“நிலவோடு பேசும் மழையில்…” – 7 16

அத்தியாயம் : 7

 

அலுவலக அறையில் மிகவும் டென்சனோடு அமர்ந்திருந்தாள் ஹம்சவர்த்தினி. அவள் ஏதோ ஒரு வேகத்தில் ப்ரஷன்ஜித்தை அலைப்பேசியில் அழைத்துப் பேசிவிட்டாள். அதை நினைத்து இப்போது அவளுக்கு டென்சனாக இருந்தது. அவள் அவனுடன் பேசியதை நினைத்து பார்த்தாள். அதே நேரம் அவளைச் சந்திப்பதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த ப்ரஷன்ஜித்தும் அவளுடன் பேசியதை நினைத்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

 

சிறிது நேரத்திற்கு முன் ஒற்றையா இரட்டையா போட்டு பார்த்த ஹம்சவர்த்தினி அவனுக்கு அலைப்பேசியில் அழைத்தாள். அவன் மீது கோபம் இருந்த போதும் காதல் கொண்ட மனது ஈகோ பார்க்கவில்லை. மறுபக்கத்தில் எடுத்தவன் ஒன்றும் பேசாது இருந்தான். அவளுக்குத் தானே தேவை… அவளே பேசட்டும் என்கிற எண்ணம் அவனுக்கு… அதை உணர்ந்தவளாய் அவளும் தானே பேச்சை ஆரம்பித்தாள்.

 

“எனக்கு என்னோட கம்பெனி கணக்குகள் வேண்டும்.” என்று எடுத்தவுடன் அவள் ஆரம்பிக்க…

 

எப்படியும் அவள் காதல் மொழி பேச போவது இல்லை. இருந்தாலும் எதிர்பார்ப்புடன் இருந்த அவனுக்கு அவளது இந்தப் பேச்சு பெரும் கோபத்தைக் கொடுத்தது.

 

“ஹலோ மேடம், யார் கிட்ட வந்து… யாரோட கம்பெனி கணக்குகளைக் கேட்கிறீங்க? உங்களுக்கு ஏதாவது கழண்டு போச்சா? நான் உங்களோட எதிரி மேடம்.” அவனது கோபத்தில் சிறிது நக்கலும் சேர்ந்து வந்தது. ‘எதிரி’ என்கிற வார்த்தையை அவன் அழுத்தி சொன்ன விதத்தில் அவளுக்குச் சுர்ரென்று கோபம் வந்தது.

 

“எதிரிக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?” அவள் இருபொருள்படக் கூறி அவனைக் காய்ந்தாள். அதன் அர்த்தம் அவனுக்குமே புரிந்தது. புரிந்த அர்த்தமோ அவனுக்குப் பெரும் வேதனையை, வலியை கொடுத்தது. விழிகளை மூடி தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் மீண்டும் விழிகளைத் திறந்தபோது அவனது விழிகள் சிவந்திருந்தது.

 

“இப்போ உங்களுக்கு என்ன வேண்டும்?” கோபத்திலும் அவனது வார்த்தைகள் பெரும் ஆர்வத்துடன், ஆவலுடன் ஒலித்தது.

 

“கணக்கில் சந்தேகம் இருக்கிறது. கேட்க வேண்டும்.” அவள் ஒட்டாத தன்மையுடன் கூறிய பதில் அவனைக் குத்தி கூறு போட்டது.

 

‘அவளைப் பற்றித் தெரிந்திருந்தும் நீ ஏன் இவ்வளவு வருத்தப்படுற?’ அவனது மனசாட்சி அவனுக்கு ஆறுதல் கூறியது.

 

“இது தான் உங்களுக்கு வேண்டாத வேலையா?” அவன் காட்டமாகக் கேட்க…

 

“ஆமாம், உனக்கு இது வேண்டாத வேலை தானே. எங்க கம்பெனி கணக்குகளைப் பார்ப்பதற்கு நீ யார்?” அவளும் கோபத்துடன் கத்தினாள்.

 

“ஏன் சொல்ல மாட்டீங்க? அன்று நான் இதைக் கையில் எடுக்கலைன்னா நீங்க அன்னைக்கு டிவியில் பெருமையா பேட்டி கொடுத்தீங்களே அது மாதிரி கொடுத்திருக்க முடியாது. கணக்கு வழக்கு தெரியாம அல்லாடிட்டு இருந்திருப்பீங்க.” அவனது வார்த்தைகளில் இருந்த உள்குத்து அவளுக்கு எதையோ உணர்த்தியது.

 

“என்ன சொல்ற?”

 

“இந்த மூன்று மாதத்தில் நீங்க பெற்ற வெற்றிகளுக்கு அனைத்திற்கும் காரணம், அன்று நான் உங்களது தொழில்களைப் பார்த்துக் கொண்டது தான். அதை எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.”

 

‘எல்லாமே இவனால் கிடைத்த வெற்றி தானா?’ அவளுக்கு இந்த வெற்றியே கசந்தது. எதிரியினால் வெற்றி பெறுவது என்பது எப்படி உவகையைக் கொடுக்கும்? ஆனாலும் ஏதோ இனம் புரியாத உணர்வு ஒன்று அவளது மனதினை நிறைத்து மகிழ்வினை தோற்றுவித்தது.

 

“இப்படிச் சொல்லி காட்டுவதற்கு நீ உதவி செய்திருக்கவே வேண்டாம்.” அவளது குரல் சிறிது ஆற்றாமையுடன் ஒலித்ததோ…! அவளது வார்த்தையில் அவனது கோபம் சிறிது மட்டுப்பட்டது. அவள் தன் பின்னே சுற்றி வந்த காலங்களை நினைத்து பார்த்தவனின் மனம் உல்லாச நிலைக்குச் சென்றது.

 

“சரி, அதை விடுங்க… இப்போது எதுக்கு ஃபோன் பண்ணினீங்க?” அவன் எல்லாம் தெரிந்திருந்தும் தெரியாதது போல் கேட்டான். அவள் எதையும் உணரும் மனநிலையில் இல்லை.

 

“கணக்கில் சில சந்தேகங்கள் இருக்கு. அது என்னன்னு தெரியணும்?”

 

“அதுக்கு நான் என்ன பண்ணணும்?” எதுவாக இருந்தாலும் அவளே சொல்லட்டும் என்று அவன் பட்டும் படாது கேட்க…

 

“தகவல் சொன்னால் போதும்…”

 

“எப்படி?”

 

“இப்படியே… ஃபோனில்…”

 

“ம், கேளுங்க…” என்றவனை இடைமறித்து,

 

“வீடியோ கான்ஃப்ரன்ஸ் போடவா?” என்று அவள் கேட்க…

 

“இப்பவேவா…?” அவனது கேள்வி புரியாதவளாய் அவள்,

 

“ஆமாம்…” என்க…

 

“நான் குளித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு ஓகேவா…?” என்று அவன் நமட்டு சிரிப்புடன் கேட்க…

 

“ச்சீய்…” என்றவள் முகத்தைச் சுளித்தபடி அலைப்பேசியை மேசை மீது தூக்கி எறிந்தாள். அதை உணர்ந்தவனாய் வாய்விட்டு சிரித்தவன் அலைப்பேசியை அணைத்துவிட்டு தான் நேரில் அவளைச் சந்திக்க வருவதாய்க் குறுஞ்செய்தி அனுப்பினான். அதைப் படித்தவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

 

‘யூ நாட்டி மேன்.’ என்று முணுமுணுத்தவளின் முகத்தில் நாணத்தின் சாயலே…

 

இப்போதும் அதை நினைத்து பார்த்தவளுக்கு அழையாய் விருந்தாளியாய் வெட்கம் வந்து ஒட்டி கொண்டது. தனது கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தவள் பின்பு எதிர்பார்ப்புடன் வாயிலை பார்த்தாள். எப்போதும் போல் அவளது எதிர்பார்ப்பினை அவன் தவிடு பொடியாக்கி கொண்டிருந்தான். எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்த நெஞ்சம் தானே அவளுடைய காதல் நெஞ்சம்… சுமார் இரண்டு மணி நேரம் அவளைக் காக்க வைத்துவிட்டே அவன் அவள் முன் தரிசனம் கொடுத்தான். வந்தவனை வாங்க என்று கூடக் கேட்காது,

 

“இதுவா வர்ற நேரம்?” என்று அவள் சிடுசிடுக்க…

 

“நான் கணக்கு சொல்லி கொடுக்க வந்தவன்… அப்படின்னா டீச்சர் மாதிரி. டீச்சர்க்காக ஸ்டூடண்ட் காத்திருப்பதில் தவறு ஏதும் இல்லை.”

 

“என்னைப் பார்த்தா உனக்கு ஸ்டூடண்ட் மாதிரியா இருக்கு?” அவள் எரிச்சலுடன் கேட்க…

 

“எஸ்… அதிலும் நீங்க மக்கு ஸ்டூடண்ட்.” என்றவன் அவள் சொல்லாது அவள் முன்னிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

 

“ஹலோ… நான் ஒண்ணும் மக்கு இல்லை.” என்று அவள் சிலிர்த்துக் கொள்ள…

 

“அப்போ நிரூபிங்க…” என்றவனது விழிகள் அவளை எதிர்பார்ப்புடன் நோக்கியது.

 

“எப்படி…?” என்று தனக்குள் கூறியபடி அவள் அவனை யோசனையுடன் பார்க்க…

 

‘அதானே பார்த்தேன்… நீயாவது என் மனதை புரிஞ்சிக்கிறதாவது? ப்ரஷூ, உன் நிலை ரொம்பக் கஷ்டம்டா.’ என்று தனக்குள் புலம்பியவன்,

 

“இதுக்குத் தான் மக்கு என்று சொன்னேன்.” என்று கூற… அதற்கு எரித்து விடுவது போல் பார்த்தவளை கண்டு ஒன்றுமே நடவாதவன் போல,

 

“கணக்கு சொல்லி கொடுக்கவா?” என்று கேட்க…

 

“என்னது…?” அவள் எச்சரிக்கையுடன் அவனைப் பார்க்க…

 

“கணக்கு… கம்பெனி கணக்கு…” என்றவனது குரலில் வழிந்த விசமம் வேறு அர்த்தத்தை உணர்த்தியதை அவள் அறியவில்லை. குழந்தை குமரியின் காதலின் விருப்பு வேறு அல்லவா!

 

“ம்…” என்றவள் தனது சந்தேகத்தினை அவனிடம் கேட்க… அவனும் தனது கேலியை கைவிட்டவனாய் அவளுக்குத் தெளிவாகப் புரியும்படி கணக்குகளை விளக்க ஆரம்பித்தான். சுமார் ஒரு மணி நேரம் வேறு சிந்தனை இல்லாது வேலை பார்த்தார்கள்.

 

“இவ்வளவு தானே. வேறு எதுவும் இல்லையே?” என்று கேள்வி கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் வழிந்த ஏக்கத்தில், துக்கத்தில் ஆணவன் வாயடைத்துப் போனான்.

 

‘என்னை உன்னுடன் கூட்டிட்டு போடான்னு ஒரு வார்த்தை சொல்லுடி. அடுத்தச் செகண்ட் உன்னைத் தூக்கிட்டு போறேன். எதுக்கு இந்த ஏக்கம்? துக்கம்?’ அவனும் மனதிற்குள் மருகினாலும் வெளியில் எதுவும் சொல்லவில்லை.

 

“சரி, அப்போ நான் கிளம்பறேன்.” என்றபடி அவன் எழ…

 

“ம்…” என்றவள் தானும் எழுந்தாள்.

 

“வீட்டில் யாரும் இல்லையா?”

 

“அம்மா அப்பா கூட இருக்காங்க. அண்ணி கடைக்குப் போயிருக்காங்க. ஞாயிற்றுக் கிழமை கூட நீ அவங்களுக்கு லீவு கொடுக்க மாட்டேங்கிற.” அவள் அவனிடம் மனத்தாங்கல் கொண்டாள்.

 

“திவி இங்கே இருந்து என்ன பண்ண போறாங்க? அதுக்குக் கடைக்குப் போயிட்டு வரட்டும். நாலு பேரை பார்த்தாவது மனசு ரிலாக்ஸாகும்.” அவன் சொன்னது ஒத்துக் கொள்ளக் கூடியதாய் இருந்ததால் அவள் அமைதி காத்தாள்.

 

“வர்றேன்…” என்றவனது அழுத்தமான குரலில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் சம்பிராதயமாக,

 

“சாப்பிட்டு போகலாமே?” என்று கேட்க… அதற்கு அவள் பக்கம் நெருங்கி வந்து நின்றவன்,

 

“நான் சாப்பாட்டில் உப்பு குறைவா இருக்குன்னு சொல்லுவேன். நீ வேலைக்காரியை சாப்பிட்டு பார்க்க சொல்லுவ. வேலைக்காரி சாப்பிட்ட சாப்பாடை சாப்பிடுறதுக்கு…” என்றவன் அவளைப் பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டபடி,

 

“எங்க வீட்டு சாப்பாடே மேல்…” என்று கூறியவன் அவளிடம் விடைபெற்று சென்றுவிட்டான். அவள் தான் அவன் சொன்னதை யோசித்தபடி புரியாது நின்றிருந்தாள்…

 

***************************

 

திவ்யா யோசனையுடன் கண்ணாடி கதவை திறக்க முயன்ற அதே சமயம், கதிர்வேலும் மறுபக்கம் இருந்து கதவை திறந்தான். அவன் அலைப்பேசியில் பேசியபடி வந்ததால் திவ்யாவை கவனிக்கவில்லை. இருவரும் ஒரே நேரத்தில் கதவை பிடித்து இழுக்க… அதுவோ அசையாது நின்றது. அப்போது தான் இருவரும் நிமிர்ந்து பார்த்தனர். எதிர்பாராது திவ்யாவை அங்குக் கண்டதும் கதிர்வேல் திகைத்து அப்படியே நிற்க… திவ்யாவோ சங்கடமாய் அவனைப் பார்த்தவள் வேகமாய்க் கதவு கைப்பிடியில் இருந்து கையை எடுத்தாள். கதிர்வேல் அசையாது நின்றிருப்பதைக் கண்டு அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர்,

 

“சார், இப்படியே மசமசன்னு நின்னுக்கிட்டு இருந்தா எப்படி? வழியை விடுங்க…” என்று அவனை இடித்துக் கொண்டு கதவை திறந்து செல்ல… அதில் உணர்வு பெற்றவன் ‘ஙே’ என்று விழித்தான். அதைக் கண்டு திவ்யாவின் இதழ்களில் புன்னகை தோன்றியது. மின்னல் கீற்றாய் ஒளிர்ந்த அவளது புன்னகை அவனுள் ஏதோ மாயம் செய்ய அவன் மனம் மயங்கி நின்றான். அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள் அவனைக் கதவை திறந்து கொண்டு செல்லுமாறு சைகையில் கூறினாள். அவனோ,

 

“நீங்க போங்க…” என்று கூறியபடி தனது கையைக் காட்ட… சரியென்று தலையசைத்தவள் கதவை நிறைந்து கொண்டு வந்தாள்.

 

“அவர் புதுசு போலிருக்கு. அதான் என்னை அவருக்குத் தெரியலை…” அவன் அசடு வழிந்தபடி பதில் கொடுத்தான். அவள் புன்னகையுடன் தலையசைக்க… இருவரையும் அதிசயத்துடன் பார்த்தபடி அங்கு வந்து சேர்ந்தான் ப்ரஷன்ஜித்.

 

“என்னடா நடக்குது இங்கே?” என்று கேட்டபடி வந்த ப்ரஷன்ஜித்தை கண்டு இருவரும் முகம் மலர்ந்தனர். அவன் கேட்டதன் அர்த்தம் கதிர்வேலுவிற்கு மட்டும் விளங்கியது.

 

“ஒண்ணும் நடக்கலை. மானத்தை வாங்காதே.” என்று நண்பனின் காதை கடித்த கதிர்வேல் திவ்யாவை கண்டு அசடு வழிந்தான்.

 

“ஒண்ணுமே இல்லையா?” ப்ரஷன்ஜித் ஏமாற்றமாய் நண்பனை பார்க்க… கதிர்வேலோ அவனை முறைத்தான்.

 

“பாவா, இங்கே என்ன திடீர்ன்னு?”

 

“பாட்டி ஊரில் இருந்து வந்திருக்காங்க. உன்னைப் பார்க்கணும்ன்னு சொன்னாங்க. அதான் அழைச்சிட்டு போக வந்தேன்.”

 

“எப்போ வந்தாங்க? என் கிட்ட சொல்லலை.” அவள் உற்சாகத்துடன் கேட்க…

 

“சர்ப்ரைசா வந்திருக்காங்க. நீங்க கிளம்புங்க…”

 

“ம், சரி பாவா…” என்றவள் பின்பு கதிர்வேலை தயக்கத்துடன் பார்த்தாள். அவள் என்ன கேட்க விரும்புகிறாள்? என்பதை விழி வழி படித்தவன்,

 

“நீங்க போங்க… நாளைக்கு வந்து வேலை பார்த்துக்கலாம்.” என்று அவன் தன்மையுடன் கூற…

 

“ஹேண்ட் பேக் எடுத்துட்டு வந்துடறேன் பாவா.” என்றவள் செல்ல…

 

“என்னடா, மேடம் பார்வையால் சொன்னதை நீங்க சரியா புரிஞ்சிக்கிட்டீங்க போலிருக்கு. என்னவொரு லவ்ஸ்…!!!” என்று சிலாகித்த ப்ரஷன்ஜித்தை கண்டு,

 

“காதல் இருந்தால் புரிதல் தானாய் வரும்டா…” என்று கதிர்வேல் கூற… அதைக் கேட்டு ப்ரஷன்ஜித் திடுக்கிட்டு போய் அவனை ஏறிட்டான்.

 

“உன்னை நீயே ஏமாத்திக்கிற மாப்ள…”

 

“ம், ஆமாம் கதிர்… பொம்மாயி என்னைத் தேடி வருவாள்ன்னு இன்னமும் நம்பிக்கிட்டு இருக்கேன் பாரு. நான் என்னை நானே ஏமாத்திக்கிறேன் தான்.” என்று கூறியவனின் வார்த்தைகளில் விரக்தி வழிந்தது.

 

“சிஸ்டர் உன்னைத் தேடி வருவாங்கடா…”

 

“சிஸ்டர் இல்லை… மச்சினிச்சி.” என்று ப்ரஷன்ஜித் திருத்தம் செய்ய…

 

“இப்போ இது ரொம்ப முக்கியம்.” என்று கதிர்வேல் நொடித்துக் கொள்ள…

 

“எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். நீ பொம்மாயியை சிஸ்டர்ன்னு கூப்பிட்டு அவளை எனக்குச் சிஸ்டராக்கி விடாதே.” என்று அவன் ஒற்றை விரல் நீட்டி நண்பனை எச்சரித்தான். அப்போது திவ்யா அங்கு வர… அவளைக் கண்டதும் கதிர்வேலிற்கு ப்ரஷன்ஜித் கூறும் காரணம் என்னவென்று புரிந்தது.

 

“ஓ… நீ அப்படிச் சொல்றியா?”

 

“அப்படியே தான்…” என்றவன் திவ்யாவை அழைத்துக் கொண்டு சென்றான்.

 

ப்ரஷன்ஜித் வீட்டில் வேணி இவர்களுக்காகக் காத்திருந்தார். அம்ரிதாவின் வீட்டில் இருந்து இன்று தான் அவர் இங்கு வந்திருந்தார். பாழ் நெற்றியுடன் வாழ்க்கை இழந்து நிற்கும் பேத்தியை கண்டு அவருக்கு அழுகை வந்தது. தனது வருத்தம் அவளைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக அவளைச் சாதாரணமாக வரவேற்றவர் அவளுடனே இருந்தார். திவ்யாவின் பெற்றோரும் அங்கு வந்திருந்தனர். திவ்யா அங்குச் சில மணித்துளிகள் இருந்தவள் பின்பு தனது புகுந்த வீட்டிற்குக் கிளம்பினாள். இருவரும் சேர்ந்து கிளம்பியது கண்டு எல்லோர் மனதிலும் தோன்றிய எண்ணம் ஒன்று தான்… அது, இருவரது திருமணம்.

 

திவ்யாவை வீட்டில் இறக்கிவிட்டு செல்ல முயன்ற ப்ரஷன்ஜித்தை பர்வதம் வீட்டிற்குள் அழைத்தார். அவர் பேச்சை தட்ட முடியாது அவனும் வீட்டினுள் வந்தான். முதலில் கோபாலகிருஷ்ணனை பார்த்து நலம் விசாரித்து விட்டு பின்பு வரவேற்பறையில் வந்து அமர்ந்தவன் முன் அமர்ந்த பர்வதம் மருமகளைப் பார்த்து,

 

“திவி, ப்ரஷூக்கு காபி எடுத்துட்டு வா…” என்று கூற…

 

“சரிங்க அத்தை…” என்ற திவ்யா சமையலறை நோக்கி செல்ல… ப்ரஷன்ஜித்தின் விழிகளோ காபி என்றதும் தன்னவளை தானாகத் தேடியது. எங்கும் அவளைக் காணோம்.

 

“உங்க பொண்ணு எங்கே அத்தை…? பஃப், கிளப்ன்னு போயிட்டாங்களா?”

 

“ச்சே ச்சே… ஹம்சிக்கு அந்த மாதிரி பழக்கம் எல்லாம் கிடையாது.” என்று அவர் மறுத்து கூற… அவன் ஹம்சவர்த்தினியை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான். அவள் சுற்றாத இடம் இந்தச் சென்னையில் ஒன்றுகூடக் கிடையாது.

 

“நல்ல பழக்கம் தான்…” என்று அவன் விசமத்துடன் ஒத்துக் கொள்ள…

 

“அவள் ரூமில் ரெஸ்ட் எடுக்கிறாள்.” என்று அவர் கூற… அவன் ஒன்றும் பேசவில்லை.

 

“ப்ரஷூ, நான் உன் கிட்ட ஒண்ணு கேட்கணும்.”

 

“தாராளமா கேளுங்க அத்தை.”

 

“திவியை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்றவரை கண்டு அதிர்ந்தவன் அவன் மட்டுமல்ல… வெளியில் செல்வதற்காகக் கிளம்பி வந்த ஹம்சவர்த்தினியும் தான்…

 

“திவி எங்க மருமகள் என்பது இறந்தகாலம் ப்ரஷூ… உங்க வீட்டு மருமகள் என்பதை வருங்காலமா ஏன் மாத்த கூடாது?” அவர் சொன்னதைக் கேட்டு ஒரு நொடி அமைதியாக இருந்தவன் பின்பு எழுந்து வந்து அவர் அருகில் அமர்ந்து அவரது கரத்தினை ஆறுதலாய் பற்றிக் கொண்டவன்,

 

“திவி வாழ்க்கையைப் பத்தி ரொம்பக் கவலைப்படுறீங்க அத்தை. அந்தக் கவலை அநாவசியமானது. அவங்க வாழ்க்கை என்னுடைய பொறுப்பு.” என்று கூற… அது ஹம்சவர்த்தினியை இதயத்தைக் குத்தி கிழித்தது. வலி தாங்க முடியாது அவள் கல்லாய் சமைந்து நின்றாள்.

 

“ரொம்பச் சந்தோசம் ப்ரஷூ… இது போதும் எனக்கு…” என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும் போது திவ்யா காபி கொண்டு வர… இருவரும் அதைப் பற்றிப் பேசாது அமைதியாகி போயினர்.

 

ஹம்சவர்த்தினி சத்தம் செய்யாது அவர்களைக் கடந்து சென்றாள். வெளியில் வந்தவள் காரில் ஏறாது மனம் போன போக்கில் செல்ல துவங்கினாள். அவளது மனம் உலைக்களமாய்க் கொதித்தது. அதற்கு நேர்மாறாய் அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது. விறுவிறுவென நடந்தவள் அருகிலிருந்த பூங்காவில் சென்று அமர்ந்தாள். மெதுவே அவளைச் சுற்றி இருள் கவிழ ஆரம்பித்தது, அவளது வாழ்க்கையினைப் போன்று…!!!

 

************************

 

காலையில் இருந்து விடாது கொட்டி தீர்த்த மழை அப்போது சிறிது விட்டிருந்தது. அன்று வானிலை அறிக்கையில் அடைமழை பொழிய கூடும் என்று கூறியிருந்ததால் படப்பிடிப்பு ரத்துச் செய்யப்பட்டது. மழை விட்டதைக் கண்டு ஷிவாரிகா தனது கேமிராவை எடுத்துக் கொண்டு குடிலை விட்டு வெளியில் வந்தாள். மழையில் குளித்திருந்த காட்டைப் பார்க்க பார்க்க அவளுக்குத் தெவிட்டவில்லை. ஒவ்வொரு கோணத்தில் புகைப்படம் எடுத்தவள் அப்படியே கால் போன போக்கில் நடந்தாள். வானில் மேகம் சூழ்ந்திருந்தால் சூரியன் மறைந்திருந்தான். அதனால் மதிய பொழுதில் கூட லேசாக இருள் கவிழ்ந்து மாலை போல் காட்சி அளித்தது. புகைப்படம் எடுக்கும் உற்சாகத்தில் அவள் சுற்றுப்புறத்தை உணரவில்லை. தன் பின்னால் பின்தொடரும் ஹர்ஷாவையும் அவள் கவனிக்கவில்லை. அவளை ரசித்தபடி நடந்த ஹர்ஷா அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆனால் அவனது கவனம் முழுவதும் அவள் மீதே…

 

வெகுதூரம் வந்த பிறகே ஷிவாரிகா அன்னிச்சையாய் திரும்பி பார்த்தாள். அங்கு நின்றிருந்த ஹர்ஷாவை கண்டு விழிகளைச் சுருக்கியவள் அங்கிருந்து திரும்பி செல்ல நினைத்தாள்.

 

“நில்லு ஏஞ்சல்…” என்றவனைக் கண்டு முறைத்தவள்,

 

“இன்னமும் உன் வார்த்தையை நான் கேட்பேன்னு எப்படி நம்பற?” என்றவள் நடக்கத் துவங்க…

 

“நானும் உன்னைப் போல் ஃபோட்டோ எடுக்க வந்தவன் தான்…” என்றபடி அவளது வழியை மறிப்பது போல் அவள் முன்னே சென்று நின்றவன் தனது கழுத்தில் மாட்டியிருந்த கேமிராவை எடுத்துக் காட்டினான்.

 

“அதுக்கு என்ன இப்போ?” என்று அலட்சியப்படுத்தியவள் அவனைச் சுற்றிக் கொண்டு செல்ல முற்பட்டாள்.

 

அப்போது பார்த்து கடும் மின்னல் ஒன்று வெட்டியது. அதை அடுத்து பலத்த சத்தத்துடன் இடி இடித்தது. அதைக் கேட்டவளின் கால்கள் மேலே செல்லாது தயங்கி நின்றது.

 

“பயப்படாதே ஏஞ்சல்… நானிருக்கேன்.” என்றவனைத் திரும்பி பார்த்தவள்,

 

“எனக்கு உன்னைக் கண்டு தான் பயம்.” என்றவள் கூறும் போதே கனத்தை மழை பொழிய… அண்ணாந்து பார்த்தவாறே அருகில் இருந்த மரத்தடியில் போய் நின்றாள் ஷிவாரிகா.

 

“இடி மின்னலுடன் மழை பெய்யும் போது மரத்தின் கீழ் நிற்க கூடாதுன்னு படிச்சது இல்லையா?” என்று கடிந்தவனை முறைத்து பார்த்தபடி முகத்தில் வழிந்த மழை நீரை வழித்தெடுத்தவள் எதுவும் பேசவில்லை.

 

“இருட்டிக்கிட்டே இருக்கு ஏஞ்சல். இன்னமும் இங்கே இருப்பது ஆபத்து. நாம நம்ம இடத்துக்குப் போகலாம்.” அவன் கூறியும் அசையாது இருந்தவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன் பின்பு ஒன்றும் கூறாது விறுவிறுவெனச் செல்ல… அவனது செய்கையைப் பார்த்தவள் பின்பு மெல்ல சுற்றுப்புறத்தை பார்த்தாள். யார் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாத அளவிற்குக் கனமழை பொழிந்தது. அதைக் கண்டு அவளுக்குச் சிறிது பயம் வந்தது. அதன் பின்பு ஒரு கணம் கூட யோசிக்காது ஹர்ஷாவை நோக்கி ஓட துவங்கினாள். அவளது வரவினை அவன் உணர்ந்தாலும் அவளைக் கண்டு கொள்ளாது செல்ல… அவளும் அமைதியாய் அவனுடன் இணைந்து நடந்தாள். இருவரும் அவரவர் யோசனையில் சிறிது இடைவெளி விட்டு நடந்தனர். வெகு தூரம் ஓட்டமும் நடையுமாய்க் காட்டைக் கடந்தவர்களின் விழிகளில் சாலை தென்பட்டது.

 

“அதோ ரோடு தெரிகிறது…” தன்னை மறந்து சந்தோசத்தில் கூவினாள் ஷிவாரிகா.

 

“ஆமாம்…” தன்னிடம் அவளாகப் பேசியதை கண்டு அவனும் முகம் மலர்ந்தவனாய் பதில் கூறினான்.

 

இருவரும் வேகமாய்ச் சாலைக்கு வந்து பார்த்த போது தான் தெரிந்தது, அது அவர்கள் தங்கியிருந்த ஊரின் சாலை இல்லை என்று…

 

“இது வேற ரோடு மாதிரி தெரியுதே… இப்போ என்ன பண்ணுவது?” அவன் தன்னுடைய எதிரி என்பதை மறந்தவளாய் அவள் அவனிடமே ஆலோசனை கேட்க… பெரும் மழையில் தனது விழிகளைக் கூர்மையாக்கி சாலை இருமருங்கிலும் பார்த்தவன்,

 

“இந்த ரெண்டு பாதையில் ஏதாவது ஒரு பாதையில் போகலாம். பக்கத்தில் ஏதாவது ஊர் இருக்கும். லெப்ட்டில் போகலாமா?” என்று கேள்வி கேட்க…

 

“நோ நோ… ரைட்ல போகலாம்.” என்று கூறியவளை கண்டு புன்னகைத்தவன்,

 

“லேடிஸ் ஆல்வேஸ் ரைட்… ரைட்லேயே போகலாம்…” என்று கூறியவன் அவளை அழைத்துக் கொண்டு அவள் கூறிய பாதையில் நடக்கத் துவங்கினான். ஓட்டமும் நடையுமாய் மீண்டும் ஒரு பயணம்…

 

“இதுக்கு மேலே என்னால் முடியலை.” அவள் கால்களைப் பிடித்துக் கொண்டு அவனை அண்ணாந்து பார்த்தபடி கூற… அந்த நிலையிலும் அவளது அந்த அழகில் அவனது மனம் சொக்கித்தான் போயிற்று.

 

“ஏதாவது வெகிக்கிள் வருதான்னு பார்க்கிறேன்.” என்றவன் சாலையைப் பார்த்தான். வாகனம் ஏதும் வரவில்லை. அதனால் அவர்கள் மெல்ல நடக்கத் துவங்கினர். சுமார் அரைமணி நேரம் அவர்கள் மெதுவே நடந்திருந்த போது ஒரு கார் அந்தப் பக்கமாய் வந்தது. அதைக் கண்ட ஷிவாரிகா உற்சாகத்துடன்,

 

“கார் வருவது போல் தெரிகிறது. நிப்பாட்டுங்க.” அவள் சந்தோச கூச்சல் போட…

 

“ஓகே ஏஞ்சல்…” என்றவன் சாலையின் நடுவே சென்று அந்தக் காரை நிறுத்தினான். பின்பு அந்த வாகன ஓட்டுநரிடம் விசயத்தைக் கூற… அவரும் சம்மதித்தார்.

 

“அவர் ஓகே சொல்லிட்டார். காரிலேறு ஏஞ்சல்…” என்று கூறியபடி அவன் கார் கதவை திறக்க… ராணி போல் கம்பீரமாய்க் காரிலேறி அமர்ந்தவளை கண்டு அவனது புன்னகை விரிந்தது.

 

“நானும் உன்னுடன் வரலாமா?” கெஞ்சும் குரலில் விழிகளைச் சுருக்கியபடி கேட்டவனைக் கண்டு அவள் புன்னகையுடன் உள்ளே வருமாறு கையசைத்தாள். ஹர்ஷாவும் ஏறியதும் கார் புறப்பட்டது.

 

“ஹப்பாடி இப்போ தான் நிம்மதியா இருக்கு.” என்ற ஷிவாரிகாவை கண்டு ஹர்ஷா மர்மமாய்ப் புன்னகைத்தான்.

 

புள்ளி மானை வேட்டையாட நினைக்கும் வேடனின் புன்னகை அது என்பதை அவள் அறியவில்லை. மான் தானாகச் சென்று வேடுவனின் வலையில் வீழ்ந்தே போனது, அந்தோ பரிதாபம்…!!!

 

தொடரும்…!!!

16 Comments

 1. Nice update 👍. Harsha Enna poran? Waitinggggg for next UD.. Anga prashu hamsi love silentah poitu irukku… Innoru pakkam kathir and Divi…

  Geetha Ravichandran
 2. Super Super Super mam… Semma semma episode…. கணக்கு சரி panni koduthutaan ah prishaan…. அவல kintal panrathu avala வம்பு panrathu kuda theriyala avaluku… அவல வரணும் nu ஏன் இவன் ethir paakuraan nu தான் puriyala… Iva thaane avan பின்னாடியே சுத்திகிட்டு இருந்தா purpose பண்ணா…. Divya yum.. Kathir vel kitayum oonum munertram onnum illa…ippothaki friendly ah பழக ஆரம்பிச்சி இருக்காங்க…. Avanga பாட்டி vanthu இருகாங்க la… Avanga வீடு la எல்லாருமே avanga rendu perukum கல்யாணம் panni vekkanum nu nenaikiraanga… Hamsa அம்மா sollave sollitaanga avan kita… Ava வாழ்க்கை ah avan paathukuven சொன்னது vera arathathula… But Hamsa vera maari purinjikita… இங்க shivashariga photos எடுக்கிறேன் nu romba thuram vanthutaa போல Harsha yum பின்னாடியே வந்து இருகான் வழி தெரியாமல் vera இடம் vanthutaanga… Car la poraangale எங்க போறாங்க nu. Theriyala… அவன் ஏன் ஒரு maargamaa சிரிக்கிறான்… எங்க kutikitu போக poraan avala… Super Super Super mam.. Eagerly waiting for next episode

 3. Intha settap fulla thalaithutha irukkumo atha antha marma punnakai ku arthama akka prashi baby so sweet chella kutty evlo naal kazhichi unna pakkurom samma keep rocking akka love you waiting for next ud

 4. Super ud mam……

  Priyasaravanan
 5. இனிய தோழி

  மிரட்டும் வாழ்வில்
  விரட்டும் காதல்…!
  புரட்டும் தாழ்வில்
  திரட்டும் மோதல்…!

  மனம் கொண்ட காதலுக்கு
  மறுமணம் விடையாக…
  மறுகும் நெஞ்சம்
  மறுதலிப்பதேனோ…?

  சினம் கொண்ட காதலுக்கு
  சிக்கல்கள் விடையாக…
  சிதறும் நெஞ்சம்
  சிறுமைப்பட்டதேனோ…?

  இனம் கொண்ட காதலுக்கு
  இறுக்கங்கள் விடையாக…
  இடறும் நெஞ்சம்
  இயங்க மறுத்த தேனோ…?

  தெரியாத மோதலில்
  புரியாத காதலில்
  அறியாத மனங்களும்
  ஆடுகின்றதேனோ….?

  நிலவொடு பேசும் மழையில்
  நிற்காத நிமிடங்கள்
  நிர்மூலமன்றோ….?

  வாழ்த்துக்கள் தோழி நன்றி

  5
  செல்வி சிவானந்தம்
 6. ஆஹா ஹர்ஷா டார்லிங் பிளான் பண்ணிட்டான்😃😃❤️❤️❤️….

  1
 7. ஸ்ரீ மா.. welcome back. அசத்திட்டீங்க.
  ப்ரஷன் ஹம்ஸா கதிர்வேலு திவி.. வச்சு ஒரு பக்கம் கபடி ஆடினா.. இந்தப் பக்கம்.. இந்த ஹர்ஷா.. ஷிவாரிகாவ ப்ளான் பண்ணி தூக்கிட்டுப் போறான்.. அவ்ளோ எளிதா சிக்குபவளா அவள்?? அவன் வேணா புலியா இருக்கட்டும்.. இவள் மானா.. பெண்புலியான்னு தெரியாம கொண்டு போறானோ.. ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ஸ்ரீ மா❤💓❤💓❤

  தாமரை
 8. Shivu pathi theriyama avanoda mahalta vilayaatu katran Harshi..

 9. evvalavu naaluiku piragu ungal kadai superb mam romba romba santhoshamaha irukku prashan divya kathirvelai ninaithu kuruvathai thavaraaga ninaithu varutthapadukiraal hamsi ayyo inthu enna shivarika thaanaha senru harshavidam senru maatikkolkiraal enkireerkale arumai mam very nice ud(viji)

 10. Srima athu harshu darling yerpaadu panna cara. Prashu pavam yen ava avanai thappave purinchukura. Waitingg for next update srima.

 11. Nice….
  indhe harsa shivarika ve
  plan panni
  kadethitu
  porano?????😌😌😌
  hamsi pavem…..

 12. ஹாய் ஸ்ரீகா…

  பிரமாதம்👌👌👌👌👌👌…. ப்ரஸு,ஹம்ச,கதிர்,திவி , ஹர்ஷா,ஷிவரிக இப்படி எல்லரையும் கூட்டிகிட்டு வந்ததுக்கு தேங்க்ஸ்….

  ப்ரஷன் , அவளோட விழி மொழியை சரியா படிக்கிறான், புரிஞ்சிக்குறான்… பட் நீ ஏன்மா சோதப்புற…

  கதிர் பார்த்துக்கிட்டே இருந்த எப்படி… முதல்ல தான் கோட்டை விட்ட , இப்பவது சீக்கரம் திவிக்கிட்ட பேச முயற்சி பண்ணு…

  ஹர்ஷா…. உனக்கு கட்டம் சரி இல்லைனு நினைக்குறேன்…. ஷிவாவோட அம்மாவே அப்படினா… அவங்க பொண்ணு எப்படி இருக்கும்னு கொஞ்சம் யோசிக்கணும்…

  இங்கே வேடன் மானை வேட்டையாடுவன…. அல்லது மான் வேடனை வேட்டையாடுமா…. ????????

  தனசுதா
 13. பெண்கள் வாழ்க்கையில் எப்பவும் ஆண்களால் பிரச்சனை தான்
  அருமையான பதிவு

 14. Nice episode sago avala enga kootitu poraan

 15. Prassha nee nadathu raja…Achacho Harsha pathi therindhum ippadi maatindutiye Shivarika baby…

 16. Next Episode 8 pls published

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *