“நிலவோடு பேசும் மழையில்…” – 2 Leave a comment

அத்தியாயம் : 2

 

“உட்காரலாம்ங்களா மேடம்…?”

 

ப்ரஷன்ஜித்தின் குரலில் தன்னுணர்வு பெற்ற ஹம்சவர்த்தினி தன்னைத் தானே கடிந்து கொண்டு அங்கிருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்தாள். பின்னே பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை வெறித்துப் பார்ப்பது போல் இவள் அவனைப் பார்த்து வைத்தால் அவன் என்ன நினைப்பான்? அவள் நினைத்ததைப் போல் ப்ரஷன்ஜித் உதடுகளில் குறும்பு புன்னகை தவழ்ந்தது.

 

“நான் அழகா இருக்கேன்னா மேடம்?” அவளது கோபத்திற்கு எண்ணெய் வார்த்தது போல் பேசியவனைக் கண்டு அவள் எரித்துவிடுவது போல் பார்த்தாள். அதற்கு எல்லாம் நான் அடங்க மாட்டேன்என்பது போல் அவன் பதிலுக்கு அவளைப் பார்த்து வைத்தான்.

 

இளம்சிவப்பு நிறத்தில் பருத்தி சட்டையும், நீல நிற ஜீன்ஸும் அணிந்து அமர்ந்திருந்த ப்ரஷன்ஜித்தின் புஜங்களும், கட்டுக்கோப்பான உடலமைப்பும் சொல்லாமல் சொல்லியது அவனது கம்பீரமான அழகினை… அவனுக்கு வயது முப்பதாகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்தளவிற்கு அவன் இளமையாக இருந்தான். அவனது ஆர்ப்பாட்டமான அழகில் எதிரில் அமர்ந்திருந்த அவளுக்குத் தான் மூச்சு முட்டியது. எப்போதடா பேட்டி முடியும்? என்று அவள் உள்ளுக்குள் தகிப்புடன் அமர்ந்திருந்தாள்.

 

ப்ரஷன்ஜித்தும் எதிரில் அமர்ந்திருந்த ஹம்சவர்த்தினியை தனது ஊடுருவும் கதிர்வீச்சு பார்வையால் துளைத்து எடுத்துக் கொண்டிருந்தான். இளம் பழுப்பு நிற புடவையில், மெல்லிய கொடி போன்று தங்க சரிகை உடல் முழுவதும் படர்ந்திருக்க, அதற்கு ஏற்றார் போன்று அதே நிறத்தில் ரவிக்கை அணிந்து, முத்து அணிகலன்கள் அணிந்து, நெற்றியில் பெரிதாக அரக்கு நிற ஒட்டு பொட்டு வைத்து, நீண்ட தலைமுடியை மேலே சிறு கவ்வி போட்டு இழுத்து பிடித்திருந்தவள் கீழே சுதந்திரமாக விரித்து விட்டிருந்தாள். அவள் காலில் போட்டிருந்த குதிகால் செருப்பில் கூட அதே பழுப்பு நிறமும், தங்க நிறமும் பளபளத்தது. அவளது தலை முதல் கால் நுனி வரை பணக்காரத்தனம் மிளிர்ந்தது. வயது இருபத்தியொன்று என்பதைப் பறைச்சாற்றும் வண்ணம் பால் மணம் மாறா குழந்தை முகத்துடன் இருந்தவளின் அம்சமான அழகு அனைவரையும் கவர்வதாய் இருந்தது.

 

தலை முதல் கால் வரை ஊடுருவிய அவனது பார்வைக்கான அர்த்தத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் தன்னை ரசிக்கிறானா? அல்லது வெறுக்கிறானா? அவளால் அவனது பார்வையை வைத்து எதையும் தீர்மானிக்க முடியவில்லை.

 

“நீங்க அழகா இருக்கீங்களா? இல்லையான்னு? நான் பேச வரலை. பேட்டி சம்பந்தமாக மட்டுமே கேள்விகள் கேளுங்க. இல்லைன்னா நான் எழுந்து போயிக்கிட்டே இருக்கேன்.” இருக்கையின் கைப்பிடியில் கை வைத்து எழ போனவளை,

 

“பேட்டியை ஆரம்பிக்கலாமா?” அவனது குரல் தடுத்து நிறுத்தியது.

 

“லைட்ஸ் ஆன்…”, “கேமிரா ஆக்சன்…” என்று குரல் கேட்கவும் நாற்காலியில் அமர்ந்தவள் அப்போது தான் படப்பிடிப்பு துவங்குவதைக் கண்டாள். அவளையும் அறியாது அவளது பார்வை அருகிலிருந்த பூங்கொத்தை பார்த்தது. நேரலை என்று நினைத்து அவள் பூங்கொத்தை அவனிடம் இருந்து வாங்கி விட்டாளே. இல்லை என்றால் அப்போதே அவனது முகத்தில் அதை விட்டெறிந்து இருப்பாளே. அப்படிச் செய்யாது போனது நினைத்து அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

 

“வெல் மிஸ். ஹம்சவர்த்தினி…” அவனது குரலில் அவனை ஏறிட்டு பார்த்தவள் அவனைப் பொசுக்கி விடுவது போல் பார்த்து வைத்தாள்.

 

“நீங்க தொழிலில் பொறுப்பெடுத்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் இத்தனை வெற்றி எப்படிச் சாத்தியமாயிற்று?” அவனது குரலில் நக்கல் தென்பட்டதோ! அவளுக்குச் சந்தேகமாக இருந்தது. ஆனால் அவனது முகம் அதற்கு நேர்மாறாகச் சாதாரணமாகக் காணப்பட்டது.

 

“ஆம், இதற்கு முன்பு நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். படிப்பு முடியும் தறுவாயில் அண்ணனது மரணம், அப்பா நோய்வாய்ப்பட்டது எல்லாம் சேர்த்து தொழிலை எடுத்து நடத்தும் முடிவுக்கு என்னைத் தள்ளிவிட்டு விட்டது.” அதைக் கேட்டவனின் விழிகள் பளபளத்தது. பதிலுக்கு அவளது விழிகளும் பளபளத்தது. அவனது நினைவு வேறு… அவளது நினைவு வேறு… அவனது இரக்கம்… அவளது பழிவெறி… இரண்டுமே என்றுமே நேர்க்கோட்டில் பயணிக்காது.

 

“மூன்று மாதத்தில் அபார வெற்றி தான்…” அவன் பாராட்டுவது போல் கூறினாலும் அதில் ஏதோ ஒன்று மறைந்திருப்பதாய் அவளுக்குத் தோன்றியது. ஒருவேளை அவன் தன்னைக் கேலி செய்கின்றானோ!

 

“அதற்குக் காரணம் எங்களது நிறுவனத்தின் ஊழியர்கள். எத்தனை இழப்பு ஏற்பட்டாலும் அயராது உழைத்து என் பக்கம் நின்றனர்.”

 

“வெல் மிஸ்…” அவன் தனது பெயரை சொல்லும் முன்,

 

“ஹம்சவர்த்தினி…” என்றாள் அவள் வெடுக்கென்று… அதைக் கண்டு அவனது உதடுகளில் சிறு புன்னகை உதயமானது.

 

“ஒருவேளை நீங்க தொழிலுக்கு வராது போயிருந்தால் என்னவாகி இருப்பீங்க?”

 

“பெரிய கிளாசிக் டான்சராக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. பரதநாட்டியம் என்னுடைய உயிர்.”

 

அதைச் சொல்லும் போதே அவளது விழிகளில் வலி எட்டிப்பார்த்தது. அவள் சட்டென்று தனது வலியை யாரும் அறியா வண்ணம் சாமர்த்தியமாக மறைத்து கொண்டாள். அவளது வலியை அவன் கண்டு விட்டான். அதைத் தொடர்ந்து அவனது விழிகளிலும் வலி வந்து போனது. ஆனால் அவன் அதை அவளிடம் காட்டி கொள்ளாது அவளை வெறுமையுடன் பார்த்தான்.

 

“உங்களது இளமை பருவம், உங்களது படிப்பு பற்றிச் சொல்ல முடியுமா?”

 

அவனுக்கு அவளைப் பற்றி எல்லாம் தெரியும். அப்படி இருந்தும் இப்படிக் கேள்வி கேட்பவனை அவள் பல்லை கடித்துக் கொண்டு முறைத்தாள்.

 

இது பேட்டி… நானாக எதுவும் கேட்க முடியாது.அவன் குரல் எழுப்பாது வாயை மட்டும் அவளுக்குப் புரியும்படி அசைத்தான். அதற்கும் அவள் அவனை முறைத்து விட்டே தொடர்ந்தாள்.

 

“ஸ்கூல், காலேஜ் எல்லாம் படிச்சது சென்னையில் தான்… வேறு புதுசா சொல்ல எதுவும் இல்லை.” என்று அவள் முடித்துக் கொள்ள…

 

“அழகா பதில் சொன்னீங்க மிஸ்…” என்று இழுத்தவனைக் கண்டு அவள் மீண்டும் முறைத்து பார்க்க… அவன் சிரித்தபடி அவளது பெயரை சொல்லாது விடுத்துப் பக்கவாட்டில் இருந்த திரையை நோக்கியவன்,

 

“இதில் சில ஃபோட்டோசை காட்டுவாங்க… எங்கே? எப்போது எடுத்தது? அதைப் பற்றிய உங்களது நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.” அதற்கு அவள் சம்மதமாய்த் தலையாட்டினாள்.

 

முதலில் அவள் தனது பெற்றோருடன் இருப்பது போலிருந்த புகைப்படம் காட்டப்பட்டது. அதைப் பற்றிய நினைவுகளை அவள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டாள். அவளது இளமை காலங்களில் இருந்து ஒவ்வொரு புகைப்படமாகக் காட்டப்பட… அவள் மெல்ல மெல்ல தனது கூட்டில் இருந்து வெளியில் வர ஆரம்பித்தாள். அவள் தான் யார் என்பதை மறந்து, தன்னை மறந்து உற்சாகமாய்ப் பேசினாள். அவளது ஒவ்வொரு அசைவையும் அவன் புன்னகையுடன் பார்த்திருந்தான். அவனது விழிகள் அங்கும் இங்கும் அசையாது அவள் மீது மட்டுமே இருந்தது.

 

“இது என்னோட டாலி… பெயர் டைகர். அவன் என்னோட உயிர். அவனுக்கும் நான்னா உயிர்.” அவள் கூறியதும் அவன் புருவங்கள் முடிச்சிட திரையை நோக்கினான். அங்கு ஹம்சவர்த்தினியின் மடியில் ஒரு பொம்மரேனியன் நாய்க்குட்டி ஒன்று சமத்தாகப் படுத்துக் கொண்டிருந்தது.

 

பாருடா, மான் குட்டின்னு பெயர் வைக்கிறதுக்குப் பதில் டைகர்ன்னு பெயர் வச்சியிருக்கிறதை. அவளைப் போலவே…அவன் மனதில் நக்கலாய் கவுண்ட்டர் கொடுத்தபடி அவளைப் பார்த்தான்.

 

“இது… இந்த ஃபோட்டோ எப்போ எடுத்ததுன்னு எனக்கு ஞாபகம் வரலை…” அவள் விழிகள் இடுங்க, நெற்றியை சுருக்கி கொண்டு யோசித்தாள். அதில் நினைவு கலைந்த ப்ரஷன்ஜித் திரையைப் பார்த்தான்.

 

இரவின் பின்னணியில் வானில் பௌர்ணமி நிலவு வெண் மலர் போல் மலர்ந்திருக்க, கரு மேகங்கள் சாரல் மழையைத் தூவி கொண்டிக்க… அதில் புத்தம் புதுப் பூவாய், பரவசமாய் ஹம்சவர்த்தினியின் முகம் பூத்திருந்தது. துளித்துளியாய் ரசித்துப் பூமி காதலியை ரசனையுடன் முத்தமிட துடித்த மழை காதலனை இவள் இடையில் தடுத்து நிறுத்தி தனது கைகளில் பிடித்து விளையாடுவது போல் அதிஅற்புதமாய் அமைந்திருந்தது அந்தப் புகைப்படம். மழைச்சாரலில் நனைந்திருந்த அவளது பூ முகம் சாரலை அனுபவித்து ரசித்திருந்தது. அவளது உணர்வுகளை அவ்வளவு தத்துரூபமாக எடுத்துக் காட்டியிருந்தது அந்தப் புகைப்படம்…

 

“இந்தப் புகைப்படம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?” அவள் வியப்பாய் அவனைப் பார்த்து கேட்க…

 

“என்னைக் கேட்டால்…? நான் பேட்டி எடுக்க மட்டும் வந்தவன்… ஃபோட்டோகிராபர் இல்லை.” ப்ரஷன்ஜித்தின் அழுத்தமான குரலில் அவள் நடப்பிற்கு வந்தாள். இருக்கையில் நன்றாகச் சாய்ந்து நேராக அமர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

 

“பேட்டி முடிந்ததா மிஸ்டர். ப்ரஷன்ஜித்…?” என்று கேட்க…

 

“ஆல்மோஸ்ட் முடிந்தது. இறுதியாக ஒரே ஒரு கேள்வி…? எல்லா இளம் பெண்களிடமும் கேட்கும் அதே கேள்வியைத் தான் கேட்க சொல்லியிருக்கிறார்கள். உங்களது திருமணம் எப்போது…?” என்றவனைத் துளைத்தெடுப்பது போல் பார்த்தவள்,

 

“இப்போது திருமணத்திற்கு என்ன அவசியம்? இன்னும் இரண்டு வருடங்கள் போகட்டும்.” என்று கூறிவிட்டு அவனைப் பார்த்தாள்.

 

அடேங்கப்பாஎன்று போலி ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்த ப்ரஷன்ஜித், “உங்கள் கணவர்… ஐ மீன் உங்கள் வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும்? அது பற்றி உங்களுக்கு ஏதேனும் கனவு இருக்கிறதா?” அவன் விடாது கேட்க… அவனைக் கூர்ந்து பார்த்தவள்,

 

“நிச்சயம் உங்களைப் போல் இருக்க மாட்டார்.” என்று அலட்சியமாகக் கூற…

 

“உங்கள் கனவு நனவாக வாழ்த்துகள்…” என்றவன் எழுந்து நிற்க… அதைத் தொடர்ந்து அவளும் எழுந்து நின்றாள்.

 

“இந்த இனிமையான மாலை பொழுதில் உங்களைச் சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி…” என்றவன் அவள் புறம் தனது வலக்கையை நீட்டினான்.

 

ஹம்சவர்த்தினி முதலில் தயங்கினாலும் அவனது கையைப் பற்றிக் குலுக்கத் தவறவில்லை. அடுத்து என்ன நடந்தது என்று அவள் சுதாரிக்கும் முன் அவனது வலிய கரத்தின் அழுத்தமான பிடியினுள் அவளது மெல்லிய மலர் கரம் புதையுண்டு போனது. அவனது அழுத்தம் கூடி கொண்டே போனதோ! அவளுக்கு வலியெடுக்க ஆரம்பித்தது. அடுத்தக் கணம் அவளையும் அறியாது அவள் ஷ்என்று மெல்லமாய்ச் சத்தமிட்டு முனங்கினாள். அவளது அந்தச் சத்தத்தில் அவனது கை தளர்ந்து விலகியது. அவள் அவனை முறைத்துக் கொண்டே தனது கையை வேகமாய் விலக்கி கொண்டாள். கரம் வலித்த போதும் எல்லோர் முன்பும் கரத்தினை நீவி விட அவளுக்கு விருப்பம் இல்லை.

 

பேட்டி முடிந்ததும் கண நேரம் கூட ஹம்சவர்த்தினி தாமதிக்கவில்லை. அவள் விறுவிறுவென்று வேகமாய் அங்கிருந்து வெளியேறினாள். அவள் நடக்கும் அழகினை பார்த்தபடி பின்தொடர்ந்த ப்ரஷன்ஜித்தின் முகத்தில் புன்னகையே இருந்தது. அவளுக்கு ஏதோ உள்ளுணர்வு உணர்த்த அப்படியே நின்றவள் திரும்பி பார்த்தாள். ப்ரஷன்ஜித் தன் பின்னே அதுவும் புன்னகை முகத்துடன் வருவதைக் கண்டவள் அவனை முறைத்து பார்த்து,

 

“நீ முன்னால் போ…” என்றபடி வழிவிட்டு நின்றாள்.

 

அவளை எரிச்சல் அடைய செய்ய அவனது ஒற்றைப் புன்னகை போதுமானதாய் இருந்தது. அவளது எண்ணம் புரிந்து அவனது புன்னகை இன்னமும் விரிந்தது. அவன் ஒன்றும் பேசாது அவளைத் தாண்டி சென்றவன் பின்பு நின்று திரும்பாமலே இரண்டடி பின்னால் வந்தவன் இமைக்கும் பொழுதில் அவள் புறம் திரும்பி அவளது இடப்பக்கம் இடையில் இருந்து நழுவியிருந்த புடவையைச் சற்று மேலேற்றி விட்டவன்,

 

“இப்படி என்னைப் பார், என் அழகை பார்ன்னு நீங்க ரோட்டில் நடந்து போனால் நான் என்றில்லை, எல்லோரும் பார்க்கத்தான் செய்வாங்க.” என்று கூறி அவளைக் கடுப்பேற்ற…

 

“தூணுக்கு ஜீன்ஸ் போட்டாலும் அதையும் பார்வையால் கற்பழிக்கும் உன்னைப் போன்ற ஆண் வர்க்கம்…” என்று கோபமாய்ச் சிடுசிடுத்தவளை கண்டு இறுகி போனவன் சட்டென்று திரும்பி அவளது தாடையை ஒற்றைக் கையால் இறுக பற்றியவன்,

 

“நான் யாரை கற்பழிச்சு நீங்க பார்த்தீங்க…?” என்று ஆக்ரோசத்துடன் கேட்டான். அவனது விழிகளின் கோப சிவப்பில் அவள் சற்று பயந்து தான் போனாள்.

 

“நீ… நீ என்னை அப்படிப் பார்க்கலை… நீ பார்த்ததால் தானே என் புடவை விலகி இருப்பது உனக்குத் தெரிஞ்சது.?” அவள் அச்சத்தில் திக்கி திணறினாள். அவளது பதிலில் அவனது கோபம் தணிந்தது. தனது கையை விலக்கி கொண்டவன் அதே கையைக் கொண்டு தனது பின்னங்கழுத்தை நீவியபடி தலை சாய்த்து அவளைப் பார்த்தவன்,

 

“உங்களை நான் ஏன் அப்படிப் பார்த்தேன்னு என்னை விட உங்களுக்குத் தானே நல்லா தெரியும்.” அவனது வார்த்தைகளைக் கேட்டு அவள் பேவென நின்றாள்.

 

“செயலில் இறங்காது பார்த்தது மட்டும் தான் தவறோ???” அவன் யோசிப்பது போல் பாவனைச் செய்ய… அவனது பாவனையில் அவளது கை தன்னாலே உயர்ந்து தனது இடையை மூடியிருந்த புடவையை இன்னமும் மேலேற்றி விட்டுக் கொண்டது. அவளையும், அவளது இடையையும் மாறி மாறி பார்த்தவனின் உதடுகள் மெல்ல அந்த வார்த்தையை உதிர்த்தது.

 

“வாட் கம் அகையின்… பேட்டி ஆரம்பிக்கும் போதும் இப்படித்தான் ஏதோ முணுமுணுத்த…” அவள் கோபத்தில் படபடத்தாள். அவனோ தான் கூறிய வார்த்தைகள் நினைத்து மௌன சிரிப்பில் குலுங்கினான். அது வேறு அவளை இன்னமும் கடுப்பாக்கியது.

 

“தைரியம் இருந்தால் சத்தமாய்ச் சொல்லுடா…” அவளது தெனாவெட்டில் தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்தவன்,

 

“நான் அந்த வார்த்தையைத் தைரியமா சொல்லிருவேன். எனக்கு ஒண்ணும் பயமில்லை. ஆனால் இப்போது நாம் இருக்கும் சூழ்நிலை சரியில்லை. அதுக்கான சூழ்நிலை வரும் போது நான் அந்த வார்த்தைகளைச் சொல்கிறேன். பை மிஸ்…” என்று இழுக்க…

 

“ஹம்சவர்த்தினி…” என்றபடி அவள் பல்லை கடித்தாள்.

 

“எனக்கு நீங்க ஹம்சவர்த்தினி இல்லை…” என்றவன் சத்தம் வராது அந்த வார்த்தைகளை உதிர்க்க… அது என்னவென்று தெரியாத காரணத்தால் அவள் பல்லை கடித்தபடி அவனை முறைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். இப்போது அவள் கவனமாகத் தன் புடவை முந்தானையை இழுத்து மூடி கொண்டாள், அவனது கொள்ளி கண் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக…

 

ப்ரஷன்ஜித் அவளைப் புன்னகையுடன் தொடர்ந்து வந்தவன் தனது காரிலேறி அதைக் கிளப்பிக் கொண்டு சென்றான்.

 

ஹம்சவர்த்தினி இரவு வீட்டிற்கு வரும் போது பத்து மணி ஆகியிருந்தது. பர்வதம் அவளுக்காகக் காத்திருந்தார். அவரைக் கண்டதும் அவளது முகத்தில் இளக்கம் வந்தது.

 

“எனக்காகக் காத்திருக்க வேண்டாம்ன்னு சொன்னேன்லம்மா…”

 

“வயசு பொண்ணு வீடு வந்து சேர்ற வரைக்கும் மனசு கிடந்து பக்குபக்குன்னு அடிச்சிக்கிறது எனக்குத் தான் தெரியும்.”

 

“நான் என்ன சின்னப் பிள்ளையாம்மா?”

 

“எனக்கு நீ சின்னப் பிள்ளை தான் ஹம்சி…” என்றவர் அவள் அருகில் அமர்ந்து அவளது தலையை வாஞ்சையுடன் வருடியவர்,

 

“பிறந்தநாள் அதுவுமா நீ வீட்டுக்கு சாப்பிட கூட வரலை. போன வருசம் உன்னோட பிறந்தநாள் எப்படி எல்லாம் கொண்டாடினோம். எல்லாமே கனவு மாதிரி இருக்கு.” என்றவர் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது.

 

போன வருடம் தனது பிறந்தநாளை நினைத்து பார்த்த ஹம்சவர்த்தினிக்கும் நெஞ்சம் எல்லாம் கனத்தது. போன வருடம் சிறு குழந்தையாய் மகிழ்ச்சியாய் துள்ளி திரிந்தவள் இந்த வருடம் பொதி சுமக்கும் கழுதை போலாகி விட்டாள். அவளுக்குமே தன்னிலை கண்டு மூச்சு முட்டியது. ஆனாலும் பொறுப்பைச் சுமந்தாக வேண்டிய கடமை அவளுக்கு இருக்கிறதே.

 

“அப்பா தூங்கிட்டாராம்மா?”

 

“ம், அப்பவே…”

 

ஹம்சவர்த்தினி பெற்றோரின் அறையை நோக்கி நடந்தாள். பர்வதம் அவளைப் பின்தொடர்ந்தார். அறையினுள் கட்டிலில் படுத்திருந்த தந்தையைக் கண்டு அவளது விழிகள் கலங்கியது. அவளது சகோதரன் ஹரீஷ் இறந்ததும் திடுமென ஒருநாள் அவளது தந்தை உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு நினைவை இழந்து கீழே விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் பயனில்லை. அவரது உடல் செயலிழந்து போனது. அவரது விழிகளில் மட்டுமே அசைவு இருந்தது. மொத்தத்தில் அவர் பொம்மை போல் மாறியிருந்தார்.

 

ஒருகாலத்தில் தொழில் துறையில் சிங்கம் போல் கர்ஜித்தவர் இப்படிப் படுத்த படுக்கையாய் இருப்பது எல்லோருக்குமே வேதனையை அளித்தது. கோபாலகிருஷ்ணன் பரம்பரை பணக்காரர். அவரது தாத்தா ஆரம்பித்தது தான் இந்தக் கேஜி நிறுவனம். இது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து காப்பற்றப்பட்டு வருகிறது. இதோ இன்று அதைத் தூக்கி நிறுத்த அவரது மகள் தலையெடுத்து விட்டாள்.

 

“எப்படியிருந்த அப்பா…?” மேலே பேச முடியாது ஹம்சவர்த்தினியின் குரல் வருந்தியது.

 

“நாங்களாவது வாழ்ந்து அனுபவிச்சவங்க. உங்கப்பாவை பார்த்துக்க நான் இருக்கேன். ஆனா ஹரீஷ் இறந்து போனது தான் என்னால் தாங்கிக்க முடியலை. அதைவிடத் திவியை நினைத்தால் தான்…” என்ற பர்வதத்தின் குரலில் கவலையே மேலோங்கி இருந்தது.

 

“அண்ணியைப் பார்த்தால் எனக்கும் பாவமா தான் இருக்கும்மா… சீக்கிரம் இதுக்கு ஒருவழி பார்க்கணும்.” என்றவள் அறையை விட்டு வெளியில் வந்தாள். பின்னே வந்த பர்வதம் மகளைக் கண்டு,

 

“சாப்பிட வா…” என்க… அவளும் மறுப்பு தெரிவிக்காது உண்ண அமர்ந்தாள். அவள் உண்டு முடித்துக் கை கழுவும் வரை அன்னை எதுவும் பேசவில்லை. அவள் தனது அறைக்குச் செல்லும் போது,

 

“வேலை வேலைன்னு இருக்காம நேரத்துக்குத் தூங்கு ஹம்சி…” என்க…

 

“சரிம்மா…” என்றவள் மாடிப்படி ஏற துவங்கினாள்.

 

“ஹர்ஷா நடிப்பை விட்டு விட்டு உனக்குத் துணையா தொழிலையைப் பார்த்துக்கலாம் இல்லையா?” அன்னையின் வார்த்தையில் திரும்பி பார்த்தவள்,

 

“ஹர்ஷா அண்ணா மனசுக்கு பிடிச்சதை செய்யட்டும்மா… அவங்களுக்குப் பிடிக்காததைத் திணிக்க வேண்டாம்.” புன்சிரிப்புடன் கூறியவள் சென்றுவிட்டாள். பர்வதம் பெருமூச்சு விட்டபடி சென்றுவிட்டார்.

 

அறைக்கு வந்தவள் குளித்து முடித்து விட்டு நேரே தனது அறை பால்கனிக்கு வந்து நின்றாள். அன்று பௌர்ணமி போலும். வானில் வட்ட வடிவ நிலா அழகாய் பவனி வந்து கொண்டிருந்தது. அதைக் கண்டவளுக்கு அந்தப் புகைப்படம் ஞாபகம் வந்தது. அதை எடுத்தது யார்? என்று யோசித்துக் கொண்டிருந்தவள் அது எடுக்கப்பட்ட காலம், எடுக்கப்பட்ட சூழல், அவள் போட்டிருந்த உடையை அனைத்தையும் கவனிக்க மறந்து போனாள். அதை எல்லாம் அவள் கவனித்துப் பார்த்திருந்தால் அவளது நீண்ட நாள் வினாவுக்கான விடை கிடைத்திருக்குமோ!

 

ப்ரஷன்ஜித் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். அங்குச் சிவகுமரன் உறங்காது மகனுக்காகக் காத்திருந்தான்.

 

“இன்னும் தூங்கலையாப்பா…? அம்மா எங்கே…? எப்படி உங்களை விட்டாங்க…?” என்று கண்சிமிட்டி அவன் குறும்பாய் கேட்க… மகனது கேள்வியில் சிவகுமரன் முகத்தில் புன்னகை அரும்பியது.

 

“உங்கம்மா தூங்கி ரொம்ப நேரமாச்சு… இப்போ அவளுக்கு அர்த்த ஜாமம்…”

 

“ஓ… உங்க பேபியை தூங்க வச்சிட்டு தான் வந்தீங்களா?” கிண்டலடித்த மகனது தோளில் செல்லமாய் அடித்த சிவகுமரன்,

 

“என்னை வம்பிழுத்தது போதும். சாப்பிட வா…” என்க…

 

“செம பசிப்பா…” என்றவன் உணவு மேசையை நோக்கி செல்ல… தாயன்போடு மகனை தொடர்ந்தான் சிவகுமரன். மகனுக்கு உணவு பரிமாறியவன் அவன் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

 

“நீ எப்போ டிவி சேனலில் வேலைக்குச் சேர்ந்த ப்ரஷன்?” தந்தையின் கேள்வியில் மகனுக்குப் புரையேறியது.

 

“ப்பா…”

 

“பார்த்து… முதலில் தண்ணியைக் குடி…” என்றவன் மகனது தலையில் தட்டி கொடுத்து பருக நீரை கொடுத்தான். மகன் தண்ணீர் அருந்தும் வரை அமைதி காத்தவன்,

 

“இப்போ சொல்லு…” என்க…

 

“அது வந்துப்பா… சேனலோட எம்டி நம்ம மகேஷ்ப்பா… என் கூட ஸ்கூலில் டென்த் வரை ஒண்ணா படிச்சானே… அவன் ரொம்ப விருப்பப்பட்டுக் கேட்டுக்கிட்டான். அதான் சரின்னு சொன்னேன்.”

 

“ஓ…” என்று தாடையைத் தடவிய சிவகுமரன், “ஆனா அந்தப் பொண்ணு உன்னைய எதிரி மாதிரி பார்க்குதே ப்ரஷன். ஆள் வைத்து உன்னை அடிக்கும் அளவுக்கு…” சிவகுமரனால் இந்த விசயத்தைத் தாங்கி கொள்ள முடியவில்லை.

 

“ப்பா, உங்களுக்கு எப்படி இந்த விசயம் தெரியும்?” மகன் திகைப்புடன் தந்தையை நோக்கினான்.

 

“என் மகனை பற்றிய எல்லா விசயங்களும் எனக்குத் தெரியும்.” என்றவனது பார்வை மகனை ஊடுருவியது. தந்தையின் பார்வையைத் தாங்க முடியாது மகன் தலையைக் குனிந்து கொண்டான். அவனது தலைகுனிவை கூட அந்தத் தகப்பனால் தாங்கி கொள்ள முடியவில்லை.

 

“உன்னைப் பத்தி எனக்குத் தெரியும் ப்ரஷன். நீ எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும். நான் தடுமாறி நின்ன போது எனக்கே அறிவுரை சொன்ன தகப்பன் சாமிடா நீ…” என்று அவன் ஆறுதலுடன் மகனது தலையை வருடி கொடுத்தான்.

 

“தேங்க்ஸ்ப்பா… நிச்சயம் உங்களுக்கு அவமானம் ஏற்படும்படி நடக்க மாட்டேன்.”

 

“அந்த நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.” சிவகுமரன் நம்பிக்கையோடு மகனை பார்த்தான்.

 

அதற்குள் ப்ரஷன்ஜித் உண்டு முடித்துக் கை கழுவ சென்றுவிட… சிவகுமரன் எல்லாப் பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றான். கை கழுவி விட்டு வந்த ப்ரஷன்ஜித்தும் தந்தையுடன் இணைந்து கொண்டான். இருவரும் சேர்ந்து உணவு மேசையைச் சுத்தம் செய்தனர். பின்பு சிவகுமரன் பாலை அடுப்பில் வைத்து சூடேற்ற… ப்ரஷன்ஜித் அங்கிருந்த மேடை மீது ஏறியமர்ந்தான்.

 

“பொண்ணு ரொம்ப அழகாயிருக்கால்ல…” திடுமெனக் கேட்ட தந்தையைத் திகைப்புடன் அவன் பார்த்தான்.

 

“யாரை சொல்றீங்கப்பா…?”

 

“ஹம்சியைத் தான்…”

 

“அழகா…? சரியான ராட்சசிப்பா…” என்றவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

 

“பார்த்துடா மகனே… ஏற்கெனவே நான் ஒரு ராட்சசியைக் கட்டிட்டு படாத பாடு படுறேன்.”

 

“இருங்க இருங்க… நான் அம்மா கிட்ட சொல்றேன்.” என்று அவன் தந்தையை வம்பிழுக்க…

 

“வேண்டாம்டா மகனே… இதைக் கேட்டால் ராட்சசி பிரம்மராட்சசியா மாறி விடுவாள். உன் அப்பா பாவமில்ல…” என்று கெஞ்சிய தந்தையைப் போனால் போகிறது என்று மன்னித்தான் மகன்.

 

பாலை ஆற்றி மகனது கையில் கொடுத்த சிவகுமரன், “உரிமை உள்ள இடத்தில் தான் கோபத்தைக் காட்ட முடியும் ப்ரஷன்…” என்று கூற… அதைக் கேட்டு ப்ரஷன்ஜித்தின் புருவங்கள் யோசனையாய் உயர்ந்தது.

 

“உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை.” என்ற சிவகுமரன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

 

பாலை குடித்துவிட்டு கோப்பையைக் கழுவி வைத்துவிட்டு அறைக்கு வந்த பின்பும் தந்தையின் வார்த்தைகள் அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் நேரே பால்கனியில் வந்து நின்றான். வானில் பௌர்ணமி நிலவு ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. நிலா அவனுக்கு இன்னொரு அன்னையே… அவன் நிலவு அன்னையிடம் எந்த ரகசியத்தையும் மறைப்பதில்லை. அவனது மனதில் இருக்கும் அனைத்து ரகசியத்தையும் அவனது அன்னையை விட இந்த நிலவு அன்னை அறிவாள்.

 

அவனது மனக்கண்ணில் சற்று முன் பார்த்த அவளது புகைப்படம் வந்து போனது. அதில் இருந்த ஒவ்வொரு விசயமும் அவனுக்கு அத்துப்படி… மனப்பாடமும் கூட… நிலவின் மங்கிய ஒளியில் கூட அவளது வலது பக்க கன்னத்தின் நடுவில் புதிதாய் தோன்றிய சிறிய பரு கூட அவனது பார்வையில் இருந்து தப்பவில்லை. அவன் அவளைக் கண்டு எப்போதும் சொல்லும் பிரத்யேக வார்த்தைகளை இப்போதும் அவனது உதடுகள் முணுமுணுத்தது.

 

மீண்டும் அறைக்குள் வந்தவன் தனது அலைப்பேசியை எடுத்து ஹம்சவர்த்தினிக்கு அழைத்தான். அவனது அழைப்பு என்று தெரிந்திருந்தும் இடக்கு செய்யாது அழைப்பை உயிர்ப்பித்துக் காதில் வைத்தவள் எதுவும் பேசாது மௌனமாக இருந்தாள். அவனும் ஒரு நொடி எதுவும் பேசவில்லை. மறுநொடி இச், இச்என்ற அவனது முத்த சத்தம் அவளது காதினை நிறைத்தது. அதைக் கேட்டு அவள் திகைப்புடன் அமர்ந்திருக்க…

 

“போன வருச பிறந்தநாளின் போது நீ என்னிடம் கேட்ட பரிசு. அப்போ என்னால் கொடுக்க முடியவில்லை. இப்போது கொடுக்காமல் இருக்க என்னால் முடியவில்லை.” என்று அவன் மென்மையான குரலில் கூற… அவள் படபடக்கும் இதயத்துடன் அலைப்பேசியை அணைத்து விட்டாள்.

 

அழைப்பு துண்டிக்கப்பட்டதை அறிந்து அலைப்பேசியை எடுத்து பார்த்தவன் விரக்தியாய் தனக்குள் சிரித்துக் கொண்டான். அவளைக் கண்டு இரக்கம் கொள்பவனும் அவனே… அவளைக் கண்டு கோபம் கொள்பவனும் அவனே… அவளை எப்படிக் கையாளுவது? என்று அவனுக்கே தெரியவில்லை.

 

********************************

 

படப்பிடிப்பு முடிந்து குளித்து முடித்துப் புத்துணர்வோடு உணவு இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள் ஷிவாரிகா. காட்டில் படப்பிடிப்பு என்பதால் காட்டை ஒட்டியிருந்த மலையோர கிராமத்தில் தான் படக்குழுவினர் அனைவரும் தங்கியிருந்தனர். அவர்களுக்கான உணவு அங்கேயே தனியே சமைக்கப்பட்டது. இரவு உணவுக்கு ஏற்றார் போன்று சாப்பாத்தி, பருப்பு கறி, பழங்கள், சூடான பனங்கற்கண்டு பால் அளிக்கப்பட்டது. தனக்கான உணவை வாங்கிக் கொண்டு வந்த ஷிவாரிகா தனது சகாக்களுடன் சென்று அமர்ந்தாள். ஆனந்த், தீனா, கீதன், தரணி, இவள் ஐவரும் செழியனிடம் உதவி இயக்குநர்களாக வேலை பார்க்கின்றனர். ஷிவாரிகாவை தவிர மற்ற நால்வரும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். முதலில் அவர்கள் அவளிடம் மரியாதையுடன் பழகினர். பிறகு தான் அவளது எளிமையில், உண்மையான நட்பில் நால்வரும் அவளுக்கு உயிர் நண்பர்களாகி விட்டனர்.

 

ஐவரும் ஏதோ நகைச்சுவையாகப் பேசி சிரித்தபடி உணவு உண்டு கொண்டிருந்தனர். முகம் மலர புன்னகைக்கும் ஷிவாரிகாவை வைத்த கண் வாங்காது பார்த்திருந்தான் ஹர்ஷா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி ஒரு மாதமாகிறது. அவனும் இந்த ஒரு மாதமாக அவளைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றான். ஏதோ ஒன்று அவனை அவள் பால் ஈர்த்தது. அவளது அழகா?, அவள் வேலை செய்யும் பாங்கா?, அவள் பேசும் போது அவளுடன் சேர்ந்து ஆயிரம் கதைகள் பேசும் அவளது விழிகளா?, அவனைக் கண்டாலே வழியும் பெண்களுக்கு மத்தியில் நேருக்கு நேர் அவனை நோக்கும் அவளது தடுமாறாத குணமா…? ஏதோ ஒன்று அவனை மொத்தமாய் அவள் பக்கம் ஈர்த்தது. அதை அவளிடம் எப்படிச் சொல்வது? என்று அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்கு எந்தப் பெண்ணிடமும் நேரிடையாகப் பேசி தான் பழக்கம். இது போல் தடுமாறி நின்று தவித்துப் பழக்கம் இல்லை. எத்தனையோ அழகான பெண்களைக் கடந்து வந்தவனுக்கு இவளை அப்படிச் சாதாரணமாகக் கடக்க முடியவில்லை. இன்று எப்படியாவது தனது மனதில் இருப்பதை அவளிடம் பேசிவிட வேண்டும் என்று அவன் உறுதி எடுத்துக் கொண்டான்.

 

அதற்கு ஏற்றார் போன்று ஷிவாரிகா தனிமையில் ஹர்ஷாவிடம் மாட்டி கொண்டாள். இரவு உணவு முடித்த பின்பு தூங்க செல்லாது தனியே நடந்து கொண்டிருந்தவளின் முன் திடுமென வந்து நின்று அவளது வழியை மறித்தான் ஹர்ஷா.

 

தொடரும்…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *