“மாயமான்” – 1 17

அத்தியாயம் : 1

 

பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த செல்வாவின் முகத்தில் குளிர்ந்த காற்று படிந்து அவனது முகத்தில் மந்தகாச புன்னகையைத் தோற்றுவித்தது. மேற்கு தொடர்ச்சி மலையின் குளுமை அங்கு வீசும் காற்றிலும் விரவி பரவியிருந்தது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் மலையூர் கிராமத்தை ஒட்டியுள்ள காடுகளைப் பாதுகாக்கும் வன அதிகாரியாகப் பணிபுரியத்தான் செல்வா தனது தாய் சுபத்ராவுடன் பயணித்துக் கொண்டிருந்தான். தந்தை திருவேங்கடம் சிறுவயதில் இறந்துவிட்டார். ஒரே ஒரு தம்பி, பெயர் மணிமாறன். அவனுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணமானது. அவன் மனைவியுடன் சென்னையில் வசிக்கின்றான். செல்வாவிற்கு மட்டும் இன்னும் திருமணமாகவில்லை. அது அவனது தாயிற்குப் பெரும் குறையே. பின்னே முப்பது வயதாகியும் செல்வா திருமணம் ஆகாமல் இருந்தால் அவருக்கு வருத்தம் இருக்கத்தானே செய்யும்.

 

“டேய் செல்வா…” சுபத்ரா மகனது காதை கடித்தார்.

 

“என்னம்மா?” அவன் புன்னகையுடன் திரும்பினான்.

 

“இப்போ போகிற ஊரில் தான் எனக்கான மருமகள் இருக்கிறாள்ன்னு எனக்குத் தோணுது. உனக்கு ஏதும் அப்படித் தோணுதா?” அவர் மகனுக்குத் தூண்டில் போட்டு பார்த்தார்.

 

அவரது எண்ணம் போகும் திசை அறிந்து அவனுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் அதைக் காட்டி கொள்ளாதவாறு முகத்தை இறுக்கமாய் வைத்து கொண்டவன்,

 

“எனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகிருச்சும்மா.” என்றான் விரைப்பான குரலில்…

 

“டேய் என்னடா சொல்ற?” சுபத்ரா அதிர்ச்சியுடன் நெஞ்சில் கை வைத்தார்.

 

“உண்மையைத் தான்ம்மா சொல்றேன்.”

 

“ஐயோ, அருமை, பெருமையா சோறூட்டி, தாலாட்டி தூங்காம கண் முழிச்சு வளர்த்தேனே. அது இந்த வார்த்தையைக் கேட்கத்தானா?” அவர் கண்ணீரும் கம்பலையுமாய்ப் புலம்ப… பேருந்தில் அமர்ந்திருந்தவர்கள் அவரைப் பரிதாபமாய்ப் பார்த்தனர்.

 

“ம்மா…” என்று அவரை அடக்கியவன்,

 

“என்னோட வேலையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னேன்ம்மா… அதுக்குன்னு இப்படியா ஒப்பாரி வைப்பீங்க?” என்று அவரைச் செல்லமாய்க் கடிந்தான்.

 

“வேலையவா…” என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட சுபத்ராவிடம் செல்வா தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினான். அதை வாங்கிக் குடித்தவர் திடுமென,

 

“செல்வா, செல்வா…” என்று அலற…

 

“ப்ச், என்னம்மா…?” அவன் சலிப்புடன் வினவ…

 

“அங்கே பாருடா உன்னோட குழந்தைகளை…” என்று சுபத்ரா வெளிப்புறம் கையைக் காட்டினார்.

 

“குழந்தைகளா?” என்று குழம்பியபடி அவர் காட்டிய திசையில் பார்த்தவன் அடுத்த நொடி கொலை கண்டானான்.

 

“ம்மா…” பேருந்து என்றும் பாராமல் அவன் கோபமாய் உச்சஸ்தானியில் கத்தினான்.

 

“ரொம்ப அழகாயிருக்குல்ல…” என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தவரை முறைத்து பார்த்தவன்,

 

“குரங்குகள் என்னுடைய குழந்தைகளா?” என்று கடுமையுடன் கேட்டான்.

 

“பாருடா, பெறாத குழந்தைகள் மேலிருக்கிற பாசத்தை…” அவர் மகனை கிண்டலடிக்க…

 

“ம்மா…” அவன் பல்லை கடித்தான்.

 

“பின்னே என்னடா? காட்டைக் கல்யாணம் பண்ணிக்கிட்டவனோட குழந்தைகள் அந்தக் காட்டோட விலங்குகள் தானே. உன்னைப் புள்ளையா பெத்த பாவத்துக்கு அந்தக் குரங்குகளை என் பேரப்புள்ளையா ஏத்துக்கிட்டேன்.” என்று அவர் வராத கண்ணீரை புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டார். தாயின் அலும்பில் அவனது கோபம் மறைந்து அவனுள் சிரிப்பு தோன்றியது.

 

“ம்மா, நானாம்மா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றேன். எனக்கு ஏனோ கல்யாணத்தில் விருப்பம் இல்லை.”

 

“அப்போ சாமியாரா போகப் போறியா செல்வா…?” அறியாமையுடன் கேட்ட தாயை அணைத்து கொண்டவன்,

 

“அவ்வளவு சீக்கிரம் என் தொல்லையில் இருந்து தப்பிச்சிடலாம்ன்னு கனவு காணாதீங்க மிஸஸ். திருவேங்கடம். நான் உங்க கூடவே இருந்து உங்க ஆயுசு முழுமைக்கும் தொல்லை பண்ணுவேன்.”

 

“கல்யாணம் பண்ணிட்டு தொல்லை பண்ணு தானேன்னு சொல்றேன்.” அவர் சிறு முகத்திருப்பலுடன் கூற…

 

“பார்க்கலாம்…” என்று அவன் பிடி கொடுக்காமல் கூற… அதுவே அந்தத் தாயிற்குப் போதுமானதாய் இருந்தது.

 

மலையூர் கிராமத்தில் பேருந்து நின்றதும் அம்மா, மகன் இருவரும் இறங்கினர். இருவரும் அவர்களது உடைமைகளைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரவில்லை. வீட்டிற்குத் தேவையானவற்றை இங்கேயே வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தனர். செல்வா தோளில் ஒரு பையை மாட்டி கொண்டு, இரு கைகளிலும் இரு பெட்டிகளைத் தூக்கி கொண்டான்.

 

“என் கிட்ட ஒரு பெட்டியை கொடு செல்வா.” சுபத்ரா கேட்க…

 

“இருக்கட்டும்மா…” என்றவன் கடைவீதியை நோட்டமிட ஆரம்பித்தான்.

 

அங்கு ஆட்டோ, ரிக்சா எனப்படும் முச்சக்கர வாகனம் எதுவும் இல்லை. மாறாக மாட்டு வண்டி, குதிரை வண்டி நின்றிருந்தது.

 

“ஆச்சரியமா இருக்கு… ஒரு ஆட்டோ கூடக் கிடையாதா?” என்று அவன் வியப்பாய்ப் பார்த்திருந்தான்.

 

“இன்னமும் பழமை மாறாம அப்படியே இருக்குடா…” என்ற சுபத்ராவின் விழிகளில் வியப்பு இல்லை. மாறாக ரசிப்பு தன்மையே நிறைந்திருந்தது.

 

“நீங்க இந்த ஊருக்கு வந்திருக்கிறீங்களா?” மகன் கேட்டதும் அவர் உள்ளுக்குள் திடுக்கிட்டாலும் வெளியில் எதையும் காட்டி கொள்ளவில்லை.

 

“அதான் பார்த்தாலே தெரியுதே.” என்று அவர் சமாளிக்க… மகனும் அதை உண்மை என்றே நம்பி விட்டான்.

 

செல்வாவிற்கு இந்த ஊருக்கு மாற்றல் வந்திருக்கிறது என்ற போது வராத சஞ்சலம், அவனுடன் இங்கு வருவதற்காகப் பேருந்தில் பயணித்த போது வராத சஞ்சலம்… இப்போது அவரது மனதினை ஆக்கிரமித்துக் கொண்டது. ஏதோ விபரீதம் நடக்கப் போவதாய் அவரது உள்மனம் எச்சரித்தது. அது ஏனென்று அவருக்குத் தெரியவில்லை. எல்லாம் தெரிந்த திருவேங்கடம் இப்போது உயிரோடு இல்லை.

 

“ஐயா…” அங்கு நின்று கொண்டிருந்த குதிரை வண்டியினுள் சுகமாய் உறங்கி கொண்டிருந்த பெரியவரை கண்டு செல்வா உரக்க அழைக்க… அவனது குரலில் உறக்கத்தில் இருந்து விழித்தவர் அவனைக் கண்டதும்,

 

“பேய், பேய்…” என்று அலற துவங்கினார்.

 

“ஐயா, நான் பேய் இல்லை… மனுசன் தான்…” என்று அவன் அவரைச் சமாதானப்படுத்த… அவரோ தனது வண்டியை விட்டு இறங்கி அவனைத் திரும்பி பார்த்தபடி தலை தெறிக்க ஓடினார்.

 

“இவருக்கு என்னாச்சும்மா…?” செல்வா புரியாமல் விழித்து நிற்க… சுபத்ராவோ மகனை மேலும் கீழும் ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

“ம்மா, இப்போ உங்களுக்கு என்னாச்சு?”

 

“போயும், போயும் உன்னைப் பார்த்து ஒருத்தர் பயப்படுறாரே…” என்று சொல்லும் முன் சுபத்ராவிற்குச் சிரிப்பு வெடித்தது. செல்வா அன்னையை முறைத்தான்.

 

“சார், சார்…” என்று மூச்சிரைக்க ஓடி வந்தான் ஒருவன்.

 

“நீங்க…?” செல்வா அவனைக் கேள்வியாய் பார்க்கவும்,

 

“நான் ஃபாரஸ்ட் வாட்ச்சர்… என் பெயர் முத்து சார். நீங்க இங்கே வர்ற விசயம் இப்போ தான் எனக்குத் தெரிய வந்தது. உடனே ஜீப்பை எடுத்துட்டு ஓடி வந்துட்டேன்.” என்ற முத்து செல்வாவின் கைகளில் இருந்த பெட்டிகளை வாங்கிக் கொண்டான்.

 

ஜீப்பில் உடைமைகளைப் போட்டு விட்டு, அன்னை சுபத்ரா ஏறுவதற்கு உதவி புரிந்த செல்வா பின்பு தானும் ஜீப்பின் முன்பகுதியில் ஏறியமர்ந்தான். அதிக நடமாட்டம் இல்லாத ஊரை அவனது விழிகள் வியப்புடன் பார்த்தபடி வந்தது.

 

“இங்கே எல்லாம் இப்படித்தான் சார்… மக்கள் நேரத்தோட வீட்டுக்குள்ள போய் அடைஞ்சுக்காவங்க.”

 

“அப்போ வேலைக்குப் போறவங்க, படிக்கிற புள்ளைங்க…?” செல்வா கேள்வியாய் நிறுத்தினான்.

 

“இங்கே இருக்கிறவங்க யாரும் வெளியூருக்கு வேலைக்குப் போறது இல்லை. அதே போல் புள்ளைங்க படிக்கப் போறதும் இல்லை.”

 

“குழந்தைங்க படிக்காம என்ன பண்றாங்க?” அவன் திகைப்புடன் கேட்டான்.

 

“பள்ளிக்கூடம் இருந்தா தானே படிக்கப் போறதுக்கு… இருந்த ஒரே பள்ளிக்கூடமும் வாத்தியார் யாரும் வராததால் இழுத்து மூடிட்டாங்க. அப்புறம் எங்குட்டு இருந்து புள்ளைங்க படிக்க… அப்படிப் படிக்கப் போகணும்ன்னா இங்கிருந்து இருபது கிலோமீட்டர் தள்ளி போய்ப் படிச்சிட்டு வரணும். அது ரொம்பவே சிரமம்.” முத்து சொல்ல சொல்ல மலைவாழ் மக்களின் கஷ்டம் செல்வாவிற்குப் புரிந்தது.

 

அரை மணி நேர பயணத் தொலைவில் செல்வாவிற்கு ஒதுக்கப்பட்டு இருந்த வீடு வந்துவிட்டது. சுற்றிலும் எந்த வீடும் இல்லை. நடுக் காட்டில் தனியே இருந்தது அந்த வீடு. அதைக் கண்டதும் சுபத்ராவிற்குப் பயம் பிடித்துக் கொண்டது.

 

“தனியா இந்த வீட்டில் இருக்கணுமா?” அவர் கேட்டதைக் கண்டு சிரித்த முத்து,

 

“பயப்படாதீங்கம்மா… என்னோட வீடு கூப்பிடும் தூரத்தில் தான். ஏதாவது ஒண்ணுன்னா நான் ஓடி வந்துர மாட்டேன். அது போக உங்களுக்கு வீட்டு வேலை செய்ய, பேச்சு துணைக்கு மைனாவை வர சொல்லி இருக்கேன்.”

 

“மைனா எப்படி வேலை செய்யும்? என் கூட எப்படிப் பேசும்?” சுபத்ரா அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்க…

 

“ஹா ஹா… அம்மாவுக்கு எப்பவும் குறும்பு தான் போலிருக்கு.” முத்து வாய்விட்டுச் சிரித்தான். செல்வா அடக்கப்பட்ட கோபத்துடன் அம்மாவை பார்த்தான்.

 

“மைனான்னு நான் சொன்னது மலைவாழ் இன பெண்ணை…”

 

“ஓ… அப்படியா? அப்போ சரி…” என்றவர் மகனது கோப பார்வைக்கு அஞ்சி முன்னே சென்றுவிட்டார்.

 

சிறிய வரவேற்பறை, முற்றம், அதன் ஒரு புறம் படுக்கை அறை, மறுபுறம் சமையலறை என வீடு சிறியதாக இருந்தாலும் கச்சிதமாக இருந்தது. சுபத்ராவிற்கு வீடு மிகவும் பிடித்துப் போயிற்று.

 

“நல்ல காற்றோட்டமா இருக்கு செல்வா…” என்றார் முகம் மலர… அவரது மகிழ்ச்சி அவனையும் தொற்றிக் கொண்டது.

 

“உங்களுக்குத் தேவையான சாப்பாட்டைக் கொடுத்து விடறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் கிளம்பறேன் சார்.” முத்துக் கிளம்பத் துவங்கினான்.

 

“முத்து, வெயிட்…” என்றவன் முத்து அருகில் வந்து,

 

“வீட்டுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கணும். எங்கே வாங்கலாம்?” என்று கேட்க…

 

“இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை… பக்கத்து ஊரில் இன்னைக்குச் சந்தை நாள் தான். சந்தைக்குப் போய் வாங்கிட்டு வந்திரலாம்.”

 

“சரி…” என்று அவன் கூறவும் முத்து விடைபெற்றுக் கொண்டு வெளியேறினான்.

 

“செல்வா நான் கொஞ்ச நேரம் படுக்கிறேன்டா…” என்ற சுபத்ரா அறையில் இருந்த கயிற்றுக் கட்டிலில் படுக்க ஆயத்தமாக…

 

“கொஞ்சம் இருங்கம்மா…” என்றவன் பெட்டியில் இருந்து அவசரத்திற்கு என்று கொண்டு வந்திருந்த போர்வையைக் கட்டிலில் விரித்து, ஆயத்த தலையணையை எடுத்து காற்றடைத்து வைத்தவன்,

 

“இப்போ படுங்க…” என்க…

 

“இதை எல்லாம் எப்போடா எடுத்து வச்ச…?” என்று வியந்து கேட்டபடி படுத்தார் சுபத்ரா.

 

“இதெல்லாம் எப்போதும் என் கூடவே இருக்கும்.” என்றவன் அவரைத் தூங்க சொல்லிவிட்டு வெளியில் வந்தான்.

 

சுற்றிலும் அடர்ந்த மரங்கள் இருப்பதால் அந்த இடமே குளுமையாக இருந்தது. மண்ணின் ஈரப்பதம், இலைதழைகளின் மணம், பூக்களின் வாசம் எல்லாம் கலந்து ஒருவித சுகந்தமான வாசனையைப் பரப்பியது. மூச்சை நன்றாக இழுத்து ஆழ மூச்செடுத்தவன் மனம் மயங்கி விழி மூடி நின்றான்.

 

“வந்துட்டியா செல்லா… நான் உனக்காகத் தான் இத்தனை வருசம் காத்திருந்தேன்.” ஒரு பெண்ணின் கண்ணீர் குரல் அவனது செவியைத் தீண்ட அவன் திடுக்கிட்டு போய் விழி திறந்தான். அவன் எதிரில் யாரும் இல்லை. அந்தக் குரல் அவனது மனதினை போட்டு பிசைய… அவனது விழிகள் சுற்றுபுறத்தை அவசரமாய் அலசியது. ஆனால் அங்கு யாரும் இல்லை.

 

‘அப்போ நான் கேட்ட குரல் பிரம்மையா?’ அவன் தனக்குள் குழம்பியபடி நின்றிருந்தான். அப்போது யாரோ சறகுகளை மிதித்துக் கொண்டு ஓடும் சத்தமும், அதைத் தொடர்ந்து சலங்கை ஒலியும் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி ஓடியவனின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அடர்ந்த மரங்களே காட்சி அளித்தது. செல்வாவிற்குப் பயத்தில் வியர்க்க துவங்கியது.

 

வனம் அவனது வாழ்க்கையோடு ஒன்றிய ஒன்றாக இருந்த போதும் இந்த அனுபவம் அவனுக்குப் புதிது. பிரம்மை என்று ஒதுக்க முடியாத, அதே நேரம் உண்மை என்று நம்பவும் முடியாத அனுபவம் இது… அந்தப் பெண்ணின் அழுகுரல் அவனை மிகவும் இம்சித்தது.

 

‘உனக்கு என்ன சோகம் பெண்ணே!’ அவன் மானசீகமாகத் தனக்குள் கேட்டுக் கொண்டான்.

 

அதை அந்த அரூப உருவத்தில் இருக்கும் பெண் உணர்ந்தாளோ என்னவோ…! அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதுவே அவளது சோகத்தைச் சொல்லாமல் சொல்லியது.

 

‘என் சோகம் உன்னால் மட்டுமே போக்க கூடியது செல்லா. நான் இத்தனை காலம் காத்திருந்தது உனக்காகத் தான்… நான் நினைத்தது போல் எனது எண்ணத்தின் சக்தி உன்னை இங்கு இழுத்து வந்து விட்டது. இனி எனக்குக் கவலை. எனது கண்ணீருக்கும் வேலை இல்லை.’ என்றபடி கண்ணீரை துடைத்து கொண்டாள் அந்த வனத்தின் ராணி.

 

“சார்…” என்றழைத்தது ஒரு பெண்ணின் குரல்…

 

“யாரது…?” என்றபடி அவன் திரும்ப…

 

“ஐயா… நீங்களா…?” என்றபடி அதிர்ந்து போனாள் அந்தப் பெண்…

 

மலைசாதி பெண்ணுக்குரிய லட்சணங்களுடன் அவள் நின்றிருந்தாள். நடுத்தர வயது இருக்கும்… பருத்தி துணி இரவிக்கையும், பாவாடையையும் அணிந்து அதற்கு மேல் புடவை போன்ற ஒன்றை சுற்றி தலையை முக்காடிட்டு இருந்தாள். விழிகளில் மை பூசி, நெற்றியில் இரத்த சிவப்பில் பெரிய பொட்டு வைத்து, கழுத்துக் காதுகளில் வெள்ளியாலான பெரிய அணிகலன்கள் அணிந்து, கால்களில் பெரிய சலங்கை வைத்த கொலுசு அணிந்திருந்தாள்.

 

‘ஒருவேளை இந்தப் பெண்மணி தான் நம்மைப் பயமுறுத்தியதோ?’ செல்வா சந்தேகமாக அந்தப் பெண்மணியைப் பார்த்தான். அவளோ அவனைக் கண்டு பயத்தில் நடுநடுங்கி கொண்டிருந்தாள்.

 

“ஐயா, சாமி… நீங்க எப்படிய்யா இங்கே?”

 

“நான் தான் புதுசா வந்திருக்கும் ஃபாரஸ்ட் ஆபிசர்.” என்று அவன் மிடுக்குடன் கூற…

 

“அது எப்படிச் சாமி?” அவள் அதிர்ச்சியும், திகைப்புமாய்க் கேட்க…

 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னே என்னைப் பயமுறுத்தியது நீ தானா?” அவன் மிரட்டலாய் கேட்டான்.

 

“நானா?” மீண்டும் அவள் திகைக்க…

 

“வந்துட்டியா செல்வா (செல்லா என்ற பெயர் அவனது காதுகளில் செல்வா என்று விழுந்திருக்கிறது). நான் உனக்காகத் தான் இத்தனை வருசம் காத்திருந்தேன்னு சொன்னது நீ தானே? உனக்கு எப்படி என் பெயர் தெரியும்? முத்து சொன்னானா? எவ்வளவு தைரியம் இருந்தால் என் பெயரை சொல்லி கூப்பிடுவ?” என்று அவன் மீண்டும் மிரட்ட துவங்க…

 

அந்தப் பெண்மணி அவனைக் கண்ணீரும், சந்தோசமாய்ப் பார்த்தபடி, “செல்லி…” என்று தனக்குள் முணுமுணுத்து கொண்டாள்.

 

“ஆங், என்ன சொன்ன?”

 

“நீங்க எதுக்குய்யா இங்க வந்தீக? உங்களைப் பார்த்தா உயிரோடு கொன்னு புதைச்சிருவாங்களே.” என்றவளின் விழிகள் சுற்றும் முற்றும் பயத்துடன் பார்த்தது.

 

“என்னைய கொன்னு புதைச்சிருவாங்களா? ஹா ஹா…” என்று அவன் வாய்விட்டுச் சிரித்தான். அவனது பலத்த சிரிப்பொலி அமைதியான கானகத்தில் அதிபயங்கரமாய் எதிரொலித்தது. அந்தப் பெண்மணி அவனை இறைஞ்சுதலுடன் பார்த்திருந்தாள்.

 

“ஏன்டா தூங்கிட்டு இருக்கிறவளை இப்படிச் சிரிச்சு பயமுறுத்துற…?” என்று கேட்டபடி அங்கு வந்தார் சுபத்ரா.

 

“இந்த லேடி என்னைப் பார்த்து ஜோக் அடிச்சாங்க… அதான் சிரிச்சேன்.”

 

“என்னடா ஜோக்கு? எனக்கும் கொஞ்சம் சொல்லேன்.” சுபத்ரா மகனை கண்டு கேட்க… செல்வா அந்தப் பெண்மணி கூறியதை கூற… அதைக் கேட்டு சுபத்ராவின் முகம் வெளிறிப் போனது. அவரது பார்வை அந்தப் பெண்மணியைப் பயத்துடன் பார்த்தது.

 

“யார் நீ?”

 

“என் பெயரு மைனாங்க…” என்று அவள் கூற… அந்த ரணகளத்திலும் சுபத்ராவின் இதழ்களில் புன்னகை தோன்றியது.

 

“ஆஹா… மைனா அருமையான பெயர்.” என்று அவர் சிலாகிக்க…

 

“அம்மா…” என்று மகன் பல்லை கடித்தான்.

 

“நீங்க ஐயாவோட அம்மாவா?” மைனா சுபத்ராவை குழப்பத்துடன் பார்த்தாள்.

 

“ஏன்? என்னைப் பார்த்தா அம்மா மாதிரி தெரியலையா?” உள்ளுக்குள் கலங்கினாலும் வெளியில் கெத்தாகக் கேட்டார் சுபத்ரா.

 

“அச்சோ அப்படி இல்லைங்கம்மா. சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்.”

 

“பேச்சுக்கு கூட இப்படிப்பட்ட சந்தேகம் உனக்கு வர கூடாது. இவங்க என்னைப் பெத்த அம்மா.” என்று செல்வா கூற… சுபத்ரா நிம்மதியுடன் மகனை பார்த்தார்.

 

“ஆமா, நீ எதுக்கு இங்கே வந்த…?” செல்வா மைனாவை பார்த்து கேட்க…

 

“முத்து சார் சாப்பாடு கொடுத்துட்டு அப்படியே அம்மாவுக்கு ஒத்தாசையா இருக்கச் சொன்னாருங்க…”

 

“முத்து அனுப்பிய ஆளா…? வா, வா…” என்று சுபத்ரா அவளை அழைத்துச் செல்ல…

 

செல்வா மட்டும் தனித்து நின்றான். அவன் மனம் மட்டும் பெரும் குழப்பத்தில் இருந்தது. அந்தக் குரல் அவனை விட்டு அகல மறுத்தது. அந்தக் குரலில் இருந்த பரிவு, ஏக்கம், அன்பு எல்லாம் அவனை ஏதோ செய்தது. யாரது? அவன் தனக்குள் யோசித்தபடி நின்றிருந்தான்.

 

“செல்வா, சாப்பிட வாடா…” சுபத்ராவின் குரல் உரத்து ஒலித்தது.

 

“இதோம்மா…” என்றவன் வீட்டை நோக்கி நடந்தான்.

 

தொடரும்…!!!

 

 

 

17 Comments

 1. Super mam nice starting

 2. Nice ud mam. Thrilling

 3. aaramame amakkalamaha irukkirathu suspense super yean anaivarum selvavai paarthu athirchi adaikiraarkal arumai very nice ud mam(viji)

 4. Arumaiyaana aarambam adutha pathivai aarvathodu ethirpaarkirom👍👌👏

 5. Wow super mam…

 6. Mam super book kudaikuma? I can’t wait to read

 7. samma epi akka but love subra aunty sammaiya kalaikkuranga vera leval antha arupam tha selli ah samma ka waiting for next ud love you akka

 8. Sister ,unga story edhum illama I felt bad, thank u for posting,super and kalakunga

 9. Superb mam. Thrillinga irukku👌👌

  Rajalakshmi venkatesan
 10. Sema Mam…
  Lots of suspens irukum Pola story la eagerly waiting for your next update mam.

 11. அருமையான தொடக்கம்
  இவனப்போல யாரோ ஒருவர்
  அங்க இருந்து இருக்கலாம்

 12. Super ud mam

 13. wow…startinge adhirudhu Sri…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *