“விழியில் விழுந்து இதயம் நுழைந்து” – 17 & 18 2

விழியில் நுழைத்து…இதயம் நுழைந்து.
அத்தியாயம்:17

காரை ஓட்டிக் கொண்டே அஷ்வந்த் ஷன்மதியை பார்த்தான். அவள் கண் மூடி சாய்ந்து அமர்ந்து இருந்த நிலை, ஸ்லீபிங் ப்யூட்டியை ஞாபகப்படுத்தியது. அவளின் மௌனத்தைக் கலைக்க அவனுக்கு மனசு வரவில்லை. மெல்லிய குலுக்கலுடன் கார் நின்றதும் தான் ஷன்மதி கண் திறந்து பார்த்தாள். ஐந்து நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் கார் நின்றிருந்தது. அஷ்வந்த் காரை விட்டு இறங்கியவன், ஷன்மதி இறங்க அவள் பக்கம் இருந்த கார் கதவை திறந்து விட்டான். உள்ளே அழைத்துச் சென்றான்.

அரையிருட்டில் அமைந்து இருந்த அந்த ரெஸ்டாரண்டில் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஓரமாக இருந்த டேபிளில் சென்று அமர்ந்தனர். ‘என்ன சாப்பிடற ஷன்மு?.காபி ஆர் ஜூஸ்?’

‘ஜூஸ் போதும்’ என்று பதில் கூறியவளை பார்த்து வாஞ்சையுடன் சிரித்தவன், அங்கிருந்த பேரரை அழைத்து ஆர்டர் குடுத்தான்.

ஷன்மதியின் மனம் அலைபாய்ந்து கொண்டு இருந்தது. எப்படி அஷ்வந்திடம் சொல்லி திருமண ஏற்பாட்டைத் தடுப்பது என்று. அதற்காகத் தான் பெண்மை இழந்ததைச் சொல்ல அவள் மனம் இடம் குடுக்கவில்லை. மனதால் காதலிக்கும் விஷ்ணுவிடமே அவளால் சொல்ல முடியவில்லை. எப்படி அஷ்வந்திடம் சொல்ல மனசு வரும்.என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று மனதுக்குள் ஆயிரம் ஒத்திகை பார்த்துக் கொண்டு இருந்தாள். பேசாமல் பரத்தை விரும்புவதாகஅஷ்வந்திடம் சொல்லி இந்தத் திருமண ஏற்பாட்டை நிறுத்தி விடலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.

ஷன்மதியின் நிலை தான் இப்படி என்றால்,அஷ்வந்தின் நிலையும் அதே தான். பேச வேண்டும் என்று கூடிக் கொண்டு வந்து விட்டானே தவிர எப்படி ஆரம்பிப்பது என்று அவனுக்கும் தெரியவில்லை. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,

‘ஷன்மு’ என்று எங்கே அந்த வார்த்தைக்கே வலிக்குமோ என்பது போல் மிக மென்மையாகக் கூப்பிட்டான்.

அஷ்வந்த் கூப்பிட்டது ஷன்மதிக்கு விஷ்ணுபரத்தின் “ஷம்மு” என்ற அழைப்பை ஞாபகபடுத்தியது. வேதனையுடன் முகத்தைச் சுளித்தவள், ‘ப்ளீஸ் அஷ்வந்த் ,இனி மேல் என்னை “ஷன்மு”னு கூப்பிடாதீங்க. எல்லோரும் கூப்பிடுவது போல் மதின்னு கூப்பிடுங்க’

அஷ்வந்த் ஒரு கணம் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தவன், ‘வெல்… ஷ்…. சாரி மதி. உன் மனதை கவர்ந்த கள்வன் யார்?’ ஷன்மதி ஆச்சிரியத்துடன் விழி விரிய அஷ்வந்தை பார்த்தாள்.

ஷன்மதி ஆச்சிரியத்துடன் பார்க்கவும் அஷ்வந்த் தன்னைத் தானே திட்டிக் கொண்டான். ‘முட்டாள், நல்ல வேளை அவளிடம் உன் விருப்பதைச் சொல்லல. சொல்லி இருந்தா என்ன ஆகி இருக்கும் உன் நிலைமை. அப்ப அவள் மனதில் யாரோ இருக்காங்க. அதான் இப்படி ஆச்சிரியமா பார்க்கிறா’

‘இதுல்ல ஆச்சிரியப்படுவதற்கு என்ன இருக்கு. நான் சின்ன வயசில் இருந்து உன்னை அந்தப் பேர் சொல்லி தான் கூப்பிடுறேன். ஏன் போன வருஷம் வந்தப்போகூட அப்படித்தானே கூப்பிட்டேன். திடீர்ன்னு இப்போ இப்படிச் சொன்னா, யாரோ உனக்கு மனசுக்கு பிடிச்சவங்க இந்தப் பேர் சொல்லி உன்னைக் கூப்பிடுறாங்கன்னு அர்த்தம். அதுவும் இந்த ஒரு வருசத்தில். நிச்சயம் நீ காலேஜ் போனதுக்கு அப்புறம் தான் இது நடந்து இருக்கு. சோ, உன் மனம் கவர்ந்த கள்வன் அந்தக் காலேஜில் தான் படிக்கிறான். அம் ஐ கரெக்ட்?’ ஏதோ ஜோசியம் பார்ப்பவன் போல் தன் மனதை புட்டு புட்டு வைத்த

அஷ்வந்தை ஷன்மதி நன்றியுடன் பார்த்தாள். பின்னே அவள் சொல்ல வேண்டியதையும் அவனே சொல்லி விட்டானே.

ஆமாம் என்பது போல் தலையசைத்தவளை பார்த்தவன், ‘யார் அது?.பேரு என்ன?. உன் பேரண்ட்ச்க்கு இந்த விஷயம் தெரியுமா?’

‘நீங்க என் கூடக் காலேஜில் பார்த்தீங்களே அவர் தான். பேரு விஷ்ணுபரத்’

‘ஹேய் அந்த ஹன்ட்சம் பாய் ஆ? நல்ல செலெக்சன் மதி. குனிஞ்ச தலை நிமிராத மதியை கூடத் திரும்பி பார்க்க வச்சுட்டானே… குட். உண்மையில் அந்த விஷ்ணுபரத் குடுத்து வைத்தவன். ம்… சொல்லு’

‘அம்மா அப்பாவுக்கு இது தெரியாது’

‘சரி நான் அப்பா கிட்ட சொல்லி இந்தக் கல்யாண ஏற்பாட்டை நிறுத்தி விடுகிறேன். நீ எப்ப உன் பேரண்ட்ஸ் கிட்ட சொல்ல போற? எப்ப உன் கல்யாணம்?’

அஷ்வந்த் கேட்டதும் தான் ஷன்மதிக்குப் புரிந்தது இனி என்ன செய்ய என்பது தெரியாமல் முழித்தாள். அதைத் தப்பாக நினைத்துக் கொண்ட அஷ்வந்த், ‘மதி பயப்படாதே, நான் என் அப்பா கிட்ட சொல்றேன். உன் விருப்பம் இல்லாமல் திருமணம் நடக்காது. ஓகே… என்னை நம்பு’

ஷன்மதிக்கு அப்பாடா என்று இருந்தது. அஷ்வந்த் இந்தத் திருமண ஏற்பாட்டை நிறுத்தி விடுவான் என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். “ம்'” என்று தலை அசைத்தாள். அதற்குள் பேரர் ஜூஸ் கொண்டு வந்து வைக்க, இருவரும் அதை மெளனமாகக் குடித்து விட்டு பில்லுக்குப் பணம் குடுத்து விட்டு வந்தனர். காரில் அஷ்வந்த் ஒன்றும் பேசவில்லை. ஷன்மதியை அவள் வீட்டில் இறக்கி விட்டவன், ஆண்டாளிடமும் விடைபெற்றுக் கிளம்பினான்.

அன்று இரவு முழுவதும் ஷன்மதிக்கு உறக்கம் வர மறுத்தது. இப்போதைக்குத் திருமண ஏற்பாட்டை நிறுத்தியாச்சு. அஷ்வந்த் இல்லை என்றால் வேறு பையன் என்று சொன்னால்என்ன செய்வது. நான் இப்படியே வாழ்ந்து விடுவேன் என்று தந்தையிடம் சொல்ல முடியுமா. ஏன் என்று கேட்டால் என்ன சொல்வது. விஷ்ணுபரத்தையும் மறக்க முடியாமல் என்ன இது வேதனை. பேசாமல் செத்து போய்விடலாமா என்று கூட ஒரு எண்ணம் அவளுக்குத் தோன்றியது. ஆனால் பாட்டி சொன்ன அறிவுரை ஞாபகத்தில் வந்தது. என்ன நடந்தாலும் போராட வேண்டும். கோழைத்தனமாக முடிவு எடுக்கக் கூடாது என்று எண்ணி அவளுடைய இஷ்ட கடவுள் பெருமாள் (விஷ்ணு?) மேல் பாரத்தைப் போட்டு விட்டு உறங்கினாள்.

மறுநாள் விடுமுறை என்பதால் மெதுவாக எழுந்து தன் வேலைகளைச் செய்து கொண்டு இருந்தாள் ஷன்மதி. திடீரென்று தன் அறைக் கதவை திறந்து கொண்டு வந்த வீணாவை சற்றும் அவள் எதிர் பார்க்கவில்லை.

‘வா வா வீணா.என்ன திடீர்ன்னு வந்து இருக்க?’

‘மத்தவங்க தூக்கத்தைக் கெடுத்துட்டு நீ மட்டும் நிம்மதியா தூங்கி எந்திருச்சி இருக்க?’

‘என்ன வீணா ஏன் இப்படிப் பேசற? நான் யார் தூக்கத்தைக் கெடுத்தேன்?’

‘ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி பேசாதே. விஷ்ணு அண்ணா உன் மேலே எவ்வளவு பிரியம் வச்சு இருக்கார். ஆனா நீ அவரைக் கண்டுக்க மாட்டேங்கற. பிடிக்கலன்னு சொல்றவ முதல்லேயே அப்படி நடந்துக்கணும். கண்ணால சிக்னல் குடுக்குறது எல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா. நேத்து யாரோ ஒருத்தன் உன் கையைப் பிடிச்சு கூட்டிக்கிட்டுப் போறான். நீயும் பேசாம போற. அதைப் பார்த்துவிஷ்ணு அண்ணா எவ்வளவு வேதனைபட்டார்னு எனக்குத் தான் தெரியும். யாருடிஅது?’

‘வீணா ஏன் சத்தம் போடற? அவர் வேற யாரோ இல்லை. என் அப்பாவோட சிநேகிதரோட பையன். எனக்கும் சின்ன வயசுல இருந்து பிரன்ட்’

‘ஓகே ஓகே ,அதையெல்லாம் விடு. விஷ்ணு அண்ணாவை நீ ஏன் ஏமாத்துற?’

‘நான் எங்கே ஏமாத்தினேன். அவரா நான் காதலிக்கிறேன்னு தப்பா நினைச்சா நான் என்ன பண்றது’ வீணா பதில் பேசாமல் ஷன்மதியின் அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஷன்மதியின்புத்தகங்கள் அடிக்கி இருக்கும் மேஜை அருகே சென்றவள், அதில் இருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து,

‘இதைப் பாரு நீ பொய் சொல்றேன்னு புரியும்’ என்று அவள் முகத்திற்கு நேரே நீட்டினாள்.

ஏனெனில் அந்தப் புத்தகத்தில் “விஷ்ணுபரத்” என்ற பெயர் ஸ்ரீராமஜெயம் போல் வரிசையாக எழுதப்பட்டு இருந்தது. அதைப் பார்த்த ஷன்மதி அந்தப் புத்தகத்திலேயே முகத்தைப் புதைத்து கதறி அழத் தொடங்கினாள். ஷன்மதியின் அழுகையைக் கண்ட வீணா பதறி போய் அவள்அருகில் அமர்ந்து ,

‘ஷன்மதி ஏன் அழறபா? நீ விஷ்ணு அண்ணாவை விரும்பறது எனக்கு

தெரியும். ஏன் அதை மறைக்கிற. அப்பா அம்மா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்களா? இல்லை வேற ஏதாவது பிரச்சினையா என்னன்னு சொல்லுப்பா. நீ வாயை திறந்து சொன்னால் தானே ஏதாவது செய்ய முடியும்’

யாரிடமும் தன் மன வேதனையைச் சொல்ல பயந்த ஷன்மதி முதல் முறையாக வீணாவிடம்தன் மனதை திறந்தாள். ஷன்மதி சொல்ல சொல்ல வீணாவின் முகம் இறுகியது. இந்தச் சின்ன வயதில் அனுபவிக்கக் கூடாத வேதனையைத் தன் தோழி அனுபவித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு அவளின் கண்களும் கண்ணீர் வடித்தது. அது தான் நட்பு. விஷ்ணுவிற்கு யுவன் எப்படியோ அது போல் ஷன்மதிக்கு வீணா.

விழியில் விழுந்து…இதயம் நுழைந்து.

அத்தியாயம்:18.

ஷன்மதியின் வாழ்வில் நடந்த கொடுமையைக் கேட்க கேட்க வீணாவின் மனம் பதறியது. பேப்பரிலும், டிவியிலும் படித்த பார்த்த சம்பவங்கள் தன் தோழிக்கும் ஏற்பட்டு இருக்கும் என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. இப்படியும் மனித மிருகங்கள் இருக்கிறதா என்பதை அவளால் நம்ப முடியவில்லை. இருக்கிறதே அதற்குச் சான்றாய் தன் தோழியின் நிலைமை எடுத்துக் கூறியது. ஷன்மதிக்கு எந்த ஆறுதல் வார்த்தை சொல்லி தேற்றுவது என்று வீணாவிற்குத் தெரியவில்லை. எந்த ஆறுதல் மொழியும் அவள் மனக்காயத்தை ஆற்றாது என்பது புரிந்து, ஷன்மதியின் அருகில் சென்று அவள் தலையை ஆறுதலுடன் தடவிக் குடுத்தாள்.

‘இப்ப சொல்லு வீணா. நான் என்ன பண்ணட்டும். ஒரு பக்கம் பெண்மை பறி போய் நிக்கிறேன். என் நிலை தெரிந்தும் நான் பரத் மேல் ஆசை பட்டது தவறு. மாசுபட்ட நான் அவரைத் திருமணம் செய்வதே பாவம். மறுபக்கம் என் அப்பா அவர் பட்ட கடனுக்கு நான் நன்றி கடன்படணும்னு சொல்றாரு. என்னால் இரண்டையுமே செய்ய முடியாது.’

‘ஆமாம் நீ உன் அப்பா பார்த்து இருக்கும் மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்யப் போறதில்லையா?.’

‘எப்படி வீணா அது முடியும். என் மனதில் பரத்திற்கு மட்டுமே இடம் உண்டு. நான் அஷ்வந்த் கிட்டே சொல்லிட்டேன். இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று.’

‘அப்பாடி எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு. ஷன்மதி நீ விஷ்ணு அண்ணாவை விரும்பறியான்னு தான் எனக்குத் தெரிய வேண்டி இருந்துச்சு. அது தெரிஞ்சுருச்சு. நீ விஷ்ணு அண்ணா கிட்ட மனம் விட்டு பேசு. இந்தக் காரணத்திற்காக எல்லாம் அண்ணா கைவிட மாட்டார்.’

‘இல்லை வீணா அது மட்டும் என்னால் முடியாது.’

‘ஏன் ஷன்மதி அப்படிச் சொல்ற?. இது ஒரு விபத்து. இதுக்கு நீ எப்படிப் பொறுப்பாவே.’

‘வீணா நீயும் ஒரு பெண். என் நிலைமையில் நீ இருந்து யோசித்துப் பாரு உனக்குப் புரியும்.’

ஷன்மதியின் பதிலில் வீணா வாயடைத்து போனாள். ஆம் தனக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுத் தன்னால் திருமணம் செய்ய முடியுமா? நினைக்கும் போதே கஷ்டமாக இருக்கிறதே, இதில் எப்படி ஷன்மதியை வற்புறத்த முடியும்?.ஆனாலும் தோழியின் வாழ்வு கண் முன்னாடி கேள்விக்குறியாய் இருப்பதைக் கண்டு, கண்டும் காணாமலும் இருக்க முடியவில்லை.

‘ஷன்மதி உன் நிலைமை எனக்குப் புரியுது. அதற்காக இப்படியே இருந்து விடப் போறியா? அஷ்வந்த் இல்லாட்டி உன் அப்பா எப்படியும் வேறு மாப்பிள்ளை பார்க்க தான் போறார். அதுக்கு நீ விஷ்ணு அண்ணா கிட்ட சம்மதம் சொன்னால் என்ன? நான் என்ன உன்னை ஓடிப் போயாய் கல்யாணம் செய்யச் சொல்றேன். உன் விருப்பத்தை இப்ப சொல்லு. படிப்பு முடிவதற்குள் அண்ணாவும் நல்ல நிலைமைக்கு வந்துருவாங்க. அதுக்கு அப்புறம் உங்க அப்பா, அம்மா சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கோங்க.’

ஷன்மதி பதில் பேச வாயைத் திறப்பதற்குள், ஆண்டாள் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தார். ஷன்மதியின் கண்கள் சிவந்து இருப்பதைப் பார்த்து அருகில் வந்தவர்,

‘ஏண்டா ,ஏன் கண்ணெல்லாம் சிவந்து இருக்கு?.’

‘ஒண்ணும் இல்லைம்மா லேசா பீவரா இருக்கு அதான்.’

‘டாக்டர்கிட்ட போவோமா மதி?.’

‘நான் டேப்லட் போட்டுட்டேன். சரியா போய்டும்மா.’

‘சரி சரி. காலையில் இருந்து ரூமிலேயே இருக்கியேன்னு பார்க்க வந்தேன். சரிம்மா நீயும், வீணாவும் சாப்பிட வாங்க. வீணா அவளைக் கூட்டிட்டு வாம்மா.’

‘சரி ஆண்ட்டி’ ஆண்டாள் சென்றதும் வீணா ஷன்மதியை பார்த்து கேட்டாள்.

‘என்ன ஷன்மதி நான் சொல்றது கரெக்ட் தானே.’

‘நீ சொல்லறதை கேட்டுக்கும் போது எனக்கும் பரத்தை கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தைகளோடு வாழணும் என்று ஆசையா தான் இருக்கு. அது என்னைப் பொறுத்தவரை வெறும் ஆசை மட்டும் தான். என்றைக்குமே நடக்காத ஒன்று. எந்த ஆண்மகனும் தன் மனைவி யார் கைபடாத பூவாகத்தான் இருக்கணும் என்று நினைப்பாங்க. நான் கை பட்டு கசங்கிய மலர். என்னை ஏற்றுக் கொள்ளச் சொல்வது கூடப் பாவம். என்னைக் காதலித்த பாவத்திற்கு அவருக்கு இந்தத் தண்டனை தேவை இல்லை. என் வாழ்வில் யாருடனும் திருமணம் என்பதுக்கே இடம் இல்லை. அப்பாவிடமும் சந்தர்ப்பம்

கிடைக்கும் போது சொல்லி விடுவேன். என் மனதில் உள்ள பரத்தின் நினைவில் என் வாழ்நாள் முழுவதையும் கடந்து விடுவேன். ப்ளீஸ் வீணா என்னை வற்புறுத்தாதே. அவர் வேறு நல்ல பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழ வேண்டும்.’

‘ஷன்மதி நீ எடுத்து இருக்கும் முடிவு பைத்தியகாரத்தனம். எதுக்கும் ஒரு முறை விஷ்ணு அண்ணாவிடம் பேசி பாரேன்.

‘என்ன பேச சொல்ற. என்னை ஏத்துக்கோ என்றா. ஒரு வேளை அவர் மறுத்துட்டா, இல்லை கேவலமா என்னைப் பார்த்தா அந்த நிமிடம் நான் செத்து போய்விடுவேன் வீணா. அதனால் இது தான் என்னுடைய இறுதி முடிவு.’

ஷன்மதியின் குரலில் இருந்த உறுதி கண்டு வீணாவிற்கு ஆச்சிரியம் பிளஸ் ஆதங்கம் வந்தது. பயந்து கொண்டு இருந்த ஷன்மதியின் குரலில் இருந்த உறுதி அவளை ஆச்சிரியப்படுத்தியது. தன் வாழ்வை தானே வீணாக்கி கொள்கிறாளே என்ற ஆதங்கம் வீணாவின் மனதை கலங்க வைத்தது. ஷன்மதியை பரிதாபத்துடன் பார்த்தபடி வெளியேறினாள் வீணா.

ஷன்மதியின் வீட்டில் இருந்து வெளியேறிய வீணா நேரே கல்லூரிக்கு தான் சென்றாள். ஏற்கெனவே விஷ்ணுவிடம் சொல்லி வைத்து இருந்தாள், தனக்காகக் காத்து இருக்கும் படி. வீணாவிற்காகக் காத்து இருந்த விஷ்ணுவின் மனதிலும், ஆயிரம் சஞ்சலங்கள். ஷன்மதி என்ன பதில் சொல்லி இருப்பாள். இனி கல்லூரி விடுதியிலும் தங்க முடியாது.

டிரைனிங்காக வர சொல்லி இருந்த கம்பனிக்கு செல்ல வேண்டும். முதலில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் வரச் சொல்லி இருந்தார்கள். கடைசித் தேர்வின் மதிப்பெண்கள் வந்ததும், அதைக் குடுத்தால் போதும் என்று சொல்லி விட்டார்கள். இப்பொழுது ஷன்மதியின் பதிலை வைத்து தான் அவன் தன் பயணத்தைத் தீர்மானிக்க வேண்டும். காதல் திருமணத்திற்கு அவனின் பெற்றோர் தடை சொல்ல மாட்டார்கள் என்று அவனுக்கு நம்பிக்கை. ஷன்மதி மட்டும் சரி என்று சொன்னால் பெற்றோர் ஆசியுடன் அவளைக் கைப்பிடிக்க வேண்டும். நினைக்கும் போதே மனம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கியது.

அதனால் வீணாவின் வரவிற்காக ஆவலுடன் காத்து இருந்தான். அதோ தூரத்தில் வீணா வந்து கொண்டு இருந்தாள். விஷ்ணு ஓடிச் சென்று வீணாவின் அருகே சென்றான். ஆனால் வீணாவின் முகத்தைக் கண்டதும் அவனின் ஆவல் வடிந்து விட்டது. அவளின் முகத்தில் இருந்த கவலை அவனையும் தொற்றிக் கொண்டது.

‘என்ன வீணா ஷன்மதி கிட்ட பேசினியா? என்ன சொல்றா?’

வீணாவிற்கு விஷ்ணுவிடம் இதை எப்படிச் சொல்வது. ஷன்மதி சொல்வது போல் அவளைப் பத்தி கேவலமா நினைத்தால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.

‘வீணா நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாமல் என்ன யோசிச்சுகிட்டு இருக்க?’

‘அண்ணா எந்த நிலையிலும் நீங்கள் ஷன்மதியை கை விட மாட்டீங்களே?.’

‘வீணா இது என்ன அபத்தமான பேச்சு. என்ன சொன்னா ஷம்மு. முதல்ல அதைச் சொல்லு.’

‘அண்ணா நீங்க நான் சொல்லப் போறதை கேட்டு ஷன்மதியை வெறுத்துட கூடாது.’

‘வீணா ஷம்மு என்னோட உயிர். அவளைப் போய் நான் வெறுப்பேனா. என்ன சொல்லு?.’

வீணா சிறிது தயக்கத்துடனேயே சொல்ல ஆரம்பித்தாள். அவளும் பெண் தானே ஒரு ஆணிடம் இதை எப்படிச் சொல்வாள். அவளின் தயக்கத்தைக் கண்ட விஷ்ணு ,

‘வீணா உனக்கு ஒரு அண்ணா இருந்தா எப்படிப் பீல் பண்ணுவியோ அப்படி என்னை நினைச்சுக்கோ’.

வீணாவின் மனம் அந்தப் பதிலில் கொஞ்சம் திருப்தி அடைந்தது. ஷன்மதி அவளிடம் சொன்னதை எல்லாம் ஒன்று விடாமல் கூறியவள், ‘அண்ணா அவள் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன். கடைசி வரைக்கும் உங்கள் நினைவில் வாழ்ந்து விடுவேன் என்று சொன்னாள்.’

விஷ்ணுவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. வீணா கூறியதை கேட்டதும் திக்பிரமை பிடித்து நின்றுவிட்டான். அன்று இடி மின்னல் பார்த்து அவள் பயந்த போது, என்ன இவள் சிறு பிள்ளை போல் பயப்படுகிறாள் என்று தப்பாக அல்லவா நினைத்துவிட்டேன். உன் மனதில் இவ்வளவு பெரிய வேதனையா. உடனே சென்று அவள் துயர் துடைக்க வேண்டும் என்று மனம் பரபரத்தது.

‘அண்ணா நீங்க ஷன்மதியை வெறுத்துற மாட்டீங்களே?’ வீணாவின் குரல் தயங்கி தயங்கி ஒலிக்கவும் தான் சுயநினைவுக்கு வந்தான்.

‘என்ன வீணா இப்படிக் கேட்டுட்ட. நான் விரும்பறது ஷம்முவை தான். அவள் கடந்த காலம் தேவை இல்லாதது. அவள் மனதில் நான் இருக்கிறேன் அது போதும் எனக்கு.’ என்று சொன்னவன்,

‘வீணா இந்த விஷயம் எதுவும் யுவனுக்குத் தெரிய வேண்டாம். மேலும் மேலும் ஷம்முவை தலை குனிய வைக்க வேண்டாம். என்னதான் என் நண்பன் என்றாலும், உன் அண்ணன் என்றாலும் இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வானோ தெரியாது. அவன் தன்னை அறியாமல் என் பெற்றோரிடம் சொல்லி விட்டால், அவர்களின் பார்வையில் ஷம்மு தவறானவளாக நினைக்கக் கூடும். உனக்கும் எனக்கும் தெரிந்தது நமக்குள்ளேயே இருக்கட்டும்.’

‘விஷ்ணு அண்ணா நானும் அதைத் தான் நினைத்தேன். நான் யாரிடமும் இதைப் பற்றிக் கூறமாட்டேன். என்னை நீங்கள் நம்பலாம்.’

‘ரொம்ப நன்றி வீணா.’ என்றவன்,

‘வீணா எனக்கு ஒரு ஹெல்ப் மட்டும் பண்ண முடியுமா?.’

‘சொல்லுங்க அண்ணா செய்றேன்’

‘எனக்கு ஷம்முவை பார்க்கணும் கூட்டிக் கொண்டு வரமுடியுமா?’

‘கட்டாயம் அண்ணா. அவளும் நீங்களும் சந்திச்சுப் பேசினால் தான் ஒரு முடிவுக்கு வரமுடியும் அவளின் சந்தோசம் உங்களின் கையில் தான் இருக்கிறது. என்னைக்கு என்று சொல்லுங்கண்ணா ?.’

‘கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு வீணா. என்னைக்குன்னு நான் உனக்குப் பிறகு சொல்றேன்.’

‘ஓகே அண்ணா எதுவாக இருந்தாலும் நல்ல முடிவா எடுங்க. ஷன்மதி பாவம்.’ என்று சொன்னபடி விஷ்ணுவிடம் விடை பெற்றாள் வீணா.

விஷ்ணுவின் மனதில் ஷன்மதியின் துயர் துடைக்க வேண்டும். அவளைத் தன் கண்ணின் இமைக்குள் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

‘ஷன்மதியின் விருப்பத்தை எதிர் பார்த்தால் ஒன்றும் செய்ய முடியாது. இனி பேச்சு வார்த்தை கிடையாது. செயலில் தான் தன் காதலை,அன்பை அவளுக்கு உணர்த்த வேண்டும் ‘ என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

வீணா சென்ற கொஞ்ச நேரத்தில் ஸ்ரீநிவாசன் வீட்டிற்கு வந்தார். அவரின் முகம் கோபத்திலும், குழப்பத்திலும் அவர் இருப்பதை எடுத்துக் காட்டியது.

2 Comments

  1. அஸ்வந்த் ஷண்மதிய புரிந்து கொண்டான்

  2. ஸ்ரீநிப்பா பிள்ளைய கோபப்படாதீர்கள்… அவளே நொந்து போயிருக்கா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *