“விழியில் விழுந்து இதயம் நுழைந்து” – 29 & 30 2

விழியில் விழுந்து…இதயம் நுழைந்து.

அத்தியாயம்:29.

 

ஷர்மிளா அஷானிக்கு பள்ளி விடுமுறை விட்டதும் தன் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள். தன் பெற்றோரின் சஷ்டியப்த பூர்த்தி விழாவின் வேலைகளும் இருந்தபடியால் சீக்கிரமாகவே வந்துவிட்டாள். விலாசினியும் இது தான் சாக்கு என்று தன் அண்ணியுடன் ஒட்டிக் கொண்டு வந்துவிட்டாள்.

 

ஷன்மதிக்கு, சொந்த சகோதரி போல் பழகும் ஷர்மிளாவை மிகவும் பிடித்துப் போயிற்று. ஆனால் கண்ணில் வெறுப்புடன் தன்னைப் பார்க்கும் விலாசினியிடம் அவளால் ஒன்ற முடியவில்லை. ஷர்மிளா தன் அண்ணியிடம் அவர்களின் காதல் கதைகளைக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.

 

‘அண்ணி அண்ணாவை முதல் முதலாகப் பார்க்கும் போதே லவ் வந்துவிட்டதா?. இந்தச் சினிமாவில் எல்லாம் காண்பிக்கிறாங்களே லவ் அட் பர்ஸ்ட் சைட்ன்னு சொல்றாங்களே அது மாதிரியா?.’

 

ஷர்மிளா கேட்ட கேள்விலோ இல்லை அவள் கேட்ட பாவனையிலோ ஷன்மதிக்குச் சிரிப்பு வந்தது. அதை அடக்க முடியாமல் வாய் விட்டு சிரித்துவிட்டாள். அங்குச் சற்று தள்ளி யுவனிடம் பேசிக் கொண்டு இருந்த விஷ்ணு ஷன்மதி சிரிப்புச் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். அரும்பு பற்கள் பளீரிட சிரித்தவளை கண் இமைக்காமல் பார்த்தான். அவன் அறிந்து பார்த்து ஷன்மதி இப்படிச் சிரித்துக் கண்டதில்லை.

 

‘என்ன ஷர்மி உன் அண்ணி சிரிக்கும் படி அப்படி என்னம்மா ஜோக் சொன்ன?.’ கேட்ட விஷ்ணுவிடம்,

 

‘உங்களைப் பார்த்ததும் காதலான்னு கேட்டேன். அதுக்குப் பதில் சொல்லாம அண்ணி சிரிக்கிறாங்க.’

 

‘ம்… அதானா விஷயம். எனக்கு உன் அண்ணியைப் பார்த்ததும் காதல் வந்துவிட்டது. உன் அண்ணிக்குக் கொஞ்சம் லேட்டா தான் வந்து இருக்கும். ஏன்னா அவங்க பர்சனாலிட்டி முன் நாம எல்லாம் எடுபடுவோமா?. அதான் கொஞ்சம் யோசித்து இருப்பா?. என்ன ஷம்மு நான் சொல்றது சரி தானா?.’ விஷ்ணுவின் கேள்வியில் ஒன்றும் கூறாமல் தலையைக் குனிந்து கொண்டாள் ஷன்மதி. ஆனால் ஷர்மிளா அவளை விடவில்லை.

 

‘அண்ணி பார்த்தீங்களா என் அண்ணா ஸ்பீடாக்கும். நீங்க தான் லேட் பிக் அப்.’

 

‘ஏய் ஷர்மி ஷம்மு லேட் பிக் அப் எல்லாம் இல்லை. அவள் ஸ்லோ அண்ட் ஸ்டெடி.’ என்ற விஷ்ணுவை பார்த்த ஷன்மதியின் கண்களின் காதல் நிறைந்து இருந்தது.

 

இதை எல்லாம் கண்டும் காணாமல் பார்த்துக் கொண்டு இருந்த விலாசினிக்கு மனதில் இனம் புரியாத ஏமாற்றம் குடி புகுந்தது.

 

விஷ்ணுவின் கண்களில் வார்த்தையில் இருந்த காதலை பார்த்த யுவன், ‘விஷ்ணு அன்னைக்குப் பார்த்த மாதிரியே அப்படியே இருக்கியே எப்படிடா?.’

 

‘அப்படியேன்னா வாட் டூ யூ மீன் யுவன்?.’

 

‘உன் கண்ணில் அன்னைக்கு ஷன்மதியை பார்த்த பொழுது தெரிந்த காதல் கொஞ்சமும் குறையாமல் அப்படியே இன்னைக்கும் தெரியுது. அது தான் எப்படின்னு கேட்டேன்?.’

 

‘யுவன் அதெல்லாம் இங்கே இருந்து வரணும்டா.’ என்று தன் நெஞ்சை தொட்டுக் காட்டிய விஷ்ணுவை பார்த்து சலித்த யுவன்,

 

‘எங்கே இங்கு இருந்து வர்றதுக்கு.’ என்று தன் நெஞ்சை காண்பித்தவன்,

 

‘என்னோடது அரேன்ஜ்டு மேரேஜ் என்றாலும், திருமணமான புதிதில் என் மனைவியிடம் அதான் உன் தங்கச்சியிடம் காதல் பொங்கி தான் வழிந்தது. ஆனால் இப்ப பாரு எந்த நேரம் என்ன கேள்வி கேப்பா என்ன பதில் சொல்லணும்னு தெரியாமல் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை விடக் கேவலமான ஒரு லைப்டா.’ சலித்துக் கொண்டான் யுவன்.

 

விஷ்ணுவிற்கு யுவன் சொன்னதைக் கேட்டதும் சிரிப்புத்தான் வந்தது. இருந்தாலும் அவன் சொன்னதில் அர்த்தம் இருக்கத் தான் செய்தது.

 

‘யுவன் நான் சொல்றேன்னு கோபித்துக் கொள்ளாதே. திருமணமாகி இத்தனை வருடத்தில் என்றைக்காவது ஒரு நாள் ஷர்மியிடம் “ஐ லவ் யூ” என்று சொல்லி இருக்கிறாயா?.’

 

‘என்ன விஷ்ணு என்னைப் பார்த்து இப்படிக் கேட்டுட்ட. அஷானி பிறப்பதுக்கு முன் எத்தனை தடவை சொல்லி இருக்கேன் தெரியுமா?.’

 

‘அப்ப இப்ப சொல்றது இல்லை.’

 

‘எங்கேடா நேரம். வேலை முடிந்ததும் வீட்டிற்குப் போனா கொஞ்ச நேரம் அஷானியுடன் விளையாடுவது அதற்குப் பின் உணவு தூக்கம்ன்னு வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்குது.’

 

‘யுவன் அங்கே தான் தப்பு பண்ற. கொஞ்ச நேரம் ஷர்மிக்கும் நேரம் செலவிடு. அவளிடம் தினமும் நான் உன்னை நேசிக்கிறேன்னு சொல்ல சொல்லவில்லை. ஆனால் நீ செய்கிற ஒவ்வொரு விசயத்திலும் அவளைக் காதலிக்கிறேன் என்பதைச் சொல்லாமல் சொல்லு. அதுக்கு அப்புறம் பாரு நீ என்ன சொன்னாலும் அவள் மறுத்து பேச மாட்டாள். எல்லோரையும் விட்டு வரும் அவர்கள் நம்மிடம் எதிர் பார்ப்பது அன்பு மட்டும் தான். அதை நீ ஏன் வெளிப்படுத்தத் தயங்குகிறாய்.’ விஷ்ணு சொன்னதில் இருந்த உண்மை யுவனுக்கும் புரிந்தது.

 

‘சரிடா. நீ சொல்றதும் சரியாகத் தான் இருக்கு. இயந்திரமான வாழ்க்கையில் மனமும் இயந்திரமா மாறிவிட்டது. இனி மேல் முயற்சி செய்கிறேன்.’ விஷ்ணு நண்பனுக்கு “ஆல் த பெஸ்ட்” என்பது போல் கட்டை விரலை

தூக்கி காண்பித்தான்.

 

அதன் பின் தன் மனைவி பின்னேயே குட்டி போட்ட பூனை போல் சுற்றினான் யுவன். ம்ஹும்… அதற்கெல்லாம் அசைவாளா ஷர்மிளா?.

 

‘உங்களுக்கு வேற வேலையே இல்லையா?. இப்படிப் பின்னாடியே வந்தா நான் என் வேலைகளை எப்படிச் செய்றது?.’

 

பரிதாபமாகப் பார்த்த நண்பனை தொடர்ந்து முயற்சி செய் என்பது போல் சைகை செய்தான் விஷ்ணு. அதற்கு ஏற்றார் போல் ஷர்மிளா தங்கள் அறையில் யுவனிடம் தனியாக மாட்டிக் கொண்டாள். மாலை வேளையில் அறைக்கு வந்து தலையை வாரி ஒப்பனை செய்து கொண்டு இருந்த ஷர்மிளாவின் பின் புறம் இருந்து கள்வன் போல் அணைத்தான் அந்தக் காதல் கணவன்.

 

‘விடுங்க. என்ன இது நேரங்காலம் தெரியாமல்.’ என்ற ஷர்மிளாவை தன் புறம் திருப்பியவன்,

 

‘இதுக்கு எல்லாம் ஜோசியர் கிட்ட போயா நேரம் பார்க்க முடியும்.’

 

‘ஐயோ அஷானி வரப் போறா?.’

 

‘அவள் ஷரத் கூட விளையாடிட்டு இருக்கா.’ என்றவன், ‘ஷர்மி ஐ லவ் யூடி.’

 

‘என்ன திடீர்ன்னு ஐயாவுக்குப் பாசம் பொங்கி வழியுது?’ ஷர்மிளாவின் வாய்க் கேட்டாலும் குரல் குழைந்து நெளிந்து வந்தது. யுவனுக்கு அவளின் வார்த்தையில் இருந்த குழைவு புரிந்து விட்டது. அவன் கைகள் இன்னும் தைரியமாக முன்னேறியது. ஷர்மிளாவும் ஒன்றும் பேசாமல் கணவனின் இஷ்டத்திற்கு வளைந்து குடுத்தாள். அங்கே மெளனமாகக் காதல் நாடகம் அரேங்கேறியது.

 

இரவு உணவின் போது கண்ணில் மலர்ச்சியும் முகத்தில் புன்னகையுமாக வளைய வந்த மனைவியைப் பார்க்க பார்க்க யுவனுக்குத் தெவிட்டவில்லை. என்றும் இல்லாத அதிசயமாய்க் கணவனின் பார்வைகள் செயல்கள் எல்லாம் புதிதாக இருந்தது ஷர்மிளாவுக்கு. இன்று மட்டும் யுவன் சொன்ன “ஐ லவ் யூ” கணக்கில் அடங்காதது. அதை இப்பொழுது நினைத்தாலும் அவளை அறியாமல் அவள் கன்னம் சூடேறியது.

 

அதைக் கவனித்த யுவனின் மனதும் நிறைந்தது. தன்னிடம் பதிலுக்குப் பதில் வாயாடும் தன் மனைவி இன்று தன்னை ஏறெடுத்து பார்ப்பதற்குக் கூடத் தயங்குவதைப் பார்த்தவனுக்கு,

 

“டேய் விஷ்ணு இதை முதலிலேயே சொல்லி இருக்கக் கூடாதாடா. ச்சே… இவ்வளவு நாள் வேஸ்ட் பண்ணிட்டேனே. இருந்தாலும் பரவாயில்லை. இப்பவாவது புத்தி தெளிய வச்சானே.” மனதில் நண்பனுக்குக் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தாத குறை தான்.

 

இரவு உணவு முடிந்து ஷன்மதி ஷரத்தை உறங்க வைக்கச் சென்றுவிட்டாள். இப்பொழுது எல்லாம் ஷரத் தன்னுடைய அறையிலேயே படுத்து தூங்க பழகிவிட்டான். முதலில் புது இடம் என்பதால் பயந்தவன், நாள் போக்கில் அந்த அறை பழக்கம் வந்தவுடன் அவனின் soft toys யை கட்டிக் கொண்டு படுக்கப் பழகிவிட்டான். அதனால் அவனை அவனின் அறையில் உறங்க வைத்தாள்.

 

விஷ்ணுவோ உறக்கம் வராமல் புத்தகம் படித்துக் கொண்டு இருந்தான். திடீரென்று அவனின் அறைக்குள் நுழைந்த விலாசினி ஷன்மதி அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு விஷ்ணுவின் அருகில் சென்று அமர்ந்தாள்.

 

‘விஷ்ணு என்னை ஏன் ஏமாத்தினீங்க?.உங்களுக்குத் திருமணம் ஆனதை ஏன் என்னிடம் இருந்து மறைச்சீங்க?.’ திடீரென்று ஒலித்த விலாசினியின் குரலில் திடுக்கிட்டு திரும்பிய விஷ்ணு பதறி எழுந்தான்.

 

‘விலாசினி என்னைக்கு உன்னிடம் நான் கல்யாணம் ஆகாதவன்னு சொல்லி இருக்கேன்?. நான் எதுக்கு உன்னை ஏமாத்தணும். நீ என் நண்பனின் தங்கை. எனக்குத் தங்கை மாதிரி. இனி மேல் இந்த மாதிரி முட்டாள்த்தனமா பேசுறதை நிறுத்து.’ விஷ்ணுவின் குரலில் எரிச்சலே மிகுந்து இருந்தது.

 

‘திரும்பத் திரும்ப ஏன் என்னைத் தங்கைன்னு சொல்றீங்க?. நான்…” அதுக்கு மேல் சொல்லி இருப்பாளோ அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விழுந்தது. யார் தன்னை அடித்தது என்று பார்த்த விலாசினியின் முகம் திகைப்பை வெளிப்படுத்தியது.

 

விலாசினியை அடித்தது சாட்சாத் நம்ம யுவனே தான். விஷ்ணுவிடம் அலுவல் விஷயமாகப் பேச வந்தவன் விஷ்ணுவின் அறைக்கதவு லேசாகத் திறந்து இருந்த இடைவெளியில் எல்லாவற்றையும் பார்த்துவிட்டான். யுவன் மட்டும் பார்க்கவில்லை. ஷரத்தை தூங்க வைத்துவிட்டு வந்த ஷன்மதியும் இதைப் பார்த்துவிட்டாள்.

 

‘அண்ணா நான் ஒண்ணும் பண்ணல. விஷ்ணு தான்…’ விலாசினி மேலும் கூறும் முன் திரும்பவும் அவளை அடிக்கக் கை ஓங்கினான்.

 

‘டேய் யுவன் ,சின்னப் பொண்ணைப் போய்க் கை நீட்டி அடிக்கிறீயே?.’ விஷ்ணு பதறி யுவனின் கையைப் பிடித்தான்.

 

‘விடுறா விஷ்ணு இவளை கொன்னா தான் நிம்மதி. ச்சே… எனக்குப் போய் இப்படி ஒரு தங்கச்சியா?. விஷ்ணுவை பத்தி எனக்குத் தெரியாதா என்ன? இந்த ஒன்பது வருசமா அவன் மனசில் ஷன்மதியை நினைத்து அவன் படும் பாடு எனக்கு மட்டும் தான் தெரியும். அவன் கிட்ட போய் என்ன பேசிட்டு இருக்க. உன்னைச் சின்னப் பொண்ணுன்னு நினைத்தது தப்பா போச்சு. சாரிடா விஷ்ணு இவள் இப்படி நடந்து கொள்வாள் என்று சத்தியமா நான் நினைக்கல. ‘ விஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டவன்,

 

‘வா…’ என்று தங்கையைக் கூட்டிக் கொண்டு நடந்தான்.

 

மற்றொரு அறையின் வாயில் ஷன்மதி நிற்பதை கண்டதும் துணுக்குற்றவன், ‘சாரி சிஸ்டர். இவள் நடந்து கொண்டதற்கு விஷ்ணு பொறுப்பு இல்லை. அவனின் மனதில் நீங்கள் மட்டும் தான். அவனைத் தப்பா நினைக்காதீங்க.’ என்றவன் தங்கையுடன் வெளியேறினான்.

 

விஷ்ணுவும் ஷன்மதியை பார்த்து அதிர்ந்து போய்விட்டான். அவள் அருகில் வந்தவன், ‘சாரி ஷம்மு. அவ சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம பேசிட்டா.’ என்றவனை வாயை தன் மென்கரங்களால் மூடியவள் ,

 

‘உங்களை நான் சந்தேகபட்டா அது என்னை நானே சந்தேகப்படற மாதிரி.’ ஷன்மதியின் பதிலில் விஷ்ணுவிற்கு மகிழ்ச்சி ஊற்றெடுத்தது. அவளின் மோவாயை நிமிர்த்தியவன், அவளின் கண்ணோடு தன் பார்வையைக் கலந்தவன்,

 

‘என் மேல் அவ்வளவு நம்பிக்கையா?.’ சொல்லியபடி அவளை அணைத்தவன் ,தன் இதழ் என்னும் தூரிகையால் அவள் முகம் எங்கும் ஓவியம் தீட்டத் துவங்கினான். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ விஷ்ணு தான் தன் உணர்வு வந்து அவளை விடுவித்தான்.

 

‘சாரிடா. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன்.’ என்றவன்,

 

‘குட் நைட்.’ என்று அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டியவன் தூங்க சென்றான். ஷன்மதிக்கு தான் அவன் திடீரென்று விடுவித்தது ஏமாற்றமாக இருந்தது. அவனோடு கலக்க மனம் தவித்தது. உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு படுக்கப் போகும் விஷ்ணுவை கண்டு ஆத்திரமாக வந்தது. அந்தக் கணம் அதற்குக் காரணம் தான் போட்ட வேலி தான் என்பதை அவள் மறந்து போனாள்.

 

ஷன்மதியின் மனம் மாற்றம் அறியாத விஷ்ணு அவள் மனம் மாறும் வரை பொறுக்காமல் தான் செய்த செயலை மனதுக்குள் எண்ணி வருந்தினான். இருவரின் மனமும் நெருங்கி விட்டது என்பதை இருவரும் அறியவில்லை. அதை உணர்த்த யார் வரப் போகிறார்கள்?.

 

விழியில் விழுந்து…இதயம் நுழைந்து.

அத்தியாயம்:30.

 

விலாசினியை தன் அறைக்குக் கூட்டிச் சென்ற யுவனோ திட்டித் தீர்த்து விட்டான். ஒன்றும் புரியாமல் ஷர்மிளா,

 

‘ஏன் அவளைத் திட்டுறீங்க?.’

 

‘அவள் பண்ணி இருக்கும் காரியம் அப்படி.’ என்றவன் நடந்ததைக் கூறினான். ஷர்மிளா ஒரு கணம் துணுக்குற்றாலும் விலாசினியை அவளால் தப்பாக நினைக்க முடியவில்லை. தவறு செய்து விட்டு முழிக்கும் சிறு குழந்தை போல் தான் அவள் கண்ணுக்கு தெரிந்தாள்.

 

‘என்னங்க அவள் தெரியாம பண்ணி இருப்பா?. நாம தான் சொல்லிக் குடுக்கணும்.அதை விட்டு விட்டு திட்டினா எப்படி?’

 

அண்ணியின் வார்த்தையில் விலாசினி கூனிக்குறுகி போய்விட்டாள். அவளுக்குத் தன் கூடப் பிறந்தவனை விட நேற்று வந்த அண்ணி தன் மேல் வைத்து இருக்கும் பாசத்தை எண்ணி அழுதேவிட்டாள். நேரே ஷர்மிளாவிடம் சென்று,

 

‘அண்ணி தெரியாம செய்துவிட்டேன். எனக்கு விஷ்ணு மேல் எந்த விருப்பமும் கிடையாது. ஆனால் என் பிரெண்ட்ஸ் எல்லோரும் சொல்லி சொல்லி தான் நான் என் அறிவை இழந்துட்டேன். இனி மேல் இது போல் நான் செய்ய மாட்டேன்.என்னை மன்னிச்சுருங்க அண்ணி.’

 

‘ஏண்டி உன் பிரெண்ட்ஸ் என்ன சொன்னாலும் செய்வியா?. உனக்கு அறிவில்லை. விஷ்ணு என்கிறதால சரியாப் போச்சு. வேற யாரவது இருந்திருந்தா உன் நிலைமை…’

தங்கையிடம் அந்த வார்த்தைகளைச் சொல்லத் தயக்கப்பட்ட யுவன், ‘கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா?’

 

யுவன் சொன்னதும் அதன் அர்த்தத்தை உணர்ந்த விலாசினி அப்படியே உறைந்து அமர்ந்துவிட்டாள். யுவன் கூறியது போல் அப்படி ஏதாவது நடந்து இருந்தால் நினைக்கவே அவள் உடல் நடுங்கியது. அவள் விஷ்ணுவின் கவனத்தைக் கவர அவனை அணைத்து இருக்கிறாள். ஆனால் அதன் பின்வரும் விளைவுகளைப் பற்றி அவள் யோசிக்கவே இல்லை. அந்த நிலையிலும் தன்னிடம் தன்மையாக நடந்து கொண்ட விஷ்ணுவை நினைக்கும் பொழுது, அவள் மனதில் விஷ்ணு மேல் வைத்து இருக்கும் மரியாதை பன்மடங்கு உயர்ந்தது.

 

‘ஏன் விலாசினி உன் மேல் உயிரையே வைத்து இருக்கும் சுகனின் நினைவு உனக்கு வரவே இல்லையா?’ ஷர்மிளா கேட்டதும்,

 

‘இது என்ன புதுக் கதை?’ என்ற யுவனிடம்,

 

‘எல்லாம் பழைய கதை தான். நீங்கள் தான் அதைக் கவனிக்கவில்லை. சுகன் இங்கு வரும் போது எல்லாம் விலாசினி பார்க்கும் பார்வையில் காதல் தெரியும். அதை ஒரு நாள் நான் கண்டு கொண்டு அவனிடம் கேட்ட பொழுது, விலாசினி படிப்பு முடியட்டும் என்றான். இப்பொழுது தான் விலாசினி படிப்பு முடிந்து விட்டதே. ‘

 

சுகன் வேறு யாரும் இல்லை யுவனின் அத்தை பையன். அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறான். அவன் மனதில் விலாசினி மேல் காதல் இருக்கும் என்பதை யுவனால் நம்ப முடியவில்லை.

 

‘அப்படின்னா நான் போய் மாமா அத்தையிடம் பேசுகிறேன்.’

 

‘கொஞ்சம் இருங்க. விலாசினி என்ன சொல்கிறாள் என்று கேட்போம். விலாசினி உனக்கு விருப்பம்மாம்மா?.’

 

‘இனியும் அவள் கிட்ட என்ன கேட்க வேண்டி இருக்கு. நான் சொல்றேன் சுகன் தான் அவளுக்கு மாப்பிள்ளை.’

 

‘நீங்க சும்மா இருங்க. விலாசினி சுகனை உனக்குப் பிடிக்குமா?. இல்லை வேறு பையன் பார்க்கலாமா?.’ தன் மனதின் விருப்பத்தைக் கேட்டு நடக்கும் அண்ணியைக் கண்டதும் கண்

கலங்கியது விலாசினிக்கு. சுகனை பற்றி அவளுக்குப் பெரியாதாக அபிப்ராயம் இல்லை தான். ஆனால் அவனை வெறுக்கும் அளவுக்கும் இல்லை. எத்தனை திருமணங்கள்

பெற்றோரால் நிச்சியக்கப்பட்டு நடக்கிறது அது போல் எண்ணிக் கொள்ள வேண்டியது தான் என்று மனதில் நினைத்தவள், சரி என்பது போல் தலையை ஆட்டினாள்.

 

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக விலாசினி விஷ்ணுவின் அறைக்குச் சென்று விஷ்ணுவிடம் ஷன்மதியிடமும் மன்னிப்பு கேட்டாள்.

 

‘சாரி விணு . ‘ என்றவள் ஷன்மதியிடம் திரும்பி,

 

‘சாரி அண்ணி அப்படிக் கூப்பிட்டே பழகிவிட்டது. மாற்ற முயற்சிக்கிறேன்.’ ஷன்மதியும் சிரித்துக் கொண்டே,

 

‘உனக்கு எப்படிக் கூப்பிட வருகிறதோ அப்படிக் கூப்பிடு.’

 

‘விணு என்னை மன்னியுங்கள். தெரியாமல் அது மாதிரி நடந்து கொண்டு விட்டேன்.’ என்றவளிடம் விஷ்ணுவால் வெறுப்பைக் காண்பிக்க முடியவில்லை.

 

‘பரவாயில்லை விடும்மா.’ அதற்குள் அங்கு ஷர்மிளாவும் யுவனும் வந்துவிட விலாசினியின் திருமணம் பற்றிப் பேச்சுச் சென்றது.

 

யுவன் சொன்னது போல் தன் பெற்றோரிடம் பேசியவன், மாமா அத்தையிடமும் பேசி சம்மதம் வாங்கிவிட்டான். சுகனிடம் இதைச் சொன்ன போது அவன் அடுத்து ஒரு மாத விடுமுறையில் அங்கு வர இருப்பதைத் தெரிவித்தவன், அப்பொழுதே திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான். யோகேந்திரன் தம்பதியினரின் சஷ்டியப்த பூர்த்தி விழாவிற்கு அடுத்த மூன்றாம் நாள் விலாசினியின் திருமண நாள் குறிக்கப்பட்டது.

 

அடுத்து வந்த நாட்கள் வேகமாகச் சென்றது. விலாசினியின் திருமண வேலைகளும், சஷ்டியப்த வேலைகளும் சேர்ந்ததால் மூச்சு விட நேரம் இல்லை என்று சொல்வார்களே அது போல் நேரம் றெக்கைக் கட்டிக் கொண்டு பறந்தது. விலாசினி ஷர்மிளாவுடனும் ஷன்மதியுடனும் கடைவீதிகளுக்குச் சென்று வரவே நேரம் சரியாக இருந்தது. ஆண்கள்

இருவரும் தங்கள் பங்கிற்கு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தனர்.

 

விஷ்ணுவின் வீடு விழா கோலம் பூண்டு இருந்தது. நெருங்கின உணவினர்கள், நண்பர்கள் மட்டுமே இந்த விழாவிற்கு அழைக்கப் பட்டு இருந்தனர். காலையில் எழுந்து ஷரத்தை குளிக்கச் செய்து கிளப்பி அனுப்பிவிட்ட ஷன்மதி, அதன் பின் தான் தயாராகிக் கண்ணாடியின் முன் ஒப்பனை செய்யும் பொழுது அவள் அருகில் வந்த விஷ்ணு அவளின்

தோள்பட்டையில் தன் முகவாயை பதித்து , கண்ணாடியில் தெரிந்த ஷன்மதியிடம்,

 

‘இந்தச் சாரியில் எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா.’

 

‘எவ்வளவு?. இவ்வளவு இருக்குமா?.’ தன் இரு கைகளையும் விரித்துக் காண்பித்தாள் ஷன்மதி.

 

‘ஏண்டி இதுலேயும் இவ்வளவு கஞ்சுசா இருக்கே.’ என்றவன்,

 

‘ம்… அந்த வானம் மாதிரி சொல்லலாம்.’ அவளின் நீண்ட கூந்தலை எடுத்து ஆட்டியவன்,

 

‘எப்படி ஷம்மு உனக்கு மட்டும் இவ்வளவு நீளமான முடி?.’ மீண்டும் அவள் கூந்தலில் முகம் புதைத்து வாசம் பிடித்தான். அவனின் செய்கைகளில் உள்ளமும் உடலும் ஒன்று சேர மயங்கினாலும் விழாவிற்கு நேரம் ஆனதை உணர்ந்து அவனிடம் இருந்து விலகினாள்.

 

‘நேரமாச்சு விடுங்க.’ ஷன்மதி சொன்னதும் அவளிடம் இருந்து விலகினான்.

 

‘ஷம்மு இன்னைக்கு வர்ற உறவினர்கள் யாராவது தவறா பேசினா மனசில் வச்சுக்காதே. உன் கூடவே நானும் அம்மாவுமிருப்போம் சரியா?.’ ஷன்மதியின் கைகளைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டே கேட்டவனைப் பார்த்ததும்,

 

‘எதுவாக இருந்தாலும் நான் சமாளித்துக் கொள்வேன்.’ என்றவளின் கன்னம் தட்டி, ‘குட் கேர்ள்.’ என்றவன், ஷன்மதியை அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.

 

அதன் பின் வருபவர்களை வரவேற்று உபசரிப்பதில் நேரம் சென்றது. உறவினர்கள் கூட்டம் ஷன்மதியை கண்டு ஆச்சிரியப்பட்டுக் கேள்வி கேட்க தான் செய்தது. கேட்கா விட்டால் அது உறவினர்களே இல்லையே.

 

“கல்யாணம் பண்ணியதே தெரியாது. இதில் ஐந்து வயதில் பையனா? யோகேந்திரன், யசோதாவுக்குக் கூடத் தெரியாதா? என்ன பிள்ளைங்களோ அவசர கோலத்தில் கல்யாணம் பண்ணிக்க வேண்டியது பிறகு ஒத்து வரலைன்னு பிரிந்து விட வேண்டியது. இந்தக் காலத்துக்குப் பிள்ளைங்களுக்கு எல்லா விசயத்திலும் அவசரமும் ,தைரியமும் தான்.” என்று பல கேள்விகள் எழத் தான் செய்தது. அதை எல்லாம் ஷன்மதியை பாதிக்காத வண்ணம் விஷ்ணுவோ யசோதாவோ அவள் அருகில் இருந்து பதில் கூறினர்.

 

‘சின்னப் பிள்ளைங்க அவசரப் பட்டுக் கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அதை ஏன் பெருசா பேசிகிட்டு. இவ்வளவு நாள் பிரிந்தவர்கள் ஒண்ணா சேர்ந்து இருக்காங்க அதுக்காக நாம சந்தோசப்படனும்.’ யசோதா எல்லோரின் வாயையும் அடைத்தார். ஷன்மதி முதலில் இந்த

கேள்வியில் தடுமாறினாலும், பின் புன்னகையுடன் சமாளிக்கத் தொடங்கினாள்.

 

ஷன்மதியின் பொறுமையைச் சோதிப்பதற்காகவே விஷ்ணுவின் அத்தை வந்து சேர்ந்தார். வந்தவர் ஒன்றும் பேசாமல் ஷன்மதியை மேலும் கீழும் அளவெடுத்தார். விஷ்ணு அவர் ஷன்மதி அருகில் இருப்பதைப் பார்த்து, நண்பனிடம் பேசிக் கொண்டு இருந்தவன் அவசரமாக அவர்கள் அருகில் வந்தான்.

 

‘விஷ்ணு இந்த அழகிக்காகத் தான் என் மகளை வேண்டாம் என்றாயா?. நிஷாந்தினியை விட அப்படி என்னடா இவளிடம் இருக்கிறது?.’ அத்தைக் கேட்டது விஷ்ணுவிற்குப் பிடிக்கவில்லை தான், ஆனால் கோபத்தைக் காட்ட இது நல்ல சமயம் இல்லை என்று எண்ணியவன், ஷன்மதியின் தோளில் கையைப் போட்டு அணைத்து,

 

‘நல்லா பார்த்து சொல்லுங்க அத்தை. ஷன்மதிக்கு என்ன குறைச்சல். என் கண்ணுக்கு என் பொண்டாட்டி மட்டும் தான் அழகா தெரிவாள். என் மனதில் ஷன்மதி இருக்கும் போது நான் எப்படி நிஷாவை திருமணம் செய்ய முடியும்.’

 

‘மருமகனே நல்லத்தான் பேசற. ஆமாம்ப்பா உன் பொண்டாட்டியை நான் ஒண்ணும் குறை சொல்லல.’

 

‘சரி அத்தை நிஷா எப்படி இருக்கா. எப்ப லண்டனில் இருந்து இங்கு வருகிறாள்.’

விஷ்ணு பேச்சை மாற்றினான்.

 

‘இன்னும் ரெண்டு நாளில் வந்துவிடுவாள். விலாசினி கல்யாணத்துக்குக் கட்டாயம் வருவாள்.’ மேலும் அத்தையிடம் பேசிவிட்டு ஷன்மதியை அங்கிருந்து நகர்த்தினான்.

ஆனால் ஷன்மதியின் மனமோ அந்த அத்தை சொன்ன நிஷாந்தினியிடமே இருந்தது. அதன் பின் விழா முடிந்து எல்லோரும் சென்ற பின் தான் வீட்டில் இருந்தவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.

 

ஒய்வு எடுக்கத் தங்கள் அறைக்கு மேலே வந்த ஷன்மதி, அங்கு விஷ்ணு ஷரத்துடன் வீடியோ கேம் விளையாடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து அவன் அருகில் சென்று அமர்ந்தாள். அவள் வந்ததை உணர்ந்தவன் திரும்பி பார்த்து புன்னகைத்து விட்டு மீண்டும் விளையாட்டில் ஆழ்ந்தான்.

 

‘பரத்.’ கேமிலிருந்து கண்ணை எடுக்காமல் விஷ்ணு,

 

‘சொல்லும்மா.’

 

‘அந்த நிஷா ரொம்ப அழகா இருப்பாங்களா?.’

 

அவளின் முகத்தை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவன், ‘ம்..அழகா இருப்பா. ஆமாம் அவள் அழகா இருந்தா நமக்கு என்ன?.’ என்றவன் மீண்டும் விளையாட்டில் ஆழ்ந்தான். இந்த முறை விஷ்ணு ஷன்மதியின் முகத்தைப் பார்த்து இருந்தால் அவளின் மனக் கலக்கத்தைக் கண்டு இருப்பான். விஷ்ணுவின் விதி வீடியோ கேம் வடிவில் சதி செய்தது.

2 Comments

  1. Advicd for yuvan…semmma👌👌❣️

    1
  2. athane nisha azhagaha irunthal shanmathiku enna vishnu thaan shanmathymele avvalavu lovo and affection aaga irukkiraane pinbu yean kavalai pada veandum very nice uds mam(mam)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *