All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தித்தித்திட செய்வாய்! - கதை திரி

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்..

இது முழுவதுமாக முதலிலேயே முடித்த கதை அதனால் இதன் யூடிகள் தவறாமல் வந்துவிடும்.

திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் இதன் யூடிகள் வரும்.

தித்தித்திட செய்வாய்- சாதாரண கதை தான்..

அவனது வாழ்வில் அவள் தித்தித்தாளா.. அவளது வாழ்வில் அவன் தித்தித்தானா படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி ☺️
 
Last edited:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தித்தித்திட செய்வாய்

அத்தியாயம் 1


"வித்யா! இது ரொம்ப தப்பு! உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்துட்டேனு நினைக்கிறேன். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க.. கிளம்பியாச்சுன்னு இப்போ தான் ஃபோன் போட்டாங்க. இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கே இருப்பாங்க! இங்கே உனக்கு நிச்சயதார்த்தம் நடக்க போகுது. இப்போ வந்து இந்த மாப்பிள்ளை பிடிக்கலைனு சொல்றே! உன்னைக் கேட்டு தானே முடிவு செய்தேன். அப்பறம் மீட் செய்யணும் என்றுச் சொன்னே! நீங்க இரண்டு பேரும் ஒரு மணி நேரத்துக்கு மேலே பேசி.. அப்பறம் பிடிச்சுருக்குனு சொன்ன பிறகு தானே.. இரண்டு பக்கமும் மேற்கொண்டு விசயமே பேசினோம். இன்னைக்கு நிச்சயதார்த்தம்.. இரண்டு மாசத்துல கல்யாணம் என்று முடிவு செய்தாச்சு! இப்போ வந்து இப்படிச் சொல்றே! நல்லா யோசிச்சுட்டு தான் பேசறீயா!" என்று வழக்கத்திற்கும் மாறாக கோபத்துடன் கணேஷன் கேட்டார்.

தனது தந்தையின் முகத்தை நேராக பார்த்த வித்யா "அப்போ பிடிச்சுது இப்போ பிடிக்கலைப்பா..!" என்றுத் தீர்மானமாக கூறினாள்.

கணேஷன் "என்னது பிடிக்கலையா! டபுள் டிகிரி.. ஒரு இலட்சம் சம்பளம், கண்ணுக்கு இலட்சணமா இருக்கான். நல்லா மரியாதையாகவும் பேசறான். மேரேஜ் முடிந்ததும் தனிக்குடித்தனம் என்று வேற சொல்லியிருக்காங்க! உங்க மேரேஜ் பிக்ஸ் ஆனதும்.. உனக்கு கிஃப்ட்ஸ் எல்லாம் அனுப்பி.. உன்னை ரொம்ப பிடிச்சுருக்குனு சொன்னான். இதுக்கு மேலே உனக்கு என்ன வேண்டும்?" என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

வித்யா "அதுதான் அவனுக்கு ரொம்ப தலைக்கனம் ஏறியிருக்கு! பெரிய ட்ரீல் மாஸ்டர் மாதிரி பிஹேவ் செய்யறான். என்னோட சாய்ஸ் மட்டுமில்லை என் வாய்ஸ் கூட அவன் கிட்ட எடுபட மாட்டேன்குது. செல்ஃப் ரெஸ்பெக்ட் இல்லாமல் அவன் கூட வாழ முடியாது அப்பா.." என்றுப் பிடிவாதத்துடன் கூறினாள்.

உடனே அவளது தாய் பானுமதி “சில விசயங்கள் ஆம்பிளைங்க தர மாட்டாங்க! நாமாள எடுத்துக்கணும் வித்யா! இதெல்லாம் கல்யாணம் ஆனா தானா தெரியும். எந்த விசயத்திலும் யோசிச்சு பேச மாட்டியா! நீ புடிச்சுருக்கு என்றுத் தலையாட்டியதுக்கு மட்டும் இந்த சம்பந்தத்தை உறுதி செய்யலை. நாலு பேர் கிட்ட நல்லா விசாரிச்சு தான் இந்த முடிவை எடுத்திருக்கோம். கண்டதையெல்லாம் தலையில் போட்டுக் குழப்பிக்காமல் ரெடியா இரு! எல்லாரும் அதைத் தான் விரும்பறாங்க.." என்றுக் கோபத்துடன் கூறினார்.

தனது அன்னையை தீர்க்கமாக பார்த்த வித்யா சுற்றிலும் பார்த்தாள். அவளைச் சுற்றி அவளது உறவினர்கள் நின்றுக் கொண்டு அவளைத் திகைப்புடனும் கோபத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அனைவரின் முகத்தில் இருந்த கண்டனத்தை பார்த்தால்.. அவளுக்கு இந்த நிச்சயதார்த்தத்தை நடத்தி வைக்கும் முடிவோடு தான் இருந்தார்கள்.

கணேஷனின் அருகில் நின்றிருந்த அவரது தமக்கை “கணேஷா! அவ கிட்ட போய் விளக்கம் கேட்டுட்டு இருக்கிறே! இது புருஷன் பொண்டாட்டி சண்டை பா! கல்யாணம் ஆன பிறகு அவ இப்படிச் சொன்னா.. சரித்தான் வாம்மா.. என்று வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விளக்கம் கேட்பியா என்ன! ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டா தானா சரியாகிரும் என்று விட்டுருவீங்க தானே! அந்த மாதிரி தான் இதுவும்! மேக்கப் கலையாம கண்ணைத் துடைச்சு அமைதியா உட்கார சொல்லு..” என்றார்.

உடனே வித்யா “அத்தை.. எது சின்ன விசயம் எது பெரிய விசயம் என்றுத் தெரியாத அளவிற்கு நான் ஒன்றும் சின்ன பிள்ளை இல்லை. நீங்க உங்க கருத்தை உங்களோடவே வச்சுக்கோங்க! என் அப்பாவிற்கும் சொல்லித் தராதீங்க..” என்றாள்.

உடனே அவளது அத்தை “என்ன வாய்! சொல்லப் போனா.. அந்த பையன் தான் இவளை வேண்டானு சொல்லணும் போல..” என்றார்.

உடனே கணேஷன் “என்ன அக்கா நீயும் அவளுக்கு சரிக்கு சரிமாக பேசிட்டு..” என்றுக் கடிந்தான்.

அவருக்கு அருகில் நின்றிருந்த கணேஷின் தம்பி “அக்கா சொல்றது சரிதான் கணேஷா! இப்போ இருக்கிற பிள்ளைங்க.. சினிமா.. கதை புக் எல்லாம் படிச்சு.. இந்த மாதிரி.. ஹீரோ தான்.. ஹஸ்பென்ட்டா வரணும் என்று பல கற்பனை கோட்டையை கட்டி வச்சறாங்க! அதே மாதிரி ஜெராக்ஸ் காப்பி எடுத்தது மாதிரி.. மாப்பிள்ளை வரலைன்னா..! என்ன எது என்று யோசிக்காமல் இப்படி முடிவை எடுத்துருவாங்க! நீ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே! பங்ஷன் நல்லபடியா முடிக்கிற வேலையைப் பார்ப்போம். என்கேஜ்மென்ட் முடிஞ்சுட்டா.. பத்திரிக்கை, ஜவுளி எடுக்கிறது, மண்டபம், கேட்டரிங் என்று லைன்னா தலைக்கு மேலே வேலை இருக்கும். அதுக்கு முதல்ல உடம்பைப் பார்த்துக்கோங்க..” என்றார்.

அனைவரும் கிட்டத்தட்ட இந்த சம்பந்தத்தில் உறுதியாக இருப்பதைப் பார்த்த வித்யாவிற்கு மீண்டும் கண்ணீர் கரித்துக் கொண்டு வந்தது. வித்யா “என்ன சித்தப்பா! என்னை இவ்வளவு மட்டமாக எடைப் போட்டுட்டிங்க?” என்று ஆதங்கத்துடன் கூறியவள், தனது உறவினர்களைப் பார்த்தாள்.

அவளது மனதைப் பற்றிக் கவலைப்படாமல்.. அனைவரும் பேசவும், எனக்காக யாரும் யோசிக்க மாட்டிங்களா.. என்பது போல் தனது பெற்றோரை பார்த்தாள். ஆசையாக பெற்று வளர்த்த ஒரே மகள் அல்லவா! அவர்களால் அந்த பார்வையை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எனவே கணேஷன் “இத்தனைப் பேர் சொல்றாங்களே கேளு வித்யா! எல்லாம் சரியா போயிரும்டா..” என்றார்.

வித்யா “இல்லைப்பா! எனக்கு பிடிக்கலை.” என்றுப் பிடிவாதமாக கூறினாள்.

பானுமதி “அவங்க கிட்டப் போய்.. இந்த காரணத்தை எல்லாம் சொல்ல முடியாதுமா..” என்று மீண்டும் கூறிப் பார்த்தார்.

உடனே அந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டாள்.

“அம்மா! அப்போ வேற ரிஷன் சொல்லி.. இந்த மேரேஜ்ஜை நிறுத்திரலாமா..” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

தனது வாயில் இருந்தே வார்த்தையைப் பிடுங்கிய மகளைப் பார்த்த பானுமதி கோபத்துடன் “உருப்படியா.. வேற என்ன காரணம் சொல்லப் போறே?” என்றுக் கேட்டார்.

கணேஷனின் அக்கா தற்பொழுது பானுமதியை அதட்டினார்.

“பானு! அவள் தான் ஏதோ பேசறா என்றால்.. நீயும் அதுக்கு எடுத்துக் கொடுக்கிறே! எல்லாரும் செல்லம் கொடுத்துக் கெடுத்துட்டு இப்போ வந்து புலம்புங்க..! என்னமோ பண்ணுங்க..” என்றுவிட்டு அங்கிருந்து அகன்றார்.

கணேஷனும் மனைவியை முறைத்தார். அதற்கு பானுமதி “அமைதியா அவளை யோசிக்க விடுங்க! யோசிச்சா சரியான முடிவை எடுப்பாள்.” என்று மெதுவாக கணவனை சமாதானப்படுத்தினாள்.

ஆனால் அங்கு வித்யாவின் மனது வேறு காரணத்தை தேடிக் கொண்டிருந்தது.

‘அன்னை சொல்வதும் சரித்தான்.. திடுமென மாப்பிள்ளை பிடிக்கலை. அவன் தலைக்கனம் பிடிச்சவனா இருக்கிறான் என்றுச் சொன்னா.. அவங்க பையனை அவங்க விட்டுத் தர மாட்டாங்க! அவள் மேலேயும் அவளோட பேரெண்ட்ஸ் மேலேயும் குற்றம் சொல்லி.. எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்குவாங்க! அவள் இன்னொருவனை காதலிக்கிறாள் என்றுக் கூறினாலும்.. அப்போ எதுக்கு முதல்ல.. ஒகே சொன்னீங்க என்று அவள் மேலே இன்னும் மோசமான பழியை போடுவாங்க. பையன் சரியில்லைனு பிளன்க் கால் வந்தது என்றுச் சொன்னால் என்ன என்றுத் தோன்றியது. ஆனால் தோன்றிய வேகத்தில் மறைந்தது. அவ்வாறு சொன்னால்.. அதையெல்லாம் நம்பாதே! பையன் தங்கமான பையன் என்று பத்து பேர் சாட்சி கூற வருவாங்க! முதலிலேயே தலைக்கிறுக்கு ஏறிப் போன அவனுக்கு.. பத்து பேர் புகழ்ந்தால் அவ்வளவு தான்..! பின்னே என்ன காரணம் கூறுவது..’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் பார்வையில் அங்கு ஓரமாய் நின்றிருந்த செந்தில்குமாரன் விழுந்தான். உடனே வித்யாவின் விழிகள் பளீச்சிட்டது. அன்று பெண் பார்க்க வந்த போது.. நடந்த சம்பவம் அவளது நினைவிற்கு வந்தது. உடனே அவளுக்கு ஒரு வழியும் கிடைத்தது.

ஒரு வாரத்திற்கு முன் மாடிக்கு செல்லும் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு.. ஃபோட்டோவில் பார்த்த பையன் நேரில் பார்க்க எப்படியிருப்பான்? நல்லா பேசுவானா? எனக்கு பிடித்த மாதிரி இருப்பானா? என்றுப் பல்வேறு கேள்விகளுடன் சிறு இதமான பதட்டத்துடன் இருந்தாள். அப்பொழுது அவளது அன்னை கையில் செல்பேசியுடன் வந்தார்.

“வித்யா! என் அண்ணன் குடும்பத்தோட வந்துட்டு இருக்கிறாங்க..! இங்கே வர வழி கேட்கிறாங்க சொல்லிரு! எனக்கு வேற வேலை இருக்கு.. பொண்ணு பார்க்க வரவங்களுக்கு விரிக்க என்று என்று கம்பளம் ஒன்று நேற்றே எடுத்து வைத்தேன். ஆனா அதுல நடுவில் பெரிசா கிழிச்சிருக்கு! பரண் மேலே இருந்து வேற எடுத்து புழுதி தட்டணும்.” என்றுவிட்டு அகன்றார்.

செல்பேசியில் காதில் வைத்த வித்யா “மாமா! இப்போ எங்கே இருக்கீங்க?” என்றுக் கேட்டாள்.

அந்த பக்கம் “நான் செந்தில்குமாரன், அவரோட பையன் பேசறேன். இப்போ ஆர்.எஸ்.புரம் போஸ்ட் ஆபிஸிற்கு கிட்ட இருக்கிறோம்.” என்று அந்த குரல் கூறியது..

அவளை திருமணம் புரிய.. ஒருவன் வரப் போகிறான் என்ற துள்ளலான மனநிலையில் இருந்தவள், அவளது வீட்டு விஷேஷத்திற்காக தொலைவில் இருந்து முகம் அறியா சொந்தங்கள் வருவது மேலும்.. அவளது துள்ளலை அதிகப்படுத்தியிருந்தது.

எனவே தனது சொந்தங்களுடன் விளையாட எண்ணினாள்.

அதே மாறாத துள்ளலுடன் “இரண்டாவது ரைட் கட்டில் திரும்பினா அங்கே அகர்வால் ஸ்வீட் கடை இருக்கும். அதுல.. எனக்கு ஸ்வீட்ஸ், முறுக்கு வாங்கிட்டு.. அப்படியே மெயின் ரோட்டில் வந்தா.. அங்கு ட்ரென்ட்ஸ் ஷாப் இருக்கும். அங்கே எனக்கு நல்ல காஸ்ட்லியான அனார்கலி சுடி எடுத்துட்டு, அப்படியே வந்தீங்கன்னா.. பிளட்பாரத்தில் பூ விற்றுட்டு நிற்கிறவங்களைப் பார்க்கலாம். அவங்க கிட்ட.. நாலு மூலம் மல்லிகைப்பூ வாங்கிட்டு.. திரும்பி போஸ்ட் ஆபிஸ் கிட்ட வாங்க! போஸ்ட் ஆபிஸிற்கு லெப்ட்டில் இருக்கிற கட் ரோட்டில் ஸ்ட்ரைட்டா வந்தா பர்ஸ்ட் ரைட் கட்டில் நான்காவது வீடு தான் எங்க வீடு..” என்றாள்.

அந்த பக்கம் சத்தமில்லாது போனாலும் சிரிப்பை அடக்குவதால்.. மூச்சு பலமாக இழுத்து விடும் சத்தத்தில் என்று அவனும் சிரிக்கிறான் அவளால் உணர முடிந்தது. எனவே அவளும் கலகலவென சிரித்தாள்.

செந்தில்குமாரன் “மாமா உன்னை எனக்கு கட்டிக் கொடுப்பாரா என்றுக் கேட்டு சொல்..! கண்டிப்பா வாங்கிட்டு வரேன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

விஷேஷ காலங்களில் இயல்பாக உறவினர்களிடம் நடக்கும் கேலி, கிண்டல், உரிமை கலந்த கலகலப்பு பேச்சு இது! சிறிது நேரத்தில் அவர்கள் வந்த போது.. பானுமதி கூட்டிவந்து அறிமுகப்படுத்தினார். ஓ அப்படியா என்பதைத் தவிர அவள் சரியாக பார்க்கவில்லை. அந்த செந்தில்குமாரனும் சற்றுமுன் பேசிய கேலிப் பேச்சை மீண்டும் சொல்லிக் காட்டவில்லை. அமைதியாக அவனது பெற்றோரின் பின் நின்றுக் கொண்டான். விஷேஷம் முடிந்து.. கிளம்பும் போது.. சொல்ல வந்த போதும் சரி! அவளது வீட்டிற்கு வந்த உறவினர்களில் ஒருவர்.. அவ்வளவே! எனவே இன்முகத்துடன் வழியனுப்பினாள்.

அன்று மாலையே வித்யா மாப்பிள்ளை பையனுடன் அங்கிருந்த காமாட்சி அம்மன் கோவிலில்.. ஒரு மணி நேரம் பேசினாள். அடுத்த இரண்டு நாளில்.. அவன் வித்யாவிற்கு பரிசு பொருட்களை அனுப்பி தனது விருப்பத்தைக் கூறினான். அடுத்த வாரமே நிச்சயதார்த்தம் குறிக்கப்பட்டது. ஆனால் இந்த ஒரு வாரத்தில்.. அடிக்கடி சந்திந்து பேசிக் கொண்டது.. ஃபோனில் அரட்டை அடித்ததிலேயே மாப்பிள்ளை பையனின் குணங்கள் வித்யாவிற்கு பிடிக்காமல் போய் விட்டது. எனவே திருமணத்தை நிறுத்த வழியைத் தேடிக் கொண்டிருந்தவளுக்கு செந்தில்குமார் கண்ணில் பட்டான்.


எனவே தன் தந்தையிடம் திரும்பி.. "அப்பா! செந்தில் மாமா என்னைக் கட்டிக்கிற முறை மாமா தானே! அவரும் பொண்ணு கேட்டு வந்திருக்கிறார் என்றுச் சொல்லிருங்க! அம்மா ஊரில் எல்லாம் முறை மாமானுக்கு தானே பர்ஸ்ட் கேட்பாங்க! அப்பறம் தானே.. வேற பக்கம் வரன் தேடுவாங்க! அதனால் அவங்களே வந்து கேட்டாங்கனு சொல்லிருங்க! ஆக்சுவலா செந்தில் மாமா தான் முதலில் என்கிட்ட கேட்டாங்க!” என்று அன்று நடந்த கேலிப் பேச்சை கூறினாள்.

பின் வித்யா “எனக்கும் பிடிச்சுருக்குனு சொல்லிருங்க! நான் செந்தில் மாமாவையே மேரேஜ் செய்துக்கிறேன்." என்று விழாவிற்கு பங்கு கொள்ள வந்தவன் மீது மொத்த பழியையும் திருப்பி விடுகிறோம் என்று அறியாது கூறினாள்.

வித்யா கூறியதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தார்கள்.

பானுமதி "யாரு என் பெரியப்பா பேரனா.." என்றுத் திகைப்புடன் கேட்டார்.

அதற்கு ஆம் என்று தலையை ஆட்டிய வித்யா “நான் செந்தில் மாமாவையே கட்டிக்கிறேன். எனக்கு அந்த பீட்டர் விடுர பையன் வேண்டாம்.” என்று முகத்தை பிடிவாதமாக வைத்துக் கொண்டாள்.

கணேஷன் “இப்போ திடீர்னு இந்த காரணத்தைச் சொன்னால் மட்டும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நம்ம மானத்தை வாங்காம சரினு போயிருவாங்களா..! புரியாம பேசாதே வித்யா!” என்றார்.

வித்யா “சரி! இந்த காரணத்தைச் சொல்ல வேண்டாம்! ஆனா.. இந்த மாதிரி என்கேஜ்மென்ட் பங்ஷன் எனக்கு வேண்டாம். ஒரு முறை பட்டது போதும். வேற எந்த மாப்பிள்ளைக்கும் ஒத்துக்க மாட்டேன். என்னால் ஒவ்வொருத்தனையா பார்த்து பிடிச்சுருக்கு பிடிக்கலைனு எல்லாம் சொல்ல முடியாது.” என்று கோபத்தில் கண்ணீர் பெருக கூறினாள்.

பெற்றவர்கள் இருவருக்கும் திக்கென்று இருந்தது. வித்யா கொஞ்சம் சென்ஸ்ட்டிவ்வான பெண்..! அவள் கோபத்தில் இவ்வாறு கூறினாலும்.. அவளது குணத்தை அறிந்த அவளது பெற்றோர்களுக்கு அதில் இருந்த உண்மை திடுக்கிட வைத்தது. தற்பொழுது திருமணம் நின்றுப் போனால்.. பிறகு அவள் மற்றொரு திருமணத்தைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க மாட்டாள். தோல்வி ஏற்படும் என்றுத் தோன்றும் எந்த விசயத்திலும் அவள் இறங்க மாட்டாள். அதற்கு இந்த மாப்பிள்ளையை மறுத்ததே உதாரணம்!

எனவே செய்வதறியாது திகைத்தார்கள்.

பின் கணேஷன் “செந்திலை கல்யாணம் செய்துக்க உனக்கு நிஜமாவே ஒகேவா..” என்றுக் கேட்டார்.

அதற்கு அவள் சம்மதமாய் தலையை ஆட்டினாள்.

பின் கணேஷன் தனது மனைவியை பார்த்தார்.

பானுமதி சிறிது தயக்கத்துடன் “நல்ல பையன் தான்! அவனுக்கும் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கிறாங்க! நான் கூட உங்க சொந்தத்தில் இரண்டு மூன்று பெண்கள் ஜாதகம் கொடுத்தேனே! ஆனா ஜாதகம் செட் ஆகலை.” என்று மெல்லிய குரலில் கூறியவர், பின் தொடர்ந்து “ஆனா நம்ம பொண்ணுக்கும்.. அவனுக்கு ஜாதகப் பொருத்தம் எப்படினு தெரியலை. அது பார்க்கணுமே..” என்றார்.

அதற்கு கணேஷன் “வித்யா வாயாலேயே செந்திலை கட்டிக்கிறேன் என்று ஒப்பனா சொன்ன பிறகு.. ஜாதகம் பார்க்கிறது.. எதாவது சங்கடத்தை ஏற்படுத்தும்.” என்று பெருமூச்சை இழுத்துவிட்டார்.

சற்று தொலைவில் அவனது தந்தையுடன் பவ்வியமாக அமர்ந்திருந்திருந்த செந்தில்குமரனை பார்த்தார். செந்திலை தனது மனைவியின் சொந்தம் என்ற பெயரில் எப்பவாவது பானுமதி சொந்தத்தில நடைப்பெறும் விஷேஷங்களில் பார்த்திருக்கிறார். அவர்களைப் பார்த்ததும் மரியாதையாக வந்து இரு நிமிடங்கள் பேசி நலம் விசாரித்து விட்டுத் தான் போவான். அவனது குடும்பம் பொருத்தவரை.. பெரிதாக அவருக்கு அபிப்பிரயாம் இல்லை. சம்பிரதாயத்திற்கு பேசுவார்கள். ஆனால் முகம் கோணித்தது இல்லை. அவர்களின் மீது மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணமும் உண்டு.

பானுமதிக்கு சொந்தமான தென்னந் தோப்பை குத்ததைக்கு எடுத்து அவர்கள் தான் பார்த்துக் கொள்கிறார்கள். இரு மாதத்திற்கு ஒரு முறை வரவு செலவு கணக்குடன் செக்காக பானுமதிக்கு கொரியர் வந்துவிடும். அதில் எவ்வித முறைக்கேடும் நடக்காது.

மற்றபடி பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி.. அந்த குடும்பத்தில் எதுவும் இல்லை. நன்றாக வாழ்ந்து கெட்ட குடும்பம்! அவர்களுக்கு சொந்தமான நிலப்புலன்கள் கடனில் மூழ்கிவிட்டது. தற்பொழுது பானுமதியின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பார்த்துக் கொள்வதோடு.. ஒரு மளிகை கடை வைத்து நடத்துக்கிறார்கள். செந்தில்குமரனுக்கு ஒரு அண்ணன் உண்டு. அவனுக்கு திருமணம் முடிந்து இரு பிள்ளைகளும் உண்டு. அவர்களை அவர் எங்கும் பார்த்ததில்லை. இந்த விஷேஷத்திற்கு கூட வரவில்லை. பானுமதி செந்தில்குமரனின் தாய் தங்கத்திடம் ஏன் பெரிய மகன் வரவில்லை என்று விசாரித்த பொழுது.. பேரப்பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை என்று வரவில்லை எனக் காரணம் கூறியது நினைவிற்கு வந்தது. பின் செந்தில்குமரனுக்கு ஒரு தங்கையும் உண்டு. அவளுக்கும் வரன் பார்த்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறான். மொத்தத்தில் அவர்களை விட அனைத்து விசயங்களிலும் சற்று கீழ் இருக்கும் குடும்பம் தான்! அதனால் பொண்ணை கொடுத்துவிட்டு கூழை கும்பிடு போட வேண்டிய அவசியம் இல்லை. எப்பொழுது வேண்டுமென்றாலும் வித்யாவை பார்க்க செல்லலாம். அவளும் இங்கே வரலாம். நன்மை தட்டு தாழவும்.. கணேஷனுக்கு சம்மதமாக இருந்தது. ஆனால் அவருக்கு இன்னொரு சந்தேகமும் இருந்தது.

கணேஷன் தாழ்ந்த குரலில் "வித்யா! அவன் எல்லா விசயத்திலும் உன்னை விட தாழ்ந்தவன்டா.." என்றுக் கூறினார்.

அதைக் கேட்ட பானுமதிக்கு சிறிது கடுப்பானாலும்.. அது உண்மை என்பதால் அமைதியாக இருந்தார்.

செந்தில்குமாரன்.. பன்னிரெண்டாவது வகுப்பு வரையே படித்திருக்கிறான். வயதும் இருபத்தியொன்பது ஆகிறது. வித்யாவிற்கு இருபத்திநான்கு தான் ஆகிற்று. செந்தில்குமரனுக்கு வேலை என்று ஒன்றும் இல்லை. மளிகை கடையையும், தென்னந்தோப்பையும் தான் பார்த்துக் கொள்கிறான்.

பானுமதியின் சொந்த ஊர் கோவையின் மேற்கு பகுதியில் மேற்கு மண்டல தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள தொண்டாமூத்தூர் தான் அவரது ஊர்! தோட்டமும் வயலுமாக முதலில் காட்சியளித்த அந்த ஊர் தற்பொழுது.. நவீனமாகி நகரமாக காட்சியளிக்கிறது. ஆனாலும் அதன் சுற்றியுள்ள இயற்கைகளை யாரும் அழிக்க முடியாது.

பானுமதியின் தந்தைக்கு இரண்டும் மகள்கள்.. பானுமதியும்.. அவளது தங்கையும் தான்! எனவே அவர்களுக்கு மாமன் சீர் போன்றவை.. அவளது பெரியப்பா மகன் செய்தார். வித்யாவிற்கு கூட தாய்மாமன் முறை செய்தார். அதனால் அந்த குடும்பத்துடன் அவர்களுக்கு பிணைப்பு இருந்தது. ஆனால் நாளடைவில்.. அக்குடும்பம் நலிந்ததும் சொந்தம்.. மற்றும் குத்தகை பணம் தருவது என்றளவில் மட்டும் பிணைப்பு இருந்தது.

அவ்வாறு தான்.. தனது இரண்டாவது மகனுக்கும், மகளுக்கும் வரன் பார்த்து தர வேண்டும் யாருக்கு முதலில் அமைகிறதோ.. முடித்துவிடலாம்.. என்று பானுமதியின் அண்ணி தங்கம் செந்தில்குமரன் மற்றும் அவனின் தங்கை வளர்மதியின் ஜாதகத்தை கொடுத்தார். கண்டிப்பா செந்திலுக்கு வித்யாவை மறைமுகமாக கேட்டுத் தான் கொடுத்திருக்கிறார் என்று பானுமதிக்கு தெரிந்தது. ஆனால் பானுமதி தனது மகளுக்கு கொடுக்க விருப்பமில்லாமல் தனக்கு தெரிந்தவரிடம் சொல்லி வைத்து வரன் தேடினார். ஆனால் என்ன தான் சொந்தமாக இருந்தாலும் தற்பொழுது தனது மகளுக்கே செந்தில்குமரன் மாப்பிள்ளையாக வரப் போகிறான் என்பதை அவரால் நம்ப முடியவில்லை.

கணவர் மீண்டும் மகளிடம் விருப்பத்தைப் பற்றிக் கேட்கவும், வித்யா என்ன பதில் சொல்லப் போகிறாள் என்றுப் பார்த்தார்.

கணேஷன் கேட்டதும், வித்யா தனது கண்களை துடைத்தவாறு "அதுக்கு தான்.. செந்தில் மாமாவையே மேரேஜ் செய்துக்கிறேனு சொல்றேன்." என்று அவர்கள் இருவரின் மகள் என்பதை அச்சுபிசகாமல் நிரூபித்தாள்.

கணேஷன் சிறு பெருமூச்சுடன் மனைவியைப் பார்க்கவும், அவர் சம்மதமாக தலையை ஆட்டினாள். கணேஷனின் சொந்தங்களோ.. அதிர்ச்சியுடன் நின்றுவிட்டார்கள். கடைசியில் பானுமதி தனது சொந்தத்திற்குள்ளவே மாப்பிள்ளையை பார்த்து.. இன்னும் குடும்பத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாள்.. என்று முணுமுணுத்தார்கள்.

இவ்வாறு பேச்சு நடப்பது அறியாது.. செந்தில்குமரன் அங்கிருந்த மற்ற பெரியவர்களுடன் ஏன் வித்யா திடுமென இந்த நிச்சயதார்த்தம் வேண்டாம் என்றுக் கூறுகிறாள் என்று வருத்தத்துடன் பேசிக் கொண்டிருந்தான்.

கணேஷனும் பானுமதியும்.. அவர்களிடம் சென்றார்கள். மாமா மற்றும் அத்தையை பார்த்தும்.. மரியாதை நிமித்தமாக செந்தில்குமரன் எழுந்து நின்றுவிடவும், அந்த நாற்காலியில் அமர்ந்த கணேஷன் நேரடியாக விசயத்திற்கு வந்தார்.

“வித்யாவிற்கு அந்த மாப்பிள்ளையை பிடிக்கலைனு சொல்றாள். காரணம் கேட்டோம். ஃபோனில் எல்லாம் பேசியிருக்காங்க தானே! அப்படி அவன் பேசியதில் இருந்தே வித்யாவுக்கு அவனைப் பிடிக்கலை. ஒத்துப் போகலைனு சொல்றதை கேட்காம நம்ம வீம்பிற்கு அவனுக்கே கல்யாணம் கட்டி வச்சா அவள் வாழ்க்கை வீண் போயிரும் என்று நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கறீங்க..” என்று செந்தில்குமரனின் தந்தை கந்தசாமியிடம் கேட்டார்.

தங்களைப் பார்த்தால் ஒரு சிரிப்புடன் தலையசைப்போடு.. செல்லும் கணேஷன் வலிய வந்து பேசி.. அவர்களிடம் அபிப்பிராயம் கேட்பது கந்தசாமிக்கு ஆச்சரியமாக இருந்தது. எனவே அவர் கேட்டதிற்கு “உண்மைத்தானுங்கோ..” என்றார்.

கணேஷன் தொடர்ந்து “ஆனா! இப்படி சட்டுனு நடக்க இருக்கிற என்கேஜ்மென்ட்டை நிறுத்துவது என்பது ரொம்ப கடினமான விசயம்! அவங்க மண்டபத்திற்கு வரதுக்குள்ள.. இந்த என்கேஜ்மென்ட் நடக்காதுனு சொல்லி தடுக்கணும். இங்கே வந்துட்டா.. அவங்களுக்கும் அவமானம் நம்மளுக்கும் அவமானம்..” என்றார்.

கந்தசாமி “சரிதானுங்க மாப்பிள்ளை..” என்றார்.

கணேஷன் “அவங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாம இந்த விசயத்தில் இருந்து கழன்றுக்கணும்.” என்றார்.

அதற்கும் ஆமாங்க என்றுச் சொல்ல வாயைத் திறந்த கந்தசாமியின் தோளில் மெதுவாக கையை வைத்து செந்தில் தடுத்தான்.

கணேஷன் “அதுதான் ஒரு முடிவு தோணுச்சு! அதுல செந்திலுக்கும் விருப்பம் தான் என்று நினைக்கிறேன். நம்ம செந்திலுக்கு வித்யாவை கட்டிக் கொடுக்கலானு இருக்கேன். செந்திலை நம்பி என் பொண்ணை தாராளமாக தரலாம். அவனைப் பற்றி எனக்கு தெரியும். இதுல உங்களுக்கும் விருப்பம் என்றால்.. இப்பவே நிச்சயம் செய்துக்கலாம். என்ன சொல்றீங்க..” என்றுக் கேட்டார்.

கந்தசாமியும் தங்கமும் வாயடைத்துப் போனவர்களாய் கணேஷனை பார்த்தார்கள்.

தற்பொழுது பானுமதி “செந்தில்.. முறை மாமன் தானே அண்ணா! சொல்லப் போனால் முதலில் உங்க கிட்டக் கேட்டுட்டு தான்.. நான் வெளியே பார்த்திருக்கணும். ஆனா அண்ணி செந்தில் ஜாதகத்தை கொடுத்து.. வேற வரன் பார்க்க சொன்னதால் உங்க மனசுல அந்த அபிப்பிராயம் இல்லையோனு வித்யாவிற்கு வேற இடம் பார்த்தோம். இப்போ தெய்வாதீனமாக தானா செந்திலுக்கு வித்யா தான் என்று முடிவாகிருச்சு! வித்யாவிடம் கேட்டுட்டோம். அவளுக்கு செந்திலை மணக்க சம்மதம் தான்! மறுக்கிறதுக்கும் காரணம் இல்லையே! செந்தில் தங்கமான பையன்..” என்று பற்கள் அனைத்தையும் காட்டினார்.

கந்தசாமி வாயைத் திறக்க போகையில் அவரது தோளில் கரத்தை வைத்து அழுத்திய செந்தில் “மாமா! தப்பா நெனைச்சுக்காதீங்க! நாங்க கிராமத்துல வளர்ந்தவங்க.. இப்படி ஒப்பனா பேச மாட்டோம். அதனால் தான் என்கிட்ட சம்மதம் கேட்க தயங்குகிறாங்க..! நாங்க கொஞ்சம் தனியா பேசிட்டு வரோம் மாமா, அத்தை..” என்றுவிட்டு தனது தந்தையிடம் “அப்பா அந்த பக்கம் போகலாம் வாங்க..” என்று அழைத்தான். கந்தசாமியும், தங்கமும் அவனோடு சென்றார்கள்.

கணேஷன் ‘என்னதிது’ என்பது போல் பானுமதியை பார்க்கவும், அவர் “செந்தில் சொல்வது சரிதான்ங்க! பேசிட்டு வரட்டும்.” என்றார்.

சிறிது நேரத்திலேயே மூவரும் வந்தார்கள். வந்ததும் காக்க வைத்ததிற்கு செந்தில் மன்னிப்பு கேட்டான்.

பின் கந்தசாமி “திடுதிடுப்புனு இப்படி ஆகுமினு நினைக்கலை. சரி விடுங்க! ஒருதரம் பொண்ணு சபைக்கு வந்துட்டா.. அந்த பொண்ணுக்கு அவமானம் தான்!” என்கவும், கணேஷனுக்கும் பானுமதிக்கு ஏதோ சரியில்லை என்றுத் தோன்றியது.

கந்தசாமி தொடர்ந்து “சந்தோஷமா இன்னைக்கே நிச்சயம் செய்திரலாம். ஃபோன் போட்டு.. என் பெரிய பையன் வடிவேலுவையும் மருமகளையும், கையோட என் மகளையும் கூட்டிட்டு வரச் சொல்லிடரேன். அடுத்த மூகூர்த்தத்திலேயே கல்யாணமும் வச்சரலாம். பெருசா நகை நட்டு எல்லாம் சொந்தத்துக்குள்ள பேச வேண்டாம். உங்க பொண்ணை என்னற மருமகளா ஏத்துக்கிறோம். உங்க மாப்பிள்ளைக்கு நீங்க குத்தகைக்கு விட்டிருக்கிற தென்னந்தோப்பை சொந்தமா எழுதி கொடுத்திருங்க! அம்புட்டு தான்..” என்றார்.


கணேஷனும் பானுமதியும் நாம் அவர்களை வளைத்தோமா.. இல்லை அவர்கள் தங்களை வளைத்தார்களா என்றுப் புரியாமல் விழித்தார்கள்.
 
Last edited:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2


கணேஷன் பானுமதியை பார்க்க.. அவரும்.. தன் கணவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

கந்தசாமி “பொண்ணை கொடுத்து, தோப்பையும் எழுதி கொடுத்து.. மாப்பிள்ளைக்கு கௌரவத்தை கொடுத்தாருனு ஊரு உங்களைத் தான் உயர்வா பேசறதோட மட்டுமில்லாம.. இன்னொரு கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டு.. எதுல குறையோ எங்கே குறையோ.. அந்த கல்யாணத்தை நிறுத்திட்டு.. முறைமாமனை வளைச்சு போட்டுட்டாங்க.. என்றுப் பேச்சும் அதுல அடிப்படும். அதுதான்ங்க சொல்றேன் மாப்பிள்ளை!” என்றார்.

தங்கம் “மத்தபடி.. பெற்ற ஒத்த புள்ளையை கட்டிக் கொடுத்துட்டோம். எப்படி வாழுதோ என்ற பயமெல்லாம் உங்களுக்கு வேண்டாவே வேண்டாம். அவள என் மக மாதிரி பார்த்துப்பேன். என்ற பத்தியும் உங்க அண்ணாரை பத்தியும் உனக்கு நல்லா தெரியும் தானே கொழுந்தியா! கத்தி கூடப் பேச மாட்டோம். சொத்து கித்து எல்லாம் இல்லாம போய் நின்னப்போ கூட.. எங்க கவுரதியை நாங்களே காப்பாத்திக்கிட்டோமே தவிர.. வேற யார் கிட்டயும் கையை ஏந்திட்டு நிற்கலை.” என்றுச் சொல்லிக் காட்டினார்.

கந்தசாமி “என்ற மகனை பத்தியும் நான் உங்க கிட்ட சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை. என்ற மகன் மேலே நம்பிக்கை இருக்கிறதாலே தான்.. உங்க பொண்ணை கொடுக்கிறேனு நீங்களே வலிய வந்திருக்கீங்க! அதனால எங்களுக்கு முழு சம்மதம்! என்ன சொல்றீங்க! என்ற பெரிய மகன் குடும்பத்தையும் எங்க ஊரு பெரியவங்களுக்கு நான் ஃபோனை போட்டு வரச் சொல்றேன். நீங்க.. அந்த பழைய மாப்பிள்ளை வீட்டாருக்கு ஃபோனை போட்டு வர வேண்டானு சொல்லறீங்களா..” என்றுக் கேட்டார்.

கணேஷன் சிறு மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு “ரொம்ப சந்தோஷம் மச்சான்! அப்படியே செய்திரலாம். ஊர் பெரியவங்களை வரச் சொல்லுங்க. நான் அவங்களுக்கு ஃபோன் போட்டு விசயத்தைச் சொல்றேன்.” என்றுவிட்டு எழுந்தார்.

மண்டபத்தின் நடுவில் தான் அமர்ந்து இருவரும் பேசினார்கள் என்பதால்.. அங்கிருந்த கணேஷன் மற்றும் பானுமதியின் சொந்தங்கள் மாறிப் போன சம்பந்தத்தை கேட்டுக் கொண்டு தான் இருந்தார்கள். பலருக்கு மகிழ்ச்சி தான் என்றாலும்.. முணுமுணுத்தவர்களும் உண்டு. இரு வீட்டாரும் பேசிக் கொண்டதை வைத்து.. கணேஷன் சொந்தத்தை பற்றி.. பானுமதியின் சொந்தங்களும், பானுமதியின் சொந்தத்தை பற்றி.. கணேஷன் சொந்தங்களும் குற்றம் குறைகளைச் சொல்லியும் கிசுகிசுத்து கொண்டார்கள்.

கந்தசாமியிடம் பேசிவிட்டு.. இந்த பக்கம் வந்த கணேஷன் “என்ன பானு! இந்த சம்பந்தம் சரிதானா! அவங்க கேட்டதிற்கு ஒத்துக் கொண்டது சரியா..” என்றுக் கேட்டார்.

அதற்கு பானுமதி “எனக்கு இதுல தப்பா படலை. இத்தனை வருஷங்களா உழைக்கிறது அவங்க தான்! இப்போ பொண்ணை கட்டிக் கொடுக்கிறதாலே.. உழைச்ச இடத்தை சொந்தமாக கேட்கிறாங்க.. நம்ம பொண்ணுக்காக கொடுக்கலாம் தப்பில்லை. அப்போ தான் நம்ம பொண்ணையும் மதிப்பா பார்ப்பாங்க! எப்படியிருந்தாலும் பழைய மாப்பிள்ளைக்கு முடிந்திருந்தா.. பையனுக்கு தனி கார், தனி வீடு பார்த்து தனிக்குடித்தனம் வைக்கிறதாவும், சேர்த்தி வச்சதோட இன்னும் கொஞ்சம் நகை போடறதுனு பேசிட்டு இருந்தோம். இப்போ செந்தில் தனிக்குடித்தனம் கேட்டாலும் செய்துக் கொடுத்திரலாம். நமக்கு இருக்கிறது ஒரே பொண்ணு! அவளுக்கு என்றுத் தானே.. இத்தனையும் சேர்த்தி வச்சோம்.” என்றார்.

அதற்கு கணேஷன் புன்னகைத்தவாறு “நானும் இதையே தான் நினைச்சேன் பானு! எப்பவும்.. என் மனசுல இருக்கிறதை நீ அப்படியே படிச்ச மாதிரி சொல்லிடறே..” என்றுவிட்டு.. நிறைந்த மனதுடன் மனதில் எந்த குற்ற குறுகுறுப்பின்றி.. பழைய சம்பந்த வீட்டாருக்கு அழைப்பு விடுத்தார்.

சற்று ஓரமாக நின்றுக் கொண்டு செல்பேசியில் பேசிக் கொண்டிருந்த தனது கணவனை பார்த்த பானுமதி பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டார்.

சரித்திரம் திரும்புகிறது!

ஆம்! ஜாதகம் அமைந்து.. கணேஷன் பொண்ணு பார்க்க வந்த பொழுது.. படித்த நல்ல வேலையில் உள்ள நகரத்து மாப்பிள்ளை என்ற தகுதியை தவிர கணேஷனிடம் வேறு ஒன்றும் இல்லை. ஆனால் நல்ல மாப்பிள்ளையை விட மனமில்லாத பானுமதியின் தந்தை.. மகளுக்கு சில சொத்துக்களையும்.. வங்கி கணக்குகளையும் எழுதி வைத்து.. கணேஷனுக்கு மணம் முடித்து வைத்தார். திருமண புதிதில் தனது பணம் கொண்டே கணவனால்.. நன்றாக வாழ முடிந்தது.. என்ற மமதை பானுமதிக்கு இருந்தது. அதனால் பலமுறை வார்த்தையால் சுட்டிக்காட்டி அவமானப்படுத்தி இருக்கிறாள். கணேஷனும் முகத்தைத் திருப்பிக் கொண்டு.. சராசரியாக மனைவிக்கு கிடைக்கும் அன்பைக் கூட தராமல் இருந்திருக்கிறார். பின்னர் நாளடைவில்.. இந்த உலகில் கணவன் மனைவிக்கு மிஞ்சிய உறவு வேறு ஒன்றுமில்லை என்றுப் புரிந்து.. பானுமதி தனது திமிரையும்.. கணேஷன் தனது கௌவரவத்தையும் விட்டு கீழ் இறங்கி வந்து.. ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு.. அன்பு செலுத்தி.. இல்லறம் சிறக்க வாழ்ந்தார்கள். அதற்கு பரிசாக கிடைத்தவள் தான் வித்யா!

தற்பொழுது அதே போன்ற வாழ்க்கை தனது மகளுக்கும்.. கொஞ்சம் வேறு விதமாக அமையப் போவதை நினைத்து கவலையும்.. அதே சமயம் தனக்கு கிடைத்தது போன்று தங்கமான கணவனும் அமைய போகிறது என்ற மகிழ்ச்சியுமாக என்று இரு மனநிலையில் இருந்தார்.

தனது மகள்.. தன்னைப் போல் இல்லாமல் ஆரம்பத்திலேயே நல்ல புத்தியுடன் வாழ அப்பொழுதே இறைவனை வேண்டிக் கொண்டார்.

அந்த கலவரத்தின் கதாநாயகி.. அங்கு தனது தோழிகள் சூழ அமர்ந்திருந்தாள்.

வித்யா “என்னடி! அவங்க என்ன பேசறாங்கனு கேட்டிங்களா! என்ன பேசிட்டாங்க?” என்று உளவுப் பார்க்க அனுப்பிய தோழிகளிடம் விபரம் கேட்டாள்.

கீதா “அவங்க ஒத்துக்கிட்டாங்க! ஆனா வரதட்சணை கேட்கிறாங்கடி! உங்களுக்கு சொந்தமான தோப்பை அவங்க பார்த்துட்டு இருக்காங்களாம். அதை எழுதி தரச் சொல்றாங்க..” என்றாள்.

அதைக் கேட்ட வித்யா “ஓ! இதை அவங்களே தான் கேட்டாங்களா.. இல்லை என் அப்பா என்ன வேணும் என்று கேட்ட பிறகு வேண்டியதைக் கேட்டாங்களா?” என்றுக் கேட்டாள்.

கீதா “அவங்கதான்டி முதல்ல கேட்டாங்க! உன் அப்பா.. வித்யாவை அவங்க பையனுக்கு கொடுக்க விருப்பமெனு சொன்னதும்.. பையன் கிட்ட சம்மதம் கேட்கணும் என்றுத் தனியா போய் பேசிட்டு வந்துட்டு.. அந்த தோப்பை கேட்டாங்க..” என்றாள்.

வித்யா “ம்ம்! இதுதான் சாக்குனு அவங்களுக்கு வேணுங்கிறதை எழுதி வாங்கிட்டாங்களா! இதை என் அப்பா கேட்காமலேயே கொடுத்திருப்பாரே!” என்று ஏளனத்துடன் கூறியவள், “அப்பறம் சொல்லுங்கடி! அவங்க பேச்சேல்லாம் எப்படி!” என்றுக் கேட்டாள்.

அவளது மற்றொரு தோழி ரக்ஷீதா “ஒரு மாதிரி தான் எனக்கு தெரியுது. ஆனா கிராமத்து ஆளுங்க அப்படித்தான் பேசுவாங்களோ!” என்று அவளிடமே கேட்டாள்.

கீதா “ஆமாடி வித்யா! உங்க மாமா அப்பறம் அத்தையோட பேச்சு தோரணை மாறின மாதிரி இருக்கு!” என்றாள்.

அதற்கு வித்யா “ப்ச்! அதெல்லாம் இந்த மாதிரி சிட்டிவேஷன் வந்ததால் வர கெத்துடி! என் அப்பாவே போய் கேட்டிருக்கிறார். போதாக்குறைக்கு நான் பார்த்த மாப்பிள்ளையை வேண்டானு வேற சொல்லியிருக்கேன் தானே..! அதுனால கொஞ்சம் பந்தா காட்டராங்க! ஆனா கிராமத்து ஆளுங்களுக்கு.. அதை கன்டினீயு செய்ய தெரியாது. நாம் அவங்களுக்கு தெரியாத விசயத்தைப் பற்றிப் பேசினா.. அப்படியானு கேட்டுட்டு அவங்க பந்தா காட்டிட்டு இருக்கோம் என்கிறதை மறந்திருவாங்க! அதை நான் பார்த்துக்கிறேன். இன்னும் யாரும் மெயின் மேட்டருக்கு வரலை. செந்தில் மாமா என்ன சொன்னார். அவருக்கு சந்தோஷம் தானே..” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

அதற்கு கீதா “அதுக்கு முன்னே நான் ஒரு கேள்வி உன்கிட்ட கேட்டாகணும். உனக்கு நிஜமா.. உன் செந்தில் மாமாவை மேரேஜ் செய்ய ஒகே தானா! இல்லை அவசரத்துக்கு அந்த மாப்பிள்ளைக்கு இவர் ஒகேனு சொல்லிட்டியா! உன் வாழ்க்கைடி இது! அதுதான் கேட்கிறேன்” என்றுக் கேட்டாள்.

அதற்கு வித்யா “முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு! அப்பறம் நான் சொல்றேன்.” என்றுப் புருவத்தை உயர்த்தினாள்.

கீதா “இப்போ எனக்கு அந்த செந்தில் நிலைமை நெனைச்சா எனக்கு கொஞ்சம் பாவமாக தான் இருக்குடி!” என்றுவிட்டு “அதெல்லாம் அவருக்கு ஒகே மாதிரி தான் தெரியுது. ஆனா ரொம்பவும் நல்ல புள்ள போல.. நடுவில் ஒரு வார்த்தை பேசலை. அமைதியா அவர் அப்பா பின்னாடி.. சிரிப்போட தான் நின்றார். அவரைப் பற்றி புகழ்ந்து.. பேசின போது.. கொஞ்சம் கூச்சப்பட்டும் சிரித்தார்.” என்றுப் பற்களைக் காட்டிச் சிரித்தாள்.

முன்னால் தொங்க போட்டிருந்த அவளது பின்னலை பிடித்து ஒரு சுற்று சுற்றி இழுத்த வித்யா “நீ அவரை பார்த்து சைட் அடிச்சியா..” என்று மிரட்டினாள்.

கீதா “வலிக்குதுடி! விடுடி! விடுடி! நீ கேட்டதிற்கு தானே பதிலைச் சொன்னேன். இப்போ நீ சொல்லு..” என்றாள்.

அவளது பின்னலை விட்ட வித்யா “முதலாவது காரணம்.. இதோ நீங்கெல்லாம் சைட் அடிக்கிற மாதிரி ஆளு.. பார்க்க நல்லா தான் இருக்கிறார். இரண்டாவது காரணம்.. அவருக்கும் என் மேலே கொஞ்சம் ஆசை இருக்கு.. அதாவது அவருக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கிறாங்க! இந்த மாதிரி டைமில்.. இந்த மாதிரி மாப்பிள்ளை நமக்கு கிடைச்சா நல்லாயிருக்குனு.. பப்ளீக் பிளேஸில் பொண்டாட்டியை கையில் தாங்கிற மாதிரி பார்த்துக்கும் புருஷனை பார்க்கிறப்போ நெனைப்போம். இது ஒன் ஹன்டர்பர்சேன்டேஜ் ப்யுர் வெஜிட்டெரியன் சைட்! அவருக்கும்.. பார்க்கிற எதாவது பொண்ணை பார்த்து.. கண்டிப்பா அப்படித் தோணும். இந்த பங்கஷனுக்கு வந்த போது.. என்னைப் பார்த்தா அவருக்கு தோன்றியிருக்குனு நினைக்கிறேன். மூன்றாவது காரணம்.. அப்பா சொன்ன மாதிரி.. அவர் என்னை விட எல்லா விதத்திலும் தாழ்ந்தவரா தான் இருக்கிறார். அந்த பீட்டர் மாப்பிள்ளை மாதிரி இல்லை. எப்பவும் புருஷன் அழகிலும் சரி.. அறிவிலும் சரி.. பணத்திலும் சரி.. நம்மை விடக் கொஞ்சம் தாழ்ந்திருந்தா தான் நாம கெத்தா இருக்க முடியும். நம்மளுக்கு என்று ஒரு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். இவர் எல்லா விதத்திலும் தாழ்வுதான்னு அப்பா சொன்னார். சோ என்ற புருஷன் என் கைக்குள்ள இருப்பான். அப்பறம்.. என் மூலமா சொத்து கிடைக்குது என்கிறதால்.. அந்த குடும்பத்திலும் என்னோட பேச்சுக்கு மதிப்பும் இருக்கும். என் மேலே பாசமும் இருக்கும். சோ.. ராணி மாதிரி திருமண வாழ்க்கை வாழப் போறேன்.” என்று திருமண வாழ்வின் இலக்கணம் தெரியாது வித்யா கணக்கு போட்டாள்.

வித்யாவின் தோழி ரக்ஷீதா “டி வித்யா! அது மட்டும் மேரேஜ் லைஃப் இல்லைடி..” என்றுக் கண்ணடித்தாள்.

அதற்கு வித்யா “ஹெ நான் எப்படி இருக்கேன்?” என்றுப் புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

அதற்கு கீதா “ஆள் செம கட்டையா இருக்கே..” என்றுச் சிரித்தாள்.

வித்யாவும் சிரித்துவிட்டு “இந்த அழகு போதும் தானே..! அவரை அந்த விசயத்திலும் கட்டிப் போடுவதற்கு..” என்றுவிட்டு எழுந்தவள், இடுப்பில் கரத்தை வைத்துக் கொண்டு எப்படி என்பதைப் போல் அவர்களைப் பார்த்தாள்.

அவளது இரு தோழிகளும் ஒருவரின் தோளின் மேல் ஒருவர் கையைப் போட்டுக் கொண்டு “இதில் எல்லாம் விவரமா தான் இருக்கிறே! ஆனா ஒரு விசயத்தை மட்டும் கிளியர் செய்திரு..” என்றுக் கோரஸாக கூறினர்.

வித்யா “என்னது!” என்றுக் கேட்டாள்.

கீதா “நீ நெனைச்சது எதுவும் நடக்கலைன்னா!” என்றனர்.

அதைக் கேட்ட வித்யாவின் முகம் சுருங்கியது. “அதெல்லாம் நான் நெனைச்ச மாதிரி தான் நடக்கும்.” என்றாள்.

ஆபாயச்சங்கு ஊதப் போவதற்கான அறிகுறியை அவர்கள் கவனிக்க தவறினர். எனவே தொடர்ந்து “அப்படி நடக்கலைன்னா.. என்ன செய்வே?” என்றுக் கேட்டனர்.

வித்யா கண்கள் சிவக்க கண்ணில் கண்ணீர் குளம் கட்ட “நான் நெனைச்சது நடக்காத இடத்துல நான் இருக்க மாட்டேன்.” என்று அலற துடித்த வாயைக் கட்டுப்படுத்திக் கொண்டு கோபத்தில் மூக்கு விடைக்க கூறினாள்.

அப்பொழுதோ தோழியின் நிலை புரிய.. “ஸாரிடி! ஸாரிடி! ஏதோ விளையாடறதா.. நெனைச்சு இப்படிப் பேசிட்டோம். உனக்கு நீ நெனைச்ச மாதிரியே வாழ்க்கை அமையும்டி! நாங்க விளையாட்டுக்கு சொன்னதை மைன்ட்ல ஏத்திக்காதே! அதை அப்படியே மறந்திரு! நீ நல்லபடியா வாழுவே! உன் செந்தில் மாமா உன்னை உன் அப்பாக்கு மேலே பார்த்திருப்பார். நீ அப்செட்டாகி உட்காராதேடி..” என்று இருவரும்.. எங்கோ வெறித்தவாறு அழுகையையும் ஆத்திரத்தையும் அடக்கியபடி அமர்ந்திருந்த வித்யாவிடம் கெஞ்சினர்.

இன்னும் பல முறை மன்னிப்பு கேட்ட பின்பே.. காஜல் கலையாது.. கண்ணில் தேங்கியிருந்த நீரை ஒற்றி எடுத்தவள். “நான் எதுக்குடி.. நீங்க உளறியதை எல்லாம் பெருசா எடுத்துக்க போறேன்.” என்று மூக்கை உறிஞ்சினாள். கீதாவும், ரக்ஷிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அங்கு செந்தில் செல்பேசியில் தனது அண்ணன் வடிவேலுவிடம் விசயத்தைக் கூறி.. அண்ணி சுமதியிடம் சொல்லி பிள்ளைகளையும், தங்கை வளர்மதியையும் அழைத்துக் கொண்டு.. பஸ் ஏறி வரச் சொன்னான். டவுன்ஹால் வந்ததும்.. ஃபோன் போட்டால்.. காரில் வந்து அழைத்துக் கொண்டு வருவதாக கூறினான்.

அவர்களிடம் ஒரு சான்ட்ரோ கார் தான் இருக்கிறது. அதில் செந்தில் தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு இங்கு வந்துவிட்டான். எனவே அவர்களை பேருந்து ஏறி வரக் கூறினான். பின் தன் தந்தையிடம் சென்று “அப்பா! நம்மூர் தலைவருக்கு.. அப்பறம்.. ராமசாமி ஐயாக்கு.. இவங்க பொதுவான மனுஷங்க.. அப்பறம் மாமா, பெரியப்பா, அத்தை.. இவங்களை மட்டும் தானே கூப்பிடணும்.” என்றுக் கேட்டான்.

அதற்கு கந்தசாமி “காத்தமுத்து, மாரியப்பன் அப்பறம்..” என்று பெயர்களை அடுக்கிக் கொண்டே போனவரின் பேச்சில் இடையிட்ட.. செந்தில் “அப்பா! இது திடீருனு நடக்கிற விஷேஷம். அதனால முக்கியமான சொந்தம் மட்டும் போதும்பா! அவங்களுக்கு எல்லாம் அங்கே போய்.. விவரமா சொல்லிக்கலாம். அதுவும்.. பன்னிரெண்டு மணிக்கு ஒரு நல்ல நேரம் இருக்குனு அம்மா பார்த்து சொன்னாங்க! இப்போ நேரம் ஒன்பதாக போகுது! அவங்கெல்லாம் தயாராக முக்கால் மணி நேரம்.. அங்கிருந்து பஸ் புடிச்சு வர ஒரு மணி நேரம் என்றுக் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு மேலே ஆகிடும். அதுக்குள்ள.. நாம நிச்சயம் செய்யறதுக்கு வேணுங்கிறதை வாங்கிட்டு வந்தரலாம்.” என்றான்.

கந்தசாமி மெதுவாக “பணம் இருக்கா செந்தில்?” என்றுக் கேட்டார்.

அதற்கு செந்தில் “தட்டுல வைக்கிறதுக்கு.. பழம், புடவை, பூ, இனிப்பு வாங்கிறதுக்கு கூட வக்கில்லாதவங்க நாம இல்லைப்பா!” என்றான்.

அதற்குள் அவர்களுக்கு அருகில் வந்திருந்த.. தங்கம் “அப்படியில்லைடா! வேற சம்பந்தம் என்றால்.. ஆயிரம் ரூபாயிற்கு புடவை வாங்கி வச்சா கூடப் போதும்.. ஆனா இந்த சம்பந்தம் பெருசுடா! இங்கே மாப்பிள்ளையாய் ஆகப் போகிற உன் கவுரதை குறையாம பார்த்துக்கணும். அதனால என் வளையலை கழற்றி தரேன். ஐந்தாயிரம் ரூபாவுக்கு பட்டுபுடவையும், பொண்ணு விரலுக்கு போடரதுக்கு.. மோதிரமும் வாங்கிட்டு வந்திரு செந்திலு..” என்றவர் மகன் முறைத்த முறைப்பில் கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்டார்.

செந்தில் “அவங்க எனக்கு பொண்ணை கொடுக்கிறாங்களா.. இல்லை என்ற கௌரவத்திற்காக பொண்ணை கொடுக்கிறாங்களா! எனக்கு கொடுப்பதா இருந்தா.. அவங்களை எப்படித் திருப்திப்படுத்தணும் என்று எனக்கு தெரியும். நீங்க நடுவில் எந்த முட்டாள்தனத்தையும் செய்து நாலு பேர் நம்மை இளக்காரமா பார்க்கிற மாதிரி செய்திராதீங்க!” என்றுக் கடுமையான குரலில் கூறவும், தங்கமும் கந்தசாமியும் அமைதியானார்கள்.

செந்தில் “சரி வாங்க போயிட்டு வந்திரலாம்.” என்றான்.

அதற்கு கந்தசாமி “நீயும் தங்கமும் போயிட்டு வாடா! எனக்கு கால் வலிக்குது.” என்று அங்கிருந்த நாற்காலியில் அமரப் போனார். ஆனால் செந்தில் அவரைத் தாங்கலாக பற்றுபவன் போல்.. அவரை அமர விடாமல் பிடித்து “இங்கே இருந்துட்டு.. நம்ம மானத்தை வாங்கிறதுக்கா?” என்றான்.

கந்தசாமி “என்னடா இப்படி சொல்லிப்புட்டே..” என்கவும், செந்தில் “நீங்க இங்கே இருந்தால்.. என்ன நடக்குமுனு தெரியுமா! மாமா வீட்டு சொந்தக்கராங்க, நம்ம வீட்டு சொந்தக்கராங்க எல்லாரும் வந்து.. குசலம் விசாரிக்கிற மாதிரி.. இந்த திடீர் சம்பந்தத்தை பற்றி உங்க கிட்டப் பேசுவாங்க! நீங்களும்.. நம்மை பற்றி பெருமையா பேசராங்கனு நினைச்சு.. பேச்சு கொடுப்பீங்க! வாயைக் கொடுத்து.. இப்போ நீங்க இரண்டு பேரும் பேசினது மாதிரி அப்பா எதாவது பேசப் போய்.. இப்போ கொடுத்திருக்கிற மரியாதையும் மதிப்பும் போயிடப் போகுது. அப்பறம் அவ்வளவு தானா நாம.. என்று நம்மை இளக்காரமா பார்க்க ஆரம்பிச்சுருவாங்க! ஒண்ணை புரிஞ்சுக்கோங்க.. இப்போ அவங்களே வந்து சம்பந்தம் பேசவும்.. நாம் அந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி ஒரு மரியாதை உருவாகிருக்கு! அதைக் கெடுத்தராதீங்க! என் கூடவே வாங்க.. காரில் உட்கார்ந்துக்கோங்க..” என்றான். முகம் புருவம் சுருக்கி கோபம் கொள்ளவில்லை. குரலை உயர்த்தி கத்தவில்லை. ஆனால் அவனது குரலில் இருந்த கடினத்தன்மையே அவர்கள் இருவரையும் அடக்குவதற்கு போதுமானதாக இருந்தது.

தங்கம் “பையன் சொல்ற மாதிரி கேளுங்க! அவன் சரியா சொல்வானு தெரியும் தானே..” என்று கணவனை இடிந்துரைத்தார்.

கந்தசாமி அமைதியாக அவனுடன் நடந்தார். செந்தில் தனது நடையின் வேகத்தை குறைத்து.. பின் தனது தந்தை மற்றும் அன்னைக்கு பின்னால் நடந்தான். பார்ப்பதற்கு பெற்றோர்களுக்கு அடக்கிய பிள்ளை அவர்களுக்கு பின்னே நடப்பது போன்று இருந்தது.

அதன் பின் அங்கு நடப்பவைகள் வேகமாக நடந்தன.

கணேஷன் வந்துக் கொண்டிருந்த பழைய சம்பந்த வீட்டாரிடம் சொந்தத்தில் பெண் கேட்டு வந்திருப்பதாக கூறினார். “அவர்களுக்கு பெண் கொடுப்பதாக முதலிலேயே வாக்கு கொடுத்திருந்தோம், ஆனா நடுவில் சின்ன பிரச்சினை இருந்தது. அதனால் அவங்களுக்கு விருப்பமில்லை என்று நினைத்திருந்தோம். ஆனா அவங்க மறுபடியும் வந்து பெண் கேட்டாங்க! எங்களுக்கும் சொந்தம் விட்டுப் போகாமல் வந்து பெண் கேட்டது.. சந்தோஷம் தான்.. எங்க முடிவை வித்யா ஏற்றுக்கிட்டாள். நல்லவேளை நம்ம சம்பந்தம் கலப்பதற்குள் நின்றுச்சுனு நினைச்சுக்கோங்க! உங்க மகன் அனுப்பிய பரிசுகளை அவள் பயன்படுத்தவே இல்லை. ஒன்றை மட்டும் தான் பிரித்திருக்கிறாள்.. மற்றது பிரிக்கப்படாமல் இருக்கிறது. பிரித்ததிற்கு பணம் கொடுத்து விடுகிறோம். மற்றதை திருப்பி அனுப்பி விடுகிறோம். இந்த சம்பந்தம் விட்டுப் போனதிலும் எனக்கு வருத்தம் தான்.. எனக்கு இன்னொரு பெண் இருந்தால்.. கண்டிப்பாக மணம் முடித்து கொடுத்திருப்பேன். உங்க பையனுக்கு எங்க சம்பந்தத்தை விடவும், நல்ல சம்பந்தமாக அமையும் வாழ்த்துகள்..” என்று அவர்களுடனான சம்பந்தத்தை முடித்துக் கொள்ள பார்த்தார்.

அவர்களுக்கு கோபம் கொள்வதை விட.. ஒதுங்கிவிடுவது சரியாகப்படவும், இந்தளவிற்கு வர விட்டிருக்க கூடாது. ஆனால் ரொம்பவும்.. சம்பந்தம் கலப்பதற்குள்.. இந்த முடிவிற்கு வந்ததிற்கு நன்றி கூறிக் கொண்டு அவர்களும் அந்த சம்பந்தத்தை முடித்துக் கொண்டார்கள்.

அவர்களிடம் பேசிவிட்டு.. கணேஷன் நிம்மதியாக பெரும்மூச்சு ஒன்றை இழுத்துவிட்டார். பின்னர் மற்ற விசயங்கள் தடையின்றி நிகழ்ந்தன.

முதலில் அவர் செந்தில் குடும்பத்தை தான் தேடினார். அவர்கள் நிச்சயத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க சென்றிருக்கிறார்கள்.. என்றுக் கூறவும் திருப்தியுற்றவராய்.. தனது மனைவியை தேடிச் சென்றார். அங்கு பானுமதி கணேஷன் சொந்தங்களை சமாளித்துக் கொண்டிருந்தார். கணேஷன் வந்து ஒரு வார்த்தை இது தனது முடிவு தான்.. என்றுக் கூறிய பிறகு.. மனமேயில்லாமல் மற்றவர்கள் ஒத்துக் கொண்டார்கள். மதியம் வரும் நல்ல நேரத்தில் நிச்சயம் என்று முடிவு செய்திருப்பதால்.. மதிய உணவு தயாரிக்க கேட்டரிங் ஆட்களிடம் தயாரிக்க கூறினார். மேடையில் பின்னால் ஆங்கிலத்தில் ஜிகினா அட்டையால் வைக்கப்பட்ட பழைய மாப்பிள்ளையின் பெயரை மாற்றினார். மேடை அலங்கரித்தவர்களுக்கு செல்பேசியில் அழைப்பு விடுத்து.. செந்தில்குமரன் என்னும் பெயரை அலங்கரித்து தரக் கூறினார்.

பின் மகளிடம் வந்தார். அங்கு வித்யா தனது தோழிகளிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவரின் உள்ளம் நிறைவாக இருந்தது. முதலில் சென்னையில் தனிக்குடித்தனம் வைக்க போகிறோமே.. மகள் எப்படிச் சமாளிக்க போகிறாள் என்றுச் சிறு பயம் கொண்டிருந்தார். தற்பொழுது சொந்தத்தில் கட்டிக் கொடுக்க போகிறார். மேலும்.. இங்கே கோவையிற்கே வரவழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது.

தனது தந்தை தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த வித்யா.. எழுந்து வந்து அவரைக் கட்டிக் கொண்டாள். அவர் பாசத்துடன் அவளது தலையை வருடிக் கொடுத்தார்.

நேரம் பன்னிரெண்டை நெருங்கவும், சிறிது கவலைக் கொண்ட கணேஷன் அவரே செந்திலுக்கு அழைக்கலாம் என்று இருந்த பொழுது.. செந்திலும்.. அவரது பெற்றோரும் வந்தனர்.

காலையில் மண்டபத்தில் இருந்து கிளம்பிய செந்தில் மற்றும் அவனது குடும்பத்தினர்.. நிச்சயத்திற்கு வேண்டிய புடவையை போத்தீஸில் ஐந்தாயிரம் ரூபாயிற்குள் நல்லதாக வாங்கினர். பின்னர் பழங்கள் போன்றவையும் வாங்கினார்கள். பின் அங்கிருந்த சிறிது நேரம்.. ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து காபி குடித்தார்கள். அந்த நேரத்தில் சரியாக அவனது அண்ணனிடம் இருந்து டவுன்ஹால் வந்துவிட்டதாக அழைப்பு வரவும், ஐந்து நிமிட நடை தொலைவில் அவர்கள் இருந்த ஹோட்டல் இருக்கவும், அதைக் கூறி அவர்களை அங்கு வரச் சொல்லி அவர்களுக்கும் காபி வாங்கி கொடுத்தான். பின் அண்ணன் குடும்பத்தை தனது காரில் அழைத்துக் கொண்டும் மற்றவர்களுக்கு இரு கால் டாக்ஸி ஏற்பாடு செய்து ஒன்றாக கிளம்பி வந்தான்.

மண்டபத்திற்குள் நுழைந்ததும்.. அனைவரும் தங்களைப் பார்ப்பதில் இருந்த மாற்றம் அவர்களுக்கு நன்றாகவே புரிந்தது. செந்தில்குமரன் கூறியதும் தற்பொழுது கந்தசாமிக்கும் தங்கத்திற்கும் நன்கு புரிந்தது. அவர்கள் அங்கே இருந்திருந்தால்.. இந்த மரியாதையான பார்வையும்.. மதிப்பும் கிடைத்திருக்காது. ஒரு சொந்தமாக தான் பார்த்திருப்பார்கள்.

நிச்சயதார்த்தம் நின்ற பொண்ணை உன் தலையில் கட்டிட்டாங்க என்றுக் கேலிப் பேசி.. கந்தசாமியின் மனதைக் கலைக்கவும் பட்டிருக்கும். மாப்பிள்ளை என்ற மரியாதை அல்லாமல்.. என் பொண்ணை கட்டிக்கிறே தானே.. என்று வேலையை செய்யும் வேலைக்காரன் போல் ஆகிருக்கும். தற்பொழுது.. தனது குடும்பமாக வந்திருந்தவனை கணேஷனும் பானுமதியும் முன்னே சென்று.. மாப்பிள்ளையாக வரவேற்றார்கள்.

பானுமதி தனது சொந்தங்களிடம் நலம் விசாரித்தாள். பானுமதியின் தங்கை சாருமதி முதலிலேயே அங்கு வந்திருந்தார். அவரும் சென்று தனது சொந்தங்களிடம் பேசினார்.

அதில் அவளது அக்கா அதாவது கந்தசாமியின் தமக்கை மரகதம் “எங்களுக்கு அழைப்பு வைக்காம உன் பொண்ணு சம்பந்தத்தை முடிக்க பார்த்த கடைசில பார்த்தியா.. எங்க வுட்டுக்கே உன்ற பொண்ணை கொடுத்து சம்பந்தம் கொடுக்கிற மாதிரி ஆகிருச்சு..” என்றுக் குத்திக் காட்டினார்.

“கொஞ்சம் கொஞ்சமா எங்களை விலக்க பார்த்தே. கடைசியில பார்த்தியா.. செந்திலால் இன்னும் நெருக்கமா வந்துட்டே..” என்று ஆளுக்கு ஒரு குற்றம் கூறினார்கள்.

அனைத்தையும் பானுமதி இன்முகத்துடன் சமாளித்தாள்.

பின்னர் அவர்களை முன் இருக்கையில் அமர வைத்தார்கள். முதலில் கணேஷன் சொந்தங்கள்.. முன்னிருக்கையில் அமர்ந்திருக்க.. பானுமதியின் சொந்தங்கள் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தார்கள். மாறிப் போன மரியாதையை கண்டு பானுமதியும் சாருமதியும் பெருமையாக உணர்ந்தார்கள்.

நிச்சயத்தார்த்தம் தொடங்கும் நேரமும் வந்தது.

மாப்பிள்ளை வீட்டார் தங்களது தட்டுக்களை மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்ட நாற்காலியின் முன் அடுக்கினர். அதில் மோதிரம் என்று ஒன்றும் இல்லாததால் பானுமதி சிறு துணுக்குற்றாலும்.. அவர்களால் அதுதானே முடியும்.. என்று மற்ற சீர் தட்டுக்களைக் கண்டு திருப்தியுற்றாள்.

அவர்களும் முதலில் பார்த்த மாப்பிள்ளைக்கு என்று வாங்கி வைத்த மோதிரத்தை திருப்பிக் கொடுத்து செந்திலுக்கு வேறு வாங்கலாமா என்று யோசித்து பின் அதற்கு நேரமில்லை, அவர்கள் எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள் என்று விட்டு விட்டார்கள்.

நிச்சயத்தார்த்தம் தொடங்கவும்.. இரு தரப்பு பெரியவர்கள் மேடையின் முன்னே வந்து நின்றார்கள். கணேஷனின் சொந்தங்கள் ஒரு பக்கமும்.. செந்திலின் சொந்தங்கள் ஒரு பக்கமும் நின்றார்கள். பானுமதியின் அக்காவும், அக்கா வீட்டு சொந்தங்களும்.. பானுமதியின் அம்மாவின் சொந்தங்கள் கணேஷனின் பக்கம் நின்றிருந்தார்கள். தனது சொந்தங்களே எதிரே நின்று தனது மகளை அண்ணன் மகனுக்கு மணம் முடிக்க கேட்க வந்திருப்பது பானுமதிக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.

செந்திலின் ஊர் பெரியவர் எனப்படுபவரும்.. கந்தசாமியின் அண்ணன் மற்றும் அக்கா வீட்டுக்காரரும் முன்னே நின்று.. கணேஷனிடம் சம்பிரதாயப்படி செந்திலுக்கு பெண் கேட்டார்கள். கணேஷன் தனது மகளை செந்திலுக்கு திருமணம் செய்துக் கொடுக்க முழுக்க சம்மதம் என்றுக் கூறினார். பின் கந்தசாமியும்.. கணேஷனும்.. ஒருவருக்கு ஒருவர் சந்தனம் பூசி, வெற்றிலைப் பாக்கு மாற்றி.. இனிப்பு பகிர்ந்து சம்பந்தம் கலந்தனர். பின்னர் பெண்ணை அழைத்துக் கொண்டு வரக் கூறினர்.

செந்திலின் அண்ணி சுமதியும், அத்தையும் சென்று.. வித்யாவை அழைத்து வந்தார்கள்.

முகத்தில் புன்னகையுடன் வந்த வித்யா மேடையேறியதும்.. செந்திலின் அத்தை சபையில் கூடியிருந்தவர்களைப் பார்த்து கரம் குவித்து வணக்கம் கூறச் சொன்னார். அதன்படி முகத்தில் புன்னகையுடன் நின்றிருந்தவளை கெமராக்களும் செல்பேசிகளும் படம் பிடித்துக் கொண்டன.

பின் அவளை நாற்காலியில் அமர வைத்தார்கள். முதலில் தங்கம் மேடையேறி வந்து தனக்கு மருமகளாக வரப் போகிறவளின் நெற்றியில் குங்கும் மஞ்சள் வைத்து.. ஆசி வழங்கி வரவேற்றார். அடுத்து.. செந்திலின் அத்தையும்.. செந்திலின் அண்ணி சுமதியும் வைத்தார்கள்.

பின் தங்கம் எடுத்து வைத்த புடவையையுடன் கூடிய சீர்தட்டை எடுத்துக் கொடுத்து கட்டிக் கொண்டு வரக் கூறினார். பிளவுஸிற்கும் ரெடிமேட் வாங்கி வைத்திருந்தார்கள். சிறிது பெரிதாக இருந்தாலும் கச்சிதமாக இருந்தது. பின் மீண்டும் மேடையேறி அமர்ந்ததும்.. செந்திலை மேடைக்கு அழைத்தார்கள். தலையை நிமிர்த்தி அவன் வருவதைப் பார்க்க உந்திய மனதை மேடை நாகரிகம் கருதி.. வித்யா அமைதியாக அமர்ந்திருந்தாள்.

செந்தில் அவளது இடப்பக்கம் வந்து நின்றதும்.. பானுமதியின் குரல் கேட்டது.

“வித்யா! மாப்பிள்ளை உனக்கு ஏதோ வாங்கிட்டு வந்திருக்கிறார். வாங்கிக்கோடா..” என்றார்.

வித்யா ‘என்ன’ என்றுத் திரும்பி செந்திலை பார்த்தாள்.

செந்தில் கையில் நாலு முழம் மல்லிகைப் பூ, அகர்வால் கடை இனிப்பு மற்றும் முறுக்கு பாக்கெட், அனார்கலி சுடிதார் அடங்கிய பைகளுடன் நின்றிருந்தான்.

வித்யாவிற்கு அன்று கூறியது நினைவிற்கு வந்தது. கூடவே.. அதற்கு அவன் அளித்த பதிலும் நினைவிற்கு வந்தது.

‘மாமா! உன்னை எனக்கு கட்டிக் கொடுப்பாரா என்றுக் கேட்டுச் சொல்லு..! நீ கேட்டதெல்லாம் வாங்கிட்டு வரேன்.’

இதோ கணேஷன் மகளை திருமணம் செய்துக் கொடுப்பதாக அவரே முன் வந்து கூறவும், வித்யா கேட்டதை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்துவிட்டான்.

முகத்தில் புன்னகை விரிய.. மலர்ந்த முகத்துடன் அவனைப் பார்த்து சிரித்தாள்.

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தித்தித்திட செய்வாய் 3


அடுத்த மாதம் அமாவசை முடிந்து வரும் வளர்பிறை தினத்தில் வரும் முதல் முகூர்த்தத்தில் திருமணத்தை முடித்துவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் நிச்சயம் செய்யப்பட்ட சம்பந்தம் என்பதால்.. தாலிக்கட்டி நடக்கும் சம்பிரதாயங்கள் கோவிலில் முடிக்க முடிவு செய்தார்கள். பின் மண்டபத்தில் வரவேற்பு என்று இரு வீட்டாரும் பேசி முடிவு செய்தார்கள்.

அன்றைய நிச்சயத்தார்த்த விழா சொந்தங்கள் கொண்டாடும் திருவிழாவாக நடந்ததால்.. செந்தில் மற்றும் வித்யா தனித்து பேச நேரம் கிடைக்கவில்லை. அவ்வவ்போது.. ஒருவரை ஒருவர் பார்த்து முறுவலித்துக் கொண்டதோடு சரி! பின்னர் செந்தில் குடும்பமும்.. சொந்தங்களும் கிளம்பும் போது.. வருகிறேன் என்று வித்யாவை பார்த்து தலையசைத்துவிட்டு சென்றுவிட்டான். வித்யாவிற்கு ‘அட என்னை விட வெட்கப்படுகிறார்.’ என்றுச் சிரிப்பு தான் வந்தது.

திருமணத்திற்கு நாற்பது நாட்களே இருப்பதால்.. அதன் பின் இரு வீட்டிலும் கல்யாண களைக் கட்டியது.

நிச்சயம் நடந்த அடுத்த வாரத்தில்.. திருமண அழைப்பிதழ் தயாராகி விட்டது.. வந்து பாருங்கள் என்று அழைப்பு வரவும் கணேஷனும், பானுமதியும் அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முன் சென்ற வித்யா சிறுச் சிணுக்கத்துடன் நின்றிருந்தாள்.

ஏனெனில் தனது கல்யாண புடவையைப் பார்த்த வித்யா சற்று அதிருப்தி கொண்டாள். அவளை பேருக்கு அழைத்துச் சென்றுவிட்டு மாப்பிள்ளை வீட்டாரே.. தேர்வு செய்து அவளுக்கு காட்டிவிட்டு அவளது அளவு கைச்சட்டையை வாங்கிக் கொண்டு கையோடு எடுத்து சென்றுவிட்டார்கள். அந்த பட்டுப்புடவையின் வண்ணமும் சரிகை வேலைப்பாட்டிலும் வித்யாவிற்கு அவ்வளவாக திருப்தியில்லை. அவளது திருமணப்பட்டு புடவை பதினைந்தாயிரம் ரூபாய் செலவில் எடுத்திருந்தார்கள். எனவே அந்த விலைக்குரிய அளவிற்கு அதன் வேலைப்பாடும் தரமும் இருக்கிறது என்று வித்யா நினைத்தாள்.

புடவையின் வண்ணத்தையும் சரிகை வேலைப்பாட்டையும் பார்த்த வித்யா அதன் அழகை பார்க்காமல் விட்டுவிட்டாள். விலை குறைவானது நன்றாக இருக்காது என்றுத் தவறாக நினைத்துவிட்டாள்.

எனவே தனது தந்தையிடம் அதைப் பற்றி முறையிட்டுக் கொண்டிருந்தாள். வித்யா கூறியதைக் கேட்ட கணேஷன் “அதுக்கு ஒண்ணும் செய்ய முடியாது வித்யா! அவங்க கிட்டவே.. இதைச் சொல்லியிருக்க வேண்டியது தானே..” என்றார்.

அதற்கு வித்யா “சரி அதுவும் இருக்கட்டும். அதை வேற எதாவது விஷேஷத்திற்கு கட்டிக்கிறேன். முகூர்த்தத்திற்கு வேற புடவை எடுத்து தாங்கப்பா..” என்றுக் கெஞ்சினாள்.

அதற்கு கணேஷன் “முகூர்த்த புடவை எல்லாம் மாப்பிள்ளை வீட்டில் தான் எடுத்துக் கொடுப்பாங்க வித்யா! சம்பிரதாயம் தெரியாமல் உன் இஷ்டத்திற்கு பேசாதே! அதுதான் ரிசப்ஷனுக்கு ஒரு லெகன்கா எடுத்து வச்சுருக்க தானே! அப்பறம் என்ன!” என்றுச் சற்று எரிந்து விழுந்தார்.

எனில் கணேஷன் கிளம்புகிற அவசரத்தில் இருந்தார்.. திருமண பத்திரிக்கையை பார்த்து சரி சொன்னால் தான்.. நாளைக்குள் ஆயிரம் பத்திரிக்கைகளை அச்சிட்டு தருவார்கள். அதன் பின் அவர் பத்திரம் மாற்றும் விசயமாக பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. எனவே வேகமாக கிளம்பிக் கொண்டிருந்தார். எனவே மகள் கேட்டதிற்கு பதிலைக் கூறிவிட்டு.. “சரி நாங்க போயிட்டு வரோம். நீ வெளியே எங்கேயும் போயிராதே..” என்றுவிட்டு “பானு போகலாமா! எல்லாம் எடுத்து வச்சுட்டியா..” என்றுக் கேட்டார்.

பானுமதி “எல்லாம் எடுத்தாச்சுங்க!” என்றுவிட்டு “வித்யா! பாட்டி கிட்ட சண்டை போடாம அமைதியா இருக்கணும்.” என்றுக் கூறிவிட்டு.. அவளது முறைப்பைக் கூடக் கவனியாது வாசலை நோக்கி கணவருடன் விரைந்தார்.

கணேஷனின் அன்னை “நாங்கெல்லாம்.. மாப்பிள்ளை எப்படியிருக்கிறார் என்றுத் தான் பார்த்தோம். புடவை எப்படியிருக்கு என்றெல்லாம் பார்க்க மாட்டோம்.” என்றுத் தனது கதையை ஆரம்பிக்கவும், வித்யா அதை காதில் வாங்காது. தனது அறைக்கு சென்று பொத்தென்று படுக்கையில் விழுந்தாள்.

அவளது வாழ்வில் நடைப்பெறும் முக்கியமான நிகழ்வு.. அவளது தந்தை பல இலட்சங்களில் செலவு செய்து.. செய்யும் திருமண விழா அது! அதில் அவள்தான் கதாநாயகி! அதற்குரிய அலங்காரத்துடன் அவள் இருக்க வேண்டாமா! அவளது திருமணத்திற்கு வரும் சொந்தங்கள்.. இதை விட அதிகமான விலையில் புடவை கட்டிக் கொண்டு வருவார்கள். அந்த திருமணவிழாவில் முக்கியமான பகுதி.. அவளுக்கு மாங்கல்யம் அணிவிப்பது தான்! அதில் தான் எளிமையாக தெரிவதா.. என்றுச் சிணுக்கத்துடன் இருந்தாள்.

செந்திலிடம் இதைப் பற்றிக் கூறினால்.. அவனைத் திருமண செய்யப் போகும் தனக்காக வேறு புடவை மாற்றி எடுத்து தருவானா! என்றுத் தோன்றியது. தனது புது பெண் சலுகையை பயன்படுத்திக் கொள்ள நினைத்து செல்பேசியை எடுத்தாள்.

செந்தில் மாமா என்று பதிவு செய்து வைத்திருந்த எண்ணை பார்த்ததும் அவளுக்கு சிறு கோபம் வந்தது.

இருவரின் செல்பேசி எண்களும் நிச்சயத்தன்றே பரிமாறிக் கொண்டார்கள். ஆனால் அதற்கு பின் இந்த ஒரு வாரத்தில் செந்தில் ஒரு முறை கூட அழைத்து பேசினது இல்லை. வித்யாவிற்கு தினமும் அவளே அழைக்கலாமா என்றுத் தோன்றும். ஆனால்.. ஈகோ காரணமாக அமைதியாக இருந்து விடுவாள். தான் முதலில் அழைத்தால்.. இந்த பொண்ணு அலையுது என்று நினைத்துக் கொள்வாரோ என்றும் அமைதியாக இருந்தாள். ஆனால் தற்பொழுது அதையெல்லாம் பார்க்க முடியாது.. என்று செந்திலுக்கு அழைப்பு விடுத்தாள்.

“ஹலோ” என்ற அவனது கம்பீரமான குரல் கேட்டது.

ஆனால் அவளது பெயரை சொல்லி அழைக்காததால்.. தனது எண்ணை பதிவு செய்து வைக்கவில்லையோ என்று வித்யாவிற்கு ஏமாற்றமாக இருந்தது.

அவளிடம் இருந்து பதில் இல்லாது போகவும், செந்தில் “சொல்லு வித்யா!” என்றான்.

உடனே மலர்ந்த மகிழ்ச்சியை அடக்கிக் கொண்டு “நல்லாயிருக்கீங்களா..” என்றுச் சம்பிரதாயத்திற்கு கேட்டாள்.

செந்தில் “நல்லாயிருக்கேன்.. நீ எப்படியிருக்கு? மாமா, அத்தை, பாட்டி எல்லாம் எப்படியிருக்காங்க?”

வித்யா “எல்லாரும் நல்லாயிருக்கோம். அம்மாவும், அப்பாவும் இன்வெட்டேஷன் ப்ரூவ் வந்திருச்சுனு பார்க்க போயிருக்காங்க..” என்றாள்.

செந்தில் “ஓ சரி! என்ன விசயம் வித்யா! முக்கியமான விசயம் ஒண்ணுமில்லைனா.. மதியம் நானே கூப்பிடட்டுமா..” என்றுக் கேட்டான்.

உடனே வித்யா “இல்லை! இல்லை! இப்பவே சொல்லிடறேன்.” என்றாள்.

செந்தில் “சொல்லு வித்யா..” என்றான்.

எந்தவித தயக்கமும் முகவுரை.. முன்னுரை எல்லாம் இல்லாமல் சொல்ல வேண்டிய விசயத்தை வித்யா பட்டென்றுக் கூறினாள்.

“முகூர்த்த புடவை எடுக்க நேத்து உங்க வீட்டில் இருந்து வந்தவங்க.. என்னைக் கூட்டிட்டு போனாங்க! ஆனா அவங்களே செலக்ட் செய்துட்டு.. இதுதானு காட்டினாங்க! நல்லாயிருந்துச்சு.. ஆனா சிம்பிளா இருக்கு! எனக்கு பிடிச்சிருந்துச்சானு கேட்டிருந்தா கூட.. நான் பதிலைச் சொல்லியிருப்பேன். ஆனா அவங்க என்கிட்ட கேட்கவே இல்லை. நமக்கு இது ரொம்ப முக்கியமான விஷேஷம்! இதுல தான் நாம் இணைய போறோம். அதுனால இதுல நாம கொஞ்சம் க்ரென்டா இருந்தா தான் நல்லாயிருக்கும். அன்னைக்கு சும்மா நான் விளையாட்டுக்கு சொன்னதையே வாங்கிட்டு வந்தீங்க தானே! இப்போ நிஜமாவே கேட்கிறேன். எனக்கு வேற புடவை வாங்கி கொடுங்க! நீங்க தான் வாங்கி தரணுமாம்.. அதுதான் சம்பிரதாயமாம். இல்லைன்னா நானே என் பணத்தில் வாங்கியிருப்பேன். அதனால.. என் அக்கவுண்ட் நம்பர் தரேன். அதில் ஒன் லேக் மட்டும் போடுங்க! நானே செலக்ட் செய்து வாங்கிக்கிறேன்.” என்றுப் படபடவென பேசி முடித்தாள்.

அந்த பக்கத்தில் இருந்து சில நிமிடங்கள் பதிலில்லாமல் போகவும்.. வித்யா “ஹலோ..” என்கவும், செந்தில் “ஒரு இலட்சம் ரூபாயா வித்யா..” என்றுக் கேட்டான்.

வித்யா “ஆமா செந்தில் மாமா!” என்றாள்.

அதற்கு செந்தில் “அந்த ஒருநாளுக்காக ஒரு இலட்சம் ரூபாய்ல புடவை வாங்கிறதுக்கு பதிலா.. உன் வாழ்க்கை முழுக்க வர மாதிரி எதாவது வேணும் என்றால் சொல்லு வித்யா! வாங்கித் தரேன்.” என்றான்.

அதைக் கேட்ட வித்யா பக்கென்று சிரித்துவிட்டாள்.

பின் “ஓ மாமா! நீங்க இன்னும் அப்டெட் ஆகாம இருக்கீங்க அதாவது இன்னும் நைன்ட்ஸ்லேயே இருக்கீங்க! என்ன இது டையலாக் எல்லாம் பேசிட்டு!” என்று மீண்டும் சிரித்தவளுக்கு.. அப்பொழுது தான் அவர்களின் பொருளாதார நிலை நினைவிற்கு வந்தது. தனக்கு சாதகமாக இருக்கும் விசயமே தற்பொழுது தனக்கு எதிராக இருப்பதை நினைத்து தலையில் அடித்துக் கொண்டாள்.

எனவே வித்யா “வாழ்க்கை முழுசா வர மாதிரி தானே! அப்போ அது நீங்க தான் இருக்கீங்க! என்னை கை விட்டற மாட்டிங்களே.. என்னை நல்லபடியா பார்த்துப்பீங்க தானே..” என்றுச் சிரிப்புடன் கேட்டாள்.

அதற்கு செந்தில் “கண்டிப்பா வித்யா..” என்றவன், “கொஞ்சம் வேலையா இருக்கேன். அப்பறம் பேசறேன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

செல்பேசியை வைத்துவிட்டு படுத்தவாறு முதன் முதலாக பேசியதை நினைத்துப் பார்த்தாள். மனைவியாக போகிறவள், ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள புடவையை கேட்டதும்.. அவன் அந்த பக்கம் எப்படித் திருதிருவென விழித்திருப்பான் என்று நினைத்துப் பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது. கூடவே அவனது நிலைமை புரிந்து தான் விட்டுக் கொடுத்ததை நினைத்து அவளுக்கு பெருமையாக இருந்தது. அவளது பெற்றோர்கள் வந்ததும்.. இதைச் சொல்ல வேண்டும்.. அவளை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுவாங்க.. என்று நினைத்துக் கொண்டாள்.

விருக்கென்று எழுந்தமர்ந்த வித்யா மனதிற்குள் ‘இந்த விசயத்தை முதல்ல பாட்டி கிட்ட சொல்லணும். எப்போ பார்த்தாலும்.. எனக்கு செல்லம் கொடுத்து கெடுத்துட்டாங்க.. சின்ன புள்ள மாதிரி பிஹேவ் செய்யறேன். அடம் பிடிக்கிறேனு குத்தம் சொல்லிட்டே இருக்கும். அவங்க கிட்ட முதல்ல சொல்லணும்.' என்றுவிட்டு தனது பாட்டியிடம் சென்றவள், தனக்கு கணவனாக வரப் போகிறவனின் நிலைமை புரிந்து அதைச் சொல்லிக் காட்டாமல்.. நாசுக்காக அவனுக்கு விட்டுக் கொடுத்ததை பெருமையாக கூறினாள்.

அவள் கூறியதைக் கவனமாக கேட்ட பாட்டி தோள்கள் குலுங்க சிரிக்க ஆரம்பித்தார்.

வித்யா “என்ன பாட்டி சிரிக்கிறே!” என்றுக் கேட்கவும், அவளது பாட்டி “நீ அவருக்கு விட்டுக் கொடுத்தியா! இல்லை இல்லை.. மாப்பிள்ளை தான்… உன்னை அவரோட வழிக்கு இழுத்திருக்கார். இது புரியலை மண்டு..” என்று அவளது தலையில் தட்டினார்.

வித்யா “என்ன பாட்டி சொல்றே!” என்றுக் குழப்பத்துடன் கேட்கவும், அவளது பாட்டி “நீ ஏமாந்தது கூடத் தெரியாம செய்துட்டார் பார்த்தியா! மாப்பிள்ளை கெட்டிக்காரர் தான்..! நானும்.. என்னடா அவனை விட இவர் பெட்டர்னு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திட்டியேனு நெனைச்சேன். உன் பிரெண்ட்ஸ் கூடப் பேசிட்டு இருந்ததையும் கேட்டு ரொம்ப கவலைப்பட்டேன். ஆனா இப்போ எனக்கு அந்த கவலை இல்லை. அவர் கூட நல்லா சந்தோஷமா இருடா! கண்டிப்பா மாப்பிள்ளை உன்னை நல்லபடியா பார்த்துக்குவார்.” என்றுவிட்டு எழுந்தார்.

ஆனால் வித்யா “ஆமா கண்டிப்பா நல்லா பார்த்து தான் ஆகணும். சும்மாயில்ல.. இரண்டு கோடி பெறுமானம் இருக்கிற தோட்டத்தை இல்ல சீதனமா கேட்டிருக்கிறார். அதைக் கொண்டு வர என்னை மனசு நோகாம பார்த்துக்கணும் தானே! அப்பறம் பாட்டி.. அவரோட கிராமத்து குசும்பை என்கிட்டவே காட்டரரா.. இருங்க.. என்னோட சிட்டி புத்திசாலித்தனத்தைக் காட்டி.. என் கைக்குள்ள முடிஞ்சு வச்சுக்கிறேன்.” என்றுவிட்டு எழுந்து சென்றாள்.

சென்றுக் கொண்டிருந்த வித்யாவை பார்த்த அவளது பாட்டி தலையில் அடித்துக் கொண்டு சிரித்தார்.

அதன் பின் திருமண வேலைகள் வெகு வேகமாக நடைப்பெற்றன.

அன்று வாக்களித்தது போல் மதியத்திற்கு மேல் செல்பேசியில் வித்யாவை அழைத்த செந்தில் மீண்டும் நலம் விசாரித்துவிட்டு வைத்துவிட்டான். அதன் பிறகு அவளை அழைக்கவில்லை. வித்யாவும் அவனை அழைக்கவில்லை. பாட்டி கூறியது போல் தன்னை அவனது வழிக்கு இழுத்து விட்டானோ.. அல்லது இந்த பாட்டி எதாவது கூறி குழப்பி விட்டுட்டாங்களா என்று குழம்பியவள், பின் அதைப் பற்றி யோசிப்பதை விட்டு விட்டாள்.

தனது தோழிகளிடம் முகூர்த்தத்திற்கு எளிமையாக தான் புடவை தேர்ந்தெடுத்தேன்.. என்று அவள்தான் புடவையை தேர்ந்தெடுத்து போன்றுக் காட்டிக் கொண்டாள். பின் வழக்கம் போல் புதிதாக திருமணம் ஆகி கிராமப்புறத்திற்கு போகிற வித்யாவை அவளது தோழிகள் கிண்டலும் கேலியும் செய்தனர்.

இவ்வாறு நாட்கள் கடந்து.. திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில்.. செந்தில்குமரன் சார்பதிவாளர் அலுவகத்திற்கு அழைத்து.. தென்னந்தோப்பை அவனது பெயரில் எழுதி தந்த பத்திரங்களை ஒப்படைத்தார்கள். பின் இரண்டு நாளில் எவ்வித தங்கு தடையும் இன்றி.. செந்தில்குமரன்-வித்யா திருமணம் அந்த நாளுக்குரிய மகிழ்ச்சியுடன் இனிதே நடைப்பெற்றது.

முகூர்த்த நாளன்று காலையில் செந்திலின் அத்தையும், அக்கா முறை கொண்டவரும் வந்து வித்யாவிற்கு முகூர்த்த பட்டுப்புடவையை கொடுத்துவிட்டுச் சென்றார்கள். முகத்தில் புன்னகையுடன் வாங்கிக் கொண்டவளுக்கு.. அந்த புடவை எளிதாக அமைந்துவிட்டது என்ற ஏமாற்றமும் போகவில்லை. அவளது பாட்டி குழப்பி விட்ட குழப்பமும் இன்னும் அடங்கவில்லை. எனவே எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி.. இருந்தவளுக்கு அலங்காரம் செய்ய வந்த பெண் கட்டிவிட்டாள். கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள் வியந்தாள். அந்த குங்கும நிற பட்டுப்புடவை அவளது உடலில் கச்சிதமாக பொருந்தி.. அவளது அழகை மேலும் கூட்டுவது போன்று இருந்தது. அவள் நினைத்தது போன்று.. சரிகை அதிகம் கொண்ட புடவை எடுத்திருந்தால்.. அவளது புடவை தான் தெரிந்திருக்கும். அவள் தெரிந்திருக்க மாட்டாள். செந்தில் கூறியது அவளுக்கு நினைவிற்கு வந்தது. தனது பாட்டி கூறியதை ஒதுக்கி.. தனக்கு மனைவியாக வரப் போறவளுக்கு சரியானது இதுதான் என்று உறுதியாக இருந்திருக்கிறான் என்றுத் தான் நினைத்தாள்.

கண்ணாடியில் உடலை திருப்பித் தன்னைப் பார்த்துக் கொண்டவளை மேலும் வியக்க வைத்தது.. அவளது முகூர்த்த புடவையின் கைசட்டை தான்! தற்பொழுது செய்வது போல் முழுக்க முழுக்க.. தெர்ஜொஸி, பீட்ஸ், ஸ்டோன்ஸ் என்றெல்லாம் வைத்து செய்யவில்லை. ஆனால் பஃப் கை வைத்திருந்தார்கள். அதுவும்.. மிக நெருக்கமாக சிறிதாக மடிப்பு வைத்து தைக்கப்பட்டு.. அதன் சரிகை பார்டர்.. அதற்கு கீழே.. வைத்து தைத்திருந்தார்கள். அவளது வெண்ணிற கைக்கு அவ்வளவு அழகை கொடுத்தது. அவளும் கண்ணாடியில் தன்னைப் பார்த்து வியந்தாள். இப்புடவையில் உறுதியாக இருந்த.. செந்திலுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

மாங்கல்யம் அணிவித்த பொழுதும் சரி.. நெற்றி வகிடில் குங்கும பொட்டிட்ட பொழுதும் சரி.. சிறு புன்னகையுடன் செய்தவனை.. மெல்ல நிமிர்ந்துப் பார்த்த பொழுது.. அதைக் கண்டுக் கொண்டு அவளுக்காக பிரத்தேகியமாக முறுவலித்தான்.

பின் திட்டமிட்டது போன்று.. கோவிலில் திருமணம் சம்பந்தமான மற்ற சம்பிரதாயங்கள் நடந்த பின்.. கோலாகலமாக வரவேற்பு விழாவும் நடைப்பெற்றது. வித்யா தான் இந்த விழாவின் கதாநாயகி என்று நினைத்தது ஏற்ப நடந்துக் கொண்டவள், தனது கணவனையும்.. கதாநாயகன் ஆக்கினாள். தனது உறவினர், நட்புகள், சுற்றுத்தாருக்கு.. அவனை அறிமுகம் செய்து வைத்து.. அவனுக்கு பதிலாக அவளே பேசி.. அவனுக்கு எந்த சிரமமும் இல்லாமல் பார்த்துக் கொண்டாள். நடுவில் அவனிடம் திரும்பி “உங்களுக்காக சிரித்து பேசி பேசி.. எனக்கு வாயே வலிக்குது.” என்றுக் கூறியவளைப் புன்சிரிப்புடன் பார்த்தான். அதற்கு நாக்கை துருத்திக் காட்டினாள். அவர்களைச் சுற்றித் தான் பல கெமராக்கள் சுழன்றுக் கொண்டிருக்கிறது என்று அவளுக்கு நன்றாக தெரியும். அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு.. அழகுற அந்த கெமராக்களில் தெரிந்தாள்.

பின் மணமக்கள் இருவரை மட்டும்.. சினிமாக்களில் வருவது போல்.. நெருக்கமாக நின்று அசைவுகளைச் செய்ய கூறினார்கள். ஆனால் செந்தில் திட்டவட்டமாக மறுத்துவிட்டான்.

வித்யா “நான் உங்க பொண்டாட்டி.. இதிலென்ன இருக்கு..” என்றுக் கேட்டாள். அதற்கு அவளைப் பார்த்து சிரிப்பையே பதிலாக தந்தான். ஆனால் மிகவும் நெருக்கமாகவும், நடன அசைவுகளையும் தவிர்த்துவிட்டு.. அவளது கரத்தைப் பற்றித் தோளில் கரத்தைப் போட்டு போஸ் மட்டும் கொடுத்தான். வித்யாவிற்கு ஏமாற்றமாக இருந்தது.

எனவே அவளது தோளில் கரத்தைப் போட்டுக் கொண்டிருந்தவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் “அவ்வளவு கூச்சமா.. அப்போ சரி! நான் நைட் ப்ரீயா.. ஜாலியா தூங்கலாம். நானும் கொஞ்சம் பயந்தேன். அதுதான் நீங்க இதுக்கே வெட்கப்படறீங்களே! அப்பறம் நீங்க எப்படி? எனக்கு வசதியா போச்சு! என் பக்கத்தில் வரக் கூடாது ஒகே..” என்றாள்.

தலையைத் திருப்பி செந்தில் மெல்ல அவளைப் பார்க்கவும், அவனது பார்வைக்காக காத்திருந்தது போல் கண்ணடித்தாள். அவனது உதட்டோரம் மெல்லிய சிரிப்பு தோன்றியது.

அவர்கள் பேசிக் கொண்டது கேட்கவில்லை என்றாலும்.. அவர்களது சிறு அசைவை கூடப் படம் பிடித்துக் கொண்டிருந்த கெமராக்கள் இதையும் படம் பிடித்துக் கொண்டது.

பின் வரவேற்பு முடிந்ததும்.. அவளை உடையை மாற்றிக் கொள்ள கூறினார்கள். முகூர்த்தத்திற்கு கட்டிய புடவையை மீண்டும் கட்டிக் கொண்டு வந்ததும்.. மணமக்கள் மற்றும் மாப்பிள்ளை வீட்டினர் அனைவரும் மாப்பிள்ளையின் வீட்டை நோக்கி சென்றார்கள். அங்கு மதிய விருந்து முடிந்ததும்.. மறுவீடு சம்பிரதாயத்திற்கு பெண் வீட்டார் வந்து அன்றே அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. பின்னர் சாந்தி முகூர்த்தம் பெண் வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்றுப் பேசி முடிவு செய்தார்கள். பின் அடுத்த நாள் காலை மாப்பிள்ளைக்கு மச்சான் எண்ணெய் தேய்ப்பது சம்பிரதாயத்தை முடித்துவிட்டு.. அன்று சனிக்கிழமை என்பதால்.. அப்படியே மருதமலை கோவிலுக்கு போக திட்டமிட்டார்கள். பின்னர் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதால் மதியம் ஒரு மணிக்கே கிளம்பி மாப்பிள்ளை வீட்டில் பெண்ணை கொண்டு வந்து விட்டுச் செல்லவதாகவும் என்றும், பின் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை இருவீட்டாருக்கும் பொதுவாக.. தென்னந்தோப்பில் கறிவிருந்து என்றுத் திட்டமிட்டார்கள்.

செந்தில்குமரனின் வீடு எவ்வாறு இருக்கும் என்று தனது தாயிடம் நச்சரித்துக் கேட்டப் பொழுது.. அவர் பழைய காலத்தில் இருப்பது போன்ற வீடு.. ஆனால் பெரியது என்றுக் கூறியிருந்தாள். எனவே சற்று பழமையான வீட்டை எதிர்பார்த்து போனாள். அதாவது செட்டிநாட்டு மாடி வீட்டை போன்று.. எதிர்பார்த்திருந்தாள். ஆனால் ஓட்டு வீட்டை கண்டதும் அதிர்ந்து நின்றாள்.

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4


செந்திலின் வீடு பழமையான தொட்டி வீடு போன்றது. முதலில் பெரிய தாழ்வாரம். அடுத்து தொட்டி வீடு போன்று இருந்தது. அங்கு இருபுறமும் இரு அறைகள் என்று நான்கு அறைகள் இருந்தன. அதில் இரு அறைகள் வடிவேல், சுமதி மற்றும் அவர்களது இரு பிள்ளைகளுக்கும், எதிர்புறம் இருப்பதில் ஒன்றில் வளர்மதியும், அவளது அன்னை தங்கமும் படுத்துக் கொள்ள.. அடுத்ததில் கந்தசாமி படுத்துக் கொள்வார். அடுத்தும்.. இதே போன்றே அமைப்புடன் இருந்தது. அதிலும்.. இரு அறைகள் இருபுறம் என்று நான்கு அறைகள் இருந்தன. அதில் ஒன்று.. சமையல் அறை! அடுத்தது சமான்கள், பொருட்கள் வைக்கும் அறை.. அதற்கு எதிரே இருந்த இரு அறையில் ஒன்று செந்திலுக்கும் அடுத்தது வேண்டாத சமான்கள் வைத்திருந்தனர். பின்னர் அடுத்து பின்வாசல் இருந்தது. அங்கு சிறு காய்கறி தோட்டமும் இருந்தன. வற்றிப் போய் மூடப்பட்ட கிணறு கூட இருந்தது. சுற்றிலும் சிறு மதிற்சுவர் என்று பெரிய பரப்பளவில் தான் அந்த வீடு இருந்தது. ஆனால்.. பழைய ஓட்டு வீடாக இருந்தது. திருமணத்திற்கு என்று வெள்ளையடிக்கப்பட்டிருந்தது.

வித்யாவுடன் வந்திருந்த அவளது சித்தப்பா பெண்ணும், அத்தையின் மருமகளும்.. அவளைப் பார்த்து உதட்டைப் பிதுக்கி காட்டிச் சிரித்தார்கள். வித்யாவும் திருதிருவென விழித்துக் கொண்டு நிற்கையில்.. அவளது கரத்தை வெதுப்பான கரம் பற்றவும், அவளது கவனம் செந்திலிடம் திரும்பியது. அவன் மென்னகையுடன் மறுகரத்தால் போகலாமா என்று முன்னால் கரத்தைக் காட்டி அவளை அழைத்துச் சென்றான்.

வாசலில் பெண்கள் கூட்டமாக நின்று.. பாட்டு பாடி.. ஆரத்தி எடுத்து.. புது மருமகளான வித்யாவை வலது கால் எடுத்து வைத்து உள்ளே அழைத்து வந்தார்கள். சாமியறைக்கு அழைத்துச் சென்று அங்கு.. விளக்கேற்ற வைத்தார்கள். பின்.. சிறு குடத்தில் மஞ்சள் நீரை கலக்கி.. அதில் தங்கம் மற்றும் வெள்ளி மோதிரத்தை போட்டு.. மணமக்களை எடுக்க கூறினார்கள்.

இருவரும் ஒரே நேரத்தில் கையை விட்டு துழாவி எடுத்தார்கள். அதில் இரு முறையும் செந்தில் தான்.. தங்க மோதிரத்தை எடுத்தான்.

உடனே வித்யாவுடன் வந்திருந்த.. அவளது உறவினர்கள் வித்யாவிடம் “கமான் வித்யா! அடுத்த முறை நீதான் எடுக்கணும். அவரோட கையை கிள்ளி விட்டாவது எடு..” என்றுக் கூறி ஆராவரித்தார்கள்.

சிலரோ “அவரோட கையை விடாதே.. கெட்டியா பிடிச்சு அதைப் பிடுங்கிரு.” என்றுப் பலவாறு அவளுக்கு யோசனை கூறினார்கள்.

வித்யாவின் செவியோரம் குனிந்த அவளது அத்தையின் மருமகள் “வித்யா! மாப்பிள்ளை முகம் உன்கிட்ட தான் இருக்கும். அப்படியே ஒரு கிஸ்ஸடிச்சுரு..! அதுல மாப்பிள்ளை மயங்கி நிற்கும் போது.. மோதிரத்தை எடுத்திரு..” என்றுக் கிசுகிசுத்தாள்.

அது செந்திலுக்கும் நன்றாக கேட்டது.

உடனே மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா.. “செந்தில் விடாதே! கடைசி முறையும் நீதான் ஜெயிக்கணும். எந்த சலசலப்புக்கும் அஞ்சாதே..” என்று அவனுக்காக வரிந்துக் கட்டிக் கொண்டு வந்தார்கள்.

உடனே பெண் வீட்டார்கள் “முதல்ல யார் பர்ஸ்ட் வருவாங்க என்கிறது முக்கியமில்ல.. கடைசில யார் முதல்ல ஜெயிக்கிறாங்க என்கிறது தான் முக்கியம். அது எங்க வித்யா தான்..” என்று அவர்களும் வரிந்துக் கட்டிக் கொண்டு வந்தார்கள்.

மாப்பிள்ளை வீட்டாரும் “செந்திலு..! நீதான்டா எடுக்கணும்.” என்று ஆராவரித்தார்கள்.

வித்யா அவனைப் பார்த்து புருவத்தை.. உயர்த்திக் காட்டிச் சிரித்தாள். பின் மூன்றாவது முறையாக இருவரும் ஒரே நேரத்தில் கையை விட்டார்கள். வித்யா அவனது கரத்தைப் பற்றித் தடுக்க நினைக்கையில்.. செந்திலே அவளது கரத்தில் மோதிரத்தை வைத்து அழுத்தினான். வித்யா வியப்புடன் கண்களை விரித்தாள். செந்தில் முறுவலிக்கவும், வித்யா கலகலத்தவாறு தனது கையில் இருந்த மோதிரத்தை உயர்த்திக் காட்டிச் சிரித்தாள்.

செந்திலின் சொந்தங்கள்.. “என்ன செந்திலு..” என்றாலும்.. அந்த கல்யாணக் கலாட்டாவை அனைவரும் இரசித்தார்கள். பின்னர் மணமக்களுக்கு பால் பழம் கொடுத்தார்கள். பிறகு அங்கு இருந்த வீட்டு பெரியர்கள் மற்றும் ஊர் பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசிப் பெற்றார்கள். காலில் விழுந்து எழுந்து.. வித்யாவிற்கு இடுப்பு வலியே பிடித்துக் கொண்டது. தனது புது சித்தியை ஆர்வத்துடன் பார்த்த செந்திலின் அண்ணன் பிள்ளைகளை அருகே அழைத்த செந்தில்.. சித்திக்கு வீட்டை சுற்றிக் காட்டக் கூறினான். இந்த வீட்டில் சுற்றிப் பார்க்க என்ன இருக்கிறது என்று நினைத்தாலும்.. அப்படி எவ்வாறு இருக்கிறது என்றுப் பார்க்க சென்றாள். பார்த்தளவில் அவளுக்கு பார்த்த சில கிராமத்து சினிமாக்களில் வரும் வீடு தான் நினைவிற்கு வந்தது.

பின் தனது மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டாள்.

‘என்னை விட எல்லா விசயத்திலும்.. கொஞ்சம் தாழ்ந்தவரா, சொல்றபடி கேட்கிற கிராமத்து மாப்பிள்ளை வே்ண்டும் என்று மேரேஜ் செய்துட்டு வீட்டை மட்டும் சிட்டி ஸ்டைலில் எதிர்பார்த்தால்.. எப்படி வித்யா! வெயிட் வெயிட் எல்லாம் உனக்கு பிடிச்சபடி மாத்தலாம்.’

ஆனால் இன்னொரு விசயத்திற்காக இந்த வாழ்க்கையிலும் ஜம்பமாக வாழலாம் என்று இருந்தது. அது என்னவென்றால்.. செந்திலின் தூரத்து உறவினர்கள் மற்றும் அந்த ஊர் மக்கள் அவளை அதிசயத்துடனும், ஆர்வத்துடனும்.. ஆங்காங்கு நின்றுக் கொண்டு.. பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து வித்யா புன்னகைக்கவும், அதற்கே அவர்களுக்கு அத்தனை சந்தோஷம்! அது வித்யாவிற்கு சிறு போதை போன்று இருந்தது.

பின் வாசலில் வந்து நின்றவளுக்கு அந்த சின்ன மதிற்சுவரைத் தாண்டி தெரிந்த பச்சை பசலென்ற வயல்வெளிகள் புத்துணர்வை தந்தது.

அப்பொழுது வித்யாவின் பெற்றோர் மற்றும் சித்தப்பா, சித்தி, அத்தை மற்றும் மாமா.. வந்து வித்யாவை மறுவீடு அழைக்க வந்துவிடவும், மணமக்கள் அவர்களுடன் பயணித்தவர்கள், மாலை நேரம் ஆறை தொட்ட போது.. மறு வீடு வந்திருந்தார்கள். போனவுடன் தனது அறைக்கு செல்ல இருந்தவளைப் பற்றி.. பானுமதி.. அவர்களுடைய அறைக்கு திருப்பிவிட்டாள். அங்கு சென்றதும் படுக்கையில் விழுந்தவளைப் பற்றி எழுப்பி.. குளித்துவிட்டு வரக் கூறி.. இரவு சம்பிரதாயத்திற்கு தயார்படுத்தினார்கள்.

மிகுந்த சோர்வுடன் இருந்த வித்யா.. அறைக்குள் தனியாக விட்டால்.. என்ன பேச வேண்டும் என்றுத் தீர்மானித்துவிட்டாள். அதுதான் வாழ்க்கை முழுவதும் இருக்கே இன்று டையர்டா இருக்கிறது என்றுச் சொல்லலாம் என்றுத் தீர்மானித்தவளுக்கு சிரிப்பும் வந்தது.

‘அந்த கூச்சக்கார மாமா சந்தோஷமாக ஒத்துக் கொள்வார்.’

அதன்படி எளிமையாக அலங்கரிப்பட்ட அறைக்குள் விட்டதும்.. பாலை பரிமாறிக் கொண்ட பின்.. வித்யா நினைத்ததைச் சொல்ல வாயைத் திறக்கையில்.. செந்தில் “இன்னைக்கு சோர்வா இருக்கும். நல்லா படுத்து ரெஸ்ட் எடுத்துக்கலாம்.” என்றான்.

அதற்கு வித்யா “பரவாலையே! மனைவிக்கு என்ன பேசினா பிடிக்கும், சந்தோஷப்படுவாள்.. உங்களைப் பற்றி நல்லவிதமா நினைப்பாள் என்றுக் கூடத் தெரியுமா மாமா!” என்றுச் சிரித்தவள், “ஐயம் வெரி ஹாப்பி..” என்றுவிட்டு.. நைட்டியை மாற்றிக் கொண்டு வந்தவள், கட்டிலின் ஒருபக்கம் படுத்து முதுகை காட்டிப் படுத்துக் கொள்ளவும், கட்டில் அசைந்ததில் அவனும் படுத்துவிட்டான் என்றுத் தெரிந்தது. வித்யா தலையில் அடித்துக் கொண்டாள்.

என்ன தான் மனைவியிடம் நல்ல பெயர் வாங்க என்று வசனம் பேசிவிட்டு.. பிறகு தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் நெளிவான், தன்னிடம் வழிவான் என்று நினைத்திருந்தாள். ஆனால்.. அப்படியெல்லாம் இல்லாமல், திரும்பி படுத்து உறங்கி விடவும், வித்யாவிற்கு.. சிறு ஏமாற்றமாக இருந்தது.

வித்யா மனதிற்குள் ‘இந்த மக்கு மாமாவை மாத்த வேண்டியது நிறையா இருக்கு போல..’ என்று நினைத்தவள், தொடர்ந்து ‘இப்படி பயப்படற ஆளா இருந்தால் தான்.. நல்லது. அவருக்கு ஆசையை கிளப்பிவிட்டு.. அடிமையாக்கி.. நம்ம பின்னாடி சுத்த வைக்கலாம்.’ என்று நினைத்தபடி உறங்கிப் போனாள்.

அடுத்த நாள் சம்பிரதாயமான வித்யாவின் தம்பி முறையில் இருந்த சித்தப்பா பையனை கொண்டு எண்ணெய் தேய்ப்பு சம்பிரதாயம் நடந்தது. பின்.. செந்தில் வித்யாவோடு.. அந்த வீட்டின் இளைய பட்டாளங்கள்.. ப்ரூக் ஃபீலுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்களுடன் வித்யா கொட்டமடித்தாள். செந்தில் அவர்களுடன் அதிகம் கலக்காது கேட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதிலும் கிண்டல் கேலிக்கு புன்னகையுமே பதிலாக தந்தான். ஆனால் வித்யா வளவளவென பேசியவாறு அடித்து பிடித்து விளையாடினாள். அதை செந்தில் சற்றுத் தள்ளி நின்று புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதை உணர்ந்து மேலும் வித்யா தன் வயது உறவுகளுடன் அதிகம் ஆட்டம் போட்டாள். அவள் எப்படிப்பட்டவள், அவளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தாள். மதிய வேளையைத் தாண்டிய பின்பே அனைவரும் வந்தார்கள். பின் சிறிது ஓய்வுக்கு பின்.. மருதமலைக்கு பயணித்தார்கள். வித்யாவின் அதே உறவுகள் உடன் வந்தனர். ஆனால் பெரியவர்கள் உடன் வருவதால் சற்று அடக்கி வாசித்தார்கள். மலைக்கு காரிலேயே சென்றவர்கள். இருள் பரவ தொடங்கும் வேளையில் மலையிறங்கி.. செந்திலின் வீட்டை நோக்கி செல்லும் போது.. வித்யாவிற்கு திடுக்கென்று இருந்தது.

ஆம் அவள் அவளது வீட்டை விட்டு.. இன்னொருத்தரின் வீட்டிற்கு செல்ல போகிறாள். இனி அங்கு தான் அவர்களைத் தன் உறவாக ஏற்று வாழப் போகிறாள். என்ன தான்.. அழகான திருமண வாழ்க்கைக்கு தயாராக இருந்தாலும்.. இந்த திடுக்கிடும் உணர்வை அவளால் தடுக்க முடியவில்லை.

இத்தனை நேரம் தனது உறவுகளின் வட்டத்திற்குள் இருந்தவளுக்கு.. இந்த உணர்வு தோன்றவில்லை. அவளது வீட்டில்.. அவளைப் பிரதானப்படுத்தி நடக்கும் ஒரு விழா என்பது மட்டுமே மனதில் இருந்தது. ஒரு மகளாய் பிறந்து வளர்ந்ததால்.. வித்யா சொந்தங்களின் சூழலில் எப்பொழுதும் இருக்க விருப்பப்படுவாள். ஆனால் அவன் தனித்து இருக்க வேண்டும் என்று நினைத்தாள். அவளுக்கு தனிமை ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும். இல்லையெனில் அவளே ஒதுங்கி விடுவாள். அவளது முடிவுகளை அவளே எடுக்க வேண்டும். மற்றவர்கள் எடுப்பதாய் இருந்தால்.. அவள் விருப்பப்படி தான் எடுக்க வேண்டும்.. என்றுத் தனித்து செயல்படுபவளாகவும், சுயமரியாதையுடனும், சுதந்திரமாகவும்.. வாழ்ந்த வித்யா தனது வாழ்வில் இன்னொருவனுடன் இணைய போகிறாள். அவளது முடிவை மட்டுமில்ல.. அவனுக்காகவும்.. சில சமயங்களில் முடிவு எடுத்தாக வேண்டும். அதே போல் தான் அவனுக்கும்..! அவளது வாழ்வில் இனி என்ன எதிர்பாராத நிகழ்வுகள் நடக்க போகிறது என்றுத் தெரியாது.. அவளது புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள்.

அவளிடம் அவளது பெற்றோர் கண்கள் கலங்க விடை பெற்ற பொழுது.. வித்யாவின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் பெருகியது. கணேஷன் பெருக தொடங்கிய கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு சற்றுத் தள்ளி நின்றுக் கொண்டு தலையை மட்டும் அசைத்தார். அது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமமானது. பானுமதி அவளது தலையை வருடிக் கொடுத்து “கெட்டிக்காரியா இருந்துக்கோடா! செந்தில் உன்னை நல்லபடியா பார்த்துப்பான்.. என்கிற நம்பிக்கை எங்களுக்கு வரதை விட.. உனக்கு வரணும். அதைக் கண்டிப்பா அவன் நிறைவேற்றுவான். நல்லாயிருடா!” என்றார்.

அருகில் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்த வித்யாவின் அத்தை “நாளைக்கு கறிவிருந்திற்கு நாங்க வருவோம் வித்யா! ஆனா விருந்தாளியா வருவோம். ஆமாடா! இனி எங்களை விட.. உன் ஹஸ்பென்ட் தான் நெருங்கிய உறவுக்காரன்” என்றார்.

அவருக்கு பின்னால் நின்றிருந்த கணேஷன் “அக்கா! பேச தெரியலைன்னா பேசமா இரு! எப்போ எதைப் பேசறதுனு தெரியலை.” என்றுக் கடிந்தான்.

பின் அனைவரும் விடைப்பெற்றுச் சென்றதும்.. தான் வித்யாவிற்கு திருமணம் என்றால் வெறும் கொண்டாட்டம் மட்டுமில்ல என்றுப் புரிந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு வந்தவளை.. வளர்மதி “வாங்க அண்ணி..” என்று உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள். அங்கு அவளது அறை என்று செந்திலின் அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கு அவளது உடைமைகள் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. கணேஷன் சீதனமாக கொடுத்த.. கட்டில், டிரெஸிங் டேபிள், பீரோ, சிறு ஸ்டேடி டேபிள், சிறு ஏர்குலர்.. என்று அந்த அறையை அலங்கரித்து இருந்தது.

வளர்மதி “அண்ணி! பெட்டியில் இருக்கிறதை பீரோவில் அடுக்கி தரட்டுமா..” என்றுக் கேட்டாள். இதுவரை அவளது வேலைகளை அவளே செய்துப் பழக்கப்பட்டிருந்த வித்யாவிற்கு.. அவளுக்கு வேலை செய்து தருகிறேன் என்று ஒருவர் கூறுவதும் நன்றாக தான் இருந்தது.

எனவே “உங்க பேர் என்ன சொன்னீங்க! ஸாரி் நேத்து சொன்னீங்க மறந்துட்டேன்.” என்றாள்.

வளர்மதிக்கு முகம் சுருங்கிப் போனாலும் “வளர்மதி அண்ணி!” என்றாள்.

“நைஸ் நேம்! இப்பவே லேட் நைட் ஆகிருச்சு! நான் கொண்டு வந்தது எல்லாத்தையும் அடுக்கி வைக்க ஆரம்பித்தால்.. லேட் ஆகிரும். அதனால.. நாளைக்கு.. வேண்டாம். நாளைக்கும் பிஸியா இருப்போம். அப்பறம் நான் புல்லா இங்கே தானே இருக்க போகிறேன். அப்பறம் இந்த வேலையைப் பார்த்துக்கலாம்.” என்றாள்.

வளர்மதி எதையோ வாயைத் திறந்தவள், பின் தயக்கத்துடன் சரி என்றுத் தலையை ஆட்டிவிட்டு செல்ல திரும்பினாள்.

வித்யா “வளர்மதி! கதவைச் சாத்திட்டு போயிரு.. அங்கே வாசலில் கொஞ்ச பேர் உட்கார்ந்திருக்காங்க! அவங்கெல்லாம் யார் என்றுத் தெரியாததால் எனக்கு கொஞ்சம் அன்ஈஸியா இருக்கு..” என்றாள்.

அதைக் கேட்டு வளர்மதியின் முகத்தில் சிறுத் திகைப்பு தோன்றி.. மறைத்தது. பின் அதற்கும் சரி என்று தலையை ஆட்டிவிட்டு வித்யா கூறியதைப் போல் கதவை சாத்திவிட்டு சென்றாள். சாத்தியிருந்த கதவைப் பார்த்து வித்யா முறைத்துக் கொண்டிருந்தாள்.

ஏனெனில் அது வேலைப்பாடுகள் செய்த பழையக் கால அது!

அழகான கதவு தான்.. ஆனால்.. அதில் அந்த கதவை வைத்து நேற்று அவளது சொந்தங்கள் கிண்டலடித்தது தான் நினைவிற்கு வந்தது.

நேற்று இரவிற்கு சாந்தி முகூர்த்தத்திற்கு என்று வித்யா தயாராகிக் கொண்டிருந்த பொழுது.. அவளின் அத்தை மருமகள் உடன் நின்றிருந்த சம வயது பெண்களிடம் “நாளைக்கு வித்யா என்ன செய்யப் போகிறாள் என்றுத் தெரியலை.” என்றுச் சிரித்தாள்.

மற்றவர்கள் “இன்னைக்கு விட்டுட்டு நாளைக்கு பத்தி பேசிட்டு இருக்கிறே..?” என்றுக் கேட்டார்கள்.

அதற்கு அவள் “நாளைக்கு நான்.. வித்யா வீட்டுக்கு போகலானு இருக்கேன்.” என்று மொட்டையாக கூறினாள்.

அவள் கூறிய விதத்தில் மற்றவர்களுடன் வித்யாவும் என்ன விசயம் என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

“வித்யா வீட்டுல இருக்கிறது.. பெரிய மரக்கதவு! புதுசுன்னா கூட.. நல்லா பிட்டா செட்டாயிருக்குனு இருக்கலாம். ஆனா.. அந்த கதவு ரொம்ப பழசா.. அதனால தேய்ஞ்சு போய்.. கேப் தெரியுது. அது வழியா சவுண்ட் எஃப்ட்ம் கேட்கும். கிட்டப் போய் ஒத்த கண்ணை மூடி.. பார்த்தா ஷோவே தெரியலாம்.” என்றுச் சிரிக்கவும், மற்றவர்கள் உடன் சிரித்தார்கள்.

அப்பொழுது வெட்கத்துடன் சிரித்தவளுக்கு.. தற்பொழுது.. தன்னை மட்டம் தட்டிச் சிரித்தது போன்று இருந்தது. எனவே அந்த கதவைப் பார்த்து முறைத்தவளுக்கு செந்தில் வந்ததும்.. இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.

பின் நினைத்த மாத்திரத்தில் வெட்கத்துடன் முகத்தை மூடிக் கொண்டாள்.

‘இப்படி வெட்கம் கெட்டு என்னை நெனைக்க வச்சுட்டானே.. இதெல்லாம் அவன் போட வேண்டிய பிளன்! நான் போட்டுட்டு இருக்கேன்.’

அப்பொழுது வளர்மதி கதவை திறந்துக் கொண்டு வந்து.. “அண்ணி! அம்மா உங்களைச் சாப்பிடக் கூப்பிட்டாங்க..” என்று அழைத்தாள்.

வெளியே வந்த வித்யா அங்கு பந்தி பாய் விரித்து அனைவருக்கும் இட்லியும் கிச்சடியும் பரிமாற பட்டிருப்பதைப் பார்த்தாள்.

மொத்தம் மூன்று வரிசையாக போடப்பட்டிருந்த பந்தியில் இரண்டு வரிசையில் ஆண்களும் ஒரு வரிசையில் சிறுவர் சிறுமிகளும் சாப்பிட அமர்ந்திருந்தார்கள். சிறுவர்கள் அமர்ந்திருந்த வரிசையில் இரு இலைகள் காலியாக இருந்தன. அது தனக்கும் தனது கணவனுக்கும்.. என்றுத் தெரிந்தது.

வித்யாவை பார்த்ததும்.. அவளது மாமியார் தங்கம் வித்யாவை அழைத்தார்.. அவளும் அமரப் போனாள். அதற்குள் அவளைத் தடுத்தவர் “இரு வித்யா! உன்ற புருஷனையும் வரச் சொல்றேன்.” என்றவர், வளர்மதியிடம்.. கேட்டார்.

தங்கம் “மலரு! அண்ணனையும் கூப்பிடச் சொன்னேன் தானே..” என்றுக் கேட்டார்.

வளர்மதி சட்னி இருந்த பாத்திரத்தை கையில் எடுத்தவாறு “அண்ணனை கூப்பிட்டேன்மா..! நீ போ நான் வரேனு சொல்லிட்டாங்க” என்றாள்.

தங்கம் “செந்திலு எங்கே..” என்றுக் கேட்டார்.

வளர்மதி “பொடகாளில இருக்கு (பின்வாசல்)” என்றாள்.

தங்கம் பின்வாசல் கதவிடம் சென்று நின்றுக் கொண்டு.. அங்கே தனது தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த செந்திலை அழைத்தார்.

“செந்திலு..”

“என்னம்மா..” என்றவாறு அருகே வந்தவனிடம் “சாப்பிட வாடா..” என்றார்.

அதற்கு செந்தில் “நான் எப்பவும்.. பத்து மணிக்கு தான் சாப்பிடவேனு தெரியும் தானே. இந்த இரண்டு நாளா.. வேற வழியில்லாம ஒன்பது மணிக்கு சாப்பிட்டுட்டு இருந்திருக்கேன்.” என்றான்.

தங்கம் “உன்ற பொண்டாட்டி உனக்காக காத்திட்டு இருக்காங்க இல்ல..” என்றார்.

செந்தில் எட்டிப் பார்த்தான். அங்கு வித்யா நின்றுக் கொண்டு அவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். செந்திலை பார்த்ததும்.. அவனது உறவுக்கார ஆண்கள் “ஏன்ற செந்திலு! மொத நாளே பொண்டாட்டியே காக்க வக்கறீயே..” என்றுக் கிண்டலடித்தார்கள்.

உடனே செந்தில் “நீ சாப்பிடு வித்யா! நான் அப்பறம் சாப்பிட்டுக்கிறேன். இனி சாப்பிடறதுகுனு எனக்காக காத்துட்டு இருக்காதே! நான் எல்லா நேரமும் லேட்டா தான் சாப்பிட்டு பழக்கம்..” என்றான்.

அதற்கு வித்யா “நான் சாப்பிடத் தான் போனேன். அத்தை தான்.. நீங்க வரட்டும் வெயிட் செய்யுனு சொன்னாங்க..” என்றாள்.

அதைக் கேட்ட மற்றவர்கள் ஒரு மாதிரி செந்திலையும் வித்யாவையும் பார்த்து சிரித்தார்கள்.

செந்தில் தனது அன்னையை பார்த்தவாறு இடுப்பில் கட்டியிருந்த வேட்டியை அவிழ்ந்து மீண்டும் கட்டினான். அவனின் பார்வைக்கும் அவனது செய்கைக்கு அர்த்தம் புரிந்த தங்கம் தப்பு செய்த பிள்ளைப் போல்.. விழித்தார்.

பின் செந்தில் வித்யாவிடம் “சரித்தான் நீ சாப்பிடு வித்யா..” என்றுவிட்டு அகன்றான்.

பின் அனைவரும் சாப்பிடவும், பெண்கள் பரிமாறினார்கள். வித்யாவிற்கு ‘அடப் பரவாலையே! புதுசா கல்யாணம் ஆனதாலே தனக்கு இராஜமரியாதையோ’ என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் ஆண்கள் சாப்பிட்டு எழுந்ததும் பெண்கள் பந்தியில் அமர்ந்திருந்தவர்களுக்கு.. வித்யாவை பரிமாறக் கூறவும், அவள் அதிர்ந்து தான் போனாள்.

பரிமாறுவதற்கு அவள் தயங்கவில்லை. கணேஷனது உறவினர் திருமணத்தில் இவ்வேலைகளை இழுத்து போட்டு செய்வாள். ஆனால் இங்கு அனைவரும் தரையில் அமர்ந்திருந்ததால்.. குனிந்தல்லவா பரிமாற வேண்டும். அதற்கு தான் அதிர்ந்தாள்.

நல்லவேளை அவளுடன் சாப்பிட்ட சில இளைஞர்கள் அண்ணி, அக்கா என்று இணைந்துக் கொண்டனர்.

பின்னர் செந்திலும் அவனது தந்தையும்.. அவருடன் இரு ஆண்களும், நாலு பெண்களும் வந்தார்கள். அந்த இரு ஆண்கள் மற்றும் நாலு பெண்களுக்கு வாசல் அருகேவும், செந்தில் மற்றும் கந்தசாமிக்கு நடுவீட்டிலும் பரிமாறப்பட்டது.

அவர்களுக்கு பரிமாற இட்லி வைக்கப்பட்ட பாத்திரத்தை வித்யா எடுக்கவும், அவளைத் தடுத்த தங்கம் “அவங்க சோறு தான் சாப்பிடுவாங்க..! முதல்ல மாமாவுக்கும், செந்திலுக்கும் வச்சுட்டு.. அப்பறம் அவங்களுக்கு வை! அவங்க ரொம்ப காலமா இங்கே வேலை செய்யறவங்க..” என்றார்.

வித்யா “ஓகே..” என்றுப் புன்னகைத்தாள்.

செந்திலும், கந்தசாமியும் சாப்பிட்டு எழுந்ததும்.. அவர்கள் முன் கூடத்திற்கு சென்றார்கள். தங்கமும், சில உறவுக்கார பெண்களும்.. காலியான பாத்திரங்களை.. கழுவ பின்கட்டில் எடுத்து வைப்பது.. மீதமானதை எடுத்து வைப்பது என்று வேலையில் ஈடுபடவும், வித்யா தனக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்ற பொழுது நேரம் பத்தரையை கடந்திருந்தது.

தனது அறைக்கு சென்று கதவை சாத்தினாள். அது பெரிய சத்தத்துடன் மூடவும் திகைத்தாள். அடுத்து தாழ்பாளை கொண்டு மூட எண்ணியவள், தாழ்பாள் போட முடியாமல் கதவு சற்று கீழே இருப்பதை பார்த்தாள். அதனால் சரியாக பொருந்தவில்லை. வித்யா அதிர்ந்து தான் போனாள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்துவிட்டாள்.

அவளுக்கு சீதனமாக வந்த ஆளை அமுக்கும் இலவம் பஞ்சு மெத்தையில் படுத்ததும்.. அவளது கண்கள் தானாக சொருகியது. திடுமென கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள், கதவருகே செந்தில் நிற்பதைப் பார்த்தாள்.

செந்தில் “பயந்துட்டியா! போக போக பழகிரும்.” என்றுச் சிரித்தான்.

வித்யா “நீங்களா..” என்று கைமறைவில் கொட்டாவி விட்டபடி நேரத்தைப் பார்த்தாள். அது பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

செந்தில் “உன்னோடது எல்லாம் அடுக்கி வைக்கலையா! மலரை அனுப்பினேனே!” என்றான்.

வித்யா “வளர்மதியா! வளருன்னு கூப்பிடுவாங்க.. இல்லைன்னா மதின்னு கூப்பிடுவாங்க.. அதென்ன மலர்?” என்றுக் கேட்டாள்.

செந்தில் “சின்ன வயசுல இருந்து அப்படித்தான் கூப்பிடுவோம். ஏன் எடுத்து வைக்கலை..” என்றவாறு வந்தான்.

அதற்கு வித்யா “இப்படி நடுராத்திரில எழுப்பி.. இப்போ இதுதான் முக்கியமா..” என்றுவிட்டு மீண்டும் படுத்தவளுக்கு அவனது கூச்ச சுபாவம் நினைவிற்கு வரவும், அவனைச் சீண்ட எண்ணி படுக்கையில் இருந்து எழுந்தவள் “இந்த நேரத்தில் புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு எது முக்கியம் என்றுக் கூட உங்களுக்கு தெரியலையே! உங்களை வச்சுட்டு நான் என்ன செய்யப் போறேன். பொதுவா.. இந்த சிட்டிவேஷன்ல நான் வெட்கப்பட்டு கூச்சப்பட்டு நிற்கணும். ஆனா நீங்க நின்னுட்டு இருக்கீங்க..! சரி என் புருஷன் தானே.. நானே பர்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வைக்கிறேன். இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ.. ஆனா அதுக்கு முன்னே.. அந்த க.. க… கத..” என்று வார்த்தை தந்தியடித்தாள்.

ஏனெனில் செந்தில் கண்களில் பளபளப்பும் உதட்டில் குறுஞ்சிரிப்புடன் அவளை நோக்கி மெதுவாக எட்டுக்களை எடுத்து வைத்து வந்துக் கொண்டிருந்தான். ஏனோ அவளது கால்கள் தானே பின்னே எட்டுக்களை எடுத்து வைத்தன.







 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5


செந்தில் துளையிடும் பார்வையுடன் அவளை நோக்கி வரவும்.. அவளது கால்கள் தானே பின்னால் சென்றன.

அதற்குள் அவன் அருகில் வந்துவிடவும், மெல்ல வாயைத் திறந்து “எ..எ..என்ன மா.. மா. மா..” என்றுக் கேட்டாள்.

செந்தில் “நீ கேட்டதை செய்யணுமில்ல..” என்றான்.

வித்யா “ஙெ” என்று விழிக்கவும், செந்தில் “இறுக்கி கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்க சொன்னே இல்ல..” என்றுச் சிரித்தான்.

வித்யா இன்னும் திகைத்தவளாய் “அச்சோ சத்தமா பேசாதீங்க மாமா.. அந்த கதவு..” என்று அவனைத் தாண்டிக் கதவைப் பார்த்தாள். கதவு சரியாக சாத்தப்பட்டிருந்தது.

செந்தில் “கதவை தாழ் போட்டுட்டேன் வித்யா..” என்றுச் சிரித்தான்.

ஆனால் வித்யா திகைப்புடன் அந்த கதவை நோக்கி சென்றாள்.

“இந்த கதவு எப்படி சாத்துச்சு! நான் சாத்தும் போது.. சரியா சாத்தலையே! கதவு கீழே இறங்கியிருந்துச்சு..” என்றாள்.

செந்தில் “ஓ.. அதுதான் பயந்துட்டியா..” என்று கதவருகே வந்தவன், தாழ்பாளை தள்ளினான். தற்பொழுது அந்த கதவு பழையபடி கீழே இறங்கி இருந்தது.

செந்தில் “இது பழைய மரக்கதவு வித்யா! அதனால கரையான், எறும்பு எல்லாம் அரிச்சும், கதவு ஜாயின்ட் இருக்கிற இரும்பு துருப்பிடிக்கிறதாலேயும்.. இப்படி கதவு கீழே இறங்கிருச்சு! இதை என்னவோ பெரிய பிரச்சினை மாதிரி இப்போ பேசிட்டு இருக்கிறே..” என்றான்.

ஆனால் வித்யா தன்னுடைய தலையாய பிரச்சினையான கதவைப் பற்றிப் பேசினாள்.

“நான் கதவு லாக் செய்யறது என்றாலும்.. இப்படி” என்றவாறு அந்த கதவை தூக்க முயன்று.. “என்னால முடியலையே..” என்றாள்.

அதைப் பார்த்து சிரித்த செந்தில் அதைப் பிடித்து தூக்கி காட்டி “இப்படிப் பிடிச்சு தூக்கணும். முதல்ல கஷ்டமா இருந்தாலும் அப்பறம் பழகிரும்.” என்றான்.

அதற்கு வித்யா “இப்படி இந்த கதவு கூட சண்டை போட்டுட்டு இருக்கிறதுக்கு வேற கதவு மாத்திரலாமே..” என்றாள்.

அதைக் கேட்ட செந்தில் அந்த கதவில் ஒரு கையை ஊன்றி அவளைப் பார்த்தவாறு நின்று “எவ்வளவு ஈஸியா மாத்திரலானு சொல்லிட்டே! அதுசரி.. இந்த நேரத்தில் கதவை எப்படிச் சாத்திரதுனு சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன் பாரு..! என்ன சொல்லணும்.” என்றான்.

வித்யா ‘உஷ்..’ என்கவும், சட்டென்று கதவைத் திறந்தான்.

அங்கு யாரும் இல்லை.

வித்யா மெல்ல எட்டிப் பார்த்து “எல்லாரும் தூங்கறாங்களா..” என்று வெளியே செல்ல முயன்றவளின் கரத்தைப் பற்றி “நாம் நம்ம வேலையைப் பார்க்கலாமா..” என்றுக் கேட்டான்.

வித்யா “யாராவது வந்திர போறாங்க..” என்றுப் பதறவும், அவளது கரத்தைப் பற்றி.. இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். வித்யா மேலும் பதறியவாறு “அச்சோ மாமா! என்னதிது!” என்று அவனிடம் கையை உருவிக் கொண்டு ஓட முயன்றாள்.

ஆனால் செந்தில் “யாரும் இங்கே வர மாட்டாங்க! நீ ஆசைப்பட்ட மாதிரி.. இங்க டூயட்டே ஆடலாம். முன்னாடி கதவு, பின்வாசல் கதவு ரெண்டும் தாழ் போட்டிருக்கு.. பார்!” என்றான்.

இரு பக்கமும் தலையைத் திருப்பிப் பார்த்தவள், “ஆமா..” என்றுச் சிரித்தாள்.

அவளை கிண்டல் செய்த அவளது அத்தை மருமகளிடம் இந்த பெரிய இடம் முழுவதும் எங்களுக்கு தான், எங்களுக்கு‌ பிரைவேஸிக்கு இருக்கு என்றுச் சொல்லணும்.. என்று நினைத்துக் கொண்டாள்.

இன்னும் அவனது கரத்தில் சிக்குண்டு இருந்திருந்த அவளது கரத்தைப் பற்றி இழுத்தவன், “வித்யா! என்னை மாமா என்றுக் கூப்பிடாதே! என்னை மாமா என்றுக் கூப்பிட்டால்.. என் அப்பாவையும் மாமா என்றா கூப்பிடுவே. அதுனால வாங்க போங்கனு மரியாதையா பேசு போதும். இப்போ சொல்லு..! நான் என்ன செய்யணும்? அப்போ கேட்டதைச் செய்யவா! ஃபோட்டோ ஷுட் செய்யற போது என்ன சொன்னே..” என்றுச் சிரித்தான்.

ஆறடியில் ஆண் மகனாய்.. கணவனுக்கு உரிமையான பேச்சில் வித்யாவிற்கு தனது தோழிகளிடம்.. ஜம்பமாய்.. கணவனை மயக்கி கைப்பிடிக்குள் வைத்துக் கொள்வேன் என்று வீர வசனம் பேசியது எல்லாம் மறந்துப் போயிற்று.

எனவே வித்யா “அப்போ ரொம்ப நல்ல பையன் மாதிரி பிஹேவ் செய்தீங்க! ரொம்ப கூச்சப்படறது மாதிரி காட்டிக்கிட்டிங்க.. மா..” என்றுக் கடைசியில் மாமா என்றுக் கூற வந்தவள், கட்டுப்படுத்திக் கொண்டாள்.

அதைக் கண்டு கொண்டவனின் புன்னகை மேலும் விரிந்தது. எனவே “பொண்டாட்டி கிட்ட என்ன கூச்சம் வேண்டி கிடக்கு..” என்றுச் சிரித்தவாறு அவளுக்கு அருகில் வந்திருந்தான்.

வித்யா “அப்போ! ரிசப்ஷன்ல ஃபோட்டோ ஷுட்ல அவங்க சொன்னதை எல்லாம் செய்ய மாட்டேனு சொன்னீங்க..” என்றாள்.

அதற்கு செந்தில் “என் பொண்டாட்டியை நான் எதுக்கு மற்றவங்க முன்னாடி தொட்டு கட்டிப்பிடிக்கணும்?” என்றுக் கேட்டான்.

உடனே வித்யா “இதுல என்ன இருக்கு..” என்றாள்.

செந்தில் “இதில் என்னவா..!” என்று அவளை மறுகரத்தால் வளைத்தான். இருவரின் நெருக்கத்தில் ஒருவரின் வெம்மையை மற்றவர் உணர்ந்தார்கள். அது மட்டுமில்லாது.. தங்களது உடலிலும் ஏதோ மாற்றத்தை உணர்ந்தார்கள்.

அவளைத் தனது கை வளைக்குள்.. வைத்தவாறு “ஒருத்தன் கெமரா மூலம் உத்துப் பார்த்துட்டு இருக்கும் போது.. இந்த மாதிரி.. நீயும் நானும் மட்டும் உணரதை.. படம் பிடிக்க சொல்றீயா..” என்றுக் கேட்டான்.

ஆம் அவர்கள் இருவருக்கும் மட்டுமான உணர்வு அது! இதுவரை அறியாத உணர்வால் சிக்குண்டு இருந்தவளுக்கு வார்த்தைகளும் தொண்டையில் சிக்கிக் கொண்டது.

அவளது நிலை புரிந்து சிரித்த செந்தில் மெதுவாக தனது கரங்களை அகற்றினான். பின் “எப்பவும்.. சட்டுனு இந்த மாதிரி இனி பேசாதே! சரி போய் படுக்கலாமா! காலைல மால், அப்பறம் கோவில் என்றுச் சுற்றியதில் சோர்வா இருக்கும்.” என்று அவன் முன்னால் செல்லவும், அவளும் பின்னால் சென்றாள்.

அறைக்கு சென்றவன், படுக்காமல் வித்யாவின் உடைமைகள் கொண்ட நான்கு பெரிய பெட்டிகளைப் பார்த்தான்.

“நாளைக்கு விருந்து என்கிறதாலே.. நாளைக்கும் உனக்கு நேரமிருக்காது.” என்றவன், பெட்டிகளை சுவற்றோரம் அடுக்கி.. அதன் மேல் துணியை கொண்டு போர்த்தி அதை மறைத்தான். பின் திருப்தியுற்றவனாய் படுக்கையிற்கு சென்றுப் படுத்தான்.

அவன் செய்ததைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் படுத்ததும் தோள்களைக் குலுக்கிவிட்டு மறுபக்கம் அவளும் படுத்துக் கொண்டாள். படுத்தவளுக்கு சற்று முன் உறங்கி விட்டதால்.. உடனே உறக்கம் கொள்ளவில்லை. எனவே எண்ணங்களை அதன் போக்கில் விட்டாள்.

அதுவரை அவளையும்.. அவளது பெற்றோர் விட்டு வந்ததையும் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு.. அருகில் கணவனாய் ஆகியவனைப் பற்றி எண்ணப் போக்கு சென்றது.

செந்தில்குமரனின் செய்கைகள் முன்னுக்கு பின் முரணாக இருப்பது அவளுக்கு எங்கோ இடிப்பது போன்று இருந்தது. முதலில் அதிகமாக பேசாமல்.. என்னேரமும் முகத்தில் புன்னகையை தவழவிட்டுக் கொண்டு மற்றவர்கள் என்ன கூறினாலும் சரி என்று ஒத்துக் கொண்டு.. அவளது தோழிகளிடம் கூறியது போல்.. அடக்கமான பையன் போல் நடந்துக் கொண்டான்.

அவள் விளையாட்டுக்கு வேண்டும் என்றுக் கூறியவைகளை வாங்கித் தந்தது.

புடவை பிடிக்காமல் அவனிடம் கூறிய பொழுது காலம் முழுவதற்கும் யார் வேண்டும் என்பது போல் பேசி அவளது மனதைக் குளிர வைத்தது.

திருமணத்தின் போது.. நடந்த சடங்குகளில் அவளுக்கு காத்திருந்தது, அவளுக்கு சொல்லிக் கொடுத்தது. வரவேற்பின் போது.. அவளது சுற்றம் மற்றும் நட்புகளிடம் இதமாக புன்னகைத்து அவர்களது கேலி கிண்டல் செய்த போது.. வித்யாவை பார்த்து.. சிரித்தது.

பின் மஞ்சள் நீரில் மோதிரம் தேடிய பொழுது.. கடைசியில் அவளுக்கு விட்டுக் கொடுத்தது.

நேற்று மாலில் ஜீன்ஸ் பேன்ட் டாப் அணிந்துக் கொண்டு அவள் வயது உறவினர்களுடன் ஆட்டம் போட்ட போது.. அதுவும் திருமணம் ஆன இரண்டாம் நாளிலேயே! ஆனால் எவ்வித ஆட்சேபணையும் காட்டாது.. சற்று தள்ளி நின்று முகத்தில் மாறாத புன்னகையுடன் அவளை இரசித்தது.

பின் இங்கு பந்தி பரிமாறிய பொழுது.. அவனுக்காக காத்திராமல் முதலில் அவளைச் சாப்பிடக் கூறியது.

தற்பொழுது அவளது பெட்டிகளை அடுக்கி வைக்காததிற்கு கோபித்து கொள்ளாமல் அவனே தற்காலிக தீர்வு கண்டது.

வித்யாவின் உறவுக்கார பெண்.. இந்த அறையின் வாசலில் நின்றால்.. போதும் அறைக்குள் நடப்பது தெரிந்துவிடும் என்றுக் கிண்டலடித்திருக்க.. இந்த அறை மட்டுமில்ல.. இந்த பகுதி முழுவதுமே இரவில் அவர்களுக்கு சொந்தமானது என்று உணர்த்தியது.

இவ்வாறு அவளுக்கு இதம் தரும் வகையில் நடந்துக் கொண்டான். ஆனால் அவன் நடந்துக் கொண்ட சில விசயங்கள் அவளை யோசிக்க வைத்தது.

அவளைத் திருமணம் புரிய தென்னந்தோப்பை கேட்டது. முதலில் அவனது தந்தையின் முடிவு என்று நினைத்திருந்தாள். ஆனால் அவர்களைப் பார்த்த இந்த இரு நாளில் இருவரும்.. அவன் கூறுவதைத் தான் கேட்பது போன்று இருந்தது.

அடுத்து புடவை விசயத்தில் அவளது பாட்டி கூறியது சரியோ.. அவன் தான் அவனது இஷ்டத்திற்கு அவளை இழுத்திருக்கிறனோ.. இவள் விட்டுத் தரவில்லையோ! என்று இருந்த ஐயம் தற்பொழுது மெய் தானோ என்றுத் தோன்றியது.

அடுத்து ஃபோட்டோ ஷுட்டின் போது.. அவர்கள் கூறியது போல் செய்ய மறுத்தது.. கூச்சம் தான் காரணம் என்று நினைத்திருந்தாள். ஆனால் தற்பொழுது அவன் கூறிய காரணத்தைக் கேட்ட பிறகு.. அது பிடிவாதமாக அவனுக்கு பிடிக்காததை செய்ய மறுத்தது போன்று இருந்தது.

அடுத்து அவளுக்கு மோதிரத்தை விட்டுக் கொடுத்தது. அவள் மனம் நொக கூடாது என்று நினைத்தது தற்பொழுது.. மற்றவர்களின் கேலி கிண்டல் பேச்சை தவிர்க்க என்றுத் தெரிந்தது.

செந்தில் கொஞ்சம் கண்டிப்பு மிக்கவன் போன்று நன்றாகவே தெரிகிறது. முதலில் தனது உடைமைகளை அடுக்க வளர்மதியை அனுப்பியிருக்கிறான். அடுத்து அவளது தாயிடம் பேசிய பொழுது.. கடைசியில் முறைத்ததை அவள் கண்டுக் கொண்டாள்.

முதலில் மிகவும் கூச்சம் சுபாவம் போல் காட்டிக் கொண்டவன், அவளைப் பார்க்கும் பார்வையும், பேசும் பேச்சும்.. நடந்துக் கொள்ளும் முறையும் மிகவுமே முரணாக இருந்தது.

புதிதாக வந்த மனைவியிடம் தன்னை கெத்து என்றுக் காட்டிக் கொள்வதற்காக சில சமயம் இவ்வாறு நடிக்கிறானா.. அல்லது புது மனைவியிடம் தான் அடக்கமான.. நல்ல பையன் என்றுக் காட்டிக் கொள்கிறானா..!

செந்தில்குமரனின் இந்த இரண்டு பரிமாணத்தில் எது உண்மை எது பொய் என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் வித்யா எதிலோ போலியை கண்டாள்.

அப்பொழுது ஒரு கரம் அவளது இடுப்பில் தவழவும், திடுக்கிட்டு போய் திரும்பினாள்.

செந்தில் தான் அவளது அருகில் படுத்திருந்தான். அவள் திடுக்கிட்டு திரும்பவும்.. வியப்புடன் “இன்னும் நீ தூங்கலையா!” என்றுக் கேட்டான்.

வித்யா இன்னும் அதிர்ச்சி மாறாமல் மறுப்பாக தலையசைத்தாள்.

செந்தில் “அப்போ நீ நேத்து நிசமாலுமே சோர்வா இருந்திருக்கியா..” என்றுச் சிரித்தான்.

அதைக் கேட்டவளுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

“நேத்து.. நீங்க.. நீங்க..” என்றுத் திணறவும்,

செந்தில் “உன் மேலே கையைப் போட்டுத் தான் தூங்கினேன். நல்லா கவனிச்சுக்கோ.. கையை மட்டும் போட்டேன்.” என்றான்.

அவளது விழிகள் அதிர்ச்சியில் விரியவும், மெல்ல சிரித்த செந்தில் “என்ன செய்ய புது பொண்டாட்டியை பக்கத்துல வச்சுட்டு சும்மா தூங்க முடியலை..” என்றான்.

என்ன தான் கணவனாக இருந்தாலும்.. பழக்கமில்லாத ஆண்மகன் அவள் மீது கையைப் போட்டது கூடத் தெரியாமல்.. மட்டையாய் உறங்கியதை நினைத்து சங்கடப்பட்ட வித்யா.. தலையாணி, டெடி பியர் பொம்மை சூழ படுத்து பழகிய தனக்கு மானசீகமாக மனதிற்குள் கொட்டிக் கொண்டாள்.

அப்பொழுது செந்திலின் பார்வை.. திடுக்கிட்டு திரும்பியதில்.. வித்யாவின் சேலை விலகிய இடத்திற்கு செல்லவும், சட்டென்று எழுந்து.. அமர்ந்து சேலையை சரிச் செய்துக் கொண்டவள், “நான் நைட்டி மாத்தணும்.” என்றாள்.

அதைக் கேட்ட செந்தில் “மாத்து..” என்று இருகரங்களையும்.. தலைக்கு கீழ் கோர்த்தவாறு படுத்துக் கொண்டான்.

எழுந்த வித்யா சுற்றிலும் பார்த்துவிட்டு “பாத்ரூம் எங்கே..” என்று முணுமுணுத்தாள்.

செந்தில் “பொடகாளிக்கு போகணும். இல்லைன்னா முன் தாழ்வாரத்திற்கு பக்கத்தில் போகணும்.” என்றான்.

வித்யா புரியாது “பொடகாளியா..!” என்கவும்,

“பின்வாசல்ல இருக்கு..” என்றான்.

இந்த நடு இரவில் இரண்டு பக்கமும் தனியாக போக வித்யாவிற்கு அச்சமாக இருந்தது. எனவே வித்யா திருதிருவென விழித்துக் கொண்டு நின்றாள்.

செந்தில் “நீ படு! நான் உன் மேலே கையைப் போட மாட்டேன் போதுமா..! நீ முழிச்சுட்டு இருக்கிறப்போ கையைப் போட்டா.. அது வேற கதை ஆகிடும். அந்த கதைப் படிக்க நமக்கு நேரம் இருக்கு! ஆனா இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு கறிவிருந்து.. அதனால காலகாத்தல நாலு மணிக்கு எழுந்து கறி எல்லாம் வெட்டி வாங்கிட்டு வரணும். பேசாம படு வித்யா..” என்றுவிட்டு கொட்டாவி விட்டவன், திரும்பி படுத்து சிறிது நேரத்திலேயே உறங்கிவிட்டான்.

புதிரானவனை புரிந்துக் கொள்ள முடியாமல் எதைப் பற்றியும் யோசிக்க முடியாமல் படுத்திருந்த வித்யா சிறிது நேரத்திற்கு பின்பே உறங்கினாள்.

நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவள், சிறு சலசலப்பு சத்தம் கேட்டு மெதுவாக இமைகளை திறந்துப் பார்த்தாள். அங்கு செந்தில் அவளை நோக்கி குனிந்துக் கொண்டிருந்தான். திடுமென செந்திலை பார்த்ததும் திடுக்கிட்டு எழவும், “ஏ ஒண்ணுமில்ல! இந்தா..” என்று போர்வையை அவளுக்கு போர்த்த போனான்.

தன்னை குனிந்துப் பார்த்தவள்.. இருந்த நிலைக்கு கண்டு வெடுக்கென்று அவனிடம் இருந்து போர்வையை கிட்டத்தட்ட பறித்து தனக்கு போர்த்தி கொண்டாள். அதைப் பார்த்து முறுவலித்து விட்டு நிமிர்ந்தான்.

வித்யா மனதிற்குள் ‘இப்படி ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி சிரித்து தான்.. என்னை ஏமாத்தினே..’ என்று நொடிந்துக் கொண்டாள்.

தற்பொழுது தான் குளித்துவிட்டு வந்திருப்பான் போல.. கையில்லா பனியனை அணிந்துக் கொண்டு தலையை துவட்டியவாறு “நீ நைட்டி மாத்தரேனு சொன்னப்போ.. நானும் உன் கூட துணைக்கு வந்திருக்கணும். இல்லைன்னா.. நீ இங்கே மாத்தர வரை.. வெளியில் ஆவது இருந்திருக்கணும். இப்படிக் காலகாத்தால மனுஷனுக்கு இம்சை கொடுத்திருக்க மாட்டே! அப்பறம் வச்சுக்கிறேன் கச்சேரியை! இனி நைட் நைட்டியை போட்டுட்டே படுத்துக்கோ..” என்றுச் சிரித்தான்.

பின் அவனது பீரோவை திறந்து சட்டையை எடுத்தவன்.. அதைப் போட்டவாறு “டைம் நாலரை தான் ஆச்சு! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிறதுன்னா தூங்கு! நான் அப்படியே தோப்பிற்கு போய்.. சமைக்கிற இடத்திற்கு போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு எட்டு மணி வாக்கில் தான் வருவேன். நான் வரப்போ தயாரா இரு..” என்றுவிட்டு சட்டை பட்டன்களை போட்டான்.

பின் அவளிடம் தலையசைத்துவிட்டு கதவை திறந்துக் கொண்டு வெளியே சென்றான். மேலும் இரு கதவுகளின் தாழ்பாள் திறக்கும் சத்தம் கேட்டது.

பின் வாசல் மற்றும் முன் கூடத்தின் தாழ்பாள்களை திறந்து விடுகிறான் என்றுத் தெரிந்தது.

இதற்கு மேல் எங்கு உறங்க என்று எழுந்த வித்யா மெல்ல எட்டிப் பார்த்தாள். பின் வாசல் கதவை திறந்து பின் சாத்தப் போன செந்தில் அவளைப் பார்த்ததும்.. அவளது தேவை புரிந்து.. வா என்பது போல் தலையசைத்தான். வேகமாக வந்தவள், காலை வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்ததும்.. அவளிடம் உள்ளே தாழிட்டுக் கொள்ள கூறிவிட்டு சாவிக் கொண்டு பூட்டிவிட்டு சாவியை அருகே இருந்த மாடத்தில் வைக்க கூறினான்.

பின் அவளிடம் தலையசைத்துவிட்டு மதிற்சுவரை ஒட்டி நடந்து முன்வாசலுக்கு சென்றவன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரில் ஏறி சென்றுவிட்டான்.

செந்தில் சென்றதும்.. அவன் கூறியது போல் செய்துவிட்டு.. சமையலறையில் நீர் பருகிவிட்டு.. தனது அறைக்கு வந்து கதவைத் தாழிட நினைத்தவளுக்கு.. அவன் கூறியது போல் பிடித்து உயர்த்த முயன்று முடியாமல் வெறுத்து போய் அப்படியே விட்டாள்.

எரிச்சலுடன் படுக்கையில் வந்தமர்ந்தவளுக்கு.. அந்த புதிய இடத்தின் ஒவ்வாமையை அப்பொழுது தான் உணர்ந்தாள்.

அவளது வீட்டில்.. காலை இவ்வாறா விடியும்!

என்ன வீடு இது! முன்னுக்கு முரணாக என்ன மனுஷன் அவன்!

கிராமத்து ஆள் அடக்கமாக அதுவும் பெரும் சொத்தை சீதனமாக வாங்குபவன், அடக்கமா தன்னிடம் பாசமா இருப்பான் என்று நினைத்திருந்தாள். ஏனோ அவளுக்கு அவன் அதிகாரம் செய்வது போன்று தெரிந்தது.

ஆனாலும் அவளது இன்னொரு மனது பொறு மனமே புதிதாக வந்த பொண்டாட்டியிடம் கெத்து போல் காட்டிக் கொள்வதற்காகவும்.. இப்படி வேண்டுமென்றே செய்யலாம். ஆனால் எத்தனை நாட்கள் நடிக்க முடியும் ஒரு நாள் சாயம் வெளுத்து போகும். அதன் பிறகு.. அவன் உனக்கு பிடித்த மாதிரியான கணவன் தான்.. என்று சமாதானப்படுத்தியது.

மற்றொரு மனம் ஒருவேளை முன்பு தன்னிடம் பேசி சிரித்து அமைதி போல் காட்டிக் கொண்டது தான் நடிப்பாக இருந்தால்.. அதற்கு அவன் காரணம் கூறி ஆக வேண்டும் என்று நினைத்தாள். அவனுக்கு அவள் வேண்டும் என்றால்.. அவளது விருப்படி மாறியாக வேண்டும் என்று நினைத்தாள்.

ஆனால் அடுத்து இந்த வீடும் இந்த வீட்டு மனிதர்களும்.. அவளுக்கான இடமும் மனிதர்களும் இல்லை போன்று தோன்றியது.

அப்பாவிடம் கூறித் தனி வீடு.. கோவை நகரத்திலேயே பார்க்க சொல்ல வேண்டும் என்றுத் தீர்மானித்தாள். உறக்கம் வராமல் புரண்டவளுக்கு.. மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டி நினைவிற்கு வரவும், இன்று முடியாது நாளைக்கு அடுக்கி வை என்றுக் கூறியது நினைவிற்கு வந்தது.

அவன் சொல்லி தான் செய்தது போன்று இருக்க கூடாது.. என்று எழுந்து சென்று அவளுக்கு என்று சீதனமாக வந்த.. பீரோவில் அவளது உடைகள் மற்றும்… சிறு அலமாரியில் அவளது உடைமைகளை அடுக்கி வைத்தாள். அடுக்கி வைக்கும் பொழுதே.. உறக்கம் அவளது கண்களைச் சுழற்றியது. ஆனால் வீம்பிற்கு அனைத்தையும் எடுத்து வைத்தவளுக்கு வெளியே அனைவரும் எழுந்து விட்டத்திற்கான ஆராவாரம் கேட்டது. ஆனால் வெளியே செல்ல மனமில்லாமல் கண்கொள்ள உறக்கத்துடன் படுக்கையில் மீண்டும் படுத்தவள், அடுத்த நிமிடமே உறங்கிவிட்டாள்.

“வித்யா..” என்ற அழைப்பில் மெல்ல நெளிந்துவிட்டு.. கண்களைத் திறந்துப் பார்த்தாள். அங்கு செந்தில் நின்றிருந்தான்.

“ஓ மை காட்..” என்றுச் சலிப்புடன் எழுந்து அமர்ந்தவள், உறங்கும் போதும் சரி.. கனவிலும் சரி கணவனின் முன்னுக்கு பின் முரணான குணங்களை பற்றி நினைத்து சிறு எரிச்சலில் இருந்தாள். திடுமென விழிக்கவும், அந்த தாக்கத்துக்கு கலையாத உறக்கக் கலக்கத்துடன் “சோ! என் பிரைவேஸி போச்சு! நீங்க ஹஸ்பென்ட் என்ற காரணத்திற்காக எப்போ வேண்டுமென்றாலும்.. என் ரூமிற்கு வந்து நான் அரையும் குறையுமா படுத்திருப்பதைப் பார்க்கலாம்.. அப்படித்தானே! நான் அவசரமா என் ட்ரஸ் கலைஞ்சுருக்கிறதை சரிச் செய்வேன். என் ட்ரஸ் கலைஞ்சுருக்கிறதைப் பார்க்கிறதை விட.. அதை நான் சரிச் செய்கிறதை ஒரு மதர்ப்போட பார்ப்பீங்க அப்படித்தானே! என்னால் சரிச் செய்ய எல்லாம் முடியாது. என் பர்மிஷன் இல்லாம என்னை அப்படிப் பார்க்கிறதுக்கும்.. உங்களுக்கு பெரிய விசயமில்லைன்னா..! என் உங்களுக்கு முன்னாடி என் ட்ரஸை சரிச் செய்யணும் என்கிறதெல்லாம் இல்லை.” என்று கட்டிலில் கால்களை தொங்க போட்டுக் கொண்டு இரு பக்கமும் கரங்களை ஊன்றிக் கொண்டு எங்கோ பார்த்தவாறு காலை ஆட்டினாள்.

அப்பொழுது சிரிப்பை அடக்குவதால்.. பலமாக மூச்சு விடும் சத்தம் கேட்டது. இந்த சிரிப்பு.. என்று வித்யா நிமிர்ந்துப் பார்த்தாள். அங்கு செந்தில் தான் பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான்.

பின் “வாயாடி! டைம் எட்டாச்சு.. போய் ரெடியாகு! ட்ரஸ் எல்லாம் அடுக்கி வச்சுட்டு நல்லா தூங்கிட்டியா..” என்றான்.

அதற்கு வித்யா “நான் வாயாடியா! இப்படி வாய் பேசர நீங்க.. இரண்டு நாள் ரொம்ப நல்ல பையன் மாதிரி ஏன் வேஷம் போட்டிங்க?” என்று நேரடியாக மனதில் குழப்பி கொண்டிருந்ததை கேட்டு விட்டாள்.

அதைக் கேட்டவனின் விழிகள் கூர்மைப் பெற்றது.

பின் மெதுவாக ஆனால் அழுத்தமான குரலில் “இந்த தைரியம் நேத்து எங்கே போச்சு?” என்றுக் கேட்டான்.

அதற்கு வித்யா “நேத்து குழப்பத்தில் இருந்தேன்.” என்றாள்.

செந்தில் இடுப்பில் உயர்த்திக் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து.. மீண்டும் கட்டியவாறு “இப்போ உனக்கு என்ன தெரியணும். நான் நடிக்கவெல்லாம் செய்யலை. அந்த சூழ்நிலையில் எப்படி இருக்கணுமோ.. அப்படி இருந்தேன். எனக்கு இந்த கல்யாணம் எந்த பிரச்சினையும் இல்லாமல்.. தடையும் இல்லாம முக்கியமா.. நீ இந்த கல்யாணத்தை விருப்பத்தோட செய்துக்கணும் அவ்வளவுத்தான் நீ கேட்டதிற்கு பதில் கிடைச்சுருச்சா..! சீக்கிரம் ரெடியாகு..” என்றான்.

வித்யா அதிர்ச்சியுடன் “என் விருப்பத்தோட மேரேஜ் நடக்கணுமா? இதுக்கு என்ன அர்த்தம்? உங்களுக்கு இந்த கல்யாணம் நடக்கிறது தான் முக்கியம் அவ்வளவுத்தானா..” என்றுக் கேட்டவள், தொடர்ந்து “அப்போ! எனக்கு ஹஸ்பென்ட்டா வரப் போகிறவரைப் பத்தி என்னோட எக்ஸ்பெட்டேஷன்?” என்றாள்.

அதைக் கேட்டு முறுவலுடன் அவள் புறம் குனிந்தவன், “நீ என் கிட்ட கேட்கிற கேள்விகளைப் பார்த்தா.. நீ எப்படிப்பட்ட புருஷன் வேணுன்னு எதிர்பார்த்தே வித்யா! நீ ஆட்டுவிக்கிற மாதிரி ஆடுகிற கிராமத்து மக்கு புருஷனா..” என்றுக் கேட்டான்.

உடனே வித்யா “அதுக்கு பேரு அமைதியான, நல்ல ஹஸ்பென்ட்..” என்றாள்.

அதைக் கேட்ட செந்தில் தனது முழு உயரத்திற்கும்.. நிமிர்ந்து நின்று “அப்போ நான் கெட்ட புருஷன் தான்! திமிர் புடிச்ச புருஷன் தான்.. கோபக்காரன் தான்! ஆனா வித்யா..” என்று அவளது முகம் பற்றிக் குனிந்தவன், “இந்த காலம் முழுமைக்கும் நீயும் நானும் தான் புருஷன் பொண்டாட்டி! உனக்கு பிடிக்காததை நான் நிறையா செய்யலாம். எனக்கு பிடிக்காததை நீயும் செய்யலாம். ஆனா ஒருத்தரை ஒருத்தர் சகிச்சுட்டு வாழ்ந்து தான் ஆகணும்.” என்று அவளது நெற்றி வகிட்டில் அழுத்த முத்தமிட்டு நிமிர்ந்தான்.

பின் செந்தில் “சமைக்கிற அடுப்பு கிட்ட பின்னுக்கு கசகசன்னு இருக்கு! நான் மறுபடியும் குளிச்சுட்டு வரேன். முன் தாழ்வாரத்தில் இருக்கிற பாத்ரூமிற்கு நான் போயிக்கிறேன். நீ பின்கொல்லைக்கு போ..! சீக்கிரம் உள்ளுக்குள்ள பாத்ரூம் கட்ட ஏற்பாடு செய்யறேன்.” என்றுவிட்டு துண்டை எடுத்துக் கொண்டு சென்றான்.

ஆனால் வித்யா அசையாது அமர்ந்திருந்தாள்.

அன்று அவளது தோழிகள் விளையாட்டாய்.. நீ நினைத்து போல் நடக்கவில்லை என்றால் என்ன செய்வாய் என்றுக் கேட்டதிற்கு அந்த இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்றுக் கூறியது அவளைப் பார்த்து சிரித்தது. ஆனால் அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.



 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தித்தித்திட செய்வாய் 6


முதலில் பார்த்த மாப்பிள்ளையை வித்யா மறுத்ததிற்கு காரணம்.. அவன் அவளிடம் கருத்து என்றுக் கேட்காமல் அனைத்தையும் அவனே முடிவு செய்து.. அவளை அப்படிச் செய்.. இப்படிச் செய்.. தனிக்குடித்தனம் செய்ய போகிறோம்.. அதனால் எல்லா சமையலையும் கத்துக்கோ.. வண்டி ஓட்ட கத்துக்கோ.. பட்ஜெட்குள்ள குடும்பம் நடத்தணும். அதிகம் சோஷியல் மீடியால இருக்க கூடாது என்று ஆயிரம் அட்வைஸ் செய்தான். மேலும்.. இதுப் பிடிக்குமா என்றுக் கூடக் கேளாமல்.. இது உனக்கு நல்லாயிருக்கும் என்று பொருட்களை ஆர்டர் செய்து அனுப்பினான். இப்படி பல விசயங்களில் மூக்கை நுழைந்தான். அதனால் தான்.. வித்யா அவனை மறுத்தாள்.

செந்தில்குமரன்.. தற்பொழுது கிண்டல் செய்தது போல் இல்லை என்றாலும்.. கிராமத்து அப்பாவித்தனமாக இருப்பவன் என்று நினைத்து.. செந்திலை மணக்க கேட்டாள். ஆனால் தற்பொழுது நடந்துக் கொண்டிருப்பது வேறாக இருக்கவும்.. என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை. எதிர்காலத்தை நினைத்து அவளுக்கு அச்சமாக இருந்தது.

அதுமட்டுமில்லாது அவனே தெளிவாக கூறிவிட்டான். இந்த திருமணத்தை வித்யா நிறுத்தி விடக் கூடாது என்று இணக்கமாக நடந்துக் கொண்டிருக்கிறான்.

அவளுக்கு பிடிக்காமல் அவன் நடந்துக் கொள்ளலாம் அது போல்.. அவனுக்கு பிடிக்காமல் அவளும் சில சமயம் நடந்துக் கொண்டாலும்.. அவர்கள் தான் கணவன் மனைவியாக வாழ வேண்டும் என்றுத் திட்டவட்டமாக அவன் அறிவித்த விதத்தில் வித்யாவிற்கு எரிச்சல் தான் வந்தது.

இன்னும் அம்மாதிரி வாழ்க்கை எப்படியிருக்கும் என்றுத் தெரியாமல்.. மாற்ற முடியாத பந்தம்.. என்றுப் பேசி விட்டான் என்று இளக்காரமாக நினைத்தவளுக்கு.. அவன் ஏமாற்றி விட்டது போன்று இருக்கவும், கண்களில் குளம் கட்டியது. அப்பொழுது அவளது செல்பேசியில் குறுந்தகவல் வரவும் எடுத்துப் பார்த்தாள்.

அவளது சொந்தங்கள் புறப்பட்டு விட்டதாக அனைவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்து அனுப்பியிருந்தார்கள். உடனே வித்யா எழுந்து தயாராக சென்றாள்.

அதற்குள் மருமகளே, மகளே, அண்ணி, அக்கா என்று உறவுகள் அவளை சூழ்ந்துக் கொண்டு..

‘புது இடத்தில் உறங்கினீர்களா..’

‘இந்த வீடு பிடித்திருக்கா.’

‘வசதியாக இருக்கிறதா..’ என்று மாற்றி மாற்றிக் கேட்டார்கள்.

அவளது மாமியாரோ.. அவள் எவ்வளவோ தடுத்தும்.. அவரே சுடுநீர் விளாவி கொடுத்தார். எந்த சோப்பு பயன்படுத்துவாள் என்றுக் கேட்டு வீட்டின் முன்னால் திருமணம் பொருட்டு மூடி வைக்கப்பட்டிருந்த மளிகை கடைக்கு சென்று அவளுக்கு வேண்டிய சோப்பை எடுத்துக் கொண்டு வந்து தந்தார். அவர்களது குளியலறை போல் இருக்காது என்றுக் கூறி.. வருத்தப்பட்டார்.

கடைசியில் வித்யா தான்.. எனக்கு இதுவே போதும் எனக்கு வேண்டியதை நான் செய்துக் கொள்கிறேன் என்று அனுப்பி வைத்தாள். வித்யா குளித்துவிட்டு வந்த பின்.. அவளது பின்னோடு வந்த வளர்மதி தனது அண்ணி வைத்திருக்கும் அழகுசாதனங்களை ஆசையுடன் பார்த்தாள். தானும் இதைப் போல் வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் அனைத்தும் போலியானது என்றுக் கூறிச் சிரித்தாள். உடனே வித்யா தன்னுடைய புது அழகு சாதனப்பெட்டியை எடுத்து.. அதில் இருப்பதை வளர்மதிக்கு போட்டுவிட்டாள். பின் அதை அவளுக்கே பரிசாக கொடுத்தாள். தனக்கா என்று முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்ட வளர்மதி துள்ளிக் குதித்து ஓடினாள்.

பின் வித்யா தான் தயாரானாள்.

கண்ணாடியை பார்த்தவாறு காஜல் போட்டுக் கொண்டிருந்த பொழுது.. அவளைக் கண்டுக் கொள்ளாமல் உள்ளே வந்த செந்தில் அவசரமாக உடையை மாற்றிக் கொண்டிருந்தான். அவனே எதாவது பேசுவான் என்று அவள் காத்திருக்கையில்.. அவள் ஒருத்தி அங்கு இருப்பதாகவே காட்டிக் கொள்ளாது. சிகையை வாரியவன், வாட்ச்சை எடுத்து கையில் கட்டிக் கொண்டு செல்ல ஆயுத்தமானான்.

திருமணம் நிச்சயத்தில் இருந்து.. இரவு வேளைகளில்.. உறக்கம் வராமல்.. திருமணத்திற்கு பிறகு.. அவளது தாம்பத்திய வாழ்வு பற்றிக் கூட அவள் கற்பனை செய்துப் பார்த்திருக்கிறாள்.

செந்தில் தயங்கி தயங்கி அவளை இரகசியமாக சைட் அடிப்பதாகவும், அவள் வேண்டுமென்றே அவனைச் சீண்டி அவனின் உணர்வுகளைக் கிளப்பிவிடுவது என்று கற்பனை செய்து வைத்திருந்தாள். அவை தற்பொழுது அவளைப் பார்த்து கைக்கொட்டி சிரிப்பது போன்று இருந்தது.

ஆனால்.. அவளை ஏறெடுத்து கூடப் பாராமல் செல்வதும்.. சேலை விலகினால் பார்க்கும் இரண்டாம் தரம் பொறுக்கி போன்று அவன் நடந்துக் கொள்வதும்.. அவளை அவமானப்படுத்துவது போன்று இருந்தது.

எனவே கடுப்பான வித்யாவின் இயல்பான துடுக்குத்தனத்துடன் “என்னைத் திரும்பிப் பார்க்க வைக்க வேணுன்னா.. நான் பழைய படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடும் நடிகைகள் மாதிரி டூ பிஸ் ட்ரஸ் போட்டுட்டு ஆடணுமா..” என்றுக் கேட்டுவிட்டு அடுத்த கண்ணிற்கு காஜல் போடும் வேலையைப் பார்த்தாள்.

அவளது பேச்சை கேட்டு சட்டென்று திரும்பிப் பார்த்த செந்தில் “என்னை ரொம்ப மட்டமா பேசர வித்யா! உனக்கு வாய் ரொம்ப ஓவரா இருக்கு! இந்த பேச்சை நான் இரசிப்பேன்னு நினைச்சுக்காதே! ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் நான் இருக்க மாட்டேன். இனி என்கிட்ட இப்படியெல்லாம் பேசாதே! கேட்க எரிச்சலா இருக்கு..” என்றுவிட்டு கதவைத் திறந்துக் கொண்டு வெளியே சென்றான்.

அவன் சென்ற பின்.. கதவைப் பார்த்து முறைத்த வித்யா பின் கண்ணாடியை பார்த்தவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வரவும், போட்ட காஜல் கலைந்துவிடும் என்று.. இமைகளைத் தட்டி.. கண்ணீரை அடக்க முயன்றாள்.

புதிதாக திருமணம் ஆன மனைவியிடம் இப்படியா பேசுவார்கள்.. நான் அப்படி என்ன செய்துவிட்டேன். அவர் இரண்டு வேஷம் போட்டு இந்த திருமணத்தை நடத்தியதை திருமணமாகி இரண்டு நாளிலேயே கண்டுப்பிடித்து விட்டதில் கோபமா!

மீண்டும் கண்கள் கரிக்க தொடங்கவும், கண்ணாடியில் தெரிந்த அவளையே பார்த்து திட்டிக் கொண்டாள்.

“இது நீ தேர்ந்தெடுத்த லைஃப்.. உனக்கு முன்னே பார்த்த மாப்பிள்ளையை பிடிக்கலைனு சொன்னதும்.. உடனே அதை ஏற்றுக்கிட்டு நீ கை காட்டின செந்திலை கல்யாணம் செய்து கொடுத்திருக்காங்க..! இந்த மாப்பிள்ளையும் பிடிக்கலைனு சொன்ன ரொம்ப சங்கடப்படுவாங்க! அமைதியா இரு வித்யா! டென்ஷன் ஆகாதே! டவுன் ஆகாதே! என்ன செய்யறதுனு பிறகு யோசிக்கலாம். இப்போ அமைதியா இரு! புருஷன் விசயத்தில் நீ எதிர்பார்த்தது நடக்கலைன்னாலும்.. உன் மாமியாரும் மத்த சொந்தக்காரங்களும் உன்னை நல்லபடியா நடத்தறாங்க! அதை மட்டும் நினை! உன் ரிலெட்டிவ்ஸ் வர டைமில் முகத்தைத் தொங்க போட்டு வச்சு.. அவங்களுக்கும் சங்கடத்தை கொடுக்காதே!” என்றுச் சமாதானப்படுத்திக் கொண்டாள்.

பின் மெதுவாக வெளியே வரவும், அதுவரை தரையில் அமர்ந்துக் கொண்டு டீ குடித்தவாறு பேசிக் கொண்டிருந்த பெண்கள் வித்யாவை பார்த்ததும்.. “வாம்மா..” என்று வாய் நிறைய அழைத்தார்கள். அவர்கள் யார் என்றுத் தெரியாததால் பொதுவாக வணக்கம் வைத்தவாறு நின்றாள்.

அப்பொழுது எங்கிருந்தோ வந்த அவளது மாமியார் தங்கம் “வித்யா கண்ணு! இவங்கெல்லாம் என்ற வழி சொந்தக்காரங்க! என் அண்ணி, தங்கச்சி, இவ இன்னொரு தங்கச்சி.. அவங்க என் அத்தை பெண்..” என்று அவரது சொந்தங்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அவர்கள் ஒரு பாய் எடுத்துப் போட்டு அமர சொல்லவும், தனக்கு கிடைத்த தனி மரியாதையால்.. மகிழ்ச்சியுடன் அமர்ந்தவள், அவர்கள் இதே ஊரா என்றுப் பேச்சு கொடுத்தாள். எவ்வித தயக்கமும், தாழ்த்தியும் பார்க்காமல் சரளமாக வித்யா உரையாடவும், தங்கமும் அவளது சொந்தங்களும் மகிழ்ந்தார்கள்.

அப்பொழுது வந்த செந்தில் “வித்யா! என்ன உட்கார்ந்துட்டே.. சமையல் ரூமில் டீ போட்டு வச்சுருப்பாங்க! எடுத்துட்டு வந்து.. முன் கூடத்துல இருக்கிறவங்களுக்கு கொடு..!” என்றான்.

வித்யா எழ முயலவும் தங்கத்தின் தங்கை “இப்போ தான் எங்க கூட வந்து உட்கார்ந்திருக்க.. அது உனக்கு பொறுக்கலையா!” என்றுவிட்டு தனது தங்கத்தின் முதல் மருமகள் சுமதியை அந்த வேலை செய்ய ஏவினார்கள். அவள் திரும்பி திரும்பி.. அவர்களைப் பார்த்தவாறு சென்றாள்.

தங்கத்தின் தங்கை செந்திலிடம் “செந்திலு! எப்போ தோப்பிற்கு கிளம்பிறது?” என்றுக் கேட்டார்.

அதற்கு செந்தில் “அங்கே டிபன் ஆகிடுச்சு சித்தி! இதோ பத்து நிமிஷத்தில் கிளம்பிறலாம். அங்கே டிபன் சாப்பிட்டுட்டு பேசிட்டு இருந்தால்.. சரியா பன்னிரெண்டு மணிக்கு மதிய பந்தி போடச் சொல்லி விருந்து முடிச்சரலாம்.” என்றான்.

பின் “சரிதான்! நீ போ.. உன் பொண்டாட்டியை நாங்க பாத்துக்கிறோம்.” என்று அவனைக் கேலி செய்தார்கள். அவனும் சிரித்துவிட்டு அகன்றான். பின் சுமதி கொண்டு வந்த தட்டில் இருந்து.. வித்யாவிற்கு ஒரு டம்ளர் டீ எடுத்த பின்பே கொண்டு போகக் கூறினர்.

வித்யா அந்த பெண்களிடம் பேசிச் சிரித்தவாறு அமர்ந்திருந்தாள். அப்பொழுது அங்கு வந்த கந்தசாமி வித்யாவை அழைத்து தன்னுடைய சொந்தங்களுடன் அமர வைத்து “இவங்க எல்லாம் உனக்கு வேற சொந்தம் இல்லை. உன் அம்மா சொந்தங்கள் தான்! இவங்க கூட பேசிட்டு இரு..” என்றுவிட்டுச் சென்றார்.

மாமியார் மற்றும் மாமனாருக்கு அவளின் மேல் இருக்கும் உரிமை போராட்டத்தைக் கண்டு வித்யாவிற்கு சிரிப்பு தான் வந்தது.

பின் கிளம்பலாம் என்று செந்தில் கூறியதும்.. தனது அறையில் வைத்திருந்த அவளது செல்பேசி மற்றும் கைப்பையை எடுக்க வந்தாள். அவளது பின்னோடு வந்த செந்தில் பீரோவை திறந்து சிறு பணக்கட்டை எடுத்து தனது பாக்கெட்டிக்குள் வைத்தான்.

அமைதியாக கைப்பையை எடுத்துக் கொண்டிருப்பவளைப் பார்த்தவன், “நான் எழுந்து வான்னு சொன்னா உடனே எழுந்து வர மாட்டியா..! அவங்க என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க..” என்றான்.

வித்யா அமைதியாக “அவங்க உட்கார சொன்னாங்க உட்கார்ந்துட்டேன்.” என்று மெல்ல முணுமுணுத்தாள்.

அதைக் கேட்டு அவளருகே வந்த செந்தில்.. தலையை குனிந்தவாறு கவனமாக கைப்பையில் பர்ஸ், டிஷ்ஷு, செல்பேசி என்று மெதுவாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளின் முகவாயை பற்றி மெல்ல தன்னைப் பார்க்க வைத்தவன், “மனசுக்குள்ள வேற நினைச்சுருப்பே போல.. வாய் வேற முணுமுணுக்கிற மாதிரி இருக்கு..” என்று அவளது விழிகளை உற்றுப் பார்த்தான்.

அதற்கு வித்யா “பரவாலையே இரண்டு நாள்ல என்னை கொஞ்சம் புரிஞ்சுட்டிங்க! நான் குழம்பிட்டு இருக்கேன்.” என்றாள்.

செந்தில் “சொல்லு! என்ன சொல்ல நெனைச்சே?” என்றுக் கேட்டான்.

வித்யா “நீங்க கேட்கறீங்க.. அதனால் சொல்றேன். நீங்க கூப்பிட்டதும் வரலைங்கிறதாலே என்னவோ சுயமரியாதை போன மாதிரி பேசறீங்களே! நான்தான் பேசிட்டு இருக்கேன் என்றுத் தெரியுதில்ல. டீ எடுத்துக் கொடுக்கிறது ஒண்ணும் நான் செய்தா தான் நடக்கும் என்கிற வேலையும் இல்லை. அப்படியிருக்கும் போது.. நீங்க கூப்பிட்டதும் நான் உடனே எழுந்து வந்தா என்னோட சுயமரியாதையும் போன மாதிரி தானே.. என் கூடப் பேசிட்டு இருந்தவங்க என்ன நினைப்பாங்க! உங்களுக்கு மட்டும் தான் செல்ஃப் ரெஸ்பெக்ஃட் இருக்குமா.. எனக்கு இருக்காதா!” என்றுக் கேட்டாள்.

செந்தில் “என்ன நெனைப்பாங்கனு தானே கேட்டே! இந்த பொண்ணு புருஷன் பேச்சை தட்டாம செய்யறானு நெனைப்பாங்க..” என்றான்.

அதற்கு வித்யா “அப்போ எனக்கு தான் நல்ல பேரு கிடைக்கும்..” என்கவும், செந்தில் ஏளனச் சிரிப்புடன் “நான் எது சொன்னாலும் செய்தாலும் நல்லதிற்கு தான் என்றுத் தெரியுதா..” என்று முழுக் கைச்சட்டையின் கையை மடித்துவிட்டவாறு கூறினான்.

வித்யா “அப்படிங்களா! ஆனா நானும் உங்களுக்கு நல்ல பேர் வாங்கித் தரலானு நினைச்சேன். உங்களுக்கு நல்ல பேரு வேண்டுமா.. வேண்டாமா..” என்றுக் கேட்டாள்.

அதைக் கேட்டவனின் புருவம் சுருங்கியது.

வித்யாவே “நான் பேசிட்டு இருக்கிறதைப் பார்த்து.. நீங்க அமைதியா போயிருந்தா! அட பரவாலையே பொண்டாட்டியை ப்ரீயா விடரான். இங்கிதம் தெரிந்தவனாகவும்.. இருக்கிறான்.. என்று உங்களைத் தான் புகழ்வாங்க..” என்றாள்.

செந்தில் “ஒண்ணு சொல்லட்டுமா! சரிக்கு சரியா பேசறது பெரிய மேதாவித்தனம் என்று நினைச்சுட்டு இருக்கியா..” என்றவன்,;சட்டென்று அவளை நோக்கி இரண்டு அடி வேகமாக எடுத்து வைத்த செந்தில் “இந்த திமிரையும், வாயையும் நான் அடக்கிறேனா இல்லையானு பாரு..” என்றான்.

அவன் அவளை நோக்கி எட்டுக்களை எடுத்து வைக்கவும், வித்யாவின் கால்கள் தானே பின்னே சென்றன.

ஆனால் அவளது வாய் பின் வாங்காது.. அவனுக்கு பதில் அளித்தது.

“பொம்பளைங்க.. நீங்க சொல்றது தான் சரினு கேட்காம.. உங்களால் பதில் சொல்ல முடியாத மாதிரி பதில் பேசினா.. உடனே அதுக்கு பேர் திமிரா! ரொம்ப சந்தோஷம்..” என்றுச் சிறு நக்கலுடன் கூறினாள்.

செந்தில் “பதில் தானே.. சொல்றேன் கேள்! நீ எப்படிப்பட்ட புருஷனை எதிர்பார்த்தே.. கிராமத்து முட்டாள்.. சரி உன் பாஷையில் சொல்றேன். அப்பாவியான புருஷன் அப்படித்தானே! அதாவது நீ சொல்ற பேச்சை கேட்டுட்டு உன் பின்னாடியே சுத்தி வர மாதிரியான புருஷன் இருந்தால் நல்ல புருஷன்.. அப்படியில்லைன்னா! கொடுமைக்காரன், கெட்டவன், கோபக்காரன் அப்படித்தானே..” என்றான்.

அதற்கு வித்யா “எனக்கு விசயம் அதில்லை. நீங்க நல்ல பையன் மாதிரி ஏன் நடந்துட்டிங்க என்கிறது தான்! என்னை ஏமாத்திட்டே மாதிரி இருக்கு!” என்றாள்.

செந்தில் “அதுக்கு தான் பதில் சொல்லிட்டேனே! முதலில் பார்த்த மாப்பிள்ளையை பிடிக்கலைனு சொன்ன மாதிரி என்னையும் பிடிக்கலைனு சொல்லிட்டா என்ன செய்யறது. அதுதான் கவனமாக இருந்தேன். நீ சொன்ன மாதிரி எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது.” என்றான்.

வித்யா மெல்ல “இந்த கல்யாணம் ஏன் நிற்க கூடாதுனு நினைச்சீங்க..” என்றுக் கேட்டாள்.

அவளது கண்களில் இருந்த சிறு பயத்தைக் கண்டு மெல்ல சிரித்த செந்தில் “அதுவே தான் காரணம்! நாங்க பார்த்துட்டு இருக்கிற தென்னந்தோப்பை எங்களுக்கு சொந்தமாக்க தான்!” என்றான்.

பதிலுக்கு பதில் பேசும் வித்யாவிடம் இருந்து தற்பொழுது பதில் வரவில்லை. கண்கள் கரித்துக் கொண்ட வர அதை.. அவனுக்கு காட்டாதிருக்கும் பொருட்டு வேறு திசையைப் பார்த்தாள்.

அவளது முகவாயைப் பற்றித் தன்புறம் திருப்பிய செந்தில் “ஆமா நான் கெட்டவன் தான்! ஆனா ரொம்ப மோசமானவன் கிடையாது. நீ இந்தளவிற்கு வருத்தப்பட தேவையில்ல. ஆனா ஒண்ணு.. வாழ்க்கை முழுவதுக்கும் நீதான்..!” என்றவனின் உதடுகளில் அடக்கப்பட்ட சிரிப்புடன் “உன் வாய் துடுக்கை அடக்கிக் காட்டுகிறேனா இல்லையானு பாரு..” என்றான்.

உடனே தனது முகவாயை அவனது பிடியில் இருந்து தலையை சிலுப்பி விடுவித்துக் கொண்ட வித்யா “வாழ்க்கை முழுதுக்கும் நாம் தானே! அப்போ உங்களையும் எனக்கு பிடிச்ச மாதிரி மாத்திக் காட்டறேன்.” என்றாள்.

அதைக் கேட்டு சிரித்தவன், “உன் முந்தானையை பிடிச்சுட்டு சுத்துவேனு தப்பு கணக்கு போட்டிராதே! என்னைப் பார்த்தாலே உன்னை பயந்துட்டு ஓட வைக்கிறேன்.” என்றுச் சிரித்தவனின் பார்வை மாறியது. சட்டென்று அவளைப் பற்றி.. இழுத்து தனது கைவளைக்குள் வைத்து அவளது முகம் நோக்கி குனிந்தான்.

ஆனால் அடுத்து நடந்ததை அவன் எதிர்பார்க்கவில்லை.

அவனது செயலைத் தனதாக்கிக் கொண்டு.. அவனது உதடுகளோடு தனது இதழை பொருத்தியவள், அவன் திகைத்து நிற்கையிலேயே.. அவனது பிடியில் இருந்து விலகி.. தனது கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே விரைந்தாள்.











 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தித்தித்திட செய்வாய் 7


செந்திலினால் ஒரு கணம் அந்த இடத்தில் இருந்து அசைய முடியவில்லை. இப்படியொரு தோல்வி கிடைக்கும் என்று அவன் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் அந்த தோல்வி இவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று அவன் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் அவளும் இதையே நினைத்தால்.. அது அவனது ஆண்மைக்கு அவமானம் என்று.. தலையைச் சிலுப்பி.. தன்னை சரிப்படுத்திக் கொண்டு வெளியே சென்றான்.

அனைவரையும் கிளம்ப கூறிவிட்டு தான் உள்ளே வந்தான்.. எனவே அனைவரும் கிளம்பியிருந்தார்கள். அந்த தென்னந்தோப்பு பத்து நிமிஷ நடைத் தொலைவில் தான் இருந்தது. அதாவது இவர்களின் வீட்டிற்கு பின்னால் இருந்த வயல் மற்றும் தென்னந்தோப்பை அடுத்து இருப்பது பானுமதிக்கு சொந்தமானது. அதாவது தற்பொழுது செந்தில்குமரனுடையது.

எனவே விருந்து அழைத்திருந்த உறவினர்கள்.. நடந்து சென்றுவிட்டார்கள். மற்றவர்கள்.. இவர்கள் இருவரின் வருகைக்காக முன் கூடத்தில் காத்திருந்தார்கள். எனவே அவர்கள் உள்ளே அடித்த கூத்தை யாரும் கேட்கவில்லை.

என்னத்தான்.. ஒரு நிமிடம் வித்யாவின் முத்த தாக்குதலில் அசந்து போய் நின்றாலும்.. அவனது கோபமும், சுய கௌவரமும் போகவில்லை. அவள் மீது கோபத்தை மேலும் ஏற்றிவிட்டிருந்தது. ஒருவேளை தனது சறுக்கலை கோபத்தின் பின் மறைத்தானோ!

‘குடும்பத்து பொண்ணு மாதிரியா அவ பேசர.. சரிக்கு சரி வாய் பேசிட்டு.. ராங்கிகாரி மாதிரி.. பேசரா! அந்த திமிருக்கு தன்மானம், புத்திசாலித்தனம் என்று அவளே பேர் வேற வச்சுட்டா..’ என்றுப் பொருமியவாறு வந்தான்.

அங்கு வித்யாவும் சற்றுமுன் நடந்த இதழ் சந்திப்பின் காரணமாக அதிர்ச்சியில் நிற்க முடியாமல் அருகில் இருந்த தூணை பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

செந்தில் வரவும், வித்யா தங்கத்தின் பின்னால் மறைந்து கொண்டாள்.

பின் அனைவரும் வெளியேறினார்கள்.

வெளி கேட்டை சாத்தியதும்.. கந்தசாமி “நாங்களும் அப்படியே நடந்து வரோம். நீ வித்யாவோட வண்டில அப்படியே நம்மூர் கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு வா..” என்றார்.

செந்தில் “நாளைக்கு ஒன்றா எல்லாரும் குலத் தெய்வ கோவிலுக்கு போயிக்கலாம்.” என்றான்.

தங்கம் “அது சரிடா! இது நாம் தினமும் கும்பிடற சாமி செந்திலு! அந்த சாமியோட ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க..” என்றார்.

தன் தாயைத் தட்டிப் பேச வாயைத் திறந்தவன், மனைவியின் முன் அவ்வாறு செய்தால்.. வித்யாவிற்கு தன் தாயிடம் மதிப்பு இருக்காது என்று.. அமைதியாக இருந்தான்.

பின் அவர்கள் சென்றதும்.. தன்னை ஆக்டிவாவில் ஏறக் கூறுவான் என்றுக் காத்திருந்தாள்.

ஆனால் செந்தில் “கொஞ்ச நேரம் இங்கேயே நின்னுட்டு போகும் போது.. கோவில் வழியா வண்டிய ஓட்டிட்டு போறேன். அங்கே போய் அவங்க கேட்டா.. நேரமாச்சுனு கோவில்ல முன்னாடியே நின்னு சாமி கும்பிட்டு வந்துட்டோம்னு சொல்லிரு!” என்றான்.

வித்யா புரியாமல் பார்க்கவும், செந்தில் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு.. “இப்படி வேஷம் போட்டுட்டு வந்திருக்கே! உன்னைக் கூட்டிட்டு போனா.. எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க..” என்றான்.

தனது முக அலங்காரத்தை வேஷம் என்றுக் கூறியதும் வித்யாவிற்கு கோபம் தலைக்கு ஏறியது.

அத்தோடு அவன் விடாமல் “என்ன தான் தாலி கட்டின புருஷன் என்றாலும்.. பொதுவா பொண்ணுங்க வெட்கப்படுவாங்க! உனக்கு அப்படியிருந்த மாதிரியே தெரியலை. காலையில் கூட வெட்கம் கெட்டு.. என் முன்னாடி சேலை விலகினா சரிச் செய்ய மாட்டேன்னு.. என்னமோ உளறினே! ஏன் யாராவது புருஷனை கைக்குள்ள போட இப்படியெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்களா..” என்று முகத்தைச் சுளித்தவாறு கேட்டான்.

“என்னது வேஷமா! அதென்ன பொண்ணுங்க மேக்கப் போட்டா.. அதை வேஷம் என்கிறது! அப்பறம் என்ன சொன்னீங்க நான் வெட்கம் கெட்டவளா..! இதையே நீங்க முதல்ல செய்தா.. ஆம்பிளைத்தனமா! ச்சே இப்படி பேசுவீங்கனு நினைக்கலை.” என்றுவிட்டு விருவிருவென முன்னால் நடக்க ஆரம்பித்தாள்.

செந்தில் “வித்யா..” என்று அழைத்தான். ஆனால் அவள் அதை காதில் வாங்காமல்.. தொடர்ந்து நடக்கவும், பெரிய எட்டுக்களாக வைத்து.. அவளை அடைந்து அவளது கரத்தைப் பற்றியவன், “வண்டில ஏறு..” என்றுப் பற்களைக் கடித்துக் கொண்டு பற்களிடையே வார்த்தைகளைத் துப்பினான்.

அவனது இறுகிய பிடியும்.. கோபமும் வித்யாவிற்கு சிறு திகிலை ஏற்படுத்தியது. ஆனாலும் அவன் சற்றுமுன் பேசியதால் ஏற்பட்ட கோபத்தின் தாக்கம் குறையாமல் இருக்கவும், “இதே வேற யாராவது பேசியிருந்தா.. நடக்கிற கதையே வேற மாதிரி இருந்திருக்கும்..” என்றாள்.

அதற்கு செந்தில் “வேற யாராவது இருந்திருந்த போடினு நானும் விட்டிருப்பேன். இப்படி கையைப் பிடிச்சுட்டு நிற்க மாட்டேன். இப்போ வண்டில ஏறப் போறீயா இல்லையா..” என்றுச் சீறினான்.

எனவே “வரேன். ஆனா உங்க பொண்டாட்டி கிட்ட நீங்க அப்படிப் பேசியருக்க கூடாது. அதுக்கு உங்களை மன்னிப்பு கேட்க சொல்ல மாட்டேன். புரிஞ்சுக்க சொல்கிறேன்.” என்று அவனது ஆக்டிவாவை நோக்கி அவனுடன் வந்தாள்.

செந்தில் ஆக்டிவாவில் அமர்ந்துக் கொண்டு “கேட்டை திறந்துவிடு.. நான் வெளியே போனதும்.. கேட்டை சாத்தி தாளிட்டுவிட்டு வந்து உட்கார்..” என்றான். அவள் அமைதியாக அவன் சொன்னதைச் செய்துவிட்டு வண்டியின் பின்னால் வந்தமர்ந்தாள்.

செந்தில் மதர்ப்புடன் சிரிக்க.. வித்யாவிற்கு அவனது கோபத்திற்கு பணிவது போன்று இருந்தது.

அவன் வண்டியை கிளப்பவும், வித்யா “உங்களுக்கு தான்.. இந்த வேஷக்காரியை கூட்டிட்டு வரப் பிடிக்கலை தானே! அப்பறம் எதுக்கு.. வண்டில ஏறச் சொல்றீங்க..! நான் நடந்தே வந்திருப்பேன்.” என்றாள்.

அதற்கு செந்தில் வண்டியை ஓட்டியவாறு “உனக்கும் தான் என்னைப் பிடிக்கலை. வண்டில ஏறுனு சொன்னதும் கொஞ்சம் அலட்டினாலும் வந்துட்டே தானே! அந்த மாதிரி தான்” என்றுச் சிரித்தான்.

வித்யா “கொஞ்ச நேரம் கூட இரண்டு பேராலும் ஒருத்தரை ஒருத்தர் சகிச்சுக்க முடியலை. இதுல காலம் முழுக்கவா..! சான்ஸ் கொஞ்சம் கம்மி மாதிரி தான் தெரியுது. இரண்டு பேரும் ஒருத்தர் தலைமுடியை ஒருத்தர் பிடிச்சுட்டு கட்டிப் புரண்டு சண்டை போடப் போகிறோம் என்று நினைக்கிறேன்.” என்று இன்னும் கோபம் குறையாமல் கூறினாள்.

ஆனால் செந்தில் அடக்கப்பட்ட சிரிப்புடன் சட்டென்று வண்டியை நிறுத்தி என்ன என்பது போல் பார்த்தான்.

சற்றுமுன் செந்தில் பேசியதனால் ஏற்பட்ட கோபம்.. இன்னும் வித்யாவிற்கு அடங்கவில்லை.

அதனால் வித்யா “நான் அப்படித்தான்.. டெய்லி மேக்கப் போடுவேன். நைட் பேஸ்பேக் போடுவேன். மாசத்துக்கு ஒரு தரம் பெடிக்குயுர், மெடிக்குயுர் செய்வேன். ஜீன்ஸ் பேன்ட், டாப் போடுவேன். பிடிக்காத விசயமா இருந்தா பட்டுனு சொல்வேன். உங்க பாஷையில் திமிரா பதிலுக்கு பதில் பேசுவேன். நினைச்சது நடக்கணும் என்று ரொம்ப அடம் பிடிப்பேன். நீங்க என்ன சொன்னாலும் சரினு தலையை ஆட்ட மாட்டேன். என் புருஷன் என் பேச்சை கேட்கணும் என்று நினைப்பேன். இதை என்கிட்ட இருந்து மாத்த முடியாது.” என்றாள்.

செந்தில் “அப்படியா! அதையும் பார்க்கலாம்.” என்றுவிட்டு வண்டியை மீண்டும் முடுக்கியவன், ஊர் வழியாக செல்லாமல் சுத்திக் கூட்டிட்டு போய்.. அதுதான் கோவில் என்றுக் காட்டி கன்னத்தில் போட்டுக் கொள்ள சொன்னான். வித்யா தலையில் தான் அடித்துக் கொண்டாள்.

பின் தோப்பை நோக்கி செல்கையில் வித்யா “நான் உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்.” என்றாள்.

செந்தில் “கேளு..” என்கவும், வித்யா “உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா..” என்றுக் கேட்டாள்.

சடார் என்று வண்டியை நிறுத்திவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான்.

வித்யா “நான் விரும்பின மாதிரி தான் நீங்க இருப்பீங்கனு தப்பா நினைச்சு.. உங்களை மேரேஜ் செய்ய ஒத்துக்கிட்டாலும்.. உங்களை விருப்பத்தோட தான் மேரேஜ் செய்துட்டேன். ஆனா.. நீங்க சொத்துக்காகனு தெளிவா சொல்லிட்டிங்க! இதை விட மோசமாக என்னை அவமானப்படுத்த முடியாது. சரி அதை விடுங்க! சொல்லுங்க.. நீங்க மேரேஜ் செய்யும் போது.. கொஞ்சமாவது என்னைப் பிடிச்சுருந்துச்சா?” என்றுக் கேட்டாள்.

அதற்கு செந்தில் “பிடிக்காமல உன்னைத் தொட்டுட்டு தூங்க நெனைச்சேன்.” என்றுச் சிரித்தான்.

வித்யா “அது ஆசை! நான் கேட்கிறது விருப்பம்..” என்று முறைத்தாள்.

அதற்கு செந்தில் சிறிது கூட அலட்டிக்காமல்.. “ரெண்டும் ஒண்ணு தான்! என்னைப் பிடிக்கலைனு சொல்லிட்டு எனக்கு முத்தம் கொடுத்தேயில்ல. அது என்னவாம்! ஆசை தானே..” என்று மீசையை முறுக்கிக் கொண்டு சிரித்தவாறு மீண்டும் வண்டியை கிளப்பினான்.

உடனே வித்யா வெகுண்டவளாய் “என்னது ஆசையா! அது கோபம்! என்னமோ.. பொண்ணை அடக்கிறதுக்கு.. அவளை அணைக்கிறது தான் சரியான வழி.. என்கிற ஆம்பிளை மென்டாலட்டியோட கட்டிப்பிடிச்சீங்க! ஒருத்தர் அடிச்சா வலிக்குது என்றுச் சொல்வதை விட.. வலிக்கலையேனு சொல்வது தான் அடிக்க வருகிறவனுக்கு நாம் திருப்பிக் கொடுக்கிறே சரியான அடி! அதனால் தான் நீங்க என்ன செய்யறது நான் செய்யறேனு கிஸ்ஸடிச்சேன். உங்களை வளைச்சு போடவோ.. தலையாணி மந்திரமோ இல்லை. ஆனா ஆமா உண்மைத்தான்! நீங்க என் பின்னாடி அந்த விசயத்திலும் சுத்தணும் என்று நினைச்சேன். சுத்த வைப்பேன். உங்களால் என்ன செய்ய முடியும். வெட்கம் கெட்டவளா.. ஆம்பிளை செய்தால் வீரம் பொம்பளை செய்தால்.. வெட்கம் கெட்டவளா! நாம இரண்டு பேரும் புருஷனும் பொண்டாட்டியும் தானே.. அதுனால தப்பு ஒண்ணும் இல்ல.. நான் இப்படித்தான் இருப்பேன்..” என்றுக் கோபத்துடன் பெருமூச்சு வாங்க கூறினாள்.

அவன் பதில் பேசாமல் சிரித்துவிட்டு வண்டியை எடுத்தான்.

வித்யா விடாமல் “என்ன ஒண்ணுமே பேச மாட்டேன்கிறீங்க..!” என்றுக் கேட்டாள்.

அதற்கு செந்தில் “நீ இவ்வளவு வீர வசனம் எல்லாம் பேச தேவையில்லை. இதெல்லாம் இனி செய்ய நேரமிருக்காது. சொல்லப் போன.. நமக்கு சண்டை பிடிக்க கூட நேரமிருக்காது.” என்றுச் சிரித்தான்.

வித்யா “உன் இஷ்டப்படி இருன்னு சொல்வது தான்.. நல்ல கணவனுக்கு இலட்சணம்! ஆனா நீங்க ஆணாத்திக்கம் பிடிச்ச வரா இருக்கீங்க..” என்றுக் கோபத்துடன் கூறினாள்.

அதற்கு செந்தில் “நான் நடக்க போவதை தான் சொன்னேன்.” என்றான். பின் செந்தில் கூறியதைக் கேட்டு அவள் வாயைப் பிளந்தாள்.

“ஏன்னா! மளிகை கடையை என் அம்மா கூடச் சேர்ந்து நீதான் பார்த்துக்கணும். காலைல சமையல் வேலையெல்லாம் முடிச்சு வச்சுட்டு.. என் அம்மாவும், அப்பாவும் கடைக்குள் போயிட்டா.. நைட் தான் வெளியே வருவாங்க! இப்போ அப்பாக்கும் அம்மாக்கும் ரெஸ்ட் கொடுத்துட்டு அந்த வேலையை நீ பார்க்கணும். அண்ணி சின்ன புள்ளைங்கள வச்சுட்டு.. வேற எதையும் செய்ய முடியாது. குழந்தைகளைப் பார்த்துக்கிறதுக்கே சரியா இருக்கும். என் அண்ணனுக்கு ஒரு தரம் ஹர்ட் அட்டேக் வந்ததுல.. அவன் எங்கேயும் நகர மாட்டான். நான்தான் தென்னந்தோப்பை மட்டுமில்ல. பக்கத்துல இருக்கிற பழமண்டியையும் இன்சார்ஜ் எடுத்துப் பார்த்துப்பேன். எல்லாம் முடிச்சுட்டு நான் வரதுக்கே பத்து மணி ஆகிரும். இதுல நைட் நாம கட்டிப்பிடிச்சு படுக்கிறதைத் தவிர வேற என்ன செய்ய முடியும். எனக்கே கொஞ்ச தயக்கமா தான் இருந்துருச்சு! நைட்ல முக்கியமான கட்டத்தில் பயத்துல கத்தி மானத்தை வாங்கிருவியோனு நினைச்சு தான். தாழ்வாரத்தில் படுத்துக்கிறே வேலைக்காரங்களை பின்கொல்லைல படுக்க சொன்னேன். ஆனா வெட்கம் தயக்கம், பயம் எல்லாத்தையும் விட்டு முத்தம் கொடுக்கிற பொண்டாட்டி இருக்கிறப்போ.. எனக்கு ஒரு வேலையும் மிச்சம்..” என்றுச் சிரித்தான்.

உடனே வித்யா “என்னோட லைஃப் என் இஷ்டப்படி தான் வாழுவேன். நீங்க இப்படிச் செய்யுனு சொல்லாதீங்க! ஒருவேளை இந்த கடையில சேல்ஸ் செய்து பணம் வாங்கிறது நல்லாயிருந்தா.. அதையும் செய்வேன். ஆனா.. பிடிக்கலைன்னா செய்ய மாட்டேன்..” என்றுச் சிரியாமல் கூறினாள்.

செந்தில் உடனே வண்டியை நிறுத்திவிட்டு திரும்பி அவளைப் பார்த்து “இதை விளையாட்டா சொல்றீயா.. இல்லை நிஜமா சொல்றீயானு தெரியலை. விளையாட்டா இருந்தா.. இந்த விசயத்தில் விளையாடற வேலையை வச்சுக்காதே! ஒண்ணு செய்ய சொன்ன நீ என்ன சொல்றது நான் என்ன கேட்பது என்கிற மாதிரி நீ வேணுன்னே பேசர மாதிரி இருக்கு! நானும் புதுசா வந்தவன்னு பொறுமையை இழுத்து பிடிச்சுட்டு இருக்கேன். யாரும் என்கிட்ட இந்த மாதிரி பேசினது இல்லை. நீயும் புரிஞ்சுப்பேனு பொறுமையா சொல்லிட்டு இருக்கேன். அப்பவும் நீ இந்த மாதிரியே எடுத்தெறிந்து பேசினால் என்னோட வேற பக்கத்தை நீ பார்க்க வேண்டியது வரும்.” என்றுச் சிறு கண்டிப்புடன் கூறினான்.

அவனது மிரட்டலில் மீண்டும் வித்யாவிற்கு கண்ணீர் கரித்துக் கொண்டு வந்தது.

செந்தில் “கோபமா! இப்படி முகம் சிவக்குது. இல்லை அந்த சிவப்பு மேக்கப்பா..” என்று வம்புக்கு இழுத்தான்.

வித்யா மறுப்பாக தலையசைக்கவும், செந்தில் “முதல்ல காய், மளிகை சமான்கள் எல்லாம் என்ன விலையில விற்குதுனு கத்துக்கோ..” என்றான்.

ஆனால் வித்யா கடைசி வார்த்தையை விடாதவளாய் “எனக்காக நீங்க என்ன கத்துப்பீங்கனு முதல்ல சொல்லுங்க.. அப்பறம் இதைப் பார்க்கலாம்.” என்றாள்.

உடனே செந்தில் உதட்டை மடித்துக் கொண்டு அவளைத் திட்ட தொடங்குகையில் “செந்திலு! ஏன் வண்டியை அங்கேயே நிறுத்திட்டே! வித்யாவும் வண்டில இருந்து இறங்கல.. என்னாச்சு!” என்று அவனது அத்தை கத்தினார்.

அப்பொழுதே அவர்கள் வர வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டது தெரிந்தது. அங்கு செந்திலின் சொந்தங்கள் மட்டுமில்லாது.. வித்யாவின் சொந்தங்களும் வந்திருந்தார்கள்.

உடனே இறங்க முயன்ற வித்யாவிடம் செந்தில் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு “இத்தனை தூரம் கூட்டிட்டு வந்தவன், அங்கே போய் விட மாட்டேனா..! உட்காரு..” என்றான்.

வித்யா “என்ன நடிப்புடா சாமி! இத்தனை நேரம் முகத்தை உர்ருனு வச்சுட்டு இருந்துட்டு இப்போ ரொம்ப நல்ல பையன் மாதிரி வச்சுருக்கீங்க..” என்றவாறு அமர்ந்தாள்.

செந்தில் “பின்னே! என் பொண்ணை திட்டிட்டு இருக்கியானு மாமியார், மாமனார் கூடவே கூட்டிட்டு போயிட்டா என்ன செய்ய! ஆனா வித்யா ஒன்றை மட்டும் நினைவுல வச்சுக்கோ.. என்னை கோபப்படுத்தறது உனக்கு நல்லதில்ல! இந்த வாயடிக்கிற பழக்கத்தை.. இன்னையோட நிறுத்திக்கோ..” என்றான்.

வித்யா “டொன்ட் வெர்ரி! நான் போக மாட்டேன். நேத்து நைட்ல இருந்து என்னை எத்தனைத் தரம் அழ வச்சுருப்பீங்க.. அதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு செய்வேன்.” என்றாள்.

செந்தில் மெல்ல சிரிக்க மட்டும் செய்தான். வித்யாவிற்கு அந்த சிரிப்பிற்கு அர்த்தம் புரியவில்லை. அர்த்தம் புரிந்திருந்தால்.. அவளும் அமைதியாக இருந்திருப்பாள்.

அதற்குள் அவர்கள் அருகே வந்திருக்கவும், வித்யா இறங்கி மகிழ்ச்சியுடன் தனது பெற்றோரிடமும் சென்றாள்.

வண்டியை நிறுத்திவிட்டு வந்த செந்திலிடம் கந்தசாமி “மருமகளை கூட்டிட்டு ஊர் சுத்த நல்ல நேரத்தைப் பார்த்த போ..! உன் மாமனார் மாமியார் வந்து எவ்வளவு நேரமாச்சு! அவங்கெல்லாம் காலை டிபன் சாப்பிட்டாச்சு! நீங்களும் சாப்பிடுங்க போங்க..” என்று அனுப்பினார்.

செந்தில் மெதுவாக தனது கைக்கடிகாரத்தை பார்த்தான்.

அவனது குடும்பத்தினர் வீட்டை விட்டு கிளம்பும் போது நேரம் ஒன்பதரை.. தற்பொழுது.. நேரம் பத்தரையை காட்டியது.

வீட்டில் இருந்து கிளம்பும் போதே வாக்குவாதம்.. பின் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி விவாதத்தில் ஈடுபட்டது. பின் ஊரின் வழியாக வித்யாவை கூட்டிக் கொண்டு வந்து பலரின் பார்வையில் பட விரும்பாமல் ஊரை சுற்றிக் கூட்டிக் கொண்டு வந்தது என்று பத்து நிமிஷம்.. அதுவும் வண்டியில் என்றால் இரண்டு நிமிஷத்தில் வர வேண்டியதிற்கு ஒரு மணி நேரம் செய்திருந்தார்கள்.

வித்யாவும் நேரத்தைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள்.

பன்னிரெண்டு மணியளவில் விருந்து என்பதால்.. அனைவரும் ஆங்காங்கே அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள். வித்யாவின் சொந்தங்கள் அவளைத் தனியாக அழைத்துக் கொண்டு போய்.. அவளது அரை நாள் புகுந்த வீட்டு வாழ்க்கையை பற்றிக் கேட்டார்கள்.

வித்யாவிற்கு பிடிக்கலை என்ற வார்த்தை தொண்டை வரை வந்தது. ஆனாலும் அதை விழுங்கிக் கொண்டு “என்ன சொல்ல சொல்றீங்க! இதுவரைக்கும் நான் வாழ்ந்துட்டு இருந்த லைஃப் வேற.. இப்போ வாழப் போறே லைஃப் வேற! அனுசரித்து வாழணுமா.. இல்லை.. என் லைஃப் ஸ்டைலுக்கு கொண்டு வரணுமா..” என்றுக் கண்ணடித்துக் கேட்டாள்.

உடனே அனைவரும் “எல்லாருக்கும் அப்படித்தான் வித்யா! ஆனா நாம பாசமா அன்பா இருந்தா.. அதுதான் திரும்பிக் கிடைக்கும். அப்பறம் உன் லைஃப் ஸ்டைல் பத்தி கன்புயுசனே வராது. எது பிடிக்குதோ அதை வாழ்வே..” என்றுக் கூறினர்.

பானுமதி “வித்யா! மற்றவங்க கிட்ட அட்வைஸ் கேட்க வேண்டிய விசயத்துல கேட்காம இப்போ வந்து கேட்கிறே! இது உன் வாழ்க்கை இது எப்படி வாழணும் என்று நீதான் டிசைட் பண்ணும். ஆனா ஒண்ணு மட்டும் நினைவு வச்சுக்கோ! இப்போ உன் வாழ்வு என்பது நீ மட்டும் இல்லை. உன் ஹஸ்பென்ட்… இனி பொறக்க போற பிள்ளைங்க.. எல்லாம் தான்! இந்த வாழ்வை எப்படிச் சந்தோஷமா வச்சுக்கணும் என்பது உன் சமார்த்தியம்..” என்றார்.

அவர்களுக்கு வித்யா நாக்கை துருத்தி பழிப்பு காட்டினாள்.

ஆனால் பெண்ணின் முகத்தைப் பார்த்த பானுமதிக்கு என்னவோ சரியில்லை என்றுத் தோன்றியது.

இவ்வாறு ஆங்காங்கு அமர்ந்து நடந்து முடிந்த திருமணத்தைப் பற்றியும்.. அந்த ஊரைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நேரம் பன்னிரெண்டு ஆனதும் விருந்து தயாராகவும்.. முதலில் ஆண்கள் பந்தி.. அடுத்து பெண்கள் பந்தி.. என்று விருந்து விழாவும் நடைப்பெற்றது. பின் தென்னந்தோப்பினுள் புகுந்த சுகமான காற்றில்.. அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

தனியாக அமர்ந்துக் கொண்டு தன்னை செல்ஃபி எடுத்து போஸ்ட் போட்டு.. அதற்கு வந்த கமெண்ட்ஸை பார்த்துக் கொண்டிருந்த வித்யாவிடம் சென்ற பானுமதி “நீ சந்தோஷமா இருக்கியா வித்யா..” என்றுக் கேட்டார்.

உடனே வித்யா “செந்தில் ரொம்ப நல்ல பையன்னு.. அப்பா கிட்ட சர்டிபிகெட் கொடுத்தது நீங்க தானே..” என்று முறைத்தாள்.

அதற்கு பானுமதி “அதுக்கு முன்னாடி.. செந்திலை தான் கட்டிப்பிடிப்பேனு கைக் காட்டியது நீதானே..” என்கவும், வித்யாவின் முகம் சுருங்கி போனது.

இந்த மாதிரி பேச்சு வரும் என்றுத் தான்.. அமைதியாக இருந்தாள்.

ஆனால் மகளின் முகம் சுருக்கம் அவருக்கு மேலும் கவலையை ஏற்படுத்தவும், “ஏன்டா! என்னாச்சு..” என்றுச் சிறுக் கவலையுடன் கேட்டார்.

செந்திலை பற்றிச் சொல்ல வாயைத் திறக்கையில் பானுமதி “நீ வாயை வச்சுட்டு சும்மா இருந்தா போதும்.. அவன் உன்னை நல்லா பார்த்துப்பான்.” என்றார்.

உடனே வித்யா வெடித்தாள்.

“அப்போ நான் பேசவே கூடாதா! அவரு என்னைப் பெருசா பொருட்டா மதிக்கலை. புது பொண்டாட்டி நான்.. என்னை நல்லபடியா பார்த்துக்க வேண்டாமா! கொஞ்சம் கூட ஒரு எக்ஸைட் இருக்க வேண்டாமா..! இதுக்கு மேலே உன் கிட்ட எப்படிச் சொல்லனு தெரியலை அம்மா!” என்றாள்.

பானுமதி “நீ சொல்ல வரது புரியுது வித்யா! சினிமால வர ஹீரோ மாதிரி.. எல்லா ஹஸ்பென்ட்டும் இருக்க மாட்டாங்க..” என்றார்.

உடனே வித்யா “அடப் போம்மா! இப்படி தத்துவம் சொல்ல தான் வந்தியா! நான் சினிஹீரோ மாதிரி கேட்கலை. அப்பா உன்னை எப்படிப் பார்த்துக்கிறார். அந்த மாதிரி இருந்தா போதும்.” என்றாள்.

பானுமதி “என்னை முழுசா தான் சொல்ல விடேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் நம்மளோட ஜோடியை நாம் ஹீரோவா பார்க்கணும். ஹீரோவா ஆக்கணும். நான் செய்த தப்பை நீயும் செய்யாதே வித்யா! உன் அப்பா கொஞ்சம் சைலன்ட்.. அதனால நான் விட்டேறிய இருந்ததால்.. என்னை உதாசீனப்படுத்த மட்டும் தான் செய்தார். ஆனா.. செந்தில் கொஞ்சம் ஷார்ப் டைப் மாதிரி தெரியுது.” என்றுக் கூறிக் கொண்டிருக்கையில் செந்திலின் கத்தும் சத்தம் கேட்டது.

“வந்த வரைக்கும் சந்தோஷம்.. எல்லாரும் இடத்தைக் காலி பண்ணுங்க..” என்று வித்யாவின் சொந்தங்களைப் பார்த்துக் கூறிக் கொண்டிருந்தான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தித்தித்திட செய்வாய் 8


செந்தில் யாரிடமோ கத்திக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு அதிர்ந்த வித்யாவும் பானுமதியும்.. பதட்டத்துடன் எழுந்து சென்றார்கள். அங்கு செந்தில் வித்யாவின் தந்தை மற்றும்.. அவரது சொந்தங்களைப் பார்த்துத் தான் இவ்வாறு கத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து.. அங்கு விரைந்தார்கள்.

அங்கு செந்தில் அவர்களைப் போக சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்து.. அவனது பெரியப்பா மகன் ரத்தினவேல் வந்து “செந்திலு! என்னதிது!” என்று அவனை அங்கிருந்து அழைத்துக் கொண்டு செல்ல முயன்றார்.

ஏனெனில் செந்தில் கோபம் கொண்டால்.. எதிரே இருப்பவரை வார்த்தைகளால் அடிப்பான். யார் என்ன என்றுப் பார்க்க மாட்டான். தனது கோபம் தீரும் வரை எதிரே இருப்பவரை வீழ்த்தும் வரை விட மாட்டான். இதனால் சிறு விசயம் கூடப் பெரிய விசயமாக மாறியிருக்கிறது. எனவே தான்.. செந்திலின் கோபத்திற்கு அவனது குடும்பமே அஞ்சும்! எனவே தான் ரத்தினவேல் அவனை அங்கிருந்து அகற்ற முயன்றான்.

ஆனால் செந்தில் “விடுங்க அண்ணா! வந்ததில் இருந்து எத்தனைத் தரம்.. இதைச் சொல்லிக் காட்டிட்டாங்கனு தெரியுமா! சொத்தையும் கொடுத்து பொண்ணையும் கொடுத்திருக்காங்களாம். இந்த பெரிய சொத்து கொடுத்ததிற்கு அவங்க பொண்ணை நல்லபடியா பார்த்துக்கணுமாம். அப்போ இந்த தோப்பையை அவங்க பொண்ணை பார்த்துக்கிறதுக்கு கூலியா கொடுத்திருக்காங்களா! நானும் எவ்வளவுத் தரம் பொறுமையா போறது.” என்றுப் பொருமினான்.

அதற்கு ரத்தினம் “டேய்! புது மாப்பிள்ளையை கேலி செய்வாங்க தான்டா! அந்த மாதிரி எதோ பேசியிருக்காங்க விடு செந்திலு..” என்று அடக்க முயன்றான்.

அதற்கு செந்தில் “கேலி செய்யறதுக்கும், குத்திக் காட்டிப் பேசறதுக்கும் வித்தியாசம் தெரியாத பாப்பாவா நானு..” என்று அவனிடம் ஏகிறான்.

செந்திலின் எடுத்தெறிந்த பேச்சில் அதிர்ந்து நின்றிருந்த கணேஷன் “செந்தில்! நீங்க இப்படிப் பேசுவீங்கனு நான் எதிர்பார்க்கலை.” என்றார்.

கணேஷனின் தம்பி “மாப்பிள்ளை! நீங்க பேசற முறை சரியில்லை. நாங்க இந்த இடத்திற்கு வந்ததில்லை. அதனால இதைத் தான் சீதனமா எழுதிக் கொடுத்திருக்கார் என்றுப் பேச்சு வந்த போது.. அதைச் சொல்லி சின்ன கேலி செய்தோம். அதுக்கு போய் இப்படி எகிறிட்டு வறீங்க..” என்றார்.

அதற்கு செந்தில் “அப்படியா! இதுக்கு முன்னாடி ஒரு மாப்பிள்ளையை பார்த்தீங்களே! அவருக்கும் வெறும் புள்ளையை மட்டும் தான் கட்டிக் கொடுத்திருப்பீங்களா! எதாவது செய்திருப்பீங்க தானே! அதை இப்படியா எல்லாருக்கும் முன்னாடி சொல்லிக் காட்டுவீங்க? மாட்டிங்க தானே! அப்போ என்கிட்ட மட்டும் சொல்றீங்கன்னா.. நான் என்ன இளிச்சவாயானா! அவசரத்துக்கு ஒத்துக்கிட்ட மாப்பிள்ளை என்கிறதாலே இளக்காரமாக இருக்கா! சொத்தை கொடுத்து.. என் கழுத்துல சங்கிலியை கட்டி உங்க பொண்ணு கிட்ட கொடுத்துட்டதா நெனைப்பா..” என்று அவனது வார்த்தைகள் தடித்துக் கொண்டே சென்றன.

செந்திலின் வார்த்தைகள் தேள் கொடுக்காய் கொட்டியது. உடனே விபரீதம் புரிந்த அவனது உறவினர்கள்.. அவனை அடக்க முயன்றார்கள்.

ஆனால் செந்தில் “புகுந்த வீட்டிற்கு பொண்ணு கிட்ட நல்லதைச் சொல்லி அனுப்ப மாட்டிங்களா! இதைத் தான் சொல்லி அனுப்பனீங்களா..” என்றுக் கூறிக் கொண்டே வந்தவன், வித்யாவிற்கும் அவனுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையைக் கூறப் போனவன், பேச்சை நிறுத்திவிட்டு “அவசரத்துக்கு வந்த மாப்பிள்ளை என்கிறதாலே.. உங்க கிட்ட வாலை ஆட்டிட்டு நாய் மாதிரி கிடப்பேனு நெனைச்சிராதீங்க..” என்றான்.

உடனே கணேஷனின் உறவினர் ஒருவர் கோபத்துடன் “சொத்துக்கு ஆசைப்பட்டு தானே.. இந்த கல்யாணத்திற்கு நீ ஒத்துக்கிட்டே.. இப்போ என்னவோ.. ரொம்ப உத்தமன் மாதிரி பேசறே..” என்றான்.

அதைக் கேட்ட செந்தில் “ஆமா! இந்த தோப்பு வேணுன்னு நான் கேட்டேன் தான்! ஆனா பொண்ணை கொடுக்கிறேனு நீங்க தானே வலிய வந்து கேட்டிங்க! அதனால நான் எனக்கு வேணுங்கிறதைக் கேட்டேன். நான் ஒண்ணும் விலை போகலை. உங்க பொண்ணை விலைக்கும் வாங்கலை.” என்று நக்கலுடன் கூறினான்.

இத்தனை நேரம் செந்தில் பேசியதை வைத்து.. அவனை புது மாப்பிள்ளை கேலி என்ற பெயரில் தாழ்த்தி பேசியிருப்பது புரிய.. தங்கம் தனது மகனுக்காக வரிந்துக் கட்டிக் கொண்டு வந்தார்.

“என்ற மகன் கூட வாழ்ந்த நல்லா இருப்பான்னு தானே.. நீங்களே தேடி வந்து சம்பந்தம் பேசினீங்க! சொல்லப் போன என் மகன் உங்க பொண்ணு வாழ்க்கை கொடுத்திருக்கான். அதுக்கு நீங்க அவனுக்கு தங்கத்தாலே அபிஷேகம் செய்திருக்கணும். ஒத்த செயின் ஒத்த தோடு போட்டுவிட்டு அனுப்பியிருக்கீங்க! என்ற மகனுக்கு இதே போதுனு நெனைச்சிருந்தா பின்னே ஏன் இத்தனை வருஷம் பெத்து வளர்த்த ஒரே பொண்ணை மட்டும் கொடுத்தீங்க! அப்போ உங்களுக்கு தான் பொண்ணை விட சொத்து தான் பெருசு தெரியுது. நாங்க இத்தனை வருஷமா பார்த்துட்டு இருந்த இந்த தோப்பை கேட்டதிற்கு என்னமோ சொத்து ஆசைப்பட்டுனு வாய்க்கு வந்ததை உளறிங்க! நாங்க கேட்காமலேயே நீங்களே கொடுத்திருக்க வேண்டியது. அதை என்னவோ பிச்சை போட்ட மாதிரி பேசறீங்க! இந்த தோப்பு என்ற மகன் தகுதிக்கு அவனுக்கு கிடைக்க வேண்டியது தான்! ஆனா உங்க பொண்ணு என்ற மகனுக்கு தகுதியானவள் தானா! ஒரு தரம் நிச்சயம் நின்னு.. வந்த பொண்ணை.. கட்ட யாரு வருவா! எதனால நிச்சயம் நின்னுச்சோ.” என்று தங்கம் மேலும் பேச போகும் முன்.. “அம்மா!” என்ற செந்திலின் கோபக்குரல் ஓங்கி ஒலித்தது.

அதில் பெட்டி பம்பாய் அவர் அடங்கினார்.

செந்தில் “என் பொண்டாட்டியை பத்தி எதாவது பேசனீங்கன்னா பாருங்க! பேச தெரிந்தால் பேசுங்க.. இல்லைன்னா.. பேசமா போய் ஓரமா நில்லுங்க!” என்று கர்ஜீத்தான்.

ஆனால் தங்கம் பேசிய பேச்சில் வித்யாவின் சொந்தங்கள் வெகுண்டனர்.

கணேஷனின் அக்காவோ வெளிப்படையாகவே “என்ன மாப்பிள்ளையோட இலட்சணம் கல்யாணம் ஆன இரண்டாம் நாளே தெரியுது. இதுக்கு தான் இந்த சம்பந்தம் வேண்டானு சொன்னேன்.” என்றார்.

செந்தில் அவருக்கு பதில் அளித்தான்.

“என்ன இலட்சணத்தை எதிர்பார்த்தீங்க! அப்பாவி கிராமத்து முட்டாள் மாப்பிள்ளையா! நீங்க உங்க பொண்ணு வாழ கணவனை தேடனீங்களா! இல்லை உங்க பொண்ணு ஆமாம் சாமி போட அடிமை தேடனீங்களா! அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன். நீங்கெல்லாம் என்னை மட்டம் தட்டிப் பேசிட்டே போவீங்க அதை நான் கேட்டுட்டே இருக்கணுமா! அப்படி சுயமரியாதை இல்லாம என்னால் இருக்க முடியாது.” என்றான்.

செந்தில் இவ்வாறு தனது உறவினர்களுடன் வெளிப்படையாக சண்டை பிடிப்பான் என்றுச் சற்றும் எதிர்பார்க்காத வித்யா.. என்ன பேசுவது என்றுத் தெரியாமல் அதிர்ச்சியுடன் நின்றாள். பானுமதியும், செந்திலின் உறவுகளும் தான்.. அவனது பேச்சில் இடைப்புகுந்து தடுக்க முயன்றுக் கொண்டிருந்தார்கள்.

செந்தில் தொடர்ந்து “இனி இந்த மாதிரி பேசறதை என்கிட்ட வச்சுக்காதீங்க! பொண்ணை கட்டிக் கொடுத்தாச்சுல்ல. இனி நல்லா இருந்தா சரினு வாழ்த்திட்டு போயிட்டே இருங்க! நமக்குள்ள பேச்சு வார்த்தை இனி வேண்டான்னு நெனைக்கிறேன். வீணா வம்பு தான் வரும். ஆனா பொண்ணையும் விட்டுத் தர மாட்டேன். இந்த தோப்பையும் விட்டுத் தர மாட்டேன்.” என்றுவிட்டு அங்கிருந்து அகன்றான்.

அவனைச் சமாதானப்படுத்த சிலர் அவனின் பின்னால் சென்றார்கள்.

செந்திலின் உறவுகள் சிலர்.. வித்யாவின் உறவினர்களிடம் வந்து “செந்தில் கோபத்தில் பேசியதைப் பெருசா எடுத்துக்காதீங்க! எதாவது விஷேஷம் நடந்த இந்த மாதிரி சண்டை சச்சரவு என்கிறது வரது இயல்பு தான்! இந்த மாதிரி சின்ன சண்டைச் சச்சரவு வரதும் நல்லது தான்! திருஷ்டி கழிச்ச மாதிரி ஆகிரும். இனி பெருசா அவங்க வாழ்க்கையில் பாதிப்பு வராது.” என்று செந்தில் பேசியதிற்கு நியாயம் பேசினார்கள்.

அதைக் கேட்டு அவர்கள் அமைதியாக வெறித்துப் பார்க்கவும், செந்திலையும் சமாதானப்படுத்த போகிறோம்.. என்றுக் கூறி நழுவினார்கள்.

அனைவரும் செந்திலும்.. அவனது தாயும் அவமரியாதையாக பேசியதில் கோபத்தில் இருந்தார்கள். இந்த திருமணம் மட்டும் நடைப்பெறாமல் இருந்திருந்தால்.. செந்திலின் சகவாசமே வேண்டாம் என்று வித்யாவை இழுத்துக் கொண்டு சென்றிருப்பார்கள். இந்த மாதிரி மரியாதை இல்லாது பெரியவர்களை எடுத்தெறித்து பேசுபவன், அவர்களது வித்யாவை நன்றாக வைத்துக் கொள்ள மாட்டான் என்று நினைத்தார்கள். ஆனாலும் சிறிது தயங்கினார்கள். ஏனெனில் இந்த முடிவை அவர்கள் எடுக்க கூடாது கணேஷன், பானுமதி, வித்யா தான் எடுக்க வேண்டும்.

எனவே மற்றவர்கள் அந்த மூவரைப் பார்த்தார்கள்.

அவளிடம் இப்பொழுதே அடக்குமுறையுடன் பழகுகிறான் என்றுத் தான்.. வித்யா முதலில் பார்த்த மாப்பிள்ளையை மறுத்தாள். தற்பொழுது.. அந்த மாப்பிள்ளையை விட இரு மடங்கு அடக்கு முறையுடனும், பெரியவர்களிடம் மரியாதையில்லாமலும் பேசும் முரடனை வித்யாவிற்கு கண்டிப்பாக பிடிக்காது என்று நினைத்தார்கள். ஆனால் தற்பொழுது தாலி கட்டி மனைவி என்று ஆன பின்பு வித்யாவின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்றுத் தெரிந்துக் கொள்ள நினைத்தார்கள்.

எப்படி வளர்க்கப்பட்ட பெண்! அவள் முடிவு எடுத்தாள் என்பதற்காக முன்பு நிச்சயத்த மாப்பிள்ளையை அகற்றி விட்டு அவள் கைக்காட்டியவனுக்கு கட்டி வைத்தால்.. அவன் முன்பு பார்த்தவனை விட.. மோசமாக இருக்கிறானே என்ற வேதனையுடனும், இவனுடன் வாழ மாட்டேன் என்று வந்துவிட்டால்.. பின் தங்களின் மகளின் நிலை என்னாவது.. என்ற பயத்துடனும்.. கணேஷனும் பானுமதியும்.. வெறித்த பார்வையுடன் நின்றிருந்த.. வித்யாவை பார்த்தார்கள்.

கணேஷன் துக்கம் தாளாது.. மகளின் தலையை வருடிக் கொடுத்தவர் “நாங்க சரியாக விசாரிக்காம இந்த மாப்பிள்ளையை முடிவு செய்துட்டோம் ஸாரி வித்யா..” என்றார்.

வித்யா மெல்ல தன் தந்தையைப் பார்த்தாள். பின் “இப்போ என்னப்பா செய்யப் போறீங்க?” என்றுக் கேட்டாள்.

கணேஷன் “நீ என்னமா செய்யப் போறே..” என்றவரின் கண்களில் நீர் கோர்த்து நின்றது.

அதற்கு வித்யா பதில் பேசாது அமைதியாக தலை குனிந்தாள்.

கணேஷன் சட்டென்று திரும்பி பானுமதியை முறைத்து “இது எல்லாத்துக்கும் நீதான் காரணம்! செந்தில் நல்ல பையன் என்று நீ தானே சொன்னே..” என்று மனைவியிடம் பாய்ந்தார்.

உடனே பானுமதி “என் மகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்று நினைச்சு.. செந்திலுக்கு பொண்ணை தரலானு சொன்னேன். இப்போ என் மகளுக்கு எது நல்லதோ அதைச் செய்ய போறேன்.” என்றார்.

கணேஷன் “என்ன சொல்ல வரே! பொண்ணை நம்ம கூடக் கூட்டிட்டு போகலான்னா..” என்றார்.

அதற்கு பானுமதி “அதுக்கு செந்தில் ஒத்துக்க மாட்டான்.” என்றார்.

அதுவரை அமைதியாக அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த கணேஷனின் தம்பி “அவன் கிட்ட என்ன பர்மிஷன் கேட்கிறது! தாலி கட்டிட்டா.. புருஷன் ஆகிருவானா! வைஃப்பை நல்லபடியா பார்த்துக்கிறவன் தான் புருஷன்! அதற்கு அவன் தகுதியானவனா! அவனோட அம்மாவும் என்ன பேச்சு பேசுச்சு அண்ணி! நம்ம பொண்ணு இந்த வீட்டில் நல்லா வாழ மாட்டா..” என்றார்.



அதற்கு வித்யா பதில் எதுவும் பேசாது அமைதியாக தலைகுனிந்து அமர்ந்துவிட்டாள். பானுமதி தன் கணவனிடம் “மாப்பிள்ளை கிட்ட சுமுமாக பேசிப் பார்க்கிறேன்.” என்றார்.

அதைக் கேட்ட கணேஷனின் உறவினர்கள்..

“கோபம் என்கிற ஒரு குணம் போதுமே.. எல்லா தப்புக்கும் அதுதான் காரணமா போகும். நம்ம வித்யா.. செல்லமா வளர்ந்த பொண்ணு..! இந்த கோபக்காரன் கூட எப்படிச் சமாளிச்சு வாழ்வா! அவ என்ன நினைக்கிறான்னு அவ கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க..” என்றனர்.

சிலரோ “கணேஷா! அவங்க எதுக்கு அங்கே போறேன்னு சொல்றாங்க.. மறுபடியும் வீணா பிரச்சினையை இழுக்கவா..”

வேறு சிலர் “பானுவோட சொந்தம் தானே விட்டுத் தர மாட்டா..”

சிலரோ “மாப்பிள்ளை.. கிட்ட பேசறாங்களா! இத்தனை நடந்த பிறகும்.. அவனோட காலை எங்களால் பிடிக்க முடியாது. எங்களை விடு.. வித்யா இந்த காலத்து பொண்ணு சுயமரியாதையோட வாழ வேண்டாமா! மனுஷனா அவன்! பெரியவங்களான நம்ம கிட்டவே இப்படிப் பேசறான். வித்யா கிட்ட எப்படிப் பேசுவான்!” என்றுக் கோபத்துடன் கூறினர்.

மேலும் கணேஷனின் அக்கா “சின்ன விசயத்திற்கே இப்படி எகிறான். நம்ம வித்யா கொஞ்சம் வாய் துடுக்கு இருக்கிற பொண்ணு! அவள் வழக்கம் போல் துடுக்குத்தனமா பேசி.. அதைக் கேட்டு இந்த முரட்டு பையன் வித்யா கிட்ட கையை நீட்டிட்டா என்ன செய்ய! இந்த கல்யாணத்தை செய்து வச்சு.. ரொம்ப பெரிய தப்பு செய்துட்டோன்னு தோணுது.. கணேஷா!” என்றார்.

ஆள் ஆளுக்கு.. வித்யா மற்றும் கணேஷனின் மனம் சாந்தப்பட வேண்டும் என்று செந்திலை தாக்கி பேசிக் கொண்டே சென்றார்கள். அங்கு விசயத்தை பெரிதாக்காதீங்க என்று அறிவுரை கூறியவர்களும் உண்டு.

அனைத்தையும் கேட்ட பானுமதி “செந்தில் என் பொண்ணை நல்லா பார்த்துப்பானு எனக்கு நம்பிக்கை இருக்கு! நான் போய் பேசறேன்.” என்றுத் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

கணேஷனின் தமக்கை “இத்தனை நடந்த பிறகும்.. அவன் கிட்டப் பேச போறேன்னு சொல்றே! உன் பொண்ணு வாழ்க்கைக்காக தானே பேசிட்டு இருக்கோம்.” என்றார்.

அதற்கு பானுமதி “நாம் பேசி என்ன ப்ரோஜனம்! செந்தில் வித்யாவை விட்டுத் தர மாட்டான்.” என்றார்.

வித்யாவின் சித்தப்பா “ஆனா அண்ணி! வித்யா என்ன நினைக்கிறான்னு தெரியாம நீங்க முடிவு எடுக்காதீங்க..” என்றார்.

பானுமதி தனது மகளைப் பார்த்தவாறு “அவ முடிவு எடுத்திருந்தால்.. இன்னேரம் அதைச் சொல்லியிருப்பா! என் பொண்ணை பத்தி எனக்கு தெரியும். நீங்கெல்லாம் பேசியதை வச்சு.. அவ ஒரு முடிவை எடுக்கவே தயங்குகிறா..! என்ன சொன்னாலும்.. அதைத் தப்பா பேசுவீங்களோனு நினைக்கிறா! அதனால அவளுக்கான முடிவை நானே எடுக்கிறேன். செந்தில் பேசியதைக் கேட்டும்.. சம்பந்திம்மா பேசியதைக் கேட்டும்.. கண்டிப்பா எனக்கு கஷ்டமா இருந்துச்சு! கோபம் வந்துச்சு! செந்தில் நல்ல பையன்னு தெரியும். ஆனா இவ்வளவு பெரிய கோபக்காரன் என்றுத் தெரியாது. எனக்குமே.. வித்யா எதாவது சின்ன தப்பு செய்யப் போய்.. அதை அவன் பெருசா எடுத்து கோபப்பட்டு.. இப்படி வார்த்தையை விட்டா.. என் பொண்ணு எப்படித் தாங்குவா என்று இருக்கு! ஆனா.. இந்த வாழ்க்கையையும் வேண்டாம் என்றுச் சொல்லி.. அவள் வாழ்வை ஒண்ணுமேயில்லாம செய்ய விரும்பலை. அவ மேலேயும் செந்தில் மேலேயும் எனக்கு நம்பிக்கை இருக்கு..! அவங்க நல்லபடியா வாழ்வாங்க! அதனால.. நீ எப்படி இப்படிப் பேசலாம்.. என்று ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுருக்கிறதை விட்டுட்டு மாப்பிள்ளையை சமாதானம் செய்ய போறேன்.” என்று அவனை நோக்கி சென்றார்.

விரைப்புடன் நின்றுக் கொண்டிருந்த செந்தில் பானுமதியின் அழைப்பில் திருப்பினான்.

“சொல்லுங்க அத்தை..” என்று முணுமுணுத்தான்.

“செந்தில்! அவங்க தவறான எண்ணத்தில் பேசலை. ஆனா அது உங்களுக்கு கஷ்டமா இருந்திருந்தா.. அதற்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதே மாதிரி பெரியவங்க கிட்ட நீ பேசின முறையும் சரியில்லை. அவங்க கிட்ட மன்னிப்பு கேளு! இந்த பிரச்சினையை இத்தோட முடிச்சுக்கலாம்.” என்றார்.

அதற்கு செந்தில் “அப்படியா அத்தை! அவங்க சார்பா நீங்க மன்னிப்பு கேட்கறீங்களா! அப்போ சரி.. என் சார்பா அவங்க கிட்ட நீங்களே மன்னிப்பு கேட்டுருங்க..” என்றான்.

இத்தனை அமளி நடந்தும் வித்யா அமைதியாக இருக்கவும், கணேஷனும் அமைதியாக இருந்தார். இவ்வளவு பெரிய பிரச்சினைக்கு காரணமான செந்திலிடம் பானுமதி இறங்கி பேசவும், அவனும் சற்று இறங்கி வருவான் என்று எதிர்பார்த்தார்.

ஏனெனில்.. அவருடைய சொந்தங்கள் கூறுவது போல்.. இந்த திருமணத்தை முறித்துக் கொள்வதில் அவருக்கு எள்ளளவும் உடன்பாடில்லை. அதற்கு கௌரவம் மட்டும் காரணமில்லை. இத்தனை களபேரம் நடந்தும்.. வித்யாவிடம் இருந்து இரு பக்கத்தில் யாருக்கும் எதிர்ப்பும் வரவில்லை மறுப்பும் வரவில்லை. எனவே வித்யாவிற்கு இந்த பந்ததத்தில் நிலைத்திட மறுப்பு இல்லை என்று நினைத்தார்.

வித்யா ஒன்றை மறுத்தால்.. அந்த மறுப்பில் உறுதியாக இருப்பாள்.

எனவே தான் செந்திலும் இறங்கி வந்துப் பேசுவான்.. இத்துடன் இந்த பிரச்சினையை முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

ஆனால் செந்தில் இன்னும் இறங்காமல் திமிராக பேசவும், அவர் வெகுண்டார்.

கணேஷன் “என் மனைவி என் ரிலெட்டிவ்ஸிற்காக மன்னிப்பு கேட்கிறாள். அவ எதுக்கு உனக்காக என் ரிலேட்டிவ்ஸ் கிட்ட மன்னிப்பு கேட்கணும். அவ உனக்காக யார் கிட்டயும் மன்னிப்பு கேட்க மாட்டா..” என்றார்.

அப்பொழுது அனைவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த வித்யா சட்டென்று எழுந்து “நான் என் புருஷனுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன். இப்போ ஒகேங்களா! இந்த பிராப்பளத்தை இத்தோட முடிச்சுக்கலாமா! என் அப்பா பொண்ணு கௌவரத்தோட வாழணுன்னு.. இந்த சொத்தை எழுதிக் கொடுத்தார். என் ஹஸ்பென்ட் அவர் பொண்ணு கட்டிக்கிட்ட இடத்தில் மறுபடியும் வொர்க் செய்து.. பணம் கொடுக்க விருப்பமில்லாம.. அந்த தோப்பை சொந்தமாக்க நினைச்சார். இதுல இரண்டு பேரும் செய்தது தப்பு என்றால் தப்பு! சரி என்றால் சரி! அதை மறுபடியும் சொல்லிக் காட்டினது தப்பு என்றால்.. அவர் மரியாதை இல்லாமல் பேசினதும் தப்பு! சும்மா கேலியாக தான் சொன்னோம் என்று நீங்க சொல்லியது சரி என்றால்.. அவரது கோபமும் சரி..! ப்ளீஸ் இத்தோட முடிச்சுக்கோங்க! இப்படி ஆள் ஆளுக்கு நெகட்டிவ்வா பேசறதைக் கேட்க எரிச்சலா இருக்கு..” என்றாள்.

சிறிது நேரம் அங்கு நிசப்தம் நிலவியது.

பின் தனது உறவினர்களைப் பார்த்து “நான் ஒகே! எனக்காக பேசியதிற்கு எல்லாருக்கும் தேங்க்ஸ்! ஆனா என் நிலைமை அவ்வளவு மோசமில்லை. நாங்க நல்லா தான் இருப்போம். நீங்க யாரும் என்னைப் பாவமா பார்க்க வேண்டாம். என் ஹஸ்பென்ட் சொன்னதில் பாதியை ஒத்துக்கிறேன். இப்போ ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிட்டு இருந்தால்.. பிரச்சினை பெருசா தான் ஆகும். அதனால இப்போ எல்லாரும் போங்க.. கொஞ்ச நாள் கழிச்சு நாங்களே வரோம்.” என்றாள்.

கணேஷனுக்கு தனது மகளா பேசியது என்று இருந்தது.

கணேஷன் வித்யாவிடம் “நீ ரோஷம் பார்த்து பேசரவ ஆச்சே..” என்றார்.

அதற்கு வித்யா “ஆமாப்பா! என்னைப் பாவமாக பார்த்து.. என் டிஷிஷனை மற்றவங்க எடுக்கிறது எனக்கு பிடிக்கலை. அம்மா செய்தது உட்பட! ப்ளீஸ்.. இன்னொரு நாள் எல்லாரையும் சந்தோஷமா பார்க்க ஆசைப்படறேன்.” என்று கையெடுத்து கும்பிட்டாள்.

மற்றவர்கள் சிறு சலசலப்புடன் அவர்களைக் கூப்பிட்டு வந்து அவமானப்படுத்தியது போன்று இருக்கவும், மெதுவாக முணுமுணுத்தவாறு பொதுவாக கூறிவிட்டு விடைப்பெற்றனர்.

அப்பொழுதும்.. வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கணேஷன் மற்றும் பானுமதியிடம் வித்யா “அவர் பேசினதைக் கவனிச்சீங்களா! அவர் எத்தனை கோபப்பட்டாலும்.. உங்க பொண்ணை அழைச்சுட்டு போங்கன்னு ஒரு வார்த்தை கூட விடலை. அப்படி என்னைப் பற்றி எதாவது வார்த்தை விட்டிருந்தா.. அவரை எதிர்க்கிற முதல் ஆள் நானாக தான் இருப்பேன். அவர் என்னோட வாழ தான் நினைக்கிறார். அந்த வாழ்க்கையை சரியா அமைச்சுருக்கிறது.. என் கையில இருக்கு! ட்ரை செய்கிறேன்.” என்றாள்.

பின் தொடர்ந்து “உங்களுக்கு இன்னொரு விசயம் தெரியுமா! அவர் ஏற்கனவே என் கூட சண்டை போட்டுட்டார். அவர் வார்த்தைகளும் கொஞ்சம் மோசமாக தான் வருது. நானும் சண்டை போட்டுட்டேன். நானும் சும்மா இல்லை.. சரிக்கு சரி கேட்டுட்டேன். அதற்கு என்னைத் திட்டினார். ஆனா ஒரு விசயம்.. அதை ஒத்துக்கிறேன். தாலி கயிறு மேஜீக் என்றுச் சொல்வாங்களே.. அந்த மாதிரியா என்றுத் தெரியவில்லை. அவரோட கோபமும் சரி.. என்னோட கோபமும் சரி.. ஒருத்தரை ஒருத்தர் பெருசா பாதிக்கலை. இது என்ன ரோஷம் கெட்ட வாழ்வு என்று எனக்கே சிரிப்பு தான் வருது. என் லைஃப் எப்படிப் போகும் என்று ஐடியா இல்லை. பார்க்கலாம். அம்மாக்கு எங்க மேலே இருக்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.” என்றுச் சிரித்தாள்.

கணேஷனுக்கும்.. பானுமதிக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அதைப் பார்த்து சிரித்த வித்யா “நாங்க நல்லா இருப்போம் என்று பொய் சொல்லியிருக்கலாம். ஆனா எனக்கு சின்ன வயசுல இருந்து பொய் சொல்ல தெரியாதுனு உங்களுக்கு தெரியும். ஓப்பனா என்ன நினைக்கிறேனோ.. அதைச் சொல்லிட்டேன். ஸாரி! ஆனா ரொம்ப கவலைப்படாதீங்க..! என் புருஷனை ஒரு வழி செய்யப் போறேனா இல்லையானு பாருங்க..” என்றாள்.

அவளது கன்னத்தில் சிறு தட்டுத் தட்டிய பானுமதி “நீங்க நல்லா இருப்பீங்க.. வித்யா! நீயும் இதையே நினை! நடுவுல என்ன சண்டை நடந்தாலும்.. அந்த நம்பிக்கையை மட்டும் விட்டுராதே..” என்றார்.

பின் அடிக்கடி ஃபோன் போட வேண்டும் என்றுக் கூறிவிட்டு.. செந்திலிடம் மீண்டும் ஒரு நல்ல விசயத்தில் சந்திப்போம் என்றுக் கூறிவிட்டு விடைப் பெற்றவர்கள், வித்யாவை அடிக்கடி அழைத்து வர வேண்டும் என்றுக் கேட்டார்கள். செந்திலிடம் இருந்து பதில் இல்லாது போகவும், தங்களது மகளைத் திரும்பி திரும்பிப் பார்த்தவாறு காரினுள் ஏறிக் கொண்டு விடை பெற்றார்கள்.

அவர்கள் அவளைப் பார்த்தவாறு பயணிப்பதை பார்த்த வித்யாவிற்கு.. உதவிக்கு நீட்டிய கையைத் தட்டிவிட்டது போன்று இருந்தது. கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்துடன் கால்கள் தடுமாறவும், உண்மையாலுமே.. முன்னால் எட்டு வைத்தவாறு கையசைக்க போனவள், கல் இடறி தடுமாறவும்.. அருகில் நின்றிருந்த செந்தில் தான் தாங்கி பிடித்தான்.

வித்யா இடறி விழுந்த வாழ்வில் செந்தில்.. தாங்கி பிடிப்பானா!?

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தித்தித்திட செய்வாய் 9


தென்னங்கீற்றின் சுகமான காற்று அவளுக்கு சுகத்தைத் தரவில்லை.

அவளது உறவினர்கள் செந்திலை பற்றிக் கூறியது, தாயின் மறைமுகமான அறிவுரை, தந்தையின் கவலை என்று இந்த மூன்று விசயங்களே அவளது மூளைக்குள் சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தன.

அவளது பிறந்த வீட்டினரிடம் ‘அவர் அத்தனை கோபத்திலும் என்னைப் போக சொல்லவில்லை’ என்றுக் காரணத்தை கூறி செந்திலுக்கு சப்பு கட்டியதிற்கு தன் மேலேயே கோபம் வந்தது.

ஆனால் அவளின் சுயமரியாதையை அவளது பிறந்த வீட்டினரிடம் காப்பாற்ற அவளுக்கு வேறு வழித் தெரியவில்லை. அனைவரும் அவளை இரக்கத்துடன் பார்ப்பதும்.. அவளை மையமாக வைத்து.. கோபப்படுவதும்.. என்று அவளுக்கு பிடிக்கவில்லை.

செந்தில் அவர்களிடம் கோபமாக பேசுவதற்கு முன்.. அவளுக்கு இந்த லைஃப் பிடிக்கவில்லை என்று ஜாடையாக கூறிய பொழுது.. அதைக் கண்டுக் கொள்ளாமல் அட்ஜெஸ்ட் செய்து வாழ்ந்துக்கோ என்று அறிவுரை கூறியவர்கள்.. செந்தில் அவர்களைத் திட்டியதும்.. அவனுடன் வாழ்வது கடினம் என்பது மாதிரி.. இரு விதமாக பேசியது அவளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதுமட்டுமில்லாது.. செந்திலிடம் சரிக்கு சரி.. வாயடித்து அவளும் சண்டையிட்டிருக்கிறாள். அதுவும் அவளுக்கு நினைவிருக்கிறது. அவன் கோபக்காரன் என்றால் அவள் சுயமரியாதைக்காரி! அவனது கோபத்தை மற்றவர்கள் கடந்து விட வேண்டுமென்றால்.. அவளின் சுயமரியாதை அவனது பாஷையில் திமிரையும் அவளது புகுந்த வீட்டினர் செந்தில் உட்பட.. கடந்து விட வேண்டும் என்றுப் பொருமினாள்.

ஆனால் அவள் எவ்வளவு ஆசையாக எதிர்பார்த்த திருமண வாழ்வு இது! அழகான காதல் கதை கொண்ட திரைப்படத்தில் வருவதைப் போன்று சுவாரஸ்யமாக இருக்கும் என்று இவள் நினைத்திருக்க.. அதுவோ.. ஏட்டிக்கு போட்டியாக ஏதோ.. ஆன்டிஹீரோ கதை போல் செல்லவிருக்கிறது.

செந்திலுடன் எப்படி வாழப் போகிறாள் என்று அவளுக்கு அவளை நினைத்து வியப்பாக இருந்தது. ஆனால் சாத்தியம் தான் என்றுத் தோன்றியது.

ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும்.

அவனுடன் அவள் பலமுறை சண்டையிட்டு இருக்கிறாள். அதற்கு அவன் கோபப்பட்டிருக்கிறான். ஆனால் இந்தளவிற்கு அவன் அவளிடம் கோபப்பட்டதில்லை. மாறாக சிரிப்பையே கடைசி பதிலாக தந்தான்.

அப்பொழுது வித்யாவிற்கு எரிச்சலும் கோபமும் தான் வந்தது. தற்பொழுது நினைத்துப் பார்க்கையில் அவளிடம் மட்டும் தான் அவன் இளக்கம் காட்டுவது போன்று இருந்தது. செந்திலின் இந்த எதிர்மறையான நடவடிக்கைகள் வித்யாவிற்கு குழப்பத்தை விளைவித்தது.

தான் நினைப்பது சரியா தவறா என்று யோசிக்கையில்.. அவள் அருகே யாரோ வரவும்… அவளது யோசனை தடைப்பட்டது.

அவளருகே வந்து நின்ற செந்தில் “எல்லாரும் வீட்டிற்கு கிளம்பியாச்சு! வா நாமும் போகலாம்.” என்று அழைத்தான்.

நிமிர்ந்து அவனைப் பார்த்த வித்யா “அவ்வளவுத்தானா..” என்றுக் கேட்டாள்.

அதற்கு அவளருகே குதிகாலிட்டு அமர்ந்தவன், “அதுதான் என் பொண்டாட்டி.. அவங்க கிட்ட நான் பேசினதுக்கு மன்னிப்பு கேட்டுட்டாளே!” என்றுச் சிரித்தான்.

அதைக் கேட்டு கோபத்துடன் வித்யா "உங்களுக்காக மன்னிப்பு கேட்ட பொண்டாட்டிக்கு என்ன செய்யப் போறீங்க.." என்றுக் கேட்டாள்.

செந்தில் "என் பொண்டாட்டி எதிர்பாராததைச் செய்வேன்.” என்றுவிட்டு “எழுந்திரிச்சு.. வா..” என்றுத் திரும்பியும் கூடப் பார்க்காமல் சென்றான்.

வித்யா “அதென்னவோ உண்மை தான்..! ஆனா நான் எதிர்பார்க்கிறதை செய்தா.. இன்னும் சந்தோஷப்படுவேன்.” என்றவாறு அவனது பின்னோடு சென்றாள்.

இருவரும் வீட்டிற்கு வந்ததும்.. “இந்த பட்டுப்புடவை கசகசன்னு இருக்கும் வித்யா! வேற மாத்திக்கோ..” என்று வெள்ளெந்தியாக கூறி மாமியாரை வித்யாவிற்கு பார்க்க பிடிக்கவில்லை.

அவளைப் பற்றி.. தவறாக பேசிவிட்டு.. எப்படி ஒன்றும் நடவாதது போல்.. அவளிடம் அக்கறையாக பேச முடிந்தது.. என்று ஆச்சரியமாக இருந்தது. ஏன் என்னைப் பற்றி தவறாக பேசனீங்க என்றுக் கேட்டு விடலாம்.. அவரை நேராக பார்த்து நிற்கவும், தங்கம் “என்ன கண்ணு..” என்று அன்பொழுக கேட்டார்.

வித்யா கேட்க வாயைத் திறக்கையில் செந்தில் “வித்யா..” என்று அழைத்தான்.

வித்யா திரும்பிப் பார்க்கவும், வா என்று தலையசைத்துவிட்டு சென்றான். தங்கமும்.. அங்கு இருந்த மற்ற பெண் உறவினர்களும், வாயில் முந்தானையை வைத்து சிரித்தார்கள்.

வித்யாவிற்கு ‘என்னதிது! அப்போ சீரியல்ல நடப்பது எல்லாம் உண்மை தானா.. எல்லார் முன்னாடியும் புது புருஷன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டா அதற்கு அர்த்தம்.. தனியா கூப்பிட்டு கட்டிப்பிடிக்க போகிறான் என்கிற மாதிரி இவங்க வெட்கப்படறாங்க..’ என்று இருந்தது.

மீண்டும் பேசத் தொடங்குகையில்.. அவளது மாமியாரே “செந்திலு கூப்பிடரானில்ல கண்ணு போய் என்னன்னு கேட்டுட்டு வா..” என்றார்.

வித்யா எரிச்சலுடன் அவர்களது அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றாள். அங்கு.. செந்தில் தனது வாட்ச்சை கழற்றி வைத்துக் கொண்டிருந்தான்.
நேராக அவன் முன் சென்று நின்ற வித்யா “அத்தை கிட்ட கேட்பதை ஏன் தடுத்தீங்க?” என்றுக் கேட்டாள்.

அதைக் கேட்டு செந்தில் மெச்சுதலாய் புருவத்தை உயர்த்தி “ஏன் கூப்பிட்டிங்கனு கேட்பனேனு நெனைச்சேன். பரவாலையே கண்டுப்பிடிச்சுட்டே! கொஞ்சம் கெட்டிக்காரி தான்..” என்றான்.

அதற்கு வித்யா “நான் என்ன கேட்க போனேன் என்கிறதையும் நீங்க கண்டுப்பிடிச்சுட்டா.. நீங்களும் கெட்டிக்காரர் தான்னு ஒத்துக்கிறேன்.” என்றாள்.

செந்தில் “கொஞ்சம் கெட்டிக்காரினு சொன்னேன் தானே.. மீதி முட்டாள்தனத்தை செய்யாம தான் தடுத்தேன்.” என்றான்.

வித்யா “என்னைப் பற்றித் தப்பா பேசினாங்க.. அது உங்களுக்கு தப்பா படலையா! நான் ஏன் அப்படிப் பேசனீங்கனு கேட்க போனது தான் முட்டாள்த்தனமா படுதா! அவங்க பேசியதிற்கு அர்த்தம் என்னனு தெரியுமா..” என்று கழுத்து நரம்பு புடைக்க கேட்டாள்.

ஆனால் அவள் பேச பேசவே அவளை இழுத்துக் கொண்டு போய்.. பீரோவிற்கு பக்கம் நிறுத்தி வைத்தவன், “நான் இங்கே தானே இருக்கேன். பத்து கிலோ மீட்டர் தொலைவுலயா இருக்கேன். இப்படிக் கத்தறே! நீ என்கிட்ட பேசினா அது எனக்கு மட்டும் தான் கேட்கணும் புரியுதா..” என்றான்.

முதலிலேயே கோபத்தில் இருந்த வித்யா “என்னோட இயல்பை எல்லாம் அடக்க நினைக்காதீங்க..! என்னால் அடக்கவும்.. முடியாது. என் குரலே அப்படித்தான்..! நீங்க பேச்சை மாத்தாதீங்க! நான் கண்டிப்பா அத்தை கிட்ட ஏன் அப்படிப் பேசனீங்கனு கேட்க தான் போறேன்.” என்று அறிவித்தாள்.

அவளது குரலின் சத்தம் அடங்கியிருந்தாலும் கோபம் அடங்கவில்லை.

செந்தில் “என்ன கேட்ட.. அவங்க பேசின அர்த்தம் அவங்களுக்கு தெரியுமானு தானே! சத்தியமா தெரியாது.. இப்போ போய் ஏன் அத்தை அப்படித் தப்பா பேசனீங்கன்னு கேட்டா.. அப்படியா பேசினேன் என்று உன்கிட்டவே கேட்பாங்க.. என் அம்மாக்கு சண்டை போடணும்.. அவ்வளவுத்தான்! அவங்க பேசற பாயின்ட் ஓங்கியிருக்கணும். அவங்களுக்கு அப்போதைக்கு அதுதான் தேவை. மற்றபடி உன் அப்பா அம்மா கூட ஜென்ம பகையோ நீ பிடிக்காத மருமகளோ.. இல்லை! இன்னொரு நாள்.. இதைக் குத்திக் காட்டியோ பேச மாட்டாங்க! உன் அப்பாவும்.. அம்மாவும்.. கிளம்பும் போது.. சண்டை போட்டதை மறந்து, ஜாக்கிரதையா போக சொல்லிட்டு.. தேங்காய் மூட்டையையும் நொங்கு மூட்டையையும் கார் டிக்கியில் ஏத்தினாங்க! இதுதான் அவங்க.. இதுதான் நீ கேட்ட கிராமத்து அப்பாவித்தனம்!” என்றான்.

பின் தொடர்ந்து “படத்துல எல்லாம் காட்டற மாதிரி.. யாராவது ஏமாத்தினா அது தெரியாமா இருக்கிறதும்.. பட்டணத்துக்காரங்களை பார்த்த வாயைப் பிளந்துட்டு பார்க்கிறதும்.. இங்கிலிஷில் பேசினால் புரியாம இருக்கிறதும்.. காதல் என்றால் என்னவென்று தெரியாம இருப்பதும்.. என்ன சொன்னாலும் சரின்னு கேட்டுட்டு அடங்கி இருப்பதும் இல்லை. அதனால இதையெல்லாம் பெருசா எடுத்துக்காம.. உன் வேலையைப் பாரு..” என்றான்.

வித்யா “நான் ஒண்ணும் அப்படியெல்லாம் நினைக்கலை.” என்கிற போதே.. அவளது குரல் தேய்ந்தது.

அதைப் பார்த்து சிரித்த செந்தில்.. சட்டையின் பட்டனை கழற்றவும், வித்யா தலையில் அடித்துக் கொண்டு திரும்பி நின்றுக் கொண்டாள்.

செந்தில் “நீ ட்ரஸ் மாத்தலையா..” என்றுக் கேட்டதும்.. வித்யா திரும்பியும் கூடப் பார்க்காமல் மீண்டும் வெடிக்க ஆரம்பித்தாள்.

“எங்கே மாத்தறது? இங்கேயா! இது உங்க ரூம்.. எனக்கு என்று ஒரு பிரைவேஸி இங்கே இல்லை.” என்றவளின் பின்னால் வந்து நின்றவன், அவளது கரம் பற்றி இழுத்து தன் கைவளைத்திற்குள் அடக்கிக் கொண்டான்.

பின் செந்தில் மெல்ல “உன் பிரைவேஸிற்குள் நானும் அடங்குவேன். அதே மாதிரி தான் எனக்கும்..! இதுதான் நம்ம பிரைவேஸி..” என்றவன், தனது கைவளைக்குள் வாகுவாக பொருத்தியவளை.. அவளை வளைத்த கரங்கள் கொண்டு இறுக்கினான். அவனது நாடி நரம்புகளில் மின்சாரம் பாய்வதை உணர்ந்தான். மேலும் அவளைத் தன்னுடன் இறுகி அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தவன்.. “செந்திலு..” என்று அழைத்த அவனது தாயின் குரலில் வித்யாவிடம் இருந்து பிரிந்து நின்றான்.

அவன் நினைத்து போல்.. அவனை அழைத்தவாறு தங்கம் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார்.

வித்யா அடக்கமாட்டாமல் வாயை மூடிக் கொண்டு சிரித்தாள்.

தங்கம் புரியாமல் மகனை பார்க்கவும், செந்தில் “என்ன விசயம்மா!” என்றுக் கேட்டான்.

தங்கம் “கல்யாணத்துக்கு வர முடியலைன்னு அவங்க வந்திருக்காங்க..” என்று சற்று மரியாதை நிறைந்த குரலில் கூறினார்.

யார் வந்திருக்கிறாங்க என்று செந்தில் கேட்கவில்லை. மடித்து கட்டியிருந்த வேட்டியை இறக்கி விட்டுக் கொண்டு “இதோ வந்துட்டோம்.. நீ முன்னாடி போம்மா..” என்று தங்கத்தை முன்னால் அனுப்பி வைத்தவன், வித்யாவிடம் திரும்பி “அங்கே வந்து எதுவும் பேசாதே..! கூட வந்து நில்லு, நான் போ என்று தலையை ஆட்டியதும் வந்திரு! சரியா..” என்றான்.

வித்யா குழப்பத்துடன் பார்க்கவும், தலையை வேகமாக வாரிக் கொண்ட செந்தில்.. “அவங்க பேசுறதைக் கேட்டா உனக்கே புரிந்திரும். ஆனா நீ எதுவும் பேசக் கூடாது.” என்று மீண்டும் எச்சரித்துவிட்டு சென்றான். வித்யாவும் வேறு வழியின்றி பின்னே சென்றாள்.

மாமியாரின் மரியாதையும், செந்திலின் பதற்றமும் வித்யாவை யோசிக்க வைத்தது.

‘இப்படி இவர்கள் பயப்படற அளவிற்கு.. யார் வந்திருப்பார்கள். திரைப்படத்தில் காட்டுவது போல்.. ஜமீன்தாரும் அவருடைய பொறுக்கி பையனுமா..’

செந்திலின் பின்னோடு முன் கூடத்திற்கு சென்ற வித்யாவிற்கு அங்கே அமர்ந்திருப்பவர்களைப் பார்த்ததும் சொத்தென்று ஆகியது.

ஏனெனில் அவர்களது கறிவிருந்திற்கு வந்திருந்த.. மற்ற உறவினர்கள் யாரும் அங்கு இல்லை. அவர்களது வீட்டிற்கு அனைவரும் சென்றிருக்க.. வெறிச்சென்று இருந்த முன் கூடத்தில் பக்திபழமாய் ஒரு பெரியவர், அவரது மனைவி.. அவர்களின் பிள்ளை மருமகள், பேரக்குழந்தை என்று பத்து பேர் அடங்கிய ஒரு குடும்பத்தினர் வந்திருந்தார்கள். ஆண்கள் நாற்காலியில் அமர்ந்திருக்க.. பெண்களும்.. குழந்தைகளும் தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு காபி பலகாரம் கொடுத்து தங்கமும் சுமதியும் உபசரித்துக் கொண்டிருந்தனர்.

செந்தில் அவர்களைப் பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவிக்கவும், வித்யாவும் அதைப் பின்பற்றினாள்.

கந்தசாமி “ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க..” என்கவும், இருவரும் சென்று அந்த பெரியவர் மற்றும் அவரது மனைவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள். இருவரின் கையில் இருபது ரூபாய் நோட்டுக் கட்டை வைத்தார்.

அந்த பெரியவர் “அன்னைக்கு சொன்ன மாதிரி.. செந்திலு கல்யாண தேதியில என்ற தம்பி மகன் கல்யாணமும் நடந்தது. அதனால தான் கலந்துக்க முடியலை.” என்றார்.

அதற்கு கந்தசாமி “பரவாலைங்க! எத்தனைத் தரம் சொல்லிட்டிங்க! நல்ல முகூர்த்த நாள் என்றால்.. இப்படியெல்லாம் நடக்கிறது தானேங்க..” என்றார்.

அந்த பெரியவர் “அதுதான்! அங்கே கறிவிருந்து முடிச்சதும்.. குடும்பத்தோட வந்துட்டோம்.” என்றார்.

செந்தில் மெல்ல வாயைத் திறந்து “எல்லாருமா வந்தது ரொம்ப சந்தோஷங்க..” என்றான்.

அந்த பெரியவர் கந்தசாமியிடம் “இப்படி சொந்தத்துக்குள்ள கல்யாணம் கட்டிக்கிட்டறது நல்லதுங்க! சொந்தம் விட்டுப் போகாம இருக்கும். என்ற மகளுக்கு என்ற பொஞ்சாதியோட ஒன்று விட்ட அண்ணன் மகனுக்கு தானே கொடுத்தேன். இரண்டாவது மகன்.. ஒருத்தியை கை காட்டினான். சரினு ஆசைப்பட்டான்னு கட்டி வச்சுட்டேன். கொஞ்சம் யோசிச்சுருக்கணும். அதை விடுங்க..!” என்றதும்.. அவர்களுடன் அமர்ந்திருந்த ஒரு பெண்.. கையில் குழந்தையுடன் எழுந்து விருவிருவென்று வெளியே சென்றாள்.

அவளுக்கு அருகே அமர்ந்திருந்தவன், வெளியே சென்றவளையும்.. தனது தந்தையையும் மாறி மாறிப் பார்த்தான். ஆனால் அவனது தந்தை எதையும் கவனியாத பாவனையில் தொடர்ந்து கந்தசாமியிடம் பேசவும், வேறுவழியின்றி அமைதியாக அமர்ந்துவிட்டான்.

கனகவேல் என்னும் அந்த பெரியவர் கந்தசாமியிடம் “மூன்றாவது மகனுக்கு சொந்தத்தில தான் பார்த்தேன். ஆனா இருக்கிற பொண்ணுங்க.. அவனை விட மூத்தவங்களா இருந்தாங்க! எப்படியோ புது சொந்தத்தை ஏற்படுத்தணும் என்று அவனுக்கு இருக்கு..! எங்கே என் மருமக..” என்றுக் கேட்டார்.

சிறு வெட்கப் புன்னகையுடன் வளர்மதி வந்தாள்.

செந்தில் வித்யாவிடம் அவர்கள் பேசுவதை வைத்தே.. புரிந்துவிடும் என்றுக் கூறியது சரியாக தான் இருந்தது.

வளர்மதி வந்ததும் நேராக கனகவேல் மற்றும் அவரது மனைவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள். பின் வளர்மதி பின்கூடத்திற்குள் சென்றுவிட்டாள். செந்தில் வித்யாவிடம் தலையசைத்து போக சொன்னான்.

‘இங்கே பொம்மை மாதிரி நின்றுட்டு என்ன செய்ய போறேன். போக சொன்னதிற்கு தேங்க்ஸ்..’ என்று மனதிற்குள் நினைத்தவாறு திரும்ப எதானித்தவள், கனகவேல் “இந்த கல்யாணம் தான் முடிஞ்சுருச்சே.. இனி நம்ம விசயத்தைத் தொடங்கலாமா..” என்றுக் கேட்டார்.

வளர்மதிக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அதைப் பற்றிப் பேசப் போகிறார்கள்.. என்றுத் தெரியவும், வித்யா ஆவலுடன் அங்கேயே நின்றுவிட்டாள்.

கனகவேல் “வாங்க உட்காருங்க..” என்று.. செந்திலையும் வித்யாவையும், ஓரமாக நின்றிருந்த தங்கம் மற்றும் சுமதியையும் அழைத்தார்கள்.

தான் போக சொல்லியும் போகாமல் நின்றிருந்த வித்யாவை திரும்பி அழுத்தமாக பார்த்துவிட்டு செந்தில் முன்னால் நடக்க.. வித்யா சுமதியுடன் வந்து அமர்ந்தாள்.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. பின் கனகவேலே தொண்டையை கனைத்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

"செந்திலுக்கு திடீர் சம்பந்தம் முடிவாகிறதுக்கு முன்பே.. முடிஞ்ச சம்பந்தம் இது! என்ற மகனுக்கு இருபத்தியெழு முடியரதுக்குள்ள கல்யாணத்தை நடத்தணுன்னு எங்க ஜோசியர் சொன்னதாலே.. செந்திலுக்கு கல்யாணம் ஆன முகூர்த்த நாளை தான் நாங்களும் குறிச்சோம். ஆனா நீங்க ஆறு மாசம் டைம் கேட்டிங்க. அது எங்களுக்கு சரியா வராததாலே.. இந்த விசயத்தை ஆறப் போட முடிவு செய்தோம்." என்று வேறு சம்பந்தம் பார்க்க ஆரம்பித்து விட்டதை நாசுக்காக கூறினார். அது செந்திலுக்கு நன்றாகவே புரிந்தது.

கனகவேல் தொடர்ந்து பேசினார்.

“உங்க வீட்டு புது மருமக வந்த ராசியோ.. போன மாசம் ஃபோன் போட்டு.. கல்யாணம் முடிந்ததும் வாங்க.. நல்ல நாள் குறிச்சுக்கலானு சொன்னீங்க! எங்களுக்கு முக்கியமா என்ற மகனுக்கு ரொம்ப சந்தோஷம்! நாங்க வரும் போதே.. ஜோசியரை பார்த்து நாள் குறிச்சுட்டு தான் வந்திருக்கோம். ஐப்பசி ஆறு, ஏழு நல்ல முகூர்த்த நாள்.. அன்னைக்கே முடிவு செய்துக்கலாமா..” என்றுக் கேட்டார்.

கந்தசாமி “ஐப்பசின்னா… இது ஆவணி மாசம்! அப்போ இரண்டு மாசத்துல அப்படிதானுங்க..” என்றுக் கேட்டார்.

கனகவேல் “ஆமாங்க..” என்றார்.

கந்தசாமி செந்திலை பார்க்கவும், அவன் சம்மதமாக தலையை ஆட்டினான்.

கந்தசாமி “முடிச்சுருலாங்க..” என்றார்.

கனகவேல் “இப்போ தான் உங்க வுட்டுல கல்யாணம் முடிச்சுருக்கு! அதனால ஒண்ணும் பிரச்சினை இல்லையே!” என்றுக் கேட்கவும், கந்தசாமி “எங்களுக்கு சரிதான்ங்க..” என்றார்.

கனகவேல் “செந்திலு மாமனார்.. கோவையில அசத்திட்டாருனு கேள்விப்பட்டேன்.” என்று வித்யாவை பார்க்கவும், அவள் பெருமையாக முறுவலித்தாள்.

கனகவேல் கந்தசாமியிடம் “செலவு எப்படிங்க! பாதி பாதிங்களா..” என்றுக் கேட்டார்.

செந்தில் தனது தந்தை வாயை விட்டுவிடக் கூடாது என்று பதட்டத்துடன் பார்த்தான். ஆனால் அவன் பயந்தது போல்.. கந்தசாமி பெருமையுடன் “ஆமாங்க! பொன் தாலி, முகூர்த்த புடவை தவிர.. வேற எந்த செலவும் நாங்க செய்யலை. எல்லாத்தையும் சம்பந்தி தான் ஏத்துக்கிட்டாரு. என்ற மவனுக்கு பொண்ணு கொடுக்கிறதுன்னா சும்மாங்களா..” என்று மீசை தடவினார்.

வித்யா ‘இப்படியொரு மகனை வச்சுட்டு இதுல பெருமை வேற..’ என்று மனதிற்குள் நொடிந்துக் கொண்டாள்.

ஆனால் செந்திலுக்கோ நெற்றியில் அறைந்துக் கொள்ளலாம் போன்று இருந்தது.

கந்தசாமி கூறியதைக் கேட்டு திருப்தியாய் முறுவலித்த கனகவேல் “அப்போ.. உங்க மக கல்யாணத்தை அதை விட சிறப்பா நடத்தி.. சம்பந்திக்கு சவால் விட்டிருங்க..” என்றுவிட்டு ஏதோ பெரிய ஜோக் கூறியதைப் போல் சிரித்தார்.

கந்தசாமியும் உடன் சேர்ந்து சிரித்தார். தங்கமும் விசயம் புரியாமல் சிரிக்க.. வடிவேலுக்கும் சுமதிக்கும்.. அறையினுள் இருந்த வளர்மதிக்கும்.. செந்திலின் கோபத்தை நினைத்து உதறல் எடுத்தது.

பின் கனகவேல் “அப்பறம் உங்க பொண்ணுக்கு அதை செய்யுங்க.. இதைச் செய்யுங்க என்று எங்க வாயாலா கேட்க மாட்டோங்க..! உங்க பொண்ணு பெருமையா எங்க வுட்டுக்குள்ள நுழையற மாதிரி செய்திருங்க..! அப்பறம்.. அவங்களுக்கு பிற்காலத்துல எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கிறதுக்கு.. பொண்ணு பேர்ல தோப்போ.. நிலமோ எழுதி வச்சுருங்கன்னு அன்னைக்கே சொன்னேன். அப்போ அது சாத்தியப்படாதுனு ஆறு மாசம் டைம் கேட்டவங்க.. இரண்டு மாசத்துலேயே கூப்பிட்டு இருக்கீங்கன்னா.. இப்போ அது சாத்தியப்படும் என்றுத் தானே அர்த்தம்..” என்று பற்கள் தெரிய சிரித்தார்.

எவ்வளவு நாசுக்கா.. வரதட்சணை கேட்கிறார்.. என்று வாயைப் பிளந்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த வித்யாவிற்கு கடைசியில் கூறியது ஏதோ இடிப்பது போன்று இருந்தது. புருவத்தை சுருக்கி யோசித்தவளுக்கு.. புரியப்படவும், திகைப்புடன் கணவனை பார்த்தாள்.

செந்திலும் அழுத்தமான பார்வையுடன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


 
Status
Not open for further replies.
Top