“விழியில் விழுந்து இதயம் நுழைந்து” – 15 & 16 7

விழியில் விழுந்து…இதயம் நுழைந்து.

அத்தியாயம்:15.

 

பரீட்சைகள் நடந்து கொண்டு இருந்ததால் விஷ்ணுவும் ஷன்மதியை தொந்தரவு செய்யவில்லை. கல்லூரி வளாகத்தில் எதேச்சையாகச் சந்தித்தாலும் அவளைப் பார்த்துக் கொண்டு போவானே தவிரப் பேச மாட்டான். ஷன்மதியின் மனம் தான் துடிக்கும்.அவனின் செல்ல சீண்டல்கள் இல்லாமல், அவனின் இந்த அமைதியை பார்க்கும் போது மனதில் ஒருவித ஏமாற்றமே மிஞ்சியது. ஷன்மதிக்கே தெரியவில்லை விஷ்ணுபரத்திடம் தான் என்ன எதிர் பார்க்கிறோம் என்று. ஷன்மதிக்கு ஒன்று மட்டும் நல்லா புரிந்தது.அவனின் ஒவ்வொரு செய்கையும் தன்னைப் பாதிக்கிறது என்று.

 

ஒருநாள் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய ஷன்மதியை நெய் வாசம் வரவேற்றது.நேரே சமையல்கட்டிற்குச் சென்றவள், அங்கு அம்மா அடுப்பில் ஏதோ கிண்டி கொண்டு இருப்பதைப் பார்த்தாள்.

 

‘அம்மா இன்னைக்கு என்ன விஷேசம் நெய் வாசம் மூக்கை துளைக்குது’

 

‘ஆமாம் மதி விஷேசம் தான்.நம்ம அஷ்வந்த் நாளைக்குக் காலையில் வர்றான். அதான் அவனுக்குப் பிடிச்ச கோதுமை அல்வா செய்றேன்’ அஷ்வந்த் பேர் கேட்டதும் ஷன்மதியின் முகம் சுருங்கியது. அடுத்தப் பிரச்சினை தயாராகி விட்டது என்று அவள் உள் மனம் சொல்லியது.

 

‘ஆங்…. சொல்ல மறந்துட்டேன் மதி. நீ நாளைக்கு லீவு போட்டுடு. நாம எல்லோரையும் ராகவன் அண்ணா வீட்டிற்குக் கூப்பிட்டு இருக்கார்’

 

‘அம்மா நாளைக்கு எனக்கு முக்கியமான செமினார் இருக்கு. நான் வர முடியாது’ அஷ்வந்தை பார்ப்பதை தவிர்க்கும் பொருட்டு ஷன்மதி அவசரமாகக் கூறினாள்.

 

‘இங்கே பாரு மதி,சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்காதே. அஷ்வந்த் இந்த வீட்டுக்கு மருமகனா வரப் போறவன். அவன் ஒரு வருஷம் கழிச்சு இப்ப தான் இந்தியா வர்றான்.

போய்ப் பார்த்துட்டு வர்றது தான் முறை.அதுவும் நீ கட்டிக்கப் போறவ நீ வராம இருந்தா நல்லது இல்லை. அதனால நீ கட்டாயம் வர்ற’ அம்மாவின் குரலில் இருந்த கண்டிப்பு கண்டு ஷன்மதி அவளறியாமல் தலையைச் ‘சரி’ என்பது போல் ஆட்டினாள்.

 

மறுநாள் ராகவன் வீட்டிற்கு ஷன்மதி தன் பெற்றோருடன் சென்றாள். அவள் மனம் அவளை அறியாது படபடவென்று அடித்துக் கொண்டது. ‘அஷ்வந்த் சிறு வயது முதல் நல்ல நண்பன் தானே. ஏன் பயப்பட வேண்டும் ?’ என்று தன் மனதை சமாதானம் செய்து கொண்டாள்.

 

வாசலில் நின்று வரவேற்ற ராகவனிடம் நலம் விசாரித்த பின் உள்ளே சென்று லஷ்மி அம்மாவை பார்க்க சென்றனர்.

 

‘மதினி எப்படி இருக்கீங்க?’ என்று ஆண்டாள் நலம் விசாரிக்கவும், ஷன்மதியும் தன் பங்கிற்கு நலம் விசாரித்தாள்.

 

‘அத்தை எப்படி இருக்கீங்க?’

 

‘வா ஆண்டாள்.வாம்மா மதி.எங்கே நல்லா இருக்கேன்? பார்த்தே தானே. படுத்த படுக்கையா இருக்கேன். அஷ்வந்துக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி, நீ இந்த வீட்டிற்கு மருமகளா வந்துட்டா தெம்பாயிடுவேன்’ என்று ஷன்மதியை பார்த்துக் கூறியவர்,

 

‘என்ன அண்ணி நான் சொல்றது சரி தானே?’ என்று ஆண்டாளை பார்த்து கேட்டார் லஷ்மி.

 

‘அதுக்கென்ன அண்ணி.அதான் அஷ்வந்த் வர போறானே மதினி. வந்ததும் பேசி முடிவு பண்ணிடுவோம். கவலைப்படாதீங்க’ அம்மாவும்,அத்தையும் பேசியதைக் கேட்டு ஷன்மதியின் முகம் கறுத்தது.

 

அதற்குள் அஷ்வந்த் வந்து விட்டதை உணர்த்தும் அவனது ஆர்ப்பாட்டமான குரல் ஒலித்தது. ஆண்டாள் அவசரமாக,

 

‘மதினி அஷ்வந்த் வந்துட்டான் போல நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன்’ என்றவர்,

 

‘மதி நீயும் வா’ என்று ஷன்மதியை உடன் அழைத்தார். ஷன்மதி என்ன பதில் சொல்வது

என்று தயங்கும் போதே லக்ஷ்மியின் குரல் ஒலித்தது.

 

‘அண்ணி அவளுக்கு வெட்கமா இருக்கும். நீங்க போய்ப் பார்த்துட்டு வாங்க’ மனதிற்குள் லக்ஷ்மி அம்மாவிற்கு நன்றி சொல்லியபடி அவர் அருகில் உட்கார்ந்தாள் ஷன்மதி.

 

‘ஹலோ அப்பா எப்படி இருக்கீங்க? அங்கிள், ஆன்ட்டி நீங்களும் இங்கே தான் இருக்கீங்களா? எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்?’ நலம் விசாரித்தபடி வரும் தன் மகனை பூரிப்புடன் பார்த்தார் ராகவன். நல்ல அழகு, அறிவு என்று கம்பீரமாகத் தான் பெற்ற செல்வம் நிற்பதை பார்த்த அந்தத் தந்தையின் உள்ளம் பூரிக்காமல் என்ன செய்யும்.

 

‘வா வா அஷ்வந்த் நீ எப்படி இருக்கேப்பா?’ என்று ராகவன் நலம் விசாரிக்கவும், அதைப் பின் தொடர்ந்து ஸ்ரீனிவாசனும், ஆண்டாளும் நலம் விசாரித்தனர்.

 

‘அப்பா அம்மாவுக்குத் திடீரென்று என்னப்பா ஆச்சு? ஏன் என்னை உடனே கிளம்பி வரச் சொன்னீங்க?’ அப்பாவிடம் அம்மாவின் நலம் விசாரித்தபடி தன் பெற்றோரின் அறையை

நோக்கி சென்றான்.

 

அங்குத் தன் அம்மா இப்படிப் படுத்த படுக்கையாய் இருப்பாள் என்று கொஞ்சமும் அஷ்வந்த் எதிர்பார்க்கவில்லை.

 

‘அம்மா எப்படி இருக்கீங்க? ஏன்ம்மா இப்படி ஆச்சு?.’

 

‘ராஜா வந்துட்டியாப்பா, நல்லா இருக்கீயா? எனக்கு ஒண்ணும் இல்லை. பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டேன். முதுகில் நல்ல அடி அதான் எழுந்திருக்க முடியல’

 

ராகவன் மனைவிக்குத் தெரியாமல் மகனின் தோளிலில் கை வைத்து அழுத்தம் குடுத்தார். தந்தையின் முகத்தை ஏறிட்ட அஷ்வந்த், அதில் மேலும் எதுவும் கேட்காதே என்ற பாவனையில் பேச்சை மாற்றினான்.

 

‘ஓகே அம்மா அதான் நான் வந்துட்டேன் இல்ல. இனி பாருங்க நீங்க சின்னப் பொண்ணு மாதிரி துள்ளி ஓடப்போறீங்க’

 

‘போடா போக்கிரி உனக்கு எப்பவும் விளையாட்டு தான்’ என்றவர்,

 

‘அஷ்வந்த் இங்கே பாரு யாருன்னு தெரியுதா?’ லக்ஷ்மி ஷன்மதியை சுட்டிக் காட்டி கேட்டார்.

 

‘என்னம்மா நீங்க போன வருஷம் வரும் போது பார்த்த ஷன்மு தானே. அதுக்குள்ளே எப்படி மறப்பேன். அதுவும் நம்ம ஷன்மு மறக்க கூடிய ஆளா. என்ன ஷன்மு நான் சொல்றது’ அஷ்வந்த் ஷன்மு என்று அழைப்பது அவளுக்கு விஷ்ணுபரத் அவளை “ஷம்மு” என்று கூப்பிடுவதைப் போல் இருந்தது. அந்த நினைப்பில் மூழ்கி இருந்தவளை அஷ்வந்த்தின் குரல் நனவுலகத்திற்கு மீட்டது.

 

‘ஷன்மு,நீ இன்னும் மாறவே இல்லையா? இந்த வருஷம் காலேஜ் போய் இருக்கணுமே. காலேஜ் லைப் உன்னைக் கொஞ்சம் கூட மாத்தல? அதே பயந்த பார்வை ,இன்னும் என்னையைப் பார்த்துப் பயப்படுறது எல்லாம் மாறவே இல்லை. சோ ஸ்வீட் ஷன்மு’

கண்சிமிட்டி பேசிய அஷ்வந்தை பார்த்து ஷன்மதி இன்னும் மிரண்டாள்.

 

‘ஏண்டா அவளைப் பயமுறுத்தற.சும்மாவே பயபடுவா. நீ இப்படியெல்லாம் பேசினே இன்னும் பயப்படுவா’ ராகவன் அஷ்வந்தை அதட்டியவர்,

 

‘வா அஷ்வந்த் டிபன் சாப்பிட போகலாம்’

 

‘ஓகே அம்மா நான் சாப்பிட்டு வந்து பேசறேன்’ என்று அம்மாவிடம் விடை பெற்ற அஷ்வந்த் தந்தையுடன் வெளியேறினான். அவனுக்கும் அம்மாவின் உடல்நலத்தைப் பற்றிக் கேட்க வேண்டி இருந்ததால் தந்தையைப் பின் தொடர்ந்தான். டைனிங் டேபிளில் ஆண்டாள், ஷன்மதியும் பரிமாற மூவரும் சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிட்டுக் கொண்டே அஷ்வந்த் தந்தையிடம் கேட்டான்,

 

‘அப்பா அம்மாவுக்கு என்ன தான் பிரச்சினை’

 

‘அஷ்வந்த், லக்ஷ்மி கீழ விழுந்ததுல முதுகுல கொஞ்சம் பலமா அடி விழுந்திருக்கு. எழுந்து நடப்பது கொஞ்சம் கஷ்டம் தான். அதை அவளிடம் சொல்லல. சரியாகி விடும் என்று தான் சொல்லிருக்கேன்’

 

‘அப்பா என்ன சொல்றீங்க? இதைச் சரி பண்ணவே முடியாதா?’

 

‘ஆபரேசன் பண்ணனும்னு டாக்டர் சொல்றார். உன் அம்மாவிடம் நான் எதுவும் சொல்லவில்லை’

 

‘அப்பா நான் யுஎஸ் போறப்ப அம்மாவை கூட்டிட்டு போய் அங்கே காண்பிக்கலாம்பா’

 

‘அஷ்வந்த் உன் அம்மாவுக்கு நீ திரும்ப யுஎஸ் போறதுல இஷ்டமில்லை. உனக்கு ஒருகல்யாணம் பண்ணி எங்க கூட இருக்கச் சொல்லனும்னு தான் அவளுக்கு விருப்பம்’

 

‘அம்மா இப்படி இருக்கிறப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்? அதுவும் எனக்கு 25 வயசுதானே ஆகுது. இன்னும் 2 வருஷம் போகட்டும்ப்பா’

 

‘இல்லைப்பா, முன்ன மாதிரி எனக்கும் பிசினெஸ் பார்க்க முடியல. அம்மாவுக்கும் உடம்புக்கும் முடியல. உனக்குக் கல்யாணம் முடிஞ்சா உன் மனைவி வந்து வீட்டை பார்த்துக் கொள்வாள்’

 

அதற்குள் சாப்பிட்டு விட்டு ஹாலுக்குச் சென்று ராகவன், ஸ்ரீநிவாசன், அஷ்வந்த் மூவரும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தனர்.

 

‘அது எப்படிப்பா அவ்வளவு நிச்சியமா சொல்றிங்க வீட்டை பார்த்துக் கொள்வாள் என்று. வந்ததும் தனிக் குடித்தனம் போணும்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?’ அஷ்வந்த் கிண்டலுடன் கேட்டான்.

 

‘அஷ்வந்த் பொண்ணு யாருன்னு தெரிஞ்சா இப்படிப் பேச மாட்டே’

 

‘அப்பா பொண்ணு எல்லாம் பார்த்து ரெடியா தான் இருக்கீங்களா?’

 

‘ஆமாம் அஷ்வந்த்.பொண்ணு வேற யாரும்மில்லை நம்ம மதி தான்’

 

ஷன்மதி பேர் கேட்டதும் அஷ்வந்த் முகம் கேலியில் இருந்து புன்னகைக்கு மாறியது. ஷன்மதியை அவனுக்குப் பிடிக்கும். ஆனா என்ன காரணத்தினால் என்று தெரியாது. அஷ்வந்த் படிக்கும் காலத்திலும் சரி இப்பொழுதும் சரி நிறையப் பெண்களைக் கடந்து வந்து இருக்கிறான். ஆனால் ஷன்மதி போல் ஒரு பெண்ணை அவன் சந்தித்தது இல்லை. அஷ்வந்துக்கு ஷன்மதியை பிடிக்கக் காரணம் அவளின் பயந்த சுபாவமா இல்லை பெண்ணின் அத்தனை குணங்களும் ஒருங்கே அவளிடம் அமைந்த காரணத்தினாலா இல்லை அவன் சந்தித்த பெண்களில் அவள் மாறுபட்டு இருந்ததாலா எது என்று அவனால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஆனால் அவனுக்கு ஷன்மதியை பிடிக்கும் அது மட்டும் உண்மை என்ற எண்ணம் தோன்றி முகத்தில் புன்னகையை வரவழைத்தது. பேச்சை மாற்றும் விதமாக,

 

‘அப்பா நாளைக்கு அம்மாவை பார்க்கும் டாக்டர் கிட்ட ஒரு அப்பாயின்மென்ட் போட்டுடுங்க. நான் அம்மா ஹெல்த் பத்தி அவர்கிட்ட கேட்கணும்’

 

‘சரிப்பா அப்பாயின்ட்மென்ட் போட்டுடறேன். ஆனா நான் கேட்டதுக்குப் பதில் வரலேப்பா’

 

‘பார்க்கலாம்ப்பா’ என்று உதட்டில் சிரிப்புடன் எழுந்து செல்லும் அஷ்வந்தை பார்த்த ராகவன் மனதில் நிம்மதி ஏற்பட்டது.

 

கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம் என்றவன் ஷன்மதி என்றவுடன் பார்க்கலாம் என்று சொன்னது ராகவனுக்குச் சந்தோசத்தைக் கொடுத்தது. ராகவனும் ஸ்ரீனிவாசனும் ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டனர்.

 

விழியில் விழுந்து…இதயம் நுழைந்து.

அத்தியாயம்:16.

 

மறுநாள் மாலை மூன்று மணியளவில் அஷ்வந்த் ஷன்மதியின் வீட்டிற்கு வந்தான். ‘ஹாய் ஆன்ட்டி’ என்றபடி வந்தவனை ஆவலுடன் வரவேற்றார் ஆண்டாள்.

 

‘அஷ்வந்த் வா வா. என்னப்பா திடீரென்று வந்து இருக்க. காபியா இல்லை ஜூஸ் கொண்டு வரவா?’

 

‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ஆன்ட்டி. லஞ்ச் லேட்டாதான் சாப்பிட்டேன். ஆமா ஷன்மு எங்கே ஆன்ட்டி?’

 

‘மதி காலேஜ் போயிருக்கா. இப்ப காலேஜ் விடுற நேரம் தான். டிரைவரை அனுப்பனும்’ அஷ்வந்த் தன் தந்தையிடம், ஷன்மதி கல்லூரி விடும் நேரம் கேட்டு தெரிந்து கொண்டு தானே இங்கு வந்து இருக்கிறான்.

 

‘ஓ… அப்படின்னா நான் போய் அவளைக் கூட்டிட்டு வர்றேனே ஆன்ட்டி’

 

‘நீ எதுக்குப்பா அலையற. அவளே வந்துவிடுவாள்’

 

‘நோ.. நோ… ஆன்ட்டி எனக்கு அலைச்சல் எல்லாம் ஒண்ணும்மில்லை’ என்றவன் பின் தயங்கியபடியே,

 

‘ஆன்ட்டி ஷன்மு கூடக் கொஞ்சம் பேசணும்.வெளியில் கூட்டிட்டு போயிட்டு வரவா?. ஆறு மணிக்குத் திரும்பக் கொண்டு விட்டு விடுகிறேன்’

 

அஷ்வந்தின் தயக்கயத்தைப் பார்த்து சிரித்த ஆண்டாள், ‘இதுக்குப் போய் ஏன் தயங்குற அஷ்வந்த். உன் பேரில் எனக்கு நம்பிக்கை இருக்கு ‘

 

‘தேங்க்ஸ் ஆன்ட்டி’ என்று சொல்லியபடி,கையில் கார் சாவியைச் சுற்றியபடி துள்ளல் நடையுடன் செல்பவனைப் பார்த்தவர், ‘நம் மதிக்கு ஏற்றவன் தான்’ மனதில் பெருமையுடன் நினைத்தார்.

 

அன்று கடைசிப் பரீட்சை எழுதி முடித்து வெளியில் வந்த ஷன்மதி, வீணா இருவரும் வீடு செல்வதற்காகக் கல்லூரியின் வாயிலுக்கு வந்தனர். விஷ்ணுபரத்தும் பரீட்சை முடிந்து வெளியில்வந்தவன், ஷன்மதியை கண்டதும், இன்று கட்டாயம் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று அவர்களை நோக்கி ஓடிவந்தான். விஷ்ணுவை பார்த்ததும் வீணா,

 

‘ஹாய் விஷ்ணு அண்ணா எக்ஸாம் எப்படிப் பண்ணி இருக்கீங்க?. யுவன் அண்ணா எங்கே?’

 

‘ம்… நல்லா பண்ணி இருக்கேன். யுவன் இன்னும் எழுதிட்டு இருக்கான். நான் உங்களைப் பார்த்ததும் வந்தேன்.’ என்று வாய் வீணாவிற்கான பதிலை சொன்னாலும்,கண்கள் ஷன்மதியையே பார்த்துக் கொண்டு இருந்தது.

 

ஷன்மதி விஷ்ணுவை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. எங்கே நிமிர்ந்து பார்த்தால், தன் உறுதி குலைந்து கண்கள் கலங்கி விடுமோ என்று குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை. ஷன்மதி பேச மாட்டாள் என்று விஷ்ணுவே பேச்சை ஆரம்பித்தான்.

 

‘ஷம்மு எப்படி இருக்கே?’ என்ன பதில் சொல்வது என்று ஷன்மதி யோசிக்கும் போதே,

‘ஹாய் ஷன்மு’ என்று குரல் குடுத்தபடி அஷ்வந்த் அவள் அருகில் வந்தான்.

 

விஷ்ணுவிற்கும், வீணாவுக்கும் “யார் இது?” என்று குழப்பமாக இருந்தது. ஷன்மதிக்கும் அஷ்வந்தை கண்டதில் குழப்பம் தான் ஏற்பட்டது.

 

‘ஷன்மு வா போகலாம். இன்னைக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு போக நான் தான் வந்து இருக்கேன். அப்படியே உன் கூடக் கொஞ்சம் பேசணும்’ ஷன்மதி குழப்புத்துடன் தயங்கியபடி நிற்க,

 

‘ஹேய் ஷன்மு பயப்படாதே. ஆன்ட்டிக் கிட்ட பர்மிசன் வாங்கிட்டேன். அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க. வா போகலாம்’ என்று ஷன்மதியின் கையைப் பிடித்துக் கூப்பிட்டான்.

 

இதைக் கண்ட விஷ்ணுவின் பிபி எகிறியதை சொல்லவே வேண்டியதில்லை. ‘ஓ… இவன் தான் அந்த வில்லனா? என்ன ஒரு உரிமை. காதலிக்கும் நானே அவளைத் தொட யோசிக்கிறேன். இவன் எவ்வளவு உரிமையோடு கை பிடித்துக் கூப்பிடுகிறான். இவளும் கையை உதறாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறாளே’

 

விஷ்ணுவிற்கு மட்டும் நெற்றிக் கண் இருந்து இருந்தால் அஷ்வந்தை அங்கேயே எரித்து இருப்பான். ஷன்மதியையும் கோபத்துடன் முறைத்துப் பார்த்தான். ஷன்மதியும்விஷ்ணு என்ன சொல்வானோ என்று அவன் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். விஷ்ணுவின் கண்களில் தோன்றிய கோபம் கண்டு பதட்டமானாள்.

 

அஷ்வந்த் கையில் இருந்து தன் கையைச் சிரமத்துடன் உருவி எடுத்தவள், ‘அஷ்வந்த் இது என்னோட பிரண்ட் வீணா. இது என் சீனியர் விஷ்ணுபரத்’ அஷ்வந்த் அவர்கள் இருவருக்கும் அவசரமாய் ஒரு “ஹாய்” சொன்னவன்,

 

‘ஷன்மு லேட்டாகுது. ஆன்ட்டிக்கிட்ட நான் ஆறு மணிக்கு வீட்டில் கொண்டு

விடுறேன்னு சொல்லிட்டு வந்து இருக்கேன். ப்ளீஸ் கம் பாஸ்ட்’ ஷன்மதியின் கையை மீண்டும் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

 

ஷன்மதி வேறுவழி இல்லாமல் வீணாவிடம் விடை பெற்றுக் கொண்டு அஷ்வந்தை பின் தொடர்ந்து காரில் ஏறி அமர்ந்தாள். கார் திரும்பி செல்லும் போது விஷ்ணுவை பார்த்தாள். அவன் முகத்தில் தெரிந்த வேதனை, கோபம் கண்டு ஷன்மதியின் மனமும் வேதனைப்பட்டது. விஷ்ணுபரத்தின் வேதனை காண சகிக்காமல் தன் கண்களை இறுக மூடி காரின் இருக்கையில் சாய்ந்தாள்.

 

விஷ்ணு படும் வேதனை சகிக்காமல், ‘அண்ணா நான் உங்களுக்காக ஷன்மதி கூடப் பேசுறேன்’

 

‘பேசி என்ன செய்யப் போற வீணா. காதலுக்குப் பெற்றோர் தடையாய் இருந்தால் பரவாயில்லை. ஆனால் எனக்குக் காதலிக்கும் பொண்ணே தடையாய் இருக்காளே. பாரு ஒருத்தன் அவள் கையைப் பிடிச்சு கூட்டிட்டுப் போறான். உன் பிரண்ட் ஏதாவதுசொல்றாளா பாரு. நானும் அதைப் பார்த்துக்கிட்டுக் கேனை மாதிரி நின்னுக் கிட்டு இருக்கேன்’

 

விஷ்ணுவிற்குத் தெரியாது அஷ்வந்தும் ஷன்மதியும் சிறுவயதில் இருந்து அறிந்தவர்கள் என்று.

 

‘அண்ணா நாளைக்கு லீவ் தானே. நான் ஷன்மதியை அவள் வீட்டில் சந்தித்து என்ன பிரச்சினை என்று கேட்கிறேன். நீங்க கவலை படாதிங்க. அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையாய் இருங்க’

 

‘வீணா நான் எவ்வளவு முரடன்.முன் கோபக்காரன் என்று யுவனிடம் கேளு. ஆனாஎன்னைக்கு ஷம்முவை பார்த்தேனோ அன்னைக்கு என் குணம் எல்லாம் மாத்திக்கிட்டேன். பொறுமை இல்லாத நான் பொறுமைசாலியா மாறிட்டேன். இவ்வளவு நாள் பொறுத்த நான் என்ன ஒரு நாள் பொறுக்க மாட்டேனா?.பொறுமையாய் இருக்கேன்’

என்று விரக்தியுடன் கூறிவிட்டுச் செல்லும் விஷ்ணுவை பார்க்கும் போது வீணாவிற்கு ஷன்மதி மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

 

7 Comments

  1. அருமையான பதிவு

  2. super mam

  3. wonderful updates sri….shammu n vishnu servathu eppDINU ME KEEP ON GUESSING…NICE STORY DR

  4. kadai arumaivishnu eppadi sanmathiku taali kattinan athan piragu avalikku ashvanththudan tirumanam aahiyatha aavalan fbiku waiting mam(viji)

  5. Fantastic nervous as well as tensed update ma’am

    Nisha Nandini J P
  6. 😢😢😢

  7. Super mam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *