்றை ஒட்டி ஓடி மறையும் நண்டுகள். முட்டையிட்டு குஞ்சு பொறிக்க ஓடிவரும் ஆமைக் கூட்டங்கள்…. அடடா!! சொல்ல சொல்லக் குறையாத அழகோவிய காட்சிகள்.
கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மருத்துவமனையின் பெயர் "கெட் வெல்"........ இருபத்து நான்கு ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட மூன்றடுக்கு மருத்துவமனையும் அதை ஒட்டிய கல்லூரி மற்றும் ஆய்வகங்கள், விடுதிகளும்.... மிகுந்த கலை ரசத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த காலை நேரத்திலும் அந்த மருத்துவ மனையில் ஒரு பரபரப்பு நிலவியது...
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐம்பது வயது மதிக்க தக்க ஒரு மனிதனுக்கு ஒட்டுமொத்த மருத்துவ குழுவும் சிகிச்சை அளித்து வரும் பரபரப்பான சூழல் தெரிகின்றது. யார் இந்த மனிதன். இவனுக்கு உறவினர்கள் யாரும் இல்லையா? தீவிர சிகிச்சை பிரிவின் வெளியே காத்திருக்கும் சில குழந்தைகள், பெண்கள், வாலிபர்கள் கண்களில் ஏன் ஏக்கம் கலந்த கவலை?
நேரம் இப்போது காலை 8.00 மணி... மருத்துவமனை வளாகத்திற்குள் புதுச்சேரி முதலமைச்சரின் கான்வாய் நுழைகின்றது. முதலமைச்சர் திரு.செந்தாமரை செல்வன் காரில் இருந்து இறங்கி தீவிர சிகிச்சை பிரிவுக்கு வருகின்றார். மருத்துவர்கள் குழுவை சேர்ந்தவர்களின் தலைவர், மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர். ஹன்ஸ்ராஜ் முதலமைச்சர் செந்தாமரை செல்வனிடம் சில மருத்துவ விளக்கங்களை கொடுத்து கொண்டிருக்கின்றார்.
தீவிர சிகிச்சை பிரிவின் வாயிலில் உள்ள கண்ணாடி இடைவெளி வழியே செந்தாமரை செல்வன் பார்க்கிறார். உள்ளே சுவாச கருவிகள் துணை கொடுத்து, கைகள் இரண்டிலும் உள்ள நாளங்களில் மருந்துகள் செலுத்தப்பட்டு கொண்டிருக்க உயிருக்கு போராடி வருகின்றான் நம் கதையின் நாயகன் கவின்.
கவின் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர்... 6 ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், 2 மருத்துவ கல்லூரி, 3 பொறியியல் கல்லூரி, 2 பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், 5 சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட பள்ளிகள், என்று பற்பல தொழில்களில் முத்திரை பதித்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பவன்.
ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் நெருங்கிய நண்பனாக இருப்பவன். பல்வேறு அனாதை இல்லங்கள், மாற்று திறனாளிகள் இல்லங்களை "நலம்" என்னும் தொண்டு நிறுவனம் மூலம் நடத்தி வருகின்றான். பெற்றோர் கிடையாது. உற்றார், உறவுகள் கிடையாது.
சம்பாதிப்பதை தவிர வேறொன்றும் இவனுக்கு பொழுது போக்கு கிடையாது. மாதத்தில் 10 நாட்கள் வெளிநாடுகளிலும், 15 நாட்கள் உள்ளூரிலும், 5 நாட்கள் வேறு மாநிலங்களுக்கும் பறந்து பறந்து சென்று சம்பாதிப்பவன். ஓய்வு என்பதெல்லாம் இவனுக்கு ஒவ்வாத காரியம்.
ஆறு மாதங்களுக்கு முன்பே உடல் நலமின்றி இருந்தபோது, மருத்துவர்கள் இவனை ஓய்வெடுக்க அறிவுறுத்திய போதும் கண்டு கொள்ளாமல் இருந்ததற்கான விளைவே இன்று உயிருக்கு போராடும் அளவுக்கு இவனுக்கு சூழலை ஏற்படுத்தி விட்டது.
இவனுக்கு ஆறுதல் என்பதே வெளியே நிற்கும் அந்த குழந்தைகளும், பெண்களும், வாலிபர்களும் தான். இவர்கள் அனைவரும் இவனால் வளர்க்கப்படும் அனாதைகள்.... இவர்களுக்கு இவனை விட்டால் யாரும் கிடையாது... அப்படியொரு பந்தம் இவர்களுக்கு மத்தியில் உண்டு.
இவர்களை தாண்டி கவினுக்கு ஒரு பந்தம் உண்டென்றால் அது வீணா.... ஆனால் வீணாவை கவின் சந்தித்து பல வருடங்கள் கடந்து விட்டது. இன்றும் வீணாவிற்கு கவினின் செயல்கள் அனைத்தும் தெரியும். கவினுக்கும் வீணாவின் செயல்பாடுகள் தெரியும். ஆனால் இவர்களுக்கு இடையேயான அன்பு 27 ஆண்டுகள் ஆழமாக வளர்ந்த ஆலமரம். வீணாவிற்கு இன்னமும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. தெரிவிக்க வேண்டியவர் யார்?
சன்மதி ஆகாஷ்.... கவினின் செயலாளர்... ஒட்டுமொத்த நிறுவனங்களை கவின் சார்பாக வழி நடத்துபவள். ஆகாஷ் அவளின் கணவன். இந்திய ராணுவத்தில் பணியாற்றியபோது தீவிரவாத தாக்குதல் ஒன்றில் மறைந்து போன சூரியன். உறவுகளால் வெறுத்து ஒதுக்கப்பட்ட சன்மதியை அவளின் திறமை, படிப்பு மற்றும் சுய நலமில்லா குணம் ஆகியவை கவினால் ஈர்க்கப்பட்டு, இன்று அவளுக்குகென்று ஒரு அந்தஸ்தை உருவாக்கி தந்துள்ளது.
ஆனால் சன்மதி இன்று புதுச்சேரியில் இல்லை. கவின் கலந்து கொள்ளவேண்டிய ஒரு நிகழ்வில் கவின் சார்பாக பங்கேற்க டெல்லி சென்றிருந்தாள். அதற்குள் இவ்வாறு நடந்து போக, டெல்லியில் இருந்த அவளுக்கு டாக்டர்.ஹன்ஸ்ராஜ் தகவல் கொடுத்துள்ளார்.
சன்மதியை சுமந்தபடி டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் கிளம்பி இருக்க, வாட்ஸ் ஆப்-பில் வந்திருந்த தகவலை
"வெண்டைக்கு ரோஜாப்பூ நிறம் பூசியிருந்த ஒரு ஜோடி விரல்கள் "எடுத்துப் பார்த்தன....
அந்த விரல்களுக்குரிய "கருங்குவளை கண்கள் விரிய"....
சட்டென்று "பொன்னியின் ஊற்று விழிகள் நிறைத்து மடைகள் திறக்க, பருத்த பளிங்கு கன்னங்கள் வழியே நீர்வீழ்ச்சிகளாக பாயத் துவங்கின"...
கவின் என்று முணுமுணுத்த ஆரஞ்சு உதடுகள் கதையின் நாயகி வீணாவிற்கு சொந்தம்...
வீணா... கவின்.. யார் இவர்கள்..?? இவர்களுக்கு இடையேயான பந்தம் என்ன? இவர்களின் பந்தம் ஏன் இன்றுவரை உலகிற்கு தெரியவில்லை? கவின் நல்லவனா? கெட்டவனா?
கிளியின் குரல் மீண்டும் கேட்கும்
Last edited: