Sonythiru
Suthisha
வண்ணம் -8
பணக்காரர்கள் மட்டுமே வாசிக்க கூடிய அந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் இளம் காலை வேளையை தனது பால்கனியில் இருந்து ரசித்து கொண்டிருந்தாள் அவள்.இயந்திர பறவையின் சத்தத்தில் வானத்தை நிமிர்ந்து பார்த்தவளின் மேல் சூரிய கதிர்கள் பட்டதில் அன்றலர்ந்த மலரைப் போல் இருந்த அவளின் முகத்தில் சிறு புன்னகை கீற்று தோன்றியது.அவளை பார்ப்பவர்களுக்கு அவளின் புன்னகை ஒட்டிக்கொள்ளும் விழிகளில் தீர்க்கமும் முகத்தில் சினேக பாவத்துடன் இருக்கும் அவள்தான் அபி.
அபியின் ரசனையை தடை செய்யும் விதமாக அமைந்தது அவள் தந்தையின் அழைப்பு.தந்தையின் குரலில் முகத்தில் தோன்றிய புன்னகை மாறாமல் அவரிடம் சென்று நின்றாள்.
மகளை வாஞ்சையாக பார்த்த அவளது தந்தை “என்னோட அம்முக்கு இன்னைக்கு முதல் நாள் காலேஜ் ஆச்சே நான் வேணா இன்னைக்கு மட்டும் உங்களை ட்ராப் பண்ணவா” என்றார்
அப்பொழுது சமையலறையில் இருந்துஎட்டி பார்த்த அபியின் தாய் “என்ன டிஎஸ்பி சார் உங்க பொண்ண ராகிங்கில இருந்து காப்பாத்தறீங்களா, இல்ல இந்த வானரங்கள் கிட்ட இருந்து மத்தவங்கள காப்பாத்த பாக்குறீங்களா” என்று இருவரையும் கலாய்த்த படி வந்து அமர்ந்தார்.
தன் தாயின் கிண்டலை காதில் வாங்காததது போல் இருந்த அபி சிறு சிரிப்புடன் “டாட் உங்களுக்கு கருகின வாசம் வருதா”என்றாள் நக்கலாக. மகளின் பேச்சு புரியாமல் இருவரும் முழிக்க தந்தையை பார்த்து கண்ணடித்தவள் “அது ஒன்னும் இல்ல டாட் நீங்க எங்கள ட்ராப் பண்ண வந்தா காலேஜில இருக்க பொண்ணுங்க எல்லாம் உங்க அழகுல மயங்கி அவங்களுக்கு போட்டியா யாரும் வந்துருவாங்களோனு பயந்து எங்களை கலாய்க்கிற மாதிரி உங்கள போக விடாம தடுக்கறாங்க” என்று சொல்லி ஓட தயாராக நின்றவளை பார்த்த,அவளின் தாய் “அடி கழுதை” என்று அடிக்க வர அவரிடம் சிக்காமல் நழுவி வாயிற்புறம் சென்றவள் “நான் ப்ரீத்தி ரெடியானு பாக்க போறேன்” என்று கத்தி கொண்டே நில்லாமல் தோழியின் வீட்டிற்கு ஓடிவிட்டாள்.
ப்ரீத்தியை பார்க்க வந்த அபியை வரவேற்றது என்னமோ ப்ரீத்தி தாயின் கோபக் குரல் தான்.
மனைவியின் கத்தலுக்கும் தனக்கும் சம்பந்தமும் இல்லை என்பது போல் ஹாலில் அமர்ந்து ஹாயாக பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் ப்ரீத்தியின் தந்தை.அவர் அருகில் சென்ற அபி “அங்கிள் எதுக்கு ஆன்ட்டி திட்டிட்டு இருக்காங்க” என்று கேட்க, அதற்கு அவரோ “எப்பயும் போலத்தான் உன் ஆன்ட்டி சுப்ரபாதத்தை ஆரம்பிச்சுட்டா.பேங்க் மேனேஜர் மத்தவங்களைதான் லோன்க்கு நாயா அலைய விடுவாங்க இங்க என்னடானா கட்டுன புருஷனுக்கு ஒரு வாய் காபி குடுக்காம அலைய விடறா, எங்கம்மா அப்பையே சொன்னாங்க பேங்க் மேனேஜர் பொண்ணு வேணான்டானு எங்க கேட்டேன்………”என்று இழுத்தவரின் பேச்சு அங்கு இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டு இருந்த மனைவியை பார்த்து கப்பென்று நின்றது.
ப்ரீத்தியின் தாய் முறைப்பையும் அவள் தந்தையின் திரு திருவென்ற முழியையும் நமுட்டு சிரிப்புடன் பார்த்த அபி
“ஆன்ட்டி இங்க பாருங்க அங்கிள் என்னமோ அவங்க அம்மா சொன்னதா சொல்றாரு என்னனு கேளுங்க” என்று போட்டுக் கொடுத்து அவர் முறைப்பதை பார்த்து மேலும் தூபம் போடும் விதமாக “விடாதிங்க ஆன்ட்டி நீங்க அங்கிள என்னன்னு கேளுங்க நான் ப்ரீத்தியை என்னென்ன பார்க்கிறேன்” என்று கூறியவள் தன்னையே பாவமாக பார்த்த ப்ரீத்தியின் தந்தையை பார்த்து “என்ஜாய் அங்கிள் என்ஜாய்”! என்று கண்ணடித்துவிட்டு தன் தோழியின் அறைக்கு நுழைந்தாள்.
அறைக்குள் ப்ரீத்தியோ அபியின் மொத்த பிபியும் ஏற்றும் வகையில் தலையணையை முகத்தின் மேல் போட்டு கொண்டு அழகிய ஓவியமாக ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.”ம்கூம்………வெளிய ஒரு போரே நடக்குது அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைங்கற மாதிரி எப்புடி தூங்கறா பாரு” என்ற கடுப்பில் அவள் முகத்தை மூடி இருந்த தலையணையை எடுத்த அபி தன் தோழி இருந்த நிலையைக் கண்டு பக்கென்று சிரித்து அவள் உறங்கிக்கொண்டிருந்த நிலையை தன் செல்லில் படம் எடுத்து சேமித்து கொண்டாள்.
ப்ரீத்தி இதை எதையும் உணராமல் தன் வாயில் ஒரு விரல் போதாது என்று இரு விரல்களையும் வைத்து கொண்டு உறங்கி கொண்டு இருந்தாள்.அவளை பார்ப்பவர்களுக்கு பார்க்க தெவிட்டாது. கண்களில் மட்டும் இல்லாது முகத்திலும் குறும்பும் புன்னகையும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கும். டீனேஜ் பருவத்தில் அடியெடுத்து வைத்தாலும் மனதிலும் அகத்திலும் அவள் குழந்தையே. ( போதும் அந்த குழந்தையை முதல்ல எழுப்புவோம் இல்ல அபி இருக்கிற கடுப்புல நம்மள நாலு சாத்து சாத்திடுவா ) தன் மொபைலை பத்திரப்படுத்திய அபி தான் விட்ட பணியினை ( அதுதாங்க அடிக்கிறது ) சாரி சாரி எழுப்பும் வேலையில் தொடர்ந்தாள். .
“அடியே எந்திரிடி லீவுல தான் எந்திரிக்காம உயிரை வாங்குனனு பாத்தா, இன்னைக்கும் இப்புடி பண்ணிட்டு இருக்க. இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே காலேஜ் போகணும்னு கொஞ்சமாவது நியாபகம் இருக்கா, நேரம் ஆச்சு கிளம்பாம தூங்கிட்டு இருக்க எந்திரிச்சு தொலைடி இன்னும் கொஞ்சம் லேட் பண்ணுனாலும் சூர்யா கிட்ட வேற திட்டு வாங்க முடியாது” என்று அவளை மானாவாரியாக திட்டிக்கொண்டும் பாரபட்சமின்றி தலையணையால் தாக்கி கொண்டும் இருந்தாள்.
வலி தாங்க முடியாமல் தன் தாய் தான் அடிக்கிறாரோ என்று நினைத்து கொண்ட ப்ரீத்தி " ஐயோ அம்மா ஏன்மா ஒரு பச்ச மண்ண இப்படி போட்டு அடிக்கிற” என்று புலம்பி கொண்டே எழுந்தவளின் முன் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு முறைத்து கொண்டிருந்தாள் அபி.அவளை பார்த்து ஜெர்க்கான ப்ரீத்தி அய்யோ நேத்தே சொல்லிதானே அனுப்புனா சீக்கிரம் எந்திரினு வழக்கம்போல தூங்கிட்டேன் போலவே என்று தனக்குள் பேசிக்கொண்டவள் வெளியே அபியை பார்த்து இஈஈ என்று அசடு வலிய சிரித்து அதுக்குள்ள விடிஞ்சிருச்சா என்றாள்.
ப்ரீத்தியின் மேல் காண்டில் இருந்த அபிக்கு அவளது கேள்வி கொலை காண்டை உண்டாக்க உன்னை போட்டு தள்ளுவதற்குள்ள ஒழுங்கா ரெடியாயிடு இல்ல இன்னிக்கு ஒரு கொல கன்ஃபார்ம் என்று மிரட்ட அவளின் கோவத்தின் அளவை தெரிந்த தோழியும் “இதோ” என்று சிட்டாக பறந்துவிட்டாள் கிளம்ப.
கல்லூரிக்கு கிளம்பிய இருவரும் அவரவர் பெற்றோர்களிடம் ஆசி பெற்று, ஸ்கூட்டியில் ஏறி சூர்யாவின் வீடு நோக்கி சென்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் அந்த பங்களாவில் நம்மை வரவேற்றது சுப்ரபாதத்தின் ஒலியே,உள்ளே ஒரு கையில் மணியுடனும் மற்றொரு கையில் தீபஆராதனை தட்டுடனும் பூஜை செய்து கொண்டு இருந்த பாவை அவளின் முகத்தில் தீபத்தின் ஒளிப்பட்டு செப்பு சிலை போல் மிளிர்ந்தவளின் இதழோரம் சிரிப்பில் விரிந்திருக்க கண்களை மூடி வேண்டிக்கொண்டவள் தெய்வீக அழகுடன் இருந்தாள் சூர்யா முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் ஆர்வத்தில் கடவுளை துதித்தவள் தன் தாயை தேடி சென்றாள். அங்கு அவளின் தம்பி தாயிடம் “ஏன்மா அப்படியே அப்பா மாதிரியே இவளையும் பர்ஃபெக்ட்டா பெத்த எதையெடுத்தாலும் லக்சர் கொடுக்கிறா பங்ச்சுவாலடி, ப்ராபர்ட்டினு” ‘ஆ…. .’என்று கொட்டாவி விட்டவன் “எனக்கு தூக்கம் தூக்கமா வருது”….. என்றுகூறி கொண்டிருந்த அதே நேரம் அவன் மண்டையில் ஒரு கொட்டு விழுந்தது. கொட்டியது யாரென்று தெரிந்தமையால் வலி எடுத்த தலையை தேய்த்துக்கொண்டே கொட்டிய ஆளை முறைத்து “ எதுக்கு இப்ப கொட்டின” என்று கடுப்புடன் கேட்டான்.
தன்னை கிண்டல் செய்த தம்பியை கொட்டியவள் கேலியான குரலில் “பிளஸ்-1 படிக்கிற சுண்டைக்காய் பையன் காலேஜ் போற என்ன அவ இவனா பேசுற, ஒழுங்கா மரியாதையா பேசு இல்லைனா ஈவினிங் மேத்ஸ் டெஸ்ட் வச்சுடுவேன்.பாத்துக்கோ என்று வெறுப்பேத்தியவள் தன் தாயின் புறம் திரும்பினாள்.
சூர்யாவின் தாய் சுந்தரியோ வந்துட்டாளா ஓவரா பேசுவாளே என்று மனதில் நினைக்க, அவர் எண்ணத்திற்கு ஏற்றார் போல் சூர்யாவும் “ஏன்மா அவன்தான் படிக்காம இங்க உட்கார்ந்து கதை அடிச்சுகிட்டு இருக்கான்னா அவன போய் படினு சொல்லாமல், வாய் அடிக்கிறதை கேட்டுட்டு இருக்கீங்களா எப்போ தான் உங்களுக்கு பொறுப்பு வரப்போகுதோ” என்று சூர்யா திட்டியதை கேட்டுக்கொண்டே படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார் அவளின் தந்தை வரதராஜ் .
.தன் மகளின் செயலில் எப்போதும் போல் கர்வம் கொண்டவர், அவளின் தலையை வாஞ்சையுடன் தடவி மனைவியை வம்பிழுக்கும் பொருட்டு “பொறுப்பா உங்க அம்மாவுக்கா அது எந்த கடைல விக்கும்னு கேப்பா, இல்லாததை எதுக்குடா அவகிட்ட கேட்டு உன்னோட எனர்ஜிய வேஸ்ட் பண்ற” என்று சிறு சிரிப்போடு கேட்க அவள் தாயோ இருவரையும் முறைத்து விட்டு “ஆமாம் …ஆமாம் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பொறுப்பானவங்கதான் வீட்ல ரெண்டு பேர் பொறுப்பா இருக்கறது போதும்” என்றவர் முகத்தை தோள்பட்டையில் இடித்து கொண்டு மகனுடன் சேர்ந்து நின்று கொண்டார்..
மனைவியின் பேச்சு காதில் விழாதது போல் திரும்பி கொண்ட ராஜ் மகளின் கன்னம் தட்டி “என்னடா காலேஜ்க்கு ரெடி ஆகிட்டியா” என்று கேட்டார்.
தந்தையின் கேள்விக்கு சூர்யா பதிலளிக்கும் முன் அவள் கொட்டிய கடுப்பில் இருந்த அவளின் தம்பி அகிலன் “அவதான் காலையில போற காலேஜ்க்கு நைட்டே ரெடியாகிட்டாளே” என்று கலாய்க்கவும் அவர்கள் வீட்டு வாசலில் வண்டி ஹாரன் சவுண்ட் விடாமல் கேட்கவும் சரியாக இருந்தது.
ஹார்ன் அடிப்பதை கவனித்த அகிலன் “இதோ வந்துட்டாங்கல்ல பஞ்சபாண்டவிகளில் இரண்டு பாண்டவிகள்.இன்னைக்கு அந்த காலேஜ்ல எத்தன பேர் உங்ககிட்ட மாட்டிட்டு முழிக்க போறாங்களோ” என்றவன் சூர்யாவை பார்த்து “கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்” என்று நக்கலாக கூறினான்.
தன்னை கிண்டல் அடித்த தம்பியை பார்த்து சூர்யா பல்லை கடித்தாலும் நேரமாவதை உணர்ந்து பெற்றோரிடம் சொல்லி கொண்டு செல்ல போனவள் ஓடிபோய் அகிலனின் தலையில் கொட்டிவிட்டு “சீக்கிரம் கெளம்புடா காலேஜ் போற நானே சீக்கிரம் ரெடியாயிட்டேன். ஸ்கூலுக்கு போற நீ இன்னும் குளிக்க கூட இல்லை போ போ வெட்டியா நின்னு வாய பாக்காம கிளம்பற வழிய பாரு” என்று விரட்டி விட்டு தன் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு தோழிகளின் அருகில் சென்று நிறுத்தினாள்.
வாசலில் தனக்காக காத்திருந்த தோழிகளை முறைத்தவள் “எவ்வளவு நேரம் உங்களுக்காக வெயிட் பண்றது. பூஜாவ வேற நாம போய்தான் கிளம்ப வைக்கனும் சீக்கிரம் கிளம்பி வாங்கணு நைட்டே அத்தனை டைம் சொன்னேன் காதுல வாங்குனீங்களா” என்று ஆரம்பிக்க அவளது பேச்சை இடையிட்டு நிறுத்திய அபி “இப்படியே நீ பேசிட்டு இருந்தா கண்டிப்பா நாம சீக்கிரம் காலேஜ் போக முடியாது.ஏற்கனவே லேட் இதுல நீ வேற ஏன்டி கதா காலட்சேபம் பண்ற போதும் கிளம்பு” என்றவளை முறைத்த சூர்யா “கடைசியா என்ன சொல்லிடுவிங்கிளே ‘ஓகே ஓகே’ வாங்க கிளம்பலாம்” என்று கூற மூவரும் பூஜாவின் வீடு நோக்கி சென்றனர்
பூஜாவின் வீட்டிற்கு செல்லும் வழியில் மூவரும் திரும்ப அங்கு வெயில் தன்மேல் படாமல் இருக்க தனது வண்டியை ஒரு பூ மரத்தின் நிழலில் நிறுத்தி ஒரு காலைத் தரையிலும் மற்றொரு காலை வண்டியிலும் வைத்து இரு கைகளையும் கோர்த்து தன் மதி முகத்தை அதில் தாங்கி அல்ட்ரா மாடர்ன் போல கிளம்பி இருந்தவளின் அழகு பார்ப்பவர் அனைவரையும் அசர அடித்து மனதை கொள்ளை கொள்ள வைக்கும்.
தோழிகள் வருவதை பார்த்த பூஜா தன் முத்துப் பற்கள் தெரிய புன்னகை சிந்த கல்லூரிக்கு தயாராகி நின்ற தோழியை பார்த்த மூவருக்கும் மயக்கம் வராத குறையாகியது என்றால் மிகையில்லை. ஏனென்றால் பூஜா அவள் பாட்டியிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருப்பாள் நாம் போய்தான் அவளை ரெடியாக சொல்ல வேண்டும் என்று அனைவரும் நினைத்திருக்க இவளோ தயாராகி இருப்பதை பார்த்து முதலில் திகைத்தாலும் பின் சுதாரித்து கொண்ட அபி “எங்கேயோ இடிக்குதே” என்று சந்தேகமாக கூறினாள்.
சூர்யாவும் மண்டையை ஆட்டி தனக்கும் அதே சந்தேகம்தான் என்பது போல் பார்க்க இருவரையும் முறைத்த ப்ரீத்தி “போலீஸ்காரன் பொண்ணுனா எப்பவும் சந்தேகப்படனுமா” என்று கேட்க அபியின் பாச பார்வையில் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.பின் சமாளிக்கும் விதமாக அவளே “சரி சரி சும்மா எதுக்கு டைம் வேஸ்ட் பண்றீங்க வாங்க வாங்க மது வர்றதுக்குள்ள நாம அங்க போய் வெயிட் பண்ணணும்ல” என்று கூற, அவளை முறைத்து கொண்டே இருவரும் பூஜாவின் அருகில் சென்றனர்.
தோழிகள் தன் அருகில் வந்தவுடன் அவர்களை முறைத்த பூஜா“ஏன்டி உங்களுக்கு கொஞ்சம் கூட டீ, டிகாஷனே இல்லையா, பர்ஸ்ட் டே காலேஜ்க்கு இவ்ளோ லேட்டாதான் வருவீங்களா” என்று படபடவென கேள்வி கேட்டவளை பார்த்த ப்ரீத்தியோ “உன்னோட டீ டிகாஷன் எல்லாம் நிறுத்து. முதல்ல என் கேள்விக்கு பதிலை சொல்லு ஸ்கூல் போகும்போதே கிளம்பாம உன்னோட பாட்டிக்கிட்ட பஞ்சாயத்து வச்சுக்கிட்டு நாங்க வர வரைக்கும் கிளம்பாம இருப்ப, இப்போ என்ன புதுசா எங்களுக்கு முன்ன சீக்கிரம் கிளம்பி இருக்க” என்றாள் நக்கல் குரலில்.அதற்கு பூஜாவோ வெட்கபடும் பாவனையில் கை விரலை வாயில் வைத்து கொண்டு கால் பெரு விரலால் தரையில் கோலமிட்டு கொண்டே “அது. ……..அது” என்று இழுத்து “அங்க நெறைய பசங்க இருப்பாங்க என்ஜினீயர், டாக்டர்னு பாரபட்சம் இல்லாம எல்லாரையும் சைட் அடிக்கலாம்ல அதான்” என்று சொன்னாள். அவள் பேச்சில் அதிர்ந்த ப்ரீத்தி சூர்யாவை வேகமாக திரும்பி பார்த்து இவ இருக்கும்போது சொல்லிட்டாளே இனி இவ வேற படிக்கத்தான் காலேஜ் போறோம்னு கருத்து சொல்ல ஆரம்பிச்சுருவாளே என்று மனதில் புலம்பினாள்.
பூஜாவின் பாவனையை பார்த்த அபியோ “அடியே நீ சைட் அடிக்கறதுனா எவ்ளோ வேணாலும் அடிச்சுக்கோ அதுக்கு வெட்கங்கற பேர்ல நீ ஏதோ பன்றியே அதை தயவு செஞ்சு நிறுத்து, பார்க்க சகிக்கல என்று சொல்ல, சூர்யாவோ பூஜாவை பார்த்து கண்ணடித்து “தப்பு இல்ல தப்பு இல்ல சைட் அடிச்சுக்கலாம்” என்று சொல்ல தோழிகள் மூவரும் அவளை அதிர்ச்சியோடு பார்த்து “நீயாடி இதை சொல்றது, எப்பவும் படிக்கற வேலைய பர்ப்போம்னு அட்வைஸ் பண்ணுவ” என்று கோரசாக கேட்க, அதற்கு அவளோ “நாங்களும் வளந்துட்டோம்ல காலேஜ் வந்துட்டோம் அது மட்டும் இல்லாம அழக ரசிக்கறதுல தப்பு இல்லையே” என்று சொல்லி தோழிகளை பார்க்க அவர்கள் அப்போதும் அதிர்ச்சி விலகாமல் சூர்யாவைதான் பார்த்து கொண்டு இருந்தனர். அவர்களின் அதிர்ந்த முகத்தை பார்த்த சூர்யா “ஷாக்க கொறைங்க ஷாக்க கொறைங்க” என்றவள் பின் “வாங்க கிளம்பலாம் நேரமாச்சு” என்று சொல்ல அவள் பேச்சில் தன்னிலை அடைந்த தோழிகள் அவளிடம் “புல் பார்ம்லதான் இருக்க வா போலாம்” என்று மதுவிடம் தாங்கள் காத்திருப்பதாக சொன்ன இடத்திற்கு கிளம்பினர்.
மதுவந்தி அங்கு தன் இல்லத்தில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். மகள் கோபத்தில் சாப்பிடாமல் சென்றுவிடுவாளோ என்ற பயத்தில் அவளின் பெரிய அன்னை உணவை ஊட்ட ஆரம்பிக்க, வேண்டா வெறுப்பாக சாப்பிடுவது போல் உணவை ஒரு கட்டு கட்டிக் கொண்டு இருந்தாள்.
தங்கையின் செய்கையை பார்த்த அண்ணன்கள் சிரித்துக் கொண்டிருக்க அதற்கு நேர்மாறாக முகத்தை உர்ரென்று வைத்து அமர்ந்திருந்தனர் அவளின் தந்தையும் பெரிய தந்தையும்.அவர்களின் அன்னையோ யாரையும் கண்டுகொள்ளாமல் தன் பேத்தியின் அருகில் சென்று கோவிலில் இருந்து கொண்டு வந்திருந்த பிரசாதத்தை நெற்றியில் பூசிவிட்டு “நீ கிளம்பு டா செல்லம் உனக்கு நேரமாகுது” என்றார்.
பாட்டி கூறியதைக் கேட்டு மது வேகமாக எழ அவளின் தந்தைமார்களும் தமையன் மார்களும் ஒருசேர எழுந்து கிளம்ப ஆயத்தமாகினர். அதைக்கண்ட மதுவின் கண்கள் கலங்க துவங்கியது.
அழகு ஓவியமாக தங்கள் எதிரில் நிற்கும் மதுவை பார்த்த அனைவருக்கும் மனதில் தோன்றிய ஒரே விஷயம் “தங்கள் வீட்டு இளவரசியை துணையின்றி தனியாக கல்லூரிக்கு அனுப்புவதா, முடியாது, நாங்களும் உடன் சென்றே தீருவோம்” என்பதே.
மதுவின் அண்ணன்கள் தாங்கள் படிக்கும் கல்லூரியில் தங்கையை சேர்த்துவிட முயற்சிக்க அவளோ தன் தோழிகள் சேரும் கல்லூரியில் தான் சேர்வேன் என்று உண்ணாவிரதப் போராட்டம் எல்லாம் நடத்தி சம்மதம் வாங்கினாள்”.அப்பாடா” என்று சந்தோஷமாக கல்லூரிக்கு கிளம்பியவளுக்கு அடுத்த சோதனையாக யார் அவளை கல்லூரியில் விட்டு அழைத்து வருவது என்று,அண்ணன்களும், அப்பாக்களும் அடித்துக் கொள்ளவும் நொந்தே போனாள்.
கல்லூரியிலாவது தன் சிறகை விரித்து பறக்கலாம் என்ற அவளின் எண்ணத்தில் இவர்கள் ஒரு லோடு மணலை அள்ளிப் போட்டார்கள்
தன் பேத்தியின் கண்கள் கலங்குவதை கண்ட மதுவின் பாட்டி “நீங்க யாரும் அவ கூட போக போறது இல்லை நம்ம டிரைவர் பாரி கூட தான் கார்ல போயிட்டு வரப்போறா, இல்ல, நாங்க தான் கூட்டிட்டு போவோம்னு அவ பின்னாடியே யாராவது போனீங்கனு தெரிஞ்சது காலேஜ் பஸ்ல அனுப்பிடுவேன் பாத்துக்கோங்க” என்று மிரட்டவும், அவர் கடைசியாக சொன்னதைக் கேட்டு பயந்து தங்களின் இளவரசியை மனதே இல்லாமல் தனியாக அனுப்ப அனைவரும் ஒப்புகொண்டனர்.
அனைவரும் தான் தனியாக செல்ல சம்மதித்த சந்தோசத்தில் தன் பாட்டியை அணைத்து முத்தமிட்ட மது, தன் குடும்பத்தினரின் வாடிய முகங்களைப் பார்க்க பொறுக்காமல் அவர்களையும் தன் முத்தத்தால் திக்குமுக்காட செய்து “ஐ லவ் யூ ஆல்” என்று சொல்லி அனைவரும் முகத்தில் இருக்கும் புன்னகை மாறுவதற்குள் ஒரே ஓட்டமாக ஓடியவள் யாரும் அறியாமல் தன் பாட்டியிடம் மட்டும் கட்டை விரலை உயர்த்தி “தேங்க்யூ பாட்டி” என்று வாயசைத்து, காரில் ஏரியவள் தன் பாட்டியிடன் கூறியதுபோல் கல்லூரிக்கு செல்லும் பாதிவழியில் தனக்காக காத்திருக்கும் தன் தோழிகளின் அருகில் இறங்கினாள்.
“அடே அப்பா சீக்கிரம் சிங்கிளா வந்துட்ட போருக்கு போற மாதிரி மொத்த குடும்பமும் வரும்னு பார்த்தனே” என்று மதுவை ப்ரீத்தி கிண்டல் செய்ய சூர்யாவோ “அது எல்லாம் காலேஜ்ல போய் பேசலாம் வாங்க போகலாம்” என்று சொல்ல மது வேகமாக பூஜா வண்டியில் அமர சென்றாள்.
மது தன் அருகில் வரவும் அலறிய பூஜா “என்ன ஆனாலும் இன்னைக்கு நான் சோலோ பர்பாமன்ஸ்தான் ப்ளீஸ்…….ப்ளீஸ்…. ப்ளீஸ்” என்றவள் “அபி வண்டில வாடி” என்று சொல்ல அபியோ “ஹேய் இன்னைக்கு மட்டும்தான் ப்ரீத்தி வண்டி எடுத்துட்டு வருவா, நாளைல இருந்து நாங்க ரெண்டு பேரும் என்னோட வண்டிலதான் வருவோம்.அதனால உங்க ரெண்டு பேருல ஒருத்தர்தான் அவளை கூட்டிட்டு வரணும் அது யாருனு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க இப்போ கிளம்பலாம் நேரமாகுது” என்று கூறி மதுவை தன் வண்டியில் ஏற்றி கொண்டவள் கல்லூரியை நோக்கி கிளம்பினாள் மற்றவர்களும் அவளை பின் தொடர்ந்து சென்றனர்.
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.............. .
அஜ்வந்தியின் 'வண்ணங்களின் வசந்தம்' - கருத்துத் திரி
யமுனாவிற்கு அபியின் பதிலடி அருமை சகோ ☺️☺️☺️☺️☺️☺️
www.srikalatamilnovel.com
Last edited: