All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ். சுபா ஸ்ரீசியின் 'நீயே என் கீர்த்தனம்' - கதை திரி

Status
Not open for further replies.

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... மக்களே 😍

இதோ "நீயே என் கீர்த்தனம்" கதையின் அடுத்த அத்தியாயம் பதிவிட்டு விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே 😍.

சென்ற அத்தியாயத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி தோழமைகளே 😍❤

கருத்து திரி 👇


நன்றி ❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்: 5

அதிகாலை நேர சூரிய கதிர்கள் குமரி மண்ணின் கொஞ்சும் எழிலை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருக்க, அந்த கொடுங்கோல் ஆட்சிகாரனின் வெட்பச்சலனத்தால் கொஞ்சம், கொஞ்சமாய் தூக்கம் கலைந்து எழுந்து கொண்ட மரங்களும், செடிகளும் சற்றே தங்களை உலர்த்தில்.... தங்கள் மேல் படுத்து உறங்கிய பனிதுளிகளையும், பறவைகளையும் அடித்து விரட்டிக்கொண்டிருந்தன.

குமரி மண்ணின் பெரும்பாலான வீடுகள் நூறு அடி இடைவெளி விட்டு அமைந்திருப்பதோடு, ஒவ்வொரு வீட்டுக்கும் இடையில் அதிக அளவு இருக்கும் இடைவெளி மற்றும் மரக்காடுகளால் அங்குள்ள வீடுகள் தனி தனி தீவு போல் தான் காட்சியளிக்கும்.

அத்தனையும் தேக்கு, பழா, ரப்பர் மரம் என ஓங்கி உயர்ந்த மரங்கள். மழையின் சலசலப்பு வருடத்தில் பெரு வாரியான நாட்கள் இருப்பதால், வற்றாமல் ஓடும் சிறு குறு ஆறுகளாலும் வெயிலின் தாக்கம் அத்தனை அடர்த்தியாய் இருப்பதில்லை.

மதிய நேரத்து வெயிலின் தாக்கமே அப்படி என்றால் காலை நேர வெயிலின் தாக்கத்தை சொல்லவும் வேண்டுமா! அது வெப்பமாக இல்லாமல், மரங்களின் ஊடே ஊடுறுவி வந்த சூரிய கதிர்கள் மின்மினி பூச்சிகளாய் மின்னி ஆங்காங்கே சிறு வெளிச்சத்தையும் கொடுத்து கொண்டிருந்தது.

அதில் அதிகாலை நேரத்து பனி துளி வேறு மரக்கிளைகளில் இருந்து நழுவி மண்ணை தொட்டு டொக் டொக் என்ற சத்தத்தை கொடுத்து கொண்டிருக்க, அத்தனை ரம்யமாய் இருந்தது அந்த கலை பொழுது.

ரசனை உள்ளம் இல்லாதவர்கள் கூட அந்த காலை பொழுதை அனுபவித்து ரசித்து கடப்பார்கள். ஆனால் அந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்த சக்திதரனோ அதை ரசிக்கும் எண்ணம் சிறு துளியும் இல்லாதவனாய் வேர்வை வழிய உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான்.

ஐம்பது கிலோ எடையுள்ள பழுதூக்கியை தூக்கி இறக்குவதில் இருந்த வேகமும் மூச்சு காற்றின் சீரற்ற தன்மையும், கண்களின் சிவப்பும், ரத்த பசையற்று வெளுத்து கிடந்த முகமும் அவன் கோபத்தின் அளவை கூறியது.

மீண்டும் மீண்டும் அருணாச்சலம் அவனை அவருக்கு அடிபணிந்து நடக்க வைக்க முயற்சிப்பதில் அவனின் கோபங்கள் அனைத்தும் வெறியாக மாறி கொண்டிருந்தது.

மகனின் நன்மை என்று மட்டுமே அனைத்தையும் யோசிக்கும் அருணாசலம், சக்திதரன் இப்படி ஒரு கண்ணோட்டத்தில் தான் அத்தனையையும் பார்க்கிறான் என்றும் அறியவில்லை. அறியும் போது நடக்கவிருப்பதை அவரால் தடுக்க முடியுமா!

சக்திதரன் கண்களின் சிவப்பு அவன் அருணாசலத்தின் மேல் வைத்திருக்கும் கோபத்தையும், முக வெளுப்பு அவன் கோமதி மேல் வைத்திருக்கும் பாசத்தையும் உணர்த்தியது.

இரவு முழுவதும் மருத்துவமனையில் இருந்துவிட்டு அதிகாலை மூன்று மணி அளவில் வீட்டிற்கு வந்தவன் வந்த நேரம் முதல் உடற்பயிற்சி தான் செய்கிறான். உடல் நொந்து போகும் அளவு உடற்பயிற்சி செய்தும், அவன் கோபம் தனிவதாய் இல்லை. அது தனியாது என்று புரிந்த சக்திதரன் அவன் உடலை இன்னும் இன்னும் வருத்திக்கொண்டிருக்க, அவனை சற்றே ஓய்வு கொள்ள வைக்கும் எண்ணத்துடன் அழைத்தது அவன் அழைபேசி.

அதன் சத்தத்தில் ஒரு நிமிடம் உடற்பயிற்சியை நிறுத்தி விட்டு வந்து அழைப்பை ஏற்றவன் "சொல்லு மக்கா அம்மைக்கு இப்போ எப்படி இருக்கு" என்று நெஞ்சம் தடதடக்க கேட்க,

"லேய்.. ஒனக்க அம்மைக்கு ஹார்ட் அட்டாக்காம் கேட்டியா. இனிமே அவங்களை கோபம், பதட்டம் கொள்ளாம பாத்துக்கிடனுமாம். கவனமா இருக்க சொல்லி டாக்டர் சொல்லிருக்காவ. இப்போ நல்லா இருக்காவ. ஏம்லே ஒனக்க அப்பனுக்கு மண்டையில கூறு இல்லியா? நீ பண்ணதுக்கு அவியலை பிடிச்சி ஏசி இருக்காரு. என்னனாலும் உன் கிட்ட பேச வேண்டியதானே" என்றான் குகன் கோபமாய்.

"அந்தாலுக்கு அந்த கூறெல்லாம் ஏது! சரி விடு. அம்ம கண்ணு முழிச்சிட்டா. இப்போ எப்படி இருக்காவ" என்று கேட்க,

"ஆமா. நல்லா இருக்காவ. அவங்க சொல்லி தான் ஒனக்கு போன் போட்டேன். இரு அவங்கட்ட போன குடுக்கேன்" என்ற குகன் கோமதியிடம் போனை கொடுத்தான்.

"லேய்... சக்தி..." என்ற கோமதியின் அழைப்பை தொடர்ந்து அவர் அழுகை சத்தம் கேட்க, அதுவரை வெளுத்து கிடந்த சக்திதரனின் முகம் இறுக தொடங்கியது.

"யம்மோ... எதுக்கு அழுத நீ? அந்தாள் பேசுனா அழுவியா? அந்தாளை ஏசி வெளிய அனுப்பிருக்க வேண்டிய தானே நீ" என சக்திதரன் அடக்கப்பட்ட கோபத்துடன் பேச,

"பன்ற தப்பை எல்லாம் நீ பண்ணிட்டு அவரை ஏம்லே பேசுத.. எல்லாரையும் கூட்டிட்டு போய் அங்க வச்சி மூக்க அறுத்துட்ட இல்ல? அப்போ அவர் ஏச தான் செய்வாரு. நீ செஞ்சது மட்டும் சரியாலே. நீ ஒருத்தியை பிடிச்சிருக்குனு சொன்னியே அவ பார்க்க பொண்ணு மாதிரியா இருந்தா? தேவாங்கு மாதிரி இருக்கா. சரி கலராவாவது இருக்காலா அதுவும் இல்லை. அவளை போய் பிடிச்சிருக்குனு சொல்லுத.... பின்ன அவருக்கு கோவம் வராதா?"

"அதான்... ஓரே பேச்சு 'உன் பையன் அவளை இன்னோரு தரம் கட்டுவேன் கிட்டுவேன்னு சொன்னா நான் இந்த ஊரை விட்டு போய்டுவேன்னு சொல்றாரு' நீ ஏ சக்தி இப்படி பண்ணுத? என்றார் கோமதி தேம்பளுடன்.

அவர் கூறியதை எல்லாம் மௌனமாய் கேட்டு கொண்டு நின்ற சக்திதரன் அவர் கூறியதை மீண்டும் ஒரு முறை மனதில் ஓட்டி பார்த்தவன் "அவளை கட்டிக்க போறது நானா? இல்லை ஒனக்க வீட்டுகாரராமா?" என்றான் சக்திதரன் கடும் கோபத்துடன்.

"சக்தி... என்ன...?" என்ற கோமதி திகைத்து போக,

"நேத்து நான் அந்த பெண்ண சீண்ட தான் அப்படி சொன்னேன். ஆனா இப்போ சொல்லுதே... நான் அந்த பிள்ளைய தான் கட்டுவேன். உன் புருஷன் கிட்ட போய் சொல்லு... எனக்கு இப்போ அந்த பிள்ளைய ரொம்ப பிடிச்சிருக்கு. என்ன செய்ய போராராம் ஒனக்க புருஷன்?" என்றான் அழுத்தம் திருத்தமாய்.

"லேய்... அப்பா ஏதோ தெரியாம" என்ற கோமதியை இடை மறித்தவன் "நான் தெரிஞ்சி தான் சொல்றேன். அந்த குட்டி தான் ஒனக்க மறுமோவா. நல்லா நினைவு வச்சிக்க" என்றான் சக்திதரன் அழுத்தம் திருத்தமாய்.

அவனின் உறுதியில் விக்கித்து போன கோமதி "அந்த பிள்ளை பார்க்க..." என்ற கோமதி மீண்டும் ஏதோ சொல்ல போக,

"யம்மோ இனி என்ன பேசுனாலும் பார்த்து பேசு. இனி அவா ஒனக்க மருமொவா கேட்டியா. எனக்கு அவ தேவதை மாதிரி இருக்கா. இது வர ஒனக்க புருஷன் நான் சொல்லாமயே எனக்கு பெண்ணு பாத்தார்லியா! இப்போ நானே சொல்றேன். உன் புருஷன எனக்கு நல்ல அப்பாவா போய் பெண்ணு கேட்டு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லு" என்றான் ஒருவித நக்கல் தோணியில்.

"அவருக்கு அந்த குடும்பத்தையே பிடிக்கலைனு சொல்லுதே. நீ அவரையே போய் பெண்ணு கேட்க சொல்லுத. உனக்கு என்னடா அப்படி அகம்?" என்றார் கோமதி அழுகையை விட்டு விட்டு கோபமாய்.

"என்னால எல்லாம் அந்த பிள்ள வீட்டுல போய் பொண்ணு கேக்க முடியாதுனு ஓ மொவன்கிட்ட சொல்லு. ஓ மொவனையும் இந்த முடிவை இதோட விட்டுட சொல்லு" என்று அதுவரைசக்திதரன் பேசியதை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த அருணாச்சம் பேச,

"நீங்க சொல்லுததை கேக்கனும்னு எனக்கு விதி இல்லை. எனக்கு அந்த பிள்ள தான் பொண்டாட்டி" என்ற சக்திதரன் அழைப்பை துண்டித்து இருந்தான்.

கோமதியிடம் பேசும் வரை கூட சக்திதரனுக்கு கீர்த்தனாவை திருமணம் செய்யும் எண்ணம் மட்டும் இல்லை, அவள் நினைவு கூட துளியும் இல்லை. ஆனால் எப்போது அருணாசலம் பேச மாட்டேன் என்று தன்னை மனம் மாற சொன்னாறோ... அந்த நொடி இனிமேல் கீர்த்தனாவை தான் திருமணம் செய்வதாய் உறுதி எடுத்துக் கொண்டவன். அதை நடத்த என்னவெல்லாம் செய்ய வேண்டும் என‌ திட்டமிட தொடங்கினான்.

ஆனால் இதுவும் அருணாசலம் திட்டம் என்று அவன் அறியவில்லை. அறியும் போது கீர்த்தனாவின் நிலை என்னவோ?

*****
தெய்வ கீர்த்தனா ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக முருகருக்கு தன் பணியை செய்து விட்டு, அவருக்கு ஒரு நன்றியையும் தெரிவித்துவிட்டு தான் அடுத்த வேலையை பார்த்தாள்.

முருகர் அவளுக்கு செய்ததிலேயே இது தான் மிக பெரிய உதவியாக கீர்த்தனாவிற்கு தோன்றியது.

அபிராமியின் இந்த திடிர் மாற்றம் எப்படி என்று புரியவில்லை. ஆனால் நடந்தது அனைத்தும் உண்மை என்று மட்டும் புரிந்தது.

மாப்பிள்ளை கிடைத்தால் போதும் திருமணம் செய்து வைத்து விடலாம் என்ற முடிவில் இருந்தவர், சக்திதரனை நிராகரித்து வந்தது ஆச்சரியத்தை தான் கொடுத்தது.

அபிராமி என்ன நினைத்து அந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால் அது கீர்த்தனாவிற்கு நம்மையாக அமைந்ததில் அவளுக்கு பெரும் நிம்மதி.

அவர்கள் ஊருக்கு வந்த இரண்டாம் நாள் கீர்த்தனாவிற்கு அழைத்தாள் அனுராகவி. நண்பர்கள் போல் அடிக்கடி அழைத்து இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் இருவருக்கும் இடையில் இருக்கும் புரிதல் அவர்கள் உறவை அழகாய் வழிநடத்திக் கொண்டிருந்தது.

ஊருக்கு சென்று வந்து இரண்டு நாட்கள் தான் ஆகி இருக்க அனு அழைக்கவும் சிறு வியப்புடனே அழைப்பை ஏற்ற கீர்த்தனா "சொல்லு அனு.. அப்படி இருக்க? மாமா, அத்தை எல்லாம் எப்படி இருக்காங்க? மாமா கோபப்பட்டாங்களா?" என்ற கீர்த்தனா விசாரிக்க

"எல்லாரும் நல்லா இருக்கோம். அப்பா கோபம் தானே...! அது கோபமானே எனக்கு தெரியலை" என்ற அனு கந்தையன் பேசியதை கூறினாள்.

"சாரி அனு. என்னால தான் உன் கல்யாணம் நின்னு போச்சி. எனக்கு என்னவோ அவன் பிகேவியர் பிடிக்கலை. அதை நான் உங்கிட்ட சொல்லி உன்னை குழப்பி இருக்க கூடாது" என்று குற்ற உணர்வுடன் சொல்ல,

"நீ ஏன்டி லூசு மாதிரி பீல் பண்ற? அவன் பண்ணதும் தப்பு தான். அந்தனை பேர் முன்னாடி எப்படி திமிரா அக்கா இல்லனா தங்கச்சினு பேசுனான். நாம் என்ன சந்தையில் விக்க வச்சிருக்க கருவேப்பிலை கொத்தமல்லி இலைய இது இல்லனா அதை தாங்கனு கேட்க" என்றாள் அனுவும் கோபமாய்.

"அதுவும் சரிதான்..." என்ற கீர்த்தனாவிற்கு குற்ற உணர்வு மட்டும் குறையவில்லை. ஆனால் இனிமேல் வருந்தியும் ஒன்றும் ஆக போவதில்லை என்பதால் "அம்மா அடுத்து மாப்பிள்ளை பார்க்குறேன்னு ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி ஏதாவது வேலைக்கு போனும் அனு" என்றாள் கீர்த்தனா கவலையுடன்.

"ஏன்... என்னடி எப்பவும் வேலை வேலைனே சொல்ற, உனக்கு மேரேஜ் பண்ணிக்க ஐடியாவே இல்லையா?" என்று கேட்க,

"விருப்பம் இல்லைனு இல்லை. எங்க அம்மா மாப்பிள்ளை பார்க்குறேன்னு என்னை படுத்துன பாட்டுல கல்யாணமே.... வெறுத்து போச்சி" என்றாள் கீர்த்தனா.

"ஹோ.... அவ்வளவு கொடுமை பண்ணிட்டாங்களா அத்தை?" என்று அனு சிறு புன்னகையுடன் கேட்க,

"இன்னும் பண்ணுவாங்க. உனக்கு பார்த்த பையனை எப்படி வேண்டாம்னு சொன்னாங்கனு எனக்கு இன்னும் ஆச்சரியமா தான் இருக்கு. அவங்களுக்கு மாப்பிள்ளை முக்கியம் இல்லை எனக்கு கல்யாணம் ஆகனும். அதான் கொஞ்ச காலம் அதுல இருந்து தப்பிக்க பார்க்குறேன். முடியலையே..." என்றாள் கீர்த்தனா புலம்பலுடன்.

"நீ ஒனக்க ரெசியூம் அனுப்பு. நான் இங்க உள்ள கம்பேனில அப்ளை பன்றேன்" என அனுராகவி கூற,

"ஆத்தாடி... உன் ஊறே எனக்கு வேண்டாம் தாயே... . உங்க பாஷையும், நீங்களும்... ஒன்னும் புரியாது எனக்கு. ப்ளீஸ் ஆளை விடு நீ" என்றாள் கீர்த்தனா.

"போடி... போ... எங்க ஊர் அறுமை தெரியாத உனக்கெல்லாம் எங்க ஊர்ல இடம் இல்லை போ" என்ற அனு, மீண்டும் சற்று நேரம் பேசி விட்டு அழைப்பை துண்டித்தாள்.

கீர்த்தனாவும் 'அபிராமி மீண்டும் தனக்கு வரன் பார்க்க தொடங்கும் முன் வேலை கிடைத்து விட வேண்டும்' என்று தனக்கு துணை நிற்கும் படி முருகனை மனமாற வேண்டி கொண்டு சில வேலைகளுக்கு முயற்சி செய்தாள்.

இரண்டு வாரம் கடந்தும் எந்த வேலையும் சரி வர அமையாததுடன் நாட்களும் ஒருவித மந்த தன்மையுடனேயே சென்று கொண்டிருந்தது.

எந்த நேரமும் கல்யாணம், கல்யாணம் என நச்சரிக்கும் அபிராமி கூட "கடவுள் நிச்சயித்த நேரம் நடக்கும்" என்று கூறி கொண்டிருக்க, சற்று வியப்பு தான் என்றாலும் இந்த கன்னி வெடி எப்போது வெடிக்குமோ!! என்ன பயமும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்தது கீர்த்தனாவிற்கு.

கீர்த்தனா எதிர் பார்த்தா நாளும் அழகாய் விடிந்தது. அன்றைய நாள் காலை எழும் போதே சற்று மந்த தன்மையுடனே இருக்க, ஒருவித சோம்பளுடனேயே எல்லா வேலையையும் செய்தாள்.

பாதி நேரத்தை தூக்கத்தில் கடந்தவள் மாலை ஆனதும் ஆற்றங்கரை சென்று முருகனை வணங்கி விட்டு வீட்டிற்கு வந்தவளை "என்ன மக்ளே நல்லா இருக்கியா?" என்ற கந்தையனின் நல விசாரிப்பு தான் வரவேற்றது.

அவரின் திடிர் வரவை எதிர்பார்க்காமல் ஒரு நொடி திகைத்தவள் தன்னை சுதாரித்து கொண்டு "வாங்க மாமா? எப்படி இருக்கிங்க? எப்போ வந்திங்க? அத்தை அனு எல்லாரும் எப்படி இருக்காங்க?" என்றாள் கீர்த்தனா புன்னகையுடன்.

ஆனால் அவரின் வரவு எதனால் என்று யோசித்து உள் மனம் தடதடவென்று அடித்து கொள்ள அதை மறைத்து புன்னகைப்பது கீர்த்தனாவிற்கு பெரும் சவாலாக தான் இருந்தது.

"நான் நல்ல நலம் மக்ளே. ஒனக்கு மாமி எப்படின்னு நீ அவட்ட தான் கேக்கனும். உள்ளுக்க தான் இருக்கா போய் கேளேன்..." என கந்தையன் சொல்ல,

"என்ன அத்தையும் வந்துருக்காங்களா?" என்று கேட்ட கீர்த்தனாவிற்கு பதட்டம் இன்னும் அதிகரித்தது. மனம் ஏதோ ஒன்றை அறிவுறுத்த உள்ளம் தடதடக்க கிச்சன் செல்ல போனவள் அப்போது தான் கந்தையன் அருகில் அமர்ந்திருந்த மற்றொருவரை கவனித்தாள் கீர்த்தனா.

அவர் யார் என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவர் முகம் ஒரு வித கோபத்தையும், பிடித்தமின்மையையும் காட்டி கொண்டிருக்க அது ஏன் என புரியவில்லை என்றாலும் "வாங்க..
ஔ என்ற அழைப்பும் தலையசைப்புமாய் அவரை கடந்து உள்ளே சென்றாள்.

அங்கு தெய்வானை அபிராமியிடம் ரகசியம் போல் ஏதோ கிசுகிசுத்து கொண்டிருக்க, கீர்த்தனாவை பார்த்ததும் பேச்சை நிறுத்தி விட்டு அவளை பார்த்து புன்னகைத்தவர் "இங்கன இருக்க கோயிலுக்கு போய்ட்டு வர உனக்கு இவ்வளவு நேரமா தெய்வா?" என்று கேட்க,

"வீட்டுலயும் சும்மா தானே இருக்கனும்னு கூட கொஞ்ச நேரம் சாமி சன்னதில இருந்துட்டு வந்தேன் அத்தை அதான் லேட்" என்ற கீர்த்தனா "அனுவை கூட்டிட்டு வர்லையா அத்தை" என்று கேட்க,

"ஒரு அவசரமா கெளம்பி வந்தோம் தெய்வா. உடனே கெளம்ப வேண்டியது தான். அதான் கூட்டிட்டு வர்லை. உனக்கு சீக்கிரமா ஒரு நல்லது நடக்கட்டும் வந்து ஒரு மாசம் தங்குறோம். சரி இப்போ நீ போய் வேற ட்ரெஸ் மாத்திட்டு வா தெய்வா" என்று தெய்வானை சொல்ல,

'இதோ தான் எதிர்பார்த்த அனு குண்டு வெடிக்க தயாராகி விட்டது' என நினைத்த கீர்த்தனா "ஏன் அத்தை வீட்டுல இருக்க இந்த ட்ரெஸ் போத்தா?" என்றாள் கீர்த்தனா ஒரு வித எரிச்சல் குரலில்.

"எதுக்கு எடுத்தாலும் இதென்ன கேள்வி? ஏன்னு..? சொன்னா சொன்னதை செய்யேன்டி" என அபிராமி அதட்ட,

"வீட்டுல இருக்க இருந்த ட்ரெஸ்சே போதுமே! அதான் கேட்டேன்" என்றாள் கீர்த்தனாவும் சற்றே கோபமாய்.

"அவ கேட்க தானே செய்றா. பொறுமையா தான் பேசுங்களேன் மைனி" என்று அபிராமியிடம் கூறிய தெய்வானை "எங்க ஊர் பக்கமா உனக்கு ஒரு வரன் வந்துருக்கு தெய்வா. மாமா கூட இருக்குறது பையனுக்கு அப்பா. நல்ல குடும்பம் உன்னை கேக்குறாங்க. அதான்..., சரி நீ போய் கிளம்பி வா" என்றார்.

அவர்கள் பேச்சு கீர்த்தனாவிற்கு கடுப்பை கொடுக்க "அவரே ஏதோ வேண்டா வெறுப்பா வந்து உக்கார்ந்து இருக்கார். அவருக்கு நான் வேற ட்ரெஸ் வேற போடனுமா? இப்போ என்ன டீ தானே குடுக்கனும்? குடுங்க நான் போய் குடுக்குறேன்" என கீர்த்தனா எரிச்சலை உள் அடக்கிய குரலில் சொல்ல,

"நீ அவர் பையனை தான் கட்ட போற. அவரை இல்லை" என்றுவிட்டார் அபிராமி வெடுக்கென,

அதில் கீர்த்தனா முகம் நொடியில் வாடி விட, கோபத்தில் மூக்கு விடைக்க கண்களில் நீர் தேங்க அங்கிருந்து சென்று விட்டாள்.

அபிராமியின் செயலாளா இல்லை, அவள் மனம் காரணமா! என்று தெரியவில்லை. ஆனால் சமீப காலமாய் கல்யாணம் என்ற வார்த்தையே கீர்த்தனாவிற்கு வெறுத்து விட்டிருந்தது.

தானாக பூத்து, காய்த்து, கனிய வேண்டிய மரத்தை பூத்த உடனேயே கனிய சொல்லி கல் அடித்தால் பூ உதிர்ந்து போகும் அல்லவா! பின்பு மரம் எப்படி காய்க்கும்!

இங்கு கீர்த்தனா நிலையும் அது தான். திருமணம் மட்டும் தான் உலகம் என்று ஒரு வட்டம் போட்டு அதில் நின்று கொண்டு கீர்த்தனாவையை அதில் நுழைக்க முயற்சிக்கிறார்.

கீர்த்தனா கல்லூரி படிப்பில் இருந்தே திருமணம், திருமணம் என்று சொல்லி சொல்லியே அந்த உறவையே அவளை வெறுக்க வைத்திருந்தார்.

அதனாலேயே பெண் பார்க்க வருகிறார்கள் என்றாலே... ஒருவித பயமும், பதட்டம் அவளை அறியாமலேயே அவளை ஆட்சி செய்ய, பெண்ணவள் அந்த நேரங்களில் மிகவும் திண்டாடித்தான் போனாள்.

இப்போதும் பயமும் கோபமுமாய் கட்டிலில் படுத்திருந்தவளை தெய்வானை சென்று சமாதானப்படுத்தி வேறு உடை மாற்ற வைத்து அழைத்து வந்தார்.

கீர்த்தனா காபியை கொடுத்து விட்டு உள்ளே சென்று விட, பெரியவர்கள் பேசி கொண்டனர். என்ன பேசினார்கள் என்றெல்லாம் கீர்த்தனா கவனிக்கவில்லை. அவள் எண்ணம் முழுவதும் அபிராமியிடம் 'இதை எப்படி மறுப்பது!' என்ன யோசனையிலேயே இருந்தாள்.

ஆனால் அவள் மறுப்பதற்கு எல்லாம் அங்கே மதிப்பிருக்க போவதில்லை என்று கீர்த்தனா அறிந்திருக்கவில்லை.

தொடரும்....
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... மக்களே 😍

சென்ற அத்தியாயத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி தோழமைகளே 😍

இதோ... "நீயே என் கீர்த்தனம்" கதையின் அடுத்த அத்தியாயம் பதிவிட்டு விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே 😍

கருத்து திரி 👇


நன்றி ❤
 
Last edited:

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்: 6

நேரமும் காலமும் காலச்சக்கரத்தின் கைகளில் அழகாக சென்று கொண்டிருக்க, கீர்த்தனா வாழ்க்கை இருலில் மூழ்கி கிடந்தது.

அன்று.. கந்தையன் வந்து விட்டு சென்ற பிறகு, எத்தனை நாட்கள் கடந்து சென்றது என்றே தெரியாத அளவு இரவு பகல் தெரியாமல் அழுகையிலும், பிடிவாதத்திலும் சென்று கொண்டிருந்தது அவள் நாட்கள் .

ஏற்கனவே மெலிந்து கருத்த தேகம், கீர்த்தனா உண்ணாவிரதம் இருந்ததில் மேலும் மெலிந்து போனாள். ஆனால் அதை கவனிக்க தான் அங்கு யாரும் தயாராக இல்லை.

'உன் பிடிவாதத்திற்கு எல்லாம் ஆட முடியாது' என்று அவரவர் வேலை செய்து கொண்டிருந்தனர் அபிராமியும் குமாரும்.

அவள் 'விருப்பம் இல்லை' என்று சொல்லி அழுது புலம்பியும், அதை கருத்தில் எடுத்து கொள்ளாமல் ஜாதகம் பார்த்து, வீடு பார்த்து பேசி முடித்து விட்டிருந்தனர்.

'இன்னும் ஓரிரு நாட்களில் நிச்சயித்திற்கு நாள் குறிக்க வேண்டும்' என்று அவர்கள் பேசி கொள்ள, கத்தி அழ முடியாமல் உள்ளுக்குள்ளேயே கதறி கொண்டிருந்தாள் பெண்ணவள்.

வேறு யாரும் மாப்பிள்ளையாக இருந்து இருந்தால் கீர்த்தனா இந்த அளவு கஷ்ட பட்டிருக்க மாட்டடாளோ என்னவோ!.

ஒரவு தன்னை தானே சமாதானம் செய்து கொண்டிருப்பாள். ஆனால், சக்திதரன் தான் மாப்பிள்ளை என தெரிந்த நொடியில் இருந்து வாழ்க்கையே வெறுத்த நிலமை தான் தெய்வ கீர்த்தனாவுடையது.

எத்தனை முறையோ அபிராமியிடம் இந்த மாப்பிள்ளை வேண்டாம் அவன் நல்லவன் இல்லை என்று மன்றாடி விட்டாள் ஆனால் அவள் பேச்சை செவிமடுக்கத்தான் யாரும் தயாராக இல்லை.

எப்போதும் உடன் இருப்பதாய் ஜம்பம் பேசும் அவள் தம்பி கூட... அபிராமியின் பேச்சை கேட்டு ஒரு அடி பின் வாங்கி கொண்டான்.

பெற்றவரும், உடன் பிறப்பு ஒதுங்கி கொள்ள யாரிடம் சென்று முறையிடுவது என்றும் புரியவில்லை. இத்தனை நாள் கற்ற தெளிவு எல்லாம் எங்கோ மூளையில் சென்று பதுக்கிக்கொள்ள, முற்றிலும் கோலையாகி போனாள் தெய்வகீர்த்தனா.

வீட்டை விட்டு சென்று விடலாம் என்றால் இத்தனை வருடம் பெற்று வளர்த்தவருக்கு அவப்பெயர் வாங்கி கொடுக்க மனம் வரவில்லை. ஆம் பெண் பிள்ளை கோபம் கொண்டு வீட்டை விட்டு போனாலே அவளுக்கு சூட்ட, இந்த உலகம் ஆயிரம் பெயர் வைத்திருக்கிறதே.

அந்த அவலம் வேறு... கண்ணுக்கு தெரியாத பூதயாம் பயம் காட்ட, மனம் முற்றிலும் குழம்பி சுயத்தை இழந்தவள் போல் படுத்திருந்தாள் பெண்ணவள்.

நேரம் காலை பத்தை தாண்ட, வெளியே செல்ல கிளம்பிய அபிராமி, கீர்த்தனாவிடம் சொல்லிவிட்டு செல்ல அவள் அறைக்கு வந்தவர், கண்கள் வீங்கி, உதடு வர்ணடு, சோர்ந்து படுத்திருந்தவளை பார்த்து "நாங்க உன்ன என்ன பண்ணிட்டோம்னு இப்படி இருக்க தெய்வா" என்றார் கோபமும் ஆதங்கமுமாய்.

பெற்ற மகளை இப்படி பார்க்க எந்த தாய்க்கு தான் பொறுக்கும்!

அவர் கேள்வியில் விரக்தியாய் சிரித்த கீர்த்தனா "இருபத்தி மூனு வருஷமா, பாசம் காட்டி வளர்ந்த வளர்ப்பை எல்லாம்... இந்த மூனு வருஷத்துல கொஞ்சம் கொஞ்சமா சாகடிச்சி இன்னைக்கு முழுசா கொல்லவும் செஞ்சிட்ட. இன்னும் வேற என்னமா செய்யனும்?" என்று கேட்க,

"அதே தான் டி. இருபத்தி மூனு வருஷமா... அருமை பெருமையா வளர்ந்த பிள்ளைய எந்த பெத்த தாயும் பாலும் கிணத்துல தள்ள மாட்டா. உனக்கு ஏன் அது புரிய மாட்டேங்குது?" என்றார் அபிராமியும் வருத்தத்துடன்.

அவர்கள் எங்கே தவறினார்கள் என்று அவர்களுக்கும் தெரியவில்லை. பிடித்து கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து செல்லமாக தான் வளர்த்தார்கள். 'செல்லம் கொடுக்கும் பிள்ளை கெட்டு போகும்' என்று பலர் பேச.... இவளோ, 'கீர்த்தனா போல் பெண் உண்டா!' என்று சொல்லும் படி தான் வளர்ந்தாள். இதில் எங்கே... கீர்த்தனா சறுக்கினாள் என்றும் தெரியவில்லை.

திருமணம் என்ற பேச்சே கீர்த்தனாவிற்கு பாகற்காய் ஆகி போய்விட்டது.

ஒரு வேலை யாரையும் காதலித்து இருப்பாளோ..! என்று அதையும் நாசுக்காய் விசாரித்து பார்த்தாகி விட்டது. அப்படியும் ஏதும் இல்லை என்று விட்டாள். பின்பு வேறு என்ன பிரச்சனை? என்றாள் திருமணம் தான் பிரச்சனை.

ஏன் என்றாள்? கீர்த்தனாவிற்கே அதற்கு பதில் தெரியவில்லை.

இப்படி இருப்பவளை எப்படி அனுக என்று தெரியாமல், அபிராமி எடுத்த ஆயுதம் தான் கோபமும், அதட்டலும்.

அதற்கும் இப்படி அழுது புலம்புபவளை என்ன செய்ய என்று தெரியாது அபிராமி பார்த்து நிற்க,

"நீங்க நல்லதே பண்ணாலும் எனக்கு பிடிக்க வேண்டாமாமா? எனக்கு பிடிக்கலைனு சொல்லியும் ஏன் பண்றிங்க? இந்த பையன் வேண்டாம்மா ப்ளீஸ்...." என்று கீர்த்தனா கெஞ்சலுடன் கேட்க,

"வேற யாரை தான் உனக்கு பிடிச்சுதுனு சொல்லு தெய்வா? இத்தனை வருஷம் மாப்பிள்ளை பார்க்குறோம். ஒரு முறையாவது... மனசாற.. ஒரு பையனையாவது பிடிச்சிருக்குனு சொல்லி இருக்கியா?" என்று அபிராமி ஆதங்கத்துடன் கேட்க,

கீர்த்தனா தலை குனிந்து கொண்டாள். அவள் அறிந்து அப்படி அவள் முழு மனதாய் எதையும் ஏற்க தயாராக இருந்ததில்லேயே. எனவே அவள் மனமே அவளை சுட மொனமாய் இருக்க,

தொடர்ந்த அபிராமி, "பொறுமையா பேசுனா, பிடிவாதம் பிடிக்குற. அதட்டுனா, வேண்டா வெறுப்பா வந்து நிக்குற. இதோ.... இப்படி, நாங்களா முடிவு பண்ணா, அழுது கறையுற. நாங்க என்ன செய்யட்டும் சொல்லு?" என்றார் மிகுந்த வருத்ததுடன்.

அவர் கேள்விக்கு பதில் சொல்லாதவள் "அந்த பையன் நல்லவன் இல்லமா. அன்னைக்கு ட்ரைன்ல எப்படி பிகேவ் பண்ணான் தெரியுமா? அவனை போய் எப்படிமா?" என்று கீர்த்தனா உள்ளே சென்று விட்ட குரலில் கேட்க,

"அப்போ அவர் என்ன மனநிலையில இருந்தோரோ! நீ பேசாம எழுந்து வந்துருக்க வேண்டியது தானே..? நீ ஏன் பேசுன?" என்று கீர்த்தனாவை அதட்டிய அபிராமி "நீ அழறியேனு என்னால முடிஞ்ச வரை அந்த பையனை பற்றி நல்லா விசாரிச்சிட்டேன். பையன் நல்ல விதம் தான்... ஆனா அவங்க அப்பா கூட கொஞ்சம் மனஸ்தாபம். இரண்டு பேரும் பேசுறது இல்லை. இந்த காலத்து பசங்க யாரு தான் பெத்தவங்க பேச்சை கேக்குறாங்க. பொண்டாட்டிய நல்ல பார்த்துக்குவானானானு தான் பார்க்கனும். அந்த நம்பிக்க எனக்கு இருக்கு. இந்த கல்யாணம் நடக்கும். நீ உன் மனச மாத்திட்டு கல்யாணத்துக்கு தயாராகும் வேலைய பாரு"

"நானும் அப்பாவும் மண்டபம் பார்க்க போறோம். எழுத்து முகம் கழுவிட்டு சாப்பிட்டுட்டு வந்து தூங்கு" என்ற அபிராமி அவர் வேலையை பார்க்க சென்று விட்டார்.

'இனிமேல் தான் எத்தனை அழகு புரண்டு ஆர்ப்பாட்டம் செய்தாலும் வேஸ்ட். தனக்கு இருந்த கடைசி வாய்ப்பும் இத்துடன் முடிந்து விட்டது. இனிமேல் நடக்க போவதற்கு தன்னை தேற்றி கொள்ளத்தான் வேண்டும்' என நினைத்தபடி கீர்த்தனா அப்படியே படுத்துக்கொண்டாள் .

ஆனாலும் கண் முன்னே சக்திதரனின் முதல் நாள் செயல்... நினைவில் வந்து வந்து செல்ல, தன்னால் அவனுடன் வாழ முடியுமா? என்ற எண்ணமும் முன் வந்து நின்று மிரட்ட, மன வேதனையுடன் படுத்திருந்தவளை அழைத்தது அவள் அழைபேசி.

தொடு திரையில் 'அனு' என்ற பெயரை பார்த்ததும் கீர்த்தனா கண்களில் தானாய் கண்ணீர் பெருக்கெடுத்தது. அனுவிற்கு வந்த வரனை, தான் அபகரித்து கொண்டதாய் ஒரு எண்ணம் எழுந்து... மனம் எங்கிலும் கசப்பை கொடுக்க, அதை மறைத்துக்கொண்டு அழைப்பை ஏற்ற கீர்த்தனா "சொல்லு அனு" என்றாள் சுரத்தே இல்லாமல்.

"ஹேய்... தெய்வா, நான் கேள்வி பட்டது எல்லாம் உண்மையா? அப்பா என்ன என்னவோ சொல்றாரேடி!" என்று அதிர்வுடன் கேட்க,

"ஆமா... அனு. இங்க யாரும் நான் "வேண்டாம்னு" சொல்றத கேட்க தயாரா இல்லை" என்றாளீ கீர்த்தனா விரக்தியுடன்.

"ஏய்... ஏன்டி? கல்யாணம் பண்ண போறது நீ தானே! உன் விருப்பம் முக்கியம் இல்லையாமா அவங்களுக்கு? நான் வேணும்னா அப்பாட்ட சொல்லி மாமாகிட்ட பேச சொல்லவா?" என்று அனு கேட்க,

"டைம் வேஸ்ட் அனு. கந்தையன் மாமா தான் இதை முன்னாடி நின்னு நடத்துறதே...." என்றாள் கீர்த்தனா மனம் நிறைந்த கசப்புடன்.

அதை நம்ப முடியாத ஆச்சரியத்துடன் கேட்ட அனு "இவங்க எல்லாருக்கும் பைத்தியமாடி பிடிச்சிருக்கு?" என்றாள் கடும் கோபத்துடன்.

அதற்கு கீர்த்தனா பதில் பேசாமல் அமைதியாக இருக்க "ஏய்... தெய்வா பேசு டி. என்ன செய்ய போற? விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ண போறியா?" என்று அனு கோபத்துடன் கேட்க,

"என்னால முடிஞ்ச வரை போராடி பார்த்துட்டேன் அனு. இனிமேல் நம்ம வீட்டு பக்கம் பேசி பயன் இல்லை. ஆனா... கடைசி வாய்ப்பா அந்த சக்திதரன் கிட்ட பேசி பார்க்கலாம்னு நினைக்குறேன். ரோச காரன். முகத்துக்கு நேர பிடிக்கலைனு சொன்ன அப்புறமும் கல்யாணம் பண்ணிப்பானா என்ன?"

"ஆனா... அவன் கிட்ட எப்படி பேச? அவன் நம்பர் கூட இல்லை. அதான் யோசனையா இருக்கு..." என்ற கீர்த்தனா அவள் மனதின் அடி ஆழத்தில் சில நாட்களாய் ஆழ்ந்து கிடந்த எண்ணத்தை சொல்ல,

"ஹேய்... இது நல்ல ஐடி தெய்வா. அப்பா போன்ல கண்டிப்பா அவன் நம்பர் இருக்கும். நான் தெரியாம எடுத்து அனுப்புறேன்" என்றாள் அனு. கீர்த்தனாவிற்கு எப்படியேனும் உதவி விட வேண்டும் என்ற எண்ணத்துடன்.

அதன் பிறகு மீண்டும் பெண்கள் இருவரும் சேர்ந்து சக்திதரனிடம் என்ன பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்து விட்டு சில நிஅழைப்பை துண்டித்தனர்.

அனுவும் சொன்னது போல் இருண்டு நாட்களுக்குள் சக்திதரனின் எண்ணை வாங்கி அனுப்பி விட, அதன் பிறகே தெய்வ கீர்த்தனா சற்று தெளிந்தாள்.

சக்திதரனுக்கு அழைத்து 'இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை' என சொல்லி விட்டால் அதன் பிறகு பிரச்சனை இல்லை என்று நினைத்தவள், எழுந்து சென்று முகம் கை கால் கழுவிவிட்டு வந்தவள், அபிராமி என்ன செய்கிறார்... என்று பார்க்க மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தாள்.

முன் கதவு அடைத்து இருக்க வீட்டில் அந்த சத்தமும் இல்லை. மெதுவாக சென்று அபிராமி அறையை எட்டி பார்க்க அவர் மதிய உணவு முடிந்து தூக்கத்தில் இருத்தார். அதில் சற்று நிம்மதி வர பெற்றவள் அறைக்கு வந்து சக்திதரனுக்கு அழைப்பு விடுத்தாள்.

செல்போனின் அழைப்போலி பெண்ணவளின் மனதில் அதிர்வை ஏற்படுத்த, 'சக்திதரன் அழைப்பை ஏற்பான?' என்கிற யோசனையுடனேயே கீர்த்தனா அவன் குரலுக்கு காத்திருக்க, சக்திதரனோ அடுத்த நொடியே அழைப்பை ஏற்று இருந்தான்.

அவன் உடனே அழைப்பை ஏற்ப்பான் என எதிர்பார்க்காமல் சற்று பதறி பின்பு தெளிந்து கீர்த்தனா பேச முயற்சிக்கும் முன், சில முறை ஹலோ சொல்லியும் பதில் இல்லை என சக்திதரன் அழைப்பை துண்டித்து இருந்தான்.

"இவன் வேற நேரம் காலம் புரியாம..." என்று கோபத்தில் முனுமுனுத்த கீர்த்தனா மீண்டும் சக்திதரனுக்கு அழைக்க,

இந்த முறையும் ஒரே ரிங்கில் அழைப்பை ஏற்றவன் "ஹலோ யாரு?" என்றான் எரிச்சலை உள் அடக்கிய குரலில்.

'பேசிக் மேனர்ஸ் தெரியாத உங்கிட்ட எல்லாம் பொறுமையை எதிர் பார்க்க முடியுமா?' என நினைத்து கொண்ட கீர்த்தனா "ஹலோ நான் கீர்த்தனா பேசுறேன். நீங்க ப்ரீயா? உங்ககிட்ட கொஞ்சம் முக்கியமா பேசனும்?" என்றாள் மொட்டையாக.

தெய்வ கீர்த்தனாவை பொறுத்த வரை சக்திதரனுக்கு தான் யார் என்று நன்றாக தெரியும். ஆனால் சக்திதரனை பொறுத்தவரை தெய்வ கீர்த்தனா என்றொரு பெண்ணை அவன் பார்த்தது கூட இல்லை. அப்படி இருக்க, கீர்த்தனா மொட்டையாக பெயர் மட்டும் சொல்லி பேச வேண்டும் என்க,

அவள் குரலில் இருந்த உரிமையில் 'யாராக இருக்கும்' என்ற யோசனை படிந்த முகத்துடன் "கீர்த்தனாவா...! யாரு? நீங்க எனக்கட்ட பேச என்ன இருக்கு?" என்று சக்திதரன் கேட்க, கீர்த்தனா சற்றே அதிர்ந்து தான் போனாள்.

அவள் வீட்டில் சக்திதரனுக்கு பிடித்து தான் இந்த திருமண பேச்சே என்று போசி கொண்டிருக்க கொண்டிருக்க, இவனானால் 'யார்' என்று கேட்கிறானே என நினைத்த கீர்த்தனா "நிஜமாவே உங்களுக்கு நான் யார்னு தெரியலையா?" என்றாள் அதிர்வை மறைத்துக்கொண்டு சந்தேகத்துடன்.

"நீ யாருனே நா அரியலை. அப்பறம் எங்கன இருந்து நான் விலாடா! எனக்கு நேரம் கொறைவு கேட்டிங்களா! வேலை கெடக்கு. போனை வச்சா... நான் எனக்க வேலையை பார்ப்பேன்" என்ற சக்திதரன் 'சரியான கோட்டியா இருக்கும்போலுக்கு. போனை போட்டு என்னை அறியுமா உன்னை அறியுமானு..' என்று சற்று சத்தமாய் முணுமுணுக்க,

"ஹலோ.. போனை வச்சிடாதிங்க. ப்ளீஸ்... நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க, நான் உங்களுக்கு..." என்று தொடங்கிய கீர்த்தனா சட்டென பேச்சை இடைநிறுத்தி,

உடனே "நாம போன மாசம் ட்ரைன்ல மீட் பண்ணோமே! அப்பறம் நீங்க பொண்ணு பார்க்க வந்தப்போ அங்க... அங்க வச்சும் பார்த்தோமே..." என்று கீர்த்தனா என்ன பேசுகிறோம் என புரியாமல் திக்கி தினறி அவசரமாய் உலறி கொட்ட,

"ஹோ... அந்த பெண்ணா!" என கேட்ட சக்திதரன் "என்ன விழிச்சனும்" என்றான் கை வேலையை ஒதுக்கி வைத்து விட்டு பொறுமையுடன்.

சக்திதரனுக்கு, கீர்த்தனா என்ன பேச போகிறாள் என்று தெரியவில்லை என்றாலும் இனிமேல் அவளுடனான பேச்சு நிறுத்த கூடியது இல்லை என்பதால் அவளுக்கான நேரத்தை அப்போதே ஒதுக்கி விட்டான்.

அதிலும் கீர்த்தனாவின் குரலில் இருந்த நடுக்கம் அவனை யோசனைக்குள்ளாக்கியது. அவன் பார்த்த இரண்டு முறையும் அவளிடம் ஒரு தெளிவும் திமிரும் இருந்தது. 'அப்படி இருந்த பெண் இன்று இப்படி பயம் கொள்ள வேண்டிய தேவை என்ன!" என்ற யோசனையுடன் சக்திதரன் அமர்ந்திருக்க,

"எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. ப்ளீஸ்... ஹெல்ப் பண்ணுங்க..." என்றாள் கீர்த்தனா கெஞ்சலுடனும் கண்ணில் கண்ணீருடனும்.

இது சக்திதரன் எதிர்பார்த்து தான். ஆனாலும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அருணாச்சலத்தை பேச சொல்லி கட்டாயப்படுத்தியது முதல் அனைத்தையும் செய்ய வைத்து அவன். அப்படி இருக்க கீர்த்தனாவிடம் என்ன சொல்லி விட முடியும்?

சக்திதரன் முகம் இறுக பதில் பேசாமல் இருக்க,

"ஹலோ... நான் பேசுறது கேக்குதா?" என கீர்த்தனா கேட்க,

"ம்... கேக்குது. ஆனா நா இதுல ஒன்னும் செய்யறதுக்கு இல்ல கேட்டியா! எனக்க அம்ம ரொம்ப விருப்பம் வச்சி கெஞ்சி கேட்டுடாவ, என்னால மறுக்க முடியல" என்றான் சக்திதரன் பொய்யாய்.

"எனக்கு அதெல்லாம் தேவை இல்லை. எனக்கு இந்த கல்யாணத்துல துளியும் விருப்பம் இல்லை. உண்மையை சொல்லனும்னா துளி அளவு கூட உங்களை பிடிக்கலை. இது நீங்க தொடங்கி வச்சது தானே? நீங்களே நிறுத்திடுங்க. இல்லைனா இரண்டு பக்க உறவும் கூடி இருக்கும் போது எனக்கு விருப்பம் இல்லைனு நான் சொல்லிடுவேன். எனக்கு வேற வழி இல்லை" என்றாள் தெய்வகீர்த்தனா கடும் கோபத்துடன்.

'இவன் 'பிடித்திருக்கிறது' என்று சொல்லி தொடங்கி வைத்து விட்டு இப்போது அம்மாவுக்கு பிடித்திருக்கிறது என்கிறானே...' என்ற எரிச்சலுடன்.

"ஏ ஓமபொடி (ஓம முறுக்கு) என்ன அதிகமா பேசுற? ஆமா நாதான் தொடங்குனேன். அதுக்கென்னா இப்போ! எனக்கு பிடிச்சி பிடிச்சகனு சொன்னே. ஒனக்கு பிடிக்கலனா நீ ஒன்னால முடிஞ்சதை பாரு" என்றான் சக்திதரனும் திமிராய்.

'நீ அதட்டகனால் அடங்கி விடுவேனா!' என்ற எண்ணத்துடன்.

அதற்கு கீர்த்தனா பதில் சொல்ல போக, சக்திதரன் டேபிலில் இருந்த டெலிபோன் ஒலி எழுப்பியது.

கொஞ்சம் பொறு என்றவன் "சுதாகர் இந்த போனை எடுக்க" என்று யாரிடமோ கூறிய சக்திதரன் "ம்... இப்போ சொல்லு. என்ன செய்ய போற?" என்றான் கீர்த்தனாவிடம்.

மீண்டும் கீர்த்தனா பேச நான் தொடங்கவும் "சார் அவங்க ஒங்க கிட்டக தான் பேசனுமாம்" என்று யாரோ சொல்ல,

" ப்ச்..." என சலித்து கொண்டவன் "ஒரு நிமிஷம் இரு" என கீர்த்தனாவிடம் கூறி விட்டு எதிரில் இருந்தவரிடம் பேச தொடங்கி விட்டான்.

சக்திதரன் பேசி முடிக்கும் வரை தொடர்பில் இருந்த கீர்த்தனா அவன் பேச்சை கேட்டு குறைந்தது பத்து முறையாவது திமிர், திமிர் என்று திட்டி இருப்பாள்.

ஆனால் அவன் பேச்சில் அவன் மீதான பின்பமும் சிறு துளி மாறியது உண்மை. 'இதை வைத்து தான் கந்தையன் அனுராகவிக்கு இவனை தேர்வு செய்தாரோ..!' என்று கீர்த்தனாவின் யோசனை ஓடும் போதே "சேரி சொல்லு... என்ன செய்யுறதா இருக்க" என்றான் சக்திதரன்.

அதில் சுயம் பெற்ற கீர்த்தனா "எனக்கு இந்த கல்யாணத்துல துளியும் விருப்பம் இல்லை. இதையும் மீறி நீங்க பூ வைக்க வந்தா... சபையில வச்சி எனக்கு பிடிக்கலைனு சொல்றதை தவிற எனக்கு வேற வழி இல்லை. நீங்க தான் அசிங்கப்பட வேண்டியது இருக்கும்" என்றாள் மிரட்டலாய்.

"நீ.. இதை எனக்கு போனை போட்டு சொல்றதுக்கு... ஒனக்க அம்மைக்கிட்ட எனக்கு இந்த கல்யாணத்துல கொறச்சியும் விருப்பம் இல்லைனு சொல்ல வேண்டியதானே!" என்று சக்திதரன் கேட்க,

"சொல்லிட்டேன் அவங்க கேட்கலை. இத்தனைக்கும் உங்க அப்பா வேண்டா வெறுப்பா வந்து பார்த்து பேசிட்டு போனார். அதை கூட புரிஞ்சிக்க முடியாம.... ஊர்ல இல்லாத மாப்பிள்ளைனு பேசுறாங்க" என்ற கீர்த்தனா கோபமும் ஆதங்கமுமாய் சொல்ல,

"கேக்கட்டும் அப்போ தானே அடுத்தவியளுக்க வலி புரியும்" என்று அருணாச்சலத்தை மனதில் வைத்து சொன்னவன் "சேரி ஒனக்க‌ அப்பன் ஒன்னும் சொல்லலியா?" என்றான் சக்திதரன் சற்றே வியப்புடன்.

"இல்லை அவருக்கும் இதுல விருப்பம் தான்" என்றாள் கீர்த்தனா உள்ளே சென்று விட்ட குரலில். சக்திதரனின் பேச்சில் இருந்த வியப்பு ஏன் என்று புரியாதவள் இல்லையே. அவள் அத்தனை மன்றாடியும் அவள் பெற்றோர் கேட்காமல் போனதால் தானே இவனிடம் கெஞ்ச வேண்டிய நிலமை.

"அவியளுக்க விருப்பம் வெச்சி என்ன செய்ய? ஒனக்க விருப்பம் இல்லா முக்கியமா. கேட்டு இருக்கனும். வாழ போறது நீதானே...!' என்றான் சக்திதரனும் கோபத்துடன். பெற்று இத்தனை வருடம் வளர்த்த மகள் 'தன்னை பிடிக்கவில்லை. இந்த திருமணம் வேண்டாம்' என்று சொல்லியும் எதன் அடிப்படையில் கட்டாயப்படுத்துகின்றனர் என்று புரியாமல்.

பிள்ளைகள் என்றாலே பெற்றவர்கள் பேச்சை கேட்டு தான் இருக்க வேண்டுமா? அவர்களுக்கு என்று சுய விருப்பு வெறுப்பு இருக்க கூடாதா? என்றெல்லாம் சக்திதரனுக்கு எண்ணம் எழ, அருணாச்சத்துலடன் சேர்ந்து கீர்த்தனா பெற்றவர்கள் மீதும் கோபம் வந்தது.

அதே நேரம் அந்த திருமணத்தை அவனால் நிறுத்தவும் முடியாது. எனவே கீர்த்தனாவிடம் எதை பற்றியும் இப்போதைக்கு விவாதிக்க விரும்பாதவன் "சேரி ஒனக்கு முடிஞ்சா உன் குடும்பத்துட்ட பேசு. எனக்கு வேலை கெடக்கு. ஒன்னால கொரச்சி நேரம் வேஷ்ட். போனை வை..." என்று சக்திதரன் அழைப்பை துண்டித்து விட,

கீர்த்தனா சோர்ந்து அமர்ந்து விட்டாள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல்.

தொடரும்...
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... மக்களே 😍

சென்ற அத்தியாயத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி தோழமைகளே 😍

இதோ... "நீயே என் கீர்த்தனம்" கதையின் அடுத்த அத்தியாயம் பதிவிட்டு விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே 😍

கருத்து திரி 👇


நன்றி ❤
 
Status
Not open for further replies.
Top