“நிலவோடு பேசும் மழையில்…” – 5 1

அத்தியாயம் : 5

 

“ஷிவா, நீ அந்த மேசை மேல் ஏறி நின்னு ஹர்ஷா, ஊர்மி (அந்தப் படத்தின் நாயகியின் பெயர்) மேல் தண்ணீர் படாதபடி குடையைப் பிடி…” என்று இயக்குநர் செழியன் உத்தரவிட… அவரது உத்தரவை மறுக்க வழியில்லாது ஷிவாரிகா அவர் சொன்னதைச் செய்யச் சென்றாள்.

 

சற்று உயரமான மேசை மீது ஏறுவதற்கு அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவளது நண்பன் ஆனந்த் முக்காலியை கொண்டு வந்து கொடுத்தான்.

 

“தேங்க்ஸ் ஆனந்த்…” என்றவள் மேசை மீது ஏறி நின்று கொள்ள… ஆனந்த் குடையை அவளிடம் கொடுத்துவிட்டு முக்காலியை எடுத்துக் கொண்டு நகர்ந்தான். அதற்கு மேல் அவன் அங்கிருந்தால் செழியனிடம் திட்டு வாங்க நேரிடும்.

 

இன்னும் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. அதனால் ஷிவாரிகா சுற்றும் முற்றும் பார்த்தபடி நின்றிருந்த போது ஹர்ஷா அவளது விழிகளில் விழுந்தான். அதுவும் அவனது உதடுகளில் வழிந்த எள்ளல் சிரிப்பை கண்டவளின் மனம் கொந்தளித்தது. அப்போது ஹர்ஷா தனது கன்னங்களை உப்பலாக வைத்துக் கொண்டு கைகளைக் குரங்கு போல் அபிநயம் பிடித்து அவளைக் குரங்கு என்று சைகையில் சுட்டிக்காட்டி கேலி செய்தான். கையிலிருந்த குடையை வைத்து அவனது விழிகளைக் குத்தினால் என்ன? என்று அவளது மனம் குரூரமாக நினைத்தது. ஆனால் நினைத்ததைச் செய்ய இயலாதவளாய் அவள் அவனை முறைத்துக் கொண்டே திரும்பி நின்று கொண்டாள்.

 

சிறிது நேரத்தில் படப்பிடிப்பு ஆரம்பமானது. ஹர்ஷாவும் ஊர்மியும் மழையில் நனைந்தபடி ஆடிப்பாட வேண்டும். அந்தக் காட்சி தான் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சுற்றிலும் மழை பெய்கின்ற மாதிரி காட்சி இருந்த போதும் இருவர் மீதும் சொட்டு நீர் படக் கூடாது. அதற்காகத் தான் ஷிவாரிகா மேசை மீது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தாள். காட்சிக்கு ஏற்றவாறு குடையை விரித்துப் பிடித்தாள் ஷிவாரிகா. ஹர்ஷா அவளை நக்கலாய் பார்த்தபடி ஊர்மியின் இடையை வளைத்தவன் அவளது நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட… அதில் பரவசமடைந்த ஊர்மி விழிகளைக் கிறக்கமாய் மூடினாள். அவளது முகம் முழுவதும் நீர்த்திவளைகள் ஆங்காங்கே இருக்க, ஈரப்புடவையில் அத்தனை கவர்ச்சியாக அவள் இருந்தாள். அதைக் கூடத் தாங்கி கொள்ளலாம். ஹர்ஷா செய்த காரியத்தைத் தான் ஷிவாரிகாவால் தாங்கி கொள்ள முடியவில்லை. ஏனெனில் ஹர்ஷா ஊர்மியை அணைத்தது, முத்தமிட்டது அனைத்தும் ஷிவாரிகாவை பார்த்தபடி…

 

“கட்… கட்…” செழியனின் குரல் ஓங்கி ஒலித்ததும் அனைவரும் நடப்பிற்கு வந்தனர்.

 

“ஹர்ஷா, ஊர்மியை பார்த்து பண்ண வேண்டியதை வேறு எங்கோ பார்த்துக் கொண்டு பண்ணினால் எப்படி? உங்க கண்களில் லவ் ஃபீலிங்ஸ் இருக்கணும். ஓகே ரெடி…” என்று குரல் கொடுத்த செழியன் மீண்டும் படப்பிடிப்பிற்குத் தயாரானார்.

 

இந்த முறை ஹர்ஷா சொதப்பாது ஊர்மியுடன் காதலில் உருகி குழைந்தான். அவன் வேண்டுமென்றே தான் அத்தனை நெருக்கமாக நடித்தான். அதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஷிவாரிகாவிற்குத் தான் அருவருப்பாக இருந்தது. அவள் சட்டென்று தனது கையிலிருந்த குடையை இறக்கிவிட்டாள். நன்றாகச் சென்று கொண்டிருந்த காட்சி அவளால் தடைப்பட்டது. அவ்வளவு தான் செழியன் கோபத்தில் பொங்கி விட்டார்.

 

“ஒரு வேலையை ஒழுங்கா செய்ய முடியலை. அப்புறம் எதுக்கு இந்த ஃபீல்டுக்கு வர்றீங்க? என் உயிரை வாங்குறதுக்கா? போம்மா போ… போய் ஓரமா நில்லு… ஏய் தரணி, இங்கே வாய்யா… நீ போய்க் குடையைப் பிடி.” என்று அவர் கோபத்தில் கத்த…

 

அவர் திட்டியதில் ஷிவாரிகாவின் விழிகள் கலங்கி போனது. அவள் முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டு மேசை மீதிருந்து இறங்கினாள். அவள் ஹர்ஷாவை தாண்டி செல்லும் போது,

 

“அச்சச்சோ, பாப்பாவை பார்த்தால் பாவமா இருக்கே. வேணும்ன்னா லாலிபாப் வாங்கித் தரவா?” அவன் கேலி குரலில் அவளைக் கிண்டலடித்தான். அங்குக் கூடியிருந்த அத்தனை பேர் முன்னிலையில் எதையும் செய்ய முடியாது என்பதால் ஷிவாரிகா தனது கோபத்தைப் பல்லை கடித்தபடி அடக்கி கொண்டு எந்தவொரு எதிர்வினையும் ஆற்றாது அங்கிருந்து நகர்ந்தாள். ஹர்ஷாவின் கேலியாய் வளைந்திருந்த உதடுகள் நிமிரவே இல்லை. அத்தனை இளக்காரம் அவள் மீது…

 

ஷிவாரிகாவை வெறுப்பேற்ற வேண்டியோ என்னவோ ஹர்ஷா வேண்டுமென்றே அந்தக் காட்சியில் ஊர்மியுடன் இழைந்து நெருக்கமாய் நடித்துக் கொடுத்தான். எல்லோரும் நினைத்ததைவிடக் காட்சி பிரமாதமாக வந்திருந்தது. செழியன் கூட அவனை மனம் திறந்து பாராட்டினார். ஆனால் அவனது விழிகளோ ஷிவாரிகாவை தேடி அலைபாய்ந்து கொண்டிருந்தது. எங்கும் அவளைக் காணவில்லை. அவனது விழிகள் யோசனையாகச் சுருங்கியது. பின்பு விழிகள் பளிச்சிட நிமிர்ந்தவன் தனது உதவியாளரை சொடக்கிட்டு அழைத்தான். அவன் அருகில் வந்ததும் அவனது காதில் இவன் விசயத்தைக் கூற… அவன் சரியென்று தலையாட்டி விட்டுச் சென்றான்.

 

சிறிது நேரத்தில் ஷிவாரிகா அவன் முன் ஐபேட்டுடன் வந்து நின்றாள். அவளது வருகையை உணர்ந்தவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு நின்றிருந்தவளை கண்டு அவன் யோசனையாய் பார்த்தான். பின்பு தனது உதவியாளரை அழைத்து நாற்காலியை கொண்டு வந்து போட சொன்னான். அவன் நாற்காலியை கொண்டு வந்து போட்டதும்,

 

“உட்கார் ஏஞ்சல்…” என்று கூறியவனின் வார்த்தையில் இருந்த கரிசனம் அவனது விழிகளில் இல்லையோ… அவை அவளை விசமத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

 

“தேவையில்லை…” எங்கோ பார்த்துக் கொண்டு அவள் பதில் கூற…

 

“ஓகே… இதுவும் நல்லா தான் இருக்கு…” என்றவனின் வார்த்தைகளில் இருந்த ஏதோ ஒன்றில் அவள் திடுக்கிட்டு போய் அவனைத் திரும்பி பார்த்தாள். அவனது பார்வை பதிந்திருந்த இடத்தைக் கண்டு அதிர்ந்தவள் கையிலிருந்த ஐபேட்டை கொண்டு தனது நெஞ்சை மறைத்தபடி அவனை முறைத்து பார்த்தாள்.

 

“இதேது வேறு இடமாக இருந்திருந்தால் உன் கன்னம் பழுத்து இருக்கும்…” என்று அவள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பியபடி எச்சரிக்கை செய்ய…

 

“என் மேல் எந்தவித தப்பும் இல்லை. நான் உன்னை மரியாதையாக உட்கார் என்றேன். நீ தான் உட்காராம அடம்பிடிச்ச. அப்போ நான் உன்னை இப்படித்தான் நிமிர்ந்து பார்க்க வேண்டியிருக்கு. நேரே உன் முகம் பார்க்க முடியாதபடி…” என்று மேலே பேச போனவனைக் கை நீட்டி தடுத்தவள் அவனை முறைத்துக் கொண்டே அவனுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அவள் அமர்ந்ததும் அவனது பார்வை அவளது விழிகளைத் தவிர வேறு எங்கும் பார்க்காது சமத்தாக இருந்தது.

 

ஒருவேளை இவன் சொன்னது சரி தானோ? நாம தான் தேவையில்லாம சீன் கிரியேட் பண்ணிட்டோமோ? அசிங்கமா போச்சே ஷிவா…அவள் மானசீகமாகத் தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.

 

ரொம்ப நல்லவன் மாதிரி பேசிட்டியே ஹர்ஷா… இப்போ பாரு அவளோட கண்ணைத் தவிர வேறு எங்கேயும் பார்க்க முடியலை. அவ்வளவு நல்லவனாடா நீ…அவனது மனசாட்சி அவனைக் கேலி செய்து சிரித்தது.

 

“சீன் எப்படி வந்திருந்தது ஏஞ்சல்?”

 

“ப்ச், என்னை ஏஞ்சல்ன்னு கூப்பிடாதே.” அவள் சிடுசிடுத்தாள்.

 

“பின்னே உன்னை விட்ச் என்றா கூப்பிட முடியும்?” என்றவன், “உன்னை மாதிரி அழகான பெண்ணை விட்ச் என்று கூப்பிட எனக்கு மனம் வரவில்லையே.” என்றவனது குரல் குழைந்து தான் போனது.

 

“என்னுடைய குடும்பத்துக்கு மட்டும் தான் நான் ஏஞ்சல்… உன்னை மாதிரியான ஆட்களுக்கு நான் விட்ச் தான்.”

 

“என்னை மாதிரியான ஆள்ன்னா?” அவன் அவளைக் கேள்வியாகப் பார்த்தான். அவள் பதில் கூறாது அவனது பார்வையைத் தாங்கி நின்றாள்.

 

“பொறுக்கி அப்படித்தானே…”

 

“புரிந்து கொண்டால் சரி…” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பட்டென்று பேசியவளை தாடையைத் தடவியவாறு யோசனையாய் பார்த்தான் ஹர்ஷா.

 

“டயலாக் படிச்சு காட்டவா?” அவள் தனது வேலையில் கவனமானாள்.

 

“ஓ எஸ்…” என்றான் அவன் தனது யோசனையைத் தள்ளி வைத்தபடி…

 

“ஓடி போகலாமா பேபி…?” என்றவளை கண்டு அவனது விழிகள் பளிச்சிட்டது. அதைக் கண்டவள் அவசரமாக,

 

“இது டயலாக்…” என்று மறுத்து கூற…

 

“ஓடி போகலாமா ஏஞ்சல்?” என்றவனைக் கண்டு அவள் முறைத்து பார்த்தாள்.

 

“இதுவும் டயலாக் தான்ம்மா… நீ சொன்னதைத் திருப்பிச் சொன்னேன்.” அப்படியே மாற்றிச் சொன்னவனைக் கண்டு அவள் உறுத்து விழித்தாள்.

 

“இப்படி எல்லாம் இடக்கு மடக்காகப் பேசினால் நான் செழியன் சாரிடம் போய்ச் சொல்வேன்.”

 

“நீ என்ன ஸ்கூலில் எல்கேஜி படித்துக் கொண்டிருக்கிறாயா? எப்ப பாரு மிஸ், அவன் என்னை அடிச்சிட்டான், மிஸ், அவன் என்னைக் கிள்ளிட்டான்.ன்னு கம்பளையிண்ட் கொடுக்கிறதுக்கு. ஆனா செழியன் டீச்சர் இல்லை. மைன்ட் இட். இப்போ எனக்கு டயலாக் சொல்லி கொடுக்க வேண்டிய வேலை தீனாவோடது. ஆனா நான் தான் வலுக்கட்டாயமா உன்னை இங்கே வரவழைச்சேன். உன் பேரண்ட்ஸ், உன் அண்ணன் இவங்களை விட ஹர்ஷாவுக்கும் இந்த ஃபீல்டில் கொஞ்சம் மதிப்பு இருக்கு. நேரம் எப்பவும் உனக்குச் சாதகமா இருக்காது. என்ன புரிஞ்சதா?” என்றவனை எரித்து விடுவது போல் பார்த்தவளால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் மீது என்னவென்று அவள் புகார் அளிப்பாள்.

 

“ம், சொல்லி கொடு…” என்று அவன் திமிராய், தெனாவெட்டாய் கூற…

 

“என்னது…?” அவனது வார்த்தைகளில் அவள் வெகுண்டு விட்டாள்.

 

“வசனத்தைச் சொன்னேன். நீ என்ன நினைச்ச?” என்று கேலியாய் கேட்டவனை ஒன்றும் செய்ய இயலாதவளாய் அடக்கப்பட்ட கோபத்துடன் அவள் அவனுக்கு வசனத்தைப் படித்துக் காட்ட ஆரம்பித்தாள். அவனது உதடுகளில் கேலி புன்னகை தோன்றிய போதும் அவள் சொன்னதைக் கவனித்துக் கேட்க தான் செய்தான். அந்த மட்டும் அவனது தொழில் பக்தியை மெச்சத்தான் வேண்டும்.

 

வசனங்களைச் சொல்லி கொடுத்த பின்பு நாற்காலியில் இருந்து எழ போனவளை கையமர்த்தித் தடுத்த ஹர்ஷா,

 

“இன்னும் நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லலையே ஏஞ்சல்?” என்று கேட்க…

 

“என்ன கேள்வி?” அவளுக்கு எந்தக் கேள்வியும் ஞாபகத்தில் இல்லை.

 

“இப்போ நான் நடித்து முடித்த சீன் எப்படி இருந்தது?” என்றவனைக் கண்டவளுக்கு அவனது எண்ணம் புரிந்து போனது.

 

சற்று முன் எடுத்த காதல் காட்சி அவளது மனதினை சற்றும் பாதிக்கவில்லையா? என்று அவன் அவளை ஆழம் பார்க்கின்றான். அது ஏன் அவளைப் பாதிக்க வேண்டும்? என்று அவளுக்கு எரிச்சலாக இருந்தது. அப்படிப் பாதிக்கும் அளவிற்கு அவன் யார் அவளுக்கு? அதுவே அவளது வார்த்தைகளில் வெளிப்பட்டது.

 

“நான் கவனிக்கலை…” என்றவள் அவனது பதிலை எதிர்பாராது அங்கிருந்து சென்றுவிட்டாள். அவன் யோசனையுடன் அவள் செல்வதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

 

ஹர்ஷா யாருடன் நெருங்கி நடித்தாலும் அது இளம் பெண்கள் மத்தியில் பொறாமை கனலை வீச செய்யும். அந்தளவிற்கு இளம்பெண்கள் அவன் மீது பைத்தியமாக இருந்தார்கள். அதைப் போன்றே இவளையும் அவன் எண்ணி கொண்டான். அதனால் தான் அவன் அவளை வெறுப்பேத்த வேண்டும் என்று வேண்டுமென்றே ஊர்மியுடன் நெருங்கி நடித்தான். ஆனால் அது ஷிவாரிகா மனதில் சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தவில்லை என்றதும் அவனுள் பெரும் ஏமாற்றம் கவிழ்ந்தது.

 

அன்றைய படப்படிப்பு முழுவதும் ஹர்ஷா யோசனையுடனே இருந்தான். படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோரும் மலை காட்டை விட்டு கீழே இறங்கினர். மிகவும் உயரமான பகுதியில் படப்பிடிப்பு என்பதால் அங்கு வாகனம் எதுவும் கொண்டு வரவில்லை. அதனால் படக்குழுவினர் ஒவ்வொருவராகக் கால்நடையாக இறங்கி வந்து கொண்டிருந்தனர். ஏதோ யோசனையில் வந்த ஹர்ஷா கால் இடறி கீழே விழ… படக்குழுவினர் அனைவரும் பதறி போயினர். படத்தின் நாயகனுக்கு ஏதாவது ஒன்று என்றால் பாதிக்கப்படப் போவது படப்பிடிப்பு அல்லவா…! எதற்கும் பதறாத செழியன் கூடச் சற்றுப் பதறிவிட்டார். நல்லவேளையாக அவனுக்குக் கணுக்காலில் சிறு சுளுக்கு மட்டும் ஏற்பட்டு இருந்தது. ஆனந்த், தீனா இருவரும் அவனைத் தாங்கியபடி அழைத்துச் சென்றனர். ஷிவாரிகா இதை எல்லாம் பார்த்தாலும் பெரிதாக அலட்டி கொள்ளாது எப்போதும் போல் தரணி, தீபனுடன் அரட்டை அடித்தபடி வந்தாள். அதைக் கண்ட ஹர்ஷாவின் மனதில் ஏதோ ஒரு வெறுமை தோன்றியது. அவன் அவளிடம் தனியே பேசுவதற்காகக் காத்திருந்தான்.

 

அதே போன்று ஒரு சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது. அவனது காலின் சுளுக்கை கிராமத்து பெரியவர் ஒருவர் எண்ணெய் விட்டு நீவி எடுத்து விட்டார். இப்போது அவனது கால் சுளுக்கு அகன்று விட்டது. அதனால் படக்குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நாளைய படப்பிடிப்பிற்கான வசனங்களை ஹர்ஷாவுக்குச் சொல்லி கொடுக்கச் சொல்லி செழியன் ஷிவாரிகாவை பணித்தார்.

 

“சார், நான் வேணும்ன்னா ஊர்மி மேமுக்கு சொல்லி கொடுக்கப் போகவா?” என்றவளை யோசனையாய் பார்த்தவர்,

 

“இந்த ஃபீல்டில் ஆண், பெண் பேதம் பார்த்து கூச்சப்பட்டால் காரியமாகாது. நீ உதவி இயக்குநர். அதை மட்டும் மனசில் வச்சிட்டு உன் வேலையைப் பார்.” என்று தீர்மானமாய்க் கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

 

ஷிவாரிகா அடக்கப்பட்ட கோபத்துடன் ஹர்ஷா முன் வந்து நின்றாள். அவனோ அவளைக் கண்டதும் முகம் மலர்ந்தான். ஆனாலும் அவனது விழிகள் சிரிக்கவில்லை. அது யோசனையாக அவளைப் பார்த்தது.

 

“நான் கீழே விழுந்தது கண்டும் கூடச் சக மனுசியாய் உனக்கு என் மேல் இரக்கம் வரவில்லையே ஏன் ஏஞ்சல்?” அவனது வார்த்தைகளில் ஏக்கம் ஒளிந்திருந்ததோ…!

 

அவள் அவனிடம் இருந்து இந்த வார்த்தைகளைச் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. வழக்கம் போல் கேலி செய்வான் என்றே நினைத்தாள்.

 

“நான் எதுக்கு உங்களைக் கண்டு இரக்கப்படணும் சார்? நான் இரக்கப்படும் அளவுக்கு நீங்க யார் எனக்கு?”

 

அவளது வார்த்தைகளில் அவனது ஈகோ பெருத்த அடி வாங்கியது. சக மனிதனாய் கூட அவன் அவளது மனதினை கவரவில்லையா! அவனது மனதின் ஓரம் சிறு ஏமாற்றம் எழுந்தது. கூடவே கோபமும் எழுந்தது. இந்த ஏமாற்றமும், கோபமும் என்றோ ஒருநாள் பெரும்வலியாக மாறப் போவதை அவன் அறிந்திருக்கவில்லை.

 

********************************

 

இரவு களைத்து போய் வீட்டிற்கு வந்த ஹம்சவர்த்தினி தன்னைச் சுத்தம் செய்து கொண்டு அறைக்குள் வந்தவள் நேரே அலமாரியை திறந்தாள். அதிலிருந்து ஒரு கோப்பை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தவள் அதைப் புரட்டி பார்த்தாள். அது அவளது அண்ணன் ஹரீஷின் பிரேத பரிசோதனை அறிக்கை அடங்கிய கோப்பு. அதில் ஹரீஷின் மரணம் கார் விபத்தினால் ஏற்பட்டது அல்ல. அதற்கு முன்னர் அவன் சித்ரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டு இருக்கிறான். அது கொலை என்று தெரியாதிருக்க அவனது காரை விபத்துக்குள்ளாக்கி அதைத் தீப்பற்றி எரிய செய்திருக்கின்றனர். ஆக, ஹரீஷின் மரணம் திட்டமிடப்பட்ட ஒரு கொலை. ஆனால் இது வெளியே யாருக்கும் தெரியாது. ஹம்சவர்த்தினி அதை மறைத்து விட்டாள். அதற்குக் காவல்துறை அவளுக்கு உதவியாக இருந்தது. அவளது செல்வாக்கு அதற்குப் பயன்பட்டது. அவளுடைய ஒரே நோக்கம் சகோதரனை கொன்றவனைப் பழிக்கு பழி வாங்குவது மட்டுமே.

 

“என் அண்ணன் இறப்பிற்குக் காரணமான உன்னைச் சும்மா விட மாட்டேன்.” என்று ஆத்திரத்துடன் முணுமுணுத்தவள் மனக்கண்ணில் ப்ரஷன்ஜித் முகம் மின்னி மறைந்தது.

 

ஏனெனில் ப்ரஷன்ஜித் தான் ஹரீஷ் இறப்பதற்கு முன் அவனைச் சந்தித்துப் பேசி இருக்கிறான். ஹரீஷின் அலுவலக அறையில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சி எல்லாமே ப்ரஷன்ஜித்திற்கு எதிராகவே அமைந்திருந்தது. இதை எல்லாம் கண்ட ஹம்சவர்த்தினி ப்ரஷன்ஜித் தான் தனது சகோதரனை கொன்றது என்று முடிவே செய்துவிட்டாள். ஏனெனில் இருவருக்கும் இடையில் இருந்த தொழில் போட்டி அப்படிப்பட்டது. சகோதரனா?, ப்ரஷன்ஜித்தா? என்று வரும் போது சகோதரன் தராசு தட்டு பக்கமே அவளது மனம் இறங்கி சென்றது.

 

விடையில்லா பல புதிர்கள் அவளது மனதிலோடி அவளது நிம்மதியை பறித்தது. அவளுக்கு நேர்மாறாய் ப்ரஷன்ஜித் நிம்மதியாய் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.

 

மறுநாள் காலையில் ப்ரஷன்ஜித் பொன்னம்பலம், காவேரி புகைப்படத்தின் முன் நின்று சிறிது நேரம் கண்களை மூடி வேண்டி நின்றவன் பின்பு விழிகளைத் திறந்தான்.

 

“என்னடா, சாமியை நம்பாதவன் திடீர்ன்னு இந்தப் பக்கம் வந்திருக்க…?” என்று கேட்டபடி சிவகுமரன் மகனுக்குத் திருநீறை வைத்து விட்டான்.

 

“என்னுடைய விசயம் என்றால் என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னை மீறி எதுவும் நடந்துவிடாது. ஆனால் இது திவி விசயம்ப்பா…” என்ற மகனை கண்டு பெருமூச்சு விட்ட சிவகுமரன்,

 

“நான் என்னவெல்லாமோ கற்பனை பண்ணி வச்சியிருந்தேன். திவி இந்த வீட்டு மருமகளாய் வரணும்ன்னு… ஆகாஷ், யமுனா இருவருக்கும் இதில் சம்மதம். திவி படிப்பு முடிவதற்காகக் காத்திருக்கும் போது அவள் ஹரீஷை கல்யாணம் பண்ணி கொண்டாள். அவள் இப்படி ஒரு முடிவு எடுப்பாள் என்று யாரும் நினைக்கவில்லை.” வருத்தத்துடன் கூறினான்.

 

“ப்பா, இதென்ன பேச்சு? திவிக்கும், ஷிவாவுக்கும் எனக்கு வித்தியாசம் கிடையாது. எனக்கு இரண்டு பேரும் ஒன்று தான்.” என்று தந்தையின் பேச்சை கண்டித்தவன்,

 

“ம், எனக்குமே அவள் ஹரீஷை திருமணம் செய்தது பிடிக்கவில்லை தான். என்ன காதலோ? காதலுக்குக் கண்ணில்லைன்னு சொல்வாங்க. அது இவளுக்குத் தான் பொருந்தும்.” ஹரீஷை நினைத்து அவனுள் கோபம் பொங்கியது.

 

“பழசை நினைச்சு வருந்தி பிரயோஜனம் இல்லை ப்ரஷன்.”

 

“அதுவும் சரி தான்ப்பா… இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது தான் புத்திச்சாலித்தனம்.” அவன் தனது நண்பன் கதிர்வேலை நினைத்து அப்படிக் கூறினான்.

 

“நல்லதே நடக்கும்.” என்ற சிவகுமரன் மகனுக்கு விடை கொடுத்தான்.

 

ப்ரஷன்ஜித் காரை கிளப்பிக் கொண்டு ஹம்சவர்த்தினி வீட்டிற்குச் சென்றான். செல்லும் வழி எல்லாம் அவள் நேற்று கூறிய வார்த்தைகளே அவனது மனதில் நிலைத்து நின்று அவனது கோபத்தை அதிகரித்தது.

 

எவ்வளவு தைரியம் இருந்தால் என்னைப் பார்த்து அப்படிக் கூறுவாள்? என்னைப் பார்த்தால் அவளுக்குப் பொம்பள பொறுக்கி மாதிரியா தெரிகிறது? இவளை மனதில் நினைத்துக் கொண்டு வேறு ஒருத்தியிடம் தொடர்பு வைத்திருக்கும் காமூகன் மாதிரியா என்னைப் பார்த்தால் இருக்கிறது? அதுவும் திவியோடு சேர்த்து சந்தேகப்பட்டு விட்டாளே… திவி அவளுடைய அண்ணி… நான்…??? ச்சே…என்று அவன் மனதின் ஆத்திரம் தாங்காது ஸ்டீயரிங் வீலில் கையைக் குத்தினான்.

 

ஹம்சவர்த்தினியின் வீட்டின் முன் காரை நிறுத்தியவன் இறங்கி உள்ளே சென்றான். அங்கு வரவேற்பறை சோபாவில் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து, கால்களை மேலே தூக்கி வைத்து நீட்டியபடி ஓவியப்பாவை போன்று அழகாய் அமர்ந்திருந்த ஹம்சவர்த்தினியை கண்டதும் அவனது கோபம் எல்லாம் பறந்து போனது. அவனையும் மறந்து அவன் அவளை ரசிக்க ஆரம்பித்தான். அவளோ கையிலிருந்த கோப்பில் ஆழ்ந்திருந்தாள். அதனால் அவனது வருகையைக் கவனிக்கவில்லை. ஆனால் அவளது காலடியில் அமர்ந்திருந்த டைகர் அவனைக் கண்டு குலைக்க ஆரம்பித்தது. அதன் சத்தத்தில் வாசல் பக்கம் திரும்பி பார்த்தவள் அவனைக் கண்டதும் கண்டு கொள்ளாதது போல்,

 

“டைகர் கீப் கொயட்…” என்று நாயை அதட்டியவள் பின்பு அதனிடம்,

 

“வீட்டிற்கு வந்தவரை வரவேற்காமல் இருப்பது தமிழர் பண்பாட்டல்ல. அவரை உள்ளே வந்து உட்கார சொல்லு.” என்று நாயிடம் கூறுவது போல் அவனிடம் கூறினாள். வந்தவன் எசமானிக்கு தெரிந்தவன் என்பது புரிந்து டைகர் ஒன்றும் பேசாது வாலை ஆட்டி கொண்டு அமர்ந்திருந்தது.

 

ப்ரஷன்ஜித் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாலும் வெளியில் இறுக்கமாய்க் காட்டியவாறு உள்ளே வந்து அமர்ந்தான். அவன் வந்து அமர்ந்ததும் இன்டர்காமை எடுத்து அழைத்தவள்,

 

“கெஸ்ட் வந்திருக்காங்க. காபி கொண்டு வா.” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டு தனது வேலையில் மூழ்கி போனாள். அவளது பேச்சு அவனுக்கு ஆத்திரமூட்டிய போதும் அவளது செயல் அவனுக்குச் சந்தோசத்தை அளித்தது. ஏனெனில் அவள் அவளது வேலையில் மூழ்கி இருந்தால் தானே அவன் தடையில்லாது அவளைச் சைட் அடிக்க முடியும். அவன் அவளைச் சைட் அடிக்கும் வேலையைச் செவ்வனே பார்த்துக் கொண்டிருந்தான். அதில் அவனது கோபம் கூடப் பின்னுக்குப் போய்விட்டது.

 

பணிப்பெண் காபி கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள். நேற்று ஹம்சவர்த்தினி கையால் காபி குடித்தவனுக்கு இன்று இந்தக் காபி ஒவ்வாமையைத் தோற்றுவித்தது. ஒரு மிடறு குடித்துவிட்டு,

 

“சர்க்கரை குறைவா இருக்கே…” என்றவன் ஹம்சவர்த்தினியை பார்த்தான். அவளோ நிதானமாகக் கோப்பை மூடி வைத்துவிட்டுப் பணிப்பெண்ணைப் பார்த்து,

 

“கமலா, அவரது காபியை வாங்கி டேஸ்ட் பார்த்து சொல்றியா?” என்று கேட்க… பணிப்பெண்ணோ பேவென விழிக்க… அவனோ அவசரம் அவசரமாகக் கையிலிருந்த காபியை பருகினான். யார் கிட்ட…என்பது போல் அவனைப் பார்த்த ஹம்சவர்த்தினி பணப்பெண்ணைப் போகச் சொல்லி உத்தரவிட்டு விட்டு தனது வேலையில் ஆழ்ந்தாள்.

 

“வீட்டில் யாரும் இல்லையா?”

 

“அம்மா கோவிலுக்குப் போயிருக்காங்க… அப்பா தூங்குகிறார். அண்ணி அவங்க ரூமில் இருக்காங்க.” என்று அவன் புறம் திரும்பாது அறிவிப்பு போல் கூறியவளை கண்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கி கொண்டு எழுந்தவன்,

 

“சரி, நான் போய்ப் பார்க்கிறேன்.” என்றவன் திவ்யாவின் அறையை நோக்கி செல்ல… அவளுள் ஏதோ ஒன்று மரித்தது.

 

மாடிப்பகுதிக்கு சென்ற ப்ரஷன்ஜித் ஹம்சவர்த்தினி நினைத்தது போல் திவ்யாவின் அறைக்குச் செல்லவில்லை. அங்கிருந்த பால்கனிக்கு சென்றவன் தனது அலைப்பேசியில் இருந்து திவ்யாவிற்கு அழைத்துத் தான் வந்திருக்கும் விசயத்தைக் கூறினான். அதைக் கேட்டுத் திவ்யா தனது அறையை விட்டு வெளியில் வந்தாள்.

 

“இன்னமும் நீ கிளம்பலையா? போய்க் கிளம்பு திவி.”

 

“கட்டாயம் வரணுமா பாவா?” அவளுக்கு வெளி உலகத்தைப் பார்க்கவே விருப்பம் இல்லை.

 

“வந்து தான் ஆகணும் திவி.” என்று அழுத்தம் திருத்தமாய்க் கூறியவனைக் கண்டு அவள் செய்வதறியாது விழித்தாள்.

 

“இங்கே எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? ஹர்ஷாவுக்கு மனைவி வந்துவிட்டால் இங்கே உனது நிலை என்ன? யோசித்துப் பார்…”

 

“எல்லாம் கொஞ்ச நாள் தான்…”

 

“எல்லாம் சரி… வெளி உலகத்தைப் பார்த்தாவது உன் துயரத்தை நீ மறக்கலாமே?” அவனது இந்த வார்த்தைகளுக்கு மதிப்பு இருந்தது.

 

“சரி பாவா…” என்றவள் தனது அறையை நோக்கி நடக்க… அவன் மீண்டும் கீழே வந்தான்.

 

மாடிப்படியில் இறங்கும் போதே அவன் ஹம்சவர்த்தினியை கண்டுவிட்டான். நாயை அணைத்தபடி அவள் சோகமாய் அமர்ந்திருந்த தோற்றம் அவனைத் துணுக்குற செய்தது. நேற்று அவள் பேசிய வார்த்தைக்கும், இன்று அவள் அமர்ந்திருக்கும் நிலைக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை. நேற்றைய அவளது வார்த்தைகளில் அவனுக்குக் கோபம் வந்தது. ஆனால் இன்றைய அவளது தோற்றத்தில் அவனுக்கு அவளைக் கண்டு பாவமாக இருந்தது.

 

நேரே அவளை நோக்கி வந்தவன் அவளது கால் பகுதியில் ஏதோ மினுமினுவென மின்னுவதைக் கண்டு அதை எடுக்கக் குனிந்தான். அப்போது பார்த்து அவள் சோபாவில் இருந்து எழ எண்ணி கால்களைத் தொங்க போட போனாள். சற்றும் எதிர்பாராத விதமாய் அவளது கால்கள் பக்கவாட்டில் இருந்த அவனது தோள்களின் மீது அழுத்தமாய்ப் பதிந்துவிட்டது. அவள் அவனது வரவினை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இப்படி அவன் தனது கால்மாட்டுப் பக்கம் குனிந்து இருப்பான் என்று அவள் நினைத்து கூடப் பார்க்கவில்லை. அவள் சட்டென்று தனது கால்களைத் தூக்கி சோபா மீது வைத்து கொண்டவள் அவனைப் பயத்துடன் பார்த்தாள். அவனோ அவளை ஏறிட்டு பார்க்காதவனாய் தனது கையால் அவளது காலை பற்றித் தனது மடி மீது வைத்தான். அவனது செயலில் அவள் திகைத்து போய் அவனைப் பார்த்தாள். அவனோ அவளைக் கண்டு கொள்ளாது தனது கையிலிருந்த கொலுசை எடுத்து அவளது காலில் நிதானமாக அணிவித்து விட்டவன் பின்பு அதிலிருந்த சலங்கையைத் தனது கை விரல்களால் லேசாகச் சுண்டிவிட்டான். அவனது ஸ்பரிசத்தில் அவளது பாதத்தில் இருந்த சிவப்பு அவளது மேனி முழுவதும் பரவி அவளைச் செவ்வானமாய்ச் சிவக்க செய்தது. அவளது கொலுசின் மெல்லிய சலங்கை ஒலி அவளது மனதினை டொம் டொமென்று இனிமையாய் அதிர செய்தது.

 

கொலுசை அவளது காலில் மாட்டி விட்ட ப்ரஷன்ஜித் ஒன்றும் நடவாதவன் போல் எழுந்து செல்ல… அவள் அவனது கையைப் பிடித்துத் தடுத்தாள்.

 

“நான் வேணும்ன்னு பண்ணலை… ஐயம் சாரி…” அவள் அடிமனதில் இருந்து மன்னிப்பு வேண்டினாள். அவள் செய்த செயல் எந்தவொரு ஆண்மகனையும் கோபம் கொள்ளச் செய்யும். அவனது ஈகோவை தட்டி எழுப்பும்.

 

“பரவாயில்லை.” திரும்பி பார்க்காது சொன்னவனைக் கண்டு அவள் தான் அதிகம் தவித்துப் போனாள். அவன் கோபமாய்த் திட்டி இருந்தாலாவது அவள் சற்று சமாதானமாகி பதிலுக்குக் கோபம் கொண்டிருப்பாள். ஆனால் அவனது இந்த அமைதி அவளைத் தவிக்கச் செய்தது.

 

அவளது தவிப்பிற்கு நேர்மாறான உணர்வுடன் ப்ரஷன்ஜித் உற்சாகமாய் இருந்தான். காலாக இருந்தாலும் அவளது தொடுகையை அவன் ரசிக்கத்தான் செய்தான். அதிலும் அவன் உணர்ந்த அவளது பாதத்தின் மென்மை அவனை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றது. என்ன தான் அவள் மீது கோபம் இருந்த போதும் தனக்கு உடமையானவளை ரசிக்காது இருக்க அவனால் முடியவில்லை. ஆனால் அதை அவளிடம் காட்டி கொள்ள அவனுக்கு விருப்பம் இல்லை.

 

அதற்குள் திவ்யா கிளம்பி வந்துவிட… ப்ரஷன்ஜித் அவளை அழைத்துக் கொண்டு தனது காரை நோக்கி சென்றான். அவன் தன்னைக் கண்டு கொள்ளாது செல்வதை எண்ணி ஹம்சவர்த்தினி அவரசமாய் எழ… அவளது மடியில் இருந்த நாய் கதறிக் கொண்டு கீழே விழுந்தது. (எங்க ப்ரஷூ இருக்க வேண்டிய இடத்தில் நீ இருந்தல்ல… இது உனக்கு வேண்டிய தண்டனை தான். நல்லா வேணும். லொள்…)

 

ஹம்சவர்த்தினி செல்லும் முன் இருவரும் காரிலேறி இருந்தனர். அதைக் கண்டு அவளது விழிகளில் விழிநீர் துளிர்த்தது. ஏனென்று தெரியாத ஒரு தனிமை உணர்வு அவளைச் சூழ்ந்து கொண்டது. அப்போது காரை கிளப்பியபடி ப்ரஷன்ஜித் கதவின் கண்ணாடியை கீழே இறக்கியவன் தனக்குப் பக்கவாட்டில் இருந்த கண்ணாடி வழியே அவளைப் பார்த்து கண்சிமிட்டி புன்னகைத்தான். அவனது புன்னகையைக் கண்டவளின் இதழ்களிலும் புன்னகை தோன்றியது. அவனது புன்னகை அவளுக்கு யானை பலத்தைக் கொடுத்தது. இராமாயாணத்தில் வாலி தன்னை எதிர்ப்பவர்களிடம் இருந்து பாதிச் சக்தியை அவன் பெற்றுக் கொண்டு எதிரிகளை அழிப்பானாம். அது போல் அவள் அவனை வீழ்த்த அவனிடம் இருந்தே சக்தியை பெற்று கொண்டாள். அவனுக்காகத் தவிப்பதும் அவளே, அவனை வீழ்த்த துடிப்பதும் அவளே… அவளது இருவித மனநிலையைப் போன்று அவள் விழிகளில் விழிநீரும், இதழ்களில் புன்னகையுமாய் நின்றிருந்தாள்.

 

ப்ரஷன்ஜித்தும், திவ்யாவும் ஆகாஷின் வீட்டினுள் நுழைந்தனர். கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்த திவ்யாவின் தம்பி ஆதித்யா தான் இவர்களை முதலில் கண்டது.

 

“அக்கா…” என்றழைத்தபடி அவன் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டான். அவளும் பதிலுக்கு அவனை அணைத்து கொண்டாள்.

 

“எப்படிடா இருக்க ஆதி? ஒழுங்கா படிக்கிறியா?”

 

“நல்லா இருக்கேன்க்கா…” அவன் சொல்லி முடிக்கும் முன் ஆகாஷும், யமுனாவும் அங்கு வந்து சேர்ந்தனர்.

 

“திவி…” என்றபடி இருவரும் ஆனந்த கண்ணீருடன் மகளை அணைத்து கொண்டனர்.

 

கடந்த மூன்று மாதங்களாகத் தங்களுடன் வர மறுத்த மகள் இப்போது வந்திருப்பது குறித்து அவர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

 

“இப்படியே இருந்தால் எப்படி மாமா, அத்தை? திவி இன்னைக்கு இங்கே தான் மதியம் சாப்பிட வருவாள். அவளுக்காக விருந்து தடபுடலா ஏற்பாடு பண்ணுங்க.” ப்ரஷன்ஜித் குரலில் மகளை விட்டு விலகிய ஆகாஷ்,

 

“நீ சொல்றது உண்மையா ப்ரஷன்…?” என்று கேட்க…

 

“உண்மை தான் மாமா… இப்போ திவியை எங்க நிறுவனத்துக்குக் கூட்டிட்டு போறேன். மதியம் இங்கே தான் சாப்பாடு, எனக்கும் சேர்த்து…”

 

“உனக்கு இல்லாமலா ப்ரஷன்.” ஆகாஷ் சந்தோசத்துடன் மருமகனை அணைத்துக் கொண்டான்.

 

யமுனா மகளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட… ஆதித்யா கல்லூரிக்கு கிளம்பிவிட… ஆகாஷூம், ப்ரஷன்ஜித்தும் மட்டுமே தனித்து இருந்தனர்.

 

“இன்னும் எத்தனை நாளைக்குத் திவி இப்படியே இருக்கப் போகிறாள்?” ஒரு தகப்பனாய் ஆகாஷ் மகளை நினைத்து மிகவும் வேதனைப்பட்டான்.

 

“ஒரேடியா சரியாக்க முடியாது மாமா. கொஞ்சம் கொஞ்சமா தான் சரி செய்ய வேண்டும். எனக்கு நம்பிக்கை இருக்கு. திவிக்கு நல்ல வாழ்க்கை அமையும்ன்னு…”

 

“எனக்கு நம்பிக்கை இல்லை ப்ரஷன். அவள் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டது ஹரீஷை. அவள் எப்படி அவனை மறந்துட்டு…” ஆகாஷின் விழிகளில் கண்ணீர் துளிர்த்தது. அவனும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவன் தானே. காதலின் அருமை அவனுக்குத் தெரியும் அல்லவா.

 

மாமா கூறியதை கேட்டு ப்ரஷன்ஜித்தின் முகம் இறுகி போனது. ஹரீஷை நினைத்து அவனுக்கு ஆத்திரமாக வந்தது.

 

உள்ளே யமுனாவும் மகளின் வாழ்க்கையைப் பற்றித் தான் பேசி கொண்டிருந்தாள். தனது மடியில் படுத்திருந்த மகளின் தலையை ஆதரவாய் வருடிய யமுனா,

 

“திவி, உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோ. நாங்க எல்லாம் எத்தனை நாளைக்குக் கூட வர முடியும்? உன்னால் உன் கணவனை மறக்க முடியாது தான். ஆனால் மறந்து தான் ஆகணும். இது தான் நிதர்சனம். என் மகளை இப்படியே விட என்னால் முடியாது. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்காம என்னுயிர் போகாது. ப்ரஷன் என் அண்ணன் மகன். நான் சொன்னால் கேட்பான். அவனை உன்னைக் கல்யாண பண்ண சொல்றேன். நிச்சயம் அவன் என் பேச்சை தட்ட மாட்டான்.” என்ற அன்னையைக் கண்டு திவ்யா வாய்விட்டுச் சத்தமாய்க் கதறிவிட்டாள்.

 

முன்னொரு காலத்தில் இந்த வார்த்தைக்காக ஏங்கியவள் நான். பாவாவை உயிருக்கு உயிராய் காதலித்தவள் நான். ஆனால் இப்போது…???’ என்று அவளது மனம் ஊமையாய் கதறி அழுதது.

 

தொடரும்…!!!

 

One Comment

  1. mam maaya maan story intha site il poduveengala next story porkodiyil enna story .name enna

    2
    josephinesuganyaraj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *