“நிலவோடு பேசும் மழையில்…” – 4 Leave a comment

அத்தியாயம் : 4

 

ஹம்சவர்த்தினி கலங்கி நின்றது ஒரு நொடியே… மறுநொடி தன்னைச் சுதாரித்துக் கொண்டவள் கலங்கிய தனது விழிகளை இமைச்சிமிட்டி கட்டுப்படுத்திக் கொண்டாள். அதே போல் கலங்கிய மனதினை ஆழ மூச்செடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தவள் பிறகு தோட்டத்தில் இருந்தவர்களைக் கண்டு கொள்ளாது தனது கம்பீர நடையுடன் வீட்டின் வாயிலை நோக்கி நடந்தாள். அவர்களிடம் சென்று கேள்வி கேட்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அந்தளவிற்கு அவள் தனது தகுதியை விட்டு கீழே இறங்க விரும்பவில்லை. ஆனால் அவளது கார் வந்த சத்தத்தை ப்ரஷன்ஜித்தும், திவ்யாவும் கேட்டு விட்டனர். திவ்யா ப்ரஷன்ஜித்தின் அணைப்பில் இருந்து விலகினாள். அவனும் எதுவும் கூறாது விலகி கொண்டான்.

 

இப்படியே எத்தனை நாளைக்கு இங்கேயே இருக்கப் போறீங்க திவி?”

 

தெரியலை…” மெல்ல பதிலளித்தவளின் குரலில் அத்தனை விரக்தி இருந்தது.

 

உங்க வாழ்க்கை இப்படி நாலு சுவத்துக்குள் முடிஞ்சு போயிரணும்ன்னு நினைக்கிறீங்களா? நீங்க படித்த பெண் திவி. கணவன் இறந்து விட்டால் இந்த உலகமே அழிஞ்சு போயிராது. உங்கள் உடம்பில் உயிர் இருக்கும் வரை நீங்க வாழ்ந்து தானாக வேண்டும். ஹரீஷ் மாதிரி ஒருத்தனுக்காக நீங்க இந்தளவுக்கு ஃபீல் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.” அவன் சற்று கோபத்துடன் கூறினான்.

 

பாவா…” என்று விசும்பியவளின் விழிகளில் இருந்து விழிநீர் வடிந்தது. அவள் தனது கடந்த காலத்தை நினைத்து பார்த்தாளோ…!

 

அப்போ பாவா சொல்றதை கேளுங்க திவி. நான் உங்க நல்லதுக்குத் தான் சொல்வேன்.”

 

மாமா உடம்பு சரியானதும் நான் நம்ம வீட்டுக்கு வந்திருவேன் பாவா. என்னால் தான் அவங்க இப்படிப் படுத்த படுக்கை ஆனாங்களோன்னு எனக்குள் ஒரு குற்றவுணர்ச்சி.”

 

முட்டாள் மாதிரி பேசாதீங்க திவி. அவரோட மகனை நினைச்சு தான் அவருக்கு இப்படியாகி இருக்கும். உங்களுக்கும், அவரது உடல்நிலைக்கும் எந்தச் சம்பந்தம் இல்லை.” என்று கோபத்தில் படபடத்தவன்,

 

சரி, உங்க பேச்சுக்கே வருவோம். அவர் கடைசிவரை குணமாகவில்லை. அதாவது பத்து வருடங்கள் கழித்தும் இப்படியே இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம். அதுவரை நீங்களும் இப்படியே இந்த வீட்டில் இருக்கப் போறீங்களா?” என்க… அதற்குப் பதில் பேசாது அவள் தலைகுனிந்து கொண்டாள்.

 

உங்களுக்கு என்ன வயசு திவி? இருபத்திரெண்டு தான் ஆகுது. வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும் முன் இப்படி எல்லாத்தையும் இழந்துட்டு சந்நியாசி மாதிரி வாழ வேண்டிய அவசியம் தான் என்ன?”

 

இன்னொரு வாழ்க்கை வேண்டாம் பாவா… இந்த வாழ்க்கையையே என்னுடைய ஏழேழு ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்.”

 

உங்க கிட்ட பேசினால் சரி வராது… நான் வீட்டில் உள்ளவங்க கிட்ட பேசிக்கிறேன்.” என்றவன் விறுவிறுவென வீட்டை நோக்கி நடந்தான்.

 

பாவா ப்ளீஸ்…” என்றபடி அவள் பின்னால் வர…

 

நீங்க மாமனாரை நினைத்துப் பார்க்கிறது இருக்கட்டும். அதேசமயம் உங்க அப்பா, அம்மாவையும் கொஞ்சம் நினைத்து பாருங்க.” தனது பெற்றோரை நினைத்ததும் திவ்யாவிற்கு நெஞ்சம் எல்லாம் கனத்தது.

 

அப்பா, அம்மாவுக்கு என்ன? அதான் ஆதி இருக்கானே.” அவள் தனது தம்பி ஆதித்யாவை குறிப்பிட்டு சொல்ல…

 

பெத்தவங்களுக்கு எல்லாக் குழந்தையும் ஸ்பெசல் தான்.” என்றவன் வீட்டின் படிக்கட்டுகளை இரண்டு இரண்டாகத் தாவி ஏறி உள்ளே சென்றான்.

 

அப்போது மாடிப்படியில் இருந்து கையில் கோப்புடன் ஹம்சவர்த்தினி இறங்கி வந்து கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் மலர போன முகத்தை அவன் வேண்டுமென்றே இறுக்கமாக வைத்துக் கொண்டான். அவளும் அவனைக் கண்டு புன்னைக்காது அவனை உறுத்து விழித்தபடி வந்தாள். அதேசமயம் பின்னால் வந்த திவ்யாவையும் அவள் கவனிக்கத் தவறவில்லை.

 

உங்கம்மாவை கூப்பிடுங்க… பேசணும்.” அவன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பிய விதத்தில் அவள் உள்ளுக்குள் திடுக்கிட்டு போனாள்.

 

எதுக்கு…?” விழிகளில் சற்று மிரட்சியுடன் கேட்டவளை கண்டவன் உதடுகளில் அவனையும் அறியாது புன்னகை தோன்றியது.

 

சொன்னால் தான் கூப்பிடுவீங்களா? சரி, நானே கூப்பிட்டு கொள்கிறேன்.” என்றவன்,

 

 

அத்தை, அத்தை…” என்று உள்நோக்கி கூப்பிட்டான்.

 

அத்தையா?’ திவ்யாவும், ஹம்சவர்த்தினியும் ஒரே நேரத்தில் திகைத்தனர். இருவரின் திகைப்பிற்கும் காரணம் வேறு.

 

பாவா, அவங்க உங்களுக்குப் பெரியம்மா முறை வேண்டும்.”

 

, அப்படியா…” வலக்கை ஆள்காட்டி விரலால் நெற்றியோரம் சொறிந்தவன் பின்பு,

 

முதலில் இருந்தே அத்தை என்றே கூப்பிட்டு பழகி விட்டது திவி. திடீர்ன்னு உங்களுக்காக முறையை மாற்ற முடியவில்லை.”

 

அதைக் கேட்டதும் தான் ஹம்சவர்த்தினி நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவளைக் கண்டவனின் இதழோரம் கேலியாய் வளைந்தது. அவனது எண்ணத்தை அறிந்தவளாய் அவள் அவனை முறைத்து பார்த்தாள்.

 

ப்ரஷன், எப்போ வந்தேப்பா? வா உட்கார். திவி, காபி கொண்டு வாம்மா…” என்று கூறியபடி பர்வதம் அங்கே வந்தார்.

 

இப்போ தான் வந்தேன் அத்தை.” என்றபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன்,

 

திவி இருக்கட்டும் அத்தை. உங்க பொண்ணு காபி கொண்டு வர மாட்டாங்களா?” ஓரக்கண்ணால் ஹம்சவர்த்தினியை பார்த்தபடி கூற…

 

அவளா? நல்லா சொன்ன போ… அவளுக்கு நல்லா சாப்பிட மட்டும் தான் தெரியும். காபி மட்டுமில்லை, சுடு தண்ணி கூட வைக்கத் தெரியாது.”

 

ம்மா…” என்று ஹம்சவர்த்தினி பல்லை கடித்தாள். அதைக் கண்டவன் விழிகளில் குறும்பு எட்டிப்பார்த்தது.

 

பரவாயில்லை அத்தை… இப்பவே பழக்கி விடுங்கள். போகிற வீட்டில் அவங்க கணவன் அவங்க கையால் சமைத்த சாப்பாட்டைச் சாப்பிட விரும்புவான் இல்லையா?” அவனது பேச்சுப் பர்வதத்திடம் இருந்தாலும் அவனது பார்வை ஹம்சவர்த்தினியின் மேல் இருந்தது.

 

அதுவும் சரி தான். எந்தப் புருசனும் பொண்டாட்டி கையால் சமைச்சதை தான் சாப்பிட விரும்புவான்.” பர்வதம் கூறும் போதே ஹம்சவர்த்தினி வெடுக்கென்று,

 

காபி தானே போடணும். போட்டுத் தொலைக்கிறேன். அதுக்காக இங்கே யாரும் ராமாயாணம் பேச வேண்டாம்.” என்று சிடுசிடுத்தவள் கையிலிருந்த கோப்பை சோபாவின் மீது போட்டுவிட்டு உள்ளே சென்றாள்.

 

அவள் சென்றதும் ப்ரஷன்ஜித் பர்வதத்திடம், “இப்போ மாமாவின் உடல்நிலை எப்படியிருக்கு?” என்று கேட்க…

 

நேற்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை. இன்று தான் அவரது வலக்கையில் சிறிது உணர்வு வந்திருக்கிறது. டாக்டர் சரியாகி விடுவார்ன்னு சொல்லியிருக்கிறார். நம்பிக்கை தானே வாழ்க்கை.”

 

உண்மை தான்… நம்பிக்கை தான் வாழ்க்கை.” என்றவனின் பார்வை அங்குக் காபியை எடுத்துக் கொண்டு வந்த ஹம்சவர்த்தினியின் மீது நிலைத்து நின்றது. அவள் காபி கோப்பையை அவனிடம் நீட்டிய போது,

 

நம்பி குடிக்கலாம் இல்லையா?” என்று கேட்க…

 

நம்பிக்கை தான் வாழ்க்கை…” அவள் அவன் கூறிய வசனத்தை அவனுக்கே திருப்பிப் படித்தாள்.

 

உங்களை நம்பி ஒரு செயலை செய்ய முடியாதே.” என்று கூறியவனின் வார்த்தைகளுக்கான அர்த்தமே வேறு… அவளோ அதை வேறு மாதிரி புரிந்து கொண்டு கையிலிருந்த காபி கோப்பையில் இருந்து ஒரு மிடறு காபி பருகியவள்,

 

நான் ஒண்ணும் செத்து போயிடலை. குடிங்க…” என்றபடி மீண்டும் கோப்பையை நீட்ட…

 

இன்னும் நம்பிக்கை வரலை தான்… இருந்தாலும் குடிக்கிறேன்…” என்றவன் அவள் கொடுத்த காபியை வாங்கிப் பருகினான்.

 

பர்வதம் கணவரது நினைவில் இருந்ததால் இவர்களது செயலை கவனிக்கவில்லை. திவ்யாவும் தனது நினைவில் உழன்று கொண்டிருந்ததால் அவளும் இவர்களைக் கவனிக்கவில்லை.

 

நாட் பேட்…” ஹம்சவர்த்தினியை பார்த்தபடி அவன் கூற…

 

அப்படி ஒண்ணும் கஷ்டப்பட்டுக் குடிக்க வேண்டாம்.” அவள் முகத்தைத் தூக்க…

 

உணவை வீணாக்குவது எனக்குப் பிடிக்காது. அது காபியாக இருந்தாலும்…” என்று அவன் வக்கணையாகக் கூறிக் கொண்டே காபி முழுவதையும் பருகி முடித்து விட்டே அவளிடம் கோப்பையைக் கொடுத்தான். அவள் அவனை முறைத்துக் கொண்டே வாங்கிக் கொண்டாள்.

 

மாமாவை போய்ப் பார்க்கலாமா?” ப்ரஷன்ஜித் கேட்டதும் தான் பர்வதம் தனது யோசனையில் இருந்து விடுப்பட்டு அவனைப் பார்த்தார்.

 

வா ப்ரஷன்…” அவர் கூறியபடி முன்னே நடக்க… ப்ரஷன்ஜித்தும் எழுந்து அவரைப் பின்தொடர்ந்தவன் பின் திரும்பி திவ்யாவை பார்த்து,

 

நீங்களும் வாங்க…” என்று அவளை மட்டும் அழைக்க…

 

அதைக் கேட்டு ஹம்சவர்த்தினியினுள் பொறாமை தீ திகுதிகுவென எரிந்தது. அவளும் அழையா விருந்தாளியாய் அவர்களைப் பின்தொடர்ந்தாள். அவள் வருவதை அவன் அறிந்தாலும் கண்டு கொள்ளாது சென்றான்.

 

படுக்கையில் படுத்திருந்த கோபாலகிருஷ்ணனை கண்டு ப்ரஷன்ஜித் மிகவும் வருந்தினான். தொழில் வட்டாரத்தில் கம்பீரத்திற்குப் பெயர் பெற்ற கோபாலகிருஷ்ணன் இப்படிக் கிழிந்த நார் போல் படுத்திருப்பது கண்டு அவனுக்கு வருத்தமாக இருந்தது. தொழிலில் போட்டி இருந்த போதும் அவன் அவரை ஒரு நாளும் எதிரியாக நினைத்தது இல்லை. அவர் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் அவரது கை மீது தனது கையை வைத்து,

 

மாமா…” என்றழைக்க… அவனது அழைப்பில் அவர் மெல்ல விழி திறந்து பார்த்தார். அவனை அவருக்கு நன்கு அடையாளம் தெரிந்தது. அதை அவர் தனது பார்வையில் வெளிப்படுத்தினார்.

 

நல்லா இருக்கீங்களா மாமா? நீங்க சீக்கிரம் குணமாகி, பழையபடி வரணும். அதுக்காகத் தான் நான் காத்திருக்கிறேன்.” என்றவன் கடைசி வரியை கூறும் போது அவனது விழிகள் ஹம்சவர்த்தினியை பார்த்தது. அவளோ உதட்டை சுளித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

 

நீ பேசுறது அவருக்குக் கேட்கும் ப்ரஷன்.” பர்வதம் கூற… அதை ஆமோதித்தபடி அமர்ந்திருந்தான் ப்ரஷன்ஜித்.

 

அத்தை, நான் உங்க கிட்ட ஒரு விசயம் பேசணும்.” அவன் கூறியதை கேட்டு ஹம்சவர்த்தினியின் முகம் பேயறைந்தது போலானது.

 

திவி பற்றி…” அவளது முக மாற்றத்தை கண்டதும் அவன் சட்டென்று சொல்ல… அதைக் கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டவளை கண்டு அவனது விழிகள் சிரித்தது.

 

சொல்லுப்பா…”

 

எத்தனை நாளைக்குத் தான் திவி இப்படியே வீட்டில் அடைந்து கிடப்பது. அவங்க படித்த படிப்பு வீணாகக் கூடாது. அதனால் அவங்களை என்னுடைய கம்பெனிக்கு அழைத்துப் போகலாம் என்று இருக்கிறேன்.”

 

அவன் கூறியதை கேட்டுப் பர்வதம் முகம் மலர்ந்தார். திவ்யா வெறுமையுடன் அவனைப் பார்த்தாள். ஹம்சவர்த்தினியோ மனம் துணுக்குற அவனை வெறித்திருந்தாள்.

 

தாராளமா அழைச்சிட்டு போப்பா…” பர்வதம் சந்தோசமாய்ச் சம்மதம் கூறினார்.

 

அவங்க கம்பெனிக்கு எதுக்கும்மா அண்ணி போகணும்? நம்ம கம்பெனிக்கு வரட்டும்.” ஹம்சவரத்தினி வெடுக்கென்று கூற…

 

உங்க கம்பெனிக்கு எதுக்கு? உங்க அண்ணியாவா? இல்லை வேலை செய்றவங்களாவா? எந்த உறவுமுறையில் அவங்களை அழைச்சிட்டுப் போகப் போறீங்க?” ப்ரஷன்ஜித் சற்று கோபத்துடன் கேட்டான்.

 

அவங்க வேலைக்காரங்க இல்லை. என்னுடைய அண்ணி…” என்றவளை அழுத்தமாய் ஏறிட்டவன்,

 

எத்தனை நாளைக்கு?” என்று கேட்டான் அடக்கப்பட்ட கோபத்துடன்… அதைக் கேட்டு அவள் பேவென விழித்தாள்.

 

எத்தனை நாளைக்கு உங்க அண்ணியா அவங்களை உங்க வீட்டில் வச்சியிருக்கப் போறீங்க? அவங்களும் உங்களை மாதிரி சின்னப் பொண்ணு தான். கல்யாணமாகி கணவன் இறந்துட்டால் மட்டும் அவங்க பெரியவங்களாகிவிடப் போவதில்லை. அவங்க வாழ்க்கையைப் பத்தி நீங்க என்ன யோசிச்சு இருக்கீங்க?”

 

அவனது பேச்சில் ஹம்சவர்த்தினி வாயடைத்து போனாள். திவ்யா பற்றி அவளுக்குக் கவலை இருக்கிறது தான். ஆனால் இந்தக் கோணத்தில் அவள் யோசிக்கவில்லையே. அண்ணி, அண்ணி என்று கூறிக் கொண்டு திவ்யாவை அவளது அண்ணன் மனைவியாகத் தானே அவள் பார்க்கிறாள். தவறு தங்கள் பக்கம் இருப்பதை உணர்ந்து அவள் வாயை மூடி கொண்டாள்.

 

நீ சொல்றது சரி தான் ப்ரஷன்… திவி வெளியுலகத்தைப் பார்ப்பது நல்லது.” பர்வதம் இடையிட்டு பேச…

 

அம்மா, அப்படியே அண்ணிக்கு மாற்றம் வேண்டுமானால் நம்ம கம்பெனியில் ஒன்றை அவங்க பெயரில் எழுதி வைத்து விடலாம். அதை அவங்க நிர்வகிக்கட்டும்.”

 

உன் அண்ணனுடையது எதுவும் திவிக்கு வேண்டாம்.” ப்ரஷன்ஜித் நாற்காலியில் இருந்து ஆக்ரோசத்துடன் எழுந்தபடி கத்தினான். அவனது ஆக்ரோசத்தைக் கண்டு எல்லோருமே பயந்து போயினர். எல்லோரின் முகத்தைப் பார்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன்,

 

ஹரீஷை மறப்பது தான் திவிக்கு நல்லது. அவனை ஞாபகப்படுத்தும் எதுவும் அவங்களுக்குத் தேவையில்லை. திவி ஒன்றும் சாதாரண வீட்டுப் பெண் இல்லை. அவங்களுடைய அப்பாவும் நல்ல வசதி தான். அங்கே அனுப்பாமல் எங்க கம்பெனிக்கு வர சொல்றதுக்குக் காரணம் அவங்களுக்கு மன மாற்றம் தேவை என்பதால் தான்.”

 

சரிப்பா, நீ சொல்றபடி செய்யலாம்.” பர்வதம் கூற…

 

அப்போ திவியை நான் எங்க வீட்டுக்கு அழைத்துச் செல்லவா? இதுநாள் வரை அவங்க உங்க வீட்டு மருமகளா இருந்தது போதும்.” அவன் உறுதியான குரலில் கூற…

 

பாவா, மாமா குணமாகும் வரை நான் எங்கும் வர மாட்டேன்.” தீர்மானமான குரலில் கூறிய திவ்யாவை கண்டு ஹம்சவர்த்தினிக்கு நிம்மதியாக இருந்த போதும், அவள் ப்ரஷன்ஜித்தை பாவாஎன்று அழைத்தது கண்டு சற்றுக் கோபம் வந்தது.

 

திவ்யாவை கூறியது கேட்டு உறுத்து அவளை விழித்த ப்ரஷன்ஜித், “உங்க வாழ்க்கையைப் பற்றி யோசிக்கணும் திவி.” என்று அழுத்தம் திருத்தமாய்க் கூற…

 

என் வாழ்வு… அது முடிந்து போன கதை…” ஹரீஷை பற்றித் திவ்யா கூறுகிறாள் என்று பர்வதம், ஹம்சவர்த்தினி இருவரும் நினைத்தனர். ஆனால் அதிலிருந்த அர்த்தம் ப்ரஷன்ஜித் மற்றும் கோபாலகிருஷ்ணன் இருவருக்கும் மட்டுமே தெரியும். இருவருக்குமே அதை அறிந்து வேதனை எழுந்தது.

 

நான் எதைச் செய்தாலும் அதில் உங்க நலன் மட்டுமே இருக்கும் திவி. அதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நாளை முதல் நீங்க கம்பெனிக்கு வர்றீங்க… வரணும்.” அவன் உறுதியான குரலில் கூற… ஹம்சவர்த்தினி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியில் சென்றுவிட்டாள். அவளைத் தொடர்ந்து அவனும் விடைபெற்றுக் கொண்டு வெளியில் வந்தான். தங்களுக்குள் உழன்றவராய் பர்வதம் கணவரின் அருகில் அமர்ந்துவிட… திவ்யா கலங்கிய விழிகளுடன் தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.

 

வேகமாய் வெளியில் வந்த ஹம்சவர்த்தினி தனது காரின் கதவை திறந்து உள்ளே ஏற போனவள்,

 

மேடம்…” என்ற ப்ரஷன்ஜித்தின் குரலில் பல்லை கடித்தபடி நின்றவள் திரும்பி பார்த்து அவனை முறைத்தாள். அவள் அருகே விரைந்து வந்தவன் தனது கையிலிருந்த கோப்பை எடுத்து அவளிடம் நீட்டினான்.

 

முக்கியமான ஃபைல்லை மறந்து வச்சிட்டு போறீங்க.”

 

அவள் பயத்துடன் கோப்பை அவனின் கைகளில் இருந்து பறித்தவள் பின்பு அவனைக் கோபத்துடன் பார்வையால் எரித்தாள்.

 

ரொம்ப முக்கியமான ஃபைலா?” அவனது கேள்வியில் அவளது இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது. அவள் பார்வையால் தன்னைச் சுட்டெரிப்பதை உணர்ந்து அவன் தனது இருகைகளையும் சரணடைவது போல் உயர்த்தியவன்,

 

நான் எதையும் பார்க்கவில்லை. இதை எல்லாம் வேவு பார்த்து தான் நான் உங்களை ஜெயிக்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை.” என்க…

 

ஆமா, ஆமா, நீ ரொம்ப நல்லவன்னு பிபிசியில் சொல்லிக்கிட்டாங்க.”

 

நான் நல்லவனா? கெட்டவனா? என்று சொல்ல வரவில்லை. உங்களை வெல்லும் அளவுக்கு எனக்கு இங்கே…” என்று தனது தலையைச் சுட்டிக்காட்டியவன்,

 

மூளை இருக்கு…” என்றான் கேலி குரலில்.

 

அப்போ எனக்கு மூளை இல்லைன்னு சொல்றியா?” அவளது குரல் சற்று உயர்ந்தது.

 

ச்சேச்சே… அப்படிச் சொல்வேனா?” என்றவனது வார்த்தைகளுக்கு நேர்மாறாய் அவனது விழிகள் சிரித்தது. அதைக் கண்டவள் மிகவும் உடைந்து போனாள்.

 

முட்டாள் தான்… நான் முட்டாளே தான்…” என்றவளுக்கு எதையோ நினைத்து விழிகள் கலங்கி போனது. அதை அவனுக்குக் காட்டாது வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டாள்.

 

இது ஒத்துக் கொள்ள வேண்டிய விசயம் தான்…” என்றான் அவன் நமட்டு சிரிப்புடன்…

 

என்னது…?” திரும்பி பார்த்து கோபத்துடன் முறைத்தவளை கண்டு அவனது மனம் சிறிது சமாதானமாகியது. அவளது கோபத்தைத் தாங்கி கொள்பவனால் அவளது வருத்தத்தைத் தாங்கி கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவன் அவளிடம் கேலி பேசி அவளை இயல்புக்குக் கொண்டு வந்தான்.

 

முட்டாளாக இருக்கப் போய்த் தான் ஏமாந்து போய் நிற்கிறேன்.” என்றவளை கண்டு அவனது விழிகள் யோசனையாய் இடுங்கியது.

 

என்ன சொல்றீங்க?” அவனது குரல் கடுமையுடன் ஒலித்தது.

 

நான் என்ன சொல்கிறேன்னு உனக்குத் தெரியாதா?” அவள் கோபத்துடன் எகிறுவது போலிருந்தாலும் அதில் அடக்கப்பட்ட ஆதங்கமே இருந்தது.

 

புரியலையே…”

 

புரியாத மாதிரி நடிக்கிறவங்களுக்குப் புரிய வைக்க முடியாது.” என்றவள் காரிலேற போனாள். கை நீட்டி அவளைத் தடுத்தவன்,

 

ஏமாந்து போனது நான் தான். நீங்க இல்லை.” என்றவன் அவளது பதிலை எதிர்பாராது அங்கிருந்து செல்ல முயல…

 

ஒரு நிமிசம்…” என்றவளை கண்டு அவன் திரும்பி பார்க்கவில்லை என்றாலும் அப்படியே நின்றான்.

 

அவனது பரந்து விரிந்த முதுகினை கண்டவள் அப்படியே அவனை அணைத்துக் கொண்டு அவனது முதுகில் முகம் புதைத்து உலகம் மறந்து இருக்கலாமா? என்று தோன்றியது. ஆனால் அவன் திவ்யாவிற்கு ஆறுதல் கூறியது போல் தனக்குக் கூறுவானா? அவளுக்குச் சந்தேகமாகவே இருந்தது. சகோதரனுக்கும், அவனுக்கும் இடையில் நடந்த தொழில் போட்டியில் இவள் அல்லவா பாதிக்கப்பட்டு இருக்கிறாள்.

 

சொல்ல வேண்டியதை சொன்னால் நல்லது.” அவனது குரலில் நினைவு கலைந்தவள்,

 

இனி நீ இங்கே வர தேவையில்லை.” என்று கண்டிப்புடன் கூற… அவளது வார்த்தைகளில் திரும்பி பார்த்தவனின் பார்வை அவளைக் கூர்மையுடன் துளைத்து எடுத்தது.

 

ஏனோ…?”

 

அண்ணியுடன் நீ பேசுவது…” மேலே அவள் முடிக்கும் முன் அவன்,

 

வாயை மூடினால் நல்லது…” என்று ஆத்திரத்துடன் கத்தினான். அவனது உரத்த குரலில் அவள் திடுக்கிட்டவளாய் அவனைப் பார்க்க…

 

திவி என்னுடைய அத்தை பொண்ணு… அவங்களைப் பார்க்க வருவதற்கு யாருடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை.” என்று கோபத்தோடு கூறியவன்,

 

உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை.” என்றவன் அடுத்தக் கணம் அங்கிருந்து விறுவிறுவெனச் சென்றுவிட்டான்.

 

அவன் சாதாரணமாகக் கூறியிருந்தால் அவளும் அதைச் சாதாரணமாகக் கடந்திருப்பாள். ஆனால் அவனது குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை ஏதோ செய்தது. மனம் தளர காரிலேறி அமர்ந்தவள் தனது நிறுவனத்தை நோக்கி பயணமானாள். எப்படி எல்லாமோ பயணிக்க வேண்டிய அவளது வாழ்க்கை இப்படி மாறி போனதற்கு யாரை குற்றம் சொல்வது, யாரை சபிப்பது. அவளுடன் இணைந்து கரம் கோர்த்து பயணிக்க வேண்டியவன் எதிரியாய்… பூமாலையாய் அவன் தோள் சேர வேண்டியவள் அவனது கழுத்திற்கு நேரே கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருக்கிறாள். அவளது விழிகளில் இருந்து சூடாய் கண்ணீர் துளிகள் வழிந்தது. அதைத் துடைக்கக் கூட மனமில்லாதவளாய் அவள் காரை ஓட்டி சென்றாள்.

 

ஹம்சவர்த்தினி அலுவலகத்தில் வந்து அமர்ந்த போது அவளது அலைப்பேசி அழைத்தது. அதில் ஒளிர்ந்த எண்ணை பார்த்ததுமே அவளது முகத்தில் கோபம் வந்து ஒட்டி கொண்டது. அதை உயிர்ப்பித்தவள் மறுமுனை பேசுவதற்கு இடம் கொடுக்காது,

 

எத்தனை தடவை சொல்றது? எனக்கு ஃபோன் பேச கூடாதுன்னு… நீ மட்டுமில்லை… மத்தவங்களும் எனக்கு ஃபோன் பேச கூடாது. நான் சொல்லும் வரை நீங்க இருக்கிற இடம் வெளியில் தெரிய கூடாது.” கோபமாய்க் கத்தியவள் பதிலை எதிர்பாராது அழைப்பை துண்டித்து விட்டாள்.

 

********************************

 

மதிய உணவு இடைவேளை என்பதால் எல்லோருக்கும் ஒரு மணி நேரம் உணவுக்கென நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனந்த், தீனா, தரணி, கீதன் நால்வரும் அங்கிருந்த மர நிழலில் படுத்து விட்டனர். அதிகாலை மூன்று மணியில் இருந்து அனைவரும் சளைக்காது வேலை பார்த்து கொண்டிருந்தனர். படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னர் அனைத்தும் சரியாய் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டியது உதவி இயக்குநர்களின் வேலை அல்லவா… அதில் அவர்கள் அனைவரும் களைத்து போயினர். ஷிவாரிகா மட்டும் அங்கே ஓய்வெடுக்க விருப்பம் இல்லாது அடர்ந்து பரந்திருந்த வனப்பகுதியை ரசித்துக் கொண்டு நடந்தாள்.

 

அடர்த்தியான காட்டு மரங்கள் கொடுத்த குளுமையான நிழல், பறவைகளின் சத்தங்கள், பலவித பூக்களின் நறுமணம், ஈரப்பதமான மண்ணின் மணம் என்று ஒவ்வொன்றையும் அவளது மனம் ரசித்தது. தனது கையிலிருந்த புகைப்படக் கருவியைக் கொண்டு இயற்கை காட்சிகளைப் படமெடுத்தபடி அவள் மேலே நடந்தாள். மரக்கிளையில் அமர்ந்திருந்த குரங்கு ஒன்றை அவள் படமெடுக்க முயன்ற போது அது அவள் மேல் பாய்ந்தது. அவள் பயந்து போய்க் கத்தியபடி விலக… அப்போது அவளை ஆதரவாய் இரு கரங்கள் தாங்கி கொண்டது. யாரென்று ஏறிட்டு பார்த்தவள் தன்னைத் தாங்கியது ஹர்ஷா என்றதும் முகத்தைச் சுளித்துக் கொண்டு வேகமாய் அவனிடம் இருந்து விலகினாள்.

 

ஹேய், பார்த்து ஏஞ்சல்… அந்தக் குரங்கு அங்கே தான் இருக்கு.” சிறு சிரிப்புடன் அவன் சற்று தள்ளி நின்று இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குரங்கை சுட்டிக்காட்டினான்.

 

உனக்குக் குரங்கு பரவாயில்லை.” என்றவள் நடையை எட்டி போட்டாள்.

 

நீ சொன்னதுக்காக நிச்சயம் நான் கோபப்பட மாட்டேன். நான் மட்டுமில்லை ஏஞ்சல். நீயும் கூட இது தான்…” என்றவன் மீண்டும் குரங்கை சுட்டிக்காட்ட… அவள் கோபத்துடன் அவனைப் பார்த்தாள்.

 

நான் சொல்லலைம்மா… அறிவியல் அப்படிச் சொல்லுது.” என்றவனது புன்னகை அகன்றது.

 

நான் அறிவியல் படிக்கவில்லை.” என்றவளுடன் இணைந்து நடந்தபடி,

 

நீ படிக்கலைன்னா என்ன… நான் படிச்சிருக்கேன். உனக்குப் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி எல்லாம் சொல்லி தர்றேன்.” என்றவனது பேச்சில் அவளது விழிகள் யோசனையாய் இடுங்கியது. அவனது விழிகள் தனது மேனியை வெறித்துப் பார்த்த விதத்தில் அவளுக்கு அவன் கூறியது புரிந்து போனது.

 

யூ ராஸ்கல்…” என்றவள் அவனை அடிக்கக் கையை நீட்டி விட்டாள்.

 

ஹர்ஷா லாவகமாய் அவளது கையைப் பிடித்துத் தடுத்தவன் அவளது இரு கைகளையும் அவளுக்குப் பின்னால் சேர்த்து பிடித்தபடி,

 

நான் பேசுவதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேள் ஏஞ்சல். அதுக்குப் பிறகு நீ கோபப்படு.” என்றான்.

 

நான் எதுக்குக் கேட்கணும்?” அவள் அவனது பிடியிலிருந்து திமிறியபடி எரிச்சலுடன் கத்தினாள்.

 

எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சியிருக்கு. எனக்கு நீ வேணும். அட் எனி காஸ்ட்.” இது என்ன மாதிரியான வார்த்தைகள். இதற்கான அர்த்தம் என்ன?

 

உனக்குப் பிடிச்சியிருந்தால் போதுமா? எனக்குப் பிடிக்க வேண்டும்.”

 

ஏன் என்னைப் பிடிக்கவில்லை? நான் அழகா இல்லையா? என் கிட்ட பணம் இல்லையா? என்ன இல்லை என்னிடம்?” அவன் அடக்கப்பட்ட கோபத்தில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான். தன்னை ஒருத்தி உதாசீனப்படுத்துவதை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. எல்லாப் பெண்களும் அவன் மேல் விழுந்து விழுந்து பழக… இவள் மட்டும் எப்படித் தன்னைப் பிடிக்கவில்லை என்று கூறலாம்? அவனது ஈகோவிற்குப் பெருத்த அடியாக இருந்தது அவளது பேச்சு…

 

நீ ஒரு பொம்பளை பொறுக்கி… இது ஒண்ணு போதும்… நான் உன்னை வெறுப்பதற்கு…” அவளது வார்த்தைகள் வெறுப்புடன் வந்தது. அவளது வார்த்தைகளில் அவனிடம் இருந்து பலத்த சிரிப்பு வெளிவந்தது. அதே சிரிப்புடன் அவன் தனது கையை விலக்கி கொண்டான். அவள் அவனை முறைத்தபடி தனது கையில் கன்றிச் சிவந்திருந்த பகுதியை நீவி விட்டு கொண்டாள்.

 

வேணும்ன்னா நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு திருத்து. அது உன் சாமர்த்தியம். மாறுவேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் நீ எனக்கு வேண்டும்.” அவளை ஒரு முறையாவது சுகிக்க வேண்டும் என்று நினைத்தவன் அதற்கு நேர்மாறாய் அவளிடம் திருமணத்தைப் பற்றிப் பேசினான். காதல் அவனுள்ளும் புகுந்து மாயாஜாலம் நிகழ்த்துகின்றதோ!!!

 

ஆமாம், உன்னைத் திருத்துவதற்குத் தான் என் அப்பா, அம்மா அருமை, பெருமையா என்னைப் பெத்து வளர்த்திருக்காங்க பாரு. அதுக்கு வேறு யாரையாவது பார்.” என்றவள் அங்கிருந்து செல்ல துவங்கினாள்.

 

வேறு யாரும் எனக்கு வேண்டாம். நீ தான், நீ தான் மட்டும் தான் வேண்டும்.” என்று அவன் அங்கிருந்தபடியே அவளை நோக்கி கத்தினான். அவள் திரும்பி பார்த்து அவனை முறைத்தவள்,

 

பைத்தியம் கூட உன்னை விரும்பாது.” என்க…

 

நீ பைத்தியமா என்னை விரும்பும் வரை நான் உன்னை விட மாட்டேன்.”

 

பார்த்து தம்பி, உனக்குப் பைத்தியம் பிடித்துவிடப் போகிறது.” இகழ்ச்சியான குரலில் கூறிவிட்டு அவள் சென்றுவிட்டாள். அவளது வார்த்தைகளில் அவனது உதடுகளில் புன்னகை தோன்றியது.

 

யாருக்குப் பைத்தியம் பிடிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் ஏஞ்சல்.” என்று அவன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

 

*****************************

 

தனது எல்லா அலுவலக வேலைகளையும் முடித்துக் கொண்டு ப்ரஷன்ஜித் இறுதியாகத் தங்களது ஹோம் அப்ளையன்சஸ்கடைக்குள் நுழைந்தான். வீடு கட்டுவது முதல் அதில் குடியிருக்கத் தேவைப்படும் பொருட்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் இடம் அது… இதன் கிளைகள் தமிழகம் முழுவதும் பரந்து விரிந்திருந்தது. இதை ப்ரஷன்ஜித் தனியே நடத்தவில்லை. தனது தோழன் கதிர்வேலுவுடன் இணைந்து நடத்துகின்றான்.

 

ஹாய் கதிர்…” என்றபடி அலுவலக அறையில் அவன் முன் வந்தமர்ந்தான் ப்ரஷன்ஜித்.

 

ஹாய்டா… ரொம்ப டயர்டா இருக்கிற மாதிரியிருக்கு… இருடா, காபி கொண்டு வர சொல்றேன்.” என்ற கதிர்வேல் பணியாளை அழைத்துக் காபி கொண்டு வர சொன்னான்.

 

காபி என்றதும் ப்ரஷன்ஜித்தின் எண்ணம் தன்னவளிடம் சென்றுவிட்டது. அவனது முகத்தில் மந்தகாச புன்னகை தோன்றியது.

 

என்னடா சிரிப்பு எல்லாம் பலமா இருக்கு…” கதிர்வேல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தபடி கேட்டான்.

 

என்னோட பொம்மாயியை நினைச்சேன்டா…” பொம்மை போன்றிருக்கும் தன்னவளை நினைத்தபடி கூறினான் ப்ரஷன்ஜித்…

 

பாருடா, அடிக்க ஆள் அனுப்புற ஆள் கிட்ட நம்மாளு மயங்கி இருப்பதை.” கதிர்வேல் நண்பனை கிண்டலடித்தான்.

 

அடிக்கத் தானே ஆள் அனுப்பினாள்… கொல்ல இல்லையே.” என்ற தோழனை கண்டு,

 

என்ன சொல்ற மாப்ளே?” கதிர்வேல் அதிர்ந்து போனான்.

 

உண்மை அது தானேடா… எதிரியை உயிரோடு விடக் கூடாது தானே. அது தானே தொழில் தர்மம்…”

 

நல்லா வாயில வந்திர போகுது… நல்ல தர்மம்… போடாங்…” என்று கண்டபடி திட்டிய கதிர்வேலை கண்டு ப்ரஷன்ஜித் புன்னகை மாறாது பார்த்திருந்தான்.

 

எங்க தர்மம் இது தான்…” என்றவனைப் பார்த்த கதிர்வேலின் விழிகள் வலியை பிரதிபலித்தது.

 

நீயாவது சந்தோசமா இருடா… எதுக்கு இப்படிப் பகையைத் தூக்கி சுமந்துக்கிட்டு இருக்க…”

 

நான் தூக்கி சுமக்கலை கதிர். பொம்மாயி தான் என்னை எதிரியாய் பார்க்கிறாள். அவள் எனக்கு முக்கியம் தான். அதுக்காக அவளுக்கு அடிபணிஞ்சு போக என்னால் முடியாது. அவள் ஒரு அடி கொடுத்தால், நான் திருப்பிப் பல அடிகளைக் கொடுப்பேன்.” ப்ரஷன்ஜித் தீவிர குரலில் கூறினான்.

 

ப்ச், நீ பண்றது கொஞ்சமும் சரியில்லை.” கதிர்வேல் தனது அதிருப்தியை காட்டினான்.

 

என் வழக்கை விடு… நாளைக்குத் திவி இங்கே வர்றாங்க.”

 

திவ்யாவை பற்றிப் பேசியதும் கதிர்வேலின் முகம் பிரகாசம் அடைந்தது. அவனது விழிகளில் இருந்த வலி மறைந்து மின்னல் மின்னியது. ப்ரஷன்ஜித் நண்பனை வாஞ்சனையுடன் பார்த்தான். கரடுமுரடான கதிர்வேலுக்குள் இருக்கும் நல்ல மனது அவனுக்கு மட்டும் தான் தெரியும். அவன் பலாப்பழம் போன்றவன்…

 

உண்மையாகவா சொல்லுற மாப்ள…?” கதிர்வேலால் இந்த விசயத்தை நம்ப முடியவில்லை.

 

உண்மையாகத் தான் சொல்கிறேன்… இனி திவி வாழ்க்கையைச் சீர் செய்ய வேண்டியது உன் பொறுப்பு மச்சான்…” என்று தீவிர குரலில் கூறியவனைக் கதிர்வேல் திகைப்புடன் பார்த்திருந்தான்.

 

அன்று சரியாக இருந்த ஒன்று… இன்று தவறாகப் போகுமோ…! தவறை சரி செய்யக் காலத்தால் முடியும் என்றால்… இப்போது தான் அந்தக் காலம் கைக்கூடி வந்திருக்கிறது.

 

தொடரும்…!!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *