அத்தியாயம் 5
கார்த்திக் குழப்பத்துடன் “ஆதி..! ப்ளீஸ் என்ன சொல்வதாக இருந்தாலும் ஒப்பனாக சொல்லு! எனக்கு நிஜமா புரியலை. மீராவை பிடிக்கலைன்னு சொல்கிறே..! ஆனால் உன் வீட்டில் இருக்கிறவங்க உனக்கு செய்ததை விடவா கெட்டதை அவள் செய்து விடப் போகிறாள்..” என்றுக் கூறினான்.
ஆதித்யா சிறு அலுப்புடன் “உனக்கு புரியாமலேயே முடியட்டும் என்று விரும்புகிறேன் கார்த்தி..” என்றான்.
கார்த்திக் “ஓ.. நீ இன்னும் மீராவை பற்றி முதலில் சொன்னதை மாற்றிக்கவில்லையா..! அப்படி நீ சொன்ன மாதிரி நடந்துவிட்டாலும் அது என் கவலை ஆதி! இப்போ கிடைத்திருக்கிறே நேரத்தை என்சாய் செய்யாமல்.. அவள் கூட இருக்கிற சின்ன மிஸ் அன்டர்ஸெ்டென்டிங்கை பிடிச்சுட்டு ஏன்டா இப்படித் தொங்குகிறே!” என்று அலுத்துக் கொண்டான்.
அப்பொழுது மீரா அங்கிருந்து.. “பேசிட்டே போகலாமே.. அப்படி என்ன பேசிட்டு இருக்கீங்க..” என்றுக் கேட்டாள்.
கார்த்திக் “ஒன்றுமில்லை மீரா..! இதோ வருகிறோம்.” என்றான்.
ஆனால் ஆதித்யா “எனக்கு உன்னைப் பிடிக்கலை. நீ கூட வந்தால் நான் வர மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தேன். இவன் என்னை கன்வைன்ஸ் செய்ய பார்க்கிறான். ஆனால் என்ன சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன்.” என்றான். அதைக் கேட்டு அருகில் நின்றிருந்த கார்த்திக் நெற்றியில் அறைந்துக் கொண்டான்.
மீரா பொங்கிய கோபத்தை அடக்கிக் கொண்டு “என்னை உனக்கு பிடித்தால் என்ன..! பிடிக்காவிட்டால் என்ன..! நீயா என்னை லவ் செய்கிறே..? ஆக்சுவலா கார்த்திக் கூட நீ இருந்தால் எனக்கு தான் அன்ஈஸியா இருக்கு..! ஆனால் நீ என்னைப் பற்றிச் சொன்னது பொய் என்றுக் காட்டி உன்னை ஸாரி சொல்ல வைக்கணும். அதனால் பயந்துட்டு ஓடாதே...!” என்று அவனைப் போல் நக்கலாக கேட்டபடி வந்தாள்.
ஆதித்யா அவனையும் அறியாமல் அவளின் நக்கலுக்கு கட்டுண்டான். “ஒகே இருக்கிறேன். உங்க கூடவும் வருகிறேன். ஆனால் நான் இங்கே இருந்தால் நீ தோற்றுவிடுவே.. மீரா! உண்மையில் நான்j தோற்றால் தான் சரியாக இருக்கும்.” என்றுவிட்டு முன்னால் நடந்தான். புரியாத புதிராக இருந்தவனை இருவரும் பார்த்தார்கள். பின் மூவரும் அவரவர் இடத்திற்கு சென்றார்கள்.
கிறிஸ்துமஸ் விடுமுறை தினங்கள் வருவதால் அடுத்த இரு நாட்கள்.. அவர்கள் பணி புரிந்த தொழிற்சாலையில் வேலை அதிகமாக இருக்கவும், மூவரும் தனியாக வெளியே செல்ல முடியவில்லை. ஆனால் கார்த்திக் அலுவலகத்தில் மீராவையும், மாலையில் ஆதித்யாவை அவன் தங்கியிருந்த ஹோட்டலிலும் பார்த்து பேசிக் கொண்டான்.
இரு நாட்களுக்கு பிறகு ஆதித்யாவின் தங்கியிருந்த அறைக் கதவின் அழைப்பு மணி ஒலித்தது. கார்த்திக் வர நேரமிருக்கே என்று எண்ணியபடி கதவை திறந்தவன், கார்த்திக் நின்றிருப்பதைக் கண்டு “ஹெ நேரத்திலேயே வந்துட்டே..” என்றபடி கட்டியணைத்த போது.. பின்னே மீரா நின்று நகத்தைக் கடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
கார்த்திக் “இன்றோட வேலையெல்லாம் முடிஞ்சுருச்சு, இனி ஹாலிடே தான்.. அதுதான் நானும் மீராவும் வந்துட்டோம், எங்காவது ஜாலியாக போயிட்டு வரலாம் வாடா..” என்றபடி நண்பனுடன் உள்ளே வந்தான். ஆதித்யா மீராவை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. மீராவும் அவ்வாறே இருந்தாள். இருவரும் சண்டைப் பிடிக்காததே கார்த்திக்கிற்கு போதுமானதாக இருக்கவும்.. அவனும் அவர்களை வற்புறுத்தவில்லை.
முதலில் மூவரும் திரையரங்கிற்கு சென்றார்கள். சென்று அமர்ந்த பின்னரே கவனித்தார்கள். மீரா நடுவில் அமர்ந்திருக்க.. மற்ற இருவரும் அவளின் இரு புறமும் அமர்ந்திருந்தார்கள். படம் ஆரம்பித்ததும்.. கார்த்திக் அவள் புறம் சரிந்து முன் அமர்ந்திருப்பவர்களைக் காட்டி ஏதோ சொல்லவும், இயல்பு போல்.. அவனிடம் இருந்து சற்று விலகி.. அவன் சொல்லியதைக் கேட்டு மீரா சிரிப்புடன் தலையை ஆட்டினாள். ஆதித்யாவின் புறம் திரும்பி பார்த்த மீரா ஏதோ சொல்ல எதானிக்க நினைத்தவள்.. பின் மீண்டும் நேராக அமர்ந்துக் கொண்டாள். பின் மீண்டும் திரும்பிப் பார்த்தாள். படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன், எரிச்சலுடன் திரும்பி தணிந்த குரலில் “என்ன…!” என்றான்.
அவனின் எரிச்சலைக் கண்டு கோபமுற்ற.. மீரா அதே தணிந்த குரலில் அவன் புறம் சரிந்து “என் பேமலி மெம்பர்ஸ் உன்னைப் பற்றிக் கேட்டாங்க, அன்னைக்கு சரியாக பேசலைன்னு வீட்டிற்கு கூட்டிட்டு வரச் சொன்னாங்க, நானும் சரி என்றுச் சொன்னேன். சரி என்றுச் சொல்வதற்கு பதில் அந்த சிடுமூஞ்சி வர மாட்டான்னு சொல்லியிருக்கணும்.” என்றுவிட்டு நேராக அமர்ந்து படத்தைப் பார்க்க ஆரம்பித்தாள்.
ஆதித்யா மாறாத எரிச்சல் மிகுந்த குரலில் “உனக்கு லேட்டாக தான் புரியுமா..!” என்று நக்கலுடன் சிரித்தான்.
மீரா “யு..” என்று அவன் புறம் திரும்பவும் சட்டென்று ஆதித்யா எழுந்து சென்றான். மீரா அவன் எழுந்து செல்வதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் வெகு நேரமாகியும் அவன் வராதிருக்கவும்.. கார்த்திக்கிடம் சொன்னாள். கார்த்திக் எதற்கு எழுந்து சென்றான் என்றுக் கேட்டதிற்கு தனக்கு தெரியாது என்று மீரா பொய்யுரைத்தாள். அதை நம்பிய கார்த்திக் செல்பேசியை எடுத்து ஆதித்யாவிற்கு அழைப்பு விடுத்தான். ஆதித்யாவின் செல்பேசி அணைக்கப்பட்டிருப்பதாக சொல்லியது. எனவே வந்து விடுவான் என்று அவளுக்கு மட்டுமல்லாது அவனுக்குமே சொல்லிச் சமாதானம் செய்துக் கொண்டான். ஆனால் அடிக்கடி இருவரும் கதவை பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். வெகு நேரம் ஆகி விடவும், அதற்கு மேல் பொறுக்க முடியாமல்.. கார்த்திக் வெளியே சென்றுப் பார்த்துவிட்டு வருவதாக கூறவும், மீரா தானும் வருவதாக கூறினாள். ஒருவேளை அவன் வெளியே சென்றிருந்த நேரம்.. ஆதித்யா இங்கு வரலாம் என்று அவளை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு சென்றான். முதலில் ஆதித்யா காணாதிருப்பது மட்டுமல்லாது தற்பொழுது கார்த்திக்கிற்கு சென்று விடவும், மீராவிற்கு ஓடிக் கொண்டிருக்கும் படம் மனதில் பதியவில்லை. அவளும் கதவைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
படம் முடிந்தும் கூட வராமல் இருக்கவும், கவலையுடன் எழுந்த பொழுது அங்கு ஆதித்யா வந்தான்.
சர்வ சாதாரணமாக வந்து நின்றவன், “கார்த்தி எங்கே?” என்றுக் கேட்டான்.
ஆதித்யாவை பார்த்ததும் திகைத்த மீராவிற்கு அத்தனை நேரம் இருந்த பயமும் அகன்றது. சிறு மகிழ்ச்சியுடன் எழுந்து நின்றவள், “இத்தனை நேரம் எங்கே போனே?” என்றுக் கேட்டாள்.
அவனோ “உங்க ரோக்கு முன்னாடி இரண்டு ரோ தள்ளி இருக்கிறதில் தான் உட்கார்ந்திருந்தேன்.” என்றான்.
மீரா “வாட்! நீ காணோம் என்று கார்த்தி உன்னை வெளியே தேடிட்டு போயிருக்கிறான். ஏன் இங்கேயே உட்கார்ந்தா என்னவாம்?” என்று எரிந்து விழுந்தாள். அவன் அமைதியாக அவளை முறைக்கவும், அத்தனை நேரம் பட்ட கவலையால் கோபத்துடன் “ஏன் நான் என்ன கடிச்சு தின்று விடப் போகிறேனா..! இல்லை நீ என்கிட்ட மயங்கி விடப் போகிறாயா..” என்றுக் கோபத்துடன் கேட்டாள்.
அதற்கு ஆதித்யா உடனே “நானா! நோ! நெவர்!” என்று பட்டென்று பதிலளித்தவன், அவள் புறம் சற்று குனிந்து அழுத்தமான ஆனால் மெல்லிய குரலில் “ஆனால் நீ என்கிட்ட மயங்கிடுவே..” என்றுவிட்டு நிமிர்ந்தான்.
அந்த குரலும், அவனது அருகாமையும், அவனது பேச்சையும் கேட்ட மீராவிற்கு ஏனோ திக்கென்று இருந்தது. விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள். அவன் ஏளனமாக சிரித்துவிட்டு திரும்பினான். அப்பொழுதே சுயநிலை அடைந்தவளாய், “நானா..! என்ன உளறுகிறாய்..” என்று புருவத்தை நெறித்தபடி கேட்டாள்.
அவனோ சத்தமாக சிரித்தபடி திரும்பினான்.
“இந்த பதிலை நான் சொன்னதும் சொல்லியிருந்தால்.. உன் கோபத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால்..” என்றுச் சிரித்தபடி பேச தொடங்கியவன், கடைசியில் முறைத்துவிட்டுச் சென்றான். மீரா சத்தமாகவே திட்டினாள்,
“திமிர்! திமிர்! உடம்பு புல்லா திமிர்..”
வெளியே சென்ற ஆதித்யா கார்த்திக்கை செல்பேசியில் அழைத்தான். அவனது பெயரை பார்த்ததுமே எடுத்த கார்த்திக் எங்கே இருக்கிறாய் என்றுக் கேட்டான். அவன் நின்றிருந்த இடத்தைச் சொல்லவும், அடுத்த இரண்டே நிமிடத்தில் வந்த கார்த்திக் கோபமும், நிம்மதியுமாய் “போடா..” என்று அவனது மார்பில் கையை வைத்து தள்ளினான்.
பின் கார்த்திக் “இப்போ நான் எங்கேயிருந்து வருகிறேன் தெரியுமா..! இந்த மாலுடைய ஆபிஸில் இருந்து வருகிறேன். சிசிடிவியை செக் செய்ய சொன்னேன். அவங்க இன்வஸ்டிக்கெட் பெட்ரொல் கிட்ட பர்மிஷன் வாங்க சொன்னாங்க..! அவங்களுக்கு ஃபோன் போட போனேன். கரெக்ட்டா நீ கூப்பிட்டுட்டே..! ஃபோனையும் ஆஃப் செய்துட்டு எங்கேடா போனே..?” என்று மீண்டும் கோபத்துடன் கேட்டான்.
ஆதித்யா “நானும் படம் பார்த்துட்டு தான் இருந்தேன்.” என்று சர்வ சாதாரணமாக சொன்னான். கார்த்திக் குழப்பத்துடன் பார்த்த அதே வேளையில் மீராவும்.. அவர்கள் இருந்த இடத்திற்கு வந்து விடவும்.. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உங்களுக்கு பிரைவஸி கொடுக்க நினைத்தேன். ஆனால் நீங்க என்னைத் தேடிட்டு இருந்திருக்கீங்க..” என்றுச் சிரித்தான்.
கார்த்திக் “அடப் போடா..! நீ இருக்க போவது இன்னும் பத்து நாட்கள் தான்.. அதற்கு பிறகு நாங்க மட்டும் தானே தனியாக இருப்போம். நீ எங்களுக்கு பிரைவஸி ஏற்படுத்தி தருகிறாயா..” என்றுக் கோபம் கொண்டான். அதற்கு ஆதித்யா “அங்கே உட்கார பிடிக்காமல் எழுந்து போனேன் என்றுச் சொன்னால் கோபப்படுவே என்றுத்தான் மாற்றி சொன்னேன். ஆனால் நீ என்கிட்ட இருந்து உண்மையை வாங்கித்தான் தீருவேன்னு இருக்கே..” என்றுச் சிரிக்கவும், கார்த்திக் “உண்மையாலுமே உன்னை ஜெர்மனியில் வேண்டுமென்றே தொலைச்சுட்டு, உன் அப்பா கிட்ட எனக்கு தெரியாது என்று பொய் சொல்ல போகிறேன் பாரு..” என்று அடிக்க போக ஆதித்யா அவனின் கைக்கு சிக்காமல் ஓடினான்.
இவ்வாறு நண்பர்கள் விளையாடிக் கொண்டிருக்க மீரா.. ஆதித்யா சொன்னதில் இருந்து மீளா முடியாமல் நின்றாள். முதலிலேயே கார்த்திக்கை விட்டு சென்றுவிடுவாள் என்று அவன் கூறிய பொழுது கடும் கோபம் தான் கொண்டாள். ஆனால் தற்பொழுது அவனிடம் மயங்கி விடுவதாக கூறவும், அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாள்.
அன்று அவளே ஆதித்யாவின் அருகே செல்வதையும் அவனைப் பார்ப்பதையும் தவிர்த்தாள். அடுத்த நாள் கார்த்திக் அழைத்த பொழுது வீட்டில் வேலையிருப்பதாக கூறித் தவிர்த்தாள்.
கார்த்திக் சொன்னது போல் ஆதித்யா பத்து நாட்கள் இருந்துவிட்டு சென்றுவிடுவான், அவளைத் தான் அவனுக்கு பிடிக்கவில்லையே பின்னே ஏன் அவன் முன் சென்று நிற்க வேண்டும்.. என்ற முடிவிற்கு வந்தாள். அன்று வீட்டை சுத்தம் செய்வதில் வீட்டினருக்கு உதவி செய்துக் கொண்டிருந்தவளுக்கு ஆதித்யாவின் மீது கோபம் பெருகி கொண்டே போனது.
பொதுவாகவே மீராவிற்கு வீட்டு வேலைகளில் அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. சமையலில் ஆனா ஆவனா கூடத் தெரியாது. அதுபோல் மற்ற எந்த வேலையும் செய்ய பிடிக்காது. ஆனால் இன்று ஆதித்யாவை தவிர்க்கும் பொருட்டு, வீட்டில் இருந்ததிற்கு அவளது அன்னை சுத்தம் செய்யும் வேலையை அவளது தலையில் கட்டிவிட.. அதற்கு ஆதித்யாவை திட்டியபடியே வேலையில் ஈடுபட்டாள்.
சிறிது நேரத்தில் இடுப்பைப் பிடித்து கொண்டு ஷோபாவில் அமர்ந்தவளைப் பார்த்து பரிமளம் “இந்த வேலையை செய்வதற்கே இப்படியா..! நாங்கெல்லாம் அந்த காலத்தில்..” என்று ஆரம்பிக்கவும்.. அங்கிருந்து எழுந்துவிட்டாள்.
உடனே பரிமளம் “எதாவது சொன்னால்.. காதில் வாங்கிறதே இல்லை.” என்றுத் திட்ட ஆரம்பித்தார். வேகமாக தனது அறைக்கு செல்ல தொடங்கியவள், பரிமளம் அடுத்து கேட்ட கேள்வியில் அப்படியே நின்றுவிட்டாள்.
“எத்தனை முறை கார்த்திக்கையும், அவன் பிரெண்ட்டையும் வீட்டிற்கு கூட்டிட்டு வா என்றுச் சொல்லிட்டு இருக்கிறேன். அதையும் காதில் வாங்கிறதில்லை. நீ மட்டுமில்லை நாங்களும் பழகினால் தானே..! எங்களும் ஒரு அன்டர்ஸ்டென்டிங் வரும்..” என்றார்.
மீண்டும் தனது பாட்டியிடம் சென்ற மீரா “நான் சொல்லிட்டேன்.. ஆனால் அவங்க தான் வரலை..” என்றாள்.
அதற்கு பரிமளம் “சங்கோஜமாக இருக்கலாம். நீ சரியா கேட்டிருக்க மாட்டே..! கார்த்திக்கோட பிரெண்ட்டை நான் பார்க்கவே இல்லை. வேற நாட்டில் இருக்கிற நாம்.. தமிழ் பேசுவதால் ஒன்றுத்தானே..!” என்றார்.
மீரா தனது செல்பேசியை எடுத்து கார்த்திக்கிற்கு அழைப்பு விடுத்தாள். பரிமளத்தின் கையில் கொடுத்து “நான் கூப்பிட்டா ரொம்ப பிகு செய்யறாங்க..! நீங்களே கூப்பிடுங்க..” என்றுவிட்டு அவருக்கு அருகே அமர்ந்தாள்.
ஹம் நகரின் வீதியில் நடந்தவாறே ஆதித்யாவுடன் பேசிக் கொண்டிருந்த கார்த்திக் செல்பேசி அழைக்கவும், எடுத்துப் பேசினான். பரிமளம் வசதிப்பட்ட நாளில் வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.
பெரியவரே அழைக்கவும், கார்த்திக் “இப்பவே வருகிறோம் பாட்டி..” என்றான்.
அதற்கு பரிமளம் “இல்லை! இப்போ ஜாலியா சுற்றிப் பார்த்துட்டு இருப்பீங்க..! எப்பவாவது டைம் கிடைத்தால் வந்தால் போதும்.” என்றார். அதற்குள் அருகில் அமர்ந்திருந்த மீரா மெல்லிய குரலில் “அவங்க தான் வரேன்னு சொல்கிறாங்களே, ஏன் பாட்டி தடுக்கறீங்க.. வரட்டும்.” என்றாள்.
கார்த்திக் “சும்மா தான் பேசிட்டு நடந்துட்டு இருக்கிறோம். மீரா வராமல் எங்களுக்கும் போரடிக்குது. அங்கே இன்னும் கால்மணி நேரத்தில் இருப்போம்.” என்று செல்பேசியை அணைத்துவிட்டு ஆதித்யாவை பார்த்தான்.
அவனோ “ஒகே பை கார்த்தி! என்சாய்..” என்றுவிட்டு செல்ல திரும்பினான். அவனின் ஜெர்கின் காலாரை பிடித்து இழுத்து நிறுத்திய கார்த்திக் “உன்னைத்தான் முக்கியமா கூப்பிட்டாங்க..! அன்னைக்கு உன் கூடப் பேசலையாம்..” என்றான்.
அதற்கு ஆதித்யா “அந்த பாட்டி கூட நான் என்ன பேச…? எனக்கு உன் கூடவே சரியா பேச தெரியாது. அன்னைக்கு நான் பேச தெரியாமல் பேசிட்டேன்னு நீயும் சொன்னே தானே..! அதே மாதிரி அந்த பாட்டி கிட்ட எதாவது உளறி வைத்து விடப் போகிறேன். நான் வரலை..” என்றான்.
அதற்கு கார்த்திக் “நீ எல்லார் கிட்டயும் மட்டுமில்லாமல் உன் கிட்டயும் நெகட்டிவிட்டியை தேடாதே..! பாஸிட்டிவிட்டியை தேடு..! நீயும் நல்லதே நினை.. அப்பறம் பாரு.. நீ பழையபடி நன்றாக பேசுவாய்..” என்று நண்பனாய் அறிவுரை கூறினான்.
ஆதித்யாவிடம் இருந்து கசந்த சிரிப்பு ஒன்று வந்தது.
பின் “எனக்கு நல்லதைத் தேடக் கூடப் பிடிக்கலை..” என்றான்.
கார்த்திக் “அதற்கு நான் ஹெல்ப் செய்கிறேன் வா..” என்று மீரா வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
ஆனால் அவனுக்கு தெரியவில்லை.. இருண்ட நீளமான குகைக்குள் தன்னைத் தொலைத்துவிட்டு ஆதித்யா தன்னையே தேடிக் கொண்டிருக்கிறான் என்று..!
இருவரும் விரைவிலேயே மீராவின் வீட்டை அடைந்து விட்டனர். காரில் இருந்து இறங்கிய கார்த்திக்கிடம் ஆதித்யா “இப்போ நாம் எதற்கு இங்கே வந்திருக்கிறோம்?” என்றுக் கேட்டான்.
தெரிந்துக் கொண்டே இதென்ன கேள்வி என்பது போல் அவனைப் பார்த்த கார்த்திக் “பாட்டி நம்மை பார்க்கணும் என்றுச் சொல்லியிருக்கிறாங்க.. அதற்கு பாட்டியை பார்க்க வந்திருக்கிறோம்.” என்றான்.
நமட்டுச் சிரிப்புடன் கார்த்திக்கின் முகவாயைப் பற்றிய ஆதித்யா இருபக்கமும் திருப்பிப் பார்த்துவிட்டு “எந்த ஆன்கிளில் இருந்து பார்த்தாலும் லவ் செய்வதற்கான அடையாளமே உன் முகத்தில் தெரிய மாட்டேன்குதே..” என்றான்.
அதைக் கேட்ட கார்த்திக் பக்கென்று சிரித்துவிட்டான். “நான் என்னடா செய்வது, முதலிலாவது மீராவை பார்த்தால் அவளும் பார்ப்பாள்.. இரண்டு பேருக்கும் கொஞ்சம் சில்லென்று இருக்கும். இப்போ பார்த்தால்.. அவள் உன்னைத்தான் முறைச்சுட்டு இருக்கிறாள், எப்போ சண்டைப் போடுவீங்க என்றே தெரியலை. உங்க இரண்டு பேரையும் சமாதானம் செய்யவே சரியாக இருக்கு..! ப்ளீஸ் இரண்டு பேரும் சண்டைப் போடாமல் இருந்தால் நடுவில் நான் கொஞ்சம் லவ் செய்துப்பேன்.” என்றுச் சிரித்தவாறு அவனுடன் வீட்டினுள் சென்றான்.
முன்னறையிலேயே பரிமளம் அவர்களுக்காக காத்திருந்தார்.
கார்த்திக்கை வரவேற்றவர்.. அவனுக்கு பின்னால் வந்த ஆதித்யாவையும் அன்புடன் அழைத்தார். ஹரிஹரனும் தனலட்சுமியும் உள்ளே இருந்து வந்தார். ஹரிஹரன் “அம்மா இப்போதான் சொல்லிட்டு இருந்தாங்க, ஆனால் அம்மா கூப்பிட்டாங்க என்பதற்காக உடனே வருவீங்க என்று எதிர்பார்க்கலை. தேங்க்யு சோ மச்..!” என்று மகிழ்ச்சியைத் தெரிவித்தார். கார்த்திக் மாதவ்வை பற்றி விசாரிக்கவும்.. இங்கே அருகில் உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாட சென்றுவிட்டதாக கூறினார். பின் மீராவை கேட்டான்.
அதற்கு தனலட்சுமி “இங்கே தான் இருந்தாள், இன்னைக்கு எங்கேயும் வெளியே போகலையா என்றுக் கேட்டதிற்கு போகலை என்றுச் சொன்னாள். சரியென்று வீட்டை கிளின் செய்யலாம் என்று கூப்பிட்டால்.. காலையில் இருந்து ஒரு இடத்தையே துடைச்சுட்டு இருக்கிறாள், இவரும் நானுமே பாதி வீட்டைத் துடைத்து விட்டோம். இங்கேதான் இருந்தாள்.. இப்போ திடீரென்று காணாமல் போயிட்டா..” என்றவர், திரும்பி உள்ளே பார்த்து “மீரா..” என்று அழைத்தார். அவள் வந்தபாடியில்லை.
கார்த்திக் சிரித்தவாறு “விடுங்க ஆன்ட்டி! நேற்று தானே அவளைப் பார்த்தோம். நாம் இப்போ பேசலாம்.” என்றான்.
பரிமளம் கார்த்திக்கிடம் “அன்னைக்கு பிறகு உன்னை மறுபடியும் பார்க்கணும் போல.. இருந்தது, அதே மாதிரி உன் பிரெண்ட்டை நான் பார்க்கவேயில்லை. அதனால் தான் வரச் சொன்னேன்.” என்றவர், ஆதித்யாவை பற்றி விசாரித்தார். அவர் அன்பாக தான் பேசினார். ஆனால் அவனுக்கு தான் அவரின் பேச்சில் ஒன்ற முடியவில்லை. அவர் கேட்கும் கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். கார்த்திக்கிற்கு தன் நண்பனின் விருப்பமின்மை புரிந்துவிட்டது. சற்று முன் பேசியது போல் எடுத்தெறிந்து பேசி விடுவானோ என்று பயந்து ஆதித்யாவிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவன் பதிலளிக்க ஆரம்பித்தான். பின் பேச்சு ஆதித்யாவை பற்றியில் இருந்து கார்த்திக்கிற்கு மாறியது. ஆதித்யாவிற்கு அது நல்லதாகி போய் விட மெல்ல அங்கிருந்து எழுந்தான். வெளியே செல்லலாம் என்று நினைத்தவன், அது சரியாக இருக்காது என்று ஹாலில் மாட்டியிருந்த படங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அப்பொழுது பரிமளம் மீரா தான் அவரே பேசினால் இருவரும் வருவார்கள் என்றுப் பேச வைத்தாக கார்த்திக்கிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட ஆதித்யா உதட்டைக் கடித்துக் கொண்டான். இன்னும் அங்கேயே நின்றால்.. ஏதேனும் பேசி விடுவோம் என்று ஹாலுக்கு அடுத்த இருந்த அறைக்கு சென்றான். அங்கு ஒருபக்கம் இருந்து முணுமுணுப்பாய் சத்தம் வரவும், திரும்பிப் பார்த்தான்.
மீரா சுவற்றில் மாட்டியிருந்த படம் ஒன்றை துடைத்தபடி முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
“வயதில் பெரியவங்க கிட்ட உட்கார்ந்து பேச மாட்டானோ..! ரொம்ப தான் திமிர்..! என்னமோ இவனைப் பார்த்து நான் மயங்கிவிடுவேனாம், உருப்படியா சொல்லிக் கொள்கிறே மாதிரி ஒரு குணமும் இல்லை..” என்று முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பொழுது “எனக்கு திமிர் என்றால் உனக்கு என்ன கொழுப்பா..” என்றுக் கேட்ட குரலில் விதிர்த்து திரும்பினாள்.
“நீ கூப்பிட்டு நான் வரலை என்றதும் எதற்கு உன் பாட்டியை விட்டு கூப்பிட வைத்தே..?” என்றுச் சரியாக கணித்துக் கேட்டான்.
மீரா “பின்னே.. உன்கிட்ட இருந்து தப்பிக்க, வீட்டில் இருந்தால் என்னை வேலை செய்ய சொல்லிட்டாங்க, நான் இங்கே கஷ்டப்பட்டு வேலைச் செய்துட்டு இருக்கும் பொழுது நீங்க ஜாலியாக இருப்பதா என்றுத்தான்.. பாட்டியை விட்டு கூப்பிட்டேன்.” என்றுவிட்டு மெதப்பாக சொன்னாள்.
ஆதித்யாவின் விழிகள் கூர் பெற்றது, அவளுக்கு அருகே நெருங்கியவன்.. “அப்போ என்னைப் பற்றித்தான் நினைச்சுட்டு இருந்திருக்கே..?” என்றுக் கேட்கவும், மீரா எரிச்சலுடன் “ஏன் நினைச்சுட்டு இருந்தேன்னு சொல்லி மேட்டரையே மாற்றுகிறே.. திட்டிட்டு இருந்தேன்னு வேண்டுமென்றால் சொல்..” என்றாள்.
ஆதித்யா பற்களைக் கடித்தபடி “நான் மாற்றிப் பேசுகிறேனா..! நீதான் மாற்றுகிறே..!” என்றவன், பின் “தெரிந்து செய்கிறாயா..! தெரியாமல் செய்கிறாயா என்றுத்தான் தெரியவில்லை..” என்று உதட்டை இளக்காரமாக வளைத்துச் சிரித்தான்.
மீரா “நான் என்ன செய்தேன்..?” என்றுக் குழப்பத்துடன் கேட்டவள், தொடர்ந்து “ஓ..! நான் உன்னை பிளட்டரிங் செய்கிற மாதிரி தோன்றினால் நீ ஒரு முட்டாள்!” என்றாள்.
அதற்கு ஆதித்யா “யார் முட்டாள்! இல்லை யார் முட்டாள்கள் என்று சீக்கிரமே தெரிந்து விடும். அப்படி ஆக வேண்டாம் என்றுத்தான் நான் உன்கிட்ட எரிந்து விழுகிறேன்.” என்றான்.
அப்பொழுது “நீங்க இரண்டு பேரும் இங்கே தான் பேசிட்டு இருக்கீங்களா..!” என்று தனலட்சுமியின் குரலில் இருவரும் இயல்பாக நிற்பது போல் நின்றார்கள்.
“இருங்க.. குடிக்க சூப் எடுத்துட்டு வருகிறேன்.” என்று சமையலறைக்குள் சென்றார்.
தனலட்சுமி உள்ளே சென்றதும், மீரா “என்னமோ நடக்கப் போவதை நன்கு தெரிந்தவன் மாதிரி ரொம்ப பேசாதே..! என்னைப் பொருத்தவரை எனக்கு நிஜமாக ஒன்றும் புரியவில்லை.” என்றதும்.. கோபத்துடன் எதையோ சொல்ல வாயைத் திறந்தவன், அதை நிறுத்திவிட்டு “தெரியாமலேயே போகட்டும் என்றுத்தான் நான் விரும்புகிறேன். அதற்கு தான் நான் கிளம்புகிறேன் என்றுச் சொன்னால் என்னமோ என்கிட்ட சவால் விடுகிறே மாதிரி பேச்சு..” என்று முறைத்துவிட்டு திரும்புகையில் தனலட்சுமி கையில் சூப் நிரப்பிய கோப்பைகளைத் தாங்கிய தட்டுடன் வந்தாள். ஆதித்யாவிடம் ஒன்றை நீட்டவும், எடுத்துக் கொண்டவன், அவரோடு பேசியபடியே ஹாலுக்கு சென்றான். அவர்களின் பின் மீராவும் வந்தாள்.
அவளைப் பார்த்ததும் பரிமளம் “நான் கூப்பிட்ட தான் வருவாங்க என்று என்னைப் பேச சொன்னே.. அவங்களும் வந்திருக்கிறாங்க.. நீ டெய்லி பார்க்கிறவங்க தான் என்றாலும், வீட்டிற்கு வந்தவங்களை வாங்க என்றுக் கூப்பிடணும் தானே..” என்றுத் திட்டினார்.
அதைக் கேட்ட மீரா “பாட்டி! என்ன நீயும் வேற மாதிரி பேசுகிறே…! நீ வரச் சொல்லித் தானே நான் ஃபோன் போட்டு கொடுத்தேன்.” என்றாள். கார்த்திக் “வாவ் பாட்டியும் பேத்தியும் மாறி மாறி எங்களைப் பார்க்க ஆசைப்படறீங்க என்று நினைக்கும் போது சந்தோஷமாக தான் இருக்கு..” என்று அவர்களின் வாக்கு வாதத்தை முடித்து வைத்தான்.
தனக்கு சூப்பை எடுத்துக் கொண்டு அமர்ந்த மீராவிடம் தனலட்சுமி “பிளம்பருக்கு ஃபோன் போட்டியா..?” என்றுக் கேட்டார்.
மீரா “அச்சோ மறந்துட்டேன்.” என்று நாக்கை கடித்தாள்.
கார்த்திக் “ஏன் என்னாச்சு ஆன்ட்டி? எதாவது லிக்கேஜ்ஜா?” என்றுக் கேட்டான்.
தனலட்சுமி “ஆமா கார்த்தி..! பாத்ரூம் பைப்பில் கொஞ்சம் லீக் ஆகிறது. அதைச் சரி செய்யத்தான்..” என்றார்.
ஆதித்யா “வீட்டில் ஸ்டூல்ஸ் கிட் இருக்கா..?” என்றுக் கேட்டான்.
தனலட்சுமி “இருக்குப்பா..! அதை வைத்த இவங்களே சரிச் செய்கிறேன் என்ற பேர்வழிக்கு.. அக்காவும் தம்பியும் சேர்ந்து எதோ செய்து, ட்ரப்ஸா லீக் ஆகிட்டு இருந்ததை.. நன்றாகவே லீக் செய்ய வைச்சுட்டாங்க..” என்று அவர் பெற்ற மக்களை திட்டினார்.
ஆதித்யா “நான் சரிச் செய்கிறேன்..! எங்கே லீக்கேஜ்? என்று எழுந்தான்.
தனலட்சுமி “மீரா.. அவரைக் கூட்டிட்டு போய் காட்டு..” என்றார்.
ஆதித்யா மீரா இருவரும் அதைக் கேட்டு அதிர்ந்தனர்.
மீரா “நானா..!” என்று இழுத்தாள்.
அதைக் கேட்ட தனலட்சுமி “உன் ரூமில் தானே பிராப்பளம் அப்போ நீதானே போகணும். ஆதித்யாவை நிற்க வைச்சுட்டு இதென்ன கேள்வி! திஸ் இஸ் எ வெரி பேட் மேனர் மீரா..” என்றுக் கடிந்துக் கொள்ளவும், ஆதித்யாவை பார்த்தவாறு எழுந்தாள்.
ஆதித்யாவிற்கோ ஏன் செய்துத் தருகிறேன் என்று ஒத்துக் கொண்டேனோ என்று இருந்தது, பேசாமல் அமர்ந்து விடலாம் என்று நினைத்தான். ஆனால் ஒத்துக் கொண்டதால் வேறு வழியில்லாமல் பின்னே சென்றான்.
மீராவின் அறைக்கு செல்லும் வரை இருவரிடமும் பேச்சியில்லை. குளியலறையில் ஒழுகி கொண்டிருந்த குழாயை காட்டினாள். மீராவுடன் தனியாக வந்ததிற்கு முதலிலேயே எரிச்சலுடன் வந்த ஆதித்யா, மீரா குழாயை காட்டியதும், மூண்ட எரிச்சலில் “இதைச் செய்ய முடியாதா..” என்றான்.
சட்டென்று மூண்ட கோபத்துடன் “அதுதானே..! நானே செய்துக்கிறேன். நீங்க போகலாம்.” என்று அவனிடம் இருந்து ஸ்பெனரை வாங்கி.. திருகினாள். தவறுதலான பக்கத்தில் திருகவும், அதிகமாக கழன்று நீர் பிச்சியடித்தது. திடுமென நீர் பிச்சியடித்து அவள் மேல் பட்ட வேகத்தில் மீரா கத்தினாள். அவள் தவறுதலான பக்கத்தில் திருப்புவதைத் தடுக்காமல் நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா.. மீரா கத்தவும், அவளிடத்தில் இருந்து ஸ்பெனரை பிடுங்கி சரியான பக்கத்தில் திருப்பினான்.
மீரா அருகில் நின்றுக் கொண்டு முகத்தில் பட்ட நீரைத் துடைத்தவாறு “நான் எதாவது ஹெல்ப் செய்யட்டுமா..” என்றுக் கேட்டாள். இறுக்கமாக திருப்பிக் கொண்டிருந்த ஆதித்யா.. தன் கவனத்தை அதில் இருந்து திருப்பாது, “இங்கே இருந்து போ அது போதும்..” என்றுக் கடிந்தான்.
உடனே மீரா கோபத்தில் வெடுக்கென்று முகத்தைத் திருப்பி விட்டு குளியலறையில் இருந்து வெளியே சென்றாள். சிறிது அளவு நீர் கூட சொட்டு போடாதவாறு சரி செய்துவிட்டு ஆதித்யா வெளியே வந்த போது.. அவன் வெளியே செல்வதற்காக சாத்தியிருந்த கதவின் உள் தாழ்பாளைத் திறந்துவிட்ட மீரா, பின் ஈரமான கூந்தலைத் துவட்டினாள். அவளைப் பொருட்டாக எடுத்துக் கொள்ளாது வெளியே செல்ல முயன்றவனுக்கு ஏதோ ஒன்று மாறுதல் தெரியவும், திரும்பி நன்றாக அவளைப் பார்த்தான்.
அவனுடன் வரும்பொழுது வெள்ளை நிறத்தில் டீசர்ட் அணிந்திருந்தாள். தற்பொழுது ஊதா நிற டீசர்ட் அணிந்திருந்தாள்.
ஆதித்யா “இப்போ இங்கே ட்ரஸ் சேன்ஜ் செய்தியா..?” என்றுக் கேட்டான்.
என்ன கேள்வி இது என்பது போல் பார்த்த மீரா “ஆமாம்..! ஆனால் ஒரு பெண் கிட்ட என்ன கேட்கணும் என்ற மேனர்ஸ் கூடத் தெரியாதா..” என்று முறைத்தவாறுக் கேட்டாள்.
அதைக் கேட்ட ஆதித்யா “அடிச்சேன்று வை..” என்று கையை ஓங்கிக் கொண்டு வந்தான். தோளைக் குறுக்கிக் கொண்டு அவனைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து “ச்சே..” என்று உயர்த்திய கையை இறக்கியவன், “உனக்கு அறிவு என்பதே இல்லையா..! இல்லை தெரிந்து தான் செய்தியா..! பாத்ரூம் கதவைத் திறந்து வைச்சுட்டு நான் அங்கே இருக்கும் போது இங்கே கதவைச் சாத்திட்டு நீ ட்ரஸ் சேன்ஜ் செய்திருக்கிறே..! இதற்கு என்ன மீனிங்..” என்று கனலைக் கண்களில் கக்கியபடி கேட்டான்.
ஆதித்யா பேசியதைக் கேட்ட மீராவிற்கு திக்கென்று இருந்தது. அவன் குளியலறையில் இருக்கிறான் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் எந்த வித தயக்கமும் இல்லாமல்.. அவன் வருவதற்குள் உடை மாற்றி விட வேண்டும் என்று மட்டும் எவ்வாறு நினைத்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் ஆதித்யா அதைச் சுட்டிக்காட்டி தவறுதலாக அவள் மீது குற்றச்சாட்டு வைக்கவும், கொதித்தெழுந்தாள்.
“நிறுத்து..! எப்பவும் தப்பாக தான் நினைப்பியா..! நீ நினைக்கிற மாதிரி உன்னை மயக்குவதற்காக நான் இந்த மாதிரி செய்யலை. இதற்கு பேர் நம்பிக்கை! நீ வேலை செய்துட்டு இருந்தே.. நீ செய்து முடிப்பதற்குள் இந்த க்ளைமேட்டில் ஈர உடையுடன் நின்று உடம்பை கெடுத்துக் கொள்வதற்கு மாற்றி விடலாம் என்று ப்யுர் ஹார்ட்டுடன் நினைத்து செய்ததை இப்படித் தவறா நினைப்பேன்னு நினைச்சு பார்க்கலை.” என்று கோபத்தில் பெருமூச்சுகளை இழுத்துவிட்டவாறு பொருமினாள்.
அதைக் கேட்ட ஆதித்யா நெற்றியில் அறைந்துக் கொண்டான்.
பின் “இடியட்..! என் மேல் ஏன் இப்படியொரு நம்பிக்கை வந்தது என்றுத்தான் கேட்டேன். நீ என் மேல் நம்பிக்கையில்லாமல் பாத்ரூம் கதவை லாக் போட்டிருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பேன். ஏன் இதற்கு கோபப்படுகிறேன் என்றுக் கேட்காதே..! ஏனென்றால் இந்த நம்பிக்கை உனக்கு கார்த்திக்கின் மேல் இல்லை. அதனால் தான்.. என்னையும் கூடச் சேர்த்துட்டு ஊர் சுற்ற வருகிறே! அவனைத் தொட்டு பேச கூட நீ அலோவ் செய்யறதில்லை. ஆனால் என்கிட்ட நீ விலகின மாதிரி தெரியலை. என் மேல் நம்பிக்கை வைக்கிறேன்னு சொல்கிறே..! சொல்லு.. கார்த்திக்கின் லவ்வர்க்கு என்மேல் எதற்கு இத்தனை நம்பிக்கை, ஈர்ப்பு..” என்று கோபம் குறையாமல் கேட்க மீரா ஸ்தம்பித்து நின்றாள்.
ஆதித்யா தொடர்ந்து அவளுக்கே அறியாத அவளது உள்ளுணர்வு எண்ணங்களை வெளிச்சம் போட்டு காட்டினான்.
மாற்றானின் மங்கை என்று உன் மேல் வெறுப்பில்லை..!
மாற்றானின் மங்கையாக நீயில்லை என்று வெறுக்கிறேன்..!