All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய்-கதை திரி

Status
Not open for further replies.

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-1


"பெரியப்பா இங்க ஒரே சலசலப்பா இருக்கு, அந்த பொண்ணு எவ்வளவு சொன்னாலும் நகர மாட்டேங்குது, இந்த மடபயலுகளும் அடங்க மாட்டேங்கிறானுங்க, நீங்க கொஞ்சம் சீக்கிரமா வாங்க"அவசரகதியில் செய்தியை உரைத்துவிட்டு கைபேசியை வைத்தான் ஒருவன்.


"என்ன பிரச்சனை பண்ணனும்னே வந்துருக்கியா?" கூட்டத்தின் மத்தியில் ஒரு குரல் உயர்ந்தது.


"பிரச்சனை பண்ண வரல, என் கடமையை செய்ய வந்துருக்கேன்" அத்தனை ஆண்கள் சூழ்ந்து நின்றும், எந்த வித படபடப்பும் இல்லாமல் இது போல் எத்தனை பார்த்திருப்பேன் என்ற அலட்சிய பார்வையோடு நிதானமாக வெளிப்பட்டன மாதவியிடமிருந்து வந்த வார்த்தைகள்.


கிராம நிர்வாக அலுவலரான அவள் பெற்றோரின் நச்சரிப்பு காரணமாக சொந்த ஊரிற்கே மாற்றலாகி வந்து ஒரு மாத காலமாகிறது.


சொந்த ஊரிற்கு வந்தோம் என்றாலே பொது பிரச்சனையோடு சொந்த பிரச்சனையையும் சேர்த்து வன்மத்தை வளர்த்துக் கொள்வது வழக்கமான ஒன்று. அதுதான் இப்போது அவளுக்கும் நடந்து கொண்டிருக்கிறது.


ஆக்கிரமிப்புகளை அகற்றினால் குற்றம், நில அளவை செய்தால் குற்றம் என ஒரு பக்கம் பிரச்சனைகளோடும், மற்றொரு பக்கம் நன்மதிப்புகளோடும் இந்த ஒரு மாதம் கழிந்து கொண்டிருக்கிறது.


வரிசை கட்டி கொண்டு பிரச்சனைகள் வரும் என்பதை அறிந்துதான், மன அமைதி ஒன்றை மட்டுமாவது காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற திண்ணத்தில் இத்தனை வருடம் இந்த பக்கம் தலை வைத்து படுக்காமல் இருந்தாள். இப்போது சூழ்நிலை காரணமாக தட்டி கழிக்க முடியாமல் சொந்த ஊரிற்கே மாற்றலாகி வந்தாகிற்று. முப்பது நாட்களில் முன்னூறு பிரச்சனைகளை சந்தித்துவிட்டு அடுத்த பிரச்சனையை எதிர்கொள்ள நிமிர்ந்து நின்று கொண்டிருந்தாள்.



"பொல்லாத கடமை, இத்தனை வருசமா மரத்தை வெட்டி வித்து, அதன் மூலமா வர காசை வச்சு அன்னதானம் பண்ணிக்கிட்டு இருக்கோம், இப்போ என்ன அனுமதி வாங்கணும்னு அபசகுனமா மரம் வெட்டுறதை தடுக்கிறது. இது அம்மனுக்கு சொந்தமான சொத்து" கண்களில் கோபம் மின்ன மத்திய வயதில் உள்ள ஒரு மனிதர் சிடுசிடுத்தார்.



தான் சொல்வது அவர்களுக்கு புரிந்தும், தான் சொல்வதாலையே அதை கேட்காமல் அடமாக நிற்கும் மனிதர்களிடம் ஆயாசம் அடைந்தவளாக "அண்ணே! இவங்கக்கூட முடியல, கொஞ்சம் எடுத்து சொல்லுங்க" என கிராம நிர்வாக உதவியாளரான தங்கராஜிடம் கூறினாள்.



"எம்மா இவங்கக்கூட எதுக்கு வீண் தகறாரு! வருசா வருஷம் அவங்க வாடிக்கையா பண்றது தான், நம்ம ஷண்முகம் அண்ணே தலையீடுங்கிறதால பழைய வீஏஓ இதெல்லாம் கண்டுக்க மாட்டாரு, நாமளும் அப்படியே இருக்கிறது தான் நல்லது, விட்டுட்டு வாம்மா" தங்கராஜ், தன் மகள் வயது உள்ள பெண்ணை பல ஆண்கள் சூழ்ந்து நிற்பது சங்கடத்தைக் கொடுக்கக் கூறினார்.


"என்ன தங்கராஜ் அண்ணே! விஷயம் மேல போச்சுன்னா நம்ம வேலை காலி தெரியும்தானே" என்றவள்,


"நான் மரத்தை வெட்ட வேண்டாம்னு சொல்லலை, பெர்மிஸ்ஸன் வாங்கிக்கிட்டு வெட்டுங்கன்னு தான் சொல்றேன்" தன் கடமையில் கவனமாகக் கூறினாள்.


அவள் மீதிருந்த பிடித்தமின்மையால் இவளிடம் அனுமதி வாங்கித்தான் தாங்கள் இதை செய்ய வேண்டுமா? என்ற இருமாப்பு மேலோங்க... "அதெல்லாம் முடியாது, நாங்க வெட்டதான் போறோம் உன்னால் முடிஞ்சத பாத்துக்கோ" என்று வெட்டுவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ள, மாதவி தலையீடு என்பதால் சாதாரண விஷயம் விவகாரம் ஆவதை உணர்ந்த தங்கராஜ் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார்.


"செஞ்சாந்து குழம்பெடுத்து
தீட்டி வைத்த சித்திரமே
தென்பாண்டிக் கடல் குளித்து
கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கை மணக்கும்
தென்பழனிச் சந்தனமே
தென்காசித் தூரலிலே
கண் விழித்த செண்பகமே
பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ
ஈரேழு உலகில் ஈடாக யாரோ
நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ...


பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்..."


ஏர் பாட்டின் வழியே ராஜாவின் பாடல் செவிக்குள் நுழைந்து மனதை ஆக்கிரமிக்க வீட்டை சுற்றி ஜாக்கிங் சென்று கொண்டுருந்தவனின் கைபேசி இடையிட்டது.


இயக்கி "சொல்லுங்கப்பா" என்றான் தனஞ்ஜெயன்


"..............."


"சரிங்கப்பா, நான் என்னன்னு பார்க்கிறேன். நீங்க பொறுமையா பதட்டப்படாமல் போன வேலையை முடிச்சுட்டு வாங்க" என்று இணைப்பை துண்டித்துவிட்டு, உடையைகூட மாற்றாது வேக நடையிட்டு வாசலில் நின்றிருந்த தனது பைக்கில் ஏறி அமர்ந்து அதை கிளப்பினான்.


பலத்த ஹாரன் சத்தத்துடன் ஹோண்டா சிபி 350 ஆர் எஸ் பைக்கில் ஈரம் தோய்ந்த ஒரு ட்ஷிர்ட், ஸ்வெட் பேண்டுடன் ஆஜரானான் அண்ணன், பெரியப்பா, மாமா என்று அந்த ஊர் முழுக்க நிறைந்திருக்கும் உறவினர்களால் பல உறவு முறைகளில் அழைக்கப்படும் ஷண்முகநாதனின் புதல்வன் தனஞ்ஜெயன், தனது பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, கையை விரித்து நெட்டி முறிக்க மாதவியை சூழ்ந்திருந்த மொத்த கூட்டமும் தேன் கூட்டில் கல்லை விட்டு எறிந்தது போல் கலைந்து அவனை சூழ்ந்து கொண்டு, அவளை பற்றிய புகாரை அவனிடம் அடுக்கியது.


"அம்மா மாதவி! வாம்மா தனா தம்பிகிட்ட போகலாம்" தங்கராஜ் அவளை அழைத்தார்.

"நாம ஏன் போகணும்? அவங்களே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். என்ன நடந்தாலும் பெர்மிஸ்ஸன் வாங்குனாதான் மரத்து மேல கை வைக்க விடுவேன்" என்பதோடு முடித்து கொண்டாள்.


"இவனுங்களும் இறங்கி வர மாட்டேங்குறானுங்க, இந்த பொண்ணும் அசைஞ்சு கொடுப்பேனாங்குது" என நொந்து கொண்டார்.


"இவளை இப்படியே விட கூடாதுண்ணா... இதுக்கு ஒரு முடிவு கட்டணும், நமக்கே ஆர்டர் போடறாளா இவ!" இளம் இரத்தம் சூடாக ஒருவன் ஆர்பரித்தான்.


ஆளாளுக்கு தங்களது எதிர்ப்பை கூச்சல் மூலமாக வெளிப்படுத்தி கொண்டிருந்த சமயத்தில்,

"டேய்!" என்று ஒரு அதட்டல் போட ஒட்டு மொத்தக் கூட்டமும் கப்சிப் என்று அமைதியாயிற்று.

"உன் வீட்டு பொண்ண இப்படி தான் அவ இவன்னு கூப்பிடுவியா? அவங்க ஒரு பொறுப்பில் இருக்கிறவங்க மரியாதையா பேச கத்துக்கோ, பொது பிரச்சனையை பொது பிரச்சனையா மட்டும் பாரு, எதனுடணும் கோர்த்துப் பார்க்காதே. எனக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதுக்கு? எல்லாரும் கொஞ்சம் அடக்கி வாசிங்க" என்று கண்டித்தவன்,

தன்னை சூழ்ந்திருந்தக் கூட்டத்தை விலக்கி விட்டு, அவள் மீது உள்ள பார்வையை விலக்காது அவள் நின்ற இடத்திற்குச் சென்றான். அவளும் சளைக்காது அவன் பார்வையை தாங்கி நின்றாள்.

இரண்டு நிமிடம் அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு, "நீங்க மரத்தை வெட்ட பெர்மிஸ்ஸன் கொடுங்க விஏஓ மேடம்!" அந்த மேடம் என்பதில் அழுத்தம் கொடுத்து உச்சரித்தான்.

எவன் வந்தால் எனக்கென்ன என்ற ரீதியில், அவள் பதில் சொல்லாமல் கல் போல் நின்றாள்.

"கோவில் வேலை நிறைய கிடக்கு, அதெல்லம் பார்க்கணும். நம்ம பிரச்சனையை அப்புறம் பார்த்துக்கலாம். பெர்மிஸ்ஸன் கொடுங்க" தன்மையாகவே அவளிடம் கேட்டான்.

"நீங்க பெர்மிஸ்ஸன் வாங்கிட்டு மரத்தை வெட்டுவதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, என் வேலையை பார்க்க மட்டும் தான் இந்த ஊருக்கு வந்துருக்கேன் பகையை வளர்க்க இல்ல."

“நமக்குள்ள பிரச்சனையும் கிடையாது, அதேமாதிரி சுமுகமான நிலையும் கிடையாது. புதுசா நம்ம பிரச்சனைன்னு எதையும் உள்ளே இழுத்து விடாதீங்க. தேவை இல்லாத பிரச்சனை வேண்டாம்னு உங்க விசுவாசிங்கக்கிட்ட சொல்லுங்க" தெளிவாக எடுத்துரைத்தாள்.


"அப்போ உறவை வளர்க்க இந்த ஊருக்கு வரல?" ஏகநக்கலோடு கேட்டான்.


"தேவை இல்லாத பேச்சு எதுக்கு?" கத்தறித்தார் போல் கூறினாள்.


"அப்போ தேவை உள்ள பேச்சை உங்க வீட்டில் வச்சு பேசலாமா? இல்லை எங்க வீட்டில் வச்சு பேசிடுவோமா?" வினயமாகக் கேட்டான்.


'பழைய இம்சைகள் தாங்க முடியமால் தானே ஊரை விட்டு போனேன், இப்போது புது இம்சை வேறு வந்து படுத்துதே' மனதில் அலுத்துக் கொண்டவள்,


"நாளைக்கு நீங்க மரத்தை வெட்டிக்கலாம். ஆனால், வேம்பு, பூவரசு இதையெல்லாம் வெட்டாதீங்க அதெல்லாம் செடியூல் டிம்பர், ஒரு மரம் வெட்டுன இடத்துல நாலு மரச்செடியை நட்டுறுங்க" என்று கூறிவிட்டு, தனது ஸ்கூட்டியை எடுத்து கிளம்பி விட்டாள்.


"இதெல்லாம் சரியா வருமான்னு தெரியலையே? வரணும், வர வைக்கணும்" என்று முணுமுணுத்தவாறு, அவள் இருசக்கர வாகனம் கண்ணை விட்டு மறையும் வரையிலும் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அங்கிருந்த கூட்டத்திடம்


"நாளைக்கு மரத்தை வெட்டிக்கோங்க" என்று சத்தமிட்டு கூறினான்.


"என்ன தம்பி இது? அந்த பொண்ணுகிட்ட நாம இறங்கி போகணுமா?"


"இது என்ன வீட்டு பிரச்சனையா மல்லுக்கு நிற்கிறதுக்கு, பெர்மிஸ்ஸன் வாங்கிட்டு தானே வெட்ட சொல்றாங்க, அப்படியே பண்ணுவோம் இதிலென்ன நாம குறைஞ்சு போக போறோம். அப்பா இங்க வந்திருந்தா இதைதான் சொல்லிருப்பார், நானும் அதையேதான் சொல்றேன். நாளைக்கு வெட்டிக்கலாம் போங்க" என்று பேசி அனுப்பி வைத்தான்.


*******
மாதவி வீட்டில், "இவளுக்கு இதெல்லாம் தேவையா? இப்போதான் கொஞ்சம் வருஷமா இந்த ஊருக்குள்ள நிம்மதியா இருக்கோம். ஏதோ பண்ணிட்டு போறாங்கன்னு விட வேண்டியது தானே" அவளது தாய் வளர்மதி அங்கலாய்த்தார்.



"அவளை ஊருக்கே வந்துடுன்னு டார்ச்சர் பண்ணி டிரான்ஸ்பர் வாங்கி வர வச்சுட்டு, இப்போ அவ வேலையை செஞ்சா, இவளுக்கு இதெல்லாம் தேவையான்னு கேட்குறியேம்மா! நியாயமா?"


"நீங்களே சொல்லுங்கப்பா நியாயமா?" என்று நிறை மாத வயிற்றை பிடித்து கொண்டு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டு வரும் மாதவியின் தங்கை இளவரசி கேட்க,


"இளா சொல்றதும் சரி தான்... பெரிய இழப்பை சந்திச்ச நாமளே சும்மா இருக்கும்போது, ஜால்ரா போடற இவனுங்களுக்கு என்ன வந்ததுன்னு தெரியல, கிறுக்கு பயலுக. அவ வேலையை அவ செஞ்சா கூட, வேணும்னே பண்றதா தான் நினைப்பாங்க, பெரியவளுக்கு எல்லாத்தையும் சமாளிக்க தெரியும்... படத்துக்கு முன்னாடி பால் கணக்கு நோட் இருக்கும் அதை எடுத்துட்டு வா.. எல்லாருக்கும் இன்னைக்கு பேங்க்ல இருந்து பணத்தை எடுத்துட்டு வந்து பட்டுவாடா பண்ணனும்" என்று அவரை திசை திருப்பினார் மாதவியின் தந்தை கணேஷன்.
*****


மதியத்திற்கு மேல் வெளி வேலைகளை முடித்து விட்டு சாயங்காலம் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும்போது, தனது பைக்கில் குழந்தையோடு தினமும் வாடிக்கையாக நின்று கொண்டிருந்தவனின் பக்கம் திரும்பாது வண்டியை கிளப்பிக் கொண்டு வந்தாள் மாதவி.


அலுவலகத்தில் உள்ள தனதரையில் கண்களை மூடி அமர்ந்திருந்தவளின் நினைவில் தினமும் அவள் காலையில் வரும்போதும், போகும்போதும் வண்டியில் ஒரு குழந்தையோடு அமர்ந்து தன்னை பார்த்து கொண்டிருப்பவனை நினைக்கையில் கோபமும் ஆத்திரமும் பெருகியது.


மற்றொரு எண்ண அலையில் வீட்டில் அனைவரும் கதறும் நிகழ்வு தெளிவாக ஓட.. அந்த நிகழ்வு இப்போது நடந்தது போல் உடம்பை நடங்க செய்ய அந்த நினைவிலிருந்து சுவிட்ச் போட்டாற் போல் விழித்து கொண்டவள், தன் கன்னத்தை தொட ஈரம் படிந்திருந்தது.


வெகு நாட்களுக்கு பிறகு அவளே அறியாமல் அவள் கண்களில் ஓரம் ஈரம் வடிந்திருந்தது.


இந்த மாதிரியான நினைவுகளிலிருந்து தப்பிப்பதற்காகத்தானே.. அவளே தன்னை பல வழிகளில் மடை மாற்றி தான் பிறந்து வளர்ந்த ஊரையும், குடும்பத்தையும் விட்டு விலகி இருந்தாள்.



மனம் அவளை கோழையாக ஓடி ஒளிந்து கொள்ளாதே என்று கூப்பாடு போடும்போதெல்லாம்... நான் கோழையாக ஓடி ஒளியவில்லை, வலி தாங்க முடியாமல் அனைத்தையும் விட்டு விலகி இருக்கிறேன். சில நேரம் விலகி இருப்பதே அந்த வலிக்கான சிறந்த மருந்து. வலி குறைந்ததும் மறுபடியும் சென்று விடுவேன் என்று கூறி கொண்டவளுக்கு, இங்கு வந்ததுமே தெரிந்துவிட்டது தனது வலி குறையவில்லை அது புறையோடி கிடந்திருக்கிறது மறுபடியும் இங்கு வந்ததும் அந்த புறை கீறி விடப்பட்டு ரணமாகி உயிரை வதைக்கிறதென்று.

தொடரும்...

ஹாய் ஃபிரண்ட்ஸ் ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு புது கதையை தொடங்கிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை பதிவிடுங்கள் நன்றி.

அன்புடன்❤
வியனி
 
Status
Not open for further replies.
Top