ஹாய்... பிரெண்ட்ஸ்...
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்
இந்த தைதிருநாளில்.. சமீபத்தில் வெளிவந்துள்ள எனது நாவல் "உயிர் காதலின் துளி காயாதே..!"-லிருந்து சில துளிகளைத் தர விரும்புகிறேன்..
என்சாய்..
காலையில் பெய்த மழையால் மேடும் பள்ளமாய் இருந்த அந்த மைதானத்தில் சிறு சிறு குட்டைகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாய் இருந்தது.
அங்கு இரண்டு பேர் ஆளுக்கொரு பக்கம் அரவிந்த்தை பிடித்திருக்க போதாக்குறைக்கு பின்னால் நின்று ஒருவன் அவனைப் பிடித்துக் கொண்டு நிற்க, இன்னும் இரண்டு பேர், அடி வாங்கி விழுந்திருந்த குமாரைத் தூக்க முயன்றுக் கொண்டிருந்தனர்.
அந்த குமாரை அவர்கள் அழைத்துக் கொண்டு செல்ல முயல்வதைக் கண்ட அரவிந்த் சட்டென திமிறி மூன்று பேரிடமிருந்தும் விடுபட்டான். அவனது திமிறலில் தங்களது பிடியை விட்ட அவர்கள் மீண்டும் அரவிந்த்தை பிடிக்க முயன்றனர். அதற்குள் குமாரை நோக்கி மேலும் அரவிந்த் அடிக்கப் பாய்ந்தான். அதை குமாருக்கு உதவி செய்தவர்கள் பார்த்து விட அரவிந்திடமிருந்து குமாரைக் காக்க அரண் போல் அவர்கள் இருவருக்கும் குறுக்கே நின்றனர்.
ஆனால் யாருக்கும் அடங்காத காளையாய்… தன்னை பிடிக்க வந்த மூன்று பேரின் கைகளுக்கு சிக்காமல் இரண்டு பேருக்கு பின்னால் நின்ற குமாரை நோக்கி எகிறிய அரவிந்த், அந்த இரண்டு பேரையும் தாண்டி குமாரின் தாடையில் ஒரு குத்து விட்டு அந்த மூவருடன் அவர்கள் நின்றிருந்த சேற்றுக் குட்டையில. விழுந்தான்.
#########################
கதிரேசனிடம் தற்போதெல்லாம் என் மகன் என்று பெருமை பேசுவார். சில நேரம் அவளோட மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ளும் கதிரேசன் சில சமயம் எதோ யோசனையில் இருப்பார்.
கோமதி காரணம் கேட்ட போது… “கோமு… என்ன தான் அரவிந்த் முன்பை விட தற்பொழுது பொறுப்பாய், தன்மையாய் நடந்துக் கொள்கிறான் என்றாலும் அவனிடம் ஏதோ மிஸ்ஸிங் ஆன மாதிரி தெரிகின்றதே…” என்று அங்கலாய்த்தார்.
அதற்கு கோமதி… “ஆமாங்க, பழைய அடாவடி, பொறுப்பப்பற்ற ஊதாரித்தனம் எல்லாம் இப்போழுது இல்லை, அதற்கு சந்தோஷப்படுவீங்களா, அதை விட்டுட்டு அங்கலாய்க்கறீங்க..” என்று அவரிடம் சண்டைக்கு நின்றாள். பின் வெளியே வந்தவளுக்கு அவள் வீட்ருகே நின்றுக் கொண்டு இருபெண்கள் பேசுவது கேட்டது..
“நான் அன்றைக்கே சொன்னேனே.. இது எதோ விவகாரமாய் படுகிறது என்று ஆனால் நான் சொன்னதை நம்பாமல் என்னையே திட்டி அனுப்பிட்ட அந்த கோமதிக்கா இப்போ பாரு… ஏரியாவே இந்த விசயத்தைப் பற்றி பேசி தான் நாறடிச்சுட்டு இருக்காங்க, கோமதிக்கா மாதிரி ஒரு அம்மா இருந்தால் போதும் இந்த மாதிரி பசங்க, மாதத்திற்கு..” என்று மேலே சொல்லப் போகும் முன் “நிறுத்துங்கடி…” என்ற கோபக்குரலில் திரும்பிய அவர்கள் கோமதியின் காளியவதாரத்தைப் பார்த்ததும் பயத்தில் நடுங்கினார்கள்.
கோமதி பயங்கர கோபத்தில் இருந்தார். அவர்களுக்கு சரியான பதில் கொடுக்கவில்லை என்றால் அவர் கோமதி இல்லையே..!!
“என் முன்னாடி நிற்க கூட பயந்தவளுங்க, என்னைப் பற்றி வம்பு பேசுகிறீங்களா, எங்கிருந்துடி உங்களுக்கு இந்த தைரியம் வந்தது. உங்க வீட்டு விசயங்களை அவிழ்ந்து விட்ட நாறி போயிருவீங்கடி..” என்றவாறு தன் தலைமுடியை கொண்டையிட்டுக் கொண்டே வரவும், அதற்கு மேல் அங்கிருக்க அவர்களுக்கு பைத்தியமா!! அடுத்த நொடியில் மாயமாய் மறைந்து சென்றனர்.
######################
“மாலதி, சீக்கிரம் ஃபோன் போட்டு விசாரி, நாம் சரியான அட்ரஸுற்கு தான் வந்திருக்கிறோமா என்று, அவனுங்களை பார்த்தாயா…!! பக்கா லோக்கல் பசங்க மாதிரி இருக்காங்க.. இவங்களுக்கு அந்த பெரிய துணிகடை விளம்பரமா… சேன்சேயில்லை, எதோ குளறுபடி என்று நினைக்கிறேன், என் ஃபோட்டோவை அவங்க மிஸ்யூஸ் செய்திட்டா என்ன செய்ய..?” என்று நெற்றியில் கை வைத்துக் கொண்டு புலம்பிக் கொண்டிருந்தாள் .
மாலதியும் ஃபோன் போட்டு விசாரித்தாள்…. விசாரித்தவள் ஐஸ்வர்யாவிடம் திரும்பி, “ஐஸ்ஸு, நாம் வந்த அட்ரஸ் சரி தான், அந்த துணிகடை இவர்களைத் தான் அணுகியிருக்காங்க என்பதும் உண்மை, அவங்க மும்பை மாடல்ஸ் தான் ரெகமண்ட் செய்தாங்களாம்… இவங்க வேண்டான்னு சொல்லிட்டு நம்ம விளம்பர ஏஜன்ஸியை அணுகினார்களாம், மாடல்கள் ஃபோட்டோ கூட பார்க்கலையாம், ஏஜன்ஸியே உன்னை செலக்ட் செய்து அனுப்பிருக்காங்க..” என்று விபரங்களைச் சொல்லவும்…
ஐஸ்வர்யா… “அப்படியா, சரி வேற வழி, வந்த வேலையை முடித்து விட்டே போகிறேன்.. என் ஃபோட்டோ மிஸ் யூஸ் செய்ய மாட்டாங்க என்பதற்கு ஏஜன்ஸிகாரங்க தான் உத்திரவாதம் தரணும்…” என்று விட்டு, பால்கனியின் அந்த பக்கமிருந்த சிறு கதவை பாத்ரூம் என எண்ணி திறக்கவும், அங்கே இருந்த மற்றொரு பால்கனியின் கம்பியில் மேல் சாய்ந்தவாறு கையில் சிகெரட்டுடன் அரவிந்த் நின்றுக் கொண்டிருந்தான்.
அடுத்த வாரம்… பதினொரு மணியளவில் அந்த ஷூட்டிங்கில் அறையில், அந்த விளம்பரத்திற்கேற்ற காஷ்டியூமில் ஐஸ்வர்யா நின்றுக் கொண்டிருந்தாள்.
அந்த அறையில் இருந்தவர்கள் தங்களது சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தனர். ஆனால் அவளது தோழி மாலதியால் பொங்கிய சிரிப்பை அடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள். காரணம் தெரிந்திருந்த ஐஸ்வர்யாவிற்கு கோபம் பொங்கியது என்றாலும் தொழிலின் நிமித்தம் உதட்டை இறுக்க மூடியபடி நின்றிருந்தாள்.
அரவிந்த்… “மாடல் ரெடியா…” என்றபடி உள்ளே வந்தவன் ஐஸ்வர்யாவின் தோற்றத்தைக் கண்டு திருப்தியாய் முறுவலித்தான்.
ஐஸ்வர்யா வெள்ளையில் பச்சை வர்ணம் கட்டம் போட்ட சட்டையை அணிந்துக் கொண்டு, காலாரை மேலேற்றி விட்டிருக்க, சர்ட்டின் மேல் பட்டன் போடாமல் உள்ளிருந்த வெள்ளை பனியன் லேசாக தெரிய, சர்ட்டின் கையை நன்றாக மடக்கி விட்டிருக்க, அவள் அணிந்திருந்த ப்ளூ கலர் கட்டம் போட்ட லுங்கியை முட்டி வரை உயர்த்தி கட்டியிருந்தாள்.
கண்களில் கறுப்பு கண்ணாடி அணிந்துக் கொண்டு, முதுகு வரை வெட்டியிருந்த அவளது கூந்தலை எடுத்து கொண்டாங்கி கொண்டை போட்டிருந்தாள். மேலும் கழுத்தில் சிவப்பு நிற சிறு சிறு கட்டம் போட்ட கர்சீப்பை கட்டியிருந்தாள்.
அவளை மேலிருந்து கீழே நன்றாக பார்த்த அரவிந்த், தனது தாடையை தடவியபடி… “எதோ மிஸ்ஸிங்கா தெரியுதே…” என்றவன் தனது உதவியாளரான சுமதியின் கறுப்பு நிற ஸ்டிக்கர் பொட்டை எடுத்துக் கொண்டு ஐஸ்வர்யாவின் அருகில் சென்றவன், அவளது கண்ணிற்கு சற்று கீழே கன்னத்தின் மேலே அந்த ஸ்டிக்கர் பொட்டை தன் கையாலேயே ஒட்டினான். பின் சற்று பின்னே நகர்ந்து அவளைப் பார்த்தவனின் முகம் தற்போது திருப்தியாக புன்னகைத்தது… “இப்போ சரி… பக்கா லோக்கல் மாதிரியிருக்கிறாய்…” என்று விட்டு, “மற்றவங்கெல்லாம் எங்கே..? கூட்டிட்டு வாங்க…” எனவும்,அவர்கள் வந்தனர்.
!###!######################
மூன்று பேரும் திருதிருவேன விழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அரவிந்த்… “அடேய்ய்ய்ய்.. என்னங்கடா.. ஆச்சு..” என்று இடுப்பில் இருகைகளையும் வைத்தபடி கேட்டான்.
மணி தயங்கியபடி, “அரவிந்த், நீ நிஜமாலுமே இந்த விசயத்தில் உறுதியாக இருக்கிறயாடா..” என்றுக் கேட்டான்.
அரவிந்த்.. “ரப்புன்னு.. மூன்று பேருக்கும் ஒன்று விட்டேன்னு வையு…” என்று அறைவது போல் கையை ஓங்கவும், நின்றிருந்த மூன்று பேரும் பயத்தில் ‘சடார்’ என்று ஒட்டி நின்றுக் கொண்டனர். அரவிந்த்தை மூவரும் பாவமாய் பார்க்க, ஓங்கிய தன் கையை கீழே போட்டு விட்டு, சிரித்தான்.
#########
நிமிர்ந்து பார்த்த தீபிகாவிற்கு கோபம் தலைக்கேறியது…
அரவிந்த் அந்த குட்டி மதிற்சுவரின் மேல் அமர்ந்திருக்க, செந்தில் அவன் பக்கத்தில் கைகளைக் கட்டியவாறு நின்றிருந்தான். செந்தில் நின்றிருந்த பக்கத்தில் தன் வண்டியை நிறுத்தியிருந்த விமலேஷ் அதில் அமர்ந்திருந்தான். மறுபக்கத்தில் நிறுத்தியிருந்த மணியின் வண்டியின் மீது கண்ணனும், மணியும் அமர்ந்திருந்தனர். அவர்கள் சும்மா அமரவில்லை..
அரவிந்த் சற்று முன் சண்டையிட்டதைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தனர். அரவிந்தும் சிரித்தபடியே இதெல்லாம் எனக்கு தூசு என்ற பாவனையில் கேட்டுக் கொண்டிருந்தான்.
இவற்றையெல்லாம் பார்த்ததும்… தீபிகா சுற்றும் முற்றும் தேட, அவள் தேடியது கிடைத்தது, அந்த சிறு உருட்டு கட்டையை எடுத்தவள்…
“நீங்கெல்லாம் உருப்படவே மாட்டிங்கடா…” என்றவாறு பைக்கில் உட்கார்ந்திருந்தவர்களின் முதுகிலும் கையிலும் இரண்டு சாத்து சாத்திவிட்டு பயந்து ஓடப் போன செந்திலின் முதுகிலும் ஓங்கி ஒரு அடிப் போட அவன் “ஆ…” என்று அலறியபடி நெளிந்தபடி முதுகைத் தடவினான்.
பின் அதிர்ந்து அமர்ந்திருந்த அரவிந்தனிடம் வந்தவள், அவன் தொங்கப் போட்டு வைத்திருந்த காலில் அடிக்க ஆரம்பிக்க, அவன் “ஏய்ய்…” என்று தன் தொங்கிக் கொண்டிருந்த கால்களை தூக்கிக் கொண்டாலும் அவனது கைகளிலும் அடி விழுந்தது.
சட்டென குதித்து அந்த கட்டைப் பற்றி பிடுங்கி எறிந்தான்.
“ஏன்டி, அடிச்ச…?” என்று தன் கைகளையும் கால்களையும் தடவியவாறு கேட்டான்.
தீபிகா, “ம்ம்… நீங்க பார்க்கிறதற்கு காலேஜ் முடித்த பசங்க மாதிரியா இருக்கீங்க, பக்கா பொறுக்கி பசங்க மாதிரி இருக்கீங்க… இவன் என்னமோ பாஸ் ரென்ஜ்க்கு மேலே அரியணையில் உட்கார மாதிரி உட்கார்ந்திருக்கான், இவன் என்னமோ அவனது வலது கை மாதிரி கைக் கட்டி நிற்கிறான், இவனுங்க கைக்கூலி பசங்க மாதிரி இவனுக்கு ஜால்ரா போடறீங்க, அப்படியே பக்கா ரவுடி கேங் மாதிரி இருக்கீங்க…” என்று மூச்சு வாங்க சொல்லி முடித்தாள்.
உடனே தனது முதுகைத் தடவிக் கொண்டு வந்த செந்தில்…. “நீ ரொம்ப யோக்கியதை மாதிரி பேசாதே தீபிகா, இரண்டு வருஷத்திற்கு முன்னாடி வரை நீயும் எங்க கேங்கில் ஒருத்தி மாதிரி தான் இருந்த, உன்னை விடவா நாங்க ரகளை செய்து விடப் போகிறோம்… என்னமோ காலேஜ்ஜில் சேர்ந்த பிறகு தான், பெரிசா பீட்டர் விட ஆரம்பிச்சுட்ட, நானும் நீ மாறிட்டயோ என்று நினைத்தேன், ஆன ஆத்தா..!! நீ மாறவேயில்லை…. என்னா அடி…!!” என்று தன் முதுகைப் பிடித்துக் கொண்டான்.
###################
புத்தகம் வாங்கீ படித்து தங்களது கருத்துக்களைச் சொல்லுங்கள் .
ஆவலுடன் காத்திருக்கிறேன்..