“மாயமான்” – 2 9

அத்தியாயம் : 2

 

அதே நேரம் வண்டிக்காரன் அந்த ஊரின் பெரிய வீட்டின் முன் போய் நின்றான். அவனது தேகம் எல்லாம் நடுநடுங்கி கொண்டிருந்தது. அவனுக்குப் பயத்தில் வியர்த்து வடிந்தது.

 

“ஐயா… சாமி…” என்று அவன் பெருங்குரலெடுத்து அலற…

 

வீட்டினுள் இருந்து எழுபத்தைந்து வயதுடைய முதியவர் ஒருவர் வந்தார். வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து கம்பீரமாக நடந்து வந்தவர்,

 

“எதுக்குலே இப்படிக் கத்திட்டு ஓடியாற…?” என்று உரத்த குரலில் அவனை அதட்டினார். அவரது பெயர் கந்தன். அந்தச் சிறிய ஊரின் பெரிய தலை…

 

“ஐயா… நம்ம தம்பி… சின்னய்யா… பேய், பேய்…” என்று முழுவதும் கூறாது விட்டு விட்டு விசயத்தைக் கூற…

 

“உனக்கு என்ன மூளை குழம்பி போச்சா? அவன் செத்து வருசமாச்சு. என்ன மறந்துட்டியோ?”

 

“இல்லை ஐயா… சின்னய்யா சாகலை. அவுக உயிரோட தான் இருக்காக.” அவன் மூச்சிரைக்கச் சொன்னதையே திரும்பச் சொல்ல…

 

“போ… போய்ச் சோத்த சாப்பிட்டுட்டு வந்து நிதானமா சொல்லு.” என்றவர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். அவரது முகம் யோசனையில் சுருங்கியது.

 

“வசந்தா…” அவர் உள்நோக்கி குரல் கொடுத்தார்.

 

“என்னப்பா?” என்று கேட்டபடி அடுத்த நொடி அங்குப் பிரசன்னமானார் அவரது மகன் வசந்தகுமார்.

 

“நம்ம ராசு எதையோ பார்த்து பயந்து உளர்றான் பாரு… அதை என்னன்னு கேளு?”

 

“அவனே ஒரு குடிகார பய… அவன் பேச்சை கேட்டுக்கிட்டு…” என்று வசந்தகுமார் கேலியாய் கூற…

 

“ஆனா அவன் கூறிய விசயம் சாதாரணமானது இல்லை.” என்று கூறியவர் விசயத்தைக் கூறினார். அதைக் கேட்டு வசந்தகுமாரின் முகம் பேயறைந்தது போலானது.

 

“அது எப்படிப்பா சாத்தியம்?” வசந்தகுமாருக்கு குளிர் காய்ச்சலே வந்துவிடும் போலிருந்தது.

 

“எது?” கந்தன் கேள்வியாக மகனை பார்த்தார்.

 

“ராசு சொன்ன விசயம்?”

 

“சாத்தியம் இல்லை தான்…” என்று தாடையைத் தடவிய கந்தனுள் பல யோசனைகள்…

 

அதற்குள் ராசு சாப்பிட்டு விட்டு வந்தவன் இடுப்பில் முடிந்து இருந்த துண்டை எடுத்துத் தரையில் போட்டு அதில் அமர்ந்தான். கந்தனும், வசந்தகுமாரும் அவனைக் கேள்வியாய் பார்த்தனர்.

 

“இப்போ சொல்லு…” கந்தன் கேட்க…

 

“நான் சவாரிக்காகக் காத்திருக்கிறப்போ கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்.”

 

“அப்போ கனவு, கினவு கண்டிருப்பல…” வசந்தகுமார் அவனைக் கேலி செய்ய…

 

“இல்லைங்கய்யா… என் ரெண்டு கண்ணால பார்த்தேன். அது நம்ம சின்னய்யா தான். என்னைச் சவாரிக்கு கூப்பிட்டாரு. நான் பயத்தில் அடிச்சு புரண்டு ஓடி வந்துட்டேன்.”

 

“லூசு மாதிரி உளறாதே…” வசந்தகுமார் ராசுவை மிரட்ட…

 

“கூட யாரும் இருந்தாகளா?” கந்தன் யோசனையுடன் கேட்க…

 

“ஆமாங்கய்யா… ஒரு பொம்பளை இருந்தாக.” ராசு யோசித்தபடி பதில் கூறினான்.

 

“வசந்தா, இன்னைக்கு ஊருக்குள்ள யாரும் புதுசா வந்தாகளான்னு விசாரில…”

 

“ம், ஆகட்டும்ப்பா…” என்ற வசந்தகுமார் சென்றுவிட…

 

“இந்த விசயத்தை யாரு கிட்டேயும் உளறாம வீடு போய்ச் சேரு.” என்று ராசுவிடம் கந்தன் உத்தரவிட… ராசு சரியென்றுவிட்டு கிளம்பிவிட்டான்.

 

அவன் சென்றதும் கந்தன் யோசனையுடன் அமர்ந்திருந்தார். எங்குத் தவறு நடந்தது? என்று அவர் யோசிக்கத் துவங்கினார்.

 

**************************

 

“என்ன ருசி…! என் வாழ்க்கையில் இப்படியொரு சாப்பாட்டை நான் சாப்பிட்டதே இல்லை.” என்று சிலாகித்தபடி உணவை ரசித்து ருசித்து உண்டு கொண்டிருந்தார் சுபத்ரா.

 

செல்வாவும் அதை உணர்ந்து இருந்தாலும் வாய்விட்டு சொல்லவில்லை. அமைதியாக உண்டான். அவன் உணவு உண்டு முடிக்கவும் முத்து அங்கு வரவும் சரியாக இருந்தது.

 

“சந்தைக்குப் போகலாமா சார்?” என்று செல்வாவை பார்த்து கேட்ட முத்து மைனாவிடம் திரும்பி,

 

“மைனா, சார் டியூட்டியில் இருக்கும் நேரம் நீ தான் அம்மாவுக்குத் துணையா இருக்கணும்.” என்று கூற…

 

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் சார். அம்மாவை ஒரு வேலை செய்ய விட மாட்டேன்.” என்று மகிழ்ச்சியுடன் கூறிய மைனா பின்பு லேசான படபடப்புடன்,

 

“ஐயாவை சந்தைக்குக் கூட்டிட்டு போக வேண்டாம் சார்.” என்று கூற…

 

“ஏன்?” முத்து, செல்வா, சுபத்ரா மூவரும் ஒரே நேரத்தில் கேட்க… என்ன பதில் கூறுவது? என்று திகைத்து விழித்தாள் மைனா.

 

“சொல்லு மைனா…” சுபத்ரா அதட்டலாய் கேட்டார்.

 

“ஐயா உயிருக்கு ஆபத்து வந்திருமோன்னு பயமாயிருக்கு.” மைனா கலங்கிய விழிகளுடன் கூற… அதைக் கேட்டுச் சுபத்ரா பயந்தாலும் வெளிக்காட்டி கொள்ளாதவாறு,

 

“என் மகனை என்னன்னு நினைச்ச? அவன் சிங்க குட்டி… எத்தனை பேர் எதிர்த்து வந்தாலும் அவன் ஒத்த ஆளா நின்னு ஜெயிப்பான்.” என்று பெருமித குரலில் கூற…

 

“ம்மா, வேணாம்… வலிக்குது…” செல்வா நகைச்சுவை பாணியில் அழுவது போல் கூற… அதைக் கேட்டு எல்லோரும் சிரித்து விட்டனர்.

 

“மைனா, உனக்கு என் மேல் இருக்கும் அக்கறைக்கு ரொம்ப நன்றி. ஆனா யாரும் என்னைய ஒண்ணும் பண்ண முடியாது. ஏன்னா…” என்றவன் இடுப்பில் சொருகி இருந்த துப்பாக்கியை எடுத்து அவளிடம் காட்டினான். மைனா அவனுக்கு உணவு இட்டதால் அவன் தன்மையாகப் பதில் கூறினான்.

 

“இது எப்பவும் என் கூடவே இருக்கும்.” என்றவனைக் கண்டு மைனாவின் முகம் சற்றுத் தெளிந்தது.

 

“எதுக்கும் சாக்கிரதையா இருங்க ஐயா…” என்றவளை கண்டு புன்னகைத்தவன் முத்துவுடன் வெளியேறினான்.

 

ஒரு மணி நேரம் பிரயாணம் செய்து பக்கத்து ஊருக்கு வந்தவர்கள் சந்தை ஆரம்பிக்கும் இடத்தில் ஜீப்பை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி நடந்தனர். எல்லாவிதமான பொருட்களும் அங்கே குவிந்து இருந்தது. செல்வா ஒவ்வொன்றையும் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டு வந்தான். அப்போது பொரி மூட்டை பறந்து வந்து அவனது முகத்தின் மீது மோதி கீழே விழுந்தது. அதில் இருந்த பொரி எல்லாம் மேலே தூக்கி எறியப்பட்டு அவன் மீது மழை போல் பொழிந்தது. திடுமெனப் பொழிந்த பொரி மழையில் அவன் எதிரே என்ன இருக்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. மழை துளிகளாய் மண்ணில் வீழ்ந்த பொரிகளை இரு கைகளால் தள்ளியபடி அவன் நிமிர்ந்தான்.

 

“ஆரம்பிச்சிட்டான்களா?” என்றபடி முத்துச் செல்வா தலை மீதிருந்த பொரிகளைத் தட்டிவிட்டான்.

 

அப்போது பொரி மழைக்கு நடுவே ஒரு இளம்பெண் தோன்றினாள். மைனா மாதிரி உடை அணிந்திருந்தாள் அந்தப் பெண்… ஆனால் மைனாவின் நெற்றியில் இருந்த இரத்த சிவப்பு பொட்டு மட்டும் இல்லை. அதற்குப் பதில் ஏதோ ஒரு பூவினை அழகாக நெற்றியில் வரைந்திருந்தாள். செல்வா அவளைப் பார்க்கும் போதே அவள் தனது இடது கையில் பிடித்திருந்த ஒருவனைத் தனது வலக்கையால் நையப்புடைத்து கொண்டிருந்தாள்.

 

“இடுப்பை தொட்டு பார்ப்பியாலே. மலையில வாழுற பொண்ணு, தொட்டதும் ஈயின்னு இளிச்சிட்டு ஒட்டிக்குவான்னு நினைச்சியா? கொன்னுருவேன்டா… யாரு கிட்ட உன் ஈன வேலையைக் காட்டுற.” என்று மாற்றி மாற்றி அடிக்க…

 

“இனி அப்படிச் செய்ய மாட்டேன் தாயி…” என்று அந்தப் பொறுக்கி கீழே விழுந்தபடி அடி தாங்காது கையெடுத்து கும்பிட்டான்.

 

கீழே விழுந்தவன் நெஞ்சில் காலை வைத்து ஓங்கி மிதித்தவள், “இப்போ இடுப்பை தொடுடா பார்ப்போம். இந்தக் கையி தானே தொட்டது.” என்றவள் அவனது வலதுகையை வளைத்து பிடித்து முறுக்கத் துவங்கினாள்.

 

“சூப்பர்… பொண்ணுங்கன்னா இப்படித்தான் தைரியமா இருக்கணும்.” என்று செல்வா விசிலடித்து அவளது செயலை பாராட்ட…

 

“வேணாம் சார். அது சரியான பஜாரி. நாம போகலாம் வாங்க…” முத்து அங்கிருந்து நழுவ முயல… செல்வாவோ அந்தப் பெண்ணை நோக்கி நடந்தான்.

 

செல்வாவின் குரலில் திரும்பி பார்த்த அந்தப் பெண்ணின் விழிகளில் திகைப்பு தோன்றியது. பின்பு அவள் விழியகல அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவளது சிலை நிலையை அறிந்த அந்தப் பொறுக்கி எழுந்து தப்பித்து ஓட முயல… செல்வா அவனைத் தடுத்து பிடித்தவன் முத்துவை பார்த்து,

 

“இங்கே போலீஸ் ஸ்டேசன் இல்லையா?” என்று கேட்க…

 

“இருக்கு சார்…” முத்து கூறிய உடனே காவல்நிலையத்திற்கு அழைத்து விசயத்தைக் கூற… அடுத்தச் சில நிமிடங்களில் காவல்துறையினர் வந்து அந்தப் பொறுக்கியை அள்ளி கொண்டு போயினர். போவதற்கு முன் அந்தக் காவல்துறை அதிகாரி செல்வாவிடம் பேசிவிட்டு அவனிடம் கையைக் குலுக்கி கொண்டு சென்றார்.

 

இவ்வளவு கூத்து நடந்து முடிந்தும் அவள் தன்னுணர்வு பெறாது அதிர்ச்சியில் அப்படியே நின்றிருந்தாள். இப்போது செல்வாவின் கவனம் அவள் மீது திரும்பியது. அவள் தன்னையே வைத்த கண் வாங்காது பார்ப்பது கண்டு அவனது விழிகளில் சுவாரசியம் தோன்றியது.

 

“ஹேய் பொண்ணே…” என்று அவன் தனது வலக்கையை அவளது முகத்தின் நேரே ஆட்ட…

 

“ஏம்மா பொம்மி… என்னாச்சும்மா உனக்கு…?” முத்து பதற்றத்துடன் அருகில் இருந்த குளிர்பான கடையில் இருந்த சோடாவை எடுத்து உடைத்து அவளது முகத்தில் விசிறியடிக்க… அதில் சுயவுணர்வு பெற்று மலங்க மலங்க விழித்தவளை கண்டு,

 

“நல்லாயிருந்த புள்ளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே…” என்று முத்து புலம்ப…

 

“பொம்மி…” செல்வா ரசனையுடன் அவளது பெயரை மென்மையாய் உச்சரித்துப் பார்க்க… அந்தச் சத்தத்தில் மீண்டும் அவனைத் திரும்பி பார்த்தவள் அடுத்த நொடி ‘வீலென்ற’ சத்தத்துடன் மயங்கி விழுந்தாள்.

 

“என்னங்கடா இது…? சோடா தெளிச்சா மயக்கம் தானே தெளியும். இந்தப் பொண்ணு என்ன திரும்ப மயங்கி கீழே விழுது.” முத்து தனக்குள் பேசியபடி நிற்க…

 

செல்வா சுதாரித்துக் கொண்டு அவளைத் தனது கைகளில் தாங்கி கொண்டு,

 

“முத்து, க்விக் தண்ணிய தெளிங்க…” அவன் பதற்றத்துடன் கூற…

 

“தண்ணி என்ன சார்… சோடாவே தெளிக்கிறேன்.” என்ற முத்து மீண்டும் சோடாவை அவளது முகத்தில் தெளிக்க… அவளது மயக்கம் மெல்ல தெளிந்தது.

 

“பொம்மி, இங்கே பாரும்மா…” முத்து பதட்டத்துடன் சொல்ல…

 

“சார்…” என்று முத்துவை பார்த்தபடி நிமிர்ந்தவள் தனது முகத்துக்கு நேரே செல்வாவை கண்டதும் திகைத்து விழித்தாள். பின்பு தான் செல்வாவின் மடியில் தலை வைத்து படுத்திருப்பதைக் கண்டு அவள் பதறியபடி எழுந்தமர்ந்தாள். மீண்டும் அவனைக் கண்டு அவள் மயக்கம் போடும் முன் முத்து முந்தி கொண்டார்.

 

“அம்மாடி, நீ நினைக்கிற மாதிரி சார் பேயோ, பூச்சாண்டியோ கிடையாது. நம்ம ஊருக்கு வந்திருக்கிற ஃபாரஸ்ட் ஆபிசர்.” என்று முத்து கூற…

 

“இவுக ஆபிசருன்னா… அப்போ அவுக…” அவள் தனக்குள் கேள்வி கேட்டபடி யோசனையில் ஆழ்ந்தாள்.

 

“பொழுது சாய ஆரம்பிச்திருச்சும்மா… நீ ஊருக்கு கிளம்பு.” என்று முத்து கூற…

 

“சரிங்க சார்.” என்றவள் எழுந்து நின்றாள்.

 

“இந்த நிலைமையில் அவங்க பஸ்சில் போக வேண்டாம். நம்ம ஜீப்பில் வர சொல்லுங்க.” செல்வா முத்துவிடம் கூற…

 

“பஸ்சுல போக மாட்டேன். பொடி நடையா நடந்து போயிருவேன்.” என்றவளை கண்டு செல்வா,

 

“வாட்…?” என்று திகைத்தான்.

 

“ஆமா, அதுக்கு என்ன?” அவள் அவனைப் புரியாது பார்த்தாள்.

 

“பத்தி நிமிசம் வெயிட் பண்ண சொல்லுங்க முத்து. நாம சாமான்களை வாங்கிட்டு கிளம்பிரலாம்.”

 

“அதுவும் சரி தான் பொம்மி. இந்த நேரத்தில் நடந்து போக வேண்டாம். எங்க கூடவே வா. உன் அப்பாரு கிட்ட நான் பேசிக்கிறேன்.” என்றவர்,

 

“வீட்டுக்கு தேவையான சாமானுங்க வாங்கணும். கூட வந்து உதவி பண்ணு.” என்று அவளிடம் கேட்டுக் கொள்ள… எந்தவித பிகுவும் பண்ணாது அவள் உடன் வந்தாள்.

 

அடுத்தப் பத்து நிமிடங்களில் எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு ஜீப்பில் ஏறி ஊரை நோக்கி பயணம் மேற்கொண்டனர். பின்னால் அமர்ந்திருந்த பொம்மியை செல்வாவின் விழிகள் தென்றலை போல் ரசனையுடன் வருடி சென்றது. எந்தப் பெண்ணிடத்திலும் தோன்றாத ஒரு உணர்வு அவனுக்கு இவளிடத்தில் தோன்றியது. இவளுக்காகத் தான் அவன் இத்தனை வருடங்களாய் காத்திருந்ததாய் எண்ணினான். இந்த எண்ணம் எல்லாம் ஏன்? என்கிற கேள்விக்கு அவனுக்கு விடை தெரியும் போது அவனால் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியுமோ? உண்மை எப்போதுமே கசக்க தானே செய்யும்.

 

அதை உணராதவளாய் பொம்மி வேடிக்கை பார்த்தபடி வந்தாள். அவளது மனதில் பல கேள்விகள் அடுக்கடுக்காய் எழுந்தது.

 

********************

 

வசந்தகுமார் பேருந்து நிலையத்திற்குச் சென்று விசாரிக்கத் துவங்கினார். அங்கு டீக்கடை வைத்திருந்த கோபாலிடம் தனது விசாரணையைத் துவங்கினார்.

 

“இன்னைக்குப் புதுசா யாராச்சும் ஊருக்குள்ள வந்தாங்களா?”

 

“அப்படியா சாமி… எனக்கு ஞாபகம் இல்லையே.” அவன் தனது தலையைச் சொரிந்தான்.

 

“நான் பார்த்தேன் ஐயா.” கடையில் வேலை பார்க்கும் பையன் கூறினான்.

 

“யாருன்னு உனக்குத் தெரியுமா?”

 

“புதுசா வந்திருக்கிற ஃபாரஸ்ட் ஆபிசர்ங்க… அவரோட அம்மாவோட வந்திருக்கிறாராம்.”

 

“ஓ… வயசு என்ன இருக்கும்?”

 

“சின்ன வயசு தான். முப்பது வயசு இருக்கும் ஐயா.” என்ற பையனை கண்டு அவர் யோசனையுடன் தாடையைத் தடவினார். பின்பு தனது அலைப்பேசியை எடுத்து தந்தைக்கு அழைத்து விவரத்தை கூறினார்.

 

“ஆபிசரை சந்திக்க நாளைக்கே ஏற்பாடு செய் வசந்தா…” என்று கூற…

 

“சரிப்பா…” என்று அழைப்பை துண்டித்த வசந்தகுமார் தந்தையின் சொற்களுக்குச் செயல் வடிவம் கொடுக்க முற்பட்டார்.

 

அந்த நேரம் ஜீப் ஊருக்குள் வந்தது. ஏதேச்சையாய் ஏறிட்ட வசந்தகுமார் செல்வாவை கண்டு அதிர்ந்து போனார். அவரது விழிகளை அவரால் நம்ப முடியவில்லை. கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டு மீண்டும் செல்வாவை பார்த்தார்.

 

அவனே தான்… ஆனால் அவனில்லை…!!!

 

வீட்டிற்கு வந்து விசயத்தைக் கூறிய வசந்தகுமாரை கண்டு, “என்னடா சொல்ற?” என்று கந்தன் கோபமாய் உறுமினார்.

 

மருமகள் ராணி, பேத்தி ரம்யா இருவரும் பயத்துடன் இருவரையும் பார்த்திருந்தனர்.

 

“ஆமாப்பா… ராசு சொன்னது அத்தனையும் உண்மை. என் ரெண்டு கண்ணால் பார்த்தேன். அது அவனே தான். ஆனால் அவன் எப்படி?” வசந்தகுமார் குழம்பி போனார்.

 

மகனின் குழப்பம் தந்தைக்கு இல்லை போலும். அவர் தனது எண்ணத்தில் தெளிவாக இருந்தார். முடிந்து விட்டதாய் எண்ணிய உறவு முடியவில்லை என்பதை அவர் உணர்ந்து இருந்தார்.

 

‘முடிக்க வேண்டும். முடித்துக் காட்டுகிறேன்.’ என்று தனக்குள் சொல்லி கொண்டவர் மகனிடம்,

 

“நாளைக்கு அவனைச் சந்திக்க ஏற்பாடு பண்ணு.” என்று கூற…

 

“சரிப்பா…” என்று வசந்தகுமார் கூற…

 

“ராணி, போய்ச் சாப்பாட்டை எடுத்து வையி…” என்றவர் உணவு கூடத்தை நோக்கி நகர… மற்ற மூவரும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

 

************************

 

ஜீப் நேரே செல்வாவின் வீட்டிற்குச் சென்றது. செல்வா கேள்வியாக முத்துவை பார்த்தான்.

 

“சார், பொம்பள புள்ளைய நாம தனியா கூட்டிட்டு போய் விடறது சரியில்லை. அவுங்க இனத்தில் அதை அங்கீகரிக்கிறதும் இல்லை. மலைவாழ் மக்கள் நமக்கு நண்பர்கள் தான். நாம அவங்களைச் சீண்டாத வரைக்கும். அவங்களோட சமுதாயக் கட்டுப்பாடு, விதி முறைகளில் நாம தலையிட கூடாது. அது அவங்களுக்குப் பிடிக்கவும் பிடிக்காது. மத்தபடி அவங்க எல்லாம் ரொம்ப நல்ல மாதிரி.”

 

முத்து சொல்வதும் அவனுக்குச் சரியாகவே தோன்றியது. சம்மதமாய்த் தலையசைத்தவன் இறங்கி வீட்டினுள் செல்ல முயன்றவன் பின்பு நின்று,

 

“பொம்மி… அதானே உன்னுடைய பெயர். அம் ஐ ரைட்…?” என்று கேட்க…

 

“ஆங்…” என்றவள் ஆமென்று தலையாட்டினாள்.

 

“உள்ளே வா…” என்றவன் வீட்டினுள் சென்றுவிட… முத்துவும், அவளும் மட்டும் தேங்கினர்.

 

“பயப்படாதே பொம்மி… ஐயாவோட அம்மா கூட இருக்காங்க. அது போக மைனா இங்கே தான் வேலை செய்யுது.”

 

“அயித்த இங்கே தான் இருக்கா…” என்றவள் சந்தோசமாய்த் துள்ளி குதித்தபடி உள்ளே செல்ல… முத்து சிரித்தபடி பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

 

எல்லாப் பொருட்களையும் வைத்துவிட்டு முத்து கிளம்பிவிட்டான். அவனை அனுப்ப வெளியில் வந்த செல்வா அப்படியே வீட்டின் திண்ணையில் அமர்ந்து விட்டான். வீட்டினுள் பெண்கள் மூவரும் இரவு உணவினை தயாரித்துக் கொண்டிருந்தனர். அவனது அன்னை மட்டும் இருந்திருந்தால் அவன் உதவி புரிந்திருப்பான். உடன் இருவர் இருப்பதால் அவன் வெளியில் அமர்ந்து விட்டான். அதிலும் மைனா முன்னிலையில் பொம்மியை ஆர்வமாய்ப் பார்ப்பது அவனுக்குத் தவறாகத் தோன்றியது. ஆனாலும் அவனது ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் உதடுகளில் தோன்றிய புன்முறுவலுடன், சிறு வெட்கத்துடன் தனது தலையைக் கோதி கொண்டான்.

 

அவன் தலையைக் கோதி கொள்ளும் அழகினை அந்த அரூபம் சிறு திடுக்கிடலோடு பார்த்தது. பின்பு அது ரசனையோடு அவனைப் பார்த்திருந்தது. அந்தக் கணம் அதன் விழிகளில் கனிவு எட்டிப்பார்த்தது. செல்வாவின் மனதில் ஓடும் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அரூபத்தின் இதழ்களில் புன்னகை தோன்றியது.

 

‘உனக்குப் பொம்மி தான் என்பது நான் விதித்த விதி செல்லா… அதனால் தான் எந்தப் பெண்ணிடமும் மயங்காத நீ அவளிடம் மனம் மயங்கி நிற்கிறாய். நான் வாழாத வாழ்வை பொம்மி வாழ வேண்டும். அதுவும் உன்னுடன் மட்டுமே. வேறு யாரும் அவளுக்குப் புருசனா வர முடியாது. வரவும் விட மாட்டேன். அதே போல் தான் உனக்கும்…’ என்று நினைத்த அரூபத்தினுள் பழைய நினைவுகள் எழுந்தது. அடுத்த நொடி அதன் விழிகள் பழிவெறியில் நெருப்பு துண்டங்களாய் ஜொலித்தது.

 

தொடரும்…!!!

 

9 Comments

 1. Super ud mam, selvakum entha urukum enna sampantham?

 2. Super Super Super mam… Semma semma episode…. ஏன் அவன பாத்து எல்லாரும் அப்படி payapuraanga appadi enna விஷயம்… Chellaa avan seththu poitatha ellaarum nenaichi kitu இருகாங்க போல but அவன் சாகாமல் திரும்பி வந்து இருகான் ah…. அந்த வண்டி காரன் chinnaiyaa nu solraan… அப்படினா அந்த பெரியவர் பையன் ah… Pommaa num avana பாத்த ஒடனே பயந்து மயங்கி vizhunthutaa…. Avanuku avala பிடிச்சி இருக்கு but காரணம் theriyala… அந்த arubam yaaru athuyum pommaa va தான் அவன் kantikkanum nenaikithu… Super Super Super mam… Eagerly waiting for next episode mam

 3. வாவ்.. வாவ்.. ஹீரோ என்டரிக்கு பொறி பறக்கும் என்றால் ஹீரோயின் என்டரிக்கு பொரி பறக்குமா… சூப்பர் ஸ்ரீக்கா…

  ம்ம்… இப்போ ஓரளவிற்கு கதையை யூகிக்க முடிகிறது ஸ்ரீக்கா..

  அதனால் சுவாரசியம் இன்னும் கூடியிருக்கு…

 4. Super…Super. ..
  heroin entry semma. …
  selva love panne start panniten….
  but indhe oorukum selva kum enne sammendhem???
  andhe voice ku sondhekari yaru?????

 5. அருமையான பதிவு

 6. வாவ் nice ud சசி கா.
  செல்லி, செல்லா ரெண்டுமே செல்வாவை தான் குறிக்குதா?
  அரூபமான உருவம் செல்வாவோட biolagical mother ah??

  Ammu Manikandan.
 7. Selva entryai parthu Rasu thalai therikka odinan…

  Bommi summa pori parakka entry…

  Vasanth and avanoda Appa endho villathanam panna ready ayindu irukka…

  Aroopama irukkarathu thaan Maina manasu kulla sonna chelliya…

 8. super mam ungal kadaikalil intha kadai konjam diffrent aagairukkirathu selvavadam appadi enna marmam ullathu bommiyum avanai kandathum mayanki vizunthu vittaal mainayai atthai enkiraal selvaavum avalai kandavudan salanappadukiraan very nice ud mam(viji)

 9. Selva va parthu ellorum arimugamana vanga pola pesuranga avanukkum intha oorukkum yetho sambantham irukku pola.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *