“நிலவோடு பேசும் மழையில்…” – 3 Leave a comment

அத்தியாயம் : 3

 

“ஹாய் ஏஞ்சல்…” என்றழைத்தபடி திடுமெனத் தனக்கு முன்னால் வந்து நின்ற ஹர்ஷாவை கண்டு ஷிவாரிகா திடுக்கிட்டு போனாள். சட்டென்று சுதாரித்தவள் பாதுகாப்பாய் இரண்டடி பின்னால் நகர்ந்த பின்பே அவனைக் கண்டு முறைத்தாள்.

 

“கொஞ்சமும் அறிவில்லை…” அவள் சிடுசிடுவெனப் பேச… அதை அவன் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.

 

“நான் உன் கிட்ட பேசணும்.” என்றவனைப் புருவம் சுருக்கி பார்த்தவள்,

 

“நமக்கு இடையில் பேச என்ன இருக்கு?” என்று எரிச்சலுடன் காய்ந்தாள். காலையில் அவள் கண்ட காட்சி இப்போதும் அவள் கண்முன் எழுந்து அவளைத் தகிக்கச் செய்தது. ஒழுக்கம் உயிரை போன்றது என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவளுக்கு அவனது இத்தகைய செயலை கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை.

 

“இப்போதைக்கு எதுவும் இல்லை தான்… ஆனால் இனிமேல் பேச நிறைய இருக்கலாம் இல்லையா?” ஒற்றைப் புருவத்தைத் தூக்கியபடி வசீகரமாகக் கேட்டவனின் தலையில் நங்கென்று கொட்ட வேண்டும் போல் அவளது கை பரபரத்தது.

 

“தேவையில்லை…” என்றவள் நகர முற்பட்ட போது ஹர்ஷா தனது வலக்கையை அவள் முன் நீட்டி தடுத்தான்.

 

“ஷிவா, இங்கே என்ன பண்ற?” என்று கேட்டபடி தீனா அங்கே வந்தான். தீனாவை கண்டதும் ஹர்ஷாவின் முகம் கடுகடுத்தது. பூஜை வேளை கரடி என்று அவனது கோபம் எல்லாம் தீனா மீது திரும்பியது.

 

“தூக்கம் வரலைன்னு நடந்துட்டு இருந்தேன் தீனா.”

 

“ஓ…” என்றவன் ஹர்ஷாவை பார்த்தபடி, “சாருக்கு இங்கே என்ன வேலை?” என்று கேட்க…

 

“அவருக்கு வேலை இல்லையாம். அதான் பேச வந்திருக்கிறார். ஆனா பாரு தீனா, நமக்கு ஆயிரம் வேலை இருக்கு. நீ வா…” என்று ஓரக்கண்ணால் ஹர்ஷாவை பார்த்தபடி கூறியவள் நண்பனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள். தீனா ஹர்ஷாவை முறைத்து பார்த்தபடி அவளுடன் இணைந்து நடந்தான்.

 

“ஜஸ்ட் மிஸ்ட்…” ஹர்ஷா கோபத்தில் இயலாமையுடன் தனது காலால் கீழே கிடந்த கல்லை ஓங்கி உதைத்தான்.

 

ஷிவாரிகா சென்ற பின்பும் அங்கிருந்து செல்ல விருப்பம் இல்லாதவனாய் ஹர்ஷா மரத்தடியில் இருந்த திண்டில் அமர்ந்தான். யாருமற்ற அந்த ஏகாந்த சூழல் அவனது மனதினை சிறிது அமைதிப்படுத்தியது. அந்தக் கணம் அவனது மனம் முழுவதையும் ஷிவாரிகா ஆக்கிரமித்து இருந்தாள். அவளைப் பற்றி அவனுக்கு முழுவதும் தெரியாது. செழியனின் படப்பிடிப்பில் தான் அவன் முதல் முறையாக அவளைப் பார்த்தான். அன்று படப்பிடிப்புத் தளத்தில் சற்று முன் நடைபெற்ற காட்சியில் வாரியிறைக்கப்பட்ட வண்ண சரிகை தாள்களைக் கூட்டி பெருக்கி கொண்டிருந்தாள். அவளது செல்வ செழிப்பான தோற்றத்திற்கும், அவள் செய்யும் வேலைக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாது இருப்பதைக் கண்டு தான் அவனது பார்வை அவள் புறம் திரும்பியது. அவளைப் பார்த்தவுடனேயே கூறிவிடலாம், அவள் எத்தனை அழகு என்று… வெயில், மழை, குளிர் என்று பாராது படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் அவளது சரும நிறம் சற்று மங்கி காணப்பட்டது. அந்தத் தோற்றத்திலும் பொலிவுடன் காணப்பட்டவள் மீது அவனது விழிகள் சில நிமிடங்கள் தேங்கி நின்றது.

 

அன்றே தனது உதவியாளர் மூலம் ஷிவாரிகாவை பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்து விட்டான். அவளைப் பற்றிய விபரங்களைப் படித்தவன் அடஎன்பது போல் விழிகளை விரித்தான். ஏனெனில் அவனது அண்ணி திவ்யாவின் மாமன் மகள் தான் ஷிவாரிகா… அவன் எப்படி அண்ணனது திருமணத்தில் அவளைப் பார்க்காது விட்டான். அப்போது தான் அவனுக்குமே அது ஞாபகம் வந்தது. இடைவிடாத படப்பிடிப்புக் காரணமாக அவன் அண்ணனது திருமணத்திற்கு முகூர்த்த நேரத்திற்கு மட்டும் வந்துவிட்டு உடனே புறப்பட்டுச் சென்று விட்டான். பர்வதம் கூட இரண்டாவது மகனின் அவசர வருகையைக் கண்டு குறைப்பட்டுக் கொண்டார்.

 

அடச்சே… கிட்டத்தட்ட ஒரு வருடத்தை வீணாக்கி விட்டேனேஎன்று நினைத்தவன் அதற்கு மேல் ஒரு நொடி கூட வீணாக்க விரும்பவில்லை. அதன் விளைவு அவனது கவனம் முழுவதும் அவள் மீது… அவளோ இவன் ஒருவன் இருப்பதையே கண்டு கொள்வதாய்த் தெரியவில்லை. என்றாவது ஒரு நாள் அவள் தனியே மாட்டாமலா போய்விடுவாள்? அன்று கவனித்துக் கொள்வோம் என்றெண்ணி அவனும் அமைதி காத்தான். அதற்கு ஏற்றார் போல் இன்று அவள் அவனுக்கு வசனம் சொல்லி கொடுப்பதற்காக நியமிக்கப்பட்டு இருந்தாள். அத்தனை நாள் தன்னை அலைக்கழித்தவளுக்கு இன்று ஒரு நாள் பாடம் புகட்டவே அவன் அவளைப் பார்க்காது அலைக்கழித்தான். அப்படி இருந்தும் அவன் கேரவன் வண்டியில் இருந்த ஜன்னல் வழியே அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

இரண்டு மணி நேரம் காத்திருந்து விட்டுப் பொறுமை இல்லாது கேரவனை நோக்கி வந்தவளை கண்டு அவனது உதடுகளில் நமட்டுச் சிரிப்புத் தவழ்ந்தது. அவன் அவளது வரவினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது தான் பக்கவாட்டுக் கதவு திறந்து அந்தப் படத்தின் புதுமுக நாயகி உள்ளே நுழைந்தாள். கேரவனின் இரண்டு அறைகளையும் இணைக்கும் இடத்தில் பொதுவான கதவு ஒன்று இருக்கும். நாயகன், நாயகிக்கு இடையில் நிகழும் அந்தரங்கத்திற்கு ஏற்றார் போன்று அது எப்போதுமே திறந்திருக்கும். இதில் ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்கு. ஹர்ஷாவின் பலவீனத்தை அந்த நாயகியும் அறிவாள். அதனால் அவள் எப்போதுமே அவனிடம் தாராளமாகப் பழகுவாள். அவனோ ஒரு படி மேலே போய் மிகவும் தாராளமாகப் பழகினான். அதனால் என்னவோ இந்தப் படத்தில் அவர்களுக்கு இடையில் வேதியியல்‘ (அதாங்க கெமிஸ்ட்ரி) நன்கு வேலை செய்தது. ஹாலிவுட்டில் இருக்கும் இந்தப் பழக்கம் மெல்ல மெல்ல நம் நாட்டிலும் பரவ ஆரம்பித்து இருக்கிறது.

 

“ஹாய்…” என்றபடி புன்னகையுடன் வந்த நாயகியை ஹர்ஷா பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தான்.

 

“கம் பேபி…” என்றவன் அவளை அழைத்துத் தனது அருகில் அமர வைத்து அவளது இதழ்களைச் சிறை செய்த நேரம் ஷிவாரிகா கேரவன் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

 

ஒரு பெண்ணை மனதில் நினைத்துக் கொண்டு மற்றொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க ஹர்ஷாவால் மட்டுமே முடியும். அதற்காக அவன் வருந்தவும் இல்லை. தனது செயலை மறைக்கவும் முற்படவில்லை. ஆனால் அதற்காகக் கோபம் கொண்டு கத்திய ஷிவாரிகாவை கண்டதும் அவனுக்கும் சுள்ளென்று கோபம் வந்துவிட்டது. யாரும் அவனை இது போன்று மரியாதை குறைவாகப் பேசியது இல்லை. ஆண் என்கிற அகங்காரம் அவனை அவளிடம் பதிலுக்குப் பேச வைத்தது. அதற்கு அயராது நின்றவளை கண்டு அவனது மனம் தான் அவளிடம் வீழ்ந்தது. என்னா பொண்ணுடா சாமி!என்று…

 

ஏற்கெனவே தனது உதவியாளனை வைத்து எப்படியோ வசனத்தைப் பெற்று கொண்டவன் அதை அப்படியே அவளிடம் கூறினான். அந்த வசனம் கூட அவனது மனதினை வெளிப்படுத்துவது போல் இருந்தது. அதைக் கேட்டவளோ திகைத்து தான் போனாள். அப்போதைய அவளது திகைப்பினை இப்போதும் நினைத்து பார்த்தவனின் உதடுகளில் புன்னகை நெளிந்தது. அவளிடத்தில் அவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு அவன் காதல் என்று பெயர் சூட்ட விரும்பவில்லை. ஆனாலும் அவள் அவனுக்கு வேண்டும். அதில் அவன் உறுதியாக இருந்தான். அது தற்காலிகமாக இருந்தாலும் சரி, நிரந்தரமாக இருந்தாலும் சரி… சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் படுக்கைக்கு என்றாலும் சரி… திருமணத்திற்கு என்றாலும் சரி… அவளைப் பொறுத்தவரையில் அவனது எண்ணம் இதுவே…

 

“நீ எவ்வளவு தூரம் விலகி போனாலும் சரி… உன்னை விடுவதாய் இல்லை பெண்ணே!” அவன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

 

அப்போது ஹர்ஷாவின் அலைப்பேசி அழைத்தது. தெரியாத எண்ணாக இருக்கவும் அவன் யோசித்தபடி அலைப்பேசியை உயிர்ப்பித்தான்.

 

“ஹர்ஷா, என் தங்கையிடம் உன் விளையாட்டுத்தனத்தை வைத்து கொள்ளாதே…” மறுமுனையில் ப்ரஷன்ஜித் கடுமையாக அவனை எச்சரித்தான்.

 

“உன் தங்கையா? யார் அது…?”

 

“ஓ… யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் பெண்கள் சகவாசம் இருக்கிறதா?”

 

“மைன்ட் யுவர் வேர்ட்ஸ்…” ஹர்ஷாவின் முகம் கோபத்தில் சிவந்து போனது. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதற்கு இவன் யார்? என்று அவனுக்குக் கோபம் வந்தது.

 

“அதே தான் உனக்கும்… நீ உன் வேலையை, அதாவது உன் நடிப்பை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் நல்லது. அதை விட்டு விட்டு என் தங்கையிடம் வம்பு வளர்க்கும் வேலையை வைத்து கொள்ளாதே.”

 

ஹர்ஷாவை பற்றி ப்ரஷன்ஜித்திடம் தீனா போட்டு கொடுத்து விட்டான். ப்ரஷன்ஜித் ஏற்கெனவே தங்கையின் நான்கு நண்பர்களிடமும் அவளுக்குப் பாதுகாப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தான். அவனை மீறி, அவனது அன்னையை மீறி ஷிவாரிகாவிடம் வம்பு வளர்க்க யாருக்கும் தைரியம் இருந்தது கிடையாது. இதுவரை அப்படித்தான் இருந்தது. ஆனால் இந்தப் படத்தின் நாயகன் ஹர்ஷா என்றதுமே ப்ரஷன்ஜித் சற்றுச் சுதாரித்துக் கொண்டு முன்பே அவளது நண்பர்களிடம் எச்சரிக்கை செய்துவிட்டான். அது கூட நல்லதாகப் போயிற்று. சரியா நேரத்தில் தீனா வந்து அவளைக் காப்பாற்றி அழைத்துச் சென்றுவிட்டான்.

 

“உன் தங்கை…?” நெற்றியை சுருக்கி யோசித்த ஹர்ஷாவின் விழிகள் மறுநொடி பிரகாசித்தது.

 

“ஓ… நீ ஷிவாவோட அண்ணனா? என் அண்ணன் ஹரீஷோட தொழில் எதிரி… அம் ஐ ரைட்?”

 

“தெரிந்தால் சரி… நான் ஹரீஷ்க்குத் தொழில் எதிரி மட்டும் தான். ஆனால் உனக்கு வாழ்க்கை எதிரியாக மாற்றி விடாதே.” ப்ரஷன்ஜித்தின் குரல் மறைமுகமாக அவனை எச்சரித்தது.

 

“உனக்கும், எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லையே. நீ எதுக்கு இப்படிக் குதிக்கிற?” ஹர்ஷா புரியாது வினவ…

 

“நீ என் தங்கையிடம் பிரச்சனை பண்ணினால்… உனக்கும், அவளுக்கும் இடையில் நான் வருவேன். எதுவாக இருந்தாலும் என்னைத் தாண்டி தான் என் தங்கையைச் சென்றடைய வேண்டும். அது காதலாக இருந்தாலும் கூட…”

 

“வாட் யூ மீன்?”

 

“இன்னுமா உனக்குப் புரியலை. நான் கை காட்டுபவனைத் தான் என் தங்கை திருமணம் முடிப்பாள் என்று சொல்கிறேன்.” அதைக் கேட்டு ஹர்ஷாவின் முகம் அவமானத்தில் கருத்துப் போனது.

 

“நான் நினைத்தால் அதை முறியடிப்பேன்.” தன் மீது கொண்ட கர்வத்தில் ஹர்ஷா பெருமிதத்தோடு கூற…

 

“அதையும் பார்க்கலாம். நீயா? நானா? என்று…” ஹர்ஷாவின் சபதத்தில் ப்ரஷன்ஜித் வாய்விட்டுச் சிரித்தான். பின்பு,

 

“நீ சபதம் போட்டால் உடனே நானும் சிலிர்த்துக் கொண்டு பதிலுக்குச் சபதம் போடுவேன் என்று நினைத்தாயா ஹர்ஷா? நான் பிசினஸ்மேன். எந்தப் பிரச்சனையையும் வளர விடாது முளையிலேயே கிள்ளி போட தான் விரும்புவேன். அதே மாதிரி தான் நீ என் தங்கையிடம் வாலாட்டியது தெரிந்தால் அடுத்து நொடி உன் உடம்பில் உயிர் தங்காது. ஜாக்கிரதை…” என்று எச்சரித்த ப்ரஷன்ஜித் அழைப்பை துண்டித்துவிட்டான்.

 

“அதையும் பார்ப்போம்… உன் தங்கை என்னிடம் மயங்கினால்…??? அப்போது நீ என்ன செய்வாய்?” என்று அலைப்பேசி திரையைப் பார்த்து திமிராய், கோபமாய்க் கூறிய ஹர்ஷாவின் மனதில் ப்ரஷன்ஜித்தை வெல்ல வேண்டும் என்கிற வெறி வீறு கொண்டு எழுந்தது.

 

அங்கே ப்ரஷன்ஜித் கோபத்துடன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருந்தான். ஹர்ஷாவை நினைத்து அவனுக்குச் சற்றுப் பயமாக இருந்த போதும், அவனுக்குத் தன் தங்கை மீது அதிக நம்பிக்கை இருந்தது. தனது தங்கை சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுப்பவள் அல்ல என்பது அவனுக்கு நன்கு தெரியும். ஆனால் ஹர்ஷாவின் லீலைகள் அவனுள் கிலியை மூட்டியிருந்தது என்னவோ உண்மை…

 

படுக்கையில் விழுந்தவனுக்கு உறக்கம் வரவில்லை. மாறாக ஹம்சவர்த்தினியின் முகம் வேறு நினைவில் எழுந்து அவனை இம்சித்தது. அப்போதும் அவனை இம்சித்தாள். இப்போதும் அவனை இம்சிக்கின்றாள். அவளைக் கண்டாலே அவனுள் தோன்றும் அந்தப் பிரத்யேக வார்த்தைகளை இப்போதும் அவனது உதடுகள் முணுமுணுத்தது. அதை நினைத்து அவனது உதடுகளில் புன்னகை உறைந்தது. அவளது நினைவில் அவன் அப்படியே நிம்மதியாக உறங்கி போனான்.

 

ஆனால் ஹம்சவர்த்தினி உறங்காது ப்ரஷன்ஜித்தை தான் நினைத்து கொண்டிருந்தாள். அத்தோடு அவன் கொடுத்த முத்தத்தையும்…

 

“கேட்ட போது கொடுக்கலை. இப்போ நீயும் எனக்கு வேண்டாம். உன் முத்தமும் எனக்கு வேண்டாம்.” என்று கண்ணீர் வழிய அவன் எதிரில் இருப்பது போல் அவள் அவனிடம் சண்டை போட்டாள்.

 

அவளுடைய போன வருட பிறந்தநாளில் போது அவள் பண்ணிய அலைப்பறைகள் எல்லாம் அவளுக்கு ஞாபகம் வந்தது. அவள் ப்ரஷன்ஜித்தை தேடி சென்று பிறந்தநாள் வாழ்த்தை அவனிடம் இருந்து பெற்று கொண்டதோடு மட்டுமல்லாது அவனிடம் இருந்து பரிசுக்காகச் சண்டை போட்டதும் அவளின் நினைவுக்கு வந்தது. பரிசு கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, முத்தமாவது கொடுஎன்று அவள் அவனிடம் கெஞ்சி கேட்டதும்… அதற்கு அவன் மறுத்து அவளை அனுப்பி வைத்ததும் அவளது நினைவில் எழுந்து அவளைக் கண்ணீர் வடிக்கச் செய்தது.

 

எப்போதுமே அவள் தான் அவனின் பின்னால் சுற்றியிருக்கிறாள். அவன் அல்ல… சந்தர்ப்பம் கிடைத்த போது அவன் அவளது பலவீனத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டான். பழைய கதைகளை நினைத்து நினைத்து அவளது விழிகளில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. வயதிற்கு மீறிய தொழில் பாரம், வாழ்க்கையைப் பற்றிய பயம் எல்லாம் சேர்ந்து அவளை மிகவும் பலவீனப்படுத்தி இருந்தது. என்ன தான் வெளியில் தைரியசாலியாக அவள் காட்டி கொண்டாலும் உள்ளுக்குள் அவள் சின்னஞ்சிறு குழந்தை தான்… தாயின் அரவணைப்பில், தந்தையின் பாதுகாப்பில் எப்போதும் இருக்க ஆசைப்படும் சிறு மழலை அவள்… ஆனால் அதற்கான கொடுப்பினை அவளுக்கு இல்லை போலும்… வெகு நேரம் தனக்குள் உழட்டி கொண்டவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது.

 

*****************************

 

மறுநாள் காலையில் ப்ரஷன்ஜித் எழுந்து வெளியில் வந்த போது எப்போதும் காலை வணக்கம் கூறி அவனை வரவேற்கும் தந்தை இல்லாது அவன் கேள்வியாய் புருவங்களை உயர்த்தினான். உடனே அவன் நேரே பெற்றோரின் அறைக்குச் சென்று பார்த்த போது அங்குச் சிவகுமரன் அபிஷரிகாவை மடியில் படுக்க வைத்து அவளது நெற்றியில் ஈர துணியை வைத்துக் கொண்டிருந்தான்.

 

“அம்மாவுக்கு என்னாச்சுப்பா…?” பதற்றத்துடன் கேட்டபடி அங்கு வந்த ப்ரஷன்ஜித் தாயின் கழுத்தில் கை வைத்துப் பார்த்தான்.

 

“காய்ச்சல் ப்ரஷன்… டாக்டரிடம் வா என்றால் உன் அம்மா வர மாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணுகிறாள்.”

 

“சாதாரணக் காய்ச்சல் தான் ப்ரஷூ… அதுக்குப் போய் உங்கப்பா ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்.” என்ற அபிஷரிகா மகனை கண்டு புன்னகைத்தாள்.

 

“நேத்து நல்லா தானே இருந்தீங்கம்மா… அதற்குள் காய்ச்சல் எப்படி வந்தது?” என்று கேட்டுக் கொண்டே அன்னையின் காலடியில் அமர்ந்தவன் அன்னையின் கால்களை எடுத்து தனது மடியில் வைத்துக் கொண்டு இதமாகப் பிடித்து விட ஆரம்பித்தான்.

 

“நேற்று என் குல்ஃபியை கரெக்ட் பண்ண குல்ஃபி வாங்கிக் கொடுத்தேன் ப்ரஷன்… அதன் விளைவு தான் இது…” கண்சிமிட்டி சிரித்த தந்தையைக் கண்டு அவனுக்கும் சிரிப்பு வந்தது.

 

“நான் உனக்குக் குல்ஃபியா…?” அபிஷரிகா கணவனிடம் சண்டைக்கு வந்தாள்.

 

“ம்மா, குல்ஃபி பரவாயில்லை… நேற்று அப்பா என்னிடம்…” என்று இழுத்த மகனை கண்டு…

 

“மகனே, சந்தோசமா இருக்கிற குடும்பத்தில் குதூகலமா கும்மி அடிச்சிட்டு போயிராதே…” என்று அலற…

 

“நீ சொல்லு ப்ரஷூ… உங்கப்பா அப்படி என்ன சொன்னார்?”

 

“உங்களைப் பார்த்து பிரம்மராட்சசின்னு சொன்னார்.” மகன் சிரியாமல் தந்தையைத் தாயிடம் போட்டுக் கொடுத்தான்.

 

“சிவூஊஊஊஊஊ…” அவள் கோபமாய் வீறிட…

 

“நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை… அவன் பொய் சொல்லுகிறான்.” பள்ளி சிறுவன் போல் கண்களைக் கசக்காத குறையாக அழும் குரலில் சிவகுமரன் கூற…

 

“ப்ரஷூ, அது என்னவோ உண்மை தான்… ஒரு காலத்தில் நான் ராட்சசி தானே.” என்று சொன்ன அபிஷரிகாவின் முகம் வாடி போனது.

 

“ம்மா…”, “அபி…” அப்பா, மகன் இருவரும் அவளை அதட்டினர்.

 

தந்தைக்கும், தாய்க்கும் இடையில் நடந்த விசயங்கள் எதுவும் மகனுக்குத் தெரியாது. ஏதோ மனஸ்தாபம் கொண்டு பிரிந்து இருந்தார்கள் என்று மட்டுமே அவனுக்குத் தெரியும். யாரிடம் தவறு என்று அவனுக்கு இதுவரை தெரியாது. அன்னை அவ்வப்போது இப்படி ஏதாவது கூறும் போது தந்தை அவளை அதட்டி தடுத்து விடுவார். அதனாலேயே அவனும் அது பற்றி அறிய முற்படவில்லை.

 

“நீ என்னோட தேவதை…” என்றபடி சிவகுமரன் தனது மனைவியை அணைத்துக் கொள்ள… அவளும் மகனை மறந்து கணவனது அணைப்பில் பாந்தமாய் அடங்கினாள்.

 

“ஒரு சின்னப் பையனை வச்சிக்கிட்டு என்ன பண்றீங்க?” விளையாட்டாய் கேட்டபடி விழிகளை மூடினான் ப்ரஷன்ஜித்.

 

“வேணும்ன்னா நீ உன் மனைவியைக் கட்டிப்பிடிச்சுக்கோ…” அன்னையின் குரலில் அவன் திடுக்கிட்டு விழிகளைத் திறக்க…

 

“அதுக்கு முதல்ல உன் மகன் கல்யாணம் பண்ணணும்.” சிவகுமரன் மகனை பார்த்தபடி கூற…

 

“அதைத் தான் நான் அடுத்து சொல்ல வந்தது.” என்று கணவனிடம் கூறிய அபிஷரிகா மகனிடம் திரும்பி,

 

“வயசு முப்பதாகுதே… கல்யாணம் பண்ணுவோம்ன்னு நினைப்பு இருக்கா ப்ரஷூ…? உன்னைப் பார்த்து ஷிவாவும் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்கிறாள்.” என்று மனத்தாங்கலுடன் கூற…

 

“ஷிவா, சினி ஃபீல்டில் சாதிக்கணும்ன்னு நினைக்கிறாள். அவளுக்கு இருபத்தி ஐந்து வயதாகட்டும்மா. அதுக்குப் பிறகு அவளுக்குக் கல்யாணம் பேசலாம். அவள் கல்யாணம் முடிஞ்சதும், இல்லை அவள் கல்யாணத்தோடு சேர்த்து என்னோட கல்யாணத்தையும் வச்சுக்கலாம். இன்னும் இரண்டு வருசங்கள் தானே… பொறுத்துக்கோங்க…”

 

“ம், அதுவும் சரிதான்… வயது அதிகமாகும் போது தான் நல்ல புரிதல், பக்குவம் ஏற்படும்.” அபிஷரிகா மகனின் கூற்றிற்குச் சரி என்றாள்.

 

இந்த ஒரு விசயத்திற்காகத் தானே அவனும் அமைதி காக்கின்றான். புரிதல் இல்லாத வாழ்க்கை எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டி கொண்டு போய்விடும். புரிதல் இருந்தால் மட்டுமே நல்வாழ்க்கை சாத்தியம். அவனைப் போல் அவனது வாரிசுகள் துன்பப்படக் கூடாது. அதில் அவன் உறுதியாக இருந்தான்.

 

“என்ன யோசனை ப்ரஷன்?” தந்தையின் கேள்வியில் தன் யோசனையைக் கலைந்த ப்ரஷன்ஜித்,

 

“நத்திங்…” என்றவன் தந்தையைக் கண்டு புன்னகை புரிந்தான். மகனின் புன்னகை அவனது கண்களை எட்டவில்லை என்பதை அறிந்த சிவகுமரன் மகனை யோசனையுடன் பார்த்தான்.

 

அதற்குள் அவனது அன்னை வேணி அவனை அலைப்பேசியில் அழைத்துவிட்டார். அவனது கவனம் அங்கே சென்றுவிட்டது. வேணி, அவரது நான்காவது மகள் அம்ரிதா வீட்டிற்குச் சென்றிருந்தார். அம்ரிதாவின் மகள் பெரிய மனுசியாகி இருந்தாள். சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் முடிந்த பின்பும் பேத்தியின் ஆசைக்காக அவர் அங்கேயே தங்கி விட்டார்.

 

*****************************

 

மாமனாருக்கு காலை உணவு ஊட்டுவதற்காகத் திவ்யா கோபாலகிருஷ்ணனின் அறைக்கு வந்தாள். பர்வதம் அதிகாலை அபிசேகத்திற்காகக் கோவிலுக்குச் சென்றவர் இன்னமும் வீடு வந்து சேரவில்லை. படுத்திருந்த கோபாலகிருஷ்ணனின் அருகில் அமர்ந்த திவ்யா தான் கொண்டு வந்திருந்த சத்துமாவு கஞ்சியை அவரது வாயில் புகட்டினாள். அவரால் திட உணவு உண்ண இயலாது. திரவ உணவு மட்டுமே. பாழ் நெற்றியுடன் காணப்பட்ட மருமகளைக் கண்டு அவரது ஜீவன் குடியிருந்த விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவரால் கோபம், சோகம், வருத்தம், மகிழ்ச்சி என்று எந்தவொரு உணர்வினையும் பேச்சிலோ, செயலிலோ காட்ட இயலாது. எதுவாக இருந்தாலும் அவரது விழிகள் மட்டுமே அந்தந்த உணர்வினை பிரதிபலிக்கும். இப்போது மருமகளைக் கண்டதும் அவருள் வேதனை எழுந்தது. அவளும் அவருக்கு மகளைப் போன்றவள் அல்லவா!

 

“நீங்க எதுக்கு அழுறீங்க மாமா? எல்லாம் என் விதி…” என்று விரக்தியுடன் கூறியவள் அவரது கண்ணீரை துடைத்துவிட்டாள். ஆனால் அவளது விழிகளில் வழியும் விழிநீரை யார் துடைப்பார்!

 

தனது கண்ணீரை துடைக்க இயலாது வேதனையில் உழன்று கொண்டிருந்த மருமகளைக் காண காண அவருக்குத் தன்னுடைய இயலாத நிலையைக் கண்டு கோபம் வந்தது. மருமகளின் கண்ணீருக்கு அவரும் ஒரு காரணம் அல்லவா! அதீத உணர்ச்சிவசப்பட்டவரின் கைவிரல்களில் சிறிது உணர்ச்சி வந்ததோ! அவர் தனது வலக்கை சுண்டு விரலை அருகில் இருந்த மருமகளின் கை மீது ஆறுதலாய் வைத்தார்.

 

“மாமா…” திவ்யா பரவசத்துடன் அவரையும், அவரது வலக்கை விரலையும் மாறி மாறி பார்த்தாள். பின்பு மகிழ்ச்சியுடன் அவரது கையைத் தொட்டவள்,

 

“உணர்வு இருக்கா மாமா?” என்று கேட்க… அவரது விழிகள் மகிழ்ச்சியைப் பிரதிபலித்தது.

 

“இப்பவே அத்தைக்கும், டாக்டருக்கும் சொல்லிட்டு வர்றேன்.” என்றவள் அறையை விட்டு விரைவாக வெளியில் சென்றாள். அவள் செல்வதைப் பார்த்தபடி இருந்தவருள் சொல்லொண்ணா துயரம் எழுந்தது.

 

பர்வதத்திற்கும், மருத்துவருக்கும் அலைப்பேசியில் அழைத்து விசயத்தைச் சொன்ன திவ்யா வீட்டில் இருந்த ஹம்சவர்த்தினியை அங்கே அழைத்துக் கொண்டு வந்தாள். நிறுவனத்திற்குக் கிளம்பி கொண்டிருந்த ஹம்சவர்த்தினி விசயம் கேள்விப்பட்டுச் சந்தோசத்துடன் தந்தையைக் காண வந்தாள்.

 

“ப்பா…” என்று அழைத்தபடி தந்தையின் கையைப் பிடித்துக் கொண்ட ஹம்சவர்த்தினியின் விழிகள் கலங்கி போனது. மகளைக் கண்டதும் அவரது விழிகள் புன்னகைத்தது.

 

“நீங்க பழையபடி கம்பீர நடையுடன் சிங்கம் மாதிரி நடந்து வரணும். எனக்கு இந்தத் தொழில், நிர்வாகம் எல்லாம் மூச்சு முட்டுதுப்பா…” தந்தையிடம் கூறும் போதே அவளது விழிகளில் இருந்து கண்ணீர் சொட்டியது.

 

“ஹம்சி, அழாதே…” தன்னை விட ஒரு வயது இளையவளான ஹம்சவர்த்தினியை திவ்யா ஆறுதல் படுத்தினாள்.

 

அதற்குள் பர்வதமும், மருத்துவரும் வந்துவிட்டனர். மருத்துவர் கோபாலகிருஷ்ணனை பரிசோதித்து விட்டுக் கையில் உணர்வு வந்திருப்பதை உறுதி செய்தார். கோபாலகிருஷ்ணன் படிப்படியாகக் குணமடைய வாய்ப்பு இருக்கிறது என்று அவர் நம்பிக்கையுடன் கூறிவிட்டு கிளம்பி செல்ல… பர்வதம் சந்தோசத்துடன் கணவரை பார்த்தார்.

 

“எங்கே, ஹம்சி திருமணத்தைத் தனியே இருந்து நடத்த வேண்டி வருமோன்னு கவலைப்பட்டேன். இப்போ தான் நிம்மதியா இருக்கு.” என்று அவர் மகிழ்ச்சியுடன் கூற…

 

“அப்பா எழுந்து நடமாடிய பிறகே எனக்குக் கல்யாணம்…” என்று ஹம்சவர்த்தினியும் உறுதியுடன் கூறினாள். அன்றைய விடியல் மூவருக்குமே சந்தோசமாக விடிந்தது.

 

ஹம்சவர்த்தினி நிறுவனத்திற்குக் கிளம்பி சென்றவள் சிறிது தூரம் சென்ற பின்னரே முக்கியமான கோப்பை வீட்டில் வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தாள். காலையில் தந்தை விசயத்தில் எழுந்த பரபரப்பில் அவள் கோப்பை எடுக்க மறந்து போனாள். அவள் மீண்டும் வீட்டிற்கு வந்த போது அங்குக் கண்ட காட்சியில் அப்படியே அதிர்ந்து போய் நின்றாள்.

 

அங்கு ப்ரஷன்ஜித் நெஞ்சில் திவ்யா சாய்ந்து கொண்டிருந்தாள். அவனது கை அவளது தலையை வருடி கொண்டிருந்தது.

 

அந்தக் கணம் ஹம்சவர்த்தினியினுள் எதிலோ தோற்று போன ஒரு உணர்வு எழுந்தது… அவளது விழிகள் இமைக்க மறந்து வேதனையுடன் ப்ரஷன்ஜித்தை பார்த்துக் கொண்டிருந்தது.

 

தொடரும்…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *