“நிலவோடு பேசும் மழையில்…” – 1 1

அத்தியாயம் : 1

 

“கௌசல்யா சுப்ரஜா ராம

பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே

உத்திஷ்ட நர ஸார்தூல

கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்”

 

பூஜையறையில் இருந்து எம்.எஸ் அம்மா பாடிய சுப்ரபாதம் மெல்லிய ஒலியில் இசைத்துக் கொண்டிருந்தது. கடவுளின் முன் அமர்ந்து பர்வதம் விழிகளைத் திறந்து கடவுளை பார்த்தபடி மனதிற்குள் எதையோ வேண்டி கொண்டிருந்தார். அவரது மனதின் வேதனையை அவரது விழிகள் பிரதிபலித்தது. யாரை சொல்லி வருந்துவது என்று அவருக்குத் தெரியவில்லை. எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்று மனதினை தேற்றவும் அவரால் முடியவில்லை. விதியாடிய கோர தாண்டவத்தின் மிச்சமாய் எச்சமாய் ஒரு உயிர் அவரது கண்முன் நடமாடி கொண்டிருக்கிறதே. அப்போது அவரது தோளை ஆதரவாய் ஒரு கை வந்து பற்றியது. யாரென்று தெரிந்த போதும் அவர் திரும்பி பார்த்தார். அவரது மருமகள் திவ்யா நின்றிருந்தாள்.

 

இந்த இளம் வயதில் கைம்பெண்ணாய் அவள் நின்றிருந்த கோலம் அவரது மனதினை போட்டுப் பிசைந்தது. வரவேற்பறையில் மாட்டியிருந்த மகன் ஹரீஷின் புகைப்படத்தை அவரது விழிகள் ஏறிட்டுப் பார்த்தது. சாகும் வயதா அவனுக்கு…? அவன் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன் காலன் அவனைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டான். திருமணமான ஆறே மாதத்தில் அவன் இறந்துவிட்டான். விதவை கோலத்தில் இருந்த மருமகளைக் கண்டதும் மீண்டும் வேதனை அவரது மனதினை போட்டு வாட்டி வதைத்தது.

 

“அத்தை…” மருமகளின் அழைப்பில் அவர் தனது வேதனையை மறைத்துக் கொண்டார்.

 

“சொல்லும்மா…”

 

“தரகர் வந்திருக்கிறார்.”

 

“ஓ… ஹம்சிக்கு வரன் பார்க்க சொல்லியிருந்தேன். அதான் வந்திருப்பார்.” என்றவர் எழுந்து பூஜையறையில் இருந்து வெளியில் வந்தார். தகவல் சொன்னதும் திவ்யா அங்கிருந்து நகர்ந்து தனது அறைக்குச் செல்ல எத்தனிக்க…

 

“நீயும் வாம்மா திவி…” பர்வதம் மருமகளை உடன் அழைத்தார்.

 

“நான் எதுக்கு அத்தை…?” அவள் தன் நிலையை எண்ணி வர மறுத்தாள்.

 

“ஹம்சிக்கு நீயும் அம்மா மாதிரி தான். வா…” என்றவர் மருமகளையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றார்.

 

“வாங்க தரகரே…” என்றபடி சோபாவில் அமர்ந்தவர் உடன் மருமகளையும் அமர்த்திக் கொண்டார்.

 

“நம்ம பாப்பாவுக்கு நல்ல நல்ல வரன் எல்லாம் வந்திருக்கு.” என்றவர் மணமகனின் புகைப்படங்களைப் பர்வதத்திடம் காட்ட ஆரம்பித்தார். பர்வதம் அதை ஒவ்வொன்றாகப் பார்த்து விட்டு திருப்தியின்மையோடு மறுப்பாய் தலையைசத்தார்.

 

“என் மகளைப் பற்றி நான் பெருமையாய் சொல்கிறேன்னு நினைக்காதீங்க. அவள் ஒரு பெண் சிங்கம். அவளுக்கு ஏத்த மாதிரி தான் அவளுக்கு வர போகிறவன் கம்பீரமா இருக்கணும். இதிலிருக்கும் எல்லோரும் அந்தளவுக்கு இல்லை. இன்னும் கொஞ்சம் பெட்டரா கொண்டு வாங்க…”

 

“அப்போ பேக்டரியில் சொல்லி வச்சு செஞ்சு தான் எடுக்கணும்.” என்று தரகர் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.

 

“என்ன முணுமுணுக்கிறீங்க தரகரே?”

 

“ஒண்ணும் இல்லைம்மா… நீங்க சொன்னபடி செய்றேன்.” என்று அவர் விடைபெற்று சென்றார்.

 

“அத்தை நானும் என் ரூமுக்கு போறேன்.” என்ற திவ்யா எழுந்து அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.

 

ஹரீஷ் இறந்து மூன்று மாதங்களாகி விட்டது. ஒரு வருடம் முடிந்ததும் திவ்யாவிற்கு மறுமணம் செய்ய வேண்டும். அவளை இப்படியே விட்டு விட அவருக்கு மனது வரவில்லை.

 

முதலில் ஹம்சி திருமணம் முடியட்டும். அதற்குப் பிறகு திவி பற்றி யோசிப்போம்.என்றவர் தனது அலைப்பேசி எடுத்து இரண்டாவது மகன் ஹர்ஷவர்த்தனுக்கு அழைத்தார். அவனது அலைப்பேசி பிசிஎன்றே வந்தது.

 

“பார்ட்டி, டேட்டிங்ன்னு கூத்தடிக்கிறதுக்குப் பெயர் பிசியா? இவன் சினி ஃபீல்டுக்கு போயிருக்கவே வேண்டாம்.” என்று அவர் எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டார்.

 

அதே நேரம் அவர் சிங்கம் என்று வர்ணித்த அவரது பெண் ஹம்சவர்த்தினி அரசாங்க ஒப்பந்தம் நடக்கும் இடத்தில் அமர்ந்திருந்தாள்.

 

சென்னையின் பிரதான இடத்தில் அமைந்திருந்த அந்த மாநகராட்சி கட்டிடத்தில் அரசாங்க ஒப்பந்தத்திற்கான ஏலம் நடந்து கொண்டிருந்தது. நகரின் முக்கியத் தொழிலதிபர்கள் அனைவரும் அங்குக் கூடியிருந்தனர். இது பல கோடிகள் பெறுமானம் உள்ள ஒப்பந்தம். அது மட்டும் இல்லாது ஒப்பந்தத்தைக் கைப்பற்றும் நிறுவனத்தின் முதலாளி நேரில் வந்து கையெழுத்து போட வேண்டும், இல்லை என்றால் அந்த ஒப்பந்தம் அடுத்த நிலையில் இருக்கும் நபருக்கு சென்றுவிடும். அதனால் எல்லோருமே தங்களது அந்தஸ்தை மறந்து அங்குக் கூடியிருந்தனர். பழைய மின்விசிறி ஒன்று மெல்ல ஓடி கொண்டிருந்த அந்தக் கூடத்தில் வியர்க்க விறுவிறுக்க எல்லோரும் பரபரப்புடன் அமர்ந்திருந்தனர்.

 

அங்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஹச்மவர்த்தினியின் உடலின் ஒவ்வொரு அணுவிலும் திமிர் கலந்து இருந்தது. அது அவள் நிமிர்ந்து அமர்ந்திருந்த தோரணையிலேயே நன்கு தெரிந்தது. அவள் நடந்து கொண்டிருந்த அரசாங்க ஒப்பந்த ஏலத்தை விழிகள் பளபளக்க பார்த்திருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் இந்த அரசாங்க ஒப்பந்தம் அவளது கைகளில்… அதை நினைத்து அவளுக்கு அத்தனை சந்தோசமாக இருந்தது. அதை விடச் சந்தோசம் அவளுடைய போட்டியாளன் இன்னமும் வந்து சேரவில்லை. அவன் வரவும் மாட்டான்.

 

எங்கே எந்த ஹாஸ்பிட்டலில் அட்மிட்டாகி இருக்கானோ?’ அவள் மனதிற்குள் அவனுக்காகப் போலியாகப் பரிதாபப்பட்டாள். ஏனெனில் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட நிறுவனத்தின் உரிமையாளர் நேரில் வர வேண்டுமே. எப்படியும் ஒப்பந்தம் அவனுக்கு அல்லது அவளுக்குத் தான் கிடைக்கப் போகின்றது. அவளுக்குக் கிடைத்தால் பரவாயில்லை. அவனுக்குக் கிடைத்தால்…? கிடைக்கவும் கூடாது… அதுவே அவளது ஒரே எண்ணமாக இருந்தது.

 

“இந்த ஒப்பந்தம் கிடைத்திருக்கும் எஸ்ஏ நிறுவனத்தின் எம்டி திரு. ப்ரஷன்ஜித் இன்னும் வராத காரணத்தால் அடுத்த நிலையில் இருக்கும் கேஜி நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை அளிக்கின்றோம்.” என்று மாவட்ட ஆட்சியர் கூறும் போதே கூட்டத்தில் சலசலப்பு கேட்டது.

 

அவளது எண்ணத்தின் நாயகன் ப்ரஷன்ஜித் கம்பீரமான நடையுடன் வேகமாக வந்து கொண்டிருந்தான். அவனது வரவை கண்டவளின் முகம் ஆத்திரத்தில் ஜொலித்தது. இவனை எப்படிக் கோட்டை விட்டார்கள்?’ அதுவே அவளது கோபமாக இருந்தது.

 

அவன் அவளைத் தாண்டி சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவன் பின்பு அவளை நோக்கி நிதானமாகத் திரும்பி வந்தான். அவனது முகத்தில் இருந்த புன்னகை மாறவில்லை. விழிகளில் கூத்தாடிய குறும்பும் மறையவில்லை. அவன் அத்தனை சாதாரணமாக இருந்தான்.

 

இத்தனை உயிர் பயம் காட்டிய போதும் இவன் கண்ணில் கொஞ்சம் கூடப் பயம் தெரியவில்லையே.அவள் தான் அவனைக் கண்டு குழம்பி போய் நின்றாள்.

 

“வாழ்த்துகள் மற்றும் நன்றி மேடம்…” என்றவனைக் கண்டு அவள் இன்னமும் குழம்பி போனாள்.

 

“இந்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்காது எனக்குக் கிடைத்ததற்கு, அதற்கு நீங்க வழிகாட்டியதற்கு வாழ்த்துகள் மேடம்… நாம வெற்றி பெற்றதுக்கு நம்மை நாமே வாழ்த்துவதற்குப் பதில் அதை நமக்கு அளித்த எதிரிக்கு வாழ்த்து சொல்வது என்னுடைய வழக்கம். நன்றி, நான் படித்த கராத்தேயை இன்று தான் யூஸ் பண்ணியிருக்கேன். உங்களால் தான் அது எனக்கு ஞாபகத்தில் வந்தது. மறந்த பாடத்தை ஞாபகப்படுத்தியதற்கு நன்றிங்க மேடம்…” அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் அத்தனை நக்கல், கிண்டல், கேலி இருந்தது.

 

“உன் வாழ்த்தையும், நன்றியையும் தூக்கி குப்பையில் போடு… இன்றைய நாள், இந்த நொடி எழுதி வச்சுக்கோ… உன்னுடைய அழிவு என் கையால் தான்டா.” என்று அடக்கப்பட்ட கோபத்தில் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சீறியவள் அவனைத் திரும்பியும் பாராது நடந்து சென்றாள்.

 

செல்லும் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தவனின் புன்னகை மட்டும் மாறவில்லை. அது என்றும் மாறவும் மாறாது… அவன் ஒரு தனிப்பிறவி… அவனைப் புரிந்து கொள்ள அவளால் மட்டுமல்ல யாராலும் முடியாது.

 

சற்று முன்னர் அவன் தனது காரில் ஒப்பந்தம் நடக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தான். அப்போது அவனைப் பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று திடுமென இவனது காருக்கு முன் வந்து கிரீச்சிட்டு நின்றது. அவன் சுதாரித்துக் கொண்டு தனது காரை நிறுத்தினான். இல்லை என்றால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். என்ன ஏதென்று அவன் சுதாரிக்கும் முன்னர் அந்தக் காரிலிருந்து இறங்கிய ஐந்து பேர் அவனது காரை அடித்து நொறுக்கத் துவங்கினர். அதைக் கண்டவன் கோபத்துடன் காரை விட்டு இறங்கி அவர்களிடம் பேசும் முன்னர் அவர்கள் அவனைத் தாக்க வந்தனர். அவன் சுதாரித்துக் கொண்டு தனது கராத்தே திறமையை அவர்களிடம் காட்டி அவர்களை அடித்து வீழ்த்தி விட்டான். இறுதியில் அடித்தவர்களிடமே அவர்களை அனுப்பியது யார்? என்று அவன் கேட்க… அவர்கள் ஹச்மவர்த்தினியின் பெயரை கூறினர்.

 

அந்தக் கணம் அவனது கோபம் எல்லாம் காணாமல் போனது. அவனது உதடுகளில் அவனையும் அறியாது புன்னகை தோன்றியது. ஒரு வேலையைக் கூட ஒழுங்கா பார்க்க தெரியலையேஎன்று முணுமுணுத்து கொண்டவன் அவர்கள் மீது வழக்கு பதியாது விட்டு விட்டான். இப்போது அதை நினைத்து பார்த்தவனுக்குச் சிரிப்பு தான் வந்தது. அதே புன்னகையுடன் வெளியில் வந்தவன் அங்கு ஹம்சவர்த்தினி கோபத்துடன் கைகளைப் பிசைந்து கொண்டிருப்பதைக் கண்டு அவனது புன்னகை இன்னமும் விரிந்தது.

 

“என்ன மேடம், ஏதும் பிரச்சனைங்களா…?” அவன் ஒன்றுமே அறியாதவன் போல் அவளிடம் கேட்டான்.

 

“உனக்கு ஒண்ணுமே தெரியாது. இதை நான் நம்பணும்?” கேலியும், கோபமும் கலந்து கேட்டவளை கண்டு அவனும் பதிலுக்குக் கேலியாய் பார்த்தான்.

 

“அப்படி எல்லாம் பொய் சொல்ல மாட்டேன் மேடம். கண் முன்னாடி உடைந்திருக்கும் உங்க காரை பார்த்தும் ஒண்ணுமே தெரியாதுன்னு பச்சையாய் பொய் சொல்ல என்னால் முடியாது. ஆமா மேடம், உங்க காரை இப்படி அப்பளமாய் நொறுக்கியது யார்? கார் வேற வெளிநாட்டுக் கார்… குறைஞ்சது பல கோடி ரூபாய் மதிப்பு பெறும் போலிருக்கே…” சுக்கு நூறாய் உடைந்திருந்த அவளது காரை பார்த்து போலியான வருத்தத்துடன் கேட்டான் ப்ரஷன்ஜித்…

 

“யாருன்னு உனக்குத் தெரியாது?” அவளது பார்வை அவனை வெறுப்புடன் ஊடுருவியது. அவளது வெறுப்பு பார்வையைத் தயங்காது எதிர்கொண்டவன்,

 

“யார்? எவர்ன்னு? நீங்க தூண்டி துருவினால்…” என்றபடி அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

 

“சற்று முன் எனக்கு நிகழ்ந்த விபத்தைப் பற்றி நானும் தூண்டி துருவ ஆரம்பிப்பேன். பரவாயில்லைங்களா மேடம்?” அதைக் கேட்டு அவள் பேயறைந்தார் போலானாள்.

 

ப்ரஷன்ஜித் தனது அலைப்பேசியை எடுத்து அவனைத் தாக்கியவர்களின் காணொளி வாக்குமூலத்தை அவளிடம் போட்டுக் காட்டினான்.

 

“மிஸ். ஹம்சவர்த்தினி கோபாலகிருஷ்ணன்… அது உங்க பெயர் தானே…?” என்றவனை அவள் பதிலுக்கு உறுத்து விழித்தாள்.

 

“ரைட்…” என்றவன் அலைப்பேசியை அணைத்துச் சட்டை பையில் போட்டுக் கொண்டு,

 

“நானும் எந்தக் கம்ப்ளையிண்ட்டும் கொடுக்கப் போவதில்லை. அதே பால் நீங்களும் எந்தக் கம்ப்ளையிண்டும் கொடுக்க மாட்டீங்கன்னு நம்பறேன். அப்படி மீறிக் கொடுத்தால் பாதிக்கப்படப் போவது நீங்க தான். நானில்லை…” என்றவன் தனது குளிர் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டான்.

 

அவள் பதில் பேச முடியாது அவனை முறைத்து கொண்டிருந்தாள்.

 

“இத்தனை போலீஸ் இங்கே இருக்கும் போது, கலெக்டர் உள்ளே இருக்கும் போதே நான் உங்க காரை உடைத்தவன்… என்னிடம் உங்க வீண் ஜம்பத்தைக் காட்ட நினைக்காதீங்க. அப்புறம் முக்கியமான விசயம்… அடுத்தத் தடவை நல்ல ஜிம் பாய்சா அனுப்பி விடுங்க… இப்போ வந்தது எல்லாம் சரியான சோதா பசங்க… இரண்டு தட்டுத் தட்டியதும் உண்மையைக் கக்கிட்டாங்க…” என்று அவன் அவளிடம் வம்பிழுத்த போதும் அவள் ஒன்றும் பேசவில்லை. அவள் தனக்குள் இறுகி போய் நின்றிருந்தாள்.

 

“என்ன மேடம்… என்னைக் கொல்ல மனசு வரலையா?” தனது காதோரம் சீறலாய் ஒலித்த அவனது குரலில் அவள் திடுக்கிட்டு அவனை ஏறிட்டு பார்த்தாள். தன் அருகில் நின்றிருந்த ப்ரஷன்ஜித்தை கண்டவள் அவனை எரித்து விடுவது போல் பார்த்து வைத்தாள்.

 

“ஒருவேளை இன்னைக்கு உங்க பேர்த்டே என்பதால் இந்தச் சலுகையோ…?”

 

“உனக்கு எல்லாம் சலுகை ஒரு கேடு…” அவளது வார்த்தைகள் வெறுப்பாய் வந்தது. அவனுக்கு அந்த வெறுப்பு இல்லை போலும் கைத்தட்டி தனது உதவியாளனை அருகில் அழைத்தான். அவனது மனம் புரிந்தவனாய் உதவியாளன் கையில் பூங்கொத்துடன் அவனை நெருங்கினான். பூங்கொத்தை தனது கைகளில் வாங்கிய ப்ரஷன்ஜித்,

 

“ஹேப்பிப் பேர்த்டே மேடம்…” என்று தனது வசீகரப் புன்னகையுடன் ஹம்சவர்த்தினியை பார்த்து வாழ்த்தியபடி தனது கையிலிருந்த பூங்கொத்தை அவள் புறம் நீட்டினான்.

 

நீ வாழ்த்தலைன்னு உன் கிட்ட வந்து நான் அழுதேன்னா…என்று மனதிற்குள் அவனைப் போட்டு வறுத்தெடுத்தவள்,

 

“நீ பூங்கொத்தை நீட்டுவதற்குப் பதில் எதிரியாய் கையில் வாளோடு சண்டைக்கு வா… உன்னை ஒரு கை பார்க்கிறேன்.” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவள் அவனது கையில் இருந்த பூங்கொத்தை பறித்துத் தூக்கி தூர எறிந்தாள்.

 

அவளது செய்கையைப் புன்னகை மாறாது பார்த்து கொண்டிருந்தவன், “இதுக்காக ரொம்ப வருத்தப்படுவீங்க மேடம்…” என்று அழுத்தமான குரலில் கூற…

 

“உன்னை மாதிரி ஆளுங்க கூடப் பேசுறது தான் எனக்கு எரிச்சலா இருக்கு…” என்றவள் அவனைக் கடந்து சென்றாள்.

 

அதற்குள் அவளது உதவியாளன் வாடகை கார் வரவழைத்து விட்டான். அதிலேறி அவள் தனது அலுவலகம் விரைந்தாள். அன்று முழுவதும் அவளது கைகள் அது பாட்டிற்கு வேலை செய்து கொண்டிருந்தாலும் அவளது மனம் முணுமுணுவெனக் கோபமாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அந்த முணுமுணுப்பிற்கும், கோபத்திற்கும் காரணம் ப்ரஷன்ஜித் என்றால் மிகையில்லை.

 

“மேடம், ஈவினிங் டிவி சேனலில் உங்களைப் பேட்டி எடுக்க வர சொல்லியிருக்காங்க…”

 

“என்னை வர சொல்ல அவங்க யார்?” அவள் எரிச்சலுடன் மொழிய…

 

“மேடம், நீங்க தான் பேட்டிக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்தீங்க…” அவளது உதவியாளன் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

 

“ஓ…” என்றவள் வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமானாள்.

 

*********************************

 

“சார், ஷிவாரிகா மேடம் வந்திருக்காங்க…” உதவியாளர் கூறியதும் தனது அலைப்பேசியில் மூழ்கியிருந்த ஹர்ஷா (திரைத்துறைக்காக அவன் தனது பெயர் ஹர்ஷவர்த்தனுக்கு ஹர்ஷா என்று மாற்றிக் கொண்டான். அதனால் நாமும் இவனை ஹர்ஷா என்றே அழைப்போம்) அவனை நிமிர்ந்து பார்த்து,

 

“நான் பிசியா இருக்கேன். ஒரு மணி நேரம் வெயிட் பண்ண சொல்லு…” என்று அலட்சிய குரலில் கூறியவன் மீண்டும் தனது அலைப்பேசியில் மூழ்கி போனான்.

 

அதை அப்படியே ஷிவாரிகாவிடம் வந்து கூறினான் அந்த உதவியாளன்.

 

கடுமையாய் தகித்த சூரியனை ஏறிட்டு பார்த்தவள் தனது கையிலிருந்த குளிர் கண்ணாடியை எடுத்து வெயிலுக்கு இதமாய் அணிந்து கொண்டாள். அவள் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையைத் துடைத்தபடி அங்கிருந்த மர நிழலில் வந்து அமர்ந்தாள். ஷிவாரிகா இயக்குநராக ஆசைப்பட்டுப் பிரபல இயக்குநர் செழியனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து கொண்டிருந்தாள். அவரது படத்தின் படப்பிடிப்பு தான் இப்போது நடந்து கொண்டிருந்தது. அதன் நாயகன் தான் இந்த ஹர்ஷா… அவனுக்கு வசனம் சொல்லி கொடுப்பது என்பது இமாலய சாதனை… அந்தளவிற்கு அவன் உதவி இயக்குநர்களை அலைக்கழிப்பான். திரையுலகில் உச்சாணி கொம்பில் இருக்கிறோம் என்கிற திமிர் அவனிடத்தில் அதிகம் இருந்தது. அதை விட அவன் இன்றைய இளைஞிகளின் கனவு நாயகன்… அது அவனுக்குக் கர்வத்தைத் தாராளமாய் அள்ளி கொடுத்திருந்தது. அதனால் அவன் எல்லோரையும் கீழாகத் தான் பார்ப்பான்…

 

சுமார் இரண்டு மணி நேரமும் கடந்த பின்பும் ஹர்ஷா அவளை அழைப்பதற்கான வழியைக் காணோம். இன்னும் சற்று நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கிவிடும். ஹர்ஷா வசனம் பேசாது சொதப்பினால் செழியன் அவனை ஒன்றும் சொல்ல மாட்டார். ஆனால் அவளைத் தான் அவர் காய்ச்சி எடுத்து விடுவார். அவளது பின்புலம் எல்லாம் அவரிடம் தொழிலுக்கு அப்பால் தான் செல்லுபடியாகும். தொழில் என்று வந்துவிட்டால் அவர் கண்டிப்பான ஆசிரியர். பொறுத்து பொறுத்து பார்த்தவள் இயக்குநருக்கு பயந்து ஹர்ஷா இருந்த கேரவனை நோக்கி சென்றாள். அனுமதி இல்லாது கேரவன் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவள் அங்குக் கண்ட காட்சியில் அப்படியே அதிர்ந்து போய் நின்றாள்.

 

அங்கு ஹர்ஷா அந்தப் படத்தில் நடிக்கும் நாயகியுடன் இதழ் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதைக் கண்ட அதிர்ச்சியில் ஷிவாரிகாவின் கையில் இருந்த நோட்பேட்கீழே விழுந்தது. அந்தச் சத்தத்தில் இருவரும் விலகி திரும்பி பார்த்தனர். அவன் அவளை எரித்துவிடுவது போல் பார்த்தான்.

 

“கொஞ்சமாச்சும் மேனர்ஸ் இருக்கா?” அவன் முகத்தில் அடித்தார் போன்று சுள்ளென்று கேட்டது கண்டு அவளுக்குக் கோபம் வந்தது.

 

“உங்களுக்குக் கொஞ்சமாவது மேனர்ஸ் இருக்கா?” என்றபடி அவர்கள் இருவரும் இருந்த நிலையைச் சுட்டிக்காட்டி அவள் கூற… அவன் அழுத்தமாய் அவளைப் பார்த்தான். அந்த நடிகையோ சற்று பயத்துடன் அவளைப் பார்த்தாள்.

 

“இந்த விசயத்தை சார் கிட்ட சொன்னால் என்னாகும்ன்னு தெரியுமா?” ஷிவாரிகா அவனை விட அழுத்தமாய்ப் பார்த்தபடி கேட்டாள்.

 

இயக்குநர் செழியன் இது மாதிரியான ஒழுக்கக்கேட்டை அவரது படப்பிடிப்பில் அனுமதிக்க மாட்டார். அப்படி யாராவது தவறு செய்வதாகத் தெரிந்தால்,

 

“என்னுடைய ஷூட்டிங்கில் இந்தக் கருமத்தை எல்லாம் வச்சுக்காதே… வெளியில் போய் வச்சுக்கோ…” என்று முகத்தில் அடித்தார் போன்று அத்தனை பேர் முன்னிலையில் அவமானப்படுத்தி விடுவார்.

 

“போய்ச் சொல்லு… எனக்கு என்ன பயமா?” என்றவனை உறுத்து விழித்தவள் அடுத்த நொடி அங்கிருந்து அகல முயன்றாள்.

 

“ஒரு நிமிசம்…” என்று அவளைச் சொடக்கிட்டு அழைத்தவன்,

 

“உன் நோட்பேட்டை எடுத்துட்டு போ…” என்க… அவள் அவனை முறைத்தபடி கீழே குனிந்து நோட்பேட்ஐ எடுத்தாள்.

 

“ஒன் செகண்ட்… அதில் இருப்பதைப் படித்துப் பார்…” என்றவன் எழுந்து அவளருகே வந்தான். அவன் சொன்னதைச் செய்யக் கூடாது என்று ஷிவாரிகாவின் மனம் பிடிவாதம் பிடித்த போதும் அவளது விழிகள் சொன்ன பேச்சு கேட்காது நோட்பேட்ஐ பார்த்தது.

 

“இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல ஏழேழு ஜென்மத்திலும் நீ தான் எனது மனைவியாக வர வேண்டும். யார் தடுத்தாலும் நம் காதல் நிறைவேறும் பேபி. ஐ லவ் யூ…” என்று காதல் சொட்ட சொட்ட கூறியவனைக் கண்டு அவள் திகைத்து போய் விழிவிரித்துப் பார்க்க… அவன் அவளைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தவன்,

 

“இது தானே அதில் இருக்கு… இன்னும் மேலே சொல்லவா?” என்று கேலி குரலில் கேட்க…

 

“போதும், போதும்… ஒரு மண்ணும் சொல்ல வேண்டாம். ஷூட்டிங்குக்கு வந்து சேருங்க…” என்று எரிச்சலுடன் மொழிந்தவள் அங்கிருந்து அகன்றாள். அவள் எரிச்சலுடன் செல்வதைக் கண்டவனின் உதடுகளில் புன்னகை அரும்பியது.

 

“இப்போ அவங்க எதுக்கு இப்படிக் கோபப்பட்டுப் போறாங்க…?” அந்த நடிகை புரியாது அவனிடம் கேட்க…

 

“நாம ரெண்டு பேரும் அவள் கண்முன்னால் லிப்லாக் கொடுத்துக் கொண்டிருந்தால் திட்டாமல் கொஞ்சவா செய்வாள்…?” ஷிவாரிகா செல்வதைப் பார்த்தபடி நக்கல் குரலில் கூறியவனைக் கண்டு அந்த நடிகை ஆவென்று வாயை பிளந்தாள்.

 

****************************

 

ப்ரஷன்ஜித் வீட்டிற்குள் நுழையும் போதே வரவேற்பறையில் அமர்ந்திருந்த அன்னையைக் கண்டு விட்டான். ஆனால் அவனது அன்னையோ கோபமாய் அமர்ந்து இருப்பது போல் தெரிந்தது. அன்னை அருகில் அமர்ந்தவன்,

 

“ம்மா, என்ன கோபமா இருக்கிற மாதிரி இருக்கு?” என்று கேட்க…

 

“உங்கப்பா வெளியில் கூட்டிட்டு போறேன்னு சொன்னார்டா ப்ரஷூ. இன்னும் வரலை.” சிறு குழந்தை போல் கோபத்துடன் கூறிய அபிஷரிகாவை பார்த்த ப்ரஷன்ஜித்தின் விழிகளில் கனிவு வந்தது.

 

“ம்மா, அப்பாவுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கும்மா… இன்னும் அரை மணி நேரத்தில் வந்துருவாங்க.”

 

“ம், ம்…” என்று சமாதானமாகிய அபிஷரிகா மகனுக்காகக் காபி கலக்க போனாள்.

 

அன்னை கொடுத்த காபியை குடித்துவிட்டு அறைக்கு வந்த ப்ரஷன்ஜித் குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு வரும் வரை சிவகுமரன் வீடு வந்து சேரவில்லை. அதைக் கண்டு ப்பா, இன்னைக்கு உங்களுக்கு நேரம் சரியில்லைஎன்று முணுமுணுத்துக் கொண்டே வாயிலுக்கு வந்தவன் அங்குத் தந்தை காரிலிருந்து இறங்கி கொண்டிருப்பதைக் கண்டு,

 

“ப்பா, சரியான நேரத்துக்குத் தான் வந்திருக்கீங்க. உள்ளே போங்க… அம்மா பாய்லர் மாதிரி கொதிக்கிறாங்க.” என்று கூறி நமட்டுச் சிரிப்பு சிரிக்க…

 

“என் நிலைமை பார்த்து உனக்குச் சிரிப்பா இருக்கா மகனே… எத்தனை நாளைக்குத் தான் நீயும் பேச்சுலரா இருக்கப் போறேன்னு நானும் பார்க்கிறேன்.”

 

அதைக் கேட்டு ப்ரஷன்ஜித் மந்தகாச புன்னகையை உதிர்த்தான்.

 

“கல்யாணத்தைப் பத்தி கேட்டால் மட்டும் சிரிச்சே மழுப்பிடு.”

 

“என் கல்யாணம் இருக்கட்டும். நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களைப் போய் முதலில் சமாதானப்படுத்துங்க…”

 

“அதெல்லாம் எனக்கு ஜூஜூபிடா… எனக்குக் கை வந்த கலை. என் குல்ஃபிக்கு ஒரு குல்ஃபி வாங்கிக் கொடுத்துக் கரெக்ட் பண்ணிருவேன்.” சிவகுமரன் பெருமிதத்துடன் சட்டை காலரை தூக்கி விட்டுக் கொள்ள…

 

“ப்பா, உங்க குல்ஃபி இவங்களான்னு திரும்பி பார்த்து சொல்லுங்க…” ப்ரஷன்ஜித் தந்தைக்குப் பின்னால் சுட்டிக்காட்ட… பதறியபடி திரும்பி பார்த்த சிவகுமரன் அங்கு மனைவியைக் கண்டு திகைத்து போய் அப்படியே நிற்க…

 

“நான் குல்ஃபியா உனக்கு…?” அபிஷரிகா கணவனின் காதை பிடித்துத் திருக…

 

“நீ குல்ஃபி இல்லை பேபி… என்னோட தேனடை…” சிவகுமரன் பேச்சை மாற்ற…

 

“என்னது…?” என்று அதற்கும் அவள் பத்ரகாளி அவதாரம் எடுக்க…

 

இருவரையும் பார்த்து வாய்விட்டு சிரித்தபடி ப்ரஷன்ஜித் அவர்களிடம் இருந்து விடைபெற்றான்.

 

“நல்லா கோர்த்து விட்டுட்டு போகிற ப்ரஷன்… நல்லா வருவ, மை சைன்… நல்லா வருவ…” சிவகுமரன் மகனை நோக்கி பரிதாபமாகக் கத்தினான்.

 

தந்தையின் வார்த்தைகளைக் கேட்டபடி காரை கிளப்பிய ப்ரஷன்ஜித் உற்சாகமாய் விசிலடித்தபடி காரை ஓட்டினான்.

 

தனியார் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு காரை விட்டு இறங்கினாள் ஹம்சவர்த்தினி. அதன் உரிமையாளரே நேரில் வந்து அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.

 

“உட்காருங்க மிஸ். ஹம்சவர்த்தினி… உங்களைப் பேட்டி எடுப்பவர் இன்னும் வரவில்லை. வந்ததும் உங்களைக் கூப்பிடுகிறோம்.” என்றவர் அவளைத் தனி அறையில் அமர வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

 

சுமார் அரை மணி நேரம் அங்கு அவள் வெட்டியாக அமர்ந்திருந்தாள். அதற்கு மேல் காத்திருக்கும் பொறுமையற்றவளாய் எழுந்து சென்று விடுவோமா? என்கிற எண்ணத்துடன் அவள் எரிச்சலுடன் சோபாவில் இருந்து எழுந்தாள். அப்போது ஒரு பெண் பரபரப்பாக வந்து அவளைத் தயாராகச் சொன்னாள். அவளுக்கு மைக்எல்லாம் பொருத்தி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அவளை அழைத்துச் சென்றாள். அங்கு இவளுக்கு முன் அமர்ந்திருந்த ப்ரஷன்ஜித்தை கண்டு அவள் திகைத்து போனாள். தொலைக்காட்சியின் உரிமையாளர் ப்ரஷன்ஜித்தின் நண்பன். அதனால் தொழிலில் முன்னணியில் இருக்கும் ஹம்சவர்த்தினியை அவளுக்கு இணையாக முன்னணியில் இருக்கும் ப்ரஷன்ஜித் மூலம் பேட்டி எடுக்க விருப்பம் கொண்டு அவன் ப்ரஷன்ஜித்தை அணுகினான். ப்ரஷன்ஜித் உடனே சரியென்று சம்மதம் கூறி… இதோ நிகழ்ச்சிக்கும் வந்துவிட்டான். ப்ரஷன்ஜித்தை கண்டு கஷ்டப்பட்டு முகம் மாறாது அங்கு வந்து நின்றாள் ஹம்சவர்த்தினி.

 

“வெல்கம் மிஸ். ஹம்சவர்த்தினி…” என்று அவளை வரவேற்ற ப்ரஷன்ஜித் அவளிடம் பூங்கொத்து ஒன்றை நீட்டினான். காலையில் அவன் அவளிடம் கொடுத்த அதே பூங்கொத்து தான் அது. அதைக் கண்டதும் அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது. ஆனால் தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியில் எதுவும் செய்ய வழியில்லாததால் அவள் புன்னகை முகத்துடன் அவனிடம் இருந்து அந்தப் பூங்கொத்தை பெற்று கொண்டாள்.

 

“தேங்க்ஸ்…” என்றவளை விழிகள் இடுங்க ஒரு நொடி கூர்ந்து பார்த்தவன் மறுநொடி தனது மயக்கும் புன்னகையுடன் அவளுக்கு மட்டும் கேட்கும் ரகசிய குரலில்,

 

“என்னை உதாசீனப்படுத்தினால் அதனோட விளைவுகள் எப்படி இருக்கும் என்பதற்கான சின்னச் சாம்பிள் தான் இது… இனி கவனமா நடந்துக்குவீங்கன்னு நம்பறேன்.” என்றவனை எரித்து விடுவது போல் பார்த்தவளின் இதழ்கள் மட்டும் வலுக்கட்டாயமாகப் புன்னகையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தது.

 

அதை உணர்ந்தவனாய் ப்ரஷன்ஜித்தின் உதடுகள் ஏதோ ஒன்றை ரகசியமாய் முணுமுணுத்தது. அந்தக் கணம் அவனது விழிகளில் வழிந்த குறும்பில் அவள் இமைக்க மறந்து அவனைப் பார்த்திருந்தாள். அவன் முணுமுணுத்த வார்த்தைகளை மட்டும் அவள் கேட்டிருந்தால் அடுத்தக் கணம் அவள் தனது விழிகளால் அவனை எரித்துச் சாம்பலாக்கி இருப்பாள்.

 

தொடரும்…!!!

One Comment

  1. நிலவோடு பேசும் மழை நல்லா இருக்கு
    அடுத்த எபி எப்ப வரும் –

    1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *