“நிலவோடு பேசும் மழையில்…” – 6 9

அத்தியாயம் : 6

 

அலுவலக அறையில் அமர்ந்திருந்த கதிர்வேலு மிகவும் பரபரப்பாக இருந்தான். திவ்யாவின் வருகை அவனுக்கு எந்தளவிற்குச் சந்தோசத்தைக் கொடுத்ததோ… அந்தளவிற்கு அவனுக்கு டென்சனை கொடுத்தது. அவன் அவளைக் கடைசியாகப் பார்த்தது ஹரீஷ் இறந்த வீட்டில்… அவளது அன்னையின் தோளில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தவளை காண காண அவனுள் வேதனை எழுந்தது. அதனால் அவன் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது கிளம்பி வந்து விட்டான்.

 

திவ்யாவிற்குத் திருமணம் என்று கேள்விப்பட்டதும் அவன் எந்தளவிற்கு வேதனை கொண்டானோ… அதே அளவிற்கு அவள் கணவனை இழந்து நிற்கும் போதும் வேதனை கொண்டான். என்ன இருந்தாலும் அவள் அவனது அன்பிற்குரியவள் அல்லவா! இப்போதும் அவளது நிலையை நினைத்து அவனது நெஞ்சில் பாரமேறிப் போனது.

 

கதிர்வேலின் தந்தை ஒரு அரசியல்வாதி… இப்போது அமைச்சராக இருக்கிறார். மதுரை மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் இருந்து அரசியலுக்கு வந்து கடும் உழைப்புக்கு பிறகு இப்போது அமைச்சராகி இருக்கிறார். தந்தையைப் போன்று அவனும் பார்ப்பதற்குக் கரடுமுரடான தோற்றம் உடையவன். அவனது தந்தை அவனை அரசியலுக்கு வர சொல்லி வற்புறுத்தி கொண்டிருக்கிறார். எதிர்பாராத விதமாகத் திவ்யாவின் திருமணம் அவனைச் சற்று செயலிழக்க செய்துவிட்டது. அதனால் ப்ரஷன்ஜித்துடன் இணைந்து நடத்தும் இந்த நிறுவனத்துடன் அவன் முடங்கிப் போனான். யாரையும் பார்ப்பதற்குப் பிடிக்கவில்லை. கடந்த ஒன்பது மாதங்களாக அவன் ஏதோ ஒருவித பற்றற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்போது திவ்யாவின் வருகையால் அவனது மனதில் பழைய மகிழ்ச்சி திரும்பி உள்ளது.

 

திவ்யாவை முதன் முதலில் சந்தித்த நிகழ்வை அவன் இப்போது நினைத்துப் பார்த்தான். ப்ரஷன்ஜித் வீட்டில் தான் அவன் திவ்யாவை முதன்முறையாகப் பார்த்தது. ஷிவாரிகாவுக்கும், திவ்யாவுக்கும் ஒரு வயது தான் வித்தியாசம் என்பதால் திவ்யா எப்போதும் ஷிவாரிகாவுடன் தான் சுற்றி கொண்டிருப்பாள். ஷிவாரிகா தைரியமான பெண்… ஆனால் திவ்யா மிகவும் பயந்த சுபாவம் உடைய பெண்… அதனால் என்னமோ திவ்யா ஷிவாரிகாவுடன் ஒட்டி கொண்டே இருப்பாள்.

 

அன்று கதிர்வேல் ப்ரஷன்ஜித்தை பார்ப்பதற்காக அவனது வீட்டிற்கு வந்திருந்தான். வீட்டில் யாருமில்லை. அவன் யோசித்தபடி உள்ளே வந்த போது உள்ளே இருந்து திவ்யா வந்தாள். அவளைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது.

 

“ஏய் பாப்பா, இங்கே வா…” என்று அவன் அவளை அதிகாரத்துடன் அழைத்தான். அவளுக்கு அப்போது பதினெட்டு வயது தான் இருக்கும். அவள் பார்ப்பதற்கு மிகவும் சின்னப் பெண்ணாக இருந்தாள். அதனால் அவன் அப்படி அழைத்தான்.

 

அய்யனார் போன்று ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் நின்றிருந்த கதிர்வேலை கண்டு திவ்யாவின் விழிகளில் மிரட்சி எழுந்தது. அவள் பயத்துடன் அவனை நோக்கி வந்தாள்.

 

“ப்ரஷன் இருக்கானா?” அவன் குரலை உயர்த்திக் கேட்க…

 

“அது வந்து சார்…” என்று திணறியவளை கண்டு அவனுக்குச் சற்றுக் கோபம் வந்தது. அவன் அவசர வேலையாக நண்பனை தேடி வந்திருக்கிறான். அவனது அவசரம் அவனுக்கு. அவளது பயம் அவளுக்கு…

 

“சீக்கிரம் பதிலை சொல்லு…” அவன் அதட்டியதும் தான் தாமதம் அவள் ஓவென்று அழுதுவிட்டாள்.

 

அவள் அழுவதைக் கண்டு அவன் பதற்றம் அடைந்தான். யாராவது பார்த்தால் அவனை அல்லவா தவறாக நினைக்கக் கூடும்.

 

“பாப்பா, இங்கே பாரு… அழாதே… நான் உன்னை ஒண்ணும் கேட்கலை. நீ போ…” என்று அவன் சமாதானமாகக் கூற… அதற்குள் திவ்யாவின் அழுகை சத்தம் கேட்டு ப்ரஷன்ஜித், ஷிவாரிகா இருவரும் உள்ளே இருந்து வந்துவிட்டனர்.

 

“டேய் திவியை என்னடா சொன்ன?” ப்ரஷன்ஜித் நண்பனை கண்டு கேட்க… ஷிவாரிகா திவ்யாவை ஆறுதலாக பற்றிக் கொண்டு கதிர்வேலை கேள்வியாய் பார்த்தாள்.

 

“நீ எங்கேன்னு கேட்டேன்டா… அதுக்குள்ள இந்தப் பாப்பா அழுதுருச்சு…” கதிர்வேல் சொன்ன பாணியில் ஷிவாரிகா விழுந்து விழுந்து சிரித்தாள்.

 

“திவ்யா பாப்பாவா? அவள் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறாள். கதிரண்ணா இதெல்லாம் டூ மச்.” என்று ஷிவாரிகா சிரிக்க… அதைக் கேட்டு ப்ரஷன்ஜித், கதிர்வேலுவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

 

“இதுக்குப் போய் யாராவது அழுவாங்களா திவி?” ப்ரஷன்ஜித் திவ்யாவிடம் தன்மையாகக் கேட்க…

 

“அவங்க என்னை அதட்டினாங்க…” அழுது கொண்டே தேம்பியவளை கண்டு எல்லோருக்கும் சிரிப்பு வந்தது.

 

“அம்மா தாயே… நான் உன் கிட்ட கேட்டது தப்பு தான்ம்மா. என்னை மன்னிச்சிரு.” இரு கரங்களையும் கூப்பியபடி கதிர்வேல் அவளிடம் மன்னிப்பு கேட்க… திவ்யாவின் முகத்தில் சிறு சிரிப்புத் தவழ்ந்தது. மற்ற இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.

 

அன்றிலிருந்து கதிர்வேலை கண்டால் திவ்யா சிறு புன்னகையுடன் ஒதுங்கி விடுவாள். அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேச மாட்டாள். அவளது அமைதியான குணமே அவனது பார்வையை அவள் புறம் திரும்ப வைத்தது. அவளைக் கவனிக்க வைத்தது. அவனுடைய வீட்டுப் பெண்கள், உறவினர் பெண்கள் எல்லோருமே அதிரடியானவர்கள். இவளை போன்று அமைதியானவர்கள் அல்ல. அதிர்ந்து பேச தெரியாதவர்கள் அல்ல. அதனால் அவனுக்குத் திவ்யாவை காணும் போது எல்லாம் வெகு சுவாரசியமாக இருக்கும்.

 

இப்படி நாட்கள் சென்று கொண்டிருந்த போது ஒரு நாள் திவ்யா ப்ரஷன்ஜித்தின் தோட்டத்தில் ஸ்கிப்பிங் ஆடி கொண்டிருந்தாள். பக்கத்தில் அம்ரிதாவின் மகள் நின்றிருந்தாள். முதலில் கதிர்வேலுவுக்கு எதுவும் தவறாகத் தெரியவில்லை. பிறகு ஏதோ உள்ளுணர்வு உந்த சற்று ஏறிட்டு பார்த்தவனின் விழிகள் ஆத்திரத்தில் சிவக்க ஆரம்பித்தது. பக்கத்து வீட்டு மாடியில் இருந்து ஒருவன் திவ்யாவை விழிகளால் கபளீகரம் செய்து கொண்டிருந்தான். அவ்வளவு தான் கதிர்வேலுவுக்குக் கோபம் வந்துவிட்டது. அந்தக் கோபத்துடன் திவ்யாவை திட்ட போனவன் ஒரு நொடி சற்று நிதானித்தான். பின்பு அங்கிருந்து வெளியேறியவன் நேரே பக்கத்து வீட்டுக்கு சென்று அந்தப் பொறுக்கியை அடித்துத் துவைத்து எடுத்து விட்டான். அந்தப் பொறுக்கியின் முகம் எல்லாம் வீங்கி கண் தெரியாது போனது. அதன் பின் அவனுக்குப் பார்வை சரியாக ஒரு வாரமானது.

 

அதை அறிந்த ப்ரஷன்ஜித் நண்பனிடம் என்னவென்று விசாரித்தான். கதிர்வேல் அவனிடம் நடந்ததைக் கூறினான்.

 

“எத்தனை நாளைக்குத் தான்டா நம்ம வீட்டுப் பொண்ணுங்களைக் கட்டுப்படுத்துறது. அதான் அந்தப் பொறுக்கிக்கு ரெண்டு காட்டு காட்டிட்டு வந்தேன். எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அவனைக் கொன்னு போட்டுருப்பேன்.”

 

“அவனை…?” ப்ரஷன்ஜித்தற்கும் கோபம் வந்தது.

 

“அதெல்லாம் நான் நல்லா கொடுத்துட்டு தான் வந்தேன்.” கதிர்வேல் நண்பனை சமாதானப்படுத்தினான்.

 

அதன் பிறகு எந்தப் புள்ளியில் கதிர்வேலுவுக்குத் திவ்யா மீது ஈர்ப்பு வந்ததோ? எப்போது அந்த ஈர்ப்புக் காதலாக மாறியதோ? அது அவனுக்கே தெரியாது. திவ்யாவை தான் காதலிப்பதை உணர்ந்ததும் அவன் நேரே நண்பனிடம் விசயத்தைக் கூறிவிட்டான். ப்ரஷன்ஜித் அவனை ஆச்சரியமாகப் பார்த்தான். கதிர்வேலை பற்றி அவனுக்கு நன்கு தெரியும். நல்லவன், வல்லவன்… அதனால் நண்பனது காதலுக்கு அவன் பச்சை கொடி காட்டினான்.

 

“நான் வேணா மாமா கிட்ட பேசவா கதிர்?”

 

“இல்லை வேண்டாம் மாப்ள… திவி படிப்பை முடிக்கட்டும்.” என்று அவன் மறுத்துவிட்டான்.

 

திவ்யா படிப்பு முடியும் போது எல்லாமே மாறிப் போனது. திவ்யா ஹரீஷை திருமணம் செய்து கொண்டாள். இதில் திவ்யாவின் விருப்பம் இருக்கிறது என்று தெரிந்ததும் ப்ரஷன்ஜித்தாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை. கதிர்வேலின் காதல் ஊமை குயிலின் மௌனராகமாகவே போய்விட்டது. அன்று உலகம் வெறுத்தவன் தான். இன்று வரை அப்படித்தான் இருக்கிறான்.

 

“கதிர்…” என்ற குரலில் சிந்தனை கலைந்து ஏறிட்டு பார்த்தவன் அறை வாயிலில் நின்றிருந்த நண்பனை கண்டதும் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றான். அவனது பார்வை ப்ரஷன்ஜித்தின் பின்னே துளாவியது. நண்பனின் பார்வையை அறிந்தவனாய் ப்ரஷன்ஜித் தன் பின்னால் திரும்பி,

 

“திவி வாங்க…” என்று அழைத்தான். பின்னால் நின்றிருந்த திவ்யா மெதுவே முன்னால் வந்தாள்.

 

அவளைக் கண்டதும் கதிர்வேல் அப்படியே உறைந்து போனான். எப்படியிருந்த பெண்… இன்று அப்படியே உருக்குலைந்து போய் இருந்தாள். அவளது நிலை கண்டு அவனது இதயம் மௌனமாய் இரத்த கண்ணீர் வடித்தது.

 

“வாங்க… வாம்மா…” கதிர்வேல் பேச்சு வராது திணறினான். ப்ரஷன்ஜித் தான் அவனுக்கு உதவிக்கு வந்தான்.

 

“திவ்யா… என்னுடைய மாமா பொண்ணு… நினைவு இருக்கா?” என்ற நண்பனை கண்டு கதிர்வேலும் புரிந்தார் போன்று சற்றுச் சுதாரித்துக் கொண்டு,

 

“நினைவு இருக்கு.” என்று கூறியவன் இருவரையும் அமர வைத்தான்.

 

வெளியில் சாதாரணமாகக் காட்டி கொள்ள நினைத்தாலும் கதிர்வேலால் அது முடியவில்லை. அவனால் தனது வேதனையை, வலியை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இன்னும் சிறிது நேரம் அவன் இங்கே இருந்தால் தன்னை மறந்து தனது மனதினை வெளிப்படுத்தி விடுவானோ என்று அஞ்சியவனாய் நாற்காலியில் இருந்து எழுந்தான்.

 

“என்ன கதிர்?” ப்ரஷன்ஜித் அவனைக் கண்டு புரியாது கேட்டான்.

 

“எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு.” என்றவன் நண்பனின் பதிலை எதிர்பாராது அறையை விட்டு வெளியேறினான்.

 

ப்ரஷன்ஜித் யோசனையாய் நண்பனின் முதுகை வெறித்தாலும் திவ்யாவின் முன் எதையும் காட்டி கொள்ளவில்லை.

 

“திவி, இது நம்முடைய நிறுவனம். அதனால் ப்ரீயா இருக்கலாம். உங்களுக்குச் சேல்ஸ் மேனேஜரை அறிமுகப்படுத்தி விடறேன்.” என்றவன் இன்டர்காம் எடுத்து மேலாளரை வர சொன்னான்.

 

மேலாளர் பெண் தான்… அதனால் திவ்யா எந்தவித சங்கடமும் இல்லாது அவருடன் இணைந்து பணி நடக்கும் இடத்திற்குச் சென்றுவிட்டாள். அதன் பிறகே ப்ரஷன்ஜித் நிம்மதி அடைந்தான். பிறகு ஞாபகம் வந்தவனாய் அவன் தனது நண்பனை தேடி சென்றான். விற்பனை நடக்கும் இடத்தில் கதிர்வேல் இல்லை. பின்பு யோசித்தவனாய் அலுவலக அறை அடுத்து இருக்கும் பால்கனி பக்கம் சென்றான். அவன் நினைத்தது போல் கதிர்வேல் அங்குத் தான் இருந்தான்.

 

“கதிர்…” அவனது அழைப்பிற்குத் திரும்பி பார்க்காது கதிர்வேல் சாலை போக்குவரத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“என்னாச்சுடா…? நீ தான் திவியைப் பார்க்க ஆவலா இருந்த. இப்போ என்னடா அவங்க வந்த பிறகும் இப்படி வந்து நின்னுக்கிட்டு இருக்க…” என்றவன் கதிர்வேலின் தோளில் கை வைத்தான். அதில் உணர்வு பெற்ற கதிர்வேல் திரும்பி பார்த்தான்.

 

“கதிர்…” நண்பனது விழிகளில் தேங்கியிருந்த கண்ணீரை கண்ட ப்ரஷன்ஜித் திகைத்துப் போனான்.

 

“என்னடா…?”

 

“முடியலை மாப்ள… அவளை இப்படிப் பார்க்க என்னால் முடியலை. எப்படியிருந்த பொண்ணுடா… ப்ச்…” என்றவனின் விழிகளில் இருந்து கண்ணீர் துளிகள் உருண்டோடியது.

 

“கதிர்…” என்றபடி ப்ரஷன்ஜித்தும் மனம் கலங்க அவனை அணைத்துக் கொண்டான்.

 

“எனக்குமே திவியை இப்படிப் பார்க்க முடியலைடா மச்சான். நீ தான் அவங்களைப் பழையபடி மாத்தணும்.”

 

“நிச்சயம் ஒரு நண்பனா அவங்களை மாத்துவேன். ஆனா காதலனா என்னால் முடியாதுடா. அவள் ஹரீஷை ரொம்பக் காதலித்து இருக்கிறாள். இடையில் நான் புகுந்து அவளுடைய காதலின் புனிதத்தைக் கெடுக்க விரும்பலை. நான் நண்பனாகவே கடைசி வரை இருந்துக்கிறேன்.” இதைச் சொல்லும் போது கதிர்வேலுவுக்கு வலிக்கத் தான் செய்தது. அவனுக்கே காதல் இத்தனை வலியை கொடுத்தது என்றால்… காதல் கணவனுடன் காதலுடன் வாழ்ந்த அவளுக்குக் காதல் எத்தகைய வலியை கொடுத்திருக்கும். அது மட்டுமே அவனது எண்ணமாக இருந்தது.

 

“நீ லூசா கதிர்? இதுக்காகவா திவியை இங்கே கூட்டிட்டு வந்தேன். என்ன செய்வியோ, ஏது செய்வியோ… ஹரீஷோட நினைவை திவி மனசில் இருந்து அழிக்கணும். அவன் கடந்த காலமாகக் கூடத் திவி மனசில் இருக்கக் கூடாது. காதலன், கணவன் எல்லாமும் நீ மட்டும் தான் இருக்கணும்.” என்றவன் நண்பனின் சட்டை காலரை பிடித்து,

 

“என்ன புரிஞ்சதா?” என்று மிரட்டலாய் கேட்க… நண்பனின் கோபம் ஏனென்று தெரியாத போதும் கதிர்வேலின் தலை தானாகச் சரியென்று ஆடியது. நண்பனின் சட்டையில் இருந்து கரங்களை விலக்கிய ப்ரஷன்ஜித் தனது கோபத்தினை அடக்க வழி தெரியாது இரு கரங்களையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி சாலையை வெறித்தான். அவனது விழிகள் கனலை கக்கி கொண்டிருந்தது.

 

“காதலாம் காதல்… மண்ணாங்கட்டி காதல்.” ப்ரஷன்ஜித் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

 

“டேய், நீயாடா இப்படிச் சொல்றது?” கதிர்வேல் ஆச்சரியமாய்த் தோழனை பார்த்தான்.

 

“நானே தான்… எதற்குத் தான் இந்தக் காதல் வந்து தொலைத்ததோ… எரிச்சலா இருக்கு.” என்றவனின் மனக்கண்ணில் சோக சித்திரமாய் அமர்ந்திருந்த ஹம்சவர்த்தினியின் தோற்றமே வலம் வந்தது. அவளை அணைத்து அவளது சோகத்தை ஒன்றும் இல்லாததாய்ச் செய்ய முடியாத நிலையில் இருக்கும் தன் நிலை குறித்து அவனுக்கே வெறுப்பாக இருந்தது.

 

“நீ ஈகோ பார்க்கிற ப்ரஷன்…” என்ற கதிர்வேலை திரும்பி பார்த்தவனின் விழிகளில் வலி தெரிந்தது.

 

“உனக்குச் சொன்னால் புரியாது கதிர். அவளாக வரணும். அப்படி வந்தால் மட்டுமே எங்க வாழ்க்கை நன்றாக அமையும். இப்போ போய் நான் அவளை என்னுடன் அழைத்து வந்து விடலாம் தான். ஆனால் அதற்குப் பிறகு…?” என்று கேள்வியாய் நிறுத்திய நண்பனை கதிர்வேலும் கேள்வியாகப் பார்த்தான்.

 

“வேதாளம் அடிக்கடி முருங்கை மரம் ஏறும். நான் ஒன்றும் விக்கிரமாதித்தன் இல்லை. அடிக்கடி மரமேறி வேதாளத்தைத் தூக்கிட்டு வர்றதுக்கு…” என்றவனைக் கண்டு கதிர்வேல் குபீர் என்று சிரித்து விட்டான்.

 

“ஹா ஹா… அழகான என் தங்கச்சியை வேதாளம்ன்னா சொல்ற… இரு இரு… தங்கச்சி கிட்ட போட்டு கொடுக்கிறேன்.” அதைக் கேட்டு ப்ரஷன்ஜித் உதடுகளில் புன்னகை அரும்பியது.

 

“டேய் டேய்… முறையை மாத்தாதே. அவள் உனக்கு மச்சினிச்சி முறை வருவாள்.”

 

“இல்லையே… அவள் எனக்கு…” கதிர்வேல் குழம்பி போனான்.

 

“இடையில் ஹரீஷ் புகுந்து குழப்பம் பண்ணியதற்கு நான் பிழையாக முடியாது. பொம்மாயி உனக்கு மச்சினிச்சி மட்டுமே.” நண்பனின் மனம் புரிந்து கதிர்வேல் அதை அமைதியாக ஏற்றுக் கொண்டான்.

 

“அப்போ எப்போ தான் உன் காதல் கதைக்குச் சுபம் போட போகிற மாப்ள…”

 

“நீ உன் காதலுக்குச் சுபம் போடும் போது…” என்று கண்சிமிட்டி சிரித்த ப்ரஷன்ஜித்திற்குமே அந்தக் கேள்விக்கான விடை தெரியவில்லை. அது ஹம்சவர்த்தினியின கையில் அல்லவா இருக்கிறது.

 

ம்ஹூம், அவள் உன் கையில் விலங்கு மாட்டுவதற்கு அல்லவா துடித்துக் கொண்டிருக்கிறாள். காதலா…? ஹா ஹா… அவள் உன் மேல் கொலைவெறியில் இருக்கிறாள்.அவனது மனசாட்சி கூட அவனைக் கண்டு கேலி செய்து சிரித்தது.

 

அன்று மாலை ப்ரஷன்ஜித் திவ்யாவை மீண்டும் வீட்டில் விட அழைத்து வந்து கொண்டிருந்தான். அமைதியாக வந்து கொண்டிருந்த திவ்யாவை பார்த்தவன்,

 

“நாளையில் இருந்து உங்களுக்கு மாமா தனியே கார் அனுப்பறதா சொல்லியிருக்காங்க. அந்தக் கார் அங்கேயே இருக்கட்டும். தினமும் நீங்களே கம்பெனிக்கு ட்ரைவ் பண்ணிட்டு போயிட்டு வாங்க.”

 

“நானா? தனியாவா?” திவ்யா மிகவும் யோசித்தாள்.

 

“நீங்களே தான்…” அவன் அழுத்தம் திருத்தமாய்க் கூறினான்.

 

“ம், சரி பாவா…” என்று யோசித்துக் கூறியவளை கண்டு அவனுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது.

 

ப்ரஷன்ஜித் திவ்யாவை வீட்டில் விட்டு விட்டு கிளம்பும் வரை ஹம்சவர்த்தினி வீடு வந்து சேரவில்லை. ஏன்? என்று யோசித்தவன் யாரிடமும் கேட்காது கிளம்பி விட்டான். திவ்யா தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டாள்.

 

கணவர் அருகில் அமர்ந்திருந்த பர்வதம் மட்டும் ப்ரஷன்ஜித்தை பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். பின்பு கணவர் புறம் திரும்பி,

 

“என்னங்க, எனக்கு ஒரு யோசனை தோணுது?” என்று கூற… கோபாலகிருஷ்ணன் என்னவென்று விழிகளால் வினவினார்.

 

“ப்ரஷன் திவிக்கு மாமா மகன் தானே. பேசாம திவியை அவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தால் என்ன? தங்கை மகள் வாழ்க்கைக்காகச் சிவகுமரன் இதற்குச் சரின்னு சொல்ல மாட்டாரா? எனக்கு நம்பிக்கை இருக்கு, ப்ரஷன் வீட்டில் ஒத்துக்குவாங்கன்னு… ப்ரஷனும் அப்படித்தான்னு நினைக்கிறேன். அவனுக்கு நம்ம திவி மேல் நிரம்ப அக்கறை இருக்கு. திவி வீட்டில் கேட்கவும் வேண்டாம். அவங்க பொண்ணு நலனில் அவங்களுக்கு அக்கறை இல்லாது இருக்குமா? என்ன நான் சொல்றது சரி தானே?”

 

பர்வதத்தின் கேள்விகளுக்குக் கோபாலகிருஷ்ணன் விழி மூடி திறந்து தனது சம்மதத்தைத் தெரிவித்தார். அதைக் கண்டு பர்வதம் மகிழ்ச்சி அடைந்தார்.

 

“ரொம்பச் சந்தோசம்ங்க… வெகு சீக்கிரமே அவங்க ரெண்டு பேர் வீட்டிலும் பேசுறேன்.” என்றவருக்குத் தனது மூத்த மகனின் நினைவு எழுந்து விழிகளில் கண்ணீர் கோர்த்தது.

 

“வாழ வேண்டிய வயசில் இப்படி அல்ப ஆயுசில் போயிட்டானே.” என்று அவர் அழுதபடி புடவை முந்தானையால் விழிகளைத் துடைத்துக் கொண்டார். அதைக் கண்டு கோபாலகிருஷ்ணனின் முகம் இருண்டது. பேச முடியாத அவர் தனது மனதிற்குள் மௌனமாகச் சொற்போர் நடத்தி கொண்டிருந்தார்.

 

நல்லவேளையாக ஹம்சவர்த்தினி தாயின் இந்தப் பேச்சினை கேட்கவில்லை. கேட்டிருந்தால் அவள் என்ன செய்திருப்பாளோ!

 

***********************************

 

காலையில் எழும் போதே ஷிவாரிகா உற்சாகத்துடன் எழுந்தாள். இன்று படப்பிடிப்பு மதியம் தான். அதனால் எல்லோருக்கும் காலையில் சிறிது நேரம் ஓய்வு அளிக்கப்பட்டது. படப்பிடிப்பு இல்லாததாலோ என்னவோ அவள் மிகவும் உற்சாகமாக இருந்தாள். தான் தங்கியிருந்த குடிலை விட்டு வெளியில் வந்தவள் அங்குத் தெரிந்த இயற்கை காட்சியில் மெய்மறந்து போனாள். அப்போது அங்குப் பூவின் மீது அமர்ந்து தேன் அருந்தி கொண்டிருந்த பட்டாம்பூச்சி ஒன்று அவளது மனதினை மிகவும் கவர்ந்தது. அடர் நீலம், கருப்பு, ஆரஞ்சு எல்லாம் கலந்த கலவையான நிறத்தில் அது மிகவும் அழகாய் இருந்தது.

 

“வாவ்…” என்றவள் அதைப் பிடிக்க ஓடினாள். அது அவளது கையில் அகப்படுவேனா என்று அங்கும் இங்கும் போக்குக் காட்டியது.

 

அங்கு ஒரு கல்லின் மீது அமர்ந்து பல் தேய்த்துக் கொண்டிருந்த தரணியைக் கண்டு,

 

“தரணி, அந்தப் பட்டர்ப்ளையைப் பிடிச்சு தா…” என்று அவள் கத்தினாள்.

 

அவள் கத்தியதில் தனது அறையில் அலைப்பேசியில் மூழ்கியிருந்த ஹர்ஷா எழுந்து வந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். அங்குப் பட்டாம்பூச்சிக்கு இணையாக அங்கும் இங்கும் துள்ளி திரிந்து கொண்டிருந்த ஷிவாரிகாவை கண்டு அவன் இமைக்க மறந்து போனான். முக்கால் ஜீன்ஸ் பேண்ட், ஆண்கள் அணியும் சட்டை அணிந்து பெண்களுக்கு உண்டான எந்த அணிகலன்களும் அணியாது, உயர்த்திப் போட்ட கொண்டையுடன் வெகு சாதாரணமாக இருந்தவளை கண்டு அவனது இதயம் தாளம் தப்பித் துடித்தது. ஆண்களை ஈர்க்கும் வண்ணம் கவர்ச்சியான உதட்டுச்சாயம் பூசாது, அரைக் குறை உடை அணியாது இருக்கும் ஒரு பெண்ணால் இத்தனை தூரம் ஒரு ஆணவனை ஆட்டிப்படைக்க முடியுமா? ஆனால் ஷிவாரிகாவால் அது முடிந்தது. அந்தக் கணம் அவன் அவளது தொள தொளவென்றிருந்த அவளது மேல் சட்டையைச் சபித்தான். அவளது அழகினை காண முடியவில்லையே என்கிற வருத்தம் அவனுக்கு…

 

என்னத்துக்குக் காலங்கார்த்தால ஏஞ்சல் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறாள்?’ என்று அவன் அவளை யோசனையுடன் பார்த்தான்.

 

“தரணி மாடே… பட்டர்ப்ளையைப் பறக்க விட்டுட்டியே…” இடுப்பில் இரு கைகளை ஊன்றியபடி அவள் தரணிய முறைத்தாள். அப்போது தான் ஹர்ஷாவிற்கு விசயம் புரிந்தது. அவனது உதடுகள் மெல்ல விரிந்தது. அவன் தனது குடிலை விட்டு வெளியில் வந்தான்.

 

“பறந்தால் தான் அது பட்டர்ப்ளை ஷிவா…” என்று தரணி சிரிக்க…

 

“ஜோக்கு… சிரிப்பு வரலை…” என்றவள் அருகில் இருந்த வாளியில் இருந்த நீரை எடுத்து அவன் மீது கவிழ்த்தாள்.

 

“ஏய், என்ன பண்ற?” என்றவன் அலறியடித்துக் கொண்டு எழுந்தான்.

 

“குளிக்கும் வேலை மிச்சம் தரணி பையா…” என்று சிரித்தவள் மீண்டும் பட்டாம்பூச்சியைத் தேடி சென்றாள்.

 

ஹர்ஷாவுக்கு அவளது செயல் சிரிப்பை வரவழைத்தது. அவன் சிரித்தபடி அவளையும், பட்டாம்பூச்சியையும் பார்த்தபடி நின்றிருந்தான். பட்டாம்பூச்சியோ அவளது கைகளில் அகப்படாது போக்கு காட்டி கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அது எங்கே சென்றது என்று தெரியாதபடி மாயமாகி காணாமல் போனது.

 

“ப்ச்… எங்கே போன? இரு, இரு… என்னைக்காவது ஒருநாள் உன்னைப் பிடிக்காம விட மாட்டேன்.” என்று சிறுபிள்ளை போல் இரு கைகளைத் தட்டி கொண்டு சபதம் போட்டவள் முன்பு போய் ஹர்ஷா நின்றான்.

 

“ஹாய்…” என்று புன்னகைத்தவனைக் கண்டு முகத்தைச் சுருக்கியவள் திரும்பி போக எத்தனித்தாள்.

 

“ஏஞ்சல்…” அவன் தன்னைத் தான் அழைக்கின்றான் என்று தெரிந்தும் அவள் அவனைக் கண்டு கொள்ளாது செல்ல முயல…

 

“உனக்குப் பிடிக்காத நான் உனக்குத் தேவையில்லை. ஆனால் உனக்குப் பிடித்த பட்டர்ப்ளை உனக்குத் தேவையில்லையா?” அவனது குரலில் சட்டென்று திரும்பியவளின் விழிகளில் ஆர்வம் மின்னியது. ஆனால் அவள் வாய்விட்டு அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அவனும் அவளது ஆர்வம் புரிந்தவனாய் தனது கையிலிருந்த பட்டாம்பூச்சியை அவள் முன் காட்டினான்.

 

“உனக்குத் தான்… இந்தா…” என்று அவன் அவளிடம் கொடுக்க… அவளும் தனது மனஸ்தாபத்தை மறந்தவளாய்,

 

“வாவ், தேங்க்ஸ்…” என்க… அவளின் பார்வை மறந்தும் அவனைப் பார்க்கவில்லை. அவனது கையிலிருந்த பட்டாம்பூச்சியின் மீது இருந்தது.

 

“வாங்கிக்கோ ஏஞ்சல்…” என்று அவன் மீண்டும் பட்டாம்பூச்சியை அவளிடம் நீட்ட… அவள் பட்டும் படாமல் அவனது கையிலிருந்து பட்டாம்பூச்சியை வாங்கிக் கொண்டாள். பட்டாம்பூச்சி போன்று மென்மையாகத் தனது கை விரல்களை வருடி சென்ற அவளது கைவிரல்களின் ஸ்பரிசத்தில் அவன் தான் ஸ்தம்பித்துப் போனான்.

 

ஷிவாரிகா பட்டாம்பூச்சியைத் தூக்கி பிடித்து அதை அழகு பார்த்தவள் பின்பு அதற்கு முத்தமிட்டாள்.

 

ம்ஹூம், பேசாம பட்டர்ப்ளையா பிறந்திருக்கலாம்.அந்தக் காட்சியைக் கண்டவன் பெருமூச்சு விட்டான்.

 

“உன்னைச் சுந்திரமா பறக்க விடாம பிடிச்சு வச்சுட்டேன். சாரி…” என்றவள் அதைப் பறக்க விட்டாள்.

 

“ஹேய், என்ன பண்ற?” அவன் பதற…

 

“நம்ம சந்தோசத்துக்காக அதனுடைய சந்தோசத்தைக் கெடுக்கக் கூடாது…” அவனைப் பாராது கூறியவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

 

ஹர்ஷாவுக்கு அவள் கூறியது எதுவும் மனதில் ஏறவில்லை. மாறாக அவளை எப்படி நெருங்குவது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவள் மனதில் அவனுடைய நிலை, பட்டாம்பூச்சியின் ஆரம்பக் கட்ட நிலையான புழுவின் அருவருப்பான நிலை தான். அதை அவன் அறியவில்லை. அவன் பட்டாம்பூச்சியாக மாற, அதாவது அவளது காதலை பெற… அவன் கூட்டுப்புழு போன்று தனது கெட்ட செயல்களைத் தவிர்த்து ஒருவித தவ வாழ்க்கை வாழ வேண்டும். அப்போது தான் அவன் அவளுக்குப் பிடித்த பட்டாம்பூச்சியாக மாற முடியும். இதை அவன் உணர்வதற்குள் என்னவெல்லாம் இழக்க போகின்றானோ…!

 

***************************

 

அன்று ஞாயிறு என்பதால் ஹம்சவர்த்தினி நிதானமாகத் தனது நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்தாள். அதில் சில சந்தேகம் வந்ததும் தனது தணிக்கையாளரை அழைத்து விபரம் கேட்க… அவரோ,

 

“மிஸ்டர். ப்ரஷன்ஜித் சார் தான் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தது. அவரிடம் தான் விபரங்கள் கேட்க வேண்டும்.” என்று கூற… அதைக் கேட்டதும் அவளது இரத்த அழுத்தம் தாறுமாறாய் எகிற துவங்கியது. கோபமாய் அழைப்பை துண்டித்தவள் அடுத்த நொடி தனது செயலாளருக்கு அழைத்தாள்.

 

“சொல்லுங்க மேம்…” என்று அவர் பணிவாகக் கூற…

 

“நம்ம கம்பெனி கணக்கு வழக்குகளைப் பார்ப்பதற்கு அவன் யார்? யாரை கேட்டு இதைச் செய்த?” என்று அவள் கோபத்தில் படபடக்க… ஞாயிறு அதுவுமாய்ச் சிக்கன் பிரியாணிக்காக ஆசையுடன் காத்திருந்தவருக்கு முதலாளியம்மாவின் பேச்சில் சிக்கன்குனியா காய்ச்சலே வந்துவிட்டது.

 

“மேம், அது வந்து மேம்…”

 

“நாங்க எல்லாம் உயிரோட தான் இருக்கோம். எங்க கிட்ட கேட்காம அவன் கிட்ட எதுக்குக் கேட்ட? முதல்ல இதுக்குப் பதிலை சொல்லு.”

 

“நீங்க எல்லாம் ஹரீஷ் சார் இறந்த துக்கத்தில் இருந்தீங்க…” மேலே சொல்ல முடியாது அவன் மென்று முழுங்கினான். ஏனெனில் கோபாலகிருஷ்ணன் சொல்லித்தான் அவன் ப்ரஷன்ஜித்திடம் ஆலோசனை கேட்டது. இதைச் சொன்னால் முதலாளியம்மா நம்புவாளா? என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. பேச முடியாது படுத்த படுக்கையாக இருப்பவரையா சாட்சிக்கு அழைத்து வர முடியும்? அவன் விழி பிதுங்கி நின்றான்.

 

“இப்போ எனக்கு இதோட விபரங்கள் வேணும்.”

 

“நான் கேட்டு சொல்றேன்.” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு ப்ரஷன்ஜித்திற்கு அழைத்தான்.

 

உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ப்ரஷன்ஜித் அலைப்பேசி அழைப்பதை உணர்ந்து அதை உயிர்ப்பித்துக் காதில் வைத்தான். நெற்றியில் வடிந்த வியர்வையைத் துடைத்தப்படி,

 

“ஹலோ…” என்க…

 

“ஐயா, தெய்வமே… எங்க மேம் கம்பெனி கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. அதில் ஏதோ சந்தேகமாம்… கொஞ்சம் தெளிவுப்படுத்திருங்க தெய்வமே…” பேச்சை வைத்தே பேசுவது யாரென்று கணித்தவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

 

“கணக்கு தானே… சொல்லி கொடுத்துட்டா போச்சு…” என்று விசமத்துடன் கூறியவன்,

 

“அதுக்கு உங்க மேமை எனக்கு ஃகால் பண்ண சொல்லுங்க…” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான்.

 

வாடி வா… என் அம்மாவோட மருமகளே… கணக்கா கேட்கிற கணக்கு… எப்படிக் கணக்கு பண்ணுகிறேன்னு பார்…என்று தனக்குள் கூறி கொண்டவன் தனது அறையை நோக்கி சென்றான்.

 

அதற்குள் அவளது செயலாளர் அவளை அழைத்து விசயத்தைத் தெரிவிக்க… அதற்கு அவள் அவனைக் கண்டபடி திட்டிவிட்டு அழைப்பை துண்டித்தாள். பிறகு ப்ரஷன்ஜித்திற்கு அழைப்பதா? வேண்டாமா? என்று அவள் மனதிற்குள் ஒற்றையா? இரட்டையா? போட்டபடி அலைப்பேசியைப் பார்த்து கொண்டிருந்தாள்.

 

தொடரும்…!!!

 

9 Comments

 1. வாவ்… இது ஓகேக்கா

  2
 2. Next episode epo update panuvinga im eagerly waiting

 3. mam intha kadaiyin next ud eppo varum mam aavaludan aduttha epiku waiting mam(viji)

 4. Thodarumnu pottu ipdi storya thodaraama irukradhu nyayama…?
  Pala maadhangal odivittadhu..!
  I ❤️ prashanjith.
  Pls continue pannunga……

 5. Next ud eppa kudupinga mam

 6. இந்த மாத கடைசி அல்லது டிசம்பர் முதல் வாரம் இந்தக் கதையின் அப்டேட் பதிவிடப்படும். நன்றி பிரெண்ட்ஸ் 🙂

 7. Full story poduka

 8. Next updates vendum pls

 9. Nice episode mam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *