“விழியில் விழுந்து இதயம் நுழைந்து” – 23 & 24 10

விழியில் விழுந்து…இதயம் நுழைந்து.

அத்தியாயம்:23.

 

‘ஏண்டா வர மாட்டேங்கிற? வீணா கல்யாணத்துக்கும் நீ வரல. இவ்வளவு நாள் கழிச்சு அவளுக்குக் குழந்தை பிறந்து இருக்கு. அதோட பிறந்த நாளுக்கும் வர மாட்டேங்கிற. அவளுக்கு என்னை விட உன்னிடம் தான் பாசம் அதிகம். உனக்காக அவள் செய்ததெல்லாம் மறந்துட்டீயா?.’ யுவனின் வார்த்தையில் இருந்த உண்மை விஷ்ணுபரத்தை சுட்டது.

 

‘அதெப்படிடா என்னால் மறக்க முடியும். எனக்குத் தமிழ்நாட்டு போகணும்னாலே ஷம்மு ஞாபகம் தான் வருது. நான் என்னடா பண்றது?’ என்று பாவமாகக் கேட்கும் நண்பனை கண்டாலும் யுவனுக்குப் பரிதாபமாகத் தான் இருந்தது. எல்லாவற்றிலும் வெற்றி பெற்று சிறந்து தொழிலதிபனாக விளங்கும் தன்நண்பன் இந்த ஒரு விசயத்தில் மட்டும் சிறு குழந்தை போல் தவிப்பதை பார்த்தவனுக்கு என்ன செய்வது என்று தான் தெரியவில்லை.

 

அன்று ஞாயிறு என்பதால் விஷ்ணு வீட்டில் ஓய்வாக இருந்தான். ஷர்மிளா, யுவன் அஷானியுடன் அம்மா வீட்டிற்கு வந்தாள். அஷானி நேரே தன் மாமாவிடம் சென்று அவன் கழுத்தை கட்டிக் கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

 

‘அடடே அஷானி குட்டி எப்படி இருக்கீங்க? மாமாவுக்கு முத்தம் எல்லாம் குடுக்கிறீங்க. என்ன விஷயம்?.’ என விஷ்ணு அவளைத் தூக்கி கொண்டான்.

 

‘மாமா எனக்கு McDonalds போகணும். அங்கே happy meal வாங்கிக் குடுங்க. அதுல rio toy குடுக்கறாங்க வாங்கிட்டு வருவோமா?. அப்புறம் ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கிட்டு வருவோமா?.’ மூன்று வயதானாலும் திருத்தமாகப் பேசும் தன் மருமகளை அழுந்த முத்தமிட்டவன்,

 

‘ஓகே வாங்கிட்டா போச்சு.’ என்று எழ முற்பட்டவனை ஷர்மிளாவின் குரல் தடுத்தது,

 

‘அண்ணா நான் ஏன் வந்தேன்னு சொல்லிடுறேன். அதுக்கப்புறம் நீங்க கிளம்பி போங்க.’

என்றவள் யசோதாவிடம் திரும்பி,

 

‘அம்மா நாங்க வீணாவின் மகன் பிறந்த நாளைக்குச் சென்னை போறேன். அப்படியே அவ பையனுக்குத் திருப்பதில வச்சு மொட்டை போடறாங்க. அதுக்கு நாங்க போறோம். நீங்களும் வரீங்களா?. திருப்பதி போய் நாளாச்சு தானேப்பா.’ அம்மாவிடம் தொடங்கி அப்பாவில் முடித்தாள்.பெரியவர்கள் இருவரும் ஒரே மனதுடன்,

 

‘திருப்பதி என்றால் நாங்களும் வரோம்மா.’

 

‘அண்ணா நீங்க என்ன சொல்றீங்க?.’ தன் தமையனை நோக்கி வினவினாள்.

 

‘இல்லை நீங்க போயிட்டு வாங்க. எல்லோரும் கிளம்பினா இங்குள்ள வேலைகளை யார் பார்க்கிறது.’

 

‘விஷ்ணு எப்பவும் பேக்டரி வேலை தான் நினைப்பா. கொஞ்சம் வெளியேயும் வந்து பாருப்பா. மனதுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்.’ தாயின் வார்த்தையில் ஒன்றும் பேசாமல் மௌனம் காத்தான் மகன்.

 

‘அண்ணா நீ ஏன் தமிழ்நாட்டுக்கு போக மாட்டேங்கிற? அதுவும் நீ காலேஜ் படிச்சு முடிந்து வந்ததுல இருந்து ஆளும் மாறிட்ட. நீ போகாம இருக்கறத பார்த்தா அதுக்கும் இதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும் போல் தோணுது. அம்மா எனக்கு என்னவோ உன் மாப்பிள்ளையும் ,மகனும் சேர்ந்துகிட்டு ஏதோ மறைக்கிறாங்கன்னு தோணுது.’ ஷர்மியின் வார்த்தையில் யுவன் முழியே பிதுங்கி விடும் அளவுக்குத் திருதிருவென விழித்தான்.

 

‘நீ சொல்றது பாதிச் சரி ஷர்மி. மாப்பிள்ளை பாவம். அவருக்கு ஒண்ணும் தெரியாது. எனக்கென்னமோ இந்தப் பயல் மேல் தான் சந்தேகமா இருக்கு.’ மாமியாரின் பதில் தான் நிம்மதி பெருமூச்சு விட்டான் யுவன்.

 

‘இத்தனை வருசமா நானும் பார்க்கிறேன் இவன் மந்திரிச்சு விட்ட மாதிரியே இருக்கான். ஒருவேளை மந்திரிச்சு விட்ட மந்திரவாதி ஒரு பொண்ணா இருக்குமோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு.’

 

அம்மாவை இதுக்கு மேல் யோசிக்க விட்டால் நதி மூலம் ரிஷி மூலம் தேட துவங்கிவிடுவார் என்று பயந்த விஷ்ணு,

 

‘சரி சரி. இப்ப எதுக்கு என்னைப் பத்தின ஆராய்ச்சி. இப்ப என்ன நான் உங்க கூட வரணும் அவ்வளவு தானே. நானும் வர்றேன் போதுமா.’

யுவன் ஆச்சிரியமாகப் பார்க்க ,”வேறு வழி” எனபது போல் தோளை குலுக்கியவன், ‘எப்படிடா இவளை வச்சு சமாளிக்கிற. கொஞ்ச நேரத்துல இந்தப் போடு போடறா.’ அடிக்குரலில் யுவனிடம் சொன்னான் விஷ்ணு.

 

‘பார்த்தியா இப்பவாவது நான் படுற கஷ்டம் உனக்குப் புரியுதா. ஆனாலும் உன் தங்கச்சி இவ்வளவு புத்திசாலியா இருக்கக் கூடாது.’ சலிப்பது போல் சலித்தாலும் ,நண்பனை வரவழைத்த தன் மனைவியின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டாமல் யுவனால் இருக்க முடியவில்லை.

 

விஷ்ணு தன் பெற்றோருடனும், யுவன் தன் மனைவி, பெற்றோர், தங்கையுடனும் சென்னை கிளம்பினர். விமானத்தில் ஏறி அமர்ந்த விஷ்ணுவின் மனதில் படபடப்புகூடியது. எத்தனை நாடுகளுக்குச் சென்று இருக்கிறான் அப்பொழுது எல்லாம் வராத படபடப்பு, தவிப்பு ஏன் இப்பொழுது வருகிறது?.

 

‘விஷ்ணு தமிழ்நாட்டின் கோடானுக்கோடி மக்களில் நீ ஷன்மதியை திரும்பப் பார்ப்பாய் என்று நினைக்கிறீயா?. இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல. சும்மா மனதை போட்டு அலட்டாமல் இரு ‘ என்று தன் மனதை அடக்கினான். தன் அருகில் விலாசினி அமர முற்படும் போது, அஷானியை அழைத்து,

 

‘அஷானி மாமா கிட்டே வர்றீயா?’ விஷ்ணு அழைத்ததும் அஷானி,

 

‘அத்தை நீங்க அம்மா கிட்டே போங்க’ என்று விலாசினியை தள்ளிக் கொண்டு விஷ்ணுவின் அருகில் சென்று அமர்ந்தாள்.

 

மனதில் “குட்டிக் குரங்கே ” என்று அண்ணன் மகளைத் திட்டினாலும், வெளியே சமத்து பெண்ணாகச் சிரித்தபடி அண்ணியின் அருகில் சென்று அமர்ந்தாள் விலாசினி. விஷ்ணு அஷானி கேட்ட கேள்விகளுக்குப் பதில்,கூறியவாறு தன் மனக்குழப்பத்தைத் தள்ளி வைத்தான்.

 

வீணாவின் வீட்டில் பலத்த வரவேற்பு கிடைத்தது. வீணாவிற்கு யுவன் வந்ததை விட விஷ்ணு வந்தது தான் மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. அப்படியாவது தன் தோழியின் மனக் குறை தீராதா என்ற எண்ணம் தான்.

 

‘நான் சொன்னேன்ல விஷ்ணு அண்ணா இவர் தான்.’

எனத் தன் கணவனுக்கு விஷ்ணுவை அறிமுகப்படுத்தினாள். ரகுவிற்கு விஷ்ணுவும் ஷன்மதியும் பிரிந்து இருப்பது தெரியும். வலுக்கட்டாயமாகத் தாலி கட்டியதால் வந்த பிரச்சினை என்று மட்டும் தான் தெரியும். ஷன்மதியின் கடந்த காலம் அவனுக்குத் தெரியாது. ரகுவிற்கும் விஷ்ணுவை பார்த்ததும் குழப்பம். இவ்வளவு ஜென்டிலாக இருக்கும் இவனை ஏன் ஷன்மதி பிரிந்தாள் என்று அவனுக்கு ஒரே குழப்பம். மரியாதையை நிமித்தம் விஷ்ணுவுடன் கை குலுக்கினான்.

 

‘ஏன்மா எங்களை எல்லாம் அறிமுகப்படுத்த மாட்டாயா?.விஷ்ணு மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரியுமா.’ யுவன் வீணாவை கிண்டலடிக்க, வீணாவோ,

 

‘எங்களுக்கு விஷ்ணு அண்ணா ஸ்பெசல் தான் என்னங்க நான் சொல்றது.’ என்று தன் கணவனைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள்.தன் சிந்தனையில் உழன்ற ரகுவோ அவள் என்ன சொன்னாள் என்பதைக் கூட அறியாமல் ,

 

‘ஆமாம் ஆமாம்.’என்று வேகமாகத் தலை ஆட்டினான்.

 

‘மச்சான் உன்னைப் பார்த்தா பாவம்மா இருக்கு.இந்த வாயாடி என்ன சொல்லி மிரட்டி இப்படிப் பூம் பூம் மாடு போல் ஆக்கினாள்.’

 

‘எல்லாம் உன் மனைவி குடுத்த ஐடியா தான் மச்சான்.ஷர்மி சொன்னதுக்கு எல்லாம் நீ பதில் பேசாம தலையை ஆட்டுவியாமே. அதைச் சொல்லி சொல்லியே உன் தங்கை என்னைப் பூம்பூம் மாடு ஆக்கிவிட்டாள். ‘

 

ரகு யுவனின் காலை வார, சின்னவர்கள் அனைவரும் சிரித்தனர். பெரியவர்கள் அவர்களுக்குள் நலம் விசாரித்துப் பேசியபடி இருந்தனர். ரகுவிற்குப் பெற்றோர் கிடையாது. தாத்தா பாட்டி அரவணைப்பில் வாழ்ந்தவன். இப்பொழுது அவர்களும் இல்லை. வீணாவின் பெற்றோர் மதுரையில் இருந்து வந்து இருந்தனர். அவர்களுக்கும் விஷ்ணு ஷன்மதி இடையே உள்ள உறவு வீணாவின் மூலம் அறிவர்.

 

பெரியவர்கள் உணவு உண்டு சென்ற பின் சின்னவர்கள் உணவு உண்ண அமர்ந்தனர். நல்ல வேளைவிலாசினி பெரியவர்களுடன் உணவு உண்டு சென்றுவிட்டாள். அவரவர் சிறுவயது ஞாபகங்கள் காலேஜ் கலாட்டாக்கள் இதைப் பத்தி பேசினர். மறந்தும் யாரும் ஷன்மதி பத்தின பேச்சை எடுக்கவில்லை. என்ன தான் வாய் பேசினாலும் ஷர்மியும் வீணாவும் தங்கள் கணவனுக்குப் பார்த்து பார்த்து பரிமாறுவதைப் பார்க்கும் போது விஷ்ணுவின் மனதில் ஏக்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தன்னைச் சுற்றி எல்லோரும் இருந்தாலும் தான் மட்டும் தனியாக இருப்பது போல் ஒரு வெறுமை அவனுக்குத் தோன்றியது. அதனால் தான் தன்னை எப்பொழுதும் பரபரப்பாக வைத்துக் கொள்கிறான். அப்பொழுது தானே இந்த மாதிரியான தேவை இல்லாத சிந்தனை தடைபடும். தன் தலையைக் குலுக்கி வேண்டாத சிந்தனையை ஒதுக்கினான்.

 

உணவு முடிந்து எழுந்தும் அரட்டை கச்சேரி தொடர்ந்தது. பெரியவர்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளச் சிறியவர்கள் நிம்மதியாகத் தங்கள் பேச்சை தொடங்கினர். விஷ்ணுவும் தன்னுடைய மன வேதனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு எல்லோருடனும் சேர்ந்து அரட்டையில் கலந்துகொண்டான். விஷ்ணுவின் சிரிப்புச் சத்தம் கேட்டு திரும்பிய யோகேந்திரனுக்கும், யசோதாவுக்கும் மனம் நிறைந்தது. இப்படித் தங்கள் மகன் மனம் விட்டு சிரிப்பதை பார்த்து எத்தனை நாள் ஆகிறது என்று அந்தப் பாசமான பெற்றோர் நினைத்தனர்.

 

அதற்குள் வீணாவின் குழந்தை அகிலேஷ் தூங்கி எழுந்து விட, அவனைக் கொஞ்சுவதில் எல்லோர் கவனமும் சென்றது. புதியவர்களைக் கண்டு பயப்படாமல் எல்லோரிடமும் சென்று தன் மழலை சிரிப்பால் மனதை மயக்கினான் அந்தக் குட்டி கண்ணன். அகிலேஷை தூக்கி கொஞ்சியதில் விஷ்ணுவின் மனதில் மீண்டும் ஏக்கம் எழுந்தது. இதைப் பார்த்த

வீணாவும் ரகுவும் ரகசிய பார்வையைப் பரிமாறிக் கொண்டனர். “விஷ்ணு இங்கு வந்ததில் இருந்து உன் மனம் ரொம்பப் பலகீனம் ஆயிடுச்சுடா ” மனதுக்குள் புலம்ப மட்டும் தான் முடிந்தது விஷ்ணுவால்.

 

மறுநாள் பிறந்தநாள் கொண்டாடத்திற்காக வீணாவின் வீடு பரபரப்புடன் இயங்கிக் கொண்டு இருந்தது. வீணா மனதிற்குள் “எங்கே இந்த ஷன்மதியை இன்னும் காணோம் ” என்று நினைத்தபடி வேலைகளைச் செய்து கொண்டு இருந்தாள். வீணாவிடம் சொன்னபடி ஷன்மதி அம்மா மகனுடன் வந்தாள். ஆட்டோவிற்கு ஷன்மதி பணம் குடுத்து வருவதற்குள், முதலில் இறங்கிய ஷரத் வீட்டிற்குள் ஓடினான்.வீட்டிற்குள் சென்ற ஷரத்தின் கண்களில் ஹாலில் அமர்ந்து இருந்த விஷ்ணுவை தவிர வேற யாரும் கண்ணில்

படவே இல்லை.

 

விஷ்ணுவின் அருகில் ஓடிச் சென்றவன் அவனை இறுக அணைத்து, அவனின் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டவன்,

 

‘அப்பா ஏன் நம்ம வீட்டுக்கு வரல? என்னையும், அம்மாவையும் பார்க்காம வீணா ஆன்ட்டி வீட்டுக்கு வந்துடீங்க?’ பூப்பந்தாய் தன்னைத் தாக்கிய சிறுவனைக் கண்டு ஒரு நிமிடம் திகைத்து நின்று விட்டான் விஷ்ணு.

 

“ஒருவேளை இவனின் தந்தை என்னைப் போல் இருப்பாரோ?.” என்று மனதில் நினைத்தான்.

 

ஆனால் சிறுவனின் கண்ணில் இருந்த ஏக்கம் தவிப்பு எதிர்பார்ப்பை பார்த்ததும், விஷ்ணுவின் மனதில் இருந்த தந்தை உள்ளம் இயல்பாய்க் கனிந்தது. அவனைத் தூக்கிக் கொண்டவன்,

 

‘ஹாய் ஹன்ட்சம், உங்க பேரு என்ன?.’

 

‘விஷ்ணு ஷரத்’ சிறுவனின் பதிலில் மீண்டும் வாயடைத்துப் போனான் விஷ்ணுபரத். அதற்கு விடையாக ஷரத்தின் குரல் ஒலித்தது.

 

‘அம்மா இங்கே பாருங்க. அப்பா வந்துட்டாங்க. ஷரத்தோட அப்பா வந்துட்டாங்க.’ ஷரத்தின் குரலில் வாயிலை நோக்கியவன் அதிர்ச்சியில் தன்னையும் அறியாமல் எழுந்துவிட்டான். ஷன்மதியும் விஷ்ணுவை அங்குச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் கண்ணில் இருந்த அதிர்ச்சியே காட்டிக் கொடுத்தது. இருவரில் யார் அதிகமாக அதிர்ந்தது என்று தெரியவில்லை.

 

விழியில் விழுந்து…இதயம் நுழைந்து.

அத்தியாயம்:24.

 

விஷ்ணுபரத் தன் அதிர்ச்சியை உடனே சமாளித்துக் கொண்டான். அன்றொரு நாள் வீணாவின் வீட்டில் பார்த்த போது கட்டி இருந்த அதே பச்சை நிற சில்க் காட்டன் புடவையில், நெற்றியில் குங்குமம் தலையில் மல்லிகைப்பூ , கழுத்தில் செயின், கைகளில் ஒற்றை வளையல் என்று எளிமையாக இருந்தாலும் அன்று பார்த்த அதே அழகு குறையாமல் இருந்த ஷன்மதியை கண்டு, அவள் மேல் வைத்திருந்த பார்வையை விஷ்ணுவால் அகற்ற முடியவில்லை.

 

ஷன்மதியும் விஷ்ணுவை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் இந்த வீணா தான் செய்திருக்கணும் என்று மனதில் வீணாவை திட்டினாலும், விஷ்ணுவின் வரவை அவள் மனம் விரும்புவதைக் கண்டு ஒரு கணம் விதிர்த்துப் போனாள். விஷ்ணு முன்பு இருந்ததை விட அழகாக இருந்தான். ஒருவேளை பணம் குடுக்கும் அழகோ. ஆனால் அதே கம்பீரம் இன்றும் குறையாமல் அப்படியே இருந்ததை ஷன்மதியின் கண் அளவேடுத்தது.

 

ஒன்பது வருடங்களாக அலை பாய்ந்த தன் மனம் இன்று விஷ்ணுபரத்தை பார்த்ததும் அமைதியடைந்ததை உணர்ந்தாள். தனக்கு அமைதி குடுக்க விஷ்ணுவால் மட்டும் தான் முடியும் என்பதை அந்தக் கணம் உணர்ந்தாள் ஷன்மதி.

 

ஷன்மதியை தொடர்ந்து வந்த ஆண்டாளும் விஷ்ணுவை பார்த்ததும் அடையாளம் கண்டு (மறக்க கூடியவனா மருமகன்) திகைத்துவிட்டார்.

 

“இனி மேலாவது என் மகளுக்கு நல்ல எதிர்காலத்தைக் குடு ஆண்டவா” என்று அந்தத் தாய் உள்ளம் அரற்றியது. ஆண்டாள் தன்னையும் அறியாமல்,

 

‘வாங்க மாப்பிள்ளை சௌக்கியமா?’ என்றார்.

 

ஷரத்தின் வார்த்தையில் குழம்பி நின்ற விஷ்ணுவுக்கு ஆண்டாளின் வார்த்தையில் பதில் கிடைத்து விட்டது. வீட்டில் இருந்த மற்றவர்களுக்கும் பெரிய குழப்பம். அவர்களும் என்ன என்று புரியாமல் முழித்தனர். யுவனுக்கு ஷன்மதியை அடையாளம் தெரிந்தாலும் ஷரத்தும் ஆண்டாளும் சொல்வதைப் பார்த்து அவனுக்கும் குழப்பம் தான் மிஞ்சியது. விலாசினிக்கோ விஷ்ணு ஷன்மதியை வைத்த கண் வாங்காமல் பார்த்தது எரிச்சலை உண்டு பண்ணியது.

 

 

ஷரத்தின் குரலில் உள்ளே இருந்து வந்த வீணா ஷன்மதியை ஷரத்தை பார்த்ததும்,

 

‘ஷரத் இப்போ உனக்குச் சந்தோசமா?.உன்னோட அப்பா வந்துட்டாங்களா?. ஏன் ஷன்மதி திகைச்சு போய் நிக்கிற?. விஷ்ணு அண்ணா தான். உன்னோட ஹஸ்பண்ட் அதே விஷ்ணு தான்.’

 

“ஹஸ்பண்ட்” ஒரு அழுத்தம் குடுத்து சொன்னாள். யாருக்கு புரிந்ததோ இல்லையோ புரிய வேண்டியவனுக்கு நல்லா புரிந்தது. ஒன்பது வருடம் தன் வாழ்வை வீணடித்தவள் என்று ஷன்மதி மேல் விஷ்ணுவிற்கு நியாயத்திற்குக் கோபம் தான் வர வேண்டும். ஆனால் அவனுக்குப் பூமழை பொழிந்தது போல் உணர்வு.

 

‘அன்று சொன்னது போல் இவள் தாலியையும் கழட்டவில்லை. என் நினைப்பையும் மறக்கவில்லை. அவள் நினைவில் நான் தான் இருக்கிறேன். என் காத்திருத்தல் வீண் போகவில்லை.’ தான் நேசித்த பெண் தனக்காகக் காத்து இருப்பதைக் கண்டு அவனுள் பெருமிதம் பொங்கி வழிந்தது.

 

விலாசினிக்கோ விஷ்ணு ஷன்மதியை வைத்த கண் வாங்காமல் பார்த்தது எரிச்சலை உண்டு பண்ணியது. விஷ்ணுவிற்குத் திருமணம் ஆகி விட்டது என்பதை அறிந்த விலாசினி மனம் சுக்கு நூறாக நொறுங்கியது. அதுவும் அவன் மனைவி ஷன்மதி அழகாக இருந்தது வேறு அவளுக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. அவளின் ஆத்திரத்தை மேலும் அதிகரிப்பது போல் இருந்தது விஷ்ணுவின் நடவடிக்கை. பின்னே ஷன்மதியை இப்படி விழுங்கி விடுவது போல் பார்த்தால் அவளுக்குக் கோபம் வருமா வருதா?. பாவம் சிறு பெண் தன் முதல் காதல் மொட்டிலேயே கருகி போனதை அறிந்து மனதிற்குள் நொந்து போனாள். அது அந்த வயதில் வரும் சாதாரண இனக் கவர்ச்சி தான் என்பதை விலாசினி அறியவில்லை. அவளுள் பலவித உணர்ச்சிகள் எழுந்தது. ஆனால் அந்த உணர்வுகள் தான் தவறானவையாக இருந்தது. இது விஷ்ணுவிற்குத் துன்பத்தைக் குடுக்குமோ?.

 

விஷ்ணு, ஷன்மதி எல்லோரும் மனம் விட்டு பேச எண்ணிய வீணா விஷ்ணுவின் அருகில் நின்று இருந்த ஷரத்தை நோக்கி,

 

‘ஷரத் நாம அகிலேஷ் பாப்பாவை குளிப்பாட்டுவோமா?’ என்று கேட்க, விஷ்ணுவின் கைகளை அவசரமாக விடுவித்த ஷரத்,

 

‘ஓ… போலாமே.’ என்றவன், விஷ்ணுவிடம் திரும்பி, ‘அப்பா எங்கேயும் போயிராதீங்க. நான் தம்பி பாப்பாவை குளிக்க வச்சுட்டு வர்றேன்.’

 

விஷ்ணு ஷரத் உயரத்துக்குக் குனிந்து, ‘இனி மேல் அப்பா உன்னையும், அம்மாவையும் விட்டு எங்கேயும் போகமாட்டேன்.’ என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.

 

ஷரத்தை தன்னுடன் அழைத்துக் கொண்ட வீணா விலாசினியையும், அஷானியையும் தன்னுடன் அழைத்தாள். அஷானி மகிழ்ச்சியுடன் வீணாவுடன் செல்ல தயாரானாள். ஆனால் விலாசினியோ கிளம்புவேனா என்பது போல் அங்கேயே நின்று இருந்தாள். அதைக் கண்ட வீணாவுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது உண்மையே. சற்று அழுத்திக் கூறியே விலாசினியை அங்கிருந்து அகற்றினாள். தாங்கள் இங்கு அதிகப்படி என்று

நினைத்த ஆண்டாளும் ரகுவும் அங்கு இருந்து நகர்ந்தனர். விஷ்ணுவின் குடும்பத்தவர்களே எஞ்சி நின்றனர்.

 

விஷ்ணுவின் பெற்றோருக்குக் குழப்பமாக இருந்தாலும், ஷன்மதியின் தெய்வீக அழகு அமைதி கண்டு ஆறுதல் அடைந்தனர். ‘இந்தப் பெண்ணிடம் தவறு இருக்காது. நம் மகன் தான் ஏதோ தவறு செய்து இருக்க வேண்டும். அப்பொழுது அவன் குணம் நன்றாக அறிந்தது தானே.’

 

அழுத்தமான காலடியுடன் ஷன்மதியின் அருகில் வந்த விஷ்ணு, ‘நான் உன் கணவன் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. உனக்கு ஏதும் சந்தேகம் இருக்கிறதா?.’ விஷ்ணுவின் வார்த்தையில் அவன் முகம் பார்க்க இயலாமால் தலையைக் குனிந்தாள். ஷன்மதியின் குனிந்த தலையைப் பார்த்தவன், ஒன்றும் பேசாமல் அவள் கையைப் பிடித்துத் தன் பெற்றோரிடம் கூட்டிச் சென்றான். விஷ்ணுவின் கையில் இருந்து தன் கையை உருவி எடுக்க முயன்ற ஷன்மதியின் கையை இறுக பிடித்தவன் ,யாருக்கும் கேட்காத வண்ணம் ,

 

‘இன்னும் எத்தனை வருஷம் ஓடலாம்னு இருக்கே. ம்… நீ சொன்னதைக் கேட்டு சரி சரின்னு போக நான் ஒண்ணும் 23 வயசு விஷ்ணு இல்லை சாரி பரத் இல்லை. இனி நான் என்ன சொல்றேன்னோ அதைத் தான் நீ கேட்க வேண்டும்.’

 

அடிக்குரலில் உருமியவனைப் புதியதாய் பார்த்தாள் ஷன்மதி. அவள் பார்த்த விஷ்ணுவிற்கு அவளிடம் கோபமாகவே பேச தெரியாது. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் தான் அவனைப் பார்த்து இருக்கிறாள். இப்பொழுது அவன் கோபம் கண்டு பதில் பேசாமல் அவனைப் பின் தொடர்ந்தாள்.

 

தன் பெற்றோரிடம் ஷன்மதியை அழைத்துச் சென்றவன், ‘அப்பா அம்மா இவள் தான் உங்கள் மருமகள். நான் ஏன் இவ்வளவு நாள் திருமணம் வேண்டாம் என்று இருந்ததுக்குக் காரணம் இவள் தான்.’ என்று கூறியவன், அவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். விஷ்ணுவை பின்பற்றி ஷன்மதியும் அவர்கள் கால்களில் விழுந்தாள்.

 

மகன் திடீரென்று ஒரு பெண்ணைத் தன் மனைவி என்று கூறுகிறான். என்ன நடக்கிறது என்று யோகேந்திரனுக்கும், யசோதாவிற்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் ஷன்மதியின் அடக்கமான அழகு அவளின் பண்பு பார்த்து மகனின் தேர்வு தப்பாகவில்லை என்று எண்ணினர். மகனின் வாழ்வில் அப்படி என்ன தான் நடந்து இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனாலும் ஆசிர்வாதம் வேண்டி தங்கள் காலில் விழும் சிறியவர்களை வாழ்த்த தான் அவர்கள் இருவரின் மனமும் எண்ணியது.

 

‘நீண்ட ஆயுளோட சந்தோசமா இருங்க.’ ஏன் எதற்கு என்று எந்த ஒரு எதிர் கேள்வியும் கேட்காமல் ஆசிர்வதித்த அந்தப் பெரியவர்களிடம் ஷன்மதிக்கு மரியாதை ஏற்பட்டது. விஷ்ணுவிற்கு இந்தக் குணம் இவர்களிடம் இருந்து தான் வந்து இருக்க வேண்டும் என்று

எண்ணினாள்.

 

பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிய விஷ்ணு ஷன்மதியை காதலித்தது, அவளைக் கைப்பிடித்தது, அதனால் அவள் அப்பாவின் மரணம் எல்லாவற்றையும் கூறியவன் ,மறந்தும் ஷன்மதியின் வாழ்வில் நடந்த பயங்கரச் சம்பவத்தைக் கூறவில்லை. அதைக் கவனித்த ஷன்மதியின் மனம் விஷ்ணுவிடம் சரணடைந்தது.

 

‘இவனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அன்பு என்னிடத்தில். நான் என்ன ஊரில் இல்லாத அழகியா? அப்படி என்ன இருக்கிறது என்னிடத்தில்?.’ என்று நினைத்த ஷன்மதியின் மனம் விஷ்ணுவின் பால் சாய்ந்ததைச் சொல்ல தேவை இல்லை.

 

‘நீ கல்யாணத்திற்கு மறுக்கும் போதே நினைத்தேன் காதல் தோல்வியா இருக்குமோன்னு சந்தேகப்பட்டது சரி.’ யோகேந்திரன் மகிழ்ச்சி நிறைந்த குரலில் கூறினார்.

 

யசோதாவோ ஷன்மதியை அணைத்து உச்சி முகர்ந்தவர், ‘எனக்கு அப்பவே தெரியும். உன் மனதில் இருக்கும் காதல் தான் கல்யாணத்திற்குத் தடையாக இருக்குன்னு.’ என்று மகனை பார்த்து சொன்னவர், ஷன்மதியிடம்,

 

‘அவன் அப்படித் தான்ம்மா. கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லாமல் இருப்பான். ஆனா ஒரு உண்மையைச் சொல்லணும். இப்ப எல்லாம் ரொம்ப மாறிட்டான். அது ஏன் என்று உன்னைப் பார்த்த பின்பு தான் புரியுது. உன் அப்பாவின் மரணத்திற்கு விஷ்ணு காரணம் என்றால் எனக்காக அவனை மன்னித்து விடும்மா.இத்தனை வருடங்கள் நீ அவனைப் பிரிந்து இருந்தது போதும். இனியாவது நீங்கள் இருவரும் சந்தோசமாக இருக்க வேண்டும்.’

 

விஷ்ணு, தன் தந்தை மரணத்திற்குக் காரணம் அவன் தான் என்று உள்ளுக்குள் நினைத்து மருகுவதையும், அதனால் தான் பிரிந்ததாக யசோதா நினைத்து கொண்டு இருப்பதையும் ஷன்மதியால் தாங்க முடியவில்லை.

 

‘இல்லை இல்லை அவர் மேல் எந்தத் தப்பும் இல்லை.’ என்றவள், தன் திருமணத்தால் தந்தை மகிழ்ச்சி அடைந்தார். அந்த மகிழ்ச்சியிலேயே அவர் உயிர் பிரிந்தது என்று கூறினாள். அதன் பின் நடந்தது அனைத்தையும் கூறியவள், ஷரத்தை தத்தெடுத்தது முதற்கொண்டு எல்லாம் கூறினாள்.

 

விஷ்ணுவிற்கோ , ஷன்மதியின் தந்தை மரணத்திற்குத் தான் கரணம் என்ற குற்ற உணர்வு விலகி மனம் அமைதி ஆவதை உணர்ந்தான். அதுவே அவனுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. தன் கையை எடுத்து ஷன்மதியின் விரலோடு பின்னிக் கொண்டான்.

 

‘உன் திருமணத்தால் உன் அப்பா சந்தோசம் தானே அடைந்தார். பின் ஏன் நீ இவ்வளவு நாள் விஷ்ணுவை பிரிந்து இருந்தாய். உன்னைப் பிரிந்து அவன் முகத்தில் சந்தோசமே இல்லை. இவ்வளவு நாள் கழித்து இன்று தான் இவன் முகத்தில் இவ்வளவு சந்தோசம் பார்க்கிறேன்.’ யசோதா வாஞ்சனையுடன் கேட்டார்.

 

யசோதாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்த ஷன்மதியை, முந்திக் கொண்டு விஷ்ணு தன் அம்மாவிடம் விளக்கினான்.

 

‘அம்மா உன் மகன் செய்ததும் சிறிய காரியம் இல்லையே. அந்தத் திருமணம் அவளே எதிர் பார்க்காமல் நடந்தது. அதனால் அவளுக்கு என் மேல் கோபம். இல்லையா ஷம்மு?.’

விஷ்ணுவின் கேள்விக்கு “ஆமாம்” என்று வேகமாகத் தலையை ஆட்டினாள்.

 

யசோதாவிற்கோ ஷன்மதியின் உறுதியை கண்டு வியப்பு. ‘இந்த வயதில் இவ்வளவு மன உறுதியா உனக்கு.’ என்றவரிடம் விஷ்ணு,

 

‘அம்மா அந்த மன உறுதி தான் என்னிடம் இருந்தும் பிரிச்சு வச்சிருக்கு.’ விஷ்ணு கிண்டலாகக் கூறினாலும் ஷன்மதியின் மனம் வாடியது. அவளின் முக வாட்டத்தைக் கண்டு மனம் பொறுக்காமல் யசோதா ,

 

‘ஷன்மதி முதல்ல இவனை உன் முந்தானையில் முடிஞ்சு வச்சுக்கோ. நீ போடு தோப்புக் கரணம் என்றால் இவன் எண்ணிக்கோன்னு பதில் பேசாமல் போடணும்.’

 

யசோதா கூறியதும் ஷன்மதியின் முகம் வெட்கத்தில் சிவந்தது. அவளின் முகத்தின் சிவப்பை ரசனையுடன் பார்த்த விஷ்ணு,

 

‘இப்ப வேண்டுமானாலும் ஷம்மு எண்ண ரெடி என்றால் தோப்புக்கரணம் போட நான் ரெடி. என்ன ஷம்மு ரெடியா?.’ என்று மனைவியைப் பார்த்து மையலுடன் கேட்டான். அவன் சொன்னதில் அனைவரும் சிரித்துவிட்டனர்.

 

‘சாரி ஷன்மதி நானும் உன்னைப் பத்தி தப்பா நினைச்சுட்டேன்.’ என்று யுவன் தன் பங்கிற்கு மன்னிப்பு கேட்டான்.

 

‘அம்மா நான் அன்னைக்கே சொன்னேன்ல. உன் மருமகனும், பையனும் சரியான கூட்டுக் களவாணிம்மா.’ என்று அம்மாவிடம் சொன்ன ஷர்மி ஷன்மதியிடம் வந்து,

 

‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.’ என்று அவள் கையைப் பற்றிக் கொண்டாள்.

 

அகிலேஷை குளிக்க வைக்கச் சென்று இருந்த ஷரத் வந்துவிட, விஷ்ணுவிற்கு அவனுடன் பேசுவதில் நேரம் சரியாக இருந்தது. எந்தவித உறுத்தலும் இல்லாமல் ஷரத்தை ஏற்றுக் கொண்ட விஷ்ணுவை கண்டு ஷன்மதியின் மனம் காதலால் நிரம்பியது.

 

வீணா ரகுவின் அருகில் சென்று, ‘என்னங்க எல்லோரையும் கொஞ்சம் வெளியில் கூட்டிக் கொண்டு போயிட்டு வாங்க. விஷ்ணு அண்ணாவும் ஷன்மதியும் கொஞ்சம் மனசு விட்டு பேச தனிமை குடுப்போம்.’

 

‘ம்… ஓகே.’ என்றவன் யுவனிடம் கூறி எல்லோரையும் கிளப்பினான். விஷ்ணுவும் கிளம்ப எத்தனிக்க ,

 

‘அண்ணா நீங்க வீட்டில் இருங்க. உங்களுக்குக் கொஞ்சம் வேலை இருக்கு.’ என்ற வீணாவை பார்த்தவன்,

 

‘அது என்ன ரகுவுக்கும் யுவனுக்கும் இல்லாத வேலை.’ என்று யோசித்தபடி அமர்ந்து விட்டான். விஷ்ணுவை விட்டு நகர மறுத்த ஷரத்தை சமாதனம் செய்து டாய்ஸ், ஐஸ்க்ரீம் வாங்கித் தருவதாகக் கூறவும் ஒருவழியாகச் சமாதானமாகி கிளம்பினான்.

 

ஷன்மதிக்கு எப்பொழுதும் போல் வித்தியாசமாகதெரியவில்லை. வெளியூரிலிருந்து வந்து இருப்பவர்களுக்கு ஏதாவது வாங்க வேண்டிய தேவை இருக்கும் என்று எண்ணியவள் தோழிக்கு உதவுவதில் ஈடுபட்டாள்.

 

‘ஷன்மதி மேலே எங்க ரூமில் அகிலேஷ் புது டிரஸ் எல்லாம் வச்சு இருக்கேன். போய் எடுத்துட்டுவரீயா?’ என்று சாவி கொத்தை நீட்டிய வீணாவின் கைகளில் இருந்து வாங்கியவள் மேலே இருந்த வீணாவின் அறைக்குச் சென்றாள். ஷன்மதி சென்றதும் விஷ்ணுவின் அருகில் வந்த வீணா,

 

‘என் மேல் கோபம் ஒன்றும் இல்லையே அண்ணா?.’

 

‘உன் மேல் நான் ஏன் கோபப்படப் போறேன்? எனக்கு யார் மேலேயும் கோபமில்லை.’

என்று சிரித்தவனைக் கண்டு வீணாவின் மனம் நெகிழ்ந்தது.

 

‘அண்ணா ஷன்மதி மாடியில் இருக்கிறாள்.’ இவள் என்ன சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாள் என்று குழம்பியவன் முகம் மறு நொடி தெளிவடைந்தது.

 

‘தேங்க்ஸ் வீணா.’ என்று கூறியவன் ,வேகமாக இரண்டு இரண்டு படிகளாகக் கடந்து மேலே சென்றான்.அவன் வேகமாகச் சென்றதை பார்த்து புன்னகையுடன் நின்றிருந்தாள் வீணா.

 

 

வீணாவின் அறைக்குள் நுழைந்த ஷன்மதி பீரோவை திறந்து அகிலேஷ் உடையை மும்முரமாகத் தேடிக் கொண்டு இருந்தாள். அறைக்குள் நுழைந்த விஷ்ணு சத்தம் இல்லாமல் அறைக் கதவை தாளிட்டான். விஷ்ணு வந்ததை ஷன்மதியும் கவனிக்கவில்லை. புடவையை இழுத்து சொருகிக் கொண்டு, இரு கைகளையும் உயர்த்தித் தேடிக் கொண்டு இருந்த ஷன்மதியின் இடை பளீரென்று தெரிந்தது. அதன் வெண்மை நிறம் விஷ்ணுவிற்கு “வா” என்று அழைப்பு விடுத்தது.

 

ஷன்ம்தியின் அருகில் சென்றவன், பின்னால் இருந்து அவளை அணைத்து, அவள் கழுத்தில் முகம் புதைத்தான். ஷன்மதி மேனியில் இருந்து எழுந்த மணம் மற்றும் அவள் கூந்தலில் சூடி இருந்த மல்லிகையின் மணம் அவனை வசம் இழக்க செய்தது.

 

இத்தனை நாள் அடக்கி வைத்து இருந்த தாபம், மோகம் எல்லாம் ஷன்மதியால் மீண்டும் மீட்டெடுக்கப் பட்டதை விஷ்ணு உணர்ந்தான். தன் காதலை உயிர்பிக்கும் சக்தி ஷன்மதிக்கு மட்டுமே உள்ளது என்பதை அந்தக் கணம் உணர்ந்தான்.

 

‘ஷம்மு, ஐ லவ் யூ ‘ என்று கிறங்கிய குரலில் சொன்னான்.

 

தன்னை யாரோ அணைப்பதை உணர்ந்த ஷன்மதி பதறி விலகும் முன் விஷ்ணுவின் ஷம்மு என்ற குரலில் திகைத்தாள். இவன் எப்படி இங்கே என்று யோசிக்கும் போதே, விஷ்ணுவின் உதடு அவளின் காதோரம் வருடத் தொடங்கியது. புதுவித அவஸ்தையுடன் நெளிந்தவள்,

 

‘பரத் ப்ளீஸ்.’ என்று கெஞ்சியவளை தன் புறம் திருப்பியவன்,

 

‘ஒரு வருடமா இல்லை இரு வருடமா ஒன்பது வருட தாகமடி. இதைத் தீர்க்க உன்னால் மட்டுமே முடியும் .’ என்றவன் ஷன்மதியோடு படுக்கையில் சாய்ந்தான்.

 

ஷன்மதியின் நெற்றியில் தன் இதழை பதித்த விஷ்ணு, கண், மூக்கு என்று பயணம் செய்து அவளின் இதழில் இளைப்பாறினான். விஷ்ணு ஷன்மதியை தன் மனைவியாக எண்ணி தன்னுள் வாழ்ந்து கொண்டு இருப்பதால் அவளைப் பார்த்ததும் நீண்ட நாள் மனைவியைப் பிரிந்த கணவன் மனநிலையில் இருந்தான். அதனால் இயல்பாக அவளிடம் ஒன்றிவிட்டான்.

 

ஆனால் ஷன்மதியோ, என்னதான் விஷ்ணு அவள் கணவன் என்றாலும், காதலன் என்றாலும் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை. விஷ்ணுவின் செயலில் மனம் நெகிழ்ந்தாலும், உடல் அனிச்சை செயல் போல் விறைத்தது.

10 Comments

 1. Super Super Super mam.. Semma semma episode… Sharmi எப்படியோ avana pesi pesi ah vara vechitaa…. வீணா vuku avvallavu santhosham… சரத் வந்த ஒடனே அப்பா nu avan kita தான் ஓடி வந்தான்… விஷ்ணு vuku semma shock 🤯 appram avvallavu santhosham avan innum avan shanmu thaan nu அவனுடைய அப்பா அம்மா vum avala ethuku taanga… But shanmu தான் avana ethukanum.. Super Super Super mam.. Eagerly waiting for next episode

 2. wow they are going to start a happy life

 3. செம்ம பா இதை இதை தான் எதிர் பார்த்தேன் அவங்க 2 போறும் ஹாப்பி இருக்கணும்

  Anandhi Sharwin
 4. Nice update sis

 5. Vishnu….yu r great😍😍

 6. arumai vishnnu sanmathi sannthipu semma sanmathiyin manathuyarilirunthu vishnu avalai eppadi meetukondu varapokiraan enru teriyavillai suprb ud mam(viji)

 7. அருமையான பதிவு சிஸ்டர்

 8. அருமையான பதிவு சிஸ்டர்

 9. அருமையான பதிவு சிஸ்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *