ஹாய் ப்ரண்ட்ஸ்..
அடுத்து தொடங்கப் போகும் கதை ஏற்கனவே தொடங்கி பாதியில் நிறுத்திய கதைதான்..
புதிதாக கதையைப் படிப்பவர்களுக்கு சிறிய முன்னோட்டம்.
நாயகன் : சுதீப்ஷர்மா
நாயகி : சத்யவர்ஷினி
************
நுழைவாயிலிருந்து ஐந்நூறு மீட்டர் தொலைவில் சுற்றிலும் கண்களுக்குக் குளிர்ச்சியாய் தோட்டம் போல் பசுமையைச் சுமந்து கொண்டு நடுநிலையாக வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே இருப்பவர்கள் தெரியாத வண்ணம் கண்ணாடி மாளிகையாக, பார்க்கும் யாவரையும் வசீகரிக்கும் வகையில் கம்பீரத்துடன் நிறுவனத்தின் வெற்றியைப் பறைசாற்றும் வண்ணம் நிமிர்ந்து நின்றது சுபம் கன்ஸ்ட்ரக்ஷன்.
இனி தான் வேலை செய்யப் போகும் அந்த ஒன்பதுமாடிக் கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தான். எதையோ நினைத்து தலையை இடவலமாக அசைத்து அந்நினைவை விரட்டியவன் ஒரு துள்ளலுடன் உள்ளே சென்றான்.
“ஹாய் ப்யூட்டி, ஐ’ம் சுதீப்ஷர்மா… இந்தக் கம்பெனியில் நியூ ஜாய்னி…” என்ற குரலில் வரவேற்பில் நின்றிருந்த பெண் நிமிர்ந்து பார்த்தாள்.
பார்த்தவுடனே தமிழன் இல்லை என்று தெரிந்துவிடும் முகம்… அடங்க மறுக்கும் தலைக்கேசம், விழிகள் குறும்பில் மிளிர அதிலும் ஒரு தீர்க்கம், கூரான நாசி, மழிக்கப்பட்டு இரண்டு தினங்களே ஆனதன் அடையாளமாகச் சிறிதாக முளைத்திருக்கும் மீசை, புன்னகை தவழும் இதழ்கள், தாடையில் விழும் குழி அவனுக்குத் தனி அழகைத் தந்தது.
கழுத்தோடு பிளாட்டினத்தில் மெல்லிய சங்கிலி, இடது கரத்தில் விலையுயர்ந்த கைக்கடிகாரம், கருப்பு வண்ண பேண்ட், உடலை இறுக்கிப் பிடித்த கருநீல வண்ண சட்டை அவனது சிவந்த நிறத்தை எடுத்துக்காட்டும் வண்ணம் இருக்க, ஆறடி உயரத்தில் ஆண்மகனின் இலக்கணமாகப் புன்னகையுடன் நின்றிருந்தான் சுதீப்ஷர்மா. அவனது குறும்பு வழியும் கண்களும், இதழ்களும் அவனுக்குக் கூடுதல் வசீகரத்தைக் கொடுத்தது.
அவனது கரங்கள் இரண்டும் எதிரே மார்புவரை இருந்த வரவேற்பு மேஜையில் வைத்திருக்க… அவள் தன்னையே ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கவும், புருவங்களை இருமுறை ஏற்றி இறக்கினான். அதில் தன்னைச் சுதாரித்துக் கொண்டவள் அவன் நீட்டிய காகித உரையை வாங்கி உள்ளே இருந்த காகிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டுச் சுதீப்பை பார்த்தாள்.
முதலாளியிடமிருந்து நேரடியாக வேலைக்கு அழைக்கப் பட்டிருக்கிறான். நேர்காணலில் தேர்வடைந்தற்கான எந்தக் காகிதமும் அவனிடத்தில் இல்லை. ஏன் அந்தக் காகிதம் கூட இந்தத் தேதியில் வந்து வேலையில் சேருமாறு இடம் மற்றும் முதலாளியின் கையொப்பம் மட்டுமே இருந்தது… முதலாளியின் கையொப்பம் மட்டும் அந்தக் காகிதத்தில் இல்லையென்றால் அவனை வேலையில் சேர வந்தவன் என்று நம்பியிருக்க மாட்டாள். ஏனென்றால் அவன் நின்ற தோரணை அப்படி.
“மேடம் கிளைண்ட் மீட்டிங்கில் இருக்காங்க… வெய்ட் பண்ணுங்க சார்… அவங்க கேபின் வந்ததும் கூப்பிடுறேன்…” மெல்லிய முறுவலுடன் அங்குப் போடப்பட்டிருந்த சோபாவைக் காட்டினாள்.
“இட்ஸ் ஓகே, மேடம் கூப்பிடுற வரை நாம பேசிட்டு இருக்கலாம்… பர்ஸ்ட் இன்டர்டியூஸ் அவர் செல்ப்… ஐ’ம் சுதீப்…” என்று தனது வலது கரத்தை அவளை நோக்கி நீட்டினான். அவளோ பதட்டத்துடன் பக்கவாட்டில் நிமிர்ந்து கண்காணிப்புக் கேமிராவைப் பார்த்தாள்.
பின் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன், “நோ சார்… ப்ளீஸ் டேக் யுவர் சீட்… வொர்க்கிங் ஹவர்ல பர்சனல் விசயங்களைப் பேசக்கூடாது கம்பெனி ரூல்…” என்றாள் பொறுமையாக.
“என்ன ரூல்?” என இழுத்தவன் “பர்ஸ்ட் உன் பெயரை சொல்லு பியூட்டி…?” என்றான் விடாமல் காரியத்தில் கண்ணாக… விடமாட்டான் போலவே என நினைத்தவள்,
“மேஹா…” என்றாள் வேறு வழியில்லாது.
“மேஹா! வாவ் உன்னை மாதிரியே உன் பெயரும் அழகா இருக்கு…” என்று ரசித்துப் பாராட்டினான்.
*************
கதவைத் தட்டிவிட்டு அனுமதி பெற்று உள்ளே நுழைந்தவன், “குட்மார்னிங் மேடம்…” என்று ஆர்பாட்டமாக கூறியவன் அவளது மேஜைக்கு எதிரில் போடப்பட்ட இருக்கையில் அமர்ந்தான்.
“கெட் அப்…” நிதானமாக அழுத்தத்துடன் வெளிவந்த குரலில் கேள்வியாய் ஏறிட்டான் சுதீப்.
“ஐ… ஸே… கெட்… அப்…” குரலை உயர்த்தாமல் ஒவ்வொரு வார்த்தையும் அதே நிதானத்துடன் வெளிவந்தது அவளிடம்… அவள் சத்யவர்ஷினி, சுபம் கன்ஸ்ட்ரஷன் எம்.டி.
அவளது சுட்டெரிக்கும் விழிகளில் சுதீப்ஷர்மா இருக்கையிலிருந்து எழுந்து நின்றான். சுழல்நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவள் அவனை ஆராய்ச்சியாக பார்த்துவிட்டு,
“சர்டிபிகேட்ஸ் எங்கே…?” என்று கேட்டாள்.
“மேம் அதான் அன்னைக்கே சொல்லிட்டேனே… என்கிட்ட சர்டிபிகேட்ஸ் இல்லைன்னு…” என்க,
அவனை ஊடுருவிப் பார்த்தவள், அவனிடம் சிலகேள்விகள் கேட்டாள்.
அவன் கூறிய பதிலில் திருப்தியானவள்.. “இன்னைக்கே ஜாய்ன் பண்ணிக்கோ… உன்னோட வேலை, எனக்கு பிஏ, பாடிகார்ட், டிரைவர் அன்ட் நான் என்ன சொன்னாலும் செய்யணும், எந்த நேரமாக இருந்தாலும் நான் கூப்பிட்டா வரணும்… நான் எப்ப சொல்றனோ அப்பதான் உன் வேலை முடியும் அதுவரைக்கும் எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்கு போகக் கூடாது… சன்டேயும் எனக்கு வேலை பார்க்கணும்…” என்று கூறி அழுத்தமாக அவனைப் பார்த்தாள் சத்யவர்ஷினி.
சத்யாவர்ஷினி கூறியதைக் கேட்டு திகைத்துப் போனான்.
‘ஆஹா தானா வந்து சிக்கிட்டியேடா… வேலை கொடுக்கிறேன்னதும் என்ன வேலைன்னு கூட கேட்காம எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன்னு சொல்லி பல்லைக் காட்டிட்டு வந்தேயில்லை… உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்… இப்படி அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கவா மும்பையில் இருந்து ஓடோடி வந்தாய்… இவங்க சொல்றதை பார்த்தால் இந்த ஜெயிலில் இருந்து எனக்கு விடுமுறையே கிடைக்காது போல… பெரிய இவன் மாதிரி ப்ராமிஸ் பண்ணினல்ல இப்போ அனுபவி…’ என மனதில் தன்னை வசைபாடியவன் ‘அப்போ என்னவளை நான் சந்திக்கவே முடியாதா..??’ என மனதில் அலறியவனாக தனக்கு உழன்று கொண்டிருந்தான்.
“உன்னோட மன்த்லி சாலரி செவன்டி தௌசன்ட், அப்பார்ட்மென்ட் கீ ரிஷப்சனில் வாங்கிக்க..” என்றவுடன் அவளை நிமிர்ந்து பார்த்தவன்,
‘என்னது..???’ என்று மனதில் வியந்தவனாக “ஓகே மேம்… பட் எனக்கு லீவ்…?” என்றான் கேள்வியாக.
“லீவ்?” என ஒரு மாதிரி நக்கலாக இழுத்தவள், “நான் எப்ப சொல்றனோ அப்போ லீவ் எடுத்துக்கலாம்…” என்றாள் பெரிய மனதாக.
அந்த நேரம் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த பெண் ஒரு கடிதத்தை சத்யவர்ஷினியிடம் கொடுத்துவிட்டு அவனைத் திரும்பியும் பாராது செல்ல,
கடிதத்தில் கையெழுத்திட்டு அவனிடம் கொடுத்தவள் சில காகிதங்களை அவனிடம் நீட்டி “இதுல சைன் பண்ணு, லெப்ல இருக்கிறது என் பழைய பிஏவோட கேபின், இனி அது உன்னோடது…” என்று அதே அறையில் இருந்த கண்ணாடித் தடுப்பைக் காட்டிவிட்டு கணினியின் புறம் திரும்பி சில வேலைகளை பிரப்பித்துவிட்டு, “யூ மே கோ நவ்…” என்றவள் வேலையில் கவனமாக… அவள் கொடுத்த காகிதங்களை படித்துப் பார்க்காமலே கையெழுத்திட்டு அவளிடம் கொடுத்தவன்..
“அதை சிரிச்சிட்டே சொல்லாமே…” என்றான் தலை சாய்த்து புன்னகையுடன்.
கணினியில் கவனத்தை வைத்திருந்தவள் விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்து “கெட் லாஸ்ட்..” என்றாள்.
“தேங்க் யூ…” என்றவன் இதழில் உறைந்த புன்னகையுடன் தனது இடத்திற்கு சென்றான்.
***********
விரைவில் வருகிறேன்..